Friday, July 30, 2010

Bubble Art

கண்ணாடி போன்ற சோப்புக் குமிழ்களை விடுத்து வண்ண வண்ண சோப்புக்குமிழ்கள் செய்ய முடிந்தால் - பபிள் ஆர்ட் (ஐடியா ஃப்ரம் இணையம்)! கடையிலிருந்து வாங்கிய பபிள் கரைசலோடு சிறிது வாட்டர் கலர்களை கரைத்துக் வெவ்வேறு கிண்ணங்களில் கொடுத்தேன்.பப்பு, குமிழ்களை காற்றில் விட அதை பேப்பரில் சேமித்தேன். இது நல்ல விளையாட்டாக இருந்தது - பப்புவுக்கு! அவள் காற்றில் பறக்க விட்டதும் ஓடிப் போய் நாந்தானே பிடிக்க வேண்டும்.மீதி பேப்பர்களை கீழே வைத்து குமிழ்களை மெதுவாக பேப்பரை நோக்கி செலுத்தி வெடிக்க விட்டாள். நீலம், பச்சை மற்றும் மஞ்சள். வழக்கம்போல எல்லா வண்ணங்களையும் ஒன்றாகக் கலந்து கருப்பு வண்ணம் கொண்டு வந்து கருப்புக் குமிழ்களையும் உருவாக்கினாள்.சிறிது நாட்களுக்கு முன்பு உடையாத சோப்புக் குமிழைப் பற்றி, காடு மலைகளை சுற்றி செல்லும் ஒரு சோப்புக்குமிழைப் பற்றி படித்த கதையைப் நினைவு கூர்ந்தோம்.

தொடர்ந்து, பள்ளிகூடக் கதைகளைச் சொல்லத் தொடங்கினாள்.


“நவ்ஜோத் இல்லப்பா, அவனுக்கு வலிக்கவே வலிக்காது. கிள்ளினா கூட வலிக்காது. அடிச்சாக் கூட வலிக்காது. சண்டைப் போட்டாக் கூட வலிக்காது” - பப்பு

” ஓ, ஏன்?”

”செமையா கிள்ளினாக் கூட அவனுக்கு வலிக்காது. செமையா அடிச்சா..செமையா சண்டையா போட்டாக் கூட வலிக்கவே வலிக்காது” - பப்பு

“ஆ!! எப்படி பப்பு?” - நிஜமாகவே ஆர்வமாக இருந்தது எனக்கு.

ஒரு நொடி - என்னை நிமிர்ந்து பார்த்தாள்.

“அவங்கம்மா அவனை அப்ப்ப்ப்ப்டி வளக்கறாங்க!”

ஹலோ நவ்ஜோத் அம்மா, அடுத்த பேரண்ட்ஸ் மீட்டிங்கில் தங்களை சந்திக்க ஆர்வமாக இருக்கிறேன். :-)

Wednesday, July 28, 2010

மறக்கக்கூடியதா போபால் படுகொலை?

”போபால் விஷவாயுவிற்கு முன்பு ஆஸ்பத்திரியின் உள்ளே கூட நான் நுழைந்தது இல்லை.ஆனால், அதன் பிறகு பெரும்பாலான ஆண்டுகளை ஆஸ்பத்திரி வளாகத்திலேயே கழித்திருக்கிறேன்.முன்பு நான் ஒரு காப்பகத்தில் வேலை செய்துக் கொண்டிருந்தேன்,இப்போதோ என்னால் எந்த வேலையும் செய்ய இயலாது.எனது கணவர் கல்லுராமினால் கூட எந்த வேலையும் செய்ய இயலாத நிலையில் இருக்கிறார்.அவர் மூட்டைத் தூக்கும் வேலை செய்து வந்தார்.எனது மகன் துணி தைப்பதால் எங்கள் பிழைப்பை ஓட்டுகிறோம்” (நாரயணி பாய்)


போபால் விஷ வாயு கசிவினால் பாதிக்கப்பட்ட, தங்கள் வாழ்வையும் கனவுகளையும் இழந்த எண்ணற்ற மக்களில் நாராயணியும் ஒருவர். இது நாரயணிக்கு மட்டும் நடந்த சம்பவம் இல்லை. இதே போன்ற பல லட்சம் வாழ்க்கை கதைகள் போபாலில் உண்டு.

செர்னோபிலில் இறந்தவர்களின் எண்ணிக்கை : 50
போபாலில் இறந்தவர்களின் எண்ணிக்கை : 25000 பேர் (பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல லட்சங்கள்)

இதில் மனதை அறுக்கும் விஷயம் என்னவெனில்,பலருக்கு உரிய நேரத்தில் மருந்துகளும் ஊசிகளும் மருத்துவமனையில் கைவசம் இருந்தே கிட்டாததும், அதன் பாதிப்புகள் மரபணு ரீதியாக அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு தொடர்வதும்தான்.மேலும், தொழிற்சாலை வளாகத்தில் அகற்றப்படாத ரசாயன கழிவுகள் இன்னமும் உண்டு.அவை மண்ணையும், தண்ணீரையும் காற்றையும் இன்னமும் மாசு படுத்திக்கொண்டிருக்கின்றன.

அரசாங்கமும், மருத்துவத்துறையும் ஏழை மக்களை கண் கொண்டு பாராமல் இருப்பதைப் போல நீதியும் கண்களை கட்டிக்கொண்டு விட்டது.

மெக்ஸிகோ வளைகுடா இழப்பீடு : 2000 கோடி டால்ர்
பாதிக்கப்பட்ட மற்றும் இறந்து போன தொழிலாளர்களுக்குக் கிடைத்த இழப்பீடு : 10 கோடி டாலர்

போபால் சம்பவத்தின் இழப்பீடு : 47 கோடி டாலர்
பாதிக்கப்படட நபரு ஒருவருக்குக் கிடைத்த சராசரி இழப்பீடு : 500 டாலர்கள்


உலக வர்த்தக மையத்தின் மீதான தாக்குதலுக்கு ஒரு வருடத்திற்குள் நீதி வழங்கப்பட்டது. போபால் சம்பவத்திற்கோ 25 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. அதுவும் இழப்பீட்டு தொகைக்கும் வட்டியும் கிடையாது.

குற்றவாளிகளுக்கோ எந்த தண்டனையும் இல்லாமல் ராஜ மரியாதை அல்லவா வழங்கப்படுகிறது?

வல்லரசாகத் துடிக்கும் இந்தியாவிற்கு இது ஒரு வெட்கக்கேடான விஷயம் இல்லையா?

அரசாங்கமும் அமைச்சர்கள் குழுவும்மே குற்றவாளிகளை தப்பிக்க விட்டும், சொந்த மக்களின் குரல்வளையை நசுக்கி பரிதவிக்கவிடும் அவலமும் உலகில் எந்த நாட்டில் நிகழக்கூடும்?
45 டன் மெத்தில் ஐசோ சயனைடு நச்சுக்காற்று யூனியன் கார்பைடு தொழிற்சாலையிலிருந்து வெளியேறி இருக்கிறது.ஆமாம், அது ஏன் இங்கே வந்தது? அமெரிக்காவில் இருந்தால் அமெரிக்க மக்களுக்கு பாதுகாப்பு இல்லையில்லையா, அதனால் அந்தத் தொழிற்சாலை இந்தியாவுக்கு மாறி இருந்தது.மூன்றாம் உலக நாடுகளைப் பற்றி யாருக்கு என்ன கவலை? அந்நாடுகளும் இதை ரத்தின கம்பளம் விரித்து ஆபத்துகளை அல்லவா வரவேற்கின்றன!

பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயார் நிலையில் இல்லை. பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டும் தொழிற்சாலை இயங்கி வந்திருக்கிறது.இவை முறையாக செயற்படுத்தப்படாதத்திற்குக் காரணம் முதலாளியின் லாப நோக்கமே. அமெரிக்காவிலிருக்கும் அத்தொழிற்சாலையின் தலைமை அலுவலகத்திலிருந்து வந்த ஆணைப்படியேதான் லாப நோக்கிற்காக பாதுகாப்பு ஏற்பாடுகளும் பராமரிப்புகளும் குறைக்கப்பட்டது.


தப்பிப் பிழைத்தவர்கள் எவரும் அந்த நள்ளிரவை அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது. எந்தப் பணியும் செய்ய இயலாமல் நடமாடும் பிணம் போன்ற வாழ்க்கையையே அவர்கள் வாழ்கின்றனர். அவர்கள் செய்த தவறுதான் என்ன? இதில், மருத்துவமனைகளும் தங்கள் மருந்துப் பரிசோதனைகளுக்கு கினியா பன்றிகளைப் போன்று பாதிக்கப்பட்ட மக்களை உபயோகப்படுத்திக்கொள்கிறது என்றால்.....இருமலும் கண்களின் எரிச்சலும் துரத்த வாந்தியும் பின்னர் உடல் இயக்கம் பாதிக்கப்பட்டும் உயிருக்கு ஓடினர் மக்கள். சாலைகளில் செத்து செத்து மடிந்தனர்.எவ்வளவுக்கெவ்வளவு வேகமாக ஓடினார்களோ அவ்வளவுக்கவ்வளவு நுரையீரலை நிரப்பியது நச்சு வாயு.
நகர் முழுக்க மரண நெடி. போபாலின் ரயில்வே அலுவலர்கள் எதையோ உணர்ந்துக் கொண்டவர்களாக இரவு முழுக்க தந்திகள் அடித்தும் சிக்னல்களை அனுப்பியும் எந்த ரயிலும் நிற்காமல் பார்த்துக்கொண்டனர். சன்னல்களை இழுத்து மூடியபடி போபாலில் நிற்காமல் கடந்து செல்லும்படி அனுப்பினார் அதன் நிலைய அதிகாரி துருவே. அந்தக் காலத்தில் எந்த செல்ஃபோன்களோ 3ஜியோ அல்லது அலர்ட்களோ இல்லை.

அடுத்த நாள் காலையில் போலிஸ் மீட்பு படை மோர்ஸ் கோட் இயந்திரத்தை இறுகப்பற்றி இறந்துகிடந்த துருவேவின் உடலையும், சிக்னல் மேனின் உடலையும், ரயில் பாதைகளை மாற்ற முயன்று லீவரை கையில் பிடித்தபடி உயிரை விட்ட கடைப்பணியாளர்களின் உடல்களையுமே கண்டனர். அன்றைய மத்திய பிரதேச முதல்வர் அர்ஜூன் சிங்கோ நகரை விட்டு பாதுகாப்பாக மாளிகையில் பதுங்கிக்கொண்டிருந்தார்.

ஆயிரமாயிரமாக மக்கள் புதைக்கப்பட்டனர்.சிதைகளில் எரியூட்டப்பட்டனர்.ஆண்களும் பெண்களும் அவரவர் மதங்களைக் கொண்டு அடையாளம் காணப்பட்டு ஈமக்கிரியைகள் மொத்தமாக நிறைவேற்றப்பட்டன.

உயிர் தப்பிப் பிழைத்தவர்கள் இன்றும் மாசான சூழ்நிலையிலேயே வாழ்கின்றனர்.குடிப்பதற்கு சிறிதும் லாயக்கற்ற தண்ணீர். குழந்தைகள் இறந்து பிறக்கின்றன. ஊனத்தோடு பிறக்கின்றன. தாயின் கருவிலேயே சிதைகின்றன. பெண்களின் மாதவிலக்கு சுழற்சியே பாதிக்கப்பட்டிருக்கிறது.

பெண்களின் நிலை இன்னும் மோசம். விதவைகளாக்கப்பட்ட பெண்கள் விதவா காலனி என்ற குடியிருப்பில் வசிக்கின்றனர்.குடும்பத்தை சுமந்தாக வேண்டிய பொறுப்பு அவர்கள் தலைமேல் விழுகிறது. பைசா பெறாத அன்றாட வாழ்வின் செலவுகளை சந்திக்கக்க்கூட இயலாத லாயக்கற்ற வேலைகளை செய்து பிழைக்கின்றனர். ஒரு சிலருக்கு வெகுக் குறைவான ரூ 200க்கு குறைவான பென்ஷன் வழங்கப்படுகிறது.

1990க்கு பிறகு போபால் சம்பவத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கையை அரசு கவனத்தில் கொள்ளவே இல்லை. 25000 என்பது 1990 வரையிலான இறந்தவர்களின் எண்ணிக்கைதான். இன்றும் பல்லாயிரம் டன்கள் உயிர்க்கொல்லி ரசாயனங்கள் யூனியன் கார்பைடு தொழிற்சாலையை சுற்றி புதைக்கப்பட்டிருக்கிறது. சுற்றியுள்ள மக்களின் உயிரை கொய்துக்கொண்டிருக்கிறது. பல ஆண்டுகளாக ரசாயனம் புதைக்கப்பட்டிருக்கும் நிலத்திலிருந்தே தண்ணீரை மக்கள் உட்கொள்கிறார்கள்...ஆனால் நமக்கு அதைப்பற்றி என்ன கவலை?

போபால் நச்சு வாயு படுகொலைக்கே நீதி கிடைக்காத நிலையில் எஞ்சியிருக்கும் மக்களையும் புதைக்க யூனியன் கார்பைடை வாங்கி பாஸ்போர்ட்டுடன் நுழைந்திருக்கிறது டௌ கெமிக்கல்ஸ்.

வாருங்கள் கொலைக்கார 'டௌ' வை வெளியேற்றுவோம்! இனியும் போபால்கள் நமக்கு தேவையில்லை!

முற்றுகை : ஆகஸ்ட் -15
டௌ கெமிக்கல்ஸ் அலுவலகம், கிண்டி, சென்னை

Monday, July 26, 2010

பப்பு - தி எக்ஸ்ப்லோரர்

வழக்கமான பார்க், வண்டலூர் ஜூ அல்லது எப்போதும் போகும் வாக்கிங் பாதைகள் என்று கொஞ்சம் போரடித்தது. வானத்து வரைக்கும் வீடு கட்டி நிலாவை தொட முடியுமா, கடலுக்கு உள்ளே எவ்ளோ தூரம் போக முடியும், நீ தொலைஞ்சே போக மாட்டியா என்று பப்பு கேட்டுக்கொண்டிருந்தபோது தோன்றியது இது.

ஓ, ஜாலியா தொலைந்து போகலாமே?!!

தாயக்கட்டை காட்டும் திசையில் நடந்து சென்று எங்காவது தொலைந்து வந்தால் என்ன?

DiceWalk!
familyfun இல் இருந்து பிரிண்ட் எடுத்துக்கொண்டோம். அதில் சொன்னபடி ஒட்டினால் தாயக்கட்டை ரெடி.நிறைய சாலைகள் பிரியும் இடமாக தேர்ந்தெடுத்துக்கொள்வது நலம். (விரைவில் திரும்பி வர முடியாது!! ) தாயக்கட்டையை பப்பு வீசி எறிய ஒரு திசையை சுட்டியபடி வீழ்ந்தது. ஆனாலும், அவளுக்கு எந்த திசை வேண்டுமோ அதன்படி திருப்பி வைத்துக்கொண்டாள். அவள் இஷ்டப்படி இரு தடவைகள் நடந்தோம். அது இரண்டுமே சற்று தெரிந்த வழிகள்.

நாற்கர சாலைகளில் வீசி எறிய இப்போது தாயக்கட்டையின் வழி நடந்தோம். இரண்டு சாலைகள் வந்தால் சொல்லாமலே தாயத்தை வீசினாள். எங்கெங்கோ கிளைகள் பிரிந்து முடிவில் எங்கிருக்கிறோமென்றே தெரியாத சாலைகளில் நடந்துக் கொண்டிருந்தோம்.


இருபுறமும் மரங்களும், அடுக்குமாடி கட்டிடங்களும், இதமான காலை வெயிலுமாக - நன்றாகவே இருந்தது. ஹவுஸிங் போர்ட் குடியிருப்பு பாணியிலான வீடுகளை பார்த்துவிட்டு பப்பு ”ஆம்பூர் ஆயா வீட்டுக்கு வந்துட்டோமா?” என்றாள். ”வந்தா நல்லாதான் இருக்கும்” என்றேன் (பிரியாணியை நினைத்தபடி).

பசி வயிற்றைக் கிள்ளவே, back track செய்து திரும்பினோம்.

விருப்பமிருந்தால் உங்கள் வீட்டு குட்டீஸுடன் முயன்று பார்த்து உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்துக் கொள்ளுங்களேன்!

(”சித்திரக்கூடத்தில்” அப்டேட் இல்லாதபோது மடலிலும்,பின்னூட்டத்திலும் தொடர்பு கொண்டு விசாரித்த/எங்களை நினைத்துக்கொண்ட அன்புள்ளங்களுக்கு நன்றியும் எங்களின் அன்பும்!)

Friday, July 16, 2010

(ஃ)பன்னி மேனியா

பன்றியை ஒரு ஃபார்ம் அனிமலாக மட்டுமே இதுவரை அறிந்திருந்த பப்புவுக்கு மற்றவர்களை கிண்டல் செய்யவும் அப்படிச் சொல்லலாமென்று இப்போது தெரிந்துவிட்டது!

இந்த மைல்கல்லை கடக்க உதவிய பப்புவின் பள்ளி நண்பர்களான அர்ஷித்_வைஷ்ணவி_வ்யோம்_லைபோவுக்கு நன்றி! :-)

Wednesday, July 14, 2010

பாலூட்டி வளர்த்த parrot!!


(பப்பு @ எறும்பு அரண்மனையை பார்க்கும்போது)

வர்ஷினி பப்புவை வீட்டுக்கு வரச் சொன்னாள் என்று தினமும் சாயங்காலத்தில் பஜனை பாடிக்கொண்டிருந்தாள், கடந்த வாரம் முழுதும் . 'வீக் எண்டில் போகலாம் பப்பு' என்றாலும் கேட்பதில்லை. 'நான் வழி கேட்டுட்டு வந்திருக்கேன், போலாம் வா - ஃப்ர்ஸ்ட் லெஃப்ட் அப்புறம் ரைட் அப்புறம் ஸ்ட்ரெய்ட்' என்று ஒரே தொணப்பல். ”நீ வர்ஷினியை வீட்டுக்கு கூப்பிடு “ என்றால் “நாந்தான் ஃப்ர்ஸ்ட் அவ வீட்டுக்கு போணும்” என்று பதில். இரண்டு நாட்களாக இதே புலம்பலாக இருக்கிறதே என்று அழைத்துச் சென்றேன். அப்போதே மணி ஏழுக்கு மேலாகி இருந்தது. 'இப்படில்லாம் யாரையும் டிஸ்டர்ப் பண்ணக்கூடாது, அவங்க ஃப்ரீயா இருக்காங்களான்னு கேட்டுட்டுதான் மத்தவங்க வீட்டுக்கு போகணும்' என்று சிக்னலுக்காக நின்ற போது சொல்லிக்கொண்டிருந்தேன்.

”வர்ஷினியோட அம்மா எவ்ளோ 'குட்'டா இருக்காங்க, நீ ஏன் இப்படி இருக்கே? ”

பக்கத்தில் இருந்த ஸ்கூட்டி ஆண்ட்டி திரும்பிப் என்னை பார்த்தார். இந்த பக்கத்திலிருந்த பைக் தம்பதியினரும் ! மீ த ஙே !?!

“ஏன் பப்பு, எப்படி இருக்கேன்” - ரொம்ப பாவமாக கேட்டேன்.

“சொல்றதை கேக்காம இப்படி இருக்கே, வர்ஷினி அம்மா எப்படி சொல்றதை எல்லாம் கேக்கறாங்க...குட்டா, நீ ஏன் Bad-ஆ இருக்கே?”

பெரிம்ம்ம்ம்மா....எங்கே போனீங்க?

குழந்தைங்களை எப்போவும் கம்பேர் பண்ணக்கூடாதுன்னு எனக்குச் சொன்னீங்களே... அம்மாங்களை கம்பேர் பண்ணக் கூடாதுன்னு பப்புக்கு சொன்னீங்களா?!!

அப்புறம் இன்னொரு முக்கியமாக விஷயம், டிராஃபிக்லே நிக்கும்போது குழந்தைகளுக்கு அட்வைஸ் பண்ணாதீங்க...

அப்படியே எந்த அம்மாவாவது அட்வைஸ் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொண்டிருந்தால் அவர்களை திரும்பிப் பார்த்து இன்னும் தர்மசங்கடத்திற்குள்ளாக்காதீர்கள்...ப்லீஸ்!
பப்புவின் இந்த வருட முதல் ஃபீல்ட் ட்ரிப் கடந்த சனிக்கிழமையன்று முடிந்தது. அனுப்பும்போது இந்த முறை எனக்கு அவ்வளவாக கவலை/படபடப்பு இல்லை. கொடுத்த உணவை சாப்பிட்டு வர வேண்டுமேயென்று மட்டும் தோன்றியது. திரும்பி அழைத்து வரச் சென்றபோது அவளது பையைப் பார்த்து கிட்டதட்ட நான் மயக்கமடைந்துவிட்டேன். பைக்குள் ஒரு குட்டை - ஃபீல்ட் ட்ரிப்பில் பீல்ட்டிலிருந்த மணலெல்லாம் பைக்குள். பாட்டிலிலிருந்த தண்ணீர் எல்லாம் ஊற்றி கரைசலாக தேங்கியிருந்ததைப் பார்த்தபோது கவலை/படபடப்பின் அடுத்த லெவல் புரிந்தது.

Monday, July 12, 2010

கப் சாதி பஞ்சாயத்தும் கௌரவக்கொலைகளும்

சான்ச்சல் மற்றும் ராஜ்குமாரி. இருவரும் முறையே 14 மற்றும் 12 வயதுடைய பெண்கள். இருவரது உடல்களும் ஹரியானாவின் சோனாபேட் அருகில் கால்வாயில் கண்டெடுக்கப்படுகின்றன. அவர்களது பாட்டியும், மாமாக்களுமே இருவரையும் அடித்து கொலை செய்து கால்வாயில் வீசியதாக போலீஸ் விசாரணைக்குப் பிறகு தெரிய வருகிறது. இப்படி தனது சொந்தக் குடும்பத்தினரால் கொலை செய்யப்படுவதற்கான காரணம் - பக்கத்து வீட்டில் வசிக்கும் 16 வயது பையனுடன் அவர்களுக்கு தொடர்பு இருந்ததாகவும் அதனால் குடும்பத்திற்கு அவப்பெயர் கொண்டு வந்துவிடக்கூடாது என்பதாலுமே. (செய்தி )

சண்டிகரின் பிவானியைச் சேர்ந்த மோனிகா(18) மற்றும் ரிங்குவின் (19) , இருவரது உடல்களும் மின்விசிறியில் தொங்கிக் கொண்டிருந்திருக்கின்றன. மோனிகாவின் குடும்பத்தினரே இருவரையும் அடித்து துன்புறுத்தி கொலை செய்து தூக்கிலிட்டிருக்கின்றனர். அவர்கள் செய்த குற்றம் - ஒரே கோத்திரத்தில் பிறந்த அவர்களிருவரும் காதலித்ததுதான். ஒரே கோத்திரமென்றால் சகோதர உறவு என்று அர்த்தமாம். அதன்படி ஒரு கிராமத்தில் வாழ்பவர்கள் முழுவதும் ஒரே கோத்திரமெனில் - அனைவரும் சகோதர உறவு!

தில்லியில் பத்திரிக்கையாளராக வேலை செய்துக்கொண்டிருந்த நிருபமா பதக் தனது காதலரை திருமணம் செய்துக்கொள்ள வீட்டாரின் சம்மதம் வேண்டி ஜார்க்கண்டிலிருக்கும் தனது வீட்டிற்கு வருகிறார். அப்போது அவர் சில வாரங்கள் கர்ப்பம்.வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாகி இறந்து போகிறார். போஸ்ட் மார்ட்டத்தில், அவர் மூச்சுத் திணறலால் இறந்து போனது தெரியவந்து, போலீஸ் விசாரணைக்குப் பிறகு அவரது தாயே குற்றவாளியென்ற உண்மை வெளிவருகிறது. நிருபமா தனது சாதியை விட தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவரை விரும்பியதே அவரது தாயின் ஆக்ரோஷத்திற்குக் காரணம்.

இவை எல்லாம் நமக்கு புதியவை இல்லைதான்.

நமக்குத் தெரிந்த இந்தக் கொடூரமான கொலைகள் நிகழ்ந்தது கடந்த சில மாதங்களில்தான். ஹரியானா, பஞ்சாப்,உத்தர பிரதேசம்,ராஜஸ்தான் கிராமங்களில் நாம் அறியாத ஆண்களும் பெண்களுமாக சாதி மற்றும் கோத்திரத்தின் பெயரால் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த படித்தவரான நிருபமாவின் விஷயத்தால் பத்திரிக்கைகளிலும் இணையத்திலும் பரபரப்பைப் பெற்று கவனத்தை ஈர்த்தது.

மேலும் இன்னொரு பழைய செய்தியும் உண்டு.

பப்லி மற்றும் மனோஜை யாரும் மறந்திருக்க முடியாது. இருவரும் இந்திய சட்டப்படி திருமணம் செய்துக்கொள்ளும் வயதை அடைந்தவர்கள். 2007 ஏப்ரலில் காதலித்து திருமணமும் செய்துக் கொண்டார்கள். அதே வருடம் ஜூனில் இருவரும் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு வாய்க்காலில் வீசப்பட்டார்கள். பப்லி மற்றும் மனோஜ் செய்த ஒரே குற்றம் ஒரே கோத்திரத்தில் பிறந்தது தொலைத்ததுதான்.

இந்தக் கொலையில் முக்கிய பங்கு வகித்தது - கப் பஞ்சாயத்து என்ற சாதிய சங்கம். ஒரே கோத்திரத்தில் அல்லது தாழ்ந்த சாதியில் காதலிக்கும் குற்றவாளிகளின் உயிரை எடுக்கும் தண்டனையை விதிப்பது இந்த கட்டப் பஞ்சாயத்துதான். மார்ச் 2010இல், கொலையாளிகள் ஐந்து பேருக்கு தூக்குத் தண்டனையும், கொலை செய்யத் தூண்டிய கப் சாதிய பஞ்சாயத்துத் தலைவருக்கு சிறைத் தண்டனையும் இந்திய நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதற்கு பின்னரே இந்தியாவின் சாதிய கோர முகம் வெளியே தெரியத் தொடங்கியது. தண்டனை வழங்கப்பட்ட கப் பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கு ஆதரவாக ஹரியானா,பஞ்சாப்,உத்திர பிரதேசம் மற்றும் ராஜஸ்தானின் பிற கப் பஞ்சாயத்து உறுப்பினர்கள் பொங்கி எழுந்து இந்திய சட்ட அமைப்புக்கு சவால் விட்டனர். ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட சாதி சங்க தலைவருக்கு தங்களது ஆதரவை வெளிப்படையாக தெரிவித்தனர். ”பாரம்பரியத்திற்கு மதிப்பளிக்கும் காப்பாற்றும் வகையிலேயே” அவர்கள் கொலை செய்ததாகவும் குரல் எழுப்பினர். எதிர்ப்பவர்களை அச்சுறுத்தும் விதமாக தலித் குடியிருப்புகளை தீயிட்டனர். இதில் உயிரோடு எரிக்கப்பட்ட தந்தையும் அவரது ஊனமுற்ற மகளும் அடக்கம்.

கப் பஞ்சாயத்துகள் - இவர்கள் நமது “சுத்துபட்டு 18 பட்டிக்கும் நாட்டாமை” போலத்தான். என்ன, 18 பட்டிக்கு பதில் 84 பட்டிகள். இந்த கிராம மக்கள் அனைவரும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள். ஒரே கப் சாதி சங்கத்தை சேர்ந்த எல்லா ஆண்களும் பெண்களும் சகோதர உறவினர்.காதல் திருமணங்கள் கப் சங்களுக்குள் நடைபெறாது. அப்படி நடந்தால் அது பாவம். அப்படி ஒரே கப் பஞ்சாயத்தைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டால் அந்த ஜோடி கப் பஞ்சாயத்தால் கொலை செய்யப் படுவார்கள். அவர்களது குடும்பத்தினரும் தண்டனைக்கு ஆளாவார்கள்.

கிராமங்களும் கிராம மக்களும் கப் பஞ்சாயத்தினருக்கு கட்டுப்பட்டவர்களே. கப் பஞ்சாயத்தினரின் தலைவர் அவரது அறிவிற்கு ஏற்றபடி நிர்வாகம் செய்வார். முஸ்லிம் அமைப்புகள் பத்வாக்கள் வெளியிடுவது போன்று கட்டளைகளை அறிவிப்பார்- கொல்லவும்,குடும்பங்களை தள்ளி வைக்கவும்! அவர்களுக்கு இந்திய சட்டங்கள் குறித்தோ சட்ட அமைப்புகளின் தீர்ப்புகள் குறித்தோ கவலையில்லை. அவர்களுக்கு அவர்களது பழைய நம்பிக்கைகளும்,பாரம்பரிய வழக்கங்களுமே முக்கியம். இவர்கள் திரும்ப சதி வழக்கத்தை ஆரம்பித்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. காதலிப்பவர்களை தண்டிக்க இவர்களுக்குத்
தெரிந்த ஒரே நீதியும் தண்டனையும் - காதலித்தவர்களைக் கொலை செய்வதும் குடும்பங்களை விலக்கி வைத்தலுமே. இவர்கள் பெரும்பாலும் ஜாட் என்ற ஆதிக்க சாதியை சேர்ந்தவர்களாக இருப்பார்கள் - சாதியின் இரு கைகளான சொத்து மற்றும் பெண்ணை அதிகாரம் கொண்டு அடக்கியாள்வதே இவர்களின் முக்கிய நோக்கம். எந்த கப் பஞ்சாயத்துகளிலும் உறுப்பினர்களாக பெண்களுக்கு இடமில்லை.

தாராளமயமாக்கப்பட்ட பொருளாதார இந்தியாவின் இன்றைய தலைமுறை இளைஞர்கள் கிராமங்களை விட்டு நகரங்களுக்குச் செல்கிறார்கள். நகர்ப்புற கலாச்சாரங்களாலும், மாற்றங்களாலும் தாக்கத்திற்கு உள்ளாகின்றனர். ”அலைபாயுதே” ஸ்டைல் திருமணங்களையும், நாகரிகங்களையும் கைகொள்ள விரும்புகிறார்கள். இது கப்-களின் கண்களை உறுத்துகிறது. தாங்கள் கட்டி காத்துவந்த பழங்கால நம்பிக்கைகளும், பாரம்பரியங்களும், கலாச்சாரமும் கண்முன் சிதைக்கப்படுவதாக எண்ணி பழமைவாதிகளான கப் பஞ்சாயத்தினர்
மூர்க்கம் கொள்கிறார்கள். புதிய மாற்றங்களை விரும்பும் இளைய தலைமுறைக்கும், ஒன்றுக்கும் உதவாத outdated பழைய பஞ்சாங்கங்களுக்கும் இடையேயான உரசல் இது என்று சிலர் சொல்வது மேலோட்டமாக உண்மையாகத் தெரிந்தாலும் இதற்கு அடிநாதமாக இருப்பது ஆதிக்க சாதி உணர்வே! இதற்கு பலியாவது அப்பாவி இளைஞர்களும் அவர்களது குடும்பங்களுமே!

இந்தியாவிலேயே பெண்சிசுக் கொலை அதிகமாக நடப்பது ஹரியானாவில்தான். பெரும்பாலான ஹரியானா கிராமங்களில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனிப் பள்ளிகளுண்டு. நேரங்களும் வெவ்வேறானவையாகவும் இருக்கும். சில குடும்பங்களில் பெண்கள் ஓடிப்போய்விடுவார்கள் என்று பயந்து சிறிய வயதிலேயே திருமணம் செய்து விடுவார்கள். கப் பஞ்சாயத்தினரின் கட்டளைக்குக் கீழ்பட்டு பெண் குழந்தைகளுக்கு பூச்சிக்கொல்லிகளைக் கொடுத்து போலீஸுக்கு தெரியாமலே எரித்து விடுவதும் உண்டு. குடும்ப கௌரவம் என்பது பெண்ணை மட்டுமே சார்ந்துள்ளது போலும்! ஆணுக்காக சிறிதளவாவது பாரம்பரிய நம்பிக்கைகள் வளைக்கப்பலாம், ஆனால் பெண்ணுக்காக அவர்களது சட்டங்கள் சற்றும் வளைந்துக் கொடுக்காது. மீறி எவரேனும் ஓடிப் போனால் அந்த குடும்பங்கள் விலக்கி வைக்கப்படுவதோடு லட்சக்கணக்கில் அபராதமும் விதிக்கப்படும். அந்த குடும்பத்தை சேர்ந்த மற்ற பெண்கள் மீதும் உரிமை மீறல்கள் நடக்கும்; நடந்தாலும் யாரும் கேட்க முடியாது. குடும்ப கௌரவத்தை குலைக்கும் விதமாக ஒரு பெண் நடந்துக்கொண்டாள் என்பதே அவள் மீது வன்முறையை ஏவிவிடுவதற்கு போதுமானது .

மேலும் ஜாட்களில் பெண்களுக்கு சொத்துரிமை உள்ளதால் அடக்குமுறைக்கு அதிகம் ஆளாவதும் அவளே. உண்மையில் இந்த honour killing-ம் ஒருவகை Domestic Violenceதான். கௌரவத்திற்காக என்றால் மட்டும் கொலை செய்வது நியாயமாகி விடுமா என்ன?

திருமணம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். இந்திய சட்டத்திற்கு மட்டுமே அனைவரும் கட்டுப்பட்டவர்கள். முன்னேறிய சமூகத்தில் ஒருவரது விருப்பு வெறுப்புகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். யார் யாரை திருமணம் செய்து கொள்வது என்ற முடிவை சாதி சங்கங்கள் ஏன் எடுக்க வேண்டும்? அதுவும் பாரம்பரியம் மற்றும் கௌரவம் என்ற பெயரில்?

அரசியல் கட்சிகளும் இந்த கப் பஞ்சாயத்துகளை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது. சில அரசியல்வாதிகள் வெளிப்படையாகவே கப் பஞ்சாயத்துகளை ஆதரிப்பதாக சொல்கின்றனர். நமது ஊர் சாதி சங்கங்கள் மற்றும் கட்சிகளைப் போல கப்-களின் பெருத்த ஓட்டு வங்கிகளே காரணம். இவையே கப் பஞ்சாயத்தினருக்கு தைரியமூட்டுகின்றன. சட்டங்களுக்கு அப்பாற் பட்டவர்களென்று தங்களை நினைத்துக் கொள்ள வைக்கின்றன. அவர்களுக்கு தங்கள் கையிலிருக்க வேண்டிய அதிகாரமே முக்கியம். கப் பஞ்சாயத்தின் தலைவர் ராஜாவைப் போன்றவர். அவர்களுடையது தனி நீதிமன்றம். அவர் வைத்ததே சட்டம்.

தங்கள் ஓட்டு வங்கியை இழக்க விரும்பாத அரசியல்வாதிகள் கப் பஞ்சாயத்தை ஆதரிப்பதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. இல்லையெனில் கப் பஞ்சாயத்தை ஒழிக்க இன்னும் ஏன் அரசு எவ்வித முயற்சிகளை எடுக்கவில்லை? கப் பஞ்சாயத்தினருக்கு எதிரான சட்டங்களை இயற்ற இன்னமும் விவாதங்களே முழுமையடையவில்லை.

ஒரு மாதத்திற்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதியுடனான ஐந்து நட்சத்திர விடுதிகளின் கேண்டில் லைட் டின்னர், சலுகை விலையில் மொபைல் போன்கள், ஜோடியாக பப்-க்கு வந்தால் ஒருவருக்கு இலவச அனுமதி என்று காதலர் தினத்துக்காக சுண்டியிழுக்கும் விளம்பரங்களும், கவர்ச்சிகரமான சலுகைகளுமாக காதலர் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்படும் இந்தியாவில்தான் சாதி சங்கங்களை மீறித் திருமணம் செய்துக் கொண்ட காதலர்களின் உயிரை ”கௌரவத்திற்காக” எடுப்பதும் நடக்கிறது.

இன்று வரை சட்ட அமைச்சரும் மற்றும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் கப் பஞ்சாயத்துகளுக்கெதிரான மசோதாவை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர். விவாதங்களில் பாராளுமன்றம் பிளவுபட்டு நிற்கிறது! எதற்காக இன்னமும் காலதாமதம்? honour killing என்ற பெயரில் நிகழ்ந்தாலும் இது கொலைதானே!

”அட, சாதி எல்லாம் இப்போ யாருங்க பாக்குறாங்க? அதெல்லாம் அந்த காலம். தேவையில்லாம எல்லாத்துலேயும் சாதியை இழுக்கறாங்க, அதுவும் நம்ம ஊரிலே எங்கே சாதி இருக்கு?” என்று உங்களைப் போலத்தான் நானும் நினைத்துக்கொண்டிருந்தேன்.

ஆனால், குடும்ப கௌரவத்திற்காக கப் என்ற சாதிப் பஞ்சாயத்தின் கட்டளைக்கு கட்டுப்பட்டு தனது சொந்தங்களை தன் கையாலே கொல்வதற்கு வேறு என்ன காரணங்கள் இருக்க முடியும்?

அதுவும் தங்களது ஆசை மகன்களையும், மகள்களையும் தாங்களே கொன்றோம் என்ற குற்ற உணர்ச்சியோ வருத்தமோ கொஞ்சம் கூட இல்லாமல் குடும்பக் கௌரவத்திற்காக இதைச் செய்தேன் என்று பெருமைகொள்வதற்குப் பின்னால் வேறு என்ன காரணங்கள் இருக்க முடியும்?

இது எங்கோ வட இந்தியப்பகுதிகளில்தான் நடைபெறுகிறது என்று எண்ணிவிட முடியாது. நமது ஊர்களும் இதற்கு சற்றும் குறைந்தது இல்லை.

”நீயா-நானா” நிகழ்ச்சியின் காதல் திருமணங்களைப் பற்றிய எபிசோட் என நினைக்கிறேன் - மதுரைப் பக்கத்து கிராமத்து தலைவர் ஒருவர் “மீறி வேற சாதியிலே கல்யாணம் பண்ணிக்கிட்டா போட்டுற வேண்டியதாங்க” என்ற தொனியில் பேசிக்கொண்டிருந்ததை நமது வரவேற்பறையில் அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தவர்கள்தானே நாம்.

அவ்வளவு ஏன்?

மதுரையைச் சேர்ந்த மேகலாவும் சிவக்குமாரும் காதலித்திருக்கின்றனர். சிவக்குமார் வேறு சாதியைச் சேர்ந்தவரென்று மேகலா மற்றொருவருக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறார்.

அடுத்த சில தினங்களில் காதலர்கள் ஓடிப் போய் விடுகின்றனர். ஓடிப் போனவர்களை நயமாக பேசி அழைத்து வந்து அடித்து சிவக்குமாரை கொலையும் செய்துவிடுகிறார்கள். மேகலா தற்சமயம் உயிருக்குப் போராடும் நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார். சென்ற வாரம் நிகழ்ந்தது இது.

நமது பத்திரிக்கைகள் இதனை எப்படி பார்க்கின்றன? திருமணமானபின்னர் காதலனுடன் ஓடிவிட்டார் என்று கள்ளக்காதலாகவே நோக்குகின்றன. செய்தி வெளியிடுகின்றன.

அதன்பின்னால் புரையோடிப்போயிருக்கும் சாதியின் கோரப்பிடியை வெளிக் காட்டாமல், கண்ணோக்கும் முறையையே மாற்றி மேகலாவின் காதலை கள்ளக்காதலாக்கி பிரச்சினையை நீர்த்துப் போக செய்கின்றன.

டைம்ஸ் நௌ-வின் சுட்டி

தினமலரின் சுட்டி

மேகலாவும் சிவக்குமாரும் அரிவாளால் வெட்டப்பட்டதும் ”கௌரவத்திற்காகத்தான்”. சிவக்குமாரின் மரணமும் ”கௌரவக்கொலை“ தான்.

சட்டங்கள் மற்றும் தண்டனைகளினால் இந்த honour killing முடிவுக்கு வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், முடிவுக்கு கொண்டு வரப்படவேண்டியது - நமது கலாச்சாரமென்றும், பாரம்பரியமென்று ஆழமாக நமக்குள் பதிய வைக்கப்பட்டுள்ள சாதிய சிந்தனைகளே! ஒரு முன்னேறிய
சமூகம் என்று சொல்லிக் கொண்டு இந்தியாவை திரும்பவும் பழமையின் பிடிக்குள் கொண்டுச் செல்லாமல் காப்பது நம் மனதிலிருந்து முற்றிலுமாக சாதிய எண்ணங்களைக் களைவதன் மூலமே!

Saturday, July 10, 2010

chuk chuk rayil bandi - Telugu Version

sdr0167.mp3


”ஜோ ஜோ பாப்பா அழுதா காய்ச்சின பாலு தரணுமாம்...காய்ச்சலேன்னா அதுலே ஜெர்ம்ஸ் இருக்குமாம்” - மேடம் கொடுத்த விளக்கம்.

இந்தி வெர்ஷன் இங்கே!

Friday, July 09, 2010

வேரறுக்கப்படும் இருளர் பழங்குடிகளின் உக்கிரக்குரல் : ஒடியன்

"ஒடியன்" கவிதை தொகுப்பு பற்றி பூவுலகு இதழில் வெளிவந்த வழக்குரைஞர் இரா.முருகவேள் அவர்களின் விமர்சனம். ஒரு பகிர்வுக்காக இங்கே:

ஒடியன் தமிழில் வந்துள்ள ஒரு மாறுபட்ட அற்புதமான கவிதை தொகுப்பு.இக்கவிதைகள் முழுமையாக புரிந்துக்கொள்ள முடிந்தாலும், தமிழ் எழுத்துகளில் அமைந்திருந்தாலும் இவை தமிழ் கவிதைகள் அல்ல.மேற்கு தொடர்ச்சி மலைகளில்,நீலகிரிமலை சரிவுகளில் வாழும் பழங்குடி மக்களான இருளர்களின் மொழியில் இக்கவிதைகளை லட்சுமணன் எழுதியுள்ளார். இவை தமிழ் எழுத்துகளை பயன்படுத்தி எழுதப்பட்ட இருளர் மொழிக் கவிதைகள்.

இந்தியாவில் எழுத்து வடிவம் இல்லாத பல நூறு பழங்குடி மொழிகள் உள்ளன.இவை இந்தி, தெலுங்கு,தமிழ்,மலையாளம் போன்ற வளர்ச்சியடைந்த மொழிகளின் தாக்கத்தால் தினம்தினம் சிதைந்து பெருமொழிகளோடு கலந்து கரைந்து வருகின்றன.அப்படிபட்ட ஒரு மொழிதான் இருளர்களின் மொழி.

ஆறுவழிப் பாதைகளும், ஆலைகளும் உருவாகி வரும்,டைடல் பார்க்கும் நட்சத்திர ஓட்டல்களும் ஷாப்பிங் மால்களும் நிறைந்திருக்கும் கோவையின் கிழக்குப்புறம்தான் எல்லோருக்கும் தெரியும்.

அதற்கும் மேற்கே கஞ்சாக் கடத்தல்காரர்களும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் நாடு கடத்தப்பட்ட ஆசிரியர்களும் மட்டும் புழங்கும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மொட்டை மலைகள் பரந்து விரிந்திருக்கும் ஆனைக்கட்டி,அட்டப்பாடி பள்ளத்தாக்கை பற்றி பலருக்குத் தெரியாது. இங்கேதான் இருளர்கள் வசிக்கிறார்கள். இங்கும் பாலக்காட்டு கணவாயை கடந்து ஆனைமலைகளிலும் இருளர்கள் வசிக்கிறார்கள்.

லாபவெறி கொண்ட சமவெளி குடியேற்றக்காரர்களுக்கும், புல் பூண்டிலிருந்து மலைகளுக்கு மேலே தெரியும் வானம் வரை தனக்குத்தான் சொந்தம் என்று கருதும் வனத்துறைக்கும் வாழ்விடங்களை இழந்து அனாதைகளாக அலையும் யானைகளுக்கு நடுவே இவர்கள் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள்.

தங்கள் வாழ்வையும், பண்பாட்டையும் நிலங்களையும் பாதுகாக்க ஒரு ஜீவ மரணப் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த மக்களைப் பற்றித்தான் இந்தக் கவிதைகள் பேசுகின்றன.

கூப்பு ரோட்லே
கையிலே கெடாய்த்தூம்
இருளனெ வெலாய்க்கி
தூக்கி பெணாங்கி மெதிச்சான்
எச்சாவோ நிந்த
காண்ரீட்டுக்காரனே
ராஜா


காடு வெட்ட வனத்துறை போட்ட சாலையின் அருகில் நின்ற இருளனை விலக்கிவிட்டு, எங்கேயோ நின்ற மரத்தை வெட்டும் காண்ட்ராக்ட் எடுத்தவனை சபித்து மிதித்தது யானை என்று உக்கிரத்துடன் தொடங்குகிறது கவிதை தொகுப்பு. பின்பு தமிழகம் முன் கண்டிராத தளங்களில் விரிகின்றன கவிதைகள்.

மலைப்பகுதிகளில் கணவனோடு கை கோர்த்து நடைபோடும் தன்னை விழிபிதுங்க உற்று பார்க்கும் கொங்கர்களை வெறுத்து ஒதுக்கும் இருளச்சி....

எங்கள் மலைகளை புதைத்து அணைகட்டிவிட்டு எங்களுக்கு மின்சாரம் மறுக்கிறாயா என்று சீறும் மூப்பன்.....

இது எங்கள் காடு.இங்கே எங்களை அதிகாரம் செய்யாதே என்று எச்சரிக்கும் மலைமகள்....

தொண்டு நிறுவனங்கள்

நட்டு வைத்த மலைகளுக்கு பொருந்தாத கருவேல மரங்களை துவம்சம் செய்துவிட்டு நீரைத் தேடி காடுகளில் அலையும் யானை....

என்று தமிழ்கவிதை உலகம் கண்டும் கேட்டும் இராத பாத்திரங்கள் ஒடியனில் சர்வ சுதந்திரமாக உலவுகின்றன. நகரமயமாக்கலின் உச்சத்தை பார்த்துக்கொண்டிருக்கும் தமிழக வாசகர்களுக்கு இது நிச்சயம் பிரமிப்பூட்டும் அனுபவமாக இருக்கும். தொகுப்பு முழுவதும் மலைமக்கள் தங்கள் வாழ்க்கையை எளிமையாக ஆழமாக வன்மையுடன் பகிர்ந்துக் கொள்கிறார்கள், லட்சுமணன் மூலமாக.அவர்களிடம் இறைஞ்சுதலோ,இரக்கத்தை பிச்சை கேட்கும் தன்மையோ இல்லை.

சற்றே மரபு மீறலாக இருந்தாலும் என்று சொல்லியே, கவிதைகளுக்கு கீழே புரிந்துக் கொள்வதற்கு வசதியாக சில குறிப்புகளை கவிஞர் கொடுத்திருக்கிறார்.இவை பழங்குடி மக்களின் மொழியை விட சிந்தனை ஓட்டத்தை புரிந்துக் கொள்ளத்தான் உதவுகின்றன. மொழிதான் புரிகிறதே!ஒரு பழங்குடி மொழி தமிழின் கலப்பால் நீர்த்துப்போய் தமிழ்ர்களுக்கு இயல்பாய் புரிகிறது என்பது வேதனையானது அல்லவா?

தொன்மங்களாகவும், மறைபொருளாகவும் இன்னும் எத்தனையோ அற்புதமான உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடியதாக்வும் உள்ள அந்த மொழியின் அடிநாதத்தை புரிந்துக் கொள்ளவே இந்த அடிக்குறிப்புகள் உதவுகின்றன.இதற்கு சரியான எடுத்துக்காட்டு,”பு குத்தி மாரி” என்ற கவிதை

..முனியே
தல கட்டிக்கும்
முண்டக் கட்டிக்கும்
நீவிற் ஆரு
நின்னே தேடித்தா
அலேஞ்சு கொண்டிருக்கினா
எத்து பூட்டேன்
தலெ பெத்த புழு

இருளர்களிடையே நிகழும் ஒரு பழங்கதையை அடிப்படையாகக் கொண்டுள்ளது இந்தக் கவிதை.
ப ழங்குடி மக்களை பொருத்தவரை ”முனி” அந்நியன். தேனெடுக்கச் சென்ற இருளனின் தலையை கொய்து வீசிவிட்டு தேனைக் கைப்பற்றிக் கொள்கிறது கீழ்நாட்டிலிருந்து வந்த முனி. இன்றும் ஏராளமான முனிகள் கீழ்நாட்டிலிருந்து வனது இருளர்களின் உழைப்பைக் கொள்ளையடிக்கிறார்கள். வெட்டப்பட்ட இருளனின் அழுகிய தலையிலிருந்து வந்த புழு அவர்களை பழிவாங்கத் தேடிக் கொண்டிருக்கிறது என்கிறாள் ஓர் இருளப் பெண்.

இதுபோன்ற ஒரு சில கவிதைகளை அடிக்குறிப்புகள் இல்லாமல் புரிந்துக் கொள்ள முடியாது. பழங்குடி மக்களின் தொன்மங்களை, பண்பாட்டை, வலிகளை நமது அரசும் சமூகமும் திரை போட்டு அல்லவா மறைத்து வைத்துள்ளன. அந்த வகையில் லட்சுமணன் தந்துள்ள குறிப்புகள் பெரிதும் உதவுகின்றன.

இந்தக் கவிதைகளை படிக்கும்போது இவற்றை போன்ற வீரியமான கவிதைகளை நேரடியாக தமிழில் எழுதியிருக்க சாத்தியமில்லை என்று தோன்றுகிறது. தமிழுக்கு முழுவதும் அந்நியமான பழங்குடி மக்களுக்கே உரிய ஒரு சிந்தனையோட்டம் இக்கவிதைகளில் ஊடுருவி நிற்கிறது. அதைத் தமிழில் எழுதியிருந்தால் அது மொழிப்பெயர்ப்பாகத்தான் இருந்திருக்கும். மொழிப்பெயர்ப்பு ஒரு நாளும் மூலத்துக்கு ஈடாகாதே!.

இதைப் படிக்கும்போது இன்னொரு சந்தேகமும் வரலாம். இது ஒரு வேளை ஏற்கெனவே இருளர் மக்களிடையே புழங்கி வந்த கவிதைகளை தொகுத்த முயற்சியோ என்று. இந்த சந்தேகம்தான் லட்சுமணன் ஒரு கவிஞராக வெற்றி பெற்றிருக்கிறார் என்பதற்கான சாட்சி.

கவிஞன் தான் தமிழன் என்ற அடையாளத்தை சாதி, மத அடையாளத்தை, இரண்டாயிரம் ஆண்டு மொழிச் செழுமையை உதறிவிட்டு தன்னை ஒரு பிரதிபலிக்கும் கண்ணாடி போல ஆக்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். இருளர் மொழிப் பாடல்கள் எல்லாம் பாடுவதற்கும் ஆடுவதற்கும் ஏற்ற வகையில் சந்தம் கொண்டதாக அமைந்திருக்கும். லட்சுமணன் தமிழின் புதுக்கவிதை பாணியை கையாண்டிருக்கிறார். மொழி ஒத்துப் போவதால் இதுவும் பொருத்தமானதாகவே தோன்றுகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக இந்தக் கவிதைகள் பழங்குடி மக்களின் அரசியலைப் பேசுகின்றன. வெற்று ஆரவாரம் எதுவும் இல்லாமல் பழங்குடி மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் தீவிரத்துடன் முன்வைக்கின்றன இந்தக் கவிதைகள்.

பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரக் காடுகள் இன்றைய திருப்பூர் வரை பரந்திருந்தன. இச்சமவெளிக்காடுகளில் சக மனிதனை சுரண்டிக் கொள்ளையடிப்பதையும், ஆணாதிக்கத்தையும் அறிந்திராத பல பழங்குடியினர் வாழ்ந்து வந்தன. இன்றைய கோயமுத்தூர் அன்று
ஒரு சின்னஞ்சிறிய இருளர் பதி. அதன் தலைவன் கோவன் மூப்பன். கோனையக்கா அப்பதியின் தாய்த்தெய்வம்.

இந்த பழங்குடி மக்களின் நிலங்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரவும் மக்களை அடிமை கொள்ளவும் சமவெளி அரசுகள் இருளர் பதிகளின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தின. வெல்லப்பட்ட அல்லது முழுவதும் வெல்லப்பட முடியாத பழங்குடி மக்களை நாகரீக மக்களாக ஆக்கி, அதாவது சாதீய சமூகத்துக்குள் கொண்டுவர மதங்கள் இப்படைகளுக்கு உதவின.

இந்தப்பணியில் முதலில் ஈடுபட்டது சமணம். சமணர்கள் கோனையக்காவின் கோவிலை கைப்பற்றி அதை தாராதேவி ஆலயமாக மாற்றினர். அங்கு வாழ்ந்த இருளர்கள் ஒடுக்கப்பட்ட மக்களாக மாற்றப்பட்டிருக்கலாம். பின்பு சமணர்களை விரட்டிவிட்டு ஆதிக்கத்துக்கு வந்த சைவம், தாராதேவியை கோனியம்மனாக மாற்றியது.

இன்றும் நியான்,சோடியம் ஆவி விளக்குகள் ஒளிரும் நகரின் மையத்தில் கோனியம்மனாக பெயர் சூட்டப்பட்ட கோனையக்காவின் கோவில் இருக்கிறது. ஆனால் அன்பும் எளிமையும் கொண்ட அவள் குடிகள் எங்கோ காற்றில் கரைந்து மறைந்து போய்விட்டார்கள். தொலைவில் மங்கலாக தெரியும் நீலமலைக்குள் விரட்டப்பட்டு விட்டார்கள் அவர்கள்.

"இப்போது என் பேர் கோனியம்மன். எனக்கு தங்கத்தில் பாவாடையும் நெய்விளக்கும் உண்டு. ஆனால் என் குடிகள் எங்கே? தேடிக் கண்டுபிடித்துக் கொடு" என்று சுள்ளாம்ப்ய்ய்க்கே என்ற பறவையை கேட்கிறது கோனையஃகா என்ற தெய்வம் கோனைய்ஃக்கா என்ற கவிதையில்.

உலகம் அழிந்தபோது கடவுள் யாராவது மனிதர்கள் பிழைத்திருக்கிறார்களா என்று கண்டறிய சுள்ளாம்பூக்கையை அனுப்பியதாக ஒரு தொன்மம் உள்ளது என்று கவிஞர் அடிக்குறிப்பில் கூறுகிறார்.

ஆமாம், பழங்குடிகளின் உலகம் அழிந்துதான் போய்விட்டது. இன்று இரவுகளில் வானத்தை செந்நிறமாக ஒளிரச் செய்யும் இந்தக் கோவை நகரத்துக்கு சொந்தக்காரர்கள் இருளர்கள் என்பதைவிட இதைவிட அழகாக சொல்ல முடியுமா என்ன?

சமணமும், பௌத்தமும், சைவமும்,வைணமும், பழங்குடி மக்களுக்கு அழிவைத்தான் கொண்டு வந்தன. அவை உழைக்கும் மக்களுக்கு எதிராக ஆளும் வர்க்கங்கள் பயன்படுத்திய ஆயுதங்கள்தான். பின்பு வந்த ஆங்கிலேயர்கள் காடுகளை வேறுவிதமாக பார்த்தனர். இவர்கள் தங்கள் நாடுகளில் பழங்குடிகளையும் காடுகளையும் அழித்தவர்கள்தான் இவர்கள். இவர்கள் வனத்தை ஏகாதிபத்திய நுகர்வுக்கான பொருளாக மட்டுமே பார்த்தனர். (இங்கு ஒரு விஷயத்தை நினைவுகூர்வது முக்கியமானது. 1832இல் ஜெட்மனியில் மரத்திருட்டுச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. காடுகளில் கிடக்கும் காய்ந்த மரத்துண்டுகளைச் சேகரிக்க எளிய மக்களுக்கு உள்ள உரிமை தடை செய்யப்பட்டது.
காடுகளின் மீதான தனிச் சொத்துரிமை முழுமைப்படுத்தப்பட்டது.இச்சட்டம் குறித்த ஆய்வுதான் கார்ல் மார்க்ஸை தனிச்சொத்துரிமை, பொதுவுடமை குறித்த ஆய்வுகளை நோக்கித் தள்ளியது.)

இந்த அனுபவங்களோடு இந்தியா வந்த ஆங்கிலேயர்கள் காடுகளையும், அவற்றில் கிடைக்கும் செல்வங்களையும் முழுமையான பயன்பாட்டுக்குக் கொண்டு வரத் துடித்தனர்.இதற்காகத்தான் காடுகளின் மீதான உரிமையும் உளப்பூர்வமான பிணைப்பும் கொண்டிருந்த பழங்குடிகளை அந்நியப்படுத்த வனச் சட்டத்தையும் வனத்துறையையும் உருவாக்கினர்.

பழங்குடி மக்களின் விவசாயம் பெருமளவு தடை செய்யப்பட்டது. வேட்டை தடை செய்யப்பட்டது.காப்பு காடுகளாக அறிவிக்கப்பட்ட இடங்களில் வாழ்ந்த பழங்குடிகள் எப்போதும் தங்களை வெளியேற்றத் துடிக்கும் வனத்துறையின் தயவிலேயே வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது. வனத்துறை தன்
விருப்பம் போல பழங்குடி மக்களை காடுகளிலிருந்து வெளியேற்றியது. வெளியேற்றி வருகிறது. மீதியுள்ளவர்களை துண்டு நிலங்களுக்குள் முடக்கும் பணியும் செவ்வனே நடைபெற்று வருகிறது.

எனவே, இக்கவிதைத் தொகுப்பில் இயல்பாகவே வனத்துறை அடிக்கடி இடம்பெறுகிறது. தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அடியையும் மூர்க்கமாக கட்டுப்படுத்தும் சர்வவல்லமை வாய்ந்த வனத்துறையின் மீது பழங்குடி மக்கள் கொண்டுள்ள கோபத்தையும், கொதிப்பையும் அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றன இக்கவிதைகள்.

சகுனா குருவி கத்தூ
தாட்டியுடு கேளே மூப்பா.....

சகுனா குருவி கத்தினால் கொலை விழும் என்பது நம்பிக்கை. கொலை விழாமல் தடுக்க வேண்டுமென்றல், தன்னை அதிகாரம் செய்யும் இவனை அனுப்பிவிடு என்கிறாள் ஒரு மலைமகள்.
இதை அறிவுரையாகவும்,ஆலோசனையாகவும் ஏன் உத்தரவாகவும் கூட எடுத்துக்கொள்ளலாம். இதை புறக்கணித்ததன் விளைவைத்தான் மத்திய இந்தியாவில் அரசு அனுபவித்துக் கொண்டிருக்கிறது. வனத்துறையின் பாதுகாப்பில் விடுதலை பெற்று 60 ஆண்டுகளில்30 சதவீதமாக இருந்த காடுகள் 11 சதவீதமாகக் குறைந்துவிட்டன. ஆனால், பழங்குடி மக்கள் இருப்பதால் தான் காடுகள் அழிகின்றன. காடுகளை காப்பாற்ற மக்களை வெளியேற்ற வேண்டும் என்கிறது வனத்துறை. இதை வழிமொழிகின்றன பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள். இவர்கள் நடத்தும் கண்காட்சிகளில்
ஒரு போதும் காடுகளை சூறையாடி உருவாக்கப்பட்ட தேயிலைத் தோட்டங்களும், அணைகளும் இடம் பெறுவதே இல்லை. இந்த நிறுவனங்களும் அவற்றின் பாரபட்சமான பார்வையும் கூட நூலில் விமர்சிக்கப்படுகிறது. (ஒரு சூழலியல் கண்காட்சியின் பார்வையாளர் குறிப்பு)

எல்லாவற்றுக்கும் மேலாக பழங்குடி மக்களின் மொழி, பண்பாட்டின் மீது அரசும், மதபீடங்களும், சமவெளி குடியேற்றக்காரர்களும் நிகழ்த்தும் தாக்குதல்களைப் பதிவு செய்யும்போது கவித்துவத்தின்
உச்சத்தை தொடுகிறார் கவிஞர்.

பள்ளிக்கூடம் என்ற ஒரு கவிதை

வீடு
...
தான் தூங்குவமே
ஓ கூரே
தாய்
ம் அஃகா
தந்தை
அமைமே
தவளை
ம்கூம்
கப்பே
சொன்னதை திருப்பிச் சொல்லு
பிரம்பு பிஞ்சுடும்
...
வகுப்பு வெளியே
முட்டி போட்டு நின்னு கொண்டிருக்கேம்
நானும் எத்து மொழியும்.

தமிழில் வெளிவந்துள்ல மிக அற்புதமான கவிதைகளில் ஒன்றாக இதைக் குறிப்பிடலாம். பள்ளிகளில் இருளர் குழந்தைகளுக்கு தமிழ்தான் தாய்மோழி என்றூ சொல்லித் தரப்படுகிறது. பழங்குடி மக்களின் மொழி ஒரு மொழியாகவே மதிக்கப்படுவதில்லை.அவற்றைக் காப்பாற்ற, அவற்றின் தனித்துவத்தை பேண எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. பழங்குடி மொழிகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றன.

எல்லாவற்றுக்கும் மேலாக பழங்குடி மக்கள் மீது இறுதித் தாக்குதல் தொடுக்கிறது மதம். சைவம், வைணவம் அனைத்தையும் இணைத்து விஸ்வரூபம் எடுத்து நிற்கும் மதம். இது ஆதிவாசிகளை இந்துக்களாக வளர்க்கும் வேலையை மேற்கொள்கிறது. நாகரிகப்படுத்த ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்கப்பட்ட ஆஸ்திரேலிய அபாரிஜீனிக் குழந்தைகள் போல, மலையின் மடியில் கட்டப்பட்டுள்ள ஒரு ஆசிரமத்தில் பழங்குடிக் குழந்தைகள் தங்கவைக்கப்படுகிறார்கள். தினமும் தாங்கள் அறியாத தெய்வங்களுக்குப் பூசை, புரியாத மொழியில் சுலோகங்கள்...பட்டை...கொட்டை..இலை தழைகளைச்
சமைத்து சைவ உணவு...குழந்தைகளை வேரோடு பிடுங்கி மூளைச்சலவை செய்து வேறுவிதமாக் வளர்க்க விரும்புகிறது மதம். மலைகளில் ஒரு வேளை சதிமாதாக்களையும், கண்ணப்ப நாயனார்களையும் உருவாக்க அது விரும்பலாம்.

அபாரிஜீனிக் குழந்தைகளின் வேதனை நெஞ்சை பிளக்க்க் கூடியது. ஆனால், ஆனைக்கட்டி சகோதர்களின் நிலை அவ்வளவு மோசமில்லை. ஆசிரமத்தில் பயின்று எரிச்சலடைந்த ஒரு சிறுவன் "எங்கடா போன குறிச்சியா" என்கிறான். குறிச்சியர் என்னும் பழங்குடிகள் பார்ப்பனர்களைத்
தீண்டத்தகாதவர்களாகக் கருதுபவர்கள்(பிக்ஷா).

பழங்குடி மக்களின் நிலங்களைப் பறித்துக் கொண்ட குடியேறிகளும் தங்கள் பங்குக்கு பழங்குடிகளை நாகரிகப்படுத்த முயற்சிக்கின்றனர். ஆணுக்குப் பின் பெண் போக வேண்டும் என்கின்றனர். கணவனை இழந்த பெண் விதவைக் கோலம் பூண வேண்டும் என்கின்றனர். தனித்து தின்னும் கலையை, சொத்தும்
சாதியத்தின் மேன்மையை, ஆண்குழந்தையின் அருமையைச் சொல்லிக் கொடுக்கிறார்கள். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். பழங்குடி மக்களின் வாழ்க்கையை, போராட்டத்தை கண்முன் நிறுத்து ஒரு அற்புதமான பதிவு இக்கவிதைத் தொகுப்பு. மத்திய இந்தியாவில் பழங்குடி மொழிகளுக்கு எழுத்து வடிவம் தர மாவோயிஸ்டுகள் முயற்சித்து வருவதாகக் கேள்விப்படுகிறோம்.

தமிழக்கத்தை பொறுத்தவரை இது முதல் முயற்சி, அற்புதமான முயற்சி.

Wednesday, July 07, 2010

நாங்களும் மீன்களும்!


கடந்தவாரத்தில் சில புதிய கதைப்புத்தகங்களை வாசித்தோம். இன்னும் கொஞ்சம் வளர்ந்த பிறகு வாசித்து காட்டினால் எளிதாக இருக்கும் என்று நினைத்து எடுத்து வைத்திருந்தேன். என் பர்த்டே வர்றதுக்கு இன்னும் எவ்ளோ டேஸ்ப்பா இருக்கு என்று பப்பு கேட்டதும் தான் உறைத்தது இன்னும் ஒரு சில மாதங்களில் பப்பு ஐந்து வயது சிறுமி என!

தான் வளர்க்கும் தங்க மீன்களுடன் தானும் ஒரு மீனாக மாறி ஒரு நாளை செலவழிக்கும் சிறுவனின் கதை. எளிய கதைதான். உடனே பப்புவுக்கு மீன் ஆக்டிவிட்டி செய்யும் ஆசை வந்துவிட்டது.

மேலிருப்பது பப்பு வரைந்தது. நெளிகோடுகளும் அதனை பின்னர் பிரஷ் கொண்டு தீற்றினாள். கீழிருப்பது நான் வரைந்தது. இந்த மீனைக் கண்டதும் அவள் வரைந்ததன் மேல் திருப்தியில்லாமல் இதில் வரைய விருப்பப்பட்டாள். ஆனால் இதில் வரையும்படி எதுவுமில்லாததால் கடைசியில் விரல்களில் வண்ணத்தை (thump print) ஒட்டி செதிள்களை தீற்றினாள்.
இரண்டு மீன்கள் வரைந்ததில் சரியாக வரவில்லை என்று நினைத்து வண்ணக்காகிதங்களை வெட்டித்தரச் சொன்னாள். நான் நன்றாக வரைவதாக அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட பப்பு என்னையே மீன் வரையச் சொன்னாள்.

பேஸ்டிங் மட்டும் பப்பு!

மீன்குழம்பும் வறுவலும் சாப்பிட்ட ஒரு சனிக்கிழமை மதியம் இப்படியாக கழிந்தது.

Tuesday, July 06, 2010

ஓ மேரே சோனா ரே....ஒண்ணாம் தேதி காசு பத்தி எழுதினதும் அமைதிச்சாரல் தங்க விருதை வழங்கியிருக்கிறார். மிக்க நன்றி அமைதிச்சாரல். :-)

விருதை இவர்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்!

ஜெயந்தி

அம்பிகா

நசரேயன்

நிஜமா நல்லவன்

சின்னு ரேஸ்ரி

மற்றும்

பிங்கி ரோஸ்


அந்த கோல்ட் ஈஸ் ஓல்ட் ஆகிட்டதால இந்த ஓல்ட் ஈஸ் கோல்ட் ....ஹிஹி

Thursday, July 01, 2010

காசு மேலே காசு வந்து....

நினைவு தெரிந்த நாளாக பணத்தில் மேல் ஆசைப்பட்டிருக்கிறேன். கையில் காசு இருப்பது எனக்கு மகிழ்ச்சியளித்திருக்கிறது. காசு வைத்திருப்பது சுதந்திரம். தேவைகள் என்று பெரிதாக ஒன்றுமில்லாவிட்டாலும் கையில் காசு இருப்பது ஒரு தைரியம். நம்பிக்கை. எனது சிறு பீரோவின் சேஃபின் உள்ளறையில் நாணயங்களை சேமித்து வைத்திருந்தேன். பெரும்பாலும் அதை செலவு செய்வதற்கு சந்தர்ப்பங்களே இருந்தது இல்லை.

ஆனால், அவ்வப்போது அவற்றை கைகளில் எடுப்பதும் வைப்பதுமாக பார்த்து பார்த்து மகிழ்ச்சியடைந்திருக்கிறேன். 'பெரிசானப்புறம் இந்த பீரோ ஃபுல்லா காசு வைச்சுப்பேன்' என்று கனவு கண்டிருக்கிறேன். காசு அல்லது பணம் என்பது எனது உலகில் நாணயங்களே. ரூபாய் தாள்களும் காசுதான் என்று அறியாத வயது. அல்லது காசாக மதிக்க தெரியாத வயது.ஐந்து வயதிருக்கலாம் அப்போது.

“நீ பெரிசாகி என்னவாகப் போறே' என்பதுதான் அன்றைய குழந்தைகள் அதிகமாக எதிர்கொண்ட கேள்வியாக இருக்கும்.அது புதியவர்களானாலும் சரி..பழகியவர்களானாலும் சரி. எத்தனை முறை கேட்டிருந்தாலும் சரி...குழந்தைகளை பார்த்ததும் நோக்கி வீசப்படும் கேள்வி அதுதான்.

“டாக்டர் ஆகப் போறேன்”

”டாக்டர் ஆகி என்ன பண்ணுவே”

“ஊசி போட்டுட்டு, காசு வாங்கி டிராவிலே போட்டுப்பேன்” - இதுதான் உறுதியான குரலில் எனது பதில்.

பெரிம்மாவின் நண்பர் பானு ஆண்ட்டி கிளினிக்குக்கு தினந்தோறும் செல்வோம். சாயங்கால நேரங்களில் யாரும் இருக்க மாட்டார்கள். பெரிம்மாவும் பானு ஆண்ட்டியும் பேசிக்கொண்டிருக்க அவரது சுழல் நாற்காலியில் அமர்ந்தும் ஸ்டெத்தை வைத்தும் கிளினிக்கை சுற்றியும் விளையாடிக்கொண்டிருப்பேன். அப்போது பார்த்ததுதான் - பானு ஆண்ட்டி ஸ்டெத் வைத்து பரிசோதித்துவிட்டு காசு வாங்கி டேபிள் டாராவில் போடுவார். இன்னொரு கவர்ச்சி அம்சம் - மெத் மெத்தென்ற சுழல் நாற்காலி.

சாயங்கால வேளையில், ஹால் முழுக்க 30-40 அண்ணாக்கள் நிறைந்திருக்க பாடம் நடத்தும் பெரிம்மாவின் வேலை எனக்கு பெரிதாகவே படவில்லை. தினமுமா ட்யூஷனுக்கு காசு வாங்குவார்கள்?

புத்தகங்கள் மூலமும், அமெரிக்க ரிட்டர்ன் சொந்த பந்தங்கள் மூலமும் பாக்கெட் மணி பற்றி அறிய நேர்ந்தது. ஆனால், வீட்டைப் பொறுத்தவரை பணம் என்பது குழந்தைகள் கையால் தொட்டுவிடவேக் கூடாத வஸ்து அது.

தப்பித்தவறி பிறந்தநாட்களுக்கு யாரேனும் ஓரிருவர் ஐம்பது ரூபாய் அல்லது நூறு ரூபாயை கொடுத்துவிட்டாலோ ஷாக் அடித்தாற் போல பதறிப் போய்விட வேண்டும். அவர்கள் எவ்வளவு வலிய வலிய திணித்தாலும் சரி, கையை நீட்டி வாங்கிவிடக் கூடாது. அதில்தான் குடும்பத்தின் வளர்ப்பு உள்ளது.

பின்னர், கொஞ்சம் வளர்ந்தபின் காசு வாங்கலாம், ஆனால் பெரியவர்களிடம் கொடுத்து விட வேண்டும் என்று நிலைமை முன்னேறியது. அவ்வப்போது நாம் கணக்குக் கேட்டுக்கொள்ளலாம். அது கணக்கோடே நின்று விடவும் வாய்ப்பு அதிகம். ஆனால், ஷட்டில் பேட் அல்லது கேரம் போர்ட் அல்லது அந்த மாத அருண் ஐஸ்க்ரீம் கோட்டாவாக கணக்கு காட்டப்படலாம் - அது உங்கள் ஏமாறும் திறனை பொறுத்தது.

ஆனால், கையில் காசு வைத்துக்கொள்ள வேண்டுமானால் கண்டிப்பாக நன்றாக படிக்க வேண்டும். வேலைக்குப் போக வேண்டும். இதை மனதில் பதிய வைக்கவே வீட்டில் இவ்வளவு முயன்றார்கள் என்று நினைக்கிறேன்.

அது ஓரளவு வொர்க் அவுட் ஆகியது. அம்மா - அப்பா விளையாட்டில் கூட நாந்தான் வேலைக்குப் போயிருக்கிறேன். விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்த பக்கத்துவீட்டுப் பையன் “ஆச்சி, நான் ஒரு வாட்டி வேலைக்குப் போறேன்.. ஆச்சி” என்று கூட விளையாடும் போது கெஞ்சியிருக்கிறான். (அடுத்த விடுமுறைக்கு அந்த பையன் வரவேயில்லை!LoL)

மாதம் ஒரு முறை கண்டிப்பாக பெரிம்மா எங்களை அருண் ஐஸ்கிரீம் அழைத்துச் செல்வார். மாத சாமான் வாங்கும்போது ஒரு பாக்கெட் சாக்லெட்கள் கண்டிப்பாக உண்டு. இவை தவிர நொறுக்ஸ். வேண்டிய கதை புத்தகங்கள் வீட்டுக்கு வந்துவிடும். இவை தவிர பிள்ளைகளுக்கு அப்படி என்ன தேவை - காசு எதற்கு என்பதே பெரியவர்களின் வாதமாக இருந்தது.

ஆனால் நமக்கு அப்படியா? நண்பர்களுக்கு பிறந்தநாள் பரிசு வாங்க வேண்டுமானால் காசு அளந்துதான் தரப்படும். மறுத்து அடம்பிடித்தால் அதுவும் கிடைக்காமல் போய் பரிசுப் பொருளாகவே வாங்கி வந்து தரப்படும். வாழ்த்து அட்டைகள் பற்றி சொல்லவே வேண்டாம். நாமே வரைந்து அனுப்பினால்தான் நண்பர்களுக்கு நாம் அளிக்கும் மரியாதை என்று உணர்த்தப்பட்டு எனது கைவண்ணங்களே வாழ்த்தட்டைகளாயின.

அதில் எழுதி அனுப்புவதற்கு செம செண்ட்டியான டச்சிங் டச்சிங் வாசகங்களை ஒரு டைரி முழுவதும் சேகரித்து வைத்திருந்தேன். மிஸ் யூ, ஜஸ்ட் டு சே அ ஹலோ, ஹவ் அ குட் டே, ஹாப்பி பர்த்டே, கெட் வெல் சூன், பான் வாயேஜ் என் ஒவ்வொன்றிற்கும் 7 அல்லது 8 வரிகளுக்கு மிகாமல் நெஞ்சை பஞ்சாக்கி பஞ்சை பஞ்சராக்கும் வசன வரிகள்!

இவை எல்லாமே எனது கையில் பணம் இருந்தால் நான் விரும்பியதை யார் உதவியில்லாமலே செய்யலாமென்று தோன்றவைத்தது. எப்படி சம்பாதிப்பது என்றெல்லாம் ஒரே யோசனை. வெளிநாட்டில் பிள்ளைகள் பள்ளியில் படிக்கும் போதே பார்ட் டைமாக வேலை செய்து சம்பாதிப்பார்கள் என்றெல்லாம் கேள்விப்பட்டதிலிருந்து நானும் ஏதாவது செய்து சம்பாதிக்க வேண்டும் என்று ஒரே ஆசை.

ஒரே வழி பிசினஸ். ஆனால், என்ன செய்வது? ஆயாவுக்கு பென்ஷன் வந்தால் அதில் இருபது ரூபாய் தருவார். பள்ளியிறுதியில் அது நூறு ரூபாயாக உயர்ந்தது. அதைவிட்டால் பிறந்தநாட்கள் - அது வருடம் ஒரு முறைதான்.

கல்லூரிக்கு வந்த பிறகே கொஞ்சம் பெரிய மனுசியாக பார்க்கப்பட்டேன். பெரிம்மாவும் அம்மாவும் அனுப்பும் செக்க்கில் எனது பெயரை பார்த்தபின் ஏற்படும் பெருமித_சந்தோஷ_உணர்வுகள் அலாதியானது. பீரோ லாக்கரில் இருந்த நாணயங்களை எண்ணியது போலவே அவ்வப்போது பாஸ் புக்கை எடுத்து பார்த்துக்கொண்டிருந்தேன். மெஸ் பீஸ் கட்டியதும் கொஞ்சம் சந்தோஷம் குறையும். ஒவ்வொரு செமஸ்டரும் எனது உள்ளார்ந்த சந்தோஷமானது சேவிங்ஸ் அக்கவுண்டைப் பொறுத்து ஏறி இறங்கிக் கொண்டிருந்தது.

ஆனாலும் ஏதாவது பிசினஸ் செய்ய வேண்டுமென்று சுஜாவும் நானும் பேசிக்கொள்வோம். சுஜாவின் அப்பா ஷேர் ப்ரோக்கர்.


ஷேர்கள் வாங்கி பெரிய ஆளாகிவிடலாமென்று மனக்கோட்டை கட்டிக்கொண்டு பெரிம்மாவை நச்சு பண்ணியதில் பாரி அங்கிள் மூலமாக சிண்டிகேட் வங்கியில் 5000 ரூபாய்க்கு ஏதோ ஷேர்கள் வாங்கி தந்தார்.ஷேர் மார்க்கெட்டில் எனக்குத் தெரிந்த ஒரே பெரிய ஆள் ஹர்ஷத் மேத்தாதான். அந்த டாக்குமெண்ட்களை வைத்து ஒரே கனவுதான்.

ஆனாலும் நாமே சம்பாதித்து கையில் காசு வைத்துக்கொள்ள வேண்டும் என்பது நிறைவேறாமலே இருந்தது. கொடைக்கானல் வானொலி நிலையத்தில் ஏதோ சர்வே எடுக்க வாய்ப்பு கிடைத்தது. கொடுக்கப்பட்ட முகவரிகளைத் தேடி காடு மலைகளைச் சுற்றி ஏறி இறங்க வேண்டும்.

ஊர் சுற்றுவதுதான் நமக்கு சாக்லெட் ஐஸ்க்ரீம் சாப்பிடுவது போன்றதாயிற்றே! பழம் நழுவி பால். அதில் கணிசமாக கிடைத்தது. முதலில் குட்டிக்கு கிஃப்ட். அப்புறம், ப்ரெண்ட்ஸ்க்கு ட்ரீட். அப்புறம் எனக்கு இசை ஆல்பங்கள். மாயமாக மறைந்தது பணம்.


எனக்காவது பரவாயில்லை. அம்மாவிடமும் பெரிம்மாவிடம் வாங்க்கொண்டிருந்தேன். எனது ஒரு சில நண்பர்களுக்கு அப்பாக்கள் கொடுப்பதுதான் பாக்கெட் மணி. ப்ராஜக்ட்-க்கு வந்தபோதும் பெரிம்மா அம்மாவின் தயவுதான்.அந்த அரசாங்க அலுவலகத்தில் ஐந்து மணிக்கு மேல் வேலை இல்லை. வெட்டியாக அடையாரைச் சுற்றிக் கொண்டிருந்த போது கண்ணில் பட்டது “தாஸ் ட்யூஷன் செண்டர்”.

உலகத்தில் இருக்கும் எல்லா மொழிகளுக்கும் எல்லா பரிட்சைகளுக்கும் ட்யூஷன் தேவையெனில் நீங்கள் அணுக வேண்டிய முகவரி இதுதான். தாஸ் என்பவர் அந்த ட்யூஷன் செண்டரை நடத்தி வருபவர். எந்த இடத்தைப் பார்த்தாலும் ஒருவர் பாடம் நடத்திக்கொண்டிருப்பார். இருவராக மூவராக அமர்ந்து கேட்டுக்கொண்டிருப்பார்கள். ஒரு பேப்பருக்கு வசூலிக்கும் காசில் நான்கில் ஒரு பங்கு தாஸ் சாருக்கு.

முதல் வகுப்பு மட்டும் கொஞ்சம் பயமாக இருந்தது. நாம் என்ன சொல்லிக் கொடுத்து இந்த பையன் என்ன எழுதி பாஸ் பண்ன போகுதோ என்ற பொறுப்பு உணர்ச்சிதான்! பி.ஈ ஐடி மாணவன்.நாங்கள் படித்ததை அப்படியே வாந்தி எடுக்கும் வேலைதான்.

அவனும் என்ன சொன்னாலும் தலையாட்டிக்கொண்டிருந்தான். அவனுக்கு ஒரு மாதத்தில் ஒரு பேப்பர் சொல்லிக்கொடுத்து இரண்டாயிரம் கிடைத்தது. எனது பாக்கெட் மணியின் இரு மடங்கு. அதன் பிறகு கொஞ்சம் தைரியம் வந்தது. அடுத்து ஒரு பெரியவர் - வங்கியில் வேலை உயர்வுக்காக கணினி பரிட்சை. அப்புறம் ஒரு ஆண்ட்டி - அவரது எம்சிஏ எல்லா பேப்பர்களுக்கும். அப்புறம் இன்னொரு பி.ஈ - ஐடி. (பிற்காலத்தில் ஆர்குட்டில் சந்தித்தபோது நல்ல நிலையில் செட்டிலாகி இருந்தான்.ஹப்பாடா!)


வீட்டிலிருந்து பணம் வாங்குவது மெதுவாக குறைந்திருந்தது. மேலும் எனக்கான தேவைகளையும் நானே சந்திக்க துவங்கியிருந்தேன். எல்லாமே ஃபான்ஸி பொருட்கள்தான். அப்புறம் நண்பர்களுக்கு ட்ரீட். கல்லூரி காலத்தின் ட்ரீட்கள்..மறக்க முடியாதவை!!

காசை சேர்த்து வைத்து பார்த்துக்கொண்டிருக்கும் சுகத்தைவிட அதை செலவழிக்கும் போது வரும் மகிழ்ச்சியை கண்டுகொண்டிருந்தேன். ”காசோட அருமை தெரியறது இல்லே” என்று வாங்கிய திட்டுகள் எல்லாம் பனியாக கரைந்துக் கொண்டிருந்தது. ஏனெனில் எனது உழைப்பு. எனது காசு. எனது சுதந்திரம். அடிப்படை தேவைகள் சந்திக்கப்பட்டபின்னர் இருந்த காசு எல்லாமே அப்போது அபரிமிதமாகத் தெரிந்தது.மேலும் காசு இல்லாவிட்டால் ஒன்றுமே இல்லை என்றும் புரிந்துக்கொண்டிருந்தேன்.

முழுநேர வேலை கிடைத்தபின்னர் முற்றிலும் விடுதலையாக உணர்ந்தேன். உறவினர்களுக்கு,நண்பர்களுக்கு எல்லாருக்கும் ஒரே பரிசுப்பொருட்கள்தான். சேமிக்க வேண்டுமென்று அப்போது தோன்றவேயில்லை. இப்போதும்தான். இதுவரை என்னை பாராட்டி வளர்த்த அனைவருக்கும் எனது ஃபீலிங் ஆஃப் கிராட்டிட்யூடை காட்டவே எனக்கு போதுமாக இருந்தது.

எனக்கு திருமணம் ஆனபின்னர் ஆயா எனக்கு சொன்னது “எப்போதும் உனது அக்கவுண்ட்டில் இரண்டு லட்சங்கள் இருக்கும்படி பார்த்துக்கொள்” என்பதுதான். ஆனால், முடியவேயில்லை. சந்தர்ப்பங்களும் விடுவதில்லை. கொஞ்சம் பணம் சேர்ந்தால் உடனே அது வாங்கலாமா இல்லது இவர்களுக்கு இதை வாங்கித் தரலாமாவென்றே கரைந்து விடுகிறது.

ஆனாலும், எனது சந்தோஷமும் தைரியமும் ஏடிஎம் துப்பும் ரசீதை பொறுத்தே உள்ளது என்பதை மறுக்க முடியாது.

ஆமா, ஏன் இன்னைக்கு இவ்ளோ மொக்கை...முதல் தேதியில்லையா...?! எஸ்.எம்.எஸ் வந்தாச்சா பாக்கணும்...:-)

அதுவரைக்கும் அபாவின் பாடலை கேட்டுக்கொண்டிருங்கள் !