Sunday, January 23, 2011

ஜன்னல்

காலையில் வீடு மிகவும் பரபரப்பாக இருக்கும்(அஃப்கோர்ஸ் எல்லார் வீட்டிலேயும்தான், மேல சொல்லுன்றீங்களா!). குறிப்பாக ஆறுமணி முதல் ஏழு நாற்பது வரை. பப்புவை எழுப்பி ரெடியாக்குவது என்ற தலையாய கடமையை நோக்கி எல்லாரும் செயல்பட்டுக்கொண்டிருப்போம். என்னதான் ப்ளாஆஆன் பண்ணி ஆறு மணிக்கு எழுந்தாலும் பப்புவை ஏழேமுக்காலுக்கு வண்டியில் ஏற்றும்வரை டென்ஷன் அடங்காது. அரைமணி நேரம் பப்புவை துயிலெழுப்ப வேண்டும்.(அதுவும் மழைபெய்தால் கேக்கவே வேண்டாம்.) லீவு எதுவும் விடாதிருந்தால் எல்லாம் சரியாக ஓடிக்கொண்டிருக்கும். நடுவில் லீவு வந்துவிட்டால் கன்டினியூட்டி போய்விடும்.

குளித்துவிட்டு வந்தபின், பால் குடிக்க வைக்க ஒரு அரைமணி நேரம். குடி பப்பு, குடி பப்பு என்று ஒவ்வொரு வாயாக உள்ளேபோக வைப்பதற்குள்... தம்ளரை கையில் வைத்துக்கொண்டு ஜன்னல் வழியே அல்லது எங்காவது கனவுகளில் தொலைந்து போயிருப்பாள். திடீரென்று, "எனக்கு ஒரு ஐடியா வந்திருக்கு, நாம வானத்து வரைக்கும் வீடு கட்டுனா வானத்தை தொட முடியுமாப்பா", "ஆச்சி,நீ குட்டியா இருக்கும்போதே உன் வயித்துலே நானும் குட்ட்ட்ட்ட்டியா இருந்தேனா,ஆச்சி" "ஆச்சி, பூவுக்குல்லாம் எப்போ கல்யாணம் நடக்கும்?"

எனக்கும் பொறுமைக்கும் ஏகப் பொருத்தம்... பப்புவை அவளாக வேலை பார்த்துக்கொண்டிருக்க வைக்க ஏதாவது ஸ்டார்ட் பட்டன் அல்லது ஷெல் கமான்ட் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொள்வேன்.(அட்லீஸ்ட் கேப்சர் & ரீப்ளே!) சின்ன வயதில் நானும் இப்படி இருந்திருக்கிறேன்.எருமைமாட்டு மேல மழை பெய்ஞ்ச மாதிரி...என்று ஆயா சொல்வது போல. எழுப்புவதற்கு ஒரு அரைமணி நேரம், சாப்பிட அரைமணி நேரம்....அப்படி ஆயாவையும் பெரிம்மாவையும் லொள்ளு கொட்டிய தற்கெல்லாம் சேர்த்துதான் இப்போது மொத்தமாக வாரிக்கொண்டிருக்கிறேன் போல!!

பப்பு,பை, காலை உணவு டப்பா ச‌கித‌ம் வேனில் ஏற்றிவிட்டு,'சாப்பிட வைச்சிடுங்க, தண்ணியே குடிக்க மாட்டேங்குது, நடுவுல குடிக்க வைங்க' என்றெல்லாம் ஆயாம்மாவிடம் சொல்லிவிட்டு,அவளது வேன் திரும்பும் வரை டாட்டா காட்டிவிட்டு ஆசுவாசத்தோடு வீட்டிற்கு நுழைந்தால் ஆயா அப்போதுதான் பால்கனியிலிருந்து திரும்பி வந்துக் கொண்டிருப்பார். என்னதான் நாங்கள் ஏற்றிவிட்டாலும் பப்புவின் வேன் செல்லும்வரை பார்த்துக் கொண்டிருந்தால்தான் ஆயாவுக்கு நிம்மதி. இது இன்று நேற்றில்லை....பையை மாட்டிக் கொண்டு நான் சுதா கான்வென்ட் செல்லும் நாளிலிருந்து தொடர்கிறது. தெருவின் திருப்பத்தில் என் உருவம் மறையும்வரை வெளியில் நின்று பார்த்துக் கொண்டிருப்பார் ஆயா.

ஆம்பூரில்,ஹ‌வுசிங் போர்ட் வீட்டிற்கு வ‌ந்த‌பின், முதலில் வெளி பால்க‌னியில் நின்றும், திரும்பிய‌தும் ச‌மைய‌ல‌றை பால்க‌னிக்கு வ‌ந்தும் பார்ப்பார். காலையில் பள்ளிக்கூடம் செல்லும்போதும் வாரயிறுதிக‌ளில் ஸ்பெஷல் கிளாசுக்கும் செல்லும் போதும்.... சென்னைக்கு, அதிகாலையில் லிங்க்கை பிடிக்க செல்லும் நாட்களிலும்..என்று எப்போதும் எனக்குப் பின்னால் ஆயாவின் இரண்டு கண்கள் இருந்தன. எனது உருவம் மறையும்வரை பார்த்துக் கொண்டிருந்தன. அதே போல‌ திரும்ப‌ வ‌ரும் நேர‌த்திலும். இப்ப‌டி பார்த்துக்/கவனித்து கொண்டிருந்தால் என‌க்கு அற‌வே பிடிக்காது. எரிச்சலாக வரும்.

"நீங்க‌ ஒன்னும் பாக்க‌ வேணாம், எதுக்கு என்னை பார்த்துக்கிட்டே இருக்கீங்க, பார்த்து என்ன செய்யப்போறீங்க, எல்லோரும் எங்கெங்கியோ த‌னியா போறாங்க‌ளாம்,ஏன் எனக்கென்ன போகத்தெரியாதா,நான் என்ன குழந்தையா? " என்றெல்லாம் ச‌ண்டை போடுவேன். எரிந்து விழுவேன். அப்போதெல்லாம், 'உனக்கு இதெல்லாம் புரியாது, உனக்குன்னு வரும்போதுதான் தெரியும்' என்பார். "உங்கள மாதிரி ஒன்னும் நான்-லாம் இருக்கமாட்டேன்" என்பேன்,திமிராக. எவ்வ‌ளவு சொன்னாலும் ஆயா அந்த‌ ப‌ழ‌க்க‌த்தை மாற்றிக்கொள்ள‌வே இல்லை. இட‌ங்க‌ளை மாற்றிக் கொண்டார்- அறைக‌ளின் ஜ‌ன்ன‌ல்க‌ள் வ‌ழியே!

டீனேஜில் இருந்தபோது, இப்படி ஆயா பார்ப்பது வேவு பார்ப்பதாகத் தோன்றும். க‌ல்லூரி நாட்க‌ளிலோ எனது தன்னம்பிக்கைக்கு, எனது செல்ஃப் எஸ்டீமுக்கு பங்கமாக தோன்றியது. ஆயாவுக்கு அது கேர்.எப்ப‌டியோ, நானும் ஆயாவின் க‌ண்க‌ளுக்கு முன்பாக வாழ‌ப் ப‌ழ‌கிவிட்டேன். த‌ற்போது ப‌ப்புவும் :‍ அவளுக்கு பின்னாலும் அவ்விர‌ண்டு க‌ண்க‌ள் இருக்கின்ற‌ன. (ப‌ப்புவின் வேன் வ‌ர‌ ப‌த்து நிமிட‌ங்க‌ள் தாம‌த‌மானால் உட‌னே என‌க்கு ஃபோன்!)

'என்னை ஒன்றும் பார்க்க‌வில்லையே, ப‌ப்புவைத்தானே' என்று நானும் ஒன்றும் சொல்வ‌தில்லை. என்றைக்காவ‌து ம‌ட்டும், 'நாந்தானே ஆயா ஏத்தி விடுறேன்' என்று ம‌ட்டும் சொல்வேன். மேலும், ஆயா இப்ப‌டி பப்புவையும் பார்ப்பார் என்ப‌தே நெடுநாட்க‌ளுக்குப் பிற‌கே தெரியும். வேனில் ஏற்றிவிட்டு திரும்பி வ‌ருவ‌த‌ற்குள், ஆயா ச‌ந்த‌டியே இல்லாம‌ல் அவ‌ரிட‌த்தில் இருப்பார். ஒருநாள் , வேனில் ஆயாம்மா வ‌ர‌வில்லை. 'ஆயாம்மா எங்கே,கேட்டியா, ஏன் வரலையாம்?' என்று அவ‌ர் கேட்ட‌போதுதான் ஆயா, ப‌ப்புவையும் இப்படி க‌வ‌னித்துக்கொண்டிருக்கிறார் என்று தெரிந்த‌து.

நாங்க‌ள் பள்ளிக்கூடம் சென்ற‌பிற‌கு ஆயா ம‌ட்டும்தான் தனியாக வீட்டில் ..காலை முத‌ல் மாலை நாங்க‌ள் வ‌ரும்வ‌ரை. அதுவ‌ரை அவ‌ருக்குத் துணை டீவியும் எதிர்வீட்டு ஆன்ட்டியும். எதிர்வீட்டு ஆன்ட்டி ப‌தினொரு ம‌ணிக்கு மேல் க‌த‌வ‌டைத்து விடுவார். ம‌திய‌ம் இர‌ண்டு ம‌ணிக்கு மேல் வ‌ளைய‌ல்கார‌ர், ப‌ழ‌க்கார‌ர், அப்ப‌ள‌க்கார‌ம்மா என்று ஜன்னல் வழியே பேரம் பேசி தெரு வியாபார‌ம் ந‌ட‌க்கும். அப்ப‌ள‌க்கார‌ம்மா வார‌ம் ஒரு முறை - ப‌ழ‌க்கார‌ர் இர‌ண்டு நாட்க‌ளுக்கொரு முறை -வ‌ளைய‌ல்கார‌ர் வெள்ளிக்கிழ‌மை ம‌ட்டும். பழக்காரர் தவிர மற்றவர்கள் எல்லோரும் மேலே வந்து கொடுத்துவிட்டு செல்வார்கள். பால்கனியிலிருந்து ஆயா சணல் கட்டி பையை விட பழக்காரர் பழத்தை அனுப்புவார். வீட்டைவிட்டு செல்ல முடியாத ஆயாவுக்கு ஜன்னல் வழியாகவும் பலகனி வழியாகவுமே உலகம் உள்ளே வந்தது. இந்த சத்தங்கள் எதுவும் இல்லாத நேரத்தில் டீவி. அதுவும் பொதிகை மட்டுமே அப்போது.

இங்கு அதெல்லாம் எதுவும் இல்லை. அக்கம்ப‌க்க‌த்துவீடுக‌ளில் ப‌த்து ம‌ணிக்கு மேல் பூட்டு தொங்கும். வாரம் ஒருமுறை காய்கறிகளை நாங்களே வாங்கி வந்துவிடுகிறோம். அதுவும், சிலமாதங்களாக வீட்டில் டீவியும் இல்லை. சாயங்காலம் முழுவதும் நாங்கள் வரும்வரை பப்பு டீவி பார்ப்பதும், ஆயாவுடன் சேர்ந்து சீரியல் பார்ப்பதும், சமயத்தில், அவரைப் பார்க்கவிடாமல் கார்ட்டூன் பார்ப்பதுமாக‌ அராஜகம் அதிகமாகிவிட்டதைத் தொடர்ந்து ஒரு சில மாதங்கள் டீவி இல்லாமல் இருக்கலாம் என்று நினைத்து கேபிள் கனெக்ஷனை எடுத்துவிட்டோம். 'ஏன் இப்படி ஆயாவை சித்திரவதை பண்றே, நீங்கள்ல்லாம் போனப்புறம் ஆயா மொட்டு மொட்டுன்னு எவ்ளோ நேரம் உட்கார்ந்திருப்பாங்க' என்பார் பெரிம்மா. ஆயாவிற்கு நியூஸ் மீது கொள்ளைப்பிரிய‌ம். ஒரே செய்தியை, இருக்கும் அத்த‌னை சானல்க‌ளிலும் பார்ப்பார். லீவு விடப்போகிறார்கள் என்று செய்தி வந்தால் பெரிம்மாவுக்கும் அம்மாவிற்கும் போனில் சொல்லுவார். விம்பிள்டனில் யார் கோப்பையை வெல்லுவார்க‌ள் என்று குட்டியிட‌ம் போனில் பெட் க‌ட்டுவார்.

நினைவு தெரிந்தது முதல் ஆயாவை ஆக்டிவ் ஆக‌த்தான் பார்த்திருக்கிறேன். எப்போதும் எங்காவது பிரயாணம் செல்வார். இப்போது அப்படியில்லை. முன்பு போல நடமாட முடிவதில்லை. வீட்டிற்குள் நடமாடுவதே பெரிய விஷயமாகிவிட்டது. அப்படி ஆயாவைப் பார்த்துவிட்டு, வீட்டிற்குள்ளே அறையிலிருந்து ஹாலுக்கு வருவதே அவருக்குப் பெரிய விஷயமாக இருப்பதைக் காண கஷ்டமாக இருக்கும். அதற்கே, அவருக்கு மூச்சு வாங்கும்.

ஆயாவுக்கு கதவை சாத்திக்கொள்வதோ பூட்டுவதோ பிடிக்காது.எனவே அவர் க்ரில்லை பூட்டிக்கொண்டாரா என்று பார்த்தபின்னரே நாங்கள் கிளம்பிச்செல்வோம்.

"பூட்டிக்கோங்க‌ ஆயா" என்று பூட்டவைத்துவிட்டு அன்றைக்கு கிளம்பினேன். கீழே சென்றபின்னரே ஞாபகம் வந்தது - ஹெல்மெட் எடுக்காம‌ல் வ‌ந்துவிட்டது.

காலிங் பெல்லை அழுத்தினால், 'யாரோ' என்று வேக‌மாக‌ வ‌ருவாரே என்று க்ரில் நாதாங்கியை த‌ட்டினேன். ச‌த்த‌மே இல்லை. பாத்ரூமில் இருப்பாராயிருக்கும் என்று நினைத்துக்கொண்டு சிறிது நேர‌ம் க‌ழித்து த‌ட்டினேன். ம்ஹும்....ஆயா வ‌ருவ‌த‌ற்கான‌ அறிகுறியே இல்லை.
என்ன‌ ப‌ண்றாங்க‌ என்று எரிச்ச‌லும், லேசாக‌ ப‌ய‌மும் வ‌ந்த‌து. ஏனெனில், ஆயாவுக்கு பாத்ரூமில் இருக்கும் டைல்ஸ் மீது ப‌ய‌ம். (உண்மையில் ஆயாவைவிட‌ என‌க்குத்தான் ப‌ய‌ம்.)


பொறுத்துப் பார்த்துவிட்டு, தாங்க‌முடியாம‌ல் காலிங் பெல்லை அழுத்தினேன். ஆயா உட‌னே வ‌ந்தார். ஆயாவைப் பார்த்த‌தும்தான் கவலை விட்டது.
'எவ்ளோ நேர‌மா தட்டறது, எங்கே இருந்தீங்க‌' என்றேன் உள்ளுக்குள் எரிச்சல், மற்றும் பயத்தையும் வெளிக்காட்டாமல்.

'நீ போவ‌ போவ‌ன்னு ரூம்ல‌ ஜ‌ன்ன‌ல் வ‌ழியா பார்த்துக்கிட்டிருந்தேன், நீ போகக் காணோம், ஏன் ஏதாவ‌து விட்டுட்டியா' என்றார். ஏனென்றே தெரியவில்லை, இந்த‌ முறை என‌க்கு எரிச்ச‌லே வ‌ர‌வில்லை. நிம்மதியாக இருந்தது.

ரொம்ப நாளாக ட்ராஃப்டில் இருந்தது. இப்போது மூன்று வாரங்களாக ஆயா உடல்நிலை சரியில்லாமல், தனியாக நடமாட முடியாமல் இருக்கிறார். என்னையும் பப்புவையும் - ஜன்னல் வழியாக, பால்கனி கம்பிகள் வழியாக பார்க்கும் - எங்கள் முதுகுப்பின்னால் எப்போதும் இருக்கும்- அந்தக் கண்களை மிஸ் செய்கிறோம்.

Saturday, January 22, 2011

மன்னிக்கவும் - சமூகம் வடித்திருக்கும் குறுகிய அமைப்பிற்குள் நான் பொருந்தவில்லை

இப்பதிவு எழுதி முடித்துக் கொண்டிருக்கும் வேளையில் எனது தளம் எப்படியோ தொலைந்து போய்விட்டதால், அதைச் சரி செய்யும் வரை முல்லை தனது தளத்தில் எழுதுமாறு அழைத்திருந்தார் (மிக்க நன்றி முல்லை). அதனால் இதை இங்கே பதிவிடுகின்றேன்.

அண்மையில் முல்லை gender stereotypes ஜப் பற்றி எழுதிய பதிவில், தனக்கிருக்கும் stereotypes இற்கெதிரான இயல்புகளையும் கூறி, மற்றவர்களையும் எழுத அழைத்திருந்தார். Gender Stereotype இற்கு எதிராக இருக்கும் எனதியல்புகள் சிலதை அப் பதிவிலேயே கூறியிருந்ததால், இப்பதிவில் stereotypes ஜ மேலும் கொஞ்சம் அலசலாமென்று நினைக்கின்றேன். இந்த stereotyping பிள்ளைகள் பிறந்தவிடனேயே ஆரம்பமாகி விடுவதோடு, அவற்றையே பிள்ளைகளுக்கும் திரும்பத் திரும்ப ஊட்டி வளர்ப்பதால் அதே எண்ணங்களுடனேயே பிள்ளைகளும் வளர்கிறார்கள். எமது சமூகமும் பிள்ளைகள் வளர்க்கப்படும் முறையும் அவர்களின் சுதந்திரமாகச் சிந்திக்கும் இயல்பை பிஞ்சிலேயே மிகக் கட்டுப்படுத்துவதாலும், வளர்ந்த பின்னும் மனம் மாற அநேகமாக சந்தர்ப்பங்களோ சூழ்நிலைகளோ உருவாவதில்லை என்பதாலும், இதே மாதிரியே அடுத்தடுத்த தலைமுறையும் வளர்த்தெடுக்கப் படுகின்றனர். கிட்டத்தட்ட‌ எல்லா விளையாட்டுப் பொருட்களும், உடைகளும், சிறுவரின் நிகழ்ச்சிகளும், ஏன் சில புத்தகங்களும் கூட முழுதாகத் துணைபோகின்றன.

stereotypes எத்தனையோ தலைமுறைகளாக சமுதாயத்தில் இருப்பதால், அவற்றால் வேற்றுமை உருவாகின்றனவா அல்லது வேற்றுமையால் stereotypes உருவாகின்றனவா என்று கணிப்பது மிகவும் கடினமானது. ஆனால் அநேகமான ஆய்வுகள் மேற்கூறியதில் முதலாவது முடிவையே தருகின்றன.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் அடிப்படை வேறுபாடுகள் உண்டு. ஆனால் அநேகமாக stereotype செய்யப்படும் இயல்புகளில் ஆண்களுக்குள்ளும் பெண்களுக்குள்ளும் இருக்கும் வேறுபாடுகள், ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலுள்ள வேறுபாடுகளை விட மிகப் பெரியது. The differences in abilities within gender is a lot bigger than the differences between gender. இக்க‌ட்டுரையில் இய‌ற்கையாக‌ இருக்கும் வேறுபாடுக‌ளைப் ப‌ற்றிய‌ல்ல, ச‌மூக‌த்தால் திணிக்க‌ப்ப‌டும் செய‌ற்கையான‌ வெறுபாடுக‌ளின் விளைவுக‌ளைப் ப‌ற்றி அல‌சுவோமா?

உதாரணத்திற்கு அநேகமாக பெண்களை விட ஆண்கள் கணித, விஞ்ஞானத் துறைகளில் மிக வல்லவர்கள் என்ற கருத்துண்டு. அதனாலேயே பெண்கள் அவ்வாறான பாடங்களைத் தேர்ந்தெடுத்தாலும் "இது ஆம்பிளைகளுக்குத் தான் சரி, உன்னால் முடியாது, வேறை ஏதாவது படிக்கலாமே' என பலர் அறிவுறை சொல்வதை நானே பல முறை பார்த்துள்ளேன், அனுபவித்துமுள்ளேன்.

ஒரு ஆய்வில், ஆண்களையும் பெண்களையும் மூன்று குழுவினர்களாப் பிரித்து ஓரே கணிதப் பரீட்சையை மூன்று குழ்ய்விற்கும் கொடுத்திருந்தனர். ஆனால் முதல் குழுவிற்கு இந்தப் பரிட்சை ஒரு பிரச்சனைகளைத் தீர்க்கும் ஆற்றலை பரீட்சித்து பொதுவான அறிவாற்றலை அளவிட வைக்கப்படுகின்றதென்றனர். இரண்டாம் குழுவிற்கு, இது ஒரு கணிதப் பரீட்சை. கணித வல்லமையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இருக்கும் வித்தியாசத்தைக் கண்டறிய இந்தப் பரீட்சை வைக்கப்படுகிறது என்றனர். மூன்றாம் குழுவிற்கு, இந்த stereotype ஜப் பற்றி சுருக்கமாக விளக்கி, பெண்கள் குறைவாகச் செய்வது இந்த மாதிரி எண்ணம் இருப்பதாலேயே ஒழிய, அவர்களின் கணித வல்லமை குறைவாக இருப்பதால் அல்ல என்றும் சொல்லி விட்டு மற்ற இரு குழுக்களுக்கும் கொடுத்த அதே பரீட்சையையே கொடுத்தனர்.

பரீட்சையின் முடிவுகள் என்ன சொல்லியது?

reference: Johns, M., Schmader, T., & Martens, A. (2005). Knowing is half the battle: Teaching stereotype threat as a means of improving women's math performance. Psychological Science, 16(5), 175-179.

இப்ப‌ரீட்சை ஆணுக்கும் பெண்ணுக்கும் கணித வல்லமையில் உள்ள‌ வேறுபாட்டை அறிவ‌தற்காக‌ என்று சொல்ல‌ப்ப‌ட்ட‌ குழுவிலிருந்த (இரண்டாம் குழு) பெண்க‌ள் ஆண்க‌ளைவிட‌ மிக‌க் குறைவான‌ ம‌திப்பெண்க‌ளே பெற்றிருந்த‌ன‌ர். ஆனால் இது ஒரு பொது அறிவுத்திற‌னை அள‌விடும் ப‌ரீட்சை என‌ச் சொல்ல‌ப்ப‌ட்ட‌ குழுவிலோ, அதையும் விட‌ அதிச‌ய‌மாக‌ இந்த‌ stereotype ஆல் தான் பெண்க‌ள் குறைவாக‌ச் செய்கிறார்க‌ள் வ‌ல்ல‌மை குறைவால் அல்ல‌ என்று சொல்ல‌ப்ப‌ட்ட‌ குழுவிலும் பரீட்சை செயற்திறனில் ஆண்க‌ளுக்கும் பெண்க‌ளுக்கும் இடையில் குறிப்பிட‌த்த‌க்க‌ள‌வு வேறுபாடுக‌ள் இருக்க‌வில்லை.

இது த‌னிய‌ ஆண்களுக்கும் பெண்க‌ளுக்கும் செய‌ற்திற‌ன்க‌ளில் சொல்ல‌ப்ப‌டும் வேறுபாடுக‌ளுக்கு ம‌ட்டும‌ன்றி ம‌ற்றைய‌ எந்த‌க் குழுக்க‌ளுக்க‌ளோடு ச‌ம்ப‌ந்த‌ப் ப‌டுத்த‌ப்ப‌டும் stereotypes க்கும் பொருந்தும். வெள்ளையினத்தவர் கறுப்பினத்தவரை விட அறிவுத்திறனில் கூடியவர்களென ஒருகாலத்தில் பலமான stereotype இருந்தது (இப்பவும் சில இடங்களில் உண்டு). மேற் சொன்ன அதே ப‌ரீட்சையை வெள்ளையின‌த்த‌வ‌ர்க‌ளுக்கும் க‌றுப்பினர்த்த‌வ‌ர்க‌ளுக்கும் கொடுத்து, அறிவுத்திறனில் அவர்களுக்கிடையேயான வித்தியாசத்தைக் கணிக்க‌ப் போவ‌தாக‌ ஒரு குழுவிட‌மும் இன‌த்தைப் ப‌ற்றி ஒன்றுமே சொல்லாம‌ல் இன்னொரு குழுவிற்கும் கொடுத்தாலும் மேற்க‌ண்ட‌ அதே முடிவுக‌ளை அவ‌தானிக்க‌லாம். அதே மாதிரி திட‌ல்திட‌ விளையாட்டுக‌ளில் மேற்சொன்னதற்கு எதிர்மாறாக, க‌ருப்பின‌த்த‌வ‌ரே சிற‌ந்த‌வ‌ர் என்ற‌ stereotype உண்டு. Again, நீங்க‌ள் வெள்ளையின‌த்த‌வ‌ர்க‌ளையும் க‌றுப்பினத்த‌வ‌ர்க‌ளையும் க‌ல‌ந்து இரு குழுக்க‌ளாக‌ப் பிரித்து ஒரு குழுவிற்கு சும்மா பொதுவாக‌ ஆட்க‌ளுக்கு இருக்கும் athletic திற‌னை சோதிக்க‌ப்போவ‌தாக‌ ஒரு குழுவிற்கும், athletic திற‌னிலுள்ள‌ இன‌ வேற்றுமையை அள‌விட‌ப் போவ‌தாக மற்றைய‌ குழுவிற்கும் சொல்லி ஒரே ப‌ந்த‌ய‌த்தை வைத்தீர்க‌ளாயின், இன‌வேற்றுமையை நீங்க‌ள் இர‌ண்டாவ‌து குழுவில் ம‌ட்டுமே காண்பீர்க‌ள்.

இதிலிருந்து என்ன‌ தெரிகிற‌து? எந்த‌க் குழு ம‌றைமுக‌ (negative) stereotype உட‌ன் பார்க்க‌ப் ப‌டுகிற‌தோ அந்த‌ க்குழு அந்த‌ stereotype ஜ‌ப்ப‌ற்றி உண‌ரும் போது அது அவ‌ர்க‌ளின் செய‌ற்திற‌னை stereotype சொல்வ‌து போல‌வே மிக‌வும் எதிர்ம‌றையாக‌ப் பாதிக்கின்ற‌து. பெற்றோர் மகளுக்கு படிப்பு பெரிதாகத் தேவையில்லை என்று ம‌க‌ள்மாரின் ப‌டிப்பில் அதிக‌ம் க‌வ‌ன‌ம் செலுத்தாமை, ம‌க‌ளை சுத‌ந்திர‌மாக‌ சிந்திக்க‌வோ செய‌ற்ப‌ட‌வோ அனும‌திக்காத‌து, ம‌க‌ள் த‌னிய‌ வெளியில் போனால் நிச்ச‌ய‌ம் எதாவ‌து ஆப‌த்து ந‌ட‌ந்துவிடுமென‌ எப்போதுமே ஒரு ஆணோடு ம‌ட்டுமே போக‌ அனுமதிப்ப‌து (என‌க்கு எத்த‌னையோ பேரைத் தெரியும் அவ‌ர்க‌ள் வள‌ர்ந்து திருமணமான பின்னும் எதுவுமே த‌னிய‌ செய்ய‌ முடியாம‌லிருப்ப‌வ‌ரை), திருமணமே பெண்ணின் பிறவிக்கடன், அதனால் எப்படியாவது திருமணம் செய்வதே வாழ்வின் முதன்மைக் குறிக்கோள் என வளர்ப்பது, இன்னும் எத்தனையோ எல்லாம் பிற‌ந்த‌திலிருந்து கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ச் சேர்க்கப்பட்டு பின் அதுவே அவ‌ர்க‌ளின் இய‌ல்பென்றாகி விடுகின்ற‌து.


இதனால் வரும் வேறு எதிர்பார்க்காத விளைவுகளைப் பற்றி இன்னொரு பதில் பார்க்கலாம்.


அதனால் இதுவும் தொடரும்...

PS: stereotype க்கு என்ன தமிழ்ச் சொல்லென யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.

Friday, January 21, 2011

குயில் பாட்டு

ஒன்று முதல் பத்து வரையிலான எண்களை பற்றிய பாடல் இது. பப்புவின் புத்தகத்தில் இல்லாத பாடல். எனக்கும் இந்தப்பாடலின் வரிகள் மிகவும் பிடிக்கும். அதனால், அவளின் லிஸ்டில் இது ஃபேட் ஆவதற்கு முன்னால் பதிந்துக்கொள்ள நினைத்தேன் .

Yazh075 123 by sandanamullai

ஒன்று
யாவருக்கும் தலை ஒன்று
இரண்டு
முகத்தில் கண் இரண்டு
மூன்று
முக்காலிக்கு கால் மூன்று
நான்கு
நாற்காலிக்கு கால் நான்கு
ஐந்து
ஒரு கைவிரல் ஐந்து
ஆறு
ஈயின் கால் ஆறு
ஏழு
வாரத்தில் நாள் ஏழு
எட்டு
சிலந்தியின் கால் எட்டு
ஒன்பது
தானியத்தின் வகை ஒன்பது
பத்து
இருகை விரல் பத்து

இதே போன்ற இன்னொரு பாடல் ‘ஒருவிரல் ஆடியதே, அதை நிறுத்தப்பார்த்தேன் மறுவிரல் ஆடியதே’ . தற்போது பப்பு அதை அவ்வளவாக பாடுவதில்லை. அம்மா ஊரிலிருந்து வரும் போதெல்லாம் பப்புவுக்கு ஏதாவதொரு புதுப்பாடலை அறிமுகப்படுத்துவார். இந்தப்பாடலின் முதல்வரியைச் சொன்னதும் பப்பு, “எனக்குத் தெரியுமே” என்று முழுப்பாடலையும் பாடி அவளது ஆயாவுக்கு பல்பு கொடுத்தாள். இதன் இன்னொரு சுவாரசியம், மூன்று என்பதை ’மூந்து’, நான்கு ’நாந்து’ என்றும் ஆகிவிடும். மேலும், தானியம் என்பது”தானியின்” என்றும் சொல்வாள். திருத்தினால், ’ஆண்டி அப்டிதான் சொல்லிக் கொடுத்தாங்க, நீ ஏன் தப்பா சொல்லிக்கொடுக்கறே’ என்று எனக்குத்தான் அடி. அடுத்து வருவது ‘சாமியாமியா ஹே ஹே உக்கா உக்கா ஹே ஹே” பாடல்.

Thursday, January 20, 2011

வெரைட்டீஸ் ஆஃப் வாஸ்து!

எனது உறவினருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்திருந்தது. அவர் ஒரு அதலெடிக் வீராங்கனை. உயர்நிலை பள்ளி ஒன்றில் உடற்பயிற்சி ஆசிரியையாகவும் வேலை செய்கிறார். இயற்கையாக பிரசவம் ஆகுமென்று நாங்கள் நினைத்திருக்க, சிசேரியன் செய்ய வேண்டியதாகிவிட்டது. இதைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தபோது அவரது அம்மா விவரித்தது ஆச்சரியமாக, அதிர்ச்சியாக இன்னும் என்னவெல்லாமாகவோ இருந்தது. டாக்டர் அந்த பெண்ணிடம் 'உனக்கு நார்மல் வேண்டுமா அல்லது சிசேரியனா' என்று கேட்டிருக்கிறார். இவர், நார்மலுக்கு முயற்சி செய்யப் போவதாகச் சொன்னதும், குறித்த தேதியில் வந்து மருத்துவமனையில் சேர்ந்துவிடுமாறு சொல்லியிருக்கிறார்.

'முதலில் நார்மலுக்கு முயற்சி செய்வோம், அப்படி இல்லையெனில் ஆபரேஷன்தான் செய்ய வேண்டியிருக்கும்' என்றும் அவர் முதலில் சொன்ன சேர வேண்டிய நாள் செவ்வாய்க்கிழமையாக இருப்பதால் புதன்கிழமை அன்று சேரச்சொல்லியிருக்கிறார். 'புதன் மற்றும் வியாழனில் பிறந்து விட்டால் நலம். ஆனால், வெள்ளிக்கிழமை எனக்கு இரண்டு ஆபரேஷன்கள் உள்ளன. ஆனால் வெள்ளிக்கிழமை ஆண் குழந்தை பிறந்துவிட்டால் என்ன செய்வது? நீங்கள் யோசித்து சொல்லுங்கள்' என்றும் கேட்டிருக்கிறார். வெள்ளிக்கிழ‌மை பொறந்துட்டா என்ன‌ ப‌ண்றது, தூக்கியா போட்டுட‌ முடியும்? அப்புறம் அவ‌ளுக்கு ட்ரிப்ஸ் ஏத்தி வ‌லி வ‌ர‌லை...எட்டு ம‌ணி நேர‌ம் பார்த்துட்டு 'க‌ர்ப்ப‌ப்பை விரிய‌லை, குழந்தை ஹார்ட்பீட் குறையுது' என்று வெள்ளிக்கிழ‌மை ம‌திய‌த்துக்கு மேல் ஆப‌ரேஷன் நடந்ததாக அவரது அம்மா சொல்லிக்கொண்டிருந்தார்.

மேலும், பிறந்தநேரம், நட்சத்திரம் குறித்து பேசுகையில், 'ந‌ல்ல‌வேளை கொஞ்ச‌ம் க‌ழிச்சு பிறந்திருந்தா மூலம் நட்சத்திரம், பெண்ணுக்கு ஆகாது' என்றெல்லாம் அவரது அம்மா சொல்லிக்கொண்டிருந்தார். என‌க்கு சுத்த‌மாக‌ இதில் ஆர்வம் இல்லாத‌தால் அவ‌ர் சொன்ன‌ அந்த‌ ந‌ட்ச‌த்திர‌ விவ‌ர‌ங்க‌ள் புரிப‌ட‌வில்லை. 'வெள்ளிக்கிழ‌மை பைய‌ன் பொற‌ந்தா என்ன‌ பிரச்சினை ஆன்ட்டி?' என்றதற்கு 'ஆகாதுன்னு சொல்லுவாங்க' என்றார். 'அத்தனவாட்டி ஸ்கேன் பண்ணாங்க, ஆணா பொண்ணான்னு சொல்லலை.. அப்புறம், நல்லவேளை வெள்ளிக்கிழமை பொண்ணாப் போச்சு..' என்றும் சொல்லிக்கொண்டார். இத்தனை விபரங்களையும் கேட்டுக்கொண்டிருந்த எனக்குத்தான் நாம் எந்த கிரகத்தில் வசித்துக்கொண்டிருக்கிறோம் என்று குழப்பமாக இருந்தது.

நேரம் பார்த்து, குறித்து ஆபரேஷன் செய்துக்கொள்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், இந்தளவு மூடநம்பிக்கைகளுடன், நட்சத்திரம் பார்த்து குழந்தை பிறப்பை செய்கிறார்கள் என்பதை கண்கூடாகக் கண்டது அன்றுதான். இதிலிருந்து ஆரம்பிக்கும் இந்த 'நாள் நட்சத்திர சடங்குகள்', அதன்பிறகு தீட்டு கழித்தல், குழந்தைக்கு கண் பட்டது என்று ஏராளம் இருக்கும். இவ்வளவு பேசும் என்னாலேயே, மற்ற தீட்டு கழித்தல் போன்ற மூடநம்பிக்கைகளை தடுத்து நிறுத்தினாலும், என் அம்மாவும், மாமியாரும் சேர்ந்து எனது மகளுக்கு திருஷ்டி சுத்திய‌தையோ அல்லது திருஷ்டி பொட்டு இட்ட‌தையோ குறைந்தது ஒரு வருடத்திற்கு தடுக்கமுடியவில்லை. இதில் ம‌ட்டும் என்றில்லை.. ந‌ம்மைய‌றியாம‌லேயே நாம் இவ்வித‌ ப‌ழ‌க்க‌ங்க‌ளுக்கு ஆட்ப‌ட்டு போயிருக்கிறோம்.

ஒரு மருத்துவர் முதலில் என்ன வகையான பிரசவம் வேண்டும் என்று கேட்பதே குற்றம். அதிலும் எப்போது பிறக்கும் என்று தெரியாதபோது அதற்கு நேரமும் காலமும் குறிப்பது என்ன வகையான லாஜிக்? இவற்றை ஊக்குவிப்பது எந்த விதத்தில் சரி? ஆனால், அந்த‌ கைன‌க்கால‌ஜிஸ்டை ம‌ட்டும் குறைசொல்லிவிட‌ முடியுமா? அவ‌ரிட‌ம் வ‌ரும் ப‌ல‌ர் இது போன்ற நம்பிக்கைகளுடன்‌ இருக்க‌க்கூடும். அந்த அனுபவம் தந்த பாடத்தால் முன்கூட்டியே இதனை சொல்லியிருக்க‌வும் கூடும். தொழில்முறை த‌ர்ம‌ம் என்று இத‌னை அவர் ந‌ம்பியுமிருக்க‌லாம். ஆனால், பெண்களும் சரி, ஆண்களும் சரி இவ்வ‌ள‌வு மூட‌ந‌ம்பிக்கைக‌ளுட‌ன் இருக்க‌ வேண்டுமா?

கொஞ்சம் நம்மை சுற்றியிருப்பவர்களைப் பார்த்தால், இதற்கு ப‌டித்த‌வ‌ர்க‌ள் - ப‌டிக்காத‌வ‌ர்க‌ள் என்றெல்லாம் பாகுபாடு கிடையாது என்பது தெரிய வரும். கிளி ஜோசிய‌த்தை கிண்டலடிக்கும்‌ ப‌டித்த‌வ‌ர்க‌ள் வாஸ்துவிட‌மும் ஃபெங்க் சூயிட‌மும், சீன‌ வாஸ்துவிட‌மும் ச‌ர‌ண‌டைகிறார்க‌ள். பார‌ம்ப‌ரிய‌ உண‌ர்வு மிக்க‌வ‌ர்க‌ள் நாடிஜோதிட‌த்தை, ஓலைச்சுவடிகளைத் தேடிச்செல்கிறார்க‌ள். த‌ன‌து ப‌குத்த‌றிவினால் இவ‌ற்றை மறுக்கும் சில‌ருக்கு இருக்க‌வே இருக்கிற‌து எண் கணித‌ ஜோதிடம். இதில் எதுவுமே இல்லையென்றால் சன் சைன்/மூன் சைன். அறிவிய‌ல் உண்மைக‌ளை கொண்டு போலித்த‌ன‌மாக‌ விள‌க்க‌ப்ப‌டும் ஜெம்மாலஜி முதல் ஜோதிட பரிகாரங்கள் வரை - அவ‌ர‌வ‌ர் வ‌ச‌திக்கும் வ‌ர்க்க‌த்திற்கும் ஏற்ற‌ வ‌கையில் இருக்கிற‌து பாதுகாப்புக் க‌வ‌ச‌ங்க‌ள்/குறுக்கு வ‌ழிக‌ள். இருந்தாலும் இவை எல்லாம் லாப நோக்குக்காகவே, தங்களை மயக்கி பணம் பிடுங்கவே என்பதை யாரும் உணர்ந்ததாகவே தெரியவில்லை.

என்ன‌தான் ப‌டித்து நாசாவில் வேலை செய்தாலும் ப‌ழ‌னி மலை கோவிலில் குழ‌ந்தைக்கு மொட்டை அடித்தால்தானே ந‌ம‌க்கு திருப்தி.! உங்கள் ஜாத‌கத்துக்கேற்ற ‌வ‌ண்ணத்தை சுவர்களுக்கு அடித்தால் த‌ம்ப‌திக‌ளுக்கிடையில் ச‌மாதான‌ம் நில‌வுமாம் - எனில், இரு வேறு ஜாத‌க‌ங்க‌ள் இருந்தால் அறைக்கு எத்த‌னை வ‌ண்ண‌ங்க‌ளை எப்ப‌டி அடிப்பார்க‌ள்?


இதைத்தாண்டி இன்னும் ப‌ல‌ மூட‌ந‌ம்பிக்கைக‌ள் இருந்தாலும், பெண்கள்தான் இம் மூட‌ந‌ம்பிக்கைக‌ளுக்கு ஆட்ப‌ட்டு போயிருக்கிறார்க‌ளென்றும் பெண்க‌ளை வைத்து ம‌ட்டுமே இந்த‌ பிசின‌ஸ் ந‌ட‌ப்ப‌து போல‌ ஒரு மாய‌த்தோற்றம் கொடுக்க‌ப்ப‌ட்டுக் கொண்டிருக்கிற‌து. பெண்கள் என்றாலே நகை, ஷாப்பிங், அழகு பொருட்கள், கைவினை பொருட்கள் என்று ஸ்டீரியோடைப் செய்வது போலத்தான் இதுவும். ந‌க்மா கிறிஸ்துவ‌ மதத்தைத் தழுவுவதும், ஷில்பாஷெட்டி யோகா ஆசிரிய‌ராவ‌தும் செய்திகளாகின்ற‌ன. இந்த‌ த‌த்துவ‌ங்க‌ளை போதிப்ப‌வ‌ர்க‌ள்/ஜோதிட‌ம் பார்ப்ப‌வ‌ர்க‌ள் பெரும்பாலும் ஆண்களாகவே இருக்கிறார்கள், நான் பார்த்த வரையில்.

ஆடி மாத‌மோ அல்ல‌து ஏதோவொரு மாத‌த்தில் (ஆங்கில‌ ஆக‌ஸ்ட்/செப்ட‌ம்பர்) ப‌ல‌ கோயில்க‌ளில் பெண்க‌ள் வ‌ரிசை வ‌ரிசையாக‌ அம‌ர்ந்து எலுமிச்சை விள‌க்குக‌ள் ஏத்தி குத்துவிள‌க்குட‌ன் பூஜை செய்வ‌தை பார்க்க‌லாம். ஒரு ஐய‌ர் மைக்செட்டில் ம‌ந்திர‌ங்க‌ள் சொல்லிக் கொண்டிருப்பார். மாங்க‌ல்ய‌ம் நிலைக்கவோ/க‌ண‌வ‌னின் ந‌ல‌னுக்கோ/குடும்ப‌ ந‌ல‌னுக்கோ ஒவ்வொருவ‌ருக்கும் ஏதோவொரு கார‌ண‌ம் இருக்க‌த்தான் செய்கிற‌து என்றாலும், அதே அள‌வுக்கு ஆண்களும் இந்த‌ மூட‌நம்பிக்கைக‌ளுக்கு ஆட்ப‌ட்டுதான் இருக்கிறார்க‌ள்.

ஒரு முறை ர‌யிலில் என‌க்கு முன்னால் இருந்த‌ இர‌ண்டு பெண்க‌ள் பேசிக்கொண்டிருந்த‌தில் முக்கிய‌ விஷ‌ய‌மே இந்த‌ ஜோதிட‌ம்தான். பேசிக்கொண்டிருந்த ஒருவரின் ம‌க‌ளுக்கு 2011 இல் சுக்கிர‌ன் ந‌ட‌க்கிற‌து, 2012 விட்டால் 2018இல்தான் க‌ல்யாண‌த்திற்கு வரன் பார்க்க‌ முடியும் என்ப‌து போல. அதில் அவ‌ர் த‌ன‌து ம‌க‌ளைக் குறித்து சொன்ன‌து, "வெரி ப‌ய‌ஸ்". ம‌ணம‌க‌ள் ஆக‌ பெண்ணுக்குரிய‌ குடும்ப‌ ல‌ட்ச‌ண‌ங்க‌ளிலொன்று "ப‌க்தியாக‌" இருப்ப‌து. ஆன்மீக‌ நாட்ட‌ம் பெண்க‌ளுக்கு இருக்க‌வேண்டிய‌ முக்கிய‌மான‌தொன்று என்றுதான் க‌ற்பிக்க‌ப்ப‌டுகிற‌து. 'பைய‌னுக்கு க‌ட‌வுள் ப‌க்தி அதிக‌ம்' என்று சொல்லி பொதுவாக‌க் கேள்விப்ப‌ட்டிருக்கிறீர்க‌ளா?


புத்தாண்டை முன்னிட்டு, சில‌ வ‌ங்கிக‌ள் த‌ங்க‌ள‌து வாடிக்கையாள‌ர்க‌ளுக்கு சிரிக்கும் புத்த‌ர் சிலைகளை பார்சல் அனுப்புகிறார்கள்.. வீடு கட்டும் பில்டர்கள் வாஸ்து மூலை பார்த்தே பீரோ வைக்கும் இடத்தையும் கழிப்பறையையும் தீர்மானிக்கிறார்கள். மீன்தொட்டிக‌ள், குட்டி நீருற்றுகள், சீனத்து சுவர்சித்திரம், சமையலறையில் தொங்கும் திராட்சை கொடிகள், குபேரப் பூக்கள் என்று ஏராளம் இருக்கிறது. கொஞ்சம் உற்றுப்பார்த்தால் ஒரு மிகப்பெரிய நிறுவனமே இதில் இயங்கி வருவது புலப்படும். இதில் எந்த நாட்டு கலாச்சாரத்தை புகுத்தினாலும் நமது மக்கள் ஏற்றுக்கொள்ள தயாரான மனநிலையிலேயே இருப்பது மற்றுமொரு சுவாரசியம். அதிலும் இதனை நம்புவர்கள் எல்லோரும் பாமரர்களும் அல்ல. சினிமா நடிகர்களிலிருந்து சயின்டிஸ்ட் வரையில் பரந்து விரிந்திருக்கிறார்கள். திருப்பதியில் சாமிக்கு தாலிக்கயிறு கழன்று விழுந்ததென்று தனது தாலிக்கொடியை மாற்றிக்கொண்டு வந்தார் எனக்குத் தெரிந்த அறிவியலாளர் ஒருவர். மத்திய ஆராய்ச்சி நிறுவனங்களில் பணிபுரியும் உயர்பதவி வகிக்கும் பலரும் வருடாவருடம் திருப்பதிக்குச் சென்று வருபவர்கள்தான்.

அதுவும் பிரச்சினைகள் எதனால் என்று ஆராயும் மனநிலை போய் 'எம் சீல்'/ 'க்யிக் ஃபிக்ஸ்' போல எதை செய்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும் என்ற மனநிலைதான் அதிகரித்திருக்கிறது. அதற்காக எத்தனை ஆயிரங்களை செல‌வ‌ழிக்க‌வும், எதனை சொன்னாலும் நம்புகின்ற மனநிலையும் இருப்பது என்னதான் அறிவியல் வளர்ந்து பிரபஞ்சத்தை விளக்கினாலும் திரும்பவும் பூமி தட்டை என்பதுபோலத்தான் இருக்கிறது. அதிலும் இவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் எல்லாம் எனர்ஜி, பாசிடிவ் எனர்ஜி, நெகடிவ் எனர்ஜி, காஸ்மிக் எனர்ஜி என்று நாம் படித்த அறிவியலையே கேள்விக்குள்ளாக்குகிறது. (எனர்ஜிக்கு பாசிடிவ் - நெகடிவ் இருக்கிறதா?)


அறிவியலையும், ஆன்மீகத்தையும் போட்டு குழப்பி உணர்ச்சி ரீதியான தாக்குதலைத் தொடுக்கிறார்கள். 'வேவ்லெந்த்' என்றும் 'சக்ராஸ்' என்றும் அறிவியலையும், மதநம்பிக்கைகளையும், மூடநம்பிக்கைகளையும் சாட் மசாலாவாக சேர்த்து கலக்கி விற்பனை செய்வதைக் காணலாம். அதிலும் இவர்கள் பரிந்துரைக்கும் பொருட்களைக் குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட திசையில்தான் வைக்க வேண்டும். இல்லையேல் அதுவும் துரதிருஷ்டத்தையே கொண்டு வரும். அடுத்தவர்களுக்கு தயிர் கொடுப்பதிலிருந்து, பணத்தை எந்த நாளில் கொடுக்க வேண்டுமென்பதிலிருந்து... கிழிந்த துணியை தைப்பதற்குக் கூட நேரம் காலம் வகுத்து வைத்திருக்கும் நம்மக்களிடம் இதெல்லாம் விற்பனையாவது கடினமா என்ன? கோள்களையும், திசைகளையும் பற்றி அறிய ஜோதிடம் வழியல்ல, முறையுமல்ல என்பதை படித்தவர்களும் நம்ப மறுக்கிறார்கள்.

ஒரு ந‌ண்ப‌ர் வீட்டில் எங்கு திரும்பினாலும் ஒரு பொம்மையோ பூவோ கொடியோ ஏதோவொன்று இருந்த‌து. எத‌ற்கு இதெல்லாம் என்றத‌ற்கு, "அவ‌ருக்கு உட்கார்ந்த‌ இடத்துலேயே ப‌ண‌ம் வர‌ணும். ந‌ம்ம‌ ப‌ண‌ம்தான், க‌ஷ்ட‌ப்ப‌டாம‌ வ‌ர‌ணும்" என்று தன் கணவரது நம்பிக்கைகள் குறித்து விள‌க்க‌ம‌ளித்தார். எல்லோரும் புத்த‌ர் சிலைக‌ளையும், சீன‌ எழுத்துக‌ளையும், குட்டி குட்டி சிலைக‌ளையும் வைத்துக்கொண்டால் போதுமே.. நாட்டில் அனைவ‌ரும் ப‌சி ப‌ட்டினி இன்றி வ‌ள‌மாக‌ இருப்பார்கள்தானே! உழைக்காம‌ல் காசு வ‌ர‌வேண்டும் என்ப‌து என்ன‌ வித‌மான‌ எண்ண‌ம்? ஜோதிடம் மனித உழைப்பை கேவலப்படுத்துகிறது.! சோம்பேறியாக்குகிறது.!

வான அறிவியல் என்பது அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் வழிமுறையல்ல, கோள்களை பற்றி அறியும் அறிவியல் நமது அன்றாட வாழ்க்கையில் அவற்றின் கதிர்வீச்சை குறித்ததும் அல்ல. முக்கிய‌மாக‌ ப‌ண‌ம் ச‌ம்பாதிக்கும் வ‌ழி ஜோதிட‌த்தை ந‌ம்புவதிலோ பின்ப‌ற்றுவதிலோ அல்ல. (அதை பின்பற்றுவதால் ஜோதிட சிகாமணிகள் வேண்டுமானால் பணம் சம்பாதிக்கலாமே தவிர) அவற்றால் ஒரு பயனும் இல்லை - த‌ங்க‌ள் குடும்ப‌த்து ந‌லனோ குழ‌ந்தை பிற‌க்கும் நேர‌மோ, நாளோ எதையும் தீர்மானிப்ப‌து இல்லை என்பதை நாம் அறிய ‌ வேண்டும். மதமும், மூடநம்பிக்கைகளும் பெண்களை எப்படி அடிமைப்படுத்தி வைத்திருக்கின்றன என்று உணர வேண்டும். (மனைவியின் ந‌ல‌னுக்காக‌ ஏதேனும் விர‌த‌ங்க‌ள் க‌ண‌வ‌னுக்கு இருக்கிற‌தா?)

அன்பினால்தான் உறவுகள் கட்டமைக்கப்பட வேண்டுமேயன்றி பூஜை புனஸ்காரங்களாலோ அல்லது பரிகாரங்களாலோ அல்ல. வெற்றிகள் உழைப்பினால்தான் ஈட்டப்பட வேண்டுமேயன்றி ஜோதிடத்தை பின்பற்றுவது போன்ற குறுக்கு வழியால் அல்ல.

குறிப்பு: பொங்கல் தினத்த‌ன்று தனது பயணத்தை துவக்கியிருக்கும் அதீதம் இணையஇதழில் வெளியானது.

Wednesday, January 19, 2011

அன்னா-‍‍வை வரவேற்போம்!

குரங்கிலிருந்து மனிதன் வந்தான்....பரிணாமம்,DNA,RNA எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கா?

குரங்குலேருந்துதான் மனிதன் வந்தான்னு வகுப்புலே படிச்சப்போ, அப்படின்னா, இப்போ இருக்கிற குரங்குல்லாம் ஏன் மனுச‌னா மாற மாட்டேங்குதுன்னு சிலர் வாதம் பண்ணாங்க. ஆமாந்தானே, அப்போ பரிணாமம் உண்மைன்னா ஏன் புதுசா கண்டுபிடிக்கப்பட்ட உயிர் ஒன்னுக்கூட இல்லன்னும் கேள்விகள் வந்தது. நாலு கால் குரங்குலேருந்து இரண்டு கால் மனுச‌னா மாறுவது மாதிரி படமெல்லாம் இருக்கேன்னப்போ, படமெல்லாம் யார் வேணா வரையலாம்தானேன்னும் ஒரே சண்டை. அப்புறம், இதைப் பத்தி விரிவாக மேல்நிலை வகுப்புகளில் படிப்பீர்கள்னு இருந்தது. மேல்நிலை வகுப்புக்கு வந்தப்போ, இதைப் பற்றி கீழ்வகுப்புகளில் ஏற்கெனவே படித்திருப்பீர்கள்னும் இருந்தது.

அப்புறம் எங்க?எப்படி கட் ஆஃப் மார்க் தேத்தறதுதான் நினைவெல்லாம் நித்யா!

சமீபத்துல ஒரு இடுகையை தமிழ்மணத்தில் வாசிச்சேன். என்னோட மரமண்டைக்கும் லேசா புரியறமாதிரி.பரிணாமம் என்றால் என்ன?-ன்னு அன்னா எழுதிய இடுகை. இதை தொடரா எழுதப்போறதாவும் சொல்லியிருக்காங்க. அனலிஸ்டான அன்னா, பதிவராக தமிழ்மணத்தில் இணைந்திருப்பதற்கு வாழ்த்துகள்! :-)

அதோடு, அவரது குறிப்பில், " நான் அறிவியல் விடயங்களை பொதுமக்களுக்கு விளக்க அண்மைக் காலங்களிலேயே முயன்று வருகின்றேன். இன்னும் நிறைய அனுபவமும் பயிற்சியும் தேவை. அதனால் உங்களின் கருத்துகள் (constructive criticisms) எனக்கு மிகவும் பயனுடைய தாகவிருக்கும். நன்றி." என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

அன்னா பதிவுலகுகிற்கு ஏற்கெனவே அறிமுகமானவர்தான். வினவின், மகளிர் தின இடுகைகளுக்காக y choromosome* உடன் ஒட்டி வரும் சலுகைகள்... என்ற இடுகையை எழுதியிருக்கிறார்.

நன்றி அன்னா. தமிழ்மணத்திற்கு நல்வரவாகுக!

Tuesday, January 18, 2011

தமிழ்மணம் விருதுகள் 2010

ஆமாம்,கரெக்டா கண்டுபிடிச்சுட்டீங்களே....இது நன்றி இடுகையேதான். அதோடு கொஞ்சம் முன்கதைசுருக்கமும்.......

முத‌லில், பங்கேற்ற, வெற்றி பெற்ற‌ ப‌திவ‌ர்க‌ளுக்கு வாழ்த்துக‌ள்!! :-)

பெண்கள் பிரச்னைகள், திருநங்கைகள் வாழ்வியற் சிக்கல்கள்

இல்லத்தரசிகளா, ஆயுள் தண்டனைக் கைதிகளா?

'பூக்காரி'களுக்கும் சுயமரியாதை உண்டு

பெண் பதிவர்கள் மட்டும் பங்கு பெறும் பிரிவு – எந்த இடுகைகளாகவும் இருக்கலாம்

அவுட்சோர்சிங் செய்யப்படும் கருக்களும் - வாடகை கருப்பைகளும்

கண்களுக்கு புலப்படாத புர்காக்கள்


சுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம்

சாமி என்ற கோல்கேட்.....பாதுகாப்பு வளையம்!


நூல் விமர்சனம், அறிமுகம்

அந்த "தாயை" சந்திக்க விரும்புகிறீர்களா?

யஹி ஹே ரைட் சாய்ஸ் பேபி!


அரசியல், சமூக விமர்சனங்கள்

கல்லா? மண்ணா?? (And, this is not a game!)

என்ன 'வலி' அழகே!

ராணுவத்தை அனுப்பும் முன்....


ஒன்றும் இல்லை, இதெல்லாம் பரிந்துரைக்கென்று நான் தேர்ந்தெடுத்த இடுகைகள்தான். :-)

இவ்விடுகைக‌ளைத் தேர்ந்தெடுத்துவிட்டு இதில் எத‌னை ப‌ரிந்துரைப்ப‌து என்று முடிவுக்கு வ‌ர‌ இய‌லாம‌ல் குழ‌ம்பிக்கொண்டிருந்தேன். ஏனெனில், எழுதிய எல்லா இடுகைகளும் பரிந்துரைக்க ஏற்றவை போலவே(காக்கைக்கும்...) தோற்றமளித்துக்கொண்டிருந்தது,எனக்கு. அதோடு 'பூக்காரிகளுக்கும் சுயமரியாதை உண்டு' இடுகையை பரிந்துரைத்தே ஆகவேண்டும் என்றும் தோன்றிக்கொண்டிருந்த‌து. ஏனெனில், பூக்காரியை ப‌ரிந்துரைக்காம‌ல் இருந்தால் அது என்னையே நான் ம‌றுதலிப்பதாகும். (மேலும், பெண்க‌ளுக்கு என்று ஒரு த‌னிப்பிரிவு இருந்ததால் மொத்த‌ம் நான்கு பிரிவுக‌ள் என்றும் ம‌ன‌ப்பால் குடித்துக்கொண்டிருந்தேன்.)எந்தப்பிரிவில் எதை பரிந்துரைப்பது என்பதும் ஒரு த‌னி குழ‌ப்ப‌ம். யாரிடமாவது உதவி கேட்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது சட்டென்று நினைவுக்கு வந்தார் தோழர்.ஏழர.

தோழ‌ர் ஏழர அவர்களுக்கு ம‌ட‌லிட்டு எனது குழப்பநிலையை சொன்னதோடு பட்டியலையும் பகிர்ந்துக்கொண்டேன். உட‌னே உத‌விக்கு வ‌ந்த‌வர், இடுகைக‌ளை வாசித்து, மாற்றுப் பார்வையையும்,வெற்றி வாய்ப்பையும் கணக்கில் கொண்டு, பிரிவுக‌ளுக்கேற்ற இடுகைக‌ளை ம‌ட‌லிட்டார். என‌க்கும் அது ஏற்புடைய‌தாக‌ இருந்த‌தால் அந்த‌ இடுகைக‌ளை ப‌ரிந்துரைத்தேன். உத‌விய‌ தோழ‌ருக்கு மிக்க‌ நன்றி! :-)

இறுதியாக, மூன்று பிரிவுகளில் மட்டும் பங்கேற்க முடியும் என்ற விதியின்படி,

பெண் பதிவர்கள் மட்டும் பங்கு பெறும் பிரிவு – எந்த இடுகைகளாகவும் இருக்கலாம்

'பூக்காரி'களுக்கும் சுயமரியாதை உண்டு

சுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம்

சாமி என்ற கோல்கேட்.....பாதுகாப்பு வளையம்!

நூல் விமர்சனம், அறிமுகம்

யஹி ஹே ரைட் சாய்ஸ் பேபி!

இவ்விடுகைக‌ளை ப‌ரிந்துரைக்கு அனுப்பினேன்.

இதில், ஒன்றைத் த‌விர‌ ம‌ற்ற‌ இர‌ண்டு இடுகைக‌ளும் தொட‌ர்ப‌திவுக‌ள். பதிவுலகில் தொடர்பதிவுகள் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று என ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறேன். எங்கிருந்தோ, யாரோ ஒருவர் ஆரம்பிக்க அது தீப்பொறியைப் போல பதிவுலகில் பரவுவதை...சங்கிலியைப் போல தொடர்வதை... நமது எண்ணங்களும் இணைவதை...வாசிக்கவும்,எழுதவும் மிகவும் பிடிக்கும்(சில தொடர்பதிவுகள் தவிர).
எனவே, இந்த விருதுகள் எனக்கு மட்டும் சொந்தமானவை அல்ல.சாமி/ஆன்மீகம் மற்றும் தண்ணீர் சேமிப்பு குறித்த தொடர்பதிவுகளை ஆரம்பித்த, அதைத் தொடர்ந்த பதிவர்கள் என்று அனைவருடையதுமான விருது இது! (’கலாச்சாரம் ஃபார் டம்மீஸ்’க்கு பிறகு வேறு தொடர்பதிவுகள் காணோமே!) இந்த வருடமும் அதைவிட சிறந்த, ஆக்கப்பூர்வமான, சுவாரசியமான தொடர்பதிவுகளை எழுதுவோம்.

வாக்கெடுப்பில், இர‌ண்டு க‌ட்டங்க‌ளிலும் வாக்களித்த ப‌திவ‌ர்க‌ள் ம‌ற்றும் வாச‌க‌ர்க‌ள் அனைவ‌ருக்கும் மிக்க‌ ந‌ன்றி. இந்நிகழ்வை சிறப்பாக முன்னெடுத்து, குறித்த தேதிகளில் நடத்திய பாங்கிற்கு த‌மிழ்ம‌ண‌ம் குழுவின‌ருக்கும், நிர்வாக‌த்தின‌ருக்கும் ப‌ணியாற்றிய‌ ந‌டுவ‌ர்க‌ளுக்கும், நெகிழ்ச்சியுட‌ன் ந‌ன்றிக‌ளையும், வாழ்த்துக‌ளையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவ்வ‌ப்போது எழுந்த ச‌ந்தேக‌ங்கள், வாக்க‌ளிக்க‌ ம‌ட‌ல் வ‌ராத‌தைகேட்டு செய்த‌ தொந்திர‌வுக‌ளுக்கெல்லாம் பொறுமையாக‌ ப‌தில‌ளித்த‌ த‌மிழ்ம‌ண‌ம் நிர்வாக‌த்தின‌ருக்கு மிக்க‌ ந‌ன்றி.:-)

ப‌ரிசுக‌ள் வ‌ழ‌ங்கும் நூல் உல‌க‌ம் ம‌ற்றும் அலோகாவிற்கு ந‌ன்றி.

Sunday, January 16, 2011

பொங்கலோ பொங்கல்!

எப்போதிலிருந்து நாம் விவசாயிகளின் தற்கொலைகளைப் பற்றிக் கேள்விப்பட ஆரம்பித்தோம்? 97? அல்லது 98? விவசாயத்திற்கான உற்பத்திச் செலவுகள் அதிகரிக்கத் துவங்கியதும், அப்படி உற்பத்தியான பொருட்களின் விலைகள் வீழ்ச்சியடைந்ததும் எப்போதிலிருந்து?

உலக வங்கியின் நிர்பந்தத்திற்காக தங்கள் கொள்கைகளை மாற்றி மான்சான்ட்டோவையும்,சின்ஜென்டாவும் இன்னும் சில விதை வங்கிகளும் இந்தியாவுக்குள் நுழைந்தன.இந்த கார்ப்பரேட் விதை வங்கிகள் விவசாயிகளின் பொருளாதாரத்தை மாற்றுவதில் முக்கிய பங்கு வகித்தன. கார்ப்பரேட் கம்பெனிகளின் விதைகள் மறுஉற்பத்திக்கு உதவாதவை. பிரத்யேக உரங்களை, பூச்சிகொல்லிகளை கோருபவை.அதுவரை, உற்பத்தியிலிருந்து விதைகளை சேமித்து வந்த நிலை மாறி விவசாயிகள் மொத்தமாக இந்த கார்ப்பரேட் விதைகளுக்கு அடிமையாக நேர்ந்தது. விதை சேமிப்பு என்பது விவ‌சாயிகள் கையிலிருந்து, கார்ப்பரேட் கம்பெனிகள் கைகளுக்கு தாராளமயமாக்கல் மூலமாகவும் உலகமயமாக்கல் மூலமாகவும் மாறியது.

இந்த விதைகளை உபயோகித்தால் அதற்கான உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் உபயோகப்படுத்த வேண்டும்.இத‌னால் சுற்றுபுற‌ சூழ‌ல் மாச‌டைந்ததோடு ஒரே மாதிரியான பயிர் விளைச்சலால் மற்ற பயிர்களை விளைவிக்க முடியாமல் போயிற்று. மேலும், பல விதைகள் இதற்கு முன் சோதனைக்குட்படுத்தப்படாதவை.முதன்முறையாக ப‌யிராக்க‌ப்ப‌ட்ட‌போது தோல்வியையே கொடுத்தன‌. மான்சான்ட்டோ விதைக‌ள் மூல‌ம் பிடி காட்ட‌ன் ப‌யிராக்க‌ப்ப‌ட்ட‌ போது,ஒர் ஏக்க‌ருக்கு 200 கிலோவுக்கும் குறைவான‌ அறுவடைதான் கிடைத்த‌து. மான்சான்ட்டோ க‌ம்பெனியால் சொல்ல‌ப்ப‌ட்டதோ ஒரு ஏக்கருக்கு 1500 கிலோ.இதே போல, மான்சான்டோவின் ஹைபிரிட் சோள‌த்தை ப‌யிரிட்ட‌ விவ‌சாயிக‌ள் எக்க‌ச‌க்க‌ ந‌ஷ்ட‌த்தை ச‌ந்திக்க‌ நேரிட்ட‌து. சோயாவை பயிரிட்டவர்களுக்கும் இதே நிலைதான்.

விதைகளுக்காக செலவு செய்ய வேண்டிய நிலையும், நஷ்டமும் விவசாயிகளை மீளமுடியாதக் கடனுள்ளும், வறுமைக்குள்ளும் தள்ளியது. புதுக்கடன்கள் பெறமுடியாதவர்கள் தனியார்களிடம் கடன் பெற்றனர். தங்கள் சிறுநீரகங்களை விற்றும் கடனடைக்க இயலாமல் விவசாயிகள் - உலகமயமாக்கப்பட்ட சூழலில் வாழ முடியாத விவசாயிகள் - தற்கொலைக்குத் தள்ளப்பட்டனர். விதைக‌ளுக்காக‌ க‌ம்பெனிக‌ளிட‌ம் கையேந்திய‌ விவ‌சாயிகளின் வாழ்க்கையை கார்ப்ப‌ரேட் க‌ம்பெனிக‌ள் கொள்ளைய‌டித்த‌ன. பலியான விவசாயிகளில் பெரும்பான்மையினர் சிறு விவசாயிகள் மற்றும் பெரும் கடன்சுமை கொண்டவர்கள்.

இந்த‌ உலகமயமாக்கலுக்கும், விவ‌சாயிக‌ளின் த‌ற்கொலைக்கும் இடையிலிருக்கும் உற‌வை நம‌து அர‌சு புரிந்துக்கொள்ளாதது போல நடிக்கிறது. மின்சார‌த்தை இல‌வ‌ச‌மாக‌க்கொடுத்தும், க‌ட‌ன்க‌ளை த‌ள்ளுப‌டி செய்தும் கூட தொடரும் விவ‌சாயிகளின் த‌ற்கொலைக்கான‌‌ கார‌ண‌ங்க‌ளை தேடுகிற‌து.மாறிவரும் சுற்றுசூழலையும், காலநிலையையும் கணக்கில் எடுத்துக்கொள்ள மறுக்கிறது. மாறாக,விவ‌சாயிக‌ளின் த‌ற்கொலையை அறிவிய‌ல் பூர்வ‌மாக‌ ஆராய முற்ப‌டுகிற‌து. பொருளாதார‌ கார‌ண‌ங்களை புறம் தள்ளிவிட்டு விவசாயிகளின் குடிப்பழக்கமே காரணம் என்ற முடிவுக்கு வருகிறது. விவசாயக்கொள்கைகளை மாற்றுவதை விட்டுவிட்டு விவசாயிகளின் மனப்போக்கை மாற்ற பரிந்துரைக்கிறது!! அவ‌ர்க‌ளுக்கு த‌ன்ன‌ம்பிக்கையும் சுய‌ ம‌ரியாதையும் அதிக‌ரிக்க‌ வொர்க் ஷாப்க‌ள் கூட பல மாநில‌ங்க‌ளில் ந‌ட‌ந்ததாக செய்திகளைப் வாசித்திருப்போம்.

த‌னியார் ம‌ய‌த்தினாலும், உல‌க‌ம‌ய‌மாக்க‌லாலும் விவ‌சாயிக‌ள் த‌ங்க‌ள‌து அடையாள‌த்தை இழ‌ந்துவிட்ட‌ன‌ர். உல‌குக்கு உண‌வு வ‌ழ‌ங்கும் பெருமைக்குரிய‌ ப‌ணி என்று ந‌ம‌து அறுவடைத்திருநாள் வாழ்த்த‌ட்டைக‌ளில் வித‌வித‌மான‌ வார்த்தைக‌ளில் உழ‌வ‌னைப் போற்றி, வாழ்த்திய‌ நிலை போய், இன்று, அவ‌ர் பன்னாட்டு கம்பெனிகளிடம் விதைகளை வாங்கும் வாடிக்கையாளராக மாற்றப்பட்டுவிட்டார். ப‌சுமைப் புர‌ட்சியால் த‌ன்னிறைவு அடைந்துவிட்டோம் என்று சொல்லிக்கொள்ளும் அர‌சு விவ‌சாயிக‌ள் மீதுதான் போர் தொடுக்கிறது. ஒவ்வொரு வருடமும் தற்கொலை செய்துக்கொள்ளும் விவசாயிகளின் சதவீதம் வளர்ந்து வருகிறது. உதவியற்று நிற்கும் விவசாயிகளின் மீது ப‌ழியைப் போடுகிற‌து.

சில‌வார‌ங்க‌ளுக்கு முன் வெங்காய‌த்தின் விலை நினைத்துப்பார்க்க‌ முடியா வ‌ண்ண‌ம் விலையுய‌ர்ந்த‌து. ஏன்? சிலர் வெங்காயத்தை ஏற்றுமதி செய்வதால்தான் என்றும் மாறிவரும் காலநிலை அல்லது பெய்த மழைதான் உற்பத்தியைக் கெடுத்தது என்றும் பல காரணங்கள் கூறப்பட்டது. உச்ச‌ப‌ட்ச‌மாக‌, ஏற்றும‌தி செய்ய‌ப்ப‌ட்ட‌ வெங்காய‌த்தை பாகிஸ்தான் திருப்பித்த‌ர‌ ம‌றுத்துவிட்ட‌து என்றும் ஒரு ப‌க்க‌ம் செய்தி வந்தது.சாதார‌ண‌ ம‌னித‌ன் வெங்காய‌த்தை வாங்க‌ இய‌லாத அதே நாட்டில்தான் - சிலநாட்கள் முன்பு ராக்கெட்டும் விட‌ப்ப‌ட்ட‌து. விலையேறியது வெங்காயம் மட்டுமில்லை.... கத்தரிக்காய், வெண்டைக்காய்,பாகற்காய்,உருளை, தக்காளி ,கேரட், கொத்தமல்லிக்கூடத்தான். சாமானிய‌ ம‌னித‌னுக்கு உண‌வு என்ப‌து ஒரு ல‌க்ஸ‌ரி போலாகிவிட்ட‌து.

இதில்,விவசாயிகளை - விவசாயத்தை ஒழித்துவிட்டு பொங்க‌லும், சங்கராந்தியும், உழ‌வ‌ர் திருநாளும் யாருக்கு? உழ‌வ‌ர்க‌ளுக்கா?!

(செய்திகள் : இணையத்திலிருந்து)

Thursday, January 13, 2011

ப... டி...படி

"ஏ"

"ழு"

"ம்ம்..சேர்த்து படி"

"ஏழு"

"ஏழு...அப்புறம்"

"வா"

"ல்"

"க"

"ளு"

"ட்?இல்ல..ட"

"ன்"

"வா லு/ளுடன்"

”அப்டியா எழுதியிருக்கு...சேர்த்துபடி”


”ஏ”

”ழு”


”..அதுதான் முன்னாடியே படிச்சுட்டே இல்ல, பப்பு, அடுத்த வார்த்தைய படி...”


”வா”

”ல்”

”க”

”ளு”

”ட”

”ன்”

”ம்ம்..என்னது...சொல்லு...சேர்த்து..”


”வா க....”

”ம்ஹூம்..சரி ஃப்ர்ஸ்ட்லேர்ந்து படி...”


”ஏ”

”ழு”

(அவ்வ்வ்வ்...மறுபடியும் முதல்லேர்ந்தாஆஆஆ?!!)
”ஏழு தான் அப்பவே படிச்சுட்டே இல்ல..ரெண்டுரெண்டு எழுத்தா சேர்த்து படி
இது என்ன?”

”வா”

”இது?”

”ல்”

”சேர்த்து சொல்லு”

”வால்”

”அப்புறம்..இது”

”க”

”அப்புறம்?”

”ளு”

”சேர்த்து சொல்லு...”

”களு”

(அவ்வ்வ்வ். அழுதுடுவேன்)
“முழுசா படி...வால்ல்ல்?”

”களு”

ஃப்ர்ஸ்ட்லேருந்து...

”வால்களு”

”யெஸ்...அப்புறம்...”

”ட”

”ன்”

”டன்”

”உனக்கே படிக்க தெரியுதே!இப்போ சேர்த்து சொல்லு....”

”ஏழு...”

”ம்ம் (மேலே!)..ஏழு வால்..”

”வால்களுடன்”

”சூப்பரா படிக்கற பப்பு.....முழுசா சொல்லு பாக்கலாம்...”

”ஏழு வால்களுடன்”

ஹப்பாடா!சக்ஸஸ்...

”ஒ”

”ரு”

”ஒரு ”

”முதல்லேருந்து சொல்லி சொல்லி படி”


”ஏழு வால்களுடன் ஒரு”

”எ”

”லி”

”எலி”

”ம்ம்..இப்போ ஃபுல்லா படி..”

”ஏழு வால்களுடன் ஒரு எலி”

கொஞ்ச நேரத்துக்கு ஒரே கைதட்டல்...ஹை-ஃபை...

”இப்போ, அடுத்த பக்கம்...”

”போ..அதெல்லாம் நீதான் சொல்லணும்...நீயே படிச்சு சொல்லு...”

(ஸ்ப்பா...ஒரு தலைப்பை படிக்க வைக்கறதுக்குள்ளேயே இங்க பிபி ஏறுது...பப்புவுக்கு உயிர்மெய் எழுத்துகளை கற்றுக்கொடுத்த ஆயாவுக்கு அன்பு முத்தங்கள். எப்படி அத்தனை வேரியேஷன்களை கற்றுக்கொள்வாள் என்று மலைப்பாக இருந்தது. ஆயா என் கவலையைப் போக்கினார்.)


உலகத்துலே இருக்கிற அனைத்து ஆசியர்களுக்கும்...முக்கியமா தொடக்கநிலை ஆசிரியர்களின் பொறுமைக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!!

Wednesday, January 12, 2011

உயிரைப் பணயம் கேட்கும் மெட்ரோக்கள்

அலுவ‌ல‌க‌ம் செல்லும் வ‌ழியில் மெட்ரோ ரயிலுக்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 'இங்கேதான் மெட்ரோ ரயில் ட்ராக் வரப்போகுது, இப்பவே வாங்கி போட்டீங்கன்னா நல்லா விலையேறிடும்‌' என்று ஐந்து வருடங்களுக்கு முன் தரகர் காட்டிய கல்லும் மண்ணுமான இடம், இன்று தார்சாலையும், தூண்களுமாக இருக்கிறது. சைன் போர்டுகள் அவ்வப்போது இடம் மாறும். டேக் டைவர்சன்கள் முளைக்கும். அங்குமிங்கும் ஓடியா‌டி சின்ன‌ஞ்சிறு ம‌னித‌ர்க‌ள் அந்த‌ பிர‌மாண்டமான‌ பால‌த்தை எழுப்பிக் கொண்டிருப்பார்க‌ள். புரியாத மொழியில் அவர்களுக்குள் க‌த்திக் கொள்வார்கள். ஒருசிலர் தலையில் மஞ்சள் நிற பிளாஸ்டிக் தொப்பி அணிந்திருப்பார்கள். சாயங்கால வேளைகளில் ஃப்லோரசன்ட் நிற கோட் அணிந்திருப்பார்கள். கண்முன்னால் அந்த பாலம் உயிர் பெற்று எழுவதை ஆச்சரியமாக பார்த்துக்கொண்டே கடந்து செல்வேன்.

ஒரு நாள் காலை, எட்டு மணி இருக்கும். பலநூறு அடிகள் மேலே, தூணின் ஓரத்தில் அமர்ந்தபடி வெல்டிங் வேலை செய்துக்கொண்டிருந்தார் ஒருவர். கண்களில் கருப்புக்கண்ணாடி. அதைத்தாண்டி வேறு எந்த பாதுகாப்பு கவசங்களோ உடைகளோ இல்லை. குறைந்தபட்சம் தலைக்குக் கூட ஹெல்மெட் போன்ற கவசங்களை அவர்கள் அணிந்திருக்கவில்லை. பார்த்துக் கொண்டிருக்கும்போதே இன்னொருவர் மிகவும் சாவதானமாக ஏதோ சொன்னபடி அவர‌ருகே உதவி செய்ய வந்தார். அவரும் எந்த விசேஷ பாதுகாப்பு கவசங்களை அணிந்திருக்கவில்லை. பாதுகாப்பு குறித்த எந்த அச்சமும் இல்லாமல், ஒருவர் கம்பிகளை பிடித்துக்கொள்ள இன்னொருவர் வெல்டிங் வேலையில் ஈடுபட்டிருந்தார். பார்க்கும் யாருக்கும் வயிற்றில் சொரேர் நிச்ச‌ய‌ம்!

ஒருநிமிடம், அவர்கள் நழுவினாலோ அல்லது சறுக்கினாலோ பிடித்துக் கொள்ளவோ, தடுக்கவோ ஏதுமில்லை. கீழே தார்சாலை. அவர்கள் அணிந்திருந்த மஞ்சள் நிற தொப்பி வெயில்/மழையைத்தவிர வேறு எதற்கும் உதவாது.கரணம் தப்பினால் மரணம் போல்தான்.

அடுத்த‌ சில‌ வார‌ங்க‌ளில், அவ‌ர்க‌ள் வெல்டிங் வேலையை இன்னும் சில‌ தூண்க‌ளுக்க‌ப்பால் ந‌க‌ர்த்திச் சென்றிருந்தார்க‌ள். என‌க்குத் தெரிந்த அரைகுறை இந்தியில் கீழே இருந்தவர்களிடம் உரையாடிய‌ போது, இந்த‌ வேலை அவ‌ர்க‌ளுக்கு ப‌ழ‌க்க‌மான‌து என்றும் அதெல்லாம் ஒன்றும் ஆகாது என்றும் அலட்சியமாக சிரித்துக்கொண்டே கூறினார். அந்த‌ பீகார்/ஒரிஸ்ஸா இளைஞ‌ர்க‌ளுக்கு க‌லைஞ‌ர் காப்பீட்டு திட்ட‌ம் இருக்குமா? அவர்களது அடிப்படை பாதுகாப்புக்கு யார் பொறுப்பு?


எந்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்யாம‌ல் ந‌ட‌க்கும் அச‌ம்பாவிதத்தை விப‌த்தென்று சொல்ல‌ முடியுமா? சிலியின் சுர‌ங்க‌த்தில் நிக‌ழ்ந்த‌தை, நோக்கியாவில் அம்பிகாவுக்கு நிக‌ழ்ந்த‌தை விப‌த்தென்றுதானே சொல்கிறார்கள்!

அந்த‌ ப‌ட்டிய‌லில் க‌ட‌ந்த‌ ஞாயிறன்று மும்பை- மாதுங்காவில் புதிதாக‌ க‌ட்ட‌ப்ப‌ட்டுக்கொண்டிருந்த க‌ட்டிட‌த்தில் நிக‌ழ்ந்த
லிஃப்ட் 'விபத்தையும்' சேர்த்துக்கொள்ளலாம். ஐந்து தொழிலாளிக‌ள் ப‌லியாகி இருக்கிறார்க‌ள். ஒருவ‌ர் காய‌ம‌டைந்துள்ளார். இந்த படுகொலைக்குப் பொறுப்பேற்க‌ வேண்டிய ந‌‌க‌ராட்சி த‌லைவ‌ரும், பொதுப்ப‌ணித்துறையின‌ரும், SRA அதிகாரியும் ஒருவ‌ரையொருவ‌ர் கைக்காட்டிய‌ப‌டி இருக்கிறார்க‌ள். இதில் கொடூரம் என்ன‌வென்றால், அது த‌ற்காலிக‌ லிஃப்ட் தொழிலாளிகள் உபயோகிக்க மட்டும். க‌ட்டிட‌த்திற்குச் சொந்த‌மான‌ லிஃப்டில், அங்கேயே வேலை செய்யும் தொழிலாளிக‌ள் செல்ல‌க்கூடாது போல!

பாதுகாப்பு ஏற்பாடுக‌ளைச் செய்யும் செல‌வுக‌ளில் மிச்ச‌ம் பிடிக்க‌லாம் என்ற‌ முத‌லாளிக‌ளின் லாபநோக்கும், மூன்றாம் உலக நாட்டு மக்களின் மீதான அலட்சியம்தானே போபால் ப‌டுகொலைக்கு மூல‌க்கார‌ண‌ம்? அதே லாப‌வெறியும், அல‌ட்சிய‌மும்தான் மாதுங்கா கொலைக்கும் கார‌ண‌ம்.

இது எங்கோ யாருக்கோ ந‌ட‌ந்த‌துதானே என்று எண்ண‌ வேண்டாம். இது போன்ற‌ செய்திக்கு வ‌ராத‌ 'விப‌த்துக‌ளும்' ம‌ர‌ண‌ங்க‌ளும் எண்ண‌ற்ற‌வை. புதிது புதிதாக கட்டிடங்கள் முளைக்கும் ந‌ம‌து ஊரில் கூட‌ க‌யிறால் க‌ட்டிய‌ ஏணிக‌ளில் அம‌ர்ந்துக்கொண்டு சுவ‌ர்க‌ளில் தொங்கிய‌ப‌டி வ‌ண்ண‌ம‌டிக்கும் இளைஞ‌ர்க‌ளை பார்த்திருக்க‌லாம். மேலே இருப்ப‌வ‌ர் அந்த‌ க‌யிற்றினாலான‌ ஏணியை பிடித்துக்கொள்ள‌ ந‌டுவில் இருக்கும் க‌ட்டையில் எந்த‌ பிடிமான‌மும் இல்லாமல் அம‌ர்ந்துக்கொண்டு வ‌ண்ண‌ம‌டிப்பார், இன்னொருவ‌ர். வ‌ண்ண‌மடிக்கும் பிர‌ஷ் கூட‌ தொழிலாளியே வாங்கிக்கொள்ள‌ வேண்டிய நிலைதான் பெரும்பாலும் - இதில் அவரது பாதுகாப்பு குறித்து என்ன யாருக்கு என்ன கவலை? முறையான‌ பாதுகாப்பு இல்லாமல்,அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தொழிலாளிகளை பிழிந்தெடுக்கும் இத‌ற்குப் பெய‌ர் "சுர‌ண்ட‌ல்" என்றும் அழைக்கலாம் அல்லது "நகரமயமாக்கல்" என்றும் அழைக்கலாம்.

இப்ப‌டி உழைப்பை, உயிரை உறிஞ்சியெடுத்த‌ பால‌ங்க‌ள் மீதுதான் மெட்ரோக்க‌ள் ஓடுகின்ற‌ன‌. சாலைகள் இணைக்கப்படுகின்றன.க‌ட்டிட‌ங்க‌ள் வானளாவ உய‌ர்ந்து நிற்கின்ற‌ன. ந‌க‌ருக்குப் பெருமையைத் த‌ருகின்ற‌ன.
ம‌லிவாக‌க்கிடைக்கும் ம‌னித‌ வ‌ள‌த்தின் விய‌ர்வையில் ந‌க‌ர‌ங்க‌ள் ஜொலிக்கின்ற‌ன‌. வேலைவாய்ப்பென்று வருபவர்களை விட்டில்பூச்சிகளாய் கொல்கின்றன!

Monday, January 10, 2011

பப்பு டாக்(கீ)ஸ்

ரைனோவிடமெல்லாம் தற்போது பயம் போய்விட்டது. அது நீதான் என்று கண்டுபிடித்தபின் ‘ஆக்டோபஸ்’ தான் வந்துசெல்கிறது இப்போதெல்லாம். சகுந்தலா அம்மா, பப்புவை சாப்பிட வைக்க “சாப்பிட்டுடு பாப்பா, சாப்பிடலைன்னா வயித்துலே ஆக்டோபஸ் வந்து நெளியும், அப்புறம் வயத்துலே பூச்சி மாதிரி ஏறும்” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

பப்பு. “ஆமா, சாப்பிடலைன்னா ஆக்டோபஸ் வரும், சின்ன வயசிலே சகுந்தலா ஆயாவுக்கு அப்படிதான வந்துச்சு..இல்ல ஆயா” என்றதும் சகுந்தலா ஆயா, ஜெர்க்காகி ‘எனக்கு ஏன் வருது, சாப்பிடாதவங்களுக்குதான் அப்டி வரும்!”
யார் கையை கட்டினாலும் ஆயாவும், பெரிம்மாவும் சொல்வது, ‘கைய கட்டாம பேசு’ என்பதுதான்.
பள்ளிக்குச் செல்ல துவங்கிய சில நாட்களில் பப்புவும் கைகளைத் கட்டத்தொடங்கினாள். ஆயாவின் தொடர் உபதேசத்தில் மறந்தும் போனாள். தற்போது பின்னால் கையைக் கட்டிக்கொண்டு நடப்பாள், எப்போதாவது. கேட்டால்,’ பிரேயர் முடிஞ்சி அப்படிதான் நடப்போம்’ என்பாள். உடற்பயிற்சி போல இருக்கிறது என்று நானும் விட்டுவிட்டேன். பிறகு, பெரிம்மா சொன்னது இது, ’ப்ரேயர் முடிஞ்சி போகும்போது ஒன்னை ஒன்னு ஏதாவது சீண்டிக்கிட்டு...கையை இழுக்கிறது, ட்ரெஸ்சை பிடிச்சு இழுக்கிறதுன்னு அட்டகாசம் பண்ணுவாங்களாம். அதுக்காக, இந்த மெட்ரிக்குலேஷன் ஸ்கூல்லே இப்படி கையை பின்னாடி கட்டிக்கிட்டு க்ளாஸ் ரூம்க்கு போகச் சொல்லுவாங்களாம்’.”ஆச்சி, எனக்கு பிஸ்கெட் எடுத்துக்குடேன்.”

”பப்பு, நான் வொர்க் பண்ணிட்டு இருக்கேன் இல்ல, நீயே போய் எடுத்துக்கோ!”

”ஏய், சிங்கம் எங்கியாவது நடந்து போய் பிஸ்கட் எடுத்துக்குமா?”

அப்போதுதான் கவனித்தேன், கட்டிலின் ஓரத்தில் நாலுகாலால் நடந்துக்கொண்டிருதாள்.
போர்வையை மூடியபடி எல்லா மிருகங்களும் அதனுள் இருந்தது. ஓ...எல்லா மிருகங்களையும் வரச்சொல்லி அடித்துச் சாப்பிடும் சிங்கம், பிஸ்கட் கொண்டு வரச்சொல்கிறது!வெள்ளிக்கிழமை வீட்டுப்பாட புத்தகத்தை வேனிலேயே விட்டுவிட்டாள். ’ஏன், பப்பு, வேன்லே ஏன் நோட்டை எடுக்கறே, பையிலே வைக்க வேண்டியதுதானே’ என்றதற்கு ‘வெங்கடேஷ்தான் என் நோட்டை கேட்டான்’ என்றாள். ‘பார்த்துட்டு திரும்ப பையிலதான் வைச்சிருக்கணும், சரி, மண்டே, ஆண்ட்டிக்கிட்டே சொல்லு, வேன்லே நோட்டை விட்டுட்டேன், அதான் ஹோம் ஒர்க் எழுதலன்னு’ என்றேன்.

“ஹேய், எனக்கு ஒரு ஐடியா வந்திருக்கு...மண்டே என்னை வேற ஸ்கூல்ல சேர்த்திடுப்பா!!”


பப்பு ஆயா..:-)ஆச்சி, நான் மாடிலே ப்ளைட் பார்த்தேன்..அதுல ஆஃபிரிக்கா, ஜப்பான்னு எழுதியிருந்துச்சு...

!

யாராவது பார்த்திருக்கீங்களா?!

(அஃப்கோர்ஸ், அம்மாவுக்கு இது ஆச்சரியம் இல்லதான், ஏன்னா அம்மா, பப்பு வயசுலே இருந்தப்போ, ஏரோப்ளேன்ல போனவங்க, கயிறை மேலேருந்து தூக்கிப்போட்டு ஜன்னல் வழியா ஏறிவா, எங்க ஊருக்கு போகலாம்-னெல்லாம் கூப்பிட்டிருக்காங்களே!)

Thursday, January 06, 2011

லாஸ்ட் வாய் சாப்பிடறவங்களுக்கு...

கடைசியா மீதி இருக்கிறதை காலியாக்கணும்னறதுக்குதான் இந்த ஐடியாவை யாரோ கண்டுபிடிச்சிருக்கணும். தின்பண்ட மூட்டையை பிரிச்சாலோ இல்ல யாருக்காவது விசிட்டர்ஸ் வந்திருந்தாலோ - காக்காங்களை மிஞ்சிடுவோம் நாங்க எல்லோரும், பாசத்துல. ஹாஸ்டல்ல இருந்தவங்களாலே இதை நல்லா புரிஞ்சுக்க முடியும். ரெடி ஸ்டார்ட் ஒன் டூ த்ரீன்னதும் ஒரே சமயத்துலே தட்டுலே கையைவிட்டு என்ன கிடைக்குதோ பகிர்ந்து உண்ணறதை பார்த்தா காக்காங்க என்ன - அண்டங்காக்காங்களே பயந்து ஓடிடும். ஆனாலும், கடைசிலே மீதி இருக்கிற ஒருவாயை மட்டும் சாப்பிட ஆள் இருக்காது. ஏதோ ஒரு படத்துல. நண்பன் சாப்பிடட்டும்னு சீன் போடுவாங்களே அது மாதிரிதான். நீ எடுத்துக்கோயா இல்ல நீ எடுத்துக்கோயான்னு பாச‌ம் நிக்க‌முடியாம தட்டுத் த‌டுமாறிக்கிட்டிருக்கும்.

’லாஸ்ட் வாய் சாப்பிடறவங்களுக்கு நல்ல ஹஸ்பண்ட்'ன்னு ஒரு பழமொழிய கண்டுபிடிச்சதுலேருந்து இந்த லாஸ்ட் வாய்க்குத்தான் செம போட்டி. நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டி பாக்குதே சென்டீ சீன்லாம் அதுக்கப்பறம் காலி. எல்லோரும் விளையாட்டுக்காகவாவது, 'எனக்குதான் நல்ல ஹஸ்பண்ட்'ன்னு சொல்லி கடைசியா இருக்கறதை சாப்பிடத்தான் செம போட்டி போட்டாலும் யாரும் ஹஸ்பண்டைப் பத்தி பெரிசால்லாம் கவலைப்படலை - எம்சிஏ கடைசி வருஷம் வரைக்கும்.

அதுக்கு அப்புற‌ம்தான் நிறைய பேருக்கிட்டே நிறைய மாற்றங்கள்...ஹீரோ 'நீயெல்லாம் ஒரு பொண்ணா பொண்ணா லட்சணமாவா நடந்துக்கறேன்னு' பளார்ன்னு ஒரு அறை விட்டதும் அடுத்த நிமிஷமே ஹீரோயின் புடவை, பூ, பொட்டு சகிதம் குடும்பக் குத்துவிளக்கா மாறி நிப்பாங்களே! (கனவு சீன்/பாட்டுலதான் மட்டும்தான் குத்துவிளக்குக்கு குத்து அலவுட்!)அதே மாதிரிதான். புடவை கட்டி போட்டோ எடுத்துக்கிறது,விரதம் இருக்கிறது,சாமி போட்டோக்கு பொட்டு வைக்கிறதுன்னெல்லாம், சமையலறையில பூந்து ரணகளம் பண்றதுன்னு. எல்லாம் க‌ல்யாண‌த்தை முன்னிட்டு... அட‌க்க‌ ஒடுக்க‌மா மாறும் வைப‌வம்! அதுவரைக்கும் புர்க்காவே போடாம இருந்த ஷாஹினும் புர்க்கா போட ஆரம்பிச்சதும் அப்போதான். எவ்ளோ ஜாலியா பேசிக்கிட்டு இருந்தாலும்...நமாஸ் சத்தம் கேக்கும்போது மட்டும் துப்பட்டாவை தலைக்கு மேலே இழுத்துவிட்டுப்பா, ஷாஹின்.

ஷாஹின் தமிழ் முஸ்லிம். திண்டுக்கல் பக்கத்துலே ஒரு குட்டி ஊர் அவங்களுக்கு. அவங்க ஊர் பத்தி சொல்ல ஆரம்பிச்சாலே ரொம்ப சுவாரசியமா இருக்கும். அவங்க ஊர்லே யார் வீட்டுலேயும் கேபிள் டிவி கிடையாது(இப்போவும் அப்படியான்னு தெரியாது). இதுவரைக்கும் போலீஸே அவங்க ஊருக்குள்ளே நுழைஞ்சது இல்லே. அவங்க ஊர் முழுக்க இவங்க உறவினர்கள்தான். பொண்ணுங்க, காலேஜ் வந்து படிக்கறது ஒன்னு ரெண்டு பேருதான்.கண்டிப்பா புர்க்கா போடனும்னெலாம் இல்ல. புர்க்கா போட்டாலும் அது முழுசா கவர் பண்ற இருக்கமாதிரி இருக்காது.. அவங்க அக்கால்லாம் போட்டது இல்ல. கல்யாணத்துக்கு அப்புறம் அவங்க அம்மா மாதிரி வெள்ளை துணியை மேலே போர்த்திப்பாங்க. அவ்ளோதான். ஷாஹினோட அண்ணாதான் அதிகமா படிச்சவங்க. ஐஐடிலே மாஸ்டர்ஸ். அதோட ஒரு கம்பெனி ஆரம்பிக்கற ஐடியாலேயும் இருக்காங்க. அதனாலே கெமிஸ்ட்ரி படிச்ச ஷாஹினை இஷ்டம் இல்லாட்டியும் எம்சிஏ படிக்க சொல்லியிருக்காங்க. அப்படின்னெல்லாம்.....

காலேஜ், ஹாஸ்டல்னாலே நல்லா ஊர் சுத்தறதுதானே....அப்படி சுத்தும் போது ஷாஹின் புர்க்காவோடதான் வர ஆரம்பிச்சா. 'male gaze'-க்காகத்தான்னு ஆரம்பத்துலே நாங்களும் நினைச்சோம். ஆனா,இல்ல. அது, ’ந‌ற்குடி’ புர்க்கா. கேட்டப்போ, இந்த மாற்றம் எல்லாம் கல்யாணத்தை முன்வைச்சுதான்ற மாதிரி பதில் கிடைச்சது. சில‌ருக்கு ப‌க்தியா...விர‌த‌மா...இருந்த‌து ஷாஹினுக்கு புர்க்காவா இருந்துச்சு.அவ்ளோதான்! ஒரு கட்டத்துலே இந்த வைரஸ் என்னையும் தாக்கினப்போ, அது ’த‌லைமுடி’யா இருந்துச்சு.யாராவ‌து மாப்பிள்ளை வீட்டுக்கார‌ங்க‌ வ‌ர்றாங்க‌ன்னா,‌ அம்மா முத‌ல் நாள்லே இருந்தே ஆர‌ம்பிச்சுடுவாங்க‌...’தய‌வு செஞ்சு த‌லைமுடிய‌ க்ளிப் போட்டு க‌ட்டு’-ன்னு. ஏம்மான்னு கேட்டா, எல்லாம் என்னோட நல்லதுக்காம்.

ஆறேழு வ‌ருஷ‌த்துக்கு முன்னாடிதான் இந்த‌ நிலைமைன்னாலும் இப்போவும் பெரிசா மாறிட‌லைன்னு க‌ல்யாண‌ம் நிச்ச‌ய‌மான ஒரு ந‌ண்ப‌ர்கிட்டே பேசிக்கிட்டிருந்த‌ப்போ - "க‌ல்யாண‌த்துக்கு அப்புறம் நான் ஜீன்ஸ் போட‌மாட்டேன்னுதான் இவ‌ரே ந‌ம்புறாருன்னு' அவ‌ங்க‌ சொன்ன‌ப்போதான் தெரிஞ்ச‌து. "அவ‌ர் என்னை முத‌ல்ல பார்த்த‌தே இப்ப‌டிதான்...ஜீன்ஸும் குட்டை முடியோட‌வும்தான்...பாக்கற‌ப்ப‌ ம‌ட்டும் ந‌ல்லா மாட‌ர்னா பார்த்துப்பாங்க‌, அப்புற‌ம் க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்கிட்டு அவங்க‌ளை ப‌ழங்கால‌த்துக்கு மாத்த‌வேண்டிய‌து, இந்த‌ த‌மிழ்நாட்டு ப‌ச‌ங்களே இப்படிதான்." ந்னும் சொன்ன‌ப்போ என்னால‌ ஒன்னும் சொல்ல‌ முடிய‌லை. பொமரேனியன் நாய்க்குட்டியை நினைச்சுக்கிட்டேன்.

ஆச்சர்ய‌ம் என்னன்னா அவ‌ங்க‌ க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்க‌ப்போற‌து இதே சென்னையை சேர்ந்த‌வ‌ரைதான். இங்கேயே செட்டிலான‌வ‌ங்க‌ளைதான்.நானும் அபியும் என்ன‌ நினைச்சுக் கிட்டிருந்தோம்னா, சிட்டில‌ செட்டிலான‌ குடும்ப‌ம்னா ந‌ம்ம‌ளை புரிஞ்சுப்பாங்க‌, இப்ப‌டில்லாம் ந‌ச்சு ப‌ண்ண‌ மாட்டாங்க‌ன்னு, நாம‌தான் தெரியாம‌ த‌ப்பு (!) ப‌ண்ணிட்டோம்னு. ஆனா, திவ்யா சொன்ன‌தை கேட்ட‌ப்போ அதெல்லாம் மாயைதான்னு தெளிஞ்சுடுச்சு. அர்பிதா சொன்ன‌து ஞாப‌க‌த்துக்கு வ‌ந்துடுச்சு. அர்பிதாவும் முரளியும் காத‌ல் க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்கிட்டாங்க. அர்பிதா மகாராஷ்டிரா. முரளி சென்னை பையன். ஒரே டீம். க‌ல்யாண‌மாகிட்டா ஒரே டீம்ல‌ இருக்க‌ முடியாது, அந்த‌ க‌ம்பெனிலே.

ஒருநாள் அர்பிதா முழு நீள‌ பாவாடை போட்டிக்கிட்டு வ‌ந்திருந்தா. அந்த‌ க‌ம்பெனில மாடிதான் ந‌ல்லா இருக்கும். பெங்க‌ளூர் வானிலை - மாடில‌ காபி- ஃப்ரெண்ட்ஸ் கூட‌ அர‌ட்டை. அப்ப‌டி நாங்க‌ ஒருநாள் பேசிக்கிட்டிருக்கும்போது அர்பிதாவும் எங்க‌ளோட‌ இருந்தா. முர‌ளி அவ‌ளை முறைச்சுக்கிட்டு ப‌க்க‌த்துலே வ‌ந்து ஏதோ சொல்லிட்டு போனார். அவ‌ர் போன‌தும், அர்பிதா முக‌த்துல‌ அப்ப‌ள‌ம் சுட்டு எடுக்க‌லாம் போல‌ இருந்த‌து. 'க‌ல்யாண‌ம் வ‌ரைக்கும் நாம‌ என்ன‌ போட்டாலும் ந‌ல்லாருக்கு ந‌ல்லாருக்குன்னு சொல்லுவாங்க‌. இந்த‌ ட்ரெஸ் போட்டுட்டு வா, அந்த‌ ட்ரெஸ் போட்டுட்டு வான்னு...உனக்கு ஷார்ட் ஸ்கர்ட் நல்லா சூட் ஆகுதுன்னு. க‌ல்யாண‌த்துக்கு அப்புற‌ம், these guys will start showing their true colors"ன்னு சொன்ன‌ப்போதான் அவ‌ர் என்ன‌ சொல்லியிருப்பார்னு புரிஞ்ச‌து. 'ஸ்க‌ர்ட் போடாதேன்ன்னு சொன்னா கேளு, அப்ப‌டியும் போட்டுட்டு வ‌ந்தா இப்ப‌டி வெளிலே எல்லார் முன்னாடியும் வ‌ந்து நிக்காதேன்னு'-தான் சொல்லிட்டு போயிருக்கார்! (என்னதான் மோனிகா பெலூச்சியையும், நிகோல் கிட்மேனையும் ரசிச்சாலும், குடும்பம்னு வந்தா...)

க‌லாச்சார‌த்தைக் காப்பாத்த‌வேண்டிய ம‌ந்திர‌க்கோல் எப்ப‌வும் பொண்ணுங்க‌ கையிலே - அதுவும் அவ‌ளோட‌ ந‌டை, உடை, பாவ‌னைகளை பொறுத்துதான் இருக்கு. பெண்கள் உடுத்தற உடைலே கூட குடும்ப கவுரவம், மானம், வளர்ப்பு எல்லாம் கலந்து இருக்கு.பொண்ணுங்க‌ளுக்கு க‌ல்யாண‌ம்கிற‌து ஒரு அடையாளமான்னு தெரியலை..ஆனா, கல்யாணம் பொண்ணுங்களுக்கு பல அடையாளங்களை வழங்குது. த‌ன்னோட ஐடன்டிடிக்காக ‌ இல்லாம‌ க‌லாச்சார‌ கார‌ண‌ங்க‌ளுக்காக‌‌ மாறுத‌லை ஏத்துக்கிற‌து உண்மையான‌ அடையாள‌மா? இது மாதிரி உடை விஷ‌ய‌த்துலேருந்து இன்னும் நிறைய‌ விஷ‌ய‌த்துலே த‌ன்னை மாத்திக்கிற‌வ‌ங்க‌ நிஜ‌மா விருப்பப்பட்டுதான் மாறுகிறார்களா? இல்லே, நம்ம குடும்பத்தை சேர்ந்தவங்ககிட்டே எதுக்கு பிர‌ச்சினைன்னு அமைதியா விட்டுக்கொடுத்துட‌றாங்க‌ளா?

கல்யாணமாகி விருந்துக்கு போறப்போ கண்டிப்பா புடைவை கட்டிட்டு போகணும்ன்ற சம்பிரதாயமே இருக்கு இல்லையா, பொதுவா! (கோயிலுக்கு போகும்போது புடைவை,தாவணியிலே போற‌மாதிரி. கோயிலுக்கும் புடைவைக்கும் என்ன‌ ச‌ம்ப‌ந்த‌ம்? பார‌ம்ப‌ரிய‌ க‌லாச்சார‌ லுக்தான் க‌ட‌வுளுக்கு உக‌ந்த‌தா?!)கல்யாணம்கிற நிறுவனத்துக்கு மட்டும் இது சொந்தம் இல்ல..பள்ளி, கல்லூரி நிறுவனங்களிலேயும் இது இருக்கே. சில வருடங்களுக்கு முன்னாடி அண்ணா யுனிவர்சிடிலே பொண்ணுங்க ஜீன்ஸ் டீ சர்ட்ல்லாம் போட்டுக்கிட்டு வரக்கூடாதுனெல்லாம் சொன்னாங்களே! டீச்சர்ங்கன்னா புடவைதான் கட்டணும்.ஏன்னா, புடவைதான் கடமை,கண்ணியம், கட்டுப்பாடு, மரியாதை, லட்சணம்...இதெல்லாம் ஆண்களுக்கு மியூச்சுவலி எக்ஸ்க்ளுசிவ்! ஏன் இந்த இரட்டைநிலை?

Monday, January 03, 2011

கிண்டர் ஜாயும் டாலர் ஷாப்பும்

பல்பொருள் அங்காடிகளில் அல்லது கடைகளில் பில் போடும் தருணங்களில் உங்களுடன் நிற்கும் குழந்தையின் கண்களை ஒரு மாயவலையால் கட்டிவிட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றியிருக்கிறதா?!

கின்டர் ஜாய்.


இந்த பெயரை கேட்டதுமே இது என்னவென்று உங்களுக்கு புரிந்து விட்டதெனில் உங்கள் வீட்டில் ஒரு சுட்டி இருக்கிறதென்று அர்த்தம்.

கிண்டர் ஜாய் மட்டுமில்லை...சீட்டோஸ்,குர் குர்ரே, யம்மீஸ், லேஸ், ஹனி லூப்ஸ், சாக்கோஸ், நம்கீன்ஸ், ஃப்ராரோ ரோஷர், பிரிங்க்ல்ஸ் என்று ஏராளம் இருக்கின்றன. அதனோடு இவற்றை வாங்க வைக்க குழந்தைகளை கவரும் வண்ணம் பல விளையாட்டு
பொருட்களும் - பிச்சுக்கு, கார்ட்டூன் கேரக்டர்கள், பென் 10 சீரிஸ், டெலி டப்பீஸ் சீரீஸ்....

நாம் வாங்கிக்கொடுக்காவிட்டாலும் பள்ளியில், வெளியில் என்று எப்படியாவது இந்த நொறுக்குத் தீனிகள் அறிமுகமாவதை தடுக்க முடிவதில்லை. குழந்தைகளுக்கான ஏதாவது நிகழ்ச்சி அல்லது பிக்னிக் என்று சென்றால் உணவு இடைவேளை என்றதும் எல்லாக் குழந்தைகளும் பையிலிருந்து எடுப்பது இவற்றில் ஏதாவது ஒரு பாக்கெட்டைத்தான்.பெற்றோர்களுக்கும் வேலை சுலபம். கடையில் வாங்கிக்கொடுத்தால் முடிந்தது. அதனோடு ஒரு தண்ணீர் பாட்டிலை விட ஃபான்டா, பெப்சியை கொண்டு வரும் குழந்தைகளே அதிகம். இந்த காட்சிகளை சர்வ சாதாரணமாக ஒரு சிறுவர் பூங்காவிலோ கடற்கரையிலோ பார்க்கலாம்.

ஆயாவின் மொழியில் சொல்வதென்றால் 'நாலு வாய்க்குக் கூட காணாத' அளவில், காற்றடைத்த பையில் போட்டு விற்பார்கள். விலை 5 ரூ பாக்கெட்டு முதல்.இவர்களின் டார்கெட்டுகள் விளம்பரத்தைப் பார்த்து அழுது அடம் பிடிக்கும் குழந்தைகள், அவர்களின் மத்திய
தர பெற்றோர்.

முதன்முதலில் பப்பு சொல்லித்தான் கிண்டர் ஜாய் எனக்குத்தெரியும்.
விளம்பரங்களின் மகிமை!!


டாம் அண்ட் ஜெர்ரி

கிறிஸ்மஸ் மேரி

மேரா ஹா - ஹஹ்ஹா

மேரா ஜி - ஜிஜி

மேரா ஹா மேரா ஜி

கோகோ கோலா பெப்சி - என்ற பாடலை பப்பு பாடியபோது, அவளுக்கு பெப்சியும் தெரியாது, கோக்கும் தெரியாது என்று சொன்னால் நம்புவீர்களா? கோகோ கோலா பெப்சி என்று சொல்லும்போது குடிப்பது போல அபிநயித்துக்காட்டினாள். நான்கு வயதுக்குழந்தை ஸ்கூட்டி விளம்பரத்தில் வரும் மேட்ச்சிங் லிப்ஸ்டிக் போல - தனது உடைக்கு மேட்சிங்காக லிப்ஸ்டிக் வேண்டுமென்று கேட்டதைப் பார்த்தால் விளம்பரங்களின் தாக்கமும் எவ்வளவு விரைவாக குழந்தைகளை கவர்ந்துவிடுகின்றன என்பதும் புரியும்!

கிண்டர் ஜாயின் விலையை முதலில் பார்த்துவிட்டு, '30 ரூபாய்க்கு இதுல என்ன இருக்கு? இதை போய் யாராவது வாங்குவாங்களா' என்றுதான் நினைத்தேன். விரைவில் நான் நினைத்தது எவ்வளவு தவறு என்று புரிந்த‌து. விளம்பரத்தை பப்பு மட்டும் பார்க்கவில்லையே! இந்த முட்டையை இரண்டாகப் பிளந்தால் ஒரு பக்கத்தில் கன்டென்ஸ்ட் மில்க் போல கொழகொழாவென்று ..அதனுள் சாக்லேட். மறுபக்கம் சிறு பிளாஸ்டிக் பாகங்கள். அவற்றை ஒருங்கிணைப்பதற்கான ஒரு வழிமுறைகள். எப்படியும் சூப்பர் மார்க்கெட்டுக்கு குழந்தைகளுடன் வரும் யாரும் இதை வாங்காமல் தப்பிக்க முடியாதளவுக்கு குழந்தைகளை தமது பிடியில் வைத்துள்ளனர் இந்த பன்னாட்டு வியாபாரிகள். (குழந்தைகளை அழைத்துவராவிட்டாலும் வாங்கிச்செல்லும் பெற்றோர் ஒருபுறம்.)

இந்த‌ கிண்ட‌ர் ஜாய் ஐரோப்பியத் தயாரிப்பு. உண‌வுபொருள் ப‌ற்றிய‌ க‌ட்டுப்பாடுக‌ள் நிமித்த‌ம் அமெரிக்காவில் த‌டை செய்ய‌ப்ப‌ட்ட‌தாக ஒரு வ‌ருட‌த்திற்கு முன்பு இணைய‌த்தில் வாசித்தேன். ஆனால் இந்தியாவில் சூப்பர் ஹிட்.இந்த‌ கிண்ட‌ர் ஜாயின் வெற்றியைப் பார்த்து, த‌ற்போது ஜெம்ஸும் இதே வடிவத்தில் வருகிறது. உங்களுக்குத் தெரியாவிட்டாலும் உங்கள் குழ‌ந்தைக்குத் தெரிந்திருக்க‌க்கூடும்.
அதே 30 ரூ விலையில் ப‌ந்து வடிவ‌த்தில் உள்ளே பொம்மையுட‌ன். கிண்டர் ஜாயை பார்த்து ச‌ன்ஃபீஸ்ட் பிஸ்க‌ட்டுக‌ளின் உள்ளேயும் பொம்மைக‌ள்.

அது ம‌ட்டுமா..குழந்தைகளுக்கு பிடித்த உணவு லிஸ்டில் முதலில் இடம்பிடிப்பது நூடுல்ஸ், ஃபுடுல்ஸ், கெல்லாக்ஸ் கார்ன்
ப்லேக்ஸ்,ஹனி லூப்ஸ்,அமெரிக்க பாப்கார்ன் பொட்டலங்கள் என்று ப‌ல‌ ப‌ண்ட‌ங்க‌ள். குக்க‌ரிலேயே செய்ய‌லாம் என்றும் அப்பாவே ச‌மைத்துத் த‌ர‌ முடியும் என்று பாப்கார்னுக்குக்கூட எத்த‌னை விள‌ம்ப‌ர‌ங்க‌ள்! இப்போதெல்லாம், க‌டைக‌ளில் எங்கும் நாம் சாப்பிட்டு வ‌ளர்ந்த‌ ம‌க்காச்சோள‌த்தை பார்க்க‌வே முடிவ‌தில்லை. அடுக்கி வைத்திருக்கும் அத்த‌னை சோள‌ங்க‌ளும் 'அமெரிக்க‌ன் கார்ன்'. அது ப‌த்தாதென்று வெளியில் ஆங்காங்கே ஸ்டால் போட்டு வித‌வித‌ சுவைக‌ளில் இதே சோள‌ம். நாம் சாப்பிட்டு வளர்ந்த அந்த ம‌க்காச் சோள‌த்தைப் போல இதில் மெல்வ‌த‌ற்கு அவ‌சிய‌மே இல்லை. அத்த‌னை மிருதுவாக‌ இருக்கிற‌து.

அவ‌ர்க‌ள் விள‌ம்ப‌ர‌ப்ப‌டுத்துவ‌தைதான் நாம் வாங்க‌ வேண்டும். உண்ண‌ வேண்டும். குடிக்க‌ வேண்டும் என்று ஒட்டுமொத்தமாக நம்மைக்கட்டுபடுத்தி வைத்திருக்கின்றன இந்த தீனிப்பண்டங்களின் சந்தை. பொழுதுபோக்கிற்காக வெளியில் செல்லும் ஒரு குடும்பம்
குறைந்தது 20 ரூ 7 அப் பாட்டிலாவது வாங்காமல் திரும்புவதில்லை. சுண்டல், முறுக்கு, கடலை போன்ற உணவுகளை குழந்தைகளின் டப்பாவில் பார்க்கவே முடிவதில்லை. குழ‌ந்தைக‌ள் நொறுக்குத்தீனியும், உண‌வு ப‌ண்ட‌ங்க‌ளும் இந்தியாவில் ஒரு பெரிய‌ ச‌ந்தையை பிடித்து வைத்திருக்கின்றன. அதுவும், ந‌ம‌து குழ‌ந்தை ம‌ற்ற‌ குழ‌ந்தைக‌ளைவிட‌ ஊட்ட‌மும் அரை இன்ச்சாவ‌து உய‌ர‌மாக‌வும் இருக்க‌ வேண்டும் என்ற‌ பெற்றோர்க‌ள் இவர்களின் ப‌லியாடுக‌ள். 90களின் நீங்கள் வளர்ந்தவர்களாக இருந்தால் போர்ன்விட்டாவிற்கும் (தன் கி சக்தி - மன் கி சக்தி!) பூஸ்ட்க்கும் (சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி!) இடையில் நடந்த போட்டியை மறக்க முடியாது. த‌ங்க‌ள் குழ‌ந்தைக‌ளை உய‌ர்த‌ட்டு குழ‌ந்தைக‌ள் போல‌ வ‌ள‌ர்க்க‌ வேண்டும் என்று விரும்பும் ம‌த்தியவர்க்க ‌பெற்றோர்க‌ள், இவ‌ர்க‌ளைப் பார்த்து ஏங்கும் கீழ்த‌ட்டு ம‌க்க‌ள் என்று ச‌ந்தைக்கு கொள்ளை லாப‌ம்தான்.

அதைவிடுத்தால் இருக்க‌வே இருக்கிற‌து கேஎப்சி, மெக் டோனால்ட்ஸ், டோமினோஸ், பீட்ஸா ஹ‌ட் பீட்ஸா கார்னர்,மேரி பிரவுன் ,காஃபி டே. இதில் டிக்கா பீட்ஸா செட்டிநாடு பீட்ஸா வகையறாவெல்லாம் கூட‌ கிடைக்கும். ஆனால் விலையை ம‌ட்டும் கேட்டுவிடாதீர்க‌ள்...ஒரு பீட்ஸா தோராய‌மாக‌ 350 ரூபாயிலிருந்து ஆர‌ம்பிக்கும். ப‌ர்க‌ர், சான்ட்விச் 75 ரூபாயிலிருந்து, தோராய‌மாக. குடிக்க தண்ணீர் கொடுப்பார்களாவெனத் தெரியாது. ஆனால் குடிக்க கோக்/பெப்ஸி தான் சிறந்தது என்று உங்கள் வீட்டு வாண்டு கூட சொல்லும். அது மட்டுமா, கூட அதிகப்படியான டாப்பிங்ஸ், அத‌ற்கு முன்னால் உண்ண‌, பின்பு உண்ண‌ என்று ஏராள‌ம் இருக்கிற‌து, ப‌ர்சுக்கு வேட்டு வைக்க‌.

வேள‌ச்சேரியில் எஃப்சியும் மெக்டோனால்ட்ஸும் வ‌ந்ததிலிருந்து வார‌ம் ஒரு முறை இங்கு ஏதாவ‌தொன்றிற்கு சென்று வ‌ருவ‌து ந‌டுத்த‌ர‌ வ‌ர்க்க‌த்தின‌ரிடையே ஃபேஷ‌னாக‌ இருக்கிறது. 'இந்த‌ ச‌னிக்கிழ‌மை/ஞாயிற்றுக்கிழ‌மை அங்கு சென்று உண‌வ‌ருந்தினோம்' என்று சொல்வ‌து பெருமையாகச் சொல்லிக்கொள்கிறார்கள். ஊருக்குப்போனால் அல்ல‌து த‌விர்க்க‌ இய‌லாத‌
நேர‌த்தில்தான் வெளியில் சாப்பிடுவ‌து என்று வ‌ள‌ர்ந்த‌ த‌லைமுறை, இன்று சாப்பிடுவ‌த‌ற்காக‌ வெளியில் செல்கிற‌து.செல‌வு என்றும் 'அதே காசுக்கு வீட்டுலயே அழகா செஞ்சு சாப்பிடலாம்' என்றும் அலுத்துக்கொள்ளும் பெற்றோர் ஒரு சில‌ர்தான்.

குழந்தைகளின் பிற‌ந்த‌நாள் கொண்டாட்ட‌ங்க‌ளை இதுபோன்ற உணவகங்களில் ந‌ட‌த்துவ‌து அடுத்த‌து. த‌லைக்கு இவ்வ‌ளவு ரூபாய் என்று பல்வேறு திட்டங்களில் உணவுக‌ளை வாடிக்கையாளர்களின் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு தருகிறது இந்நிறுவனங்கள். குழந்தைகள் ச‌றுக்கி விளையாட, ப‌ந்துக‌ளில் குதித்து விளையாட சாதனங்கள், ச‌ம‌ய‌ங்க‌ளில் ஏதாவ‌தொரு கார்ட்டூன் கேர‌க்ட‌ர் வேட‌ம‌ணிந்த‌ ஒருவ‌ர் என்று ஒவ்வொரு குழ‌ந்தையும் த‌ன‌து பிற‌ந்த‌நாளை இங்குதான் கொண்டாட‌ வேண்டும் என்ற எண்ண‌த்தை/ஏக்கத்தைத் தோற்றுவிக்கிற‌து,
இந்த‌ உண‌வ‌க‌ங்க‌ள்.

இவை எல்லாமே நம‌து ந‌ல‌னையோ குழ‌ந்தைக‌ளின் ந‌ல‌னை நோக்க‌மாக‌க் கொண்டு இய‌ங்குவ‌த‌ல்ல‌. லாப‌மே நோக்கு. மொத்த‌ ச‌ந்தையும் தன் கையில் இருக்க‌வேண்டும் என்ற‌ அராஜ‌க‌ம். இத‌ற்கு ஒவ்வொரு க‌ம்பெனியும் த‌ன‌து தயாரிப்பைச் ச‌ந்தைப்ப‌டுத்துமுன் தெளிவாக‌ திட்ட‌மிட்டு, உழைத்து, ச‌ர்வேக்க‌ள் ந‌ட‌த்தி, போட்டி க‌ம்பெனிக‌ளை அவ‌தானித்துதான் இற‌ங்குகின்ற‌ன‌. அதாவது, இவ்வளவுதான் உற்பத்தி செய்யவேண்டுமென்று நினைப்பதில்லை. இருக்கும் மொத்த சந்தையையும் கையகப்படுத்துவதுதான் இவர்களின் முழுநோக்கம். குழ‌ந்தைகளும் தங்களை அறியாமலேயே இந்த‌ நுக‌ர்வு க‌லாச்சாரத்திற்கு ஆட்படுகின்றனர் என்ப‌துதான் மிக‌ப்பெரிய‌ சோக‌ம்.நமது குழந்தைகள் சந்தையின் பொம்மைகளாக மறைமுகமாக ஆட்டுவிக்கப்படுகிறார்கள் எனபதும் நாமறியாத உண்மை.

தாராள‌ம‌ய‌மாக்க‌லும், ச‌ந்தையை பன்னாட்டு நிறுவனங்களுக்கு திற‌ந்துவிட்ட‌த‌ன் ப‌ல‌னும் ந‌ம‌து அன்றாட‌ வாழ்க்கையில் எதிரொலிப்ப‌தை உண‌ர‌ வேண்டும்.ஏதோவொரு கான்ஃப்ரன்ஸ் அறைகளில் அமர்ந்துக்கொண்டு நாமும் நமது குழந்தைகளும் என்ன உண்ண வேண்டும் என்றும் அருந்த வேண்டும் என்று தீர்மானிப்பது அன்னியர்கள். இதில் எதுவுமே இந்திய தயாரிப்பு கிடையாது. பெரும்பாலும் பன்னாட்டு நிறுவனங்கள்.

இந்நிறுவனங்களின் அசுர‌ப்ப‌சிக்கு ப‌லியாவ‌து குழ‌ந்தைகளும்,வெளிநாட்டு மோக‌த்தில் வ‌ளர்க்க‌ ஆசைப்ப‌டும் பெற்றோர்க‌ளும்தான். முத‌லில், விள‌ம்ப‌ர‌ங்க‌ளின் மூலம் ந‌ம்மைக் க‌வ‌ர்வ‌து (பெற்றோராக‌) அதில் அட‌ங்கியிருக்கும் ஊட்ட‌ச்ச‌த்துக‌ள். அடுத்து அதன் அள‌வு. பின்னர் அத‌னோடு வ‌ரும் இல‌வ‌ச‌ம் அல்ல‌து
என்ன‌ லாப‌ம். (பைசா வ‌சூல்!) குழ‌ந்தைக‌ளுக்கோ, சாக்லேட் அல்ல‌து நொறுக்கு சுவை, பிடித்த‌ வ‌ண்ண‌த்தில்...அத‌னோடு ஒவ்வொரு முறையும் வாங்க‌ வைக்க‌ அவ‌ர்க‌ள் த‌ரும் வித‌வித‌மான‌ பொம்மைக‌ள். ஏன் அவ‌ர்க‌ள் ஒரே பொம்மையைத் த‌ருவ‌தில்லை? கிண்ட‌ர் ஜாயை எடுத்துக்கொண்டால் ஒவ்வொரு முட்டையிலும் ஒரு பொம்மை இருக்கிற‌து. ஒரே பொம்மை இர‌ண்டு முறை பெரும்பாலும் கிடைப்பதில்லை. (90களின் பிக் ஃபன்னின் ரன் அட்டைகளும் - எவ்ரிடே பேட்டரியின் கவரை அனுப்பினால் அவர்கள் அனுப்பும் சிவப்பு நிற கழுத்தணி!)

சென்னையில் தற்போது தொடர்ச்சியாகத் துவ‌ங்க‌ப்ப‌டும் 'டால‌ர் ஷாப்'க‌ளை ப‌ற்றிய‌ அறிவிப்பு பலகைக‌ளை அங்க‌ங்குக் காண‌லாம். எந்த‌ பொருளை எடுத்தாலும் ஒரு டால‌ரின் விலை..அதாவ‌து ஐம்ப‌து ரூபாய் ம‌ற்றும் வ‌ரி.ஜூஸ் பாட்டில்க‌ளை, சாக்லேட் சிர‌ப்புக‌ளை
அடுக்கி வைத்திருப்பார்க‌ள். ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம். சமயங்களில் ஒன்று வாங்கினால் இரண்டு இலவசம். எப்படி கட்டுபடியாகிறது? அந்த டப்பாக்களின் இறுதித்தேதியில் இருக்கிறது விடை. ஒன்று வாங்கினால் ஒன்று இல‌வச‌ம் என்றால் அத‌ன் இறுதித் தேதிக்கு ஒரு மாத‌ம் இருக்கிற‌து என்று பொருள். இர‌ண்டு இல‌வ‌ச‌ம் என்றால் இன்னும் ஒரு வார‌மே இருக்கிற‌து என்று பொருள். த‌ங்க‌ள் நாட்டில் செல்லுப‌டியாகாததை, விற்காத‌தை இங்கு திணிப்ப‌த‌ற்கு பெய‌ர் என்ன‌? யாரும் வாங்க‌வில்லையெனில் தூக்கிப்போடாம‌ல் அதையும் ச‌ந்தைப்ப‌டுத்தி லாப‌ம் பார்ப்ப‌த‌ற்கு ந‌ம‌து அர‌சும் உட‌ந்தையாக‌ இருக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் என்ன‌?

Saturday, January 01, 2011

வேளச்சேரி டைம்ஸ் : ஹாப்பி நியூ இயர்

புத்தாண்டுக்கு முதல்நாள் இரவு.அதாவது நேற்று. காய்கறிகள் வாங்க அருகிலிருக்கும் கடைத் தெருவுக்கு சென்றோம்.கடைகளெல்லாம் சீரியல் தோரணங்கள். சேல் பற்றிய அறிவிப்புகள். சில உணவகங்களில் இரவு உணவு/பார்ட்டிக்கான அறிவிப்புகள், சலுகை கட்டணங்கள் பற்றிய வசீகர அழைப்புப் பலகைகள். வாச‌ல்க‌ளில் "ஹாப்பி நியூ இயர்" கோல‌ங்க‌ள்.ர‌ம்மியமான‌ காட்சியாக‌த்தான் இருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக‌ வெடிக‌ளும் வெடிக்க‌த் துவ‌ங்கியிருந்த‌ன‌.


மகிழ்ச்சியும் ஆர‌வாரமுமாக‌ - பிற‌க்க‌ப்போகும் புத்தாண்டை கோலாக‌லமாக‌ வ‌ர‌வேற்க‌ த‌யாராகி இருந்த‌து எங்க‌ள் ஏரியா. ச‌ர்ச்க‌ளில் இர‌வு பிரார்த்த‌னை ஆர‌ம்பித்து பாட‌ல்க‌ள் ஒலித்துக்கொண்டிருந்த‌ன‌. ஏஞ்ச‌ல் உடைக‌ளில் குட்டிப்பிள்ளைக‌ள் ஓடியாடிய‌ப‌டி அங்குமிங்கும். சில‌ வீடுக‌ளில் ஸ்டார்க‌ள் வ‌ண்ண‌ வ‌ண்ண‌மாக.ஒவ்வொரு ஸ்டாரை பார்க்கும் போதெல்லாம் "ஸ்டார்" "ஸ்டார்" என்று க‌த்திய‌ப‌டி வ‌ந்தாள் ப‌ப்பு.


எங்க‌ள் வீட்டிற்கு எதிரிலேயே புதிதாக‌ ஒரு க‌ட்டிட‌ம் க‌ட்ட‌ப்ப‌ட்டுக் கொண்டிருக்கிற‌து. க‌ட்டப்ப‌ட்டுக்கொண்டிருக்கிற‌து என்றால் இடைவேளை இல்லாம‌ல்..விடுமுறைக‌ள் இல்லாம‌ல்...நேர‌ங்கால‌ம் இல்லாம‌ல். ப‌க‌லில் சுவ‌ர்க‌ள் எழுப்ப‌ப்ப‌டுமென்றால் இர‌வில் சில‌ ப‌ல‌ விநோத‌ மெஷின்க‌ள் வ‌ரும். அல்ல‌து ட்ரில்லிங் ஆர‌ம்பித்திருக்கும். ஜ‌ல்லிக‌ள் வ‌ந்து இற‌ங்கும். ஓய்வில்லாம‌ல் இய‌ங்கும் ஒரு பேக்ட‌ரி போல‌ க‌ட்டிட‌ வேலைக‌ள் ந‌ட‌ந்துக் கொண்டேயிருக்கும். நேற்றிர‌வும், புத்தாண்டுக்கு முத‌ல் நாள் இர‌வும் லைட்க‌ள் வெளிச்ச‌த்தை உமிழ ஆந்திராவிலிருந்தும் ஒரிசாவிலிருந்தும் வந்த அம்ம‌க்க‌ள் த‌லையில் துண்டை க‌ட்டிய‌ப‌டி வேலை செய்த‌வ‌ண்ண‌ம் இருந்த‌ன‌ர். அவ‌ர்க‌ளுட‌ன் சாலையை அங்குமிங்கும் விரையும் வாகன‌ங்க‌ளை வெறித்துப் பார்த்த‌ப‌டி சிறு பிள்ளைக‌ள்...அவ‌ர்க‌ளது குழ‌ந்தைக‌ளாக‌ இருக்க ‌வேண்டும். வானத்தில் பூவாய் விரியும் வண்ணப்பட்டாசுகளை பார்க்க கூச்சலுடன் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தனர்.


மொபைலில் சில‌ மெசேஜ்க‌ள் வ‌ந்த‌ ச‌ப்த‌ம். 2011....புத்தாண்டு வாழ்த்துக்கான‌வைக‌ளாக‌ இருக்க‌க்கூடும்.ஹாப்பி,ப்ராஸ்ப‌ரஸ்,புதிய‌ துவ‌க்க‌ம்....இன்ன‌பிற!காம்பவுண்டுக்குள் நுழைந்த போது கேட்டை திறந்து வெளியேறினார் அண்ணாமலை அண்ணா. எங்கள் காம்பவுண்டிலேயே இயங்கும் அலுவலகத்தில் செக்யூரிட்டியாக‌ வேலை செய்ப‌வ‌ர். "என்னண்ணா, வீட்டுக்கா, நாளைக்கு லீவா? என்றேன். "ஆமாம்மா, நாளைக்கு எதுக்கு லீவு. ஞாயித்துக்கிழமை கூட இருக்கே, லீவு போட்டா சம்பளம் புடுச்சிக்குவாங்க‌" என்றார். அவர் வாங்கும் இரண்டாயிரத்து இருநூறில் ஒருநாள் சம்பளம் கட்டானால்....அந்த இரண்டாயிரத்து இருநூறுக்கு இந்த நகரத்தில் எப்படி வாழ்ந்துவிட முடியும்? அல்லது என்ன வாங்கிவிட முடியும்? வானில் பார்த்த வாணவேடிக்கைகள் ஒருவேளை அவரது சம்பளத்தின் மதிப்பிருக்கலாம்.


அப்போதுதான் என‌க்கு காய்க‌றிக‌ளை நிறுத்து போட்ட‌ அக்காவிட‌ம் புத்தாண்டைப் ப‌ற்றி விசாரித்திருந்தேன். "என்ன‌ அக்கா, நியூ இய‌ர்ல்லாம் வ‌ந்துடுச்சா?" என்ற‌த‌ற்கு "ந‌ம‌க்கெல்லாம் என்ன‌ நியூ இய‌ர், அதெல்லாம் காசு இருக்க‌வ‌ங்க‌ளுக்குதான்!" என்றார் எடுத்துவைத்த‌ காய்க‌றிக‌ளை எடை போட்டபடி.இந்த வருட பங்குசந்தை முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறதாம், 120 புள்ளிகள் உயர்ந்து. மேலும், ஆசியாவிலேயே சிறப்பாக செயல்பட்ட பங்குசந்தை நமது மும்பை பங்கு சந்தைதானாம். இது இந்திய வளர்ச்சியை பறைசாற்றுவதாக அமைந்திருக்கிறதாம். (செய்தி)


ஆம், வளர்ச்சிதான். கடந்த ஆண்டில் மட்டும் த‌ற்கொலை செய்துக்கொண்ட‌ விவசாயிகள் எண்ணிக்கை 17368. சென்னையில் மட்டும் வீடில்லாதவர்களின் எண்ணிக்கை 40500 என்று ஒரு தொண்டு நிறுவனம் கணித்திருக்கிறது. இங்குதான் பலநூறு குடும்பங்களுக்கு ஒரு கழிவறை இருக்கிறது. ஆப்பிரிக்காவை விட‌ இந்தியாவில்தான் ப‌ட்டினி சாவுக‌ள் அதிக‌ம்.தாமிர‌ப‌ர‌ணி த‌ண்ணீரை த‌னியார் க‌ம்பெனிக‌ளுக்கு தாரை வார்த்து குடிநீருக்கு அலையும் ம‌க்க‌ளும் இங்குதான் அதிகம். 43% (5 வயதிற்குக் குறைந்த) குழந்தைகள் வயதிற்கேற்ற எடையில் இல்லாமல் எடை குறைந்து காணப்படுகின்றனர். இந்தியாவில் குழந்தை இறப்பில் 50% ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஏற்படுகிறது. எல்லாமே வ‌ள‌ர்ச்சியின் பெய‌ரால்தான்.


இதை எழுதிக்கொண்டிருக்கும்போதும் என‌க்குப் பின்னால் இன்ன‌மும் ஒலித்துக்கொண்டிருக்கிற‌து வெடிச்ச‌த்த‌ம்.43% என்ப‌வ‌ர்க‌ள் யார்? 50% என்ப‌வ‌ர்கள் யார்?


'பொருளாதார வ‌ள‌ர்ச்சி' என்ற‌ பெயரிலும் 'இந்தியா நல்லா டெவலப் ஆகுது' என்று நம்பிக்கொண்டு மேம்பால‌ங்க‌ளையும், சாலைக‌ளையும், விண்ணை எட்டும் க‌ட்டிட‌ங்க‌ளையும், அக்க‌ட்டிட‌ங்க‌ளை பாதுகாக்கும் வேலையைச் செய்ப‌வ‌ர்க‌ளின் குழ‌ந்தைக‌ள்.. வாணவேடிக்கைக‌ளை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கும் அழுக்கு ஜ‌ட்டிக‌ளுட‌ன் நிற்கும் அந்த‌க் குழ‌ந்தைக‌ள்....


ஒன்ற‌ரை ல‌ட்ச‌ம் செல‌வு செய்து உய‌ர்ர‌க‌ நாய் வாங்கி வ‌ள‌ர்க்கும் குடும்ப‌ங்க‌ளின் ம‌த்தியில் இதே வேள‌ச்சேரியில்தான் அந்த‌க் குழ‌ந்தைக‌ள் வாழ்கின்ற‌ன‌ர். என்ன‌, ந‌ம‌து கேட்க‌ளை தாண்டி....நின்றுக் கொண்டிருக்கின்ற‌ன‌ர். இதுவும் ஒரு "வ‌ள‌ர்ச்சிதான்"


ஹாப்பி நியூ இய‌ர், ம‌ன்மோக‌ன்...ஹாப்பி நியூ இய‌ர், சித‌ம்ப‌ர‌ம்...