Tuesday, April 14, 2015

நதிக்கரை வழியாக ஒரு நடைபயணம் ...

 ஹம்பியில், பார்க்க வேண்டிய இடங்கள் - அமைந்திருப்பதே வித்தியாசமானது. சொல்லப்போனால், 'பார்க்கவேண்டிய இடங்கள்' என்ற பட்டியலே தேவையற்றது. ஒருவருக்கு, முக்கியமாக படுவது மற்றொருவருக்கு தேவையற்றதாக இருக்கலாம். இருந்தாலும், நாங்கள் சென்று வந்த பாதையை - பதிவு செய்யவும், குறிப்புக்காகவும் எழுதி வைக்கிறேன்.

நதிக்கரை வழியாகவே 'கல்தேரு' (விஜய விட்டாலா) கோவிலுக்கு பழங்காலத்தில் எப்படி சென்றிருப்பார்கள் என்று அறிய விரும்பினோம். 'நதிக்கரைகளில் நாகரிகம் வளர்ந்தது' என்று படிக்கிறோமே...அதை நேரில் காண வேண்டாமா? :-)

விருபாஷா கோவில் டூ விட்டலா கோவில் ‍- வழி துங்கபத்திரா! ஆம், விஜயநகர மன்னர்களின் பாதையில் - நதிக்கரை வழியாக ஒரு நடைபயணம்! விருபாஷா கோவிலின், பெரிய நந்தியிடம் இருந்து, நடக்க ஆரம்பித்து துங்கபத்திரா வழியாக விஜய விட்டலா கோவிலை அடைவதே திட்டம்.

 பயணிகளுக்கு உதவியாக, ஆங்காங்கே  வழிகாட்டி கற்கள் இருக்கின்றன. இல்லையென்றாலும், ஹம்பியில்  வரலாற்று சின்னங்கள் அடுத்தடுத்து அமைந்திருப்பதால் பாதகமில்லை. வழிதவற வாய்ப்பும் இல்லை. 

பெரிய நந்தியின் இடப்புற வழியாக மலையடிவாரத்தை ஒட்டி நடந்தோம். வழியில் மக்கள், 'அபார்ட்மெண்ட்கள்' பலவற்றை கட்டியிருந்தார்கள்.


 
குகைகளின் வழியாக, புறப்பட்டு சென்ற அந்த வழித்தடத்தின்,  ஆரம்பத்தில் சக்கரத்தீர்த்தத்தில் கால் நனைத்தோம். அங்கிருந்து ஆரம்பிக்கும் படிகளில் மேலேறி, மண்டபத்தில் அமர்ந்தோம்.  எங்களுக்கு நேரெதிரில் துங்கபத்திரா. கோவிலுக்குப் பின்னால் மெதுவாக ஓடிக்கொண்டிருந்தவள், இங்கு வேறுமுகம் காட்டுகிறாள்.


நீர் அரித்த, பாறைகளை பார்த்தவாறே நினைவுகளில் தொலைந்து போனோம். பாறைகள், குடைந்தது போலவே அரிக்கப்பட்டிருந்தது. எத்தனை வருடத்து மழையும், வெள்ளமும்! 


தலைக்கு, மேலிருந்த மரத்தில், ஏதோ சலனத்தை உணர்ந்து திரும்ப , மந்திக்கூட்டம். குரங்கும் தொப்பிவியாபாரி கதை நினைவுக்கு வர,  தலையிலிருந்த  தொப்பியை, கவனமாக பிடித்தபடி நடையை தொடர்ந்தோம். 

அடுத்து வந்தது, கோதண்டராமர் கோவில். பூஜை நடைபெறும் கோவில் போலிருக்கிறது. பெரிய இரும்பு கதவு போடப்பட்டு, வர்ணங்களுடன் இருந்தது. பழைய கோவில் என்ற நினைப்பே வராததால் தவிர்த்துவிட்டு, அதையடுத்து இருந்த கடையில் இளநீர் அருந்தினோம்.

இளநீர் காய்கள் ஒரு மரத்தடியில் வைக்கப்பட்டிருந்தன. அந்த மரத்தின் அடியில் இருந்தார் ஒரு வளையல் அம்மன். 

 

"Hampi is mythical landscape imbued with the presence of  Gods, godesses and heroes" என்பர் ஜான் ஃபிரிட்ஜ் மற்றும் ஜியார்ஜ் மிஷெல்  - அவர்களது 'ஹம்பி விஜயநகரா' என்ற புத்தகத்தில். கோயில்கள் தூண்களிலெல்லாம், வாயில் சுவர்களிலெல்லாம், மேற்கூரையில், இடிந்து விழுந்த தூண்களில் என்று எங்கும் கடவுளர் மயம்தான். அவையெல்லாம் போதாதென்று, இந்த வன்னி மரத்தினடியில் ஒரு அம்மன், அருள் பாலித்துக்கொண்டிருக்கிறார்.

இளநீர் குடித்தபடி, அம்மனின் தலபுராணமும், தல விருஷத்தைப் பற்றியும் கேட்டபிறகு, நடையை தொடர்ந்தோம். டிசம்பர் மாத இறுதி. வெயில் அதிகமில்லை.  இதமான வெயிலுக்கு ஏற்ற சுகமான குளிர் காற்று. காற்றை அனுபவித்தபடி மேலும் நடந்தால், வழிகாட்டி பலகைகள் நேராக வராக கோவிலை காட்டியது.


 
மரத்தின் கீழமர்ந்து, மாணவர்கள்  சிலர் படங்கள் தீட்டிக்கொண்டிருந்தனர். பாறைககளுக்கிடையில் மிஞ்சியிருந்த கோபுரங்களும், கோவில் மண்டபங்களும் தத்ரூபமாக இருந்தது. வேடிக்கைப் பார்த்துவிட்டு, வராக கோவிலையும், அதன் தூண்களையும் சற்று நேரம் ஆராய்ந்தோம்.


 
நுழைவாயிலில் இருக்கும் ஹம்பியின் 'ராஜ முத்திரை' அழகு!  அம்புலிமாமா ராஜா கதைகளில் 'ஐம்பது வராகன், நூறு வராகன்' என்று படித்திருப்போமே! அந்த  'வராகன்' என்ற நாணயம் பிறந்தது இங்குதான் என்கிறார், நூனிஸ் 'விஜயநகர பேரரசு' புத்தகத்தில்.

வராக கோவிலுக்கு வலப்புறத்தில், எதிர்பட்ட‌  நீளநீளமான மண்டப  பாதைகளை பார்த்துவிட்டு, 'எதற்கு இப்படி கட்டியிருக்கிறார்கள்' என்று எண்ணிக்கொண்டு மலைப்பகுதிக்கு சென்றோம்.  மலைப்பகுதில் இருந்த சிதிலமடைந்த கோவில்களில், உள்நுழைந்து வெளியேறி மேலே மேலே சென்றுவிட்டோம். ஜைனக்கோவில்கள் போலிருந்ததைக் கண்டு, புத்தகங்களை துழாவி, அங்கேயே அமர்ந்து வாசித்தோம்..  

தூண்களிலும், மண்டபச்சுவர்களிலும் சிற்பங்களைத் தேடினோம். களைத்துப்போய், பையிலிருந்த பெரிய இலந்தம்பழங்களை உண்டோம். இதற்குமுன், இந்த இலந்தம்பழங்கள், இவ்வளவு ருசியாக இருந்ததேயில்லை.
பாதை ஓரத்திலிருந்த வேப்பமரத்தினடியில், பாறைமீது படுத்து காற்று வாங்கியபடி , தூரத்தில் தெரிந்த விருபாஷா கோவில் கோபுரத்தை ரசித்தோம்.

மேலே சென்று, பெயர் தெரியாத கோவில்களையும், மண்டபங்களையும் பராக்கு பார்த்தோம். உண்மையில், நாங்கள் அந்த இடத்தில், அச்சுதராயர் கோவிலை தேடி அலைந்துக்கொண்டிருந்தோம். மலையின் நட்டநடு சென்டரில், விண்ணை முட்டிக்கொண்டு நின்றது, கோயில் ஸ்தம்பம் ஒன்று. அந்த இடத்துக்கே, ஒரு அமானுஷ்யமான தோற்றத்தை கொடுத்தது அது.

அருகிலிருந்த, கோவிலின் படிகளில் ஏறும்போது, கீழே வந்தார் வயதானவர் ஒருவர். தலைப்பாகை, தார் பாய்ச்சி கட்டிய வேட்டி. 'உஜ்ஜயினி மாகாளி' என்று படத்தை என்னிடம் தந்துவிட்டு சென்றார். உஜ்ஜயினியிலிருந்து வந்திருப்பார் போலிருக்கிறது. உள்ளங்கையிலிருந்த‌ மாகாளியை ஒரு நிமிடம் உற்றுநோக்கிவிட்டு, எனை நோக்கி நீண்ட பப்புவின் கைகளின் திணித்தேன்.


இந்த கோயில், இருந்தது சற்று உயரத்தில். ஆனாலும், விடாமல், இரண்டடுக்கு மண்டபம் ஒன்றை கட்டி யிருக்கிறார்கள். லாங்ஹர்ஸ்ட் புத்தகத்தில், அது  ஜைனக்கோவிலென்று சொல்லப்பட்டிருந்தது.  திரும்பவும், வந்த வழியிலேயே திரும்பி நடந்தோம்.


 
வராக கோவிலுக்கு வலப்புறத்தில் தெரிந்த அந்த நீண்ட நெடிய பாதைதான் அச்சுதராயர் கோவிலுக்கு போகும் வழி.முன்பொருகாலத்தில் இங்குதான்  தேர் திருவிழா நடந்தது.  இடிபாடுகளுடன் இருமருங்கிலும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு நின்றிருக்கும் இந்த மண்டபத் தொடர்தான் அச்சுதராயர் கோவிலின் 'சூலே பஜார்'. இந்த சூலே பஜாரில்தான் நாட்டிய நடன பெண்மணிகள், தங்கியிருந்ததாக எழுதுகிறார், லாங்ஹர்ஸ்ட்.   நாட்டிய பெண்களுக்கு  உபயோகமாக,அருகிலேயே ஒரு குளம்.  
 

 
குளத்தை சுற்றும் முற்றும், எட்டியும் பார்த்துவிட்டு, கோபுரத்தை நோக்கி நடந்தோம். குளத்துக்கு அடுத்தாற் போல் ஒரு யானை நின்றிருந்தது. கரும்பாறை.  திரும்பி கோவிலை நோக்கி நடந்தோம்.

சிதலமடைந்த கோபுரத்தை பார்க்கும்போது, இணையத்தில் அங்கோர்வாட்,இந்தோனேசியா பாலி படங்களில் பார்த்தது போல‌ இருந்தது. வாயிலில் அழகான மங்கையர். அழகான முன் மண்டபம். தூண்களில் செதுக்கப்பட்டிருந்த பெண் சிற்பங்கள் அழகு. 

அண்ணன் கிருஷ்ண தேவராயா, கட்டிய‌ விட்டலா கோவிலைப் போல கட்ட வேண்டுமென்று ஆசைப்பட்டு, தம்பி  அச்சுதராயர் கட்டிய கோவில். கங்கைகொண்ட சோழபுரத்தை ஏனோ நினைத்துக்கொண்டேன்.  அழகாக இருந்தாலும்,  தற்போது அதிக சேதங்களுடன் களை யிழந்து காணப்படுவதாலா என்று தெரியவில்லை. கோவிலை ஒட்டி மாதங்கா பர்வதம். எல்லாம் சரியாக இருந்த ஒரு காலத்தில்,  ஒரு நேர்த்தியான கலைநயமிக்க ஓவியம் போலிருந்திருக்கும் இந்த இடம்.

யாளிகளுடன் மறைந்து, ஒளிந்து விளையாடி, பின்னர் ஒருவரை ஒருவர் புகைப்படங்கள் எடுத்தபின்,  மீண்டும் ஜைனக்கோவில்களுக்கே வந்து சேர்ந்தோம்.

சற்று தூரம் செல்ல, யாருமற்ற மலைப்பகுதியானது வழி.  மலைமுகடுகளில் ஆங்காங்கே தெரிந்த வெளிநாட்டினரும் இப்போது சிறுத்துப்போயினர். அந்த மலைப்பகுதியே எங்களுக்கு சொந்தமாகிப்போக, பாடிக்கொண்டும், ஓடிப் பிடித்தும், சில இடங்களில் அமைதியாகவும் நடந்தோம். வனாந்தர வழிபோல் தோன்ற, கீழே ஓடிக்கொண்டிருந்தது , துங்கபத்திரா. சுக்ரீவா குகையில், வாயிலில் யாரோ, புல்லாங்குழல் ஊதும் ஒலி மட்டும்.

துணைக்கு, குருவிகளில் சிறுசப்தங்கள்.  பூக்கள் அடர்ந்த புதரொன்றில் அத்தனை பறவைகள். அவைகளை தொல்லைப்படுத்திவிடாமலிருக்க  அடிமேல் அடி வைத்து நடந்தோம். ஒருவரையொருவர், நடப்பதை பார்த்து கிண்டலடித்து, வெடித்து சிரித்ததில் பயந்து பறந்தன குருவிகள்!


 
கீழே, செதுக்கி வைத்திருந்த சரணாகதி சிற்பங்களையும், தூண்களின் சிற்பங்களையும் பார்த்தபடி நடைபயணத்தை தொடர்ந்தோம். தூரத்தில் கண்ணுக்குத் தெரிந்தவரை மலைகள், அதற்குக் கீழே தென்னைமரத்தோப்புகள், அதற்கும்  கீழே பச்சைபசேலென வாழைக்கன்றுகள். வெயிலுக்கு இதமாக மெலிய காற்று. விஜயநகர பேரரசின், பயணிகளுக்கு ஆங்காங்கே நிழற்குடையென மண்டபங்கள்.

அருகில் தெரிந்தது, இரண்டடுக்கு வாயில் போல ஒன்று. அநேகமாக, இந்த பக்கத்துக்கான விட்டலா கோவிலுக்கான நுழைவாயிலாக இருக்கலாம். நிழலின் அருமையை உணர்த்திய இடம் அது! பிரமாண்டமான பேரரசு ஒன்றின், நுழைவாயிலில் கால்நீட்டி அமர்ந்து காற்று வாங்கிக் கொண்டே, கோயிலைப்பற்றி வாசித்தோம்.கொஞ்ச தூரம் சென்றதும், கண்களுக்கு புலப்பட்டது  ஒரு அமைப்பு. 'ஆஆ!! அரசர துலாபாரா' என்று கத்திக்கொண்டே ஓடினோம். புத்தகங்களில் பார்த்ததை, நேரில் கண்டு கொண்டதும் ஏற்படும் பிரமிப்பு அது. கோயிலை அடைந்து விட்டதற்கான அடையாளமும் அதுதான்.
 

 
துலாபாரத்தின் தரைப்பகுதியில், தம்பதியினராக, குடும்பமாக விழுந்து கும்பிடும் உருவங்கள் செதுக்கப் பட்டிருந்தன.  அவற்றிலும் ராஜகுடும்பத்தையும், சாதாரண மக்களையும் தேடினோம். 'துலாபார தூண்களுக்கு இடையில் நின்று, தூணில் சாய்ந்து நின்று, நடுவில் துள்ளி குதித்து என்று புகைப்படங்களாக‌ எடுத்துத்தள்ளி  'அரசர துலாபாராத்தை' டரியலாக்கினோம்.

சுக்ரீவ குகை மற்றும் புரந்தர மண்டபம் வழியாக, சாரி சாரியாக மாணவர்கள் வரத்துவங்கியிருந்தனர். ஜோதியோடு ஜோதியாக, நாங்களும் ஐக்கியமாகி விட்டலா கோவிலை ஆராயத்துவங்கினோம்.  ஹம்பியில் கைடு வைத்து பார்த்த ஒரே இடமும் இதுதான்.

விருபாஷாவிலிருந்து ஆரம்பித்து விட்டலா கோவில் வரை, நதிக்கரை வழியாக  நீண்ட இந்த  பாதையும், நடைபயணமும், நாங்கள் செலவிட்ட எங்கள் சந்தோஷமான கணங்களும் நீண்ட நாட்க‌ள் எங்கள் மனதில் தங்கியிருக்கும்.  
 

குறிப்பு: கோவிலைப்பற்றி இங்கு எதுவும் சொல்லப்போவதில்லை. திரும்பி வரும் பாதையை, சுக்ரீவன் குகை வழியாக -  சக்கரத்தீர்த்தத்தை அடையுமாறு வைத்துக்கொள்ளலாம். இல்லையேல், ஆட்டோ பிடித்து, 'தாலரி கட்டா'வை (நுழைவாயில்) பார்த்துவிட்டு தொடரலாம். இந்த தாலரி கட்டா, நமது தற்போதைய சுங்கவரி சாவடியின் முன்னோடி.  

Sunday, April 12, 2015

'அஞ்சாங்கல் காலம்' ‍ - உமா மகேஸ்வரி

அலுவலகத்திற்கு வந்துவிட்டாலும்,  காலையில் வேலையே ஓடவில்லை. 'ரேணுகா'வையும், 'சுமி'யையும் பற்றியே மாற்றி மாற்றி நினைத்துக்கொண்டிருந்தேன். அதற்கு முதல் நாளிலிருந்துதான் வாசிக்க ஆரம்பித்தேன். 'லைட் ஆஃப் பண்ணு' என்ற தொணத்தலுக்காக வைக்க மனமில்லாமலிருந்தது. காலையில் பப்புவை பேக் செய்ததும்,நேரமாகிவிட்டாலும் கிளம்பாமல் சிறிது நேரம் வாசித்துக்கொண்டிருந்தேன்.


உமா மகேஸ்வரியின் எழுத்துகள், எப்பொழுதும் மனதுக்கு நெருக்கமானவைதான். அவரது 'யாரும் யாருடனும் இல்லை' என்ற நாவலுக்கு எனது விருப்பப்பட்டியலில் என்றும் இடம் உண்டு.  அவரது கதைமாந்தர்களின் பெயர் நினைவிலில்லா விட்டாலும் கூட, அவர்களது குணாதிசயங்களும், விவரணைகளும் என்றும் இன்றும் கூட மனதில் நிற்கிறது.

'அஞ்சலை' மற்றும் 'ஆனந்தாயி' வாசித்த போதெல்லாம்,மிகவும் பாதித்த கதாபாத்திரமாக அந்த மைய கதாமாந்தர்களே இருந்தனர் அஞ்சலை ஆனந்தாயி என்று. உமா மகேஸ்வரியின் நாவலில், அப்படி டக்கென்று என்னால் சொல்லிவிட முடியாது. அதற்கு காரணம், அவை நமது குடும்பத்தை , இயல்பை அப்படியே பிரதி பலிப்பதுதான் என்று நினைக்கிறேன்.

ஒற்றை மனிதனை/மனுஷியை மையமாக வைத்து அவரது நாவல்களோ கதையோ எப்பொழுதும், சுழன்றதில்லை.  எல்லாமே,  வீடு மற்றும் வீட்டை சுற்றி வலம் வரும்  குடும்பத்தினர் என்ற ஒரு பெரிய கான்வாஸ்தான்.

இந்த நாவலும் அப்படிதான்: வித விதமான‌ மனிதர்களாலும், குழந்தைகளாலும்  நிறைந்திருக்கிறது. அவர்களது உணர்வுகள்,பிரச்சினைகள், சந்தோஷங்கள், துள்ளல்கள்  என்று வாழ்வின் சகல பரிமாணங்களோடும் பயணிக்கிறது. ரேணுகாவில் ஆரம்பிக்கும் நாவல் ரேணுகாவில் வந்து முடிவதற்குள்  நாம்தான் எத்தனை கதாபாத்திரங்களை, அவர்களது உலகங்களை தரிசித்துவிடுகிறோம்.


' ரேணுகா' என்று அடிக்கடி நான் சொல்லிக் கொண்டிருந்தாலும், வாசித்தபின்னர்  சுகியை மறந்துவிட முடியுமா? அல்லது ஜகியைத்தான் மறக்க முடியுமா?  பவானியை, சிவனம்மாவை, தனசுந்தரியை அல்லது ரத்தினம் அம்மாளை, பரமுவை கிருட்டிணசாமியை... மகாவை..

'யாரும் யாருடனும் இல்லை'யில் கடைசியாக  இல்லாமல் போகும் அந்த வேலைக்காரப் பெண் சுப்பு  இன்றும் மனதில் வாழ்கிறாள். இப்படி அழுத்தமாக, அதே சமயம் சுவாரசியமாக கொண்டு செல்வதற்காகவே,  எனக்கு உமா மகேஸ்வரியை வாசிக்கப் பிடிக்கும்.

இன்னொரு காரணம், வலிந்து பிணைக்காமல் சாதாரண நடுத்தர வர்க்கப் பெண்களை நமது மற்றும் அக்கம்பக்கத்துவீடுகளில் இயல்பாக காணக்கிடைக்கும் குடும்பங்களை காட்சிப்படுத்துவதுமே. ஜன்னலை திறந்தால் மலைமுகடுகள் தெரியாவிட்டாலும் கூட,  'யாரும் யாருடனும் இல்லை'யை என்னால் வடலூர் வீட்டை கற்பனை செய்யாமல் வாசிக்க முடியாது.

வீட்டுக்குப் பின்னால் கொல்லை,முல்லை செடிகள்,குருவிகள், மருதாணி செடி, கிணறு, தென்னை மரம், மலைகள் என்று அவரது நாவல்களோ கதைகளோ  'தேனி'யையும்  ஒரு கதாபாத்திரமாக வைத்து வளர்ந்தாலும், எந்த ஊருக்கும், குடும்பத்துக்கும் பொருந்திப்போவதுதான் அவரது ஒரு நூலைக்கூட விடாமல் என்னை வாங்க வைக்கிறது போலும். (பொதுவாக ஊர்ப்பெருமை(யையும்) பேசுகிற நாவல்கள் எனக்கு அலர்ஜி!)

ஒரு கல்லூரி நடனமொன்று உண்டு. மேலிருந்து வண்ண வண்ணமாக  புடவைகள் கட்டி தொங்கவிடப்பட்டிருக்கும். அதன் மறுமுனையை  கையில் பிடித்தபடி சுழன்று  சுழன்று ஆடுவார்கள். ஆனால், தொங்கும் துணிகள் ஒருபோதும் சிக்கலாகி மாட்டிக்கொள்ளாது. "அஞ்சாங்கல் காலம்" நாவலும் கிட்டதட்ட அந்த மேடை நிகழ்ச்சி போலத்தான். நாவல் முழுக்க மனிதர்கள் இறைந்துகிடந்தாலும், வாசிக்கும்போது நமக்கு எந்த இடறலும் ஏற்படுவதில்லை.

நாவலை வாசிக்க வாசிக்க, கடந்தவார நீயாநானாவின் காட்சிகள் மனதுள் சுழன்றன. கோபி கொஞ்சம் மிகையுணர்ச்சி காட்டக்கூடியவர் என்றாலும் 'என்னமா இப்படி பண்றீங்களேம்மா' என்று அலுத்து சலித்துக்கொண்ட அந்த நொடி. 'கல்யாண வாழ்க்கைன்னா என்னன்னு உங்க பொண்ணுங்களுக்கு கொஞ்சம் சொல்லுங்க' என்ற வரலாற்று சிறப்பான கேள்வியை கேட்டார் கோபி.

 அதற்கு பதிலளித்த எந்த அம்மாவுக்கும் வாழ்க்கை என்பது இதுதான் என்று அறுதியிட்டு கூற முடியவில்லையே, எல்லாம் அட்வைசாகவே இருக்கிறதே என்று  கோபி ரொம்ப‌ சலித்துக்கொண்டார். அம்மாக்களின் பதில்களைக் கேட்டு, உண்மையில் எனக்கு சலிப்புமில்லை, ஆச்சரியமுமில்லை.

அவர்கள் யதார்த்தமாக, அவர்கள் எப்படி இருக்கிறார்களோ அல்லது எதற்காக  வளர்க்கப்பட்டார்களோ அல்லது எப்படி வாழவேண்டுமென்று பயிற்றுவிக்கப் பட்டோர்களோ அதைத்தான் அப்படியே பிரதிபலித்தார்கள். அவர்களுக்கு சொல்லத் தெரியாமலெல்லாம் இல்லை. (சொல்வதற்கு இருந்தது அவ்வளவுதான்.) ஆனால், தங்களுக்கு தெரிந்ததைத்தான் மறைக்காமல் சொன்னார்கள்.

மேலும், அம்மாக்களோடு மகள்கள் முரண்பட்ட இடங்களில் ஒன்று சுவாரசியமானது. அதாவது, அம்மாக்கள்தான் தமக்கு தந்திரத்தையும், சூழ்ச்சியையும் கற்றுத்தருவது போலவும், மகள்களின் தூய உள்ளத்தை களங்கப்படுத்துவது போலவும் தோன்றும் இடம் அது.

ஒருவேளை , கோபி, மகள்களுக்கு எதிரில் அமர்ந்திருந்த அம்மாக்களை ஒரு முப்பது வருடங்களுக்கு முன்  சந்தித்திருந்தால்? ஒன்றுமில்லை, இன்று மகள்கள் சொன்னதையேதான் அவர்களும் சொல்லியிருப்பார்கள். (அல்லது இதே மகள்களை அவர்களது மகள்களோடு வரும்காலத்தில் நடத்திப்பார்கலாம்.) எனில், 'அப்படி இருந்த அவர்களை இப்படி மாற்றியது' எது? ஒருவர் மாறாமல் ஒற்றுமையாக ஒரே கருத்தாக அம்மாக்கள் சொன்னது எப்படி?

இதற்கான விடைகள் உமா மகேஸ்வரியின் நாவல்களில் கிடைக்கிறது. கூட்டுக்குடும்பம் என்றில்லா விட்டாலும், அருகருகே வசிக்கும் அண்ணன் தம்பி குடும்பங்கள். அவர்கள் குடும்பங்களின் நிகழ்வுகளே கதை.

தனராணி குழந்தைகளோடு கோயிலுக்க போயிருக்கிறாள். கடை வியாபார விஷயமாக‌ இடையில் வீட்டுக்கு வருகிறார்  செல்வமணி. கோயிலிருந்து திரும்பும் தனராணி,  கணவன் செல்வமணியை வேலைக்காரி செவனம்மாவுடம் பார்த்துவிட, குடும்பத்தில் ச.மு ‍ ச.பி ஆரம்பிக்கிறது.

குழந்தைகளின் மொழியில் 'சண்டைக்கு முன் - சண்டைக்கு பின்' அல்லது 'சிவனம்மா சண்டைக்கு முன் - சிவனம்மா சண்டைக்கு பின்'.

இந்த ஒரு நிகழ்வு, குடும்பத்தை, மூன்று குழந்தைகளின் சின்னஞ்சிறு மனதை, அவர்களது அன்றாட‌ வாழ்க்கையை, பொருளாதாரத்தை மாற்றுப்போடுகிறது என்பது ஒரு கதை.

கணவனை இழந்த ரேணுகாவை, குழந்தையில்லாத கிருட்டிணசாமி இரண்டாந்தாரமாக திருமணம் செய்துக்கொள்கிறார்.  வயது வித்தியாசம் அதிகமாக இருந்தாலும் அவர் பணக்காரராக இருப்பதால் , ரேணுகாவை மணமுடித்து தருவதில் அவளது அம்மாவுக்கும் தம்பிக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. ரேணுகா, அவளது மைத்துனனான மகாவை விரும்பி 'இருந்திருக்கிறாள்' என்பது  ஒரு கட்டத்தில் கிருட்டிணசாமிக்கு தெரிய வர, இவர்கள் வீட்டில் நடப்பது இன்னொரு கதை.

இன்னொரு அண்ணனது மகள் சுமி. தாயும் மகனுமாக இருக்கும் வீட்டில் மருமகளாக போகிறாள். சமையலறையிலிருந்து, படுக்கையறை வரை எல்லாமே தாய் ரத்தினத்தின் கைப்பிடிக்குள்தான். மகன் ராஜா,  தாயை மீறி எதையும் செய்துவிடவோ சொல்லிவிடவோ இயலாத கைதி.  இது மற்றொரு சுழல்.

தனராணியின் கதையில் வரும் நிகழ்ச்சி இது.  கணவன் விதி மீறி நடப்பதை பார்த்துவிட்டால் , மனைவி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணாமல் காதும் காதும் வைத்த மாதிரி நடந்துகொள்ள வேண்டுமென்று எதிர்பார்க்கப்படுகிறாள். வலியுறுத்தப் படுகிறாள். மீறி, நியாயம் கேட்க அவள் பெரியவர்களை அழைத்தபோது, 'நான் அப்படிதான் இருப்பேன்' என்று மீசை முறுக்குகிறது கணவனின் அகங்காரம்.

ஆனால், ரேணுகாவின் கதையிலோ, மகாவுடனான அவளது பழைய உறவு கணவனுக்கு தெரிய வரும்போது கணவன் நிலைகுலைந்து போகிறான். ஒரு ஓநாயைப் போல, இரவுகளிலும் பகல்களிலும் வீட்டிற்குள்ளேயே பழி வாங்க காத்திருக்கிறான். பழசை சொல்லிச் சொல்லியே அவள் மீது கை நீட்டுகிறான்.

நண்பனை வீட்டிற்கு அழைத்து வந்து மனைவிக்கு அறிமுகப்படுத்தி, அவர்களிருவரையும் தனித்து இருக்க வைத்து ஆழம் பார்க்கிறான். தன் மனைவிக்கு நண்பனை தொலைபேசச் சொல்லி வேவு பார்க்கிறான்.

இசைக்கப்படாத ராகம் என்று சொல்வது போல, இன்னொரு கதாபாத்திரம் பாவை. கிருட்டிணசாமியின் முதல் மனைவி. திருமணமாகி பதினேழு வருடங்களாக பிள்ளைக்கு ஏங்கி கோயில் கோயிலாக, மருத்துவமனை மருத்துவமனையாக தன்னை பலியாக்கிக் கொள்ளும் பூம்பாவை. கணவன் இரண்டாம் திருமணம் செய்துக்கொள்ளப் போகிறான் என்றதும் ஒரு மனைவிக்கு ஏற்படும் உணர்வுகளை, ஆற்றாமையை, தடுமாற்றங்களை பூம்பாவைக்குள் அழகாக காட்டியிருக்கிறார், உமா மகேஸ்வரி.

கணவனின், இரண்டாம் மனைவியை சந்திக்க செல்கிறாள், பூம்பாவை. பெருந்தன்மையாக அவள் சந்தித்து அளவளாவி பரிசுகள் கொடுத்துவிட்டு 'நீ சீக்கிரம் பிள்ளையை பெற்றுக்கோ' என்று சொல்லும்போது, 'அய்யோ பூம்பாவை, கிருட்டிணசாமிக்குதான் பிள்ளை பிறக்கும்  வாய்ப்பு இல்லைன்னு டாக்டர் சொல்லிட்டாங்களே, உனக்கு இன்னும் தெரியலையே' என்று நமக்குதான் அடித்துக்கொள்கிறது.

முதலாளி செல்வமணியை, ஒன்றும் செய்யமுடியாத சிவனம்மாவின் கணவனுக்கு பலியாகிறாள்,அவனது மகள் சிறுமி ஜகி. அதிலிருந்து அவளுக்கு பேய்களும் பிசாசுகளும் பிடிக்கின்றன.  தலைமீது அடிக்கடி மணல் கொட்டுகிறது. வீட்டிற்குள்ளே அறைக்குள் பூட்டி வைக்கப்படுகிறாள். செல்வமணியின் வீட்டை பார்த்து கறுவிவிட்டு போகும் சிவனம்மாவின் கணவனை, இரண்டாம் பிள்ளை பேறுக்காக வீட்டுக்கு வரும் சுமி, ஜகியிடம் பழைய அக்காவாக அணுகும்போதுதான், நாம் பார்க்க முடிகிறது.

மனதுக்குள் ஒருத்தியை பார்த்து பொறாமைப்படும் பெண்கள், தங்கள் குடும்பத்தில் இன்னொரு பெண்ணுக்கு  பிரச்சினை என்று வரும்போது உதவிக்கொள்ள தயங்குவதில்லை. அது, பூம்பாவை :ரேணுகா உறவோ, அல்லது விஜிதாவும் மற்ற மூத்தாள்களுக்குள்ளான உறவோ அதை இயல்பாக அழகாக கதையில் சொல்லிச் சென்ற விதம், நாம் அதே சந்தரப்பங்களை நமது குடும்பங்களில் கண்டதை நினைவூட்டுகிறது.

நிகழ்வுகள், நாவலுக்குள்  தொடர்ச்சியாக சொல்லப்படாவிட்டாலும் கூட, அதன்  தொடர்கண்ணிகளை நமது கற்பனைக்கு விட்டுவிடுவது அழகாகத்தான் இருக்கிறது. எல்லாவற்றையும் சொல்லியிருந்தாலும் கூட வாசிக்கும்போது ஒருவேளை அலுப்பு தட்டியிருக்கும். 

ஆரம்பத்தில் தனித்தனியாக அறிமுகமாகும் கதாபாத்திரங்கள், போகப் போக ஒருவருக்கொருவர் உறவுகளாக இருப்பதை வாசிக்கும்போது நாம் அறிந்துக்கொள்வதுதான் ஒரு பெக் பசில் போல, ஆரம்பத்தில் நான் சொன்ன அந்த பின்னல் நடனத்தை காண்பது போல எவ்வளவு சுவாரசியமாக இருக்கிறது!

 அதோடு, 'அஞ்சாங்கல் காலம்' நாவலை சுவாரசியப்படுத்துவது,  வாசகர்களுக்கு மட்டுமே வெளிச்சமாகியிருக்கிற கதைமாந்தர்களின் ரகசியங்கள்.  ரேணுகாவின் 'தற்கொலை'யும் அதில் அடக்கம்.

சற்று தொய்வாக உணர்ந்தது, இறுதியில் வரும் அத்தியாயங்களான‌ பவானியின் மீதான அழகேசனின் விடலைக்காதல். சில இடங்களின் எழுத்துப்பிழைகள். இவற்றை தவிர்த்தால், அஞ்சாங்கல் காலம், ஒரு
கலைடாஸ்கோப் போல, உள்ளிருக்கும் வளையல் துண்டுகள் மாறாவிட்டாலும் கோணங்கள் மாறும்போது வடிவங்கள் மாறுமே... அதுபோல், கதாபாத்திரங்கள் ஒன்றேயாயினும், அவர்களிடத்திலிருந்து பார்க்கும்போது மாறுகின்ற கோணங்கள்!

ஆணின் ஒரு சிறு செயலென்றாலும், அதனால் பாதிக்கப்படுவது பெண்ணின் வாழ்க்கையும், எதிர்காலமும்தான். யதார்த்தத்தில், இதனை பெரிதாக யாரும் கண்டுக்கொள்வதில்லையென்றாலும், எல்லாவற்றுக்கும் சேர்த்து பெண்ணே  கவனமாக இருக்க வலியுத்தப்படுகிறாள். பவானியின் பள்ளிவாழ்க்கை இதற்கு சரியான சான்று. சுமியின் குடும்பத்தில், ராஜாவின் இருதலைக்கொள்ளி நிலை இதன் மறுபக்கம். செல்வமணியின் மீது தவறிருந்தாலும், தனராணி 'அழுது ஆர்ப்பாட்டம்' செய்யாமல்'  அணுகுமுறையை மாற்றிக்கொண்டிருக்க வேண்டுமென்று சொல்கிறான். குடும்பமென்பது  ஒரு ஆக்டோபஸின் பல கைகள் போல. அதன் ஒவ்வொரு கையும், விதவிதமாக பெண்களின் கழுத்தையே இறுக்கியிருக்கின்றன என்பதை நாவல் போகிறபோக்கில் உணர்த்திச் செல்கிறது. 

உமா மகேஸ்வரியின் கவிதைகள் நீங்கலாக, பெரும்பாலான  அவரது (முதல் தொகுப்பு தவிர) சிறுகதைகளை,நாவல்களை வாசித்திருக்கிறேன். 'யாரும் யாருடனும் இல்லை'க்குப் பிறகு, எந்த தளத்தில் அவரது பெயரை பார்த்தாலும் அவரது எழுத்துகளை/புத்தகத்தை வாங்கி வாசித்திருக்கிகிறேன்.

முதல் நாவலில், ஓடிப்போன குணா சித்தப்பா போல, இங்கு மகா சித்தப்பா. தோட்டத்து முல்லைப்பூக்கள், குருவிகளுடன் பேசிக்கொண்டிருக்கும் பெண்கள். குடும்பத்துக்கு விசுவாசமாக இருக்கும் வேலைக்காரர்கள். பெரிய வியாபார குடும்பங்கள். குழந்தைகளுக் கிடையிலான அதிக பிரசங்கித்தனமான உரையாடல்கள். இவையெல்லாம், ஒரு டெம்ப்ளேட் போல, இந்த நாவலிலும் தொடர்வதாக நான் உணர்வது எனது பலவீனமா அல்லது வாசிப்பின் பலனா என்று தெரியவில்லை.  :‍)

'அஞ்சாங்கல் காலம்' -   அஞ்சாமல் வாசிக்கலாம். :‍)

நாவல்: அஞ்சாங்கல் காலம்
உமா மகேஸ்வரி
வெளியீடு: வம்சி
பக்: 448
விலை: ரூ. 350