Sunday, October 05, 2014

*Doing a Mysore * (பெயர்க்காரணம் கீழே...)


  1. வினாயகா மைலாரி
===================
மைசூருக்கு போய் மசாலா தோசை இல்லாமலா? மசாலா தோசை என்றால் மைலாரி தோசைதான். இதே தெருவில் இரண்டு கடைகள் உண்டு. இரண்டுமே ஒரே குடும்பத்தினருடையதுதான். ஆனால், ஒன்றுதான் ஒரிஜினல் மைலாரி. அதனை உங்கள் ஊகத்துக்கே விட்டுவிடுகிறேன்.

கடையை பார்த்து தோசையை எடை போடக்கூடாது.  வழக்கமான மசாலா தோசைகளின் எந்த விதிகளுக்கும் இந்த தோசை பொருந்தாது.

  மெத்மெத்தென்ற தோசை,உள்ளே தேங்காய் தூக்கலாக மசாலா (பீன்ஸூம், நறுக்கப்பட்ட வெங்காய துண்டுகளும்). கூட, தேங்காய் சட்னி. மேலே, புத்தம்புது வெண்ணெய். ம்ம்ம்ம்ம்....தோசைக்குப் பின், மைலாரியின் பில்டர் காபியை தவறவிடக்கூடாது.

2.மாயாஜால நொடி
================
தசரா காலத்தில்,  பகலில் எங்கு வேண்டுமானால் சுற்றுங்கள். ஆனால், ஆறு அல்லது ஆறரை மணிக்கு அரண்மனை வளாகத்துக்குள் வந்துவிடவும். புல்வெளியில், வசதியாக ஓரிடத்தை தேர்ந்தெடுத்து அமர்ந்துக்கொள்ளவும்.  விளக்கேற்றப்படும் அந்த நொடிக்காக காத்திருக்கவும்.

சரியாக ஏழுமணிக்கு முழு அரண்மனையும், சுற்றுபுற மதில்களும், கோயில் கோபுரங்களும் விளக்கால் ஜொலிப்பது அழகு. வழக்கமான, சீரியல் பல்புகளால் அலங்கரிக்கப்படாமல், விளக்குகள் போல தோன்ற வேண்டுமென்று, குண்டு பல்புகளால் ஒளியேற்ற பட்டிருப்பது சிறப்பு.

உலகிலேயே மூன்று மாளிகைகள்தான் இது போல விளக்கேற்றப்படும் வழக்கத்தை கொண்டுள்ளன. அதில், ஒன்று ரஷ்யாவிலிருக்கிறது. மற்றோன்று ஜெனீவாவில் இருக்கிறது. இன்னொன்று மைசூர். ரஷ்யாவிலிருந்த மாளிகை சிதிலமடைந்துவிட்டது. ஜெனீவாவில் இருக்கும் மாளிகையின், கட்டிடத்தின் பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்தி வைத்திருக்கிறார்கள். மைசூர் அரண்மனை, தசரா காலத்தில் மட்டும் முழுவதுமாக விளக்கேற்றப்படுகிறது.

அரண்மனையின் அந்த மாயாஜால நொடிக்காக காத்திருந்து கண்டுகளியுங்கள்!

3.மைசூர் ராயல் வாக்
====================
ஒரு ஊரை, அதன் தெருக்கள் வழியாக அறிந்துக்கொள்வது இனிமையான அனுபவம். மைசூரின் ஒவ்வொரு தெரு முனைக்கும், விளக்குக் கம்பங்களுக்கும் கூட வரலாற்று பின்னணி உண்டு.

நாசாவில் ஏன் வாயிலில் 'சீரங்கபட்டின போர்' பற்றிய ஓவியத்தை வைத்திருக்கிறார்கள், வாட்டர் லூ போருக்கும், பாஸ்டன் டீ பார்ட்டிக்கும் மைசூருக்கும் என்ன தொடர்பு? மைசூர் பல்கலை.யில் முதல்முதல் பட்டம் பெற்ற பெண்மணியின் பேத்தி தற்போது, செல்வாக்கான அரசியல்வாதி.யார் அவர்? திப்புவின் மகன்கள் சிறைபிடிக்கப்பட்டு எங்கு வைக்கப்பட்டார்கள், திப்புவின் மரணத்துக்கு பின்னர்  வலுக்கட்டாயமாக கல்கத்தாவுக்கு அழைத்துச்செல்லப்பட்ட அவரது உறவினர்கள் என்ன ஆனார்கள்?

 'எலஃபெண்ட் பாய்' மற்றும்  'செக்ஸ் அன்ட் த சிட்டி' படங்களுக்கும் மைசூருக்கும் என்ன தொடர்பு? உடையார் அரச குடும்பத்தில் சில தலைமுறைகளாக நேரடி வாரிசுகள் இல்லாமல் போவதற்கும், தலக்காடு மண்ணில் மூடுண்டு போவதற்கும் என்ன சம்பந்தம்?

கதைகேட்கும் ஆர்வமும், வரலாற்றை அறிந்துக்கொள்ள விருப்பமும் கொண்ட குழந்தைகளும், குழந்தை மனம் கொண்ட பெரியவர்களும் இருந்தால் இந்த நடை கட்டாயம்.

4.மைசூர் பாக்
============

'மசாலா தோசை'யில மசாலா இருக்கு? மைசூர் பாக்லே எங்கே மைசூர் இருக்கு' என்பதுபோல ஒரு கடியை கேள்விப்பட்டிருப்போம். மைசூர் பாக், முதன்முதலில் உருவானதே மைசூரில்தானாம். அந்த ஒரிஜினல் மைசூர்பாக்கை தேடி ஒரு பயணம்.

உடையார் ராஜாவின் சமையற்காரர் யதேச்சையாக, கடலைமாவையும், நெய்யையும் , இனிப்பையும் கொண்டு ஒரு பண்டம் செய்துவிட, அதன் சுவையில் மயங்கிய அரசர், பொதுமக்களும் இந்த பண்டத்தை ருசிக்க வழிவகை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதன் விளைவு, தேவராஜா மார்க்கெட்டில் மூலையில் இன்றும் நின்றுக்கொண்டிருக்கிறது, 'குரு ஸ்வீட்ஸ்'. அந்த சமையற்காரரின் பேரர்தான் இன்றைய முதலாளி.
அங்கு மைசூர் பாக் மட்டுமில்லை, மற்ற எல்லா இனிப்புகளும் சுவையானவை.

ஒரிஜினல் மைசூர் பாக் என்று விள்ளலை கையில் கொடுத்ததும், அதையே உற்றுபார்த்த பப்பு 'வேணாம் ஆச்சி, பயமாருக்கு' என்று என் கையில் திரும்ப கொடுத்துவிட்டாள். ஏனென்று கேட்டதும். 'இது ஒரிஜினல் ஹன்டரட் இயர்ஸ் முன்னாடி  செஞ்சதா இருந்தா? வேணாம்' என்று சாப்பிட மறுத்துவிட்டாள். அவ்வ்வ்வ்!

5.ஜகன்மோகன் அரண்மனையின் டிக் டிக்
====================================

சாலர் ஜங்கின் கடிகாரம் பற்றிதான் கேள்விப் பட்டிருப்போம்.  அதே போன்று, ஆனால் அதைவிட பழமையானது, ஹைதையிலேயே 'சொமஹ‌ல்லா பேலஸின்' இருக்கிறது. சாலர் ஜங்கின் கடிகாரத்தைவிட அதிக அளவு பாகங்கள் கொண்டு வடிவமைக்கப்பட்டது அது. அதைபோன்ற ஒன்று, மைசூரிலும் இருக்கிறது.

ஒவ்வொரு நொடிக்கும் ஒரு சிப்பாய் மேளம் கொட்டிக்கொண்டிருக்கிறார். ஒவ்வொரு பதினைந்து நிமிடங்களுக்கும், ஒரு தாள் ஓசை வருகிறது. ஒவ்வொரு மணிநேர முடிவிலும், சிப்பாய்களும், ராஜாவும் கடிகாரத்தை சுற்றி ஊர்வலம் செல்கிறார்கள். ஜகன்மோகன் மாளிகை, தற்போது கலைபொருட்களும், ரவிவர்மா ஓவியங்களுமாக நிரம்பியிருக்கிறது.

எங்கு சுற்றிபார்த்தாலும், அந்த ஒருமணித் துளிக்காக, நூறாண்டுகள் தாண்டியும் ஓடிக்கொண்டிருக்கும் கடிகாரத்தின் முன் வந்து சிப்பாய்களின் ஊர்வலத்துக்காக‌ காத்திருங்கள்.

பொழுது போக வேண்டுமென்றால், அருகிலிருக்கும் படப்பெட்டியை கலீலியோவின் முதல் டெல்ஸ்கோப் என்று  கிளப்பிவிடுங்கள். :-p

6.மைசூர் 'தேசி'
============
மைசூர் என்றாலே பட்டும், சந்தனமும்,பவுடரும் சோப்பும்தான் வாங்கக்கூடிய பொருட்கள். அல்லது, நம்மை வாங்க வைக்க ஆட்டோக்காரர்கள் படாத பாடு படுவார்கள். மைசூர் பட்டையும், காவேரி எம்போரியத்தையும் ஒதுக்கி தள்ளுங்கள்.

நேராக 'தேசி' கடை நோக்கி செல்லுங்கள். 'தேசி' என்ற கடையை பார்த்ததுமே 'பொட்டிக்', விலை அதிகமாக இருக்குமோ என்று எண்ண வேண்டாம்.

துணிகள் அனைத்துமே காட்டன் வகையறாக்கள். குர்த்தி, சல்வார், பட்டியாலா, குழந்தைகளுக்கு பாவாடை சட்டைகள்....எல்லாமே பருத்தி துணியில், நேர்த்தியாக தைக்கப்பட்டு சரியான விலையில் விற்கப்படுகின்றன.
ஒரு டிரஸ்ட் நடத்துவதால், இந்த விலை சாத்தியமாகிறதாம்.

http://desiangadi.wordpress.com/author/desiangadi/

யாருக்கு வேண்டும் மைசூர் பட்டு?;‍)

7.ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் 
==================================

ஒளியால் சூழ்ந்த அரண்மனையை கண்டு
களித்து விட்டீர்களா? மெதுவாக அங்குமிங்கும் நடந்து சுற்றிப்பார்க்கவும். அதையும் முடித்துவிட்டால்,  அரண்மனை பின்னணியில் ஐந்து நிமிடத்தில் புகைப்படம் எடுத்துதருவதாக நிற்பார்கள்  புகைப்படக்காரர்கள். அவர்களும் வாழ வேண்டாமா? பெரிய அளவிலான புகைப்படம் ஒன்று நூறு ரூபாய்.

அதையும் முடித்து வெளியில் வந்தால் ஆட்டோக்காரர்கள் வந்து சூழ்ந்துக்கொள்வார்கள். அவர்களிடமிருந்து தப்பித்து சாலையை கடந்து சென்றால், குதிரைக்காரர்கள்/ டோங்காக்காரர்கள்  நின்றுக்கொண்டிருப்பார்கள்.

ஏறிக்கொண்டு, ராஜா ராணியைப்போல் அமர்ந்துக்கொள்ளவும். அரண்மனையை ,நகரை வலம் வர வேண்டும் என்று சொல்லவும். முழு அரண்மணையை, நகரின் மையத்தை, வீதிகளின் அலங்காரங்களை உங்களுக்காகவே செய்திருப்பது போல பார்த்து ரசியுங்கள்.

பாதிவழியில், மற்றொரு குதிரை வண்டியும் வந்துவிட்டால், உங்கள் குதிரை , ராஜா ராணியை ஏற்றி செல்வதை மறந்து ரேஸ் குதிரையாக மாறி விட்டால், 'மெதுவா போங்க' 'மெதுவா போங்க' என்று அலறியபடி பக்கத்திலிருக்கும் கம்பியை  பிடித்துக் கொள்ளவும். ;‍-)

what is that 'doing a mysore' thing?
============================
Doing a Mysore என்பது ரோல்ஸ் ராய்ஸ் கார் கம்பெனியால் உருவாக்கப்பட்ட ஆங்கில வார்த்தை. அந்த காலத்தில் ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் கணிசமான மார்க்கெட்/டார்கெட் ராஜாக்கள்தான்.

அதுவும், ராஜாக்கள் கார்கள் வாங்கினால் ஒன்று,இரண்டு என்றெல்லாம் வாங்க மாட்டார்கள். அவர்கள் ஆடம்பரத்தை காண்பிக்க, ஒவ்வொரு மாடல் வரும்போதும், ஒரே மாடலில் நான்கு அல்லது ஏழு கார்கள் என்று வாங்குவார்களாம். கார் கம்பெனியால் இந்த சொல்லாடல் புழக்கத்துக்கு வந்ததாம்.