Sunday, November 13, 2011

வேளச்சேரி டைம்ஸ் : ராஜுவும், பில்லியனாவது குழந்தையும்

மழை தூறிக்கொண்டிருந்த காலை. வேளச்சேரி ஏரிக்கரை(!) சாதாரண நாளிலேயே குப்பை குவிக்கப்பட்டு நாறிக்கொண்டிருக்கும், மழைநாளில் கேக்கவே வேண்டாம். மழைநீர் கழிவுநீராக மாறிக்கொண்டிருந்தது. மழை வலுப்பதற்குள்ளாக அலுவலகம் சென்றுசேர்ந்துவிட அனைவருமே ஆசைப்பட்டுக் கொண்டிருந்தனர். ஆனால், வாகனங்களோ இன்ச் இன்ச்-ஆக நகர்ந்துக்கொண்டிருந்தது. இது எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஒரு ஜீவன் ஏரிக்கரையின் மேல் நடந்து வந்தது. கால் வைக்கக்கூசும் குப்பைமேட்டின் நடந்து வந்தது நிச்சயமாக மழையின் தூறலை அனுபவிக்க இல்லை. குப்பை மேட்டிலேயே சற்று மேடாக இருந்த பகுதியில் காலை வைத்தான்,அவன். ஒரு பார்வை. எப்படித்தான் அவன் கையில் அந்த கவண் வந்ததோ தெரியவில்லை.... ஏரியில் இருந்த தண்ணீர் திட்டுகளைத்தாண்டி செடியின் மீதமர்ந்திருந்த நாரையை நோக்கி எறிந்தான். படவில்லை போல. இன்னும் சற்றுத்தள்ளி போய் திரும்ப ஒரு கல்.

அதற்குள் மழை பெய்யத்துவங்கியது. ஹாரன்கள் வலுக்கத்தொடங்கின. தான் நனைவதைப்பற்றியோ அல்லது குப்பைகளில் கால் வைப்பதைப்பற்றியோ எந்த கவலையும் இல்லாமல், அவன் தொடர்ந்து குப்பைகளை சீண்டினான். அகப்பட்ட பாட்டில்களை சேர்த்து வைத்தான். சில பாட்டில்களில் இருந்த மழைநீரை கவிழ்த்துவிட்டு ஒன்றாக்கினான். அதற்குள் சிக்னல் விழ வாகனங்கள் நகரத்துவங்கின.

பெயர் ராஜூ. வயது 14 அல்லது 15. நினைவு தெரிந்த நாள் முதலே அவன் ரோடில்தான் வசிக்கிறான்.குப்பைகளை பொறுக்குவதுதான் அவனுக்குத்தெரிந்த தொழில்.பாட்டில்களோடு சமயங்களில் தூக்கியெறியப்பட்ட பொட்டலங்களில் மீந்துப்போன உணவு கிடைக்கும்.மழை பெய்தால் அதற்கும் வாய்ப்பில்லை. பள்ளிக்கூடத்துக்கெல்லாம் சென்றதில்லை.சென்று என்ன செய்யப்போகிறோம்? - திருப்பி என்னைக் கேட்டபோது என்னிடமும் பதிலில்லை. இந்தியாவில் பிறந்த அனைத்துக்குழந்தைகளுக்கும் படிப்பை அடிப்படை உரிமையாக்குவோம், கட்டாயக்கல்வி என்ற செய்திகள் மட்டும் நினைவுக்கு வந்தது. ராஜுவுக்கு ஊர் என்றெல்லாம் ஒன்று கிடையாது. சென்னையில்தான் இருக்கிறான். தாய் கிடையாது. எங்கேயென்றும் தெரியாது. தந்தை மட்டும்தான். அவரையும் எப்போதாவதுதான் பார்ப்பான். மற்றபடி, இப்படி தெருவில் பொறுக்குவது, கிடைப்பதை உண்பது, இதுபோல பாட்டில் பொறுக்கும் பசங்களோடு சுற்றுவது, பாலத்துக்கடியில் உறங்குவது இதுதான் ராஜுவின் வாழ்க்கை. ராஜூ குப்பை பொறுக்கிய இடத்திலிருந்து அரைகிலோ மீட்டர் சென்றால், கண்ணுக்கினிய வாய்க்கு ருசியான உணவைத்தரும் பல உணவகங்கள் உண்டு. ஆனால், அவற்றுள் ராஜூவால் நுழைய முடியாது.

ராஜு சொல்வது போல, ஒன்றிரண்டு பேர் மட்டும் இப்படியில்லை. சென்னையின் ஏதாவதொரு குப்பைமேட்டை பார்த்தீர்களானால் புரிந்துக்கொள்ளலாம். யாராவது அந்த குப்பையை கிளறிக்கொண்டிருப்பார்கள். மிச்சம் மீதி உணவுக்காக பைகளை திறந்து பார்த்துக்கொண்டிருப்பார்கள். பள்ளிக்கரணையில் உள்ள டம்ப்யார்டிற்கு சென்றால் கண்கூடாக இந்த காட்சியைக் காணலாம். ஒரு பக்கம் குப்பைகள் எரிந்து புகை மண்டலமாக இருக்கும். அதன் ஒருபக்கத்தில் குப்பைகளை நோண்டியபடி சிறுவ சிறுமிகள் வெற்றுக்கால்களுடன் ஓடிக் கொண்டிருப்பார்கள். ஒரு சில முதியவர்களும் இருப்பார்கள். பக்கத்திலேயே, பன்றிகளும், நாய்களும் அதன் உணவை தேடியபடி இருக்கும்.

(படம் நன்றி: கூகுள்)
வெகு சாதாரணமாக எந்த நேரத்தில் சென்றாலும் இந்த காட்சியைக் காணலாம்.
நீங்கள் விரும்பினால் இந்த காட்சிகளையெல்லாம் பாராதது போல கடந்து செல்லலாம். இந்த முக்கியமான திறமையை - உபயோகமான இந்த திறமையைத்தானே நாம் ஒவ்வொருநாளும் நுட்பமாக கற்றுவருகிறோம்! ஆனால், எத்தனை பிரயத்தனப்பட்டாலும் நம்மால் இந்தக்காட்சிகளை காண்பதிலிருந்து தப்ப முடியாது. நம் தெருமுனையில் கூட யாராவது ஒரு கையில் சாக்கு மூட்டைகளோடு குப்பையை நோண்டிக்கொண்டிருக்க கூடும். அல்லது, சிக்னலில் கையில் குழந்தையுடன் இன்னொரு குழந்தை சில்லறைகளுக்காக நம் பின்னால் ஓடி வரக்கூடும். தி.நகரிலும், பாண்டி பஜாரிலும் நம் பர்சிலிருந்து வீசப்படும் ஓரிரு நாணயங்களுக்காக கடை வாசல்களில் ஏங்கி நிற்கும் இந்த முகங்களை நாம் காணவில்லையா என்ன?

‘இந்த காட்சிகள் மிகவும் சாதாரணமானவைதான். ஏழைகள் எல்லா இடங்களிலும்தான் இருக்கிறார்கள். பாசிடிவானவற்றை பார்த்து பழக வேண்டும். எதிலும் எல்லாவற்றிலும் குறை கண்டுபிடித்தால் இப்படித்தான். நல்லவற்றை பார்க்க வேண்டும். எத்தனை வாகனங்கள், எவ்வளவு டெவலப்மெண்டுகள், ஏழ்மை என்பது இப்போதெல்லாம் குறைந்துவிட்டது........ஏதாவது ஒரு குழந்தைக்கு படிப்பு செலவுக்கு காசு கொடுத்தால் போயிற்று......’

ஆம், நமது கல்விமுறை இதைத்தான் நமக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறது. அனைவருக்குமான உரிமைகளை பெற வழியை சொல்லிக்கொடுக்காமல்
ஏற்றத்தாழ்வுகளை வெட்கப்படாமல் சகித்துக்கொள்ளவே நம்மை பழக்கியிருக்கிறது. அதோடு பெருமைக்கொள்ளவும்! இந்தியாவில்தான் உலகில் முதல் பணக்காரர்கள் வாழ்கிறார்கள். சக்தி படைத்த மனிதர்கள் வாழ்கிறார்கள். ஆனால், ஆப்ரிக்காவை விட வறுமையான மனிதர்களும் இங்குதான் வசிக்கிறார்கள்.

5000 கோடிக்கு வீடு கட்டி வாழ்பவர்கள் வசிக்கும் நாட்டில்தான் பாலத்துக்கடியில் தூங்குபவர்களும் வசிக்கிறார்கள். சரியான சாப்பாடு கொடுக்க முடியாமல், 75000 குழந்தைகளை மாதந்தோறும் நாம் சாகடிக்கிறோம். நம் கண்முன்னே குழந்தைகள், பிச்சைக்காரர்களாக மாறுவதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கிறோம். அனைவருக்கும் கல்வி என்ற குரலை எழுப்பிக்கொண்டே குழந்தை தொழிலாளர்களை உருவாக்குகிறோம். வறியவர்களுக்குப் பிறந்த ஒரே காரணத்துக்காக பிறந்த குழந்தைகளுக்கு மருத்துவ வசதியை, வாழ்வுரிமையை மறுக்கிறோம். ராஜுவை மறுதலித்துக் கொண்டு ஐஸ்வரியாவின் குழந்தைக்காக காத்திருக்கிறோம்; பில்லியனாவது குழந்தை இந்தியாவில் பிறந்ததற்காக ஆர்ப்பரிக்கிறோம்!! இது எதற்காகவும் அருவெறுப்படைய தேவையில்லை என்பதுதான் நமது கல்விமுறை நமக்கு கற்றுக்கொடுத்த பாடம்.


நாளை குழந்தைகள் தினம். அப்துல் கலாமோ, பிரதீபா பாட்டீலோ - ஏதாவது பள்ளிக்குழந்தைக்கு இனிப்பூட்டும் படம் தினசரிகளில் வெளியாகும். தெருவில், குழந்தைகள் விதவிதமான உடைகளில் தங்கள் பெற்றோருடன் பள்ளிக்கு சென்றுக்கொண்டிருப்பார்கள். ராஜூவும், அவனது நண்பர்களும் குப்பைகளை கிளறிக்கொண்டிருப்பார்கள் - முந்தியநாள், யாரேனும் வீசிய உணவுப்பொட்டலங்களில் தங்கள் உணவைத்தேடி!

Tuesday, November 01, 2011

பப்பு டைம்ஸ்

இன்று காலை எவ்வளவு எழுப்பியும் பப்புவின் உறக்கம் கலையவில்லை. ”இப்போ எந்திரிக்கலைன்னா அடிச்சுடுவேன்” என்று மிரட்டியதும் தூக்கம் கலைந்தது. நிஜமாகவே அடித்துவிட்டதை போல எழுந்தவள் சொன்னாள்,

“நீ ஒரு ஆச்சியா நீ? இனிமே உன் பேரு ஆச்சி இல்ல, உன் பேரு அடிச்சி”


:-)))

**********************************


“நிலாவாசைக்கு சிக்கன் சாப்பிடக்கூடாதுன்னு ஏன் வடலூர் ஆயா சொல்றாங்க, சிக்கன் கடைக்காரங்கதான் எல்லா சிக்கனையும் சாப்பிடணுமா?” என்றாள், ரொம்ப சீரியசாக.

கொஞ்ச நேரம் முழித்தபிறகுதான் பல்பு எரிந்தது, அது அமாவாசையென்று!!

யாரங்கே, இனி ’அமாவாசையை’ ‘நிலாவாசை’யென்று மாற்றுங்கள்,உடனே!!