Friday, October 28, 2011

5 to 6

"சீக்கிரம் சாப்பிடு, சீக்கிரம் சாப்பிடு எத்தனை வாட்டி சொல்றது? நீதாம்ப்பா எனக்கு கோவம் வர வைக்கிறே... நான் கோவப்படக்கூடாதுன்னுதான் நினைக்கிறேன், நீ பண்றதுதான் பப்பு, எனக்கு கோவம் வரவைக்குது.... "

"ஆச்சி, இங்க பாரு, நான் உன்னை இங்க வா,வான்னு எத்தனை தடவை கூப்பிடறேன், பாரு இப்ப...

ஆச்சி இங்க வா....
ஆச்சி இங்க வா...
ஆச்சி இங்க வா...

ஆச்சி இங்க வா...
நீ வரலைல்ல, ஆனா எனக்கு கோவம் வரமாட்டேங்குது...உனக்கும் எனக்கும் ஒரே டி என் ஏதானே, ஏன் உன் டிஎன்ஏ-ல கோவம் அதிகமா இருக்கு? "

?!!!!!!


***************************

பப்லூவை நம்பினோர் கை விடப்படார் என்று சொல்லுமளவிற்கு பப்லூதான் எங்கள் கை கொடுக்கும் கை. பப்லூ ஒரு இமாஜினரி கேரக்டர். பால் குடிக்க, சாப்பிட எல்லாம் பப்லூ எனும் பத்து வயது சிறுவனுக்குத் தெரியாது.. மேலே கீழே சிந்திக்கொள்வான். ஜட்டி போடமாட்டான். டூத் பிரஷை கையில் வைத்துக்கொண்டு எதையாவது யோசித்துக்கொண்டிருப்பான். சரியான வாலு.
அவனது ஆயாவை படாதபாடு படுத்துவான், எரிச்சலூட்டுவான். ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு. பப்லூவுக்கு பப்புவிடம் நேர்வினை இருந்தது.
ரகசியம் இதுதான் - பப்பு செய்வதை லேசாக பப்லூ செய்வதாக மாற்றி சொல்லிவிட்டால் வேலை கடகடவென்று நடந்துவிடும்.

காலைநேரம் - பரபரப்பு.

“சொல்ற பேச்சை கேட்டா என்ன பப்பு, சீக்கிரம் சாக்சை போடு, ஷீவை போடு, டைமாச்சு பாரு,இப்போ வந்தேன்னா அடி வாங்கப் போறே!”

"ஆச்சி. இங்க பாரேன், பப்லூ வந்து உன் வயித்துல பொறந்திருந்தான்னா உனக்கு ரொம்ம்ம்ம்ப கோவம் வந்திருக்கும் இல்ல....
"

?!!!!!


***************************

நாங்கள் சொன்ன பப்லூ கதை போய், பப்புவே பப்லூ கதைகளை விட ஆரம்பித்து விட்டாள். சாம்பிளுக்கு ஒன்று....

”பப்லூ வந்து என்னா பண்ணான்? மரத்துல ஒரு ரெக்கை செஞ்சான், எல்லாரையும் கூப்பிட்டு நான் பறக்கப் போறேன், பாருங்க, பாருங்கன்னு சொன்னான். எல்லாரும் வந்ததும் மாடி மேல நின்னுக்கிட்டு குதிச்சான் பாரு.....பறக்க முடியாம கீழே தொப்னு விழுந்துட்டான்!

’ஹவ் டு ட்ரெயின் யுவர் டிராகனை’ பார்த்துட்டு, பயபுள்ள இப்டி புருடா விடுதேன்னு நான் கண்டுபுடிச்சுட்டேன்...ஆயாஸ்தான் பாவம்..ஹிஹி!!
சூப்பர் மார்க்கெட்டில்:

"பப்பு, நீ என்ன எடுத்திருக்கேன்னு என்கிட்டே காட்டிட்டு பாஸ்கெட்ல போடு, சரியா? பப்பு, உன்கிட்டேதானே சொல்றேன், நீ பாட்டுக்கு போயிட்டே இருக்க?"


வாயில் விரலை வைத்து ”டோண்ட் கால் மீ பப்பு, கால் மீ குறிஞ்சி மலர்”

”ஓகே, குறிஞ்சி மலர். ”

.
.
.
.

”ஏன் பப்புன்னு கூப்பிடவேணாம்? நல்லாதானே இருக்கு, பப்பு. அழகா இருக்கே!”

”உன்னை பப்புன்னு கூப்பிட்டா எப்டி இருக்கும்? "

............

நல்லாருக்கா? நீ எவ்ளோ பெரிய பொண்ணா இருக்கே? இனிமே, வெளிலேல்லாம் என்னை குறிஞ்சி மலர் கூப்பிடு. வீட்டுல மட்டும்தான் பப்பு. ஓகே?”


?!!!!!!

***************************

டிரெயிலர் போதும், மெயின் பிக்சருக்கு வரேன்.....

ஆறு வருடங்களுக்கு முன்பு, பப்பு எட்டரை மாதங்கள் உனக்காக காத்திருந்தேன் - ரொம்ப படபடப்புடனும், ஆசையுடனும், தவிப்புடனும்!! எப்படி வளர்ப்பது, என்ன செய்ய வேண்டும் என்ற எந்த திட்டமிடல்களும் இல்லாமல்....குழந்தை பிறந்தா அது பாட்டுக்கு தானா வளர்ந்து காலேஜூக்கு போயிடும் என்ற ரொம்ப அசால்ட்டாக நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், ஒன்றாவது வகுப்பில் செல்வதற்குள்ளாக, என்னை இப்படி (உன் வார்த்தைகளில் சொல்வதானால்) “க்ரேசி”யாக்கிவிடுவாய் என்று நினைக்கவில்லை. ஆயாவும் பெரிம்மாவும் சொன்ன அதே அலுப்பூட்டும் வார்த்தைகளை, அதே டோனில் சொல்ல வைப்பாய் என்று எதிர்பார்த்திருக்கவில்லை ‍ அதுவும், இவ்வளவு சீக்கிரமே, சொல்லவேண்டியிருக்கும் என்றும்! எப்படியிருந்தாலும் பப்பு அலுப்பான அலுவலக வேலையிலிருந்து, வீடு திரும்ப, ’நீ எனக்காக வெயிட் பண்ணிக்கிட்டிருப்ப’ என்ற நினைப்பே வாழ்வை சுவாரசியமாக்குகிறது, மலர்ச்சியைத் தருகிறது.

பப்புக்குட்டி....உனது சிரிப்புக்கும், ஓயாத பேச்சுக்கும், கோபத்துக்கும், குறும்புக்கும்,நை நைக்கும் ரொம்ப ரொம்ப நன்றி....


.....ஆலவ்யூ!!

Wednesday, October 26, 2011

மூவ் மற்றும் வோலினி அறிந்த வலிகள்...

மதியம் 3 மணி வாக்கில் சென்னை சாலைகளில் சென்றிருக்கிறீர்களா? பல்வேறு வகை யூன்ஃபார்ம்களில் பள்ளி சிறார்கள் சைக்கிள்களில், வேன்களில், ஆட்டோக்களில் சிட்டாக பறப்பதைக்காணலாம். அதோடு இன்னொரு காட்சியையும் கவனித்திருக்கலாம். டூ-வீலரில் முன்னால் பைகளை வைத்தபடி, பின்னால் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு அல்லது முன்னால் ஒரு குழந்தை, பின்னால் ஒரு குழந்தையோடு பைகளையும் சமாளித்தபடி அல்லது பையை முதுகில் மாட்டிக்கொண்டு குழந்தையின்கையை பிடித்தபடி நடக்கும் தாய்கள்....

பார்க்கும்போது, இவ்வளவு பெண்கள் டூவீலர் ஓட்டுகிறார்களா என்று ஆச்சரியமாக இருந்தது. (ஒருவேளை நான் பார்த்த சாலை முழுக்க பெண்களே தென்பட்டதும் காரணமாக இருக்கலாம்.) பெண்கள் டூவீலர் ஓட்டுவதைப் பற்றியது அல்ல இந்த இடுகை. காலையில் எழுந்து சமைத்து, உண்வை பேக் செய்து கொடுத்து, வீட்டைத் துடைத்து, துணி துவைத்து குடும்பத்தை பராமரிக்கும் பெண்களின் சம்பளமற்ற உழைப்பைப் பற்றியது.

குடும்பத்தைப் பராமரிக்கும், இந்த வேலைகளுக்கென்று, எந்த அங்கீகாரமும் இல்லை. அதற்கென்று ஊதியமோ, வரையறைகளோ இல்லை. (மூன்று வேளைச் சாப்பாடும், பண்டிகைகளின்போது துணிமணிகள் என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்.) அதைத்தாண்டி, இந்த வேலைகள் ஒரு உழைப்பாகவே எண்ணப்படுவதில்லை என்பதுதான் இதில் வேதனையான உண்மை. அதனினும் உண்மை, பெண் என்பதனாலேயே இந்த வேலைகள் அவர்கள் தலைமேல் கட்டப்படுவதும், கட்டாயம் அவர்கள் இதனை செய்தாகவேண்டும் என்று எதிர்ப்பார்ப்பதும்.

இதைப்பற்றி பேசினால், வீட்டுவேலை என்ன பெரிய கஷ்டமா? எல்லாத்துக்கும் மெஷின் இருக்கு, அந்த காலத்து மாதிரி எல்லாத்தையும் கையிலேவா செய்றாங்க? துணி துவைக்க மெஷின் இருக்கு, அதை எடுத்து காயப்போட்டு எடுத்து வைக்கணும், மாவு அரைக்க கிரைண்டர் இருக்கு, முன்னாடி மாதிரி கல்லுலயா அரைக்கறாங்கஎன்று இந்த காலத்து ஆண்களும் சரி,அந்த காலத்து பெண்களும் அலுத்துக்கொள்வார்கள். முன்பை விட மெஷின்களும் வேலை நேரத்தை, உழைப்பைக் குறைத்திருப்பது உண்மைதான். ஆனால்,வேலைக்கும் சென்று, பிறகு வீட்டையும் கவனித்துக்கொள்ளவே இம்மெஷின்கள் உதவுகின்றவேயன்றி அதனாலெல்லாம் பெண்களின் கடமைகள் சற்றும் குறைந்துவிடவில்லை.

வெளியில் துணி துவைக்க அல்லது அயர்ன் செய்ய கொடுத்தால் நான்கு ரூபாய் முதல் 10 ரூபாய், கால்கிலோ இட்லி மாவு பதினான்கு ரூபாய்... வீட்டிலோ இவையெல்லாம் எந்த செலவுமின்றி நடந்தேறிவிடும்.

முன்பு போல இல்லாமல், ஆண்களும் வீட்டு வேலைகளில் பங்குகொள்கிறார்கள் என்றாலும் பெண்களின் உழைப்பை பார்க்கும்போது அது மிகவும் சொற்பமே. அதுவும் இந்தியா போன்ற நாடுகளில் பெண்களின் பங்களிப்பே அதிகம். அலுப்பூட்டும், இயந்திர கதியிலான வீட்டு வேலைகளை பெண்கள் கவனித்துக்கொண்டிருந்தால், ஆண்கள், கிரிக்கெட் பார்த்துக்கொண்டோ /ஓய்வெடுத்துக்கொண்டோதான் இருக்கிறார்கள். வெளியில் வேலைக்குச் செல்பவர்களுக்கு, வாரத்தில் குறைந்தது ஒரு நாளாவது விடுமுறை இருக்கிறது. ஆனால், வீட்டுவேலைகளுக்கு?

அதிலும், இருவரும் வேலைக்குச் செல்பவராக இருந்துவிட்டால் பெண்ணுக்குத்தான் அதிக வேலை. அலுவலகத்தில் செய்வதோடு அல்லாது, வீட்டுப்பாரமும் அவள்மீதுதான் சுமத்தப்படுகிறது.

ஆனால், வீட்டில் உழைப்பதை யாரும் உழைப்பாகவே அதாவது மதிப்பிற்குரியதாகவே எண்ணுவதில்லை. ஏன், அந்த பெண்களே கூட அப்படி நினைப்பதில்லை. வெளியில் சென்று உழைத்தால்தான்உழைப்புஎன்றுதான் எல்லார் மனதில் பதிந்திருக்கிறது. ஏனெனில் அதன் அந்த உழைப்பின் மதிப்பிற்கு ஒரு சம்பளம் கிடைக்கிறது இல்லையா? ஆனால், வீட்டுவேலையை சம்பளத்துக்குரியதொன்றாக ஏற்றுக்கொள்வதில்லை.

ஒரு சாதாரண பெண்ணை எடுத்துக்கொள்ளுங்கள். (இல்லத்தரசி, ஹவுஸ் வொய்ஃப் அல்லது ஹோம்மேக்கர் என்று என்ன பெயரிட்டு வேண்டுமானாலும் அழைத்துக்கொள்ளலாம். இதனாலெல்லாம், அவரது வேலையின் தன்மை மாறிவிடப் போவதில்லை.) காலையில் டிபனுக்கு என்ன செய்வதிலிருந்து, அதற்கு முன் கூட்டியே தயாரித்து வைத்துக் கொள்வதிலிருந்து, அன்றைய சமையல், குழந்தை வளர்ப்பு, துணி துவைத்தல், சாமான்கள் கழுவுதல், வீட்டைச் சுத்தம் செய்தல் என்று எத்தனை வேலைகளை ஒருநாளில் செய்யவேண்டியிருக்கிறது. இதற்கு ஏதாவது பெறுமதி இருக்கிறதா?

இதுவே, வேலைக்கு ஆள் வைத்துக்கொள்வது என்றால், சமையலுக்கு 1000ரூபாய், மீதி வேலைகளுக்கு 250 ரூ என்றே வைத்துக்கொள்ளுங்கள். (இது மிகவும் குறைந்த பட்சம்தான்) ஆனால், வீட்டிலோ இவையனைத்தும் மலிவாக கிடைத்துவிடுகிறது. வேலைக்குச் செல்லும் பெண்ணுக்கு இரட்டை சுமையாக இருந்தாலும் குறைந்தபட்சம் வீட்டுவேலைக்கு ஆள் வைத்துக்கொள்ளும் வசதியாவது நடுத்தர வர்க்கப் பெண்களுக்கிருக்கிறது. ஆனால், உழைக்கும் வர்க்கப் பெண்களுக்கு இந்த தேர்ந்தெடுக்கும் உரிமைகூட இல்ல. இல்லத்தரசிகளுக்கு வீட்ல சும்மாதானே இருக்கஎன்ற பேச்சோடு, இந்தக் கடமைகளும் சேர்ந்துவிடுகிறது. எனில், வீட்டு வேலை செய்யும் பெண்ணின் உழைப்பை எப்படி மதிப்பிடுவது?

அதனாலேயே, வீட்டு வேலை செய்யும் பணிப்பெண்களுக்கென்று எந்த பணிமதிப்பும் இருப்பதில்லை. இருப்பதிலேயே, அதிக பணிச்சுமையும் மிகவும் குறைந்தபட்ச ஊதியமும் பெறுபவர்கள் இவர்களாகத்தான் இருக்கிறார்கள். வீட்டு பணிப்பெண்களின் வேலைகளை/உழைப்பைப் பார்க்கும்போது இவர்கள் பெறும் சம்பளம் மிகவும் சொற்பம். இந்த பணிக்கென்று எந்த சம்பள வரையறையும் கிடையாது. இதுவே பலவகை சுரண்டல்கள் – உழைப்புச் சுரண்டல் மற்றும் பாலியல் சுரண்டல்களுக்கும் வழிவகுக்கிறது. விகடன் போன்ற பத்திரிக்கைகள், பணிப்பெண்களைப் பற்றிய கீழ்த்தரமான ஜோக்குகளை அள்ளித் தெளிப்பதில் காட்டும் ஆர்வத்தை அவர்களின் வாழ்க்கையை அறிந்துக்கொள்வதில் காட்டுவதில்லை. நடுத்தர வர்க்க பெண்களுக்குக் கிடைக்கும் பெயரளவிலான சுதந்திரம் கூட இவர்களுக்கு மறுக்கப்படுகிறது. இவர்களது வீட்டுவேலைகளையும் குழந்தை வளர்ப்பையும் இவர்களேதான் செய்தாகவேண்டும்.

இப்படி, குடும்பத்துக்காக செய்வதை எல்லாவற்றையும் பணத்தோடு சம்பந்தப்படுத்திதான் காணவேண்டுமா என்று கேட்கலாம். அல்லது அப்படி குடும்பத்துக்காக செய்வதில்தான் எவ்வளவு தியாகம்,அர்ப்பணிப்பு இருக்கிறது என்றும் கூறலாம். (அதற்காக, அந்த உழைப்பு மதிப்பிடற்கரியது என்பதையெல்லாம் ஏற்றுக்கொள்ளமுடியாது.)எனில், நம் குடும்ப அமைப்பில் பணம் சம்பந்தப்படாமலா இருக்கிறது? அல்லது எல்லாம் தியாக உணர்விலா நடக்கிறது?

குடும்பத்தினரின் நடவடிக்கைகள் அனைத்தையும் பொருளாதாரம்தானே முடிவு செய்கிறது. உணவு, உடை முதற்கொண்டு பிள்ளைகளின் பள்ளி வரை தீர்மானிப்பது பொருளாதாரம்தான். ஒரு பெண் எந்த குடும்பத்துக்குச் மருமகளாகச் செல்ல வேண்டுமென்று தீர்மானிப்பது கூட பொருளாதாரம்தான். அதே போல், வீட்டு வேலைகளை அல்லது குழந்தை வளர்ப்பை தியாகத்துடன் ,அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்வதாக சொல்ல முடியுமா? அதை தீர்மானிப்பதற்கான வாய்ப்பின்றிதான், பல பெண்கள் குடும்ப அமைப்புக்குள் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களது விருப்புவெறுப்புக்கு இடமின்றி, இந்த வேலைகள் அவர்கள் தலையில் சுமத்தப்பட்டிருக்கிறது என்பதுதான் நிதரிசனம்.

மேலும், திருமணம் செய்யும் போது அதே தியாக உணர்வுடன் அல்லது அர்ப்பணிப்பு உணர்வுடன், வரதட்சிணை இல்லாமலா நடக்கிறது? அந்த தியாக அல்லது அர்ப்பணிப்பு உணர்வு ஏன் பெண்களிடம் மட்டும் எதிர்ப்பார்க்கப் படுகிறது என்பது புரியாத புதிர்.

திருமணத்தன்று உடுத்திக்கொள்ளும் புடவையிலிருந்து, மருமகளாகச் சென்றாலும் அவளுக்கென்று புழங்க சாமான்கள்,வரதட்சிணை என்று ஒரு பெண் இன்றும் பெற்றோருக்கு செலவாகத்தானே பார்க்கப்படுகிறாள். இன்ஷ்யூரன்ஸ் விளம்பரங்கள் இதற்கு தக்க சான்று. பெண் குழந்தையின் திருமணத்துக்கென்றே சேமிப்பு திட்டங்கள் இருப்பதை எப்படி பார்க்க?

குழந்தையை பார்த்துக்கொள்ள யாராவது ஒருவர் வேலையை விட வேண்டுமென்ற நிலை வந்தால் வேலையை விடுவது பெண்ணாகத்தான் இருக்கும். “நான் வேலையை விட ரெடிஎன்று ஆண்கள் பேச்சுக்கு வேண்டுமானால் சொல்லாலாம். ஆனால், யதார்த்தத்தில் அப்படி நடப்பதில்லை. இன்று மாறி வரும் சூழலிலும் பெண்கள் ஆணுக்கிணையாக வேலைக்குச் செல்லும் சூழலிலும் இப்படி நடக்கக் காரணம் - பெண்ணை விட ஆண் இரண்டு வயதாவது அதிகமாக இருக்க வேண்டும் என்ற நமது feudal culture. எனில், பெண்ணை விட ஆணின் சம்பளம்தானே அதிகமாக இருக்கும்?

குழந்தைக்காக தற்காலிகமாக வேலையை விட்டுவிட்டு பிறகு வேலைக்குச் சேரும் பெண்கள் நிலை மிகவும் பரிதாபம். பிரமோஷன்கள் மறுக்கப்படும். குறைவான சம்பளத்தில்தான் வேலை கிடைக்கும். வேலையைவிட்டுவிட்டு மீண்டும் தொடர்வது என்பது நடைமுறையில் சிக்கலானது.

மேலும், எப்படி வீட்டில் இருந்து குழந்தையை குடும்பத்தை கவனித்துக் கொள்வது அர்ப்பணிப்பும், தியாகமும் ஆகிறதோ அதே போல் குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு வேலைக்குச் செல்லும் பெண்களையும் தான் குழந்தைகளுக்கு/குடும்பத்துக்கு சரியாக கவனிக்கவில்லையோ என்ற குற்றவுணர்ச்சி கொல்கிறது. அந்த தியாகத்தின் மறுபக்கம்தான் இந்த குற்றவுணர்ச்சி. பெரும்பாலான முதலாளித்துவ நாடுகளில் குழந்தைபேறுக்கு விடுப்புக்காலம் 3 மாதங்களுக்குக் குறைவுதான். முதலாளித்துவம், தன் குழந்தையையும் கவனிக்க விடாமல் ஒரு பெண்ணை வேலைக்கு துரத்துவது போலவே அவர்களை கூலியற்ற குடும்ப உழைப்பாலும் சுரண்டுகிறது.

அதேசமயம், பெண், குடும்பத்தை கவனித்துக்கொள்வதும் ஆண் குடும்பச்செலவுகளுக்காக சம்பாரிப்பதும் இன்று பெருமளவு மாறியிருக்கிறது. இன்றைய முதலாளித்துவ சமூகத்தில் பெண்கள் இன்று ஆணுக்கிணையாக வேலைக்குச் செல்கிறார்கள். ஊதியம் பெறுகிறார்கள். என்றாலும், இங்கும் பெண்களின் உழைப்பு இரண்டாம்பட்சமாகத்தான் பார்க்கப்படுகிறது.

சமீபத்தில், பார்த்த விளம்பரம் இது - ஒரு ரெடிமேட் கடையில் தொங்கிய விளம்பரப்பலகை - ”வேலைக்கு பெண்கள் தேவை”! ஏன் வேலைக்கு ஆட்கள் தேவை என்று இருக்கவில்லை? குறைந்த ஊதியத்துக்கு பெண்கள் வேலைக்கு வருவார்கள். விவசாய வேலைக்கோ அல்லது கட்டிட வேலைக்கோ சென்றால், ஆண்களுக்கு ஒரு கூலியும் பெண்களுக்கு ஒரு கூலியும் இருக்கிறது. இப்படி ஆரம்பிக்கும் இந்த பாரபட்சம் சகல மட்டங்களிலும் வியாபித்திருக்கிறது. பெண்கள், வேறு கம்பெனிக்கு சுலபமாக மாறமாட்டார்கள் என்று பெண்களின் ஊதிய உயர்வு கணிக்கப்படுவதை யாரும் மறுக்கமுடியாது. முதலாளித்துவம், இதில்தான் உயிர்வாழ்கிறது. கூலி உழைப்பை சுரண்டுவது போலவே கூலியற்ற உழைப்பையும் முதலாளித்துவம் சுரண்டுகிறது.

ஒரு தொழிலாளி கூலி உயர்வுக்காக, போனசுக்காக வேலை நிறுத்தம் செய்யலாம். ஆனால், குடும்பத்தில் ஊதியமற்ற தொழிலாளி வேலை நிறுத்தத்தைப் பற்றி யோசிக்கக்கூட முடியாது.

நம் குடும்ப அமைப்பில் - பெண் படித்திருந்தாலும், வேலைக்குச் சென்றாலும் குடும்பத்தை கவனித்துக்கொள்வது என்பது அவளது இன்றியமையாத கடமையாக இருக்கிறது. அதாவது, செலவு செய்து, கேட்ட வரதட்சிணையைக் கொடுத்தாவது பெண்ணை, இன்னொரு குடும்பத்துக்கு சம்பளமற்ற வேலைக்காரியாக அனுப்பலாமேயென்றுதான் சமூகம் நினைக்கிறது. அவளை அடுத்த வீட்டுக்குச் செல்லவேண்டியவளாக, தன் கடமையாக எண்ணும் போக்கும் இந்த அடிமைத்தனத்தை அதிகரிக்கிறது.மருமகனுக்கு வேலை வாங்கிக்கொடுத்தாவது மகளை மணம் செய்து அனுப்பலாமென்று எண்ணும் பெற்றோர்களை பார்த்திருக்கலாம். எந்த கஷ்டம் வந்தாலும் கணவனை சார்ந்து அனுசரித்து வாழவேண்டுமென்று சொல்லும் போக்கு இது. இதற்கு படித்த/படிக்காத பெண்கள் என்றெல்லாம் விதிவிலக்குகள் இல்லை. மாமியார்களுக்கும்/மருமகளுக்குமான நீயா-நானாவில் கூட இதனைப் பார்த்திருக்கலாம். பெண் படித்து என்ன வேலையிலிருந்தாலும் வீட்டுக்கு வந்து சமையல் செய்ய வேண்டுமென்றுதான் முடிகிறது. இதனை வெறும் மாமியார்-மருமகள் பிரச்சினையாக மட்டும் பார்த்துவிட முடியாது. நமது குடும்ப அமைப்பின் உற்பத்தி முறை மாறிவிட்டது.

இன்னும் எத்தனை காலம் நம் பெண்களுக்கு விருப்பமானவற்றைச் செய்யக்கூட நேரமின்றி, குழந்தை வளர்ப்பிலும், சமையலிலும், சுத்தம் செய்வதிலும் அவர்களின் உழைப்பை உறிஞ்சப்போகிறோம்? எரிச்சலூட்டும், ஒரே விதமான வேலைகளிலிருந்து பெண்கள் விடுதலை பெறுவது எப்போது? ஓயாது இயங்கும் குடும்ப அமைப்பிலிருந்து உழைக்கும் வர்க்கப்பெண்களுக்கும்,இல்லத்தரசிகளுக்கும் ஓய்வு எப்போது?

பெண், தன்னைச்சார்ந்து – வாழ்க்கையைத் தன் வேலையைச் சார்ந்து அமைத்துக்கொள்வது எப்போது? கணவனைச் சார்ந்தோ அல்லது பெற்றோரைச் சார்ந்தோ அல்லாமல் வாழ்வது எப்போது? தந்தைக்குப் பின், மூன்றுவேளைச் சாப்பாட்டுக்காக திருமணம் செய்துக்கொள்ளாமல் சுதந்திரமான, தோழமையுடனான வாழ்க்கைக்காக திருமணம் செய்து வாழ்வது எப்போது?