Monday, December 22, 2014

தேவதாஸ் - சரத் சந்திர சட்டோபாத்தியாய‌


கல்கத்தா பயணத்தின்போது இரண்டு நடைபயணங்களை தேர்ந்தெடுத்திருந்தோம். ஒன்று, ஹூக்ளி நதிவழியே, கடவுள்கள் உருவாகும் இடம், ஆங்கிலேய ஆட்சியின் நினைவுத்தடங்கள், கல்கத்தாவின் மாடமாளிகைகள் மற்றும் சிறிதும் பெரிதுமான கல்கத்தாவின் பழங்கால கடைத்தெருக்கள், இஸ்லாமிய பக்கம், கல்கத்தாவின் சீனா. இதில், முதலில் சென்ற நடைபயணத்தில் கல்கத்தா பாபுக்களின்  மாடமாளிகைகளையும் கோபுரங்களையும் நேரில் கண்டோம். ஒரு சில மாளிகைகள் இன்றுவரை  நன்றாக பராமரிக்கப்பட்டிருக்க, பெரும்பாலானவை சிதிலமடைந்தும், களையிழந்தும் காணப்பட்டன‌.

 
பெரிய பெரிய தூண்கள், விக்டோரிய அமைப்பிலான முகப்புகள், தளங்களாக பிரிக்கப்பட்டு உள்ளே இன்னும் உள்ளே என செல்லும் அறைகள், பெரிய முற்றம், யானைகள் பராமரிக்க தனி இடம் என்று இந்த மாளிகைகள் ஒவ்வொன்றும் ஆடம்பரமானவை. கிட்டதட்ட, நமது காரைக்குடி வீடுகள் போல.


ஆங்கிலேய ஆட்சி இந்தியாவில் காலூன்றிய காலம். கல்கத்தாவில் ஆங்கிலேய  ஆதிக்கம் வலுப்பெற்றபோது, அதன் வழியாக செல்வாக்கு மிக்கவர்களாக சில வங்காளிகள் உருவானார்கள்.வணிக ரீதியாக பிரிட்ஷாருக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ உதவியவர்கள்.          அந்த வங்காளிகளே  கல்கத்தா பாபுக்கள் என அறியப்பட்டார்கள். கிட்டதட்ட, ஒரு ஐரோப்பிய ஜமீந்தார்களைப்போல வாழ்ந்திருக்கிறார்கள்.


கல்கத்தா பாபு என்றாலே, எனக்கு எப்போதும் நினைவுக்கு வருவது தேவதாஸ்தான். முக்கியமாக ஷாருக்கானுக்காகவும், போனாப்போகுதென்று ஐஸ்வரியாவுக்காகவும் பார்த்த படம். படம் பார்ப்பதற்கு முன்புவரை, 'தேவதாஸ்' என்றால் காதலுக்காக உருகி மருகி பைத்தியக்காரனாக ஆனவன் என்பதே மனதுக்குள் இருந்த பிம்பம். பள்ளி மற்றும் கல்லூரி நாட்கள் எங்களுக்கு கற்றுக்கொடுத்ததும் அதுதான்.

மனிதனாகக்கூட, மதிக்க தகுதி இல்லாத, தன்னைப்பற்றிய எந்த நினைவும் இல்லாத குடியிலே அழிந்து போன  கிறுக்கனாகத்தான் தேவதாஸ் கதாபாத்திரம் எனக்குள் இருந்தது.சோபை இழந்துபோன , அந்த பழங்கால மாளிகைகளை கண்டபோது, ஒவ்வொன்றும் எனக்கு தேவதாஸின் வீட்டையே நினைவுபடுத்தின.  தேவதாஸின் குடும்பம் ஒரு அச்சு அசலான கல்கத்தா பாபு குடும்பம்.

சமீபத்தில்தான், சரத் சந்திர சட்டோபாத்தியாய எழுதிய தேவதாஸ் ஒரிஜினல் புத்தகத்தை (தமிழில்) வாசித்தேன்.  இந்த புத்தகம், நான் பார்த்த தேவதாஸ் படத்திலிருந்து மிகவும் வேறுபட்டிருந்தது.  :‍)

பள்ளி செல்லும் சிறுவனாக அறிமுகமாகிறான்  தேவதாஸ்.  அநேகமாக பத்து வயதிருக்கும் அவனுக்கு அப்போது.பள்ளிக்கூடம் அவனை ஈர்க்கவே இல்லை. பிரம்பு வைத்திருக்கும் வாத்தியார், தண்டனைகள், மணங்கு சேர் கணக்குகள் என்று பள்ளியை வெறுக்க அவனுக்கு போதுமான காரணங்கள் இருந்தன.   பக்கத்துவீட்டு சிறுமி பார்வதி. அவன் என்ன சொன்னாலும் கேட்பவளாக, அவன் பின் தொடர்ந்து வருபவளாகவே இருக்கிறாள். ஒருநாள், கூடப்படிக்கும் சிறுவனை, தேவதாஸ் மண்ணில் தள்ளிவிட்டுவிடுகிறான். ஆசிரியருக்கும், தந்தைக்கும் பயந்து  தோப்பில் சென்று பதுங்கிக் கொள்கிறான். அது அவனுக்கான தனியான இடம். ஹூக்கா பிடிக்கவும், மரம் ஏறவுமான இடம். பார்வதி அந்த இடத்தை அறிந்தவளாக இருக்கிறாள்.

பள்ளியில் நடந்ததை, ஆசிரியர் தந்தையிடம் வந்து சொல்கிறார். பார்வதி மூலமாக, தேவதாஸ் தோப்பில் இருப்பதும், ஹூக்கா பிடிப்பதும் தந்தைக்கு தெரியவருகிறது.  வைத்து விளாசிவிடுகிறார்.   பார்வதி மீது கோபம் கொண்ட தேவதாஸ், அவளிடமும் முரட்டுத்தனத்தை காட்டுகிறான். அடி வாங்கிக் கொண்டாலும் பார்வதி, அவனிடம் நட்பாகவே இருக்கிறாள். தேவதாஸ் இல்லாத பள்ளிக்கூடத்துக்கு  செல்லவே அவளுக்கு பிடிக்கவில்லை.

ஒருமுறை, மீன் பிடிக்க செல்லும் தேவதாஸுக்கு உதவியாக செல்கிறாள். கிளையின் ஒரு முனையை அவளை பிடித்துக்கொள்ள சொல்லிவிட்டு அதன் அடுத்த முனையில் தொங்கிக்கொண்டு மீன் பிடிக்கிறான், தேவதாஸ். ஏதோ ஒரு கணத்தில், பார்வதி  விட்டுவிட, கீழே விழுந்து அடிபடுகிறான் தேவதாஸ். அதற்காக, பார்வதியின் நெற்றியில், தூண்டிலால் அடிக்க, முன்நெற்றியில் காயமேற்படுகிறது. பாட்டியும் அம்மாவும் கேட்கும்போது, ஆசிரியர் அடித்ததாக சொல்லிவிட அதிலிருந்து பார்வதி பள்ளிக்கூடத்துக்கு செல்வது தடைபடுகிறது. இப்படி பாதி புத்தகம் முழுவதும், சிறுவயது விளையாட்டும், நட்பும், சண்டையுமாக இருக்கிறது.

கல்கத்தா செல்லும் தேவதாஸ், ஆரம்பத்தில் பாருவுக்கு கடிதங்கள் எழுதுகிறான். அதன்பின், கல்கத்தாவாசியாகவே மாறிவிடுகிறான். தனிமையை உணரும் பார்வதி, மீண்டும் கல்வியை தொடரவிரும்புகிறாள்.  ஒருகட்டத்தில், பார்வதியின் திருமணத்தை நடத்திவிட அவளது குடும்பம் மணமகனை தேடுகிறது.

படத்தில் வருவதைப்போல, தேவதாஸின் தாய்க்கும், பாரூவின் தாய்க்கும் சபதமெல்லாம் நடப்பதில்லை. குத்தல் பேச்சுகளும் இல்லை. பாரூவின் குடும்பத்தை, 'சாதாரண குடும்பம், விற்று வாங்கி என்று' என்றுதான் தேவதாஸீன் குடும்பம் நினைக்கிறது. தேவதாஸுக்கு, பார்வதியை திருமணம் செய்துக்கொள்ளும் எண்ணம் வரும்போதும் 'பெற்றோர் என்ன நினைப்பார்கள், விற்று வாங்கி என்று' என்று நினைக்கிறான்.

ஒரு இரவில், தேவதாசை தேடி பார்வதி அவனது அறைக்கு வருகிறாள். யாருக்காவது தெரிந்தால், அதில் அவமானமடைவது அவளாகத்தான் இருக்கும் என்றாலும், தேடி வருகிறாள். தேவதாஸ், தைரியமின்றி அவளை  திருப்பி அனுப்பிவிடுகிறான். ஒருவேளை, இருவரும் எங்காவது சென்றிருந்தால், கதை வேறுமாதிரி இருந்திருக்கும். தேவதாஸ் தைரியமாக  எந்த முடிவும் எடுக்காதது, பார்வதியை பாதிக்கிறது.

எந்த சலனமும் இல்லாமல், தன்னைவிட இருமடங்கு வயதான ஒருவரை கணவனாக ஏற்கிறாள். தன் வயது ஒத்த அவரது வாரிசுகளுக்கு தாயாகிறாள். தனது கடமைகளுக்குள் மூழ்கிவிட, அதன்பிறகே தனிமையை,காதலை உணரும் தேவதாஸ் கல்கத்தாவுக்கு செல்கிறான். இடையில், தந்தை இறந்துவிட, தேவதாஸுக்கு சொத்து பிரிகிறது. தாயும், காசிக்கு செல்கிறாள். கொஞ்சம் கொஞ்சமாக குடிக்கு அடிமையாகிறான், தேவதாஸ். அவன் சந்திரமுகியை சந்திப்பதும், அவள் காதல்வயப்படுவதும் ஏற்கெனவே தெரிந்ததுதான். ஆனால், படத்தில் வருவதைப் போலெல்லாம் அவர் எழுதியிருக்கவில்லை.

சந்திரமுகியின் இரண்டாம் கட்ட வாழ்வை பார்த்து, அவளுக்கு கொஞ்சம் பணத்தை தானம் செய்கிறான், தேவதாஸ். குடியால், உடல்நலம் பாதிக்கப்பட மருத்துவமனையில் சேர்கிறான். தேறினாலும்,  குடியை விடமுடியாமல் இறுதிகட்டத்தை எட்டுகிறான். முடிவை அறிந்துக்கொண்ட தேவதாஸ், பார்வதி இருக்கும் ஊருக்கு வந்து சேர்கிறான். நாவலைப்பொறுத்தவரை, மனதை உருக்கும் காட்சி அதுவே.

யாருமற்ற அனாதையாக, இறந்து போகிறான்,தேவதாஸ்.  ஒழுங்காக தகனம் கூட செய்யப்படாத, அவனது உடலை,  பறவைகள் கொத்திக்கொண்டிருக்க, 'தன் ஊரைச் சேர்ந்த ஒருவன் இங்கு வந்து இறந்திருக்கிறான், அவன் பெயர் தேவதாஸ் என்று சொல்கிறார்கள் என்ற செய்தியை  கேட்டு' பார்வதி வீட்டிலிருந்து ஓடி வருகிறாள். அவளை பிடிக்கச் சொல்லி கத்துகிறார், அவள‌து கணவன்.அதோடு முடிவடைகிறது நாவல்.  

படத்தையும், நாவலையும்  ஒப்பிட்டு பார்க்க முடியாதுதான். ஆனால், 'தேவதாஸ்' என்று நினைத்தாலே ஏற்படும் பிம்பத்துக்கும் , மூலத்துக்கும் கொஞ்சமாவது நியாயம் இருக்கவேண்டும்தானே!

 நாவலின் ஆரம்பத்திலிருந்தே இருவரும் சிறுவயது நண்பர்களாக, விளையாட்டு பிள்ளைகளாக பழகுகிறார்கள். தேவதாஸும் பார்வதியும் ரொம்பவெல்லாம் இந்த புத்தகத்தில் காதல் வயப்படவில்லை. தேவதாஸின் தந்தை மரணத்துக்கு வருகிறாள் பாரு. அங்கும் இருவரும், பழைய நண்பர்கள் போலவேதான் பேசிக்கொள்கிறார்கள். நமக்குச் சொல்லப்பட்ட தேவதாஸீன் தன்மைகளை  நாவலில் எங்குமே பார்க்கமுடியவில்லை.

வரிக்கு வரி சரிபார்க்க முடியாதுதான் என்றாலும், படம் வேறு ஒரு தேவதாஸீன் கதையைத்தான் சொல்கிறது. உண்மையான தேவதாஸின் கதை மிகவும் எளிமையாக, அருமையாக இருக்கிறது. இறுதியில் அவர் சொல்வதுதான் மிகவும் முக்கியமானது. 'தேவதாஸீன் மரணத்தைப்போல் யாருக்கும் ஏற்படக்கூடாது என்று பிரார்த்தனை செய்யுங்கள். ஒரு மனிதனின் மரணம், அன்பையும் நட்பையும்,பாசத்தையும் உணர்ந்தபடி நிகழவேண்டும். பரிவான ஒரு முகம், அவன் கண்ணுக்குமுன் தெரிய வேண்டும்' என்பதாக. (அதே வாக்கியங்களை கொடுக்க முடியவில்லை...)

 கல்கத்தாவின், அன்னை தெரசா இல்லத்த்தில், அவர் காப்பாற்றிய மக்கள் இறக்குமுன்பு சொன்னதாக எழுதிவைத்திருந்தார்கள்.  'செத்துப்போவது பற்றி பயமில்லை. ஆனால், யாருமற்ற அனாதையாக, எவருக்கும் தேவையற்று, ஒரு கேவலமான மிருகத்தைப்போல் நாங்கள் செத்துப்போவோம் என்று நினைத்தோம். இப்போதோ, எங்கள் மீது அன்பு காட்டும் பரிவான உங்கள் முகத்தை கண்டபடி செத்துப்போவது நிம்மதியாக இருக்கிறது.' என்று!

 வறுமையிலும், கடுங்குளிரிலும்,அழுக்கிலுமிருந்து அன்னை தெரசா அள்ளிக்கொண்ட மனிதர்கள் சொன்னதைதான் சரத் சந்திராவின் நாவலும் சொல்வது வியப்பாக இருந்தது!

ஆதிவாசிகள் ‍- பிலோ இருதயநாத்

ஏதோ ஒரு மலைப்பயணத்தின்போது, 'பிலோ இருதயநாத்'  பெயரை பெரிம்மாதான் எனக்கு சொல்லியிருந்தார்.ஏதோ ஒரு அந்த காலத்து வார‌இதழின் பெயரை , அவரது கட்டுரைகளுக்காக காத்திருப்போம் என்று. புத்தகம் வாங்கிய தளத்தில், இவரது பெயரை பார்த்ததும், மின்னல் வெட்ட, இந்த புத்தகத்தை வாங்கினேன்.

வாசித்ததும் தோன்றியது, இவர் 'தென்னிந்திய ஜிம் கார்பெத்'! :‍) இதுவரை நான் கேள்விபட்டிருந்தது, ஊட்டியின் தோடர்கள், குறும்பர்கள் மட்டுமே. குருவிக்காரர்களை ஆதிவாசிகளாக நினைத்ததேயில்லை.  இந்த புத்தகத்தில், நீலகிரியில் கோத்தர்கள், தோதுவர்கள், கசவர்கள் என்று பல்வேறு ஆதிவாசிகள் இருப்பதை இவர் பதிவு செய்கிறார். ஆந்திராவின் ஆதிவாசிகள், மராட்டியத்தின் ஆதிவாசிகள், நீலகிரியின் ஆதிவாசிகள் என்று ஏராளமான தகவல்கள்.

இவை ,வெறும் தகவல்களாக மட்டும் இல்லாமல், அவர்கள்து பழக்க வழக்கங்கள், திருமண சடங்குகள், உணவு, வேட்டையாடும் முறை, உடைகள், காட்டைப் பற்றியும், விலங்குகளையும் பற்றிய ஆதிவாசிகளின் அறிவு என்று முதல் பகுதி ஒரு  மானுட சுரங்கமாகவே இருக்கிறது. இரண்டாம் பகுதிதான், வெகு சுவாரசியம். அதை வாசித்ததிலிருந்து, 'மல்லா எல்கா' என்ற குரல் பிலோ இருதயநாத் இதயத்தில் மட்டுமல்ல..என்னுள் அந்த தாயின் குரல் எழுந்து அடங்குகிறது. 'நல்லூரா பீ...ர்...லா' மற்றும் 'மத்து மராலே'வும் சுவையான அனுபவங்கள். இதில், 'மத்து மராலே' பப்புவுக்கு படித்தகாட்ட, ஆரம்பத்தில் அதிர்ச்சியானவள்,  பின்னர் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தாள். 'ஷிகாரி சாம்பு' போல எண்ணிக்கொண்டாளாம்.கசவர்கள் என்ற இனத்தவர்கள், உதகையில் வசித்து வருபவர்கள். இவர்களைப் பற்றி பெரிதாகவும் எதுவும் யாருக்கும் தெரியாது. ஆர்வத்தால், கால்நடையாக அவர்களைத் தேடிச்செல்கிறார், பிலோ இருதயநாத். கசவன் இனத்தவருடன் காட்டைச் சுற்றிப் பார்த்துக்கொண்டிருக்கையில், களைத்து ஒரு மரத்தினடியில் வேரின்மீது அமருகிறார்கள். களைப்பும் பசியும்  மேலோங்க, ரொட்டியையும் பழத்தையும் சாப்பிடுகிறார்கள்.

பழத்தை வெட்டிய பின் கத்தியை அந்த வேரில் குத்திவைத்திருக்கிறார், அந்த கசவன். அதிலிருந்து ரத்தம் வருவதை பார்த்து கசவனிடம் சொல்ல, ஒரு நிமிடம் ஒன்றும் புரியாமல்,சட்டென கத்திக்கொண்டே எழுந்து   ஓட ஆரம்பித்திருக்கிறார், கசவன். இவரும், வாயில் ரொட்டியை கவ்வியபடியே அவர் பின்னால் ஓடியிருக்கிறார். அந்த ஆதிவாசி ஓடும்போது உதிர்த்த வார்த்தைகள்தான் 'மத்து மராலே'. 'மலைப்பாம்பு' என்று பொருளாம்!

இந்த ஆதிவாசி மக்களை கண்டடைய இவர் மேற்கொண்ட பயணங்களே விசித்திரமானவை. இன்றுபோல், மசினகுடிக்கோ, கோத்தகிரிக்கோ அதைத்தாண்டிய மலைப்பகுதிகளுக்கோ பெரிய போக்குவரத்து வசதிகள் இல்லை. விறகுகள் ஏற்றிச்செல்லும் லாரிகள், அங்கிருந்து கால்நடையாக, சில இடங்களில் சைக்கிள் என பயணம். அதோடு, வெளி ஆட்களோடு பழகவோ அவர்களை பார்க்கவோ கூச்சப்படும் ஆதிவாசிமக்களோடு மாதக்கணக்கில் தங்கி அவர்கள் நம்பிக்கையை பெறுவது சாதாரண விஷயமல்ல.

சிலமாதங்களுக்கு முன்பு பத்திரிக்கையில் படித்தது இது.இன்றும், பெரிய அளவில் வெளி உலகத்தொடர்புகளே இல்லாத, நாகரீக மனிதர்களை சந்திக்க மறுக்கும் ஆதிவாசி மக்களை, சமீபத்தில் பத்திரிக்கையாளர்கள் சந்திக்கச் சென்றபோது, 'தொப்பி அணிந்து வருவாரே' என்று ஒருவரை பற்றி அவர்கள் நினைவுகூர்ந்தார்களாம். ஆனால், பத்திரிக்கையாளருக்கு யாரென்று தெரியவில்லையாம்.

இங்குவந்தபிறகுதான், அவருக்கு தெரியவந்திருக்கிறது,  அந்த ஆதிவாசி மக்கள் விசாரித்தது, பிலோ இருதயநாத் பற்றி என்று!   ஒருமுறை, அவர்கள் அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமாகிவிட்டால், ஆதிவாசிமக்கள் போல் வேறு யாருமில்லை என அவர் உணர்ந்து எழுதியது, எவ்வளவு உண்மையாகியிருக்கிறது!

உண்மையிலேயே, காட்டுவாசி மக்கள் வாழ்வில் நடனம் இரண்டற கலந்திருக்கிறது. அதற்கு சாட்சியாக, அவர்களது பாடல்களையும் அந்த மொழியிலேயே பதிவு செய்திருக்கிறார். என்ன, நமக்குத்தான் புரியவில்லை.
வெறும் தகவல்களாக மட்டுமில்லாமல், அவருக்கேற்பட்ட சுவையான சம்பவங்களோடு கொடுத்திருப்பதுதான், இந்த புத்தகத்தை நினைவில் தங்கவைக்கிறது.

குருவிக்காரர்களை , 'காக்கை,நரிப்பல், மணிகள்' விற்பவர்களாக, டால்டா டின்களை கட்டிக்கொண்டிருப்பவர்களுமாகவே  நான் அறிந்திருக்கிறேன். வடலூரில், வீட்டுக்கு எதிரில், இருந்த புளிமரத்தில் கூடாரம் அடித்து தங்கியிருப்பார்கள். ஒரு ரேடியோ எப்போதும் அவர்களிடம் இருக்கும்.  அந்த கூட்டத்தை அடுத்த விடுமுறைக்கு வடலூர் செல்லும்போது பார்க்க முடியாது.
சிலநாட்கள் கழித்து வேறு ஒரு கூட்டம் வந்து தங்கியிருக்கும்.

இந்த நாடோடித்தனத்துக்கு பின்னான‌ காரணத்தை இந்த புத்தகத்தின் வாயிலாக அறிந்தபோது, அதிர்ச்சியாக, ஆச்சரியமாக,சிரிப்பாக‌ இருந்தது. ஒரு கூட்டத்தில் குழந்தையோ, வயதானவர்களோ இறந்துவிட்டால், அவர்களை புதைத்துவிட்டு அந்த இடத்தை காலி செய்துவிடுவார்களாம்.  புதிய இடத்துக்கு சென்ற பின்பும், மூன்று இரவுகள், எல்லாரும் வட்டமாக கைகளைக் கோர்த்துக்கொண்டு அமர்ந்துக்கொள்வார்களாம். தூங்குவதில்லையாம். இரவில், திடீரென்று அலறல் சத்தம்போல் கொடுப்பார்களாம்.

அதாவது, இறந்தவர்கள் பேயாக வந்து அவர்களில் யாரையாவது பிடித்துக்கொள்வார்கள், கைகளை கோர்த்துக்கொள்வதால் பேயால் மொத்தமாக எல்லாரையும் இழுக்க முடியாது என்பது அவர்கள் நம்பிக்கை.

இந்த ஒரே காரணத்தால்தான் இவர்கள் நாடோடிகளாக இன்றும் இருக்கிறார்களாம். நான் நினைத்தது போல், இவர்கள் பிச்சைக்காகவோ இடவசதிக்காகவோ ஊர் ஊராக செல்லவில்லை! அநேகமாக, இறந்தவர்களுக்கு செய்யப்படும் சடங்குகளான‌ நாற்பது அல்லது பதினாறாம் நாள் இதற்கெல்லாம் முன்னோடி, இந்த சடங்காக இருக்கலாம்!

ஊட்டியில், சேரம்பாடி என்ற ஊர் இருக்கிறது. அந்த பெயருக்குப் பின்னால் இருக்கும் வரலாறு சுவாரசியம். சேரன் செங்குட்டுவன் இமயம் செல்வதற்கு முன் நீலகிரியில் தங்கியபோது, கொங்குநாட்டு ஆதிவாசிகள் அவனுக்கு 'குரவை கூத்து' ஆடினார். அதை சிலப்பதிகாரம் பதிவு செய்திருக்கிறது. அவன் தங்கி கோட்டை அமைத்த இடம் தான் 'சேரன் பாடி'. அது இன்று மருவி சேரம்பாடி எனவும் பகாசுரன் மலை எனவும் வழங்கப்பட்டு வருகிறது.

 'லைஃப் ஆஃப் பை' பார்த்த சூடோடு 'ரிச்சர்ட் பார்க்கரை' நேரில் பார்க்க வேண்டும் என்ற பப்புவின் தொணத்தலால்/ஆசையால் மசினகுடி சென்றோம். பந்திப்பூர் மற்றும் முதுமலையை பார்க்கலாம் என்பது பயணத்திட்டம். நாங்கள் சென்றது, முழுக்க அரசாங்கத்தின் சவாரி(சஃபாரி) ஊர்திகளில். மயில் பறந்ததையும், காட்டுயானைகளையும், பார்க்கிங் டீரையும் பார்க்க முடிந்ததே தவிர,ரிச்சர்ட் பார்க்கர் கண்ணுக்குப்படவே இல்லை. அதன்பிறகு,  ஒரு ட்ரெக்கிங்‍ பறவைகளைக் காணச் சென்றோம்.

ஏறக்குறைய, 25 வகை பறவைகளை முதலில் கண்டது மசினகுடியில்தான்.    பப்புவும், எப்படியாவது ஒரு ரிச்சர்ட் பார்க்கரையாவது நேரில் பார்த்துவிட வேண்டும் என்பது போல் அங்கிருந்த நாட்களில் எல்லாம் மனதில் புலியோடு அலைந்து கொண்டிருந்தாள்.

புலியைப் பார்த்தோமோ இல்லையோ, யானைகளை, யானைக்கதைகளை நிறைய கேட்டோம். வழியெங்கும் காடுகள் முழுக்க யானையைப் பற்றியும் ரிச்சர்ட் பார்க்கர் பற்றியும் கதைகள்தான் சிதறிக்கிடந்தன. அதுவும் யானையைத் தேடி தனியாகவோ அல்லது நண்பர்களுடனோ ரிசர்வ் காட்டுக்குள் சுற்றி பலியாகும் வெளிநாட்டுக்காரர்கள் பற்றிய கதைகள்!!


 
கிட்டதட்ட 20 வருடங்களுக்கு முன் தன்னந்தனியாக யானையை  போட்டோ எடுத்து மிதிபட்டு இறந்த  ஆங்கிலேய பெண்ணிலிருந்து, ஆறு மாதங்களுக்கு முன் யானையால் துரத்தப்பட்டு பந்தாடப்பட்ட ஐரோப்பிய இளைஞர்  வரை!!  அனுமதிக்கப்படாத காட்டுப்பகுதிக்குள் மாலை வேளைகளில் சுற்றித் திரிவதை என்னவென்று சொல்வது!! இந்த வருடத்தின் ஆரம்பத்தில் கூட, 67 வயதுடைய ஒருவர், யானைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்பவர்,மசினகுடியில் யானைக்கு பலியாகியிருக்கிறார்.

இன்று போல்,அவ்வளவாக வசதிகளில்லாத காலத்தில் ஒருவர், காட்டுக்குள் அலைந்து திரிந்து ஆதிவாசிகளை சந்தித்திருக்கிறார், ஆபத்தான  இடங்ளிலிருந்து தப்பியிருக்கிறார், அபாயமான விலங்குகளிடமிருந்து தப்பியிருக்கிறார். இதுவே என்னை மிகவும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது.

அவர் சந்தித்த விசித்திரமான ஆதிவாசிகள் - பறவை வடிவ மச்சமுள்ள மனிதன் பாம்புகளை 'வா' என்றதும் புற்றிலிருந்து வருவது, மலைப்பகுதிக்கு கவர்னருக்காக பாதை அமைத்தது, பஞ்சாயத்துகள் என்று கொஞ்சம் கூட சுவாரசியத்துக்கு பஞ்சமில்லை. இயற்கை மற்றும் விலங்குகளை நேசிப்பவர்களுக்கு மட்டும்தான் இந்த புத்தகம் என்றில்லை, யார் வேண்டுமானாலும்  எவரும் வாசிக்கலாம்.  நேரில் கண்டு, அவர்களோடு வாழ்ந்து, கற்று எழுதியிருக்கும் அனுபவங்களின் வீச்சு என்றுமே தனிதான்!

(இமயமலையில் வீரதீர சாகசங்களை புரிந்த‌ 'வட இந்திய ஃபிலோ இருதயநாத்' ஜிம் கார்பெத்தின் 'மேன் ஈட்டர்ஸ் ஆஃப் குமோன்' மற்றும்'மை இந்தியா'வை 'உத்தராகாண்ட் காட்டுக்குள் வாசித்து பயந்துகிடந்ததையும் பற்றி எழுதி வைக்க வேண்டும்!) :-)

ஆதிவாசிகள் ‍-  பிலோ இருதயநாத் (பானு பதிப்பகம்)