Saturday, April 27, 2013

ஏழு ஒரு காலத்துல ஈவன் நம்பரா இருந்திருக்குமா??

பப்புவின் பள்ளியில், விடுமுறையில் செய்வதற்கு வீட்டுப்பாடம் கொடுத்துவிடுவார்கள். ஒவ்வொரு பாடத்திலும், தேதிவாரியாக ஒருநாளுக்கு ஒரு பக்கம் வீதம், குறைந்தது இரண்டுவாரங்களுக்கு. இதற்கு சில பெற்றோர்கள் வந்து சண்டை போடுவார்கள். 'விடுமுறை என்பது குழந்தைகள் விளையாடுவதற்கும் உறவினர்கள் வீட்டுக்குச் செல்வதற்குமே. அப்போது கூட ஹோம்ஒர்க் செய்யவேண்டுமா' என்பது மாதிரி. அவர்கள் கேட்பது நியாயம்தான் என்றாலும்,  ஹோம் ஒர்க் கொடுப்பதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.குறைந்தபட்சம் மறக்காமல் இருக்கவாவது உதவுமே!

அதோடு, தினமும் காலையில் எழுதுவது ஒரு பழக்கமாகவாவது இருக்கட்டுமே என்று நினைத்துக்கொள்வேன். காலையில் படிக்கும் வழக்கம் இப்போதைய  குழந்தைகளுக்கு இல்லவே இல்லைபோல தோன்றுகிறது. காலைபொழுது முழுதும், எழுந்து  கிளம்பவும், ஏழரை/எட்டுமணிக்கே பள்ளிக்குச் செல்லவுமே சரியாக இருக்கிறது. இதில், காலையில், ஃப்ரெஷ்ஷான மனதுடன் படிப்பது என்பதே கேள்விக்குறிதான். இரவில் ஹோமொர்க் செய்வது பெரும்பாலும் அரைத்தூக்கத்தில்! அதிலும், பப்புவுக்கு பேசவே நேரம் சரியாக இருக்கும்!! அதனால், விடுமுறையில் ஹோம் ஒர்க் கொடுப்பது தவறாக படவில்லை.

அப்படி கொடுக்கப்பட்டதில், கணித பாடத்தை செய்துக்கொண்டிருந்தோம். subtraction chart II. அதில் வரும் patterns பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.even number  யிலிருந்து பாதியாக கழித்தால் வரும் எண்கள் அமைக்கும் pattern பாரு, என்று 18 ‍- 9=9, 16-8=8, 14-7 =7.....4-2 = 2 -1 =1 சொல்லிக்கொண்டிருந்தாள்.

சொல்லிவிட்டு, "எனக்கு ஈவன் நம்பர்ஸ்தான் பிடிக்கும் ஆச்சி." என்றாள்.சில தினங்கள் முன்பு அவள் என்னிடம் கேட்டது கிளிக்காகி இருக்க  வேண்டும். என் ஃபேவரிட் நம்பர் என்னவென்று கேட்டபோது, ஏழு என்று சொன்னதும் என்னோட பேவரிட் நம்பரும் ஏழுதான் ஆச்சி என்று சொல்லியிருந்தாள். அது உடனே நினைவுக்கு வந்திருக்க  வேண்டும்.

"பட், எனக்கு ஏழு கூட பிடிக்கும். எப்படி,ஆச்சி? உனக்கும் எனக்கும் ஏழு பிடிக்குது? டி என் ஏ!! இல்ல??"

அவ்வ்வ்வ்வ்வ்.....'ஹிஹி' என்று ஒரு சிரிப்பு மட்டும் சிரித்து வைத்தேன்.

"ஆமா,ஆச்சி, ஏழு ஒரு காலத்துல ஈவன் நம்பரா இருந்திருக்கும்,இல்ல?!!"- பப்பு

(அவ்வ்வ்வ்...எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே!! ம்ம்..டூ மச் ஆஃப் ஃபோர்ட்ஸ்/மியூசியம்ஸ் அன்ட் பேலஸ்சஸ்! 'ஒரு காலத்துல இங்க கப்பல் வந்திருக்கும்'...'ஒரு காலத்துல இங்க ராஜாவும் மந்திரிங்களும் உட்கார்ந்திருப்பாங்க'...'ஒரு காலத்துல இங்க வார் நடந்திருக்கும்'...'ஒரு காலத்துல இங்க பீரங்கி குண்டு விழுந்துருக்கும்' ...ஒரு காலத்துல இங்க முத்துல்லாம் எடுத்திருப்பாங்க!...) அது மாதிரி ஒரு காலத்துல ஏழு கூட ஈவன் நம்பரா இருந்திருக்கும்தானே! :‍-))

Tuesday, April 23, 2013

பப்புவும் கண்ணகியும்

பப்புவுக்கு கண்ணகி கதையை சொல்லியிருந்தோம். கேரளாவுக்குச் சென்றபோது, அருகில் கண்ணகி கோயில் இருப்பதாகவும், அங்கு செல்ல வருடத்தில் ஒருமுறை மட்டுமே அனுமதிப்பதாகவும் சொல்லியிருந்தார்கள். சமீபத்தில், அண்ணா சாலை வழியே வரும்போது கண்ணகி சிலையையும் காட்டியிருந்தேன். எல்லாம் நிகழ்ந்தது ஓரிரு வார காலத்துக்குள்ளேயே! ஆனாலும், கண்ணகி பப்புவை ரொம்பவே டிஸ்டர்ப் செய்து விட்டாள்.

கண்ணகியை பிடிக்கவில்லை என்று ஒரே பொருமல்! தாங்க முடியவில்லை.முக்கியமாக கண்ணகி மதுரையை எரித்ததுதான் அவளால் தாங்க இயலாமல் இருக்கிறது. "அப்புறம், இப்போ எப்படி மதுரை இருக்கு" என்று கேட்டு தெளிவுபடுத்திக்கொண்டு பொருமி தள்ளிவிட்டாள்.

"அவளை யாரு எரிக்க சொன்னாங்க? அவளோட ஹஸ்பெண்ட கொன்னுட்டாங்கன்னா, வேற ஹஸ்பென்ட் வைச்சுக்க வேண்டியதுதானே!!" ‍

அவ்வ்வ்வ் என்று ஜெர்க்காகி, "அவ இவன்னு சொல்லக்கூடாது பப்பு, அவங்கன்னுதான் சொல்லணும்" என்றதும்,

"அவங்க எதுக்கு மதுரையை எரிக்கணும்? அந்த ஊர்லே எத்தனை குழந்தைங்க இருப்பாங்க?அவங்கல்லாம் பாவம் இல்ல? அவங்களும்தானே எரிஞ்சிருப்பாங்க. கண்ணகி, அவங்க அம்மா ஊரை போய் எரிக்க வேண்டியதுதானே?" -  பச்சைமொளகா ரொம்ப கோபத்துடன் படபடத்தது.

சுனாமியில்,போரில்,நில நடுக்கத்தில் குழந்தைகள் பாதிக்கப்படுவது பப்புவால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று!!

"அவங்க அம்மா ஊரை மட்டும் எரிக்கலாமா?"  என்றேன், லாஜிக்காக கேட்டுவிட்ட  பெருமையுடன்! அப்புறம்தான் புரிந்தது,  பப்புவின் எண்ணத்தில், யாரும் தன் அம்மா இருக்கும் ஊரை எதுவும் செய்துவிட மாட்டார்கள் என்பது!!

"அதான், அவங்க அம்மா இருக்க ஊரை எரிக்கலைல்ல? ஆமா, ராஜாகிட்டேருந்து அவங்க நேரா எங்க போனாங்க? வத்திக்குச்சி வாங்க கடைக்கு போனாங்களா? ஏன் வத்திக்குச்சி கொடுத்தாங்க அவங்களுக்கு? குடுத்தே இருக்கக்கூடாது!!" - பப்பு

அவ்வ்வ்வ்வ்வ்!

"எரிச்சுட்டு எங்க போனாங்க?அவங்களை யாரும் திட்டலையா?" - பப்பு

"அதான் எல்லாரும் எரிஞ்சிபோயிட்டாங்களே!எரிச்சுட்டு கேரளா போயிட்டாங்க‌"

"அங்க யாரும் எதுவும் சொல்லலையா?" - பப்பு

"அவங்க, அப்புறம் 'புஷ்பக விமானத்துல' வானத்துக்கு போயிட்டாங்களாம்!"

"ஓ! அதான் இப்போ ஸ்பேஸ் சயிண்டிஸ்ட்ல்லாம்  அவங்களை தேடிக்கிட்டு இருக்காங்களா?!! - பப்பு

எப்படியும், நைட் சாப்பாடு கண்ணகி புண்ணியத்தில் ஓடிவிடும்! :-)

ஐயம் வெரி சாரி இளங்கோவடிகள்! நீதி இப்படி backfire ஆகும்னு எதிர்பார்க்கவேயில்லை!!  ;-) ;-)

Saturday, April 20, 2013

குழந்தைகளைத் துரத்தும் கேள்விகள்

மதியம், பப்புவுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு சாப்பிட அமர்ந்தேன்.

"ஆச்சி, புவன் வந்து ஹர்ட் பண்றான்னு அவனுக்கே தெரியாம என்னை ஹர்ட் பண்ணிட்டான்! "


தொண்டை அடைத்துக்கொண்டது. 'ஹையய்யோ!! நேரடியா சொல்லாம இப்படி சொல்கிறாளே?! ஏதாவது அடிதடியா ?!!' (ஒரு சில முன் அனுபவங்கள் தான்....) அதிலும், ஃப்ரெண்ட்சை மாட்டிவிடுவது/கோள் சொல்வது பப்புவுக்கு பிடிக்கவே பிடிக்காது.  அதே சமயம், அப்படி நடந்ததையும் என்னிடம் சொல்லிவிட‌ வேண்டும்,அவளுக்கு. வேன் நண்பர்களுக்கிடையே வரும் சண்டையை வீட்டில் வந்து சொல்லும் போது, "நான் ஆன்ட்டிக்கிட்டே கேக்கிறேன்/சொல்றேன்" என்று நான் சொல்வது அவளுக்குப் அறவே பிடிக்காது.அப்போது, கதையையே மாற்றிவிடுவாள். :‍-))

"என்ன ஹர்ட் பண்ணான்?"

"he is asking me 'you are rich or poor?'"

ஏற்கெனவே, பப்பு இந்த கேள்வியை எதிர்கொண்டிருக்கிறாள். எல்லாம் அவள் சொல்லித்தான் தெரியும். ஃப்ரெண்ட்ஸ் கேட்டபோது,"நாங்க நார்மல்" என்று சொன்னாளாம். அவர்களும், "நாங்களும் நார்மல்தான்" என்று சொன்னார்களாம்.  இந்த குட்டிப்பசங்களும், அவர்களது கேள்விகளும் /பதில்களும் என்று நினைத்து அப்போது சிரித்ததோடு சரி. இப்போதோ, "இது ஹர்ட் பண்ணிட்டான்"னென்று புதிய வடிவம்!!


it will hurt me right? he do not know that word hurts me.

.....(அவ்வ்வ்வ்)


"அப்படி கேக்கலாமாப்பா?அவனுக்கு தெரியல, அது எனக்கு ஹர்ட் பண்ணும்னு."ஹேய் புவன், why are you asking this?"  ந்னு கேட்டா, "ஹேய் குறிஞ்சி, கேட்டா என்ன?"னு சொல்றான்.he does not know that word will hurt others."

அவ்வ்வ்வ்வ்வ்வ்!! இன்னும் தொண்டையிலிருந்து இறங்கவேயில்லை. அப்படியே விக்கிக்கொண்டது.


"அன்னைக்கு, you are muslim or christian?  ந்னு கேக்கறான். that also will hurt me rite?"


'கொஞ்சம் சாப்பிட விடு, பப்பு! நீ எதுலேருந்து இதை கத்துக்கிட்டேன்னு நான் கொஞ்சம் யோசிச்சுக்கிறேன்!! :‍)' #மைன்ட்வாய்ஸ்

பப்பு, திடீரென்று தன்னை கிறிஸ்டியன் என்று சொல்லிக்கொள்வாள்.
"ஆச்சி, நான் கிறிஸ்டியன். நீ என்ன?" என்பாள்.  'எதுவுமில்லை' என்றால்,  'நீ சீக்' என்று மதம் மாற்றிவிடுவாள்."நான் முஸ்லீமாவே இருந்துடறேன்ப்பா" என்பாள் ஒருநாள். இந்தியாவின் மக்களைப்ப் பற்றியும், திருவிழாக்கள் பற்றியும் படிப்பதாலோ அல்லது 'நாம ஏன் எந்த பெஸ்டிவலும் கொண்டாட மாட்றோம்?" என்ற சந்தேகம் வந்ததாலோ தெரியவில்லை.


மேலும், அவளுக்கு இந்தி படிக்க ரொம்ப ஆசை. பள்ளியில் தமிழ் கிளாசில் இவளையும், புவனையும்,பிரம்மியையும் சேர்த்து மொத்தம் மூன்றுபேர்தான். மீதி அனைவரும் இந்தி. "நான் கிறிஸ்டியன், என்னை இந்தியிலே சேர்த்துவிடு" என்பாள் தமிழ்  வீட்டுப்பாடம் செய்யும் தினங்களில். மொத்தத்தில் நாங்களும், ஒன்றும் சொல்வதில்லை ‍ அவள் கிறிஸ்டியனாகவோ முஸ்லீமாகவோ இருக்கும்போது!   ஆனால், இப்போது புவன், அவளை அப்படி கேட்பது ஹர்ட்டிங்காக இருக்கிறதாம்!! அவ்வ்வ்வ்

"you should not ask this right?that hurted me . ஏன் ஆச்சி, அப்படி கேக்கலாமா மத்தவங்களை?"


"ஆமா, நாம மத்தவங்களை இந்த மாதிரி பர்சனல் கொஸ்டின்ஸ்ல்லாம் கேக்கறது சரியில்லை" என்ற பிறகே, சாப்பிட அனுமதித்தாள்! !திடீர் திடீரென்று பப்புவுக்கு இருக்கும் நல்லவள் விழித்துக்கொண்டுவிடுவாள். இன்று அப்படியான ஒரு தினம் போல‌!!

Tuesday, April 16, 2013

ஆஸ்ட்ரேலியா வண்டி in தமிழ்நாடு

"ஆச்சி, ஆஸ்ட்ரேலியா பஸ் பாரு...."

என்ன?? என்பது போல பார்த்தேன்.

"ஆமா, அந்த பஸ் ஆஸ்ட்ரேலியாலேருந்து வந்துருக்கு. au   ந்னு போட்டிருக்கு பாரு!!"


ஸ்ஸ்ஸ்....எங்கள் வண்டியிலிருந்து பார்க்கும்போது அதற்கு முன்னாலிருந்த‌  TN   என்ற எழுத்துகள் மறைந்திருந்தன. அதனால், அது ஆஸ்ட்ரேலியா வண்டியாகிவிட்டது.


"நேஷனல் பர்மிட்" என்று லாரிகளில் எழுதியிருப்பதைப் பார்த்து "ஏன் வேர்ல்ட் பர்மிட் இல்ல?" என்று சிறுவயதில் யாரைவது கேட்டு தொல்லை பண்ணியிருந்தா இப்படி திருப்பி கிடைக்குமாம்!!

Tuesday, April 09, 2013

இது ரெத்த பூமி ‍ - மூன்று முறை கட்டப்பட்ட கோட்டையின் கதை


காலைச்சூரியன் மிகவும் சுறுசுறுப்பாக தன் வேலையைத் தொடங்கியிருந்தது.சென்ற இரண்டு நாட்கள்போலில்லாமல் பளிச்சென்று இருந்தது வானம்.  நாங்களும் எங்கள் பயணத்தை  ஆரம்பித்தோம். மனம் ஒருவித மரியாதை/பயபக்தி/பெருமிதம் என்று கலவையான உணர்ச்சிப்பெருக்கால் நிரம்பியிருந்தது.செல்லுமிடம் அப்படியானது.

இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் முதன்மையானதும் முக்கியமானதும், வீரத்துக்கு அடையாளமாகவும் விளங்கும் இடம்,அது.  இந்தியாவின் வரைபடத்திலிருந்தே அகற்றிவிட வேண்டுமென்று ஆங்கிலேயர்கள்  துடித்த இடம். இன்று கால ஓட்டத்தால்  ஒதுக்கப்பட்டு, ஓரமாக மௌனசாட்சியாக இருக்கிறது. பாஞ்சாலங்குறிச்சி. வீர பாண்டிய கட்டபொம்மனின் கோட்டை. 'வானம் பொழிகிறது, பூமி விளைகிறது, உனக்கேன் கொடுக்க வேண்டும் வரி,வட்டி' என்று அந்த வீரமகனின்   குரல் கிண்ணென்று முழங்கிய கோட்டை.

தூத்துக்குடிக்கு அருகில் எங்கு செல்லலாம் என்று பார்த்தபோது, பாஞ்சாலங்குறிச்சியும்,ஒட்டபிடாரமும் செல்ல வேண்டிய பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தன. ஒன்று, ஏகாதிபத்தியத்தைப் பற்றியும் , காலனியாக்கத்தைப் பற்றியும் ஏன் எந்த தத்துவங்களையும் பற்றி அறியாமல், ஒரு வீரன், அந்நியரை எதிர்த்து நின்ற வீரமண். இன்னொன்று, சுதந்திரம் நம் பிறப்புரிமை என்ற முழங்கிய கப்பலோட்டிய தமிழன் பிறந்த ஊர்.

பப்புவுக்கு 'ஜான்சிராணி' வரலாறு தெரியும். ஜான்சிராணியைப் பார்த்து சிலநாட்கள் கத்தியை வைத்துக்கொண்டு திரிந்தாள். அவ்வப்போது, அவள் தன்னையே ஜான்சிராணியாக பாவித்துக்கொண்டு காற்றில் கத்திச்சண்டை போடுவாள். அவளது மாமாவிடமிருந்து பெற்ற ஜான்சிராணி புத்தகத்தை பொன்போல வைத்துக்கொள்வாள். அட்டையில் இருப்பது,ஜான்சிராணியின் படமல்லவா! வீரபாண்டிய கட்டபொம்மனைப் பற்றி அந்த அளவுக்கு தெரியாது.  ஆனால், ஜான்சிராணிக்கு எடுத்துக்காட்டாக/முன்னோடியாக‌ இருந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன் என்று  இந்த பயணத்தில் தெரிந்துக்கொண்டாள்.  இதற்கு முன்பும் பல கோட்டைகளுக்கு அவள் சென்றிருக்கிறாளென்றாலும், ஆங்கிலேயரை எதிர்த்த தன்மானமிக்க மன்னனின்(பாளையக்காரர்) கோட்டைக்கு வருவது இதுவே முதன்முறை. இதுவே எங்கள் மனதில், ஒரு மரியாதையை/பயபக்தியை தோற்றுவித்திருந்தது.

புழுதி படிந்த மண் சாலைகளில், ஏழு வளைவுகள் ஒன்றன்பின் ஒன்றாக நம்மை வரவேற்கின்றன. ஒவ்வொரு வளைவும், கட்டபொம்மனின் அரசில் முக்கியமான பதவி வகித்தவர்களின் பெயர் தாங்கியிருக்கிறது. கூட‌, கட்டபொம்மனின் குலதெய்வம் வீரசக்கம்மாவின் பெயரிலும் ஒரு வளைவு. இந்த வளைவுகளின் வழியே சென்றால் சாலை நம்மை நேராக கோட்டை வாசலில் கொண்டு போய் சேர்க்கிறது.
காலத்தை வென்ற கோட்டை

செம்மண் வண்ணத்தில் கோட்டைச்சுவர்.  இப்போது இருப்பது, மூன்றாவது முறையாக கட்டப்பட்ட கோட்டை. நுழைவுக்கட்டணம் வாங்கிக்கொண்டு உள்ளே சென்றோம். ஒரு மரத்தின் கீழே பிள்ளையார், இன்னும் சில சிற்பங்கள்.பார்க்க சற்றுப் பழமையானதாக இருக்கிறது.

பாதைக்கு இருபுறமும் மரங்களும், செடிகளுமாக சிறு தோட்டம். அதன் வழியே சென்றால், கோட்டையின் மரக்கதவுகள். கட்டபொம்மனின் குதிரை,யானை மற்றும் காலாட் படையைக் குறிக்கும் விதமாக கோட்டையின் ஒவ்வொரு பக்கத்தில் வரிசையாக உருவங்கள் வரையப் பட்டிருக்கின்றன.தோட்டத்தின் மரத்திலிருந்து கரைகிறது ஒரு காகத்தின் குரல்.அன்றைக்கு அநேகமாக நாங்கள்தான் முதல் விருந்தினர். 'இந்த பக்கம் வாங்க' என்று வலப்புறம் வரச் சொல்கிறார் ஒருவர். சுற்றும் முற்றும் பார்க்கிறோம். கோட்டைச் சுவரின் முழுமையைக் காண முடிகிறது. செருப்பைக் கழற்றிவிட்டு உள்ளே நுழைகிறோம். ஒன்றும் பேசத்தோன்றவில்லை. அவரவர் எண்ணங்களில் ஆழ்ந்திருக்கிறோம்.


'இந்தக்கோட்டையிலா கட்டபொம்மன் வாழ்ந்தார் 'என்ற எண்ணம்  தோன்றுவதற்குள், கைகளில் ஒரு சுட்டுக்கோலை கொண்டு பேச ஆரம்பிக்கிறார், அவர். உட்சுவர் முழுக்க  கட்டபொம்மனின் வரலாறு, படங்களாக வரையப்பட்டிருக்கிறது.தெள்ளத் தெளிவான தடங்களில்லாத தமிழில், 46 தலைமுறைகளுக்கு முந்தைய வரலாறு ஆரம்பிக்கிறது.
முதலாம் கெட்டிபொம்மு ராஜாவான வரலாற்றைத தொடர்ந்து, பாஞ்சாலங்குறிச்சியின் வரலாறு நீள்கிறது. சாலிக்குளத்தில்,முயல் ஒன்று வேட்டைநாயை துரத்துவது குடகின் கதையை நமக்கு நினைவுபடுத்துகிறது. வேட்டைநாயை முயல் துரத்திய குறிப்பிட்ட இடத்தில் ஏதோ ஒரு சக்தி இருப்பதாக நம்பி, கிபி 1101 ஆம் ஆண்டு அவ்விடத்தில் கோட்டை கட்டி சிம்மாசனம் ஏறுகிறார் பொம்மு.


வரலாற்றின் சில பக்கங்கள்

கிபி 17 ஆம் நூற்றாண்டில், பாளையக்காரர்களாக தன்னாட்சி பெற்றாலும், 72 பாளையங்களை உள்ளடக்கிய பாஞ்சாலங்குறிச்சியே சிறந்து விளங்குகிறது. 47ஆவது தலைமுறையாக, தனது 30ஆவது வயதில் அரியணை ஏறுகிறார், வீரபாண்டிய கட்டபொம்மன். இவரது தம்பிகள், ஊமைத்துரை என்ற தளவாய் குமாரசாமி மற்றும் துரைசிங்கம். வீரபாண்டிய கட்டபொம்மனின் மனைவி  ஜக்கம்மாள்.

இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி உள்நுழைகிறது. அளவுக்கதிகமாக கடன் வாங்கிய நவாபுகள் நேரிடையாக வரி வசூல் செய்யும் உரிமையை ஆங்கிலேயர்களுக்கு வழங்குகின்றனர். இதில் மற்ற பாளையக்காரர்கள் சரணாகதி ஆகிவிட, வரிதர மறுத்து எதிர்ப்பவர் கட்டபொம்மனும் பூலித்தேவரும்தான். பாஞ்சாலங் குறிச்சியைத் தேடி, மன்னனை சந்திக்க‌ நெல்லையிலிருந்து வருகிறார், ஆலன். ஆலனை எதிர்த்து தன்மானத்துடன் முழங்குகிறார், வீரபாண்டிய கட்டபொம்மன்.  பாஞ்சாலங்குறிச்சியின் கோட்டைச்சுவர்களில் இன்னமும் எதிரொலிக்கிறது,அந்தக்குரல்!

சாமாதான பேச்சுவார்த்தைக்காக, ஆங்கிலேயர்கள் அழைக்க, ராமநாதபுரம், சேதுபதி அரண்மனையில்  ஜாக்சனை காணச் செல்கிறார், கட்டபொம்மன். அங்கும் வரி,வட்டியைப் பற்றிய பேச்சுவர ஜாக்சனை எதிர்க்கிறார் கட்டபொம்மன்.மன்னரை சிறைபிடிக்க உத்தரவிடுகிறான் ஜாக்சன்.

வீரபாண்டிய கட்டபொம்மன், வாளால் பகைவரை வீழ்த்தி பாஞ்சாலங்குறிச்சிக்கு வருகிறார். வந்தபின்னரே, தானாபதியை காணாமல் திகைக்கிறார், மன்னர். தானாபதி, சேதுபதி அரண்மனையிலே ஆங்கிலேயர்களிடம் மாட்டிக்கொண்டுவிடுகிறார். சிலநாட்களில், தானாபதி விடுதலை செய்யப்பட்டு பாஞ்சாலங்குறிச்சிக்கு வருகிறார். ஆங்கிலேயர்கள், வரியாக சேர்த்து வைத்திருந்த நெல்களஞ்சியத்தைக் கொள்ளையிடுகிறார். இது, ஆங்கிலேயர்களை இன்னமும் கோபமூட்டியது. ஆங்கிலேயரை பழி வாங்க தானாபதி வகுத்த இந்த வஞ்சகம், கட்டபொம்மனை தலைகுனிய வைத்தது.பானர்மேன் தலைமையில், பீரங்கிப்படையுடன் ஆங்கிலேயரின் ஐவகைப்படைகள் பாஞ்சாலங்குறிச்சியை சுற்றி வளைக்கின்றன. இது எதிர்பாராத போர் என்றாலும், பாஞ்சாலங்குறிச்சியின் வீரர்கள், எதிரிகளின் பலத்தைக் கண்டும் அஞ்சாமல் கோட்டையின் மீது நின்று போர் புரிகின்றனர். கவண்கற்களாலும்,வேல்களாலும் போரில் வெற்றிபெறுகின்றனர். இந்தகோட்டையை, தகர்ப்பது பற்றிய பானர்மேனின் ப்ளூபிரிண்ட் இன்றும் லண்டன் ஆவண காப்பகத்தில் இருப்பதாக கூறினார்,அவர்.

வீரன் வெள்ளையத்தேவன், இந்த போரில்தான் இறந்துபோகின்றான். ஆங்கிலேயர் பக்கத்திலும்  நாசமே விளைகிறது. பாஞ்சாலங்குறிச்சி கோட்டையும் பாதிப்படைகிறது. போரில் இறந்த வெள்ளைத்தளபதிகளுக்கு, ஒட்டப்பிடாரத்தில் கல்லறையும், நினைவுச்சின்னமும்  எழுப்பியுள்ளனர்.எதிரிகளுக்கு நினைவுச்சின்னம் எழுப்பிய  கட்டபொம்மனின் பண்பு! இதன்பிறகே, கட்டபொம்மனின் தலைக்கு விலை வைக்கப்படுகிறது.

கோட்டையிலிருந்து தப்பித்து விஜயரகுநாத தொண்டைமானின் அரண்மனையை அடைகிறார், கட்டபொம்மன். கோட்டையை கைப்பற்றுகின்றனர், ஆங்கிலேயர்கள். கோட்டையில் நாட்டப்பட்ட ஆங்கிலேயரின் கொடியை உடைத்து வீரச்சாவடைகிறார், சுந்தரலிங்கம் என்ற வீரர். தொண்டைமானின் அரண்மனையிலோ, கட்டபொம்மன் எதிரிகளிடம் காட்டிக்கொடுக்கப்படுகிறார். ஒப்புக்கு ஒரு விசாரணை வைத்து,   கயத்தாறில் நெடுஞ்சாலை பகுதியின் புளியமரத்தின் தூக்குக்கயிறை சுருக்கி, வாழ்வை முடித்துக்கொண்டார். மற்ற பாளையக்காரர்கள் எல்லாரும் வெறுமே பார்த்திருக்க, வணங்காமுடியாக உயிர்துறந்தார் கட்டபொம்மன். 

ஊமைத்துரை சூளுரைத்து இரண்டாம் முறையாக கோட்டையை கட்டுகிறார். இதைப்பற்றி, வரலாற்றில் படித்திருப்போம். முட்டையையும், வெல்லத்தையும், சுண்ணாம்பையும் கொண்டு ஆறே நாட்களில் ஏழாயிரம் எழுப்பிய கோட்டையென்று! மெக்காலே போர் தொடுத்து, கட்டபொம்மனின் சகோதர்களை,ஏராளமான பாஞ்சாலங்குறிச்சி வீரர்களையும் அழித்தொழிக்கின்றர். ஊமைத்துரை, மருது சகோதர்களுடன் சேர்ந்து விடுகின்றார்.


கயத்தாறில், கட்டபொம்மன் உயிர்நீத்த இடத்தில் ஒரு நினைவுச்சின்னம் இருக்கிறது. அவரை, தூக்கு மாட்டிய புளியமரம் பட்டுபோயிற்று என்று முடிக்கிறார், பராமரிப்பாளர்.கதைசொல்லியைப்போலவும், அதே சமயம் வரலாற்று நிகழ்வுகளையும் ஒருசேர சுவாரசியமாக‌, படங்களை காட்டி விவரிக்கிறார், பராமரிப்பாளர். மற்றபடங்களில், வீரதீரமாக தெரியும் கட்டபொம்மன், இறுதிகட்டங்களில் நடிகர் திலகம் சிவாஜிகணேசனாக உருமாற்றம் அடைந்து இருக்கிறார். தூக்கிலிடும்போது கூட சிவாஜியாகவே இருக்கிறார்.உட்புறச்சுவரின் படங்கள் ஒரு சுற்று முடிந்ததும் இரண்டாம் சுற்று ஆரம்பிக்கிறது. நாமும் கோட்டையை உள்ளுக்குள்ளாகவே ஒரு முறை சுற்றியிருக்கிறோம். மனம் வேறு எதைப்பற்றியும் எண்ணாமல், கட்டபொம்மனையும்,போரைப் பற்றியே எண்ணிக்கொண்டிருக்கிறது.

இரண்டாம் முறையும், கோட்டையை கைப்பற்றிய ஆங்கிலேயர் வன்மத்துடன் கோட்டையை உருத்தெரியாமல் அழிக்கின்றனர். கோட்டை இருந்த இடம் முழுவதும் ஆமணக்கையும், முட்செடிகளையும் விதைக்கின்றனர். பார்க்கும் நமக்கு நெஞ்சமே எரிகின்றது. இப்போது இருக்கும் கோட்டை, ஒரிஜினல் கோட்டையின் மாதிரி மட்டுமே. அதில், ஒரு சிறு பங்குதான் இது என்று கூறி இரண்டாம் சுற்றுக்குப் பிறகு உள்ளே நுழைகிறார்.

பின் தொடரும் நம்மை, எதிர்கொள்வது, வீரபாண்டிய கட்டபொம்மன். கோட்டையின் மையப்பகுதியில், வாளோடு மிடுக்காக வீற்றிருக்கிறார். ஊமைத்துரை,தானாபதி,சுந்தரலிங்கம் சகிதம் அவ்விடம் ஒரு சிறு அரசவையாக காட்சியளிக்கிறது. நாம் விரும்பினால், அரசரோடு சேர்த்து நம்மை புகைப்படமெடுத்துத் தருவதாக பராமரிப்பாளரே முன்வருகிறார்.

எஞ்சியிருக்கும்  சில ஞாபகங்கள்

இன்று நாம் பார்க்கும் கோட்டை, 1974ஆம் ஆண்டில் நமது அரசால், கலைஞர் ஆட்சியில் கட்டப்பட்டது. தற்போது மூன்றாவது முறையாக எழுந்து நிற்கிறது.
 நமது வரலாற்று ஆர்வத்தை பார்த்த பராமரிப்பாளர், கோட்டைக்குள் அகழ்வாய்வில் கிடைத்த கவண்கற்களையும், பீரங்கிகுண்டுகளையும் காட்டுகிறார்.  விம்மி நெகிழ்ந்த மனத்துடன், வெளியே வந்தால் எதிரில் ஜக்கம்மாவின் கோவில். இதுவும் புதிதாக கட்டியதுதான்.

 அதை அடுத்து, தொல்லியல் துறையின் தகவல் பலகை நம்மை வரவேற்கிறது. உள்ளே செல்ல இயலாதபடி வலைபோடப்பட்டிருக்கிறது. உள்ளே, கோட்டையின் அஸ்திவாரத்தை நன்கு காணமுடியும். அரசவையும், அந்தப்புரமும், மணமண்டபமும் நமது பார்வைக்குத் தெளிவாகத் தெரிகின்றன. இதன் அருகில்தான், ரகசிய பாதைகள் இருக்கின்றன.இன்று அவை தூர்ந்துபோய்  இருக்கின்றன‌.பார்த்து முடிக்கும்போது, இன்னும் ஒன்றிரண்டு விருந்தினர்கள் கோட்டை வாயிலில் நுழைகின்றனர். ஒருகாலத்தில் பரபரப்பாகவும், வேல் ஈட்டிகளின் சப்தங்களாலும் நிறைந்த கோட்டை,இன்று, எப்போதாவது கேட்கும் பறவையின் குரலைத் தவிர, கோட்டை மிகுந்த அமைதி கொண்டிருக்கிறது. 


வரலாற்று பாடபுத்தகங்களைத் தவிர, பொதுவாக‌ மறக்கப்பட்ட இடமாக காட்சியளிக்கிறது. இவை ஒவ்வொன்றும் மறைக்கப்பட்ட புதையல்கள். நமது பிள்ளைகளை தவறாமல் அழைத்துச் சென்று காட்டப்பட‌ வேண்டிய இடங்கள். இப்படி எண்ணியபடி,கோட்டையின் கிரில்கதவுகளை திறந்துகொண்டு வெளியே வருகிறோம். கட்டபொம்மனின் கடைசி வாரிசு என்று அறிமுகத்துடன் ஒருவரை மரத்தடியில் கண்டோம்.


இன்று

கட்டபொம்மனின் உறவினர்கள் ஒரு 200 பேர் இப்பகுதியில் வசிக்கின்றனர். பெரும்பாலும், அன்றாடக்கூலிகளாக வாழ்க்கை நடத்துகின்றனர். அதில் ஒருவர்  பீமராவ் கட்டபொம்மு. கட்டபொம்முவின் கடைசி வாரிசு. தலையில் ஒரு தலைப்பாகைபோல கட்டிக்கொண்டிருந்தார்.  எங்களைக் கண்டதும், கையில் இருந்த பையைத் திறந்தார். போட்டோக்களையும், அச்சடிக்கப்பட்ட காகிதங்களையும் தந்துவிட்டு. "இதுல டேரக்ட்ன்னு போட்டிருக்கு" என்றார்.  அவர்தான் நேரடி வாரிசு என்பதற்கன அத்தாட்சிகளாம், அந்த அரசாணைகள்.  கலெக்டரிடமிருந்தும், சில அதிகாரிகளிடமிருந்தும் கையெழுத்துடனான அரசாணைகள்.ஊமைத்துரையின் மனைவி கர்ப்பிணியாக இருந்ததால் அவரை ஆங்கிலேயப்படை விட்டுவிட்டது. அதில் கடைசி வாரிசு.  'நீங்க எதுவும் படிக்கலையா?" என்றதற்கு, "வாய்ப்பு இல்லையில்ல" என்றார். கிட்டதட்ட 70 ஆண்டுகள் இவர்கள் புதுக்கோட்டைக்கு வரக்கூடாது என்று ஆணையிருந்ததாம். அதானால், நிலையில்லாத வாழ்க்கையை  வாழ்ந்தார்களாம். இப்போது, ஊரில் எந்த விழாவாக இருந்தாலும், இவருக்குத்தான் முதல்மரியாதை. அதில் எடுத்துக்கொண்ட போட்டோக்களை காட்டினார்.
நாங்கள், இவரிடம் பேசுவதைக் கண்டதும் எங்கிருந்தோ வந்தார் இன்னொருவர். பார்க்க ஏதோ பூசாரி போலவே இருந்தார். கூப்பிட்டு, தன்னை போட்டோ எடுக்கச் சொன்னார். எடுத்ததும், தன்னை அறிமுகப் படுத்திகொண்டார். மெய்காப்பாளர் சுந்தரலிங்கத்தின் கடைசி வாரிசாம் இவர். கோட்டையின் மீதிருந்து உயிர் துறந்த வீரன் சுந்தரலிங்கம்.

ஆனாலும், எங்கள் கவனம் கட்டபொம்மனின் கடைசி வாரிசின் மீதிருந்ததை கண்டதும், பப்புவை அழைத்தார். பப்பு சற்று அருகில் சென்றதும், பெயர் மற்றும் விபரங்களைக் கேட்டார். இதன் நடுவில் கட்டபொம்முவின் வாரிசு தொடர்ந்து,விடாமல் தன்னைப் பற்றிய விபரங்களை கூறியபடியிருந்தார். நான் பப்பு இருந்த இடத்தை பார்த்துக்கொண்டிருந்தேன். பப்புவின் பெயரைச் சொல்லி, கோயில் இருந்த திசை நோக்கி ஒரு பாடலைப் பாடினார். தெலுங்கா தமிழா என்று கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது, அது. பின்னர், 'நீ கண்டிப்பா டாக்டர்தான் ஆகப்போறே' என்றார் பப்புவிடம்.

கட்டபொம்முவின் வாரிசு ,இங்கு, விடாமல் பேசிக்கொண்டிருந்தார். அரசாங்கத்திடமிருந்து, மாதந்தோரும் ரூ 1000 மட்டுமே கிடைப்பதாக கூறி விட்டு, முத்தாய்ப்பாக‌ 'எங்கே, கையை காட்டுங்க' என்றார். 'அதிலெல்லாம் எங்களுக்கு நம்பிக்கையில்லை' என்று மறுத்தோம். இதற்குள், டாக்சி டிரைவர், 'வாங்க வாங்க' என்று சைகை செய்தார். ஏறும்சமயம், சுந்தரலிங்கத்தின் வாரிசு, என் வயதையும் பெயரையும் கேட்டார். சொன்னதும், இதற்குப்பின் என்ன படிக்கப்போகிறேனென்று நினைத்தாரோ என்னவோ, கோயிலை நோக்கி பாடலைப்பாடி '35வயதில் சட்டசபைக்கு செல்வாய்' என்று  ஆசீர்வதித்தார்.

திரும்பவும் ஒவ்வொரு வாயிலாக கடந்து வந்தோம். கரிசல் பூமியிலிருந்து வீசியது காற்றின் வெம்மை. உள்ளே ஒரு மகத்தான வரலாற்றை கேட்டு வந்தால், யதார்த்தம் வெளியில் முகத்தில் அறைகிறது. 2000 பொன்கள், 100/150 கோட்டை நெல் என்று தனது ஆட்சியாளர்களுக்கு வாரி வழங்கிய கட்டபொம்மன், 'எடைக்கு எடை தங்கம் அளிக்கிறேன், நம்பி வந்தவர்களை காட்டிகொடுத்து பழக்கமில்லை' என்ற கட்டபொம்மனையும், வருபவர்களிடம் எதிர்பார்க்கும் அவனது  வாரிசு! அரசாங்கத்தின் சிக்கனத்தை, எண்ணி வியக்காமலிருக்க முடியவில்லை.

இதற்கு நடுவில்,பப்பு வேறு அவள் பங்குக்கு!
'ஸ்பேஸ் சயிண்டிஸ்ட்' ஆக வேண்டுமென்று எண்ணிக்கொண்டிருந்த பப்பு, அவர் சொன்ன 'நீ டாக்டரா ஆயிடுவே' என்ற தீர்க்கதரிசனத்தைக் கேட்டு கலவரமடைந்திருந்தாள். 'அதெல்லாம் பொய்ப்பா, உனக்கே தெரியும் இல்ல, நீ என்ன ஆகணுமோ அதை நீதான் டிசைட் பண்ணனும்,அவருக்கு ஸ்பேஸ்ன்னா என்னன்னே தெரியாது, ஸ்பேஸ் சயிண்டிஸ்ட்ன்னு ஒன்னை கேள்வியேபட்டிருக்க மாட்டாரு,அதான்' என்று அவளுக்கு தெளிய வைக்க வேண்டியிருந்தது. அவளை திசைதிருப்ப, நுழைவாயிலில் வாங்கிய கட்டபொம்மனைப் பற்றி புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தோம்.


இடம்:

தூத்துக்குடியிலிருந்து பாஞ்சாலங்குறிச்சி 18 கிமீ
ஒட்டப்பிடாரம் அங்கிருந்து 2/3 கிமீ

நுழைவுக்கட்டணம் : ஒருவருக்கு 2 ரூ

புத்தகம்:

வீரம் விளைந்த மண்ணில் வீரபாண்டிய கட்டபொம்மன்
ஆசிரியர்: மு. முருகையா
விலை : ரூ 30

Saturday, April 06, 2013

ஒரு விளம்பரமும் சில நினைவுகளும்

ஒன்பதாம் வகுப்பில்தான், எங்கள் பள்ளியில் செக்ஷன் பிரித்து மாற்றுவார்கள். இரண்டு செக்சன்களே அப்போது இருந்தது. அப்படி எங்கள் 'ஏ' செக்சனில் வந்து சேர்ந்தாள் ரேணுகா. அவள் நன்றாக படிப்பாள் என்றும் எங்களுக்கெல்லாம் நல்ல போட்டி இருக்கும் என்றும் ஏதோ ஒரு ஆசிரியர் சொல்லியிருந்தார். அதிலும் அவள், இரண்டாவது ரோ‍வில்தான் அமர்ந்தாள்.சரி, இன்னொரு ஞானசௌந்தரி போலிருக்கிறது என்று எண்ணிக்கொண்டேன். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு, எங்கள் அரட்டை கும்பலோடு அவளும் சேர்ந்து எல்லோரும் நல்ல நண்பர்களாகிவிட்டோம்.

ரேணுகாவின் மீது  வகுப்பிலிருந்த எல்லாருக்கும் லைட்டாக பொறாமை இருந்தது என்று நினைக்கிறேன். அவள் அணிந்திருக்கும் வளையல், தலையில் மாட்டியிருக்கும் விதவிதமான ஹேர்கிளிப்புகள் மற்றும் உடனுக்குடன் ஃபேஷனுக்கு வரும் அத்தனை விதமான மிடிகள்/பாவாடை சட்டை என்று கலர்புல்லாக வருவாள். சுடிதார் அணிய மட்டும் அவளது வீட்டில் தடை. உடைகளைவிட, அவளது வளையல், ஹேர் க்ளிப்புகளே எல்லாரையும் ஈர்த்தன.'எங்கே வாங்கினே' என்ற கேள்விக்கு 'பெரிய‌அக்கா வாங்கி தந்தாங்க' என்றோ 'நடுஅக்கா  கொடுத்தாங்க' என்றோ 'சின்ன அக்கா ஆரணிலேருந்து வாங்கிட்டு வந்தாங்க' என்றோ சொல்லுவாள். காந்திமதி ஒரு பெருமூச்சோடு, 'இருந்தா ரேணுகாவோட‌ அக்காங்க மாதிரி இருக்கணும்' என்பாள்.

கால் பரீட்சை/அரை பரீட்சை லீவு வந்தால் நண்பர்களின் வீடு வீடாக போவது வழக்கமாகியிருந்தது. ஒரு நாள் சபீனா வீடு, ஒரு நாள் எங்கள் வீடு என்று.
அப்படி, ஒரு நாள் ரேணுகா வீட்டுக்கு போனபோது அவளது அப்பா மதிய உணவுக்கு வந்திருந்தார். ரேணுகா, எங்களை சத்தம் போட்டு பேச வேண்டாமென்றும், சத்தமில்லாமல் சிரிக்கவும் கேட்டுக்கொண்டாள். ஒன்றுமில்லாமலே நாங்கள் 'கெக்கே பிக்கே' என்று சிரிப்பதாக அப்போது எல்லாரிடமும் பேர் வாங்கியிருந்தோம். சிரிக்காமலிருப்பது ரொம்ப கஷ்டமாக இருந்தது, அப்போது. 


அவ்வப்போது, ரேணுகா, அவளது அப்பா ஸ்ட்ரிக்ட் என்று சொல்லியிருக்கிறாள்.  அது தெரிஞ்ச விசயம்தானே என்று நினைத்திருந்தேன். மேலும், எல்லார்  வீட்டிலுமே அந்த ஸ்ட்ரிக்டைதான் அனுபவித்  திருக்கிறோமே!   'இனிமே தெருவிலே விளையாடாதே!', 'நீ கடைக்கு போக வேணாம், தம்பி போகட்டும்', 'மாடிக்கு எதுக்கு அடிக்கடி போறே' என்று எல்லாருமே அனுபவிப்பதுதானே என்று!!  ரேணுகா அப்பாவின், அந்த ஸ்ட்ரிக்டின் அர்த்தம் அப்போதுதான் புரிந்தது, அவளது பதட்டத்தையும் பயத்தையும் அப்போதுதான் நேரில் கண்டபிறகு. நாங்கள் மாடி அறையில் குசுகுசுவென்று  பேசி சிரித்துக்கொண்டிருந்தோம். ரேணுகாவோ, மாடிக்கும் கீழுக்கும் அலைந்து நாங்கள் பேசுவது கீழே கேட்கிறதா என்று டென்சனிலேயே இருந்தாள். ஒருவழியாக, அவளது அப்பா சென்றவுடன் சகஜமானாள். 'பெண்கள் சத்தமாக பேசுவதோ,சிரிப்பதோ கூடாதாம்,அவருக்கு'.

அதோடு, அவள் சொன்னதுதான் அதிர்ச்சி. அதாவது, பத்தாவதுக்குப் பிறகு அவள் படிப்பது சந்தேகம்தானாம். அவளது அக்காக்கள் எல்லோரும் ஏழாவது அல்லது எட்டாவதுதான் நின்று விடுவார்கள் என்றும், சில வருடங்கள் வீட்டிலிருந்தபின் கல்யாணம் செய்துகொடுத்துவிடுவார்கள் என்றும் கூறினாள். அப்புறம், வருடா வருடம் அக்காக்கள் யாரேனும் பிள்ளைபேறுக்காக வீட்டுக்கு வந்து தங்கிச் செல்வார்கள். ரேணுகா அடம்பிடித்து சாப்பிடாமல் எல்லாம் இருந்து  சண்டைபோட்டு ஒன்பதாவது வகுப்புக்கு வந்திருக்கிறாள்.  அதாவது, அவர் சர்வீசிலிருக்கும்போதே எல்லாருக்கும் கல்யாணம் செய்து கொடுத்துவிடவேண்டும் என்பதுதான் அவர் பாலிசி.இதையெல்லாம் அவள் இவ்வளவுநாட்களாக எங்களிடம் சொன்னதேயில்லை. இதைக்கேட்டதிலிருந்து நாங்கள் ரொம்ப சோகமாகிவிட்டோம்.


 அவரோடு இருக்கும் நண்பர்கள்தான் அவரை கெடுப்பது என்று ரேணுகா அவ்வப்போது பொருமுவாள். 'வேலையிலிருக்கும்போதே கல்யாணம் செய்து கடமையை முடித்தால்தான் நமக்கு கௌரவம்' என்று அவர்கள் அவரிடம் சொல்லுவார்களாம். 'பொண்ணுங்க படிச்சு கையில ஒரு வேலையை வைச்சுக்கணும்' என்று ஆயா என்னை சொல்லி சொல்லி வளர்த்திருந்ததால் 'ஏன் இன்னும் பழங்காலத்து மாதிரி இருக்காங்க' என்று மட்டும் தோன்றியது. ஆனால், ரொம்பவெல்லாம் ஆராயவில்லை, அப்போது.

பத்தாவது முடித்ததும், எப்படியோ ரேணுகா கெஞ்சிக் கூத்தாடி அப்பாவிடம் அனுமதி பெற்று ப்ளஸ் ஒன் சேர்ந்துவிட்டாள்.அதுவே எங்களுக்கு சந்தோஷம் மற்றும் ஆச்சர்யம். ப்ளஸ் டூ முடியும்போதோ, எல்லாருக்கும் எந்த காலேஜில் சேருவோம்? என்ன படிக்கலாம்? என்ற பேச்சுவரும்போது மட்டும் நிச்சயமாக சொல்லிவிடுவாள், 'ஏதோ இது படிக்கிறதே பெரிய விஷயம்!! இதுக்கு மேலல்லாம் வீட்டுல கேக்க முடியாது!" என்று. ரிசல்ட் வந்து எல்லாரும் காலேஜில் செட்டிலானபிறகு, அந்த வருட பூஜா ஹாலிடேஜில் எல்லோரும் சந்தித்தோம். காலேஜ் கதைகளை பேசிப்பேசி, பள்ளிக்கூடம்தான் பெஸ்ட் என்றெல்லாம் பீலா விட்டுக்கொண்டிருந்தோம். ரேணுகாவுக்கு கஷ்டமாக இருக்கும் என்று நினைத்தோம். அவள் மகிழ்ச்சியாகவே இருந்தாள். 'இதுதான் லைஃப்' என்று தனது நிலைமையை ஏற்றுக்கொண்டதாகவே பட்டது. மாப்பிள்ளை வீட்டுக்கு அவளது  ஃபோட்டோ போயிருக்கிறதாம்.  விரைவில் அவர்கள் பார்க்க வருவார்களாம். அவளும் மாப்பிள்ளையின் போட்டோவை காட்டினாள். வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை மலர்ச்சியுடன் அவள் எதிர்கொள்வதாக நினைத்துக்கொண்டேன்.


சில மாதங்களில் ரேணுகாவும் திருமணமாகி வேறு ஊருக்கு போனாள். கல்லூரி விடுமுறைகளில் கல்லூரி நண்பர்கள் ஊர்களுக்குச் செல்வதும், ஊருக்கு வரும் நேரம் ரேணுகா சந்திக்க இயலாமலும் கிட்டதட்ட தொடர்பறுந்த நிலை. வெகுசமீபத்தில், பெரிம்மா கேட்டார், 'ரேணுகா உன்க்கிட்டே பேசுச்சா? ஃபோன் நம்பர் வாங்கிச்சு' என்று! ரேணுகாவின் கணவர் இறந்துவிட்டதாகவும், இரு பையன்களுடன் ஆம்பூருக்கே வந்துவிட்டதாகவும் சொன்னபோது அதிர்ச்சியில் உறைந்துவிட்டேன். பெற்றோர்கள் இல்லாத நிலையில், தனியாக இருந்துக்கொண்டு மிகவும் கஷ்டப்படுவதாக கூறினார். குடும்பத்துக்கான உலைக்காக அவள்தான் ஏதோ வேலைக்கு போவதாகவும், ஆனால் படிப்புக்கே பற்றவில்லையென்றும் சொன்னதை கேட்டபோது எனக்குள் இதயத்தை திருகுவதை போன்ற வலி!!

ப்ளஸ் டூவில் நல்ல மார்க் எடுத்திருந்தாள் ரேணுகா. ரொம்ப தூரம் அனுப்ப மனமில்லாவிட்டாலும், அரை மணித்தொலைவில் அமைந்திருந்த ஜெயின் கல்லூரிக்காவது அனுப்பியிருக்கலாம்.குறைந்தபட்சம், ஒரு டிகிரி படித்திதிருந்தாலாவது, ஏரியாவொக்கொன்றாக முளைத்திருக்கும் ஏதாவது பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக சேர்ந்திருக்கலாமே என்று நினைத்துக்கொண்டேன்.  


ச்சே, நல்லா படிக்கிற பொண்ணை அவங்க அப்பா இப்படி பாழாக்கிட்டாரே என்று கோபமாகவும் வந்தது. இப்படி அவர்கள் பாதுகாத்து பாதுகாத்து என்ன பெரிதாக சாதித்துவிட்டார்கள்? உங்கள் பாதுகாப்பினால் உங்கள் மகளின் வாழ்க்கையை அல்லவா வீணாக்குகிறீர்கள்? இப்பொழுது நிலைமை கொஞ்சமாக மாறியிருக்கலாம், அதாவது பெண்ணை படிக்க வைப்பதற்கு மட்டும். ஆனால், வேலைக்கு போக வேண்டுமென்றோ,அவள் தனது காலில் நிற்க வேண்டுமென்றோ எத்தனை அப்பாக்கள் நினைக்கிறார்கள்? 

கற்பகத்தின் அப்பா, ஊருக்கு போகும்போதும் வரும்போதும் கல்லூரிக்கு வந்து அழைத்துச் செல்வார். அல்லது, துணைக்கு யாரையாவது அனுப்புவார். கணவன் தன்னை வெளிநாட்டில் அடித்து கொடுமைபடுத்துகிறான் எனும்போதுகூட அவளது பயமெல்லாம்,  டிக்கெட் புக் செய்தால் எப்படி தனியாக வருவது, பயமாக இருக்கிறது, கூட யாராவது வந்தால் பரவால்லை' என்பதுதான். 'கூடவே வந்து, கூடவே அழைத்துப் போய், கூடவே இருந்து எல்லாம் செய்து நீங்கள் வாரிக்கொண்டதுதான் என்ன? திருமணத்தை, வேறு ஒரு ஆடவனை நம்பும் நீங்கள் ஏன் உங்கள் பெண்ணை நம்ப மறுக்கிறீர்கள்?'
என்றெல்லாம் அவளது அப்பாவிடம் நறுக்கென்று கேட்க வேண்டும்போல இருந்தது. அவரிருந்தால் கேட்டிருக்கலாம்,ஒருவேளை! இப்பொழுது அவளுக்கு ஆறுதலைத்தவிர வேறு எதுவும் செய்ய இயலாதிருக்கிறது.

சிலநாட்களுக்கு முன்பு ஒரு விளம்பரம் பார்த்தேன். பேஸ்புக்கில் யாரோ பகிர்ந்திருந்தார்கள். ஆகோ ஓகோவென்று எல்லாரும் ஒரே புகழாரம். ஐசிஐசிஐ ப்ரூடென்சியலின் விளம்பரம் அது. உடையாமல் பாதுகாப்பாக இருக்கிறதா என்று பார்ப்பதில் தொடங்கி, தலையை இடித்துக்கொள்ளாமல் தான் கீழே போட்ட துண்டை எடுக்க மனைவை பாதுகாக்கும் கணவன் முதல்,  அப்பாவுக்கு அடுத்து பாதுகாக்க நான் இருக்கிறேன் என்று சொல்வதுவரை!! (இதில், ரொம்ப முரணானது, கீழே போட்ட துண்டை எடுக்கும் காட்சிதான்... அவ்வளவு அக்கறை இருந்தால் துண்டை அதற்குரிய இடத்தில் போட வேண்டியதுதானே! ;‍)) அதை பார்த்ததிலிருந்து இன்னும் உரக்க கத்த வேண்டும் போலிருக்கிறது, 'இப்படி பொத்தி பொத்தி வளர்க்கிறதை எப்பதாண்டா விடப்போறீங்க?'!!
 

இந்த விளம்பரம், மறுபக்கத்தில் எங்களை/பெண்களை கேலி செய்வது போலிருக்கிறது.பாதுகாக்க கூட ஒரு ஆண் இருந்தே ஆக வேண்டும் என்பதுபோல! ஆண் இல்லாமல் உங்களால் இந்த உலகில் தனித்து பாதுகாப்பாக வாழ இயலாது என்ற எண்ணத்தை கட்டமைக்கிறது. ஆண் துணையில்லாமல் குழந்தைகளை வளர்க்கும் பெண்களையும் சேர்த்தே இது தாக்குகிறது.அவர்களது உழைப்பை, தன்னம்பிக்கையை,வெற்றியை கணக்கில்கொள்ளாமல் ஆண் == பாதுகாப்பு என்று எல்லார் மனதிலும் விதைக்கிறது!இந்த விளம்பரத்தை, ரேணுகாவின் சார்பாக‌,கற்பகத்தின் சார்பாக‌, ஆண் துணையில்லாமல் ஆணும் பெண்ணுமாக ஐந்து பிள்ளைகளை படிக்க வைத்த ஆயாவின் சார்பாக கண்டனங்களை பதிவு செய்கிறேன்.

Thursday, April 04, 2013

ஆதிச்சநல்லூரில் தாழிகளைத் தேடி ஒரு பயணம்


இந்த வருட புத்தக கண்காட்சியில் ஒரு புத்தகம் வாங்கினோம். என்பிடியின் 'எலும்பு கல்லான கதை'. 

"ஒரு சனிக்கிழமை இரவில் நடந்த சண்டையில் கொல்லப்பட்ட டிரைசெரடாப்தான் இது;" 

"ஒரு சனிக்கிழமை இரவில் நடந்த சண்டையில் கொல்லப்பட்ட டிரைசெரடாப்பின் எலும்புதான் இது;"

 "ஒரு சனிக்கிழமை இரவில் நடந்த சண்டையில் கொல்லப்பட்ட டிரைசெரடாப்பின் எலும்பின் மீது மூடிய மண்தான் இது; "

என்று எலும்பின் மீது மூடிய மண், மண் மீது படிந்த ஆற்று மணல், மணலின் மீது ஓடும் ஆறு , அந்த ஆற்றின் நீரில் விளையாடும் சிறுமி பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் அடுக்கடுக்காக ,புதைந்து போன  டிரைசெரடாப்பின் படிமத்தை கண்டுபிடிப்பதாக அந்த கதை செல்லும். 

பப்புவுக்கும் அது போல தானும் ஏதாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று ஆசை. அதோடு, சில அருங்காட்சியங்களில் கண்ட  தங்க,வெள்ளி நாணயங்கள், அரிக்க மேடு மணிகள்/நாணயங்கள், சாலர் ஜங்கின் விதவிதமான வாட்கள் என்று எல்லாமும் சேர்ந்து  பண்டைய காலத்தின் மீது ஒருவித ஈர்ப்பை உண்டாக்கியிருந்தன.

கடந்த வாரம் தூத்துக்குடி செல்லும் வாய்ப்பு கிட்டியது. ஆதிச்சநல்லூர்,சமீபத்தில் ஹெரிடேஜ் சைட்டாக அறிவிக்கப்பட்டிருந்தது நினைவுக்கு வந்தது. நிச்சயம் அங்கு செல்ல வேண்டும் என்று எண்ணிக்கொண்டோம். 

தூத்துக்குடியிலிருந்து திருவைகுண்டம் சென்றோம். அங்கிருந்து ஆதிச்ச நல்லூர் ஐந்து கி மீ தூரம்.  அந்த வழி முழுவதும் ஒரே  திருத்தலங்கள். நவதிருப்பதியாம். அங்கிருந்து ஆதிச்சநல்லூர் வந்தடைந்தோம்.  பாளையங்கோட்டை செல்லும் வழியில் ஒரு இடத்தில் இடதுபுறம் சாலை திரும்பியது. அந்த வழியில் பயணித்தால், ஒரே  தெரு.  இருபுறமும் வீடுகள். அதோடு சாலை முடிவுற்றது. இதற்குபின் எங்கு செல்வது, அல்லது அந்த அகழ்வாராய்ச்சிகள் செய்யப்பட்ட இடம் எங்கு இருக்கிறது என்ற எந்த விபரங்கும் தெரியவில்லை. ஊரிலோ ஈ காக்கை கிடையாது. 

வழியில் தென்பட்ட ஒருவர் ஓட்டுநருக்கு  வழி சொன்னார்.
நாங்கள் வந்த வழியிலேயே திரும்பி, இன்னும் சற்று முன்னால் போனால், வலது புறம் கோயில் வரும். அதற்கு எதிரில் திரும்பினால் ரயில்வே டிராக் வரும். அதுதான் இடம்.   கோயிலை பார்த்துவிட்டோம். அதற்கு எதிரில் இருந்த சாலையில் சென்றோம்.  வலதுபுறம் ஒரே மண்மேடு - முட்செடிகள். இடதுபுறம் ஏதோ பயிரிட்டிருந்தார்கள்.அருகில் ரயில்வே டிராக். ரயில்வே டிராக் தாண்டி இருபுறம் புளிய மரங்கள். 

இதற்கு மேல் எங்கு செல்வது என்று தெரியவில்லை. தாழிகள் இல்லாவிட்டாலும் ஹெரிடேஜ் சைட் என்று அறிவிக்கப்பட்ட பகுதியில் ஒரு சிறு அறை/தகவல் பலகையையாவது எதிர்பார்த்திருந்தோம். எதுவுமில்லாமல், எந்த பக்கம் செல்வது என்றும் புரியாமல் அந்த மண்மேட்டில் நடக்கத் துவங்கினோம்.  மண்மேடு பரந்துவிரிந்தது. ஆங்காங்கே சிறு சிறு செடிகள். தொலைதூரத்தில் ஆடுகள் கூட்டமாக மேய்ந்துக் கொண்டிருந்தன. அருகில் மேய்ப்பர் முக்காடிட்டு நின்றுக்கொண்டிருந்தார்.  வெயில் ஏறிக்கொண்டிருந்தது. கண்கள் ஏதேனும் ஏ எஸ் ஐ போர்ட் தென்படுகிறதா என்று தேடின. சற்று தூரம் நடந்தோம். ஒரு சில இடங்கள் பாறைகள் புதைந்திருந்தன. தோண்டப்பட்டதற்கான அறிகுறிகள் எதையும் நாங்கள் காணவில்லை. ஆதிச்சநல்லூர் கிட்டதட்ட  கி மு பத்தாயிரத்துக்கும் முன்பாக காலகட்டத்தை சொல்கிறார்கள். கற்காலத்துக்கும் நியோலித்திக் காலகட்டத்துக்கும் இடைபட்டது. தாமிரபரணியின் ஆற்றங்கரையில் வளர்ந்த நாகரீகம். 

இத்தனை ஆண்டுகளுக்கு முன்னால் இந்த இடத்தில் மக்கள் என்ன செய்திருப்பார்கள், எப்படி  வாழ்ந்திருப்பார்கள் என்று எண்ணியபோது  அந்த எளிமையான   மண்மேடு வெறுமையாகக் காட்சியளிக்கவில்லை.  மனித குலத்தின் வரலாறாகவே தோன்றியது.இது இறந்தவர்களை புதைக்கும் இடம் எனில், அவர்கள் எங்கு வாழ்ந்திருப்பார்கள், அவர்கள் வீடு எப்படி இருந்திருக்கும் என்று அந்த கரடு முரடான நிலத்தில் யோசித்தபடி நடந்தோம். 

அங்கு கண்டெடுக்கப்பட்ட தாழிகளில், மனித எலும்புகளும், சமையல் பாத்திரங்களும்,  உலோகங்களும் இருந்ததாக சொல்கிறார்கள். தாழிகள் இரண்டு அடுக்குகளாக , ஒன்றை மூடி வைக்க இன்னொரு தாழியாக இருந்திருக்கிறது. அந்த தாழிகளின் மீது பல டிசைன்கள் வரையப்பட்டிருப்பதாக தொல்லியல் துறையின் தளத்தில் பார்த்திருந்தேன்.  இருந்தாலும், இவற்றுள்,  கூர்மையான சிறு சிறு ஆயுதங்கள்தான் ஹைலைட். அவை மிசோலித்திக் காலத்தை சேர்ந்தவை. சென்னைக்கருகில் இருக்கும் குடியம் குகைகள் நியோலித்திக் காலத்தை சேர்ந்தவை. இவை அதற்கும் முன்பாக, எனும்போது காலத்தை தாண்டிச் செல்லும் உணர்வு ஏற்பட்டது.

எதிர்பார்த்து வந்ததை, பப்புவுக்கு  காண்பிக்க முடியவில்லை . ஏமாற்றத்துடன்  கார் நிறுத்தி வைத்திருந்த இடத்துக்கு வந்தோம்.  எதிரில் இருந்த வயலில் ஒரு பைப்பிலிருந்து தண்ணீர் பீய்ச்சியடித்தது. அருகில் இருந்த இளைஞனிடம், விசாரித்தார் ஓட்டுநர். அதற்குள், எங்கிருந்தோ ஒருவர் வந்து சேர்ந்தார்.  தாழிகளை  தான் காட்டுவதாக அழைத்துச் சென்றார். நாங்கள் நடந்த இடத்துக்கு சற்று தொலைவிலேதான்.கீழே பார்த்தால், புதையுண்ட தாழிகள். அவற்றுக்கு அருகிலேயே இன்னும் சில. அவற்றை தொல்லியல் துறையினர் இன்னும் தோண்டவில்லையாம். ஆடுகள் மேய்ந்துக்கொண்டிருந்த பகுதியில்தான் அகழ்வாராய்ச்சி நடைபெற்றதாகவும் அனைத்தையும் சென்னைக்கு எடுத்துச் சென்றுவிட்டதாகவும் கூறினார். எங்களைப்போல் தேடி வருபவர்களுக்கு இந்த தாழிகளையும் தான் காட்டுவதாகவும் கூறினார். 


"அந்த காலத்தில் இறந்து போக மாட்டாங்கல்ல, குறுகிதான் போய்டுவாங்க, அவங்களை உள்ளே வைச்சு அவங்களுக்கு புடிச்சதை வைச்சு மூடிடுவாங்க"

அதற்குள் மேலும் சிலர் வந்து  விட்டனர். இவ்வளவு நேரம் எங்கிருந்தார்களோ தெரியவில்லை.

 
இந்த படங்களில் ஒரு கோடு போல புதையுண்ட பானைகளின் விளிம்பைக் காணலாம். உள்ளே எந்த பாட்டி அல்லது தாத்தா உறங்கிக்கொண்டிருக்கிறாரோ, தெரியவில்லை."இங்கனதான் போர்டு வைச்சிருந்தாங்க, மழையில விழுந்துடுச்சு" என்றார். அவர் காட்டிய இடத்தில் மற்றுமொரு தாழியின் உடைந்த பாகம் வெளித்தெரிந்தது. கம்பி மட்டும் கீழே கிடந்தது. 

 அதே மழைதான், இந்த தாழிகளையும் வெளியே கொண்டு வந்திருக்க வேண்டும், ரோம் மக்களோடு வாணிபம் செய்த அரிக்கமேட்டின்  மணிகளைm மண்ணிலிருந்து வெளியே கொண்டு வருவதுபோல! மழைதான் புதைந்துபோனவற்றை எப்படி மீட்டுக் கொண்டுவருகிறது, மண்ணிலிப்பவற்றையும் , மனதிலிருப்பவற்றையும்!!  

""உள்ளேருந்து நெறைய எடுத்தாங்க. நகையெல்லாம் இருந்துச்சு. தங்கக்காசு கூட இருந்துச்சு. எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு போய்ட்டாங்க" என்றார். (மிசோலித்திக்கில் நாணங்கள் இருந்தனவா அல்லது அவை பிற்காலகட்டத்தில் சேர்ந்தவையா?)

"இங்கதான் ஒரு வாட்ச்மேன் இருப்பார். இப்ப எங்கியோ போயிருப்பார் போலுக்கு,கவர்மென்டுலேருந்து ஆள் போட்டிருக்காங்க" என்றார், மேலும். 


நாங்கள், சற்று நேரம் அங்குமிங்கும் நடந்தோம். சில பாறைக் கற்களுக்கிடையில் உடைந்த பானைத்துண்டுகள் கிடந்தன. பப்புவுக்கு இது ஒரு புதிய அனுபவமாக இருந்திருக்க வேண்டும். உடைந்த பானைத்துண்டை நெடுநேரம் கையில் வைத்துக்கொண்டிருந்தாள். வந்தவர்கள் வந்ததுபோலவே, சட்டென்று வயல்களுக்குள் மறைந்து போனார்கள். மனித வரலாற்றின் கரையிலிருந்து, பிரமிப்பு அகலாமல் திரும்பினோம்.


Wednesday, April 03, 2013

டன் டிக்கிட்டு போய்ட்டா?

மெர்மெய்ட் என்றால் பப்புவுக்கு மிகவும் இஷ்டம். ப்ளாஸ்டர் ஆஃப் பாரிசை கரைத்து தந்தேன். அதி உற்சாகமாகிவிட்டாள். அவற்றை மோல்டில் ஊற்றினாள். ஊற்றியவுடனே அசைத்து அசைத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். "இதை தொட்டு பார்த்துக்கிட்டிருந்தா சரியா வராது, நைட் ஃபுல்லா இங்கியே இருக்கட்டும், அப்பதான் நல்லா காயும்" என்றேன். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டுமா என்று பப்புவுக்கு பயம்/சந்தேகம் வந்துவிட்டது.

"பால்கனியில் விட்டுவைத்தால் திருடன் வந்து எடுத்துக்கிட்டு போய்ட்டா என்ன பண்றது?"

 அவள் செய்வது முக்கியமானது என்ற அவளது எண்ணத்தை கலைக்கவிரும்பாமல், 'நமக்கு முக்கியமானது எல்லாருக்கும் முக்கியமானதாக இருக்கும் என்று நினைக்க முடியாது' என்பதை அவளுக்கு எப்படி புரியவைப்பது என்று எண்ணியபடி லைட்டாக ஆரம்பித்தேன்.

"திருடங்க எல்லாம் ஏன் திருடறாங்க? அவங்ககிட்ட என்ன இல்லையோ  அதைத்தானே திருடறாங்க?"

உடனே இடைமறித்துக் கேட்டாள்,

"அப்போ, அவங்க இந்த மெர்மெய்டை திருடிட்டா நாம தப்பா எடுத்துக்கக்கூடாதுன்னு சொல்றியா?!!


அவ்வ்வ்வ்!!!

தலைப்பு: பப்புவுக்கு இந்த கதை ரொம்ப ஃபேவரிட். அதான்!