Saturday, December 07, 2013

சிங்கம் - I

 
"ஆச்சி, சிங்கம் 2 பார்த்துட்டியான்னு கேக்கிறாங்கப்பா, என் ஃப்ரெண்ட்ஸ்" ‍- பப்பு

"அப்டின்னா?" ‍

"மூவி...சிங்கம் 1, சிங்கம் 2" - பப்பு

"ஓ..அது கிட்ஸ் மூவியா?"

"ஆமா ஆச்சி, ஜாலியா இருக்குமாம்" (!!) - பப்பு

"ம்ம்..."

"அதுல ஒரு சிங்கம்,  மேஜிக்கலா எப்படி புலியா மாறுது, அதான் ஸ்டோரியாம்" - பப்பு

"நெஜம்மாவா?"

"ஆமா ஆச்சி, விலாசினி குட்டிப்புலி பார்த்துட்டாளாம்" - பப்பு

"எங்கே?"

"மூவில ஆச்சி, அதும் ஜாலியா இருந்துச்சாம்! அமித் சிங்கம் 2 பார்த்துட்டானாம்" - பப்பு


"ம்ம்..நீ சாயங்காலம் ஸ்கூல்லேருந்து வருவே இல்ல, வழியிலே சிங்கம் 2 போஸ்டர் இருக்கான்னு பாரு. போஸ்டர்லே என்ன இருந்துச்சுன்னு சொல்றியா, எனக்கு."


"இப்போவே நான் பார்த்துட்டேன். அது பார்த்ததும்தான் எனக்கு ஞாபகம் வந்துச்சு. " - பப்பு

"என்ன இருந்துச்சு போஸ்டர்லே?"

"ம்ம்..ஒரு சிங்கம், அப்புறம் 2 மனுசங்க" - பப்பு

"சிங்கம் இருந்துச்சா!!ம்ம்...ரெண்டு மனுசங்க யாரு, பாயா கேர்லா?"


"ஒரு பாய், ஒரு கேர்ல்" -பப்பு

அதுக்குள்ள நல்லவேளையா ஹெல்மெட் போடாத ஒரு அங்கிள் கிராஸ் பண்ணி எங்களை காப்பாத்திட்டாரு.

சிங்கம் 2 வந்தபோது நடந்தது. ஜி+ யில் எழுதியதை இங்கு சேமிக்க‌...

Friday, December 06, 2013

பப்பு டைம்ஸ்

"ஆச்சி, உன்கிட்டே ஒன்னு சொல்லணும்...ஆனா, நீ கேட்டா கோவப்படுவே..."

"ஹை,என்னப்பா சொல்லு..."

"ம்ஹூம்..நான் சொல்லமாட்டேன்"

"சொல்லேன்...நான் கோவப்பட மாட்டேன்"

"வந்து, இன்னைக்கு ஸ்கூல்ல நான் 'எங்கம்மா ரொம்ப புத்திசாலி...அவங்க க்யூட்டா இருப்பாங்க.'ன்னு சொல்லிக்கிட்டு இருந்தேன். அப்போ,விக்ரம் வந்து 'நான் உங்க அம்மாவை லவ் பண்றேன்'ன்னு சொல்றான்.அவனை ஒரே குத்து!"

"....."

"நீ ஏன் என்னை பத்தி ஸ்கூல்ல சொல்றே?"

"ம்ம்..நீதான் வேர்ல்ட் சாம்பியன் அம்மா! நீ எவ்ளோ இன்ட்லிஜென்ட்டா இருக்கே..அதுக்குதான்."

அவ்வ்வ்வ்!

என்னை பார்த்து ....என்னை பார்த்து இன்ட்லிஜென்ட்டுன்னெல்லாம்  சொல்லிட்டாளேன்னு லைட்டா நெகிழ்ச்சி+மகிழ்ச்சியா இருந்தாலும், இந்த பேச்செல்லாம் நாங்க தூங்கப்போற டைம்ல நடந்ததால - எவ்வளவு அடிச்சுக்கிட்டாலும் அவளோட இந்த அன்கண்டிஷனல் அன்புக்கு நான் பாத்திரமா/ தகுதியான்னெல்லாம் ஃபீல் பண்ணிக்க‌ நேரம் இல்லாம போச்சு. அந்த கேப்புல, 'எனக்கு ஏன் கோவம் வரும்னு சொன்னேன்னு' கேக்க மறந்துட்டேன்.

எல்லா வீட்டிலேயும், அம்மாங்கதான் குழந்தைகளை "இன்டலிஜென்ட்" "க்யூட்"ன்னு சொல்லி பெருமைப்பட்டுப்பாங்க.  இங்கே, என்னன்னா....:‍))
 
 
 
 
"ஆயா, இந்த ஆச்சி எந்த ஸ்கூல்ல ஆயா படிச்சுது?இப்படி மேனர்ஸ் சொல்லிகொடுத்திருக்காங்க? எந்த ஸ்கூல்ல ஆயா படிச்சுது?" - பப்பு

"எங்க ஸ்கூல்லதாம்ப்பா!" - பெரிம்மா

:‍))  - மீ

பார்த்து பார்த்து எழுதறாங்களே மேடம்னு,  பப்பு எழுதின ஒரு பேப்பரை ரஃப் நோட்டுல இருந்து கிழிச்சதுதான் நான் செஞ்ச தப்பு!   

Wednesday, November 27, 2013

மன்மோகனுக்கு பப்பு எழுதியிருக்கிற லெட்டர்...கடிதம்...கடுதாசி!


இது மன்மோகனுக்கு பப்பு எழுதியிருக்கிற லெட்டர்...கடிதம்...கடுதாசி!மன்மோகன் யெஸ் ஆர் நோ டிக் பண்ணனும்(நம்ம மன்மோகன் சிங்குக்கு வந்த நெலமையை பார்த்தீங்களா!!ஹிஹி).டில்லியில, எல்லா இடத்தையும் உள்ளே போய் பார்த்தோம்..ராஷ்டிரபதி பவனை/பார்லிமென்டை மட்டும் வெளியில் இருந்து பார்த்ததை பப்புவுக்கு ஏத்துக்கவே முடியலை. 


அவருக்கு எழுதின லெட்டரை விட, அந்த லெட்டரை அனுப்ப மேடம் ஒரு வாங்கின கவர்தான் அவ்வ்வ்வ்! அதை வாங்க பயங்கரமா கன்விஸ் வேற!!

ஒரு கைவினை பொருட்கள் கடைக்கு போயிருந்தப்போ, அவங்க ஸ்கூல் ஆன்ட்டிக்கும், மாஸ்டருக்கும்  துணியாலான போல்டரை கேட்டிருந்தான்னு வாங்கி தந்தேன். ஷாப்பிங் பையில‌ இன்னொரு பொருள் வந்து விழுந்தது. என்னன்னு பார்த்தா, அலங்கார கற்கள், மணிகள்ன்னு ஒட்டி இருந்த என்வெலப். மன்மோகனுக்கு எழுதின லெட்டரை வைச்சு அனுப்பறதுக்காம்! 'இதை மட்டும் வாங்கி தாப்பா, வேற எதுவுமே வேணாம்'னு கெஞ்சல் சரின்னு வாங்கியாச்சு.

'அவர் ஏன் உன்னை பார்க்கணும், உன்னை மாதிரி இந்த நாட்டுல எவ்வளவோ குட்டி பசங்க இருக்காங்களே'ன்னு சொன்னேன்.  மலாலா மாதிரி, நானும் ஒரு கதைபுத்தகம் எழுதியிருக்கேன்னு சொல்றேன்னு சொல்லிட்டு அப்படியே எழுதியும் வைச்சிருக்காங்க. 'கேர்ல் பிரசிடென்ட் யாருமே இல்லையா ஆயா', இந்திரா காந்திக்கு அப்புறம் கேர்ல் ப்ரைம் மினிஸ்டர் யாருமே இல்லையா ஆயா'ன்னு கேட்டுக்கிட்டு இருந்தது வேற காதுல விழுந்துச்சு.. எழுதாத புத்தகத்தை எழுதினதா சொல்லுறதை பார்த்தா , அநேகமா ஒரு 'நல்ல' அரசியல்வாதியா வர வாய்ப்பு ரொம்ப‌ பிரகாசமா இருக்கு இல்லே?! ;-)

Monday, November 25, 2013

ஒளியும் ஒலியும்

தமிழகத்தின்,கணிசமான கோட்டைகளை நாங்கள் பார்த்திருக்கிறோம்.கோவாவின் கோட்டைகளை சுற்றியிருக்கிறோம். ஆந்திராவின் கோல்கோண்டாவை ஏற முடியவில்லையென்றாலும் சுற்றியிருக்கிறோம். சமீபத்தில், தில்லியின் கோட்டைகளையும் விட்டு வைக்கவில்லை. இவை அனைத்திலும், எங்களை கவர்ந்த அம்சம் என்னவென்றால், அந்த கோட்டைகளைச் சுற்றிச் சுழலும்  கதைகள்!

கோட்டையின், ஒவ்வொரு மூலையிலும், ஒளிந்திருக்கும் வரலாற்றுச் சம்பவங்களினூடே,  கைடுகள் நமது சினிமாவுக்கேயுரிய சுவாரசியத்துடன் அளந்துவிடும்(!) (மாயக்)கதைகள்!! வரலாற்றின்மீது பப்புவின் ஆர்வம் திரும்பியது இப்படித்தான்! அதற்காகவே, அவளது வயதுக்கு மீறியதென்றாலும் சில புத்தகங்களை தேடி வாங்கினேன். (படிக்கிறாளா இல்லையா என்பது அடுத்த விஷயம்!)

 அதே சமயம், சில கோட்டைகளின் ஒளி&ஒலி காட்சிகளை தவிர்க்காமல் பார்த்தும் விடுவோம்.இந்த ஒளி ஒலி காட்சிகள் அனைத்தும் தொல்லியல் துறையின் மேற்பார்வையில் நடைபெறுகின்றன. அதனாலேயே, தவறாமல் பார்த்துவிடுவோம். அந்த வகையில், எங்களை கவர்ந்த -  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த - குழந்தைகள் கண்டிப்பாக தெரிந்துக்கொள்ள வேண்டிய - இந்த இடங்களுக்குச் சென்றால் தவறாமல் காண‌ வேண்டிய -  ஒளி&ஒலி காட்சிகளை பற்றிய இடுகைதான் இது!  

ஒருவகையில், நாங்கள் கண்ட ஒளி -ஒலி காட்சிகளின்  தொகுப்பும் கூட.


 புரானா கிலாவின் இஷ்க்‍ -இ-தில்லி

இந்த கோட்டை ஹூமாயுனால் கட்டப்பட்டது. இந்த கோட்டையின் ஒரு சுவரில்தான் ஒளி & ஒலி மல்டிமீடியா காட்சி நடத்தப்படுகிறது. தில்லியின் வரலாற்றை சுருக்கமாக, ஒரு மணி நேரத்தில் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார்கள். 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த‌ பிருத்விராஜ் சௌவ்ஹானின்  தில்லிமீதான காதலிலிருந்து, லோதிகள்,குத்புதீன் அடிமை வம்சம், முகம்மது கோரி, சுல்தான்களின் படையெடுப்பு, முகலாய வம்சம், இறுதியாக ஆங்கிலேயர்கள் வரை சுருக்கமாக சொல்லப்படுகிறது. 

வரலாற்றின் மீது ஆர்வமில்லா விட்டாலும்கூட, தில்லியின் கடந்த காலத்தின் மீது பாய்ச்சப்படும் லேசர் ஒளியிலும் -அந்தந்த காலகட்டத்தின் இசை மற்றும் கலையிலும் - ஒரு மணிநேரம் செல்வதே தெரிவதில்லை.   பல்வேறு அரச வம்சத்தினரின் - தில்லி மீதான ஆசையை, மன்னர்களுக்கிடையிலான விரோதத்தை, போர்களை, துரோகங்களை சிறு சிறு சம்பவங்களினூடே காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். ஒவ்வொருவரும் தமக்கான தில்லியை கட்டியெழுப்புகிறார்கள். 

மெஹ்ருலி,சிரி, துக்ளகாபாத்,பெரோஸாபாத், ஷாஜகானாபாத்  என்று காலங்காலமாக தில்லியின் முகம் மாறிக்கொண்டேயிருக்கிறது.  இதற்காக, ஒவ்வொருமுறையும் தில்லி ரத்தத்தால் கழுவப்படுகிறது. கோஹினூர்!(பப்புவுக்கு ஒரே ஆச்சரியம்! இதே கோஹினூர் வைரத்தின் ஒளியை ஆந்திராவின் கோல்கொண்டாவின் வரலாற்று காட்சியிலும் நாங்கள் பார்த்திருந்தோம்.) கோல்கொண்டாவின் சுரங்கத்திலிருந்து வந்த கோஹினூர் தில்லியின் வரலாற்றிலும் முக்கிய இடத்தை பிடிக்கிறது.நாதிர்ஷாவை தில்லியின் மீது  படைஎடுக்க வைக்கிறது. 

அந்த காலத்தில் யமுனா பெருக்கெடுத்து ஓடியிருக்கிறது.  யமுனையின் கரையோரமாகவே இந்த அரசுகளும், பேரரசுகளும் எழும்பியிருக்கின்றன.  பிற்காலத்தில், யமுனையே தன்போக்கை மாற்றிக்கொண்டிருக்கிறது. ஆனால், காலத்தின்  அழியாத சாட்சியாக  யமுனையின் வரலாற்றின் கரையோரமாக நிற்கின்றன, இந்த அரசர்கள் எழுப்பிய கோட்டைகளும், சின்னங்களும்! 

தில்லுக்கு சுற்றுலா செல்பவர்கள் நிச்சயமாக காண வேண்டிய மல்டிமீடியா காட்சி இது!  குழந்தைகள் விரும்பும்  வண்ணம் - பொழுதுபோக்கு அம்சத்துடனும், அதே சமயம் பயனுள்ளதாகவும் இருக்கும்.  ஒளி அமைப்பு கண்களுக்கு விருந்து என்றால், ஒலி அமைப்பு அபாரம் ‍ - குதிரைகள் ஓடும்போது நமக்குப் பின்னால் ஓடுகின்றனவா என்று நம்மை திரும்பி பார்க்க வைக்கிறது!:-) 

முக்கிய குறிப்பு: இந்த காட்சி தில்லியின் பருவகாலத்துக்கேற்ப நிகழ்த்தப்படுகிறது. செல்வதற்குமுன் அதன் கால அட்டவணையை பார்த்துக்கொள்வது நன்று! அந்த காட்சியின் புகைப்படங்கள் இங்கே. அதன் முழு வீடியோ இணைப்பு

கோல்கொண்டா கோட்டையின் ஒளி & ஒலி காட்சி

இதுவும் கோல்கொண்டா கோட்டையினுள் நடத்தப்படும் ஒளி & ஒலி காட்சி. அமிதாப்பின் கம்பீர குரலில் பின்னணியில் கோட்டையின் வரலாறு சொல்லப்படுகிறது.  இதன் சிறப்பு என்னவெனில், கோட்டையின் எந்த பகுதியைப் பற்றி பேசுகிறார்களோ அந்த பகுதி மட்டும் உயிர்ப்பிக்கப்படுகிறது. அதைப்பற்றிய வர்ணனைகளும், கதாப்பாத்திரங்களும் பேசுகின்றன. இந்த அமைப்பு, நம்மை அந்த காலகட்டத்துக்கே கடத்திச் செல்கிறது - ஒரு டைம் மெஷினில் ஏறி அமர்ந்துக்கொண்டது போல! 

ஆரம்பத்தில், காக்கடியா அரசர்களின் கோட்டையாக இருக்கும் கோல்கொண்டா, பாமினி சுல்தான்களிடம் சென்று பின்பு குதுப் ஷாஹி வம்சத்தினரிடம் கை மாறுகிறது. பெர்ஷியாவிலிருந்து வந்து  ஏழு தலைமுறை வரை இங்கு அரசாள்கிறார்கள். கோட்டையை வலுப்படுத்துகிறார்கள். ஆனாலும், துரோகத்தின் காரணமாக, கோட்டை இறுதியில் ஔரங்கசீப்பின் கைகளில்!  இந்த சுருக்கமான வரலாறு மிகுந்த சுவாரசியத்துடன் கண்முன் விரிகிறது.

 அந்தந்த கதாப்பாத்திரங்கள் வாயிலாக - அவர்களே பேசுவதுபோலவும், நாட்டிய ஒலியுடனும், சோகம் தொனிக்கும் குரல்களுடனும் ஒலியின் பின்னணியில் ஒளியின்  ஆட்சி! இடையில் பாக்யமதி வருகிறார். தனா ஷா வருகிறார். தாராமதியின் சலங்கைகள் ஒலிக்கின்றன. பக்த ராமதாசுவின் பாடுகிறார். அரசகுமாரிகளின் சிரிப்பொலிகள், மந்திரிகளின் ஆலோசனைகள்  இவைகளுக்கிடையில் மிகவும் பரபரப்பான  கடைவீதியின் சப்தங்களும்!  முக்கியமாக, வைரங்களின் நகரமாக இருந்திருக்கிறது கோல்கொண்டா. பின்னணியில், வைர வியாபாரமும் நிகழ்வதை நாம் கவனிக்கலாம். 

உலகின் முக்கிய வைரங்கள் இங்கிருந்து எடுக்கப்பட்டவைதான். அதில் ஒன்றுதான் கோஹினூர்! ரத்தக்கறை படிந்த வைரம் என்றே சொல்கிறார்கள். இவைதவிர, கோல்கொண்டாவின் கட்டுமான சிறப்புகள் மிக நுணுக்கமாக சொல்லப்படுகிறது. முக்கியமான சில, பால ஹிஸ்ஸார்  எனப்படும் நுழைவாயிலின் ஒரு குறிப்பிட்ட இடத்தில்  நின்று கைதட்டினால்,பாரதாரி எனப்படும் உச்சிமண்டபத்தில் கேட்கிறது. யானைகள் நுழையா வண்ணம் வாயில்கள், வாயில்களின் மேல்கூரையில் துளைகள் வழியே சூடான எண்ணெயை எதிரிகள் மீது பொழியச் செய்வது, கோல்கொண்டா அரண்மனையிலிருந்து சார்மினாருக்கு இருக்கும் சுரங்கப்பாதை...

இந்த ஒளி & ஒலி காட்சியும் குழந்தைகளுக்கும் சரி, பெரியவர்களுக்கும் சரி ஆர்வமூட்டக்கூடியதாக இருக்கும். இவை எல்லாம்,குழந்தைகளுக்கு முழுவதுமாக புரியும் என்று சொல்லமுடியாவிட்டாலும், அந்த காலத்து அமைப்பை, கோட்டையை 3டி போல அறிந்துக்கொள்ள உதவும். கதைகளை விரும்பாதவர்கள்தான் யாராவது இருக்கிறார்களா என்ன?அதுவும் சுவைபட சொன்னால்?

குறிப்பு: கோல்கொண்டா கோட்டையில் ஒளி ஒலி காட்சி பற்றிய தகவல்களை இங்கு காணலாம்.

பாஞ்சாலங்குறிச்சியின் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை

தமிழ்நாட்டில் ஒளி & ஒலி காட்சிகள் எங்காவது நடைபெறுகிறதாவென்று தெரியவில்லை. மதுரை நாயக்கர் மகாலில் ஒளி -ஒலி காட்சி நடைபெறுவதாக அறிந்தாலும் காணும் வாய்ப்பு இன்னும் கிட்டவில்லை.ஆனால், மேற்கண்ட கோட்டைகளின் ஒளி & ஒலி காட்சிக்கு சற்றும் குறையாமல், ஓவியங்கள் மூலமாகவே வரலாற்றை நமக்கு சொல்வது பாஞ்சாலங்குறிச்சியின் கோட்டை. இதுவும் குழந்தைகள் நிச்சயம் காண வேண்டிய கோட்டையே. இதனைப்பற்றி விரிவாக இங்கே எழுதியிருக்கிறேன். 

Sunday, November 24, 2013

நாங்கள் சக்கரத்தை கண்டுபிடித்த கதை ;-)

தில்லிக்கு சென்ற போது குயவர்களின் கிராமத்தை எட்டி பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. வழக்கமாக‌, எந்த ஊருக்குச் சென்றாலும் அங்கு ஏதாவது நடைபயணங்கள்   நடைபெறுகிறதா என்று பார்த்து பங்கு பெறுவோம்.. பெரும்பாலும் "ஹெரிடேஜ் வாக்/நேச்சர் வாக்" தான் இதுவரை சென்றிருக்கிறோம். அதில், வரலாற்றுச் சின்னங்கள், வரலாற்று தகவல்கள் அல்லது நேச்சர் வாக்கில், பறவைகள்,மரங்கள் மிருகங்கள் பற்றிய தகவல்களாக இருக்கும். 

குயவர்களின் கிராமம் என்றதும், 'எப்படி இருக்கும்? இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்றெல்லாம் சொல்லுவார்களே? ஆனால், கிராமத்தில்தான் யாருமே வாழ்வதில்லையே' என்றெல்லாம் யோசனைகள்!   சரி, என்னவென்றுதான் பார்ப்போமே, தெரிந்துக்கொள்ள ஒரு வாய்ப்புதானே, பப்புவுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் நல்ல அனுபவமாக இருக்கும் என்றும் தோன்றியது. 


தில்லி மெட்ரோவில் பயணம். எப்படி வந்து சேர வேண்டும் என்றெல்லாம் முன்பே தகவல்கள் கிடைத்தன. கிட்டதட்ட தில்லியின் கடைக்கோடி. சொன்னதுபோல, 9 மணிக்கு மெட்ரோ வாயிலில் வந்து சேர்ந்துவிட்டோம். அங்கிருந்து காரில் 10 நிமிட பயணம். பாதி தூரம் சென்றிருப்போம். டிராஃபிக் ஜாம். ஏற்கெனவே ஒருவழி பாதை. இதில் பள்ளிக்கூட பேருந்துகள் இடத்தை அடைத்துக்கொள்ள அவ்வளவுதான்! 5 நிமிடங்கள் பார்த்துவிட்டு, இறங்கி நடக்க ஆரம்பித்தோம். அந்த டிராஃபிக் ஜாம் சரியாக இன்னும் ஒரு மணி நேரம் கூட ஆகலாம்.

 தாண்டி வந்ததும், ஒரு ஆட்டோ கிடைத்தது. போகிற வழிதான் என்று அவர்களே சொன்னதால் ஏறிக்கொண்டோம். ஒரு வழியாக கிராமத்தை ஒரு ஆலமரத்தில் ஆரம்பத்தில் கண்டுகொண்டோம். எந்த பகுதி  கிராமமானாலும், அது ஒரு ஆலமரத்திலிருந்துதான் ஆரம்பிப்பதுதானே நமது வழக்கம்!  வழக்கமாக, மற்றொரு வழியாகத்தான் என்ட்ரியாம். டிராஃபிக் ஜாம் காரணமாக, நாங்கள் தற்போது இந்த வழியாக கிராமத்தில் காலடி வைத்திருக்கிறோமாம்.

அங்கிருந்து, எங்கள் நடைபயணம் தொடங்கியது. அப்படியே, கிராமத்தைப் பற்றிய முன்னுரையும்! 

இந்த கிராமத்திலிருப்பவர்கள் அனைவரும் குயவர்கள்தானாம். 40 ஆண்டுகளுக்கு முன்னர் ராஜஸ்தான் ஆல்மரிலிருந்து பெரும் பஞ்சத்தின் காரணமாக குடிபெயர்ந்தவர்கள். ஆரம்பத்தில் 70 குடும்பங்களாக  இந்த கிராமத்துக்கு குடி பெயர்ந்தவர்ந்துள்ளார்கள். அதன்பிறகு, அவர்களது உற்றார் உறவினர்கள் என்று இந்த கிராமத்துக்கு வந்து தற்போது 600 குயவர்கள் குடும்பங்கள் இங்கு வசிக்கின்றர்.  

இந்த கிராமத்தில் தயாராகும் பொருட்கள் -  தண்ணீர் பானைகள், சிறு பானைகள், பூச்சாடிகள்,பூந்தொட்டிகள்,உண்டியல்கள் மற்றும் உருளிகள்-விருந்தினர்களை வரவேற்க வரவேற்பறையில் பூக்களைப் போட்டு வைக்கும் மட்பாண்டங்கள். அதோடு தீபாவளி காலத்தில் அகல் விளக்குகள்.


ஆனந்தவிகடனில், பாரதிதம்பி எழுதிய சேரி நடைகள் பற்றி வாசித்தது நினைவுக்கு வந்து மனசாட்சியை குத்தியது. ஆனால், ராஜஸ்தானத்து குயவர்கள் பற்றியும், அவர்களது வேலையைப் பற்றியும் வேறு எப்படி தெரிந்துக்கொள்வது!

எங்களது நடையில் மனதை செலுத்தினோம். பாதைகள் வெகு குறுகலானவை. பெரும்பாலும், மண்தான். மழைக்காலத்தில் வெகு சிரமம். பாதையின் இருபுறமும் பார்த்துக்கொண்டே வந்தோம். ம்ஹூம்! யாரும் எங்களைக் கண்டுக்கொண்ட மாதிரி தெரியவில்லை. தெருவில் குழந்தைகள் விளையாட்டில் மூழ்கியிருந்தனர். பாதைகளில் குறுக்குச் சந்துகளின் முடிவில் மட்டும் உடைந்த‌ பானைகளின் குவியலோ அல்லது மட்பாண்டங்களில் குவியலோ கண்களில் பட்டது - நீங்கள் இருப்பது குயவர்களின் பூமி என்று சொல்வது போல!


குறுக்குசந்துகளில் புகுந்து புகுந்து நடந்தோம். சிறுசிறு வீடுகள். முன்னால் வீட்டைவிட பெரிய காலி இடங்கள். காலி இடங்கள் எங்கும் சிறு சிறு பானைகள், மண் உண்டியல்கள், சிறுவிளக்குகள். தீபாவளி நெருங்கும் சமயமாதலால், பெரும்பாலும் அகல்விளக்குகள்தான் செய்வார்களாம். செய்துக் கொண்டிருந்தார்கள். ஒரு குயவர் ஒருநாளைக்கு 5000 அகல்விளக்குகளை செய்வதாக சொன்னார்கள். 

மோட்டார் ஆற்றலில் சக்கரம் சுழல, ஒருவர் நொடிப்பொழுதில் அகல் விளக்குகளை சக்கரத்திலிருந்து எடுக்கிறார். அவர் செய்கிறாரா அல்லது கை வைத்து அதிலிருந்து எடுத்து வைக்கிறாரா என்று தெரியாத படி சக்கரமும் அவரது கையும்  சுழன்றபடி இருந்தன. சுழலும் சக்கரத்தைப் பார்த்ததும், சக்கரம்தான் உலகின் மிக முக்கியமான கண்டுபிடிப்பு என்று எங்கள் ஆசிரியர் சிறுவயதில் சொன்னது நினைவுக்கு வந்தது.

ஆண்கள்தான் சக்கரத்திலிருந்து மட்பாண்டங்களை வடிக்கும் வேலையை செய்வார்களாம். பெண்கள் சக்கரத்தில் கை வைப்பதில்லை. இது ஆரம்பத்திலிருந்தே ஒரு கட்டுபாடு போல கடைபிடிக்கப்பட்டு வருகிறதாம்.தொடர்ந்து நடந்தோம். ஒரு இடத்தில் பானைகள் மண்ணோடு சேர்த்து பிணைக்கப்பட்டு அடுக்கப்பட்டிருந்தது.  எல்லாம் தண்ணீர் பானைகள். வீட்டுச் சுவராம்,அது. குயவர்களிடமிருந்து ஏஜெண்டுகள்தான் பானைகளை வாங்கிச் செல்வார்களாம்.  சில பானைகளை ஏஜெண்டுகள் ஏற்பதில்லையாம். தரக்கட்டுப்பாட்டு சோதனை?! அவ்வாறு, ஜெண்டுகள் நிராகரித்த பானைகள், மூலைக்கு தலைக்கல்லாவது போல,  குயவர்கள் வீட்டு சுவர்களாகி விடுகின்றன. அந்த சுவர்கள் வெயிற்காலத்திலும் குளிர்காலத்திலும் ஒரு நல்ல தடுப்பாக பயன்படுகின்றனவாம். 


முன்பு அநேகமாக எல்லா வீடுகளும் இப்படித்தான் இருக்குமாம். இப்பொழுது அவை அருகிவிட்டனவாம்.

மட்பாண்டங்கள் வடிப்பதிலிருந்துதான் மட்டும்தான் பெண்களுக்கு விலக்கே தவிர, மண், சக்கரத்துக்கு வருவதற்கு முன்பும் அதன் பின்பும் இருக்கும் ஏகப்பட்ட வேலைகளுக்கு  அவர்கள் கைகளே பொறுப்பு.  

அந்த சுவரை சற்று நேரம் வெறித்துவிட்டு, நடையைத் தொடர்ந்தோம் - சாலையின் இருபக்கமும் கண்களை சுழலவிட்டவாறே.  ஒரு சிறுவன் வீட்டு வாயிலருகில் சிறுகுச்சியை வைத்து தரையில் அடித்துக் கொண்டிருந்தான். ஏதோ விளையாட்டு என்றெண்ணிக்கொண்டேன். அடுத்த கொஞ்ச நேரத்தில், ஒரு பெண்மணி  தரையில் மண்ணை அடித்துக்கொண்டிருந்தார். அருகில் குன்று போல மண். அவரது தலை முக்காடால் மூடிபட்டிருந்தது. 

பானைகள் வனைவதற்கு முன்னால், நிறைய வேலைகள் இருக்கிறதாம். அவற்றில் முதன்மையானது, தேர்ந்தெடுக்கப்பட்ட மண் வந்து இறங்கியதும், அவற்றை தடியால் அடித்து மாவு போல் ஆக்குவது. அதில், கட்டியானவை எல்லாம் உதிர்ந்ததும், இரும்பு சல்லடையால் சலித்து எடுத்துக்கொள்கின்றனர்.

 உடனே, முன்பு பார்த்த அந்த சிறுவனின் நினைவு வந்து திரும்பிப் பார்த்தேன், அவனருகில் மண் குவிக்கப்பட்டிருந்தது. எனில், அந்த சிறுவன் மண்ணை சீராக்கும் வேலையில் ஈடுப்பட்டிருக்கிறான்!  பெரும்பாலும், பெண்களும், குழந்தைகளும்தான் இந்த வேலையைச் செய்கிறார்கள். குழந்தைகளும் வீட்டுவேலைகளில் உதவி செய்வதை கணக்கில் கொண்டு பள்ளிகள் இங்கு அரைநாள்தான் வேலை செய்கின்றன. 

அப்படி சீராக்கிய மண்ணை, ஈரப்படுத்தி தேவையான பதத்தில் வைத்துக்கொள்கிறார்கள். அதனை, உருண்டையாக்கி பாலித்தீன் கவர்களில் சுருட்டி வைத்துவிடுகிறார்கள். வேண்டும்போது, சக்கரத்திலிட்டு பானைகளை வனைகிறார்கள்.


வழியெங்கும் தீபாவளி அகல் விளக்குகள், தில்லி நகரத்தில் வீடுகளில் ஜொலிப்பதற்கு காய்ந்துக்கொண்டிருந்தன. செய்து முடித்ததும், அவற்றை பரப்பி காய வைக்கிறார்கள். பின்பு, சுடுகிறார்கள். 


சில இடங்களில் பெரிய பெரிய அடுப்புகளையும் பார்த்தோம். குயவர்களின் வீடுகள் முழுவதும்,  அவர்கள் செய்து வைத்திருக்கும்  பொருட்களே நிறைந்திருக்கிறது. வீடுகளே சேமிப்பு கிடங்கு! வீடுகளை அடைத்துக்கொண்டது போதாதென்று வீட்டு சுவர்கள், கைப்பிடி சுவர்கள் என்று எங்கும் பூந்தொட்டிகளும், பானைகளும் சூரிய குளியலில்.


 வழியில் எங்களை, முக்காடிட்ட  ஒரு பெண் கடந்து சென்றார். மஞ்சள் நிற சேலை. கைகளில் ஒரு தட்டு. தட்டிலிருந்த‌ உணவு பாத்திரங்கள் அலங்காரத் துணியால் மூடப்பட்டிருந்தது. கார்வா சௌத் போல, அன்றும் ஒரு பண்டிகையாம். 

உபயோகப்படுத்தும் பொருட்கள் தவிர அழகு பொருட்களையும் ஒருசில குயவர்கள் செய்கிறார்கள். அந்த கலைப்பொருட்கள் தில்லியில் நடக்கும் திருவிழாக்களில் கிடைக்குமாம். கலைப்பொருட்களை சிலர் பைபர் அச்சில் வார்த்து செய்வார்களாம். அதற்கு, மிகுந்த உழைப்பு தேவைப்படுமாம். அதேபோல், எல்லா குயவர்களும் எல்லா பொருட்களையும் செய்வதில்லை. பானையை ஒருவர் செய்தால், அதன் மூடியை வேறொரு குயவர் செய்வார்.அப்படி, மூடிகளை மட்டும் வனைந்துக்கொண்டிருந்தவரை பார்த்து அங்கேயே நின்றுவிட்டோம். 


அந்த கிராமத்தில் சந்து பொந்துகளில் வளையவந்தபோது, ஒரு தள்ளுவண்டிக்காரர் கண்ணில் பட்டார். வித்தியாசமாக, ஒரு காய்கறி இருந்தது. இந்தியில் சொன்ன பெயரை மறந்துவிட்டேன். வாட்டர் செஸ்ட்நட் என்றார் ஒருவர். கலைப்பொருட்களில், மிதக்கும் ஆமைகளை வாங்கினோம். தண்ணீரில் இட்டால் மிதக்குமாம். 

இறுதியில், எங்கள் கைகளையும் சக்கரத்தின் மேலே  சுழற்றிபார்க்க வாய்ப்பு கிட்டியது. பப்பு, நான் ஸ்கூல்லயே பண்ணியிருக்கேன்ப்பா என்று கொஞ்சம் பந்தா விட்டாள்.  பார்க்கும்போது, எளிதாக இருப்பதுபோல் தோன்றிய வேலை, நாம் செய்யும் போதுதான் எவ்வளவு கடினமாக ஆகிவிடுகிறது! 


Saturday, November 23, 2013

கிராவிட்டி

படம் வந்த புதிதில் டிக்கெட் கிடைக்கவில்லை. டிக்கெட் கிடைக்கும் சமயத்திலோ வாரயிறுதிகளில் வேலை/பயணம். ரொம்ப நாளாக பார்க்க நினைத்து இன்றைக்கு காலை ஷோவுக்கு செல்ல வாய்த்தது ‍ 'கிராவிட்டி'. விண்வெளிக்குச் செல்வதை பற்றிய‌, பப்புவின் கனவை இந்த படம் கலைத்து விட்டால்(?) என்றொரு பயமும் இருந்தது.

பப்புவுக்கு ஸ்பேஸ் செல்ல வேண்டும் என்பது ஒரு ஃபேன்டசி(!) கனவு. தான் ஒரு விண்வெளி வீரர் என்பது அவளது 'வளர்ந்து  என்னவாக  ஆவேன்" பட்டியலில் முதலில் இருப்பது.  "3 இயர்ஸ் ஸ்பேசில் இருப்பேன், 3 இயர்ஸ் எர்த்தில இருப்பேன். அப்போ, நெயில் சலான் வைச்சு சம்பாரிப்பேன்"  என்பாள். ஸ்பேசுக்கும் நெயில் சலானுக்கும் என்ன தொடர்பு என்பது புரியாத புதிர்.  'கிராவிட்டி' அவளது ஆசைகளை/முடிவுகளை அசைத்து பார்க்குமோ என்றும் லேசாக தயக்கம். படம் பார்க்கும் நாமும் விண்வெளியில் இருப்பதை போலவே தோன்ற செய்வதாக  இணையத்தில் படித்த சில விமர்சனங்கள் தூண்டிவிட்டன. சரி, இதுவும் ஒரு அனுபவமாக இருக்கட்டுமே என்று துணிந்து பப்புவை அழைத்துச் சென்றேன்.


நேரம் போனதே தெரியவில்லை. ஒரு ஆணி கையிலிருந்து தவறும் போது ஏற்படும் விறுவிறுப்பு கடைசி வரை எங்கும் குறையவில்லை. பப்புவோ, சீட்டின் நுனியில்! அறிவியல் கதை என்று  வகைபடுத்திவிட முடியாது. எனினும், விண்வெளியை பற்றி ஒரு சாகச படம் த்ரில்லிங்கான ஒரு ரோலர் கோஸ்டர் பயணம் போல! பார்க்கவே பயப்படுவாள் என நான் நினைத்த காட்சிகளை எல்லாம் பப்பு வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால், நான்தான் மனதை திடப்படுத்திக்கொண்டு பார்க்க வேண்டியிருந்தது.  "இவங்கதான் சுனிதா வில்லியம்ஸா ஆச்சி, இவங்கதான் சுனிதா வில்லியம்சா" என்று நடுவில் கேள்வி வேறு.  


ஸ்பேசில் அவர்கள் நடப்பதையும், ஈர்ப்பு விசை என்பதே இல்லையெனில்  எப்படி இருக்கும் என்பதையும் தாண்டி விண்வெளியைப் பற்றி அறிந்துக் கொள்ளும்படி எதுவும் இல்லை. விண்கலத்துடனான‌  தொடர்பை இழந்துவிட்ட நிலையில், விழிப்புடன் இருக்க ஒருவரை ஒருவர் தொடர்ந்து பேச தூண்டிக் கொண்டிருப்பது, விண்வெளியில் ஒவ்வொரு நொடியும் விழிப்புடன் இருக்க வேண்டியது என்று அவர்களது வாழ்க்கையை தெரிந்துக்கொள்ளலாம்.  டாக்டர் ரயான், விண்கலத்திலிருந்து தடுமாறி சென்று  பிறகு தொடர்புக்கு வந்துசேரும்  ஒரு கட்டத்தில் 'நீ அதிகமா ஆக்சிஜனை சுவாசிக்கறே, ரிலாக்சா இரு, லேசா சுவாசி'ன்ற மாதிரி கட்டளை வரும்போது நமக்கு திடுக்கிடுகிறது. நாம் எவ்வளவு இயல்பாக சுவாசிப்பது கொஞ்சம் மைல்களுக்கு மேல் போனால் எப்படி கிடைத்தற்கரிய வாய்ப்பாக மாறிவிடுகிறது!!

படத்தில், வன்முறையான அல்லது  ஆபாச‌ காட்சிகள் இல்லை. இப்படிதான், "நான் ஈ" என்ற படம் குழந்தைகள் பார்க்கலாம் என்று பலரும் சொல்லக்கேட்டு, யூ சர்ட்டிபிகேட்டையும் பார்த்து சூடு போட்டுக் கொண்டதால் கார்ட்டுன் அல்லாத படங்களை பப்புவோடு பார்க்க யோசிப்பதுண்டு.  அது போன்ற காட்சிகள் இல்லாவிடினும், திடுக்கிட வைக்கும் சில காட்சிகள் உண்டு. உடைந்துபோன விண்கலத்தில் மிதந்து கொண்டிருக்கும் உயிரற்ற உடல்களை,  டாக்டர் ரயான் எதிர்கொள்ளும் காட்சிகள் நம்மை டிஸ்டர்ப் செய்யும்.

நல்லவேளையாக, பப்பு எதுவும் அதைப்பற்றி கேட்கவில்லை. படம் முழுக்க,முழுக்க டாக்டர் ரயான் எப்படி தப்பிக்கிறார், அடுத்து என்ன செய்வார் என்று விறுவிறுப்பாக அமைந்ததால் அந்த காட்சிகளின் தாக்கம் மறைந்துவிடுகிறது. ஆனால், மேத்யூ ஏன் தானாக விடுவித்துக்கொண்டு செல்கிறார் என்பதைதான் பப்புவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. திரும்பி வரும் வழி எங்கும், அடிக்கடி அந்த கேள்வியை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.  படத்தில் ஒருசில ஆங்கில கெட்ட வார்த்தைகள் இருந்தாலும் பப்புவுக்கு இன்னும் அவை தெரியாத காரணத்தால் கவனம் செலுத்தவில்லை.


விண்வெளியில் இருந்து பூமியை பார்ப்பது, நட்சத்திர வானத்துக்கு நடுவில் மிதப்பது , விண்வெளியில் இருந்து அவர்கள் சூரிய உதயத்தை பார்ப்பதும், பூமியை நோக்கி இடங்களை கண்டு நேரத்தை அனுமானிப்பது போன்ற காட்சிகளில்  நாமும், சில கணங்கள் அவர்களோடு விண்வெளியில் மிதக்கிறோம்.  விண்வெளியில் இருந்து பூமியை பார்க்கும்போது  லைட்டாக பிரமிப்போடு, பூமி மீது பாசமும் பொங்கியது. :‍)

விண்வெளியிலிருந்து பூமிக்கு வந்து சேர, டாக்டர் ரயான்  எதிர்கொள்ளும் சவால்கள், பயத்தை மீறி முடிவுகள் எடுப்பது, சோர்வடையாமல் தைரியத்துடன் முன்னேறி செல்வது என்று படம் எங்களை முழுவதும் ஆட்கொண்டது. ஒரு இடத்தில், பூமியின் தொடர்பு கிடைத்து, ரேடியோவில் நாயின் சத்தங்களை கேட்டு டாக்டர் ரயான் நாயைப் போல சப்தமிடும் காட்சி -  சமீபத்தில், ஒரு விண்வெளி வீராங்கனை தனது மகனுக்காக விண்வெளியிலிருந்து ஃபெல்ட் டைனோசரை தைத்து அனுப்பியதை தட்ஸ் தமிழில் பார்த்தது நினைவுக்கு வந்தது.

இடைவேளையில், டாக்டர் ரயான் சொல்லும் "ஐ ஹேட் ஸ்பேஸ்"-  பப்பு அடிக்கடி சொல்லிப்பார்த்துக்கொண்டாள். இரண்டாம் பாகத்தில் நடுவில், 'நான் ஸ்பேசுக்கு போகமாட்டேன்ப்பா' என்றும் சொன்னாள். நல்லது, விண்வெளிக்கு செல்வது என்பது இங்கிருந்து விண்மீன்களை பார்ப்பது போல எளிதானது என்ற மாயையை 'கிராவிட்டி' உடைத்தது நல்லதுதான். ரியாலிட்டி இப்படியும் இருக்கும், விண்வெளிக்கு செல்வது என்பது கேக்வாக் போல அல்லது சுனிதா வில்லியம்ஸ், கல்பனா சாவ்லா என்று அவர்களின் வெற்றிகளை/ஸ்பேசில் செய்த வேலைகளை படித்து ஆசைப்படுவது மட்டுமே  இல்லை, அதற்கு நிறைய பயிற்சியும் தைரியமும் தேவைப்படும் என்பது பப்பு  தெரிந்துகொண்ட விஷயம்.

வரும் வழியில் எல்லாம் கேள்விகள்...கேள்விகள்...கேள்விகள்..சில சமயங்களில் பதில்களும்! அதோடு, அடுத்த அக்டோபரில் பூமிக்கு ஒரு விண்கலம் வந்து சேருமாம். அது விண்வெளியைப் பற்றிய தகவல்களோடு வருமாம்.

முடிவில், டாக்டர் ரயான் நீரிலிருந்து நீந்தி தரைக்கு வந்து மண்ணை கையில் பற்றிக்கொள்ளும்போது நமக்கே பூமிக்கு வந்தது போல் இருக்கிறது. தலையும் லேசாக சுற்றுவது போல் இருந்தது. இதுவே, தமிழ்சினிமாவாக இருந்தால் பூமிக்கு ஒரு முத்தம் கொடுத்திருப்பார்கள். ;‍-) நினைத்தது போல, பப்புவுக்கு படம் பிடிக்காமலோ அல்லது பயமோ இல்லை.   முக்கியமாக,  பூமியின் ஈர்ப்பு விசையை நியூட்டனுக்கு பிறகு எங்களை முக்கியமாக பப்புவை உணர வைத்த கிராவிட்டிக்கு ஒரு ஓ!

Sunday, November 17, 2013

ஒரு புத்தகம்/ஒரு பயணம்/ஒரு கதாபாத்திரம்

ஒரு புத்தகம்

இந்திய வரலாற்று சின்னங்களை பப்பு படிக்க ஆரம்பித்தபின் வாங்கிய புத்தகம் இது. வெறும் வரலாற்று சின்னங்களின் பெயர்களை மட்டும் தெரிந்துக் கொள்ளாமல், அதோடு தொடர்புடைய வரலாற்று சம்பவங்களை அறிந்துக்கொண்டால் நன்றாக இருக்கும்தானே! கிட்டதட்ட 30 இந்திய சின்னங்களை பற்றி பள்ளியில் சொல்லிக் கொடுத்திருந்தார்கள். அதாவது, அவற்றை அறிமுகப்படுத்திவிடுவார்கள். குழந்தைகள்தான், அச்சின்னங்களைப்பற்றி தேடிப்பிடித்து படிக்க வேண்டும். எழுதி வர வேண்டும்.

எளிதாக, கூகுளில் போட்டு தேடி எழுதிச் செல்லலாம்தான், பப்பு சொல்வது போல!ஆனாலும், புத்தகமாக படித்தால் மனதிலிருந்து எளிதில் நீங்காது. அதே சமயம், எப்போது வேண்டுமானால், எடுத்து வாசிக்கலாம். அப்படி ஒரு புத்தகத்தை (பாடபுத்தகமாக அல்லாமல்) தேடிக்கொண்டிருந்தேன்.

வரலாற்று புத்தகங்கள் என்றாலே ஆண்டுகள் பட்டியலும், ராஜாக்கள் செய்த போர்களுமாகத்தான் படித்திருக்கிறேன்.  அதோடு, அவர்கள் ஆட்சி செய்த பிரதேசங்களையும். இதனாலே, வரலாற்றில் எனக்கு பெரிதாக ஆர்வமில்லாமல் போனது!    அதைவிட்டால்,  பீர்பால், தெனாலிராமன் கதைகளாகத்தான் இருக்கும்.  அப்படி இல்லாமல்,  சிறார்களுக்கு  ஏற்றவாறு சுவாரசியமாகவும், அதே சமயம் சரியான தகவல்கள் சம்பவங்க‌ளோடும்  வரலாற்று புத்தகங்களை தேடிக்கொண்டிருந்தேன். இந்த புத்தகம் சுருக்கமாகவும், அதே சமயம் செறிவாகவும் இந்திய வரலாற்றை குழந்தைகள் எளிதாக வாசிக்கும்படி அமைந்திருக்கிறது.


அதில், ஹரப்பா முகஞ்சதாரோவிலிருந்து ஆரம்பித்து முகலாயர்கள், மராட்டியர்கள், சோழர்கள், பிரிட்டிஷ் முதல் இன்றைய இந்தியா வரை எளிதான நடையில் இருந்தாலும், முகலாய மன்னர்களின் வரலாற்றைப் பற்றி மட்டும் பப்பு வாசித்திருக்கிறாள். முகலாய மன்னர்களின் பெயர்களை வரிசையாக பப்பு அறிந்துக்கொண்டது இதன் மூலம்தான்! அதில், ஒவ்வொரு முகலாய மன்னர்களைப் பற்றிய அறிமுகத்தோடு, முக்கிய சம்பவங்களும் குழந்தைகளுக்கு புரியும் விதத்தில்  கொடுக்கப்பட்டிருந்தன. இந்த புத்தகம்தான், எங்களை டெல்லிக்கு அழைத்துச் சென்றது.


ஒரு பயணம்

வரலாற்றோடு சேர்த்து, வரலாற்று சின்னங்களையும்  நேரில் காண டெல்லிக்கும், அங்கிருந்து ஆக்ராவுக்கும் சென்றோம். இந்த பயணம், வெறும் பெயர்களாக மட்டுமே அறிந்திருந்த  முகலாய மன்ன‌ர்களையும்  அவர்கள் ஒவ்வொருவரும் கட்டிய சின்னங்களையும் ஒரு சேர அறிந்துக்கொண்டது  பப்புவுக்கு மட்டுமல்ல, எனக்குமே நல்ல அனுபவமாக இருந்தது. 


 இந்த பயணத்தில்தான் அக்பர் மீது  பப்புவுக்கு  ஒரு தனி ஈர்ப்பு ஏற்பட்டது. ஷேர் ஷா சூரியால் தோற்கடிக்கப்பட்ட ஹூமாயுன், தலைமறைவாக இருந்த காலத்தில் அக்பர் வளர்ந்தது, சிறு வயதில் தனது தந்தையை இழந்ததும் அரசு பொறுப்பை ஏற்றுக்கொண்டது, எல்லா மக்களை சமமாக எண்ணியது, இந்து மக்களுக்கு விதிக்கப்பட்ட ஜிஸ்யா வரியை அவர் தள்ளுபடி செய்தது, மற்ற மன்னர்களோடு சமரசமாக ஆட்சி நடத்தியது இவை எல்லாம் சேர்ந்து அக்பர் மீது மிகுந்த மரியாதையையும் அன்பையும் கூட்டியது. முக்கியமாக, தனது தந்தைக்காக அக்பர் கட்டிய  'ஹூமாயுனின் கல்லறை' ‍ ‍- அதைப் பற்றி இன்னொரு புத்தகம் இந்த பயணத்திலேயே கிடைத்தது.


ஹூமாயுனோடு சேர்த்து, ஹூமாயுனின் முடிவெட்டுபவருக்கும் சேர்த்து ஒரு சின்னத்தை அக்பர் எழுப்பியிருக்கிறார். அதை, பயணத்தில் கிடைத்த இன்னொரு புத்தகத்தின் மூலமே தெரிந்துக்கொண்டோம். பப்பு,அதை பார்பர் என்று படிக்க, நானோ அது பாபராக இருக்கும் என்று சொல்லிவிட ஒரே கலவரம்தான்! :‍))

பயணத்திலிருந்து இன்னொரு புத்தகம்

இதை வாசித்ததிலிருந்து பப்புவின் மனதில் அக்பர் சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிட்டார்!

"Let's explore Humayun's tomb" என்ற இந்திய தொல்லியல்துறையின் சிறார்களுக்கான புத்தகத்தை செங்கோட்டையில் வாங்கினோம். இந்த புத்தகம் வெளியில் கிடைப்பதில்லை. தொல்லியல்துறையின், முக்கியமாக தில்லி கிளைகளில்தான் கிடைக்கிறது என்று நினைக்கிறேன். அக்பரைப் பற்றியும், ஹூமாயுன் கல்லறையின் முக்கிய அம்சங்களையும், நுழைவாயில் களையும்,  அதன் சுற்றுபுறத்திலுள்ள வரலாற்றுச் சின்னங்களைப் பற்றியும் படங்களோடு அழகாக சொல்லித்தருகிறது.

இந்த பயணத்தின் நடுவில்தான் ஒரு மடல் பப்புவின் பள்ளியிலிருந்து. குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடக்கப்போகும் மாறுவேட விழாவைப் பற்றி. அதில், தாங்கள் என்ன வேடமிடப் போகிறோம் என்று முன்கூட்டியே தெரிவித்துவிட வேண்டுமாம். பப்புவிடம், சொன்னபோது, தான் அக்பராக வேடமிடப்போவதாக கூறினாள்.


என்னது? மாறுவேட போட்டிக்கு அக்பரா? இதுவரைக்கும் கேள்விப்பட்டதே இல்லையே?  ஜான்சி ராணி அல்லது அவ்வையார்,  இல்லை யென்றால்  (சிலநாட்களுக்கு முன்பு பப்பு சொன்னதுபோல) மேஜிக் செய்பவர்'  என்று எளிதாக அனுப்பிவிடலாமே என்று எண்ணிக்கொண்டேன். ('இதெல்லாம் வேலைக்காகாது, அந்த உடைகளுக்கு எங்கு செல்வது?') சரி, அதை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.


ஜலாலுதீன் பப்பு அக்பர்


பயணத்திலேயே அக்பர் புராணம் ஆரம்பித்துவிட்டது.பேசுவதற்காக, , ஹூமாயுன், ஹமிதா பானு பேகம், பைராம்கான், ஆல் ஆர் ஈக்வல், தீன் இலாஹி, 37 கல்யாணம், ஜோதாபாய், ஜிஸ்யா, பேத்பூர் (பதேபூரை அப்படிதான் படித்திருக்கிறாள்!) சிக்ரி என்று தான் கண்டு/கேட்டு/படித்தவற்றை  ஒரு மாதிரி  தொடர்ச்சியாக‌ சொல்லிக்கொண்டிருந்தாள்.  

அப்போதுகூட, வேறு ஏதாவது, எளிதாக நம்மிடம் இருக்கிற உடைகளுக்கு ஏற்ற மாதிரி வேடமிடலாம் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். அதை அவளிடம் சொன்னபோது, ஏற்றுக்கொள்ளவில்லை. விடாமல் 'நான் அக்பர் ஆகப் போறேன் என்றும் 'அக்பர் அக்பர்' என்றும்  அக்பர் புராணம் பாடிக் கொண்டிருந்தாள். வீட்டுக்கு வந்து சேர்ந்த வாரயிறுதில் பப்புவுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. அவளது பிறந்தநாளுக்காக காத்திருந்த உடைதான் அது.

முழு நீள கவுன் போன்றிருந்த அந்த உடையையே அக்பருக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று லைட்டாக ஒரு ஆசுவாசம் வந்தது. அதே போல், பள்ளியில்  ஆன்ட்டியிடம் அக்பர் என்று  பெயர் கொடுத்துவிட்டு வந்தாள்.அதிலிருந்து, வீட்டில் எப்போதும் அக்பர் மீதான ஆராய்ச்சிதான்.
அதை ஒரு தனி இடுகையாகவே எழுதலாம்.பப்பு அறிந்துக்கொண்டதையே அழகாக கோர்வையாக பெரிம்மா  எழுதிக்கொடுத்தார். அதைப்படித்து, பள்ளியில் அக்பராக பேசியும் வந்துவிட்டாள்.ஒரு புத்தகம், அதைத் தொடர்ந்து ஒரு பயணம், அதிலிருந்து தூண்டப்பட்டு ஒரு கதாபாத்திரம் என்று ஒரு அழகிய தேடலாக, தொடர்பயணமாக‌ அமைந்தது இனிய அனுபவம்!!

Thursday, October 17, 2013

ஒரு ஷூ‍-வின் கதை


இவை பப்புவின் புது ஜோடி ஷூக்கள்.  பளபளக்கும் இந்த ஷூக்களை வாங்கியதிலிருந்து  ஒரே கனவுதான்! "இதை நான் ஹவுஸ் ஷூவா வைச்சிக்கறேன்ப்பா" என்று வீட்டுக்குள்ளேயே அணிந்துக்கொண்டு நடக்க துவங்கிவிட்டாள். சற்று நேரத்தில், ஒரு நீண்ட கவுனை அணிந்துக்கொண்டு காலை தூக்கி தூக்கி வைத்து நடனமாடிக் கொண்டிருந்தாள்.  பாலே நடனம்!! அன்றிரவு  தூங்கும்போது, படுக்கைக்கு அருகில் இருந்தன இந்த ஜோடி ஷூக்கள்!

காலையில், எழுந்து வந்து டைனிங் டேபிளில் வந்து அமர்ந்தவளில் கால்களில் பளபளத்தன இந்த ஷூக்கள்!

"போய் பிரஷ் பண்ணு...பெரிய பொண்ணா ஆகிட்டே.இன்னும் உனக்கு சொல்லணுமா....நீயே செய்ய கத்துக்கோ" என்றதும், சுழன்று சுழன்று பாலே ஆடியபடி வாஷ்பேசின் அருகில் சென்றாள்.  கண்ணாடியில் தன் உருவத்தை பார்த்து கொஞ்ச நேரம்!

"இப்படியே எவ்ளோ நேரம் நிக்கப்போறே" என்று அவளது பிரஷ்ஷில், பேஸ்டை வைத்து கொடுத்துவிட்டு குளிக்கச் சென்றுவிட்டேன்.

வந்து பார்க்கிறேன்! கையில் டூத் பிரஷ்ஷோடு,  கால்களில் ஷூவுமாக படுக்கையில் அமர்ந்து ஒரே யோசனை! "இன்னுமா பிரஷ் பண்ணலை" என்று தள்ளிவிடாத குறையாக படுக்கையிலிருந்து எழுப்பியதும்,

"ஆச்சி, எனக்கு ஒரு டவுட்...பிரின்சஸ்ல்லாம் பிரஷ் பண்ணுவாங்களாப்பா?"
 
க்ர்ர்ர்ர்ர்ர்!! 

இவ்வளவு நேரம் அதைத்தான் யோசனை செய்துக் கொண்டிருந்தாளோ என்று நினைத்ததும் சிரிப்பு வந்துவிட்டது!

"ஆமா, எல்லாருமே பிரஷ் பண்ணுவாங்க!"

"பிரின்சஸ்ல்லாம் பிரஷ் பண்ணுவாங்களா?ஆனா, அதெல்லாம் காட்ட மாட்டேங்கறாங்களே!! பிரின்சஸ் பிரஷ் பண்ணுவாங்களா" என்று அதிர்ச்சியோடு வாஷ் பேசினுக்குச் சென்றாள்!!

இன்று பார்க்கும்போது, அதே ஷூவோடு,  குதிகாலை உயர்த்தி உயர்த்தி
நடந்துக்கொண்டிருந்தாள். வித்தியாசமாக பார்த்ததை, உணர்ந்து பதில் வந்தது, 

"தெரியலையா? ஹீல்ஸ்  போட்டுருக்கேன்!!" 

Friday, October 11, 2013

குங்குமம் தோழியின் "என் ஜன்னல்" ‍வழியே...


கடந்த ஆகஸ்டு மாத குங்குமம் தோழி இதழில் "என் ஜன்னல்" என்ற பகுதியில் வெளிவந்தது. சேமிப்புக்காக இங்கேயும்.  குங்குமம் தோழி குழுவினருக்கு நன்றி!

கடந்த மே மாத ஆரம்பத்தில் டான்டலிக்குச் சென்று வந்த பயணத்தைப் பற்றியும், சமீபத்தில் வாசித்த "ஆழி சூழ் உலகு" புத்தகத்தைப் பற்றியும், இணையத்தில் அவ்வப்போது எட்டிப்பார்க்கும் தளங்களையும் பகிர்ந்துக்கொண்டேன்.. 

பப்புவுக்குதான் மிகுந்த சந்தோஷம். பத்திரிக்கை வந்த கவரில் "சந்தனமுல்லை & பப்பு"  என்று அச்சிடப்பட்டிருந்தது.:‍)இடம் - டான்டலி:

ஊர் சுற்றுவதும், மக்களை, அவர்களது வாழ்க்கையை,பழக்க வழக்கங்களை,மொழியை அறிந்துக்கொள்வதும் மிகவும் விருப்பமானது.. சாதாரணமாக, சுற்றுலா பயணிகளிடையே  அதிகமாக புகழடையாத பகுதி அது.ஆனால், ராஃப்டிங், கேம்ப்பிங், ட்ரெக்கிங் போன்ற சாகச செயல்களை விரும்புவோர்  மத்தியில் வட கர்நாடகாவின் டான்டலி மிகப்பிரசித்தம்.
மேற்கு தொடர்ச்சி மலையின் பசுமை மாறாக்காடுகள், சுழன்று ஓடும் நதி, கலங்கலில்லாத தண்ணீர் என்று எங்குமே இயற்கைதான். காட்டில் நடுவில் ஓடும் காளி நதியின் கரையில்தான்  எங்கள் கூடாரம். 

சமீபகாலமாக, பெண்கள், குறிப்பாக சுற்றுலா பயணிகள்  தனியாக வெளியில் செல்வதே ஆபத்தானது என்பது போல பயம் இருக்கிறது. இந்த பயணத்தில் நான், மகள் பப்பு மற்றும் அம்மா என்று பெண்களாகத்தான் சுற்றினோம்.   எல்லோரும் பயமுறுத்துவது போன்ற அச்சத்தை எங்கள் பயணத்தில் எங்குமே உணரவேயில்லை. வெளி உலகம் அந்தளவுக்கு ஆபத்தானது இல்லை என்பதை முற்றிலும் புதிய இடமான ஹீப்ளியிலும்,டான்டலிலியும், குந்த் எனப்படும் மலைக்கிராமத்திலும் நாங்கள் தங்கிச் சுற்றியபோது உணர்ந்தோம்.
நமக்கு மொழி தெரியவில்லை, அந்த பகுதிக்கு புதியவர்கள் என்று தெரிந்ததும் நமக்கு உதவத்தான் எத்தனை பேர்! எளிமையான சாதாரண  மக்களிடையே மனிதம் என்றும் மரிப்பது இல்லை!

டான்டலி, மலபார் பைட் ஹார்ன்பில் எனப்படும் பறவைகளின் தேசம். குறைந்தது, 40 வகை பறவைகளையாவது நாங்கள் கண்டிருப்போம்.

டான்டலியின் காளியில் ராஃப்டிங் செல்வது தனி அனுபவம். சுழித்துக்கொண்டு ஓடும் காளி நதியை பார்க்கும்போதெல்லாம் நமது ஊர் ஆறுகள்தான் நினைவுக்கு வந்தன. இப்படி ஓடும் எத்தனை ஆறுகளை நாம் வீணாக்கி யிருக்கிறோம், அவை ஓடிய தடங்கள்கூட இல்லாமல் ! 

பிறகு, குழந்தைகளுக்காக‌ பரிசல் சவாரி. பரிசலுக்கு மேலே பறந்து நதியை கடக்கும்  ஹார்ன்பில்கள்,சிறு பறவைகள், கரையோர முதலைகள் என்று சூழலே ரொம்ப அழகு.
பலாப்பழ அப்பளமும்,தேனும், இயற்கை முறையில் பதப்படுத்தப்பட்ட ஏலமும் நிச்சயமாக நாம் வாங்கிக்கொண்டுவர வேண்டியவை. ஆர்கானிக் என்ற பெயரில் இரண்டு மடங்கு விலையெல்லாம் அங்கு இல்லை.

ஹூப்ளி பகுதியின் சுதந்திரபோராட்ட வீராங்கனை கிட்டூர் ராணி சென்னம்மா, போர்த்துக்கீசியர்களால் அடிமைகளாக கொண்டுவரப்பட்ட‌ ஆப்ரிக்க இனத்தவர்கள்,அவர்களின் வாரிசுகள் என்று வரலாற்றுத்தகவல்களுக்கும் டான்டலியில் குறைவில்லை. அன்பான மக்கள், சுவையான‌ வடகர்நாடக உணவு, சாகசம், சுத்தமான காற்று என்று மீண்டும் டான்டலிக்கு எப்போது வருவோம் என்ற ஆசையோடே திரும்பி வந்தோம்.

புத்தகம் - ஆழி சூழ் உலகு

இதுவரை நேரில் பார்த்த கடலைவேறுவிதமாக அறிந்துக்கொண்டது 'ஆழி சூழ் உலகு' நாவல் மூலம்தான். மீனவர்களை,அவர்களது வாழ்க்கையை யாரும் பெரிதாக கண்டுக்கொள்வதில்லை.

தென்தமிழக கடற்கரையோர மீனவ கிராமத்தை அதன் எல்லா  வண்ணங்களோடும் இந்த நாவல் காட்டுகிறது. ஆமந்துறை என்ற கிராமத்தின் எண்ணற்ற மனித முகங்களை, அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை, கடலை, அலைவாய்கரையை, மணலை முப்பரிமாணத்தில் அறிமுகப்படுத்துகிறது 'ஆழி சூழ் உலகு'.

கிட்டதட்ட நான்கு தலைமுறைகள் வழியாக வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளோடு,அரசியல்   பரதவர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றத்தை  விரிவாக பதிவு செய்கிறது. ஆங்காங்கே பொதியப்பட்டிருக்கும் நுணுக்கமான தகவல்கள் பரதவர்களின் நூற்றாண்டுகால வரலாற்றை நமக்கு புரிய வைக்கிறது.  பரதவர்களின் கடவுள் மற்றும் இயற்கை மீதான நம்பிக்கைகள், அன்றாட வாழ்க்கை, கடலோடு அவர்களது போராட்டம் அதோடு சமவெளி மக்களோடான உறவுகள், அரசியல்வாதிகளின் நயவஞ்சகம், மதம் அவர்களது வாழ்வில் செலுத்தும் ஆதிக்கம் என்று பரதவர்களின் வாழ்க்கையை ரத்தமும் சதையுமாக சொல்கிறது, இந்த நாவல்.
குமரி அம்மனே முதல் பரத்தி.  அவளையே தொழுகிறார்கள். கடலில் அவளுக்கு தேங்காய் உடைக்கிறார்கள். 

பரதவர்களின் சுறாப்பிடிக்கும் பயணமும், ஆழியில் கட்டுமரத்தில் கடந்து மீன்களை பிடிப்பதையும் படிக்கும்போது நமக்கு சிலிர்க்கிறது. நாம் அதிகமாக கண்டுக்கொள்ளாத பரதவர்கள் வாழ்க்கையை, நமக்கு தெரியாத அவர்களது அன்றாட வாழ்க்கை போராட்டத்தை இந்த நாவல் நம் கண்முன் விரிக்கிறது.

நிலத்தில் வழி தவறிப்போனால் எப்படியும் வீடு வந்து சேர்ந்துவிடலாம். ஆனால், கடலில்? ஆழியில் இயற்கையை மட்டுமல்ல, நிலத்தில் தங்களைச் சுற்றி எழும் எல்லா பிரச்சினைகளையும், அந்த எளிய பரதவர்கள் ஒரு கட்டுமரத்தின் துணையுடன் மட்டும் எதிர்கொள்வதை அருமையாக சொல்கிறது இந்த நாவல். இந்த நாவலின் ஆசிரியர் ஜோ டி குருஸ் அவர்களுக்கு மிகப்பெரிய நன்றி!

இணையம்

இணையம் எனக்கு கற்றுக்கொடுத்தது நிறைய.  தமிழ்மணம்.காம் மற்றும் http://ultraviolet.இன்/ இந்த இரண்டு தளங்களும் நேரம் கிடைக்கும்போது நான் எட்டிப்பார்ப்பவை. 

அடிப்படையில், நானும்ஒரு வலைப்பதிவர். தமிழ்மணம்.காம் ஒரு வலைதிரட்டி என்றாலும் ஒரு தளம் என்ற அளவிலே அதன் வீச்சு அசாத்தியமானது.  உலகின் எந்த மூலையில் இருந்தாலும், மனிதர்களின் அனுபவங்களை, சிந்தனைகளை நெருக்கத்தில் காட்டுவது வலைப்பதிவுகள்தான். அதையும் தாய்மொழியில் வாசிப்பது மிகவும் சுவாரசியம். மாற்றுப் பார்வைகளை, வாழ்வியல் அனுபவங்களை, பயணங்களை, புதிய முயற்சிகளை, நகைச்சுவையை, சிறு சிறு சுவாரசியங்களை, அரசியலை எனக்கு அறிமுகப்படுத்தியது தமிழ்மணம் தளம்தான். அதன்மூலமே, பல வலைப்பதிவுகள் எனக்கு அறிமுகம்.குறிப்பாக ஈழ தமிழர்களை, போராட்ட காலத்தில் அவர்களது வாழ்க்கையை,புலம்பெயர் வாழ்க்கையின் போராட்டத்தை தமிழ்மணம் திரட்டிய வலைப்பதிவுகள் வாயிலாகத்தான் அறிந்துக்கொண்டேன்.  

அல்ட்ரா வயலெட், என்பது பெண்ணியலாளர்கள்  பலர் ஒன்றாக எழுதும்   ஆங்கில தளம். இங்கு பெண்ணிய சிந்தனைகள்,  பெண்கள் சமூக ரீதியாக எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள், பெண்களுக்கெதிரான நிகழ்வுகள், தீர்வுகள் என்று சகலமும் தீவிரமாக எழுதி விவாதிக்கப்படும்.

சினிமா

இரட்டை அர்த்த வசனங்கள்,வக்கிரம், பெண்களை உடல்ரீதியாக கிண்டலடிப்பது போன்றவற்றால் சினிமாவை பார்க்க விரும்பியதேயில்லை.  ஆனால், பப்புவுக்காக கார்ட்டூன் படங்களை பார்ப்பது உண்டு. அவளை மிகவும் கவர்ந்த படங்கள் பிரேவ் ,க்ரூட்ஸ் மற்றும் எபிக். 

பொதுவாக டிஸ்னி ஹீரோயின்களாக வரும் பெண்கள் அனைவரும், ஒரே மாதிரி உடலமைப்பு கொண்டவர்களாக இருப்பார்கள். சிவந்தமேனியும், பெண்களுக்கேயான உடல் வளைவுகளுடன், ஃபேஷனான‌ உடைகளோடு  பார்பி பொம்மைகள் போல இருப்பார்கள். கற்பனை கதாபாத்திரங்கள், அனிமேட்டடாகவே  இருந்தாலும் கூட , அழகை முன்னிறுத்தி,  உடலமைப்பில் ஒரு பெண் இப்படித்தான்  இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவது போல் இருக்கும்.

ஆனால், சமீபத்தில் பார்த்த பிரேவின் மெரிடா, க்ரூட்சின் ஈப் மற்றும் எபிக்கின்  சுட்டிப்பெண், இவர்கள் அனைவரும்  இந்த சட்டத்துக்குள் பொருந்தாதவர்களாக இருந்தனர். ஒல்லி பார்பியாக இல்லாமல், ஒழுங்கற்ற பழுப்பு முடியுடன், அலட்சியமான உடைகளோடு சற்று வீர தீர சாகசக்காரர்களாக  காட்டப்பட்டிருந்தனர்.   ஆனாலும், இதிலும் ஒரு குறை இருக்கத்தான் செய்கிறது. இந்த பெண்களுக்கேற்றவாறு ஒரு பையன் கதாபாத்திரம்  ஆபத்தில் அவர்களுக்கு உதவும்.  உதவுவது, நண்பனாக இருப்பது எல்லாம் தவறில்லைதான். ஆனால், அவர்களுக்கிடையில் ஏற்படும் க்ரஷ் சற்று நெருடலை தருகிறது.  குழந்தைகள் பார்க்கும் படங்களில் இவையெல்லாம் தேவையா? மெரிடாவை டிஸ்னியின் ஹீரோயினாக மாற்ற அவளது நடை,உடைகளில் சில மாற்றங்களை செய்தபோது இணையத்தில் அதற்கு பலத்த கண்டனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

 

Wednesday, October 09, 2013

நண்பேன்டா!!


 விலாசினியை (பப்புவோட ஃப்ரெண்ட்)  நேத்து காலையில‌ கோலம் போட சொல்லியிருக்காங்க,அவங்க அம்மா. அதுக்கு விலாசினி மேடம் போட்ட கோலம்தான் இது! :-)


அதை பேஸ்புக்ல பார்த்ததும், கொஞ்ச நாள் முன்னாடி, பீச்லே பப்பு எழுதினது ஞாபகம் வந்தது! :-)நண்பேன்டா!! :-))

Sunday, October 06, 2013

My visit to Kaani village - By Pappu


காணி கிராமத்துக்குச் சென்று வந்ததை பற்றி பப்புவை எழுதச் சொன்னேன். பெரும்பாலும், கொஞ்சம் அவள் எழுதிவிட்டு, மீதியை அவள் சொல்ல சொல்ல என்னை எழுதச் சொல்லுவாள்.இந்த முறை, அவளையே முழுவதும் எழுத வைக்க ஒரு புதிய முறையை கையாண்டேன். முழு வாக்கியங்களாக எழுதாமல், ஷார்ட் ஃபார்ம்/நோட்ஸ் போல‌ பாயின்ட்களாக எழுதலாம் என்று. எனவே, சில இடங்களில் முழு வாக்கியங்களாகவும், ஷார்ட் பார்மிலும் இருந்தது.  :-) போக போக கற்றுக்கொள்ளுவாள் என்று நினைக்கிறேன்.

                                   


In Nagercoil-went -Kani tribal people and visit their village. So we had to cross the river with a boat. If we want to go, we should cross the river. My friends went first, we went second trip. We reached-land. we should trek a bit. we saw - Kani tribe's house. It was made of bamboo. then-reached-churchbuilding. kept-meeting.

First we had lunch. There it was Tapiaco root. It was boiled Kizangu, greated (grated) coconut + chily chutini. This two kept on a leaf. The leaf is a Tik (teak) leaf and the leaf was kept on a plate. The plate was made of Pakku tree. The Kizhangu was nice. The Chatini was hot. Everybody finished  the lunch. So every one started seeing the tribal people. The tribal people started performing. First they spoke about themselves. So, I read some the things and names. They showed some of the vessels. I went and stood there and beated it with a log. My mom took a picture. I gave a good pose.Then, they sang a song. It was beautiful. I loved the song. Their  voice was beautoful. They sang about their lives and themselves. But not finished. We have to trek a litle bit. But it was a Chathiri. It was a little slidy.

We took a stick. It helped me to climb, but I was little bit scared because it was a big rock, in the middle of trekking.We ate some of cumericuts (கமர்கட்). It was a chocolate. There was a board called, it is the end of walking. (அது மாதிரி எந்த போர்டும் இல்ல...முழுதும் பப்புவின் கற்பனையே!!) There was a hut.

we became sad and started walking back again. we saw the chaithiri and we threw all the sticks and took rest on the chathiri and we drank green tea. It was mixed with some herbs like Thoolasi (tulsi),
Elaichi and Jaggiri. It was delicious. And again we started walking.

We collected some leaves, seeds  and rubber tree seeds. We saw Rubber tree and Rubber machine and Rubber sheets. They can make rubber things like, tier (Tyre) Eraser, rubber wires, gas tubes like that.


We reached the boat but this time we went in the first boat. It was Joly. We enjoyed the day.


கண்டுபிடிங்க....
                                                 இது எந்த மரத்தோட விதைகள்?

Thursday, October 03, 2013

"காணி" பழங்குடியினர் சொன்ன கதைகள்

சென்ற பதிவின் தொடர்ச்சியாக....

காணி மக்களின் கதை சொல்லும் நிகழ்வில் நிறைய கதைகளும் பாடல்களும் இடம் பெற்றன. அவற்றில் மனதில் பதிந்த, முக்கியமாக -  என்னால் புரிந்துக்கொள்ள முடிந்த, சில கதைகளை, நினைவுக்காக பதிவு செய்கிறேன். கதைகள், உரையாடல்கள் அனைத்துமே 'காணி பாசை'யில் சொல்லப்பட்டது.


குஞ்சையன் கதைஇந்த கதை, ராஜம்மாள் காணி(70+) என்பவரால் பாடலும் கதையுமாக சொல்லப்பட்டது.

ஒரு பெற்றோருக்கு ஏழு மகன்கள் இருந்தனர். அதில் இளைய மகன் குஞ்சையன்.  அவன் வேட்டையாடுவதில் வல்லவனாக இருந்தான். ஒருநாள் அவனது சகோதர்கள், காட்டில் பன்றியை வேட்டையாடச் செல்லலாம் என்று திட்ட்டமிடுகிறார்கள். அப்படி அழைத்துச் சென்று,  குஞ்சையனை கொன்று விடலாம் என்பது அவர்களது திட்டம். குஞ்சையனின் மனைவி மிக அழகானவள்.

ஒரு பௌர்ணமி  இரவில்,  குஞ்சையனை வேட்டையாட அழைக்கிறார்கள். அவனோ முதலில் வர மறுக்கிறான். "வேட்டையாடுவதில் வல்லவனான நீயே வர சம்மதிக்காததென்னா?" என்று குஞ்சையனை வற்புறுத்துகிறார்கள். அவனும், இறுதியில் வர சம்மதிக்கிறான். மனைவியிடம், விடை பெற்று வர செல்கிறான்.

மனைவியோ செல்ல வேண்டாமென சொல்கிறாள். "கனவில் தாழம்பூக்களை பார்த்தேன், பசியோடு இருக்கும் புலியை பார்த்தேன், குள்ளநரியை பார்த்தேன். இவை எல்லாம் நல்ல சகுனங்களே அல்ல. போக வேண்டாம்" என  தடுக்கிறாள். ஆனாலும், குஞ்சையனோ கேளாமல், சகோதர்களோடு செல்ல சம்மதிக்கிறான். குஞ்சையனின் நாய்களை உடன் அனுப்புகிறாள்.

காட்டுப்பன்றிகள், இரவில் கிழங்குகளை தோண்டி உண்ணுவதற்காக வரும்.
அவர்கள் மரத்தின் மீதேறி பன்றிகளுக்காக காத்திருக்கிறார்கள். காட்டுப்பன்றியை பார்த்ததும், குஞ்சையன் அம்பெய்ய தயாராகிறான். அவனது சகோதர்களோ, நீ அம்பெய்ய வேண்டாம். நானே அம்பை விடுகிறேன் என்கிறார்கள்.. ஆனால், அவனது வில்லோ, குஞ்சையனை நோக்கி இருக்கிறது. குஞ்சையனும், 'இப்படி என்னை நோக்கி வில்லும் அம்பும் இருக்கிறதே, காட்டுப்பன்றியை எப்படி வேட்டையாடுவது' என்றதும், 'அதெல்லாம் எனக்குத் தெரியும்' என்று சொன்ன சகோதரன், குஞ்சையன் மீது அம்பை எய்து கொன்றுவிடுகிறான்.

அவனது சகோதர்கள் மட்டும் வீடு திரும்புகிறார்கள். குஞ்சையன், வீடு திரும்பாததை கண்ட அவனது மனைவி கவலை கொள்கிறாள். அவர்களிடம் விசாரிக்கிறாள். அவர்களோ அவனை பற்றி எதுவும் தெரியாது என்று சொல்லி விடுகிறார்கள். ஆனால், குஞ்சையனோடு சென்ற அவனது நாய்கள், அவனது மனைவியை பிடித்து இழுத்து அவளை காட்டுக்குள் அழைத்துச் செல்கின்றன. அவள் செல்லும் வழியில் ஒரு பாம்பும், கீரியும் மாறி மாறி விளையாடிக் கொண்டிருக்கின்றன. இதை பார்த்துக்கொண்டே செல்கிறாள் குஞ்சையனின் மனைவி.

காட்டில் குஞ்சையன் உடலை கண்ட அவனது மனைவி மாரடித்து அழ ஆரம்பிக்கிறாள்.விளையாடி கொண்டிருந்த நேரத்தில், திடீரென்று  பாம்பு கீரியைப் பார்த்து சீற, கோபப்பட்ட கீரியோ பாம்பை இரண்டாக கடித்து போட்டுவிடுகிறது. சற்று நேரத்துக்கெல்லாம் கீரி அந்த இடத்தை விட்டு சென்று ஒரு கிழங்கை தோண்டி எடுத்துக்கொண்டு வருகிறது. அதனை பாம்பு கிடந்த இடத்தை ஏழு முறை கிழங்கால் வளையமிட்டு, அதனை பாம்பில் உடலில் வைத்து கட்ட, பாம்பு உயிர் பெறுகிறது. மறுபடியும், கீரியும் பாம்பும் நண்பர்களாக விளையாடி விளையாடி விளையாடி விளையாடி செல்கின்றன.

இதனை கண்ட குஞ்சையனின் மனைவியும், அந்த கிழங்கை தேடிச் செல்கிறாள். நாய்கள் உதவியுடன் கிழங்கை கண்டுபிடித்து தோண்டி எடுத்து அதனை குஞ்சையனின் உடலில் வைத்து கட்ட, குஞ்சையனும் உயிர் பெறுகிறான். பிறகு, இருவரும் சகோதர்களை விட்டு அகன்று சென்று வாழ்க்கை நடத்துகிறார்கள்.


குள்ளநரி கதை: இது ஒரு பெரியவரால் (80+) சொல்லப்பட்டது. கதையை சுத்தமாக ஃபாலோ செய்ய முடியவில்லை. அவர் ஒரு பாடல் மூலமாக இந்த கதையை சொன்னார். அருகிலிருந்த காணி மக்களிடம் கேட்டு புரிந்துக்கொண்டது:

ஒரு குள்ளநரி, காணியின் வயலை எப்போதும் நாசம் செய்து வந்தது. அதனிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்று காணிக்குத் தெரியவில்லை. அப்போது, ஒரு குறி சொல்லும் காணி (அவர்தான் சாமி. பெரும்பாலும் பெண்களே அந்த வேலையை செய்கிறார்கள். அவர்களது முடி ஜடாமுடியாக இருக்கிறது!) குள்ளநரி வரும் வழியில் ஒரு பள்ளத்தை வெட்டச் சொல்கிறார். பள்ளத்தை, சருகுகளால் நிரப்பி மூடி வைக்க சொல்கிறார். அதன்படி செய்ததும், குள்ளநரி வசமாக அந்த பொறிக்குள் மாட்டிக்கொள்கிறது. அவ்வாறாக, குள்ளநரியிடமிருந்து தப்பித்துக்கொள்கிறார், காணி.

கூரன் கதை: இதுவும், ராஜம்மாள்காணி பாட்டியால் சொல்லப்பட்டது. இது, ஒரு சிரிப்புக்கதை என்றார் பாட்டி. கதையாகச் சொல்லாமால், அந்த கதாப்பாத்திரமாகவே பேசினார். அதாவது, இளம் காணிப் பெண்ணொருவர், சருகுமானை மணம் செய்கிறார்.  சருகுமான் உருவத்தில் மிகச் சிறியது. அது, இரவில்தான் இரை தேட வரும். மற்ற நேரங்களில், பதுங்கியிருக்கும். மனைவியே வயலில் வேலை செய்வது, மாவிடிப்பது போன்ற வேலைகளை செய்கிறார். கூரனோ எந்த வேலைக்கும் உதவுவதில்லை. இதனால், மனைவி மிகுந்த வேதனைக்குள்ளாகிறாள். நீ ஏன் எந்த வேலையும் செய்வதில்லை என்று கோபப்படுகிறார். ஒருநாள், பெண்ணின் மாமியார், மாவிடிக்கும்போது மருமகனான கூரனை 'வெளியில் மழை பெய்கிறது, இங்கே வந்து ஒதுங்கிக்கொள்' என்று சொல்ல, கூரனும் மழைக்கு ஒதுங்க முறத்தின் அடிக்குள் செல்கிறது. உரலால், ஒரே போடு போட்டு சருகுமானை கொன்றுவிடுகிறார். 

குன்னிமுத்து ராஜா கதை:  இந்தக் கதை முருகன் காணி என்பவரால் சொல்லப்பட்டது.அறிவுரைக் கதையாக சொல்லப்படுவதாம் இது.


தாயும் ,மகனும் ஒரு வீட்டில் வசித்து வந்தார்கள். அவன் ஒரே மகன். ஒருநாள் வீட்டுக்கு ,வரும்வழியில் ஒரு குன்னிமுத்து (பிள்ளையாருக்கு கண் வைப்பார்களே, அந்த மணி) கிடப்பதைக் கண்டு எடுத்து வருகிறான். அவனது  தாயாரிடம் காட்டுகிறான். தாயும், அதனை மீன் பிடிக்கும் ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கச் சொல்கிறார். மகனும், அதனை வைத்துவிட்டு, தாயோடு வயலில் வேலை செய்கிறான். அதில் குன்னிமுத்தை இட்ட, சற்று நேரத்தில் ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்கிறது.


அக்கம்பக்கத்திலிருக்கிறவர்கள் அனைவரும், வியப்போடு சத்தம் கேட்கும் இடத்தை நோக்கி வருகிறார்கள். தாயும்,மகனும் குழந்தையும் அழுகுரல் தங்கள் வீட்டிலிருந்து வருவதை கண்டு ஓடி வந்து பார்க்கிறார்கள். குன்னிமுத்து போட்டிருந்த குடுவைக்குள்ளிருந்து வருவதை கண்டு கொள்கிறார்கள். எட்டிப்பார்த்தால், ஒரு பெண் குழந்தை. அந்த பெண் குழந்தையை அவர்களே வளர்க்கிறார்கள். குழந்தையும் வளர்ந்து பெரியவளாகிறாள். 

அண்ணனிடம், தங்கைக்கு மணமகன் பார்க்கச் சொல்கிறார், தாய். ஆனால், அண்ணனோ அம்மாவிடம் பிடி கொடுக்காமல் இருக்கிறான். தனக்கு, முதலில் கல்யாணம் செய்ய வேண்டும் என்றும் சொல்கிறான். அவனுக்கு, தங்கையை மணம் செய்து கொடுக்க மனம் இல்லை. அவனே, அந்த பெண்ணை மணம் செய்துக்கொள்ள எண்ணுகிறான்.

அதனை, தனது தாயிடமும் சொல்கிறான். தாயோ, தங்கையை திருமணம் செய்யக்கூடாது என்று சொல்கிறாள். இது எப்படியோ தங்கைக்குத் தெரிந்துவிட, அவள் யாருமற்ற நேரத்தில் ஒரு பெரிய மரத்தில் மேலேறி ஒளிந்துக் கொள்கிறாள். பெண்ணை காணோமென்று எல்லோரும் தேடி அலைகிறார்கள். காணாமல், காணி மக்கள் சோகத்தில் இருக்கிறார்கள்.


ஒரு காணிப் பெண், இரவில் கிணற்றில் தண்ணீர் எடுக்க வருகிறாள். அது பௌர்ணமி இரவு. மரத்தின் நிழல் கிணற்றுத் தண்ணீரில் விழுகிறது. தண்ணீரை எடுக்க குனிந்த காணிப்பெண், மரத்தில் நிழலோடு சேர்ந்து ஒரு மனித  உருவமும் இருப்பதை கண்டுகொள்கிறாள். சத்தம் காட்டாமல், தாயிடம் சொல்ல,  பெண்ணுக்கு சலனம் காட்டாமல் அவளை கீழே இறக்க
முயற்சி செய்கிறார்கள். மரத்தை அறுக்கிறார்கள். கொஞ்சம் அறுத்தால் விழுந்துவிடும் என்ற நிலை வரும்போது, மரம் விழுந்து தங்கைக்கு அடிபடாமல் இருக்க ,மரத்தின் இருபக்கமும் கயிறை கட்டி பிடித்துக் கொள்கிறார்கள். இதற்குள், விழித்துக்கொண்ட அந்த தங்கை, ஒரு பாடலை பாடியபடி இன்னும் மேலே, உச்சிக்கு சென்று ஒளிந்துக்கொள்கிறாள்.

அப்போதும் விடாமல், மரத்தை சாய்க்க, தங்கை பாடலை பாடியபடி பறந்து செல்கிறாள். பறந்துச் சென்று, ஒரு குளத்தின் தாமரை பூவுக்கு அடியில் விழுந்து விடுகிறாள். அங்கேயே ஒளிந்து வாழ்கிறாள். அந்த குளம், ராஜாவின் துணிகளை துவைக்கும் இடம். துவைத்த  துணியில், ஒரு நீளமான முடியை காண்கிறார்  ராஜா. எப்படி வந்திருக்கும் என்று யோசனை செய்கிறார், (!)
அதே நேரம், துணி துவைக்கும்போது, "ச்சீச்சீ..தூர..ச்சீச்சீ..தூர"(அழுக்குநீர் மேலே படுவதால்) என்று ஒரு பெண்ணின் குரலை கேட்பதாக துணி துவைக்கும் வண்ணாரும் ராஜாவிடம் சொல்கிறார். 
  
ஒருநாள், தாமரைக்கு அடியிலிருந்து வந்து, தனது கூந்தலை காய வைக்கிறாள்,  தங்கை. அப்போது, ராஜா குதிரையில் குளத்தினருகில் வருகிறார். அந்த பெண்ணை கண்டு, தன்னோடு அழைத்துச் சென்று,  இருவரும் திருமணம் செய்துக்கொள்கிறார்கள். 

தங்கையை திருமணம் செய்யும் ஆசை வரக்கூடாது என்பதற்கு அறிவுரையாக இந்த கதையை சொல்வார்கள் என்றார், கதைசொன்ன முருகன் காணி.

Wednesday, October 02, 2013

நாங்கள் 'காணி'களான கதை....


சென்ற வார இறுதியில் 'காணிகள் கதை சொல்லும் விழா'வில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. மக்களை, அவர்கள் வாழ்க்கையை, வசிப்பிடத்தை, கதைகள் மூலமாக அறிந்துக்கொள்ளும் அனுபவம் என்பதே சுவாரசியமாக இருந்தது.இரண்டு நாட்களாக காணி மக்களுடன் எங்கள் வாசம்!
காணி மக்கள், பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இன்றும் மலைகளில் வசித்து வருகிறார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் 47 கிராமங்கலில் காணி மக்கள் வசித்து வருகிறார்கள். அதில், நாங்கள் சந்தித்தவர்கள், தச்சமலை மற்றும் வெள்ளாம்பி கிராம காணி மக்கள்.  காணி மக்களை காண வேண்டுமானால், பேச்சிப்பாறை அணையை கடந்து தச்ச‌மலை மீது ஏற வேண்டும்.

படகில் அணையை கடந்தோம். நிகழ்வில் கலந்து கொள்ள கிட்டதட்ட 18 - 20 பேர் இருந்திருப்போம், குழந்தைகளையும் சேர்த்து.  வழிநடத்த வந்த முருகன் காணியின் பின் வரிசையாக செல்ல ஆரம்பித்தோம். நல்ல வெயிலாக இருந்தாலும், அணையின் தண்ணீர், மேகங்கள் மற்றும் மரங்கள் சூழந்த மலை என்பதால் களைப்பாக இல்லை. வழியில், ரப்பர் தோட்டங்களையும் கடந்தோம். ஒரு கொட்டாங்குச்சியை கம்பியினால் மரத்தைச் சுற்றி கட்டி ரப்பர் பாலை சேகரிக்கிறார்கள். சிறிது நேரம் அதனை ஆராய்ச்சி செய்துவிட்டு தொடர்ந்து நடைபயணம்.
அவர்கள் வீடுகள் சமவெளி மக்கள் போல வரிசையாக இருப்பதில்லை. கிட்டதட்ட அரை கிமீ க்கு ஒரு வீடு போல இருக்கிறது. முதல்முதலாக ஒரு வீட்டை அடைந்தோம். மூங்கிலால் கட்டப்பட்ட எளிமையான‌ வீடு. கீழே களிமண். கூடவே நாய். சுற்றி மரங்கள். சிறிது நேரம் அங்கே கழித்துவிட்டு தொடர்ந்து பயணம்.இந்த முறை, மலையில் செங்குத்தாக ஏற வேண்டியிருந்தது. அதோடு, காலை பின்னும் செடி கொடிகள். கொஞ்சம் உயரத்தை அடைந்ததும் மரத்தின் கீழ் இளைப்பாறினோம். அங்கிருந்து நாங்கள் பயணம் செய்த ஆற்றை காண முடிந்தது.சற்று தொலைவில் பெரிய பாறைக்கருகில் ஒரு கட்டிடம் தெரிந்தது. அங்கு எங்களுக்காக பாய்கள் விரிக்கப்பட்டிருந்தன. குடிக்க  வெந்நீரும். அது ஒரு சர்ச் என்று பிறகு கண்டுகொண்டோம். எங்களோடு, மேலும் சில காணி மக்களும் சேர்ந்துக்கொண்டனர்.

காணி மக்களின் மொழி 'காணி பாசை'. தமிழும், மலையாளமும் கலந்த ஒரு மொழி. அதுவும் மலையாளம் கொடு மலையாளமாம். மலையாளம் தெரிந்தவர்கள் கூட புரிந்துக்கொள்ள சிரமமாம். அவர்கள் பேசும்போது, ராகமாக.... கேட்கவே இனிமையாக இருக்கிறது. நாம் தமிழில் பேசினால் புரிந்துகொள்கிறார்கள்.

காணி மக்களின் உணவு பெரும்பாலும் மரவள்ளி/கப்பக் கிழங்கும், காந்தார மிளகாயும் தேங்காயும் சேர்த்து அரைக்கப்பட்ட சட்டினியும். தேனும், தினை மாவும்,வாழைப்பழங்கள், சில உண்ணக்கூடிய காளான்களும் மற்றும் கிழங்கு வகைகளும்தான்.  அன்றைய எங்கள் உணவும் காணி மக்களின்  அடுப்பில் தயாராகியிருந்தது. ஆம், அன்று எங்கள் உணவும் மரவள்ளிக்கிழங்கும், காந்தார மிளகாய் சட்டினியும்தான். சுட சுட, தேக்கு இலையில் வைக்கப்பட்டு பரிமாறப்பட்டன. 

அதை போன்ற ருசியான சாப்பாட்டை இதுவரை சாப்பிட்டதில்லை என்றே சொல்லவேண்டும். வயிற்றைக் கிள்ளும் பசியில், சுடச்சுட கிழங்கு உள்ளே போன இடம் தெரியவில்லை. 'கிழங்கெல்லாம் பத்துமா, மதிய உணவுக்கு பேச்சிப்பாறைக்கு வரவேண்டும்' என்று நினைத்துக்கொண்டிருந்த எங்களுக்கு இந்த கிழங்கும்/காரமான‌ சட்டினியும் அவ்வளவு நிறைவாக இருந்தது.

பிறகு, அவர்களில் சிலர் தாங்கள் உபயோகிக்கும் பொருட்களை எடுத்து வந்து காட்டினர். மின்சாரம் இருக்கிறது என்றாலும், மிக்சி, கிரைண்டர் பயன்படுத்துவதில்லை. உரல், கற்களால் ஆன அம்மி போன்றவையே இன்னும் தச்சமலை மக்களும் விளாம்பி மக்களும் பயன்படுத்துகிறார்கள்.
முன்பெல்லாம், கறியை நெருப்பில் சமைக்காமல், ஆற்று ஓரத்தில் இருக்கும் கற்களைக் கொண்டு சமைப்பார்களாம். அதாவது, கற்களை சூடுபடுத்திக் கொண்டு, ஒரு கல் அதன் மேல் இறைச்சி, அதன் மேல் கல், அதன் மேல் இறைச்சி என்று அடுக்கி வைத்து அது வெந்தபின் உண்பார்கள் என்று சொன்னார் ஒருவர். அவர்களுக்குத் தேவையான மருத்துவங்களையும் காட்டு மூலிகைகளைக் கொண்டே குணப்படுத்துவார்களாம். மூட்டுக்காணி என்பவர்தான் பொறுப்பாளர். அவரே மருத்துவரும்!

அவர்களது கல்வி மற்றும் அறிவுச் செல்வமெல்லாம் வழிவழியாக மூதாதையரிடமிருந்து கடத்தப்பட்டு வருவதுதான்! மூலிகைகளை, அறிவுரைகளை பெரும்பாலும் கதைவழியாக சிறியவர்களுக்குச் சொல்லிக்கொடுப்பார்களாம்!

இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கும்போதே விதவிதமான வாழைப்பழங்களைக் கொண்டு வந்தார்கள். ஒன்று இரண்டு எல்லாம் இல்லை. எல்லாமே சீப்பு சீப்பாக. இவையெல்லாம் வேதிஉரங்கள் இல்லாமல், இயற்கை உரங்கள் கொண்டு விளைவிக்கப்பட்டவை. காணி மக்கள் தங்கள் தேவைக்கு விவசாயம் செய்கிறார்கள். அதில், இயற்கை உரங்களையே பயன்படுத்துகிறார்கள். காட்டிலிருந்து எதுவும் பறிப்பதோ, வெட்டுவதோ கிடையாதாம்.  காட்டை பழங்குடியினர் வெட்டி பாழாக்குகிறார்கள் என்று அவதூறாக அல்லவா இங்கு செய்தியை பரப்புகிறார்கள்?

அதைத் தொடர்ந்து, சில அங்கேயே தங்கிக்கொள்ள நாங்கள் இன்னும் உச்சிக்கு செல்ல தயாரானோம். பப்புவும் மிகுந்த உற்சாகத்தோடு இருந்தாள். அங்கேயே அவளுக்கு கமலா என்று தோழியும் கிடைத்திருந்தாள். இருவருமாக கம்புகளை எடுத்துக்கொண்டு நடக்கலானார்கள்.  மேலும் இரண்டு காணி வீடுகளை கடந்து உயரே சென்றோம்.  காட்டு கடாரங்காய்கள் பறிப்பாரற்று இருந்தன.
காணி மக்கள் யானைகளை மோப்ப சக்தியிலேயே கண்டுபிடித்து விடுவார்களாம். அதோடு, பாம்புகளை பிடிப்பதிலும் வல்லவர்களாம்.   தங்கள் வசிப்பிடத்தில் கண்டால், பிடித்து வேறு பகுதிக்கு சென்று விட்டு விடுவார்களாம். அதனை கொல்லுவதில்லை என்றும் கூறினார்கள். இயற்கையை பேணுவதில் காணி மக்கள் வல்லுநர்கள்தான்!

இவர்களுக்கு டிஎன்ஏ  டெஸ்ட் செய்திருக்கிறார்களாம். கிட்டதட்ட ஐம்பதாயிரம் வருடங்களுக்கு முன்பாக இங்கு வந்திருக்க வேண்டும் என்றும், முதன் முதலில் ஆப்ரிக்காவிலிருந்தோ/ஆஸ்திரேலியாவிலிருந்தோ நடந்தே வந்த கூட்டத்தினராக இருக்கவேண்டும் என்பதாகவும்,  கூட வந்திருந்த ஒரு பேராசிரியர் பகிர்ந்துக்கொண்ட தகவல் இது!

பின்னர், திரும்பி கீழே இறங்கி வந்தோம். பெரும்பாலும் பெண்களும் குழந்தைகளும் அவ்வளவு சுலபமாக பழகிவிடுவதில்லை. கூச்ச சுபாவம் மிகுந்தவர்களாக இருக்கிறார்கள். ஒன்றிரண்டு பேரே கல்லூரி வரை சென்றிருக்கிறார்கள். இதற்கு முன்பு வரை ஆண்களோ - பெண்களோ 14 வயதானாலே கல்யாணம் செய்துவிடுவார்களாம்.

வழியில் பல விதவிதமான காளான்களைக் கண்டோம். இந்தவகை காளான்கள் கேன்சருக்கான மருத்துவகுணத்தை கொண்டிருப்பதாக உடன் வந்த தாவரவியல் பேராசியர் பகிர்ந்துக்கொண்டார். இயற்கையாக, மலையேறி இறங்குவதாலேயே,காணிகள்  ஒல்லியான உடலை கொண்டிருக்கிறர்கள். வேகமாகவும் நடக்கிறார்கள். நம்மைப்போல் தொப்பையோ தொந்தியோ இல்லை!!

கீழே சர்ச்சருகில் வந்ததும், சுடச்சுட டீ. நம்மைப்போல் டீத்தூள் கொண்டதாக இல்லாமல், மூலிகைச் செடிகளுடன் வெல்லம் கலந்த பானம் அது!க்ரீன் டீ என்று நாம் குடிப்பதெல்லாம் அந்த இயற்கை பானத்துடன் போட்டி போடவே முடியாது! 

சற்று நேரம் உரையாடிவிட்டு, மீண்டும் ஆற்றங்கரைக்கு வந்து சேர்ந்தோம். படகு தயாராக இருந்தது, தச்சமலைக்கு அப்பாலிருந்து வந்திருந்த இன்னும் சில காணி பயணிகளுடன். படகு தண்ணீரின் ஆழ்ந்த அமைதியை  கலைத்து முன்னேறிக்கொண்டிருந்தது. நாங்கள் மலையை, மலை முகடை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டிருந்தோம்.

காணி மக்களின் கதைகளை, மூலிகைச் செடிகளைப் பற்றி அடுத்த பதிவில்!


குறிப்பு: இந்த "காணி மக்களின் கதை சொல்லும் விழா" டாக்டர்.எரிக் மில்லரின் "கதை சொல்லும் நிலையம்" மூலமாக நடைபெற்றது. நாகர்கோயிலுக்கு செல்லும் வேலை இருந்தபடியால் நிகழ்வில் கலந்துக்கொள்ள திட்டமிட முடிந்தது. பழங்குடியினரின் வாழ்க்கையை, எழுத்து வடிவமற்ற அவர்களது மொழியை, கலாச்சாரத்தை அறிந்துக்கொள்ள குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் இந்த நிகழ்வு ஒரு அரிய வாய்ப்பு என்றே சொல்ல வேண்டும்.அதற்காக, காணி மக்களுக்கும், டாக்டர்.எரிக்‍கின் கதை சொல்லும் நிலையத்துக்கும் மிக்க நன்றி!
 


Thursday, September 12, 2013

ஜலகம்பாறை அருவி பயணம்

பிள்ளையார் சதுர்த்தியை முன்னிட்டு மூன்று நாட்கள் விடுமுறை. ஆம்பூருக்குச் சென்று நெடுநாட்கள் ஆகிவிட்டதாலும், அங்கு தற்போது மழையும் தூறலுமாக சூழல் அற்புதமாக இருப்பதாக கேள்விபட்டதாலும், முக்கியமாக, பிரியாணி சாப்பிட்டு நீண்ட நாட்கள் ஆகிவிட்டதாலும் இந்த முறை ஆம்பூருக்குப் பயணம்.

பப்புவுக்கு ஆம்பூர் சென்றாலே அருவிக்குச் செல்லவேண்டும்!! தண்ணீர் இருக்கிறதா என்றெல்லாம் கவலை இல்லை! :-)அவளது ஆசைப்படியே மறுநாள் மதியம் அருவிக்குச் சென்றோம். கிட்டதட்ட ஒருமணி நேர பயணம். திருப்பத்தூரிலிருந்து செல்லும் வழியில் ரம்மியமான பல கிராமங்களை கடந்து  சென்றோம். வழியெங்கும் பசுமை.பல வகை பறவைகளைக் கண்டோம். பெயர்கள் சரியாகத் தெரியவில்லை.  'அருவி வந்தால் எழுப்புங்க'  என்று பப்பு, பெரிம்மா மீது சாய்ந்துவிட்டாள்.

செல்லும் வழியில், சில இடங்களில் வெல்லம் காய்ச்சிக் கொண்டிருந்தார்கள். .வரும் போது அட்டாக் செய்யலாம் என்று பயணத்தைத் தொடர்ந்தோம்.

ஜலகம்பாறை.

ஒரு 50 படிகள் ஏறினால் அருவி. கூட்டமே இல்லை. ஆங்காங்கே ஒன்றிரண்டு பேர் மட்டும் இருந்தனர்.கீழே இருந்த கோவிலில் வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது.


தொடர்ந்து மேலே சென்றோம். அருவியிலிருந்து ஷவர் போல கொட்டிக் கொண்டிருந்தது. யாருமே இல்லையாதலால், தண்ணீரில் ஜாலியாக விளையாடினோம். சோ என்று கொட்டும் அருவி ஒருவித அனுபவம் என்றால் வீட்டு ஷவர் போல கொட்டுவதும் புது அனுபவமாக இருந்தது. முக்கியமாக, பப்பு குதித்து இஷ்டம் போல ஒரே ஆட்டம்.


சற்றுநேரத்தில், மழையும் ஆரம்பிக்க, குளியலை நிறுத்திவிட்டு திரும்பிச்செல்ல ஆயத்தமானோம். வழியில், வெல்லம் செய்யும் இடத்தில் நிறுத்தினோம். 


காய்ச்சிய கரும்பு சாறை பெரிய வாணலியிலிருந்து கீழே மாற்றிக்கொண்டிருந்தார்கள். நின்று பார்த்துக்கொண்டிருந்தோம்.

சூடான கரும்பு சாறோடு,கெட்டுப்போகாமல் இருப்பதற்காக ஏதோ சேர்த்து அதை அளைந்துக்கொண்டிருந்தார்கள். கிட்டதட்ட அரைமணிநேரம் அதனை ஆற வைத்தால் வெல்லம் ரெடி.

லேசாக ஒருவர் தண்ணீர் தெளிக்க, ஒருவர் தொடர்ந்து ஆற்றிக்கொண்டிருந்தார்.அதனை எடுத்து சாப்பிட முடியுமா என்று கேட்டதும் சிரித்த அவர்கள், கரும்பு ஜூஸ் வேண்டுமா என்று கேட்டனர். சுவையான கரும்பு ஜூஸ்.... அவ்வளவு இனிப்பாக இருந்தது. பப்புவுக்கு ஒரு வாய்க்கு மேல் குடிக்க முடியவில்லை.வாணலியில் இருந்த காய்ச்சிய கரும்பு சாறை சுவைத்தோம். சவ்வுபோல இருந்தாலும் அருமையாக இருந்தது.

அங்கிருந்து கிளம்பினாலும், பப்புவுக்கு வாணலியிலிருந்து எடுத்து சுவைத்த கரும்புபாகு வேண்டும் என்றாள்.


வாங்கிய வெல்ல உருண்டையிலிருந்து பெரிம்மா உதிர்த்து தர வாயில் இட்டுக்கொண்டாள். அப்போதுதான் செய்திருப்பார்கள் போல, இளஞ்சூடோடு இருந்தது.நெடுநேரம் ஆகியும் புதுவெல்ல‌த்தின் சுவை நாக்கிலேயே இருந்தது... பயணத்தின் இனிமையைப் போலவே!

குறிப்பு :

ஜலகம்பாறை அருவி: திருப்பத்தூரிலிருந்து 15கிமீ தொலைவில் இருக்கிறது. அக்டோபர் முதல் ஜனவரி வரை அருவியில் தண்ணீர் கொட்டும். ஏலகிரிக்கு மிக அருகில் இருக்கிறது இந்த இடம்.

Monday, September 02, 2013

"Life of Pi" - ஒரு பையை தொலைத்த கதை

Once upon a time there was an ant called Mullai. She was a fat woman. There was a little ant called Khurinji. They both were friends , They did not fight for a long time. They play, they sing and they dance.

Once day Mullai told to her friend "I will take you to a class, which is called ZZZZZ. You can learn much ". So, they went. At that time, Khurinji lost her bag. Mullai said " What a fool!". She became angry.

This made Khurinji so sad.

So Mullai and Khurinji were not friends. After few hours they became bestest friends than they have been friends before.
நேத்து ஆட்டோவிலே பையை தொலைச்சதும் இல்லாம, அதைபத்தி ஒரு புனைவு வேற! இது என்ன படம்னா, கீழே இருக்கிற எறும்புங்களோட கண்ணுக்கு ஆட்டோ சக்கரம் அப்படிதான் தெரியுமாம்!!