Thursday, June 30, 2011

பல் பல் புதுப்பல்

பப்புவின் கீழ்வரிசை முன்பற்களிடையில் ஒரு பள்ளத்தாக்கு உருவாகியிருந்ததை இன்று காலையில்தான் கவனித்தேன். சந்தேகத்துடன் முன்பற்களை தொட்டபோது லேசாக ஆடியது.:-) யெஸ், பப்புவிற்கு கீழ்வரிசையின் முன்பல் இரண்டும் விழப்போகின்றன! அநேகமாக அவைதான் முதலில் முளைத்த பற்களாக இருக்க வேண்டும். பப்புவுக்கு, பற்கள் முளைத்தபோது அவற்றை தடவிப்பார்த்ததும், பற்கள் முளைக்கும் தறுவாயில் என் விரல்களை, முகத்தைக் கடிக்க முற்பட்டபோது தடுக்காமல் இருந்ததும் நினைவுக்கு வருகின்றன. இரண்டு பற்கள் ஒன்றாக ஆடியதும், எங்காவது இடித்துக்கொண்டாளோ அல்லது சர்க்கஸ் செய்கிறேன் என்று தலைகீழாக தொங்கும்போது கீழே விழுந்துவிட்டாளோ என்று துருவிதுருவி கேட்டேன். இல்லையென்றதும், ஆடுகின்ற பற்களுக்கு பின்னால் ஈறில் தொட்டுப் பார்த்தேன். புதுப்பற்கள் தென்பட்டன. பிறகே நிம்மதியாக இருந்தது.

ஏழு வயதில் இந்த பற்கள் விழுந்து புதுப்பல் முளைக்கும் என்று அவளுக்கு சொல்லியிருந்தோம். இப்போதே பல் ஆடுவதால், ஒருவேளை, தான் இரவில் பல் விளக்காமல் உறங்கியதால்தான் பாக்டீரியாக்கள் சென்று பற்களை கொட்ட வைக்கின்றனவோ என்று பப்பு எண்ணிக்கொண்டிருக்கிறாள். :-)

Thursday, June 16, 2011

(கோல்ட்) கம்மல் ரிட்டர்ன்ஸ்

ரொம்ப நாட்களாக இல்லாமலிருந்த கம்மல் புராணம் லீவில் திரும்ப வந்துவிட்டது. சரியாக சொல்லவேண்டுமென்றால், அம்மா ஊரிலிருந்து வந்த பிறகுதான் ஆரம்பித்தது. சின்ன வயதில் நான் ஏதாவது கேட்டால் பெரிம்மா உடனே மறுத்து எதுவும் சொல்லமாட்டார். கொஞ்சம் ஆறப்போட்டு, அது எப்படி நமக்கு அவசியமில்லாதது என்று சொல்வார். (அதற்குள் வேறு எதன்மீதாவது எனக்கு ஆர்வம்வந்திருக்கும்.) அதே லாஜிக்கை இங்கு அப்ளை செய்தேன்.

”சரி, குத்தலாம், நீதான் கம்மல் போட்டா காது வலிக்கும், நான் பெரிய பொண்ணாயிட்டுதான் குத்திப்பேன்னு சொல்லியிருந்தே” என்றேன்.

”பரவால்ல, வலிக்கட்டும், என் காதுதான” என்றாள்.

”பாய்ஸ்ல்லாம் கம்மல் போடறாங்களா, ஏன் கேர்ல்ஸ் மட்டும் கம்மல் போட்டுக்கணும், பப்பு” என்றேன்.

”ஏய், பாய்ஸ்ல்லாம் கம்மல் போடமாட்டாங்க. கேர்ல்ஸ்தான் கம்மல் குத்திக்கணும்” என்றாள்.

என்னடா, இது 2011-க்கு வந்த சோதனை என்று எண்ணிக்கொண்டேன். சமீபகாலமாக, கம்மலைவிட அவளுக்கு தங்கத்தின் மீது அளவு கடந்த ஆசை.
எந்த விளையாட்டு விளையாடினாலும் கோல்டு, சில்வர் என்பதாகத்தானே பாயிண்டுகளும் வருகின்றன. டாங்கில்டு படத்தில் அவளது ஜொலிக்கும் கிரீடம்! (டாங்கில்டு விடாமல் ஓடி சாதனை படைத்தது அநேகமாக எங்க வீட்டில்தான்
என்று நினைக்கிறேன்.) சாகச படங்களில் தங்கத்தைத் தேடி பயணம் செல்கிறார்கள். தங்க முட்டையிடும் வாத்து, தங்கக்கோடரி என்று கதைகளிலும் தங்கம்தான்.

எப்படி தங்கம் வருகிறது என்று கேட்டுக்கொண்டிருப்பாள். பூமிக்கு அடியிலிருந்து எடுக்கிறார்களென்று மட்டும் தெரியும்.ஆனால் எப்படி அது டிசைன் டிசைனாக வருகிறது என்று ஆச்சரியம்.அவள் கேட்கும்போது மட்டும், யூ ட்யூபில் தேட வேண்டுமென்று நினைப்பேன். பிறகு மறந்துவிடும்.

வீட்டில் ஒரு படம் இருந்தது, ரொம்ப நாட்களாக பார்க்காமல்.
"With a girl of Black soil"- சுரங்கத்தில் வேலை செய்யும் தந்தை மற்றும் சிறுமி, அவளது தம்பியின் கதை. மண்ணை தோண்டி அள்ளி எடுப்பது, சுரங்கவேலைகள் முதலியன. பாதிவரை அதைப்பார்த்தோம். அன்றிரவு முழுக்க பப்புவுக்கு ஏன் அந்த சிறுமியின் அப்பா பூமிக்கு அடியில் தோண்டுகிறார், சுரங்கத்தில் எப்படி மூச்சு விடுவார்கள், வேர்க்குமே என்றெல்லாம் கேள்விகள்.

பளிச்! பல்பு எரிந்தது.

”நாமல்லாம் கோல்ட் வேணும்னு கேக்கறோம் இல்ல. அதான் அவங்க போய் கஷ்டப்படறாங்க. நாம கோல்டு போட்டுக்காம இருந்தா அவங்களும் போக வேண்டாம். நாம கடையில் போய் கோல்டு வாங்கினா, கடைக்காரங்க ’இன்னும் போய் கோல்டு எடுத்துட்டு வாங்க, குழந்தைங்க கம்மல் கேக்கறாங்க’ன்னு அவங்ககிட்டே சொல்லுவாங்க. அப்புறம், அதை நெருப்புல போட்டு உருக்கி டிசைன் செய்வாங்க. ” என்றதும் ”மண் அவங்க மேலல்லாம் விழுந்துச்சுன்னா பாவம் இல்ல, கம்மல் செய்யும்போது அவங்க கையை சுட்டுடும் இல்ல ஆச்சி”, என்று விட்டால் அழுதுவிடும் நிலைக்கு வந்துவிட்டாள்.

”அதுக்குத்தான் நாம கோல்டு போட்டுக்க வேணாம், பப்பு,நாம கோல்டு வேணாம்னு சொல்லிட்டா யாரும் அவங்களை போய் மண்ணை தோண்டி பூமிக்குள்ள போய் கோல்டு எடுக்கச் சொல்லமாட்டாங்க. என்று ஒரு குட்டி லெக்சர் கொடுத்தேன்.

”நான் கோல்டு வேணும்னு நினைக்கல ஆச்சி, வடலூர் ஆயாதான் கம்மல் குத்தனும்னு சொன்னாங்க” என்றாள். (டயனோசர் வெளியே வந்துவிட்டது!)

அதற்குப்பின் கோல்டு பற்றியோ அல்லது கம்மல் குத்து என்றோ வாயைத் திறக்கவில்லை. :-)

குறிப்பு: சுரங்கம் பற்றிய வீடியோ அல்லது டாக்குமெண்ட்ரி இருந்தால்/தெரிந்தால் பகிர்ந்துகொள்ளவும், ப்ளீஸ்!

Monday, June 13, 2011

தினம் ஒரு ப(/பா)டம்

ப்ராக் பிரின்சசுக்கு முன்:

பாலெல்லாம் எனக்கு வேணாம். கவ்-வோடதெல்லாம் யாராவது குடிப்பாங்களா...கவ்-வோடது, சிங்கத்தோடதுல்லாம் எனக்கு தராதே.


ப்ராக் பிரின்சசுக்குப் பின்:

யப்பா, நான் குடிச்சுடுறேன்ப்பா, மாடு என்னை வந்து முட்டுறதுக்கா,ஏன் பால் குடிக்கலைன்னு!

Friday, June 10, 2011

killer timepass - பப்பு விடு(ம்)கதைகள்

1. செடியிருக்கும். ஆனால் இலையிருக்காது. அது என்ன?

பே!!

”கருப்பாக இருப்பான்”

பே அகெய்ன்!


.
.
.
.
விடை: தலைமுடி

2. ரொம்ப பெரிதாக இருக்கும். அதுக்குள் நிறைய குட்டி குட்டி மனுசங்கள் ஓடிக்கிட்டு இருப்பார்கள். அது என்ன?


”பட்டாணி”

”இல்ல”

மாதுளம்பழம்?

”இல்ல”

”வேர்க்கடலை??”

”தெரியல, நீயே சொல்லு...........”


விடை: உலகமும், உலகத்துக்குள் இருக்கும் மனுஷங்களும்

Wednesday, June 08, 2011

mspaint saga - I
மலைக்கு பக்கத்தில் வீடு

நிறைய கதவுகளுடன் வீடுரோஜா

tangled/up/how to train your dragon பார்த்த நேரம் போக பப்பு வரைந்தவை. zoom செய்து வரைவதுதான் அவளுக்கு மிகவும் பிடித்தம். அதனால் சிலபடங்கள் ஸ்க்ரீன்ஷாட் எடுத்து சேமித்தோம். save as சொல்லிக்கொடுத்திருந்தேன். அவளோ, சேவ் செய்து ஏற்கெனவே இருக்கும் பெயரில் சேவ் செய்து சிலவற்றை replace செய்துவிட்டாள். :-)