Monday, June 28, 2010

பப்பு டைம்ஸ்ரொம்ப நாளைக்கு அப்புறம் ஆர்ட் ஆக்டிவிட்டீஸ் செஞ்சோம்.

எல்லாம் நம்ம 'ச்செம்மூ'வாலேதான் ('செம்மொழி'யைத்தான் சுருக்கிட்டேன்!). பப்புவுக்கு லீவ்...பெரிம்மாவுக்கு லீவ்...போன வாரம் எல்லாம் செம ஜாலி! சனிக்கிழமை பெரிம்மா கிளம்பிவிட பப்புவுக்கு போர்...திரும்ப என்கிட்டேதானே வரணும்! :-)

ஒரு Nature walk போனோம். இலைகளை,பூக்களை சேகரிச்சுக்கிட்டு வந்தோம். வழியிலே பார்த்த எறும்பு அரண்மனைகளுக்குள்ளே போகணும்னு பப்புவுக்கு ஒரே ஆசை. எறும்புகளுக்கு 'ராணி'தான் அம்மான்னு சொன்னதும், ‘அப்போ நீதான் நம்ம வீட்டுக்கு ராணி'ன்னு சொன்னா. அப்போவே எனக்கு தலையிலே கிரீடமும் கையிலே செங்கோலும் வந்துட்ட ஃப்லீங்.

'நீதான் இளவரசி'-ன்னு பதிலுக்கு சொன்னேன்..அவளுக்கு எந்த ஃப்லீங்கும் வந்த மாதிரி தெரியலை..பார்வையும் கவனமும் 'எங்கேடா அடுத்த அரண்மனை'ன்னே இருந்துச்சு.
வண்ணங்களை குழைத்தும், அவள் சொல்லும் இலைகளை எடுத்துக்கொடுத்தும், ஒட்டியபின் கொடுப்பவற்றை வாங்கிவைப்பதுமாக எடுபிடி வேலை ராணிக்கு. சேகரிச்சதை வண்ணத்தில் தோய்ச்சு பேப்பரில் பதிய வைத்தது இளவரசி!

பராக்..பராக்..பராக்!!

Saturday, June 26, 2010

Red turned green

கடந்த வெள்ளிக்கிழமையன்று பப்பு பள்ளியில் ரெட் டே . முதல்நாள் ஜூரம் வந்ததில் ஒரே ப்ளூ டேயாகி போனது வேறு கதை. ஆனால், ரெட் டேவுக்கு எப்படி போக வேண்டுமென்று ஒரு வாரமாக கனவுகள்தான்.

அதில் ஒரு பகுதி :


நான் : “பப்பு, ஆயா வாங்கிட்டு வந்த ரெட் கவுன் போட்டுக்கலாம், லாங் கவுன் இருக்கே....அது! ”

பப்பு : .....(மையமாக ஒரு பார்வை)

நான்: “அப்புறம், ஹேட், கையிலே ரெட் பாண்ட், ரெட் சப்பல்ஸ்..ஓக்கேவா! சூப்பரா இருக்கும்! அப்புறம் ஹேர் கிளிப்ஸ்...”

பப்பு: ......

பப்பு: ”இல்லப்பா, ரெட் பாவாடை பீரோலே இருக்குல்லே...அது.. போட்டுக்கலாம்.”

நான்: ......(அதே மையமான பார்வை)

பப்பு: “கையிலே ரெட் வளையல், நெத்திசுட்டி, ரெட் ஹேர் க்ளிப்ஸ்....சூப்பரா இருக்கும்ப்பா! ”

நான்(மனதிற்குள்) : வாழ்க்கை ஒரு வட்டமான்னு மீ இன் டீப் திங்க்கிங்....!?!

(ஆயா எங்க ஸ்கூல் கலர் டேவுக்கு பாவாடை சட்டை போட்டுவிட்டா அடம்பிடிச்சு ஃப்ராக் போட்டுக்கிட்டது நான். ப்ராக் போட சொன்னா பப்பு பாவாடை போட அடம் பிடிக்கிறாளே... இப்போவே.....Gen' Gapஆஆ??)ஆனால் செய்ய முடிந்ததெல்லாம் ஒன்லி டாக்டர் விசிட். பப்புவால் எனக்கும் கிடைத்தது லீவ். டாக்டரை சந்தித்தப்பின் மறக்காமல் நாங்கள் செய்யும் இரண்டு காரியங்கள் : ஐஸ்க்ரீம் சாப்பிடுவது மற்றும் பார்க் செல்வது.

ஜுரம் வந்துவிட்டால் எப்போதும் தூக்கியே வைத்திருக்க வேண்டும் அல்லது மேலேயே வந்து ஒட்டிக்கொள்வாள். பார்க்குக்குச் சென்றதும் அவளாகவே இறக்கிவிடச் சொன்னாள். மெதுவாக நடக்கத் துவங்கினோம்.

மரங்களை தடவிப் பார்த்தோம். 'ஹார்டா இருக்கு ஆனா லீஃவ்ஸ் சாஃப்டா இருக்கு' என்றாள். இலைகள் உதிர்வதைப் பற்றியும், நிறம் மாறுவதைப் பற்றியும் பேசினோம். And then we hugged the trees (கட்டிப்புடி வைத்தியம்?!) . காதுகளை மரத்தில் வைத்து மரம் ஏதாவது பேசுகிறதாவென்று கேட்டோம். பப்பு, மரங்களைச் சுற்றி ”ரிங் அ ரிங்க் ஆஃப் ரோஸஸ்” பாட ஆசைப்பட்டாள். (ஆனால் எனக்குத்தான் ஒரு மாதிரி இருந்தது....geeee) ஆனாலும் சுற்றினோம்.

சோர்வெல்லாம் நீங்கி சிறிது நேரத்தில் ஓடவும் ஆரம்பித்திருந்தாள். நானும் அவளைத் துரத்திக்கொண்டு....

Friday, June 25, 2010

Return to innocence

ஸ்கூல் டைரியை பார்ப்பதற்கு பப்புவின் பையை திறந்தபோது ஒரு சில தாள்கள் மடித்து ஹேர்க்ளிப் போட்டு வைக்கப்பட்டிருந்தது. பப்பு தேஷ்னாவிற்கு வரைந்ததாம். அவளாகவே பிரித்துக் காட்டினாள்.எறும்பு போய்க்கிட்டிருக்கு!

(சம்மர் ஹாலிடேஸ்லே பூதக்கண்ணாடி வைச்சு ஒண்ணு விடாம விடாம பார்த்த எஃபெக்ட்! இட்லியைக் கூட நாங்க பூதக்கண்ணாடிலே பார்த்துதான் சாப்பிட்டோம்னா பார்த்துக்கோங்களேன்.)

பூ இதெல்லாம். மேலே பட்டர்ஃபிளைஸ் பறக்குது! (இது பப்புவோட சின்னவயசு புத்தகத்தோட தாக்கம்னு நினைக்கறேன்!)பபிள்ஸ்....இது தேஷ்னாக்கு லெட்டர்.

(அடுத்தவங்க லெட்டர்லே என்ன எழுதியிருக்குன்னு பார்க்க கூடாதுல்லே..சோ என்னன்னு கேட்டுக்கலை!)
இது எனக்கும் பெரிம்மாவுக்குமாம். மேலே இருக்கிறது பெரிம்மாக்கு. வானத்திலிருந்து மழை பெய்யுது. பெரிய பெரிய ட்ராப்ஸ்.

கீழே இருக்கிறது - எனக்கு. ஆபிஸிலே கொண்டு போய் வைச்சிக்கணுமாம். யாராவது கேட்டா, நான் இல்லே பப்புதான் வரைஞ்சதுன்னு சொல்லணுமாம். ஆபிஸ்காரங்க வாவ்,சூப்பர்ன்னு சொல்லுவாங்களாம். ஏன்னா, சின்னபசங்க வரைஞ்சதுதான் சூப்பரா இருக்குமாம்! (ஆல் மை டைம்ஸ் யார்!)

அது என்னன்னு சொல்லலையே...அந்த கோல்டன் க்ளிட்டர் - வானம். அதுலேருந்து மான்களுக்கு ஃபுட் கொட்டுதாம்.

(இதை எழுதிக்கொண்டிருந்தபோது பின்னணியிலே
Enigma ஓடிக்கிட்டிருந்தது - டைட்டிலுக்குக் காரணம் ஓக்கேவா!)

நல்லாருக்கு இல்லே...raining food...யாரும் ஆஃபிஸுக்கு போகவே வேணாம்...;-)

Wednesday, June 23, 2010

ஓ ஃபார்...

ஓலைச்சுவடி!

வல்லியம்மாவின் மாமியார் டைரியை வாசித்ததும் மருமகளின் டைரிக்குறிப்புகள் நினைவுக்கு வந்துவிட்டது. :-)

திருமண ஆல்பங்களில் புகைப்பட கவரேஜில் புது மாமியாருக்கு எழுந்த முதல் தர்மசங்கடத்தைப் பற்றி சுவாரசியமாக எழுதியிருந்தார்.

எனது இடுகை திருமண அழைப்பிதழ் பற்றி.

திருமண அழைப்பிதழ்களையும் இருவீட்டாரும் தனித்தனியாகவே அச்சடித்து அழைப்பார்கள். திருமண சம்பிரதாயங்களில் எனது அறிவும், ஆர்வமும் பூஜ்மாதலால் 'இதெல்லாம் பெரியவங்க சமாச்சாரம்' என்று ஒதுங்கிவிட்டதில் இந்த ஞானமெல்லாம் மிஸ்ஸிங். இருவீட்டாரும் அவரவர் பக்கத்திலிருந்து 50 பத்திரிக்கைகளை மாற்றிக்கொண்டதாக நினைவு.

பெரியவர்கள் சார்பான அழைப்பிதழை தவிர்த்து, எங்கள் சார்பாக ஒரே மாதிரியான அழைப்பிதழையே நண்பர்களுக்குக் கொடுக்கலாமென்று நானும் முகிலும் தீர்மானித்திருந்தோம். ஓலைச்சுவடி போன்ற ‘நறுக்கிதழை' - மூன்று இலைகள் கொண்ட அழைப்பிதழை தேர்ந்தெடுத்திருந்தோம். முகிலுக்கு 200 . எனக்கு 150. அழைப்பிதழ்களின் எண்ணிக்கைதான்!

அழைப்பிதழின் அட்டையில் “Mugil weds Mullai' என்பதற்கு பதிலாக, எனக்கு வேண்டிய அழைப்பிதழில் "Mullai weds Mugil" என்றும் , உள்ளேயும் மற்றும் சைன் ஆஃபிலும் எனது பெயர் முன்னால் வரும்படி அச்சடித்து தரும்படியும் கேட்டிருந்தேன். முகிலும் அவரது தந்தையிடம் கூறினார். ஆனால், அங்கிளுக்கு இருந்த வேலைப் பளுவில் எனது விண்ணப்பம் மறக்கப்பட்டு கீழ் கண்டது போல எல்லா அழைப்பிதழ்களும் வந்து சேர்ந்தன.

எல்லா இடங்களிலும் முகில் பெயரே முதலில். எனக்கோ ஏமாற்றம். ஏதோ, வாழ்க்கையில் நமது பெயர் தாங்கி வரும் பத்திரிக்கை இது ஒன்றுதான். அதில் கூட நமது ஆசையில் மண் என்று பெருத்த ஏமாற்றம்(!).

எனது ஒரு சில நண்பர்கள் மணமகனுக்கு அடிக்கப்பட்ட அழைப்பிதழ்களையே கொடுத்திருக்கிறார்கள். “உன் இன்விடேஷன்லே மாத்தி போட்டிருக்கலாம் இல்லே” என்றதற்கு ”நீ கொடுக்கப் போற 100 இன்விடேஷனுக்கு மாத்தி போடணுமான்னு அவர் சொல்லிட்டாரு” (ஹ்ம்ம்...இங்கே தொடங்கும் காம்ப்ரமைஸ்....!) என்று சொல்லியிருந்தார்கள். எனக்கு 50 இன்விடேஷன்கள் என்றாலும் நிச்சயம் நானும் இதே போல செய்துவிடக்கூடாது என்றும் நினைத்திருந்தேன்.

அதுவும் முகில் அழைப்பது போன்ற அழைப்பிதழை எனது நண்பர்களுக்கு எப்படி நான் கொடுப்பது?

எனது கல்லூரி மற்றும் பள்ளி நண்பர்கள் என்னையல்லவா அறிவார்கள். முகிலை எப்படி அறிவார்கள்?

உடனே ட்ரிங்...ட்ரிங்...

பெரிம்மாவுக்குத்தான்!

ஆனால், அம்மாவும் மாமாவும் ”இதையே கொடேன், என்ன பெரிசா” என்று ‘ இது எல்லாம் ஒரு விஷயமா' என்பது போல சமாதானம் பேசி எதிரிகளாகிப் போயினர்.

ஓரிரு நாட்களில், எங்கள் தரப்புக்கான அழைப்பிதழை தேர்ந்தெடுக்க வேண்டி இருந்தது. சென்னை மேனகா கார்ட்ஸ். என் முகம் வாடுவதை ஒருபோதும் தாங்கவியலாத பெரிம்மாவுடன் சென்று எனக்கான அழைப்பிதழைத் தேர்ந்தெடுத்து கீழ்கண்டது போல அச்சடிக்கப் பெற்றேன்.நான் அழைப்பது போன்று அழைப்பிதழின் வடிவமும், அட்டையில் எனது பெயரே முதலிலும். அதன் பிறகே மனம் கொஞ்சம் ஆறியது. முகத்தில் மகிழ்ச்சி கொஞ்சியது(!). ஆனால் அந்த பேதை நெஞ்சத்திற்கு அப்போது தெரிந்திருக்க நியாயமில்லை.... திருமண வாழ்க்கையே காம்ப்ரமைஸ்களால் ஆனது என்று.. (யார் வாய்ஸிலாவது மாற்றி படித்து நொந்து போகவும்...ஹிஹி!!)

சிலருக்கு இது சிறிய விஷயமாக இருக்கலாம். நமக்கு சிறிய விஷயமாக தோன்றுவது பிறருக்கு பெரிதாகத் தோன்றிவிடுகிறது இல்லையா, அதுபோலத்தான்.

(அந்த அழைப்பிதழ்களை, மீதியானவற்றில் 100 அழைப்பிதழ்களை முகில் உபயோகப்படுத்திக்கொண்டார்.அந்த அழைப்பிதழ்களை நான் பயன்படுத்த -வில்லை என்ற மனவருத்தம் முகிலுக்கு இருந்தது தெரிந்தே இருந்தது. ஆனால் நான் என்ன செய்ய முடியும்!)

எங்கள் உறவுகளில் - ஐயர் வைத்து செய்யும் வழக்கம் இல்லை. ராமலிங்க அடிகளின் திருவருட்பாவை ஓதூவார் பாட யாராவது ஒரு பெரியவர் தாலியை எடுத்துக் கொடுக்க டும் டும் டும்தான். உறவினர்கள் திருமணங்களில் நானும் குட்டியும் கலந்துக்கொண்டதை விரல் விட்டு எண்ணி விடலாம். அதனால், இவை தவிர மற்ற சம்பிரதாயங்கள் எதுவும் நுணுக்கமாக எனக்குத் தெரியாது.

ஆனால், முகில் வீட்டார் வழக்கமோ தலைக்கீழ்.

அதில், 'கூரைப்புடவை' என்ற வார்த்தை புதிதாகக் காதில் விழுந்தது. அதைப் பற்றிய அறிவு எனக்கு கிஞ்சித்தும் இல்லை. யாருக்கோ என்று எண்ணிக் கொண்டிருந்தேன். ஏனெனில் உறவினர்களுக்கு கொடுக்க நிறைய புடவைகள் எடுத்து வைத்திருந்தோம். அதனால், யாரோ ஒரு உறவுக்கு கொடுக்க வேண்டியது போல என்று நினைத்துக்கொண்டிருந்தபோது, அது எனக்குத்தான் என தெரியவந்தது. என்னவென்று கேட்கப் போக 'கட்டங்கள் போட்ட வாயில் புடவை' என்று பதில் வந்தது.


சமீபத்தில் கற்றுக்கொண்ட பாடம் நினைவுக்கு வந்தது. அது - முகிலிடம் சொல்வதை விட நேரடியாக அங்கிளிடம் சொல்லிவிடுவதே பெட்டர் என்பதே!

அடுத்த ட்ரிங்..ட்ரிங்...

அங்கிளுக்குத்தான்!

“எனக்கு வாயில் புடவைல்லாம் வேணாம் அங்கிள், கல்யாண புடவை இருக்கு இல்லே அதுதான் கட்டிக்கப்போறேன்.”

“தாலி கட்டும்போது கூரைப்புடவைதாம்மா கட்டணும், அதுக்கு அப்புறம் நீ வேற புடவை மாத்திக்கலாம்”

“ஹைய்யோ..அங்கிள்..அது என்னோட ஹைட்டுக்கு முழங்காலுக்கு ஏறிடும்.. பாக்க நல்லாவே இருக்காது. அதுவும் இல்லாம கட்டம் போட்டதுன்னா எனக்கு ஜெயில்லே இருக்கறவங்க கட்டியிருக்க புடவைதான் அங்கிள் ஞாபகம் வருது. ஃபோட்டோலேயும் நல்லா இருக்காது..ப்லீஸ் அங்கிள்” என்று புலம்பி வைத்தேன்.

“இதை ஒரு விஷயமா எடுத்துக்காதே, என்ன? மேடையிலே உட்காரப் போறது ஒரு மணிநேரம் இருக்குமா?!” என்று சின்ன அத்தை அறிவுரை.

சிறைபுகப் போகிறோம் என்பதை சிம்பாலிக்காக குறிக்கவே இந்தப் புடவையோ- சிறைப்புடவை மருவி கூரைப்புடவையாகி விட்டதோ(!!) என்ற கண்டுப்பிடிப்பை லதாவிடம் சொல்லப் போக அவளோ பார்வையால் எரிக்காத குறை!

”புடவையை மாத்திட்டேம்மா, வாயில் புடவையை மாத்திட்டு பட்டுலேயே கூரைப்புடவையைத் தேடி எடுத்திருக்கேன்” - அடுத்த நாள் அங்கிளிடமிருந்து ஃபோன்.

கடைசியாக, கூரைப்புடவையிலிருந்து தப்பிக்கவே முடியவில்லை...சிறை புகுவதிலிருந்தும்தான்..!

இதனால் அறியப்படும் நீதி : புது மாமியார்களுக்கு மட்டுமல்ல..பிரச்சினை புது மருமகள்களுக்கும் வரலாம். (மரு)மகள்களின் விருப்பத்தையும் (இரு) வீட்டு பெரியவர்கள் கேட்கலாம். சம்பிரதாயங்களையும் வளைத்துக் கொள்ளலாம். கூரை இடிந்து விழாது! :-)

உங்களளவில் நிகழ்ந்த காம்ப்ரமைஸ்கள் அல்லது நிராசைகள், முதல் பிரச்சினைகள்/தர்மசங்கடங்கள், உரிமை நிலைநாட்டல்கள் - சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் “மருமகளின் டைரிக்குறிப்புகளை” (கண்டிப்பா இது ஒரு அனுமார்வால்தான்!) கொஞ்சம் எடுத்துவிடும்படி தீபா, ஜெயந்தி, அமைதிச்சாரல் மற்றும் சாந்தி லஷ்மணை கேட்டுக்கொள்கிறேன்.

Monday, June 21, 2010

Trace me!


பப்புவை சார்ட் பேப்பரில் ட்ரேஸ் செய்து கொடுத்தேன். அவளது ட்ரேஸ் செய்த உருவத்தை பார்க்க அவளுக்கு மிகுந்த எக்சைட்மெண்ட்.

அதில் கண்கள், காதுகள்,தலைமுடி என்று உறுப்புகளை அவளாகவே வரைய வேண்டும். சாம்பல் நிறத்தில் இருபுறமும் இருப்பவை காதுகள்! புருவங்கள், காதில் தொங்கல்கள் என்று எல்லாவற்றையும் வரைந்தாள். அவளது உடையில் இருந்தது போல பூவும்.

வண்ணமடிக்க விருப்பப் பட்டாள். பாதிக்கு மேல் போரடித்து விட்டது போல! :-)
On the whole, we had fun in this activity!

Saturday, June 19, 2010

ஹைய்யோ...ராமா!!

வளர்ந்து பெரிசானதும் நீயும் நானும் கல்யாணம் பண்ணிக்கலாமா, ஆச்சி?!

Friday, June 18, 2010

mAD : Billion hearts beating

முன்னால் சென்ற பஸ்ஸின் விளம்பரபலகை எனது கவனத்தை ஈர்த்தது. யூனினாரின் “சாதிக்க நிபந்தனைகளே இல்லை” பார்த்து பார்த்து ”என்ன நிபந்தனையோ” என்று புரியாமல் போரடித்தது போக இப்போது இவை.

Billion hearts beating என்ற விளம்பரம்தான் அது.

அநேகமாக ஏதாவது ஒரு மருத்துவமனையின் ஹெல்த் செக்கப் ஆக இருக்கும். அதன் வாசகங்களும், அதனைத் தொடர்ந்து எழுந்த எண்ணங்களும் விளம்பரத்தைப் பற்றிய மற்ற விபரங்களை என் கண்களிலிருந்து மறைத்துவிட்டது.

அதிலிருந்த வாசகம் இதுதான் “I pledge to quietly eat all the veggies my wife puts in my plate” . அதை சொல்வது போல அருகில் ஒருவர் நின்றுக்கொண்டிருக்கிறார்.

அவரது மனைவி சொல்வது போல ஏதாவது இருக்கிறதா என்று தேடினேன். ஒன்றும் காணோம். ( பஸ்ஸின் இடப்பற்றாக்குறையும் காரணமாக இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டேன்.)

அதைப் பார்த்ததும் எழுந்த முதல் எண்ணமே,

ஏன் அவரது மனைவிதான் அவருக்கு பரிமாறவேண்டும்?

அல்லது, மனைவிதான் கணவனை பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது போல - மனைவிதான் கணவனது உடல்நலத்துக்கு பொறுப்பு என்பது போல எண்ணத்தை விதைக்கிறார்கள்?

”என் தட்டில் காய்கறிகளை அதிகமாக எடுத்துக்கொள்வேன். எடுத்துக்கொண்டதை முழுவதுமாக நான் உண்பேன்” என்று ஏன் கணவரால் உறுதி கூற முடியவில்லை?

அதற்கு பெயர் அன்பு என்றெல்லாம் சொல்ல மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஏன், அன்பற்ற வாழ்க்கை வாழும் பல குடும்பங்களிலும் மனைவிகளே கணவனுக்கு பரிபாலனை செய்வதை கண்டிருக்கிறேன்.

மனைவி கணவனுக்கு பரிமாறுவது அன்பு என்று சொல்வீர்களானால் கணவன் மனைவிக்கும் அல்லவா பரிமாற வேண்டும்?

எப்படி காய்கறிகளை உண்டால் உடல்நலத்துக்கு நல்லது என்பது மனைவிக்கு தெரிகிறதோ அதேபோல கணவனுக்கும் அல்லவா தெரியவேண்டும்?

மனைவி வேலைக்கு போகிறாளோ இல்லையோ அதை விடுங்கள். வேலைக்கு போகும் பெண்ணை போலவே வீட்டிலிருக்கும் பெண்ணுக்கு ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் வேலைகள் இருக்கிறது.

மாமா காலையில் 8.45 பஸ் பிடிக்க வேண்டுமானால், அறிவழகி அத்தை 5.30 மணிக்கு எழுந்துக்கொள்ள வேண்டும். மாமாவின் காந்திய கொள்கைகளினால் வீட்டில் காஸ் அடுப்பு கிடையாது. மிக்ஸி கிடையாது. எந்த வீட்டு உபயோகப் பொருளும் ‘ஆடம்பரம்'தான் அவருக்கு. முதல்நாள் மட்டும் என்றைக்காவது அபூர்வமாக வெங்காயம் உரித்துத் தருவார் மாமா. ஊதுகுழலை ஊதியபடி கண்களை இடுக்கிக்கொண்டு சாணம் மெழுகிய அடுப்போடு மல்லுகட்டிக் கொண்டிருப்பார் அத்தை.

பக்கத்தில் பம்ப் ஸ்டவில் வேகமாக வேக வேண்டிய வட்டிலையும் கவனித்தபடி. அதிகாலையில், வாசலில் சாணம் தெளித்து கோலம்போட்டபின் சமையலறைக்குள் அத்தை நுழைந்தால் மாமாவும், பிள்ளைகளும் இட்லியோ தோசையோ சாப்பிட்டு, மதிய உணவை கட்டி எடுத்துக்கொண்டு பள்ளிக்குச் சென்றபின் கழுவ வேண்டிய பாத்திரங்களுடன் ஒன்பதரை மணிக்குத்தான் வெளியே வருவார்.


நடுவில், மாமாவின் இஸ்திரி போட்ட சட்டை எங்கே போயிற்று, அல்லது சட்டைக்குள் இருந்த பில்கள் எங்கே என்பனவற்றிற்கும் - “அம்மா, அட்டை போட்ட கணக்கு புக் எங்கே” ”அவன் என்னோட சைக்கிள் சாவியை ஒளிச்சு வைச்சுட்டான்” என்று சகலத்திற்கும் அத்தைதான்.

காலை உணவோடு மதிய உணவும் தயாராகி அனைவரும் கிளம்பிவிட, துணிகளை ஊறவைத்து கிணற்றில் நீர் இறைத்துவிட்டு பதினோரு மணிக்கு மேல் மிச்சம் மீதி இருப்பதையும்,முந்தைய நாள் மீந்ததையும் எடுத்துக்கொண்டு சாப்பிட அமர்வார். அல்லது சாப்பிடுவதாக பேர் பண்ணிக்கொண்டு!

தேவையான காய்கறிகளை அவர் உண்கிறாரா? அவரது வேலைக்குத் தேவையான சக்தியை பெறுமளவு ஊட்டச்சக்தியும் சமச்சீர் உணவும் அவர் உட்கொள்கிறாரா? இதையெல்லாம் பார்த்துக்கொள்ளவும் பரிமாறவும் ஒருவரும் இல்லை.

அதன்பின் நாள் முழுவதும் -மாடுகளை பார்த்துக்கொள்ள, கூடத்தை ஒற்றை ஆளாக பெருக்கித்தள்ள, தோட்டத்தை சுத்தம் செய்ய, மாலையில் திரும்பவும் தண்ணீர் தெளித்து கோலம் போட்டு, காபி போட்டு,இரவு உணவை தயாரிக்க, திரும்ப பாத்திரம் கழுவி, சமையலறையை சுத்தம் செய்து...இவைநடுவில் ஊறுகாய்,வத்தல்,அப்பளம், முறுக்கு,அதிரசம்...

சொல்லப்போனால், சகலவித வீட்டு உபயோக பொருட்கள் இருக்கும் கீதா ஆண்ட்டிக்கு இதே கதைதான். மீதி இருப்பதை உண்டு ஒப்பேற்றி விடுகிறார்களென்பதை யாரும் மறுக்க முடியாது. அறிவழகி அத்தையோ கீதா ஆண்ட்டியோ...ஏன் நமது அம்மாக்களுமே இப்படித்தானே? இதை மறுப்பவர்கள் யாராவது இருக்கிறீர்களா என்ன?

இன்றைய நிலையில் கணவன் மனைவி இருபாலரும் வேலைக்குச் செல்கிறார்கள். சில வீடுகளில் கணவனும் சமையல் வேலைகளில் உதவி செய்கிறார். கணவன் மாலையில் ஜிம்முக்குச் சென்றால் மனைவி அதிகாலையில் செல்கிறார். இருவரும் சமச்சீரான உணவுகளை உட்கொள்ள திட்டமிடுகிறார்கள்.

ஒரு கல்யாணத்திற்கு சென்றிருந்தபோது கவனித்தேன். மணமேடையில் வாழ்த்திவிட்டு இறங்கி வந்த எல்லா தம்பதிகளிலும் - 40 வயதிற்கு மேற்பட்ட எல்லா பெண்களும் படிகளில் கைப்பிடியை பிடித்தபடி பக்கவாட்டில்தான் இறங்கி வந்தனர்.

ஏன்?

மூட்டுவலி.

கணவனது தட்டில் காய்கறிகளை நிரப்பும் பெண்களின் நிலை இதுதான்.

” எனது மனைவியின் தட்டில் பரிமாறி அவள் அத்தனை காய்கறிகளையும் உண்ணுமாறு பார்த்துக்கொள்வேன்” என்று ஏன் அவரால் உறுதி எடுத்துக்கொள்ளமுடியவில்லை?

அப்படி சொல்பவரை படம் பிடித்து போட எது தடுத்தது?

நேற்று அண்ணா சாலை வழியாக கடந்து வரும்போது கண்ணில் பட்டது அதே விளம்பரம். இந்த முறை, அவரது படத்துக்கு பக்கத்தில் ஒரு பெண்ணின் படம். அந்த பெண் சொல்வது போல அமைந்திருக்கும் வாசகம் :

”I pledge to get off my bus a stop early and walk ”


” கணவர் எனது தட்டில் வைக்கும் காய்கறிகள் அனைத்தையும் உண்பேன்” என்று உறுதிகூறுவது போல ஒரு பெண்ணின் படத்தை போட முடியவில்லையே, ஏன்?

பெண்கள் எப்போதும் caregivers-தான் என்ற எண்ணத்தை பதிய வைக்கிறார்களே, ஏன்?

Times are changing...better change now!

Wednesday, June 16, 2010

Mere Lal Dupatta mal mal ka....துப்பாட்டாவாலே இப்படித்தான் மேடம் தானா ரெண்டு சடை போட்டுக்கிட்டு...பொம்மையை எடுத்துக்கிட்டு ப்ளே டேட் போறாங்க!!

Tuesday, June 15, 2010

மீண்டும் பள்ளிக்கு போகலாம்....

கோடை விடுமுறை ஆரம்பித்த முதல் வாரத்தில், பள்ளிக்கூடம் இல்லையென்ற நினைப்பில் ஒரு சில நாட்கள் ஜாலியாக கழிந்தது. எல்லோருக்கும்தான். காரணம் காலை தூக்கம். பிறகு ,”எப்போடா ஸ்கூல் ஆரம்பிக்கும்” என்ற கதைதான். எனக்கல்ல. பப்புவுக்கு!அதுவும் காலையில் 6.30 மணிக்கு! காலையில் எழுவதே “இன்னைக்கு ஸ்கூல் இருக்கா, வேன் வருமா” என்ற கேள்வியுடன் தான். 'இன்னைக்கு ஸ்கூல் இருக்கு' என்றதுமே உற்சாகத்துடன் எழுந்துவிடுவாள். பாலும் காலை உணவும் கடகடவென்று இறங்கி விடும். இந்த உற்சாகத்தை எனக்கு சாதகமாக பயன்படுத்தி முதல் இரண்டு வாரங்கள் கழிந்தது. அலுவலகத்திற்கு கிளம்பியதும் முகம் வாடி விடும். கொஞ்ச நேரம்தான். அப்புறம், அக்கம்பக்கத்து வீடுகளில்தான் அவளைத் தேட வேண்டும்.

மே மாதத்தின் கடைசி வாரங்களில்,காலையில் 8.45 க்கு “எழுந்துக்கோ பப்பு” என்றால் தூக்கத்திலே பதில் வரும் “எனக்கு சம்மர் ஹாலிடேஸ் இல்லே, ஏன் என்னை எழுப்பறே?”. அப்போதே எனக்கு கிலி பிடித்துக்கொண்டது, ஜூன் 2ஆம் தேதியை நினைத்து. பப்புவுக்கு பள்ளி ரீ ஓபன் ஆச்சே!

பெரிம்மா,அம்மா, குட்டி என்று எல்லோரும் ஒவ்வொருவராக கிளம்ப ஆரம்பிக்க நான் மட்டுமே எதிர்கொள்ள போகும் ஜூன் 2 கொஞ்சம் பயமாகவே இருந்தது - ஏதோ எனக்கே பள்ளிக்கூடம் ஆரம்பிப்பது போல.அதுவும், அந்த ஒழுங்கை/ ரொடினை கொண்டு வருவது குறைந்த பட்சம் பள்ளி ஆரம்பித்த முதல் வாரத்தில் - டெரர்தான். அதுவும் வேன் வேறு மே மாத இறுதியில் ஒரு ட்ரையல் ரன் வந்து, இனி பப்புவுக்கு காலை பிக்கப் 7.40க்கு என்று டரியலாக்கியிருந்தது.

சரி, கடைசி சனி,ஞாயிறுகளில் காலையில் எழுப்பி விடலாம், இரண்டு நாட்கள் பழக்கத்தில் மூன்றாம் நாள் எளிதாக இருக்கும் என்ற நினைப்பில் மண் அள்ளி போட்டுக்கொண்டது நானேதான். சனி -ஞாயிறுகளில் நான் எழுந்தாலல்லவா அவளை எழுப்புவதற்கு! கடைசியில் எந்த ஹோம் ஒர்க்கும் செய்யாமலேயே விடிந்தது ஜூன் 2. காலையில் நல்ல மூடிலேயே எப்படி எழுப்புவது என்ற கவலையோடே உறங்கச் சென்றேன் - 6.15 மணிக்கு அலாரம் வைத்துவிட்டு. முதல்நாளே பப்புவுக்கு எல்லாம் ரெடியாக இருந்தது அவளுக்கு உற்சாகத்தை தந்திருக்க வேண்டும்.

”ஆச்சி, பெரிய பெரிய தவளை ஆச்சி” பப்புதான்.

ஜன்னலைப் பார்த்தேன். இன்னும் விடியவில்லை. அரைக்கண்ணைத் திறந்து...நேரம்...5.30 மணி.

”ம்ம்..தூங்கு பப்பு, தவளை இங்கே வராது”

ம்..ஹூம்!

”ஆச்சி, லைட் போடு ” சொல்லி சொல்லி பார்த்துவிட்டு அவளாகவே லைட்டை போட்டு ”வா, கதவுக்கிட்டே பாரு ” என்று இழுக்கத் தொடங்கினாள்.

எழுப்பும் கவலை விட்டது என்று ஒருபக்கம் நிம்மதியாக இருந்தாலும் அதிகாலை தூக்கத்தை இழக்க மனம் வரவில்லை.வேறு வழியில்லாமல், எழுந்து அவளுடன் சென்றேன். படுக்கையறை கதவை திறக்கச் சொன்னாள் - என் கையை பிடித்தபடி நின்றுக்கொண்டு.

”ஆச்சி, எவ்ளோ பெரிய தவளை தெரியுமா” - அவள் சொன்னதைப் பார்த்தால் அந்த தவளை ஒரு கடலாமை அளவுக்கு இருந்திருக்க வேண்டும். சற்றே பெரிய தவளைதான் போல.

அடுத்து அவள் சொன்னதுதான் மிகுந்த ஆச்சரியமாக இருந்தது.

”ஒரு தவளை ஆச்சி, அதுக்கு தவளை மாதிரி உடம்பு இருந்தது, ஆனா வாய் இல்லே, எப்படி இருந்துச்சு தெரியுமா..க்ரோக்கடைல் மாதிரி இப்படி இருந்தது”

கடலாமை சைசில் தவளை உடல். அதற்கு முதலை முகம். வாசலில் இருந்ததாம்.
வாசல் கதவை திறந்து அங்கே நிற்கிறதாவெனத் தேடினோம்.

காணோம்!

பாலை சுட வைத்துவிட்டு, தோசை செய்ய ஆயத்தமானேன். அவளது நாற்காலியை எடுத்துக்கொண்டு சமையலறைக்கு வந்தவள் அதன் மேலேறி சமையலறை மேடையில் அமர்ந்துக் கொண்டாள்.


கடைசியில், தவளைக்கதைகளை அவளே சொல்லியபடி ஒரு டம்ளர் பாலும், ஒரு தோசையும் உள்ளே சென்றது.

கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. காலை தூக்கம் விடுபட்டாலும், அரக்கபரக்க இல்லாமல் நிதானமாக எல்லா வேலையும் முடிந்தததை நினைத்து சந்தோஷமாகவும் இருந்தது. 'அவளோ கஷ்டம் இல்லை போலிருக்கே, இனிமே பிரச்சினை இருக்காது போல' என்றும் தோன்றியது.

(முதல் நாள் - முதல் டெர்ம் - வேனை நோக்கி ஓடுவதற்கு ரெடியாக பப்பு!)

அவளை வேனுக்கு அனுப்பியபின் எழுந்த கேள்வி, ”தவளை நாளைக்கும் உதவுமா?”!

இரண்டு நாட்கள் முன்பு நடந்தது நினைவுக்கு வந்தது!


சட்டென்று மனதுக்குள் மின்னல்!


யெஸ்...

”தூங்கும்போது குரங்கு-முதலை-நாவல்பழம் கதை சொன்னால் தவளை நிச்சயம் உதவும்!

யே!!

Sunday, June 13, 2010

Few of her favorite sites....

கடந்த கோடைவிடுமுறையில் பப்புவை புத்தகங்களை விட அதிகம் ஆக்கிரமித்திருந்தது கம்ப்யூட்டர்தான். பெரும்பாலும் பெயிண்ட் பிரஷை வைத்துதான் விளையாடுவாள். அதைவிட்டால் sesame street மிகவும் பிடித்தம்.
தற்போதைய லிஸ்டில் இருக்கும் ஒரு சில தளங்கள் :

http://www.starfall.com/ இதில் இரண்டாவது பிரிவும் மூன்றாவது பிரிவும் மிகுந்த உபயோக இருந்தது. இரண்டாவது பிரிவு, வார்த்தைகளை, ஒலிகளை பகுக்கவும், கதைகளை பப்புவே நேவிகேட் செய்வதற்கும் உதவியது. நமது உதவி இல்லாமல் அவர்களாகவே அடுத்த பக்கங்களுக்கு செல்வதற்கு ஏற்ற வகையில் இருப்பது மிகுந்த உதவி- நமக்கு! வார்த்தைகளை, எழுத்துகளை கற்றுக் கொள்ளும் நிலையில் இருக்கும் சிறார்களுக்கு இந்த தளம் ஏற்றது. இதிலே இருக்கும் books பிரிவையும் வார்த்தைகளைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தலாம். பப்புவிற்கு nouns,verbs பற்றியெல்லாம் புரியாததால் தொடர்ந்து மூன்றாவது பிரிவை பார்க்க இயலவில்லை.

http://www.abcya.com/ ஒரு இடுகையில் பின்னூட்டத்தில் சித்தார்த்தும், மடலில் வெயிலானும் பகிர்ந்துக் கொண்டது. இதில் கிரேடு வகையாக பிரித்திருந்தாலும் பொதுவாக 4 - 5 வயதினர் எல்லா கிரேடையும் பயன்படுத்துக்கொள்ளலாம். ஒரு சில மட்டும் புரிந்துக்கொள்ள கடினமாக இருக்கும். இதன் டாட் டு டாட் மற்றும் எண்கள் விளையாட்டுகள், பூசணிக்காய் க்ரேவிங் - சூப்பர் டூப்பர் ஹிட்! இந்த தளம் குட்டீசை முழுவதுமாக விழுங்கிவிடும். ஒவ்வொரு மூலையும் பப்புவுக்கு அத்துபடி. வண்ணமயமான அமைப்பும் ஒரு காரணம் என்று தோன்றுகிறது.

http://pbskids.org இவை முழுவதும் விளையாட்டுகள்தான். கொஞ்சம் சீசேம் ஸ்ட்ரீட் பாணியில் இருந்தாலும் செம ஹிட். 'லோட் ஆகுது' என்று பப்புவுக்கு தெரியவைத்தது இந்த தளம்தான். :-) கண்ட்ரோல்களை கையாள்வதற்கான , பின்னணி குரலை கேட்க வைத்ததும் சீசேம் ஸ்ட்ரீட் மற்றும் இந்த தளத்தின் வெற்றி.

http://ceebies.com/ - இதில் பப்பு அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. வேறு குட்டீஸுக்கு பயன்படலாம்.

இது அல்லாமல், கணினியிலே இருக்கும் வேறு விளையாட்டுகளும் பப்புவின் ஃபேவரிட்.

உங்க வீட்டுலே எது ஹிட்டுங்க? பின்னூட்டத்தில் அறிமுகப்படுத்துங்க!

Saturday, June 12, 2010

ஃபூல்....பியூட்டிஃபுல்....பி கேர்ஃபுல்!

”ஏப்ரல் ஃபூல்
ஏமாந்த ஃபூல்
லிச்சிலே விழுந்தா ப்யூட்டிஃபூல்!”

லிச்சியா..அப்படின்னா என்ன பப்பு ?

”லிச்சின்னா தொட்டி..தொட்டிலே விழுந்தா பட்டர்ஃபிளை ஆகி பியூட்டிஃபுல் ஆகிடுவோம் இல்லே அது! ”

ஓ!! (ஸ்..ப்பா! கேப்பியா..கேப்பியா!பி கேர்ஃபுல்..என்னைச் சொன்னேன்!!)

அப்புறம், இப்படியும் சொல்லலாம், ஆச்சி...

”ஏப்ரல் ஃபூல்
ஏமாந்த ஃபூல்
சண்டே மண்டே கோ டூ ஸ்கூல்! ”

இந்த டெர்மில் பள்ளியிலிருந்து கற்றுக்கொண்டு வந்த முதல் பாடல் என்ற வகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தை பெறுகிறது!

Friday, June 11, 2010

முமியா அபு ஜமால் : குரலற்றவர்களின் குரல்

'கொஞ்சம் நேரம் கூட தனியா இருக்க முடியலை, எப்போ பாத்தாலும் சுத்தி மக்கள்..எங்கேயாவது ஆளே இல்லாத இடத்துக்குப் போகணும்” என்று அங்கலாய்த்துக்கொள்கிறீர்களா? யாருமற்ற காடுகளுக்கும், மலை பிரதேசத்துக்கும் சுற்றுலாவை திட்டமிட்டுக் கொண்டிருக்கிறீர்களா?

அப்படியானால், என்னோடு கொஞ்சம் வாருங்களேன்.

எங்கு என்றா கேட்கிறீர்கள்?

சொல்கிறேன்...

தனி மனித உரிமைகள் 'புனிதப்பசுவாகக்' கருதப்படும் அமெரிக்காவைச் சேர்ந்த மரண தண்டனை கைதிகளுக்குக்கான - கொல்வதற்காகவே உயிரோடு உடல்களை வைத்திருக்கும் சிறைக்கும் ,'குழி' என்ற தனிமைச் சிறைகளுக்கும் தான் உங்களை அழைக்கிறேன்!

பென்சில்வேனியாவின் ஹண்டிங்டனுக்கு!

இதோ, இங்கே இருக்கிறது பார்த்தீர்களா..கத்தி போன்ற கூர்மையான இரும்புக் கம்பிகளாலான வேலி- நமது செல்லப்பிராணிகளுக்கான கூண்டை நினைவூட்டுகிறது அல்லவா - அதை நாம் ”நாய் கூண்டு” என்றே அழைக்கலாம். இங்குதான் மரண தண்டனை கைதிகள் தமது நாளின் 24 மணிநேரத்தில் 2 மணி நேரங்களை செலவழிக்க கூட்டமாக விடப்படுவார்கள். மின்னலோ மழையோ வந்தால் வெளிக்கூண்டில் அடைக்கப்படுவதும் தடைப்பட்டுவிடும்.

ஓ..இன்னொரு முக்கியமான செய்தியை சொல்ல மறந்துவிட்டேன் பாருங்கள். கொஞ்சம் கவனித்திருந்தால் நீஙகளே கூட இதை உணர்ந்திருக்க முடியும். அற்பத்தனத்திற்கும், நம்பிக்கையற்ற தன்மைக்கும் இடையே வாழ்க்கை ஊசலாடும் மரண தண்டனை கைதிகளுக்கான இந்தச் சிறையில் கறுப்பர்களையே நீங்கள் அதிகமாக காணமுடியும்.மொத்த தேசத்திலும் 11 சதவீதமே உள்ள ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் இங்கு 40 சதவீதத்தினராக இருக்கிறார்கள்.

ஒரு வெள்ளையரைக் கொன்றதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒவ்வொரு பதினொரு பேரிலும் ஆறு பேர் தாங்கள் கறுப்பரை கொன்றிருந்தால் சாவை நோக்கி அணிவகுக்க வேண்டிய தண்டனையைப் பெற்றிருக்க மாட்டார்கள். குற்றம் சாட்டப்பட்ட பிரதிவாதியின் வாழ்வும் சாவும் 'இனம்' என்ற அதாவது கொல்லப்பட்டவரின் மற்றும் பிரதிவாதியின் இனம் என்ற முக்கிய காரணியாலேயே நிர்ணயிக்கப்படுகிறது.

ஏனெனில் அவர்கள் கறுப்பர்கள்.கறுப்பாக இருப்பதாலேயே ஆபத்தானவர்கள். அவர்கள் மனித உயிரி அல்ல.ஏனெனில் வெள்ளை இனத்தை சேர்ந்தவராக அவர்கள் இல்லை. ஆம், மரண தண்டனை பிரச்சினையைப் பொறுத்தவரை சட்டம் அரசியலையே பின்பற்றுகிறது என்பதை இதிலிருந்து ஓரளவுக்கு நீங்கள் விளங்கிக் கொள்ளலாம்.

ஊளையிடும் ஜெனரேட்டர்கள், பாய்ச்சப்படும் நச்சுவாயுக்கள், கலக்கப்படும் விஷ திரவங்கள்...

இரண்டாயிரம் வோல்ட் மின்சாரம் தாக்கி ஒருவரை சாவுக்கு அனுப்பும் நேரத்தில் அமெரிக்கா மாகாணத்தின் ஒரு மூலையில் ஏதோ ஒரு மனிதர் அடக்கமுடியாத கோபத்தில் இன்னொரு மனிதரை கொலை செய்துவிடுகிறார்.

அது சரி, மரண தண்டனை குற்றங்களை தடுத்து நிறுத்துமா?

நாம் இப்போது நடந்து வந்தபோது இரும்பு கதவின் கம்பிகளோடு பிணைத்து கட்டப்பட்டிருந்த அவரை கவனித்தீர்களா? சுருக்கம் விழுந்த வெளிறிய அவரது முகமே பாதி கதையை சொல்லிவிடும்தான்.ஆற்றல் வாய்ந்த உளவியல் ரீதியான பாதிப்புகளை தரக்கூடிய மருந்துகளை நீண்டகாலம் பயன்படுத்துவதால்தான் அவர் இந்நிலைக்கு ஆளாகியிருக்கிறார்.

ஓ..போதை மருந்து உட்கொள்பவர் என்று நினைத்து விட்டீர்களா?

இல்லையில்லை..'பாதுகாப்பு'க்கு அச்சுறுத்தல் என்று வெளியிலிருந்து வரும் எந்த ஒரு பொருளுக்கும் அனுமதியில்லை. ஏன், வார்த்தைகளில் மறுப்பு தெரிவித்தால் கூட இருக்கும் ஒரே பொழுதுபோக்கு சாதனமான தொலைக்காட்சிக்கும் இழப்பு வந்துவிடும்.

இருந்தாலும், அவரது கை கால்கள் திரும்ப திரும்ப திருகிக்கொள்கிறதே! அவரது உடல் நடுக்கங்களையும்,கட்டுப்பாடற்ற பொருத்தமற்ற அசைவுகளையும் கொண்டிருக்கிறதே! மூளையை மழுங்கடிக்கும் மருந்துகளை தாராளமாக தந்து உளவியல் நோய்களுக்கு எளிதில் இரையாகிறார்களே....

யார் காரணம்?

கைதிகளுக்கு சிறை அதிகாரிகளே மருந்து தருவதற்கான அதிகாரத்தை வழங்கிய அமெரிக்க நீதிமன்றத்தின் தீர்ப்பினாலேதான்.

இப்படி ஏற்கெனவே செத்துப் போன உடல்களுக்குத்தான் இவர்கள் மரண தண்டனை நிறைவேற்றுகிறார்கள்.

நீங்கள் தனிமைச்சிறையில் நாள் முழுவதும் தனிமையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறீர்கள்.சிறையில் உங்களுக்கென்று எந்த அகவாழ்வும் இல்லை. உங்களது ஆற்றல்களுக்கு, வளர்த்துக் கொள்வதற்கு வாய்ப்பற்றவராக இருக்கிறீர்கள். பாட்டரியால் இயங்கும் தட்டச்சுக்கூட பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற காரணத்தால் மறுக்கப்படுகிறது. பார்க்க வருபவர்களை தொட்டு பேசக்கூட முடியாதபடி, உங்கள் குழந்தைகள் உங்கள் கழுத்தை கட்டிகொள்ள முடியாமல் குடும்ப உறவுகளிலிருந்து விலக்கப்படுகிறீர்கள். சமயங்களில் தொலைபேசி அழைப்புகளும் மறுக்கப்படுகின்றன. வீட்டிற்கும் உங்களுக்குமான தூரம் அதிகரித்துக்கொண்டே போய் சிலநேரங்களில் துண்டிக்கப்படவும் நேரிடுகின்றன. மனநோய் சிகிச்சைகளில் ஆரம்பித்து கடைசியில் உங்களை தொடர் மயக்க நிலையில் வைத்திருக்கும் (கோமா ) மருந்துகளே வழங்கப்படுகின்றன. இறுதியில் மனித உணர்வே அறுத்தெறியப்பட்டு மனச்சிதைவுக்கு ஆளாக்கிவிடுகின்றன, இந்த ஏற்பாடுகள் அனைத்தும்!

ஒரு நூற்றாண்டு காலமாக பின்பற்றப்படும் இவ்வேற்பாடுகள் உண்டாக்கிய சீற்றமும், ஊளையும், கத்தலும், பிதற்றல்களுமே இச்சிறையின் சுவர்களில் மோதிக் கொண்டிருக்கின்றன.

இதில் எங்கிருக்கிறது இனவெறி என்றா கேட்கிறீர்கள்?

இப்போது நாம் பார்த்தது எல்லாம் கறுப்பானவர்களுக்கான, கருப்பட்டியை போன்ற ஆப்பிரிக்க-அமெரிக்கர்களுக்கான சிறைக்குழிகளைத்தான். அப்போதானால், வெள்ளையின மரண தண்டனை கைதிகள் எங்கே?

அதோ தெரிகிறதே...திறந்த வெளி முற்றமும், செயற்கை நீருற்றுகளும்,கூடை பந்து மைதானங்களும்,ஆட்டக்களங்களும் கொண்ட இடம் - இந்த திறந்த வெளி பகுதிகளே வெள்ளையின மரண தண்டனை கைதிகளுக்கானவை. இன்னொன்று சொல்ல மறந்துவிட்டேனே..ஒரு கறுப்பின அதிகாரி கூட இந்த சிறைக்குழியில் இல்லை. இனவெறிக்கு இந்த சிறிய எடுத்துக்காட்டே போதும்.

இன்னும் வேண்டுமானால், கறுப்பர்களை கொன்ற கறுப்பர்களுக்கு கிடைக்கும் மரணதண்டனை பற்றிய புள்ளி விவரங்களை நோக்கினால் இனவெறி தாக்கிய நீதி அமைப்பை புரிந்துக் கொள்ளலாம்.

ஜூம்மா என்ற தொழுகை நேரத்தில் விலங்கிடப்பட்டவர்களை அடிப்பதை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுப்ப ஐம்பதிற்கும் மேற்பட்ட மரண தண்டனை கைதிகள் ஒன்று கூடுகிறார்கள். இனி அவ்வாறு நடக்காது என்று உறுதி கூறி அவர்களை கலைந்து செல்லுமாறு அதிகாரிகள் கூறுகிறார்கள்.அடுத்த இரண்டு நாட்கள் முழு அடைப்பு. அடுத்த நாள் இரவு, தூக்கத்திலிருந்து எழுப்பி கைதிகளை நிர்வாணப்படுத்தி நிராயுதபாணிகளாக அடித்து நொறுக்கப்பட்டார்கள். இரத்த சுவடுகள் படிந்திருந்த அந்த தரை, எதிர்பாராத தாக்குதலை துணிந்து எதிர்கொண்ட அப்பாவி கிராம மக்களின் இரத்தக்கறை அடுத்த நாள் கழுவப் பட்டிருந்தது. அடிமை வெறி கொண்ட, திட்டமிட்ட இனவெறி தாக்குதலன்றி இது வேறென்ன?

இப்போது நாம் இன்னொருவரை சந்திக்கப் போகிறோம்.

வயது முதிர்ந்தவர்களைப் போலவே இளம் பருவத்தினருக்கும் கடுமையான தண்டனைகள் வழங்கலாம் என்ற தீர்ப்பின் கீழ் அடைக்கப்பட்ட நபர்தான் அவர். பெயர் ரப்பானி.ஏர் -கன்னை கொண்டு கொள்ளையிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு இந்த பென்சில்வேனியா சிறைக்கு வந்தபோது அவர் பதினைந்து வயது இளைஞர்.

விலங்கு பூட்டிய நிலையிலேயே அவர் ஆண்மகனாக வளர்ச்சியடைந்தார். ஆனாலும் அவர் வயதுக்குரிய வாய்ப்புகளனைத்தும் மறுக்கப்பட்ட நிலையிலேயே! பதினைந்து ஆண்டு காலமாக அவர் சூரியன் மறைவதையோ உதிப்பதையோ காதலனாகவோ குழந்தைக்கு தகப்பனாகவோ உலகை பார்க்காமலேயே ”சீர்திருத்தப்பட்டார்”. உளவியல் மற்றும் நீதியின் ரீதியாக பீப்பாய்க்குள் அடைத்து பதப்படுத்தப்பட்டார்.

இப்படி ஒவ்வொரு கிராதிக்கம்பிக்குள்ளும் சொல்லப்படாத கதைகள் நிரம்பியுள்ளது. அதற்கு பின்னால் இனவெறியும் அடிமை வெறியும் தங்களது கோரமுகத்தை நீதிக்குப் பின்னால் மறைத்துக்கொண்டுள்ளன.

ஒரு கொடிய மிருகத்தை போல சித்தரிக்கப்பட்ட, பல புத்தகங்களும் ஒரு திரைப்படமும் உருவாகக் காரணமாக இருந்த, தனது வாழ்வின் பனிரெண்டு ஆண்டுகளை போராட்டத்திலும் தனிமைக் குழிகளும் கழித்து எதிர்காலம் குறித்த எந்த திட்டமிடலும் இல்லாமல் வெளியேறிய ஜே ஸ்மித், சட்டப்பூர்வமாக சட்டத்தை மீறும் அதிகாரம் படைத்த அடிமை வெறி கொண்ட அதிகாரிகளின் கோரமுகம், குடிக்கும் தண்ணீரிலும் நச்சு கலப்பு என்று எண்ணற்ற மீறல்களை நீங்களும் நேரடியாகக் காணலாம்....'முமியா அபு - ஜமால்” அவர்களின் 'சிறையும் மரணமும்' என்ற இடுக்கமான வாசலின் மூலம்.

”இந்த உலகம் ஒரு பெரிய பந்து. எல்லைகள், தடுப்புச் சுவர்கள், சிறைக்கூடங்கள்,சிறையறைகள், நமது வாழ்வென்னும் சிறை ஆகிய அனைத்துமே மனிதர்களது மூளைகளின் தவறான எண்ணங்களிலிருந்து உதித்ததுதான்” - முமியா அபு ஜமால்.

இதோ, நாம் விடைபெறும் தருணம் வந்துவிட்டது.

ஆம், இப்போது நாம் பார்வையாளர்களுக்கான இடத்திற்கு வந்துவிட்டோம். சிறை என்பதே ஆன்மாவின் மீது தொடுக்கப்படும் தாக்குதலென்றும் பார்வை நேரம் என்பது அவமானப்படுத்துவதற்கான ஒன்று என்று உணர்கிறீர்களா?

கைதிகளை பார்க்க வருபவர்களால் காண முடியாததை, கைதிகள் பார்வை நேரத்திற்கு முன்பு கடந்து வரும் நிகழ்ச்சியை மட்டும் நீங்கள் அறிய வேண்டும். அது ஒரு கொடூரனமான அனுபவம். உடலின் உட்புறங்களை எல்லாம் திறந்து காட்டச் சொல்லி சோதனையிடுவது. கைதி நிர்வாணமாக ஆனதும் அதிகாரிகளின் உத்தரவுகளுக்கு மறுப்பேதும் தெரிவிக்காமல் கீழ்படிய வேண்டும். குனிந்தும், நிமிர்ந்தும்,வாயை திறந்தும், பிறப்புறுப்புகளைக் காட்டியும் சோதனைக்கு உட்பட வேண்டும்.

இத்தனைக்கும், பார்வையாளர்களுக்கும் கைதிகளுக்கும் இடையே தொட்டுக்கொள்ளக் கூட முடியாத பெரிய கண்ணாடியாலான தடுப்புச் சுவர் உண்டு. உறவுகளிடமிருந்து துண்டிக்கப்பட்டு அவமானத்திற்கு ஆளாக்கப்படும் இடம். இங்குதான் முமியாவின் அன்பு மகள், குட்டி எலியின் கீச்சுக்குரலை கொண்ட அந்த சிறுமி தடுப்பை வெறித்துப் பார்த்து கண்ணீர் விட்டு அழுது தன் சின்னஞ்சிறு விரல்களால் முஷ்டியை உயர்த்தி “உடைந்து போ; உடைந்து போ” என்று தடுப்பை குத்தினாள்.

”அவரை ஏன் கட்டித் தழுவ முடியவில்லை, ஏன் முத்தமிட முடியவில்லை? ஏன் தொட்டுக்கொள்ள முடியவில்லை?” என்ற ஹமீதாவின் கேட்காத கேள்விகள் இந்த பார்வையாளர் இடத்தை சுற்றி சுற்றி வருகின்றன!

முமியாவை மட்டுமல்ல...அமெரிக்காவின் நரக படுகுழிகளில் காட்டுமிராண்டித்தனமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள ஆண்களையும் பெண்களையும் சந்திக்க உங்களுக்கு விருப்பமாயின் :

புத்தகம் : முமியா : சிறையும் மரணமும்
முமியா அபு ஜமால்
தமிழில் : வி.நடராஜ்
விடியல் பதிப்பகம்

முமியா அபு ஜமால் - அறிமுகம்

குரலற்றவர்களின் குரல் என்று அழைக்கப்பட்டவர். ஆப்ரிக்க-அமெரிக்க ஒலிபரப்பு பத்திரிக்கையாளர். ஒரு வெள்ளை போலிஸ் அதிகாரியை கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டு 1982 ஜூன் மாதத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டார். தான் செய்யாத ஒரு குற்றத்திற்காக சிறைதண்டனை அனுபவித்த பிறகும் அந்த குற்றங்களை தான் செய்யவில்லை என்ற ஆதாரங்களை நிரூபித்தபிறகும் விடுதலைக்காக மனு செய்து காத்திருக்கிறார்.

குற்றமற்ற இந்த மனிதரை காப்பாற்ற வேண்டிய காலகட்டத்தில் நாமிருக்கிறோம். முமியாவின் வழக்கறிஞரின் வார்த்தைகளில் சொல்வதானால் ”முமியா நமக்கு மிக அவசியமாக தேவைப்படுகிறார். இதுபோன்ற ஒரு சமயத்தில், மிகப்பெரிய அளவிலான ஒரு போராட்டத்தை நடத்தாமல், நம்மிடமிருந்து இத்தகைய ஒரு குரலை அவர்கள் பறித்துக் கொள்வதை நம்மால் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

மேலும் தகவல்களுக்கு :

http://en.wikipedia.org/wiki/Mumia_Abu-Jamal


முமியா ஆதரவு தளங்கள்

ட்விட்டரில் முமியா : http://twitter.com/MumiaAbuJamal

Wednesday, June 09, 2010

சரித்திரம் மறக்கலாமா ? - அஞ்சலை அம்மாளின் வரலாறு

”விடுதலைக்கு மகளிரெல்லாம்
வேட்கை கொண்டனம்” - என்று பாரதி, பெண் விடுதலைக்கு அறைகூவல் விட்ட காலகட்டத்தில் பெண் விடுதலையை விட தாய்நாட்டின் விடுதலை முக்கியம் என்று களத்தில் குதித்தவர் தென்னார்க்காடு மாவட்டத்தின் தெய்வத்தாய் என்றும் வேலு நாச்சியார் என்றும் போற்றப்படும் திருமதி.அஞ்சலை அம்மாள் அவர்கள். 1921ல் இந்திய சுதந்திரப் போர் அரங்கில் இறங்குகிறார். சாதாரண நெசவு குடும்பத்தில் பிறந்தவர். குறைந்த படிப்பறிவு இருந்தாலும் அறிவும் துணிவும் அனுபவமும் எப்படி வந்திருக்கும்? இவை இந்த சமூகம் பாய்ச்சிய வீர ரத்தத்தின் வெளிப்பாடு அல்லவா!

”விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை
வீரப்பெண்கள் விரைவில் ஒழிப்பாராம்” - என்று பாரதி முழங்கிய கனவை நனவாக்கியவர் அல்லவா இவர். சமகால பெண்ணிய எழுத்தாளர் அம்பை மிகவும் ஆதங்கத்துடன் ஒரு கதையில் சொல்வார் -இந்தப் பெண்கள் அறிவையும், திறமையையும், சமையலறையிலே முடக்கி வைத்துக் கொள்கிறார்களே - தோராயமாக ஒரு பெண்ணின் ஆயுள் காலத்தில் 2,92,000 தோசை சுடுபவளாக இருக்கிறாளே! ஆனால், சென்ற நூற்றாண்டின் தொடக்கத்திலேயே மரபு என்னும் விலங்கை உடைத்தெறிந்துவிட்டு வாழ்வு என்பது குடும்ப வாழ்வு மட்டுமல்ல, சமுதாய வாழ்வும்தான் என்று முழங்கி குடும்பத்தினருடான் வீதியில் இறங்கியவர் அஞ்சலை அம்மாள்.

ஆம், இவர் நேருவின் குடும்பம் போல என்று சிலர் சிலாகித்து எழுதுகின்றனர். பேசுகின்றனர். ஆனால், இவர்கள் இன்னும் ஒருபடி மேல் என்று நம்மால் அடித்துச் சொல்ல முடியும். நேருவுக்கு பொருளாதார பலம் இருந்தது. குடும்பமும் சிறிய குடும்பம்தான். ஆனால், இவர் குடும்பமோ பெரிய குடும்பம். பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கிய குடும்பம். அன்றைய உழைப்புதான் அன்றைய சாப்பாடு என்றிருக்கும் போது எந்த துணிவில் அவர் சுதந்திர போரில் இறங்கியிருப்பார்? அதுவும் அந்த காலத்தைச் சேர்ந்த பெண்! பெண்களை நான்கு சுவர்களுக்குள்ளேயே வைத்து வெட்டி வீரம் பேசும் சமூகம்! ஆய்வுக்குரிய சிந்தனையாக எடுத்துக் கொள்ளவும். அமெரிக்க பெண்கள் விடுதலை போராட்ட வீராங்கனை பெட்டி ஃப்ரைடன் நீண்ட நாள் போராட்ட அனுபவத்திலிருந்து சொல்வது - “ஆண்கள் ஒரு தனி வர்க்கமல்ல. பெண்கள் ஒரு தனிவர்க்கமல்ல. பெண்கள் மட்டும் தனியாக முன்னேறலாம் என்று நினைப்பது தவறு”. தான் மட்டுமல்லாமல், கணவருடன், குழந்தைகளுடன் போராட்டத்தில் இறங்குகிறார்.

கணவர் - முருகப் படையாச்சி
பெண் - லீலாவதி
மகன்கள் - காந்தி,ஜெயில்வீரன்(தற்போது ஜெயவீரன்)

கர்ப்பிணியாக சிறைபுகுந்து பேறுகாலத்தில் அனுமதியுடன் வெளியே வந்து ஆண் மகவுடன் மறுபடியும் சிறை புகுகிறார், சிறை அதிகாரிகள், ஜெயில் வீரன் என்று குழந்தைக்கு பெயரிட்டு இப்போது ஜெயவீரனாக கடலூரில் வசிக்கிறார்.

எப்படி ஒரு பெண்ணால் இது சாத்தியமாயிற்று?

“நாங்கள் இந்தியப் பெண்மணிகள்
நாங்கள் மலரினும் மென்மையானவர்
நாங்கள் சுட்டெரிக்கும் தீச்சுடர்கள்” - என்ற ஒரு பெண் கவிஞரின் பாடல்வரிகள்தான் நினைவுக்கு வருகிறது. இந்திய விடுதலைக்காக தீவிரவாதியாக மாறிய மாடம் காமா, நீண்ட நாட்கள் தலைமறைவாக இருந்து போராடிய அருணா ஆசிப் அலிக்கும் சற்றும் குறைந்தவரல்லர் அஞ்சலை அம்மாள்.


1921 - சுதந்திர போராட்டத்தில் இறங்குகிறார்.
1927 - நீலன் சிலை அகற்றும் போரில் ஒரு வருடம் சிறை தண்டனை - சென்னையில்
1931 - உப்புக்காய்ச்சல் போராட்டத்தில் ஆறுமாத சிறை தண்டனை - கடலூரில்
1933 - மறியல் போரில் மூன்று மாத சிறை - கடலூரில்
1940 - தனி நபர் சத்தியாகிரகத்தில் முதலில் 6 மாதம்
1940 - 18 மாதங்கள் - வேலூர்
1943 - 8 மாதம் 2 வாரம் - பெல்லாரி

ஆக, நான்கு வருடம் ஐந்தரை மாதம் சிறைவாசம். தமிழ்நாட்டில் முதன் முதலில் சத்தியாகிரகத்தில் சிறை புகுந்த பெண்கள் என்ற பெருமைக்குரியவர்கள் :

1. அஞ்சலை அம்மாள்
2. மதுரை பத்மாசனி அம்மாள்

கள்ளுக்கடை இருக்குமிடமெல்லாம் அச்சிட்ட (குடியை கைவிடத் தூண்டும்) நோட்டீஸ்களை வழங்கிக் கொண்டே அஞ்சலை அம்மாள் மறியல் செய்வார். சென்னையில் தடைவிதிக்கப்பட்ட காங்கிரஸ் மகாநாட்டுக்கு தலைமை தாங்கி ஒரு பெண்கள் படையுடன் அஞ்சலையம்மாள் கைதானார். பிறகு ஜில்லாபோர்டு உறுப்பினராகவும், சென்னை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து 20-06-1961 இல் அமரரானார்.

இவருடைய மகள் அம்மாப்பொண்ணு என்கிற லீலாவதி (காந்தி இட்ட பெயர்)
தன்னுடைய 9வது வயதில் நீலன் என்ற கொடுங்கோலன் சிலையை அகற்றுவதற்காக தாயுடன் சென்னை வந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இவர்களுடன் தந்தையும் போராடும் போது அனைவரும் கைது செய்யப்பட்டு லீலாவதி செனனி சிறுமியர் இல்லத்தில் நான்கு ஆண்டுகள் தங்கியிருக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிடுகிறார். 1931ல் விடுதலையான பிறகு காந்தியின் வார்தா ஆசிரமத்தில் நான்கு ஆண்டுகள் தங்கியிருந்து சேவையில் ஈடுபட்டார்.

இவருடைய கண்வர் திரு.ஜமதக்னி வேலூர் மாவட்டத்தில் காவேரிப்பாக்கத்தில் உள்ள கடப்பேரி என்ற சிற்றூரில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தவர். காந்தியடிகளில் முதல் இயக்கம் முதல் இறுதி இயக்கம் வரையில் எல்லாவற்றிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். ஒன்பது ஆண்டுகள் சிறையில் கழித்தவர். தமிழ்,ஆங்கிலம்,இந்தி, சமஸ்கிருதம் போன்றவற்றில் புலமை பெற்று பல விருதுகளை குவித்தவர். ஜமதக்னி அவர்களின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைப் பற்றி ஆர்வியின் தளத்தில் காணலாம்.
இவர்களுடைய புதல்வி திருமதி.சாந்தி பெரியார் சிந்தனையில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்று சென்னையில் வசிக்கிறார்.

ஆக, இவ்வளவு தியாகங்கள் செய்த குடும்பம் வரலாற்று ஏடுகளில் எங்கே உள்ளது? இந்த சரித்திர சுவடுகள் பெண்களை ஒதுக்கி வைத்திருக்கிறது. தமிழ்நாட்டில்/ தென்மாவட்டத்தில் சுதந்திரபோராட்டத்திற்கு பங்களித்த எத்தனை பெண்கள் உடனே நம் நினைவுக்கு வருகின்றனர்? பெண்களின் போராட்டங்களை இந்த சமூகம் மறைக்கிறது அல்லது மறக்கிறது!

சிறையில் அடைபட்டிருக்கும்போது கடலூரில் அஞ்சலை அம்மாளின் வீடு ஏலத்திற்கு வந்தபோது, ஒரு முஸ்லீம் குடும்ப நண்பர் சமயத்தில் உதவி செய்கிறார். அஞ்சலை அம்மாளின் குழந்தைகளை சரியாக படிக்க வைக்க முடியவில்லை. பொருளாதார பிரச்சினை ஒரு புறம், பாதுகாப்பின்மை ஒரு புறம் - அதன் தாக்கம் அந்த குடும்பத்தின் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் தொடர்கிறது.

அரசர்களுக்கும், முதலாளித்துவ வர்க்கத்திற்குமே சரித்திரம் சொந்தமானது என்றால் சாதாரண அஞ்சலை அம்மாக்களின் தியாகத்தை யார் சொல்வது? யார் இதை வருங்கால சந்ததியினருக்கு எடுத்துரைப்பது? யார் யாருக்கோ சிலை நிறுவும் அரசாங்கம் அவர்களை எப்படி மறக்கலாம்?இவர்கள் சாதி, மதங்கள் தாண்டி வெளியில் வந்து போராடியவர்கள் ஆயிற்றே! History என்பது his-story மட்டுமல்ல her-storyயையும் உள்ளடக்கியது தானே! அரசு செய்ய மறந்தால் அல்லது மறுத்தால் இந்த சமுதாயமாவது அன்னாருக்கு சிலையெடுத்து சரித்திரத்தை திரும்பி பார்க்க வைக்கட்டும்!


”போற்றித்தாய்” என்று தாளங்கள் கொட்டடா!
”போற்றித்தாய்” என்று பொற்குழலூதடா!!


(ஒரு பத்திரிக்கையின் 'விடுதலை மலருக்காக' பெரிம்மா எழுதியது - அங்கங்கு கொஞ்சம் நானும் எட்டி பார்ப்பேன்! சேமிப்புக்காக இங்கே! )

Monday, June 07, 2010

பப்பு டைம்ஸ்

ஹாலை சுத்தம் செய்துக் கொண்டிருந்தேன். சுத்தம் என்றால் கீழே இறைந்து கிடக்கும் பொருட்களை எடுத்து வைப்பதுதான்.

"அமுதா ஆன்ட்டி வர்றாங்களா, வீட்டுக்கு?" - பப்பு

அவ்வ்வ்வ்!!ஒரு sea world park-ல் காணாமல் போகும் சீல் குட்டியை அங்கிருக்கும் அனைத்து விலங்குகளும் தேடி கண்டுபிடிப்பது பற்றிய கதையை வாசித்துக் கொண்டிருந்தோம்.

"நீ ஆயாக்கு என்ன ஹெல்ப் பண்ணுவே" - நான்

"அவங்களுக்கு என்னெல்லாம் வேணுமோ அதெல்லாம் செய்வேன்!"

"எனக்கு ?"

"நீ கீழே விழுந்துட்டா நீயே எழுந்துப்பியா...உனக்கு கை கொடுத்து ஹெல்ப் பண்ணுவேன்! "

time to check my weight!
எங்களது போர்வைக்குள் புகுந்துக் கொண்டு கட்டிலில் அங்குமிங்கும் அலைந்துக் கொண்டிருந்தாள். வெளியில் வர முடியவில்லை போல என்று நீக்கினேன்.

"ஏய், ஏன் எடுத்தே? நான் குகைக்குள்ளே இருக்கேன்" - பப்பு

"ஆ, குகையா...என்ன பண்றே குகைக்குள்ளே?"

"எல்லா அனிமல்ஸையும் வர சொல்லி அடிச்சு சாப்பிடறேன். ஒரு ரேபிட் போச்சு..ரேபிட்லாம் பாவம்ங்கம்மா..விட்டுட்டேன்! ரேபிட்-ல்லாம் அடிக்கக் கூடாது இல்லைங்கம்மா!" - பப்பு


(கிணற்றுக்குள் சிங்கத்தை பாய வைக்கும் அந்த முயல்-சிங்கம் கதையென்று நினைக்கிறேன்...:-))) )

Friday, June 04, 2010

'பூக்காரி'களுக்கும் சுயமரியாதை உண்டு

திரும்ப திரும்ப்ச் சொன்னதையே சொன்னாலும் இதுதான் உண்மை.

என்னை நம்புபவர்களுக்கு விளக்கம் தேவையில்லை. நம்பாதவர்களுக்கு இன்னும் எத்தனை விளக்கங்கள் கொடுத்தாலும் போதாது!

எனினும்...சில வார்த்தைகள்!

பதிவுலகில் ஒரு நடைமுறை ஹிட் ஆனால் அதை பின்பற்ற சிலர் விரும்புவது இயல்பு. உதாரணத்திற்கு, சென்ற வருடம் பரிசல்காரனின் பத்து கேள்விகளைத் தொடர்ந்து பதிவுலகமே பத்து கேள்விகளால் நிரம்பியது. அதைத்தொடர்ந்து நானும் ஆயாவிடம் பத்து கேள்விகள் இடுகையை இட்டேன். இதற்கு நான் பரிசல்காரனிடம் பர்மிஷன் கேட்கவில்லை.

அடுத்து, ஒரு வாசகர் கடிதத்தை நர்சிமும் வெட்டிபயலும் இடுகிறார்கள். அதைத் தொடர்ந்து தன்னைத் தானே பகடி செய்து, அதையும்
நர்சிமிடம் கேட்டபிறகு அவரது ஒப்புதலுடனே தீபா இடுகிறார். அப்படி ஒப்புதல் இல்லாவிட்டால் முன்பே தெரிவித்திருக்கலாம்.
அதைத் தொடர்ந்து கண்டன பதிவுகள்,சர்ச்சைகள் வரத் தொடங்குகின்றன. தீபாவிற்கு ஆதரவாக கமெண்ட்கள் இடுகிறேன். பிரச்சினை ஓய்ந்ததும் முகில் என்னை கிண்டல் செய்து அனுப்பிய வாசகர் கடிதத்தை இடுகிறேன். அதை அனைவரும் ரசித்தாலும் ஒரு சில பதிவர்கள் அதை நீக்குமாறு கிட்டதட்ட மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து என்னை நச்சரிக்கிறார்கள்.

என்னைப் பற்றிய சுய கிண்டலில் நான் யாரையும் காயப்படுத்தவில்லை, சொல்லப்போனால் என்னை நானே டேமேஜ் செய்து கொண்டதுதான் அதிகம். இதில் நீக்க ஒன்றுமில்லை என்று சொன்னாலும் வடகரைவேலன் போன்றவர்கள் வழியாக பிற பெண் பதிவர்கள் மூலம் எனக்கு தொடர் நச்சரிப்பு வருகிறது. இந்த இடத்தில்தான் ‘இந்த போஸ்ட்க்கு என்ன இவ்ளோ முக்கியத்துவம்' என்று வியப்பும் எரிச்சலும் மேலிடுகிறது. அதனாலேயே அதை இன்றுவரை நீக்கவில்லை. கவனிக்கவும், இங்கு தீபாவின் பிரச்சினை முடிந்தவுடன், தீபா மற்றும் நர்சிம் சம்பந்தபட்ட அனைத்து இடுகைகளும் நீக்கப்படுகிறது. சம்பந்தமே இல்லாமல் என்னையும் ராப்பையும் வைத்து அதிஷா எழுதிய ”அடிச்சுக்கிட்டு சாவுங்கடி” இடுகை இன்னமும் இருக்கிறது. அந்த இடுகையை விட,என்னை நானே கிண்டல் செய்துகொள்வதைத்தான் நடுநிலைவாதிகளால் தாங்க முடியவில்லை போல!

தற்போது, சாட்டில் வந்து மயில் ஒரு லொள்ளு சபா டைப்பிலான இடுகையின் சுட்டியைக் கொடுக்கிறார். சம்பந்தபட்டவரிடம் ஒப்புதல் பெற்றதாக கூறுகிறார். வாசகர் கடிதம் கொண்டு வந்த வினையை நினைத்து இதற்கு உளவு வேலை பார்க்க வந்துவிடுவார்களோ என்று முன்னெச்சரிக்கையாக அதைச் சொல்லியே இடுகையை ட்விட்டரில் பகிர்கிறேன். 'இப்படி இல்லை' என்று சொன்னால் 'அப்போ அப்படித்தான்' என்று எடுத்துக்கொள்பவர்களை நான் என்ன செய்ய முடியும்? நானே எழுதியதாக கதை கட்டுவார்கள் என்பது ஆச்சரியமாக இருந்தது. அப்படி நானே எழுதினால் அதை எனது பதிவில் போட்டுக் கொள்ளும் தைரியம் எனக்குண்டு.

கடந்த வருட சீரியஸ் சர்ச்சையை பகடி செய்யும் விதமாகவும், மணிகண்டனுக்கு பதிலாகவும் சில கமெண்ட்கள் இடுகிறேன்.
நான் மட்டுமல்ல, என்னோடு பல பதிவர்கள் இடுகிறார்கள். அவ்வளவுதான் எனக்குத் தெரியும் . நான் எந்த குழுமத்திலோ எந்த பிரபல நட்பு வட்டாரத்திலோ இல்லை. ஆனால், நான் இட்ட கமெண்ட்கள்தான் பிரச்சினையாக இருக்கிறது என்பது அவ்விடுகையின் சில கமெண்ட்கள் மூலமாக தெரிய வருகிறது

இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று, ஒரு வருடமாக நான் சீண்டி வருகிறேனென்று சொல்லப்படுகிறது. எங்கே என்னவென்று இப்போது வரை எனக்குப் புரியவில்லை. கொஞ்சம் விளக்கினால் பரவாயில்லை.

ஆனால், நர்சிம் தொடர்ந்து என்னை சீண்டியதை அவரது இடுகைகளிலிருந்து சொல்ல முடியும். உதா. சென்ற வருடம், ஐ லவ் யூ சென்னை என்று இடுகையிட்டததைத் தொடர்ந்து அய்யனார் எழுத பலரும் சென்னை குறித்து அவரவர் அனுபவங்களை எழுத தொடங்குகிறார்கள். பதிவுலகில் எனக்குப் பிடித்த அம்சமே இதுதான். கதைகள்,கவிதைகளை விட அனுபவங்களை அவரவர் பகிர்வுகளில் வாசிப்பதே வாழ்க்கையை
இன்னும் நெருக்கமாக காட்டுகிறது. எனது அனுபவங்கள், பார்வையை மட்டும் இல்லாமல் சக ஜீவனின் அனுபவங்களையும் அவர்களது எண்ணங்களையும் அறியக் கிடைப்பது வேறு எங்கே என்று கூறுங்கள்? அதில் குசும்பன் அவருக்கே உரிய கலாய்த்தலுடன் சென்னை
பிடிக்காமல் போனதை எழுதுகிறார். அதில் நர்சிம் , “இன்னும் கூட குத்தலாம் தலைவா” என்று கமெண்ட் இடுகிறார். அதைத் தொடர்ந்து அவரும் சென்னை குறித்து இடுகையிடுகிறார். இது என்னை சீண்டுவதற்கு என்று நான் சொல்லலாமா? எனக்கே அபத்தமாக இருக்கிறது. இதை ஒரு நிகழ்ச்சியாக சொல்ல வரவில்லை, இதையும் சீண்டல் என்று நான் கொள்ளலாமா என்றுதான் கேட்கிறேன்.

ஆனால், நிஜமான சீண்டல் ஒன்று இருக்கிறது. பல பெண் பதிவர்கள் அதை உணர்ந்து இருக்கிறார்கள். என்னிடம் தனிப்பட்ட ரீதியில் பகிர்ந்தும் இருக்கிறார்கள். ஆனால், நான் இதை பிரச்சினையாக்க விரும்பியதில்லை. பிரச்சினையாக்குமளவுக்கு எனக்கோ, மற்ற பெண் பதிவர்களுக்கோ இங்கே பாதுகாப்பில்லை என்பதும் உண்மையே. பதிவுலகில் பெண்கள் குறித்து புதுகை எழுதிய இடுகையின் மூலம் நர்சிம்மின் இடுகையை வாசிக்க நேர்ந்தது. விதூஷை அசோக் 'எளிய அழகுடன் இருக்கிறீர்கள்' என்று சொன்னதைத் தொடர்ந்து ‘குழந்தைகள் அப்டேட் முதல் பெண்ணிய கருத்துகள் முழுவதும் பதியப்படும் உலகில் இதை யாரும் கேட்கவில்லை, பெண்ணியம் என்னவென்று புரியவில்லை' என்கிற ரீதியில் நர்சிம் எழுதினார். இப்போது சொல்லுங்கள்,இதை என்னவென்று சொல்வீர்கள்?

இதைக் குறித்து நான் கண்டன இடுகை இட்டிருக்கலாமல்லவா? நான் இட்ட ஸ்மைலியுடன் இட்ட கமெண்ட்கள் ஒருவரை காயப்படுத்துகிறது எனில் “பப்புவை குறித்தும், எனது சில பெண்ணிய பார்வைகள் குறித்தும்' நான் எழுதுகிறேனே. அப்போது அவர் என்னை சீண்டித்தான் அதை எழுதியிருக்கிறாரா? எனக்கு எந்த பதிலும் வேண்டாம். நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்!

அடுத்து, மயிலின் இடுகையை தொடர்ந்து பூக்காரி வெளிவருகிறது. முற்றிலும் என்னை குறி வைத்து எழுதப்பட்டு ! பூக்காரியை வாசித்தபோது கீழவெண்மணி பற்றிய மைதிலி சிவராமனின் கட்டுரைகள் வாசித்தது நினைவுக்கு வந்தது. பிறப்பு குறித்தும் வளர்ப்பு குறித்து எழுதியிருந்தது அதனோடு முற்றிலும் தொடர்புடையது. நான், எனது முகம், நிறம், வளர்ப்பு, குழந்தை, தொழில் என்று என்னை எல்லா வகையிலும் இழிவுபடுத்திய அந்த இடுகை புனைவு என்ற பெயரில் வன்மத்துடன் தயாரிக்கப் பட்டிருந்தது.

ஆத்திரம், அவமானம், அழுகை, மன உளைச்சல், கோபம், கையாலாகத்தனம் எல்லாமும் என்னை அரிக்க ஆரம்பித்தன. ஆனாலும் இதை எதிர்கொள்ள வேண்டுமென்ற உறுதியும் இருந்தது. இல்லையென்றால் பதிவுலகை விட்டு இரக்கமின்றி துரத்தப்பட்டிருப்பேன். உடனடியாக எதிர்வினை செய்ய வேண்டாம் ,நிதானமாக இருப்போமென்று எண்ணிக் கொண்டிருக்கும் நேரத்தில் பைத்தியக்காரன் என்னைத் தொடர்பு கொண்டு வருத்தத்தை தெரிவித்து அவரது இடுகையை அம்பலப்படுத்துவோம் என்கிறார். அடுத்த சில மணிநேரங்களில் வினவு தொடர்பு கொள்கிறார். மேலே சொன்ன அனைத்தையும் அவர்களிடம் பகிர்ந்துக் கொள்கிறேன். தோழர்கள் என்னை ஆறுதல்படுத்தி நம்பிக்கை அளிக்கிறார்கள். முக்கியமாக இதை விடக்கூடாது என்று சொன்னது எனக்கு பெறும் ஆறுதலாக இருந்தது.

விதூஷை சொன்னதற்கு அவ்வளவு கொதித்தவர் இப்படி ஒரு பெண்ணை கேவலப்படுத்துவதற்காக எழுதலாமா, அதிலும் கமெண்ட்களில் கார்க்கியின் வக்கிரமும் அதை கண்டிக்காமல் அனுமதிக்கிறாரே.. அவர்களுக்குத்தான் எத்தனை மகிழ்ச்சி. என்னையும், என் மகளையும் பதிவுலகில் பலரும் அன்போடு பார்த்த அந்த சித்திரத்தை, சித்திரக்கூடத்தை அடியோடு தீ வைத்து எரிப்பதில் எத்தனை இன்பம்? இப்படியெல்லாம் கூடவா மனிதர்கள் இருப்பார்கள்? என்ன செய்வது, இருக்கிறார்கள்.

முன்பு நர்சிம் கொதித்தது விதூஷ் அவரது சாதி என்பதாலா?( ஏனெனில் வித்யா அய்யர் என்ற பெயரில் ஓட்டுகள் போடுபவர் அவர். ) ஆர்குட்டில் நான் முன்பு வன்னிய சாதி ஃபோரமில் இருந்ததற்கு சாதி உணர்வோ, இல்லை வெறியோ காரணம் இல்லை. அது மிகவும் தற்செயலாய் நடந்த நிகழ்வு. ஏன், புதிதாக வரும் ஹீரோயின்களுக்கான ஃபோரம்களிலும்தான் நான் இருக்கிறேன். சுயசாதி பெருமை இருந்தால் எனது பெயரில் படையாச்சி என்று சேர்த்துக் கொண்டு ஓட்டு போடவில்லை. அல்லது ஒரு சில பதிவர்கள் தங்கள் இடுகைகளில் ‘காமராஜ்' புகழ் மட்டுமே பாடுவது போல ராமதாஸின் புகழை நான் பாடவில்லை. வினவின் பாமக மீதான விமரிசனக் கட்டுரையை ஆதரித்து ஒட்டளித்திருக்கிறேன்.அவர்களது கருத்தோடு உடன்படுகிறேன். என் மீது நடத்தப்பட்ட வன்முறையை விட எனது ஃபோரம் நடவடிக்கைதான் சுகுணா திவாகருக்கு தேவைப்பட்டிருக்கிறது. இந்த புலனாய்வு நடவடிக்கைகளைத் தாண்டி நான் எப்போதும் வெளிப்படையானவளே.

ஞாயிறு மதியம் வரை தீபா நீங்கலாக எந்த பெண் பதிவரும் இதற்கு கண்டனத்தை எழுப்பவில்லை. ஏன், நர்சிமின் இடுகையில் ஒரு கண்டன குரல்கூட அவர்களால் பதிவு செய்யப்படவில்லை. அனைவரும் சாட்டில் தனிப்பட்ட விதத்தில் என்னிடம் அனுதாபத்தை தெரிவிக்கிறார்களே தவிர ஒருவரும் வெளிப்படையாக குரல் எழுப்பவில்லை. எது அவர்களை தடுத்தது என்று இன்று வரை எனக்கு புரியாத புதிர். எனக்கு தேவையாயிருந்தது அனுதாபமல்ல, கோபமே! அந்தக் கோபம் சக பெண்பதிவர்களிடமிருந்து ஒரு அலையாக வரவில்லையே என்பதால் நானும் தனிமைப் பட்டிருந்தேன்.

மாதவராஜும்,காமராஜூம் ஞாயிறு இடுகையிடுகிறார்கள். அதைத் தொடர்ந்து சிலர் கண்டனம் தெரிவிக்கிறார்கள். கார்க்கி பகிரங்கமாக இடுகையிட்ட மயிலை நாங்கள் குறிப்பிடவில்லை என்று சில இடங்களில் எனது பெயரையும் வெளிப்படுத்தியே கமெண்ட்கள் இடுகிறார். ஆமாம், கார்க்கி, நீங்கள் ஏன் என்னை குதறுகிறீர்கள்? உங்களுக்கு ஏன் இத்தனை வன்மம? என்னை விடுங்கள், எனது மகளைக்கூட விட்டு வைக்காத உங்களது 'மனிதநேயம்' என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.

இது சூடு பிடிப்பதைத் தொடர்ந்து, அதுவரை அமைதியாக இருந்த ரவி நெகிழ்ச்சியாக ஒரு இடுகையிடுகிறார். ரவி, நீங்கள் எங்கள் குடும்ப நண்பர் என்ற விதத்தில் உதவ முற்படுகிறீர்கள், புரிகிறது. ஆனால் இதை சனிக்கிழமையோ அல்லது எல்லாருக்கும் முதலிலோ அல்லவா இட்டிருக்க வேண்டும், நீங்கள் என்னை சகோதரி என்றுக் குறிப்பிடும் பட்சத்தில். சரியான அர்த்தத்தில் புரிந்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். காயப்படுத்துவதற்காக கேட்கவில்லை, இப்போது கேட்கவில்லை என்றால் பின் எப்போதுமே கேட்க முடியாமல் போய்விடலாம் அல்லவா! நர்சிமின் நட்பு என்ற பயத்தில் பூக்காரியின் அழுகை பலருக்கும் கேட்டிருக்காது என்றே பார்க்கிறேன்.


விக்னேஷ்வரி சமாதான உடன்படிக்கையை கொண்டு வருகிறார். அது எப்படி விக்னேஷ்வரி, இடுகையை ஒரு பெண்ணை கேவலப்படுத்தியத்தை கண்டிக்காமல் பிரச்சினையை தீர்க்க முயல்கிறீர்கள்? இடுகையை எடுக்கச் சொல்லி சகோதரியாக இறைஞ்சியதாக கோபப்பட்டதாக சொல்லியிருந்தீர்கள். ஏன், சகோதரியாக இல்லாமலிருந்தால் இப்படித்தான் கேவலப்படுத்துவார்களா உங்கள் சகோதரர்கள்? மன்னியுங்கள், விக்னேஷ்வரி! என்னை பொதுவெளியில் இழிவு செய்தவர்களிடமே தலைவிரி கோலமாக அழுதபடி உயிர்ப்பிச்சை கேட்கும் அடிமை நானில்லை.

நர்சிம் இடுகையை தூக்கிவிடுகிறார். கவனிக்கவும், செய்த தவறுக்கு கொஞ்சமும் வருந்தவில்லை. மன்னிப்பு கேட்பதென்றால், முகிலுக்கு பின்னூட்டமிட்டதைப் போல உள்ளத்தை வருத்தியதென்றால் அப்போதே அல்லவா மன்னிப்பு கேட்டு பிரச்சினைக்கு முற்றுபுள்ளி வைத்திருக்க வேண்டும்.ஆனால், எனக்கு நன்றி சொல்லி அல்லவா அவருக்கு அனுதாபத்தை தேடுகிறார்?

வினவு திங்களன்று இடுகையை எனக்கு அனுப்பிவிட்டு சம்மதத்தை கேட்கிறார். பழைய இடுகைகளிலிருந்தும், அவரை தொடர்பு கொண்ட பிற பதிவர்கள் சொன்ன தகவல்களை வைத்தும் எழுதியிருப்பதாக கூறுகிறார். வன்புணர்ச்சி என்ற வார்த்தை ஒன்றும் “பூக்காரி”யை விட
என்னை பாதித்துவிடவில்லை. தாராளமாக இடுகையிடுங்கள் என்று சம்மதிக்கிறேன். பதிவுலகில் பூக்காரியின் அருமை பெருமைகளை வார்த்தைகளால் நாறடித்த பிறகு அதை கண்டிப்பவர்களின் கையை கட்டிப்போட நான் விரும்பவில்லை. சொல்லப்போனால் எனது உணர்ச்சிகளின் குமுறலாய் அதைப் பார்க்கிறேன். தனிமையில் சலித்திருந்த என்னை அந்த இடுகை தோளில் கை போட்டு பார்க்கலாம் ஒரு கை என்றது.

தொடர்ந்து தோழர்கள் நர்சிமின் வக்கிர புத்தியை அம்பலப்படுத்துகிறார்கள். இமேஜ் நாசமாவதை தாங்க முடியாமல் புனைவு சிலரை காயப்படுத்தியதாகவும் என்னிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்பதாகவும் இடுகிறார். ஆனால் அதாவது என்னை கேவலபடுத்தியதற்கும், பப்புவின் இடுகைகளை ரசித்து மறுமொழி இட்டவர்களை கேவலப்படுத்தி இருந்ததையும், மற்ற பெண்பதிவர்களை சில்வண்டுகள் என்றும் “அவளுகளுக்கு இருக்கு” என்ற அச்சுறுத்தலையும் விட்டு விட்டார். பூக்காரி என்ற உண்மையான 'புனைவினால்' நைந்திருந்த எனக்கு அந்த மன்னிப்பு ஒரு பச்சையான புனைவு என்று புரிந்து கொள்வதற்கு மெனக்கெடவில்லை.

இடையில் ரவியும் முகிலும் தொடர்பு கொள்கிறார்கள். கவிதாவும் ஏதோ உடன்படிக்கை கொண்டு வர முயற்சி செய்கிறார். இதில் எதுவும் எனது consensus இல்லாமலே நடைபெறுகிறது. ஏனெனில் எனக்கு வேண்டியது தனிப்பட்ட தீர்வுகள் அல்ல.

ஆறு மாதத்திற்கு ஒரு முறை யாராவது ஒரு பெண் பதிவரை இப்படி பலியாக்குகிறார்கள். உதாரணங்கள் சொல்ல விரும்பவில்லை.
இதற்கு சில வருடங்களுக்கு முன்பு கூட உதாரணம் காட்டலாம். கடைசி பலியாக என்னோடு இது முடியட்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். முகிலிடம் நான் பார்த்துக்கொள்கிறேன், என்னால் முடியும் என்று நம்பிக்கை அளிக்கிறேன்.

அதையும் மீறி, எனக்கு தெரியாமலே

நேற்று முகில் எழுதிய கடிதத்தை ரவி அவரது பதிவில் வெளியிட்டிருக்கிறார். அலுவலக மீட்டிங் மற்றும் தமிழ்மணம் தொங்கிய நிலையில் உடனடியாக அதைக்குறித்து அறிய முடியாதிருந்தது. அதைக் குறித்து சில விளக்கங்கள்:

பதிவெழுத முகிலைக் கேட்டு நான் வரவில்லை.முகிலைக் கேட்டு கமெண்ட் போடவில்லை. அதற்கு அவசியமும் இல்லை.

சித்திரக்கூடத்திலும் பதிவுலகிலும் சந்தனமுல்லையாகவே முன்னிறுத்திக் கொண்டிருக்கிறேனே தவிர முகிலுடைய மனைவியாக அல்ல. நான் முகிலின் சொத்தோ கவுரவமோ அல்ல. அதைக் குறித்த தெளிவு என்னிடம் இருக்கிறது.

முகிலிடம் ஏன் மன்னிப்பு கேட்கிறீர்கள்?

இதன் மூலம் மனைவி, கணவனது சொத்து என்பதே திரும்ப நிறுவப்படுகிறது. கணவனும் மனைவியும் சேர்ந்த குடும்பத்தில் கணவன் அங்கமே தவிர, கணவன் என்றைக்கும் மனைவியை ரெப்ரசெண்ட் செய்ய முடியாது!

அப்படியே நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டுமென்றால், கேட்க வேண்டிய நபர் யாரைப் பற்றி புனைவெழுதி எல்லார் பதிவுகளிலும் ஒரு வருடமாக சீண்டி வருகிறேனென்று கமெண்ட்களிட்டு திரிந்தீர்களோ அவளிடம்.

ஏன், ஒரு பெண்ணிடம் மன்னிப்பு கேட்க உங்கள் ஈகோ பின்வாங்குகிறதா?

சிரித்துவிட்டு கடந்து விடக்கூடிய கமெண்ட்களுக்கு வஞ்சம் தீர்க்க பத்தி பத்தியாக வார்த்தைகள் கொட்டி புனைவு எழுதமுடியும் போது மன்னிப்பு என்பது குற்றத்தை உணராமல் ஒற்றை வரியில் - இதற்கு மேல் சொல்லாமலிருந்தால் இமேஜ் போய் விடுமோவென்ற எண்ணத்தில் - ஏன் சொல்லபடுகிறது? சூழ்நிலை எனக்கு ஆதரவாக திருப்பப்படும் நிலையில் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வரும் வார்த்தைகளை புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு நான் முட்டாளில்லை.

'அதான், மன்னிப்பு கேட்டாச்சுல்லே, ஏத்துக்கிட்டு போக வேண்டியதுதானே' என்பது உங்களின் வாதமெனில், பிரச்சினையை எப்படியாவது முடித்து வைக்கவேண்டுமென்பதுதான் உங்கள் பிரச்சினையாக இருந்தால், தயவு செய்து தள்ளிப் போங்கள்!

இந்த இடுகை உங்களுக்கானதில்லை.

எனக்கான முடிவுகளை என்னை எடுக்க விடுங்கள். எனக்கான தீர்வுகளை நானே கூற வேண்டுமே தவிர பிரச்சினை 'நல்லபடியாக' முடியவேண்டுமென்று கருதும் சிலர் அல்ல.

அல்லது உங்களது தமிழ்பட செண்ட்டிமென்ட்களுக்காக அல்ல. நானும் அழுது புரண்டு காப்பாற்றக் கோரும் தமிழ் சினிமா நாயகியும் அல்ல.

இதில் நான் யார் வீட்டு பிள்ளையாக இருந்தாலும் என்ன செய்ய வேண்டுமென்று நானல்லவா தீர்மானிக்க வேண்டும்?!

''அவரை மயக்க நான் பிராக்கெட் போட்டதாகவும், அதற்கு அவர் 'மசியாததால்' அவரை வஞ்சம் தீர்க்க நான் செயல்படுவதாகவும்'' தனது நண்பர்களிடம் சொன்னதுடன், எனக்கு ஆதரவாக நிற்கும் நண்பருடன் நான் 'கள்ளத்தொடர்பு' வைத்திருப்பதாக கடந்த இரண்டு நாட்களாக டிவிட்டரில் தன் நண்பர்கள் மூலம் கிசுகிசு எழுத வைத்திருக்கிறாரே...

இப்படிப்பட்ட ஒரு நபரை நான் மன்னிக்க வேண்டுமென்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்

இனி யாரும் பெண் பதிவர்களை கிண்டலடிக்க இந்த ஒரு வழியை எடுக்க மாட்டார்கள் என்பது இதற்கு கிடைத்த வெற்றி. அதற்கு வினவுக்கும் மற்ற தோழர்களுக்கும் நன்றி! வினவின் அந்த இடுகை ஒரு கல்வெட்டாக இருக்கட்டும்.

இது குறித்து சாதி வெறியையும் ஆணாதிக்கத்தையும் அம்பலப்படுத்திய அத்தனை தோழர்களுக்கும் நன்றி!

இதையெல்லாம் மீறியும் பாலியல் ரீதியாக வருங்காலத்தில் ஏதேனும் ஒரு பெண் பதிவரை யாரேனும் காயப்படுத்தினால், அப்போது கண்டிப்பாக வினவு தோழர்கள் எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் உறுதுணையாக இருப்பேன்.

நர்சிம் மற்றும் கார்க்கி செய்த குற்றத்தை, தவறை என்னால் மறக்கவும் முடியாது. மன்னிக்கவும் முடியாது.

எனக்காக குரல் கொடுத்த தோழர்களுக்கும் என்னுடன் இருந்த அத்தனை நண்பர்களுக்கும், மடலிட்டு, ஆதரவாக இருந்த அத்தனை பேருக்கும் நன்றி!

இனி நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நானோ, முகிலோ மட்டும் முடிவு செய்வது நியாயமாக இருக்காதோ என்று தோன்றுகிறது. தோழர்களும், நண்பர்களும் கூறட்டும்!

ரவியின் இடுகையில்

எனது பின்னூட்டம் கீழ்வருமாறு. விரிவான இடுகை நாளை!

”உங்கள் பின்னூட்டங்களையும், இடுகையும் பார்த்து தமிழ் சினிமா சென்ட்டிமென்ட் தான் நினைவுக்கு வருகிறது.

கமெண்ட் போட்டு - பாதிக்கப்பட்டவள் நான்.

பூக்காரியின் மூலமும், அவ்விடுகையின் கமெண்ட்களும் மூலம் காயம்பட்டவள் நான். இதில் என்னைவிட்டு விட்டு நீங்கள் முகிலிடம் எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்?

முகிலிடம் எதற்கு தலை வணங்குகிறீர்கள்?

குறைந்தபட்சம் இந்த இடுகையை போடுவதற்கு முன்பு எனக்குத் தெரிவித்திருக்கலாம் என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது!


இதற்கு முன்பு எத்தனையோ பெண்பதிவர்கள் இந்த நிலைக்கு ஆளாகி இருக்கிறார்கள்! எனக்கு நடந்ததன் மூலமாக இனி எந்த பெண்பதிவருக்கும் இந்தநிலை வராது என்ற நிலை இன்று வந்திருக்கிறது!


தயவு செய்து எனக்கான முடிவுகளை நீங்கள் எடுக்காதிருங்கள்!”