Monday, February 20, 2012

கடலுக்கு ஷாக் அடிக்க வைப்பது எப்படி?

”ஆச்சி, டார்ச் லைட் ஆன் பண்ணி காட்டினா கடல் தண்ணி காலியாகிடுமாப்பா?” - பப்பு

”என்னது, டார்ச் லைட்டா? எதுக்கு?” - மீ

“ம்ம்..சூரியன்லேருந்து வர்ற லைட்டு தண்ணியை இழுத்திடும் இல்ல... அது மாதிரி..” - பப்பு

” .........” - மீ

” நாம டார்ச் லைட் ஆன் பண்ணி காட்டினா கடல்ல இருக்கிற தண்ணியை காலி பண்ண முடியுமா?” - பப்பு

”ம்..ஹூம்...” - மீ

”டார்ச் லைட்லே அந்த கண்ணாடியை கழட்டிட்டு கடல்ல வைச்சா?” - பப்பு

“ம்ம்..எதுக்கு? வைச்சா என்ன ஆகும்?” - மீ

“மீனுக்கெல்லாம் ஷாக் அடிக்குமா?ஷாக் அடிச்சு செத்துடுமா?சொல்லு ஆச்சி” - பப்பு

Sunday, February 05, 2012

மர்ஜானே சத்ரபியின் “ஈரான்”

காமிக்ஸ் புத்தகங்கள் என்னை என்றும் ஈர்த்ததில்லை. ஒருசில பக்கங்ளில்
முடிந்துவிடும் கதையாக இருந்தால் ஓகே. (கோகுலத்தின் 16 பக்க வண்ணப் படக் கதை, மிஷாவின் சில நாடோடிக்கதைகள் போல) மற்றபடி, என் உறவின சிறுவர்களுக்கிடையே மிகவும் பிரபலமாக இருந்த லயன்/முத்து காமிக்ஸ் புத்தகங்களை பார்த்து ஓடியிருக்கிறேன். ஒன்று, சித்திரங்களுக் கிடையிலே ஏற்படும் குழப்பம் (குழம்புவதற்கு எனக்குச் சொல்லியா தரணும்) அல்லது உரையாடலில், பதிலாக வருவதை முதலில் படித்துவிடுவது போன்ற பிராக்டிகல் டிஃபிக்கல்டிஸ்...இதனால், எனது காமிக்ஸ் ஆர்வத்தை ’ஹீத்கிளிஃப்’ போன்ற துணுக்குகளோடு நிறுத்திக்கொண்டேன்.

இந்த சிறுவயது காமிக்ஸ் புத்தக அலர்ஜியை தூள்தூளாக்கியது, ’மர்ஜானே சத்ரபி’யின் புத்தகங்கள் - ”ஈரான் - ஒரு குழந்தைப்பருவத்தின் கதை” மற்றும் ”ஈரான் - திரும்பும் காலம்”. புத்தகக் கண்காட்சியில் இந்த புத்தகங்களை பார்த்தபோது, முகத்திரை அணிந்திருந்த சிறுமியின் அட்டைப்படம் என்னை ஈர்த்து. அதோடு, ஈரானை பற்றி எனக்குள் இருந்த பொது பிம்பங்கள் - பழைமை வாத நாடு, மதவெறியர்கள், பயங்கரவாதம், பிற்போக்கான மக்கள், முஸ்லீம் பெண்களுக்கு மறுக்கப்படும் உரிமைகள்.....

மேலும், நவ்வல் எல் சாதவியின் புத்தகத்தை வாசித்ததிலிருந்து, எகிப்து/ ஆஃப்கன்/ஈரான்/ஈராக் நாட்டு மக்களின்/பெண்களின் வாழ்வைக் குறித்தும் அறியும் ஆர்வம் - இவற்றால் தூண்டப்பட்டு ’ஈரான் - ஒரு குழந்தைப்பருவத்தின் கதை’யை மட்டும் எடுத்தேன். முழு புத்தகத்தையும் சித்திரக்கதை வடிவில் வாசிக்க முடியுமா என்ற தயக்கமே காரணம். கடையிலிருந்தவர், இரு புத்தகங்களும் ஒரு செட் என்றும் செட்டாக வாங்கும்படி பரிந்துரைத்ததால் வேறு வழியின்றி வாங்கினேன். ஆனால், முதல் பகுதியை வாசிக்க எடுத்தபின் இரண்டாம் பகுதியை வாசிக்காமல் இருக்க முடியவில்லை. சித்திரக்கதை என்ற வடிவம் எந்த விதத்திலும் வாசிக்க தடையாக இல்லை, மாறாக, இந்த புத்தகங்களை வாங்கியதற்காக மகிழ்ச்சியடைகிறேன்.

இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர் ஈரானியச் சிறுமி எதிர்கொள்ளும் அன்றாட பிரச்சினைகள், சவால்கள், ஈரான் - ஈராக் போர், போரினால் நாட்டை/ குடும்பத்தை பிரிந்துச் வியன்னாவுக்கு சென்று பள்ளிக்கல்வியை தொடர்வது, தனிமை, வெறுப்பு, ஐரோப்பாவில் ஈரானியப் பெண்ணாக/மூன்றாம்
உலகைச் சார்ந்தவளாக இருப்பதன் பிரச்சினைகள்,பின்னர் ஈரானுக்கு திரும்புதல், ஈரானில் ஐரோப்பிய பெண்ணாக இருப்பதன் பிரச்சினைகள், மத அடிப்படைவாதம், ’புரட்சியின் காவலர்கள்’ பெண்களுக்கு/இளைஞர்களுக்குக் கொடுக்கும் நெருக்கடி - அதோடு, சிறுமி மர்ஜி சத்ரபி மனத்திற்கு பட்டதை, நீதியின் இரட்டைத் தன்மையை கேள்வி கேட்பவளாக (அடங்காப்பிடாரி!) இருப்பது!!

பத்து வயது சிறுமியான மர்ஜி தன் ஆறாவது வயதிலேயே ஒரு தீர்க்கதரிசியாக இருக்க விரும்புகிறாள். அவளது மதத்தில் பல தீர்க்கதரிசிகள் இருந்தாலும் கடைசி தீர்க்கதரிசியாக மாற விரும்புகிறாள். அதற்காக ஒரு புனித நூலையும் தயாரிக்கிறாள். அனைவரும் கார் வைத்திருக்க வேண்டும். வேலைக்காரிகளும்
நம்முடன் உட்கார்ந்து சாப்பிட வேண்டும், வயதானவர்கள் யாரும் துன்பப்படக் கூடாது. (அவளது பாட்டிக்கு கால்வலி இருந்ததே இந்த கட்டளைக்குக் காரணம்). இரவில் கடவுளுடனும் விவாதம் நடத்துவாள்.

முற்போக்கு அரசியலில் நம்பிக்கைக் கொண்ட அவளது தாய் மற்றும் தந்தையின் மூலம் ‘இயங்கியல் பொருள்முதல்வாதம்’ சித்திரக்கதை வடிவில் வாசிக்கிறாள். அதைத்தொடர்ந்து, கடவுளுடனான விவாதம் தடைபடுகிறது. மார்க்சும் கடவுளைப் போலவே இருக்கிறார், ஆனால் மார்க்சின் முடி மட்டும் சுருட்டை.
இறுதியில், மர்ஜியின் கடவுள் அவளைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக ஃபேட் ஆகிறார்.

மர்ஜியை பார்த்துக்கொள்ள ஒரு சிறுமி இருக்கிறாள். அவளுக்கு பக்கத்து வீட்டு பையனுடன் காதல் வருகிறது. இருவருக்கும் கடிதப் பரிமாற்றத்தில், மஹ்ரிக்கு கடிதம் எழுத மர்ஜி உதவுகிறாள். மஹ்ரி வேலைக்கார சிறுமி என்றதும் அந்த காதல் உடைகிறது. அன்பு கூட சமூக ஏற்றத்தாழ்வை, வர்க்கத்தைச் சார்ந்தது என்பதை அவளால் ஏற்றுக்கொள்ளவோ புரிந்துக்கொள்ளவோ முடியவில்லை. பத்து வயது சிறுமியாக அரசியல் நிகழ்வுகளை கூர்மையாக எழுதுவது கடினமானதாக இருந்தாலும் மர்ஜி தெளிவாக வெளிப்படுத்திவிடுகிறார்.

முதல் பாகம் முழுக்க மர்ஜியின் 10 முதல் 14 வயதுவரையிலான நிகழ்வுகள் - இந்த காலகட்டத்தில்தான் ஈரானில் புரட்சி வந்து ’மதவாதிகள்’ அதிகாரத்துக்கு வருகிறார்கள். கடும் மத ஒடுக்குமுறைகள் மற்றும் பழைமைவாத நடவடிக்கைகள் - அதைத் தொடர்ந்து ஈரான்-ஈராக் போர். கல்விக்கூடங்கள் மூடப்படுகின்றன. அப்படியே ஒன்றிரண்டு பள்ளிகள் இயங்கினாலும் மத அடிப்படைவாதிகளின் நிழலில்தான் இயங்குகிறது.

ஈராக் குவைத் மீது போர் தொடுத்தபோது எனக்கும் தம்பிக்கும் சண்டை வந்தால், பென்சில் பாக்சை, விளையாட்டு சாமான்களை ‘உன் மேல ஸ்க்ட் விடறேன்’ , ‘உன் மேல பேட்ரியாட்’ என்று மாறி மாறி தூக்கி வீசிக்கொள்வோம். போர் பற்றிய பெரிய சிந்தனை எதுவும் எங்களிடம் இல்லை. ஆனால், போர் நடக்கும் இடங்களில் வாழும் எங்கள் வயதுடைய சிறுவ/சிறுமியருக்கு ’ஸ்கட்’ வந்து விழும்போது/ போரின்போது ஏற்படும் வாழ்க்கை நெருக்கடிகளை எண்ணிப் பார்த்ததே இல்லை. அதாவது, எங்களுக்கு விளையாட்டாக இருந்தது அவர்களுக்கு வாழ்க்கையாக இருந்ததை மர்ஜியின் கதை தெளிவாக உணர்த்துகிறது.

மார்க்சியத்தை அறிந்த மர்ஜியின் பெற்றோர்கள், அவர்களது நண்பர்கள், ’பாட்டாளி வர்க்கம் நிச்சயம் ஒரு ஆட்சியை பிடித்தே தீரும்’ என்று நம்பும் கம்யூனிஸ்டு சித்தப்பா, அரசியல் கைதிகளாக சித்திரவதையை சந்திக்கும் கம்யூனிஸ்டுகள், நேர்மையை, சுயமரியாதையை கற்றுத்தரும் பாட்டி - ஈரானிய மக்களை மத அடிப்படைவாதிகளாகவும், பழைமைவாதிகளாகவும் மட்டுமே எப்படி அறிந்து வந்திருக்கிறோம் என்பதை எண்ணி எனக்கு வெட்கமாக இருந்தது. முற்போக்கான மர்ஜியின் பெற்றோர்கள், போர் நாட்டை பிற்போக்காக மாற்றியிருக்கிறது என்றும் மதவாதிகளின் பிடியில் இருக்கும் ஈரானில் மர்ஜி வசிப்பது சரியல்ல என்றும் உணர்ந்து வியன்னாவுக்கு அனுப்புகிறார். 14 வயது சிறுமியாக அவள் தன்னந்தனியாக விமானமேறுகிறாள்.

மேற்குலகில் ஈரானியப்பெண்ணாக மர்ஜி எதிர்கொள்ளும் சவால்கள், தனிமை, அகதி வாழ்க்கை, காதல், காதலில் தோல்வி, பின்னர் ஈரானுக்கு திரும்புதல் - இவை இரண்டாம் பகுதி. முக்கியமாக இரண்டாம் பகுதியில், இரானிய பெண்கள் மீதான மதரீதியான ஒடுக்குமுறைகள், ‘இஸ்லாமிய புரட்சியாளர்களின்’ இரட்டைத் தன்மை, அதனை சுதந்திரமான சிந்தனைகளையுடைய மர்ஜி கேள்வி கேட்பது, எதிர்ப்பது பற்றி நன்றாக விவரிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக அந்த காலகட்டத்தில் ஏற்பட்ட டிஷ் டீவி கலாச்சாரம் பற்றிய நிகழ்வுகள் - ஒரு பக்கம் எம் டீவி கலாச்சாரம், மறுபக்கம் ‘இஸ்லாமிய புரட்சியாளர்கள்’ இந்த முரண்பாடுகளுக்கிடையே சிக்கித் தவிக்கும் ஈரானியர்கள் - இரவில் டீவி பார்த்துவிட்டு பகலில் ஆண்டெனாவை மூடி மறைத்து விடுவார்களாம். பார்வைக்கு முற்போக்காக தெரியும் இரானிய பெண்கள் உள்ளுக்குள் பழைமைவாதமாக இருப்பது, ஆண்களுக்கு உணர்ச்சியை தூண்டிவிடுமென்று தலைமுடியை மறைத்து முகத் திரையிடும்படி அறிவுறுத்தும் கல்லூரி பேச்சாளருக்கு பதிலடி கொடுப்பது என்று இரண்டாம் பகுதி மிகவும் அருமை.

மர்ஜியின் தந்தை, அவளுக்கு நாட்டின் வரலாறை விளக்குகிறார். போராட்ட ங்களில் கலந்துக்கொள்ள மர்ஜி பிடிவாதம் பிடிக்கிறாள். நிலவறைக்குள் ஒளிந்துக்கொண்டு குண்டுச் சத்தத்தை உணர்கிறாள். போருக்காகச், சேர்க்கப் படும் 13 வயது சிறுவர்களுக்கு சொர்க்கத்துக்குச் செல்ல ‘தங்க முலாம்’ பூசிய சாவிகளை கொடுப்பது, பள்ளியில் போரில் செத்த தியாகிகளுக்காக மாரடித்து துக்கப்படுவது, மைக்கேல் ஜாக்சனை மால்கம் எக்ஸ் என்று சொல்லி மர்ஜி தப்பிப்பது, ’ஆபாசமாக இருந்தால் என் பின்பக்கத்தைபார்க்காதேஎன்று மர்ஜி சீறுவது என்று இருபுத்தகங்களும், நாட்டின் சமூக - அரசியல் நிகழ்வுகளோடே நகைச்சுவையாகப் பின்னப் பட்டிருக்கிறது. குறிப்பாக, இதில் அவர் பல தகவல்களை அம்பலப்படுத்துகிறார். அதனாலேயே, இந்த புத்தகங்கள், ஒரு சிறுமியின் வாழ்க்கை என்று மட்டுமில்லாமல், போரைப் பற்றி, ஈரானியர்களைப் பற்றி, வாழ்க்கையைப் பற்றிய விரிவான படத்தை நமக்கு தருகின்றன. இந்த புத்தகங்களும் பல வகைகளில் ஈழத்தை, அகதி வாழ்வை பிரதிபலிக்கிறது - சயந்தனின் ”ஆறாவடு” நாவலைப் போலவே.

சத்ரபியின் ”ஈரான் ” புத்தகங்கள், சிறுமியின் பார்வையிலிருந்து ஆரம்பித்து ஒரு டீனேஜரின் பார்வையில் பயணித்து இளம்பெண்ணின் முதிர்ச்சியில் முடிவடைகிறது. சத்ரபியின் illustration-யில் ஏதோ அவர் கூடவே நாமும் இருந்தது போல இருக்கிறது. 13 வயது சிறார்கள் கூட தாராளமாக வாசிக்கலாம். (இது படமாக வந்திருப்பதாகவும் இணையத்தில் அறிந்துக்கொண்டேன். நாவலைப்பற்றிய வரலாற்று பின்னணிக்கு இங்கே )முடிவில், சத்ரபி ஈரானை விட்டு பிரிந்து சென்றது நல்லது என்பதை நாமும் உணர்கிறோம் - ஈரானியர்களைப் பற்றி உண்மையான பிம்பத்தை உலகுக்குச் சொல்வதற்காகவாவது!!


நாவல்: ஈரான் : ஒரு குழந்தை பருவத்தின் கதை & ஈரான்: திரும்பும் காலம்
ஆசிரியர் : மர்ஜானே சத்ரபி
பதிப்பகம் : விடியல்
விலை : ஒவ்வொன்றும் ரூ 100