Saturday, May 30, 2015

'அவளது பாதை ‍' - அப்பூரி சாயா தேவி


பெரும்பாலும், சிறுகதைகள் தொகுப்பை வாசித்து முடித்து மூடி வைத்தால் ,ஒன்றிரண்டை தவிர நினைவில் நிற்காது. எனது மனதின் ஞாபகசக்தி அப்படி. வாசிக்கும் நேரத்தில், கதைகள் ஏற்படுத்திய பாதிப்பு இருக்குமே தவிர, அதே கதையை, திரும்ப வாசிக்கும்வரை மீட்டெடுக்க முடியாது. இந்த சிறுகதை தொகுப்பும் அப்படித்தான் என்றாலும், கதைகள் ஏற்படுத்திய பிரமிப்பு  வித்தியாசமானது. கிட்டதட்ட, ஆர்.சூடாமணியின் 'நாகலிங்க மரம்' தொகுப்பு ஏற்படுத்திய பிரமிப்பு போல.

அந்த தொகுப்பில், எல்லாமே எளிய கதைகள்தான். சட்டென்று நினைவுக்கு வராதுதான். ஆனாலும், ஒவ்வொரு சிறுகதையையும், வாசித்தபின் ஏற்படும் மனச்சுழல்கள் இருக்கிறதே, எளிதில் தாண்ட முடியாதவை. இந்த தொகுப்பும் அதேபோல்தான்.  கனமான விஷயங்களை போகிறபோக்கில் எழுதி சென்றிருக்கிறார், அப்பூரி சாயா தேவி.  இந்த கதைகளை 1965யிலிருந்து 2001 வரை எழுதியிருக்கிறார்.

பெண்ணிய கதைகள் என்று இவற்றை பிரச்சார கதைகளாக சுருக்கிவிட முடியாது.புரட்சியும்,கொள்கைகளும் பேசுகிற, 'கொடி பிடிக்கிற' அல்லது வாழ்க்கையின் அவலத்தையோ அல்லது வீராவேசமான சவால்களை பேசுகிற கதைகளல்ல இவை.

 நம் வீட்டிலும், அக்கம்பக்கத்து வீட்டிலும்  வாழ்கிற  பெண்களின் எளிய அன்றாட வாழ்க்கையின் உணர்வுகளை, சம்பவங்களை சொல்கிற இயல்பான கதைகள். இன்று அம்பை ஃபேஸ்புக்கில்  எழுதியிருந்த அவரது அம்மாவைப் பற்றிய குறிப்பு போல. இயல்பான, எளிய மனுஷிகள் ஏற்படுத்தும் தாக்கம் சற்று வீரியமானதுதான்!

அந்த இயல்பு மட்டும்தான் சாயாதேவியின் கதைகளின் வலு. இந்த வலுவான முதுகெலும்பை மட்டுமே வைத்துக்கொண்டு, ஒன்றிரண்டு பக்கங்களில் வாழ்க்கையையே படம்பிடித்து காட்டிவிடுகிறார், ஒரு தேர்ந்த காட்சியமைப்பாளர் போல.  பெண்ணெனும் சட்டகத்துக்குள் குறுக்கி அடைக்க‌ப்படும் வாழ்க்கைகளின் மூச்சுத்திணறலை, சாயாதேவியின் கதைகள் வெகு எளிதாக பிரதிபலிக்கின்றன.   

கதைகள்தான் தெலுங்கு மூலத்திலிருந்து வந்திருக்கின்றனவே தவிர, கதைகளில் உலவும் மனிதர்கள் நம் வீடுகளிலும், வீதிகளிலும், பல்கலை கழகங்களிலும், அலுவலகங்களிலும் என்று எங்கும் நிறைந்திருக்கிறார்கள். நம்முடனும், நம் பெண்களிடமும் அன்றாடம் எதிர்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். வெளிவந்து, கிட்டதட்ட  ஐம்பதாண்டுகளானாலும், இந்த கதைகள் இன்றும் வழக்கொழிந்து போய்விடவில்லை என்பதற்கு அதுவே  சான்று. 

'சுகமான தூக்கம்' என்றொரு கதை.நம் அம்மாவுக்கு தூக்கமே வராதா என்று நாம் ஏதாவது ஒரு கணத்தில் நினைத்திருப்போம்தானே! அப்படி ஒரு அம்மாவின் கதைதான் இது. 'தூக்கமெல்லாம் பேசறதுக்கு வொர்த்தான‌ விஷயமா' என்றுதான் தோன்றும்.

கொஞ்சம் யோசித்து பாருங்களேன்.  ஒன்றாம் வகுப்பிலிருந்து பள்ளிக்கூடம் முடியும்வரை தூக்கமென்பது கனவுதான். அதன்பிறகு, கல்லூரி. கல்யாணம். குழந்தை, அந்த குழந்தைக்கு ஒன்றாம் வகுப்பு....பள்ளிக்கூடம்,சனி ஞாயிறு சிறப்பு வகுப்புகள்... கல்லூரி...திருமணம் முடித்து மகனும், மகளும் வெளியூர்களுக்கு சென்றுவிட, தூங்குவதற்கு  ஏங்கியது போக,வயதான காலத்தில் தூக்கம் வராமல் தவிக்கும் ஒரு அம்மாவின் கதை இது.

பப்பு பிறந்தபோது, ஏன் இன்றும் கூட இதனை உணர்கிறேன். 'இப்போதான் நானே  'ஃப்ராக்ஷன்ஸ்' படிச்ச மாதிரி இருக்கு. திரும்பவும் படிக்கணுமா' என்று அவ்வப்போது தோன்றும். யாரிடமாவது பகிர்ந்துக்கொண்டால் 'இதெல்லாம் ஒரு விஷயமா' என்று சொல்லி விடுவார்களோ நான் கடந்து போனவற்றை இந்த கதைமாந்தர்களும் எதிர் கொள்கிறார்கள் என்பதே எனக்கு ஆசுவாசமாக இருக்கிறது.

இன்னொரு கதை - 'போன்சாய் வாழ்க்கை'. அக்கா தங்கை கதையூடாக ஆண் பெண் வளர்ப்பைப் பற்றி பேசிவிடுவது அழுத்தமாக பதிந்து விடுகிறது. இனி போன்சாயை எங்கு கண்டாலும், சாயாதேவியை நினைக்காமல் இருக்க முடியாது.

'சதி' என்றொரு கதை. வேறொன்றுமில்லை. எழுத்தாளரான மனைவி, கணவன் மீது கொண்ட அன்பால், அவனது  முதல் எழுத்தையும், தனது முதலெழுத்தையும்  சேர்த்து வைத்துக்கொண்ட புனைபெயர். பத்திரிக்கை மூலமாக அறிவித்துவிட்டு, ஆரம்பத்தில் மனைவிதான் கதை எழுதுகிறாள்.

கதைகள்,நாவல்கள், சீரியல்கள்  என்று 'சதி'யிடமிருந்து வந்தாலே  நிச்சயமாக வெளியிடலாமென்று என்கிற நிலை உருவாகிறது. இதன் நடுவில்,'சதி'யில் பாதி கர்ப்பவதியாகி குழந்தையுடன் பொழுதை கழிக்கிறாள். வாசகர் களிடமிருந்து கிடைத்த வரவேற்பும், உற்சாகமும், 'சதி'யின் புகழும்,மயக்கமும் ஒரு கட்டத்தின் கணவனை ஈர்க்க, மனைவிக்கு தெரியாமல் அவளது சம்மதமே இல்லாமல் எழுதி அனுப்பத்தொடங்குகிறான். இலக்கியவட்டத்தில், கூட்டங்களில் 'சதி'யாக தன்னை காட்டிக்கொள்கிறான். 

அவளுக்கும், 'சதி'  எழுதுவதற்கும் தொடர்பே இல்லாமல் போகும் கட்டத்தில் கணவன் 'திருமலைராவ்' துர்மரணம் எய்துகிறான். இலக்கிய உலகம் ஸ்தம்பித்து போகிறது.  இரங்கல்கூட்டத்தில், 'சதி'யின் இழப்பையும் அனுதாபங்களையும் தெரிவிக்கும் ஆண், பெண் எழுத்தாளர்கள் எவரும் , சதியின் பாதியான 'சத்யவதி' இன்னும் உயிரோடு இருப்பதையும், 'சதி'யின் பெயரில் எழுத்துகள் வெளிவரலாமென்ற நம்பிக்கையை கூட வெளிப்படுத்தவில்லை. 'சதி என்ற பெயரிலோ சத்யவதி என்ற பெயரிலோ மீண்டும் ஒரு  கதை இதுவரையிலும் வரவில்லை'.

'ஸ்பரிசம்' -  மடி,ஆசாரம் என்று பெண் பிள்ளைகளை தள்ளியே நிறுத்தி பழக்கப்பட்டுவிட்ட அப்பா மற்றும் மகளுக்கு இடையிலான கதை. வயதான காலத்தில், பாசத்துக்கும், மகள்களின் அருகாமைக்கும் ஏங்குகிறார் அப்பா. ஆனால், எப்போதும் 'மடியாக' இருத்தப்பட்டு பழக்கப்பட்டுவிட்ட மகள் அப்பாவின் கையை எடுத்து வைத்துக்கொள்வதற்கே தயங்குகிறாள்.

அப்பாவின் அருகாமைக்காக‌ ஏங்குகிற சிறுவயதில் தள்ளிநிறுத்தப்பட்டுவிட்டு, அவருக்கு இயலாத காலத்தில், ரிக்ஷாவில் கூட அமர்ந்துக்கொள்ளவோ, வாஞ்சையாக கையை பிடித்து அன்பை வெளிப்படுத்தவோ கூட இயலாதபடி மனதளவில் தள்ளியிருக்கும் மகளின் நிலையை வெகு இயல்பாக காட்டிவிடுகிறது.

'வெள்ளிவிழா', 'அந்த மூன்று நாட்கள்' 'உட்ரோஸ்' திருமதி அதிகாரி' இவையும் என்னை மிகவும் கவர்ந்த கதைகள். முக்கியமாக, 'பயணம்' என்றொரு கதை. இந்த கதை,  ஜெயகாந்தனின் புகழ் பெற்ற 'அக்னி பிரவேசம்' கதையை நினைவூட்டியது. 'அக்னிபிரவேசம்' கதையை வாசித்ததில்லை, ஆயாவின் மூலம் கேள்விப் பட்டிருக்கிறேன். 'பயணம்' கதையில், அப்பா பார்த்திருக்கும் சேகரை வேண்டாமென்று சொல்லிவிட்டு தான் காதலிக்கும் மூர்த்தியை திருமணம் செய்துக்கொள்ள செல்கிறாள் ரமா.

இடையில், ராஜமுந்திரி ரயில் நிலையத்தில், பள்ளிக்கூட‌ தோழியையும் அவளது கணவனையும் சந்திக்க அவர்களது வற்புறுத்தலின் பேரில் இறங்குகிறாள். அன்று இரவு, தோழியின் கணவனிடமிருந்து அவளை காத்துக்கொள்ள முடியவில்லை. நடந்தவை தோழிக்கும் தெரிந்திருக்கிறது. ரமாவிடம் மன்னிப்பு கேட்கிறாள். வீட்டிலிருந்து கிளம்பி வந்த பெண்ணாக ரமா இப்போது இல்லை.

மூர்த்தியை சந்திக்க மனமற்று, கல்கத்தாவுக்கு விவேகானந்தர் ஆசிரமத்துக்கு செல்கிறாள். சாமியாரிணியாகிவிடும் முயற்சியில் இருக்கும் ரமாவை, மூர்த்தி சந்தித்து திருமணம் செய்துக்கொள்ளுமாறு வற்புறுத்துகிறார். அவரிடம் நடந்ததை சொல்ல, மூர்த்தியோ மறுகுகிறார். 'அவ்ளோதானே, விட்டுத்தள்ளு' என்று தன்னை மீட்டெடுத்துக்கொள்வாரென்று ரமாவின் மனதின் மூலையிலிருக்கும் ஒரு வெள்ளிக்கீற்றும் மறைகிறது.

இந்த நிலையில், தன்னை நிராகரித்த காரணத்தை கேட்க  அவளைத் தேடி வருகிறார் சேகர்.  மூர்த்தியை காதலித்ததையும், தோழியின் வீட்டில் நிகழ்ந்த சம்பவத்தையும் சொல்கிறாள் ரமா. மூர்த்தி சொல்லியிருக்க வேண்டிய வார்த்தைகளை, ரமாவிடம் சொல்கிறார் சேகர். கதை சுபம்.

இந்த கதையை வாசித்தபோது, எனக்குள் 'ஒரு சின்ன விஷயத்து இவ்ளோ களேபரமா..அது ஒரு ஆக்சிடென்ட்.. அதை மறந்துட்டு தாண்டி வரவேண்டியதுதானே.. அதுக்கு எதுக்கு இவ்ளோ குழப்பம்' என்றுதான் முதலில் தோன்றியது. இப்படி  தோன்றியதற்கு என்ன காரணமாக இருக்கக்கூடும் என்று எனக்கே அதிர்ச்சியாக இருந்தது. ஒவ்வொருநாளும் கேள்விபடும் செய்திகளா, அதன்  காலம் நிஜமாகவே நம்மை நகர்த்தி வந்துவிட்டதா?  கற்பு அல்லது கன்னித்தன்மை இதெல்லாம் வீர்யம் இழந்து கடந்தகாலத்து விஷயங்களாகிவிட்டனவா?

மேலும், தன்னம்பிக்கையும் தைரியமும், படிப்பும் கொண்ட ரமா ஏன் சாமியாரிணியாகிவிட வேண்டுமென்று நினைக்கவேண்டும் என்றும் புரியவில்லை. அதே சமயம், ஏன் அந்த காலத்து கதாநாயகிகள் யாராவது தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று காத்து ஏங்கிநிற்க வேண்டுமென்றும் புரியவில்லை. (அக்னிபிரவேசத்து கதாநாயகியும் திருமணமே செய்துக்கொள்ளாமல்தான் காலத்தை கழிப்பாள் இல்லையா?) ஒருவேளை, எழுதிய காலத்துக்கும், கதைக்குமிருக்கும் தொடர்பும் கூட காரணமாக இருக்கலாம்.

அதேசமயம், இன்றும் யதார்த்தம் அப்படியொன்று மாறிவிடவில்லை. சேகர்கள், கதைகளில்தானே வாழ்கிறார்கள். ஆனால், இந்த சம்பவங்களை விபத்துபோல கடந்துவிட வேண்டுமேயன்றி வாழ்க்கையே போனது போல் கலங்கக்கூடாது என்ற தெளிவுக்கு நான் வந்திருப்பதற்கு சாயாதேவி போன்றோரின் எழுத்துகள் வழியாகத்தான்  என்றே உணர்ந்தேன். அந்த வகையில், 'அவளது பாதை' தொகுப்பு முக்கியமானவை. 

சில வருடங்களுக்கு முன்பு, (கிட்டதட்ட 9 வருடங்கள்?) 'பெண்மைய சிறுகதைகள்' என்று சாகித்ய அகாதமி சிறுகதை தொகுப்பை வாங்கியிருந்தேன். வெவ்வேறு முக்கியமாக தமிழ் பெண் எழுத்தாளர்களின் அழுத்தமான சிறுகதைகள் அத்தொகுப்பில் இடம்பெற்றிருந்தன‌.  ஒவ்வொரு சிறுகதையும் ஒரு நட்சத்திரம்.

அதை மனதில் இருத்தியே, 'அவளது பாதை'யை வாங்கினேன். மொத்தம், 28 தெலுங்கு சிறுகதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு. ஆனால், மொழிபெயர்ப்பு மிகவும் ஏமாற்றிவிட்டது. மொழிபெயர்ப்பு குறித்து புகாரளிக்கலாமென்ற அளவுக்கு எரிச்சலும் கோபமும்தான் வந்தன.

சாகித்ய அகாதமி, மொழிபெயர்ப்பு நூலுக்கான எந்த நேர்த்தியையும் இதில் நான் காணவில்லை. வெந்ததும் வேகாததுமான உணவை சாப்பிடுவது போன்ற நிலைதான். இவ்வளவு கேவலமான  மொழிபெயர்ப்பு நூலை இதுவரை வாசித்தது இல்லை. இருந்தாலும், தொகுப்பை தொடர்ந்து வாசிக்க வைத்தது, சாயாதேவியின் சிறுகதைகளிலிருக்கும்  ஜீவன் மட்டுமே.  மறுமுயற்சி எடுத்து, இதனை மொழிபெயர்ப்பு செய்தால் தேவலை.


அவளது பாதை (தெலுங்கு சிறுகதைகள்)
அப்பூரி சாயா தேவி (தமிழாக்கம் கொ.மா. கோதண்டம்)
சாகித்திய அகாதெமி வெளியீடு
விலை: ரூ 165
பக்: 332

No comments: