Monday, August 30, 2010

வலைப்பதிவில் நான் ஒரு சூப்பர் ஸ்டார்...சுப்ரீம் ஸ்டார்...டான்டடைங்

"சத்தியமாக நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை."

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?


இந்த போஸ்டோட டைட்டிலை பார்த்தீங்களா... கீழே Posted by ன்னு இருக்கா.. அதை அடுத்து இருக்கே..ஒரு தெய்வீக பெயர்...'அதை இன்னொரு முறை படிங்க'...ஹிஹி


2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

என்னோட‌ பர்த் சர்டிபிகேட் ‍‍‍லேருந்து இந்த வருஷ‌ ஃபார்ம் 16 வரைக்கும் அந்த பெயரேதான்!3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

தமிழ் வலைப்பதிவுக்கு உலகிற்கு கஷ்டகாலம்தான். வேறென்ன சொல்ல?!! ஹிஹி


4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

அட, இது கூட தெரியாதா...போடற இடுகையெல்லாமே அதுக்குத்தானே!


5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

ஐயோ பாவம்....என் வலைப்பதிவிலே இருக்கிறது முழுசும் சொந்த விஷயம்தான்னு தெரியாதா உங்களுக்கு!

ஏன்னா‍ நான் ரொம்ப நல்லவ-‍னு சீன் போட வேற இடம் உலகத்துலே இருக்கா என்ன?

நான் ரொம்ப நல்லவ-னு இதுவரைக்கும் யாருமே நம்புனது இல்லே. ஆனா, இங்கேதான் முதன்முதல்லே நம்புனாங்க. அதுக்கு நான் ரொம்ப கடமைப்பட்டுள்ளேன்.(கண் கலங்குகிறது) நான் எழுதினதை இதுவரைக்கும் நானே படிச்சது இல்லே. ஆனா, அதையும் படிச்சு நாலு வரி எடுத்து போட்டு கமெண்ட் போடறாங்களே..அதுதான் விளைவுன்னு நினைக்கறேன்! (Hey, friends, juz kidding..:-) )6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?


ச்சேச்சே... ரெண்டுமே இல்ல...நாம இன்னைக்கு இடுகை போடலேன்னா தமிழ்மணத்தோட கதி,அதைவிட பதிவுலகத்தின் கதி என்னாகுமோன்னு தினமும் குளிக்கறேனோ இல்லையோ போஸ்ட் போட்டுடறேன்!


7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?


காசா பணமா...அது இருக்கு ஒரு எட்டு. ஆனா ஆக்டிவ்வா இருக்கிறது மூணுதான். அதுலே ரெண்டு குழுப்பதிவு.


8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?


என்ன, இப்படி சொல்லிட்டீங்க..."தமிழ்மணம் எனது தாய்நாடு, வலைபதிவர் யாவரும் என் உடன்பிறந்தோர்." (மீதி மறந்து போச்சு...அவ்வ்வ்வ்! )


9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..யாரைன்னு குறிப்பிட்டு சொல்றது....நேத்துகூட‌ ஒபாமா போன் செய்து என்னால்தான் தமிழிலக்கியத்தை கரைத்துக் குடித்து அதிலேயே எப்போதும் திளைத்து நீந்துவதாக சொன்னபோது.....


10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...


அஸ்கு புஸ்கு..அப்புறம் உங்களை எப்படி என் பதிவை தொடர்ந்து படிக்க வைக்கறதாம்.....:-)


அழைத்த சின்ன அம்மிணிக்கு நன்றி....:‍‍)
லேட்டானாலும் லேட்டஸ்டா எழுதியிருக்கேன்..(இதுக்கு எழுதாமலே இருந்திருக்கலாம்னு நீங்க நினைக்கறது ..ஹிஹி...)

இதை தொடர நான் அழைப்பது : All celebrity bloggers of india

Sunday, August 29, 2010

அராஜகம்?!


யெல்லோ டே-‍‍ வுக்காக இந்த வருஷம் ஒரு குட்டி சல்வார் எடுத்து வைச்சிருந்தா, அதை விட்டுட்டு, குட்டியாயிடுச்சுன்னு சொன்னாலும் கேக்காம‌ 'இதைத்தான் போட்டுப்பேன்'னு தேடி கண்டுபிடிச்சு போட்டுக்கிட்டு போனதை என்னன்னு சொல்ல?

But, what a nice feeling it is...Pappu.....to watch your dresses grow small!!:-)

அரை வட்டங்களை கண்டுபிடி

இந்த இரண்டு வார மழையால எந்த அவுட் டோர் ஆக்டிவிட்டியும் பண்ண முடியலை. பப்புவுக்கு மகா போர். இன்ட்டோர் ஆக்டிவிட்டி எதுவும் பப்புவுக்கு இப்போ இஷ்டம் இல்லை. நானும் தொல்லை பண்ணலை. ஆனா, நிறைய கதை புத்தகங்கள் படிச்சோம். படிச்சதையே திரும்ப படிச்சோம். திரும்ப திரும்ப படிச்சோம். அப்புறம் படிச்சதை ரோல் ப்ளே பண்ணறது பப்புவுக்கு இஷ்டம். சோ அதுதான் நடக்குது இப்போ!

நடுவுலே ஒரு சின்ன ஆக்டிவிட்டி பண்ணோம் ‍- பப்புவுக்கு அந்த ஐடியா பிடிச்சிருந்ததாலே! பொதுவாவே பப்புவுக்கு 'ஐ ஸ்பை' (I Spy) புத்தகங்கள் பிடிக்கும். "அரை வட்டங்களை கண்டுபிடி" ‍ன்னு ஒரு புத்தகம். நாம தினந்தோறும் பார்க்கிற காட்சிகளில் தெரியும் அரை வட்ட உருவங்களை கண்டுபிடிக்கிறதுதான். ரொம்ப எளிமையான புத்தகம்.
புத்தகம் முழுக்க இது மாதிரி படங்கள்தான். பப்புவுக்கு வடிவங்களை பத்தி கத்துக்கிறப்போ ரொம்ப யூஸ் ஆச்சு.
வெள்ளைத் தாளில் அரைவட்டம் வரைஞ்சுட்டு அந்த வடிவத்தை மட்டும் வெட்டி எடுத்துட்டு ஹாலோ பேப்பரை தருவேன். பப்புவுக்கு அரைவட்ட வடிவிலே என்ன தோணுதோ அதை பப்பு வரையணும்.


எடுத்துக்காட்டுக்கு, அரைவட்ட வடிவத்துக்கு கீழே கோடுகள் வரைஞ்சு இழுத்து காட்டினதும் 'நான் பண்றேன், நான் பண்றேன்"ன்னு ஆர்வக்குட்டியாகிட்டா!


இது வந்து தொட்டிலில் பாப்பா தூங்குது. ஒரு தூண் மட்டும் கொஞ்சம் தள்ளி இருக்கு. இது புக்லேயே இருந்த படம்தான்.

இது ஆந்தை. பப்பு ஒரு தப்பு பண்ணியிருக்கா. :‍) கண்டுபிடிங்க பார்ப்போம்!

படங்களை வரைஞ்சதும் ஓட்டையிலே நூலைக் கோர்த்து முடிச்சு போட்டு புத்தகமாக்கிட்டாங்க, மேடம்.

தீபம் எரியுது.


சுபம்!


( பெயிண்ட் பிரஷ்‍லே சரியா இருக்கு, ஆனா அப்லோட் செஞ்சதும் படங்கள் ஏன் ரொடேட் ஆகி தெரியுதுன்னு தெரியலை. அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க, ப்லீஸ்)

Friday, August 20, 2010

My super Bug

மீட்டிங்-லே கொட்டாவி மேல கொட்டாவியா வந்து கண்கள் தானாவே மூடிக்குமே...எப்போடா வீட்டுக்குப் போய் தூங்குவோம்னு இருக்குமே....அது மாதிரியான நாள் நேத்து.

பப்பு வழக்கம் போல சிரிப்பும் ஒரே தொணதொண பேச்சுமாக. எல்லாம் அடுத்த நாளைப் பற்றித்தான் - யெல்லோ டே!

“ப்லீஸ் தூங்கு பப்பு, நாளைக்கு பேசிக்கலாம்”

“ஹேய், நான் சும்மாதாம்ப்பா இருக்கேன்...தூங்கலாம்னு...என் வாய்தான் அதுவே சிரிக்குது”

!!

“இங்கே பாரு....வாய் சிரிக்குதுதானே...”

இருட்டில் அவள் சிரிப்பதை எப்படி பார்ப்பது..என் கையை எடுத்து அவள் வாய் மேலே வைக்கிறாள்.

அவ்வ்வ்வ்...ஆமாம், அது வாய் கொள்ளாமல் புன்னகைத்துக்கொண்டிருந்தது.

“ வாயை திட்டு ஆச்சி”

”ஷ்ஷ்.....ஏன் சிரிச்சிட்டே இருக்கே?” (ஸ்ப்பா..எ கொ ச !!)

”ஏன் சிரிக்கறே....பப்பு தூங்கணும் இல்லே...கொஞ்சம் நேரம் அமைதியா இருக்க மாட்டியா-னு திட்டு ஆச்சி”

””

”கொர்...கொர்...”

நானில்லை. பப்புதான் தூங்குவதாக குறட்டை சத்தம் விட்டு பாசாங்கு பண்ணிக் கொண்டிருந்தாள்..இல்லையில்லை...பப்புவின் வாய்தான்!

“என்ன்ன்ன்ன்ன பப்பு?”

திரும்பவும் கதை.

“இந்த வாய் இருக்கு இல்லேப்பா...நான் வேன்லேருந்து இறங்கும் போது சொல்லுது..என் டாய்ஸ்ல்லாம் எடுத்துக்குமாம்ப்பா...வாய் எங்கேயாவது டாய்ஸ் எடுத்துக்குமா?......பப்புவின் வாய், வாயைப் பற்றி தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தது...

Thursday, August 19, 2010

என்ன 'வலி' அழகே!

இந்த போஸ்டை யாருக்கு சமர்ப்பிக்கலாம்?
எல்லா பெண்களுக்கும்..அல்லது அனைத்து பியூட்டி பார்லர்களுக்கும்...ம்ம்..அல்லது அனைத்து ஆண்களுக்கும்....?!

சமீபத்தில் அலுவலகத்தின் ஆண்டுவிழாவிற்காக(!) ஒரு ராம்ப் வாக் இருந்தது. அதில் நானும் பங்கு பெற்றிருந்தேன். பயிற்சிகள் எல்லாம் முடிந்து நிகழ்ச்சி நடைபெறும் நாள் நெருங்கும்போது பங்கு பெற்ற அனைத்து பெண்களுக்கும் ஒரு டிப்ஸ் வழங்கப்பட்டது.

புருவத்தை ஒழுங்கு (த்ரெட்டிங்) செய்தல்,
கைகளில் தெரியும் பூனைமுடிகளை அகற்ற (வாக்ஸிங்) மற்றும்
முகப்பொலிவுக்கான ஃபேஷியல்

ஃபேஷியலை மட்டும் செய்துக்கொள்ளலாமென்று நினைத்து கடைசியில் எதுவுமே செய்துக்கொள்ளாமலே பங்கேற்றேன். அது வேறு விஷயம்.

என்னைப் பொறுத்தவரை பியூட்டி பார்லர் என்பது எனது முடியின் நீளத்தை குறைக்க மட்டுமே. தலைமுடி வெட்டிக்கொள்வது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. (அதற்குபின்னர் முற்றிலும் முற்றிலும் புதிய தோற்றம் கிடைப்பதால் அல்லது அப்படி நான் நம்புவதால் இருக்கலாம்.) மேலும், தலைமுடியைக் குறைப்பதால் உடலில் வலிகள் ஏதும் கிடையாது.

எனது ஒருசில நண்பர்களுக்கு, பியூட்டி பார்லர் என்பது அழகுபடுத்திக்கொள்ள - வலிகளை அனுபவித்து உடல்பாகங்களை அழகுபடுத்திக்கொள்வதற்கானது. சிலருக்கு, கால் மசாஜ் செய்து கால்விரல் நகங்களுக்கு நகப்பூச்சு (!) போடுவதற்கும். இன்னும் சிலருக்கு, தலைமுடிக்கு விதவிதமான வண்ணங்களை அடித்துக் கொள்வதும், ஸ்ட்ரெய்ட்டனிங் செய்வதற்கும் அல்லது பாடி மசாஜ் செய்துக்கொள்வதற்கும் அல்லது விலையுயர்ந்த பேஷியல்கள் - கோல்ட் ஃபேஷியலிலிருந்து அரோமா மற்றும் ஹெர்பல் இன்னபிற.

மேற்கண்ட எதையும் நான் முயற்சி செய்திராததால் அதைப்பற்றி எதுவும் என்னால் சொல்ல இயலாது.

ஆனால், பியூட்டி பார்லர் என்பது நம்மைப் பற்றி, நமது உடலை பற்றி - நல்லபடியாக உணர்வதற்கு உதவி செய்யும் இடம் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன் - சிலவற்றை அறியும் வரை/உணரும் வரை.

கல்லூரி நண்பர்கள்தான் முதல்முதலில் எனது கால்கள் அழகானவை அல்ல என்ற எண்ணத்தை தோற்றுவித்தது. "அடர்த்தியாக முடி முளைத்த கால்கள் பெண்களுடையது அல்ல. பெண்களின் கால்கள் மொழுமொழு-வென்று முடியற்றவையாக இருத்தல் வேண்டும். அல்லாவிடில், அவை அசிங்கமானவை." பெண்களுக்கு முடி என்பது தலையில் மட்டுமே இருக்க வேண்டும்.

அடுத்த லீவுக்கு வீட்டுக்குச் சென்றபோது, கடைசாமான்கள் பட்டியலில் இடம்பெற்றது ஆனி ஃப்ரெஞ்ச். அரை மணிநேரம் அதை தடவிக் கொண்டு பாத்ரூமில் அடைந்து கிடந்தது மறக்க முடியாதது. அதைப் போலவே, முடி நீக்கிய கால்களை நானே தடவித் தடவிப் பார்த்ததும். எல்லாம் ஒரு வாரம்தான். அடுத்த பதினைந்தாவது நாளைக்குள் "என்ன முல்லை, ஆம்பளை கால் மாதிரி இருக்கு" கதைதான்!

"குளிக்கும்போது மஞ்சள் தேய்", "ப்யூமிக் ஸ்டோன் போடு" என்று நாமே கேட்காவிட்டாலும் 'ஆஸ்க் லைலா' மற்றும் 'ஆஸ்க் அகிலா'க்கள் விடவில்லை. இது எதுவுமே எனது அவசர கோலத்துக்கு உதவவில்லை. ஹாஸ்டலின் ஷானாஸ் ஹூசைன்களில் ஒருவர் "வேக்ஸிங் பண்ணாதான் க்ரோத் குறையும்" என்று திருவாய் மலர்ந்தருளினார். அதுவரை வுமன்ஸ் எராவில் அதைப்பற்றி
அறிந்திருந்ததோடு சரி, எப்படி இருக்குமென்று சுத்தமாக தெரியவில்லை.

"வீட்டுலேயே பண்ணலாம், சர்க்கரை, தேன் எல்லாம் போட்டு காய்ச்சணும், சூடா கால்லே அப்ளை பண்ணிட்டு வெள்ளைத் துணியை கால்லே ஒட்டிட்டு முடி வளர்ந்திருக்கிறதுக்கு எதிர்பக்கம் இழுக்கணும்" என்றபோது தண்டுவடம் சில்லிட்டது.

"ஏன் கால்லே முடி இருந்தா என்ன? என்னோட கால் எப்படி இருந்தா யாருக்கென்ன?" என்ற கேள்விகளுக்கு இடமுமில்லை. விடையுமில்லை. மிடிகளையும் கேப்ரிகளையும் தாண்டி நீளும் கால்களில் உரோமம் இருந்தால் அது வெட்கத்துக்குரியது. ஆண்களுக்கோ அது அழகு...கம்பீரம்!


எட்டாம் வகுப்பு படிக்கும்போது "காலேஜா" என்று என்னைப் பார்த்து கேட்கவைத்ததற்கு எனது உயர்ந்த கால்களும் ஒரு காரணம். பள்ளியின் பெருமைக்குரிய அதலெடிக்காக இருந்ததற்கு, முடி முளைத்த- ஆண்களுடையது போலிருக்கிறது என்று சொல்லப்பட்ட கால்களும் காரணம். மற்றவர்களிடமிருந்து உயரமானவளாக தனியாக என்னை தெரிய வைத்தது கருகரு முடி முளைத்த கால்களே!

"ஆச்சி என்னா ஹைட் டீச்சர்" என்பது வீட்டிற்கும் பெருமையாகவே இருந்தது - ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் எனது உயரத்தை பெரிம்மா கதவிற்கு அருகில் நிற்க வைத்து ஸ்கேலால் தலைக்கு மேல் அளந்து குறித்து முந்தைய வருடத்தைவிட அளவு பார்ப்பது - ஒரு சம்பிரதாயமாகவே இருந்தது - எனது கால்களில்லாமல் - முடி முளைத்த அக்கால்களில்லாமல் என்னால் என்னை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

திருமணம் நிச்சயமானபோது அலுவலகத் தோழி என்னை அழைத்துச் சென்ற இடம் - லேக்மே பியுட்டி பார்லர்.

கால்களில் கோந்தைப் போன்ற பிசுபிசுப்பான ஒன்றை சூடாக கத்தியால் தடவும் போது அது ஒன்றும் நிச்சயமாக சுகமானதொன்றாக இல்லை. உடனே ஒரு பேப்பர் கைக்குட்டையை வைத்து எதிர்ப்புறமாக டக்கென்று இழுத்தபோது தேனீ கொட்டியது போல...அல்லது 100 ஊசி முனைகளை வைத்து குத்தியது போல...அல்லது 1000 வோல்ட் ஷாக் அடித்தது போல இருந்தது.

இவ்வளவு கஷ்டப்பட்டு இதை ஏன் செய்துக்கொள்ள வேண்டுமென்றே தோன்றியது.

ஒரு அரைநாள் முழுக்க அங்கேயே - அங்கிருந்த எல்லா உபகரணங்களும் என் மேல் பயன்படுத்தப்பட்டு
தங்களது உபத்திரவத்தை கொடுத்தன. வேக்ஸிங்கைப் போல.. பத்து மடங்கு...இல்லையில்லை... ஐம்பது மடங்கு வலியைத் தரக்கூடியது புருவங்களை ஒழுங்குப்படுத்துதல். வாழ்க்கையில் இரு முறைகள் அக்கொடுமையை அனுபவித்திருக்கிறேன்.

அதுவும், ஒருவர் வாயில் நூலை வைத்து கையில் இழுத்தபடி உங்கள் நெற்றி முடிகளை பிடுங்கும் வலியை சொல்லி புரிய வைக்கமுடியாது. வெளியே வந்தபோது "இனிமே ஜென்மத்துக்கும் இதையெல்லாம் பண்ணிக்க மாட்டேம்ப்பா" என்றுதான் தோன்றியது.

இவ்வளவு வலியை அனுபவித்து எதற்காக இவர்கள் செய்துக்கொள்ள வேண்டுமென்று புரியவில்லை.

அம்மாக்களின் தொல்லையாலா அல்லது அவர்களது கணவர்களா..பாய் ஃப்ரெண்ட்களா...யாரை மகிழ்ச்சிப்படுத்த இந்த வேதனையை அனுபவிக்க வேண்டும்? ("உன் கால்லே இருக்கற முடியை எடு" என்று என்னிடம் சொல்லியிருந்தால் "உன் கால்லே இருக்கிற முடியை எடுத்துட்டு என்கிட்டே சொல்லு" என்றே சொல்லியிருப்பேன்!)

ஃபேஷியல் - இதை நினைத்தால் மசாலா தடவி கிரில் செய்யப்பட்ட கோழி உயிருடனிருந்தால் அனுபவிக்கும் வலிதான்.

மூக்கிலிருக்கும் கருந்துளைகளை எடுக்கிறேனென்று பயங்கரமான கருவியுடன், இல்லாத பிளாக் ஹெட்சை எடுக்க ஒரு பெண் மூக்கை அழுத்தியதும் உடலின் அத்தனை செல்களும் அதிர்ந்து அடங்கியதுதான் நினைவுக்கு வருகிறது.

உண்மையில் இவை அனைத்தையும் மேற்கொண்டபோது ஒருவித அவமானமே மேலோங்கி இருந்தது. இயற்கையாக நானிருப்பதை விடவா இந்த கருவிகள் அழகைக் கூட்டப்போகின்றன...அவை அழகையல்ல..இம்சையையே கூட்டுகின்றன! அதற்கு மேல்....அழகுக்கலைப் பெண்களின் கமெண்ட்களும்...

உங்கள் முகத்தில் பூனை முடிகள் நிறைய இருக்கு மேடம்...
ஒரு தடவை ஃபேஸ் ப்ளீச் பண்ணா பளிச்சுன்னு இருப்பீங்க மேடம்...
உங்க ஐ ப்ரோ த்ரெட் பண்ணா அழகா இருக்கும் மேடம்....

கடந்த முறை முடி வெட்டிக்கொள்ள சென்றிருந்தபோது ஒரு பெண்ணின் வலி மிகுந்த குரலைக் கேட்க நேர்ந்தது. நெடுநேரத்திற்கு என்னவென்றே புரிந்துக்கொள்ள முடியவில்லை. வெளியே வந்தவரிடம் விசாரித்ததற்கு 'பிகினி கரெக்ஷன்' என்றார். இவ்ளோ கஷ்டப்பட்டு வலியை அனுபவித்து ஏன் அதைச் செய்துக் கொள்ள வேண்டுமென்றதற்கு அவர் சொன்ன பதில், "இதைச்
செய்துக் கொண்டால் எனது கணவர் மகிழ்ச்சியடைகிறார். அவரை சந்தோஷப்படுத்தவே இதை அனுபவிக்கிறேன்".

ஹூம்!

தனிப்பட்ட சுகாதாரத்திற்காக சிலவற்றை ஏற்றுக்கொள்ள முடிந்த என்னால், அடுத்தவர் பார்வைக்கு அழகாக இருக்க வேண்டுமென்று சிலவற்றை மேற்கொள்வதை புரிந்துக்கொள்ள முடிந்ததில்லை.

இதைப் படித்துக்கொண்டிருக்கும் நீங்கள் ஒரு ஆணாக இருந்தால், பெண்ணாக பிறக்கும் ஆசையிருப்பின் உடலில் முடியேயில்லாமல் பிறக்க ஆசைப்படுங்கள்.

ஒருவேளை நீங்கள் பெண்ணாக இருந்தால், உடலில் முடிகளுடன் இருக்கும் நடுத்தர வர்க்க பெண்களின் வலிகளை வெளிச்சத்துக்கொண்டு வந்ததற்கு மகிழ்ச்சியடையுங்கள்! :-)

Tuesday, August 17, 2010

உங்க வீட்டு குட்டி 100, 1000 வரைக்கும்....

...கத்துக்கிட்டா என்ன நடக்கும்?

1. ஹண்ட்ரட் வரைக்கும் சொல்லு. அதுக்குள்ளே பாலை குடிச்சுடுவேன். (அவ்வ்வ்வ்...இது முன்னாடி 'டென்' வரைக்கும் இருந்தது!!)

2. உன்னை எனக்கு தவுசண்ட் புடிக்கும் ஆச்சி. ( Flying high...in the blue sky...LoL )

3. 1001 லேர்ந்து சொன்னாதான் வருவேன்.... (எது வரைக்கும்ன்னு சொல்லலையே...!!)

4. 100,200 சொன்னாதான் சாக்ஸ் போடுவேன்.

5. நான் 1000 சொல்றதுக்குள்ளே ஆஃபிஸ்லேருந்து வந்துடு....(I wish I could...:-) )

Sunday, August 15, 2010

உண்மையான சுதந்திர தின விழா

பளிச்சிடும் வெள்ளைச் சட்டையும், மெரூன் பாவாடையும் அணிந்து வரிசையில் நின்று "தாயின் மணிக்கொடி பாரீர்" என்று கும்பலோடு பாடி தலைமையாசிரியர் ஏற்றும் கொடியிலிருந்து பறக்கும் மலர்களை அண்ணாந்து பார்ப்பதோடு முடிந்துவிடும் சுதந்திர தினவிழாக்கள். கொஞ்சம் ரவுடியானபின்பு, பரபரப்புடன் ' நமது பேரை எப்போது அறிவிப்பார்கள்' என்று மேடைக்குப் பின்னால் காத்திருந்து காந்தியையும்,நேருவையும், சர்தார் வல்லபாய் பட்டேலையும்,கொடி காத்த குமரனையும் நினைவுக்கூர்ந்து எழுதிக்கொடுத்ததை மனப்பாடம் செய்து மைக்கில் பேசும் வைபவமே பெரிதாக இருந்தது. பள்ளிக்கூடத்தைத் தாண்டி, சுதந்திர தினமென்பது வார நாட்களில் வரவேண்டுமென்ற கவலையை கொண்டு வரும் நாளாக மட்டுமே ஆகிப்போனது.

அதைத்தாண்டி, உணர்வுப்பூர்வமாக அமைந்தது நேற்றுதான். நமக்குக் கிடைத்திருப்பது உண்மையான சுதந்திரம்‍‍தானா என்று யோசிக்கும்படியாக மகஇக, விவிமு, புமாஇமு, புஜதொமு, பெவிமு அமைப்புகள் நடத்திய முற்றுகை போராட்டத்திற்குச் சென்றதையே குறிப்பிடுகிறேன்.


பள்ளிக்காலத்தில் 'குழந்தைத் தொழிலாளர்களுக்கெதிரான" மனித சங்கிலி மற்றும் பல்கலைக்கழகத்தில் வளாகத்திற்கு இடம் கேட்டு ஒரு மறியல், அதுவும் அடையாளத்திற்காக என்பதோடு வேறு எந்த போராட்டங்களிலோ பேரணிகளிலோ கலந்துக்கொண்டிராத எனக்கு இந்த முற்றுகைக்குச் சென்றது வித்தியாசமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. உண்மையில் பிரமிப்பாக இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். போலீஸ் வண்டிகள் வர வர குழுமியிருந்த அமைப்புத் தோழர்கள் எந்த மறுப்பும், எதிர்ப்புமின்றி தாங்களாகவே ஏறி அமர்ந்துக் கொண்டார்கள். நாட்டை விலைபேசும் அரசியல்வாதிகளுக்கு எதிராகவும், மறுகாலனியாதிக்கத்தை எதிர்த்தும், போபால் வழக்கிற்கு நீதி கேட்டும், இனியும் வேண்டாம் இன்னுமொரு போபால் என்று பொருள்படும்படியும் முழக்கமிட்டபடி வேனில் ஏறிச் சென்றார்கள்.( படம் : வினவு இடுகை)

மற்ற எல்லோரையும்போல இவர்களும் ஞாயிற்றுக்கிழமையை குடும்பத்துடன் கொண்டாடி கழித்திருக்கலாம். நண்பர்களுடன் ஊர் சுற்றச் சென்றிருக்கலாம் அல்லது டாஸ்மாக் எப்போது திறக்கும் என்று காத்திருக்கலாம். சிக்கன் லெக் பீஸை கடித்தபடி கே டிவியின் படத்தை பார்த்து மழை நாளில்
உறங்கியிருக்கலாம். ஆனால் இவை எல்லாவற்றையும் விடுத்து வீதி வரை வந்து அவர்களை போராட வைத்தது எது?

விடாத மழையிலும் முழக்கங்களை எழுப்பியபடி நிற்க வைத்தது எது? பல்வேறு ஊர்களிலிருந்து குடும்பத்துடன் வந்து சென்னையில் தெருக்களில் போராடி கைதானாலும் கலங்காமல் இருந்தார்களே..அந்த உற்சாகத்திற்கு பின்னால் இருப்பது எது? சொந்த காரணங்களோ அல்லது ஆதாயங்களோ இல்லாமல், அடுத்த நாளைப் பற்றிய தங்களது கவலைகளை தூக்கியெறிந்துவிட்டு, பொது நன்மைக்காக மட்டுமே போராட வைத்தது எது? இவை அனைத்திற்கும் ,‍‍‍‍‍‍‍ அவர்களது சமூக அக்கறையும் மனித குலத்தின் மேல் கொண்ட அன்பு மட்டுமே காரணம் என்றால் அது மிகையல்ல.

இந்தப் போராட்டத்தை கண்டபோது ஏனோ மும்பையில் சில தினங்களுக்கு முன்பு நடந்த "மீட்டர்ஜாம்" போராட்டம் நினைவுக்கு வந்து போனது. ஆகஸ்ட் 12 ‍ - மும்பையில் ஆட்டோக்காரர்கள் மற்றும் டாக்ஸிக்காரர்களுக்கெதிராக, படித்த நாகரீக உயர்வர்க்க கனவான்கள் மூன்று பேரால் முன்னெடுத்து இணையத்தின் வழியாக செய்தி பகிரப்பட்டு நடைபெற்ற இந்த போராட்டம் சுத்த அபத்தமாக தோன்றியது. கூப்பிடும் இடங்களுக்கு வர மறுக்கும் மற்றும் பெட்ரோல் விலை உயர்ந்ததால் மீட்டருக்கு அதிகமாக கேட்கும் ஆட்டோ மற்றும் டாக்ஸிக்காரர்களை ஒரு நாள் ஒதுக்கிவைப்பது மாதிரியானது இப்போராட்டம். மும்பையைத் தொடர்ந்து கல்கத்தா, பெங்களூர் என்று மற்ற நகரங்களும் லைன் கட்டி இருப்பதாகவும் இணையச் செய்திகள் கூறுகின்றன.

ஆட்டோக்காரர்களுக்கும் டாக்ஸிக்காரர்களுக்கும் இக்குற்றச்சாட்டுகளை நியாயப்படுத்த எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். இதில் பலரும் அடித்தட்டு வாழ்க்கை அல்லது பிளாட்பாரத்தில் வாழ்பவர்களே. ஆட்டோக்காரர்களும் டாக்ஸிக்காரர்களும் சாமானியர்களே. சொந்த ஆட்டோவோ அல்லது டாக்ஸியோ வைத்திருப்பவர்களைவிட வாடகைக்கு எடுத்து தினக்கணக்கில் ஓட்டுபவர்களே அதிகம். உண்மையில், இதற்குக் காரணமான அமைப்பையோ அல்லது சிஸ்டத்தையோ அல்லது அரசியலையோ/ அரசியல்வாதிகளையோ எதிர்க்காமல் சாமானியர்க்ளுக்கு எதிராக ‍ ‍இத்தனைப்பேர் போராடுவது மிகுந்த ஆச்சரியமாக இருந்தது.


பெட்ரோல் விலை உயர்ந்தபோது அல்லது உள்நாட்டு வரிகளை உயர்த்தியபோது போராடியிருந்தால் சரியாக இருந்திருக்கும். நமது நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் வரிகள் கச்சா எண்ணெயின் விலை மற்றும் வரிகளோடு தொடர்புடையதாகவே இருக்கிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்தால் இங்கும் விலை உயர்கிறது. "சாமனியர்களின் அரசாங்கம்" என்று கூறிக்கொள்ளும் இவ்வரசாங்கம், சர்வதேச விலையுயர்வு மற்றும் வரி உயர்வை சாமானியர்கள் மீதல்லவா சுமத்துகிறது.


சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் விலை சமீபத்தில் உயர்ந்தபோது எந்த கேம்பெய்ன்களும் போராட்டங்களும் நடைபெறாதது ஏன்?


இன்று பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி, லிட்டருக்கு ரூ 14.75 மற்றும் ஆகவும் ரூ 4.75 ஆகவும் இருக்கிறது. ஆனால் விமானங்களுக்கான எரிபொருளின் மீது லிட்டருக்கு ரூ 3.60 மட்டுமே. டீசல் உபயோகிக்கும் விவசாயிகள், பேருந்துகளில் பிரயாணம் செய்யும் மக்களை விட விமானங்களில் பயணம் செய்பவர்களின் அல்லலே அரசின் கண்களுக்குப் பெரிதாகத் தெரிகிறது என்றால் நாம் போராட வேண்டியது ஆட்டோக்காரர்கள் மற்றும் டாக்ஸிக்காரர்களுக்கு எதிராகவா?

இந்த இரண்டு போராட்டங்களையும், அதனை நிகழ்த்தியவர்களையும் ஒப்பிட்டுப்பார்ப்பதை ஏனோ தவிர்க்க முடியவில்லை.


வீதியில் போராடி, வீர முழக்கமிட்டு கைதான அத்தனை தோழர்களுக்கும் என் வணக்கங்கள். உங்களனைவரையும் எண்ணி என் இதயம் விம்மி நிற்கிறது. இணையத்தில் செய்தியைப் பகிர்ந்த வினவுக்கு நன்றிகள்.

Saturday, August 14, 2010

ஆகஸ்டு 15 - முற்றுகை


கொலைகார ‘டௌ’-வே வெளியேறு!

ஆக்-15 முற்றுகை

ஆகஸ்டு-15, காலை 10.30 மணி,

பேரணி துவங்குமிடம்: காசி தியேட்டர், சென்னை.

பேரணி சேருமிடம், முற்றுகை: டௌ கெமிக்கல்ஸ் அலுவலகம், கிண்டி, சென்னை.

அனைவரும் வருக‌

Friday, August 13, 2010

Blogcoming!

ஹாய் பீபிள்..ரொம்ப நாளா சத்தமே இல்லேன்னு நினைச்சவங்களுக்கு...
திரும்ப வந்துட்ட்டேஏஏஏஏஏஏஏஏஏஏன்! ( தேங்க்ஸ் : பெரிய பாண்டி!)

ஆஃபீஸ் டேவுக்காக Fashion..Fusion..dance..rampன்னு கலைச்சேவை செய்ய வேண்டி இருந்தது இவ்வளவு நாளா! கல்லூரி நாட்களை திரும்ப ரீவைண்ட் பண்ணின மாதிரி..ஒரே ஜாலி...க்ரூப்பா ப்ராக்டீஸ்,
ப்ராக்ஸ்டீஸ்ன்னு சொல்லிட்டு கும்மாளம்..கலாட்டா..கிண்டல்..கொஞ்சம் பாலிடிக்ஸ்-ன்னு ரெண்டு வாரம் ஜாலியா போச்சு.. நேத்து ஃபங்ஷனோட எல்லாம் ஓவர்!

இப்போ மிஸ்ஸிங் த ஃபன்...

இதுலே ஆளாளுக்கு, நீங்க நல்லா பண்ணீங்க இல்லே நீங்கதான் கலக்கிட்டீங்க...செம...உங்க டீம் சூப்பர்...சான்சே இல்ல..எல்லாம் உங்க கடின உழைப்புதான்..உங்க அர்ப்பணிப்பு உணர்வுதான்...நீங்க மேக்கப் பண்ணலைன்னா எதுவும் நடந்து இருக்காது...இல்லல்லே...உங்க அயராத உழைப்புதான் காரணம்னு மாத்தி மாத்தி மெயில் அனுப்பிக்கிட்டு, செண்ட்டியா ஃபீல் பண்ண வைக்கறேன்னு கண்ணீர் விட வைச்சுட்டு இருக்கிறதாலே அப்படியே எஸ்கேப்-பாகி இங்கே வந்துட்டேன்...:-)

பதிவுலகில் என்ன ஸ்பெஷல்? :-)