Friday, June 21, 2013

'சின்னக் கல்லு பெத்த லாபம்'

பப்பு ஒரு புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தாள். மது லிமயி, கோவாவில் சிறை வைக்கப்பட்டிருந்தபோது  தனது இரண்டு மகனுக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு அது.

"அந்த நாட்டுல  Aai யினா அம்மா,  Bhai யிநா அப்பா, இல்ல ஆச்சி? "

"ஆமா, மராட்டில அப்படி கூப்பிடுவாங்க, அது வேற நாடா?"

"இல்ல,ம்ம்ம்... ஸ்டேட்..."

"ம்ம்ம்...நாம அங்க போனாலும் நான் அப்படிதான் கூப்பிடனுமா?"

"ம்ம்ம்ம்" (க்ர்ர்ர்ர்)

"அங்க போய்ட்டா நீ என்னை எப்படி கூப்பிடுவ?"

"Popat ந்னு கூப்பிடுவேன்."

"அப்டின்னா?

" அதுல போட்டிருக்கு இல்ல, parrot ந்னு... அதான்., அந்த குட்டி பையனை அப்படிதான அவங்க அப்பா கூப்பிடறார்"

"ஆமா, ஆச்சி, எனக்கு கூட shanthi ந்னா  பொட்டு தான்  ஞாபகம் வரும்"

சாந்திக்கும் பொட்டுக்கும் இருக்கும் கனெக்சனை புரிந்துக்கொள்ள முடியவில்லை.  அவளோ , நானோ பொட்டு வைப்பதேயில்லை. எப்படி, சாந்திக்கும் பொட்டுக்கும் கனெக்சன் என்று ரூட்டை பிடித்துபோகும் ஆசை வந்தது.ஒருவேளை, வீட்டுக்கு வந்தவர்கள் பையில் ஒட்டும் பொட்டின் பிராண்ட் சாந்தியா என்று தெரியவில்லை. அது போகட்டும்.

பொதுவாக, கடிதங்கள் பற்றிய குழந்தைகளுக்கான புத்தகம் என்றால் நேரு தன் மகளுக்கு எழுதிய கடிதங்களைத்தான் சொல்லுவார்கள்.அந்த புத்தகத்தை நானும் படித்ததில்லை. சிறுவயதில்,அதனை படிக்கச் சொல்லி யிருக்கிறார்கள்.  அதன் கனத்தை பார்த்து எடுக்கத் தோன்றியதில்லை. அந்த அளவுக்கு இல்லையென்றாலும், இந்த கடிதத்தொகுப்பு ஏன் பிரபலமாக வில்லை என்று தெரியவில்லை. (ஒருவேளை அவர் சோசஷலிஸ்ட் என்பதாலா?)  ஏழு டூ பத்து வயதினருக்கு ஏற்ற எளிமையான புத்தகம்.

அதே போல், பப்புவின் சம்மர் கிளாசிலிருந்து ஒரு ரிசோர்ஸ் லிங்க் கொடுத்திருந்தார்கள். அதிலும் சுவையான வடகன்னட நாட்டுப்புற கதைகள் இருந்தன. 'மேல்நாடுகளில் இருக்கும் அளவுக்கு நம்மிடம் குழந்தை இலக்கியம் இல்லை இல்லை'  என்று அரற்றுவதைவிட, அவற்றை நாம் சரியாகத் தேடி கண்டுபிடிக்கவில்லையோ என்று தோன்றியது.

 "டியர் பொபெட்" புத்தகம், வெகு எளிமையான ஆங்கிலத்தில், அட்டகாசமான கடிதங்களை கொண்ட சின்னஞ்சிறு புத்தகம். இப்போதெல்லாம், பப்பு புத்தகத்தை அதன் தடிமனை வைத்துதான் படிப்பதை தீர்மானிக்கிறாள். அந்த வகையில், ஏழு வயதினருக்கு புதிய நிலப்பரப்பை, புதிய மக்களை, அனுபவங்களை  தானாக படிக்க அறிமுகப்படுத்தலாம்.

இதை படித்ததும், அஞ்சலை அம்மாள் ஜெயிலில் இருக்கும் போது, தனது குழந்தைகளுக்கு ஏன் கடிதம் எழுதவில்லை என்பது பப்புவின் கேள்வி. ஆயா, தனது அம்மா ஜெயிலுக்கு போகும்போது, அவரையும், அவரது தம்பியையும் மற்றொரு காங்கிரஸ்காரர் வீட்டில் விட்டுவிட்டு போன கதையை, ஆயாவை சிறுவயதில் ஹாஸ்டலில் சேர்த்துவிட்ட கதையை எல்லாம் அவளிடம் சொல்லியிருக்கிறார். அப்படி எதுவும் கடிதங்கள் இருக்கிறதா என ரூட் பிடித்து இனிதான் போகவேண்டும்! :)

Sunday, June 16, 2013

கூல்..கூல்..ஸ்கூல்!

நேற்று பப்புவின் பள்ளியில், நோட்டு புத்தகங்கள்,யூனிஃபார்ம் மற்றும் இதர பொருட்கள் வாங்கும் டே!

வரிசையில் அமர்ந்ததும் திரும்பிப் பார்த்தால் இரண்டு சீட்கள் தள்ளி மாலா.

மாலா! 

பப்புவுக்கு சிறு வயதிலிருந்தே ஒரு பழக்கம். நாங்கள் பழக்கியதுதான். அவளாக  குளியறைக்குச் சென்றால், கதவை உள்பக்கத்து நாதாங்கியை தனியாக இழுத்துவிட வேண்டும். சாத்தினாலும் உட்பக்கமாக பூட்ட முடியாது. மேலும், கதவு சாத்திக்கொண்டால், குழந்தை உள்ளே வைத்து தானாக பூட்டிக் கொள்வதை தவிர்க்கலாம். யாருமில்லாத நேரங்களில் என்றில்லை, குழந்தைகள் அறைக்குள் சென்று பூட்டிக்கொள்வதை தடுக்க பொதுவாக ஆயா இப்படி செய்தும், பப்புவுக்கு சொல்லியும் தந்திருந்தார். (பப்புவை பார்த்துக்கொள்பவர் வராத வேளைகளில் ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடக்கூடாதே என்று, பப்புவுக்கு விபரம் புரியும்வரை,  அறைக்கதவுகளையும் அவ்வாறே உள்பக்கமாக இழுத்து விட்டிருப்போம்.)

பள்ளியில் என்றில்லை, நண்பர்கள் வீட்டுக்கோ, சினிமா தியேட்டருக்கோ  செல்லும்போதும், பப்புவுக்கு இந்த சொல்லியே அழைத்துச் செல்வது வழக்கம். சீனியருக்கு வந்ததிலிருந்து, பாத்ரூம் போக, உடன் பெரியவர்கள் யாரும் வருவதை, பாத்ரூமுக்கு வெளியில் நிற்பதை பப்பு விரும்புவதேயில்லை. அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 'உள்ளே லாக் பண்ணிக்கக் கூடாது, தாப்பா போட்டுட்டு கதவை சாத்திக்கோ' என்று சொல்லிவிடுவது.

மாலாவும், பப்புவும் ஒருநாள் ஒன்றாக பாத்ரூமுக்குச் சென்றிருக்கிறார்கள். பப்பு சென்றதும், அவள் சாத்துவதற்கு முன்பாக மாலா வெளியிலிருந்து கதவை  பூட்டிவிட்டிருக்கிறாள். வராந்தாவிலேயே ஒரு ஆயாம்மா எப்போதும் இருப்பார். அப்போது பார்த்து அவர் இல்லை. திகைத்துப் போய், கதவை தட்டி க‌த்திய பப்புவை சில நிமிடங்களிலேயே ஆயாம்மா வந்து கதவை திறந்துவிட்டிருக்கிறார்.

அதிலிருந்து மாலா என்றாலே பப்புவுக்கு கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்! 'மாலா, பாதியிலதான் சீனியருக்கு வந்தா....யாரும் அவளுக்கு ஃப்ரெண்ட் இருக்கலன்னு நான் ஃப்ரெண்டா இருந்தா, அவ என்ன பண்ணா? பாத்ரூமில வைச்சு லாக் பண்ணலாமா?" என்று ஒரே பொருமல்.

மாலாவும் பப்புவின் பள்ளிதான். ஸ்பெஷல் சைல்ட். பப்புவின் பள்ளியில், ஸ்பெஷல் சில்ரனை சேர்த்துக்கொள்வார்கள். அவளது வகுப்பிலேயே ஏற்கெனவே இரு குழந்தைகளை பார்த்திருக்கிறேன். ஆரம்பத்தில், அவர்களுக்கு தனியாக ஒரு அறையிலும், குறிப்பிட்ட நாட்களுக்குப் பின்னர் அவர்களிடம் மாற்றம் தெரிந்ததும் ஏற்ற வகுப்புகளில்  சேர்த்துக் கொள்வார்கள். அதன்படி, மாலா, இடையில் சீனியருக்கு மாற்றப்பட்டிருந்த குழந்தை. பப்புவுக்கு என்றில்லை, அந்த வகுப்பில் இருப்பவர்களுக்கு அதெல்லாம் தெரியாது. குழந்தைகளைப் பொறுத்தவரை,  அவர்கள்  இடையில் வந்து சேர்ந்தவர்கள். 

ஆனால், பாத்ரூமில் லாக் செய்வதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமுமில்லை. அது எந்த குழந்தையாகவும் இருக்கலாம். ஆனால், பப்புவுக்கு இதெல்லாம் புரிந்திருக்கவில்லை. அவளைப் பொறுத்தவரை, 'எல்லாரும் மாலாவை லஞ்சுக்கு சேர்த்துக்கல, நானும் விலாசினியும், புவனும் எங்க பக்கத்துல அவளுக்கு மேட் குடுத்தோம். என்னை ஏன் லாக் பண்ணனும்?" என்றே சொல்லிக் கொண்டிருந்தாள். 'தெரியாம பண்ணியிருப்பா, அதுக்காக அதையே நினைச்சுட்டிருப்பாங்களா, அதெல்லாம் உடனே மறந்துடணும்.' என்றாலும் ம்ஹூம்.

நல்லவேளையாக, பள்ளியில் இதனை நன்றாக ஹேண்டில் செய்திருந்தார்கள். இப்படி நடந்ததை எனக்கு அன்று மதியம் போன் செய்து சொன்னார்கள். அவளை அழைத்துப் போக வந்திருந்த மாலா அம்மாவிடமும் சொல்லியிருக்கிறார்கள்.  அவர், அங்கேயே அழுதுவிட்டதாக அடுத்த நாள் ஆயாம்மா சொன்னதைக்கேட்டு கஷ்டமாக இருந்தது. மாலாவின் அம்மாவை சந்திக்க நினைத்தேன். ஆனால், காலையில் நான் செல்லும் நேரமும், அவர் வரும் நேரமும்  சந்திக்க ஒத்துவரவில்லை. மாலையிலோ, அவரும் அதே பள்ளியில் மான்டிசோரி பயிற்சிக்காக சேர்ந்திருந்தார்.

அதற்குப்பிறகு, மாலாவும் பப்புவும்  சகஜமாகவே இருந்திருக்கிறார்கள். அடுத்த சில வாரங்களில் ஆபீசில் இருக்கும்போது பப்புவின் பள்ளியிலிருந்து போன்.
அவளது பள்ளியிலிருந்து போன் என்று பார்த்தாலே எனக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும். 'என்ன ஆச்சோ' என்றுதான். மாலா சௌக்கியை எடுத்துகொண்டு வந்து நேராக பப்புவை தலையில் இடித்திருக்கிறாள். 'ரத்தம் எதுவும் வரவில்லை. நெற்றியில்தான் வீக்கம். ஐஸ் வைத்தபிறகு ஒன்றுமில்லை. கவலைப்படவேண்டாம்' என்றார்கள். எப்படி கவலைப்படாமலிருப்பது?!! சௌக்கி என்பது டெஸ்க் போல இருக்கும். அன்று சீக்கிரம் கிளம்பி வீட்டுக்குச் சென்றுவிட்டேன். நல்லவேளையாக  பயப்படும்படி ஒன்றுமில்லை. அதிலிருந்து பப்புவையும் மாலாவையும் வகுப்பில் தூர தூரமாக உட்கார வைப்பதாகவும்  சொன்னார்கள்.  அதன்பிறகு, லஞ்சில் மட்டும் மாலாவோடு சேர்ந்துக்கொள்வதாகவும், சாரி சொல்லி ஃப்ரெண்ட்ஸ் ஆகிவிட்டதாகவும் பப்பு சொல்லியிருந்தாள்.

ஆனால், மனதில், பாத்ரூமில் லாக் செய்த தாக்கம் மட்டும் பதிந்துவிட்டிருக்கிறது.  அந்த மாலாதான், நோட்டுப்புத்தகங்களை கைகளில் வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

'ஹாய் மாலா' என்றதும், அவளும் 'ஹாய்' என்றாள்.

லீவுக்குப் ஊருக்குப் போனது பற்றி எல்லாம் பேசி முடித்தோம். அதற்குள், அவரது அம்மா யூனிஃபார்ம் வாங்கிகொண்டு வந்திருந்தார். எனது முறையும் வந்திருக்கவில்லை.

'அம்மா, அவதான் குறிஞ்சி, பாத்ரூம்ல லாக் ' என்று அம்மாவிடம் சொன்னதும், அவர், "சாரி சொன்னியா? சாரி சொல்லு" என்று என்றார்.

"இட்ஸ் ஓகே, மாலா, அதெல்லாம் போன வருசம்தானே....குறிஞ்சி வீட்டுக்கு வரியா ஒருநாள்?" என்றேன்.

மாலாவின் அம்மாவிடம் பேசிக்கொண்டிருக்கும்போது எனது முறை வந்தது. விடைப்பெற்றுகொள்ளும்போது, மாலாவும், 'நீங்க எங்க வீட்டுக்கு வாங்க' என்று அழைத்தாள்.


அவளிடம் 'பை' சொல்லிவிட்டு யூனிஃபார்ம் வாங்கினோம். நோட்புக்குகள் வாங்க காத்திருக்கும்போது, பிரம்மி ,தந்தையுடன் கடந்து சென்றாள். சென்ற வருடம், அவளது டான்ஸ் ஸ்கூலிலிருந்து ஒரு ஃப்ளையரை கொண்டு வந்து கொடுத்து 'குறிஞ்சியை சேர்த்துவிடுங்க ஆன்ட்டி' என்று சொல்லியிருந்தாள்.

திரும்பி வரும்போது, பப்புவிடம்,

"ஹேய், பிரம்மி என்னப்பா, நல்லா ஒயரமாயிட்டா!!" என்றேன்.

"இல்ல ஆச்சி, அவ என்னோட குள்ளம்" பப்பு

" அப்படியா? ஆனா, லீவ்ல ரொம்ப ஒல்லியாகிட்டா, குண்டா இருப்பாளே!"

"ஆச்சி, இப்ப நீ சப்பாத்தி மாவு உருட்டறேன்னு வச்சிக்கோ, ஃபர்ஸ்ட் உருண்டையா  குண்டா இருக்கும்.... அப்புறமா, உருட்டனா நீட்டா ஒல்லியாதானே ஆகும்...அதுமாதிரிதான், குட்டி வயசுல, குண்டா, குள்ளமா இருந்தா. இப்ப, ஒல்லியா நீட்டா ஆகிட்டா."

அவ்வ்வ்வ்வ்வ்!! என்னவொரு interpretation!!

Thursday, June 13, 2013

பப்பு டைம்ஸ்

"ஆச்சி, வளைஞ்சி வளைஞ்சி போகாதே!" ‍-  பப்பு

டூ வீலர்ல பப்புவை ஸ்கூலுக்கு கூப்பிட்டுட்டு போகும்போது, கொஞ்சம் வளைஞ்சு பை பாஸ் பண்ணி சிக்னல்ல முன்னாடி போய் நின்னுட்டேன்.

"ஏன்? காலை இடிச்சுக்கிட்டியா?" - மீ

"இல்ல...வளைஞ்சு வளைஞ்சு போகாதே!" - பப்பு

"வளைஞ்சு போனா என்ன?" -  மீ

"வளைஞ்சு போனா குட் மேனர்ஸ் கிடையாது." - பப்பு


"..?!!.."

" நீ இப்ப க்யூல இருக்க. யாராவது வந்து உனக்கு முன்னாடி போய் நின்னா எப்படி இருக்கும்? குட் மேனர்ஸா அது? அது மாதிரிதான், பைக் பின்னாடி நாம இருந்தா, அது போனதுக்கு அப்புறமாதான் நீ போகணும். நீ வளைஞ்சு போனா அவங்களுக்கு எப்படி இருக்கும்?!" - பப்பு

"........" (அவங்களுக்கு எப்படி இருக்குமா?....நமக்கு லேட் ஆகிடும்.. மகளே!!அவ்வ்வ்  - மைன்ட் வாய்ஸ்!)

"உனக்கு ஸ்கூல்ல என்ன சொல்லி குடுத்தாங்க...சொல்லு...உனக்கு ஸ்கூல்ல என்ன சொல்லி குடுத்தாங்க....!" - - பப்பு

நான் ஏன் வாயை திறக்கறேன்?!!

போன வருசமெல்லாம், திடீர் திடீர்னு சில பைக் நம்பர்களை கொடுத்து போலீஸ்கிட்ட சொல்லு, சொல்லுன்னு ஒரே அட்டகாசம்.என்னன்னா, அவங்க எல்லாம், பைக்லே ஹெல்மெட் போடாம போனவங்களாம்.  காலையில பார்த்ததை மனப்பாடம் பண்ணி சாயங்காலம் நான் ஆஃபீஸ்லேருந்து வந்ததும் இந்த பஞ்சாயத்து நடக்கும்! இந்த வருசம் இப்படி ஆரம்பிச்சிருக்கு!!

ஆம், பப்புவுக்கு பள்ளிக்கூடம் திறந்துவிட்டது!

மாலையில், வீட்டுக்குச் சென்றதும் பப்புவிடம் 'எப்படி இருந்துச்சு ஃப்ர்ஸ்ட் டே?" என்றேன். வழக்கமாக சில சோகங்கள் இருக்கும். பழைய நண்பர்கள் பள்ளி மாறிச் சென்றிருப்பார்கள். ஆன்ட்டியும் மாறி இருப்பார்.  ஆயாம்மாவும் வராமல் போயிருப்பார். இப்படி, ஏதாவது ஒன்று இருக்கும். இந்த முறையும் அப்படி சில நண்பர்கள் பள்ளிக்கூடம் மாறிச் சென்றிருக்கிறார்கள். இப்போ எனக்கு, '16 ப்ஃரெண்ட்ஸ்தான்' என்றாள், சிரித்தபடி. ஹப்பாடா!!

"அப்புறம், ஆன்ட்டி என்ன சொன்னாங்க உங்களுக்கு? , பிரேயர்லே" என்றேன்.

"நான் ஒரு நியூஸ் சொன்னேன் இல்ல...அதைதான் இவங்களுக்கு  ஆன்ட்டி இன்னைக்கு சொல்லியிருக்காங்க. அதாம்மா, ஒரு பொண்ணு, +2 படிக்கிற பொண்ணு, டீவி பார்த்துக்கிட்டே  இருந்திருக்கு. அவங்க அம்மா அப்போதான் மளிகை சாமான் வாங்கிட்டு வந்து ஹால்ல வைச்சிருக்காங்க. அது டீவி பார்த்துக்கிட்டே பெப்சிபாட்டிலை திறந்து குடிச்சிடுச்சுன்னு சொன்னேன் இல்ல"  என்றார் பெரிம்மா.

அது  பாட்டிலில் பெப்சி இல்லை. அதில் இருந்தது ஆசிட். அந்த பெண்ணை இறுதியில் காப்பாற்ற முடியாமல் இறந்துவிட்டாள். :- ( பெரிம்மா சொல்லி இந்த செய்தியை கேட்டிருந்தேன். அதைதான் ஆன்ட்டியும், அவர்களுக்கு பள்ளிக்கூடத்தில் சொல்லி அறிவுரை கூறியிருக்கிறார். என்ன அறிவுரை கூறியிருப்பார்? "டீவி பார்த்துக்கிட்டே சாப்பிடாதீங்க, அப்புறம் நீங்க என்ன சாப்பிடறீங்கன்னே தெரியாது." என்றுதானே சொல்லியிருப்பார்!

ஆன்ட்டி சொன்னதாக பப்பு சொன்னதை கேட்டு பெரிம்மா கொஞ்சம் கலங்கிதான் போய்விட்டார். இருக்காதா பின்னே?!

"அந்த அக்கா மாதிரி கம்ப்யூட்டர்(!) பார்த்துகிட்டு நீங்களே சாப்பிடாதீங்க. நீங்க கம்ப்யூட்டர் பார்க்கும் போது, வீட்டுல யார் இருக்காங்களோ அவங்களை ஊட்டி விட சொல்லுங்க.  நீங்களே சாப்பிடக்கூடாது. அப்பதான்,  தப்பு நடக்காது!!" ‍ அப்படின்னு ஆன்ட்டி சொன்னாராம்.

அவ்வ்வ்வ்வ்!!

ஆமா, குழந்தைகளைத்தான் சாட்சி சொல்ல கோர்ட்டில் கூப்பிடுவார்களாமே, அந்த வழக்கம் இன்னும் இருக்கிறதா என்ன? :-)


Monday, June 10, 2013

My Little trip to the Fort Museum - By Pappu

First, we got ready in our house. Because, we are going for a little trip. To the Fort museum. We took an auto and went to the Guindy Railway station. There was a queue. I and my mother got the tickets.I asked my mother if it is the AC train. And, went on the train.

The train started moving. The train was filled with people. Last but second is our station.
On the way, we saw my mother's office. Do you know what color is her office? Great!! Pink color!
It went off by the window. And, the next stop was our station. We got off the train and walked on the road.

And I was so happy to walk. but, my mom said, 'let us take an auto'. I said, 'yes. we will'.
My mother did a dangerous thing. There was a man hole and she jumped on that. We took an auto.The auto man asked us Rs.40.

We went to Museum. I was in joy. My mother turned that side. What did I do, do you know?
I danced in joy.  To get inside, we gave the money. We went into the first room. We saw little mortars,canons,bombs.

It was not ours. It was British people's.

I can not believe my eyes. I saw chain bombs. I wish to touch them.
But there was glass in between. We can not touch it. Then my mother said. " We should only see the things thru eyes".

We went inside further. There we saw knifes. I was so scared. There I saw swords. I was thinking, How can those people  lift such heaviest swords? It was too heavy. I thought, I can see it  again, when I become big girl. I loved the musuem. 

I wish to stay there for a long time. But, I should go to my home.

We saw two statues of British soldiers. I was angry. Why can not they display Indian people?
We saw some British people's  dresses. I asked my mother I asked my mother, if it was ours or British men's?My mother said,  "It is British Men's Uniforms". And,we saw more Medals. In the Medals we saw Queen Victoria's face. It was made of gold.

We went upstairs. And I walked very joyously. We saw more things. What?I will prove it to you.
We saw coins, tiny tiny coins with more designs. You can not see them anywhere.You can not remember the designs.  There were more designs. We saw, Indo-french,Indo-Portuguese,Indo-dutch and coins of Tipu. We went to the next room.  It was also filled with coins with more designs. Happily, I walked.

Next Room, had photos. (Portraits!). I liked 3 queens. I want their make ups, I wish. What? I will prove it. It is queen Victoria, Queen Alexandra and Queen Mary. I remembered of a story in that name.   We sat on the king's chair.

Next we went upstairs. There we saw our freedom fighters. And I thought I should love that period. I wish to fight with British with no blood from my body. But it can not . Still, am happy now too.
Because, the scientists have found more things for us now.


We went to next room. There, we saw first Indian flag. I did a mistake. Can not proove it to you. My mother hit me.  She hit me, because I saluted the flag with left hand.I slapped her. But, nobody see us. And, I pinched her. I am still happy. I was sad inside, not outside.And, the flag is from  1947th year. And I was in joy and bit bored.


There was freedom fighters name list and we read that. I found out my great great granny's name. She was my great grandma's Mother. I thought ,she was little beautiful. My great grand ma has told me many stories about her mother. I was happy, My great grandma's Mother was there in the list. Her name was Anjalai ammal. If you go, you can also see.

When I become  a big girl, With my Mother I will find more things.

And, there was my favorite people. Rani of Kittur, Rani of Jhansi!!  My mother asked me to read more names. I read. Then we came down. We actually forgot to see one room there. There was plates, tea cups, jugs and more and more things I love. We saw them and walked.

There was a little map.We saw the king had named it. It had been like Island, filled with water. Now there is no water.  Because , so sunny in May and June. We loved that day. We came out and we walked. My mother said, " I will take photos". I acted like Running.There was a big Mandapam. We came out of the Museum and gone back to Home..

 குறிப்பு:பப்பு சொல்ல சொல்ல நான் எழுதியது. பப்புவுக்கு மியூசியங்கள் சென்று பார்ப்பது, அவற்றை அறிந்துக்கொள்ள முற்படுவது பிடித்தமான, மகிழ்ச்சியான‌ ஒன்று.வழக்கமாக,மியூசியத்துக்கோ, புது இடத்துக்கோ சென்று வந்தால், அவளை எழுதச் சொல்வேன். இந்த முறை, டைப்படிக்கும் அளவுக்கு இருந்ததால் பதிவில். இங்கு அவள் மேப் என்று குறிப்பிடுவது, ஜார்ஜ் கோட்டையின் முழு மாதிரி வடிவம். கோட்டை மியூசியம் நிச்சயம் காண வேண்டிய ஒன்று. ஆறு வயதுக்கு மேல் இருக்கும் குழந்தைகளுக்கு ஓகே!

Friday, June 07, 2013

பப்புவும் டர்க்கிஷ் பூனையும்

"அக்கா, பேசாம பப்புவை தியேட்டர் ஆர்டிஸ்ட் ஆக்கிடு" என்றான்  தம்பி.

அன்று காலையில்தான் ஊரிலிருந்து  வந்தவனை, 'டர்க்கிஷ் கேட்' வாங்கி யிருக்கிறோம் என்று  நம்ப வைத்திருக்கிறாள்.  பப்புவை, அவளது குறும்புத் தனத்தை, பார்த்தவர்கள் சிலர் அடிக்கடி அப்படி சொல்லக் கேட்டிருக்கிறேன். பயங்கரமாக கதை விடுவாள். அப்படியே,அவள் சொல்வதுதான் உண்மை என்பது போல் நடிப்பாள். அவளைப் பற்றி எங்களுக்கு நன்றாகத் தெரியும் என்பதால் நாங்கள் ஒன்றும் பெரிதாகக் கண்டுக்கொள்வதில்லை. (அவள் சொல்வதை நம்புவதாக அவளையே நம்ப வைத்துவிடுவோம்!) ;‍-) எல்லாக் குழந்தைகளும் அப்படித்தானே இருக்கின்றன, இப்போதெல்லாம்!!

 ஆனால், மற்ற சில உறவினர்களோ, 'நல்லா பொய் சொல்லுது' என்றோ 'இப்பவே பொய் சொல்ல நல்லா கத்து வைச்சிருக்கு' என்றோ சொல்வதுண்டு. இன்னும் சிலர், கொஞ்சம் மேலே போய், 'எல்லாம் அவங்க அம்மா சொல்லி கொடுத்திருக்கு' என்பார்கள்! இதில், உண்மை என்னவென்றால், அவள் சொல்வது பொய் என்றே அவளுக்குத் தெரியாது.

அவள் எதை நம்புகிறாளோ, கண்ட கேட்டவற்றிலிருந்து மனதில் பதிந்த தைத்தான் சொல்கிறாள். நாங்கள் அதை தடுப்பதில்லையே தவிர‌, அவளது கற்பனைத்திறன் என்றே  புரிந்துக்கொள்கிறோம்.. தவிர 'அவள் பொய் சொல்கிறாள்' என்று மற்றவர்கள் சொல்வதையெல்லாம், (இப்போது வரை) பப்புவை அண்டாதவாறுதான்  பார்த்துக் கொண்டிருக்கிறோம்.இப்போது சொல்ல வந்தது, அதைப்பற்றியல்ல.

தம்பி அப்படி சொன்னபோது பப்புவும் அருகிலிலிருந்ததால், "முதல்ல ஸ்கூல்ல நல்லா படிக்கணும், அப்புறம் காலேஜ் போகணும், இதெல்லாம் ஹாபியா வைச்சுக்கலாம்" என்று 'ஆயா எனக்கு ஓதியது' மாதிரி நானும் ஓதி வைத்தேன்.

தம்பியும், "ஆமா, அப்புறம் வேலைக்கு போகணும், சம்பாரிக்கணும், கல்யாணம் பண்ணிக்கணும், அப்புறம் குழந்தையை வளர்க்கணும், வீக் என்ட் எப்போ வருது பாக்கணும்," என்றான்.

அவன் சொன்னதைக்கேட்டு நான் சிரித்துக்கொண்டிருந்தேன். பப்புவோ, 'கல்யாணம் வேணாம் மாமா' என்றாள். 

"ஹேய், உனக்கு யாரு இப்ப கல்யாணம் பண்றேன்னு சொன்னது?" என்றதும் "இல்ல, மாமாவுக்கு கல்யாணம் வேணாம்ன்னு சொன்னேன்" என்றாள் பப்பு.

"மாமாவுக்கு  கல்யாணம் வேணாம்னா மாமாதான் சொல்லணும்;நீ ஏன் சொல்றே " என்றேன்.

"மாமா, கல்யாணம் பண்ணிக்காதீங்க மாமா' கல்யாணம் பண்ணிக்காதீங்க மாம" என்று  விடாமல் சொல்லியபடி அவனது கையை பிடித்துத்தொங்கி ஊஞ்சல் மாதிரி ஆடிக்கொண்டிருந்தாள். எங்களுக்கோ ஒரே சிரிப்பு தாங்கமுடியவில்லை!! நடுவில், தம்பி வேறு, 'எல்லாம் உன் வேலைதானா' என்பது மாதிரி என்னைப்பார்த்தான்.

"ஹேய், பப்பு, மாமாவுக்கு கல்யாணம் வந்தா நாம புது புது ட்ரெஸ் வாங்கிக்கலாம்!  உன் ஃப்ரெண்ட்ஸ்ல்லாம்  மாமா கல்யாணத்துக்கு கூப்பிடலாம்,அப்புறம், பிரியாஆஆஆஅணி!! எப்பூடி...ஜாலியா இருக்கும் இல்ல?" என்றேன்.

"அதெல்லாம் ஒரு நாளைக்குத்தான்! அப்புறம் போர்!" ‍ பப்பு!!

அவ்வ்வ்வ்வ்!! போரா?!! இந்த அதிர்ச்சியை வெளிக்காட்டிக்கொள்ளாமல்,

"போரா?? யாருக்கு போர்? எவ்ளோ ஜாலியா இருக்கும், பப்பு? மருதாணி எல்லாம் வைச்சுக்கலாம்" என்றேன்.

"ஆமா, போர்தான்! மாமாவுக்கும் அவங்க வைஃப்புக்கும்தான்!!" ‍ என்று சொல்லிவிட்டு, மாமாவின் கையை பிடித்து தொங்கி தொங்கி ஆடிக்கொண்டிருந்தாள்.....

கூடவே,  "மாமா, கல்யாணம் பண்ணிக்காதீங்க மாமா, கல்யாணம் பண்ணிக்காதீங்க மாமா" என்று சிரித்து சிரித்து  சொல்லிக்கொண்டு!!

"க்கா, இதெல்லாம் உன் ட்ரெயினிங்கா"  என்றான் தம்பி என்னைப்பார்த்து.

"டேய், நான் எதுவும் சொல்லிக்கொடுக்கைலைடா,என்னை சந்தேகப்படாத‌" என்றாலும் அவன் நம்பவேயில்லை!

எதிர்காலத்தை நினைத்தால் பயமாயிருக்கிறது!! அவ்வ்வ்வ்வ்வ்!!

Sunday, June 02, 2013

"ஆமந்தொரக்கி போயிரிக்கியளா?"


'இப்பத்தாம் ஆமந்தொரயிலேந்து வாறம்...கட எரச்ச இன்னம் காதுல வுழுந்துக்கிட்டிரிக்கி' ;-)

ஆமந்துறை எங்கே இருக்கிறது என்று தமிழ்நாடு வரைபடத்தில் தேட வேண்டாம். அது ஜோ டி குருஸின் 'ஆழி சூழ் உலகில்' இருக்கிறது. ஒரு தென் தமிழக கடற்கரையோர மீனவ கிராமத்தை யாரும் அறியாத, பொதுவாக பலருக்கும் தெரியாத எல்லா வண்ணங்களோடும் இந்த நாவல் காட்டுகிறது.. ஆமந்துறையின் எண்ணற்ற மனித முகங்களை, அவர்களது வாழ்க்கைப் பாடுகளை, கடலை, அதன் அலைவாய்கரையை, கடலின் மணலை முப்பரிமாணத்தில் அறிமுகப்படுத்துகிறது'ஆழி சூழ் உலகு'.

ஆரம்பத்தில் நாவலில், வரும் வார்த்தைகள் தமிழாக இருந்தாலும் ஒன்றுமே புரியாதது போல இருந்தது. 'அணியம், சோழ வெலங்க, ஆழி, பருமல், மாசா, கத்து,ஓங்கல்கள்,பணிய, சம்பை,மேற்றிராசனம்' அவர்கள் பேசும் மொழியே அந்நியமாக  இருந்தது. ஒரு சில பக்கங்களுக்குப் பிறகு ரொம்ப பரிச்சயப் பட்டதாக மாறிவிட்டது. நாவலின் கடைசி பக்கங்களில் கொடுக்கப்பட்ட அருஞ்சொற் பொருள் விளக்கம்  இல்லையென்றால் கொஞ்சம் கடினம்தான்! கிட்டதட்ட நான்கு தலைமுறைகள் வழியாக காலப்போக்குகள், நிகழ்வுகள் சொல்லப் பட்டிருக்கின்றன. ஆனால்,  ஆங்காங்கே பொதியப்பட்டிருக்கும் நுணுக்கமான‌ தகவல்கள் பரதவர்களின் நூற்றாண்டுகால வரலாற்றையே பதிவு செய்ததாக இருக்கிறது.

கன்னியாகுமரியின் பெயர் காரணம் நாம் எல்லாருமே அறிந்ததுதான். சமீபத்தில், எங்கோ வாசித்திருந்தேன், கன்னியாகுமரியைத் தாண்டி இருந்த நிலப்பரப்பு கடலால் அழிந்தபோது குமரியின் முனையில் அலைவாய் க்கரையில்  தன் காதலனுக்காக‌ காத்திருந்த பெண்ணே  பிற்காலத்தில் கன்னியாக்குமரி அம்மனாக மாறினாள் என்று. அதை வாசித்ததிலிருந்து, ஒரு இளம்பெண் கடலை நோக்கி காத்திருப்பது போன்ற சித்திரமே என் மனதில் பதிந்திருந்தது.  கடலோடு கலந்த அந்த குமரிப் பெண்தான் முதல் பரத்தி என்கிறது இந்த நாவல். பரதவர், அவளைத்தான் தம் குலமகளாக் எண்ணுகின்றனர். கடலை அந்த அம்மனாகவே காண்கின்றனர். கடலின் பெரிய மீன்களும் அந்த சக்தியின் சத்தியத்துக்கு கட்டுபடுவதாகவே நம்புகின்றனர். எளிய நாட்டுப்படகுகளிலும், கட்டுமரத்திலும் சென்றாலும்  எந்த பெரிய மீன்களும், மீனவர்களை அந்த சத்தியத்துக்கு கட்டுபட்டு, எதுவும் செய்வதில்லை.

அதிலும், ஓங்கல்கள் பரதவர்களின்/மனிதர்களின் நண்பன் என்றே நம்புகிறார்கள். கடலில் தவறி விழுந்துவிட்டாலும் சுறா மீன்களிடமிருந்து அவர்களைக் காப்பாற்றுவது இந்த ஓங்கல்கள்தான். அதனாலேயே, இந்த ஓங்கல்களை பிடிப்பதோ,உண்பதோ இல்லை.ஓங்கல்கள் என்றால் டால்பின்கள். பரதவர்களின் மகத்தான பெண் தெய்வ நம்பிக்கையை, கண்டுகொண்ட பாதிரிகள் கடலை அன்னை மேரியாக உருவகப்படுத்தி கிறிஸ்தவ மத நம்பிக்கையை விதைத்திருக்கிறார்கள்.


இந்த நாவல் நிகழும் களம் ஆமந்துறை. இந்த ஊர் கற்பனையே என்று நினைக்கிறேன். நாவல்படி, இந்த ஊர் கூத்தந்துறைக்கும் கூடங்குளத்துக்கும், மணப்பாட்டுக்கும் இடையில் கடல் உள் வாங்கியபடி அமைந்திருக்கிறது. இங்கு ஆமைகள் கோடையில் முட்டையிட வரும். மேலும், கடலிலிருந்து திரும்பும் பரதவர்களுக்காக கடற்கரையில் ஆமையின் ஓடுகளில் விளக்கேற்றுவதாலும் இந்த பெயர் வந்திருக்கலாம். இந்த ஆமந்துறையில், தொம்மந்திரையின் சிறாப்பாறு பயணத்திலிருந்து ஆரம்பிக்கும் கதை, சிலுவையின் திசை மாறிய பயணம் வரை திகில்களோடு, சுவாரசியம் குன்றாமல் பயணிக்கிறது!


இந்த நாவலை வாசித்தபோது, பப்புவோடு நானும் நீச்சல் கற்றுக் கொண்டிருந்தேன். 4.3 அடி ஆழ தண்ணீரே எனக்கு மூச்சு மூட்டவும், நீரின் அழுத்தத்தை உணரவும் போதுமானதாக இருந்தது.  கழுத்தளவு தண்ணீரே உடலை அழுத்துவது போலவும், தலையெல்லாம் கிறுகிறுத்தது போலவும் இருந்தது. ஓரளவு நீந்த கற்றுக்கொண்டு ஒரு முழு லாப் செய்யும்போதோ தலையெல்லாம் வலித்து என்னென்னவோ செய்து வயிற்றைப் பிரட்டிக் கொண்டு வந்தது. இத்தனைக்கும்  நினைத்தால் எட்டிபிடித்து நடந்துவிடும் தூரத்தில்தான்  தரை. ஒரு செயற்கையான தண்ணீர்தொட்டிக்கே இப்படியென்றால், பிரமாண்டமான கடலின் மீது, சுழித்துக்கொண்டு ஓடும் வாநீவாட்டுக்கும் சோவாநீவாட்டுக்கும் இடையில் , வாழ்க்கைக்கு போராடும் இந்த சின்னஞ்சிறு மனிதர்களை நினைத்தால் வியப்பும்,நெகிழ்ச்சியுமாக இருக்கிறது.  ஒவ்வொருநாளும் கடல் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. மணலும் மாறுகிறது. கிடைக்கும் மீன்கள் வித்தியாசப்படுகின்றன. அதோடு, அவர்களின் வாழ்க்கையும்!

பக்கத்து மீன்பரவ கிராமத்தினர் விரோதம், கிராமத்தில் நடக்கும் உட்பூசல்கள், கமுட்டிகளின் நியாய அநியாயங்கள், போதாததற்கு சுரண்டி பிழைக்கும் பாதிரிமார்கள், வெட்டு குத்து என்று முரட்டுத்தனங்களோடு ஆதரிக்க யாருமற்று எவர் வந்தாலும் அன்பாக அணைத்துக்கொள்ளும் போக்கு என்று ரத்தமும் சதையுமாக ஆமந்துறை மக்களின் வாழ்க்கை விரிகிறது. வாசிக்க வாசிக்க எவ்வளவு பெரிய உழைப்பை கோரியிருக்கிறது, இந்த நாவல் என்ற‌
வியப்பே மேலிடுகிறது. பிரமாண்டமான கடலைப் போலவே  பிரமாண்டமான நாவல்!பரதவர்கள், மீன்பிடித்து வரும்போது, கிராமத்தவர்கள் ஒமலிலிருந்து தங்கள் தேவைக்கு எடுத்துக்கொண்ட பிறகே விற்பனைக்கு வருகிறது. இதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு. இதற்கு, கப்பலில் வேலை செய்து வசதியாக வாழ்பவர்களும் விதிவிலக்கல்ல. இந்த வழக்கத்தை நினைத்து ரொம்ப ஆச்சரியமாக இருந்தது.உயிரை பணயம் வைத்து பிடித்து வந்த  பொருளை சும்மா கொடுக்கும் வழக்கம் சமவெளி சமூகத்தினரிடையே இருக்கிறதா வென்று தெரியவில்லை. அதோடு, முடி எடுப்பவர்களுக்கும் அப்படி உரிமை உண்டு. அதோடு, அவர்களுக்கு பட்டும் நகையும் கொடுக்கும் வழக்கம் இருந்திருக்கிறது.
 
பரதவர்களுக்கும் நாடார்களுக்கும் இருக்கும் வியாபார ரீதியான உறவு, கொழும்பிலிருக்கும் உறவினர்களை சந்திக்க வசதியாக வரும் கச்சத்தீவு  திருவிழா,அரசாங்கத்தின் சலுகைகள் எதையும் பெற இயலாமல் செய்கின்ற
அதிகாரிகள், காகு சாமியாரின் தொலைநோக்குப் பார்வையால் சூடுபிடிக்கும் றால் ஏற்றுமதி, திராவிட கட்சிகளின் மாநாடுகள், அவற்றின் போராட்டங்கள், அரசியல்வாதிகளின் சுயநலம், தனுஷ்கோடியை சீரழித்த புயல்,காலரா ஊசி,கொழும்பில் சிங்களவர்களுடனான கலவரம் என்று அந்தந்த‌ காலஓட்டத்தின் பின்னணியில் சமூகத்தின் அத்தனை நிகழ்வுகளையும் அழகாக விவரிக்கிறார் ஜோ டி குருஸ்.

அமலோற்பவத்தில் ஆரம்பித்து, மேரி, சூசானா,எஸ்கலின், வசந்தா, சுந்தரி டீச்சர், தோக்களத்தா,அன்னம்மா,சாரா, செலின்,லூர்து,எலிசபெத், மணிமேகலை வரை ஆமந்துறையின் பெண்கள் வலம் வருகிறார்கள். ஏதோ ஒரு விதத்தில் ஒவ்வொருவரும் வஞ்சிக்கப்படுகிறார்கள். மற்றவர்களை வஞ்சிக்கிறார்கள். ஏமாறுகிறார்கள். அடிபட்டும், உதைபட்டும் வலியோடு ஜீவனம் நடத்துகிறார்கள். சில சமயங்களில், ஒருவருக்காக ஒருவர் பரிந்து பேசுகிறார்கள்.தாய் தந்தை இழந்த குழந்தைகளை அரவணைக்கிறார்கள். தியாகம் புரிகிறார்கள். கடலுக்குச் சென்றவர்களுக்காக பதைபதைப்புடன் காத்திருக்கிறார்கள். திரும்பாவிடில் விதவைக்கோலம் பூண்கிறார்கள். ஒரு சுனாமிக்குப் பிறகே கடலை,இயற்கையைப் பற்றி நமக்கு பயம் வருகிறது. கடலையே நம்பிய வாழ்க்கை எனில்? 

மனைவிக்கு துரோகம் செய்யும் கணவன், கணவனுக்கு துரோகம் செய்யும் மனைவி, குழந்தை மீதான‌ பாலியல் துஷ்பிரயோகங்கள், ஆசிரியர்களின் கடும்தண்டனை முறைகள், அதனாலேயே கல்வியை வெறுத்து கடலுக்கு ஓடும் பரதவ இளம்தலைமுறை,கடலில் ஏற்படும் சண்டைகள், கலவரங்கள், இயற்கைச் சீற்றங்களின்போது கிராமத்தை, வீட்டை,ஏத்தனங்களை விட்டு வெளியேறும் அவலம்,சிலுவை கல்யாணம்.....விதம் விதமான மனித உணர்வுகள்!! 


நாவல் முழுவதும் நாம் உணரும் இன்னொரு முக்கியமான கதாபாத்திரம் 'கட'. எதுவும் பேசவில்லையே தவிர கடலின் பேரிரைச்சல் நம் காதுகளில் எப்பொழுதும் விழுந்தவண்ணம் இருக்கிறது. ஜஸ்டினை ஜெயிக்க வைக்கிறது. ஊமையனை மாசாவில் தடுமாறி விழ வைக்கிறது. அவனது உடலை கரையில் ஒதுக்கும் அடுத்தநாளே, ஒன்றுமறியாதது போல சாதுவாக கிடைக்கிறது. சிறுவர்கள் கொல்லம் பழங்களைப் போட்டு, சில்லி எடுத்து விளையாடும் கடலில்தான், வாழ்க்கைக்கும் மரணத்துக்கும் இடையில் இந்த சிறுமனிதர்கள் போராடுகிறார்கள். கதாமாந்தார்கள் ஒவ்வொருவருடனும் கடல் பின்னி பிணைந்து இருக்கிறது. ஒரு மௌன‌சாட்சியாக எல்லா நிகழ்வுகளையும் பார்த்த வண்ணம் அவர்கள் வீட்டு வாசலில் கிடக்கிறது.

நாவலின் சுவாரசியமான இன்னொரு விஷயம் உணவு பற்றிய செய்திகள்!  குதிப்பு மீன் குழம்பு, வாளை,சாளை,மீன் முட்டை பணியாரம் என்று ஆமந்துறையின் உணவு நம்மை சப்புகொட்ட வைக்கிறது. சுறா, மஞ்சப்பொடி கருவாடு எல்லாம் வாசிக்கும்போதே சாப்பிட ஆசையாக இருக்கிறது. கடல் ஆமையின்  ரத்தத்தையும், ஆமை இறைச்சியையும் உணவாக பயன்படுவதை அறிந்தது புதிது!
கோத்ரா,சூசை, சிலுவை இந்த மூவரும் கடல் கொந்தளிப்பில் மரம் உடைந்து நடுக்கடலில் மாட்டிக்கொள்கிறார்கள்.நாட்கணக்கில் தத்தளிக்கின்றனர்.    இவர்களின் ஜீவ மரணப்போராட்டத்தில் வழியே நாவல் விரிகிறது. 'நண்பருக்காக தியாகம் செய்வதே சிறந்தது' என்று காகு சாமியார் சொன்னதை நினைவில் கொண்டு ஒவ்வொருவரும் தத்தம் நண்பருக்காக உயிரை தியாகம் செய்கின்றனர். நாவலும் தியாகத்தையே விதந்து போற்றுகிறது. இறுதியில் சிலுவை மட்டும் கொச்சின் துறைமுகத்தருகே உயிர் பிழைக்கிறான். இந்த மூவரை கிராமத்தவர்களும், மற்ற மீனவ கிராமத்தவர்களும் தேடும் இடம் மிகவும் அருமையானது. மீனவர்கள் காணாமல் போய்விட்டார்கள் என்பது நமக்கு ஒருவரிச் செய்தி மட்டுமே. மொத்த கடலோர கிராமங்களுக்குமே அந்த பதைபதைப்பை பகிர்ந்துக்கொள்கிறார்கள்.யாருடைய உதவிக்கும் காத்திராமல் படகுகளை எடுத்துக்கொண்டு ஒவ்வொருநாளும் கடலில் தேடி அலைகின்றனர்.சில சந்தர்ப்பங்களில் ஒருவரையொருவர் எதிரியாக பார்த்தாலும் ஆபத்தில் பரதவர்களுக்கு பரதவர்களேதான் உதவி செய்துகொள்ள வேண்டும்.

நாவலைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். திருச்செந்தூரிலிருந்து, திருவைகுண்டம்,வீரபாண்டியன் பட்டினம்,தூத்துக்குடி,மணப்பாடு, திசையவிளை,சோதிக்காவிளை,நாரோயில்(நாகர்கோவில்!)குலசேகரன்பட்டினம்,இடையன்குடி,கச்சத்தீவு,தீவுக்கடல், ஆழியிலிருந்து தீவுக்கடல் வரை அவர்கள் தாண்டும் கடற்பரப்புகள், கொழும்பு வரை  நாமும் நாவலுடன் பயணிக்கிறோம்.  நாவலில் கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரும் ஏதாவதொரு பக்கத்தில் மரணத்தைத் தழுவுகின்றனர்.

சாவுக்குப் போய்விட்டு வந்தபின் கடலில் கால்நனைத்து வீடு திரும்புவது, பிடிமண் போடுவது,கடலில் ஓங்கல்கள் அழும் சத்தம் கேட்டு சகுனம் பார்ப்பது.....இப்படி, பரதவர்களின் தொன்மையான நம்பிக்கைகளை நுணுக்கமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 'ஆழி சூழ் உலகை' வாசிக்கும் முன்பாக 'சிப்பியின் வயிற்றில் முத்து' நாவலை வாசித்து திகைத்து போயிருந்தேன்.

கடலை, அதன் மனிதர்களுடன் சமூக நோக்கில் விவரிக்கும் நாவல் அது. ஒரு வங்காள எழுத்தாளர் நமது தமிழக கடற்கரையோர கிராமங்களைப் பற்றி இப்படி நுணுக்கமாக பதிவு செய்திருப்பது வியப்பாக இருந்தது. அதிலும், மீன்பரவர்களைப் பற்றி நுணுக்கமாக வரலாற்று தகவல்களோடு செறிவாக எழுதப்பட்டிருந்தது. நாவலை வாசித்து முடித்ததும் தூத்துக்குடியின் தெருக்களிலும், முயல்தீவுக்கும், கடற்கரையோரங்களிலும், மணப்பாடு முதல் மன்னார் வளைகுடா வரையிலும் அலைந்து திரிய ஆசையாக இருந்தது.

'ஆழி சூழ் உலகை' வாசித்தபின்போ ஆழிக்கும், சிறாப்பாறுக்கும் கச்சத்தீவுக்கும், ஆமந்துறைக்கும் சென்று வர ஆசையாக இருக்கிறது. ஆழி சூழ் உலகின்' விலையை பார்த்து சிலசமயம் வாங்குவதா வேண்டாமாவென்று யோசனையிலேயே தவிர்த்திருக்கிறேன். இப்போதோ, 'சிப்பியின் வயிற்றில் முத்து' நாவலையும் 'ஆழி சூழ் நாவலையும் வாசித்ததற்காக மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். ஆசிரியரின் அடுத்த நாவல் 'கொற்கை' என்று அறிகிறேன். அடுத்து, கொற்கையை வாசிக்க ஆவலாக இருக்கிறேன்.


விபரங்கள்:

நாவல்: ஆழி சூழ் உலகு,  தமிழினி வெளியீடு
ஆசிரியர்: ஜோ டி குருஸ்
பக்கங்கள்: 558
விலை: ரூ 430

நாவல்: சிப்பியின் வயிற்றில் முத்து, நேஷனல் புக் டிரஸ்ட்
ஆசிரியர்: போதிசத்வ மைத்ராய