Monday, January 30, 2012

சயந்தனின் “ஆறாவடு” - நாவல் அறிமுகம்

இலக்கியங்களை நான் அதிகம் வாசித்ததில்லை. இதில் ஈழ இலக்கியங்களை எங்கே? ஆனால், ஒருக்காலும் மறக்கமுடியாத ஈழத்துக் கதை ஒன்று என் நினைவில் உண்டு. அநேகமாக, அப்போது நான்காவது படித்துக் கொண்டிருந்தேன். எந்த புத்தகம் என்று தற்போது நினைவில் இல்லை.

ஒரு சிறுமி வயதுக்கு வந்திருப்பாள். அவளது சடங்குக்காக மிகுந்த பரபரப்புடன் இருப்பாள் அவளது தாய். பலரை அழைப்பது, சாமர்த்திய சடங்குக்காக பொருட்களை வாங்குவது, வீட்டை அலங்கரிப்பது, அதற்காக காசு சேர்ப்பது என்று மிகுந்த பிரயத்தனப்படுவாள். இறுதியில் அந்த நாளும் வரும். அந்தோ, விழா நடக்க வேண்டிய அன்று வீடே அலங்கோலமாகி கிடைக்கும். வீட்டில் பொருட்கள் தாறுமாறாக இறைந்து கிடக்கும். அலங்கரிக்கப்பட்ட வீட்டிலிருந்து அழுகைதான் வெடித்து எழும்பும். ’அழுதால் செத்துப்போன பெண் திரும்பி வரப்போகிறாளா”வென்று ஊராரும்,உறவினரும் அந்த தாய்க்கு ஆறுதல் சொல்லுவார்கள். அதற்கு, அந்த தாய் சொல்லுவாள், “எண்ட மகள் போராடி செத்திருக்க வேணுமையா, போராடி செத்திருக்க வேணும்” . மீதியை சொல்ல வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.

அமைதிப்படையின் அட்டூழியங்களை பற்றி பெரியவர்கள் பேசுவதை கேட்டிருந்த
எனக்கு இந்த கதை ஏற்படுத்திய வலியை, உணர்வுகளை எப்படி சொல்வதென தெரியவில்லை.அதே வலிகளை, மனதை கனக்கச் செய்யும் உணர்வுகளைத் தந்தது, தற்போது வாசித்த, சயந்தனின், “ஆறாவடு”. முகந்தெரியாத அந்த தாயை, பெயர் தெரியாத அந்த சிறுமியை மறக்கமுடியாதது போல இனி அமுதனை, அகிலாவை, நிலாமதியை,வெற்றியை,தேவியை, சுபத்திரையை அவளது மகள் மைதிலியை, பெரியய்யாவை எல்லாவற்றுக்கு மேலாக சின்னபெடியனை மறக்கமுடியாது என்று தோன்றுகிறது. சயந்தனின், ”ஆறாவடு ”நாவல் காட்டும் மனிதர்கள் இவர்கள்.

”அரசியல் வகுப்பின் முதல்நாள் “யுத்தம் என்றால் என்ன? அரசியல் என்றால் என்ன?” என்றொரு கேள்வியை படிப்பிக்க வந்தவர் என்னைப் பார்த்துக் கேட்டார். நான் எழுந்து நின்று யோசித்தேன். பிறகு, “யுத்தம் என்றால் அடிபடுறது. அரசியல் என்றால் அடிபாட்டை நிப்பாட்டிப் போட்டு பேச்சுவார்த்தைக்கு போறது” என்று சொன்னேன்.

பதிலுக்கு அவர் இப்படிச் சொன்னார். “யுத்தம் என்பது இரத்தம் சிந்தும் அரசியல். அரசியல் என்பது ரத்தம் சிந்தாத யுத்தம்” (நாவல் பக். 73)

இப்படி, போரும்,அரசியலும் அன்றாடம் அலைக்கழித்த மக்களின் வாழ்க்கைக் கதைகளை, உண்மை நிகழ்வுகளை மக்களின் பார்வையில் சொல்லுகிறது இந்த நாவல். மக்கள் தொடர்ந்து இடம் பெயர்ந்துக்கொண்டே இருக்கிறார்கள். பக்கத்து ஊருக்கு, பக்கத்து நாட்டுக்கு, கடலுக்கு என்று போர் மக்களின் வாழ்க்கையை தீர்மானிக்கிறது. துரத்துகிறது. இதில், முக்கியமானது வள்ளம்.
இலங்கையிலிருந்து இத்தாலிக்குச் செல்லும் பயணத்தில் தொடங்குகிறது நாவல். அதில், முன்னாள் போராளி முதல் சின்னப்பெடியன் வரை, முன்னாள் சிங்கள ராணுவ வீரன் பண்டார வரை அடக்கம். நீர்க்கொழும்புவிலிருந்து துவங்கும் இந்த பயணம் சொகுசான அயல்நாட்டு வாழ்க்கையை எதிர்நோக்கிச் செல்லும் சொகுசான பயணமல்ல. நிலத்தில் குண்டு போடும் அரசின்

ஒடுக்குமுறைகள் என்றால் கடலில் இயற்கையின் விளையாட்டு. இது நடுவில், கடற்கொள்ளையர்கள். பயணத்தின் நடுவில் ஏற்படும் மரணங்கள்.மக்கள் தோணியில் தப்பித்து வருவதை நாம் செய்தியாகத்தான் அறிந்திருப்போம். அனுபவமாக வாசிக்கும்போது பகீரென்கிறது. அதோடு, மண்ணைப் பற்றியும், மனிதர்களைப் பற்றியும், அவர்களது நம்பிக்கை, கவலை, எதிர்பார்ப்புகள்,சாதிய ஒடுக்குமுறைகள் பற்றியும் இந்த நாவல் வெளிப்படுத்துகிறது.

அமைதிப்படை என்ற பெயரில் இந்திய ராணுவம் அந்த மண்ணை ஆக்கிரமிக்கிறது. இந்த ஆக்கிரமிப்பு காலகட்டத்தின் உண்மைநிகழ்வுகளே இந்த நாவல். இந்திய அமைதிப்படை வருகின்றது என்றதும் மக்கள் தமது கனவு நனவாகிவிடும் என்று நம்பிக்கை கொள்கிறார்கள். ”இனி தமிழீழம்தான்” என்று
கொண்டாடுகிறார்கள். ஆனால், வெந்த புண்ணில் வேலாக, அவர்களது நம்பிக்கை வேட்டையாடப்படுகிறது. அந்த போராட்டத்தில் பலியான மக்களின் வாழ்க்கை, வள்ளத்தில் புலம்பெயரும் மக்களின் வாழ்க்கை என்று கடல் மீது தத்தளிக்கும் படகு போல தத்தளிக்கிறது வாழ்க்கை. போராளிகளை நேசித்து அவர்களை காப்பாற்றிய மக்களின் துணிவு, ஆமிக்காரர்களிடமிருந்து புத்தி சாதுரியத்துடன் செயல்பட்ட மக்கள் என்று காயங்களோடும், குருதியோடும், அவர்கள் எதிர்கொண்ட நெருக்கடிகள் என்று பலவாறாக வெளிப்படுகிறது வாழ்வனுபவங்கள்.

அகதிகளாக கோயிலில் தஞ்சமடைகிறார்கள் மக்கள். அபிஷேகக் கிணறில் குளித்ததைத் தொடர்ந்து பறைசாதிகள் என்று கோயிற்காரர் அவர்களை அவமானப்படுத்துகிறார். பயந்துக்கொண்டிருந்த மக்களில் ஒரு இளைஞன் கோபமாக வெளியேறுகிறான். வரும்போது அவனுடன் இரண்டு இயக்கக்காரர்கள் வருகிறார்கள். அடுத்த சில நொடிகளில், கோயிற்காரர் மக்களிடம் மன்னிப்புக் கேட்கிறார். கோயிலில் தங்கியிருக்கும்போது
சுபத்திரையின் மகள் வயதுக்கு வந்துவிடுகிறாள். கதவுக்கம்பிகளில் செருகப்பட்டிருந்த அம்மனின் பட்டுத்துணிகள் சுபத்திரையின் கண்களின் படுகிறது. “அம்மாளாச்சி! நீயும் ஒரு பொம்பிளைதானே, குற்றம்
குறையளை பெரிசுபடுத்தாமல் விடு” என்று காளியை வேண்டிக்கொள்கிறாள், சுபத்திரை. ஒரு போர், இடம்பெயர்வு மக்களின் வாழ்க்கையில்,அவர்களது விழுமியங்களில் ஏற்படுத்தும் தாக்கங்கள்.....


போர் வேண்டுமென்று ஒரு தலைமுறை தீர்மானிக்கிறது. அதற்கடுத்து, விரும்பியோ விரும்பாமலோ போர் அவர்கள் வாழ்வை ஆக்கிரமித்து விடுகிறது.நாவலில் ”இயக்கம்” என்ற ஒரு அமைப்பு இருக்கிறது. “இயக்கம்” மக்களோடு மக்களாக இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக இயக்கம் மக்களை விட்டு விலகி செல்கிறது. அதில், நேரு மாமாவின் கேரக்டர் மிகவும் முக்கியமானதாக படுகிறது. ஒருவேளை அதுதான் சனங்களின் குரல் போல. மக்களின் அமைதி/சமாதானத்துக்கான விருப்பம், துயரம், கருத்து,அச்சுறுத்தல்
என்று எதற்கும் முக்கியத்துவம் இல்லாமல் போய்விடுகிறது. அப்பாவி மக்கள் ஒரு பக்கம், அரசியல் ஒரு பக்கமுமாக பிரிந்துவிடுகிறது. நாவல் நடக்கும் காலகட்டத்தை, இந்தியப்படை இலங்கை மண்ணில் இறங்கியதிலிருந்து
வெளியேறும் வரையிலான வரலாற்றை - மக்களின் அனுபவங்களாக பதிவு செய்திருக்கிறது, ஆறாவடு.

மக்களின் போராட்ட எழுச்சியை, அரசியல் உணர்வை மழுங்கச் செய்யும் சிங்கள அரசின் உத்திகள், அந்த சிடிகளை மக்களிடமிருந்து திரும்பப்பெற்று அதனை முறியடிக்கும் இயக்கத்தின் செயல்பாடுகள், இயக்கத்துக்குள் காதல், மற்ற இயக்கத்துடனான முரண்பாடுகள்,இயக்கத்தில் பெண்கள், குழந்தைப் போராளிகள் என்று ஈழத்து போராட்ட வாழ்வியலை இந்த நாவல் தெளிவாக காட்டுகிறது.

அதோடு, முக்கியமாக, சயந்தனின் ’எள்ளல் நடை’ பற்றி சொல்லியே ஆக வேண்டும். இதனை நான் சொல்லுவதைவிட, அவரது எழுத்துகள் சொல்லுவதுதான் சரியாக இருக்கும்.

“பெண் போராளிகள் சண்டை செய்கிறார்கள். பெரிய மோட்டார் பீரங்கிகளை கட்டியிழுக்கிறார்கள். தற்கொலைப் படையாகவும் இருக்கிறார்கள். ஆனால், இதெல்லாம் இயக்கத்தில் இருக்கும் வரைதான் நடக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. நாங்கள் கேள்விப்பட்ட அளவில், இயக்கத்தில் இருந்து பிறகு வெளியேறி திருமணம் செய்த பெண்போராளிகள் கூட திரும்பவும், உங்களது தமிழ் சமூக வழக்கத்தின்படிதானே வாழ வேண்டியுள்ளது. இன்னும் சொன்னால், திருமணத்துக்குப் பிறகு தங்களது கணவர்களிடம் அடிவாங்குகிற
முன்னாள் பெண் போராளிகளைக் கூட நாங்கள் சந்தித்திருக்கிறோம். பரந்துப்பட்ட சமூக நோக்கில் ஏன் இந்த விடயத்தில் உங்களால் ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த முடியவில்லை. பெண் விடுதலையை
அனுபவிக்க வேண்டும் என்றால் இயக்கத்தில் இருக்க வேண்டுமென்ற நிபந்தனை உள்ளதா....”


தலையை வறு வறு என்று சொறிய வேண்டும் போல எனக்குத் தோன்றிற்று. வெளிநாட்டு ஆட்களின் முன் அப்படி நடந்துக்கொள்வது நாகரிகமில்லை என்பதால் சொறியவில்லை. இப்படியெல்லாம் கேள்விகள் உள்ளன என்பது ஆச்சரியமாக இருந்தது. தமிழ் பத்திரிக்கையாளர்கள் ஒருபோதும் இப்படிக் கேட்டதில்லை. அவர்கள் தயங்கி தயங்கி கேட்கிற ஒரே கேள்வி, “தலைவர் எப்பொழுது சண்டையை தொடங்குவார்” என்பதே. நாங்களும் “அண்ணை தொடங்கிற நேரத்துல்ட தொடங்குவார்” என்று முடித்துவிடுவோம்.

ப்ரெஞ்சுப் பெண்மணி எனது பதிலுக்காக மொழிபெயர்ப்பவரை பார்த்தபடி நின்றார். நான் எழுந்து நின்றேன். அவர்கள் எதிர்பார்த்த இயல்பை என்ன வழியிலேனும் கொண்டு வர முயன்றேன். அலட்சியமான பார்வையொன்றை அவர்களைத் தவிர்த்து வெளியே வீசினேன். பிறகு பதிலைச் சொன்னேன், “ இப்பிடியான கேள்விகளுக்கு நீங்கள் தமிழினி அக்காவைத்தான் தொடர்பு கொள்ளவேணும்”. (நாவல் பக்: 134)

எனக்கு பெரிய இலக்கிய ஆர்வமெல்லாம் இருந்ததில்லை. எளிய மக்களின் வாழ்க்கையை, அவர்களது வாழ்வியலை பற்றி பேசும் இலக்கியங்களை இதுவரை வாசித்திராததே அதற்கு காரணமாக இருக்கலாம். ”ஆறாவடு ” அப்பாவி மக்களின் வாழ்க்கையை, அவர்களது போராட்டத்தை, இடப்பெயர்வின்
துயரை, உறவுகளின் இழப்பை, வலியை பற்றி பேசுகிறது. அதனாலேயே, ”ஆறாவடு” நாவலை இலக்கியம் என்ற வரையறைக்குள் கொண்டு வருவது சரியாக இருக்குமா என்று தெரியவில்லை. (கொஞ்சம் சயந்தன் ஸ்டைல்ல ட்ரை பண்ணேன்!)

சயந்தனை அவரது ”சாரலின்” பதிவுகள் மூலம்தான் அறிந்திருக்கிறேன். அதுவும்,
கிண்டல்,நக்கல் வகை பதிவுகள் மற்றும் ஒலிப்பதிவுகள் மூலம் (பிட்டு/சொதியை மறக்க முடியுமா?!) மேலும், ’பிச்சை வேண்டாம்,நாயைப் பிடி’ என்ற அவரது பதிவு புகழ்பெற்றது. பதிவரிலிருந்து நாவலாசிரியராக பதவி உயர்வு பெற்றிருக்கும் சயந்தனுக்கு வாழ்த்துகள்!

நாவல்: ஆறாவடு
பதிப்பகம் : தமிழினி
விலை : 120
பக்கங்கள் : 192

Saturday, January 28, 2012

’கொசக்சி பசப்புகழ்’

ஸ்ட்ராவினால் செய்த கிரவுன், ஸ்ட்ராவினால் செய்த மோதிரம், கழுத்து மணிகளைக் கொண்டு கைகளுக்கு ஆபரணம் என்று பப்பு ஒரு மாதிரி கோலத்தில் இருந்தாள். (ஹிஹி...அந்த கம்மல் என்னோடது!)அது, அவளாகவே விளையாடும் கற்பனை ராணி விளையாட்டு. படுக்கும் நேரமாகிவிட்டது என்றதும் பப்புவுக்கு இந்த நகைகளை குறித்து பயம் வந்துவிட்டது. அதைத்தொடர்ந்து.....

”ஆச்சி, திருடங்க எப்படி வர்றாங்க?” - பப்பு

”நைட்ல எல்லாரும் தூங்கினப்புறம். யாருக்கும் தெரியாம, கதவு தெறந்து வருவாங்க....” - மீதான், அசிங்கப்படப்போவது தெரியாமல்!

”அது இல்ல ஆச்சி, திருடங்களாவறதுக்கு யாரு டீச் பண்ணுவாங்க? திருடங்க எப்படி உருவாகறாங்க? சொல்லு....” - பப்பு (ஆகா...அந்த கொசக்சி பசப்புகழ் நீதானா?!பவ்வ்வ்வ்வ்வ்!!)

”ம்ம்..பப்பு, யாரும் திருடங்களாகணும்னு யோசிச்செல்லாம் திருடனாக மாட்டாங்க. திருடங்களாகணும்னு அப்படின்னு யாருக்காவது ஆசையிருக்குமா? சொல்லு..திருடறது சரியா தப்பா?” - நானேதான்.

”தப்பு....” - பப்பு

”ம்ம்...கரெக்ட். இப்போ நீ நம்ம வீட்டுக்கிட்டேயே பாரேன். சிலருக்கு வீடு இருக்கு. சிலருக்கு வீடே இல்ல. வழியிலதான் படுத்திருக்காங்க. சிலருக்கு கார் இருக்கு. சிலருக்கு சாப்பாடு வாங்கக்கூட காசு இல்ல. சிலபேரு ஸ்கூலுக்கு போய் படிக்கிறாங்க. சிலபேரு ஸ்கூல் போக முடியல.சிலபேருக்கிட்ட
நெறைய நகை இருக்கு...”

”ஓ.... அவங்களுக்கு நெகை இல்லன்னா நாமளும் நெகை போட்டுக்காம இருக்கணும். சரியா, ஆச்சி?” - பப்பு

”ம்ம்...இப்போ அவங்களுக்கு எதுவும் கிடைக்காததாலதான் திருடறாங்க. அதுக்கு நாம என்ன பண்ணனும்?” - நான்.

”அவங்களுக்கு சாப்பாடு குடுக்கணும். வீடு குடுக்கணும்.அவங்க நெகை வைச்சிருக்க அளவுக்குத்தான் நாமளும் வைச்சிருக்கணும்...கரெக்டா? சொல்லு ஆச்சி” - பப்பு (இதெயெல்லாம் நான் சொல்லித்தரலையே பப்பு!!)

”அவங்ககிட்டே நகை இல்லன்னா?” - நான்

”அவங்ககிட்டே நகை இல்லன்னா நாம நகை போட்டுக்ககூடாது.” - பப்பு

”ம்ம்..எல்லாருக்கும் ஒரே மாதிரி ஸ்கூல், ஒரே மாதிரி வீடுல்லாம் இருந்தா.....” - நான்

”நாம நெகை போட்டுக்கலாம்...” - பப்பு (அவ்வ்வ்வ்!!)

”ம்ம்..அப்போ திருடங்க உருவாக மாட்டாங்க!! எல்லாருக்கும் வேலை கிடைச்சா எல்லாரும் சம்பாரிப்பாங்க இல்ல. அது மாதிரி புது சொசைட்டியை நாம உருவாக்கணும்...” - நான்.

அமைதியாக இருந்தாள். யோசனை என்று நினைக்கிறேன். அப்புறம், ஆயாவிடம் சென்று இதே கேள்விகளை கேட்டுக்கொண்டிருந்தாள்.

இதில் ஹைலைட் - கடைசிவரைக்கும், அவள் அணிந்திருப்பது ”நகைகள் ” கேட்டகரியை சேர்ந்ததுதான் என்ற அபார நம்பிக்கை!! அதுவும், அந்த விலைமதிக்க முடியாத”நகைகளைத்” திருடுவதற்கு, திருடன் வருவானோ எனும் கவலையில் அவற்றை கழற்றி, ஒளித்து வைத்துவிட்டுதான் படுத்தாள்.

Tuesday, January 24, 2012

பப்பு டைம்ஸ்

”ஆச்சி, நீ எனக்கு ஸ்டெப் மதர்தான் போல இருக்கு” - பப்பு

”ஏன் பப்பு? எப்படி சொல்றே?” - அப்பாவி மீ

“ம்ம்....நீ எதையும் தொலைக்க மாட்டேங்குறே இல்ல, ஆனா எனக்கு தொலைக்கிற டிஎன்ஏ இருக்கு இல்ல...உனக்கு அது இல்லயே” (பயபுள்ள பென்சில்/ஷார்ப்பனர் தொலைக்குறதும் இல்லாம எப்படி சீன் போடுது பாருங்க!!)

யாருடைய குழந்தைங்கன்னு கண்டுபிடிக்க டிஎன்ஏ டெஸ்ட் செய்வாங்கன்னு சொல்லியிருந்தேன். பேர்ட்சுக்கு மட்டும் ஏன் இறக்கை இருக்கு, நமக்கு இல்லைன்னு கேட்டப்போ நம்ம டிஎன்ஏ அது மாதிரி இல்லன்னு சொல்லிட்டேன். அது எல்லாத்துக்கும் சேர்த்து கிடைச்ச பரிசு இது!!

*******************
”நாம பிளாக்காதானே இருக்கோம். நம்மை பிளாக் பிளாக்ன்னு கூப்பிடலாமே, ஏன் ஆரஞ்சை மட்டும் ஆரஞ்சுன்னு சொல்லணும்?” - பப்பு.

இப்போ பிளாக்க்குன்னு கூப்பிட்டா யாரை கூப்பிடறாங்கன்னு தெரியும்? அதுக்குதானே பேர் இருக்கு? - மீ தான்.

“ஓ..ஈசியா சொல்லிட்டே...ம்ம்ம்..நமக்கு ஒரு கண்ணு இருந்திருக்கலாமே, ஏன் ரெண்டு கண்ணு இருக்கு?” - அகெய்ன் பப்பு.

ஒரு கண்ணை மூடி மறுகண்ணால் பார்த்தெல்லாம் சில பரிசோதனைகள் செய்தபிறகு, “நமக்கு லெஃப்ட் ரைட் லல்லாம் தெரியணும் இல்ல...அதுக்குதான்” என்றேன்.

“அப்போ ஏன் நெத்தியில் ஒரு கண்ணு இல்ல, மேலே பாக்குறதுக்கு?” - பப்புவேதான்!

“அதுக்குதானே கழுத்து இருக்கு...மேலே கீழே எல்லா திரும்பி பாக்குறதுக்கு” என்றேன்..

”கழுத்துல இருக்கிறது போன்சாப்பா?” - பப்பு

“ஆமா, அது ஸ்பெஷல் டைப் போன்ஸ்..வளையற மாதிரி இருக்கும்”

“ஓக்கே...சரி, இதுக்கு ஆன்சர் பண்ணீட்டே...மனுசங்க எப்ப்டி வந்தாங்க சொல்லு?!! #avvvvvv_வேணா_அழுதுடுவேன்!!

***********************************

"மாடுல்லாம் ஒரே கலராதான் இருக்குமா? பிளாக், ஒயிட்டாதான்? வேற கலர்ல இருக்காதா, ஆச்சி?"

"இருக்குமே, பிரௌவுன் கலர்ல இருக்குமே, நீ பாத்ததில்லை?"

"பிங்க் கலர்ல மாடு இருக்காதா, ஆச்சி?!"

:‍-)))) பிங்க் கலர்ல ஒரு மாட்டை, அது ரோட்ல க்ராஸ் பண்ற மாதிரி என்னால கற்பனையே பண்ண முடியலை...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!

Sunday, January 08, 2012

புத்தக கண்காட்சி துளிகள்

இந்த பதிவு போடலைன்னா, அதுவும் சென்னையில இருந்துக்கிட்டு போடலைன்னா பதிவரா இருந்து என்ன பிரயோசனம்? அதனால மீ டூ ஜாயினிங் தி ஜோதி.......

* மகளிருக்கு மகத்தான யோசனைகள்என்றெல்லாம் புத்தகங்கள் இருந்தன. அதில் என்ன யோசனைகள் இருக்கும் என்ற நினைப்பிலேயே நடந்து போனதில், அந்த கடையை தவற விட்டு விட்டேன்(!).

*”ப்ளீஸ், இந்த புத்தகத்தை வாங்கிடாதீங்கஎன்ற புத்தகத்தின் அட்டையில் கொலவெறியோடு மிரட்டிக் கொண்டிருந்தார், நீயா நானா கோபி. அவரே, இவ்வளவு தூரம் சொன்னபிறகும் வாங்கவா செய்வோம்? (சாதா நாளிலேயே மனுசன்காட்டு காட்டுன்னு காட்டுவார். அட்டை படத்தில் சொல்லவா வேண்டும்? டெரர்தான், போங்க!)

* தமிழ்நாட்டில் போலி டாக்டர்களுக்கு பஞ்சம் இல்லாமலிருப்பதன் ரகசியம் இன்றுதான் புரிந்தது. (நான் +2 முடிச்சப்போ இந்த ரகசியம் தெரியாமப்போச்சே ..ம்ம்ம்….இப்போ மட்டும் என்ன!!) ஒன்றா ரெண்டா....அத்தனை மருத்துவ நூல்கள், உணவு பழக்க வழக்க நூல்கள். உடலின் எந்த பாகத்தில் கோளாறு வந்தாலும், டாக்டரிடம் போகாமலேயே அதன் காரணங்களை கண்டு கொள்ள புத்தகங்கள் இருக்கிறது. அப்புறம். சத்தான உணவு சமைப்பது பற்றி, இயற்கை உணவு பற்றி, மூலிகை மருந்துகள் என்று டாக்டருக்கு படிக்க ஆசைப்பட்டவர்களுக்கு புதிய வாய்ப்பு காத்திருக்கிறது!!

* சென்ற வருடம் போல் இந்த சிபிடி காரர்கள் அராஜகம் இல்லை. ஒகேவான சத்தத்தில், அளவான எல்சிடி மானிட்டர்களில் குழந்தைகளுக்கு பாடல்கள், பாடங்கள் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். ஒரு சில கடைகளில், டெஸ்க், டேபிள் கூட விற்றுக்கொண்டிருந்தார்கள். ஒரு சிக் ஸா புதிர் போல ஒரு அட்டை இருந்தது. பக்கத்திலிருந்த பெண்மணி அதை எடுத்தார். பார்த்தால் – அதி ஒரு குட்டி சேர். “100 கிலோ கூட தாங்கும் மேடம்என்றார். கடைக்காரரிடமிருந்து வாங்கி கீழே போட்டு அதில் உட்கார்ந்து பார்த்தார் அவர் சொன்னதை டெஸ்ட் செய்வது மாதிரி!!

*விடியல் பதிப்பகத்தில் உள்ளே நுழைய எத்தனித்தேன். வாசலிலேயே இருவர் நின்றுக்கொண்டிருந்தார்கள். “டேய், அதுல்லாம் புரட்சி புக்கு, நமக்கு ஒத்துவராதுஎன்று மற்றவரை இழுத்தார். இவர், அவரை இழுத்ததில், கடைக்கு உள்ளே செல்ல லைட்டா கேப் கிடைத்தது. வாங்கி முடிக்கும் வரை, இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள். நண்பர்கள் போலிருக்கிறது - “சரி, நீ வாங்கிட்டு வா, நான் 46யில இருக்கேன்என்றபடி பேச்சு வார்த்தை சுமூகமான முடிவுக்கு வந்தது.

* அடுத்த அட்டாக் என்சிபிஹெச். அங்கும் ஒரு ஸ்பீடு பிரேக்கர் எனக்கு காத்திருந்ததை நான் அறியவில்லை. சைக்கிள் கேப்பில் சரேலென வந்தார் ஒருவர். வாசலில் இருந்த புத்தகத்தை, எடுத்து நடுப்பக்கத்தை விரித்து வைத்து படிக்கத் தொடங்கினார். உடனே, இருவர் அவரை சரமாரியாக படம் எடுத்தனர். நானும் சற்று பேக் அடித்துவிட்டேன். ஏதோ பிரபலம் போலிருக்கிறது, என்ன தொல்லையப்பா என்று எண்ணியபடி விலகி நின்றேன். உடனே, அடுத்த புத்தகத்தை எடுத்தார். ”இது சரியா இருக்கா?” என்று கேமிராக்காரர்களை கேட்டபடி பிரித்து வைத்துக்கொண்டார். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! நிச்சயமாக இவர்கள் பதிவர்கள்தான் என்று மட்டும் தெரிந்து விட்டது. (அப்படி பதிவர்கள் இல்லாமல், அவர்கள் இதை வாசிக்க நேர்ந்தால் மீ தி சாரி…வாரநாட்களில் கூட்டம் இல்லாத சமயங்களில் இந்த போட்டோ செஷனை வைத்துக்கொள்ளக் கூடாதா? கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்களேன், ப்லீஸ்! J) பைதிவே. அந்த ரேக்கில்தான் ருஷ்ய நாவல்கள் இருந்தன. எனவே, எனக்கும் அங்கே வேலையிருந்தது. எக்ஸ்க்யூஸ் மீ சொல்லி எப்படியோ அடுத்த ரேக்கிற்கு வந்துவிட்டேன். அப்புறம், புகைப்பட கோஷ்டி சென்றதும். அந்த இடத்தை விடாமல் பிடித்துக்கொண்டேன்.

*குழந்தைகள் புத்தகம் என்று போட்டிருக்கிறது. ஆனால், பக்கம் பக்கமாக எழுதி தள்ளியிருக்கிறார்கள். புரட்டும்போதே ஸப்பா.....ஆயாசமாக இருக்கிறது. ஆவ்வ்வ்வ்! இருப்பதிலேயே, குறைவான வார்த்தைகள் கொண்ட புத்தகங்களை பப்புவுக்கு வாங்கிக்கொண்டேன். எனக்குத் தெரிந்து, யுரேகா புக்ஸ் அப்புறம் என்சிபிஹெச், ஓரளவுக்கு பாரதி புத்தகாலயம், அப்புறம், நேஷனல் புக் டிரஸ்ட் யில் மட்டும் குழந்தைகளுக்கான டைட்டில் தேர்ந்தெடுக்கலாம். சென்ற முறையும் சில நல்ல புத்தகங்கள் யுரேகாவில்தான் கிடைத்தன. தூலிகா வெல்லாம் என் ஆர் ஐகளுக்காகவே புத்தகம் தயாரித்து விலை வைத்திருப்பார்கள் போல. சில கடைகளில், புத்தகங்களை புரட்டிக்கொண்டிருந்த குழந்தைகளைபோதும் போதும், வைச்சுட்டு வாஎன்று விரட்டிக்கொண்டிருந்தனர், பெற்றோர்.

* ஒரு சில பதிப்பகங்களில், சில பெரியவர்கள், சீரியசாக முகத்தை வைத்துக்கொண்டு கண்ணாடி அணிந்த/அணியாத கண்களால், போகிற- வருகிறவர்களை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். என்ன கோபமோ தெரியவில்லை. பார்க்கவே, பயமாக இருந்தது. புகைப்படங்களிலிருந்துதான் என்றாலும், எங்கிருந்து பார்த்தாலும் நம்மை பார்ப்பது போலவே இருந்தது. பீதியாக இருந்ததால் அடுத்த ஸ்டாலுக்கு ஓடி வந்துவிட்டேன். ஒருவேளை அவர்கள்தான் இலக்கியவாதிகளோ என்னவோ?!

*ஒரு கடையின் முன் அவ்வளவு கூட்டம். நானும் கூட சென்று எட்டிபார்த்தேன். மணல் கடிகாரம், தொலைநோக்கி, உருபெருக்கி, ஸ்டெத்தாஸ்கோப் எல்லாம் அடிக்கி வைக்கப்பட்டு இருந்தது. ரொம்ப ஜாலியாக இருந்தது. விலை மட்டும் கேட்கவில்லை. மற்றபடி, எக்ஸிபிஷனுக்கான உண்மையான அர்த்தம் அங்குதான் இருந்தது.

* ஒரு ஸ்டாலில், புத்தகங்களே இல்லை. குடும்பம் குடும்பமாக அமர்ந்திருந்தார்கள். இளைப்பாறும் இடம் போலிருக்கிறது, தண்ணீர் கிடைக்குமாவென்று சுற்றும் முற்றும் பார்த்தேன். அய்யோ...அம்மா, ஏதோ இலக்கியவாதிகள்/ எழுத்தாளர் Vs வாசகர் சந்திப்பு மாதிரி ஏதோ எழுதி இருந்தது. ரெஸ்ட் எடுக்கலாம் என்ற எண்ணத்தை மாற்றிக்கொண்டேன்.

* எதிர் அல்லது கருப்பு பிரதிகள் என்று நினைக்கிறேன். போகலாம் என்று எண்ணினேன். ஆனால், அங்கும் ஒரு சிறு கூட்டம். கேமராவும், மைக்குமாக புதிய தலைமுறை டீம். ’என்னடா, ஒரு பிரபலம் புத்தகம் வாங்கக்கூட உரிமையில்லையா, உடனே வந்துடறாங்க’ என்று எண்ணியபடி நகர்ந்தேன்...யாரு, பிரபலமா...அட, நாந்தாங்க!! ;-)

*பார்த்ததிலேயே, டிஸ்கவரி புக் ஸ்டால் கல்லாவில் இருந்தவர்களின் முகத்தில்தான் சிரிப்பு இருந்தது.

* பதிவின் இறுதிக்கு வந்துவிட்டோம். பதிவர் சம்பிரதாயப்படி முடிக்க,நான் வாங்கிய சில புத்தகங்களின் பட்டியல் இதோ….

- மஹா ஸ்வேதா தேவியின் சிறுகதைகள் - நேஷனல் புக் டிரஸ்ட்

- சுதந்திர காற்று - பேபி காம்ப்ளி (விடியல் (?))

- ஜூதான் - (விடியல்)

- சூன்யப் புள்ளியில் பெண் - நவ்வல் எல் ஸாதவி ( உன்னதம்)

- லெனினுக்கு மரணமில்லை - அலைகள்

- பாகிஸ்தான் சிறுகதைகள் - சாகித்ய அகாடமி

- சினிமா : திரை விலகும் போது (கீழைக்காற்று)

- கண்ணை மறைக்கும் காவிப்புழுதி (கீழைக்காற்று)

- வானவில் - என் சி பி ஹெச்

- தாசிகள் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர் - மூவலூர் ராமாமிருத அம்மையார்.

- விடுதலைப் போரின் வீர மரபு (கீழைக்காற்று)

இவை தவிர, பொதுவாக வாங்க வேண்டியவை:

- சோளகர் தொட்டி

- எரியும் பனிக்காடு

- ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

அவை சென்ற வருட புத்தக சந்தையில் வாங்கியது. வாசித்ததில், பரிந்துரைக்கவும் தோன்றியது. அதனால், இந்த லிஸ்ட்!!

இந்த வருடம் வாங்கியவற்றைப் பற்றி அடுத்த வருடம்ம்ம்ம்ம்ம்ம்….. டொண்ட்டடொய்ங்!!

* ’வயிற்றுக்கும் ஈயலாமே’ என்று அரங்கை விட்டு வெளியே வந்தால். ஒருவர் மைக்கில் ஆத்து ஆத்துன்னு ஆத்திக்கிட்டிருந்தார். ஐஸ்க்ரீம் கடை இருந்தது – ம்ஹூம்….வாங்குவதற்குள் ஐஸ்க்ரீம் பாலாக மாற வாய்ப்பு அதிகம். அடுத்த கடையிலும் அப்படியே! இயற்கை உணவு என்று பழ ஸ்டால் – டென்சிங்-கே சவால் விடும் அளவுக்கு இருந்தது,முகப்பு. மனதை திடப்படுத்திக்கொண்டு டீக்கடை அருகில் சென்றேன்.’அமெரிக்காவில், லிஃப்ட் 3 5 7 இப்படிதான் இருக்கும். என் கூட வந்த ஒரு அமெரிக்கர், என்னை பார்த்து ஒரு வார்த்தை கேட்டார். அந்த ஒரு வார்த்தை. மிகவும் மரியாதைக்குறைவான வார்த்தை. அந்த, கேவலமான வார்த்தையை அவையில் சொல்லலமா, சொன்னால் என்ன நடக்கும் என்று தெரியவில்லை. என்னைப் பார்த்து அவர் கேட்ட அந்த ஒரு வார்த்தை ”யூ இண்டியன்ஸ்”?’ - பின்னாலிருந்து மைக்கில் துரத்திய குரல்தான்! அவ்வ்வ்வ்வ்!! இங்கியுமா? வயிற்றுக்கு ஈயும் எண்ணத்தை கைவிட்டு எக்சிட்டை நோக்கி நடக்கத் துவங்கினேன்.