Tuesday, September 28, 2010

Who'd a thunk it?

ஆதிவீட்டிலிருந்து வந்த பப்பு சொன்னாள், “நான் ஆதியை அவங்கம்மாக்கிட்டே சொல்லி அடி வாங்க வச்சேன்”.

அதிர்ச்சியுடன், ”ஏன் பப்பு” - ஆயா

”ஆதி என்னை கிஸ் பண்ணான். ” - பப்பு.

ஆதி எங்கள் பக்கத்துவீட்டு பையன். “குறிஞ்சி அக்கா குறிஞ்சி அக்கா” என்று பப்புவின் பின்னால் சுற்றிக் கொண்டிருப்பான். லீவு நாட்களில் இருவரும் மாறி மாறி அவரவர் வீடுகளில் விளையாடுவார்கள். (இந்த ஆதியை என்றோ ஒருநாள் தூக்கிக்கொஞ்சப் போய்தான் இன்னும் கிள்ளுகளையும், கடிகளையும் வாங்கிக் கொண்டிருக்கிறேன் பப்புவிடம். )எல்கேஜி படிக்கிறான். பப்புவின் மலையாளப் புலமையை வளர்ப்பதில் ஆதிக்கும், ஆதியின் ஆயாவிற்கு பெரும் பங்குண்டு.

”ஆதி உன்னை ஆசையா கிஸ் பண்ணியிருப்பான். பேபிதானே...பப்பு. ” - ஆயா

“தமிழ் டூ தமிழ் தானேப்பா கிஸ் பண்ணனும். அவன் மலையாளம். அதான் அவங்கம்மாக்கிட்டே சொல்லி அடி வாங்க வைச்சேன்”

who_would_have_thunk_it?

(யார் கிஸ் பண்ணனும்னெல்லாம் வீட்டுலே பேசிக்கிறதுல்லே...எப்போவாவது பிரைவேட் பார்ட்ஸ் பத்தி மட்டும் குளிக்கவைக்கும்போது சொல்றதுண்டுன்னாலும், இதெல்லாம் எங்கேருந்து கத்துக்கறாங்க??)

Monday, September 27, 2010

கல்லா? மண்ணா?? (And, this is not a game!)

அநேகமாக, பள்ளியிறுதி என்று நினைக்கிறேன்.
வீணா ஆன்ட்டியின் வீட்டிற்குச் சென்றிருந்தோம். வீணா ஆன்ட்டிக்கு ராமநாதபுரம். "எங்க அம்மா வழியிலே எனக்கு வந்ததுங்க டீச்சர்" என்று ஒரு குட்டி பையிலிருந்து கற்களை காண்பித்தார். அவை வைரக்கற்களும் நவரத்தின கற்களும். அவர்கள் குடும்பத்தில் இது ஒரு வழக்கமாம். அம்மாவின் நகைகள் பெண்களுக்கு பாகமாக வருவதுடன், வைரங்களும் நவரத்தின கற்களும் தலைமுறையாக தலைமுறையாக பெண்களுக்கு பாகம் பிரிப்பதும். மேலும் சொன்னார், " எனக்குதான் பொண்ணு இல்லையே, மருமகளுக்குத்தான் கொடுக்கணும்" .

வீட்டுக்கு வந்த பிறகு பெரிம்மா குணா அத்தையிடம் சொல்லிக்கொண்டிருந்தார் - "எங்கிட்டே ஆச்சிக்கும், குட்டிக்கும் கொடுக்கிறதுக்கு இந்த கல்லுங்களும் புக்ஸும்தான் இருக்கு" என்று. எந்த ஊருக்கு நாங்கள் சுற்றுலா சென்றாலும் அங்கிருந்து நினைவுச்சின்னமாக ஒரு கல்லை எடுத்து வருவோம் நானும் குட்டியும். பெரிம்மா சொல்லிக்கொடுத்த பழக்கம்தான். செல்லுமிடங்களில் எல்லாம் அதற்காகவே வித்தியாசமான வடிவங்களில் கற்களை தேடி அலைந்திருக்கிறோம் ‍- ஏற்காடு பார்க்கிலிருந்து மவுண்ட் அபு ஏரி வரை. அந்தக்கல்லில் தேதியை, இடத்தைக் குறித்து எங்கள் சேகரிப்பு இருந்த கடைசி ஷெல்ஃபில் கொண்டு வந்து சேர்த்தால் ஒரு நிம்மதி...சந்தோஷம்...சிறுவயது சந்தோஷங்கள் அவை. இப்போது எந்தக்கல் யாருடையது என்று எங்களுக்குத் தெரியாது. எங்களைப் பொறுத்தவரை அவை வைரக்கற்களுக்கு ஈடானவையே. ஆனால், எதை நாம் அடுத்த தலைமுறைக்கு கடத்துகிறோம் என்பதுதான் இங்கே தெரிந்துக் கொள்ள வேண்டியதாக கருதுகிறேன்.

இதே போலத்தான், தனது பெண்ணிற்கும் கொடுப்பதற்கு விலையுயர்ந்த சொத்தொன்றை வைத்திருந்தார் அஜிதாவின் தந்தை. அவரது சித்தப்பா கம்யூனிஸ்ட்டாக இருந்தவர். அஜிதாவின் தந்தையும் அவர்மூலமாக கம்யூனிசக் கோட்பாடுகளும் சித்தாந்தங்களும் பரிச்சயம். இளமைக்காலத்தில் சித்தப்பாவுடன் சேர்ந்து போராட்டங்களிலும் கலந்துக் கொண்டிருக்கிறார். அவர் இறக்கும் தறுவாயில், 'எனக்கு அடுத்த தலைமுறையாக‌ இயக்கத்தில் செயல்பட யாரும் இல்லையே' என்று அஜிதாவின் தந்தையிடம் வருத்தப்பட்டிருக்கிறார். தானும் ஒரு கம்யூனிஸ்டாக இயங்குவதுடன் தனது மகளையும் இயக்கத்தில் சிறுவயதிலிருந்தே செயல்பட வைத்திருக்கிறார் அவர். "உன்னாலே வளர்க்க முடியலைன்னா எங்ககிட்டே கொடுத்துடு" என்று அஜிதாவின் பெரியப்பாக்களும் சித்தப்பாக்களும் கடிந்துக்கொண்டபோது "உங்களை நம்பி விடுவதைவிட எங்கள் தோழர்களையே நம்பி என் மகளை வளர்க்கிறேன்" என்றும், பதிமூன்று வயதான அஜிதாவிடம் "உனக்கு எது சரி, தவறு என்று தீர்மானிக்கும் வயது வரும் வரை நாங்கள்தான் உனக்கான முடிவுகளை எடுக்க வேண்டும், உனக்குத் தீர்மானிக்கும் வயது வந்தபின்னர் இதில் நீடிப்பதும் இல்லாததும் உனது விருப்பம்" என்றும் சொல்லி அஜிதாவை இயக்கத்தில் சேர்த்திருக்கிறார். இவை அனைத்துமே அன்றைய புரட்சித்திருமணத்தில் அஜிதாவின் தந்தையும், அஜிதாவும் மேடையில் பகிர்ந்துக் கொண்டவை.

Its all about the choices we make.

நாமெல்லாருமே, நமக்குக் கிடைக்காதது நமது பிள்ளைக்கு கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்தான். எல்லா போராட்டங்களும் அதனை அடிப்படையாக கொண்டவைதான். நமது சந்ததி இல்லாவிடினும் நமக்கு அடுத்த தலைமுறையாவது சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தானே விடுதலைப் போராட்டங்களிலிருந்து மருத்துவ கண்டுபிடிப்புகள் வரை விளைகின்றன. "நீயாவது நல்லா படிச்சு நல்லா இரு, எங்களை மாதிரி கஷ்டப்பட வேண்டாம்" என்று கேட்டு வளராதவர்கள் எத்தனை பேர்? "எந்த வம்பு தும்புலேயும் மாட்டிக்காதே, போனோமா வந்தோமான்னு இரு" என்று தானே அறிவுறுத்தப்பட்டிருக்கிறோம். சொந்த சுகத்தைத்தாண்டி நாம் எப்போதாவது யோசிக்க பழக்கப் பட்டிருக்கிறோமா?

இவர்கள் நடுவில் அஜிதாவின் தந்தை செய்திருப்பது புரட்சி இல்லையா?

"கடனை உடனை வாங்கி பொண்ணை நல்லபடியா கல்யாணம் செஞ்சுகொடுக்கணும்" என்ற அம்மா‍-அப்பாக்கள் மத்தியில், எந்த ப்ரொஃபஷனல் கல்லூரியாலும் தர முடியாத சமூக அறிவை/கல்வியை அஜிதா பெற வாய்ப்பளித்தது அக்குடும்பம் செய்த புரட்சிதானே?

ஏன், ஐடி கலாச்சாரம் ஐடி கலாச்சாரம் என்று திட்டுகிறார்களே, அப்படித் திட்டுபவர்கள் தங்களது பிள்ளைகளை எந்த நம்பிக்கையில் இன்ஜினியரிங் படிக்க வைக்கிறார்கள்? படித்து முடித்ததும் ஏதாவதொரு பன்னாட்டு கம்பெனியில் வேலை நிச்சயம் என்ற நம்பிக்கையில்தானே! மழை பெய்தால் ஏரியா மூழ்கி விடுகிறது அல்லது அடுத்த மாநிலங்களில் தமிழனுக்கு வீடு கிடைப்பதில்லை அல்லது ஊழலுக்கெதிராக சீர்கேடுகளுக்கெதிராக - தனது மகளோடு/மகனோடு போராட்டத்தில் இறங்க வேண்டாம், குறைந்த பட்சம் அவர்கள் மகள்கள்/ மகன்கள் அச்சமூக சீர்கேடுகளுக்காக போராட ஊக்கமளிப்பார்களா? இல்லை, அதைப்பற்றித்தான் பேசுவார்களா? பாஸ்போர்ட்டை ரெடியாக்கி, 'போன கையோட முடிந்தால் பிஆர் வாங்கிடு' என்று சொல்வார்களா?

தான் நம்பும் அரசியல் விழுமியங்களுக்காக, தன் காலத்திற்குள் கண்ணால் பார்ப்போமா என்ற முழு உத்திரவாதம் இல்லாவிட்டாலும் என்றாவது நடந்தே தீரும் என்று தான் நம்பும் அரசியல் புரட்சிக்காக, கண்ணெதிரே நடக்கும் ஏகாதிபத்திய சுரண்டல்களையும், முதலாளித்துவ அடக்குமுறையையும் எதிர்த்து, வர்க்க நலன்களையும் தாண்டி போராடும் அவரது வாழ்க்கையே புரட்சிகரமானதில்லையா?

ஒரு ட்யூஷன் சென்டரை மிகுந்த ஈடுபாட்டுடன் நடத்தி வந்தார் எனது தோழி ஒருவர். பணத்தைவிட தனக்குப் பிடித்ததை செய்யும் மகிழ்ச்சியும் பிறருக்கு உதவி செய்யும் ஆத்ம திருப்தியும் கிடைப்பதாகச் சொல்லுவார். திருமணமானதும் அவர் செய்தது ‍ அந்த ட்யூஷன் சென்டரை இழுத்து மூடியதுதான். குடும்பமா, தனது விருப்பமா என்ற கேள்வி வந்ததும் அவர் விட்டுக்கொடுத்தது தனது மகிழ்ச்சியையும் ஆத்ம திருப்தியையும்தான். இந்த ரேணுகாவை மட்டுமல்ல, திருமணத்திற்காக/குழந்தைக்காக என்று தனது கேரியரை பலியாக்கிய எண்ணற்ற தோழிகள் எனக்குண்டு. அயல்நாட்டு வாழ்க்கைக்காக பல சமரசங்களை செய்துக்கொண்டவர்களை நாம் கண்டுமிருப்போம்.

இவர்கள் நடுவில், தனது சிறுபருவத்திலிருந்தே மக்கள் நலனுக்காக ம.க.இ.க கலைக் குழுவோடு தமிழகம் முழுவதையும் சுற்றுபிரயாணம் செய்தும், கருணாநிதி ஆட்சிகாலத்தில் கருணாநிதியையும், ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதாவையும் மக்களிடையே அம்பலப்படுத்தி பிரச்சாரங்கள் செய்தும் ஒரு கம்பீரமான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார். எப்படியோ பள்ளி வகுப்பில் தேறி ஒரு கல்லூரிப் பட்டம் பெற்று வேலைக்கு அமர்ந்து திருமண்ம் செய்துக் கொண்டு செட்டில் ஆனாலே சாதனைதான் என்று நினைத்துக் கொண்டிருக்கும் சராசரிப் பெண்கள் மத்தியில் அஜிதா செய்தது புரட்சி இல்லையா?


இதில் எதையும் அவர் இழந்துவிட வில்லை, மாறாக பெற்றதே அதிகம். தனது விருப்பத்தில் அல்லது பாக்கெட் மணியில் சிறிது குறைந்தாலே அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் இளைஞர் மத்தியில், ‍இத்தகைய முடிவுக்கு தனது பெற்றோருக்கு நன்றி தெரிவித்ததுடன், அவர்களைக் குறித்து பெருமைப்படுவதாக அஜிதா சொன்னார்.

நமது சொந்த வாழ்க்கைக்கு எந்த பாதிப்பும் வராமல் சமூக அவலங்களை கண்டிக்கத்தானே நம்மில் பலரும் பழக்கப்பட்டு போயிருக்கிறோம். சமூக சீர்கேடுகளுக்காக பொங்கி போஸ்ட் போடுவதைத்தாண்டி நம்மில் எத்தனை பேர் என்ன செய்திருக்கிறோம்?

குறைந்தபட்சம், சாதியத்தை கடைப்பிடிக்கும் பார்ப்பனிய சடங்குகளையாவது அன்றாட வாழ்வில் நிராகரித்திருக்கிறோமா? கோக்/பெப்சி கம்பெனிகளின் சுரண்டலையாவது புரிந்துக்கொண்டிருக்கிறோமா? அவ்வளவு ஏன், போபாலைக் குறித்து நாம் கவலைப்பட்டதை விட எந்திரனைக் குறித்து நாம் பேசியதே அதிகம்.

முத்துகுமாரின் ஊர்வலத்திற்குச் சென்றதற்கே, அதை வருடா வருடம் நினைத்தே - ஈழப்போராட்டத்தில் கலந்துக்கொண்டதைப் போல திருப்தியடையும் நாம், சுயநலம் தாண்டி, எந்த கொள்கைகளுக்கு வாழ்வில் மதிப்பளிக்கிறோம்? நமது எதிர்ப்பை எவ்விதத்தில் காட்டியிருக்கிறோம்?

எதைவிட்டுக் கொடுப்பது என்பது தெரியாமல் அல்லது புரியாமல் சுயத்தை இழந்து வாழும் குடும்பக் குத்துவிளக்குகளுக்கு மத்தியில் அஜிதாவின் குடும்பமும் - பாண்டியனின் குடும்பமும் செய்திருப்பது புரட்சிதான்.

நம்முன் கிடக்கும் கற்களில் எதனை நாம் பொறுக்கியெடுக்கிறோம் என்பதுதான் முக்கியம். அவை வைரக்கற்களா அல்லது வெற்று மண்ணாங்கட்டிகளா?

Friday, September 17, 2010

naam ke vaaste or A is A or Jasmine by any other name...

சிறுவயதிலிருந்தே வீட்டில் மற்றும் தெரிந்தவர்கள் அனைவரும் ஆச்சி யென்றே அழைத்துப் பழக்கமானதாலேயோ என்னவோ, சந்தனமுல்லை என்ற பெயரைவிட ஆச்சியே மனதிற்கு நெருக்கமாக இருந்தது. சின்னமாமா மட்டும் முழுப்பெயரில் அழைப்பார். மற்றபடி, உறவினர் பசங்களிடையே எனக்குப் பல பட்டபெயர்கள் இருந்தன. பெரிம்மா வைத்த பெயர் சங்கமித்ரா. ஏனோ இந்தப்பெயர் சிறுவயது கதைப்புத்தகளைத் தாண்டியதில்லை. யாரும் அப்படி அழைத்ததுமில்லை.

உடன் படித்தவர்கள் பெரும்பாலானவர்களின், மிகவும் மாடர்னான பெயர்களைப் பார்த்து பொறாமையாக இருக்கும். அவை, பெரும்பாலும் இரண்டெழுத்துகளில் - அதிகபட்சம் மூன்றெழுத்துகளில் முடிந்துவிடும். ஷோபா, ப்ரியங்கா, ஷ்வேதா, சுனிதா, வினிதா, ரேஷ்மா, ரீனா, ப்ரீனா, ப்ரவீனா , ஷைலஜா,லேகா, ஸ்ரீஜா என்பன அதில் சில. என் பெயரை விட, நண்பர்களது இந்தப் பெயர்கள் படு ஸ்டைலிஷாகவும் ரொம்ப ஃபேஷனாக இருப்பதாகவும் தோன்றும். எனக்கும் ஏன் இப்படி ஷார்ட் அன்ட் ஸ்வீட்டாக பெயர் வைக்கவில்லையென்று மனதிற்குள் மறுகும் அளவுக்கு. இதில் ஏதாவது ஒரு பெயரை நாமே வைத்துக்கொள்ளலாமா என்று கூட ஆசைப்பட்டிருக்கிறேன். அவை பெரும்பாலும் சுனிதா அல்லது ஷ்வேதா‍வாக இருக்கும்.

ஏனெனில், எஸ்- இல் ஆரம்பிக்கும் பெயர் மிகவும் பிடித்திருந்தது. எஸ் என்ற எழுத்தே அழகாக இருப்பது போல சின்ன வயதில் தோன்றியிருக்கிறது. இப்போதும்தான். மிகவும் நாகரிகமாகவும் ஏதோ ஒரு தனித்தன்மை இருப்பது போலவும். மேலும், பெயரிலேயே ஒருவரது பர்சனாலிட்டி தெரியும் அல்லது பெயரே ஒருவரது பர்சனாலிட்டியை தீர்மானிக்கிறது என்பதும் நீண்ட நாட்களுக்கு நான் கொண்டிருந்த மாயை.

எஸ் எழுதி அதற்கு மூக்கு வைத்து, அந்த மூக்கில் ஒற்றை பூவை வரைவது என்று பெயரெழுதுவதில் சில கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்தியிருந்தேன். அதோடு, எஸ் இல் ஆரம்பிக்கும் பெயர்கள் பேரேடுகளில் அல்லது பரிட்சை பேப்பர் கொடுக்கும் போது மிகவும் பாதுகாப்பானவை. அனு, அவிஷ்னா போல ஆரம்பத்திலும் இல்லாமல், வினிதா அல்லது ஸீனியா போல கடைசி பெயராகவும் இருக்காது. அதுவும் பரிட்சை பேப்பர்கள் திருத்துவது பற்றியும் பெரிய வகுப்புகளில் பல கதைகள் சொல்லி பயமுறுத்துவார்கள். "ஃபர்ஸ்ட்லே இருக்கும் பேப்பர்லேல்லாம் கண்லே எண்ணெய் விட்டுகிட்டு திருத்துவாங்க, கடைசிலே வர வர முடிக்கற அவசரத்திலே இருப்பாங்க" என்பது போல. எது எப்படியோ, எஸ் இல் ஆரம்பிக்கும் டீசண்ட்டான காதுக்கு இனிமையான நவீன, நவநாகரீக பெயருக்கு மிகவும் ஏக்கமாக இருந்தது.

ஆனால், வீட்டில் எல்லோருக்கும் முற்றும் முழுக்க தமிழ்பெயர்களே. சொல்லப்போனால் எனக்கு எவ்வளவோ பரவாயில்லை . மாமா பெண்கள், 'கார்க்குழலி'க்கும் 'அமுதமொழி'க்கும் துக்கம் தொண்டையை அடைக்கும் ‍ பெயரைப் பற்றிப் பேச்சு வந்தாலே. அதைவிட பாவம் குட்டியின் நிலைமை. யாழினியன். ஒவ்வொரு முறை பரிட்சை எழுதப் போகும் போதும், பேப்பர் வாங்கிய பின்னும் வீட்டுக்கு வந்து ரகளைதான். மூலையில், கடைசியாக, ஏதாவது ஒரு கௌடவுன் போன்ற ரூமில்தான் இவனது பரிட்சை எண் வாய்க்கும். அதைவிட, பலரும் அவனை 'யாலினியன்' என்றே அழைப்பதும் அவனது சொந்த சோகக்கதை. குட்டியை மிஞ்சியது பெரிய மாமா பையனுடைய சோகம். பெயர் - மாறவர்மன். மூன்றாவது படிக்கும்போது, சண்டையிட்டு, அழுது அமர்க்களம் செய்து இளஞ்செழியனாக மாறினான். இதில் கொஞ்சம் தப்பித்தது விஜயபாரதியும், புகழேந்தியும்தான். (ஆனாலும், அவர்களை பஜ்ஜி என்றும் புழு என்றும் நாங்கள் பெயர் மாற்றம் செய்தது வேறு கதை.)

ஐந்தாவது தாண்டியபின் , நண்பர்கள் வீட்டுக்குச் செல்லும் போது அல்லது புதியவர்கள் பெயர் கேட்டு கொஞ்சம் ஆச்சர்யமும், வியப்பும் காண்பித்து சிலாகித்து பாராட்டவும் எனது பெயர் மீது லேசாக பிடிப்பு வந்தது. புதிதாக கேட்ப‌வர்கள் கண்டிப்பாக இரண்டாவது முறை கேட்பார்கள். அதுவும் ஒரு கர்வத்தை தந்தது. 'இந்த பெயரிலேயே தமிழ்நாட்டுலேயே நீ மட்டும்தான்' என்றும் யாரோ ஒருவர் சொல்லிவிட தலைகால் புரியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக எனது பெயரை நேசிக்கத் தொடங்கினேன். வேற்று மாநிலத்தவர்களிடம் பிரச்சினை. அர்த்தத்தைக் கேட்டுக் கொண்டாலும் பெயரோடு கொஞ்சம் விளையாடத்தான் செய்தார்கள். கல்லூரியில் 'சேண்டி' என்றும் 'சந்தனா' என்றும் ; ஒரு சிலருக்கு 'முல்லை' அல்லது 'முல்ஸ்'.

எப்படியோ,பெயருடனான‌ எனது பிணைப்பும் நான் வளர வளர என்னோடு வளர்ந்தது. பெயரும் நானும் பிரித்துப்பார்க்க முடியாததாக மாறினோம். இதன்முக்கிய அனுகூலம் என்னவெனில், எந்த டொமைனிலும் /மெயில் சர்வரிலும் இந்தப் பெயர் எளிதாக கிடைக்கும். நான் பதியும் வரை பதியப்பட்டிருக்காது. எல்லோரும் பிறந்தநாளை அல்லது பிறந்த வருடத்தை அல்லது பாஸ் அவுட் ஆன வருடத்தை உடன் சேர்த்து ஐடி உருவாக்கினால் எனக்கு சொந்த பெயரிலேயே சுலபமாக கிடைத்தது.

சரி, இந்த சுயபுராணத்துக்கு இப்போது அப்படியென்ன அவசியம் என்றால்.....

ஆம்பூரில், எங்கள் வீட்டிற்கு எதிர் பிளாக்கில் குடியிருந்த‌ அண்ணா ஒருவர், நீண்ட நாட்களுக்குப் பிறகு பெரிம்மாவை யதேச்சையாக‌ ரயிலில் சந்தித்தபோது, எனது பெயரால் ஈர்க்கப்பட்டு த‌னது மகளுக்கும் சந்தனமுல்லையென்றே பெயரிட்டிருப்பதாகக் கூறியிருக்கிறார். அதுதான்....

திருப்பத்தூரிலோ அல்லது சேலத்திலோ எனது பெய்ரைக் கொண்ட ஒரு சிறுமி வளர்ந்து வருகிறாள் - ‍ பெருமைக்குரியதொரு பெயரைக் கொண்ட பெருமிதத்தோடு....;‍-)

Thursday, September 16, 2010

சைபர் ஆர்ட்டும் ஒரு சில ஞானங்களும்

பப்புவிடம் கம்ப்யூட்டரை கொடுத்து நேரத்தைப் பெற்றுக்கொள்வேன். அப்படியே, பப்பு டீவி பார்ப்பதை தவிர்ப்பதற்காகவும். "நியூ போறதுக்கு முன்னாடி என்னை கூப்பிடு,சேவ் பண்றேன் பப்பு" என்று சொல்லியிருந்தாலும், ஆர்வத்தில் அவள் பெரும்பாலும் சொன்னதேயில்லை. அப்படியே சொன்னாலும் காண்பித்துவிட்டு புதிய ஃபைலை எடுத்துக்கொள்வாள். எப்போதாவது, நானாக பார்த்து சேமித்தவை இங்கே. பப்பு உதிர்த்த முத்துகள் சில‌

g3 ஆன்ட்டி இப்போ வைஃப் ஆயிடுவாங்களாப்பா? (g3 கல்யாணத்திற்குச் சென்று திரும்பும் வழியில்)


லவ் பண்றதுன்னா என்னா தெரியுமா ...ம்ம்ம்..கட்டி புடிச்சுக்கறது, கிஸ் பண்றது! (தேங்க்ஸ் டூ மூவி ட்ரெய்லர்ஸ், you ppl make my job easier.)

Aachi, I like youuuuuu...very bestly.

"நீ ஃபாஸ்ட்டா வொர்க் பண்ணனும்... "

"சரி, பப்பு."

"
உங்க ஆஃபிஸ்லே மத்தவங்கள்ளாம் எப்படி வொர்க் பண்றாங்க?"

" ....."

" ஃபாஸ்ட்டா வொர்க் பண்றாங்க இல்லே, நீயும் அதே மாதிரி ஃபாஸ்ட்டா வொர்க் பண்ணனும். ஓக்கே?"

என்னிக்காவதுதான்னாலும், இனிமே பப்புவை ஆஃபீஸ் கூப்பிட்டு போறதை தவிர்க்கணும்.... அப்ரைசல் டைம் வேற!அவ்வ்வ்வ்வ்வ!

Wednesday, September 15, 2010

அவுட்சோர்சிங் செய்யப்படும் கருக்களும் - வாடகை கருப்பைகளும்

கடந்த வாரத்தின் ஒரு மதிய வேளையை வீட்டில் செலவழிக்க நேர்ந்தது, அப்படியே ஆயா பார்க்கும் சீரியலையும். ஒரு பெண்ணை காணோமென்று அவளது அப்பாவும், கணவரும் பதைபதைத்ததோடு , அப்பெண்ணை நீதான் துரத்தி விட்டாயென்று இன்னொரு பெண்ணையும் தூற்றிக்கொண்டிருந்தனர். முன்கதை சுருக்கம் கேட்டதில், வாடகைத்தாய் அந்த வீட்டிற்கு வந்துவிட சொந்தத்தாய்(?) வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். (அல்லது சிச்சுவேஷன் மாறியிருக்கலாம்.) வாடகைத்தாய்க்கும் சொந்தத்தாய்(?)க்கும் நடக்கும் பிரச்சினைதான் கதை போலிருக்கிறது. சீரியலின் பெயர் அத்திப்பூக்கள்.


வாடகைத்தாய் என்பவர் ‍ கருவை வாடகைக்குச் சுமந்து பெற்றெடுத்தவர். சொந்தத்தாய் என்பவர் கருவிற்கான முட்டையை ஈந்தவர். எனில், சொந்தத்தாய் என்று எவரை சொல்லமுடியும்?


வாடகைத்தாய் என்பது புதிதான ஒன்றில்லை.


மருத்துவ துறையின் அற்புதமான கண்டுபிடிப்பு; குழந்தை பெற இயலாதவர்கள் சொந்த குழந்தையை பெற்றுக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பு எனபதெல்லாம் உண்மையே. ஆனால், இந்த முறை குழந்தையைப் பெற்றுத் தரும் வாடகைத்தாய்க்கு என்ன மாதிரியான விளைவுகளைப் பெற்றுத் தருகிறது?


சிறுவயதில் இது பற்றி நான் கேள்விப்பட்டிருந்த/வாசித்த‌ விவாதங்க‌ளிலெல்லாம் பெரும்பாலும், தாய்மையை விற்கலாமா; உணர்வுகளோடு விளையாடக்கூடாது மற்றும் சென்டிமென்டலான விஷயம் என்ற தொனியிலும் கருத்துகள் வெளிப்பட்டிருக்கும். சென்டிமென்டலாக உருக அதில் என்ன இருக்கிறது, குழந்தை இல்லாத ஒரு தம்பதிக்கு குழந்தை பெற்றுத் தரப்போகிறார்கள், அதற்கு தக்க பணமும் பெற்றுத் தரப் படுகிறது. எனில், இதை ஒரு தொழிலாகவே பார்க்க வேண்டும், பணத்துக்காக செய்யும்போது அதில் எதற்கு தேவையில்லாத சென்டிமென்ட்கள் என்பதே எனது எண்ணமாக இருந்தது. பனிரெண்டு-பதிமூன்று வயதில் தாய்மை உணர்வுகள் புரிந்திருக்க நியாயமில்லையே! (இப்போதும் எனது நிலைப்பாடு அதுதான் என்றாலும் சுரண்டலில்லாமல் ஒடுக்கப்படாமல் விருப்பமிருக்கும் பெண்கள் குழந்தைகளைப் பெற்றுத் தர வழிவகைகள் வேண்டும். வாடகைத் தாயென்றாலும் அவர்களது தாய்மை உணர்வுகளை தெளிவாக புரிந்துக்கொள்ள முடிவதே வாழ்க்கைக் கற்றுத் தந்த பாடம்.)


இது ஒருபுறமிருக்க, சில நாட்களுக்கு முன்பு கேள்விப்பட்ட செய்தியும் நினைவுக்கு வந்தது. ஒரு ஆஸ்திரேலிய தம்பதிகளுக்காக ‍இரட்டைக் குழந்தைகளை சுமக்கும் தமிழகப் பெண்ணை பற்றிய செய்திதான் அது.


சென்னையில் வசிக்கும் 28 வயதான கனகவள்ளி, தான் செய்துக் கொண்டிருந்த வீட்டுவேலையை துறந்து வாடகைத்தாயாக மாறியிருக்கிறார். இது அவருக்கு இரண்டாவது முறை.ஐந்து வருடங்களுக்கு முதல் முறையாக வாடகைக் கருவை சுமந்தபோது, அவருக்கு இதன்மூலம் கிடைத்த வருமானம் ரூ 50000. இப்போது ஒரு லட்சம். "எனது இரு மகன்களின் படிப்புச் செலவிற்கு இந்த வருமானம் உதவும்" என்றும் "இது உயர்ந்த நோக்கமென்றும் குழந்தையற்ற தம்பதிகளுக்கு செய்யக்கூடிய மிகப்பெரிய உதவி என்றும் கூறி டாக்டர்கள் என்னை சம்மதிக்க வைத்தன்ர் என்றும் கூறியிருந்தார்.


மும்பை, அனந்த், லக்னௌவைத் தொடர்ந்து சென்னையும் வாடகைத் தாய்களுக்கான சிறந்த இடமாக சமீபக் காலங்களில் மாறிக்கொண்டிருக்கிறது. இப்படி கருப்பையை வாடகைக்கு விட முன்வரும் பெண்கள் அனைவரும் அடித்தட்டு மக்களே. மொத்தமாக கிடைக்கும் பணத்திற்காகவும், அதைக்கொண்டு தங்கள் அத்தியாவசிய குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்ளவுமே இவ்வழியைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
சென்னையின் பெரும்பாலான ஃபெர்ட்டிலிட்டி மருத்துவமனைகளில் வாடகைத்தாயாக மாற விருப்பம் கொண்டவர்கள், குறைந்தபட்சம் 10 அல்லது 15 பேராவது காத்திருக்கிறார்கள். சென்னையின், பிரசாந்த் ஹாஸ்பிடலில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற 7 முதல் 8 லட்சங்கள் வரை வசூலிக்கிறது. இதில், 1.5 முதல் 1.7 லட்சங்கள் வரை மருத்துவமனைக்கும், மீதி வாடகைத்தாய் மற்றும் அவர்களது தங்குமிடம் மற்றும் மருத்துவ வசதிகளுக்கும் செலவாவதாக கூறுகிறது.


வடஇந்தியாவில் பெயர் பெற்ற மருத்துவமனைகளில் 15000 டாலர்கள் முதல் 20000 டாலர்கள் வரை வசூலிக்கிறார்கள். இதில், வாடகைத்தாய்களுக்கு 5000 டாலர்கள் அல்லது 6000 டாலர்கள் வரை கிடைக்கிறது. இது இந்திய மதிப்பில் கிட்டதட்ட இரண்டரை லட்சம் ரூபாய். மாதாமாதம் 50 டாலர்களும், ஒவ்வொரு மூன்று மாதங்களுக்குப் பின்னர் 500 டாலர்களும் மீதத்தொகை பிரசவத்திற்குப் பின்னும் வழங்கப்படுகிறது. இது பெரும்பாலான பெண்களுக்கு பத்தாண்டுகளில் சம்பாதிக்கக்கூடிய தொகையைவிட அதிகம்.


அனைவரும் மணமான பெண்கள் - ஒரு குழந்தையோ அல்லது இரு குழந்தைகளையோ பெற்றவர்கள். இந்தியாவின் மெடிக்கல் டூரிசத்தை உயர்த்துவதற்காக தங்கள் வீட்டைவிட்டு பத்துமாதங்களுக்கு கைதிகளாக வந்தவர்கள். அமெரிக்காவிலோ அல்லது ஐரோப்பாவிலோ வாழும் குழந்தை பேறற்ற தம்பதியினருக்கு வாழ்வளிக்கும் உன்னத நோக்கத்திற்காக தங்களது உடலை/ஆரோக்கியத்தை பணயம் வைக்க முன்வந்திருப்பவர்கள். அதற்கு ஈடாக பணத்தைப் பெற்றாலும் அந்த பணம் தாங்கள் கொடுக்கும் விலைக்கு ஈடானதா என்று அறியாதவர்கள்.


ஒரு அறையில் தங்க வைக்கப்பட்டு பேறுகாலம் வரை சமச்சீரான உணவும், சகல‌ மருத்துவ வசதிகளும் 'குழந்தைத் தொழிற்சாலை'யால் கொடுக்கப்பட்டு கவனித்துக் கொள்ளப்படுபவர்கள். பெரும்பாலும் படிப்பறிவு இல்லாதவர்கள். ஒரு மின்விசிறி மற்றும் அனைவருக்கும் பொதுவான தொலைக்காட்சி பெட்டி ‍- மீதி நேரம் ஓய்வு இவையே பிரசவம் வரை இவர்களது வாழ்க்கை. வெளியில் செல்லவோ அல்லது கட்டிடத்தை சுற்றி காலாற நடக்கவோ கூட சில மருத்துவமனைகளில் அனுமதி கிடையாது. இதில் பெரும்பாலான மருத்துவமனைகள் இயற்கை வழியிலான குழந்தைபேறைவிட சி‍‍-செகஷ்ன் மூலமே பிரசவம் பார்க்கின்றன.


ஒரு சில மருத்துவமனைகள், வாடகைத்தாய்களை தேர்ந்தெடுப்பதில் தெளிவான வழிமுறைகளை கொண்டிருக்கின்றன.


வயது வரம்பு 35க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
புகைப்பிடித்தல், மது போன்ற பழக்கங்கள் இருக்கக்கூடாது
பிறக்கும் குழந்தையோடு உரிமை கொண்டாடுதல் கூடாது
எந்த மருத்துவ சிக்கல்களோ அல்லது உடல் உபாதைகளோ இல்லாமல் இருக்க வேண்டும் முதலியன.


தேர்ந்தெடுப்பதில், இவை காட்டும் அக்கறையை பின்னாளில் பிரசவத்திற்கு பிறகு அப்பெண்களுக்கு ஏற்படும் உடல் நலிவு அல்லது உபாதைகளை சீராக்கி உடல்நலத்தை பேணுவதில் காட்டுமா என்பது கேள்விக்குறிதான். ஏனெனில், மருத்துவமனைகளின் அக்கறை எல்லாம் தாங்கள் வெளிநாட்டினரிடம் போட்ட ஒப்பந்தத்தேதியில் குழந்தையை டெலிவரி செய்ய வேண்டுமே என்பது தவிர வாடகைத்தாயின் உடலைப் பற்றியத‌ல்லவே!வாடகைத்தாயாக ஒரு பெண்ணை கருவுற வைப்பதில் இரண்டு வழிகள் இருக்கின்றன.


ஒன்றில், வாடகைத்தாயின் கருமுட்டையைக் கொண்டு கரு உண்டாக்குவது; அடுத்ததில், ஏற்கெனவே டெஸ்ட் ட்யூப் மூலமாக (குழந்தை முழுவதுமாக டெஸ்ட் ட்யூப் மூலமாகவே உருவாகி பிறக்கும் என்று நீண்ட நாட்களாக நினைத்திருந்தேன்) கருவை உண்டாக்கி அதனை சுமந்து பிரசவிக்க மட்டும் வாடகைத்தாயாக இருப்பது.


முதலாவதில், வாடகைத்தாய்க்கு மரபு ரீதியாக குழந்தையோடு தொடர்பு உண்டு. மேலும் , உரிமை கொண்டாடுவதில் சிக்கல்களும் வரலாம். வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுத் தரும் இந்திய மருத்துவ நிர்வாகங்கள் இம்முறையை பெருமளவு ஆதரிப்பதில்லை. இரண்டாவது முறை, கருவை சுமக்கும் ஒரு பாத்திரமாக பெண்ணின் உடல் உபயோகப்படுத்திக் கொள்ளப்படுவது. எதுவும் ஒன்றிற்கொன்று குறைந்தது இல்லைதான். எதுவாக இருந்தாலும் குழந்தைக்கு உரிமை கொண்டாட இயலாதுதான்.


இரண்டு வகைகளிலும் பெண்களின் உடல் ஒரு சாதனமாகவே உபயோகப்படுத்திக் கொள்ளப்படுகிறது. வறுமை காரணமாக சிறுநீரகங்களையும், குழந்தைகளையும் பணத்துக்காக விற்கும் நாட்டில் இது பெரிய விஷயம் இல்லைதான்.


ஆனால், இது மூன்றாம் உலக நாடுகளின் மீதான மற்றுமொரு சுரண்டலாக இல்லையா?


அமெரிக்காவிலோ அல்லது மேலை நாடுகளிலோ வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ள குறைந்தது 70000 டாலர்கள் செலவாகும். அதிகபட்சமாக 100,000 டாலர்கள் வரையிலும். இது தவிர காப்பீடுகளும் உண்டு. இந்த நாடுகளில் வாடகைத்தாய்கள் பெறும் பணத்தை விட, இந்தியாவின் வாடகைத்தாய்கள் மூன்றில் ஒரு பங்கே பெறுகின்றனர். அவ்வளவு ஏன், வட இந்தியாவுக்கும் தென்னிந்தியாவுக்குமே வாடகைத்தாயின் வருமானத்தில் இவ்வளவு வித்தியாசங்கள் இருக்கிறதே?!இந்தியா முழுக்க 300‍க்கும் மேற்பட்ட குழந்தைப்பேறு மருத்துவமனைகள் இருந்தாலும், மொத்தமாக பிறந்திருக்கும் குழந்தைகளை, வாடகைத்தாய்கள் பற்றிய விவரங்களை கணக்கெடுப்பது இன்றும் இயலாத காரியமாக இருக்கிறது. இந்தியாவில் 2002 இல் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டபின், இதற்காக இந்தியா வரும் அயல்நாட்டார் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. இன்று, கோடிகளில் பணம் புரளும் துறையாக மாறி வருகிறது. வாடகைத்தாயாக கருவை சுமக்க நாடி வரும் அடித்தட்டு மக்களின் எண்ணிக்கையும் பெருகி வருகிறது.மேலும், இந்தியாவிலிருந்து ஒரு குழந்தையை தத்து எடுத்து அழைத்துச் செல்வதை விட வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவது மிகவும் எளிது. ஒரு வயதே நிரம்பிய குழந்தையை தத்து எடுத்துச் செல்வதற்கு ஒரு இந்திய பெண் பட்ட பாட்டை நன்கறிவேன்.ஆனால், இதற்கென சரியான விதிமுறைகளோ அல்லது கவனிக்க சரியான துறையோ இதுவரை இல்லை. சொல்லப்போனால், இதுவும் ஒரு தொழிலாக அங்கீகரிக்கப்படல் வேண்டும். அல்லாவிடில், இதுவும் குழந்தை தொழிலாளர்கள் போன்ற சுரண்டலே.பெரும்பாலும் தனியார் மருத்துவமனைகளின் விதிக்குட்பட்டே அனைத்து செயல்முறைகளும் இருக்கிறது. ‍ பெல்ஜியம், கனடா, இஸ்ரேல் போன்ற நாடுகள் இதனை வருமானத்துக்குரிய தொழிலாக அங்கீகரித்தும் அதற்கென சட்டதிட்டங்களையும் வகுத்திருக்கின்றன.இத்தாலி போன்ற நாடுகளில் இச்செயல்முறை முற்றிலுமாக‌ தடை செய்யப்பட்டிருக்கிறது.

மனித உயிரின் மதிப்பு இந்தியாவில்தான் மிக மலிவானதாயிற்றே! இச்செயல்முறையைப் பற்றியும் வாடகைத்தாயின் உரிமைகள் பற்றியும் குழப்பமான நிலைதான் நிலவுகிறது.சென்ற வருடத்தில் நிகழ்ந்தது இது. ஜப்பானிய தம்பதியினர் குழந்தைக்காக இந்தியா வந்தனர். மருத்துவமனை மூலம் வாடகைத்தாயை ஏற்பாடு செய்தனர். இதன் நடுவில் அவர்களுக்குள் விவாகரத்து ஏற்படும் நிலை வந்தது. எந்த தம்பதியினருக்காக குழந்தையைச் சுமந்தாரோ அந்த ஜப்பானிய தம்பதியினர் விவாகரத்து செய்யும் முடிவில் இருந்ததால், தான் சுமந்த குழந்தைக்கு உரிமை கொண்டாட விரும்பினார் அந்த‌ வாடகைத்தாய். ஆனால், அத்தம்பதியில் கணவனுக்கு அக்குழந்தையை வளர்க்க விருப்பம் இருந்தது.இந்தியாவில் தனியொருவர் குழந்தையை தத்து எடுத்துச் செல்வது என்பது தடை செய்யப்பட்ட ஒன்று. ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்நிகழ்ச்சி முடிவில் அக்குழந்தை தந்தையுடன் ஜப்பானுக்கு சென்றதும் முடிவுக்கு வந்தது. ஆனாலும், நமது சட்டதிட்டங்களோ வழிவகைகளோ இன்னமும் தெளிவான நிலைக்கு வந்தபாடில்லை.இவை தவிர, இன்னமும் சில நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன.ஒருவரது கருப்பையில் இரண்டிற்கு மேற்பட்ட கரு உட்செலுத்தப்படுகிறது. பின்னர், இரட்டைக் குழந்தைகள் தவிர தெரிந்தெடுக்கப்பட்ட மீதக் கருக்கள் மட்டும் கலைக்கப்படுகின்றன. இதனைப் பற்றி எந்த தகவலும் குறிப்பிட்ட வாடகைத்தாய்க்கு மருத்துவமனைகள் சொல்வதில்லை.ஒரு சில மருத்துவமனைகளில், பிரசவத்திற்குப் பின்னர் வாடகைத்தாய்கள் ஒருமாதம் அங்கேயே தங்க வைக்கப்படுகின்றனர். மற்றபடி, அவர்களது உடல்நிலையைப் பற்றி மனநிலையைப் பற்றி மருத்துவமனைகளுக்கு எந்தக் கவலையுமில்லை. பிரசவத்திற்கு பின்னர் ஏற்படும் எண்ணற்ற ஹார்மோன் மாற்றங்களும், உணர்ச்சி ரீதியாக உள்ளுக்குள் ஏற்படும் போராட்டங்களுக்கும் பொறுப்பேற்பவர் யார்?

பாதியில் கருக்கலைந்தால் சொன்ன பணம் முழுவதுமாக கிடைப்பதில்லை. ஒருவேளை வாடகைத்தாய்களே கருவைக் கலைக்க விரும்பினால் மருத்துவமனைக்கு பணத்தை கட்ட வேண்டிய நிலைமையும் உள்ளது.

பிரசவத்தின் போது தாயின் உயிருக்கு/உடல்நலத்திற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. காப்பீடு திட்டங்களெதுவும் இருப்பதாக தெரியவில்லை.

வாடகைத்தாய் மூலமாக குழந்தைப் பெற்ற தம்பதியினர் பிரிந்தால் குழந்தையின் நிலை பற்றி தெளிவாக இல்லை.

தனியார் மருத்துவமனைகள் மற்றும் அவற்றின் நடவடிக்கைகளை கண்காணிக்க/ஒழுங்குபடுத்த ஏதேனும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறதா பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை.

தான் சுமந்த குழந்தையின் மீது வாடகைத்தாய்க்கு இருக்கும் உரிமைகள் என்ன?ஒருவேளை அக்குழந்தையை பார்க்க விரும்பினாலோ அல்லது அதன் நிலையை அறிய விரும்பினாலோ அது மறுக்கப்படுதல் சரியா?

உடல் உறுப்புகளை தானம் கொடுப்பதற்கு பெரும் வரவேற்பு இருப்பதை போல இதைத் தொழிலாக செய்ய விரும்பும் பெண்களை சமூகம் அங்கீகரிக்குமா?

எனில், மேலை நாடுகளுக்கு குழந்தை பெற்றுத் தரும் இயந்திரங்களா மூன்றாம் உலக நாட்டின் பெண்கள்?

கால் சென்டர்கள், கஸ்டமர் சர்வீஸ் சென்டர்கள் போன்று மேலைநாடுகளின் கர்ப்பமும் இந்தியாவிற்கு அவுட்சோர்ஸ் செய்யப்படுகின்றது. படிப்பறிவற்ற வறுமையான கீழ்த்தட்டு பெண்களின் உடல்களே மேலும் மேலும் சுரண்டப்படுகின்றன.நுகர்வு கலாச்சாரத்தில் பெண்ணின் கருப்பைக் கூட நுகர்வுப் பொருளாகவே மாறியிருக்கிறது. அந்த வகையில், இது உலகமயமாக்கலின் கோரமான மற்றொரு முகமே! இதுவும் ஒரு மறுகாலனியாதிக்கமே!

பி.கு : கடந்த வார இறுதியில் ஆம்பூருக்குச் சென்றபோது, வீட்டிலிருந்த கேரவன் பத்திரிக்கையிலும் இது குறித்து வாசிக்க நேர்ந்தது. அக்கட்டுரையை வாசித்த தாக்கமும், ஆயாவோடு பார்த்த அபத்த நாடகத்தின் ஒரு பகுதியும், இதற்குமுன் கேள்விப்பட்டிருந்த செய்திகளும் சேர்ந்ததே இவ்விடுகை.

Wednesday, September 08, 2010

v4.0- v4.10

எனதன்பு பப்பு,

இதை எழுதத் தொடங்குமுன்பு பலவித எண்ணவோட்டங்களுக்கும், உணர்ச்சிகளுக்கும் ஆளாகியிருக்கிறேன். வெகுவிரைவில் நீ ஒரு ஐந்து வயது சிறுமி! ஒவ்வொரு வருடமும் சொல்வது போலத்தான் ‍- இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் சொல்லிக்கொண்டிருக்கப் போகிறேனென்று தெரியவில்லை...இப்போதுதான் நீயும் நானும் ஹாஸ்பிடலில் இருந்து வீட்டுக்கு வந்தது போலிருக்கிறது...ஆயா தனது சுருக்கங்கள் விழுந்த கையை நீட்டி வாஞ்சையுடன் உன்னை வாங்கி முத்தமிட்டது கண்முன் நிற்கிறது... வீட்டுக்கு வரும் போது நீ அணிந்திருந்த‌ அந்த ஊதா வண்ண உடையையும், நான் அணிந்திருந்த இளஞ்சிவப்பு நைட்டியையும் இன்னமும் பாதுகாத்து வைத்திருக்கிறேன்.. .எதற்கென்றே தெரியாமல். நமது உடைகளின் வாசமும் இன்னமும் என் நினைவில்!
ஹாஸ்பிடல் அறை எண்ணின் கடைசி இரண்டு இலக்கங்கள் 96 என்று மட்டும் ஞாபகம் இருக்கிறது. (296 ஆ அல்லது 396 ஆ என்று மறந்து போய் விட்டது.) நீ வளர வளர இப்படி ஒவ்வொன்றாக நினைவிலிருந்து உதிரத் தொடங்கும் போல! தொட்டிலில் உன்னை பார்க்கும் போதெல்லாம்-‍ உடனேயே நீ வளர்ந்து பள்ளிக்கோ-கல்லூரிக்கோ சென்று விட்டாலென்ன என்றே தோன்றியது நினைவுக்கு வருகிறது. ‍ எப்படி பொறுப்பாக, பொறுமையாக‌ நான் இருக்கப் போகிறேன்? உனக்குத் தெரியுமா பப்பு, ஒரு குழந்தையை அதன் அறியாமையோடு ,உள்ளார்ந்து நேசித்து, வளர்க்குமளவிற்கு பொறுமையும் பக்குவமும் தனக்கிருக்கிறதா என்று கவலைப்பட்ட முட்டாளை? அந்த முட்டாளை நீ உனது லெவலுக்கு உயர்த்தினாய்...!

இந்த ஒரு வருடத்தில் உனக்குச் சொல்லத்தான் எவ்வளவு இருக்கிறது, பப்பு, ‍ உன்னைப் பற்றியும், என்னைப் பற்றியும், மேலாக நம்மைப் பற்றியும்! நீ கடந்து வந்த ஒவ்வொரு மாற்றங்களையும் உணர்ந்திருந்தாலும்-சென்ற நான்கு வருடங்களில் நிகழ்ந்த மாற்றங்களைவிட இந்த ஒரு வருடத்தில் நீ கடந்தவையும், அடைந்தவையும் அதிகம்! எத்தனை மாற்றங்கள்; எத்தனை வளர்ச்சிகள்! உனக்கேயுரிய தனித்துவமான பாதையில், தனித்துவமான ஸ்டைலில் அவற்றையெல்லாம் எவ்வளவு நேர்த்தியாக ஏற்றுக் கொண்டு வளர்ந்திருக்கிறாய் பப்பு!


போராட்டங்கள் உனக்கு புதிதல்லதான், சுவாசிப்பதற்கான போராட்டத்துடன்தானே பிறந்தாய்? உனது போராட்டத்தின் உறுதியை, உனது ஆளுமையின் ஒவ்வொரு வெளிப்பாட்டிலும் காண்கிறேன், பப்பு!ஆனால், நாங்கள்தான் சமயங்களில் குழம்பி போயிருக்கிறோம்.உன்னை குழப்பியும் இருக்கிறோம். எங்களது தேவைக்கேற்றபடி நீ சில விஷயங்களை சட்டென்று பெரிய பிள்ளையின் தோரணையுடன் புரிந்துக்கொள்ள வேண்டுமென்றும்; எங்களுக்கு வேண்டியபோது குழந்தையாகவே இருக்கவேண்டுமென்றும் படுத்தியிருக்கிறோம். எல்லாவிதத்தில் எங்களுக்கு வேண்டியபடி நீ நல்லவளாகவே இருக்க வேண்டுமென்று ‍; அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டுமென்றும், ஆனால், நீ உனக்கு வேண்டிய அளவில் உறுதியுடன்தான் இருக்கிறாய். தெளிவாகவும் இருக்கிறாய்.நாங்கள் சொல்வதை எங்களுக்கே திருப்பிச் சொல்லி, நாங்கள் செய்வதையே திருப்பி செய்து, வடிவேலுவின் ஜோக்கை பார்க்காமலே எங்களை வெறுப்பேற்ற ஆரம்பித்தாய். நான்கு வயதுக்கான மைல்கல் போல என்றெண்ணிகொண்டேன். நேற்றிரவு, 'சாப்பிடு இல்லேன்னா தூங்கு' என்ற போது 'சாப்பிடு' ன்னு சொன்னா தூங்குவேன்; தூங்குன்னு சொன்ன சாப்பிடுவேன் என்று புது அர்த்தம் சொன்னாய். சாப்பிடுவாய் என்று நினைத்து 'தூங்கு' என்று சொன்னதும் 'நீ சொல்றதைதான் கேப்பேன், ஆச்சி' என்கிறாய். ஐந்து வயதுக்கான இப்படியொரு மைல்கல்லை நான் எதிர்பார்க்கவில்லை.

கடந்த வருடத்தில்தான் எண்களை அறிந்துக்கொண்டாய். நீ விரல்விட்டு எண்ண எண்ண, நாங்கள் "சாரி" சொல்லியிருக்கிறோம். விரல்விட்டு எண்ணியபடி, நீயும் "ஐ லவ் யூ" சொல்லியிருக்கிறாய். மணி பார்க்க கண்டுக்கொண்டாய் மூன்றெழுத்து வார்த்தைகளை வாசிக்கவும். ஒவ்வொரு ஃபொனடிக்சாக சேர்த்து படிப்பதை அறிந்திருந்தாலும் சென்ற வாரத்தில் திடீரென்று நீயாகவே ஒரு வார்த்தையை வாசித்தபோது நானடைந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்திவிட ஏதாவது வார்த்தை இருக்கிறதா தெரியவில்லை ... And that word is "STIK". (ஒரு ஆக்டிவிட்டி செய்துக் கொண்டிருந்தோம். கோந்தின் மீது எழுதப்பட்டிருந்தன அவ்வெழுத்துகள்.)

மாதத்தின் பெயர்களையும் நீ அறிந்தது இந்த வருடத்தில்தான். அதற்காக சந்தோஷப்பட்ட என்னை நானே நொந்துக் கொள்கிறேன். ' எப்போது பிறந்தநாள் வரும்' என்று கடந்த மூன்று மாதங்களாகவே-தினந்தோறும் வாரங்களை அல்லவா எண்ணிக் கொண்டிருக்கிறாய். "வாடா மாப்பிள்ளை", "புலி புலிக்குது" "டாடி மம்மி வீட்டில் இல்ல" என்றும் இன்னும் பல பாடல்களை நீ பாடும்போது பிறவிப்பயனை அடைகிறேன். "டாடி; மம்மி பேபியை தனியா வீட்டுலே விட்டுட்டு எங்கியாவது போவாங்களா" என்ற சந்தேகங்களையும் தீர்க்க வேண்டிய நிலைக்கும் ஆளாகிறேன்.


இந்த வருடத்தில் உனது சாகச‌ குணமும் வளர்ந்திருக்கிறது, தயக்கங்களும், பயங்களும் நீங்கி இருக்கிறது. உட்கார்ந்து செய்யும் ஆக்டிவிட்டிகளைவிட ஸ்கூட்டியில் பறப்பதும், காலாற நடப்பதும், மேலிருந்து குதிப்பதும், ஓடுவதுமே உனது பிடித்தமாக இருக்கிறது. மாலை வேளைகளைவிட‌ விட காலை நேர கடற்கரையே உனக்கு விருப்பம்.பும்பாவும், டானி- டாடியும், டோராவும் பார்த்துக்கொண்டிருந்த எனது சின்னஞ்சிறு பெண், சூப்பர் சுஜியும், சிந்துபாத் அற்புத தீவு இன்னும் பல முழுநீள கார்ட்டூன்களையும் பார்த்து புரிந்துக் கொள்கிறாள். 'பேய், பூதம்லாம் இருக்காப்பா' என்று சந்தேகம் கொள்கிறாள். அறையில் எதையாவது தேடி எடுத்து வரச் சொன்னால், "ஜீபூம்பா, என் கையிலே வந்துடு" என்று கண்களை மூடிக்கொண்டு கையை நீட்டிக்கொண்டு நிற்கிறாள்!

பப்பு, நீ என்னைப்போல பத்துமடங்கு பொறாமைபிடித்தவளாக இருக்கிறாய். என்றோ ஒருநாள் ஆதியை நான் தூக்கியதற்காக இன்றும் கிள்ளுகளையும் அடிகளையும் பெற்றுக்கொண்டிருக்கிறேன்.

உன் முன் விவாதங்களை சண்டைகளை தவிர்த்து வந்திருக்கிறோம். என்றாலும் அம்மாவும்‍-அப்பாவும் ஃப்ரெண்ட்ஸாக இருக்கிறார்களா என்று முகங்களை நோக்கியே அறிந்துக் கொள்கிறாய். இப்போதெல்லாம் பாசாங்குகள் வேலைக்காவதில்லை. ஆனாலும், உனக்காக ஃப்ரெண்ட்ஸாக இருக்கிறோம்.

எனது மெத்தனத்தாலேயும், எதிர்நோக்காத தன்மையாலுமே உன்னை பலநேரங்களில் அவஸ்தைக்கு உள்ளாக்கியிருக்கிறேன், பப்பு. அது முற்றிலும் எனது கவனமின்மையே. மன்னிப்பு கேட்பது ஒருநாளும் சரியான தீர்வல்ல என்று அறிந்திருந்தாலும் என்னை நீ மன்னிப்பாயாக! ஒருவேளை இந்த வருடத்தில் திரும்ப அத்தவறுகளை செய்யாமல் இருக்க அவை எனக்கு வாய்ப்பளிக்கக் கூடும்.சும்மா சொல்வது, பொய், நிஜம் ‍ இவைதான் உனது சமீபத்திய கண்டுபிடிப்புகள். உன்னை ஆள்பவை. " சும்மா சொல்லலாம், ஆனா பொய் சொல்லக்கூடாது" உன்னுடைய அகராதியில் சும்மா சொல்வது என்பது ஏமாற்றுவது. பொய் சொல்வதென்பது மகா பெரிய பாவம். எனக்குத்தான் இவற்றுக்கு வித்தியாசம் தெரியவில்லை, இன்னமும்! உன்னிடம் தெரிந்தே ஏமாறுவது ஒன்றுதான் எங்களனைவருக்கும் பிடித்த விளையாட்டாக இருக்கிறது.

இதுவரை, நீ ஒவ்வொன்றை புதிதாகக் கற்றுக்கொண்டபோதெல்லாம், உன்னுடன் அந்த குதூகலத்தை பகிர்ந்துக் கொண்டிருக்கிறேன். அந்த நொடியை நானும் அனுபவித்திருக்கிறேன், நீ புதிய மைல்கல்லை எட்டும் போதெல்லாம் உற்சாகமடைந்திருக்கிறேன். அந்த நொடியை நிறுத்தி வைத்துக்கொள்ள ஆசைப்பட்டிருக்கிறேன். இப்போதோ பப்பு, நீ வளர்ந்த குழந்தையாகிவிட்டாய். நீயே உனக்கு வேண்டியவற்றை செய்துக் கொள்கிறாய். பெரியவர்களை போல பேசுகிறாய், பெரிய விஷயங்களை பேசுகிறாய். நான் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த குழந்தை அல்ல நீ இப்போது; கைப்பிடிக்காமல் கூடவே நடக்க அல்லது ‍ தள்ளி நின்று பார்த்துக்கொண்டிருந்தால் போதுமென்கிற அடல்ட் !


You’re all grown up to me,now.


நான் செய்யாத ஒன்றுண்டென்றால், உன்னை தனியாக உறங்க வைக்க பழக்கப்படுத்தாத‌து. ஏனெனில், எனக்கே அதில் விருப்பமில்லை. I hug you tighter as you go to sleep each night. And, I know, to love is to let go. எல்லாவற்றையும் போல தனியாக உறங்கவும் நீயாகவே கற்றுக்கொள்வாய். அதுவரை.....

விரைவில் பப்பு, நாம் ஒரு சமநிலைக்கு வந்துவிடுவோம்; ஒருசில போர்க்களங்களுக்குப் பிறகோ அல்லது ஒருசில‌ கண்ணீர்த்துளிகளுக்குப் பிறகோ! நாம் கடைசியாக பார்த்தாமே, Alice in Wonderland-'கேட்டர்பில்லர் என்ன சொல்லுது, cocoon -குள்ளே போய்க்கிட்டு' என்று கேட்டாயே... அப்போது சொன்னதுதான் பப்பு, எதுவும் முடிவு கிடையாது, ஒன்றிலிருந்து இன்னொன்றாக மாற்றமடைவது... Transformation...கடந்த வருடங்களில் எழுதியதை வாசித்த போதுதான் தோன்றியது ...

0..1..2..முத்தான மூன்றை நெருங்குகையில்!!
v3.0 - 3.10

ஒருவேளை, நீயும் நானும் கூட்டுப்புழுவிலிருந்து சிறகடிக்கும் வண்ணத்துப் பூச்சிகளாக மாறிக்கொண்டிருக்கிறோம் என்பது தெரிந்துதான் கேட்டாய் போல!

மாற்றங்களை கையாள்வதற்கும், உனது சின்னஞ்சிறு சிறகுகள் வளர்வதற்கும், விரித்து பறப்பதற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க உறுதி கொள்கிறேன், பப்பு....


உன்னோட
ஆச்சிக்குட்டிபாப்பா (இப்படித்தான் என்னை கொஞ்ச ஆரம்பித்திருக்கிறாய் நீ ‍‍)

மேஜிக் ஸ்டிக்

பப்புவுக்கு, அவளது வடலூர் ஆயா வாங்கி வந்த டிராயிங் நோட்டு புத்தகம் இது. மேஜிக் ஸ்டிக் என்று எழுதியிருந்தது. நோட்டு புத்தகத்தோடு வாட்டர் கலரும் இருந்தது. காகிதத்தில் கண்ணுக்குத் தெரியாத அவுட்லைன் வரையப்பட்டிருக்கும். தீட்டும்போது வண்ணங்கள் விரவி வடிவம் புலப்படும். இதுதான் மேஜிக் போல!

பப்புவும், வடலூர் ஆயாவோடு வரைந்தது கீழே.ஆமை

ஸ்கெட்ச் கொண்டு வரைந்திருக்கிறாள்.

என்னன்னு தெரியலை.....பப்புவுக்கும்!

இதுவும் தான்..ஆனால் அந்த வண்ணத்தேர்வுகள் பிடித்திருந்தது. கலைக்கண் கொண்டு என்னதுன்னு சொல்லுங்க பார்ப்போம்!


Hungry caterpillar

யானைக்குட்டி.....இப்போ எல்லாமே குட்டிதான்..ஆச்சிக்குட்டி...ஆயாக்குட்டி..ன்னு கொஞ்சல்ஸ்...இதுவும் ஒரு phase போல! எங்கே போய் முடியுமோ!!

Tuesday, September 07, 2010

இல்லத்தரசிகளா, ஆயுள் தண்டனைக் கைதிகளா?

கீதாவும் பிரபுவும் எங்கள் வீட்டுக்கு அடுத்த பிளாக்கில்தான் குடியிருந்தார்கள். அண்ணன்‍‍‍ தங்கை இருவருக்கும் வயது வித்தியாசம் மூன்று அல்லது நான்கு வருடங்கள் இருக்கலாம். எப்போதாவது அவர்களது அம்மாவுடன் வீட்டிற்கு வருவார்கள். பெரிம்மாவிடம் வொர்க்புக் வாங்கிச் செல்வார். அந்த ஆண்ட்டியின் பெயரை மறந்துவிட்டேன். இங்கு அவரது பெயர் முக்கியம் இல்லை. முக்கியமானது என்னவெனில் அந்த ஆண்ட்டியோ அல்லது அந்த பிள்ளைகள் இருவரும் சிரித்தோ அல்லது கலகலப்பாக பேசியோ நாங்கள் யாருமே பார்த்தது இல்லை. ஏன், எங்களோடு தெருவில் விளையாட ஒருமுறைக் கூட அவர்கள் வந்தது இல்லை. முகத்தில் எப்போதும் ஒருவித சோகம் இருக்கும். கீதா கிட்டத்தட்ட சோமாலியாவிலிருந்து வந்ததைப் போல்தான் இருப்பாள். பிரபுவும்தான். ஆன்ட்டி ஒரு மெட்ரிக்குலேஷன் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக இருந்தார்.

"அவங்க வீட்டிலே சமையல் ஒருவேளைதான், ராத்திரிலே வடையோ இல்ல பஜ்ஜியோ வாங்கி சாப்பிட்டுட்டு தண்ணீய குடிச்சுட்டு படுத்துடுவாங்க" ‍ என்று ஒருமுறை சாந்தா அத்தை ஆயாவிடம் சொல்லியிருக்கிறார். சனி,ஞாயிறுகளின் மாலைவேளைகளில் அங்கிள்கள் எல்லாம் சேர்ந்து பேசிக்கொண்டோ அல்லது இறகுபந்து விளையாடிக்கொண்டோ இருப்பார்கள் அல்லது குடும்பத்துடனோ பைக்கில் கடைத்தெருவிற்குச் செல்வார்கள். ஒருநாளும் கீதாவின் தந்தையையோ அல்லது குடும்பத்துடன் வெளியே சென்றோ நாங்கள் யாரும் பார்த்தது இல்லை. சொல்லப்போனால், அவர்களது தந்தை இவர்தான் என்பதே நீண்ட நாட்களுக்குப் பிறகே எங்களுக்குத்(தெருவில் விளையாடும் கோஷ்டி) தெரியும். அவர் ரத்தம் பரிசோதிக்கும்,ஈசிஜி எடுக்கும் லேபாரட்டரி வைத்திருந்தார். கூடவே சின்னவீடும்.

ஆன்ட்டியையோ, குழந்தைகளையோ கவனித்துக் கொள்வதில்லை. ஆன்ட்டியின் சம்பாத்தியத்தில்தான் குடும்பம் ஓடிக்கொண்டிருந்தது. என்றாவது வீட்டுக்கு அவர் வருவதோடு சரி. வந்தாலும் இருவருக்குள்ளும் சண்டை, வாக்குவாதங்கள்தான். இதனாலேயே ஆன்ட்டியும் எதையோ பறிக்கொடுத்தது போல இருக்கிறார் என்றும் குழந்தைகளும் மனதளவில் பாதிக்கப் பட்டிருக்கிறார்களென்றும் பெரியவர்கள் பேசிக்கொண்டார்கள். ஆன்ட்டி தனியாகத்தான் இருவரையும் வளர்த்து படிக்க வைத்தார். ஒரு ஆக்ஸிடென்ட்டில் பிரபு இறந்துவிட, கீதா தற்போது ஒரு ஃபேஷன் டிசைனராக இருக்கிறார்.

குடும்ப வன்முறை சட்டங்களெதுவும் அப்போது இல்லை. அடி,உதை விழுந்தால் அல்லது மண்டை உடைந்தால், எட்டி உதைத்து இடுப்பு உடைந்தால் மட்டுமே அது பிரச்சினை. தற்கொலை செய்து கொண்டால்தான் உண்மையாகவே பிரச்சினை போல என்று நம்பிக்கையே வரும் பலருக்கு. இல்லையென்றால் எல்லா குடும்பத்திலும் இருப்பதுதானே என்ற எண்ணம்தான். மென்டல் டார்ச்சரும் ஒரு வன்முறையே என்பதை இன்று கூட யாரும் உணர்ந்துக்கொண்டது போல தெரியவில்லை. ஏன், கீதா ஆண்ட்டியே கூட உணர்ந்திருப்பாரா என்பது சந்தேகமே!

கீதா ஆன்ட்டி மட்டுமல்ல, கணவருக்கு இன்னொரு தொடர்பு இருக்கிறது என்று தெரிந்தும் குடும்ப கௌரவத்திற்காக வாழ்ந்துக் கொண்டிருக்கும் மாதவி ஆண்ட்டியும், தனது பெண்களின் கல்யாணத்திற்கு அப்பா என்று காட்ட வேண்டுமே என்ற காரணத்திற்காக தன்மீதே அவதூறுகளை பரப்பும் கணவனை பொறுத்துக் கொண்டு வாழும் லீலா ஆண்ட்டியும் கண் முன் வருகின்றனர்.

"ஆம்பளைன்னா அப்பிடி இப்பிடித்தான் இருப்பாங்க, நாமதான் விட்டுக்கொடுக்கனும்", " கொஞ்சம் பொறுத்து போ" என்றும் "அன்பால திருத்துறதுதான் பொண்டாட்டியோட கடமை, எல்லார் வீட்டுலேயும் இருக்கிறதுதானே, கொஞ்சம் அனுசரிச்சு போ" என்றுமே ஆன்ட்டிக்கு சொல்லப்பட்டிருக்கலாம். திருமணப் பேச்சு ஆரம்பிக்கும்போதே "அனுசரிச்சு போகணும்" என்றுதானே பெண்களுக்கு அறிவுரையும் ஆரம்பிக்கிறது. அம்மாவிலிருந்து ஆரம்பித்து பக்கத்து வீட்டு ஆன்ட்டி முதல், தூரத்து சொந்தம் வரை திருமணமாகும் பெண்களுக்கு வழங்கும் அறிவுரை "கொஞ்சம் விட்டு கொடுத்து" "அட்ஜஸ்ட் பண்ணிதான் போகணும்" என்றுதானே ஆரம்பிக்கிறது. அதற்காக விட்டு கொடுப்பது தவறென்று சொல்லவில்லை. ஆனால், எதை விட்டுக்கொடுப்பது என்பதுதான் கேள்வி.

இதில், நமக்கென்று எடுத்துக்காட்டாக ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு சித்தியோ அல்லது அத்தையோ வாழ்ந்து செத்திருப்பார்கள். "எங்க விருந்தாச்சலம் அத்தை....அவ்ளோ நல்லா சமைப்பாங்க. அந்த காலத்துலே ஏது இந்த மாதிரி மெஷிங்கல்லாம், பம்பரமா வேலை செய்வாங்க. அந்த அத்தை, அவங்க வீட்டுக்காரர்கிட்டே இருவது வருஷமா பேசலை. ஏதோ மனஸ்தாபம். கோவம். ஒரு சண்டை, அடி உதை கிடையாது. ஆனா ஒரே வீட்டுலேதான் இருந்தாங்க. எந்த கஷ்டம்னாலும் பிரிஞ்சுடக் கூடாது."

பிடிக்காதவருடன் ஒரே வீட்டில் இருபது வருடங்களாக எந்த பேச்சு வார்த்தையுமில்லாமல் வாழ்ந்து தீர்த்த ஒரு மனுஷி.....என்ன இருந்திருக்கும் அவரது மனதில்?அவரது மனதுக்குள்தான் எத்தனை போராட்டங்கள் இருந்திருக்க வேண்டும்? தனியே வாழ நெஞ்சுறுதி வேண்டுமென்றால் உள்ளேயே இருந்து போராடவும் நெஞ்சுறுதி வேண்டும்..ஒப்புக் கொள்கிறேன். அவ்வளவு வைராக்கியம் கொண்டிருந்த அவர் எதற்கு சகித்துக் கொண்டிருக்க வேண்டும்? அந்த அத்தை படித்திருந்தால்? வேலைக்குப் போயிருந்தால்? குறைந்த பட்சம், "உனக்கு என்ன குறையிருந்தாலும் இங்கே வந்துடு " என்று சொல்லக் கூடிய பெற்றோர்/ உறவுகள் இருந்திருந்தால்?அந்த அத்தை, எத்தனையை மென்று விழுங்கிக் கொண்டு நாட்களைக் கடத்தியிருக்க வேண்டும்? எத்தனை சமரசங்கள் செய்து கொண்டிருக்க வேண்டும்? 20 வருடங்கள்....புழல் சிறையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் வாழ்க்கைக்கும் இதற்கும் என்ன வேறுபாடு?

‍ ஓ காட்! விருத்தாசலம் அத்தையை நினைத்தால் பரிதாபமும் ஆயாசமுமே மிஞ்சியது! என்றைக்கோ செத்துப் போன அவருக்காக ஓ வென்று கதறியழ வேண்டும் போல இருந்தது. "எதுவாக இருந்தாலும் எந்த காரணத்தைக் கொண்டும் பிரிந்துவிடாதே...குறைந்தபட்சம் அந்த அத்தையை நினைத்துக்கொண்டாவது வாழ்ந்து தீர்" என்று முடிவில் தொக்கி நிற்கும் அறிவுரைதான் அழுகையை கொண்டு வந்ததோ?!

அடி உதை மட்டும்தான் வன்முறை என்று ஏன் மனதில் பதிந்து போயிருக்கிறது?

"அட்ஜஸ்ட் பண்ணிக்கோ" என்று சொல்லி சொல்லி மருமகளாகவே வளர்க்கப்படுபவர் கடைசி வரை எந்த சூழ்நிலைக்கும் பொருந்திப் போகிறவராகவே மாறிவிடுகிறார். அவமானப்படுத்தப்பட்டாலோ அல்லது உதாசீனப்படுத்தப்பட்டாலோ, சுயமரியாதையை அழித்து அடிமையாக நடத்தப்பட்டாலோ யாரும் அவற்றை ஒரு பொருட்டாக எண்ணுவதில்லை. மாறாக, வாழ்வின் ஒரு பகுதியாக, தான் அனுபவித்து தீர்க்க வேண்டிய ஒன்றாக பார்க்கிறார். மேலும், அடித்தால்- உதைத்தால் ஒரு சில ஆண்களுக்கு குற்றவுணர்ச்சி ஏற்படலாம், ஆனால், மனதில், தான் உண்டாக்கிய ரணத்திற்கு குற்றவுணர்ச்சிக்கு ஆளாகும் ஆண்கள் மிக சொற்பமே!

சொல்லப்போனால், உடல் ரீதியான் வன்முறையை விட மனரீதியான வன்முறைகளுக்கே பாதிப்புகள் அதிகம். எனது தோழி ஒருவருக்கு சைனஸ் வந்ததற்கு குடும்பத்தில் ஏற்பட்ட மனரீதியான அழுத்தங்களே காரணமென்று அறிய வந்தபோது ஆச்சரியமாக இருந்தது. சைனஸ் மட்டுமல்ல ஒற்றை தலைவலியிலிருந்து இதயநோய் வரை ‍ எல்லாவற்றையும் மனதில் அழுத்தி புழுங்கிச் செத்தாவது குடும்ப அமைப்பை/திருமணத்தை காப்பாற்ற வேண்டுமா என்ன? குழந்தைக்காக என்பது அடுத்த செக் பாயிண்ட். சொல்லப்போனால், இப்படி அடக்குமுறையான குடும்பத்தில் வாழும் குழந்தைகளைவிட சிங்கிள் பேரண்ட்ஸ்களிடம் வளரும் குழந்தை தன்னம்பிக்கையோடு, தைரியமான மனோபாவத்துடன் வளரும்.

ஆணுக்கும் குடும்ப வன்முறைகள் இருக்கலாம், பெண்ணுக்கு இருப்பதை போலவே. நமது சமூகத்தில் அது மிக மிக குறைவே. ஆண் அனுபவிப்பது போல கிட்டதட்ட பல மடங்கு பெண் அனுபவிக்கிறாள். உடல்ரீதியாக‌ அனுபவித்தால்தான் கொடுமை என்றில்லை; மனரீதியாக, பாலியல் ரீதியாக ஏன் வார்த்தைகள் வழியாக அனுபவித்தாலும் அது கொடுமைதான். எதற்கும் எதுவும் குறைந்தது இல்லை. சொல்லப்போனால், உடல்ரீதியான காயங்கள் ஆறினாலும் மனரீதியான பாதிப்புகள் மறைய ஆயுட்காலம் போதாது.

இதைப் பற்றிய விழிப்புணர்வைதான் நமது மக்களிடம் எழுப்ப வேண்டுமே தவிர பழைய நம்பிக்கைகளையும் ,கருத்துகளையும் கட்டிக்காப்பாற்ற வேண்டியது அல்ல. துரதிஷ்டவசமாக, பக்கபலமாக இருக்க வேண்டிய பெற்றோரே கூட இதை உணராமல் பெண்ணையே குற்றவாளியாக்கும் போக்கு தொடரும் போது மற்ற உறவுகளை பற்றி என்ன சொல்ல?

இந்தியாவில் தான் பெண்களுக்கெதிரான‌ குடும்ப வன்முறைகள் அதிகம். இதில், பாதிக்கும் மேற்பட்டோர், கணவன் தனது மனைவியை அடிப்பது சகஜமே என்ற மனோபாவம் உடையவர்கள். வெளியுலகில் பெண் அவமானப் படுத்தப்படுவதைவிட வன்முறைக்குள்ளாவதைவிட வீட்டிற்குள்/ வீட்டினராலேயே அதிகமாக பாதிக்கப்படுகிறாள்.

எப்படியும், கஷ்டப்பட்டாவது ஒன்றாக வாழ வேண்டும் அல்லது "தெரியாத பிசாசுக்கு தெரிஞ்ச பேயே மேல்" என்று எண்ணிக்கொண்டாவது வாழ்க்கையை ஓட்ட வேண்டுமே தவிர அதிலிருந்து விடிவை தேடுவது நல்லதல்ல என்றுதான் பெண்களின் மனதில் பதிய வைக்கப்பட்டிருக்கிறது. அன்பாக இருவரும் ஒருவரையொருவர் மதித்து மரியாதையுடன் வாழ முடியும் என்பதே சிந்திக்கக் கூட கூடாததாக அல்லவா இருக்கிறது! எப்படியிருந்தாலும், கணவனோடு வாழ்வதே வாழ்க்கை இல்லையேல் அது ’வெட்டியான வாழ்க்கை’ என்ற மனோபாவம் ஏன்?

முந்தைய தலைமுறைகள் அவ்வாறு இருப்பதில் அர்த்தமிருக்கலாம்; ஆனால் மென்டல் ஹாராஸ்மென்ட்டை தாங்கிக் கொண்டு வாழ்ந்து தீர்க்க வேண்டிய கட்டாயம் இந்த தலைமுறைக்கும் இருக்கிறதா என்ன? பெண் என்றால் பெற்றோருக்கும் பின் கணவனுக்கும் இறுதிக் காலத்தில் மகனுக்கும் கட்டுப்ப்ட்டு வாழவேண்டிய அடிமை ஜீவன் என்று மனு தர்மத்தில் சொல்லப்பட்டிருக்கும் 'நீதி' நூற்றாண்டுகள் பல கடந்தும் இன்னும் செல்வாக்கோடு வாழ்கிறது. எந்தப் பெண்ணுக்கும் சுயேச்சையான வாழ்வும், மரியாதையும், அடிமைத்தனத்தின் மூலம் கிடைக்குமெனில் அதன் பொருளென்ன? இந்தியாவில் இப்படித்தான் பெண் வாழ்க்கை இருக்குமெனில் நம் சமூக, அரசியல் தரம் மட்டும் எப்படி இருக்கும்? சமூகத்தின் ஆரோக்கியம்தான் எப்ப்டி இருக்கும்?

மாதவராஜ் அவர்களின் இந்த இடுகையையும், பின்னூட்டங்களையும் வாசிக்க நேர்ந்தது. ஏன், அந்த பெண் தானாக ஒரு வண்டியை ஓட்டிச் செல்லக்கூடாதா என்ன? சமரசம் செய்துக் கொண்டாவது பற்றிக் கொள்ள ஒரு தோளை தேட வேண்டுமா என்று எழுந்த எண்ணங்களை பின் தொடர்ந்து சென்றபோது எழுந்ததே இவ்விடுகை.

(வாழ்க்கையை பகிர்ந்துக் கொள்ள ஒரு சக ஜீவன் வேண்டும், இன்பமும் துன்பமும் சேர்ந்ததுதான் வாழ்க்கை என்பதை எல்லாம் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், அது இருவழிப் பாதையாக இல்லாதபோது சுயமரியாதை இழந்து சகித்துக் கொள்ள வேண்டும் என்பதைதான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை)

Saturday, September 04, 2010

ராணுவத்தை அனுப்பும் முன்....

"எங்களால் பள்ளிக்கோ, டியூஷன்களுக்கோச் செல்ல முடியவில்லை. தேர்வுகள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன, ஆனால் பாடதிட்டங்கள் முடிக்கப்படாமலேயே இருக்கின்றன. மாணவர்களைப் பற்றி யாருமே நினைத்துப் பார்ப்பது இல்லை. எங்களுக்கு விதிக்கப்பட்ட இந்த சூழ்நிலையிலிருந்து வெளியே செல்லும் எங்களால் வெளிச்சூழ்நிலைகளுக்குள் பொருந்த முடியவில்லை. மற்ற மாணவர்களோடு போட்டியிட முடிவதில்லை.

கல்வி அமைச்சர் எங்களை வீட்டிலேயே கல்வி கற்குமாறு சொல்கிறார். எந்த வழிகாட்டுதலுமின்றி எங்களால் எவ்வாறு வீட்டிலேயே கல்வி கற்க இயலும்? ஒரு அறிவியல் மாணவனால் அறிவியல் சோதனைகளையும், செயல்பாட்டு வழிவகைகளையும் எவ்வாறு வீட்டிலேயே கற்றுக்கொள்ள முடியும்? இணையத்தின் வழியாகவும் கற்குமாறு அவர் சொல்லிவருகிறார். இணையத்தை உபயோகிப்பது/பயன்படுத்துவது எங்களைப் போன்ற இடத்திலிருப்பவர்களுக்கு இன்னும் சாத்தியமாகவில்லையே! இது போன்ற முட்டாள்தனமான யோசனைகளை கூறுவதை கைவிடுங்கள்!"

‍ -12 ஆம் வகுப்பு மாணவன, காஷ்மீரிலிருந்து

ஒட்டுமொத்த இந்தியாவே ஆசிரியர் தினம் கொண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில், காஷ்மீர் மாணவர்களின் ஒட்டுமொத்த மனக்குமுறல் இது. 'குழந்தை தொழிலாளிகளை ஒழிப்போம்' என்றும் 'அனைவருக்கும் கல்வி என்பது அடிப்படை உரிமை' என்றும் முழக்கமிட்டு வரும் நமது அரசு காஷ்மீர் மாணவர்களை கடந்த இருமாதங்களுக்கு மேலாக இப்படித்தான் வீட்டிலேயே முடக்கி வைத்துள்ளது.

கூடுதல் ராணுவத்தையும், அதிகாரிகளையும் காஷ்மீருக்கு அனுப்பும் நமது அரசுக்கு அங்கிருக்கும் மாணவர்களின் கல்வி பற்றியோ அவர்களது எதிர்காலத்தை பற்றியோ அல்லது மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவது குறித்தோ என்ன அக்கறை இருக்கிறது?

காஷ்மீர் என்றதுமே எங்கும் பனி படர்ந்த பள்ளத்தாக்குகள், ஆப்பிள் மரங்கள், வண்ண உடைகளில் அழகு குழந்தைகள், படகுகள் பயணிக்கும் ஏரிகள் , சிலுசிலு காற்று என்று கிட்டதட்ட பூலோக சொர்க்கம் என்றுதானே தோன்றுகிறது. அது நமது நாயக நாயகிகள் டூயட் ஆடிப் பாடும் கனவு காஷ்மீர். இந்நிலையைத் தாண்டி அது வந்து நெடுங்காலமாகிறது - கிட்டதட்ட இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்து!

காஷ்மீரிகளாக இருப்பதைத் தவிர வேறு எந்த தவறும் செய்திராத அம்மாணவர்களிம் நிலை இன்று கேள்விக்குறியாகியுள்ளது. எதிர்காலம் என்ற ஒன்றே அவர்களுக்கு இல்லாதது போலிருக்கிறது. "தீவிரவாதிகள்" என்று முத்திரைக் குத்தப்பட்டு வலம் வர வேண்டியிருக்கிறது. பி.காம் முதலாண்டு படிக்கும் அமான், வாழ்க்கையே சுக்கு நூறாகி இருப்பதாக மறுகுகிறார். "தேர்வுகள் எப்போது நடத்தப்படுமென்று எந்த உத்திரவாதமும் இல்லை. மற்ற கல்லூரிகளில் சேர்வதற்கோ வழிவகைகள் இல்லை. இப்படி இருந்தால் மூன்று ஆண்டுகளில் முடிக்க வேண்டிய பாடத்தை ஆறு ஆண்டுகளில் முடிக்க வேண்டியிருக்கும். " - வாழ்க்கையில், நாங்கள் எங்கள் கேரியரில் வெற்றி பெற வேண்டாமா என்ற கேள்விக்கு யாரிடம் பதிலிருக்கிறது?

நிச்சயமற்ற வாழ்க்கை நிலையும், எந்நேரமும் ரோந்து வரும் ராணுவமும், அதன் அடக்குமுறையும் இளைஞர்களின் வாழ்க்கையை முற்றிலுமாக புரட்டிப் போட்டிருக்கின்றன. குடிப்பழக்கத்திற்கு ஆளாக்கியும், மன உளைச்சலுக்கும் குடும்பங்களின் நிம்மதியையும் குலைத்தும் போட்டிருக்கின்றன. மூன்றில் ஒரு காஷ்மீர் மாணவர் நரம்பு சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். கடும் மன உளைச்சல் மற்றும் அடக்குமுறைக்கு ஆளாகும் மாணவர்கள் பரீட்சை நேர டென்சன்களை தவிக்க தூக்க மாத்திரையின் உதவியை நாடுகின்றனர். தமது குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றிய கவலையே இச்சமூகத்தினரிடையே மேலோங்கி இருக்கிறது. "மூடப்பட்ட பள்ளிகளாலும், அரசாங்கத்தாலும் எங்களது குழந்தைகள் இன்று கல்வி கற்பதிலிருந்து தடுக்கப்பட்டிருக்கிறார்கள்; பள்ளிகளிலிருந்து விடுபட்டு போயிருக்கிறார்கள்" என்கிறார் பெற்றோர் ஒருவர்.

"துப்பாக்கி எடுத்தவர்கள் அனைவரையும் "தீவிரவாதிகள்" என்று சொல்கிறார்கள். பாகிஸ்தான் உதவுவதாகவும் கூறுகிறார்கள். இளைய சமுதாயத்திற்கு நல்ல கல்வி, நல்ல அமைதியான சுதந்திரமான சூழல், ஆரோக்கியம், வேலை, இவற்றை கொடுத்துவிட்டால் அவர்கள் ஏன் துப்பாக்கி ஏந்தப் போகிறார்கள்" என்ற சபியாவின் கேள்வியில் என்ன நியாயம் இல்லை?

"எங்களை நிம்மதியாக வாழவிடுங்கள். எங்களுக்குத் தேவை அமைதி. எங்களுக்குத் தேவை சுதந்திரம். எங்கள் இடத்தை விட்டு வெளிவேறுங்கள்" என்று கர்ஜிக்கும் மஜித்‍ என்ற கல்லூரி மாணவர் கேட்பது இந்திய அரசின் மந்தமான காதுகளை என்று எட்டப் போகிறது?

இந்த நிலை காஷ்மீரில் மட்டுமில்லை, தனி மாநிலமும் சுய அரசியல் நிர்ணயம் கோரும் எல்லா மக்களையும் இந்தியஅரசு இப்படித்தானே அடக்கி வைத்துள்ளது? தனி ஈழம் கேட்ட காரணத்துக்காக சொந்த நாட்டிலேயே அகதிகளாக முள்வேலியில் முடங்கிக் கிடக்கிறார்கள் தமிழ் மக்கள். காட்டில் வாழும் உரிமை கேட்கும் பழங்குடியினர், தனிநாடு கேட்கும் நாகாலாந்தின் நாகா அமைப்பினர்; அஸ்ஸாமியர்; ஜம்மு‍ காஷ்மீர் மக்கள், அவர்தம் இளைய சமுதாயம் அனைவரையும் இரும்புக் கரம் கொண்டு இந்திய அரசு ஒடுக்கி வைத்துவிட்டு, கல்வியை குழந்தைகளின் அடிப்படை உரிமையாக மாற்றியிருக்கிறோம் என்று மார்தட்டிக் கொளவதில் என்ன பிரயோசனம் அல்லது ஆசிரியர் தினத்தை கொண்டாடுவதில்தான் என்ன பெருமை?

கட்டுக்கோப்புக்கும், ஒழுக்கத்துக்கு பெயர் போன இந்திய‌ ராணுவம் அங்கு செய்து வரும் கொடுமைகளை,இன்னல்களை வார்த்தைகளில் அடக்கிவிட முடியாது. யார் மீது சந்தேகம் வந்தாலும் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யலாம் என்ற சட்டம் 90களில் வந்தபின் நிலைமை மோசமானதுதான் மிச்சம். அப்படி கைது செய்தவர்களை இரண்டு ஆண்டுகள் வரை நீதிமன்றத்தின் தலையிடல் இல்லாமலே வைத்திருக்கலாம் எனபது இன்னும் கொடுமை. இப்படி பெற்றோரை, உறவினர்களை இழந்து பள்ளிப் படிப்பை கைவிட்டு குடும்பத்தின் பாரம் சுமந்தவர்களின் வாழ்க்கைக்கும், படிப்புக்கும் பொறுப்பேற்பவர்கள் யார்?

வசதி இருப்பவர்கள் தங்களது பிள்ளைகளை புனாவுக்கு, டெல்லிக்கும் அனுப்புகிறார்கள். சிலர் அண்டை நாடுகளுக்கு அனுப்புகிறார்கள். பாதுகாப்பு கருதி அவர்களது பெயர்கள் கூட வெளியே தெரிவதில்லை. அவதிக்குள்ளாவது ஏழை எளிய மக்கள்தான். பணமும் அதிகாரமும் படைத்தவர்களின் பிள்ளைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஆரம்ப மற்றும் உயர்நிலை பள்ளிக்குச் செல்ல வேண்டிய பல்லாயிரக் கணக்கான மாணவர்கள் இன்று வீட்டில் முடக்கப்பட்டிருக்கிறார்கள். தினந்தோறும் வன்முறையையும் அடக்குமுறையும் கண்ணெதிரே பார்க்கிறார்கள். கண்ணீர் புகை குண்டுகளிலும், கல்லெறிதலிலும் பங்கேற்கிறார்கள். எந்த நிச்சயமும், எதிர்கால திட்டமுமின்றி தாங்கள் செய்யாத தவறுக்காக முடங்கிப் போயிருக்கிறார்கள். கல்லூரிகளிலும் ,பல்கலை கழகங்களிலும் பதிந்து விட்டு காத்திருக்கிறார்கள். பள்ளி செல்லும் நாளுக்காக காத்திருக்கிறார்கள், இடுகையின் ஆரம்பத்தின் கண்ட மாணவனைப் போல.

"கடந்த இருபது ஆண்டுகளில் "தீவிரவாதிகள்" எனப்படுபவர்களால் காணாமல் போனவர்கள் வெறும் 15 பேர்தான். ஆனால் ஆயுதம் தாங்கிய ராணுவத்தால் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்துக்கும் மேல்." என்கிறார் ஒரு காஷ்மீர்வாசி. சொல்லப்போனால், ராணுவத்தை அவர்கள் பாதுகாப்பாக கருதுவதில்லை. ஆக்கிரமிக்கப்பட்டதாகத்தான் கருதுகிறார்கள். இந்திய அரசியல் அமைப்பு மற்றும் ராணுவத்தின் அதிகார துஷ்பிரயோகம், மற்றும் மனித உரிமை மீறலாகத்தான் அவர்கள் நினைக்கிறார்கள். உலகின் பெரிய ஜனநாயக அரசு என்று சொல்லிக்கொள்ளும் இந்தியா இன்னும் எவ்வளவு நாளைக்கு சொந்த மக்களையே அடக்கி வைக்கும்?

சமீபத்தில் பாகிஸ்தானில் வெள்ளம் வந்து மக்களின் வாழ்க்கையை அடித்துச் சென்றது நினைவிருக்கும்.அதில் 11000க்கும் மேலான பள்ளிக்கட்டிடங்கள் பாதிப்படைந்திருப்பதாக யூனிசெஃப் தளம் கூறுகிறது. பள்ளிக்கட்டிடங்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும், வீடு,நிலங்களை இழந்த பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியிருக்கும் கூடாரங்களில் தற்காலிக பள்ளி நடைபெறுகிறது. அவர்களது வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பும் வரையில் பள்ளி செல்லும் குழந்தைகள் கல்வியை இழந்துவிடாமல் இருக்க வழிவகைகள் மேற்கொள்ளப்படுகிறது.

இந்திய அரசுக்கு ராணுவத்தை அனுப்புவதுதான் எளிது போல; குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை விட!

(செய்திகள் இணையத்திலிருந்து/ட்விட்டரிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது)

Thursday, September 02, 2010

அரைவட்டங்களை கண்டுபிடி - II

"அரைவட்டங்களை கண்டுபிடி" ஆக்டிவிட்டிக்காக வெட்டிய அரைவட்டங்களை ஏன் வீணாக்கணும்....ஹிஹி..வெட்டிய அரைவட்டங்களை ஒட்டி இன்னும் பல படங்களை வரைஞ்சதுதான் இந்த ஆக்டிவிட்டி. புத்தகத்திலே இருந்த படங்களை பார்த்து பப்பு வரைஞ்சதுதான்.


அரைவட்ட கூடையில் பழங்கள் - பக்கத்துலே பழம் விக்கிறவர்.இது அண்ணா - தொப்பிதான் அரைவட்டம்.கண்டுபிடிக்க முடியுதா? பாலத்துக்கு கீழே ஓடற தண்ணி. பல்சக்கர டிசைனிலே இருக்கே...அதுதான் அரைவட்டம்.


ம்ம்..யெஸ்..மூன்-தான்! பக்கத்துலே நட்சத்திரங்கள், மேகம்..
மலைகள் சூழ நடுவுலே வர்ற சூரியன். சிவப்பு வந்து சூரியனோட ஜொலிஜொலிப்பு!


சொல்லாமயே புரிஞ்சிருக்குமே...:-)) மழையும் பெய்யுது, வெயிலும் அடிக்குது.

இதுக்கப்புறம், சென்னையிலே மழை பெய்யறது நின்னுடுச்சு. சோ, நாங்க பார்க், ப்ரெண்ட் வீட்லே போய் விளையாடறதுன்னு அவுட் டோர் ஆக்டிவிட்டிலே பிசியாகிட்டோம்.

Wednesday, September 01, 2010

சென்டி சீன்ஸ்/தமிழ்ப்படம்

முதுகில் அமர்த்தி யானையாக வீட்டை வலம் வந்த பெரிய மாமா...
வேப்பமரத்தில் ஊஞ்சல் கட்டித் தந்த பெரிய மாமா...
அமர்ந்து ஆட பெட்ஷீட்டை நாலாக மடித்து வைத்த பெரிய மாமா...
விரல்களில் மருதாணி தொப்பி வைத்துவிட்ட மாமா...
ஆட்டுக்காலை அம்மியில் தட்டி உள்ளிருப்பதை எடுத்து ஊட்டிவிட்ட மாமா...
மீன்முள்ளை முழுங்கியதும் வெறும்சாதத்தை உருட்டித் தந்து
முதுகை நீவி விட்ட மாமா..
அன்னங்கள் நெய்த திருபுவனம் பட்டை தேடித்தேடி எடுத்துத் தந்த மாமா....
சொல்லக் சொல்லக் கேட்காமல் ஒவ்வொரு லீவுக்கும்
ஹாஸ்டலுக்குப் பெட்டி தூக்கிய‌ பெரிய மாமா...
எனக்குப் பிடித்த மாப்பிள்ளையை
நிறைவாக கட்டிவைத்துவிட்டு
தான் பார்த்த மாப்பிள்ளையை நான் கட்டாத குறையுடன்
விலகி ஒதுங்கிக் கொண்ட மாமா....
விவாகரத்தானது
தெரிந்தால்
மாமாவின் முறிந்த உறவு பழையதாகிவிடுமா?!