Friday, May 29, 2015

Double Decker Living Root Bridges Trek - பயண அனுபவம்


காலையில், வழிகாட்டி சரியாக எட்டரை மணிக்கு வந்து நின்றார். காலையுணவு முடித்துக்கொண்டு,  பிக்னிக் உணவாக ப்ரெட் சான்ட்விச்சை பொதியிலடைத்துக்கொண்டு கிளம்பி நின்றோம். கைகளில் ஆளுக்கொரு உதவுகோல். பையில், மழையுடை, சில பல சாக்லெட்டுகள், பாதம் வால்நட் பருப்புகள். ஆளுகொரு தண்ணீர் குப்பி.

சாலை பயணமாக‌, முதல் 5 கீமீ வரை காரில் சென்று, பின் நடைபயணத்தை தொடர திட்டம். இதயத்தின் திக்திக்....ஆர்வம்...சாகசம்...என்று கலவையான உணர்வுகள்.  

இத்தனைக்கும், எவரெஸ்ட்  ஏறி ஆக்ஸிஜனுக்காக திண‌றும் பயணமோ அல்லது  வானத்திலிருந்து குதிக்கவோ போவதில்லை.  எங்களது சொகுசான வாழ்க்கையிலிருந்து சில மணிநேரங்கள் தள்ளி இருக்கப்போகிறோம். அவ்வளவுதான்! நினைத்த மாத்திரத்திலேயே அதுதான், எத்தனை கடினமாக இருக்கிறது!! :‍)

படிகள் தொடங்கும் கிராமத்தினருகில் வந்து இறங்கினோம்.  வழிகாட்டி பலகை,  பயணத்தை இனிதே தொடங்கி வைத்தது.அவரவர் உதவுகோல்களை, கைகளில் எடுத்துக் கொண்டோம். வெயிலே இல்லாவிட்டாலும்,  தொப்பியை அணிந்து கொண்டோம்.பையை பின்னால் மாட்டிக்கொண்டு, தேர்ந்த நடைபயணிகள் போல் நடையை துவக்கினோம்.

 படிகள் மிக நீண்டதாக, நாம் இரண்டு தப்படிகள் வைத்தே - அடுத்த படிக்கு செல்ல வேண்டிய அளவில் இருந்தது. 'ஃப்பூ இவ்வளவுதானா...இது போல் இருந்தால் 2500 என்ன? 25000கூட இறங்கிவிடலாமே' என்று தோன்றியது,அந்த நிமிடம்!.

சற்று கீழே, ஒரு 25 படிகள் இறங்கி, நிமிர்ந்தால், ஆகா! அற்புதம் என்பது இதுவல்லவா!!


 பச்சையை உடுத்திய‌ மலை, இடையில் அத்தனை அருவிகள், அவ்வப்போது மலையை போர்த்தும் பஞ்சுப்பொதிகள்....கை சும்மா இருக்குமா?

"எட்றா கேமிராவை' என்று படங்கள் எடுத்து தள்ள, கலவரமானார் வழிகாட்டி. 'மதியம் ஒரு மணிக்கு நாம் திரும்ப வேண்டும். சீக்கிரம் நடங்கள்' என்று சற்று மெல்லிய குரலில் சொன்னார்.

தொடர்ந்தோம். படிகள் குறுகலாக எப்போது மாறத்துவங்கியிருந்தது என்று தெரியவில்லை. ஒரு குறுகலான ஏணி போல, படிகள் கீழ் நோக்கி பாயத்துவங்கியிருந்தன. எங்களை அறியாமலேயே, லேசாக வியர்க்கத் தொடங்கியிருந்தது.  நேரம் போவதே தெரியாமல், படிகளில் இறங்கிக்கொண்டேயிருந்தோம்.  
 
பின்தங்கியிருந்த பெரிம்மாவுக்காக, காத்திருந்த கணத்தில், கால்கள் முட்டியிலிருந்து நடுங்குவதை உணர்ந்தேன். எங்களை விட சற்று வேகமாக நடந்துக்கொண்டிருந்த பப்பு, சீரான வேகத்தில் நடந்து, சற்று பின் தங்க துவங்கினாள். தரையே கண்ணுக்கு தெரியாமல், வெறும் படிகளாக தெரிந்ததில், அவளது பாதுகாப்புணர்வு தலையெடுத்திருந்தது.

அருகே வந்ததும் கவனித்ததில், அவளது கால்களும் நடுங்கத் துவங்கியிருந்தன. நடுங்கக்கூடாதெனில், தொடர்ந்து நடக்க வேண்டுமென கண்டுகொண்டிருந்தோம். உடல் வியர்க்க வியர்க்க இறங்கிக்கொண்டே இருந்தோம்.  

 

அருகில், ஏதோ ஆறு சலசலத்து ஓடிக்கொண்டிருக்கும் சப்தம் மட்டுமே கேட்டது. காண முடியவில்லை. அடர்ந்த காடு. பருவநிலை இதமாக இருந்தது. 

ஒரு இடத்தில், கம்பியினாலான கைப்பிடி தெரிய,  பிடித்துக்கொண்டு இறங்கினோம். 'கைப்பிடி வைத்த புண்ணியவான் வாழ்க' என்று சொல்லிக்கொண்டோம். வெயிலுமில்லை, குளிருமில்லை.  களைப்பும் தெரியவில்லை.

வழிகாட்டி எந்தவித கலவரத்துக்குள் உள்ளாகாமல், சர்வசாதாரணமாக நடந்துக்கொண்டிருந்தார். மூச்சிரைப்போ வியர்வையோ எதுவும் அவரை அசைக்கவில்லை. 'இதுவரை எத்தனை படிகள் இறங்கியிருப்போம்' என்று 
நமது உற்சாகத்துக்காவும் மனதிருப்திக்காகவும் கேட்டால், 'தெரியாது. எண்ணவில்லையே' என்று பதில் வந்தது.


'சரி ஒரு ஐநூறாவது இறங்கியிருக்கமாட்டோமா' என்று எங்களை நாங்களே உற்சாகப்படுத்திக்கொண்டு நடையை தொடர்ந்தோம். தண்ணீர் குடிக்க வேண்டிய தேவையிருக்கவில்லை. வியர்வைதான் வழிந்து ஆறாக ஓடியது.   ஒரு இடத்தில் நின்று பார்த்தபோது, நாங்கள் சென்று சேர வேண்டிய அடிவாரம் தெரிந்தது.

ஒன்று மட்டும் சர்வ நிச்சயம்!  இயற்கை, தனது அதி அற்புதமான காட்சிகளை,  குறுகலான, செங்குத்தான மற்றும் அபாயகரமான கோணங்களில்  ஒளித்து வைத்துள்ளது.  அந்த கோணங்களை, கண்டடையும் பாதைகளில் பயணிப்பவர்கள், பாக்கியவான்கள்!!

திரும்பவும் படங்கள்.

மாற்றி மாற்றி எடுத்துக்கொண்டோம். 'எவ்வளவோ பார்த்துட்டோம்' என்பது போல எங்களது இந்த அலப்பறைகளை பொறுமையாக சகித்துக்கொண்டு நின்றிருந்தார் வழிகாட்டி.

ஒருவழியாக தரையை அடைந்தோம். நடையை முடித்த ஒரு குழு, படிகளில் ஏறத்துவங்கியிருந்தனர்.

இங்கிருந்து சரியாக முப்பது நிமிடத்தில், இன்னொரு வேர்ப்பாலம் இருக்கிறது. 99 அடி நீளமுள்ள அந்த பாலம்தான், இதுவரையிருக்கும் பாலங்களில் நீளமானது. அதற்கு முதலில் செல்லலாமா என்று யோசித்து, 'வேணாம்! ஒன்லி டபுள் டெக்கர்" என்று முடிவில் உறுதியாக நடையை தொடர்ந்தோம்.

சிலபல வீடுகள் தென்பட்டன. மாங்காய்கள், ரோஜாக்கள் பறிப்பார் யாருமின்றி காற்றில் ஆடிக்கொண்டிருந்தன. வீட்டின் வாயிலில் அமர்ந்து பாக்கை உறித்துக் கொண்டிருந்தார் ஒருவர்.


இங்கிருந்து, கிட்டதட்ட‌ ஒரு கிமீ வரை காட்டு வழியில் தரை பயணம். ஆங்காங்கே படிகள் இருக்கும். அவை கணக்கில் வராது. பெரிய பெரிய பாறைகள் அமர்ந்திருக்க, சுத்தமான காற்றை சுவாசித்தவாறு நடையை தொடர்ந்தோம். சில வித்தியாசமான குரல்கள். பறவைகளினுடையவைதாம். அவை தவிர, வேறு எந்த நடமாட்டமுமில்லை. மனிதர்கள் நாங்கள் மட்டும்தான்.

ஒரு ஊரில் அழகான இடம் இருக்கலாம். ஆனால், அழகே ஊரான இடம் இருக்க முடியுமா? அதுதான்  மேகாலயா!அதன்பிறகு, கேட்டது ஆறு ஒன்று ஓடிக்கொண்டிருக்கும் சப்தம். மழையில்லாத காலத்தில் வந்திருந்தால், வெறுமையான ஆற்றை கடக்க நேர்ந்திருக்கும். நீரில்லாத ஆற்றை காண சகிப்பதில்லை, எங்களுக்கு.

தண்ணீர் பொங்கி பிரவாகமாக ஓடிக்கொண்டிருப்பதை பார்த்தாலே, மனம் பூரித்து சந்தோஷமாகிவிடுகிறது. அது உணர்ந்தவர்களுக்கே புரியும்.மகிழ்ச்சியாக நடைபோட்டோம்.

அந்த மகிழ்ச்சியை அசைத்துப்பார்க்கும் தருணமும் வந்தது. ஆம், தொங்கும் பர்மா பாலம்.

வழிகாட்டி ஜாலியாக முன்னே சென்றுவிட, பப்பு பின் தொடர்ந்தாள். 'போய்டலாமா பப்பு' என்று தயக்கத்தை மறைத்துக்கொண்டு கேட்க, "அப்புறம்? நான் போறேன்பா" என்று பதில் வந்தது. அவளை ஒட்டி, அடி வைக்க ஆரம்பித்தேன். 

பயமெல்லாம் மறைந்து, ஆச்சரியமும், பிரமிப்புமே மிஞ்சியது. காலுக்கு கீழே பெரிய பாறைகளின்  வழி வெள்ளமாக ஆறு! எதிரில், சுற்றும் முற்றும் என்று ஓங்கி வளர்ந்த அடர்ந்த மரங்கள். மேலே, பஞ்சு பஞ்சாய் மேகம். வாய்க்குமோ இந்த தருணம் மீண்டும்?!!

இரண்டு பக்கங்களிலுமுள்ள, கம்பிகளை பிடித்தபடி, லேசான ஊஞ்சலாக ஆடிய பாலத்தில் நடுவில் படமெடுத்துக்கொண்டு அக்கரையை அடைந்தோம். வந்த வழியை ஒருமுறை திரும்பிப் பார்த்துக்கொண்டோம்.

'இந்த பாலம் சின்னதுதான். அடுத்து வரும் பாலம் சற்றே பெரிது' என்றார் வழிகாட்டி.

தலையை தலையை ஆட்டினோம். 'இன்னும் ஒரு பாலம். அப்புறம், அந்த இரண்டு நூற்றாண்டுகளாக இருக்கும் அதிசயத்தை காணப்போகிறோம்' என்ற எண்ணம் சற்று உற்சாகத்தை கொடுக்க, தண்ணீர் பருகி விட்டு, நடையை தொடர்ந்தோம்.திரும்பவும் படிகள். பாறைகள்.

 ஏதோ ஒரு ஆங்கில படத்துக்குள் நுழைந்துவிட்டது போலவே தோன்றியது. வெயில் படாத இடமென்றால் இதுதான் போல. சூரியன் உதிக்கும் வேளையிலொரு மெல்லிய வெளிச்சம் பரவுமே...அந்த வெளிச்சமும் இளங்குளிரும்தான்  இங்கு ஆட்சி புரிகின்றன!

இரண்டாவது பாலத்தையும் நெருங்கிவிட்டோம்!

ஆம்! இந்த ஆறு பெரியதுதான். தண்ணீர் மண் கலந்து கலங்கலாக ஆனால், பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றின் இரைச்சல், அந்த வனத்தை நிறைத்திருந்தது. ஆபத்தான அழகு!தொங்கு பாலம் இரண்டு பகுதிகளாக இருந்தது. முதல் பகுதியில், பாலத்தின் கீழ் தண்ணீர் அதிகம் இல்லை. ஆனால், பாறைகள்!! எங்கிருந்து அடித்து வந்திருக்கும் இவ்வளவு பெரிய பாறைகள்? பூமி உருவானபோதா? 1897யில் வந்த நிலநடுக்கத்தின்போதா?


பாலத்தின், இரண்டாம் பகுதிதான் நீளமானது.  ஆற்றின் குறுக்கே -இந்த பாலத்தின் மீது நடப்பதுதான் எவ்வளவு சாகசமானது. அதுவும், நம்மால் முடியாது என்று நினைத்ததை சாதிக்கும்போது உண்டாகும் உவகைதான் எத்தகையது!  இயற்கையை, அந்த ஆற்றை, பாலத்தை, மனிதத்தை தவிர  மனதில் - அந்த நிமிடம் - வேறெதுவும் ஆக்கிரமிக்கவில்லை.


பார்க்கவும், ரசிக்கவும், சுற்றித்திரியவும்தான் எத்தனை இருக்கிறது இந்த பூமியில் என்று தோன்றும் நிமிடம் அழகானது. அதனை உணரவே, நாங்கள் மீண்டும் மீண்டும் எங்கள் கூட்டை விட்டு பறந்து திரிகிறோமோ?  

மூச்சை இழுத்துவிட்டுக்கொண்டு, படிகள் ஏறத்துவங்கினோம். இந்த பாலம் முடிந்ததும், இரண்டடுக்கு வேர்ப்பாலம்தான் என்று சொல்லப்பட்டிருந்ததால், கண்கள் பாலத்தை தேடின. ம்ஹூம்!

சற்று நடந்தால், ஒரு சிற்றாறு. அதனை கடக்க ஒரு சிறிய வேர்ப்பாலம். மகிழ்ச்சியுடன் அடைந்து தொட்டு தடவி படங்களெடுத்து....

 பாலத்தை கடந்தால், மூங்கில் குடிலில் ஒரு டீக்கடை. காலி பாட்டில்களை கொடுத்துவிட்டு, புதிய தண்ணீர் பாட்டில்களை வாங்கிக்கொண்டு நடையை தொடர்ந்தோம். திரும்பவும், படிகள். கிட்டதட்ட, இன்னொரு மலையை ஏறிக்கொண்டிருக்கிறோம்.

பலாக்காய்கள் காய்த்து தொங்க, சில வண்டுகள் எங்களை சுற்றி ரீங்கரித்தன. காதுகளை மூடிக்கொண்டு, மூச்சு வாங்கியபடி மேலேறினோம்.

ஒரு பெட்டிக்கடை வரவேற்றது. பாக்கு மரங்களையும், கோழிகளையும் கடந்து சென்றால், அருவியின் கிணிகிணியும் ஆற்றின் சலசலப்பும் காதுகளுக்கு அவ்வளவு இதமாக இருந்தது. நுழைவுச்சீட்டு, கேமிரா அனுமதிச்சீட்டு அறிவிப்பு பலகையை கூட மதிக்காமல் உள்ளே சென்றுவிட்டோம்.


பாலத்தின், இந்த பக்கத்திலிருந்து மேலேறி - அந்த பக்கமாக கீழடுக்கில் வந்து இந்த பக்கம் மேலேறி - பாலத்தை ஒருவழி செய்தோம். வேர்ப்பாலத்தின்  மீது நின்று, எதிரில் தண்ணீர் அருவியாக கொட்டுவதை, கீழே வழிந்து ஓடுவதை வேடிக்கை பார்த்தோம். செல்ஃபிக்கள் எடுத்துக்கொண்டோம். கேமிராவுக்கு இப்படியும் -அப்படியுமாக அழகு காட்டிவிட்டு வேர்களை ஆராய்ந்தோம். கீழேருந்து மேல், மேலிருந்து கீழ் என்று படமெடுத்து தள்ளினோம்.

ஓய்ந்து போய், அருவிக்கருகில் அமர்ந்து கால்களை தண்ணீரில் அலசினோம். சில்லென்ற அருவி நீர் குளிக்க அழைத்தது. குளிக்க ஆயத்தமாக, நாங்கள் வரவில்லை. அருவியின், குறுக்கும் நெடுக்குமாக நடந்து தண்ணீரின் வேகத்தை ரசித்தோம். படிகம்போன்ற நீருக்குள் கிடந்த கற்களுக்கு சாப விமோசனம் கொடுத்தோம். நினைவுக்காக, சில கூழாங்கற்களை சேகரித்து பத்திரப்படுத்தினோம்.  பாறைகளின் மீது, நடந்து சென்று அருவியிலிருந்து நேராக நீரைப் பிடித்துக் அருந்தினோம். 

யாருடனும் பேசிக்கொள்ளாமல் அவரவர் சிந்தனைகளூக்குள் சற்றுநேரம் மூழ்கினோம். இளைஞ இளைஞிகள் பட்டாளமொன்று நுழைந்து குதூகலக் குரல்களால் நிரப்ப, அவர்களை வேடிக்கை பார்த்தோம். நேரமாவதை வழிகாட்டி சுட்டிக்காட்ட, 'கடைசியாய் ஒருமுறை' என்று பாலத்தின் கீழடுக்கிலிருந்து மேலேறி வந்தோம்.
 

வேர்ப்பாலத்தை, இயற்கையின் மடியை, மேகாலயாவின் நாடித்துடிப்பை விட்டு அகல மனமில்லாமல் திரும்பி நடந்தோம். ஏக்கமாக திரும்பி ஒரு பார்வை பார்த்துக்கொண்டோம்.  அந்த காட்சியை கண்களிலும் மனதிலும்  நிறைத்துக்கொண்டோம்.  திரும்பி என்றாவது ஒருமுறை இங்கு வருவேன் என்று அவரவர் மனதுக்குள்ளும் ஒரு குரல் ஒலித்திருக்கும் என்று நினைக்கிறேன்.

படிகளில் இறங்கும் சமயத்தில், வேர் பாலத்துக்கு மேலும் சில விருந்தினர்கள்.  அதில் தமிழ்க்குரல்கள் ஒலிக்க, முகத்தை பார்த்ததும், 

'தமிழா?'

'தமிழா?"

புன்னகை. 

தொடர்நடை. பேசிக்கொள்ள எதுவும் இருக்கவில்லை. அல்லது, பேசி மனதுள் படர்ந்திருந்த ஏகாந்தத்தை கெடுத்த விரும்பவில்லை.

தொங்கு பாலத்தில் இந்த முறை கூட்டமிருந்தது. கூட்டமெனில், நான்கைந்து பேர். அவர்களின் முகத்தில் தெரிந்த கலவரத்தை இங்கிருந்து ரசிக்க முடிந்தது. அவர்கள், இந்த பக்கம் வர, வழிவிட்டு காத்திருந்து, நாங்கள் தொடர்ந்தோம். இம்முறை, மிகவும் அமைதியாக!கிட்டதட்ட படிகளுக்கருகில் வந்து சேர்ந்ததும் வழிகாட்டி கேட்டார், 'இதுவே போதுமா அல்லது நீண்ட பாலத்துக்கு போக வேண்டுமா?'.

அடங்குவோமா நாங்கள்?

'கண்டிப்பாக போகணும்'

அதற்கு, தனியாக நுழைவுச் சீட்டு வாங்கிவிட்டு திரும்பவும் படிகள். இவை ஒரு 150 200 இருக்கும். அமேசான் காடுகளுக்குள் நுழைந்தது போலவே இருந்தது. வெயில் புக கொஞ்சமும் வழியேயில்லை. பெரிய பெரிய பாறைகள், அவற்றை அடித்து மோதிக்கொண்டு செல்லும் ஆறு....அதில் குதித்து விளையாடும் சிறுவர்கள்.


நீண்ட பாலம்தான்.

இங்கிருந்து அங்கு, சில படங்கள், அங்கிருந்து இங்கு...சில படங்கள்...கடைசியாக பாலத்தை, வேர்களின் மீது உயிர்த்திருக்கும் சிறு செடிகளை....

ஆற்றின் கிளையொன்று தனித்து பிரிந்து கொட்டிக்கொண்டிருந்த இடத்தில் அமர்ந்து கொண்டு வந்திருந்த சான்ட்விச்சை உண்டு, அருவி நீரை குடித்துவிட்டு சற்று இளைப்பாறினோம். பசித்த போது வயிற்றில் இறங்கிய உணவு, காட்டின் குளிர்ச்சி, அருவியின் ஓசை, ஆற்றின் இடைவிடாத ஓட்டம்....

ஏற வேண்டிய படிகளை, கண்டதும் மலைப்பாக இருந்தது. ஆனால், வந்தாயிற்று, திரும்பிச் சேர வேண்டுமே! முதலடியை எடுத்து வைத்ததுதான் தெரியும். கால்வாசி ஏறியபிறகு சற்று இளைப்பாறல். இப்போது வந்துவிடும், அப்போது வந்துவிடும் என்று ஆளுக்காள் உற்சாகப்படுத்திக்கொண்டோம்.

 சிறுவர்களின் உற்சாசக் குரல்கள்..என்னவொரு வாழ்க்கை! டென்ஷனாவது ஒன்றாவது...ம்ம்ம்!

 பாலம் நோக்கி போகும், புது விருந்தினர்களுக்கு வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டும், வேடிக்கை பார்த்துக்கொண்டும் மெதுவாக ஒவ்வொரு அடியாக வைத்து நகர்ந்தோம். உள்ளுக்குள் தெப்பலாக நனைந்திருந்தோம். ஆனாலும், சோர்வாக இல்லை. மகிழ்ச்சியும் உற்சாகமுமே ஓங்கியிருந்தது.


ஒருவேளை,  முடியாதென்ற சந்தேகத்தை, சோதனையை தகர்த்து  நாம் சாதிக்கும்போது நம்மை பற்றியே உள்ளுக்குள் உயரும் மதிப்பு தரும் பூரிப்பா என்று தெரியவில்லை.   எங்களால் கடக்கமுடிந்த தூரத்தை கண்டுக்கொண்டதால் இருக்குமோ?

மகிழ்ச்சியாக உணர்ந்தோம்.

அந்த மகிழ்ச்சியை வார்த்தைகளில் கொண்டு வந்துவிட முடியுமா தெரியவில்லை. பயணம் தரும் சுதந்திரத்தை அனுபவத்தவர்களுக்கே புரியும்.

'பாலங்களை கடக்க பப்பு பயப்படுவாளோ? ' 'கடினமான பாதையில் நடக்க இயலவில்லையெனில் என்ன செய்வது? '- இந்த எண்ணங்களே எனது மூளையை கடந்த நாளிரவு வரை ஆக்கிரமித்திருந்தது. மாறாக,  சவால்களை, அவள் எதிர்கொண்ட விதம் மனதுள் நிறைவை தந்தது.

பொருட்களாக வாங்கிச் சேர்க்கும் மகிழ்ச்சியைவிட, செறிவான அனுபவங்களை முத்துகளாக கோர்ப்பதையே பயணங்கள் எனக்கு கற்றுக்கொடுத்திருக்கின்றன. அவற்றுள், இரட்டை பாலத்தின் நடை பயண அனுபவம், மதிப்பிடற்கரிய‌ முத்து!

இப்பசுமை நடையின் , சாகச அனுபவத்தின் தடம் எங்கள் நெஞ்சில் என்றென்றும் நிலைத்திருக்கும், மேகாலயாவின் தனித்துவமான வேர்ப்பாலங்களை  போலவே!

ஆங்கிலத்தில் ஒரு மேற்கோள் உண்டு. "வாழ்க்கையில் பின்னோக்கி பார்த்தால், நீங்கள் அடைந்ததைவிட அடையாத விஷயங்களுக்காகத்தான் வருந்துவீர்கள்."

நல்லவேளை, எங்கள் நங்கூரங்களை நாங்கள் கழற்றி வீசினோம்.  :-)

1 comment:

Kalaivani said...

Very nice travelogue Mullai. Gives a real feeling of the place.

Can you elaborate your observation on the people, their living style and more in your next post? It would be interesting to know.

Expecting few more posts on this topic :)