Friday, December 31, 2010

பொண்ணும் பொன்னும்

ஒன்பது வயது வரைக்கும் காது குத்தாமல்தான் இருந்தேன்.அந்த வயதிலெல்லாம் எனக்கு நகை அணிவது/ அணியாதது பற்றி பெரிய தெளிவெல்லாம் இல்லை. ஆனால் அதெல்லாம் பெரியவங்க விஷயம்.... அவ்வளவுதான்.

”என் பொண்ணு உடம்புலே ஒரு பொட்டு தங்கம் பட விட மாட்டேன்’ என்று பெரிம்மாவையும் அம்மாவையும் வளர்த்தாரம் தாத்தா. ஒரு கட்டத்தில் உறவினர்களின் 'நை நை' தாங்காமல் பியூசியின் போது குத்த வேண்டியிருந்திருக்கிறது.

அதனால்தானோ என்னவோ, என்னையும் அப்படி வளர்க்க ஆசைப்பட்டார் பெரிம்மா.க‌ல்யாணி க‌வ‌ரிங் விள‌ம்ப‌ர‌ம் பார்த்து அதிலிருக்கும் டிசைன்க‌ளை வ‌ரைந்துக் கொடுத்து அது போல‌வே ந‌கை செய்துப் போட்டுக்கொள்ளூம் உற‌வின‌ அக்காக்க‌ளுக்கு ம‌த்தியில் இப்ப‌டி வ‌ள‌ர்வ‌து கொஞ்ச‌ம் சிர‌ம‌ம்தான். ஏன் காது குத்தவில்லை என்று கேட்பவரிடம் ‘இந்திரா காந்தி மாதிரி நானும் காது குத்திக்க மாட்டேன்’ என்று சொல்லியிருக்கிறேன்.பெரிம்மாவின் கவசத்தால் காது குத்திக்கொள்வதிலிருந்து தப்பித்திருந்தேன். அதோடு, "ஆச்சிக்கு குட்டி காது, தாங்காது" என்றும் ஒரு சாக்கு இருந்த‌து.

மேலும் நகை மீது ஆசை எல்லாம் இல்லை என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. ஃபேன்சியான பொருட்கள் மீது பிரியம் இருக்கத்தான் செய்கிறது. அதுவும், கவுனில் கொலுசின் சலங்கைகளை பின் குத்தி 'சலங்‍‍ சலங்' ஓசையுடன் நடக்க ஆசைப்பட்டிருக்கிறேன்.சுஜா அக்காவுடன் சேர்ந்து ’கிரிஸ்டல் கொலுசு’ (அப்போது அது ரொம்ப ஃபேமஸ்) நாங்கள் மட்டும் கடைக்குப் போய் வாங்குவது என்றெல்லாம் திட்டம் தீட்டியிருந்தோம். அதைத்தாண்டி பெரிதான ஆசைகளெல்லாம் இல்லை. இத்தனைக்கும் எனக்கு கொலுசெல்லாம் அணிவித்ததும் இல்லை. அணிந்தது இல்லை. "எல்லோரும் காது குத்தியிருக்காங்க‌, ஏன் என‌க்கு குத்த‌லை" என்றும் வீட்டில் கேட்ட‌தில்லை.

தீபாவளி லீவுக்கு வடலூர் சென்றிருந்த போது பெரிய மாமா சண்டை போட்டு கொல்லரிடம் என்னை அழைத்துச் சென்று காது குத்தி அழைத்து வந்தார். நான் காது குத்தாமல் இருந்தால் மாமாவுக்கு இழுக்கு போல.

கல்லூரியில் என்னைத்தவிர எல்லோரும் செயின் அணிந்திருந்தனர். வாணி, முதல் செமஸ்டர் முழுதும் செயின் அணியச் சொல்லி பலவித அட்வைஸ் செய்வாள். “நாம செயின் போடலைன்னா நம்ம அம்மா அப்பாக்குதான் இழுக்கு” - "கல்யாணம் ஆனா செயின் போடாமயே மொட்டையா(!) இருக்கப் போறியா” - “செயின் போட்டாதான் ரிலேஷன்ஸ்கிட்டே நம்ம அம்மா அப்பாவுக்கு மரியாதை இருக்கும்” என்றெல்லாம். அப்போதெல்லாம் எனது பதில், ‘நானே சம்பாரிச்சு வாங்கி போட்டுக்குவேன்’. இதே வாணிதான், “நான் திடீர்ன்னு செத்துட்டா செயினை மட்டும் எப்படியாவது எடுத்துட்டு போய் எங்கம்மாக்கிட்டே சேர்த்துடுவேன்” (இப்பொது நினைத்தால் - எகொசஇ!!) என்றும் சொல்லுவாள்.

எனது முதல் சம்பளத்தில் ஒரு மெல்லிய செயினும், அதனினும் மெல்லிய பிரேஸ்லெட்டும் வாங்கி தந்தார் பெரிம்மா. ஆனால், நகை மீது பெரிய ஈர்ப்பெல்லாம் இல்லை. கல்யாணத்தின்போது அம்மா நகைகள் வாங்கிய போது அந்த காசை என்னிடம் கொடுத்து விடுமாறு நச்சரித்தேன். ஆனால், யாரும் கண்டுக்கொள்ளவில்லை.

இப்போ இந்த‌ பேகான் ஸ்ப்ரேவுக்கெல்லாம் என்ன‌ அவ‌சிய‌ம் என்றால்..... எல்லாம் ப‌ப்புதான் கார‌ண‌ம்.

இருப‌து வ‌ருட‌ங்க‌ளுக்கு மேலாகிவிட்ட‌தென்றாலும் நான் எதிர்கொண்ட‌ அதே கேள்விக‌ளை என் ம‌க‌ளும் எதிர்கொள்கிறாள். 'அதெல்லாம் ஒரு விஷயமா' 'இதுக்கு இவ்ளோ இம்பார்டன்ஸ் இருக்குமா' என்று எண்ணி, மாறியிருக்கும் என்று பார்த்தால், காது முழுக்க‌ குத்திக்கொள்வ‌துதான் இப்போது ஃபேஷ‌னாக‌ இருக்கிற‌து. சிறு இடத்தைக் கூட‌ விட்டுவைக்காம‌ல்...இத‌ற்கும் வாஸ்து இருக்கும் போல‌!

அத‌ற்கேற்ற‌வாறு வைர‌ம் வைத்து கூட வ‌ளைய‌ங்க‌ள், க‌ம்மல்க‌ள் வ‌ருகின்ற‌ன‌.

ஏற்கென‌வே ப‌ப்புவுக்கு காது குத்திய‌ காதையை இங்கு என் அம்மா எனக்கு செய்ததில்... , காது குத்திய காதை!! எழுதியிருக்கிறேன். ச‌ற்றே பெரிய‌ க‌ம்ம‌ல்களை யாராவது அணிந்திருப்பதைப் பார்த்தால் காது வலிக்கும் என்று அவ‌ளாக‌வே சொல்லிவிடுகிறாள். ;-)

ஏன் இன்னும் காது குத்த‌லை என்று அவ‌ளை புதிதாக‌ பார்ப்ப‌வ‌ர்க‌ள் கேட்கும் போதெல்லாம் நான் சொல்லும் ப‌தில் யாருக்கும் உவ‌ப்பாக‌ இருப்ப‌தில்லை..

ப‌ப்புவை கேட்டாலோ, "காது குத்தினா என‌க்கு வ‌லிக்குது" என்று சொல்லிவிடுகிறாள். ச‌ம‌ய‌ங்க‌ளில் "ஏன் என‌க்கு காது குத்த‌ மாட்டேங்க‌றே" என்று எங்க‌ளிட‌ம் கேட்பாள். பிற‌கு ம‌ற‌ந்துவிடுவாள்.

அத‌ற்காக‌ ப‌ப்புவுக்கு இதிலெல்லாம் ஆர்வ‌ம் இல்லையென்று இல்லை. மேக்க‌ப்,நெய்ல்பாலிஷ் போடுவ‌தில், ஃபேன்சி வ‌ளைய‌ல்க‌ள், மாலைக‌ள் மாட்டிக்கொள்வ‌தில் மிக‌வும் ஆர்வ‌ம்.நானும் வாங்குவ‌தில்லை என்றாலும் இரு ப‌க்க‌த்து ஆயாக்க‌ள், மாமாக்க‌ள்,சித்த‌ப்பா அவளுக்கு வாங்கித் த‌ருவ‌தை அணிவதை த‌டுப்ப‌து இல்லை. அவ‌ளாகவே உண‌ர‌ வேண்டும் என்ப‌துதான் நினைக்கிறேன். ந‌கை ஆசை இல்லாம‌ல் வாழ‌ வேண்டுமென்ப‌துதான் நோக்க‌ம்.

இன்றைக்கு நான் பார்க்கும் ப‌ல‌ பெண்க‌ளும் கல்யாண‌த்துக்கு முன் ஃபேஷ‌னுக்காக‌ வ‌ளைய‌ல் அணிவ‌தில்லை. பிளாஸ்டிக் ஃபேன்சி காத‌ணிகளை அணிகிறார்க‌ள். ஆனால், க‌ல்யாண‌த்துக்குப் பின் முற்றிலும் த‌லைக்கீழ்.

சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்பு ந‌ண்ப‌ரின் வீட்டுக்குச் சென்றிருந்த‌ போது, மூன்றாவ‌து ப‌டிக்கும் அவ‌ர‌து ம‌க‌ளின் விருப்ப‌த்திற்காக‌ அவ‌ள‌து ஆசைக்காக‌ விலையுய‌ர்ந்த‌ காத‌ணிக‌ளை வாங்கியிருந்தார்க‌ள்.ஆச்ச‌ரிய‌மாக‌ இருந்த‌து. பெண்ணை ஏன் நகை ஆசையுட‌ன் வ‌ள‌ர்க்க‌ வேண்டும் அல்லது அவ்வாறு ஆசைப்படுவதை ஏன் கண்டிக்கவில்லை என்று தோன்றிய‌து.கேட்க‌வில்லை. பொதுவாக, 'த‌ங்க‌ம் என்னைக்குன்னாலும் வேணும்' - 'க‌ல்யாண‌ம் காட்சிக்கு ஆகும்' என்ப‌துதான் சொல்லிக்கொள்ளும் ச‌மாதானம், இல்லையா?


அதுவும் ந‌கைக்க‌டைக‌ளில் மாத‌ம் இவ்வ‌ள‌வு சேமித்தால் ஒரு வ‌ருட‌ம் க‌ழித்து ச‌லுகைக‌ளுட‌ன் வாங்கிக் கொள்ள‌லாம் என்ப‌து இன்னொரு தூண்டில். இதை ந‌ம்பி இதிலெல்லாம் இன்வெஸ்ட் செய்வார்க‌ளா யாராவது என்றெண்ணினால் உண்மை வேறாக இருக்கிறது. ப‌ல‌ பெண்க‌ள் மாத‌ த‌வ‌ணைக‌ளில் அதில்தான் சேமிக்கிறார்க‌ள்.ந‌கைக‌ள் வாங்குகிறார்க‌ள். தி.ந‌க‌ரின் க‌டைக‌ளிலும், வேள‌ச்சேரியின் க‌டைக‌ளிலும் நேர‌டியாக‌ பார்த்திருக்கிறேன். அப்படி பணம் கட்டுபவர்கள் பெரும்பாலும் ம‌த்திய‌த‌ர‌ வ‌ர்க்கம்தான். ந‌டு ம‌த்திய‌த‌ர‌ வ‌ர்க்க‌ம் என்று வேண்டுமானாலும் சொல்ல‌லாம்.மாத‌ம் முழுதும் உழைத்து பெற்ற‌ தொகையில் மூச்சை இழுத்து பிடித்து 'என்றாவ‌து ஆகும்' அல்ல‌து 'எப்போதாவ‌து ஆக‌ப்போகும் ம‌க‌ளின் திரும‌ணம்' என்ற கார‌ண‌ங்க‌ளுக்காக‌.....வெற்று ஜம்பத்துக்காக.


இதில் ந‌கைக்க‌டைக‌ளுக்கும் கொள்ளை லாப‌ம். முன்கூட்டியே வரவு வைக்கப்படும் தொகை வ‌ட்டியில்லாத‌ வ‌ர‌வுதானே!

அப்ப‌டி ஏன் நமக்கு ந‌கை மீது ஆசை இருக்க‌ வேண்டும்? நுக‌ரும் ஆசையை நாமே உண்டாக்க‌ வேண்டும்? ம‌ருத்துவ‌ கார‌ண‌ங்க‌ளுக்காக‌ அல்ல‌து ந‌ர‌ம்பு தூண்ட‌லுக்காக‌ என்று நம்பினால் காது குத்துவதோடு மட்டும் விட்டு விடலாமே! ந‌ம‌து ம‌திப்பு நிச்ச‌ய‌ம் நாம் அணியும் ந‌கையில் இல்லை என்ப‌தை உண‌ர‌ வேண்டும்.

Saturday, December 25, 2010

கீழைக்காற்று: வினவு-புதிய கலாச்சாரம் நூல் வெளியீட்டு விழா!கடந்த மார்ச் 8 - உழைக்கும் மகளிர் தினத்தை ஒட்டி தங்கள் படைப்புகளை அனுப்புமாறு பதிவர்களிடம், வினவு தளம் அழைப்பு விடுத்திருந்தது. வினவு தளத்தில் வெளியான அந்த படைப்புகள் தொகுக்கப்பட்டு நூலாக வெளியிடப்பட இருக்கிறது.

வரும் ஞாயிறு மாலை கீழைக்காற்று பதிப்பகத்தின் சார்பில் நடைபெறும் வினவு, புதிய கலாச்சாரம் புத்தக வெளியீட்டு விழாவுக்கு தாங்கள் வருகை தருமாறு அன்புடன் கோருகிறோம். கூட்டத்தில் தோழர் மருதையன் சிறப்புரையாற்ற இருக்கிறார்.

எட்டு புத்தகங்கள் வெளியிடப்பட இருக்கின்றன.


விழா தலைமை:
தோழர் துரை. சண்முகம், கீழைக்காற்று

நூல் வெளியிடுவோர்:
ஓவியர் மருது
மருத்துவர் ருத்ரன்

நூல் பெறுவோர்:
கவிஞர் தமிழேந்தி
பதிவர் சந்தனமுல்லை

சிறப்புரை: “படித்து முடித்த பின்…”
தோழர் மருதையன், பொதுச் செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு
நாள்: 26.12.2010

நேரம்: மாலை 5 மணி

இடம்: செ.தெ. நாயகம் தியாகராய நகர் மேல்நிலைப்பள்ளி, வெங்கட் நாராயணா சாலை, தியாகராய நகர், சென்னை
(பனகல் பூங்காவிலிருந்து சைதை செல்லும் சாலையில் திருப்பதி தேவஸ்தானத்தின் எதிரில், டாக்டர் நடேசன் பூங்காவிற்கு அருகில் இந்தப் பள்ளி இருக்கிறது)


எட்டு புத்தகங்கள் வெளியிடப்பட இருக்கின்றன. அனைத்தும் மொத்தமாகவும், தனியாகவும் 30% தள்ளுபடி விலையில் விற்பனைக்கு கிடைக்கும்.


பதிவர்கள், வாசகர்கள் அனைவரும் வருக!

Saturday, December 11, 2010

மழைக்கால பாடல் ஒன்று - பப்பு பாடியது....

Yazh060 1 by sandanamullai

(பாடல் வரிகள், இசை - பப்பு)

ஜன்னல் வழியாக மழையை பார்த்துக்கொண்டிருந்தாள், பப்பு . லேசாகத் தூறிக் கொண்டிருந்த மழை பலத்து பெய்யத் துவங்கியது. "Oh, my god, this rain sooooing' (soooo - 'ச்சோ') என்று ஆச்சர்யப்பட்டு, மழையிடம் இந்த பாடலைப் பாடினாள்.

Friday, December 10, 2010

வேளச்சேரி டைம்ஸ் : பத்துக்கு பத்தில் ஒரு கனவு இல்லம்

தனராஜ் தனது குடும்பத்துடன் இரு படுக்கை அறைகளைக் கொண்ட வீட்டில் வசிக்கிறார். அவரோடு, சமையலறையில் ரோசய்யாவின் குடும்பமும், மற்றொரு படுக்கை அறையில் பலராமின் குடும்பமும் வசிக்கிறார்கள். நாங்கள் சென்றபோது தனராஜின் மனைவி, ஹாலின் ஒரு பகுதியில் சமையல் செய்துக் கொண்டிருந்தார். மறுபகுதியில் பலராம் குடும்பத்தின் உலை கொதித்துக்கொண்டிருந்தது.

ஒன்றிரண்டு பைகள், அதில் துருத்திக்கொண்டிருக்கும் துணிகள்,போர்வை மற்றும் பாய், கட்டப்படாத ஜன்னல்களை மூடியிருக்கும் பிளாஸ்டிக் சாக்கு, சமைக்கும் பகுதியில் சில சாமான்கள் - இதுதான் ஒவ்வொரு குடும்பத்தின் சொத்து.

'குடும்பமா இருக்கிறதால இங்கே தங்கிக்கலாம். தனியா இருந்தா அங்கே பின்னாடி இருக்கிற குடிசையிலே தங்கிக்கணும்' என்று தனராஜ் காட்டிய திசையில் சில குடிசைகள் தென்பட்டன. எல்லாருக்கும் சேர்த்து ஒரு பொதுக்கழிப்பறை. குளியலறை. தேங்கியிருக்கும் மழைத்தண்ணீர் - ‍கத்திக்கொண்டிருக்கும் தவளைகளின் சத்தம் மற்றும் குண்டு பல்பின் ஒளி. அந்தக் குடிசைகளில் தங்கியிருப்பவர்கள் விஜயநகரத்திலிருந்து வந்திருக்கும் பெண்களும் ஒரிஸாவிலிருந்து வந்திருக்கும் ஆண்களும்.அறைச் சுவர்களையும்,தூண்களும்,மேல்தளங்களுமாக அந்த புத்தம் புதிய அடுக்குமாடி கட்டிடத்தை உருவாக்கிக் கொண்டிருப்பவ‌ர்கள் அவர்கள். இந்த இரண்டு மாடிக்கட்டிடம் என்றில்லை, சென்னையில் பத்து மாடி, பன்னிரெண்டு மாடி கட்டிடங்களை கட்டி எழுப்புபவர்களும் அவர்கள்தான். பெண்கள் கல்லையும், மணலையும் சுமக்க ஆண்கள் கட்டுவதும், கலப்பதுமாக வேலை செய்வார்கள். அவர்களைச் சுற்றி ஓடி விளையாடிக் கொண்டிருக்கும் சிறு குழந்தைகள். பலகணியோ அல்லது அடித்தளமோ, போர் போடும் வேலையோ தினமும் ஏதாவதொரு ஒரு புதிய வளர்ச்சியை/ மாற்றத்தைக் அக்கட்டிடம் கொண்டிருக்கும். இது நம் அனைவருக்குமே மிகவும் பரிச்சயமான காட்சிதான் இல்லையா?

ஏறத்தாழ எல்லாத் தெருக்களிலும் ஏதாவதொரு கட்டிடம் கட்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. ஒரு பிரிவு மக்களும் ஏதாவதொரு ஊரிலிருந்து குடும்பம் குடும்பமாக வந்து கட்டிக் கொடுத்துக்கொண்டேதான் இருக்கிறார்கள்.மற்றொரு பிரிவு மக்களின் குடும்பங்கள் வந்து குடியேற.பெய்கின்ற மழையோ அல்ல‌து தூறலோ - எதுவும் அவர்களது வேலையை தடை செய்துவிட முடியாது. சிலமாதங்களாக உருப்பெற்று வரும் அந்த கட்டிட வேலை, கடந்த வாரத்தில் 18 மணி நேரங்களாக பெய்த மழைக்காக மட்டுமே நிறுத்தப்பட்டது.

'இங்கே வேலை முடிஞ்சா, அடுத்து மேஸ்திரி எங்கே சொல்றாரோ அங்க போணும்", என்கிறார் பலராம்‍ அவ்வீட்டின் ஆண்களுக்காக போடப்பட்டிருக்கும் மரபெஞ்சில் அமர்ந்தபடி. தரையில் அவரது மனைவி பார்வதி குத்துக்காலிட்டு அமர்ந்திருக்க, அவர்களின் இருவயது குழந்தை ஓடி விளையாடிக் கொண்டிருந்தது.

"ஊரில பச்சரிசிதான் சாப்பிடுவோம். இங்கே ஒரு ரூபா அரிசிய, நாலு ரூபான்னு கடையில விக்கிறதை வாங்கி சாப்பிடறோம். வேகவே மாட்டேங்குது, ஒரு அவர், ஒன்றரை அவர் ஆகுது" என்றார் பலராமின் மனைவி. சொந்த ஊர் ஆந்திராவிலிருக்கும் குண்டூர். ஊரில் விவசாயம் செய்துக்கொண்டிருந்தார். விவசாயம் கட்டுபடியாகாததால் தெரிந்த மேஸ்திரி வழியாக குடும்பத்துடன் இங்கு வந்திருக்கிறார்.

"கால்கிலோ தக்காளி பதினாறு ரூபா விக்குது. சாப்பாட்டுக்கே சரியா இருக்கு. ஒன்னும் மிஞ்சாது. ஊருக்கெல்லாம் ஒன்னும் கொண்டு போக முடியாது . தனியா இருக்கிற பசங்க கையிலியாவது நாலு ரூபா தங்கும் போலிருக்கு, எங்களுக்கு செலவுக்கே சரியா இருக்கு" என்று பலராம் கூறியபோது அவரது முகத்தில் தெரிந்தது வேதனையை எப்படி சொல்ல? பக்கத்து ப்ளாட்டில் தேங்கியிருந்த தண்ணீரிலிருந்து கொசுக்கள் படையெடுக்க ஆரம்பித்திருந்தன.

காலையில் எட்டரை அல்லது ஒன்பது மணிக்கு வேலையை ஆரம்பித்தால் மதியம் ஒரு மணிநேரம் உணவு இடைவேளை. மதியம் தொடங்கி மாலை ஐந்து அல்லது ஐந்தரை வாக்கில் வேலை முடியும். வாரக்கூலி.ஒருநாள் விடுப்பு எடுத்தாலும் சம்பளம் கட். ஆண்களுக்கு நானூறு ரூபாய் மற்றும் பெண்களுக்கு 250லிருந்து 300 ரூபாய் வரை - ஒருநாள் சம்பளம். ஞாயிறு விடுமுறை. எந்த பண்டிகை அலல்து விசேஷ தினங்களுக்கோ விடுமுறை இல்லை. 'இப்ப பொங்கலுக்கு ஊருக்கு போவோம். பத்துநாள் இருந்துட்டு வருவோம். ஒரு பொங்கலுக்கு போனா அப்புறம் மறு பொங்கலுக்குத்தான்' என்றார் பார்வதி.'மேஸ்திரி புது பொடவை, வேஷ்டி, கொடுப்பாரு. ' எனும் தனராஜ்தான் அங்கிருந்தவர்களிலேயே கொஞ்சம் பெரியவர். பல வருட அனுபவங்கள் கொண்டவர். 'நாங்க நெறைய கட்டிடம் கட்டியிருக்கோம், அம்பத்தூர், அண்ணா நகர், திருவான்மியூர்..... வீடுங்க, ஆஸ்பத்திரி, பெரிய ஆபீஸ் எல்லாம் கூட. எல்லாம் வித்து போகுது. இது கூட, எல்லா வீடும் புக் ஆயிடுச்சு. தெனம் வந்து பார்த்துட்டு போறாங்களே " எனும் தனராஜுக்கு சந்தேகம் இவ்வீடுகளை யார் வாங்குகிறார்கள், அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதும் 'பத்துக்கு பத்து கூட நம்மால வாங்க முடியலயே' என்பதுமே. முக்கியமாக, 'எங்கேருந்து இவ்ளோ காசு வருது?"

செய்திதாள்களின் சின்ன கட்டங்களிலிருந்து எக்ஸ்குஸிவ் இதழ்கள் வரை, ப்ளக்ஸ் பேனர்கள், ஏன் பேருந்தின் பின்னால் கூட விட்டு வைக்காத அடுக்குமாடி கட்டிடங்கள் மற்றும் தனிவீடுகளுக்கான விளம்பரங்கள். ஏரியின் நடுவில் கட்டினால் கூட புக் ஆகிவிடும் வீடுகள், ப்ளாட்டுகள்.

இட்டாலியன் கிச்சன், மாடுயூலர் கிச்சன், யூரோப்பியன் டாய்லெட், ஜெர்மன் தொழில் நுட்பத்துடன் உருவான ஸ்ட்ராங்க் கம்பிகள் என்றும் நெடிதுயர்ந்த வீடுகள் ஒருபுறம் ஒருசாராருக்கு உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்க, மறுபுறம் நாடோடிகளாக அலைந்து திரிந்துக்கொண்டிருக்கும் ஒரு சாரார்....

கல்லூரி முடித்ததும் குறைந்தது மூன்று அல்லது நான்கு லட்சத்திலிருந்து ஆரம்பிக்கும் சிடிசி ஒரு புறம்....ஒரு நாளைக்கு முன்னூறு ரூபாய் கூலி பெறும் கூட்டம் ஒருபுறம்...முன்னூறு ரூபாய் பிட்ஸாவை வாங்கும் கூட்டம்.....விற்கும் விலைவாசியில் ஒருநாளை ஓட்டுவதற்கு முழி பிதுங்கும் கூட்டம்...

போக்குவரத்து நெரிசலை (குறைப்பதாகச் சொல்லிக்கொண்டாலும்) அதிகரிக்கும் மேம்பாலங்களும்,மெட்ரோ ரயில்களும் போடப்படும் சென்னையில் - வேளச்சேரியில்தான் மழையிலும் குளிரிலும் அவதிப்பட்டு குடியிருக்க வீடின்றி அல்லலுறும் மக்களும் வாழ்கிறார்கள்.

ஒரு பில்லியன் டாலரில் கட்டப்பட்ட வீடு இருக்கும் நாட்டில்தான் - பத்து குடும்பங்களுகொரு கழிப்பறை இருக்கிறது.

ஆன்டிலியா மாளிகை, முகத்திலறைவதற்குப் பதில் நம்பிக்கையை, எதிர்காலத்தை பற்றிய நல்லெண்ணத்தை , தாங்களும் எட்ட முடியும் என்று வளர்ச்சிக்கான வாய்ப்பாக இருப்பதாக - இளைஞர்கள் கருதுவதாக ஒரு கட்டுரை கூறியது.

அம்பானியின் ஆன்டிலியா மாளிகைக்கும், தனராஜின் 'பத்துக்கு பத்து வீடு' கனவுக்கும் இடையில்தான் பொருளாதார வளர்ச்சியும், பிரதமரின் வளர்ச்சித் திட்டங்களும் எங்கோ மறைந்திருக்க வேண்டும். அப்படியே தனராஜின் கேள்விக்கான விடையும் கூட.

"இவ்ளோ காசு எங்கேருந்து வருது? எங்கே இருக்கு இவ்ளோ காசு? " என்ற தனராஜின் எளிய கேள்விக்கு விடையளிக்க எனக்குத் தெரியவில்லை.

தற்போது நாங்கள் குடியிருக்கும் வீடு கூட தனராஜால் கட்டப்பட்டிருக்கக் கூடும். புழுதி படிந்த அந்தக் குழந்தைகள் இங்கும் ஓடியாடி விளையாடி இருக்கக்கூடும்.

தனராஜின் இருப்பிடத்தை விட்டு வெளியேறும்போது, ரேடியோவில் ஒலித்துக் கொண்டிருந்தது "சென்செக்ஸ் 195xxx புள்ளி 45 புள்ளிகளுடனும், நிஃப்டி ஐந்தாயிரத்து .... புள்ளி 54 புள்ளிகளுடன்மும் முடிவடைந்தது. விப்ரோவின் பங்குகள் நான்காயிரம், இன்ஃபோசிஸின் பங்குகள் மூன்றாயிரத்து...."

Wednesday, December 08, 2010

பப்பு டைம்ஸ்

”பப்பு, ஹோம் ஒர்க் முடிச்சியா?”

”நீ எழுதி தா-ப்பா”

”ஆ, குட்டிக்கு எழுதினது பத்தாது இப்போ நீயா? ஹோம் ஒர்க்லாம் அவங்கவங்கதான் செய்யணும்.”

அவ்வளவுதான் கோபம்...கண்களில் நீர்..

"நீ ஏன் குட்டி மாமாவுக்கு எழுதி தந்தே? எனக்குதான் நீ எழுதி தரணும். நான் உன் ஃப்ரெண்டே இருக்க மாட்டேன்"

அவ்வ்வ்!

"இல்ல, பப்பு. குட்டி மாமாவும் இதே மாதிரி கேட்டப்போ எழுதி கொடுத்தேனா..அவங்க ஆன்ட்டி செம திட்டு. ஏன் இவ்ளோ அசிங்கமா எழுதி இருக்கே....அழகா எழுதணும்...உன் ஹேன்ட் ரைட்டிங் மாதிரி இல்லையே..இதுன்னு குட்டி மாமாவை செம திட்டு. அதுலேருந்து மாமா ஹோம் ஒர்க் மாமாவேதான் எழுதுவாங்க..நீயும் உன் ஹோம் ஒர்க் நீயே எழுது..."

#ஸ்ப்பா!! மூச்சு விடாம சொன்ன இந்த டயலாக்கு ஏதோ லேசா பலனிருந்தது.
பப்பு, வீட்டுக்கு விளையாட வந்த நண்பனிடம், "ஹேய், உனக்கு தெரியுமாப்பா, ஃபேன் சுத்தும்போது பேன்லே ஏறி உட்கார்ந்தா ஆஃபிரிக்காவுக்கு போகலாம்"

#டிக்கெட் வாங்கணும்னா... சாரி.....வேணும்னா எங்க வீட்டுக்கு வாங்க...

"ம்ம்ம்....அம்மா வேணும்..ம்ம்.." சும்மாதான், அழற மாதிரி ஆக்டிங், என்னை ஏமாத்தறதுக்கு.
அதாவது கொஞ்சினது பத்தாதுன்னு சிக்னலிங்!


நானும், "பப்பு வேணும்..ம்ம்..பப்பு வேணும்"


"ஹேய், நான் என்ன உனக்கு அம்மாவா?!"ன்னு நிஜமாவே அழுகை...
#பாப்பாங்க மட்டும்தான் அம்மாவுக்காக அழுவாங்களா என்ன? அவ்வ்வ்வ்க்ளோப்-லே விரலால ட்ரேஸ் செஞ்சு கண்டங்களைச் சொல்லி விளையாடிக்கிட்டிருந்தப்போ,

”ஹை, பப்பு எப்படி தெரியும் உனக்கு?”


”எப்படி தெரியாம இருக்கும்?!!” - பப்பு


#பவ்வ்வ்வ்வ்
இதுதான் சமீபமா பப்புவுக்கு பிடிச்ச புத்தகம். ஆங்கில எழுத்துகள் அறிமுக புத்தகம். என்ன ஸ்பெஷல்னா, A is for ZebrA, B ன்னா craB....u..gnU...விலங்குகள் பெயரா இருக்கிறதாலே பப்புவுக்கு ஆர்வமா இருக்கு. Worth reading.

Monday, December 06, 2010

ஏழு நிறப்பூ மேனியா

பப்புவுக்குதான்.

ஏழுநிறப்பூ வைச்சு என்ன பண்ணுவேன்னு கேட்டதுக்கு, பாட்டை (பற்ப்பாய்..பற்ப்பாய்..பூ இதழே) பாடிட்டு

1."ரெயின்போவை கீழே வர வை"

திரும்ப பாட்டை பாடிட்டு,

2. "நான் இப்போவே பீச்சுக்கு போகணும்" ன்னு சொன்னதும் பீச்சுக்கு போய்டுவாங்களாம்.

அப்புறம், இன்னொரு தடவை பாட்டு,

3."எனக்கு விங்ஸ் வேணும்"

அப்புறமும்.....திரும்ப பாட்டு...

4."வர்ஷினி, மெரில், வெங்கடேஷ், அர்ஷித் கைலாஷ், லஷ்மி கார்த்திகா என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் மேஜிக் ஸ்டிக் வேணும்..."

ம்ம்..நான் அந்த புக்கை படிச்சப்போ உலகத்துலே இருக்கிற எல்லா விளையாட்டு சாமானும் என்கிட்டே வரணும்னு ஆசையயிருந்துச்சு. (அதுவும் ஷேன்யாவோட ஆசையிலேருந்து காப்பியடிச்சதுதான் - உபயம் : நந்தலாலா)

பளிச்சுன்னு ஒரு க்ளிக் ‍‍ எனக்குத்தான்...ஹிஹி..

"நாம செடி வளர்க்கலாமா பப்பு, விதையெல்லாம் போட்டு "

பப்புவும் செம குஷியாகிட்டா.அப்போ, உப்பு-மிளகா தூள் சகிதம் மாங்காய் சாப்பிட்டுக்கிட்டு இருந்தோம். "ஆச்சி, இந்த மாங்கா சீட் வளர்க்கலாமா" - பப்புதான்.
வீடு தாங்காதுன்னு, உன்னோட விளையாட்டு சாமான்லே வளர்க்கலாம்னு சொன்னேன்.


பப்புவே, ஒழுங்கா இருக்கிற விளையாட்டு சாமானைத் தேடி எடுத்துட்டு வந்ததும், 'பெயின்ட் பண்ணிட்டு காஞ்சதும் மண் போட்டு சீட் போடலாம்'னு ஐடியா பண்ணோம். ஒரு மணி நேரம் - பப்புவுக்கு நல்ல டைம் பாஸ். எனக்கும் லேப்டாப்.
அடுத்த நாள் (டிச 3) காலையில எழுப்புறதுக்கு நல்ல சாக்கு இருந்துச்சு. மண்ணு போட்டு விதை போடலாம்னு சொன்னதும் பப்பு துள்ளி குதிச்சு எழுந்தாச்சு.ஆனா, அன்னைக்கு நேரம் இல்லாததாலே (ஹிஹி...எவ்ளோ பெரிய தொட்டி!!) முடியலை. சாயங்காலம் வந்து மண்ணை நிரப்பிட்டு கடுகு, வெந்தயம் (அகெய்ன்..ஹிஹி) எல்லாம் எடுத்துக் கொடுத்தேன். மண் - கடுகு-மண் போட்டு மூடியாச்சு.

சூரிய வெளிச்சம் வேணும்னு ஜன்னல்கிட்டேயும் வைச்சோம். மூன்லைட்லே வளருமா, இல்லே மூன்லைட் பட்டுச்சுன்னா குட்டியாகிடுமான்னு அடுத்தக் கேள்வி....

'எப்போ வரும், எப்போ வரும்'ன்னு ஒரு மணிநேரத்துக்கு ஒரு தொணப்பல்.
'மூணு நாளைக்கு அப்புறம்தான்'னு சொல்லி வைச்சேன்.

என்ன முக்கியமான விஷயம்னா, அதுலே ஏழு நிறப்பூ பூக்கப் போகுதுன்னு பப்பு நினைச்சுக்கிட்டிருக்கிறதுதான். 'செடி வந்துடுச்சா'ன்னு செடியை பத்தி பேசியே சாப்பாட்டு நேரமெல்லாம் ஓடுச்சு.

நேத்து காலையிலே பார்த்தா ஒரு தொட்டிலேருந்து கொஞ்சமா வெள்ளையா தலையை நீட்டி எட்டி பாக்குது - கடுகு செடிகள்.


(இன்று காலை)

எங்க ரெண்டு பேருக்கும் சந்தோஷம் தாங்கலை. ஏன்னா, கடுகெல்லாம் முளைக்குமான்னு ஒரு சந்தேகம்..ஆயாக்கிட்டே கேட்டா என்னை ஏதாவது நக்கல் பண்ணுவாங்களோன்னு வேற...சரி, இது வரலேன்னா பச்சைபயறு போட்டு அடுத்த முயற்சி செய்யலாம்னு மனசுக்குள்ளே திட்டம் போட்டு வைச்சிருந்தேன். நல்லவேளையா..கடுகே முளைச்சுடுச்சு.

இந்த அஞ்சு நாளும் காலையிலே எழுந்துக்க, பப்பு மூடை மாத்த இந்த ஆக்டிவிட்டி உபயோகமா இருந்துச்சு. அதுலே ஏழு நிறப்பூ வராதுன்னு தெரியும்போது பப்புக்கு ஏமாற்றமா இருக்குமேன்னு தோணினாலும் தினமும் கொஞ்சமா தண்ணியை தெளிக்கிறது, அதை கவனிச்சுக்கிறதுன்னு நல்ல அனுபவமா இருந்துச்சு.

ஒரு ஏழு நிறப்பூ இருந்தா, அந்த செடியிலே ஒரு ஏழுநிறப்பூ பூக்கணும்னு கேக்க ஆசையாயிருக்கு. :-)

Saturday, December 04, 2010

ஆழம் இது ஆழமில்ல....ஆழம் இது அய்யா…

ஏழாவது படிக்கும்போது நடந்த ஆண்டுவிழாவில் ரவி, ராதாவுடன் சேர்ந்து பரதநாட்டியம் ஆடினான். நளினமாகத்தான் வளைந்து, சுழன்று ஆடினான். அப்போதிலிருந்து, பள்ளிக்கூடம் முடிக்கும் வரைக்கும் அவனைப் பற்றி ஒரு கிண்டல் இருந்துக்கொண்டே இருந்தது. அவன் நடப்பதிலிருந்து, எழுதுவதிலிருந்து ஏன் வேதியியல் லேப்பில் கூட அவ‌னது செய்கைகள் ஒவ்வொன்றையும் குறித்ததாக - அந்த கிண்டல் இருந்தது. 'பெண்தன்மையாக இருக்கிறது' அல்லது 'பெண்ணைப் போல இருக்கிறான்' என்பதுதான் அது. பையன்கள் ரவியை விளையாட்டுகள் எதிலும் கூட்டுச் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்.

அதேபோல, டாக்டர் ஆன்ட்டியின் புடவைகளை மாடியில் காய வைக்கும் அங்கிளை பற்றியும் பெரியவர்கள் மத்தியில் இதே தொனியிலான கிண்டல் இருந்தது.

'பிங்க்' நிறத்தில் அல்லது கொஞ்சம் பூ வேலைப்பாடுகள்/டிசைன்கள் கொண்ட சட்டை/குர்தாக்களை ஆண்கள் அணிந்திருந்தால் நண்பர்கள் மத்தியில் 'கேர்லிஷா இருக்கு' என்றோ 'என்ன, பொண்ணுங்க ட்ரெஸ் மாதிரி இருக்கு' என்று நிச்சயம் ஒரு வரி கமெண்டாவது இருக்கும். கோலம் போடும் ஆணையோ அல்லது கிரிக்கெட் விளையாடும் பெண்ணையோ/சுவர் ஏறும் பெண்ணையோ அவ்வளவு எளிதில் யாரும் ஏற்றுக்கொள்வதில்லை.

"பெண்மனசு " என்ற‌ தொடர்பதிவு இடுகைகள் சிலவற்றை தமிழ்மணத்தில் கணடதும் இதெல்லாம் ஞாபகம் வந்தது.

பெண் மனதை பெண்ணின் குரலில் வெளிப்படுத்தும் பாடல்கள் கொண்ட தொடர்பதிவு என்று சொல்லியிருந்தாலும், ஸ்டீரியோடைப் போன்றுதான் பார்த்ததும் தோன்றியது. "பெண் மனசு" என்றால் அது ஏதோ கடல், ஏரி, ஆழமான குளம்,சுரங்கம், புரிந்துக்கொள்ள முடியாதது என்பது போன்ற வசனங்கள் /ஆட்டோ வாசகங்களால் கூட இருக்கலாம். மேலும், மனம் என்பது மனிதர்கள் எல்லாருக்கும் பொதுவானதுதானே. (இந்த தொடர்பதிவை யார் ஆரம்பித்தார்கள் என்று தெரியாது. நல்ல நோக்கத்தில்தான் ஆரம்பித்திருக்க வேண்டும். இந்த இடுகை யாரையும் புண்படுத்த அல்ல. )

பெண்களுக்கான செருப்புகளை பார்த்திருக்கிறீர்களா? செருப்பிலிருந்து ஆரம்பிக்கும் இந்த ஸ்டீரியோடைப்பிங் எல்லாவற்றிலும் இருக்கிறது. மிகவும் ஸ்லீக்காக, நெளிவுகளுடன் பூ வேலைப்பாடுகளுடன் இருக்கும் செருப்புக ளெதுவும் எனக்கு ஒத்து வந்ததில்லை. அவர்கள் செய்து வைத்திருக்கும் அளவுகளுக்குள் என் கால்கள் எப்போதும் பொருந்தியதில்லை. செருப்புகளைத் தேர்ந்தெடுப்பதில் எப்போதும் பெருங்குழப்பம் வந்து நேரும். அதுவும், பெண்களின் கால்கள் நெளிவாக‌ ஸ்லீக்காக இருக்கும் என்பது செருப்பு உற்பத்தியாள்ர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை போல. (என்னைப் போன்ற அகன்ற பாதமுடையவர்களைப் பற்றி அவர்கள் கொஞ்சமும் யோசிக்க மாட்டார்கள். )

அதே போல, பெண்கள் 'இப்படித்தான் இருப்பார்கள்' அல்லது பெண் மனசு 'இப்படித்தான் இருக்கவேண்டும்' என்று வரையறைகள் இருக்கிறது. அதைத்தாண்டி ஒரு பெண் அப்படி இல்லாமல் போய்விட்டால் 'பையன் மாதிரி' இல்லேன்னா 'டாம்பாய்' அதையும் தாண்டினால் இருக்கவே இருக்கிறது 'பொம்பளையா அவ". பெண்கள் எதற்கெடுத்தாலும் அழுதுவிடுவார்கள். மெல்லியல்பானவர்கள். வல்னரபிள். சாட்டர்பாக்ஸ். பல்லி கரப்பான்பூச்சிக்கு பயப்படுவார்கள். அப்புறம், வலிமையானவர்கள் என்றும் சொல்லிக் கொள்வார்கள். அதே மாதிரி பையனுக்கும். குழந்தையாக இருக்கும்போது மையிட்டு லிப்ஸ்டிக் போட்டு புகைப்படம் எடுத்து ரசிப்பவர்கள் அதே குழந்தை வளர்ந்த பின் அதையே செய்தால் ஏற்றுக்கொள்வார்களா? அல்லது தாலியை ஆண் அணிந்தால்? இப்படியிருந்தால் அவமானம் என்றுதான் எல்லோர் மனதிலும் இருக்கிறது.

தமிழ் சினிமா பாடல்களும் இதே ரகம்தான். உண்மையில் பல தமிழ் சினிமா பாடல்கள் பரிச்சயமானது கல்லூரி ஹாஸ்டலில்தான். பெரும்பாலும் 'மயங்கினேன் சொல்ல தயங்கினேன்' மாதிரி பெண்மையின் மென்மை டைப் பாடல்கள். ஓக்கே..அவற்றைப் பற்றி இன்னொரு இடுகையில். இப்போது ,இன்னொரு தொடர் இடுகை ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன்.

இந்த ஸ்டீரியோடைப்பிங்‍க்கு மாறாக/அவற்றிற்கெதிராக‌ நாம் நடந்துக் கொண்டவை பற்றி பகிர்ந்துக்கொள்ளவது தான் அது.


1. நகைகள் மேலோ அல்லது பட்டுபுடைவைகள் மீதோ பெரிதாக ஆர்வம் இருந்ததில்லை. சிறுவயதில் (ஆறாம்/ஏழாம் வகுப்பு?) கொஞ்சநாட்கள் மட்டும் கொலுசு அணிந்திருக்கிறேன். வளையல்கள் ஒருநாளும் அணிந்ததில்லை. இன்‍லாஸ் விருப்பத்திற்காக கொஞ்ச நாட்கள் பிரேஸ்லெட் அணிந்தேன். மேக்கப் மேல் ஆர்வம் இருந்ததில்லை. தவிர்க்க முடியாத சில நிகழ்வுகளின் போது மட்டும் மேக்கப் போட்டுக் கொண்டிருகிறேன்.மற்றபடி, பவுடர் கூட பூசுவதில்லை.தலைக்குப் பூ....நோ வே!

2. எம்ப்ராய்டரி, நடனம், நிட்டிங், க்ரோஷா,தஞ்சாவூர் பெயிண்டிங்,,கோலம் போன்ற நுண்கலைகளில் சூனியம். சமையல் செய்வதில் சுத்தமாக ஆர்வம் இல்லை. செய்ததும் இல்லை. இதுக்காக எத்தனையோ பேர்கிட்டே விதவிதமா திட்டு /அட்வைஸ் வாங்கியிருக்கேன்.

3. பிங்க் கலர் அப்படியெல்லாம் எனக்குப் பிடித்தது இல்லை. அதேபோல டெடிபேர், க்பியூட்,லேஸ், ஃபிரில்கள்....பிடித்ததும் இல்லை. சாக்லேட் பிடிக்கும். ஆனா, அது கேர்லியா? ;‍-)

4. சகோதரி என்று என்னை யாரும் அழைத்தாலொழிய யாரையும் அண்ணா என்று நானாக அழைத்தது இல்லை.

5. பெண்களுக்கென்று தனி கட் வைத்து வடிவைக் காட்டும் ஜீன்ஸை தவிர்ப்பதற்காக‌ ஆண்களுக்கான ஜீன்சை அணிந்திருக்கிறேன்.

.

.
.
.
.

இந்த இடுகைக்கு மறுமொழி எழுதும் முதல் ஐந்து பேரை இத்தொடர் பதிவுக்கு அழைக்கிறேன். :‍-)