Monday, May 31, 2010

பப்...பூ

"உனக்கு மட்டும் ஏன் பூ பேரு?” - பப்பு

“உனக்கும்தான் பூ பேரு பப்பு!”

”எங்க இருக்கும்”

“மலைலேதான் பூக்கும், 12 இயர்ஸ்க்கு ஒரு வாட்டி”

“இல்ல,சந்தனமுல்லை தான் பூ பேரு, எனக்கு சந்தனமுல்லைன்னு பேரு வை”

”சரி..உன் பேரு சந்தனமுல்லை..”

சந்தனமுல்லை இந்த பூவை வரைந்து கோந்தை தடவை சிறு காகித துணுக்குகளை உருட்டி கோந்தில் ஒட்டி இந்த பூவைச் செய்தாள். மறக்காமல் இலைகள்!
புது பை
புது லஞ்ச் பாக்ஸ்
புது தண்ணீர் பாட்டில்
.
.
.
.
.

UKG!
ஆமாம், இன்றிலிருந்து பப்புவுக்கு பள்ளிக்கூடம் திறந்துவிட்டது. சென்ற வருடம் போலில்லாமல், முகம் மலர சிரித்தபடி பறந்தேவிட்டாள், எனக்கு கையசைத்துவிட்டு!

கற்றலின் இனிமையும், நண்பர்களுடன் மகிழ்ச்சியான தருணங்களும்,
குதூகலமான வேன் பயணமும் அமைய பப்புவுக்கும் , பப்புவின் நண்பர்களுக்கும் வாழ்த்துகிறேன்! :-)

Sunday, May 30, 2010

தலித்துகளுக்கென்று ஏன் தனிப்பட்ட நீதிகள் இல்லை?

வானின் திண்ணியநிழலில் மரண ஒலங்கள் கரைந்தபடி பல தலைமுறைகள் வெளிறிப்போன சமூகத்தில் பரிணமித்திருக்கின்றன. அறுத்தெறியப்பட்ட உறுப்புகளை போல வெறுத்தொதுக்கப்பட்டிருக்கிறார்கள் சுரண்டப் பட்டிருக்கிறார்கள், பாகுபடுத்தப் பட்டிருக்கிறார்கள், கைவிடப்பட்டிருக்கிறார்கள், புறக்கணித்து இகழப்பட்டிருக்கிறார்கள்,தாழ்மைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.


நகரங்களின் மற்றும் கிராமங்களின் புறநகர் விளிம்புகளில் சிதறிய புள்ளிகளாக அமைந்த குடிசைகளின், மட்கிப்போய் நாற்றமெடுத்து விரிசல்விட்ட கீற்றுச் சுவர்களின் உள்ளிலிருந்து எழும் மண்புழுதியின் சுழலோடு, பல நூற்றாண்டுகளாக அவர்களது கதறல்களும், கூக்குரல்களும் கேட்பாரற்று சங்கமித்திருக்கிறது.

சூத்திரர்கள்,சண்டாளர்கள்,நிசடர்கள்,அந்தியர்கள்,பாயர்கள்,ஹரிஜன்கள்,தலித்துகள் என்று விளித்துக் கொள்ளுங்கள் அல்லது ஒடுக்கப்பட்டவர்கள் என்று அழையுங்கள்.என்ன பெயரிட்டு அழைத்தாலும், கேன்சர் கட்டிகளைப் போல இந்த சமூகத்து மக்கள் இந்திய சமூக அமைப்புகளால் வெட்டி அகற்றப் பட்டிருக்கிறார்கள். திண்ணிய தெளிவான வெண்ணிற நீதியின் நிலவொளி தங்கள் வாழ்வை நீராட்டுவதை இனிதான் காணவேண்டியவர்களாக இருக்கிறார்கள்.

இரு நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஏற்றிவைக்கப்பட்ட எழுச்சி இயக்கம், ஒரு விரற்கடைகூட முன்னேறிச்செல்லாமல் இருந்த இடத்திலேயே சுழன்று, ஆழத்தில் அகழ்ந்து, அழுக்கைப் புறந்தள்ளும் உளையான சேற்றில் அகப்பட்ட சக்கரத்தைப் போல ஆகிவிட்டது.அவ்வியக்கம் எங்கும் செல்ல முடியாதபடி முட்டுச்சந்தில் நெருங்கிவிட்டது.மக்கள், சமூகத்தின் வெறுமையான கருநிழலிலேயே வாழவும், மடியவும் தலைபடுகிறார்கள்.

மும்பை பல்கலைகழகத்தால் சமீபத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட “தெற்காசியாவில் நவீனம்,பாரம்பரியம் மற்றும் தடுப்பாற்றல்” கருத்தரங்கு ஒன்றில், ஜாமியா மிலியா இஸ்லாமிய மத்திய பல்கலைகழகத்தைச் சேர்ந்த முற்போக்கு சமூகவியலாளரான Dr. Neshat Quaiser அவர்கள் தனது தனிப்பட்ட பேச்சின்போது எதிர்பாராத வியப்பூட்டுகிற ஆய்வுரையையும் வினாக்களையும் எழுப்பினார்.

Dr. Quaiser அவர்களது வியப்பூட்டுகிற தகவல் தலித் சமூகம் எப்போதும் இந்து சமயப்பிரிவு மற்றும் பார்ப்பனீய அமைப்பின் அதிகார எல்லைக்கு அப்பாலேயே இருந்து வந்திருக்கிறது. தலித்துகளுக்கென்று தனித்த அடையாளம் இருப்பதால், அவர்களுக்கென்று தனிப்பட்ட நீதி/சட்டம் இருக்க வேண்டும்.பார்ப்பனீய வர்ணாசிரம அமைப்பின் தாழ்ந்தநிலைக்கு ஒதுக்கப்பட்டதால் சாதிய அடையாளத்தை இழக்க சூத்திரர்களுக்கு ஒன்றுமில்லை.

”இதுநாள் வரை தலித்களின் தனிப்பட்ட உரிமைகளுக்கான தேவை எழவில்லை?காலங்காலமாக தலித்துகள் சுரண்டப்பட்டிருக்கிறார்கள், இதர ஆளும் வர்க்கம் மற்றும் சமூகத்தினரான இஸ்லாமியர்கள் அல்லது கிறிஸ்தவர்களாலும் இந்து பிராமணீய அமைப்புகளால் ஒடுக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதில் இரு வேறு கருத்துகள் இருக்க முடியாது.அனைவராலும் சித்ரவதைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.ஆனால் ஆச்சர்யமூட்டும்விதமாக,சமூகத்திலிருந்து தலித்-களுக்கான தனிப்பட்ட உரிமைகள் விவகாரத்தை எழுப்புவதற்கு தலித் அரசியல்வாதிகளோ அல்லது போராளிகளோ அல்லது அறிஞர்கள் அல்லது கற்றறிந்தோர் வகுப்பினரோ யாரும் கவலை கொள்ளவில்லை.”


தலித் சமூகத்தினர் இந்து சமயப்பிரிவின் ஆதிக்கத்திற்கு வெளியே இருப்பதால் இந்து வர்ணாசிரம அமைப்பின் கூறாக இல்லாததாலும் தலித்துகள் தங்களுக்கென்று தனிப்பட்ட உரிமைகளை கொண்டிருக்கவேண்டும் எனபதே Dr.Quaiser விவாதம்.இந்து சமயப்பிரிவிலிருந்து புறத்தே வந்து தங்கள் சுதந்திரத்தை நிலைநாட்டுவதிலேயே அவர்களது எழுச்சியும், சுய-மதிப்பும் சுயமரியாதையும் சுதந்திரமும் அமைந்திருக்கிறது.இந்து முறைமைக்கு உள்ளிருந்து சமூக சீர்திருத்தத்தை நாடுவதிலோ அல்லது புனரமைப்பதிலோ இல்லை.

நன்கு அறியப்பட்ட வரலாற்றாளர் ராம் ஷரன் ஷர்மா ”தொன்ம இந்தியாவில் சூத்திரர்கள் - ஏறத்தாழ கி.பி 600-ஆம் ஆண்டை நோக்கி சாதிப்படி நிலையின் கீழ்வரிசையின் சமூக வரலாறு” என்ற அவரது புகழ்பெற்ற உருவாக்கத்தில் ”இந்திய துணைக்கண்டத்தின் வேத முற்காலத்திற்கு தடயங்களைத் தேடி பயணிக்கும்போது சமூகம் மேய்ச்சல் பாணியிலான சமூகம் இருந்ததால் ஆரம்பகால இலக்கியங்களில் எந்த வகுப்பு பிரிவுகளும் காணப்படவில்லை” கூறுகிறார்.

அதேபோல,சமூகவியலாளர் நரேந்திர நாத் பட்டாச்சார்யா குறிப்பிடுகிறார் ”ரிக்வேதத்தின் உண்மையான முந்தைய பகுதிகளில் சாதி பிரிவுகளோ அனுபவ அறிவுக்கு புறக்கணிப்பு மற்றும் வாழ்வின் பல்வேறு படிகளின் செயல்பாடுகள் குறித்தோ அறியமுடியவில்லை. Tvastr என்ற கைவினை கலைஞன் சக்திவாய்ந்த தெய்வத்திற்கு நிகராக உயர்த்தப்பட்டான்.உலகை உருவாக்குவதென்பது மரவேலையை அதாவது,தச்சனது அல்லது சிறுதச்சுவேலை செய்பவரின் திறனை ஒத்த பதமாகவே கருக்கொள்ளப்பட்டது.அதையடுத்து,இந்த மனப்போக்கு பேணப்படவில்லை. அஸ்வின்களுக்கு என்ன நடந்தது என்ற துணையாதாரத்தோடு இது தெளிவாக விளக்கப்படலாம்.கடவுளர் சபையில் தலைமை வைத்தியர்களான அஸ்வின்களின் நிலையும் தாழ்த்தப்பட்டதோடு சோமபானத்தை பருகும் உரிமையும் மறுக்கப்பட்டது. பொருளாதார அறிவியல் போலியான புலமையாக கருதப்பட்டது.

ஷர்மாவைப் பொறுத்த அளவில்,”பொதுவான ஐரோப்பிய வார்த்தைகளான “அடிமை” மற்றும் சமஸ்கிருதத்தின் “தாசன்”என்ற வார்த்தைகள் வென்று அடையப்பட்ட மக்களின் பெயர்களின் மூலத்திலிருந்து மருவியது போலவே தோன்றுகிறது. சூத்திரர்கள் என்ற வார்த்தையும் இவ்வாறு வென்றடையப்பட்ட பழங்குடி இனத்தின் பெயரிலிருந்துதான் வருவிக்கப்பட்டிருக்க வேண்டும்.கு.மு 4-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பழங்குடியினரே சூத்திரர் என்பதில் ஒரு சந்தேகமும் இல்லை. காரணம், புதிய சிந்து சமவெளியை ஆக்கிரமித்த சோதரை என்ற பழங்குடியினருக்கு எதிரான அலெக்ஸாந்தரின் முன்னேற்றத்தை டியோடோரஸ் பதிவு செய்துள்ளார்.

மேலும், அதர்வ வேதத்தின் முற்கால பகுதிகளில் சூத்திரர்கள் பழங்குடியினராகவே தோன்றுகிறார்கள் என்று ஷர்மா குறிப்பிடுகிறார். ”இம்மக்கள் அனைவரும் வட-மேற்கு இந்தியாவில் குடியிருப்பாளர்களாக வாழ்ந்தது போல தெரிகிறது.மகாபாரத்ததில்,சூத்திர பழங்குடியினர் ஆபிராக்களுடன் வாழ்ந்தது போல விவரிக்கப்பட்டுள்ளது.வர்ணாசிரம அர்த்த்தில் பொருள் கொள்ளாமல் பழங்குடியினராக குறிப்பிட்டிருப்பதாகக் கொள்வதே அதர்வ வேதத்தின் தனிப் பண்பாகும்.


உண்மையில்,சூத்திரர்கள் தங்களுக்கென்று சில ஆரியர்கள் ஆரியல்லாத கடவுள்களை கொண்டிருந்தார்கள் என்று ஷர்மா சுட்டிக்காட்டுகிறார் .இவ்வாறு, சூத்திரர்களுக்கென்று கடவுள்கள் இல்லையென்ற படைப்பைப் பற்றிய கதைகளில் பார்ப்பனீய கூற்றுகள் சரியான நிலையை குறிக்கவில்லை.... சூத்திரர்களின் வழிபாட்டு உரிமையை பறிக்கவும், சகஆரியர்களுடன் பங்கிட்டு வந்த அவ்வுரிமையை தியாகம் செய்யவும் பார்ப்பனீய புராணக்கதைகள் குறிப்பிடத்தக்க முயற்சி காட்டுகின்றன.


மார்க்ஸிஸ்ட் தத்துவநிபுணரான தேவிபிரசாத் சட்டோபாத்யாய “லோகயதா - தொன்ம இந்தியாவின் பொருளியலில் ஒரு ஆய்வு” என்ற புத்த்கத்தில் மேற்கோள் காட்டுகிறார். “தாழ்ததப்பட்ட வர்க்கமான சூத்திரர்களின் கடவுள் கணபதி ” சூத்திர மறுப்பாளனான மனு கூச்சலிடுவதை விவரிக்கிறார்.


சூத்திர பழங்குடியினரை சமயகுருக்களிலிருந்து வேறுபடுத்தி ஒதுக்கி வைக்கும் பார்வை ரிக் வேத காலத்தின் முடிவிலிருந்து,அதாவது மேய்ச்சல் சமூகத்திலிருந்து தொழிலாளர்களுக்கு தேவை எழுந்த விவசாய சமூகமாக உருமாறத்துவங்கியபோது வெளிப்படத் துவங்கியது.

தொழிலாளர்களுக்கு எழுந்த தேவை மதங்களையும் கருத்தியல்களையும் பின்னுவதற்கும் தலைப்பட்டதோடு தொழிலாளர் தேவை நிரப்பீட்டுக்கான அமைப்பையும் ஒழுங்குபடுத்த தலைப்பட்டது.”மூளை சார்ந்த மற்றும் உடல் உழைப்பிற்கு இடையில் ஒரு தெளிவான கோடு வரையப்பட்டது.சூத்திரர்களுக்கு வேத அறிவு மறுக்கப்பட்டதன் மூலம் உடலுழைப்புக்காகவென்று முடிவு கட்டபட்டனர்....படைப்பவரின் காலிலிருந்து தோன்றியதாக புராணக்கதையின் அடிப்படையில் இது நியாயப்படுத்தப்பட்டது. சூத்திர சமூகம் இதர பழங்குடியினரோடு இணைக்கப்பட்டு அடிமைகள் அல்லது தாசர்களென்று ஒன்று திரட்டப்பட்டனர்.”

பழங்கால இந்தியாவில் அடிமைமுறை”என்ற புத்தகத்தில் சண்டாளர்கள் ம்ற்றும் அடிமைகள் அல்லது தாசர் பழங்குடியினரின் ஒருங்கிணைப்புக்கு பிறகு தோன்றிய தீண்டாமை பழக்கத்தை ”சூத்திரர்களின் கடமை யாதெனில் அடிமையோ இல்லையோ சுயாதீனமாக இருந்தாலும் ஒரு அடிமை செய்ய வேண்டிய எல்லா தூய்மையற்ற பணிக்ளையும் மேற்கொள்ள வேண்டும்.” என்று தேவ் ராஜ் சென்னா வரையறுக்கிறார்.


அன்றைய காலகட்டத்தில்,பார்ப்பனரல்லாத அனைவரும் சூத்திரர் எனப்பட்டார்கள்.இவ்வாறு, ஜெயின்கள்,புத்த மதத்தினர்,அஜ்விகஸ் அனைவரும் பார்ப்பன ஏட்டினால் சூத்திரர்களாக “தீர்க்கப்பட்டார்கள்”.பலத்த செல்வாக்கோடு இருந்த புத்தமதம் சூத்திர கலைஞர்கள் என்று வரையறுக்கப்பட்டது.


புத்தமதம்,ஜைன மதம்,சைவம் மற்றும் வைணவம் போன்ற, ஏறக்குறைய எல்லா மத சீர்திருத்த இயக்கங்களும் பார்ப்பனீய சமூக படிநிலை வரிசையின் மைய அச்சான கர்மவினை கோட்பாட்டை பற்றி கேள்வி எழுப்பவில்லை.

மத சீர்திருத்த இயக்கங்கள் வெறும் சமூக துயரையே கொண்டிருந்தது. பிற சமத்துவ வடிவங்களுக்குக்கான இடத்தில் மத சமத்துவத்தை வாக்களிப்பதன் மூலம் தற்போதுள்ள சமூக அமைப்புக்கு சாதி அமைப்பில் கீழ்படி நிலையிலுள்ளவர்களை இணங்க வைத்ததனர்.காலம் செல்லச் செல்ல வர்ணாசிரம அமைப்புமுறையில் தவிர்க்க இயலாதவைகளில் தங்களை முழுவதுமாக தொலைத்து சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் மனஉரத்தை இவ்வியக்கங்களை ஆரம்ப காலத்திலேயே ஆற்றலிழக்கச் செய்தனர் என்பதே ஷர்மாவின் கூற்று.


இந்திய துணைக்கண்டத்தில் ஆளும் வர்க்கத்தினரின் மனித தன்மையற்ற நடைமுறைகளை தோன்ற வைத்த சூழ்நிலைகள் அல்லது ஆதாரங்கள் மீதான ஆழமான ஆராய்ச்சியை மேற்கொள்ளுவதோ இங்கு நோக்கமல்ல.உண்மையை வலியுறுத்துவதே.


தலித்துகள் என்ற பெயரிடப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்ட பழங்குடியினர் மற்றும் பழங்குடியினரல்லாதோர் சமூகத்தினருடைய உழைப்பின்
ஆதாயத்தை அடையும் பொருட்டு வலுக்கட்டாயமாக அவர்கள் மீது திணிக்கப்பட்ட பார்ப்பன சமூக குறியீடுகளில் அவர்களுக்கு எந்த பங்கும் இல்லை.

ஒடுக்கப்பட்ட மற்றும் சுரண்டப்பட்ட சமூகத்தினரின் நிலையில் இன்றும் குறிப்பிடத்தகுந்த பெரிதான மாற்றங்கள் எதுவும் இல்லை.
எந்த செயலுக்குமான விளைவுகள் ஒரு பொதுவான அனைவரையும் ஒன்றிணைக்கக்கூடிய ஒரு இழையாலேயே சாத்தியமாகும்.


சாதி அமைப்புக்குள்ளே பணி செய்ய விரும்பும் மற்றும் ”இந்து மதஅமைப்பின் பகுதி”யாகவும் இருக்க விரும்பும் அரசியல் மற்றும் பொருளாதார ஆதாயங்களுக்காக குறுகிய நோக்கமுள்ள தலித் அரசியல் தலைவர்கள் ,சிந்தனாவாதிகள்,தலித் ஆதரவு சிந்தனையுடைய அறிஞர்கள், இவர்களே மனித இனத்துக்கும் கீழ்ப்பட்ட மற்றும் உடைந்து போன மட்கலங்களுக்குள்ளும் முறிந்துபோன வாழ்வுடனும் மிகச்சாதாரண வாழ்வைப்பற்றி கிழிசலான கனவுகளுடன் வாழும் லட்சக்கணக்கான மக்களின் மனிதத்தன்மையை இழிவுபடுத்தும் இந்நிலைக்கு காரணம் என்கிறார், தலித் போராளியும் அம்பேத்கரிஸ்டான ராகுல் கேட்.

எழுச்சி இயக்கங்களின் தோல்விக்கு தலித் இனக்கொழுந்துகளே காரணமென்று கேட் உறுதியாகக் கருதுகிறார்.”தலைசிறந்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் சில தலித்துகள் விழிப்புணர்ச்சியற்ற மெத்தன நிலையில் சுய ஆதாய காரணங்களுக்காக இந்து மதத்தை சீரமைக்கும் எண்ணத்தைக் கொண்டிருக்கிறார்கள் ” என்றும் கூறுகிறார்.

”தலித்திய கருத்துகள் எல்லா தளங்களிலிருந்தும் தலித் அடையாளங்களை எதிர்மறையான வழியில் வழிநடத்தும்படி வலியுறுத்தும்” என்ற கருத்தை தகர்த்தெறிய தலித் அறிஞர்கள் ஏதோ சில காரணங்களுக்காக தயங்குகிறார்கள். இந்த எதிர்மறையான எண்ணம் மற்றும் கழிவிரக்கம் என்ற கருத்துக்கூறு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித ஆதரவையும் தரப்போவதில்லை. உண்மையில்,மேல்தட்டு மற்றும் சாதாரணமக்களுக்கும் இடையேயான இடைவெளியை அதிகரித்திருக்கிறது.

அறிஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே அதிகரித்துவரும் தடைமுறிவை பி.எஸ்,மும்பை பல்கலைகழகத்தின் சமூகவியல் துறையை சேர்ந்த சமூக கோட்பாட்டாளர் முனைவர்.விவேக் ஒப்புக்கொள்கிறார்.”எல்லா அறிஞர்களும் அல்ல,ஆனால் அறிஞர்களில்,கற்றறிந்தோரில் ஒரு பகுதியினர் சமூக ஒடுக்குமுறையின் எந்தவித வடிவத்தையும் ஆய்வுக்குள்ளாக்குவதை அலுப்பூட்டும் வண்ணமாகவே கருதுகிறார்கள்.”


முனைவர்.விவேக் அவர்கள்,மும்பையில் துப்புரவு தொழிலாளர் பணியில்லத்தை (பெருக்குவோர் மற்றும் கழிவகற்றுவோர்) ஒழுங்கமைப்பதில் சில ஆண்டுகளை செலவிட்டுள்ளார். வர்க்கம்-ஆர்வம்-ஆய்வு பற்றி அவர்கள் சிந்திக்க மறுப்பது சாதாரணமக்களிடமிருந்து இன்னும் வெகுவாக அந்நியப்படுத்தும் என்று மேலும் சுட்டிக்காட்டுகிறார்.உணர்ச்சிக்கூறுகள் மீதான அதீத கவனம் கொண்டு, பொருளாதார அக்கறை பற்றியும் ,தலித்துகள் தொடர்புடைய எந்த சர்ச்சைகளை ஆராயவும் கிஞ்சித்தும் அக்கறை கொள்வதில்லை.புறக்கணிக்கத்தக்க எண்ணிக்கையில் இருப்பினும் இந்திய அரசியற் சமுதாயத்தில் உறுதியான ஆற்றல்வாய்ந்த பிரிவாக இருக்கிறது.அவர்கள் தற்போது தலித்துகளின் வலியையும் துன்பங்களையும் குறுகிய ஆதாயங்களுக்கு பயன்படுத்தும் தலித்-பார்ப்பனர் ஒடுக்கப்பட்ட மக்களை நோக்குவது போலாகிவிட்டனர்.

தலித் போராளியும்,இதழாளருமான ராஜ் ஜக்தாப் தலித் அரசியல் தலைவர்களை கண்டிப்பதோடு மட்டுமல்லாமல், டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கரை புரிந்துக்கொள்ளாமல் ஒப்பிக்கும் எல்லா அறிஞர்களையும் சாடுகிறார். டாக்டர்.அம்பேத்கர்,எல்லா நாடானாலும் “அறிஞர்கள் வர்க்கமானது மிகுந்த செல்வாக்குள்ள வர்க்கம்”என்று மனப்பூர்வமாக நம்பினார்.அதனால் தலித் அறிஞர்கள் ”தனியுரிமைக்கான தீப்பந்தங்களை ஏந்த வேண்டும்” என்று எதிர்பார்க்கப்பட்டனர்..ஆனால்,நடைபெறுவதோ நேர்மாறாக இருக்கிறது.

”எனது பரிமாற்றங்களில் கண்டறிந்தேன் தலித் ஆதர அரசியல்வாதிகள் மற்றும் தலித் அறிஞர்கள் சிறப்புகுழுமத்தை உருவாக்கி கண்ணீரையும், துயரங்களையும்,வலிகளையும் விற்பனை செய்யும் கடைக்காரர்கள் போன்று செயல்படுகிறார்கள்.எல்லோரும் அப்படி இல்லை என்ற போதிலும் பெரும்பான்மையானோர் இந்த ஒடுக்குமுறை தொடரவே விரும்புகின்றனர். விற்பனைக்கு எந்த பாதிப்பும் வராது.....இந்து சமயப்பிரிவில் தொடர்ந்து நிலைத்திருக்க விரும்புவதற்கு இதுவும் ஒரு காரணம்.இந்து சமய சீர்திருத்தத்தோடு எழுச்சி இயக்கத்திற்கு எந்த தொடர்பும் இல்லையென்று தெளிவாக பாபாசாகேப் (டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர்) உணர்த்தியிருப்பதை அசட்டை செய்கிறார்கள்.பிரகாசமான எதிர்காலத்தை தீட்டவே விரும்புகிறார்கள்,முரணாக அந்த பிரகாசமான எதிர்காலத்தை இன்று செறிவாக்குவதை பெரும்பாலோர் விரும்பவில்லை.” என்று ஜகதாப் சுட்டுக்காட்டுகிறார்.

நீதியின், வெண்ணிய தண்ணொளி பாயவும் சமத்துவம் புண்ணான கொப்புளங்களை தங்கள் வாழ்விலிருந்து தடையமின்றி அழிந்து போகவும் காத்திருக்கும் ,ஒடுக்கப்பட்டு துயரப்படும் லட்சக்கணக்கானவர்களுக்கான பாதை வரைவதற்கு ஒரு ஆரோக்கியமான விவாதத்தை திரட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

நன்றி :உன்னதம் மே'10
மூலம்: பிரபாத் சரண்
தமிழாக்கம்:சந்தனமுல்லை

Saturday, May 29, 2010

பனிராஜாவின் மகள்

பப்புவிடம் இருக்கு சில புத்தகங்களில் வேறு வேறு நாடுகள்,கண்டங்களில் இருப்பவர்களின் காலநிலை பற்றி, உடை உடுத்தும் விதம் பற்றி வாசித்திருக்கிறோம். அப்போதெல்லாம் வரும் முக்கிய கேள்வி, ‘பனி எப்போ நம்ம வீட்டுக்கு வரும்'. நம் வீட்டிற்கு, பனி டீவியில் காட்டும் பனி போல பொழிவதில்லை என்று புரியவைக்க முடியாது. அவளுக்கு டீவியில் காட்டும் பனி போல- அவள் விளையாட்டில் செய்யும் பனி பந்துகள் போல வேண்டும்.

அப்போதுதான், இந்த புத்தகம் கோடையின் அக்னி நட்சத்திரத்தின் ஆரம்பத்தில் தூலிகாவினரிடமிருந்து எங்கள் கைகளை வந்தடைந்தது.

”பனிராஜாவின் மகள்”

கோள்மூட்டி கோமளாவும், சுப்பாண்டியும், கபீஷூம் இடுகைக்காக அனுப்பியிருந்தார்கள்.

அட்லசை பார்த்து, அவ்விடத்திற்கே கற்பனையில் விஜயம் செய்யும் சிறுவனின் கதை.

சிறுவன் கேசவ்-விற்கு கோடைவிடுமுறை . “என்ன வெயில்” என்று அம்மா சலித்துக்கொள்ள அட்லசை பார்த்துக்கொண்டிருந்த கேசவ் ”குளுமையான இடத்துக்கு போனால் எப்படி இருக்குமென்று” கேட்பதிலிருந்து அவனது கற்பனை ஆரம்பிக்கிறது. அட்லசில் ஒவ்வொரு இடமாக பார்த்து எங்கெல்லாம் போகலாமென்று கற்பனை செய்வதும்,அந்த ஊரின் மொழியையும் கதைகளையும் அறிந்தவன் போல தன்னை எண்ணிக்கொண்டு பாயில் படுத்தபடி மெதுவாக தனக்குள் பேசிக்கொள்வதுமாக நேரத்தை கழிப்பான்.

அதில் திபெத்தை கண்டுக்கொண்டவன் அம்மாவிடம் அந்நாட்டைப் பற்றிப் பேச, பக்கத்துவீட்டினர் அங்கிருந்துதான் வந்திருக்கிறார்களென்ற செய்தியை சொல்கிறார் அம்மா.அவனுக்கு தெரிந்தவர்கள் அந்நாட்டில் வசிப்பதாக அவன் அறிவது இதுதான் முதல் முறை.பக்கத்துவீட்டுச் சிறுமி லாப்சாங் குழந்தையாக இருக்கும்போதே வந்துவிட்டாள்,அவளது அம்மாவும்,அப்பாவும் இன்னும் திபெத்திலேயே இருக்கிறார்களென்றும் கூறுகிறார் அம்மா.

ஆச்சர்யத்துடன் அட்லசை எடுத்துக்கொண்டு லாப்சாங்கை நோக்கி ஓடும் கேசவ் அந்த சிறுமி மூலமாக அவளது நாட்டைப் பற்றியும்,அங்கு பொழியும் பனியைப் பற்றியும் பேசுக்கொள்வதும்,அவர்களுக்கிடையே உண்டாகும் நட்பு இழையையும் சொல்லும் கதைதான் பனிராஜாவின் மகள்.

இருவரும் ஒன்றாக அமர்ந்து அட்லசை பார்ப்பதும், கற்பனையை ஓட்டி அங்கிருப்பதாகவே நினைத்துக்கொள்வதும், பனியை கையிலெடுத்து உருகுவதாக எண்ணிக்கொள்வதும் - பப்புவையும் அவர்களோடே விளையாட வைத்தது. புத்தகத்தின் படங்கள் ஒரு ப்ளஸ். திபெத்தில் பனி அரண்மனையை கண்டபின், அடுத்து இலங்கையை பார்த்து அங்கே போகலாமா என்று கேசவ் மற்றும் லாங்சாங் கேட்டுக்கொள்வதாக முடிகிறது கதை.


காசு வாங்குவதற்கு வீட்டிற்கு கூர்க்கா வரும்போதோ அல்லது ஏதாவது உணவகத்திலோ மங்கோலிய முகங்களைப் பார்த்தால் ”ஏன் அவங்க அப்படி இருக்காங்க” என்று சில சமயம் பப்பு கேட்டிருக்கிறாள். நம்மை போலில்லாமல் அவர்கள் வித்தியாசமாக இருப்பதைதான் அவள் குறிக்கிறாளென்றாலும் என்னால் விளக்க முடிந்ததில்லை. ”அவங்க வேற ஊரிலேருந்து வந்திருக்காங்க, அவங்க அப்படிதான் இருப்பாங்க ”என்றுதான் சொல்லியிருக்கிறேன், வேறுவகையில் புரிய வைக்க இயலாமல்.

பப்புவின் வயதுக்கு இந்தக் கதை பெரியது தான். அவளுக்கு பூமிஉருண்டை அல்லது மேப்பில் கண்டங்களை மட்டுமே கண்டுபிடிக்கத் தெரியும். ஆஸ்திரேலியாவும் நார்த் அமெரிக்காவும் சால இஷ்டம்! பிறகு துருவங்கள்!

நானும் பப்புவும் கண்ணை மூடிக்கொண்டு ”இப்போ எங்கே இருக்கோம்,பப்பு” என்றதற்கு, “ஆர்டிக்,அண்டார்டிக்” என்றாள்.

“அங்கே என்ன இருக்கு”

”ஹேய், போலார் பேர் அங்கே போகுது பாரு...குட்டி போலார் பேர் பார்த்தியா”

போலார் விளையாட்டு முடிந்ததும், திரும்ப கேசவை போலவே கவிழ்ந்து படுத்துக்கொண்டு கதை புத்தகத்தை விரித்து வைத்துக்கொண்டு எங்கு போகலாம் என்று கேட்டதற்கு “ஆஸ்திரேலியா” என்றாள். ”என்ன பண்ணலாம் அங்கே என்ன இருக்கும்” என்றேன். “கங்காரு” என்று சொல்வாள் என்று எதிர்பார்த்தேன்.

கடல் ஆமைக்குட்டிகளை கடலுக்குள் கொண்டு விடலாமென்றாள் அவள்.

டோராவின் அண்ணன், ஒரு புத்தகத்தில் கடல் ஆமைக்குட்டிகள் முட்டையிலிருந்து வெளிவந்ததும் கடலுக்குச் செல்ல வழிகாட்டுவான்.

கடல் ஆமைக்குட்டிகளுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் என்ன தொடர்பு என்று குழப்பிக்கொண்ட போது பிடிபட்டது, அந்த புத்தகம் எங்களுக்கு ஆஸ்திரேலியாவிலிருந்து நண்பர் பப்புவிற்கு அனுப்பியது! :-)

தூலிகாவிற்கு நன்றி!

” பனிராஜாவின் மகள்”
கதை : சௌம்யா ராஜேந்திரன்
சித்திரங்கள் : ப்ரொய்தி ராய்

Thursday, May 27, 2010

வைர விழாஜெயந்தி அளித்த வைர விருதினை இவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

மாதேவி
அன்னு
எம் ஏ சுசிலா
அமைதிச்சாரல்
சுந்தரா
நசரேயன்
தீஷூ
ஜமால்
தீபா
டம்பி மேவீ

ஜெயந்திக்கு அன்பும் நன்றியும்! :-)


பப்பு கார்னர் :

அம்மா வயித்துலே பொறந்தா அம்மா பாப்பாவா இருப்பாங்களா? அப்பா வயித்துலே பொறந்தா அப்பா பாப்பாவா இருப்பாங்களா? (அதாவது அம்மாவைப் போல/அப்பாவைப் போல)

Wednesday, May 26, 2010

பப்பு டைம்ஸ்

”பப்பு, ட்ரெஸ் சேஞ்ச் பண்ணப்போறேன்..வெளிலே போ!

....


”போ பப்பு!”

”ட்ரெஸ் சேஞ்ச் பண்ணும்போது இருக்கலாமா இருக்கக் கூடாதா?

”இருக்கக்கூடாது பப்பு...

”நான் உன்னை பத்திரமா பார்த்துக்கறதுக்காகத்தான்.. ஆச்சி..ரைனோ ஏதாவது வந்து உன்னை கடிச்சுடாம இருக்கறதுக்குத்தான்!

கொஞ்சநாட்களாக இதுதான் நடந்துக்கொண்டிருக்கிறது! ஹட்ச் விளம்பரம் போல!

”அம்மா,நீங்க என்ன பண்ணாலும் நல்லா பண்றீங்கம்மா”
(இத்தனைக்கும் தலைகாணியையோ அல்லது கீழே கிடக்கும் துணியையோதான் எடுத்து வைத்திருப்பேன்!)


”அம்மா இந்த ட்ரெஸ்லே நீங்க சூப்பரா இருக்கீங்கம்மா”
(அது ஏழு வருடத்திற்கு முன்பான அரதபழசான சாயம்போன உடையாக இருந்தாலும்...!)

”உங்களை பாத்தா எனக்கு ஆசையா இருக்குமா! ”

”நீங்கதாம்மா என் ஃப்ரெண்ட்..உங்களுக்கு எப்போவும் சேலஞ்தாம்மா! ”

ஒரே அடோரேஷன்.

அவள் கண்களிலேயே அது தெரியும். உடுத்திக்கொண்டு கண்ணாடியில் சரிபார்க்கும் போதும்...தலைமுடியை சீவிக்கொண்டிருக்கும்போதும்..ஏன் தண்ணீர் எடுத்து குடிக்கும்போதும் கூட விடாமல் கூடவே வருவாள். என்னையே பார்த்துக்கொண்டிருப்பாள். திடீரென்று வந்து இடுப்பை கட்டிக்கொள்வாள் அல்லது தூக்கச் சொல்லி முத்தமிட்டு இறுக்கப்பிடித்துக்கொள்வாள்.

கொடிகளில் தொங்கிக்கொண்டிருக்கும் துணிகளில் கூட, "அம்மா உங்க ட்ரெஸ்தான் சூப்பரா மாட்டி இருக்குங்கம்மா..அப்பாவோடது கச்சா முச்சா.. நல்லாவே இல்ல இல்லைங்கம்மா" என்றும் அடித்து விடுவாள். ஒருவரை உயர்த்தி மற்றவரை தாழ்த்தி பேசினால் ரசிப்பார்கள் என்ற எண்ணத்தை நான் புன்னகைப்பதின் மூலம் அவளுக்கு விதைத்துவிடாமலிருக்க முயற்சி செய்தாலும் அவளது அடோரேஷனை ரசிக்காமல் இருக்க முடிவதில்லை.

”அம்மா,உங்களைதாம்மா எனக்கு பிடிக்கும், நீங்க குட்-மா” என்றோ

”நீங்கதாம்மா என் ஃப்ரெண்ட் ” என்றோ உத்திரவாதம் கொடுப்பாள்.

சொல்கிற ஒவ்வொரு வார்த்தையையும் அவள் உணர்ந்து சொல்கிறாள் என்பதை , பாராட்டை அவள் கண்களிலேயே என்னால் காண முடியும்.அவளுக்கு நான் தேவைப்படுவதைவிட எனக்குதான் அவள் அதிகமாக தேவைப்படுகிறாளோ என்று எண்ணும் அளவுக்கு - உள்ளுக்குள் எனக்கு பிடித்திருந்தாலும்,சமயங்களில் மிகுந்த தொந்திரவாக இருக்கும்.

'ஒரு அஞ்சு நிமிஷம் சும்மா இரேன்,பப்பு' என்றாலும் பின்னாலேயே வருவாள். ”நான் உங்க கூடவேதான் இருப்பேம்மா” என்று எதையாவது பேசிக் கொண்டிருப்பாள். நமது முழு கவனத்தை எப்படி ஈர்த்து வைத்திருப்பதென்று அவளுக்கு நன்றாகவேத் தெரியும்!

”அம்மா,கேர்ல்ஸ்ல்லாம் குட்மா...guu..girls...guu good வருதுல்லே-அதான் good girlsம்மா.bu boys..bu bad வருது இல்லம்மா..bad boysம்மா. நீங்க குட் கேர்ல்...அப்பா பேட்..பேட் பாய்..இல்லம்மா!”

அவளது பள்ளியில்,வீட்டில் எந்த ஃபொனடிக்ஸும் சொல்லித்தர வேண்டாமென்று சொன்னதிலிருந்து வார்த்தைகளையோ எழுத்துக்களையோ சொல்லித் தருவதில்லை.ஆனாலும், இதை அவள் கோரிலேட் செய்து கொண்டது, (”நோ பப்பு,அப்பாவும்தான் குட்” என்று சொன்னாலும்) :-)

நேற்று இரவு, பாத்ரூமிலிருந்து வந்த என்னை கண்டதும் தூக்கம் கலைந்து எழுந்து அருகில் “அம்மா,உங்களை பாக்கணும்னு எனக்கு ஆசை வந்ததும்மா” வந்து கட்டிக்கொண்டாள். இரண்டு கன்னங்களிலும் முத்தமிட்டு, என் வலது கையின் மேல் தலை வைத்து உறங்கிப்போனவளைப் பார்த்த போது எனது இதயம் வெளியில் வந்து உறங்கி கொண்டிருப்பது போலிருந்தது.

(அவளது 13 வயதில் அவளுக்கு இதை நினைவூட்டுங்கள் என்று நீங்கள் சொல்வது எனக்கு சத்தியமாகக் கேட்கவில்லை! )

Tuesday, May 25, 2010

பெரிம்மா_அம்மா விசிட் :-) மற்றும் :-(

. என்ன காய்கறிகள் ஸ்டாக் இருக்கிறதென்று பார்க்கத் தேவையில்லை.

. நாளைக்கு என்ன சமையல் என்று கொட்டாவி விட்டபடி யோசிக்கத் தேவையில்லை.

. வெரைட்டியான உணவு பண்டங்களோடு கிளம்பும் நேரத்தில் உணவு டப்பா கைகளை வந்தடையும்.

. அதற்கு மறுபக்கமும் உண்டு! ஸ்ட்ராங் நோ டூ ஜங்க் ஃபுட் - வாரயிறுதிகள் பரோட்டா கட்!

. பதிலாக,'உடலுக்கு நல்லது' என்ற பெயரில் புதினா/கறிவேப்பிலை தொகையல் அல்லது கிர்ணி பழ/வெள்ளரி பழ வகைகளை உண்ணுவதிலிருந்து எஸ்கேப் ஆக முடியாது!

. ”என்னது,தலைக்கு நீ எண்ணெயே வைக்கறது இல்லையா” மாதிரியான அதிர்ச்சிகளோடு எண்ணெய்_வைக்காத__குலதெய்வ_குற்றத்தால்_ தான்_உன்_முடி_இப்படி_கொட்டிப்போகிறது உலகமகா கண்டுபிடிப்புகளை புள்ளிவிவரங்களோடு கேட்கலாம்.

. “உன் பெட்ரூம் என்ன இப்படி குப்பையா இருக்கு,இந்த குப்பையிலேயா படுத்து தூங்கறே” - அறியாத வயதில் தெரியாத்தனமாக ரொம்ப சுத்தபத்தமாக நீட்டாக பொருட்களை வைத்துக்கொண்ட குற்றத்திற்காக பழைய வாழ்க்கைசரித குறிப்புகள் மற்றும் திட்டுகள் aka அட்வைசை இன்று கேட்க நேரிடலாம்.

. திட்டுகளின் உப விளைவாக அலமாரி ஒழுங்கமைக்கப்பட்டு காணாமல் போன துப்பட்டாவோ, நீண்ட நாட்களாக தேடிக்கொண்டிருக்கும் சட்டையோ கண்டுபிடிக்கப்பட்டிருக்கும்.

.சம்மர் ஷாப்பிங் என்பது கோ-ஆப்டெக்ஸில் தொடங்கி கோ-ஆப்டெக்ஸிலேயே முடிந்துவிடும். ( டீச்சர் பசங்களாகிப் போன சோகங்கள் - பார்ட் டூ!)


இவையெல்லாம் இந்த வாரத்தோடு முடிவுக்கு வந்துவிடுமென்பதுதான் மிகப்பெரிய :-(

உங்களது அனுபவங்களையும் ஸ்டார்ட் மீசிக்....!

Monday, May 24, 2010

கொஸ்டின் பேங்க்!

மின்சாரம் இல்லாத இரவில் மாடிக்கு சென்றோம். தூங்காமல் பப்பு ஏதோ பேசிக்கொண்டே இருந்தாள். பக்கத்துவீட்டு மாடியிலும் இதே கதைதான். அங்கிருந்த ஒருவயது குழந்தையும் முழு குஷியில் சத்தம். அந்த குழந்தையின் அப்பா குழந்தையை அதட்டியதும் அழத்தொடங்கியது.


“நீயும் தூங்காம இருந்தா அந்த வீட்டுக்குதான் போணும்” - பப்புவிடம் முகில்.


“நானா பேபி மாதிரி அழறேன்?”


“நான் அந்த வீட்டுலேயா பொறந்தேன்?”


”நானா அவங்க பேபி?”


“அவங்களா எங்க அப்பா?”


”போதும் பப்பு, நான் என்ன சொன்னேன்...அதுக்குள்ளே இத்தனை கேள்வி கேக்கறியே” - முகில்!

Friday, May 21, 2010

Angels & Daemons!

பக்கத்து வீட்டு சிறுவனுக்கு பப்புவின் ஆம்பூர் ஆயாவிடம் பிரியம், பப்புவுக்கு அவனது ஆயாவிடம் இருப்பது போல.

ஆம்பூர் ஆயாவிடம் தன்னைத் தூக்கச் சொல்லிக்கொண்டே இருப்பான்.

உலகின் மிகக்கொடிய பொறாமைக்கார பப்பு ஓரிரு தடவைகள் பொறுத்து பார்த்து, பின்னர் பொங்கி எழுந்து ஆயாவை வீட்டுக்குள் அனுப்பி கதவை தாளிட்டுக் கூறினாள் :

"நீங்க என்னோட வீட்டுக்கு வந்துருக்கீங்களா..ஆதி வீட்டுக்கு வந்துருக்கீங்களா?"

இதைக் கேட்ட ஆம்பூர் ஆயா மட்டுமல்ல.....வீட்டில் இருந்த அனைவரும் உறைந்து போயினர்.
சிரித்து சிரித்து மாய்ந்தனர்.

வெயிட்..வெயிட்...Mom has a history...oh no..her story too..!

சில மாதங்கள் முன்பு வீட்டுக்கு வந்த பெரிம்மா அடிக்கடி தொலைபேசிக் கொண்டிருப்பதை கவனித்தார், அம்மா. அதுவும் பெரிம்மாவின் பேச்சில் கொஞ்சம் பாசம் தொனிப்பதாக தெரிந்ததும் அம்மாவுக்கு itching தாங்க முடியவில்லை.

ஆம்பூரில் எதிர் வீட்டில் இருக்கும் பெண்ணுக்கு குடும்பப் பிரச்சினை. அம்மா வீட்டுக்கு சென்றிருக்கும் அவரிடம் ஆறுதலாக, அன்பாக நாலு வார்த்தை பேசுவதாக தெரிய வந்ததும்....

"நீங்க எனக்கு பெரிம்மாவா...அதுக்கு பெரிம்மாவா..." என்று அழுகையும், கோபமும் கொப்புளிக்க கூறிவிட்டு கதவடைத்துக்கொண்டார் மதிப்பிற்குரிய அம்மா!

தாயைப் போல சேலை..நூலைப் போல பிள்ளைன்னு பெரியவங்க தெரியாமயா சொல்லியிருப்பாங்க!

Wednesday, May 19, 2010

Mamma Mia - Me the Mamma?

”சூயிங்கம்லாம் சாப்பிடக்கூடாது, தெரியாது?” - மிரட்டலுக்கு
பயந்ததுபோல தலையாட்டுகிறேன்.

பேப்பரை கிழித்து அதில் துப்பிவிடுவதைப் போல பாசாங்கு
செய்கிறேன் - மேலண்ணத்தில் ஒளித்துவைத்தபடி.

நம்பியும், நம்பாமலும் சந்தேகப்பார்வையால் துழாவி சமாதானமாகிறாய்.

சிறிது நேரத்தில் அனிச்சையாய் அசையும் வாயைப் பார்த்து
மறுபடியும்
மிரட்டத் துவங்குகிறாய்.
இம்முறை, மாட்டிக்கொண்ட பாவனையோடு பாதியை
உள்ளடக்கி மீதியை பிய்த்து தூர எறிகிறேன் உன்கண்முன் .

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் திரும்ப கைவிலங்கிடுகிறாய்.
ஒருசிலரை மெல்வதற்கு பதிலாக சூயிங்கத்தை மெல்கிறேனென்பதை
உன்னிடம் விளக்குவது எப்படி என விழிக்கும்போது,

”புடிக்குமா..?” - உனது கேள்வியில்

கண்கள் விரிய ஆமாமென்கிறேன்.

“அப்போ சாப்பிடு, ஆனா முழுங்க கூடாது, ஓக்கே!” என்கிறாய்
பெருந்தன்மையுடன்!


உன் உலகின் நியதிகளும்/காரணங்களும் தான் எவ்வளவு எளிதானவை,பப்பு!

(படம் : பப்பு @ விழுப்புரம்)

Saturday, May 15, 2010

முஸ்லீம் பெண்கள் சம்பாதிப்பது ஹராமா?

பப்புவை வளர்த்ததில், கவனித்துக்கொண்டதில் பெரும்பங்கு ஏஜென்சியில் இருந்து வந்த,வீட்டோடு தங்கியிருந்த கவனிப்பாளர்களுக்கு உண்டு. அதில் ஒருவர் ரேணுகா அக்கா. ஒரு நண்பர் மூலமாக, பாண்டிச்சேரியிலிருந்து வந்தார். ரேணுகா அக்காவிற்கு இரண்டு சிறுவர்க்ள். அவர்கள் இருவரும் ஒரு காப்பகத்தில் தங்கி படித்துக்கொண்டிருந்தனர்.


ரேணுகா அக்கா அந்த காப்பகத்தின் பொறுப்பாளரிடம் ஏதாவது வேலைக்காக உதவி கோரியிருந்தார். மாதந்தோறும் அந்த காப்பகத்திற்கு உதவியளிக்கும் குடும்ப நண்பர் மூலமாக வீட்டுக்கு வந்து சேர்ந்தார் ரேணுகா அக்கா. அக்காவின் கணவர் வேறு ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வருகிறார். இவரை கவனித்துக் கொள்வதில்லை. குடும்பச் செலவுகளுக்கு பணம் கொடுப்பதில்லை. அதனாலேயே மகன்கள் இருவரையும் காப்பகத்தில் விட நேர்ந்தது என்றும் அவரது பெற்றோரும் இல்லையென்பதால் கணவன் வீட்டிலேயே வாழ்ந்து வருவதாகவும், செலவுகளை சமாளிக்கவே இப்படி வேலைக்கு வந்ததாக ஆயாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார் அக்கா.


அக்காவுடன் பப்புவும் நன்றாகவே ஒட்டிக்கொண்டாள். இரண்டு வாரங்கள் சென்றது.ஒருநாள் அந்த விடுதி காப்பாளரிடமிருந்து தொலைபேசி அழைப்பு. “ரேணுகாவை நாளைக்கு அனுப்பிடுங்கம்மா, அவங்க வீட்டுக்காரன் குடிச்சுட்டு வந்து இங்கே ஒரே தொந்திரவு” என்றார். அதற்குள் ஆயாவிடமிருந்து அடுத்த தொலைபேசி அழைப்பு. ரேணுகா அக்காவிற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் அதிலிருந்து அக்கா அழுதுக்கொண்டிருப்பதாகவும் கூறினார். அலுவலகத்திலிருந்ததால், எல்லாவற்றிற்கும் 'சரி,வீட்டுக்கு வந்து பார்த்துக்கலாமெ'ன்று சொல்லி வைத்துவிட்டேன்.


அக்கா ஊரிலில்லாததை அறிந்த அவரது கணவர் நேராக விடுதிக்கு சென்றிருக்கிறார். அக்காவை, காப்பாளர்தான் எங்கேயோ அனுப்பி விட்டதாகவும் எங்கள் முகவரி மற்றும் ஃபோன் நம்பர் கேட்டு சண்டையிட்டிருக்கிறார். அவரும் எங்கள் நம்பரைக் கொடுத்துவிடவே, அந்த போன்கால்தான் அக்காவின் அழுகைக்குக் காரணம்.உடனே வீட்டுக்கு வருமாறு அக்காவிடம் சண்டையிட்டிருக்கிறார். அதுதான் இவ்வளவு குழப்பத்திற்கும் காரணம்.


“அந்தாள் இங்கே வந்து சண்டை போடுவாம்மா, இப்போவே வரச் சொல்றான், இல்லேன்னா போலீசை கூட்டிட்டு வந்து கலாட்டா பண்ணுவேன்ன்னு சொல்றான்,என்னை வாழவும் விடமாட்டேங்கறான்,சாகவும் விட மாட்டேங்கறான்” என்று அக்கா உடைந்து போனார்.


“அதெல்லாம் ஒண்ணும் ஆகாது, பாத்துக்கலாம்” என்றாலும் சமாதானமாகாமல் “அவனைப் பத்தி உங்களுக்குத் தெரியாது, என்னாலே உங்களுக்கு எதுக்கு கெட்ட பேரு, பிரச்சினை, வீட்டு முன்னாடி வந்து அசிங்கமா அசிங்கமா கத்துவான், நான் போறேன்” என்று ஊருக்குக் கிளம்பத் தயாரானார் அக்கா.


அவரை வழியனுப்பிவிட்டு திரும்பியபோது,பப்புவை பார்த்துக்கொள்வது எப்படியென்று எனக்கு முன்னாலிருந்த பெரும்சவாலைவிட, ”வீட்டுச் செலவுக்கும் காசு கொடுக்கறதில்லை,இவந்தான் என்னைதான் விட்டுட்டு போயிட்டான், நிம்மதியாவது வாழவிடலாம் இல்லே,நீ எப்படி போகலாம், யாரைக்கேட்டு போனே,வீட்டை விட்டு ஏண்டி ஓடிப்போனேன்னு கெட்ட வார்த்தையிலேல்லாம் போன்லே கத்தறான், ஹோம் இருக்கிறதாலே பசங்களை அங்கே விட்டிருக்கேன்,இல்லேன்னா என் கதி...” என்ற அக்காவின் கதறலும்,புலம்பலுமே நிரப்பியிருந்தது.


ரேணுகா அக்காவென்று இல்லை, அவருக்குப் பின் வந்த அத்தனை அக்காக்களுக்கு பின்னாலும் இப்படி ஏதாவது ஒரு கதை இருந்தது.
இந்த அக்காக்களின் தோள்களில்தான் குடும்பத்தின் அத்தனை பொறுப்பும் ஏற்றப்பட்டிருந்தது.ஆனாலும்,அவர்களின் முடிவுகளை தீர்மானிக்கும் அதிகாரங்கள், அவர்கள் வேலைக்குச் செல்வதா வேண்டாமாவென்று தீர்மானிக்கும் அதிகாரம் உட்பட அத்தனையும் அவர்களது கணவனின் கைகளில் இருந்தது.


இப்போது அந்த அதிகாரத்தை மத அமைப்புகளும் கையில் எடுத்துக்கொண்டது போலத் தெரிகிறது. தியோபந்த் முஸ்லீம் அமைப்பு ‘முஸ்லிம் பெண்கள் வேலைக்குச் செல்வதும்,அந்த சம்பளத்தில் வாழ்வதும் ஹராம்” என்று இருநாட்களுக்கு முன்பு ஃபத்வா கொடுத்துள்ளது.


ஆம்பூரில் அதிகாலை 5.30 - 6 மணிக்கு மெயின்ரோட்டிற்கு வந்தீர்களானால் கையில் உணவு டப்பா அல்லது கைப்பையுடன்,கருப்பு புர்க்காக்களோடு அங்காங்கே கும்பல் கும்பலாக நின்றுக்கொண்டு ஏதாவது ஃபேக்டரியின் பஸ்ஸுக்காக காத்திருப்பதைக் காணலாம். அவர்கள் அவ்வளவு சீக்கிரம் வரவேண்டுமானால்,எத்தனை மணிக்கு எழுந்து வேலைகளை முடித்திருக்க வேண்டும். அவ்வளவு காலையில் சாப்பிடக் கூட நேரமிருக்காது. அந்த குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் நீங்கள் இல்லையென்றால் ஃபேக்டரி பஸ் காத்திருக்காது.


கன்கார்டியா பள்ளியில் பத்தாவது வகுப்பில் முதலாவதாக வந்த ஷ்ம்ஷாத் அக்காவை படிக்க வைத்தது - இந்த தோல் ஃபேக்டரிக்கு வேலைக்குச் சென்ற அவரது அம்மாதான். ஒருநாள் கூட தவறாமல், பொழுது புலராத வேளையில், புர்க்காவுடன் மின்னல் போல வேலைக்கு விரைந்து சென்ற அவரது அம்மாதான் - கணவரை இழந்த அவர்தான், யார் உதவியுமின்றி தனது இரு பெண்களை பள்ளியிறுதி வரையும் ஒரு பையனை கல்லூரி வரையும் படிக்க வைத்தார்.இன்று ஷம்ஷாத் அக்கா ஒரு மெட்ரிக் பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார்.


ஷம்ஷாத் அக்காவின் அம்மா மட்டுமில்லை, ஆம்பூரின் பெரும்பான்மையான நடுத்தர மற்றும் அடித்தட்டு முஸ்லிம் பெண்கள் - தோல் தொழிற்சாலைகளிலும், குடிசைத் தொழிலான சேலைகளில் சம்க்கி தையல் கலைகளையும், இடியாப்பம் செய்து விற்றும் தங்கள் குடும்பங்களை காப்பாற்றுகிறார்கள். அவர்களுக்கு கணவன் இருந்தாலும், இருந்தும் இல்லாலிருந்தாலும் குடும்பத்தின் பொருளாதாரத்திற்கு, செலவுகளை சந்திப்பதற்கு அவர்கள் உழைத்தாக வேண்டும். வாரத்திற்கு ஆறுநாட்களும் வேலை செய்தால்தான் முழுசம்பளமும் கிடைக்கும். வெள்ளிக்கிழமை விடுமுறையிலும் கூட ஓய்ந்திருக்க முடியாமல், கைகளில் பத்து விரல்கள் பத்தாதென்று இன்னும் இன்னும் கைகளைக் தீனியாகக் கேட்கும் வீட்டு வேலைகள் நாள் முழுவதுமுண்டு!


காலைவேளைகளில் இடியாப்பத்தை எடுத்துக்கொண்டு வீடு வீடாக செல்லும் பாட்டி - ஹபிபாவை எப்படியாவது படிக்க வைத்துவிட பெரிம்மாவிடம் ஆர்வத்துடன் வந்து சந்தேகங்களை கேட்டுச் செல்வார்.பத்தாவது முடித்தவுடன் எந்த க்ரூப் எடுப்பது, எதை எடுத்தால் எந்த வேலைக்குச் செல்லலாம் என்று புரிந்துக்கொள்ள அந்த பாட்டி பட்ட பிரயத்தனங்களும், உத்வேகமும் சொல்லில் விளக்க முடியாதவை. வெளிநாட்டிலிருந்து மகன் அனுப்பும் கடிதங்களை தன்னால் படிக்க முடியவில்லை என்ற அவரது தீராத ஆதங்கத்தை யார் புரிந்துக்
கொள்வார்?சென்னையில் வழக்கறிஞராக ப்ராக்டிஸ் செய்வதற்காக ஆம்பூரிலிருந்து செங்கல்பட்டிற்கு தனது குடித்தனத்தை மாற்றிக்கொண்ட ஆஃப்ரீனின் அம்மா, மருத்துவர்களாகவும், பிசியோதெரபிஸ்ட்களாகவும் இருக்கும் ஆலியா, ஹாஜிரா,ப்ராக்ஜட் மேனேஜராக பலநாடுகளுக்கு பறந்து கிளையண்ட்களை சந்திக்கும் ஆயிஷா சித்திகா - இவர்களை இந்த ஃபத்வா என்ன செய்து விடும்?


பெண்கள் சம்பாதிப்பதை மறுதலிக்கும் இந்த ஃபத்வா பெண்களுக்கு எந்த வகையில் உதவும்? இவர்களது பொருளாதாரத்தேவைகளை எந்த வகையில் சந்திக்கும்? பெண்களுக்கு இட ஒதுக்கீடு மற்றும் 33% என்று மாற்றங்களுக்கு போரிடும் வேளையில் இந்த ஃபத்வா முஸ்லீம் பெண்களை வீட்டு நிலைப்படிகளுக்குள்ளேயே முடக்குகிறது. பள்ளியிறுதி வரையிலான படிப்பைக் கூட முடிக்க முடியாமல் முஸ்லீம் பெண்களில் ஒருபகுதியினர் இருக்கும் நிலையில், சாதிக்க வேண்டியது இன்னும் மிச்சமிருக்கும் நேரத்தில் இந்த ஃபத்வா முட்டாள்தனமானதாகத் தெரிகிறது.


இந்த ஃபத்வா குறித்து பதிவர்களில் - பெண்களின் கருத்தை , நண்பர்களான
நாஸியா, ஸாதியா, ஹூசைனம்மா,ஜலீலா,சுமஜ்லா - இவர்கள் இது குறித்து (நேரமும்,விருப்பமும் இருப்பின் ) என்ன சொல்கிறார்கள் என்று அறிய ஆவலாக இருக்கிறேன்.

Friday, May 14, 2010

500!!


கொஞ்சம் லைஃப் ; கொஞ்சம் ஜாலி
கொஞ்சம் அனுபவங்கள் ; நிறைய நினைவுகள்
கொஞ்சம் கிறுக்குத்தனங்கள் ; நிறைய மொக்கைகள்
கொஞ்சம் குழந்தை வளர்ப்பு ; நிறைய பப்பு,
கொஞ்சம் இனிப்பு ; கொஞ்சம் உப்பு.....


And, Life goes on...


...500 இடுகைகளைக் கடந்து!!


எண்களைக் குறித்து பெரிதாக எண்ணுவதில்லையென்றாலும், இடுகைகளின் எண்ணிக்கை 500-ஐ தாண்டியதை பார்க்க நேர்ந்தது.


எங்களோடு இணைந்திருப்பதற்கும் பகிர்ந்துக்கொள்வதற்கும் நன்றிகள்!


சித்திரக்கூடத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!


குறிப்பு : பப்புவுக்கு இந்த உடையை அனுப்பிய கோல்டா அக்காவிற்கு நன்றிகள்..
(அப்படியே, பெரிய பப்புவையும் கொஞ்சம் கவனிச்சா நல்லாயிருக்கும்..ஏன்னா, என்னைத்தானே உங்களுக்கு ஃப்ர்ஸ்ட் தெரியும், அக்கா! :-) )

Wednesday, May 12, 2010

ஒ ஃபார் ...

ஒரு நாள் ஒரு கனவு...

”இனிமே லைஃப்லே கொடைக்கானல் பக்கம் தலைவைச்சே படுக்க மாட்டேன் யா' என்று எல்லோரும் தீவிர தீர்மானத்தை நிறைவேற்றியபோது, 'ஹீரோ ஹோண்டா ஸ்ப்லெண்டர் - அதுவும் கருப்பு ஸ்ப்லெண்டர் - சிலுசிலுன்னு காத்து - கூட பாட்டு - ஹேர் பின் பெண்ட்ஸ் - லெதர் ஜாக்கெட் - ஏகாந்தமா தனியா ஓட்டுக்கிட்டு வரணும்' என்கிற ரம்மியமான கனவுகளோடுதான் கொடையை விட்டு ஒரேயடியாக இறங்கினேன்.


அதுவும் பழனி டூ கொடை மலைப்பாதை அழகான பள்ளத்தாக்குகளையும், அங்கங்கே நீர் வீழ்ச்சி,சிற்றோடைகளையும் அடர்ந்த காடுகளையும் கொண்டது. அவ்வப்போது ஒலிக்கும் பறவைகளின் விநோத சத்தங்களும், எப்போதாவது கடந்து செல்லும் லாரி அல்லது பஸ் எஞ்சின் சத்தங்கள் தாண்டி நாமும், இயற்கையும், யூக்கலிப்டஸ் மணம் நிரம்பிய காற்று மட்டுமே!நினைத்த இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு..ஸ்டைலாக இறங்கி...மலைப்பாதையின் இறங்கி நடந்து.. ரசித்து...பின்னர் ஸ்டார்ட் செய்து...வாவ்..நினைக்கவே எவ்வளவு ஜாலியாக இருக்கிறது!

நான் பார்த்திருந்த யமஹா,பஜாஜ்,என்ஃபீல்டு வகையறாக்களில் கொஞ்சம் ஸ்லீக்காக, தனித்துவமும், நாகரிகமும் எல்லாவற்றுக்கும் மேலாக இளமையின் சின்னமாகத் தெரிந்த ஸ்ப்லெண்டர் என்னை கவர்ந்ததில் வியப்பேதும் இல்லை. இப்படி பஸ்ஸில் செல்லும்போதே ஸ்பெல்ண்டர் கனவுகள் உடன்வர, 'வேலைக்கு போனதும் முதல்ல ஸ்ப்லெண்டர்தான் வாங்குவேன்' என்ற நினைப்பும் வர மனமும் பயணமும் குதூகலமாகிவிடும்.

வேலைக்கு வந்தபோதோ 'ஹூடிபாபா' பிரபலமாகி விட்டிருந்தது. தம்பியின் வண்டியில் ஓட்டக்கற்றுக்கொண்டு ஸ்பெலண்டர் வாங்கிக்கொள்ளலாம் என்று நினைப்பைத் தள்ளிப்போட்டாயிற்று. இந்த ஆசையை வெளியிட்டிருந்ததில் நலவிரும்பிகள் என்ற நலவிரோதிகள் அனைவரும் ‘கியர் வண்டியெல்லாம் சரிப்பட்டு வராது, அதுவுமில்லாம, அப் ஹில்லே ஓட்டறது எங்களுக்கே கஷ்டம், வேணும்னா சொல்லு ஆச்சி, பைக்கிலே கொடைக்கானல் போணும், அவ்ளோதானே,நாங்க எதுக்கு இருக்கோம்' என்றதில் புஸ்ஸாகிப் போனது. ‘பின்னாடி உட்கார்ந்துக்கிட்டு போறதுக்கா..உங்ககிட்டே சொன்னேன்.. ச்சே..இனிமே உங்ககிட்டே சொன்னாதானே' என்று பொருமியதோடு நின்று விட்டது.

ஆனால், வேலைக்கு வந்ததும் வாங்குவதற்கு வாய்த்ததென்னவோ “ஸ்கூட்டி'தான். 'பஸ்ஸில் நின்றுக்கொண்டு செல்வதால்தான் பொண்ணுக்கு கால்வலி வருதெ'ன்று நினைத்த பெரிம்மா ஸ்டேட் பேங்கிலிருந்து வித்ட்ரா செய்த பணத்தோடு வந்து நின்ற இடம் அடையார் ராம்கே டிவிஎஸ். இருபதாயிரம் முதல் தவணை. மீதி எட்டாயிரம் எனது சம்பளத்திலிருந்து இன்ஸ்டால்மெண்ட். மிகவும் பிடித்த வண்ணமான ‘ரத்த சிவப்பு' அல்லது ‘தீஞ்சிவப்பு' ஸ்கூட்டியை தேர்ந்தெடுத்து பணத்தை கொடுக்கும் வரை உறைக்கவே இல்லை, 'ஸ்கூட்டி ஓட்டத் தெரியாதே' என்று! 'வண்டி இன்னும் ரெண்டு நாள்லே கிடைச்சுடும் மேடம்,ரெஜிஸ்ட்ரேஷன் ஆனதும் நீங்க வந்து எடுத்துக்கலாம்' என்று சொன்னபின்புதான் ஆரம்பித்தது, ‘ஓட்டத் தெரியாமல் எப்படி ஹாஸ்டலுக்கு வண்டியை எடுத்து வருவது' என்ற கவலை.

பாபு அண்ணா இருக்க பயமேன்! ஹாஸ்டலுக்கு பெட்டி தூக்குவதிலிருந்து, பெரிம்மா கொடுத்தனுப்பும் ஸ்வீட்ஸை குரியர் செய்வது வரை பாபு அண்ணாதான் சகலமும். அண்ணா ஊரிலிருந்து வந்தார்.வண்டியை ஹாஸ்டலுக்கு கொண்டு வந்தார். எப்படி ஓட்டுவது, எது ப்ரேக், எது ஆக்ஸிலேட்டர், இண்டிகேட்டர் என்று பத்து நிமிடத்தில் சொல்லிக்கொடுத்து ‘நீதான் சைக்கிள் ஒட்டுவே இல்லே, நீ நல்லா ஓட்டிடுவே, ஆச்சி' என்று நம்பிக்கையும் கொடுத்துவிட்டு சென்றார். அண்ணா முன்பு இரண்டு ரவுண்டுகள் எங்கள் ஹாஸ்டல் எதிரில் ஓட்டினாலும் சாலையில் வாகனங்களுக்கிடையில் ஓட்டுவதை நினைத்து லேசாக மலைப்பாக இருந்தது. அதேசமயம்,சாகச மனப்பான்மையும்!

அடுத்த நாள் அதிகாலை மஞ்சுதான் எழுப்பினாள்.'ஹேய் உனக்கு ஓட்டத் தெரியுமா,மஞ்சு' என்றதற்கு ‘பாத்துக்கலாம் வா' என்றாள். ஒரு ஏ4 பேபப்ரில் இன்சுலேஷன் டேப்பால் L -ஐ ஒட்டிவிட்டு, வண்டியை தள்ளிக்கொண்டு வெளியே வந்தோம். காலை ஆறு மணிக்கு ராஜ்பவன் ரோடு காலியாக இருந்தது. ‘ம்ம்...ஸ்டார்ட் பண்ணுப்பா' - பின்னால் மஞ்சு. என் இதயத்துடிப்பு எனக்கே கேட்டது.

‘ஹேய் மஞ்சு, பிடிச்சுக்கோ,விழுந்துடப் போறேன்(!)' என்றபடி ஸ்டார்ட் செய்தேன். கொஞ்சம் ஆக்ஸிலேட்டர். ஒரு கையில் எப்போதும் வேண்டுமானாலும் அழுத்த ப்ரேக்...விர்...விர்ர்ர்...வ்ர்ர்ர்ருரூம்ம்ம்ம்..அட..காலை காற்று முகத்தில் அடிக்க கண்களை எதேச்சையாக கீழே தளர்த்தியபோது ஸ்பீடோமீட்டர் காட்டியது 40கிமீ!

தடுமாறுவேன் என்று நினைத்தது போலல்லாமல் ஸ்டடியாக போய் கொண்டிருந்தது வண்டி. இல்லையில்லை... பறந்துக்கொண்டிருந்தோம்! உற்சாகம் பீறிட 'இன்னும் வேகம் இன்னும் வேகம்' என்று அழுத்தியதில் மத்திய கைலாஷ் தாண்டியதும் - 60கிமீ வேகத்தில் சென்றதும் அனிச்சையாக நடந்தது. நேராக தரமணிக்கு, எனது அப்போதைய அலுவலகத்திற்கே சென்றுவிட்டோம். இன்னும் தாண்டினால் மஞ்சுவின் வீடு வந்துவிடும் என்றாள் மஞ்சு.

அப்படியே, திருப்பிக்கொண்டு வரும் வழியில் ‘ஹேய் மஞ்சு,உனக்கு ஓட்டத் தெரியுமா, சொல்லவே இல்ல' என்றதும் மஞ்சு சொன்னதுதான் ஹைலைட். ‘ஒருதடவை பக்கத்துவீட்டு அண்ணாவோட டீவிஎஸ்50ய சும்மா ஒருரவுண்ட் ஓட்டிபார்த்தேன்'! “அடப்பாவி” என்று கூவினாலும் இப்போது எனக்கே கொஞ்சம் தைரியம் வந்துவிட்டிருந்தது. விர்ர்ர்ர்ர்ர்ரூம்!

திரும்பி வரும்போது ராஜ்பவன் எதிரில் வலதுபுறம் திரும்பவேண்டும். 'கை போடவா' என்று மஞ்சு கேட்டபோது 'ம்ம்' என்று தலையாட்டிவிட்டு வலதுபுறம் செல்ல நேரம் கடத்தியபோது, பின்னால் வந்த பைக்காரர் ஒருவர் கெட்ட வார்த்தையால் திட்டிக்கொண்டே கடந்து சென்றது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சி. இப்படி, நடுரோட்டில் நாளொரு திட்டும், பொழுதொரு தவறுமாக ஓட்டிக் கொண்டிருந்தபோது ஸ்பெலண்டர் கனவு கொஞ்சம் கொஞ்சமாக புதைய ஆரம்பித்திருந்தது.

திருமணம் நிச்சயமாகி, இரவு தொலைப்பேசி அழைப்புகளின் ‘ம்ம்..அப்புறம்டா' அல்லது ‘சொல்லுடா,அப்புறம்..செல்லம்' என்ற அந்த ‘அப்புறம்' காலகட்டத்தில் ஏதோ ஒரு 'அப்புறத்தி'ற்கு அப்புறம் 'என்னுடைய உன்னதமான கனவை' முகிலிடம் சொல்லித் தொலைத்தேன்.

‘அவ்ளோதான,கல்யாணத்துக்கப்புறம் நாம முதல்லே அங்கேதான் போறோம்' என்று கற்பூரம் அணைக்காத குறை. இந்த சத்தியத்தை திருமணத்திற்கடுத்த இரண்டு மாதங்களில் நினைவூட்டியபோது ‘உன் கை எவ்ளோ சாஃப்ட், இந்த கையாலே அதையெல்லாம் ஓட்ட முடியுமா..கியர் வண்டி வேற” என்ற வழிசலை பார்த்து ‘போயா யோவ், அடுத்த மாசமே உன்னை டைவர்ஸ்தான்' என்று பல்லை கடித்தபடி அதே சாஃப்ட் கையால் மங்கம்மா சபதம் செய்தேன். ‘ என் உன்னதக் கனவை அடைந்தே தீருவது எப்படி' என்று திட்டங்கள் தீட்டினேன் - அடுத்த சிலவாரங்களில் காத்திருந்த அதிர்ச்சி தெரியாமல்!

ஸ்பெலண்டர் ஓட்டுவது என்ன,ஸ்கூட்டியையே இன்னும் ஒரு வருடத்திற்கு ஓட்ட முடியாது என்பதுதான் அந்த அதிர்ச்சி! 'இனி பின்சீட்டுதான்' என்பது அதற்கடுத்த அதிர்ச்சி!Pregnancy!! (Yes, Unplanned) நினைத்த இடத்திற்கு நினைத்தபோது போனது போக,‘எனக்கு அங்கே போகணும், என்னை கூட்டிட்டு போறியா....ப்லீஸ்' இல்லையேல் ‘இன்னைக்கு ஆஃபீஸ் இருக்கு, கொண்டு வந்து விடறியா'என்றோ கேட்பது மாதிரியான கொடுமை...அதுவும் எப்போதும் சுயமாக இருந்தபின் சார்ந்து இருக்க வேண்டியநிலை வரும்போது....சொல்லத் தெரியவில்லை!!

முடக்கப் பட்டது போல உணர்ந்தேன். (உடலின் மாற்றங்களை மனம் ஏற்றுக்கொள்வதில் இருந்த Latency!)

தற்போது,மிலி வந்து ஆறு வருடங்களாகிவிட்டது. அவ்வப்போது மக்கர் செய்ய ஆரம்பித்து இருக்கிறது.

புது வண்டி வாங்கலாம் என்று கடைக்குச் சென்றபோது, மகிழ்ச்சியைவிட 'நானே சம்பாரிச்சு நானே ஓட்டக் கத்துக்கிட்ட வண்டி'என்ற நினைப்பே ஆக்கிரமித்திருந்தது. மிலியை விட மனசே இல்லை.

ஸ்கூட்டி பெப் தற்போது (முற்காலத்து 'மடிசார் மாமி' புகழ் கைனடிக் போல) ஆண்ட்டிகள் வண்டியாகி விட்டதால் ஸ்கூட்டி ஸ்ட்ரீக்கை தேர்ந்தெடுத்தேன். ஆனாலும், சிலநாட்கள் மிலியுடனே ஆஃபிஸ் வந்தேன். இப்போது, முற்றிலும் புது வண்டிக்கு மாறிவிட்டேன்.

‘பேசாம, இதுலேயே கொடைக்கானல் போகலாமா' என்று தற்போது யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

ஆனாலும், அவ்வப்போது ஆழ்மனதிலிருந்து எட்டிபார்க்கிறது ‘ஸ்ப்லெண்டர் கம் கொடைக்கானல்' ஆசை!

Tuesday, May 11, 2010

Wet Wet Wet in cruel cruel summer!முழு சார்டையும் ஈரப்படுத்தி வண்ணங்களை தெளித்தால் உருவாகும் Patterns-தான் இந்த ஆக்டிவிட்டி (அல்லது ஒழுங்கே இல்லாமல் செய்வது எப்படி?). சார்ட் முழுவதையும் நீங்களே தண்ணீர் தெளித்தும் கொடுக்கலாம். அல்லது, அதையும் குட்டீஸ் கையிலே கொடுத்துவிட்டு நீங்கள் ரிலாக்ஸ் செய்யலாம். பப்பு பிரஷினால் முழுவதுமாக ஈரப்படுத்தினாள்.
இங்க் பில்லர் உபயோகப்படுத்தலாம். வீட்டில் இல்லை. பிரஷினால் வண்ணங்களை எடுத்துத் தெளித்தாள்.இறுதியில், ஈரமான சார்டில் வண்ணங்கள் ஒன்றோடு ஒன்று குழைந்து டிசைன்கள் உருவாகின.
வெயிலில் காயவிட்டு விட்டோம். பப்புவுக்கு மிகவும் பிடித்திருந்தது.

Monday, May 10, 2010

பாஸ் பாஸ்..நீ இப்ப பாஸ் பாஸ் - தொடர்பதிவு

மணிக்குயில் இசைக்குதடி மனமதில் மயங்குதடி...
சிறகுகள் விரித்தபடி இளங்குருவிகள் பறந்ததடி...

- இந்த பாட்டை கொஞ்ச நாள் முன்னாடிதான் முதல்முதலா பார்த்தேன். நிரோஷாவும் - ராம்கியும். அதுவரைக்கும் அந்த பாட்டுக்கு குணசுந்தரியை தான் கற்பனை செஞ்சு வச்சிருந்தேன். இந்த பாட்டும், குணசுந்தரி ஞாபகமும் பிரிக்க முடியாத ஒண்ணு. அட்டெனன்ஸ் -லதான் குணசுந்தரி. எங்களுக்கு குணாதான்.

அக்கார்டிங் டூ பெரிம்மா & மத்த டீச்சர்ஸ், பாட்டு புக் வாங்குறவங்க,பாட்டை நோட் புக்லே எழுதி வைக்கறவங்க எல்லாம் படிக்காத பசங்க. இதெல்லாம் விட்டுட்டு உருப்படற வழியை பாருன்றதுதான் அவங்க சொல்ற அட்வைஸா இருக்கும். குணா என்னை மாதிரியே ஆவரேஜ் ஸ்டூடண்ட்...எப்படியோ நாங்க திக் ப்ரெண்டாஸிகிட்டோம். ஏழாவதுலே, கில்லடின்லே கொலை பண்ணுவாங்களே, அந்த வரலாற்று பாடம் படிக்கும்போது புக் நடுவிலே இந்த பாட்டு புக்கை வச்சு பாடி காட்டினா. அதுலேருந்து எனக்கும் இந்த பாட்டு பிடிச்சுடுச்சு. அதுவரைக்கும், சினிமா பாடல்களை நான் கேட்டிருந்தது, ஆகாசவாணிலேயும், பி-கஸ்பாவிலேருந்து ஸ்பீக்கர்லே ஒலிக்கிற பாடல்களையும்தான். அதுலே பெரும்பாலும், ‘பாலை குடிச்சுப்புட்டு பாம்பா கொத்துதடி'மாதிரி இல்லேன்னா ‘ராஜா கைய வச்சா' மாதிரி பெப்பியா இருக்கும்.

குணாவும், நானும் ஸ்கூல்லே சில பாடங்களை ஒண்ணா படிச்சு முடிச்சுடுவோம். ஒண்ணா படிக்கிறதுன்னா, ரெண்டு பேரும் சத்தம்போட்டோ/மனசுக்குள்ளேயோ அவங்கவங்க புக்லே இருக்கிறதை படிச்சுட்டு மாத்தி மாத்தி ஒப்பிச்சுக்கிறது. +2 ஸ்டடி ஹால்ஸ் அப்போ ரொம்ப உருக்கமா நெருக்கமா எல்லாம் பேசிட்டு ஆட்டோகிராஃப் வாங்கிட்டு பிரிஞ்சாச்சு. அன்னைக்கு பிசிக்ஸ் எக்ஸாம். எங்க எல்லாருக்குமே பிசிக்ஸ் மாஸ்டரை பிடிக்கும்ன்றதாலே பிசிக்ஸையும் பிடிக்கும். பார்த்தா கொஸ்டின் பேப்பர் டஃப் (எங்க பேட்ச்-லே பிசிக்ஸ் பேப்பர் டஃப்-ஆ வந்துச்சு). டஃபா இருந்தாலும், படிச்சதை வேஸ்ட் பண்ணாமே (!) எழுதிடனும்னு தெரிஞ்சதையெல்லாம் எழுதிக்கிட்டு இருந்தேன். திடீர்ன்னு, ஒரே சலசலப்பு.பியூன் ஒருத்தர் வந்து எங்க ரூம் சூபர்வைஸ்ர்கிட்டே ஏதோ சொல்லிட்டு போறார். ஏதோ நடக்குதுன்னு மட்டும் தெரியுது. ஆனா, ஒண்ணும் புரியலை. எல்லாரும் மும்முரமா எழுதிக்கிட்டிருந்தோம்.

வெளிலே வந்தப்புறம் தெரிஞ்ச விஷயம் - பிசிக்ஸ் பேப்பர் டஃப்ன்னு பார்த்ததும், குணா டென்ஷன் ஆகிட்டா. கை காலெல்லாம் உதறுது. அவளாலே எழுத முடியலை.மயக்கம். தண்ணியெல்லாம் கொடுத்து ஆசுவாசப்படுத்தின அப்புறமும், அவளாலே எழுத முடியலை. பாஸ் மார்க் வாங்கிற அளவுக்குக்கூட அவ எழுதலை. எழுதவும் முடியலை,அவளாலே. ஒரு எக்சாம் இப்படி கோட்டை விட்டுட்டோம்னு கவலைலே அடுத்த மேஜர் பேப்பரையும் எழுதலை.

வீட்டுலே அவ எதையோ தாண்டிட்டா இல்லே மிதிச்சுட்டான்னும் அப்புறம் செய்வினைன்னும் சாமியார்/பூஜாரிகிட்டேயெல்லாம் கூட்டிட்டு போய் ட்ரீட்மெண்ட். அக்டோபரிலும் சரியா எழுதலை. இதுலேருந்து மீண்டு வர்றதுக்கு அவளுக்கு ரெண்டு வருஷம் ஆச்சு.அதாவது, அந்த மெண்டல் ட்ராமா!அப்புறம் பேருக்கு ஆப்டெக்-லே கம்ப்யூட்டர் படிச்சுட்டு இப்போ மேடம் ஏதோ ஒரு ஊருலே இல்லத்தரசியா இருக்காங்க.


எம்சிஏ பேட்ச்-லே UG கம்ப்யூட்டர் பண்ணினவங்க தவிர மத்த மேஜர் எடுத்து வந்தவங்களும் நிறைய பேர் இருந்தாங்க. வசுதா கெமிஸ்ட்ரி மேஜர்.அவளது, ஐஐடி அண்ணாவின் சொல்படி எம்சிஏ சேர்ந்திருந்தாள். முதல் செமஸ்டர் அக்கவுண்டன்ஸியோட கொஞ்சம் தீவிரமாவே போனது. சொல்லப் போனால், நாங்க எல்லாரும் ஒரே படகில்தான் இருந்தோம்.அதுவே ஒரு தைரியமா இருந்தது. தமிழ்செல்வி கூட சேர்ந்து பண்ணின ப்ரேயர் மேல பாரத்தை போட்டுட்டு கொஸ்டின் பேப்பரை வாங்கி எழுத ஆரம்பிச்சாச்சு.


சரி,அவங்களுக்கு தெரிஞ்சதை அவங்க கேட்டு இருக்காங்க,நமக்கு தெரிஞ்சதை நாம எழுதி வைப்போம்னு எழுதிக்கிட்டிருந்தோம். பின்னாடி பெஞ்ச்லே இருந்த வசுதாவுக்கு கை கால் உதறுது. தண்ணி கொடுத்ததும் வாங்கி குடிக்க முடியாம இழுக்க ஆரம்பிச்சது. வாயில் நுரை. டிஸ்க்ரீட் மேத்ஸ் பேப்பரிலிருந்து அந்த செம்ஸ்டரின் எந்த பரீட்சையையும் எழுத முடியாமல் போனது வசுதாவிற்கு. வீட்டிலிருந்து பெற்றோர் வந்து அழைத்து சென்று டாக்டரிடம் ட்ரீட்மெண்ட். ஏற்கெனவே, வசுதாவிற்கு தான் மட்டுமே கெமிஸ்ட்ரி மேஜர் என்றும், மற்ற அனைவரையும் பார்த்து கொஞ்சம் தாழ்வு மனப்பான்மையும் உண்டு.

அடுத்த செமஸ்டரின் பிராக்டிகல்ஸில் எனக்கு பின்னால் வசுதா. நான் முடித்ததும் அதே சிஸ்டம்தான் அவளுக்கு. அவுட்புட் மற்றும் முதல் கம்பைலேஷன் காட்டியபிறகு வசுதா என்னை அழைத்தாள். அவளுக்கும் அதே ப்ரோக்ராம். நான் அமைதியாக அலைன்மெண்டில் மூழ்கி இருந்தேன். வசுதாவிற்கு, லேசாக கைகள் உதற ஆரம்பித்தது. 'வெயிட் பண்ணு' என்று சைகை காட்டிவிட்டு அவளது பெயரில் அதே ப்ரோக்ராமை காப்பி செய்துவிட்டு எனது பிரிண்ட் அவுட்டை எடுத்துக்கொடுத்துவிட்டு வெளியே வந்தபின்தான் என் படபடப்பு நீங்கியது. அப்புறம்,வசுதா முதல் செமஸ்டர் பேப்பரை க்ளியர் செஞ்சு இப்போ நல்லப்டியா பொட்டி தட்டிக்கிட்டு இருக்கா.

+1 சேர்ந்த புதிதில், வசுதா நிலையை,குணாவின் நிலையை நானும் அனுபவித்திருக்கிறேன். கண்களைக் கட்டி காட்டில் விட்டது போலிருந்தது முதல் இரண்டு மாதங்களில். புரிந்தாற் போலும் இருந்தது - எதுவும் புரியாதது போலவும். , 'ஸ்டொமக் அப்செட்' -னு சொல்லிட்டு முதல் டெர்ம் டெஸ்ட் முழுசும் போகாம இருந்தேன். பயம் மற்றும் டென்ஷன்தான் காரணம். அப்புறம் தெளிஞ்சுடுச்சு.

நான் ஒன்றும் கிளாஸ் டாப்பர் எல்லாம் கிடையாது. ஆனால், 'நல்லா படிக்கணும்,வேலைக்கு போகணும்,நல்லா சம்பாதிக்கணும்'கிற குதிரை கடிவாளம் போட்டுக்கிட்டு ஓடிக்கிட்டிந்தேன். படிக்கணும்கிறது, 'ஏன் எதுக்கு எப்படி'ன்னு கேள்வி எல்லாம் இல்லாம,'இது இப்படிதான்'ன்னு புக்லே இருக்கிறதை மனப்பாடம் பண்ணனும், பின்னாடி இருக்கிற கேள்விகளுக்கு பாடத்துலே பதில் குறிச்சுக்கிட்டு அதை அப்படியே மனப்பாடம் பண்ணணும்..பரீட்சையிலே எழுதணும்.மார்க் வாங்கணும்..ஃப்ர்ஸ்ட் ரேங்க் வரணும்..ஃப்ர்ஸ்ட் ரேங்க் வந்தா கேட்டது கிடைக்கும்.இதுதான் என்னோட கல்விச் செல்வம் - காலேஜ் வரைக்குமே!

மேலும், டீச்சரை பிடிச்சிருந்தா அந்த பாடம் ரொம்ப பிடிக்கும். டீச்சர் பிடிக்கலைன்னா கஷ்டம்தான். ஹிஸ்டரியும், கெமிஸ்ட்ரியும் பிடிக்காம போனதுக்கு காரணம் இதேதான்.பெரியவங்க என்னதான் புரிஞ்சுக்கிட்டு படி,படின்னு கரடியா கத்தினாலும் இதுதான் மார்க் வாங்கி கொடுக்கும். ஏன்னா, என்னோட வார்த்தைகளில் நான் எழுதியிருந்ததைவிட, புக்லே இருந்தா மாதிரியே ஞானசௌந்தரி எழுதியிருந்ததுக்குத்தானே முழு மார்க் கிடைச்சது!

பாடப்புத்தகங்கள் எல்லாம் சின்ன சின்னதா இருந்தப்போ படிச்சு நல்ல மார்க் வாங்கியிருந்ததாலேயோ என்னவோ ' நல்லா படிக்கற பொண்ணு' இமேஜ் வந்திருந்தது. அஞ்சாவது வரைக்கும், தினமும் கிளாஸுலே நடத்தினதை எல்லாம் படிச்சு ஆயாகிட்டே ஒப்பிக்கணும். கணக்கு எல்லாம் தினமும் போடணும் - கூடவே மனக்கணக்கு. பக்கத்துலேயே உட்கார்ந்து படிக்க வைப்பாங்க ஆயா. நான், ஆறாவது வந்ததுக்கு அப்புறம் மாடர்ன் மேத்ஸ் ஆயாவுக்கு தெரியாததாலே தப்பிச்சுட்டேன்.சொன்ன பேச்சு கேக்காத பழக்கமும் வந்திருந்தது.ஆனா, விதி அப்போ வேற ரூபத்திலே விளையாடிச்சு.

ஆறாவதுலேருந்து பெரிம்மாவோட ஸ்கூல். ‘டீச்சர் பொண்ணு' இமேஜ் வேற. டீச்சர் பசங்கன்னா ரெண்டு வித கஷ்டம். ஒன்னு, மத்த டீச்சர்ஸ் முன்னாடி டீச்சர் மானத்தை காப்பாத்த நாம நல்ல படிக்கவேண்டி இருக்கும். ரெண்டாவது, டீச்சர் பொன்ண்ணுன்னு மார்க் போடுட்டாங்கன்னு சொல்றவங்க வாயை அடக்கணும். சோ ,எப்பவுமே இருதலை கொள்ளி எறும்புதான். அரைபரிட்சை, கால் பரீட்சை லீவுலே கூட விடமாட்டாங்க.சொல்லப்போனா, லீவுலேதான் நாங்க ஒழுங்கா படிப்போம்.நடந்து முடிஞ்ச பரிட்சை பேப்பரை கரைச்சு குடிச்சிருப்போம்.

காலையில் ஆறரைக்கு மாடிக்கு போய்டணும் - நோட்டு, பாய்,தண்ணி ,புத்தகம் - ஓ யெஸ்...அதே ரென் அண்ட் மார்ட்டின் சகிதம்! எட்டு மணிக்கு ஆயா ராகி கஞ்சி எடுத்துக்கிட்டு மாடிக்கு வந்துடுவாங்க..கண்டிப்பா அதைக் குடிச்சே ஆகணும். அதையும் அவங்க கண் முன்னாடிதான் குடிக்கணும். நோ காஃபி..அதுக்கு அப்புறம்தான் டிஃபன். எல்லோரும் காம்ப்ஃளான்- போர்ன்விட்டா குடிச்சப்போ எங்க வீட்டுலே இந்த கொடுமை...911 மாதிரி நம்பர் இருந்திருந்தா...

பொண்ணுங்களுக்கு நடுவிலே காப்பி/பிட்-ன்னு எதுவும் பெரிசால்லாம் இல்லை - பத்தாவது வரைக்கும். பொருத்துக,சரியான விடையை தேர்ந்தெடு மாதிரி கேள்விகளுக்கு மட்டும் சைகையாலேயே கேட்டுப்போம். அதுதான் மேக்ஸிமம் காப்பி. கன்னத்துலே கை வச்சிக்கிற மாதிரி எந்த கேள்வியோ அத்தனை விரலை வச்சிக்கணும். யார்கிட்டே கேக்கிறோமோ அவங்க விடையை சொல்றதுக்கு அதே மாதிரி கன்னத்துலே கை வச்சிருப்பாங்க.

பிட் வச்சு எழுத இப்போவரைக்கும் முயற்சி செஞ்சது இல்லே. படிச்சதை வேஸ்ட் செய்யக் கூடாதுன்னு அந்தக் கேள்விக்கு தொடர்பா என்னென்ன தெரியுமோ அதை எழுதிடறதுதான் ஆல்வேஸ் பழக்கம். இப்படிதான், தமிழகத்தின் மான்செஸ்டரை கேட்டதுக்கு நான் எழுதிட்டு வந்தது இந்தியா மேப்லே பாம்பே இருக்கிற இடத்துலேன்னு. எக்ஸாம் ஹாலை விட்டு வெளிலே வந்ததுக்கு அப்புறம் தெரிஞ்சு என்ன பண்ண? அன்னைக்கு ராத்திரி நினைப்பெல்லாம், தமிழ்நாட்டின் மான்செஸ்டரை பாம்பேக்கு உடனே மாத்திட மாட்டாங்களான்னு இருந்துச்சு.

அடுத்தவங்க பேப்பரை பிடுங்கி எழுதுவாங்கன்னு +1/+2 வந்தப்புறம்தான் தெரியும். மன்த்லி டெஸ்ட்-லேல்லாம் பசங்க தொல்லை தாங்க முடியாது. எழுதி வச்சிருந்தா, முன்னாலேருந்து 'ட க்'ன்னு எடுத்துடுவாங்க.அப்புறம்,நம்ம பேப்பர் நம்ம கைக்கு வர்றதுக்குள்ளே வாய் வழியா ஹார்ட் வெளிலே வந்துடும். இத்தனைக்கும், நாமே திக்கி திணறிதான் எழுதியிருப்போம்னாலும்!

காலேஜ் - ஸ்கூலைவிட மோசம். சர்ப்ரைஸ் டெஸ்ட், அசைன்மெண்ட், செமினார்ன்னு கடம் அடிச்சதுலே +1,+2 வை கூட செமஸ்டர் டைப்லே மாத்திட்டா நல்லாருக்குமேன்னுதான் தோணுச்சு!

எம்சிஏ -விலே எங்களுக்கு கிளாஸ் எடுக்க ஒரு மேடம் வந்தாங்க. யூஜிசி எல்லாம் முடிச்சு ப்ரெஷ்ஷா வந்திருந்தாங்க. ரொம்ப் நல்லா க்ளாஸ் எடுப்பாங்க. அவங்க பேர் நந்தினி. செம க்யூட்டாவும் இருந்தாங்க. அழகா சிரிச்சு சிரிச்சு பேசுவாங்க.எங்க எல்லாருக்குமே அவங்களை பிடிச்சிருந்தது. அடுத்த செமஸ்டர்லே அவங்க வரவே இல்லை. வரவும் மாட்டாங்கன்னு சொன்னாங்க.தீ வச்சி கொளுத்திக்கிட்டாங்களாம். காதல் தோல்வி! 'அவங்க அப்படியே உட்கார்ந்திருந்தாங்களாம் அக்கா'ன்னு ஜூனியர் சொன்னது இன்னும் என் காதுக்குள்ளே கேட்குது!

PG..UGC..முடிச்ச ஒரு மேடம்....ஒரு காதல் தோல்விக்காக....
கல்வி என்ன கத்துக்கொடுக்குது.... பொருளீட்டலையா... வெறும் டொமைன் நாலெட்ஜையா....அப்போ வாழ்க்கையை, நம்பிக்கையை, உரத்தை, பக்குவத்தை...?

படிக்கும் படிப்புக்கும்,நிஜ வாழ்க்கைக்குமே ஏகப்பட்ட இடைவெளி இருக்கும்போது... இதெல்லாம் எம்மாத்திரம்? கேம்ப்ஸ்லே நம்மை அள்ளிட்டு போற கம்பெனி நமக்கு என்ன லைன் பிடிக்கும்னு கேட்டா வேலை கொடுக்கறாங்க? அப்போதைக்கு எந்த பிராஜக்ட்லே காலி இடம் இருக்கோ... அதுலேதான். சில கம்பெனிகளில் ப்ஃரெஷ்ர்ஸ்-ன்னா நேரா டெஸ்டிங்தான்! அவங்களும் அதுலே உருண்டு பிரண்டு ஆட்டோ கேட்சப்...அப்படின்னு காலத்தை ஓட்ட தொடங்குவாங்க. நமக்கு என்ன வேண்டும்னு தெளிவா இல்லேன்னா கேரியர் அதன் போக்குலே போய்டும் - எத்தனை பேரு நான் இந்த வேலை செய்யமாட்டேன்னு சொல்றோம்...கிடைச்ச வேலையத்தானே செய்றோம்?!

சுகந்தியும் லெக்சரர்தான். வொர்க்கிங் வுமன்ஸ் ஹாஸ்டலில் என் பக்கத்து ரூம்-மேட். புதுக்கோட்டை பக்கம் அவங்க ஊர். ஒருநாள் விடிகாலையிலே சுகந்தியின் குடும்பம் - அம்மா,அப்பா,ரெண்டு தங்கச்சி,அத்தை எல்லாரும் வந்தாங்க. சுகந்தி லவ் பண்றது வீட்டுக்கு தெரிஞ்சதாலே கையோட கூட்டுட்டு போகலாம்னு வந்துட்டாங்க. அந்த நேரம் பார்த்து சுகந்தியோட லவ்வர் வேலை விஷயமா வேற ஊருக்கு போயிருந்தார். சுகந்தியோட ப்ரெண்ட் மூலமா அவருக்கு போன் பண்ணினதும் ஏதோ ஏற்பாடு செய்றதா சொல்லியிருக்கார்.

ஒன்பது மணிக்கு 'நான் காலேஜுக்கு ஃபோன் பண்ணி சொல்லிட்டு வரேம்மா'ன்னு வெளிலே போன சுகந்தி வரவே இல்லே. அவரோட ஃப்ரெண்ட் வந்து சுகந்தியை பைக்லே கூட்டிட்டு போய்ட்டார். நாங்க எல்லோரும் சாயங்காலம் வர்ற வரைக்கும் ஏன் நாங்க ராத்திரி சாப்பிட போற வரைக்கும் அவங்க குடும்பமே 'சுகந்தி வந்துடுவா'ன்னு காத்துக்கிட்டு இருந்தாங்க. நமக்கு இனிக்கிற காதல் மத்தவங்களுக்கு கொடுக்கக் கூடிய வலியை/வேதனையை அன்று நாங்கள் கண் முன் பார்த்தோம்.

'பி எஃப் லோன் எடுத்து படிக்க வச்சேன்மா' ன்னு சுகந்தியோட அப்பாவும் ‘இந்த ரெண்டு பொண்ணுங்களை எப்படி இனிமே நம்பி படிக்க வைப்பேன்,வெளிலே அனுப்புவேன்னு' அவங்க அம்மாவும் அழுதது ஹாஸ்டல் சுவர்களில் அன்றிரவு முழுக்க எதிரொலித்தது. சுகந்தி நிலையிலிருந்து அவங்க செஞ்சது நியாயமா இருக்கலாம். ஆனால், தங்கச்சிகளை, பெற்றோரின் கஷ்டத்தை புரிஞ்சுக்க வைக்காத கல்வி - அது கொடுக்கும் அறிவு?

ஷைனி அக்கா பத்தாவது படிக்கும்போது அவங்க அப்பா இறந்துட்டாங்க. அவங்க அம்மா அவங்களுக்கு இருந்த ரப்பர் தோட்டத்தையும்,அப்பாவோட பென்சனையும் வைச்சு அக்காவை எம்சிஏ படிக்க வைச்சாங்க. அக்காதான் ஒரு தங்கையை எம்பிஏவும், இன்னொரு தங்கையை பி ஈ யும் படிக்க வைச்சாங்க. அவங்க காதலிச்சவரையே கல்யாணமும் பண்ணிக்கிட்டாங்க.

இட ஒதுக்கீட்டுலே படிச்சுட்டு, ‘இட ஒதுக்கீடே தேவையில்லை, மெரிட்தான் சரி'ன்னு பேசறவங்களையும், ‘கால பைரவர் கோயில்லே மிளகு விளக்கு ஏத்தறது எப்படி'ன்னு டவுட் கேக்கறவங்களையும், ஒரு செண்ட் அதிகமாக் கொடுத்துட்டாங்கன்னு சொத்து தகராறுலே உடன் பிறந்தவங்ககூடவே பேசாம இருக்கிறதையும் பார்க்கும்போது....

கல்வின்றது நாம படிக்கிற பாடப்புத்தகத்திலேர்ந்து மட்டும் வர்றதா என்ன?!

தேர்வு பற்றிய தொடர்பதிவை ஆரம்பித்த வினவுக்கு நன்றி!

தங்களது சுவாரசியமான பகிர்வுகளின் மூலம் இத்தொடரைத் தொடர்ந்திட
அழைப்பது :

ராப் (கம் பேக்,ராப்..உங்க ஹைபர்னேஷன் முடியும் நேரம் வந்தாச்சு :-) )
குசும்பன் (அடிச்சு தூள் கிளப்புங்க, சார்)
அன்புடன் அருணா (பெர்மிஷன் கேக்காம டாக் பண்ணிட்டேன்,கோச்சுக்காதீங்க!)
நான் ஆதவன் (பாஸ்...நோ ஒளிவுமறைவு!!)
தாரணி பிரியா (மேடம், காணாம போனா இப்படிதான்..;-) )

Thursday, May 06, 2010

JoJo - Hello, How are you?ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரே JoJo ஞாபகம். ஜோஜோ இந்த பாடல் மூலம்தான் எனக்கு அறிமுகம். இந்த வெர்ஷன் கொஞ்சம் ரீ-மிக்ஸ் மாதிரி இருக்கு..உண்மையான வெர்ஷன் வேற மாதிரி இருக்கும். ரொம்ப நாளா தேடறேன், கிடைக்கலை. (JoJo fans/Indy Pop fans ...இருந்தா எனக்கு அனுப்புங்க! )
இதுவும் ஜோஜோ-வின் பிரபலமான பாடல். ஏனோ, இவர் இந்தி பாப்-இன் பொற்காலத்துக்கு முன்னாடியே ஜொலிச்சுட்டு காணாம போய்ட்டார். இந்த ஆல்பத்திற்கு பிறகு, இவரைப் பற்றி அதிகமாக கேள்விப்படவில்லை. JoJo..Where are you? We want you on stage!

Wednesday, May 05, 2010

வீட்டுக்கு வீடு அனிதா (அ) அன்னை தெரசா!

அனிதா. அனிதாவை, அவளது திருமணம் முடிந்த அன்று மதியம்தான் முதன்முதலில் சந்தித்தேன். அம்மாவீட்டு செண்டிமென்ட்டால்தான் அவளது கண்கள் கலங்கியிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். ஏனெனில், திருமணமானதுமோ அல்லது வயதுக்கு வந்தவுடனோ அழ வேண்டுமென்று பலத்த நம்பிக்கை கொண்டிருந்த பல பெண்களை பார்த்த அனுபவம். மேலும், மண்டபத்தில் செய்ய வேண்டிய சடங்குகளும் ஒரு காரணம்.

உறவினர் அனைவரின் கால்களில் விழுந்து விழுந்து, எழுந்து, புகைப்படத்துக்கு போஸ் கொடுத்து என்று கதற வைப்பார்கள். அப்புறம் கோயில் கோயிலாகவும் ஏதாவதொரு ஏரி அல்லது குளத்துக்கு நட்ட நடு மதிய நேரத்தில் அழைத்துச் சென்று மண்டை காய வைப்பார்கள். இந்தச் சடங்குகளை முடித்து, வியர்த்துக் கொட்டி, வீட்டுக்கு வந்தவளை சுற்றி எல்லாரும் அமர்ந்திருந்த நேரத்தில் சந்தித்தேன்.

அனிதா ஒருவகையில் எனக்கு தங்கை முறை. (ஏனெனில் அவள் என்னை அக்கா என்று அழைத்தாள். :-)) அதாவது முகிலின் வழியில் ஓரளவு நெருங்கிய சொந்தத்தில் தம்பி மனைவி. அழுகை முட்டிக்கொண்டு வர கைக்குட்டையால் துடைத்துக்கொண்டு, சுற்றியிருப்பவர்களின் சொல்லுக்கெல்லாம் சமாதானமானவள் போல தலையாட்டிக் கொண்டுமிருந்தாள். புழுக்கமாக இருந்தது அறை. மாலை. பத்தாதற்கு தலைநிறைய பூ. அதில் தலையலங்காரங்கள் வேறு. சூரியன்- சந்திரன்-அப்புறம் நட்சத்திரங்கள், மணிகள். அதற்கு மேல், தங்கள் மரியாதையே அதில்தான் இருக்கிறது என்பதுபோல் உறவினர்கள் வரிந்துக் கட்டிக்கொண்டு கட்டிய ஒரு கொத்து லட்சுமி காசுகள்.

”மாலையும்,தலையிலே இருக்கறதும் வெயிட்டா இருக்கும் இல்ல.. அதுவும் கசகசன்னு இருக்குமே...கழட்டிடுங்களேன்” என்றதற்கு, கம்மலான குரலில்
“இருக்கட்டுங்க்கா, பரவால்ல, இன்னைக்கு ஒரு நாளைக்குத்தானே” என்றாள்.

அவள் நிலையில் நான் நின்றபோது “எனக்கு யாராவது சொல்ல மாட்டார்களா” என்று தோன்றியதை,ஒருவரும் சொல்லாததை அவளுக்குச் சொன்னதாக நான் பெருமை வேறு பட்டுக்கொண்டேன். ஆனால், அவள் அதைத் தாங்கிக்கொள்ளும் பக்குவத்துடனே இருக்கிறாள். அதுவும் , ‘ஒருநாளைக்குத்தானே' என்றும்!!

அங்கே வந்த அங்கிள் அவளைப் பார்த்தது “எல்லாம் சரியாய்டும், அவன் அப்படித்தான்...கோவக்காரன்” என்று சொன்னதும் தலையாட்டிக் கொண்டாள். திரும்பக் கண்ணீர். உடனே சுற்றி இருந்தவர்கள் “இன்னைக்கு அழவே கூடாது” என்று சமாதானப்படுத்தத் தொடங்கினர். பத்தாததிற்கு ஒரு ஆயா, வேறு ,”அவன் அப்படித்தான்,கொஞ்சம் கோவக்காரன், எல்லாம் சரியாப்பூடும், கோவம் இருக்கற எடத்துலே தான் கொணம் இருக்கும்” என்று வெற்றிலையை மென்றபடி சொல்லிகொண்டிருந்தார். இதற்கும் அனிதா ஒரு மருண்ட பார்வையோடு தலையாட்டிக்கொண்டிருந்தாள்.

நடந்தது இதுதான். கல்யாணம் முடிந்ததும் கோயிலுக்கு அழைத்துச் சென்று மணமகளின் அம்மா ஆரத்தி எடுத்திருக்கிறார்கள். ஆரத்தித் தட்டை மணமகன் தள்ளி வீசி இருக்கிறான். தடுத்து பிடிக்க வந்த மணமகளின் தம்பியை அறைய கை ஓங்கியிருக்கிறான். சமாதானப்படுத்தி இருவரையும் இங்கே அழைத்து வந்திருக்கிறார்கள். அதுதான் அனிதாவின் கண்ணீருக்குக் காரணம். அங்கிள் சொன்னால் சுரேன் கேட்டுக் கொள்வான் என்று இங்கே அழைத்து வந்திருக்கிறார்கள்.


இதற்குத்தான், “மாப்பிள்ளைக் கொஞ்சம் கோவக்காரன்” என்ற சப்பைக்கட்டு எல்லோரிடமிருந்தும். சொல்லிவைத்தது போல எல்லோரும் அதைச் சொன்னது மிகுந்த விசித்திரமாக இருந்தது. சுரேனை ஃப்ரெண்ட்லியாகவே பார்த்திருக்கிறேன். அவனது இந்த செய்கை மாப்பிள்ளை முறுக்கு அல்லது வெட்டி பந்தாவாகவே பட்டது. ஒருவரும் அவனை கண்டிக்கா விட்டாலும், அனிதாவின் முன்பு அவனை விமர்சிக்காமலும் “எல்லாம் சரியா போய்டும்” என்று அவளை தேற்றவே முற்பட்டனர். பின்னர், அனிதாவின் வீட்டுக்கு மறுவீடு செல்ல ஏகப்பட்ட பேர் சுரேனை வற்புறுத்த வேண்டியிருந்தது.

மாப்பிள்ளைக்கு மணமகளைப் பிடிக்கவில்லை. ஆனால், மாப்பிள்ளையின் அப்பாவிற்கு மணமகள் வீட்டாரின் செழிப்பு பிடித்திருந்ததே கல்யாணத்திற்குக் காரணம்.

இது எல்லாம் மூன்று வருடங்களுக்கு முன்பு. இப்போது, இரண்டாம் பிரசவம் முடிந்து அம்மா வீட்டிலிருந்த அனிதாவை கடந்த முறை விழுப்புரம் சென்றிருந்தபோது சந்தித்தேன். Back to back delivery.

அந்த அங்கிள் இரண்டாம் மகனைப் பற்றி அங்கலாய்த்துக்கொண்டிருந்தார். அவன் இன்னும் அரியர்சை வைத்துக்கொண்டிருப்பதாகவும், முடித்துவிட்டால் நாங்கள்(?!) எப்படியும் வேலை வாங்கி (!!) கொடுத்து விடுவோம் என்ற நம்பிக்கை இருப்பதாகவும், கொஞ்சம் புத்தி சொல்லிட்டு போகும்படியும் புலம்பிக் கொண்டிருந்தார். ”இப்படிதான் அங்கிள் நீங்க சுரேன் பத்தியும் சொன்னீங்க, உருப்படவே மாட்டான்னு, இப்போ அவன் நல்லா இல்லையா, நாமதான் நம்ம பசங்க மேலே நம்பிக்கையா இருக்கணும், திட்டாம இருந்தாலே போதும் அங்கிள்” என்று வேதம் ஓதிக்கொண்டிருந்தேன்.

“நான் அவனை பத்தியும் கவலைப்பட்டேந்தாம்மா,அவன் லாயக்கே இல்லே, ஆனா அவனுக்கு வந்தவ கெட்டிக்காரி, எல்லாத்தையும் இப்போ கரெக்ட் பண்ணிட்டா. கல்யாணம் பண்ணி கூட்டுட்டு வந்தப்போ ரூம்லேருந்து வெளிலே வந்து படுத்துக்குவான்...மருமக கிட்டே கேட்டா 'எங்களுக்குள்லே பேச்சுவார்த்தையே கிடையாது' -ன்னு அழுவா.எல்லாம் கொஞ்ச நாள்லே சரியா போய்டும்னு சொல்லுவோம்..வேற என்ன பண்ண முடியும்...இப்போ பாரு..ரெண்டு குழந்தைங்க...முன்னெல்லாம் அவங்க அம்மா வீட்டுக்கு போகவே மாட்டான்..இப்போ அங்கேயேதான் கெடக்கறான்.அதை கொறையா சொல்லல..ரொம்ப சந்தோஷம்தான் எங்களுக்கு” - அங்கிள்.

அனிதாவின் கடந்த மூன்று வருட வாழ்க்கையை நான் அறிவேன். ஹோம் தியேட்டரும், ஏசியும், 50 பவுன் நகையும், கட்டிலும் பீரோவும், காரும் லஞ்சமாகக் கொடுத்து வாங்கப்பட்ட ஆணுக்கு நல்ல மனைவியாக இருப்பது எப்படி என்ற ஒரே எதிர்கால லட்சியத்துடன் வளர்க்கப்பட்டவள். அற்பமான காரணங்களுக்காக, பலர் முன்பு கணவனிடம் அறை வாங்கியவள்.ஒருமுறை, அவள் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது கணவன் தண்ணீர் கேட்டதற்காக பாதி சாப்பாட்டிலிருந்து எழுந்து கைகழுவி ப்ரிட்ஜிலிருந்து எடுத்துக் கொடுத்துவிட்டு சாப்பிட உட்கார்ந்தாள். ஃப்ட்ரிஜிலிருந்து தண்ணீரை எடுத்துக் கொள்ள முடியாதபோது மற்ற வீட்டு வேலைகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். எல்லோரும் சாப்பிட்ட பின்பு சாப்பிட்டு , பின் தூங்கி முன் எழுபவள். எல்லோருடைய துணிகளையும் துவைத்தவள். மாமனார்- மாமியார் முன்பு அமராதவள். உடல்நிலையை பற்றி நினைத்துக் கூட பார்க்காமல் அடுத்தடுத்த பிள்ளைப்பேற்றுக்கு ஆளானவள். (ஒருவேளை அனிதா படித்தவளாக அல்லது சம்பாதிக்கக் கூடியவளாக இருந்திருந்தால், இவை எல்லாமே மாற்றி நடந்திருக்கும். ;-) )

“அவன் கெட்டவன்மா, நானே சொல்லுவேன், ஆனா இவ விடாம அவனை நல்ல வழிக்கு கொண்டு வந்துட்டா..என்ன ஒண்ணே ஒண்ணு..குடிதான்..அதையும் கண்ட்ரோல் பண்ணிட்டான்னா....அவ பண்ணிடுவா” - அங்கிளைத் தொடர்ந்து ஆண்ட்டி!

அனிதா என்ன அன்னை தெரசாவா என்று கேட்க வந்தது தண்ணீரோடு சேர்ந்து உள்ளே போய்விட்டது!

"எல்லாம் பொம்பள கையிலேதான் இருக்கும்மா” - என்று முடித்தார் அங்கிள். (இதில் எனக்கு ஏதும் உள்குத்து இருக்குமோ என்று எனக்கு வேறு யோசனை... LoL!)

”இப்போ எனக்கு அவனைப் பத்தி கவலையே கிடயாது..எல்லாம் மருமவ பாத்துக்குவா..அவ சாமர்த்தியம்மா! இவன் (இரண்டாவது) இப்படி இருந்தா யாரு பொண்ணு குடுப்பா” - இது ஆண்ட்டியின் கவலை.

சிறுவயதிலிருந்து வளர்த்தவர்களாலேயே நல்ல பழக்க வழக்கங்களைக் கொண்டு வர முடியாது தோல்வியுற்றபோது, ஒரு adult-இன் பழக்க வழக்கங்களை மாற்றிட முடியுமா என்பதை விடுங்கள்.

கணவன் எப்படியிருந்தாலும் திருத்தி நல்வழிப்படுத்தி அவனுடன் வாழ்வதுதான் மனைவியின் வேலையா?

அனுதினமும் போராடி அவமானங்களை பொறுமையாக சகித்து அவனை திருத்துவதுதான் அவளது வாழ்க்கையா?

அதுவும் கணவனின் எல்லா நடத்தைகளுக்கும் மனைவியே பொறுப்பு என்று கற்பிப்பது ..?

“ஆச்சி எனக்கு சம்பளம் கொடுக்குது,எனக்கென்னா ஆயா, நான் ரெண்டு பசங்களை வச்சிக்கிட்டு தனியா வந்துடுவேன், மாடு மாதிரி அடிக்கறான் ராத்திரி வந்து” என்று ஆயாவிடம் சொன்ன ஷோபனா அக்காவின் தைரியம் அனிதாக்களுக்கு எப்போது வரும்?

Monday, May 03, 2010

Life's emoticons!

"பப்பு, கப்போர்ட் திறந்தே இல்ல...அப்படியே விட்டுட்டு வர்றியே..க்ளோஸ் பண்ணிட்டு வா"

"வேற யாராவது ஓபன் பண்ணா ஈசியா இருக்கும் இல்ல...அதான்..அப்படியே இருக்கட்டும்"

:-/
"பப்பு, நீ மட்டும் ஐஸ்க்ரீம் சாப்பிட்டியா, என்னை விட்டுட்டு...எனக்கு தரலைல்ல..."

"இது ப்ளக்...நல்லாவே இல்ல ஆச்சி, நாளைக்கு ஐஸ்க்ரீம் வாங்கித்தரேன்..பத்து ஐஸ்க்ரீம்ப்பா...
உனக்கே...இல்ல...மூனு எனக்கு..மீதி எல்லாம் உனக்கு..இல்லப்பா...ஆறு எனக்கு..மீதி எல்லாம் உனக்கு"

:-(
"இன்னைக்கு உனக்கு காஃபி, பால் கிடையாது, பப்பு...சீக்கிரம் குடி"

"நான் பெரியவங்களாயிட்டேனா?"

"ஆமா, அதான் வீட்டுலேயே இருக்க மாட்டேங்கறியே, எப்போவும் விளையாட வெளியே போய்டறே!"

"நாளைக்கும் நான் பெரிய பொண்ணாவே இருப்பேனா?"

:-P

( பப்பு என்னவோ இன்னொசண்டா கேட்டாலும், நாளைக்கும் காஃப்பி கிடைக்குமான்னு உள்குத்து-ன்னு நானா கற்பனை பண்ணிக்கிட்டேன்!)


"நான் பெரிய பொண்ணாயிட்டதும் ஆயா இருப்பாங்களா?"

"ஓ, இருப்பாங்களே..."

"செத்துபோய்டுவாங்களா?"

"இல்லையே,நான் பெரிய பொண்ணானதும் ஆயா நம்மகூட தானே இருக்காங்க..அதுமாதிரி நீ பெரிய பொண்ணானதும் உன்கூட இருப்பாங்க"

"நான் பெரிய பொண்ணானதும் நீ இருப்பியா?"

"ஓ, இருப்பேனே, உன்கூடத்தான் இருப்பேன்!"

:-S