Thursday, May 28, 2015

நடையும், நடையின் நிமித்தமும்


அந்த நூதனமான பாலத்தை, 'எங்கே எப்போது பார்த்தேன் ' என்று நினைவில்லை. மேகாலயா என்று பெயரை எதிர்கொள்ளும் போதெல்லாம் அந்த  'இரண்டடுக்கு மரவேர் பாலம்'தான் நினைவுக்கு வரும்.  அப்போதெல்லாம், 'இந்த இடத்திற்கு ஒருநாள் நான் செல்வேனெ'ன்றோ அல்லது 'என் கண்களால் நேருக்கு நேர் பார்ப்பேனெ'ன்றோ - யாராவது ஆருடம் சொல்லியிருந்தால், நிச்சயமாக நம்பியிருக்கமாட்டேன்.

கடந்த, மே மாதத்தில் 'பிம்தல்' என்ற இடத்துக்கு சென்றோம். நைனிதால் மாவட்டத்தில் இருக்கும் ஊர். அந்த ஊரின், ஏழு ஏரிகளில் ஒன்றான  மரகத வண்ண ஏரிக்கு காட்டுப்பாதையில் பசுமை நடையாக பயணம் செய்தோம். கிட்டதட்ட எட்டு டூ பத்து கிமீ வரையிலான அந்த நடை பயணமும், மரங்களடர்ந்த காட்டின் பசுமையும், ஏரி நீரின் தண்மையும், அமைதியும் மிகவும் கவர்ந்து விட, அதுபோன்ற நீண்ட 'ட்ரெக்கிங்' செல்ல  வேண்டும் என்று பப்பு நெடுநாட்களாக கேட்டுக் கொண்டிருந்தாள்.

'வேலி ஆஃப் ஃப்ளவர்ஸ்' அல்லது 'டார்ஜிலிங்கிலிருந்து சிக்கிமுக்கு 'ரங்கீத்' ஆற்றை கடந்து செல்லும் நடையைத் தான் - இந்த கோடைவிடுமுறைக்கு ஆலோசித்துக்கொண்டிருந்தேன். மனதுள் , அவ்விரண்டு இடங்களையும் நடைகளைப் பற்றி அசை போட்டுக்கொண்டிருந்தேனே தவிர, அதற்கான ஆயத்தங்கள் எதுவும் செய்யவில்லை. அப்போதுதான் கையில் கிடைத்தது, 'அலெக்ஸாந்தர் கிரேட்டரின்' 'ச்சேஸிங் த மான்சூன்' புத்தகம்.  அந்த புத்தகத்தை வாசிக்கும்போது கூட, ச்சிராபுஞ்சியில் காலடி வைப்பேனென்று நினைக்கவில்லை.

"ச்சேஸிங் த மான்சூன்' புத்தகத்தை, வாசிக்க வாசிக்க அவ்வளவு வியப்பு. அந்த புத்தகம் ஒரு புதிய உலகத்தையே எனக்கு காட்டியது. இந்தியாவின், பருவகால மழையை தொடர்ந்து சென்ற அலெக்சாந்தரின் பயண நூல்தான் அது. கேரளாவிலிருந்து ச்சிராபுஞ்சி வரை கிட்டதட்ட‌ முப்பதாண்டுகளுக்கு முன்பே  மழையை துரத்தி சென்றிருக்கிறார்,அலெக்சாந்தர் ஃப்ரெட்டர். மேலும், அலுவலக நண்பரும் ஷில்லாங்கின் அழகை துதி பாட, எனக்கும் மேகலாயா ஜூரம் தொற்றிக்கொண்டது.

இணையத்தில் - ஷில்லாங்கைப் பற்றியும், ச்சிராபுஞ்சியைப் பற்றியும் தேடினால் , முதலில் அகப்படுவது  - இந்த வேர்களாலான பாலங்கள்தான். இந்த பாலத்தை, சென்றடையும் பயண விபரங்களை தெரிந்துக் கொண்டதும்,  'வேலி ஆஃப் ப்ளவர்ஸும்' 'ரங்கீத்' ஆறும்  சற்றும் காத்திருக்கட்டுமே என்று நினைத்துக்கொண்டேன்.

ச்சிராபுஞ்சிக்கு செல்ல, இன்னும் ஒருவாரமே இருக்கிறதென்ற நிலையில் தொடங்கியது எங்களது ட்ரெக்கிங் ஆயத்தங்கள். உலகின் ஈரமான இடத்தில் கிட்டதட்ட 6 மணிநேரங்கள் நடக்கப் போகிறோம்.அதுவும் மழைக்காலம் வேறு ஆரம்பித்துவிட்டது.

ஆர்வமும் பரபரப்பும் தொற்றிக்கொள்ள, ஆளுக்கொரு மழையுடை (ரெயின்கோட்), மழையில் நனையாத பை, பசுமை நடைக்கான‌ ஊன்றுகோல் என்று பார்த்து பார்த்து இணையத்திலும், வேளச்சேரியில் புதிதாக முளைத்துள்ள 'வைல்ட்க்ராஃப்ட்' கடையிலும்  வேட்டையாடினோம்.

இரண்டடுக்கு வேர்ப்பாலத்தை காணும் பயணத்தில், இரண்டு தொங்கு பாலங்களை கடக்க வேண்டும் என்று தெரிய வந்ததிலிருந்து மனம் உறுத்திக்கொண்டே இருந்தது.

இது மழைக்காலம். ஆற்றில் தண்ணீர் பொங்கி பிரவாகமாக வரும். பாலமோ, கம்பிகளால் பின்னப்பட்டது. பப்புவால் நடக்க முடியுமா? பயந்துவிட்டால் என்ன செய்வது? 

இணையத்தில், அந்த பாலங்களை அலசி ஆராய்ந்தேன்.   தைரியத்தை கொடுக்கக்கூடிய ஒரு வெளிச்சக்கீற்றுக்காக - பயணம் செய்தவர்களின் கருத்துகளை -தேடித்தேடி வாசித்தேன். 'சாகசமாக இருக்கும்' 'பயமொன்று மில்லை' என்ற கருத்துகளை வாசித்தபோது மகிழ்ந்தும், சில கருத்துரைகளில் 'கம்பிகளுக்கிடையில் இருக்கும் இடைவெளியில் குழந்தைகள் பத்திரம்' என்று கண்டபோதோ உள்ளூர பயந்தும் கிடந்தேன். 'ரிஸ்க் எடுக்கிறோமோ' என்று கூட ஒரு கட்டத்தில் நினைத்தேன். 

பப்புவிடம், மெல்ல மெல்ல இதைப்பற்றி சொல்லியும் வைத்தேன். பயந்துபோய்,  வேண்டாமென்று சொல்லிவிடுவாள் என்று மனதுள் ஒரு நப்பாசை இருந்தது. அவளோ,  'ஆ..சூப்பர்...நான் பாலத்துலே டான்ஸ் ஆடிக்கிட்டே நடப்பேன்' என்று துள்ளி குதித்தாள். பயத்தின் சிறு சாயல் கூட இல்லை.  இப்போது, பயத்தின் அளவு அதிகரித்து எனக்குத்தான் யாராவது தைரியம் சொல்ல வேண்டியிருந்தது.  

ஆற்றின் மீது நடக்கும்போது, கீழே ஓடும் நீரை பார்க்காமல் அடுத்த அடியை வைத்து கடந்துவிடு என்று மட்டும் தயார்பாடுத்தும் வகையில் சொன்னேன். அது அவளுக்கா அல்லது எனக்கா என்று தெரியவில்லை.

உண்மையில், பப்புவுக்கு  பாதுகாப்புணர்வு அதிகம். மிகைக்காக சொல்ல வில்லை. அவளை பற்றி நானறிவேன் இல்லையா! சரியான பிடிமானம் இல்லாமல் ஒரு சிறு இடைவெளியை கூட தாண்ட மாட்டாள். தாண்டிகுதிக்கக் கூட, அத்தனை ஆயத்தங்கள் செய்யவேண்டும்.  

சற்று சறுக்குகிற மாதிரி பாதை இருந்துவிட்டாலோ, அடுத்த அடி எடுத்து வைக்க மாட்டாள். சரியாக பாறையில் கால் வைத்து வழுக்கி விழுவாள். ஆழங்களை பார்த்துவிட்டால், அவளுக்கு கைப்பிடித்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகே நடப்பாள். எல்லா பாரத்தையும் தூக்கி தனியாக வைத்துவிட்டு, ' பாலம் வரும்போது கடக்கலாம். அதுவரை வருவதை எதிர்கொள்ளடா' என்று கிளம்பியாயிற்று.

ச்சிராபுஞ்சியில், நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து இரண்டடுக்கு வேர்ப்பாலம் போக மட்டுமே பத்து கிமீ. முதல் ஐந்து கிமீ சாலை வழி பயணம். அடுத்த ஐந்து கிமீதான் உண்மையான பசுமை நடை. 

அதாவது, மலைவழிப்பாதை. முதலில் 2500 படிகள் கீழ் நோக்கி இறங்க வேண்டும். அதன் பின் சற்று கரடுமுரடான காட்டுப்பாதை. அதைக்கடந்தால், சிங்சாங் ஆறு. அந்த ஆற்றின் மீது ஒரு  தொங்கும் பர்மாபாலம். அதனை கடந்தால் மீண்டும் ஏறுமுகமான படிகள். மீண்டும் ஒரு காட்டாறு. அதன் மீதான பெரிய தொங்கு பாலம்.

அதன்பின், கிட்டதட்ட 2 கிமீ காட்டு வழிப்பயணம். அதில் சில இடங்களில் படிகள் உண்டு.இதில், ஒரு சிறு வேர்ப்பாலம் வரும். அந்த ஆற்றை கடப்பது கணக்கில் வராது. போக வர‌ மொத்தம் இருபது கிமீ நடை.

சிறிய அளவில், கிட்டதட்ட 3 முதல் 5 மணி நேரங்களாலான பசுமை நடை சென்ற அனுபவம் உண்டு. ஆனால், அவையெல்லாம், ஒரே மாதிரியான மலையேற்றம் அல்லது கரடுமுரடான சாலைகள் வழி. இதுவோ, ஏழு கடல் ஏழு மலை போல படிகள், ஆறுகள், பாலங்கள்...விடுதியில் கொடுத்திருந்த வரைபடத்தில், 'You are doing the trek at your own risk and responsibility' என்று வேறு போட்டிருந்தது.இரவுணவுக்குப் பின், நானும் பப்புவும் விடுதியில் ஓய்வறையில் கேரம் ஆடிக்கொண்டிருந்தோம். தங்கியிருந்த பலரும் சேர்ந்துக்கொள்ள, பேச்சு 'டபுள் டெக்கர் ரூட் பிரிட்ஜ்' பற்றி திரும்பியது. 'நாளைக்காலை செல்லப் போகிறோம்' என்று சொன்னதும் மும்பையிலிருந்து வந்த அந்த அம்மா ஒரு குண்டை தூக்கிப்போட்டார்.  

அன்று காலையில், அவர்கள், அந்த நடைபயணத்தை மேற்கொண்டதாகவும், இறங்குமுகமான படிகளில் - கிட்டதட்ட 1000 படிகளை தாண்டியநிலையில் - தலைசுற்றியதால் திரும்பி வந்துவிட்டதாகவும், அவர் சொன்னபோது கிலி  பிடித்துக்கொண்டது.  இரவு நெடுநேரம் தூக்கம் பிடிக்கவில்லை.

'சரி, அதற்காகத்தானே வந்திருக்கிறோம் - முயன்று பார்ப்போம், இயலவில்லை என்றால் திரும்பி வந்துவிடுவோம். அவ்வளவுதானே' என்று என்னை நானே சமாதானப்படுத்தியபடி உறங்கிப்போனேன்.

நடப்போம்...

No comments: