Thursday, April 29, 2010

பப்புவின் வானவில்”ஆனந்தியின் வானவில்” என்ற கதையை படித்துக்கொண்டிருந்தோம். ஆனந்தி வானவில்லை பார்க்க தோட்டத்திற்கு வருவாள். வானவில்லின் வர்ணங்களை எடுத்து தோட்டத்து பூக்களுக்கும், செடிகளுக்கும்,வண்ணத்துப் பூச்சிகளுக்கும்,சூரியனுக்கும் கொடுப்பாள். இதுதான் கதை.

எல்லாப் பக்கங்களிலும் வானவில் கண்ணைப் பறிக்கும். 'ஆனந்தி'என்று சொல்லாமல், 'பப்பு' என்று மாற்றி படிக்கும்படி சொல்லுவாள். அவளே கற்பனை வானவில்லிருந்து வண்ணங்கள் எடுத்து அடிப்பதாக ஆக்‌ஷன் வேறு.'வானவில் செய்லாமா' என்று இருவரும் ப்லீடிங் பேப்பரை வெட்டினோம். வானவில் போல வரையத்தான் (வளைச்சு..வளைச்சு) கோடுகள் போட்டேன். நல்லவேளையாக பப்பு அந்த கோடுகளை ஃபாலோ செய்யாமல், மேலே மேலே ஒட்டினாள்.நடுநடுவே, ஒவ்வொரு வண்ணக்காகிதம் ஒட்டும்போதும், “ஹவ் மெனி கலர்ஸ் ஆர் தேர் இன் த ரெயின்போ” என்ற பாடலை பாடிக்கொண்டாள். (என்னையும் கூடவே பாட சொன்னாள்!!பொது நலன் கருதி..)முடிவில், சிவப்புக்கு இடமில்லாமல் போகவே, ஓரத்தில் மட்டும் ஒட்டினாள். ஒன்றரை மணிநேரம் பொழுதுபோக்குக்கு இந்த வானவில் க்யாரண்டி!

Tuesday, April 27, 2010

”ஒடியன்”

ஆசய காத்துலே தூது விட்டு....என்று இருட்டில் தீப்பந்தங்கள் எரிய முக்கால் பாவாடையுடனும் அரை ஜாக்கெட்டுடன் காட்டுக்குள் நடனமாடுவார்கள். ஹீரோ-வின் வரவுக்காக காத்திருப்பார்கள். காயத்துக்கு மூலிகையோ,உண்ண உணவோ அல்லது தங்க இடமோ கொடுப்பார்கள். இல்லையேல், ‘ஒயிலா பாடும் பாட்டுலே ஓடுது ஆடு' என்று பாடியபடி காட்டுக்குள் ஆடு மேய்ப்பார்கள். எப்போதும், ஜாக்கெட் அணியாமல் சேலை கட்டியிருப்பார்கள். ஹீரோவை இக்கட்டுகளில் காப்பாற்றுவதே இவர்கள் வேலை. அல்லது வில்லன்களை /தீயவர்களைக் கொல்வார்கள். ஆண்களாக இருந்தால் வெற்று உடம்பில் நெருப்புப் பந்தத்தைத் தடவியபடி வீர சாகசங்கள் புரிவார்கள். காட்டில் வசிக்கும் ஆதிவாசிகளை, பழங்குடிகளை நினைத்ததும் மனத்தில் தோன்றும் பிம்பங்கள் இவையே.

ஆதிவாசிகள் என்றால் நாகரிகம் தெரியாதவர்கள். நமக்கும் அவர்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. நவநாகரிகமான உடை உடுத்தத் தெரியாதவர்கள். நரபலி கொடுப்பவர்கள். வேட்டையாடுபவர்கள். சமைக்காமல், பச்சையாக உண்பவர்கள்...நம்மைப் போலல்லாமல், காட்டுமிராண்டித்தனமான பழக்க வழக்கங்கள் உடையவர்கள். பின் தங்கியவர்கள். வீடுவீடாக வந்து தேன் விற்பவர்கள். இவையே அவர்களைப் பற்றி எனக்குள் இருந்த எண்ணங்கள். இதைத்தாண்டி பெரிதாகச் சிந்தித்ததும் இல்லை. ஆனால இத்தொகுப்பு நம்மீது காட்டுமிராண்டிகள் யார் என்கிற கேள்வியை வீசிவிட்டு போகிறது

அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்களே, அவர்கள் மீது அரசாங்கத்தின், போலீஸின் அத்துமீறல்களும், வன்முறைகளும் ஏவப்படுகின்றன, பலவீனமான அம்மக்களே ஒடுக்குமுறைக்கு பலியாகின்றனர் என்பதை வீரப்பன் தொடர்நாடகம் மற்றும் சோளகர்தொட்டி நாவல் வாயிலாகவும் ஓரளவுக்குத் தெரிந்துக் கொண்டோம் .

விலங்குகளின் நலனில், உரிமைகளில் காட்டும் அக்கறையில் ஒரு பங்கு கூட மனிதர்களாகப் பிறந்த ஆதிவாசிகளிடம் காட்டப்படுவதில்லை. இந்த அவலமான நிலையில், இயற்கையோடு ஒன்றி வாழும் பழங்குடியினர் படும் துயரத்தையும், வலிகளையும், அவர்களோடே நெருங்கியிருந்த லட்சுமணனைத் தவிர வேறு யாரால் வலிமையாகப் பதிவு செய்திட இயலும்?

இருளர்களின்,தோடர்களின்,கரட்டிகரின் வாழ்க்கையையும், அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும், அவர்களது நம்பிக்கைகளையும், பழக்க வழக்கங்களையும், அவர்களது சந்தேகங்கள் மற்றும் கேள்விகளையும் அவர் - ”ஒடியன்” என்ற கவிதை நூல் மூலமாக முன்வைக்கிறார் - இருளர்களது மொழியிலேயே!அதற்காக அந்த மொழி புரியாதது, கடினமானதென்று இல்லை, வார்த்தைகளை கொஞ்சம் யோசித்தால், அதன் தற்போதைய நமது வழக்குச் சொல் புலப்படுகிறது. மேலும், கவிதைகளுக்கு அடியிலேயே சிறு வரலாற்றுக் குறிப்புகளை கொடுத்திருக்கிறார், லட்சுமணன்.

புதிர்

அப்பேங்கொடாத்த பச்சே பாவாடே

அண்ணேங்கொடாத்த நீலே சீலே
தொட்டில்லே ரொங்குகாதிருந்தே
போடுகே கழுத்து பாசி

செல்லி தந்தே
செத்த பின்னாக்கும்
அச்சாமேத்தான் கெடாக்கு

'இருளச்சிக்கு திமிரடங்கலே'ங்கா
கெம்பனூரு கவுண்டிச்சி.

(கொடாத்த - கொடுத்த, ரொங்குகாதிருந்தே - தூங்கும்போதிருந்தே, அச்சாமே- அப்படியே )

கணவன் இறந்தபிறகு அணிந்திருக்கும் வண்ண உடைகள், அற்பமான நகைகள், அனைத்தையும் விலக்க வேண்டுமென்கிறாள் புதிதாக மலைக்கு வந்து குடியேறிய கவுண்டச்சி.
ஏனென்று இருளச்சிக்கு புரியவில்லை.

இருளச்சிக்குப் புரியாத இன்னொன்றும் இருக்கிறது. ‘ஆண்மம் 3' என்ற கவிதையில்,

'மாடு பொட்டக்கண்ணு போட்டிருக்கு'

கண்ணாலம் கணக்கா
எல்லத்துக்குஞ் சொல்லுகா
..................
................
பொறந்தது பேத்தியுன்னு
பெணாங்குகா நாய்க்கச்சி

மாட்டு பொட்டக்கண்ணு போட்டதற்கு மகிழ்ச்சியடையும் நாய்க்கச்சி, பேத்தி பிறந்ததற்கு புலம்புவது ஏனென்று இருளச்சிக்குப் புரியவில்லை. இந்தக் கவிதைக்கு அருஞ்சொற்பொருள் தேவையில்லைதானே!

ஒழுங்காக பணி செய்யாதவர்களை 'தண்ணியில்லா காட்டுக்கு மாத்திடுவேன்' என்பதைக் கேள்விப்பட்டிருக்கலாம். காட்டுவாசிகளின் பார்வையில் பணி மாறுதல் எப்படியிருக்கிறது?


சக்கை

பாடே நடத்துகாதில்லே
பள்ளிக்கோடம் வருகாதில்லே

வேலே நேரத்துலே

வெளியே போகினான்னு
எழுமலே வாத்தியானே

எத்து ஊருக்கு மாத்தின.....
...................................................
ஆபிசன லெத்து
அச்சா
ஜீப்புலே
வெட்டி போடு

ரெண்டு பலாப்பழோ

பாடம் நடத்தாத வாத்தியாருக்கு தண்டனை என்று அவனை எங்கள் ஊருக்கு மாற்றிய அதிகாரிக்குப் பரிசாக அவர் ஜீப்பில் இரண்டு பலாப்பழங்களை வெட்டி, குறிப்பாக வெட்டி போடவேண்டும் என்கிறார் ஆதிவாசி. ஏன் தெரியுமா?


வெட்டிய பலாப்பழ வாசனைக்கு எங்கிருந்தாலும் வந்துவிடும் யானை.

பாடம் என்றதும் நினைவில் தங்கிய இன்னொரு கவிதை,

பள்ளிக்கூடம்


வீடு

.........
அதான் தூங்குவமே

ஓ! கூரே

தாய்
ம் அஃகா

தந்தை....
அம்மே ......

.......

சொன்னதை திருப்பிச் சொல்லு

பிரம்பு பிஞ்சிடும்
.
..............................
..............................
வகுப்பூக்கு வெளியே
முட்டிபோட்டு நின்னுகொண்டிருக்கேம்

நானூம்
எத்து மொழியும்

நம் வாழ்வுக்கு, ஆதிவாசிகள் குடியிருக்கும் காடுகள் வெட்டப்படுகின்றன. நமக்குக் கிடைக்கும் மின்சாரம் ஆதிவாசிகளின் ஆறுகளைத் தடுத்துக் கட்டப்படும் அணைகளிலிருந்தும் எடுக்கப்படுபவை.

நம் குடியிருப்புகளுக்கும், நகரங்களுக்கும் வளர்ச்சி என்ற பெயரில் பல்வேறு சாலைகளும், மேம்பாலங்களும் அமைக்கப் பெறும்போது - இவர்கள் குடியிருப்பு எப்படி இருக்கிறது?

இருள் வழியும் அணை

நித்து கூரேலே கரண்டு போச்சுன்னு

கத்துகே கேளயாடா

கவுருமெண்டு கேக்கூ


கத்துகேன்

இச்சா கரண்டே இல்லேன்னு

சோலே கெட்டு விருகா சாகூ
அலுங்கூ செத்து
புசுகி அழுகூங்கா


எத்து ஊருலேதான் கெடாக்கு

நினாக்கூ லைட்டுந் தண்ணியூந்தா

எல்லாத்தையும் பொதாச்சு கட்டுன
பில்லூர் டேமூ

கீழே மின்சாரம் தடைபட்டால் கேளையாடாகக் கத்துகிறீர்கள் நீங்கள். ஆனால், நாங்கள் மின்சார இணைப்புக் கேட்டால், காடும் மிருகங்களும் அழிந்து விடுமென்கிறார்கள் அதிகாரிகள். உங்களுக்கு நீரும் ஒளியும் கொடுக்கும் பில்லூர் அணை எங்கள் மலைகளில்தான் இருக்கிறது. இருண்டு கிடக்கிறோம் நாங்கள்.

ஆதிவாசிகளின் நலனுக்காக தீட்டப்படும் திட்டங்கள் என்னவாகின்றன? இவர்கள் நலன் பற்றி எத்தனை பேர் எண்ணியிருப்போம்..அரசியல்வாதிகள், அதிகாரிக இவர்களுக்குத் திட்டங்கள் தீட்டத்தான் செய்கிறார்கள். எப்படி?

இருப்பு

ஆதிவாசிக்கு

அற்புதமா திட்டோம் தந்தேங்கே

டெவலப்புன்னு
டெண்டரு போடுகே


பேப்பருலே எழுதுகா..
டீவிலே காட்டுகா...
ஊரெல்லாம் பேசுகா...

போட்டா புடிக்கா

நினாக்கு பெரியாபீசர் பதவீ

காட்டோடே இருந்தே


இப்போ
நிம்து பேரு வாங்காக்கு

நேனு கடங்காரே


பரணுன்னு மேலே எறுகாக்கில்லே
கெழங்குன்னு கீழே தோண்டுகாக்குமில்லே

இதற்கு விளக்கம் தேவையா..

காகிதத்தில் திட்டங்கள் தீட்டி அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் புகழ் பெறுகிறார்கள். ஆதிவாசிகளை இயல்புக்கு மாறான செயல்களில் இறக்கிவிட்டு கடனாளியாக்கி விடுகிறார்கள். மீள முடியாத கடன்களில் சிக்கி, அவர்களால்,பழைய மாதிரி மாறவும் முடியவில்லை,ஆபீசர் போல உயரவும் முடிவதில்லை என்பதே ஆதிவாசி கேட்கும் கேள்வி. பிணத்துக்கு கல்யாணம் என்பது போலத்தான் இருக்கிறது இவர்கள் தீட்டும் திட்டங்களும், போடுகிற சட்டங்களும் என்கிறார் லட்சுமணன் ஒரு கவிதையில்.

வனத்தைச் செப்பனிட்டு, உழுது,களையெடுத்து ,கடன் தந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளும் அரசின் கணக்கு இருளர்களுக்குப் புரிவதே இல்லை. ஆதிவாசிகளின் உழைப்புக்கும், வேலைக்கும் தகுந்த சம்பளமாக எதுவுமே பெறுவதில்லை. லஞ்சம் கொடுத்து மேய்த்த ஆடு கூட ரேஞ்சரின் மகன் கல்யாணத்துக்கு விருந்தாக போய்விடுகிறது.

அஞ்சு இட்லிக்கூ
ஆறு ஏக்கரே கொடாத்து
காலேவாயிலே

கல்லூ சொமக்கே நா


ஐந்து இட்டிலிக்கு விலையாக ஆறு ஏக்கரை இருளனிடம் கைப்பற்றி செங்கல் சூளை அமைக்கிறார்கள் கரியன்செட்டிகள். மண்ணைப் பிரிய மனமில்லாத இருளன் அதே சூளையில் ரத்தம் சுண்ட மண் சுமக்கிறான்.

காடுகளையும் விளைநிலங்களையும் நகரத்தில் வாழும் நாம் அழித்துக் கொண்டிருக்கிறோம். காட்டைப் பாதுகாப்பதும், காட்டுடன் பிணைந்த வாழ்வை வாழ்வதும் ஆதிவாசிகளே. ஆனால், அவர்களிடத்திலிருந்து வனத்திலிருந்து காலி செய்து ஓடவைக்கவே திட்டங்கள் தீட்டுகிறது அரசு. அவர்கள் காலி செய்த நிலத்தை தொழிலதிபர்களுக்கு தாரை வார்க்கவே குளிரூட்டப்பட்ட அறைகளில் கூடிகூடிப் பேசுகிறார்கள் அதிகாரிகள்.

நமக்கு என்ன, இருக்கவே இருக்கிறது, பங்குச்சந்தையின் சரிவுகளும் , பங்குச்சந்தைக் காளையின் பாய்ச்சலும், இரவா பகலாவென்றேத் தெரியாத மைதானங்களில் கைதட்டி ஆர்ப்பரித்தும், கவலைப்படவும்,பெட் கட்டி சண்டையிடவும் - ஐபிஎல்!

ஆதிவாசிகள் எத்தகைய சூழ்நிலையில், சுமைகளோடு, அத்துமீறல்களுக்கு இடையில் வசிக்கிறார்களென்பதை இருளர்களுடைய மொழியிலேயே கூறுவது போலவும், கேள்விகள் கேட்பது போலவும் மிக சூட்சுமத்துடன் பதிவு செய்திருக்கிறார் லட்சுமணன். கவிதைக்குப் பக்கபலமாக இருக்கும் அந்தத் தொன்மகுறிப்புகளை வாசிக்க வாசிக்க, இவ்வனுபவங்களை இவர் கவிதை மொழியில் அடக்குவதைவிட இன்னும் விரிவாகவே பதிவு செய்திருக்கலாமென்று தோன்றியது.
இந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய லட்சுமணன் ஒரு நாவல் எழுதவேண்டும். அல்லது அவர்களுடைய வரலாற்றையும் கலாசார வாழ்க்கையையும் ஒரு நூலாக எழுத முன்வரவேண்டும்.


இப்புத்தகம் நெடுக, ஒவ்வொரு கவிதையிலும் முகம் காட்டிச் செல்லும் இருளர்-இருளச்சிகளுக்கு நன்றிகள்!

புத்தகம் : ஒடியன்
ஆசிரியர் : லட்சுமணன்
வெளியீடு : மணிமொழி பதிப்பகம், திருவண்ணாமலை.
ஃபோன் : 04175-251980
விலை : ரூ 50

'ஒடியன்' பெயர் குறிப்பு : தாயின் கர்ப்பத்திலிருந்து சிசுவை எடுத்து தைலம் செய்யும் மந்திரவாதி.

இன்று இயற்கையின் மடியிலிருந்து வனத்தையும் உயிர்களையும் திட்டமிட்டு சிதைத்து அழிக்கும் ஒடியன்கள் கீழ்நாட்டிலிருந்து வந்து மலை முழுவதும் நிறைந்து கிடக்கிறார்கள்.

Monday, April 26, 2010

பப்பு vs கவிதா

பள்ளி விடுமுறை விட்டவுடன், பப்பு என்னைப் பற்றி அதிகமாக கேட்க ஆரம்பித்து விட்டதாக முல்லை சொன்னார்கள். நானும், 'ஒரு நாள் அவளுடன் விளையாட வருகிறேன்' என்று சொல்லி வையுங்கள் என்றேன். எதிர்பார்க்காமல் பப்பு என்னை தொலைபேசியில் அழைக்க, ஆச்சரியத்துடன், சந்தோஷத்துடனும் அவளுடன் பேச ஆரம்பித்தேன்.

இந்த குழந்தையை நான் சந்தித்தது 3 வயதாக இருக்கும்போது. முத்துலட்சுமியை சந்திக்க சென்ற போது முதல் முறையாக பார்த்தேன். அப்போதிருந்து அவளை எனக்கு தெரிந்திருந்தாலும், அன்று அவளுடன் பேசிய போது என்னுள் தோன்றியது.. "பப்பு வளர்ந்துவிட்டாள், தெளிவாக பல விஷயங்கள் பேசுகிறாளே.." என்ற ஆச்சர்யம்தான். குழந்தைகள் வேகமாக வளர்கிறார்கள்.


போனில் அவள் பேசிய சில...

நீங்க இப்ப என்ன செய்யறீங்க.. ?
ஏன் எங்க வீட்டுக்கு வரல? எப்ப வருவீங்க..?
எங்க வீட்டுக்கு வர வழி தெரியுமா? (வழி தெரியும் என்ற பதிலுக்கு பிறகு)
எப்படி தெரியும்..?
யார் சொல்லிக்கொடுத்தா? எப்ப வழி தெரிந்து தனியா நீங்க வந்து இருக்கீங்க? ஆச்சியும் நானும் தானே உங்களை கூட்டுட்டு வந்தோம்.. (
மறக்க முடியுமா...எந்த லெஃப்ட் எந்த ரைட் சொல்லுங்க..பாப்போம்!!) எப்படி வரணும்னு சொல்லுங்க.. - என்று அவளின் சந்தேகம் தொடர்ந்து கொண்டே இருந்தது.

வெயில்ல வாரதீங்க. .வெயில்ல வெளியில போகக்கூடாதுன்னு உங்களுக்கு தெரியாதா?
வெயில் போனவுடனே சாயங்காலம் வாங்க...

நான் புது விளையாட்டு எல்லாம் கத்துக்கிட்டு இருக்கேன், அது எல்லாம் உங்களுக்கு தெரியுமா? நான் அதை எல்லாம் உங்களுக்கு சொல்லித்தரேன்,


(இதுல கவனிக்க வேண்டியது "வாங்க போங்க" என்பது அவள் பேச்சில் மரியாதை சேர்ந்திருந்தது, முன்பு ஒருமையில் அழைப்பாள் முல்ஸ் க்கு தர்மசங்கமாக இருக்கும், என்னிடம் "சாரி கவிதா ன்னு சொல்லிக்கிட்டே இருப்பாங்க.. :) )


நேற்று முன் தினம், ஒரு வழியாக பப்புவுடன் விளையாட சென்றுவிட்டேன். உடன் ஆயாவையும் பார்த்து பேச எனக்கு ஆசை. முல்ஸ் முன்னமே சொல்லியிருக்க, பப்பு எனக்காகவே காத்திருந்தாள். உள்ளே நுழையும் போதே..


”நீங்க இதுக்கு முன்னமே இங்க வந்தீங்களா” என்றாள்..

”இல்லப்பா இப்பத்தான் வரேன்”

”ஆச்சி நீங்க காலையில வருவீங்கன்னு சொன்னாங்களே..”

“ஓ... ஆனா நீந்தான் என்னை வெயிலில் வர வேண்டாம் னு சொன்ன...அதான் இப்ப வந்தேன்...”

உடனே அவளின் புது விளையாட்டை விளையாட என்னை அழைத்தாள். எடுத்து சென்ற கேக், சாக்லெட்-ஐ அவளே பிரிட்ஜில் வைக்க உதவி செய்தாள்.

பாயை விரித்து போட்டு, விளையாட்டு பொருட்களை கொண்டு வந்தாள். இருவரும் மண் சொப்பு வைத்து விளையாட ஆரம்பித்தோம். நடுவே ஆயாவிடம் கதை. முல்ஸ் எழுதிய "காப்பி" பதிவை பற்றி ஆயாவிடம் கேட்க ஆயா காப்பியை பற்றி விபரமாக சொன்னார்கள். ஆயாவிடம் என் கவனம் செல்லக்கூடாது என்பதில் பப்பு கவனமாக இருந்தாள்.

பிறகு எனக்கு விளையாட ஒரு பாப்பா பொம்மை எடுத்து வந்து கொடுத்தாள். பெயர் என்ன என்று கேட்டேன். ஏதோ ஒரு ஆண் குழந்தையின் (நீளமான) பெயரை சொன்னாள். நான் பெயர் பெரியதாக இருக்கிறது அதுவும் இது பெண் குழந்தை பொம்மை அதனால் பெண் பெயர் சொல்லு என்றேன்.

உடனே ஒரு குட்டி யோசனை. ஆனால் பெயர் எதுவும் சொல்லாமல்-

”அப்பன்னா என் பெயர் "குறிஞ்சி மலர்" பெரிய பெயரா இருக்கா?”

”ம்ம்.. ஆமா.. ஸ்கூல் ல எப்படி கூப்பிடறாங்க... குறிஞ்சி ன்னா மலர் ன்னா?”

”இல்லையே எல்லாருமே குறிஞ்சி மலர் தான் கூப்பிடறாங்க..”

”ஓ..நிஜமாவா. .அப்ப சரி.. பெரிய பெயரா அவங்களுக்கு தெரியல போல.. நானா இருந்தா குட்டி ஆக்கிடுவேன்.”

”அப்பன்னா என் பேரு பெரிய பேரா?”

”ம்ம்ம் ஆம்மா பெரிசா தான் எனக்கு தெரியுது...”


********

பப்பாளி பழம் கட் பண்ண சொல்லி, சாப்பிட உட்கார்ந்துவிட்டாள்.

”அது எப்படி நீங்க வெட்டிக்கொடுத்தா இவ்வளவு டேஸ்ட்டா இருக்கு? சூப்பர் டேஸ்ட் சூப்பர் டேஸ்ட்.. இந்தாங்க சாப்பிட்டு பாருங்க....” (அடுத்தவங்களை சந்தோஷப்படுத்தி சந்தோஷப் படறதுலே பப்பு என்னை மாதிரியே...)

ஆயா புருவத்தை உயர்த்தி, 'பேச்சை பாத்தியா' ன்னு சிரிச்சாங்க..


நானும் கொஞ்சம் ஆச்சரியப்பட்டு... ”அப்படியா?” என்றேன்..

”ஆமா அன்னைக்கு ஆச்சி கட் பண்ணாங்க டேஸ்டாவே இல்லையே..”

”கட் பண்றாதால டேஸ்ட் மாறாது பப்பு, சில பழம் ருசியா இருக்காது, சில பழம் நல்லா ரைப் ஆகி ருசியா இருக்கும் , அதனால் யார் கட் பண்ணாலும், இந்த பழம் டேஸ்டாத்தான் இருக்கும்”- என்றேன். (விளையாட்டுக்குச் சொல்றதையெல்லாமா சீரியஸா எடுத்துக்குவாங்க..ஹைய்யோ...ஹைய்யோ!)

***********

”உங்க வீட்டில விளையாட நிறைய பசங்க இருக்கு இல்ல.. அந்த பசங்களை எல்லாம் நீங்க தூக்குவீங்களா?”


”ம்ம்..மாட்டேன் ..நான் தூக்கினாலும் அதுங்க.. இருக்காது. .இறக்கி விடும் னு சொல்லும்..”


”ஏன் இறக்க சொல்லும்?”

”அதுங்களுக்கு நாம தூக்கினா பிடிக்காது... தூக்கிட்டா ஃபிரியா விளையாட முடியாது இல்லையா?”

”அந்த குழந்தைகள் எல்லாம் எவ்வளவு பெருசு?”

”2 குழந்தை உன்னை விட சின்னது... 2 குழந்தை உன்னை விட பெருசு...”

”அவங்க எல்லாம் ரொம்ப வெயிட்டா இருப்பாங்கன்னு தான் தூக்க மாட்டீங்களா?”

”ம்ம்ம்ம்..ஆமா வெயிட்டா இருந்தாலும் தூக்க முடியாது..”

”அப்ப நீங்க யாரை த்தான் தூக்குவீங்க.. ? நவீன் அண்ணாவை.. ? ஆயா வை? என்னை? ஆச்சியை?”

”யாரையுமே என்னால தூக்க முடியாது.. எல்லாரும் வெயிட். .வேணும்ன்னா உன்னை தூக்கலாம்..”

”ஆமா நான் கூட யாரையும் தூக்க மாட்டேன்..”


”நவீன் போட்டோல பாத்து இருக்க இல்ல.. அவனை என்னால தூக்க முடியாது... ஆனா அவன் என்னை தூக்கி போட்டுடுவான்...”


”நான் பாத்ததில்லையே... (ஒரு சடன் கோபம்)....அப்பன்னா நான் உங்க வீட்டுக்கு வரும் போது அவனை நாம தூக்கி போட்டுடலாம் ...”


***********

”ஆயா கால் தோல் எல்லாம் சுருங்கி இருக்கே.. எனக்கு எப்ப அப்படி ஆகும். ” (என்னோட கைகளையும் பேசியவாறே பார்க்கிறாள்)


"ஆயாக்கு வயசாச்சு அதனால் தோல் சுருங்கி இருக்கு.... உனக்கு என்ன சின்ன குட்டி தானே.. உனக்கு ஒன்னும் ஆகாது..”

”நான் ஆயா வானா சுருங்கிடுமா..? நான் எப்ப ஆயா வா ஆவேன்..”

”முதல்ல ஆச்சியும் உங்க அப்பாவும் ஆயா தாத்தா ஆவாங்க(என்னா வில்லத்தனம்!)... அதுக்கு அப்புறம் நீ ஆவ.. ஆனா அதுக்கு ரொம்ப வருஷம் இருக்கு....”

”ஆச்சி தான் எனக்கு ஃபிரண்டு.... அப்பா ஃபிரண்டு இல்ல...”

”ஓ ஏன்.. அப்பா ஃபிரண்டு இல்ல..”

”அது அப்படித்தான்..ஆச்சி மட்டும் தான் எனக்கு ஃபிரண்டு.. !!” (Yay!!!)

குறிப்பு : பப்புவுக்கு விடுமுறை ஆரம்பித்ததும் கடந்த வாரத்தின் ஒரு நாளில் 'அணில்குட்டி அனிதா' புகழ் கவிதா வீட்டுக்கு வந்திருந்தார். (நீண்டநாட்களுக்குப் பிறகு..இல்லையா கவிதா..?! :-) ) அவர் எழுதிய அனுப்பிய மடலே மேலே நீங்கள் வாசித்தது!நெருக்கடியான வேளைகளில் நான் சாய்ந்துக்கொள்ளத் தேடும் தோள்கள் அவருடையது - 'அவசர' மற்றும் 'திடீர்' உதவிக்கு அழைப்பதும் அந்தத் தோள்களிலிருந்து நீளும் கரங்களையே! (ஹேய்..கவிதா...கொஞ்சம் கவிதையா ட்ரை பண்ணியிருக்கேன்ப்பா....கண்டுக்காதீங்க...:-) ) நன்றியெல்லாம் சொல்லி உங்களை கஷ்டப்படுத்த விரும்பவில்லை.

அப்புறம், அந்த ப்ராக்கெட்-குள்ள இருக்கிறதெல்லாம் என்னோட கமெண்ட்ஸுன்னு சொல்லியாத் தெரியணும்!

Thursday, April 22, 2010

மொசைக் ஆர்ட்

பப்புவின் பிறந்தநாளுக்கு வாங்கிய அலங்கார கலர் பேப்பர்கள் அடங்கிய பாக்கெட் ஒன்று இருந்தது. (bleeding paper தனியாகக் கிடைப்பதில்லையே இப்போதெல்லாம், ஏன்?) அதனை சிறுசிறு துண்டுகளாக வெட்டச் சொன்னேன்.

தண்ணீரில் நனைத்தால் அது சாயம் போகுமென்று பப்புவுக்குத் தெரியாது. என்னச் செய்யப் போகிறோமென்று சொன்னதும்,'என்ன ஆகுமென்ற'ஆர்வத்தோடே வெட்டினாள். தண்ணீரைத் தொட்டு ஒவ்வொரு பேப்பர் துண்டுகளாக ஒட்டினாள்.


ஒரு குட்டித்தூக்கம்.

எழுந்துப் பார்த்த போது, காய்ந்த பேப்பர்கள் காற்றிலடித்துச் சென்றுவிட சாயங்கள் ஒட்டிய மொசைக் ஆர்ட் கிடைத்தது.

கேள்வி-பதில் கார்னர்:

உறவினர் ஒருவருக்கு வரும் ஞாயிறு திருமணம். பப்புவுக்கு அவர் முருகன் மாமா. ”முருகன் மாமா கல்யாணத்துக்கு போகணும்” என்று பேசிக்கொண்டிருந்தோம். இரண்டு நாட்களுக்கு முன்பு ஃபோன் செய்தவரிடம் பேசிக்கொண்டிருந்தாள் பப்பு. அவர் கல்யாணத்தில் இருப்பதாக நினைத்துக்கொண்டு

“கல்யாண கேர்ல் இருக்காங்களா?” - பப்பு

"இல்ல பப்பு..சனிக்கிழமைதான் வருவாங்க.." - அவர்

"அப்போ நீங்க மட்டும் கல்யாணத்துலே இருக்கீங்களா? கேர்லுக்கும் பாய்க்கும்தான் கல்யாணம் நடக்கும். நீங்க ஏன் தனியா கல்யாணத்துலே இருக்கீங்க?" - பப்பு

"அப்பாக்கிட்டே ஃபோனைக் கொடு.." - அவர்

சிறிது நேரம் கழித்து, பப்பு கேட்டாள்,

”எனக்கு கல்யாணம் நடந்தா என்னா ஆகும்?”

ஒரு செகண்ட் யோசித்துவிட்டு, புத்திசாலித்தனமாக சொல்வதாக என்னைநானே பாராட்டிக்கொண்டு சொன்னேன்.

”நீ ஆஃபிஸ் போவே, பப்பு”

“ஹேய், உனககு தெரியாது, கல்யாணம் நடந்தா எனக்கு பாப்பா பொறக்கும்”

(ஹப்பாடா....முன்னாடி வேறமாதிரி சொல்லி என்னை தர்மசங்கடப்படுத்திக்கிட்டிருந்தே,இப்போ நீயே புரிஞ்சுக்கிட்டே... ;-)... பைதிவே,பப்பு, இதெல்லாம் நான் உனக்கு சொல்லியே கொடுக்கலையே!)

Wednesday, April 21, 2010

ஜூன் '09 - ஏப்ரல் '10

பப்பு,

பள்ளிக்கூடத்தின் முதல் நாள் முதல் கடைசி நாள் வரை - முக்கியமான எல்லா தினங்கள்,நிகழ்ச்சிகள் - சாதனைகள் - இன்னபிற - என் நினைவிலிருந்து!

1. பள்ளியின் முதல் நாள் - ஜூன் 09
2. ரெட் டே - ஜூன் 09
3. ஃபேமிலி டே - ஜூலை 09
4. மாதாந்திர பிறந்தநாள் - ஜூலை 09

5. யெல்லோ டே - ஆகஸ்ட் 09
6. ஆஃப்டர் ஹேர் கட் & மாதாந்திர பிறந்தநாள் - செப்டம்பர் 09
7. பிரவுன் டே - செப்டம்பர் 09
8. நான்காம் பிறந்தநாள்- அக்டோபர் 09
9. குழந்தைகள் தின ஃபேன்சி ட்ரெஸ் பரேட் - நவம்பர் 09
10. பிங்க் டே - டிசம்பர் 09
11. பள்ளி ஆண்டு விழா - பிப்ரவரி 10
12. 'ஆங் சான் சூ கி மாதிரி இருக்கே'ன்னு ஆயா சொன்னதும் அதே ஆங்கிளில் எடுக்க முயன்றபோது - மார்ச் 10

13. ப்ளூ டே - ஜூலை 09
14. கராத்தே நிகழ்ச்சி - டிசம்பர் 09
15. இக்கல்வியாண்டின் இறுதிநாள் - ஏப்ரல் 10

பிலாக் & வொயிட் டே, கோல்ட் & சில்வர் டே போன்ற சிலவற்றை எடுக்காமல் விட்டுவிட்டேன்,பப்பு! ( நீ, கேமிராவை பார்த்தாலே தன்னிச்சையாக செயற்கையான புன்னகை செய்வதாக, நீண்ட நாள் புகாரொன்று என் மேல் உள்ளது! )

Sunday, April 18, 2010

குட்டீஸ் பென் ஃப்ரெண்ட்ஸ் - அறிவிப்பு!

மொத்தம் 16 குட்டீஸ் - 3 வயதிலிருந்து 10+ வயது வரை!!

பங்கேற்ற அனைவருக்கும் நன்றிகளும் - வாழ்த்துகளும்!
:-)

இந்நேரம், ஆர்ட் பென் ஃப்ரெண்டை பற்றிய விபரங்களுடன் ஒரு மடல் தங்களின் மின்முகவரியின் அழைப்புமணியை அடித்துக்கொண்டிருக்கும் என நம்புகிறேன். (மடல் கிடைக்கப்பெறாதவர்கள், யாரேனுமிருப்பின் தெரியப்படுத்துங்கள் - ஒருவேளை, ஏதேனும் மின்முகவரிகளில் நான் தவறு செய்திருக்கக்கூடும்.
)

அடுத்தது, குட்டீஸ் செய்ய வேண்டியது( தேவைப்பட்டால், பெற்றோர் உதவியுடன்)

1. வரையுங்கள்/பெயிண்டிங் செய்யுங்கள்

2. தங்கள் அன்பு நண்பருக்கு அனுப்புங்கள்

3. முதன்முதலில் அனுப்பும்போது மறக்காமல் உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள். “என் பெயர் சிந்து, நான் சென்னையில் வசிக்கிறேன்,வயது 4 1/2. எனக்கு ஐஸ்கிரீம் மிகவும் பிடிக்கும்.பீச்சில் விளையாடுவது விருப்பமானது” என்பது போல.

4. மடலிலோ அல்லது முகவரி பெற்று தபால் மூலமோ தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் உலகை பகிர்ந்துக்கொள்ளுங்கள்!


5. ரிப்பீட் - முதல் ஸ்டெப்பிலிருந்து!

குழந்தைப்பருவத்தை பொக்கிஷமாக்குங்கள்!


என்னால் மட்டும் இயலுமென்றால், ஒவ்வொரு குட்டீஸும் அவர்களது எண்ணங்களை, உணர்வுகளை ,உலகை - அவர்கள் கலையால் - வரையும் போதும், மடலில் பேசிக்கொள்ளும்போதும் உடனிருப்பேன்!! :-)
(அம்மாக்கள் வலைப்பூவிலும் வெளியாகியது.)

Wednesday, April 14, 2010

Summer camp @ Blogdom!ஹூஹூ! வாழ்த்துகள் குட்டீஸ் - ஆர்வத்துடன் அனுப்பிய பெற்றோருக்கும்! குட்டீஸ் பேனா நண்பர்கள் - இதுவரை ஏழு குழந்தைகள் பதிவு செய்திருக்கின்றனர்.

2 வயதிலிருந்து 12 வயதுவரை இருக்கும் சிறுவர் சிறுமியர் - ஆர்ட்/வரைவதில் விருப்பம் கொண்ட பேனா நண்பர்கள் மூலமாக தங்கள் உலகை பரிமாறிக் கொள்ள விருப்பமிருப்பின் வருகிற வெள்ளிக்கிழமைக்குள்ளாக எனக்குத் தெரிவிக்கவும். (வயது வரம்பு முன்பு பத்து வயதுவரை என்று குறிப்பிட்டிருந்தேன். தற்போது மாற்றியிருக்கிறேன். )


1. தங்கள் குழந்தையின் பெயர், வயதுடன் (மற்றும் gender preference இருந்தாலும்)
mombloggers@gmail.com என்ற முகவரிக்கு மடலிடவும். வரும் வெள்ளிக்கிழமைக்குள் அனுப்பினால் நலம்.

2. பதிவர்கள் மட்டுமல்லாமல் வாசகர்களும் தங்கள் குழந்தைகளை பதிவு செய்யலாம்.

2. தங்கள் குழந்தையின் வயதுக்கு ஏற்ற இன்னொரு குழந்தையுடன் மேட்ச் செய்து விபரங்களை வருகிற சனிக்கிழமை தங்களுக்கு மடல்மூலம் தெரிவிக்கிறேன்.

3. அடுத்தது, தங்கள் பேனா நண்பருக்கு வரையுங்கள். உங்கள் எண்ணங்களை சொல்லுங்கள்.

4. மின்மடல் மூலமாகவோ அல்லது தபால்கள் மூலமாகவோ பரிமாறிக் கொள்ளுங்கள். அது உங்கள் விருப்பமும் வசதியும் சார்ந்தது. கூடவே, கடிதங்கள்அனுப்புவதும்.

5. நேரமும், விருப்பமுமிருப்பின், பேனா நண்பர் தங்களுக்கு அனுப்பியதை தங்கள் தளத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள். அந்த சுட்டியை அனுப்பினால் மகிழ்வேன். அல்லது
mombloggers@gmail.com முகவரிக்கு அனுப்பினால், ”அம்மாக்கள் வலைப்பூ”வில் பகிர்கிறேன்.

குழந்தைகளோடு நேரத்தை பகிர்ந்துக்கொள்வோம். டீவியிலிருந்து கொஞ்ச நேரம் திசைதிருப்புவோம். அவர்களுக்குள் இருக்கும் கற்பனைத் திறனை அறிவோம். அனைவருக்கும்
நன்றிகள்!!

Tuesday, April 13, 2010

கொலம்பஸ்..கொலம்பஸ்...

"(2-12 வயது) குட்டீஸ் பென் ஃப்ரெண்ட்ஸ்-க்கு பதிவு செய்ய விபரங்களுக்கு இங்கே செல்லவும்"


கம்(Glue) கூட வண்ணங்களைக் குழைத்து கம்பையிண்டு பண்ணி "கம்-பெயிண்டு" பண்றது (அப்புறம் பெயிண்டிங் பிரஷை எடுக்க நாங்க டக்காஃப் வார் நடத்தினது குடும்பக்கதை!), கம்-லே முதல்லே வரைஞ்சு அது காஞ்சதும் மேலே பெயிண்டிங் பண்றது...
இந்த மாதிரி நுண்கலைகளுக்கு அணுகவும் - "ஐடியாமணி" பப்பு!மேலே இருக்கிற படமும், கீழே இருக்கும் படமும் பப்புவின் கண்டுபிடிப்பு டெக்னிக்கில் வரையப்பட்டது. இந்த ப்ராசஸிலே என்ன வரைஞ்சோம்கிறதைதான் மேடம் மறந்துட்டாங்க - அட்ஜஸ்ட் ப்லீஸ்!


(இது சூரியனாம்! - கம் -லே வரைஞ்சு காய்ஞ்சதும் அது மேலே கலர்.)

இது மரம் . அப்லோடு பண்ணும்போது ரொடோட் ஆகிடுச்சு..கொஞ்சம் தலையை 45 டிகிரி கோணத்தில் காக்காய் போல வைத்துக்கொண்டு பார்க்கவும்...ஹிஹி!

தேஷ்னா, அர்ஷித் கைலாஷ், வர்ஷிணிக்கு கொடுக்கிறதுக்காக வரைஞ்சு, பையில் வைக்கிறதுக்கு முன்னாடி கிளிக்கியது. இதெல்லாம் என்னவா? என்னது இது சின்னப்புள்ளத்தனமா... கேட்டுக்கிட்டு..ஆர்ட்-னு சொன்னா அனுபவிக்கணும்..ஆராயக்கூடாது!
கட் பண்ணின ஸ்ட்ரா துண்டுகள்(20 ரூ பாக்கெட்!), ஐஸ் குச்சியை (50 குச்சிகள் 5 ரூபா!) உடைச்சு
அதிலே பெயிண்டை தொட்டு வரைஞ்சதுதான் இந்த பின்னவீனத்துவ மாடர்ன் ஆர்ட்!


அவளது பள்ளிக்கு இந்த வருஷத்தின் கடைசிநாள் இன்று . நாளையிலிருந்து விடுமுறை. அடுத்த வருஷத்திலேருந்து வெண்மதி வேற ஸ்கூலுக்கு போய்டுவான்னு ஒரே ஃபீலிங்ஸ்! உலகம் சின்னது பப்பு, சீக்கிரம் வெண்மதியை மீட் பண்ணலாம்! ஹாப்பி ஹால்ஸ், பேபி! :-)

Monday, April 12, 2010

சாமி என்ற கோல்கேட்.....பாதுகாப்பு வளையம்!

”வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம், மேனி நுடங்காது ...”

”நாடினேன்..நாடி ஓடினேன்...கண்டுகொண்டேன் நாராயணா என்னும் ...”


”பாலும் தெளிதேனும்...”

”அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி... தனிப்பெருங்கருணை...”

வரிசையாக ஏழு குட்டீஸ் வயதுவாரியாக கையைக் கூப்பியபடி நின்றுக் கொண்டிருந்தோம். பெரிய அத்தை ஒவ்வொரு வரியாகச் சொல்லச் சொல்ல பின்னாலேயே சத்தமாகச் சொல்லிக்கொண்டிருந்தோம்.மாமா பித்தளை தீபாராதனை தட்டில் கற்பூரத்தை ஏற்றி எல்லா சாமிபடங்களுக்கும் காட்டி கீழே வைப்பார். பின்னர், தம்ளரிலிருக்கும் தண்ணீரை மூன்று தடவை தட்டிற்கு அரை வட்டமாக விரலாலேயே பாத்தி கட்டுவார். கற்பூரம் எரிந்துக் கொண்டிருக்கும். கொஞ்சம் உயரமாக எரிந்து நெருப்பின் சீற்றம் குறைந்து, கீழே தட்டுக்கும் மேலே எரிவதற்கும் நடுவில் ஒரு கருப்பான வெற்றிடத்தைக் காட்டியபடி லேசாக ஒரு நளின நடனம் ஆடி அடங்கும். தம்ளரிலிருக்கும் துளசி இலைகள் எல்லோர் கையிலும் கொடுப்பார் மாமா. வலது கையில் வாங்கி எச்சில் படாமல் தூக்கி வாயில் போட்டுக்கொள்ள வேண்டும். கையில் ஒட்டியிருக்கும் தண்ணீரை தலையில் தடவிக்கொள்ள வேண்டும். பிறகு விபூதி - குங்குமம். பெரியவர்களுக்கு கையிலும், சிறியவர்களுக்கு நெற்றியிலும், கழுத்திலும் பூசி விடுவார். நெற்றியிலிருந்து கழுத்துக்கு பூச வரும்போது வாயை லேசாக திறந்தால் ஒரு சிட்டிகை வாயிலும் விழும். பெண்களாக இருந்தால் விபூதிக்குப் பிறகு குங்குமமும் வைத்துவிடுவார். தாத்தாவிற்கும்,இளங்கோ மாமாவிற்கும் தனிப்படையல். அப்போது மட்டும் ஆயா வந்து நிற்பார்.

வீட்டில் எதிர்பாராத இரண்டு பெரிய இழப்புகள்,அதைத் தொடர்ந்து ஒரு திருமணம், பிரச்சினைகள் என்று அடுத்தடுத்து நடந்ததன் காரணமாக ‘சாமி இருந்தா இப்படி நடந்திருக்குமா...சாமியே இல்லே'என்று வெறுத்துப் போயிருந்த வீட்டில் அத்தைகளும், குழந்தைகளும் வந்தபின்பு நடந்த முக்கிய மாற்றமிது. அதன் பக்க விளைவுகள்தான் இந்த 'வாக்குண்டாம்'.....அத்தைகளின் பெருமுயற்சிகளுக்குப் பிறகு மாமாக்கள் கொஞ்சமாக கொஞ்சமாக் மாறிக்கொண்டிருந்தார்கள்.அத்தைகள் கில்லாடிகள்தான். “எனக்கு நோம்பு கயிறு கிடைச்சிருக்கு, தீபாவளிக்கு நோன்பு வைக்கணும்” என்று பெரிய அத்தையும், ”கிழக்காலே வயல் மூலையிலே கிடைச்ச சிலை, விடாம வச்சிப் படைக்கணும்” என்று சின்ன அத்தையும் ஆரம்பித்து, வருடத்தின் எல்லா வெள்ளிக்கிழமைகள், சனிக்கிழமைகள், நினைவுதினங்கள், சதுர்த்திகள்,அமாவாசைகள், தீபாவளி , பாம்பு பஞ்சாங்கத்திலிருக்கும் இன்னபிறவெல்லாம் பரபரப்பாக கொண்டாடப்பட்டன. எங்களுக்கு கேட்கவா வேண்டும், கும்மாளமும் கொண்டாட்டமும்தான்.

நடுவில் எதையோ விட்டுவிட்டேனே..ஆமாம், பாட்டுல்லாம் பாடி முடிந்ததும் கற்பூரம் எரியும்போது மாமா,அத்தை,அம்மா எல்லோரும் கண்மூடி கை கூப்பி நிற்பார்கள். நாம் முழித்து பார்த்துக்கொண்டிருந்தோமானல் சைகையாலேயே கண்ணை மூடி கையை கூப்பச் சொல்லுவார்கள்.ஆனால் என்ன வேண்டிக் கொள்ளணுமென்றுதான் தெரியாதே...”சாமி நான் நல்லா படிக்கணும், எனக்கு நல்ல புத்திக் கொடுங்க”என்று வேண்டிக்கொள்ள சொல்லிக்கொடுத்தார்கள். நானும் போகிற கோயில்களிலெல்லாம் சத்தம் போட்டு (லைப்ரரிலே படிச்சனே அந்தக் கதைதான்!)வேண்டிக்கொண்டு நிற்பேன். அநேகமாக அது முதல் வகுப்பென்று நினைவு. அதுதான் சாமியிடம் கண்மூடி சிரத்தையாக வேண்டிக்கொண்டது. அப்போதும் சாமி என்பவர் பெரியவர்.. கோயிலுக்குள் இருப்பார். நாம் கேட்டதைக் கொடுப்பார்.அப்புறம் நான் நல்லா படிக்கணும்..நல்ல புத்தி கிடைக்கணும். மனதில் பதிந்தது அவ்வளவுதான்...இப்படி சாமி எனக்கு அறிமுகமானது வடலூரில்தான்.

ஒருமுறை, விளையாட்டில் சண்டை வந்தபோது நானும் சுஜாக்காவும் ப்ரெண்ட்சாகி விஜிக் கூடவும் சசி கூடவும் டூ விட்டோம். அப்போது நாங்களிருவரும் 'விஜிக்கு ஜூரம் வரணும்' என்று வேண்டிக்கொண்டதுதான் சாமி எனக்குக் கொடுத்த நல்ல புத்தி. மனதிற்குள் வேண்டிக்கொள்ள வேண்டிய அவசியம் புலப்பட்டதும் அப்போதுதான். நல்லவேளையாக விஜிக்கு ஜூரமெல்லாம் வரவில்லை. சாமி ஒரு உண்மையான பக்தையை இழந்துவிட்டார்.இதெல்லாம் வடலூரில் விடுமுறை நாட்களில்தான்.


பெரியப்பாவின் நினைவுதினத்துக்காக, திருவண்ணாமலை ரமணாசிரமம் போகிற பழக்கம் இருந்தது.ஆசிரமத்திற்கு எதிரில் அவர்களது காட்டேஜில் நான்கு நாட்கள் வாசம். ஒரு மாதத்திற்கு முன்பே லெட்டர் போட்டால் நமது பெயரில் புக் செய்துவிடுவார்கள். அப்போதெல்லாம் ரமணாஷ்ரமம் அவ்வளவாக பிரசித்தி அடையவில்லை. இளையராஜால்லாம் அங்கே போக ஆரம்பிக்காத நேரம். நினைவு நாள் அன்று அன்னதானம் கொடுக்கவும் ஏற்பாடு செய்திருப்பார்கள். அங்கு ஆன்மீகத் தேடலைவிட எங்களுக்கு ஆங்கிலப் புலமையையும் இந்திப் புலமையையும் காட்டி வெள்ளைக்காரர்களை நண்பர்கள் பிடிப்பதே பொழுதுபோக்கு. அம்மா, பெரிம்மா, ஆயா, சாந்தா அத்தை எல்லாரும் தியான மண்டபத்திற்கும் பஜனையிலும் நூலகத்திலுமாக இருக்க நாங்கள்
வெள்ளைக்காரர்களையும், குஜராத்திக்காரர்களையும் ராமலிங்க சாமி ஜோதியாக மறைந்ததையும், அவர் ரகசிய சுரங்கப்பாதை வழி நடந்தே திருச்சிற்றம்பலத்திற்கு சென்றதையும், ஒரே நேரத்தில் சென்னையிலும் கருங்குழியிலுமாக காட்சி தந்ததையும் சொல்லி தனிச்சானல் ஓட்டிக் கொண்டிருந்தோம். நாங்கள் ஏதோ ராமலிங்கசாமியையே நேரில் கண்டு விட்டவர்களாகவே நினைத்துக்கொண்டு மரியாதையாக நடத்துவார்கள். அவர்களது நண்பர்களிடம் அறிமுகப்படுத்துவார்கள். அதுவும் போரடித்தால், தியான மண்டபத்திற்கு அருகாமையில் இருக்கும் குளத்தில் கல்லெறிந்துக் கொண்டோ, அங்கே உலவும் மயில்கள் எப்போது தோகை போடுமென்றோ அல்லது லஷ்மி பசுவின் சமாதியைத் தாண்டி இருக்கும் மலையை வேடிக்கைப் பார்த்துக்கொண்டோ பொழுதைக் கழிப்போம்.


ஆம்பூரில் எல்லா சாமிக்கும் தடா. சாமி படங்களோ சம்பிரதாயங்களோ கிடையாது. எல்லா நாளும் நல்ல நாளே..எல்லா நேரமும் நல்ல நேரமே. சாமியும் கிடையாது, பூதமும் கிடையாது என்பதே நம்பிக்கை.அந்த நம்பிக்கையை யாரும் எங்கள் மேல் திணித்தது இல்லை. சாமி இருக்கிறாரென்ற நம்பிக்கையையும் யாரும் எங்கள் மேல் திணிக்கவும் இல்லை. எப்போதும் எல்லாவற்றுக்கும் சுதந்திரம் இருந்தது. யாராவது என்னையும் தம்பியையும் கோயிலுக்கு கூட்டிப் போகிறேன் என்று சொன்னால் அனுமதி கிடைத்திருக்கிறது. சாந்தா அத்தை அல்லது குணா அத்தையோடு துணைக்குக் கோயிலுக்கு சென்று அவர்களோடு நவக்கிரகங்களை சுற்றியிருக்கிறேன்.

பெரியப்பாவின் நண்பர் மூலம் வீட்டுக்கு வந்த “இயேசு அழைக்கிறாரை” ஒரு இதழ் விடாமல் படித்திருக்கிறேன். எதிர் வீட்டுக் கிறிஸ்டியன் ஆண்ட்டி வீட்டுக்குச் சென்று ஜெபங்கள் செய்திருக்கிறேன். அவர்களைப் போல கண்ணீர் விட்டு ஜெபம் செய்ய வேண்டுமென்று ஆசைப்பட்டிருக்கிறேன். அவர் என் பேரையும் ஜெபத்தில் சொல்லும்போது சந்தோஷமாக இருக்கும். 'இயேசு அழைக்கிறார்' நின்று போனபின் அவர்கள் வீட்டிலிருந்து பைபிள் வாங்கி வாசித்திருக்கிறேன். கொஞ்ச நாட்கள் யோகா கற்றுக்கொண்டபோது தியானமெல்லாம் செய்து ஒரு ஞானி தோற்றமெல்லாம் கொடுத்திருக்கிறேன். கணக்கு பரீட்சைக்கு எந்த கேள்வி வர வேண்டுமென்று தியானித்திருக்கிறேன். எல்லாம் கொஞ்ச நாட்கள்தான்.

சாமி இல்லையென்று வாதிட முடியாதது போன்று இருக்கிறாரென்று நம்பவும் முடியவில்லை. ஆனால், சிலை வடிவத்திலோ அல்லது எட்டு கை,நாலு தலை கொண்டோ இருக்குமென்றும் நம்ப முடியவில்லை.மேலும் வீட்டிலிருந்த தி.க புத்தகங்களையும் 'உண்மை' இதழையும் படித்து கடவுளர்கள் மேலேயும் இந்து மதத்தின் மேலேயேயும் எனக்கு வெறுப்பு வந்திருந்தது. (அதுவும் ‘கடவுளர்கள் பிறந்த கதை”ன்னு ஒரு புக் இருக்கும்..செம ROTFL புக்.)

மேலும்,எப்போதும் எனக்கு மற்றவர்களை வித்தியாசமாக இருக்கப் பிடிக்கும். அதனால், எல்லோரும் விழுந்து விழுந்து சாமி கும்பிடும்போது வித்தியாசத்திற்காக சாமி கும்பிடாமல் இருக்கப் பிடித்திருந்தது. டீனேஜ் வந்தபோது எல்லாவற்றும் rebelliousஆன குணம் வந்திருந்தது.அடையாளங்கள் எதுவும் இல்லாத அடையாளத்தையே விரும்பியிருக்கிறேன்.” ஒரு மதத்தை பின்பற்றித்தான் நல்ல விஷயங்களை கத்துக்கணும்னோ இல்லே அந்த மதத்தைச் சார்ந்து இருந்தாத்தான் நல்லவங்களா இருக்கமுடியும்னோ இல்லே, எங்கேயிருந்தாலும் அதை எடுத்துக்கலாம், முடிவா மனுஷங்களா இருக்கணும்” என்று எங்களை வளர்த்தது பெரிம்மாதான். சடங்குகள், அதனைக் குறித்தான அலட்டல்கள் பற்றியும் லேசான தெளிவு இருந்தது.


Happy Go lucky girl-ஆக இருந்த எனக்குள்ளும் தேடல்கள்,பயங்கள், தயக்கங்கள், உள்மனப் போராட்டங்கள், வெளிப்போராட்டங்கள், மனக்குழப்பங்கள், சுற்றியிருந்தவர்களுடன் பிரச்சினைகள்...சண்டைகள் குறிப்பாக - டீனேஜில் இல்லையென்று சொன்னால் நான் பொய் சொன்னவளாவேன். பெற்றோரிடம் , எல்லா நேரங்களிலும் எல்லாவற்றையும் நீங்கள் சொல்லிவிடுவீர்களா தெரியவில்லை.. என்னால் முடியாது. சொல்லியிருந்தாலும் என்ன நடந்திருக்குமென்று ஊகிக்க முடியவில்லை. என்னைச் சுற்றி எப்போதும் மனிதர்கள் இருந்துக்கொண்டே இருந்தாலும், அவர்கள் யாராலும் நிரப்பப்படாத ஒரு வெற்றிடம் எனக்குள் இருந்துக்கொண்டே இருக்கிறது.


எதிர்காலம் குறித்தும், ”எப்படி இருக்கும், நான் நல்லா இருப்பேனா” என்று கலக்கம் வந்திருக்கிறது. தேவையற்ற கவலைகளை சுமந்து திரிந்திருக்கிறேன். சில சமயங்களில் ஸ்தம்பித்திருக்கிறேன்..சமயங்களில் சோர்ந்து முடங்கி அமர்ந்திருக்கிறேன்.. ”டோண்ட் கிவ் அப், டோண்ட் கிவ் அப்” என்று முற்றிலும் எல்லாவற்றையும் அறிந்த யாராவது என்னிடம் சொல்லமாட்டார்களா என்று எண்ணியிருக்கிறேன். ”ஆச்சி, யூ ஆர் கோயிங் டு லிவ் அ க்லோரியஸ் லைஃப்” - என்றும் ”நான் இருக்கேன், நீ பயப்படாம இரு” என்று உத்திரவாதம் கொடுத்து பொறுப்பெடுத்துக்கொள்பவர்கள் யாரேனும் இருப்பார்களா என்று உள்ளுக்குள் தேடியிருக்கிறேன். பிரச்சினைகளின்போது, 'Things are gonna be alright'...'everything is gonna be fine here'..என்று என்னை அமைதிப்படுத்த ஆற்றுப்படுத்த மனிதர்களைத் தாண்டி யாரையோ எதையோ எதிர்பார்த்திருக்கிறேன்.

உண்மையில், எனக்குள் இருந்த பயங்களை நானேதான் தின்று செரிக்க வேண்டியிருந்தது. என்னை நானேதான் ஆற்றுப்படுத்திகொள்ள வேண்டியிருந்தது. எனது தோல்விகளை, அவமானங்களை நானேதான் கடந்து வர வேண்டியிருந்தது. வாழ்க்கையின் குறுக்குரோட்டில் நின்றபோது எனக்கான திசைகளை நானேதான் தீர்மானிக்க வேண்டியிருந்தது. நான் செய்வது சரியா, சரியாகச் செய்கிறேனா என்றெல்லாம் குழப்பங்கள் வந்தபோது நானேதான் பட்டுத் தெளிய வேண்டியிருந்தது. உண்மையில் யாரும் யாருடனும் இல்லை, இருக்கவும் முடியாது என்று நானாகவே உணர வேண்டியிருந்தது. என் வாழ்க்கையில் நடக்கும் எல்லாவற்றிற்கும் பொறுப்பேற்க வேண்டியது நானேதான் என்ற முடிவுக்கும் வந்திருந்தேன்.

அந்த சமயத்தில்தான் எனக்குக் கிடைத்தது, எம் எஸ் உதயமூர்த்தியின் ”எண்ணங்கள்” புத்தகமும், அதைத் தொடர்ந்து ராபர்ட் ஷெல்லர் மற்றும் நார்மன் பீலே புத்தகங்களும். எல்லாம் தன்னம்பிக்கை டானிக்குகள்தான். பாசிடிவ் அப்ரோச்சை பைபிளின் மூலாதாரத்தைக் கொண்டு எழுதப்பட்டவை. இந்து மதமே பிடிக்காமல் இந்து மத அடையாளங்களையே வெறுத்த எனக்கு இது பிடித்திருந்தது.

முகிலுக்கு இறை நம்பிக்கை உண்டு. ஆனால், என்னை வற்புறுத்தியது இல்லை. I juz love the way he understands me. முகில் என்னை புரிந்துக்கொண்டதைப் போல வேறு யாராவதாக இருந்தால் புரிந்துக்கொள்வார்களா என்பது சந்தேகமே. இப்போதும், நான் ஆம்பூரிலிருந்ததைப் போலத்தான் இருக்கிறேன். இன் லாஸ்-களின் விருப்பத்திற்காக இருவரும் ஒருமுறை திருப்பதி சென்றதுண்டு. அதைத் தாண்டி, ஒன்றாகக் கோயிலுக்கெல்லாம் சென்றது இல்லை. ஊருக்குச் சென்றால் கண்டிப்பாகக் குடும்பத்துடன் குலதெய்வம் கோயிலுக்கு செல்வது வழக்கம். மாமியாரை புண்படுத்திவிடாமலிருக்க அங்கே சில காம்ப்ரமைஸ்களை செய்வதுண்டு. ( அவர் வைத்துவிடும் குங்குமத்தையும், பூஜைக்குப் பின் துப்பட்டாவில் வாங்கிக்கொள்ளச் சொல்லும் பூ,தேங்காய்,பழம்...முதலியன.)

நாங்கள் வாழும் வீட்டிலோ அல்லது வாழ்க்கைமுறையிலோ எந்த அடையாளங்களும், சம்பிரதாயங்களும் இல்லை. எந்த சம்பிரதாயங்களோ நம்பிக்கைகளாலோ கட்டிப்போட்டுக்கொள்ளாமல் ஃப்ரீயாக இருக்கப் பிடித்திருக்கிறது. இதே மனநிலை எப்போதும் வாய்க்கவே விரும்புகிறேன்.எல்லா நாட்களும் ஒன்று போலவேதான் விடிகிறது எங்களுக்கு. அம்மா அல்லது மாமியார் வந்தால் மட்டுமே பூஜை அலமாரி தூசு தட்டப்படும்.பப்புவும் அவர்களுடன் சேர்ந்துக்கொள்வாள். சொல்லப்போனால், ஒரு ரெகுலரான பூஜையை பப்பு இதுவரை பார்த்ததே இல்லை,நானும்தான். ஏன், சாமியின் பெயர் கூட அவளுக்கு இதுவரை தெரியாது. அம்மாவுடன் சேர்ந்து பாடல்கள் ('வாக்குண்டாம்....LoL') பாடுவாள். மாமனார் வந்தால் பப்புவை கோயிலுக்கு அழைத்துச் செல்வார். விபூதி /குங்குமத்தைப் பார்த்தால் வைத்துக்கொள்கிறாள். எதையும் நாங்கள் தடுப்பதுமில்லை. ஊக்கப்படுத்துவதுமில்லை. 'சாமி கண்ணு குத்திடும்' என்று சாமியை வைத்தும் பயமுறுத்தியதில்லை. என்னையே யாரும் அப்படி செய்யாதபோது நான் என் மகளுக்குச் செய்வேனா?ஒரு அவியல் ஃபேமிலியில் வளர்ந்த எனக்கும் எப்போதாவது கேள்விகள்/ குழப்பங்கள் எழுந்திருக்கிறது. (ஒருவேளை இதுதான் ஆன்மீகத் தேடலோ?) ' நான் ஏன் இந்த வீட்டுலே பொறந்தேன்' (ச்சே, பேசாம நாம் வேற வீட்டுலே பொறந்திருக்கலாம்டா, குட்டி!!)...'நிஜமா மறுபிறவி இருக்கா'...'இறந்த பிற்கு என்ன ஆவேன்' ..' எதுக்காக நான் பிறந்தேன்'... 'மனசு உண்மையா'..'மூளை உண்மையா'..'ரெண்டும் ஒண்ணா'..இல்லே 'உணர்வுகள்தான் நானா'... 'இந்த உணர்வுகள், நினைவுகள் மட்டும்தான் நானா'... 'ஏன் ஒரு சிலருக்கு வாழ்க்கை ரொம்ப ஈசியா இருக்கு..ஒரு சிலருக்கு வாழ்க்கையே பிரச்சினையா இருக்கு' - ஆனா இதுக்காக ரொம்பவெல்லாம் மெனக்கெட்டது இல்லே. வாழ்க்கையை புரிஞ்சுக்கிறது அவ்வளவு சுலபமா என்ன?

ஆயாவின் ஐந்து பிள்ளைகளுள் என் அம்மாதான் கடைசி. அம்மாவை உண்டான போது, ‘இது வேண்டாமெ'ன்று ஆயா மருந்து சாப்பிட்டாலும் மீறி பிறந்திருக்கிறார் அம்மா. (அதுதான் எங்கம்மா கலர் கம்மியானதுக்கு காரணமாம். LoL)

அப்படி பிறந்த அம்மா, என்னை பெற்றபோது “பொண்ணா” என்று என்னைப் பார்க்காமலேயே நிராகரித்து ஹாஸ்பிடல் வார்டைத் தாண்டிச் சென்றவர் என் அப்பாவழி தாத்தா.

25 வருடங்கள் கழித்து, அவர் என்னைப் பார்க்க வந்தபோது அவரை நான் நிராகரித்தேன்.

அப்பா இறந்தபிறகு, 'சொத்துகளில் பாத்தியதைக் கொண்டாட மாட்டேனெ'ன்று கையெழுத்து கேட்க வந்தவரை நிராகரித்து, 'கையெழுத்து போடமாட்டேன், ஆனால் அதே சமயம் சொத்துகளில் பங்கு கேட்கவும் மாட்டேனெ'ன்று சொல்லி அனுப்பினேன்.

'எவரும் எவருடைய வாழ்க்கையையும் தீர்மானித்துவிட முடியாது' என்றபடி தன்போக்கில் போய்கொண்டிருக்கிறது வாழ்க்கை!

”குத்துவிளக்காக,குலவிளக்காக” என்று முன்பு எழுதிய இடுகையில் 'வில் பப்பு ஃபாலோ அ ரிலீஜியன்', அதைப்பத்தி அப்புறம் பார்ப்போம்ன்னு எழுதியிருந்தேன். அதனை ஒட்டி எழுத வாய்ப்பளித்த தீபாவிற்கு நன்றிகள்! தொடர்வதற்கு நான் அழைக்கவிரும்புவது,

'ஆன்மீகச் செம்மல்' ஆயில்ஸ்
'அம்மன் எஃபெக்ட்' அமித்து அம்மா
நோயாளிகளின் பிணி தீர்க்கும் பூங்குழலி
என் செல்ல G3
சாமியாடிய சின்ன அம்மிணி
பதிவில் கண்ணாமூச்சு விளையாடும் தீஷுக்குட்டி

Saturday, April 10, 2010

லட்சுமணனின் "ஒடியன்"!


பதிவர் & சமூக ஆர்வலர் 'நாதாரி' லட்சுமணன் அவர்களின் “ஒடியன்” புத்தக வெளியீட்டு விழா நாளை இனிதே நடக்க அன்பும், வாழ்த்துகளும்! :-)

Thursday, April 08, 2010

குட்டீஸ் பென் ஃப்ரண்ட்ஸ்

சாயங்காலம் அலுவலகத்திலிருந்து நான் வந்தால் போதும்..கதவை திறக்க ஓடி வருவாள். உள்ளே நுழையும் முன், ”ஆபிஸிலே என்ன சாப்பிட்டே, லஞ்ச் பாக்ஸ்லே இருந்ததையெல்லாம் ஃபுல்லா சாப்பிட்டியா” என்று அவளிடம் விசாரணை நடப்பதுபோல என்னிடமும் விசாரணை நடத்துவாள். சென்ற வாரத்தில் ஒரு நாள் உள்ளே நுழைந்த என்னை கண்டுக்கொள்ளாமல், அவளது பையை எடுப்பதும் எதையோ எடுத்துப் பார்ப்பது பின் மறைத்து வைத்துக்கொள்வதுமாக இருந்தாள்.

'எனக்கும் காட்டு பப்பு, என்னது அது' என்றதற்கு 'நான் உன் ஃப்ரெண்ட் இல்ல, தேஸ்னா ஃப்ரெண்ட்” என்று மறைத்து வைத்துக்கொண்டாள். கலர்கலராக ஒரு பேப்பரில் ஏதோ வரைந்திருந்தது. ரொம்ப கேட்டால் ஓவராக பிகு பண்ணிக் கொள்வாள் என்று லூசில் விட்டுவிட்டேன். கொஞ்சநேரம் கழித்து 'நான் உனக்கு மட்டும் காட்டறேன், அப்பாக்கு கிடையாது' என்று சொல்லிவிட்டு காட்டினாள். ஒரு அட்டையில் கேட்டர்பில்லர், மரம், பூ, தென்னை மரம் என்று குட்டி குட்டியாக படங்கள் வரைந்து வண்ணங்கள் தீட்டப்பட்டிருந்தது. தேஷ்னா, பப்புவுக்குத் தந்ததாம் அது. அவங்க அப்பா வரைஞ்சதும் தேஷ்னா கலரடிச்சு பப்புவுக்கு கிஃப்ட் கொடுத்தாளாம்.

வீட்டிலிருக்கும் பழைய டைரிகள் எல்லாம் இப்போது பப்பு வசம். எழுதுவது, வரைவது, பெயிண்டிங் அப்புறம் கிழிப்பது என்று எல்லாவற்றும் எளிது. திடீரென்று பேப்பர் கேட்கும்போது தேடி அலைய தேவையில்லை. அன்றிரவு படுக்கையில் பார்த்தால் பாதி படுக்கையை டைரியிலிருந்து கிழித்த பேப்பர்கள் நிறைத்திருந்தது. டைரி முன் அட்டையும் பின் அட்டையுமாக இளைத்திருந்தது. 'பப்பு என்னது இது..ஏன் இப்படி கிழிச்சு வைச்சிருக்கே' என்றதற்கு நாளைக்கு தேஷ்னாவுக்கு தருவதற்கு இவள் வரைந்துக் கொண்டிருக்கிறாளாம். எல்லாவற்றிலும் ஏதேதோ கிறுக்கல்கள். பேனாவால், க்ரேயான்ஸ்-ஆல்... 'அய்யோ..இதை எப்போ க்லீன் பண்ணி எப்போ படுக்கிறது' என்று ஆயாசமாக இருந்தது.

”போதும்,எடு பப்பு” என்று கெஞ்சியதற்கு பிறகு பெரிய மனசு பண்ணி எல்லாவற்றையும் அடுக்கி வெளியே எடுத்துச்சென்றாள். அடுத்த நாள் காலை லஞ்ச்பாக்ஸ் வைக்க பையை திறந்தபோது அந்த பேப்பர் கட்டுகள் - கலை கல்வெட்டுகள் பையை நிறைத்திருந்தன. இரவு பையில் வைத்துச் சென்றிருக்கிறாள் போல.

இது இப்போது தினமும் நடக்கும் வழக்கமாகிவிட்டது. தினமும் ஏதாவது பேப்பர் கொண்டு வருவதும், இவள் ஏதாவது ஆர்ட் ஒர்க் செய்து எடுத்துச் செல்வதுமாக! எல்லாம் தேஷ்னா,சுதர்சன்,கீர்த்தி, அர்ஷித் கைலாஷ்-க்கு கொடுப்பதற்காம். க்ரூப் இப்போ பெரிசாகிடுச்சுன்னு நினைக்கிறேன். எதுவாக இருந்தாலும் எனது இந்த ஐடியாவிற்கு வித்திட்ட தேஷ்னாவிற்கு ஒரு தேங்ஸ்! :-)

இந்த ஐடியா ஒன்றும் புதிதில்லை. pen friends என்ற பெயரில் நமக்கெல்லாம் ஏற்கெனவே அறிமுகமானதுதான்.

இதே பேனா நண்பர்கள் தங்களது டிராயிங் மற்றும் பெயிண்டிங்குகள், வண்ணங்கள் மூலம் தங்கள் உலகை பரிமாறிக்கொண்டால் எப்படி இருக்கும்?
அதுவும் குட்டீஸ்?!

ஒரு கடிதமாக இருக்கலாம் அல்லது புதிதாக கற்றுக்கொண்ட வார்த்தையாக இருக்கலாம் ஏன் கதையாகக் கூட!

உங்களுக்கும் இந்த ஐடியா பிடித்திருந்தால் உங்கள் வீட்டிலும் பத்து வயதிற்குள் குட்டீஸ் இருந்தால் எனக்கு ஒரு மடலிடுங்கள். ”குட்டீஸ் பேனா நண்பர்கள்” என்று சப்ஜெக்டில் குறிப்பிட்டு, தங்கள் குழந்தையின் பெயர்,வயதுடன் மின்மடலிடுங்கள்.மேலும் , gender preference இருந்தாலும் தெரிவியுங்கள்.

அடுத்த வெள்ளிக்கிழமை வரை இந்த ஆஃபர் உண்டு. எத்தனை பேர் சேர்கிறார்கள் என்பதையும் குட்டீஸின் வயதைப் பொறுத்தும் கொண்டு மேட்ச் செய்து உரியவர்களிடம் தெரிவிக்கிறேன்.அப்புறம் என்ன..குட்டீஸ்-கள் டிராயிங்குகளை/
கடிதங்களை ஸ்கேன் செய்து மின்மடல் மூலம் பரிமாறிக்கொள்ளலாம்..அல்லது முகவரிகளைப் பெற்றுக்கொண்டு கடிதங்களாகவும்(surface mail) பரிமாறிக் கொள்ளலாம்..அது உங்கள் வசதி! என்ன சொல்றீங்க?

பதிவரின் குழந்தையாக மட்டுமே இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. வாசகரின் குழந்தையாகக் கூட இருக்கலாம். உங்களுக்கும் உங்கள் குட்டீஸுக்கும் இந்த ஐடியா பிடித்திருந்தால், டிராயிங்/கடிதங்களை அனுப்பவும் பெறவும் ஆர்வமிருந்தால் mombloggers@gmail.com என்ற ஐடிக்கு மடலிடுங்கள். அடுத்த சனிக்கிழமை அறிவிப்புகள் வெளியாகும்.

இன்னும் வேறு ஐடியாக்கள் இருந்தாலும் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

ஒன்றரை மாசம் லீவு..எப்படியாவது பொழுதை போக்கணும் இல்லே.. எது எப்படியாயினும், தேஷ்னாவுக்கும் பப்புவுக்கும் எனது அன்பும் நன்றிகளும்!
(Cross posted in ammaakalin valaipoo too!)

Wednesday, April 07, 2010

குப்புறபடுத்து குமுறவைக்கும் ஒரு யதார்த்த(!) முயற்சி

“பொறுப்பு பொறுப்பு”-ன்னு சொல்றாங்களே, அது உனக்கு கொஞ்சமாவது வந்திருக்கா?

”இத்தனை வருஷமா உயிர் வாழ்ந்து என்னத்தை சாதிச்சிருக்கே?”

”குறிக்கோளோட வாழணும்னு யாராவது சொல்லும்போதெல்லாம், அப்படின்னு ஒண்ணு இதுவரைக்கும் உனக்கு இல்லவே இல்லையே, அதை பத்தி கொஞ்சமாவது நினைச்சு பார்த்திருக்கியா”

”வளர்ந்து நான் அதுவா இருப்பேன்..இதுவா இருப்பேன்னெல்லாம் கனவு கண்டு எல்லாரையும் நம்ப(!) வைச்சியே, அதுலே எதுவாவது ஆகியிருக்கியா”

“என் பர்த்டே அன்னைக்குத்தான் வேர்ட்ஸ்வொர்த்தும் பொறந்தார்ன்னு சொல்லிக்கிறியே...வேர்ட்ஸ்வொர்த் அப்படி சொல்லிக்க முடியுமான்னு கொஞ்சமாவது யோசிச்சியா?”

-இப்படி முகத்திலறையும் (!) கேள்விகளை சில சமயங்களில் என்னை நானே கேட்டுப்பேன்...அந்த 'சில சமயம்' வருஷத்திலே ஒரு தடவைதான்னாலும் இந்தக் கேள்விகள் என்னை ரொம்ப ஃபீல் பண்ண வைச்சுடும்..

நேத்து சாயங்காலமும் அப்படி ஒரு சமயமாகி போனதுலே இப்படி கேள்வி கேட்டு குமுறிக் குமுறி ஃபீல் பண்ண வேண்டிய நேரமா போச்சு...ரொம்ப ஃபீலிங்ஸ்-னா உடனே படுத்துத் தூங்கிடறதுதானே என்னோட பழக்கம்...சோ, படுத்து தூங்கிட்டேன்...இந்த மாதிரி ஸ்டுப்பிட் கேள்விகளை கனவுலே கூட யாரும் என்னைக் கேக்கலை...

ஆனா, இன்னைக்குக் காலையிலே என்னை எழுப்பின ஃபோன் கால்கள், வந்த மெசேஜ்-கள் எல்லாம் ‘ச்சே..நீ அவ்ளோ யூஸ்லெஸ் இல்லே முல்லை'ன்னு நம்பிக்கைக் கொடுத்தப்புறம்தான் படுக்கையிலேருந்து எழுந்திருச்சேன்..(இல்லை...தூக்கத்தை கெடுத்திட்டீங்களே-ன்னு நான் திட்டவே இல்லை..;-) )

ஓக்கே...இப்போவரைக்கும் இந்த போஸ்ட் என்னன்னே தெரியாம படிக்கறவங்களுக்கு...ஒரு யூஸ்லெஸ் ஆளோட பர்த்டே இன்னைக்கு.. அதனாலேதான் இந்த கேவிக்கேவி கண்ணீர் வர வைக்கும் முயற்சி..:-)


பிறந்தநாள் கொண்டாடறதை எல்லாம் 16 வயசோட ஏறக்கட்டியாச்சுன்னாலும், காலேஜ்லே அதுக்கு வேற மீனிங் கிடைச்சது..நடுராத்திரி முகத்துலே
தண்ணியை கொட்டி எழுப்பி, கேக்கை முகத்துலே அப்பி,அதே போஸோட ஃபோட்டோ எடுத்து, என்னைத் தவிர மீதி எல்லோரும் ஹீரோயின் மாதிரி போஸ் கொடுத்து, தூங்கறவங்க எல்லாரும் பதறியடிச்சு எழுந்துக்கறா மாதிரி ‘ஹாப்பி பர்த்டே'ன்னு கத்தி..அதுக்கெல்லாம் பிராயசித்தமா ‘ட்ரீட்'ன்னு அனனிக்கு முழுக்க என் பர்சை காலி பண்ணி.... (‘இந்த பர்த்டே கொண்டாடறது எல்லாம் வேஸ்ட்..இதுலே என்னோட பங்கு ஒண்ணும் இல்லே..”ன்னு எவ்ளோ கதறி இருப்பேன்!!)


சில சமயம் பிறந்தநாட்கள் பற்பல நினைவுகளை கொண்டுவந்து விடுகின்றன இதுபோல...ஒருவேளை வயசாய்டுச்சுனா இப்படிதான் ஆகும்போல..'என்ன சேர்த்து வைச்சிருக்கே..என்ன சாதிச்சிருக்கே'-ன்னு !

அப்போதான் மனசுக்குள்ளே ஒரு சின்னக் குரல் 'குழந்தைங்க குழந்தைங்களா இருந்தா போதும்... குழந்தைங்கள்ளாம் என்ன பெரிசா சாதிக்கணும்'..

அந்த சின்னக்குரலுக்கு என் நன்றி! :-)


அதனாலே, வயசாகுதேன்னு ஃபீல் பண்ணலை...Because I am not. And probably, never will be.

Monday, April 05, 2010

அங்காடித் தெருவில் ஒரே மாதிரி ஆறு ட்ரெஸ்...

சாந்தி சின்னம்மா, ஆத்துக்கு போகும்போதெல்லாம் என்னையும் கூட்டிட்டு போவாங்க. இப்போவரைக்கும் நான் ரொம்ப நெருக்கத்திலே கால் வைச்சி விளையாடினதுன்னா சேத்தியாதோப்பு ஆறுதான். சின்னம்மா குளிச்சி, அன்னக்கூடையிலே இருக்கற துணியெல்லாம் துவைச்சு எடுத்துக்கிட்டு வர்ற வரைக்கும் நானும் ஆத்திலே விளையாடுவேன். அந்த ஆத்துலே இறங்கறதுக்கு நிறைய படிக்கட்டு இருக்கும்..அதுலே தண்ணிலே எந்த படிக்கட்டு வரைக்கும் தெரியுதோ அந்த படிக்கட்டு வரைக்கும் விளையாடுவேன்..அங்கே நிறைய குட்டி குட்டி மீன் வரும். சின்னம்மா நல்லா நீந்துவாங்க..அங்கே குளிக்க வர்ற எல்லா அத்தைங்களுமே நல்லா நீந்துவாங்க..திடீர்னு தண்ணிலே ஜிக்-ஜாக் மாதிரி தெரியும்..அது பாம்பாம். தண்ணிபாம்புல்லாம் ஒண்ணும் செய்யாதுன்னு சொன்னாலும் அதுக்காகவே இறங்க மாட்டேன்.

சாந்தி சின்னம்மாவுக்கு ரெண்டு பசங்க. அசோக்-ஆனந்த். அசோக்குக்கு என்னோட வயசுதான். செல்வம் சித்தப்பா வழியாதான் சின்னம்மா சொந்தம்..ஆனா, எனக்கு சின்னம்மாவைத்தான் புடிக்கும்.அதனாலே சின்னம்மாவைதான் முதல்லே சொல்வேன். செல்வம் சித்தப்பா குடிப்பார்ன்னு இளஞ்செழியனும், சுரேஷும் சொல்லியிருந்தாங்க. அதனாலே பயம். சாந்தி சின்னம்மாவுக்கு முடி நீளம் - எங்க அம்மா மாதிரியே. அவங்களை எல்லாரும் ‘கருப்பா இருந்தாலும் களையான முகம்'னும் ‘சிரிச்ச முகம்'ன்னும் சொல்லுவாங்க. நான் அஞ்சாவது வகுப்புக்கு வந்ததும் சேத்தியாதோப்புக்கு போய் தங்கறதுல்லாம் குறைஞ்சுடுச்சு.அவங்க எல்லாம் வடலூருக்கு வந்தா பார்க்கிறதோட சரி.


நான் செவன்த்துக்குப் போனப்போ சாந்தி சின்னம்மாவும், சித்தப்பாவும் ஆம்பூருக்கு வந்தாங்க. அசோக் ஆனந்த்லாம் வரலை. 'படிக்கற நேரத்துலே கதை புக் படிக்காதே'ன்றதுதான் நான் ஆயாக்கிட்டே வாங்கற திட்டா இருந்துச்சு. அன்னைக்கும் அப்படி சொன்னாங்க. சின்னம்மாவும், ‘ஆமாம்மா, படிக்கற பசங்களை கெடுக்கறதே இந்த கதை புக்தான்,அசோக் கூட இதேதான்'ன்னு சொன்னாங்க. அசோக் கோகுலம்-லாம் படிக்க மாட்டான். காமிக்ஸ் புக்ஸ்தான். எனக்கும் கொடுத்தான். ஆனா, எனக்குதான் புடிக்கலை..அதுலே எதை முதல்லே படிக்கணும், யார் சொல்றதை முதல்லே படிக்கணும்னு தெரியாம குழப்பமா இருந்துச்சு. வரிசையா படிக்கறதுக்கே தெரியலை..அதனாலே எனக்கு இண்ட்ரஸ்ட் இல்லே.


ஆங்..சித்தப்பாவும் சின்னம்மாவும் வந்தாங்க இல்லே..செல்வம் சித்தப்பா துபாய் போகப்போறாராம். அதை சொல்லிட்டு போறதுக்குத்தான் வந்தாங்களாம். சின்னம்மா-வோட அம்மா சேத்தியாதோப்புக்கு வந்துடுவாங்களாம். அதுக்கு அப்புறம், சின்னம்மாவை அந்த வருஷ பொங்கலுக்கு பார்த்ததோட சரி. ஆனா அசோக் எல்லா லீவுக்கும் ஆம்பூர் வருவான். அவனுக்கும் எனக்கும் சண்டைதான் வரும். ஏன்னா, அவனும் எங்க பெரிம்மாவை பெரிம்மான்னு கூப்பிடுவான்.அதனாலே எனக்கு பிடிக்காது. அவன் செய்றது எதுவும் எனக்கு பிடிக்காது.


ஒருநாள் சாயங்காலம் விளையாடிட்டு வந்தப்போ பெரிம்மாவை ஹால்லே காணோம். நுழையும்போதே பெரிம்மா பெரிம்மான்னுதான் ஓடி வருவேன்..தேடிக்கிட்டு ரூம் உள்ளே போகும்போது ஆயா 'சத்தம் போடாதே.. பெரிம்மாவுக்கு தலைவலி'ன்னு சொன்னாங்க. பெரிம்மா படுத்திருந்தாங்க. பெரிம்மா எப்பவும் - நாங்க தூங்காம படுக்கமாட்டாங்க. யாரும் பேசிக்காம வீடு ரொம்ப அமைதியா ஒரு மாதிரி இருந்தது. அப்படி இருந்தா, ஊர்லே ஏதோ நடந்திருக்கு இல்லேன்னா ஏதோ பிரச்சினைன்னு அர்த்தம். ஏன்னா, விஜயன் மாமா செத்துட்டாங்கன்னு போன்வந்தப்பவும் அப்படிதான் ரொம்ப அமைதியா இருந்துச்சு வீடு.


அடுத்தநாள்தான் தெரிஞ்சுது...செல்வம் சித்தப்பா துபாய்லே இறந்துபோய்ட்டாராம். போய் ஆறுமாசம்தான் ஆகியிருக்கு. ஹார்ட் அட்டாக்னு சொன்னாங்களாம்.வேற எதுவும் தெரியலையாம். அண்ணாதுரை சித்தப்பாதான் லெட்டர் போட்டிருந்தாங்களாம். என்ன பண்றதுன்னு எதுவும் தெரியலையாம். அப்புறம், மூணு மாசத்துக்குள்ளே பாடியை அனுப்புவாங்கன்னு சொல்லிகிட்டாங்க. எட்டாவது அரைபரிட்சை லீவுலே சாந்தி சின்னம்மா ஆம்பூருக்கு வந்தாங்க. இந்தவாட்டி ரொம்பநாள் வீட்டுலே இருந்தாங்க. யாராவது வீட்டுலே இருந்தா எனக்கு ஜாலி. ஆனா, சின்னம்மா முதல்லே கொஞ்சம் உம்ம்னு இருந்தாங்க..அப்புறம், என்கூட ஜாலியா பேச ஆரம்பிச்சுட்டாங்க. அவஙக்கூட டீவி பார்த்தா ஆயா ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. ஞாயித்துக்கிழமை சாயங்காலம் சினிமால்லா சின்னம்மா கூட பார்த்துஇருக்கேன். அதுலே ஒரு பழங்காலத்து ப்டம..ஒரே சோகம்.. அப்போ சின்னம்மா சொன்னாங்க..இதுக்கே இபப்டி சொல்றே, துலாபாரம்னு ஒரு படம் இருக்கு..பார்த்தா நமக்கே அழுகைவந்துடும். அவ்ளோ சோகமா இருக்கும்னு சொன்னாங்க..எனக்கு ஆச்சரியம்தான்..ஏன்னா சின்னம்மாவுக்கே லைஃப்லே எவ்ளோ சோகம் இருக்கு..அவங்க சினிமாவைப் பார்த்தா அழுவாங்களாம்!


அவங்க கும்பகோணத்துலே இருக்கிற ஏஜெண்ட் வழியாத்தான் சித்தப்பா போனாராம். இப்போ சித்தப்பா இறந்துட்டதாலே சின்னம்மா போக ட்ரை பண்றாங்களாம். நிறைய காசு கொடுத்திருந்தாங்களாம், அந்த ஏஜெண்ட்க்கு. அந்த ஏஜெண்ட்-டும் அனுப்பறேன்னு சொல்லியிருக்காராம். வீட்டு வேலைதான். சின்னம்மா அஞ்சாவது வரைக்கும்தான் படிச்சிருந்தாங்க. இன்னும் கொஞ்ச பேர் வரட்டும். பம்பாய்க்கு அனுப்பி அங்கேருந்து மொத்தமா துபாய்க்கு அனுப்பறேன்னு சொல்லியிருந்தாராம். பம்பாய்-க்கு போனாங்களாம் சின்னம்மா. அங்கே மூணு மாசம் வரைக்கும் தங்கி இருந்தாங்களாம். வேலை ஒண்ணும் இலலியாம். இன்னும் சில பொண்ணுங்கள்ளாம் இருந்தாங்களாம். எல்லாம் இதேமாதிரி வீட்டுவேலைக்குத்தானாம்.ஐம்பது அறுவது பேராவது சேரணுமாம்.அப்போதான் துபாய்க்கு அனுப்ப முடியும்னு சொல்லிட்டாராம் அந்த ஏஜெண்ட். அதுவரைக்கும் ஊருக்கு போய் இருக்க சின்னம்மாவுக்கு இஷ்டம் இல்லே. ஏன்னா, துபாய்க்கு போகப்போறேன்னு ஊர்லே சொல்லிட்டு இப்போ திரும்ப போறதுக்கு நல்லாயில்லை. அதனாலே ஆம்பூருக்கு வந்திருக்காங்க.


பம்பாயிலே ஒரே ரூம்லே இருவது பேர் தங்கணுமாம். இருக்கற ஒரே ஃபேன்லேருந்து காத்துக் கூட ஒழுங்கா வராதாம். கேட்டா இன்னைக்கு அனுப்பறேன், நாளைக்கு அனுப்பறேன்னு அந்த ஆள் சொல்லுவாராம். நிறைய பேரு குழந்தைகளை எல்லாம் விட்டுட்டு கூட வந்திருந்தாங்களாம். எல்லாருக்கும் வீட்டுக்கு லெட்டர் போடறதும், வீட்டுலேருந்து லெட்டர் வருதான்னு பாக்கறதும்தான் வேலையாம். கொஞ்சம் நர்ஸ் வேலைக்கு படிச்சவங்களும் இருந்தாங்க போல. ஆனா, அதிகமா வீட்டுவேலைக்குத்தானாம். அங்கே ஷேக்குங்க வீட்டுலே அவங்க சொல்ற வேலை செய்யணுமாம். அந்த ஷேக்குங்க ஏதாவது தப்பா நடந்துக்கிற மாதிரி இருந்தா அந்த வீட்டம்மாகிட்டே சொல்லிட்டா பாத்துப்பாங்களாம். எல்லாம் சின்னம்மா சொன்னதுதான். எனக்கு ஆச்சரியமா இருந்துச்சு. எப்படி வேற ஊருக்கு போய் வீட்டுவேலை செய்ற அளவுக்கு சின்னம்மா தைரியமாகிட்டாங்கன்னு. அதுவும் அந்த ஏஜெண்ட்கிட்டே சண்டை எல்லாம் போட்டிருக்காங்க!

ஒரு ரெண்டு மாசத்துக்குப்புறம் சின்னம்மா போய்ட்டாங்க. அப்புறம், நாங்க மறந்துட்டோம்.நடுவுலே கொஞ்சம் சொந்தக்காரங்க மட்டும், 'சின்னம்மாவை கும்பகோணத்துலே பார்த்தேன், பேசாம போய்டுச்சு'-ன்னும், 'அந்த ஏஜெண்ட் வீட்டுலேதான் இருக்குது'ன்னும் கதை கட்டிட்டு இருந்தாங்க்க.ஆனா, ஆயாவும் பெரிம்மாவும் இதைப் பத்தி எதுவும் பேசிக்கலை. ஆனா நாங்க அவங்களைப் பார்த்து ரொம்ப வருஷமாகிடுச்சு. ராமமூர்த்தி மாமா மட்டும், ‘என்னா தைரியம், கண்டிப்பா பாராட்டணும், படிக்காத ஒரு லேடிக்கு, அதுவும் ஒண்ணும் தெரியாத நாட்டுக்கு போகணும்னா எவ்ளோ தைரியம் வேணும்”னு ஆச்சரியமா சொல்லிக்கிட்டு இருந்தார்.

சின்னம்மா இப்போ என்னோட கல்யாணத்துக்கு முதல் வருஷம்தான் துபாய்லேருந்து வந்தாங்க. அதேமாதிரிதான் இருந்தாங்க. சிரிச்ச முகம், நீளமான முடி. இப்போ சேத்தியாதோப்புலேயே ஒரு மெஸ் வச்சு நடத்துறாங்க. அசோக், ஆனந்துக்கு கல்யாணம் ஆகிடுச்சு. அசோக் மட்டும் சேத்தியாதோப்புலேயே ஒரு கம்ப்யூட்டர் நடத்துறான்.எல்லோரும் இப்போ நல்லா இருக்காங்க.
நேத்து அங்காடி தெரு பார்த்தப்போ எனக்கு சின்னம்மா ஞாபகம்தான் வந்துச்சு. அதுவும் அந்த ஒரே ரூம் இல்லே..ஹால்லே அத்தனை பேரு படுத்துக்கிட்டு, சாப்பாட்டு இடத்துலே தட்டுக்கு அலைஞ்சுக்கிட்டு இருந்ததை பார்த்தப்போ...சின்னம்மா சொன்ன ஹாலை ஏனோ நினைச்சுக்கிட்டேன்.

வொர்க்கிங் வுமன்ஸ் ஹாஸ்டலே இருந்தப்போ எப்படித்தான் எங்களுக்கு அந்த ஐடியா வந்துச்சோ தெரியலை, ஆனா எல்லோருமே ஓக்கேன்னு சொல்லிட்டோம். ஒரே மாதிரி ட்ரெஸ் ஆறு பேரும் வாங்கிக்கலாம் - ப்ரெண்ட்ஷிப் டே-க்கு - அப்படின்றதுதான் அந்த ஐடியா. எங்கே கிடைக்கும்னதுக்கு கிடைச்ச ஒரே சாய்ஸ் - தி நகர்தான். அங்கே கிடைக்கலன்னா வேற எங்கேயுமே கிடைக்காதுன்னு வேற சொல்லி இருந்தாங்க.


ஒரு சனிக்கிழமை காலையிலே அங்கே போய் இறங்கி ஆல்மோஸ்ட் எல்லா கடையிலேயும் சல்லடை போட்டு சலிச்சிட்டோம். ஒரே மாதிரி ஆறு ட்ரெஸ் கிடைக்கவேயில்லை. அப்படியே இருந்தாலும், சைஸ் எல்லாம் குழந்தைங்க, ஸ்கூல் பொண்ணுங்க, பெரியவங்க ன்னு வேற வேற சைஸ்லேதான் கிடைச்சது. அதுக்காக நாங்க அந்த கடையிலே இருந்தவங்களை படுத்தினது கொஞ்சம் நஞ்சம் இல்லே. முதல்லே சுடிதார் வேணும்னு கேக்க வேண்டியது, அப்புறம் ஒரே மாதிரி ஆறு ட்ரெஸ் வேணும்னு சொல்ல வேண்டியது, அவங்க உடனே அந்த இன்சார்ஜ்-ஜை கூப்பிட்டு சொல்லுவாங்க, 'சார், ஆறு ட்ரெஸ் ஒரே மாதிரி வேணுமாம்'னு.

உடனே அவர் , ஒரு 'பொடன்சியல் கிளையண்ட் ட்ரீட்மெண்ட்' எங்களுக்குக் கொடுப்பார். அப்புறம், 'உள்ளே போய் எடுத்துட்டு வாம்மா'ன்னு யாரையாவது அனுப்புவார். சில இடத்துலே, அடுத்த தெருவுலே இருக்கற குடோனுக்கு அனுப்பி பார்த்துட்டு வரச் சொல்லுவாங்க. அப்படில்லாம் அலைய வைச்சு, நாங்களும் அலைஞ்சு கடைசிலே ஒருகடையிலே 'அடுத்த வாரம் வாங்க, கண்டிப்பா நீங்க கேக்கற மாதிரி கிடைக்கும்'னு சொன்னாங்க.

எப்படி ஃப்ளாட்பார்ம்லே ட்ரெயினைப் பார்த்தாலே வீட்டுக்குப் போய்ட்ட சந்தோஷம் கிடைக்குமோ அதே மாதிரி எங்களுக்கு அப்போவே ட்ரெஸ் கிடைச்ச சந்தோஷமும், ஒரே மாதிரி போட்டுக்கப் போறோம்னுதான் இருந்ததே தவிர சேல்ஸ் பீபிள் அலைச்சலையோ இல்லேன்னா மத்த கடையிலே கடையையே புரட்டிபோட்டுட்டு வாங்காம வந்தப்போ அவங்க படற கஷ்டத்தையோ நாங்க நினைச்சும் பாக்கல. அப்புறம் கொஞ்ச நாள்லே ரங்கநாதன் ஸ்ட்ரீட் மேலே இருந்த க்ரேஸ் போய்டுச்சு... அங்கே போய்ட்டு வந்தா அன்னைக்கு ஃபுல்லா செம தலைவலி வந்துடும் எனக்கு.


ஆனா, இந்த குட்டி குட்டி திங்ஸ் வாங்கற சந்தோஷம் இருக்கே.. குட்டி குட்டி பர்ஸ், டிசைன் டிசைனா ஹேர் பாண்ட் எல்லாம் எங்களுக்குன்னு இல்லே.. நல்லாருக்குன்றதுக்காகவே வாங்கியிருக்கோம். அதாவது, அவசியமே இல்லேன்னாலும், ' கடையிலேயே விட்டு வர்றதுக்கு மனசேயில்ல'ன்னு ஒரு காரணத்தைக் கண்டுபிடிச்சு அதுக்காக வாங்குறது.. அப்புறம், யாராவது நல்லாருக்கு சொன்னா அதை அவங்களுக்கு கிஃப்ட் பண்றது....

சற்றும் மனந்தளராமல் அடுத்த வாரமும் போனதில் ஒரே மாதிரி ஆறு ட்ரெஸ் கிடைச்சுடுச்சு. அன்னைக்கு காலையிலே நாங்கதான் ஃப்ர்ஸ்ட் கஸ்டமர்ஸ். கடையெல்லாம் திறக்கறதுக்கு முன்னாடியே போய்ட்டோம். அப்போதான் செந்தில் முருகன் ஸ்டோர்ஸ் வாசல்லே எல்லாரும் யூனிஃபார்ம் போட்டுக்கிட்டு கும்பல் கும்பலா நிக்கறதைப் பார்த்தோம். நானும் லதாவும் கூட அங்கே ரெண்டு தடவை போயிருக்கோம். நம்ம பேக்கை வாங்கி அவங்க கேரிபேக் போட்டு தந்துடுவாங்க. அது எங்களுக்குப் பிடிக்கவேயில்லை. ஆனா, அங்கேதான் சீப்பா கிடைக்கும்னு ஹாஸ்டல்லே சொல்லுவாங்க. இந்த 'எம்பி எம்பியே' படிச்சவங்க இருக்காங்களே, "மத்த ஷோரும்லேல்லாம் விலை குறைக்க மாட்டாங்க.. இவங்க Strategy- யே வந்து பொருட்கள் மூவிங்க்லே இருக்கணும், விலை குறைச்சாலும் பரவால்லே.. அதுதான் செல்லிங் டெக்னிக்'ன்னு அலசி ஆராய்வாங்க...

ஏதாவது ஒரு ஃபெஸ்டிவல் கண்டுபிடிச்சு அதைக் கொண்டாட காரணமும் கண்டுபிடிச்சு கலர் கலர் பலூனை தோரணம் கட்டி பளிச்-னு இருக்கற பில்டிங்லே வேலை செய்றவங்களோட வொர்க்கிங் அட்மாஸ்ஃபியர்...அவங்க ஒவ்வொருத்தரோட குடும்ப பின்னணி...


ஆனா, ஒரு சில காட்சிகள், சில கேரக்டர்கள் - இன்னும் மனசை விட்டு அகலாம... இல்லேன்னா டயலாக்கோட ஒலிச்சுக்கிட்டே இருக்கு.

குப்பை பொறுக்கற தாத்தா, உடம்பெல்லாம் வாட்ச் மாட்டிக்கிட்டு விக்கிறவர், கர்சீஃப் விக்கிற கண்ணு தெரியாத தாத்தா, பத்து ரூபா டீ சர்ட்.... (ஆதம்பாக்கம்லே பறக்கும் ரயிலுக்கு தூண் கட்டிக்கிட்டு இருக்காங்க. ஆறுமாசம் முன்னாடி வரைக்கும் யாருமே இல்லாத அந்த ரோடுலே தூண்கள் கட்டி வாகனங்கள் போக வர ஆரம்பிச்சதும்.. அங்கே முளைச்ச தர்பூசணி கடை, இளநீர் கடைகள்..ஆச்சரியமாயிருந்துச்சு..எப்படி மக்கள் வாழ்க்கையை நடத்துறதுக்கு வழி கண்டுபிடிக்கறாங்கன்னு!)

'அப்பா இல்லாதவனா, அக்கா தங்கச்சி இருக்கறவனா பார்த்து எடுத்தாதான் வாயை மூடிகிட்டு வேலை செய்வான்'- என்று தேர்வு நடத்திட்டு அவர்கள் கடைக்கு முதல்முதலாக வந்திறங்கும் போது - 'எச்சிக்கையை நீட்டினா ஆயிரம் காக்கா, நம்ம ஊர் பசங்கன்னுதான் உங்களை இங்கே சேர்த்திருக்கோம்,ஒழுங்கா வேலை பாக்கணும்,புரியுதா'ன்னு அண்ணாச்சி கேக்கறதும், பசங்க எல்லாம் 'புரியுது அண்ணாச்சி'ன்னு தலையாட்டறதும்...

அந்த பப்ளிக் டாய்லெட்லே மூக்கைப் பொத்திக்கிட்டு அருவெறுப்போட நுழைஞ்ச அந்த ஆளுக்கு ஐடியா பொறிதட்டும்போது அவர் முகத்திலே தெரியற லேசான புன்னகையும்... ப்ளஸ் எக்ஸ்பிரஷனும்!

'சிமெண்டை கால்லே பூசிக்கிட்டு படுங்க'-ன்னு நடைபாதையிலே படுக்கும்போது ஒரு தாத்தா சொல்வாரே..

நாகம்மை அஸ்சாம் போகும்போது கனிகிட்டே, ' நான் இருந்துகிடுவேன்க்கா, நான் உன்னை மாதிரிக்கா, தைரியமாயிருப்பே..'

என்னோட ஹாஸ்டல் ரூம்மேட் ஷைனி அக்காவோட தங்கையை நாங்க காலேஜ் ஹாஸ்டல்லே சேர்க்கப்போயிருந்தோம். அந்த ஹாஸ்டலைப் பார்த்துட்டு அக்கா அவங்க தங்கச்சிக்கிட்டே கேட்டப்போ அந்தப் பொண்ணு மேலே இருக்கற வசனத்தைத்தான் சொல்லுச்சு.ஷைனி அக்காதான் அப்பா இல்லாத அவங்க குடும்பத்தை கவனிச்சிக்கிட்டு தங்கச்சிங்களையும் படிக்க வைச்சாங்க.

நாகம்மையை பார்த்தப்போ எனக்கு ஷைனி அக்காவும் அவங்க தங்கச்சியும்தான் கண்லே தெரிஞ்சாங்க!

இன்னொரு மறக்கமுடியாத சீன், அந்த குட்டிப்பொண்ணு பையை வாங்கிட்டு ஓடி வர்றது...

நாகம்மைக்கு மாதிரி என்னை ரொம்ப டிஸ்டர்ப் செஞ்சது, செல்வராணி...

'கனியிருப்பக் காய் கவர்ந்தற்று' - செம..

பளிச்சுனு கலர்லே புடவை கட்ட சொல்லி அண்ணாச்சி சொன்னதும், கூட இருக்கற ஜால்ராஸ், 'அடுத்த படம் நீங்களே டைரக்ட் செஞ்சுடுங்க'-ன்னு ஐஸ் வைக்கறதும்.. அண்ணாச்சி அதை பெருமையா(!) ஃபீல் பண்ணி விளம்பர டைரக்டர்கிட்டே சொல்லி சிரிச்சுட்டு (இதே சீனை எத்தனை வாட்டி ரியல் லைஃப்லே பார்த்திருப்போம்) 'அடுத்தவங்க வாழ்க்கையிலே மண்ணள்ளி போட மாட்டேன்'ன்னு சொல்றதும்...


கனி ரோஷத்தோட லிங்குவை சட்டை செய்யாம இருக்கும்போது, கனியோட ஹாஸ்டலுக்கே வந்து சந்திச்சு பேசுவான். கனி கொஞ்சம்கூட இறங்கி வராதபோது, பளார்ன்னு கன்னத்துலே அறைவான். என்னதான் அதிகாரமேயில்லாத நிலையில் இருக்கிற கதாநாயகனுக்குக் கூட கதாநாயகியை அறைஞ்சுதான் ஆம்பிளைத்தனத்தை காட்டிக்க வேண்டியிருக்கு... ஒருவேளை இதுவும்தான் யதார்த்தமோ..என்னவோ!


கிளைமாக்ஸ்லே கனிக்கு கால் போனது சினிமாதானேன்னு அப்படின்னு தோண வைச்சுடுச்சு.. அந்த வடபழனி விபத்து உண்மையானதா இருந்தாலும். அப்புறம், அந்த தெரசா படம்லாம் காட்டி ஒரு பாட்டு - அதெல்லாம் இல்லாமலே இந்த படம் மனசை தொடற மாதிரிதான் இருக்கு.

இன்னும் சில கடைகளிலே ஒவ்வொரு தளத்துலேலேயும் கேமிரா இருக்குமாம். யார் யார் எப்படி வேலை செய்றாங்க, என்ன செய்றாங்கன்னு கவனிக்கறதுக்கு. ஒரு ரூம்லே உட்கார்ந்துகிட்டு அதை ஒருத்தர் பார்த்துக்கிட்டே இருப்பாராம். எல்லாம், 'கஸ்டமர் சர்வீசு'க்காகத்தான் சொல்லிக்கிட்டாலும் இப்படி ஒவ்வொரு நிமிஷமும் கண்காணிக்கறது - மனித உரிமை மீறல்னுதான் தோணுது...

கவர்மெண்ட் ஆபிஸிலே இது மாதிரி செஞ்சா என்ன ஆகும்?!

Friday, April 02, 2010

காப்பியும் கட்டாயக்கல்வியும்

வழக்கம்போல, ஆயாவின் டவாலியை மாட்டிக்கொண்டு கூடவே நடக்கிறேன். ஆயாவின் ட்ரேட் மார்க் - ஒரு குடும்பமே செல்லக் கூடிய கருப்பு குடை. அந்தக் குடைக்குள் செல்வது எனது கௌரவத்துக்கு இழுக்கு என்பதுபோல நான் தனியாக நடக்கிறேன். வடலூர் வரும்போதெல்லாம் ஆயாவோடு நெய்வேலி ட்ரஷரி-க்குச் சென்று வருவது வழக்கம். பெரும்பாலும் நானும் இளஞ்செழியனும் தான் ஆயாவுக்கு உதவியாளர்கள். அன்றைக்கு நான் மட்டுமே. ஆயாவோடு வடலூரில் நூறடி நடந்தால் நான்கடிக்கு ஒரு முறை ப்ரேக் போட வேண்டி இருக்கும். தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், அறிந்தவர்கள், அறியாதவர்கள் என்று வடலூரில் சகலரையும் ஆயாவுக்குத் தெரியும். சகலருக்கும் ஆயாவைத் தெரியும். ‘மக வயித்து பேத்தியா' என்று என்னைப் பார்த்து ஒரு கேள்வியும் தொக்கி நிற்கும்.

அப்படி, அன்றைக்குத் தானாகவே வந்து சிக்கினார் ஒருவர். டிசைன் டிசைனாக போட்ட சட்டை, கரிய உடலோடு, இடுப்பில் துண்டு போல வேட்டி, கையில்- கழுத்தில் சிலபல மணிகள், சிங்கப்பல் டாலர் வைத்த கயிறு கழுத்தில். ‘டீச்சர்' என்று கூப்பிட்டு ஆயாவைப் பார்த்து கைகளைக் குறுக்காக கட்டிக்கொண்டார்.
ஆயா என்ற ஆலமரம் அந்த பட்சியைக் கண்டுக்கொண்டு ”அட, காப்பி ” என்றது. குசலங்கள் - நல விசாரிப்புகளுக்குப்பின், அவருக்கு நாலு குழந்தைகள், நெய்வேலியில் இருக்கிறார் என்ற செய்தியைத்தாண்டி கிளம்புமுன், காப்பி கரகரத்த குரலில் சொன்னார், “ஏன் டீச்சர், என்னை அன்னைக்கே நீங்க அடிச்சு பள்ளிக்கூடத்துக்கு துரத்தியிருக்கலாம் இல்ல, இன்னைக்கு நான் இவ்ளோ கஷ்டப்பட்டிருக்க மாட்டேனே,நானும் நல்லா இருந்திருப்பேனே!” . மனதை அறுத்துக்கொண்டிருக்கிறது இன்னமும் அந்தக் குரல்.

“நான் தலப்பாடா அடிச்சுக்கிட்டேன், இப்போ வருத்தப்பட்டு என்ன புண்ணியம், உன் பசங்களையாவது நல்லா படிக்க வை, படிப்புதான் எல்லாம் ” என்று ஆயா சொன்னபிறகு வீடு நோக்கி நடக்கத்துவங்கினோம். கொஞ்ச தூர மௌனத்திற்குப் பிறகு , வழியில் ஆயா சொன்னது :

தாத்தா விறகுக்கடை வைத்திருந்தபோது காப்பியின் பெற்றோர்தான் விறகு வெட்டவும்,கடையில் உதவியாகவும் இருந்தார்கள். காப்பிக்கு அப்போது ஆறு வயது. ஆயா, வள்ளலார் குருகுலத்தில் (வடலூரின் ஆரம்பப்பள்ளி)வேலை செய்துவந்தார். காப்பியை குருகுலத்தில் சேர்த்துவிடவும், மிட்டே மீல்ஸூக்கு ஏற்பாடு செய்வதாகவும் கூறியிருக்கிறார். காப்பிக்கு படிப்பில் நாட்டமில்லாததால், தொடரவில்லை. கொக்கு குருவி சுடுவதும், ஊரைச் சுற்றுவதுமாக நாட்களைக் கழித்துவிட்டு இப்போது பிழைப்புக்கே கஷ்டப்படுகிறார்.

காப்பி என்றில்லை...வடலூரில் மெயின் ரோட்டில் வரிசையாக இருக்கும் ஒவ்வொரு புளியமரத்தினடியிலும் வசிக்கும் நரிக்குறவ குடும்பத்து பிள்ளைகளின் கதை இதுதான். அதே வழியில், எல்லோரும் பள்ளிக்குச் செல்லும்போது இவர்கள் விறகுகள் பொறுக்கிக்கொண்டோ அல்லது காக்கா,காடை சுட்டுக்கொண்டும் சாயங்கால வேளைகளில் ட்ரான்ஸிஸ்டரில் பாட்டுக்கேட்டுக்கொண்டோதான் நாட்களைக் கழிப்பார்கள். எங்கோ ஒரு சிலர் மட்டும் பட்டதாரியாகி செய்தித்தாள்களில் இடம் பிடிக்கிறார்கள்.

பொங்கல்,மாட்டுப்பொங்கல் எல்லாம் முடிந்து காணும் பொங்கலன்று - பெண் குழந்தைகள் எல்லாம் தாழம்பூவால், சாமந்தியால் வாழைமட்டை சடை தைத்து மேக்கப் எல்லாம் போட்டுக்கொண்டு அங்கேயும் இங்கேயும் நடை பயில் ஆரம்பிக்கும் நேரத்தில், ப்சங்கள் எல்லாம் கடைத்தெருவிற்கும், மைதானத்திற்குமாக சைக்கிளை எடுத்துக்கொண்டு அலைந்துக்கொண்டு இருக்கும்நேரத்தில் வாசலில் குரல் கேட்கும். கொட்டாய்க்கு முன்னால், வாசலுக்குத் தள்ளி ஒடுங்கிய தோற்றத்துடன் ஒருவர் ”ஐயா” என்றோ ”வாத்யாரே” என்றோ கூப்பிடுவார்.

யார் முதலில் போய் பெரியவர்களை கூப்பிட்டு வருகிறார்களென்று போட்டியில் மாமா , பெரிப்பா என்று கத்திக்கொண்டு ஓடுவோம். 'உள்ளே வாங்க' என்று அக்காக்கள் யாராவது கூப்பிடுவார்கள். கரிய உடம்பு. தண்ணீரை கண்டு பல வருடங்களான கோவணததை, வேட்டியா அல்லது துண்டாவென்றே தெரியாமல் இடுப்பில் இருக்கும் ஒரு துணி. கொட்டாயில், தூணுக்கு ஓரத்தில் குத்தவைத்து உட்கார்வார். இடுப்பில் இருக்கும் துணியில், இவ்வளவு நேரம் இருந்ததாவென்றே தெரியாமல் இருக்கும் வெற்றிலையை சுண்ணாம்பைக் கிள்ளி வாயில் அடக்கிக்கொள்வார். நாங்கள் எல்லாம் வினோதமாக அவரையே பார்த்தபடி இருப்போம். ஒருநிமிடம்தான். அப்புற்ம், 'ஹோ' வென்ற கூச்சலுடன் விளையாட்டு தொடங்கும்.


அம்மாவோ, அத்தையோ கொடுக்கும் தண்ணீரை வாங்கிக் தூக்கிக் குடித்துவிட்டு கீழே வைப்பார். மாமா வந்து சட்டைப்பையை எடுத்துவரச்சொல்லி ரூபாயை கொடுப்பார். “என்னா வாத்யாரே” என்றதும் “எல்லாம் சரி வரும், சரி வரும்..”என்று மாமா சொன்னதும் தலையைச் சொறிந்துக்கொண்டு நிற்பார். ஆயாவும் தன்பங்குக்கு கயிற்றுக்கட்டிலில், தனது தலைகாணிக்கு அடியிலிருக்கும் பையை துழாவி நாணயங்களைக் கொடுப்பார்.

மறக்காமல், ஆயா கேட்கும் கேள்வி, ”காத்தான், எத்தனை பசங்க” அப்புறம் ”என்ன படிக்குது”. அவர் பேசுவது அப்போது என்னால் புரிந்துக்கொள்ள முடியாதிருந்தது. 'எல்லாம் சும்மாதான் சுத்திட்டு இருக்குதுவோ '- என்பதுபோலத்தான் பதிலிருக்கும். இன்றுவரை, அவர்கள் அப்படியேதான் பொங்கலின்போது வந்து காசு வாங்கிச் செல்கிறார்கள். என்ன, வேட்டி சட்டை முழுவதுமாக அணிந்திருக்கிறார்கள். அவர்கள் யாரென்று சொல்லவில்லையே.. அவர்களை, வெட்டியான்களென்று மாமா சொன்னார்.

காப்பியும்,காத்தானும் இருபது வருடங்களுக்கு முன்பானவர்களென்றாலும் நிலைமை ஒன்றும் மாறிவிடவில்லை. சின்னமலை பஸ் ஸ்டாப்பிற்கு அருகில் மேலே கூடாரம் போல கட்டி செருப்புத் தைத்துக்கொண்டிருப்பார் அந்த தாத்தா. ஓரிரு முறை அவரிடம் செருப்புகளை செப்பனிட்டும் இருக்கிறேன். சில வருடங்கள் இடைவேளைக்குப் பிறகு பார்த்தபோது அந்தக்கடையில் பதினைந்து வயது மதிக்கத்தக்க சிறுவன் செருப்புத் தைத்துக்கொண்டிருந்தான்.

அம்மா வேலை செய்வது குள்ளஞ்சாவடி என்ற குக்கிராமத்திலிருக்கும் பள்ளிக்கூடத்தில். எட்டாவது வரை இருக்கும் அந்த பள்ளிக்கூடத்தில் எத்தனை பேர் இருப்பார்களென்று நினைக்கிறீர்கள்? மொத்தம் 200 பேர். மூன்றே ஆசிரியர்கள். அந்த பள்ளிக்கூடத்திற்கு போஸ்டிங் போடுபவர்களெல்லாரும் ஒன்று ட்ரான்ஸ்ஃபர் வாங்கிச் சென்று விடுவார்கள் அல்லது காசு கொடுத்து வேறு இடத்திற்கு மாற்றல் வாங்கிச் செல்வார்கள். யாருக்கு வீடு அருகிலிருக்கிறதோ..அவர்கள் மட்டுமே ஜாயின் செய்வார்கள். பிள்ளைகளைக் கண்டிப்புடன் நடத்தும் வாத்தியாராக இருந்தால் கொஞ்சம் பயத்தோடுதான் காலந்தள்ள வேண்டியிருக்கும். ஏனெனில், ஏதாவது ஒரு குழந்தை பள்ளிக்கு போக மாட்டேன்று வீட்டில் அழுதால், அந்த ஆசிரியர் போகும் வழியிலோ அல்லது அடுத்தநாள் பள்ளிக்கூடத்திலோ ஒரு கும்பல் அரிவாளோடு வந்து மிரட்டிவிட்டு போகும்.

கல்வியை அடிப்படை உரிமை என்று சட்டமாக்கியிருப்பது பெற்றோர்களையும், சிறார்களை பணிக்கமர்த்துபவர்களையும் கொஞ்சம் பயமுறுத்தலாம். பள்ளிகூடத்திற்கு வரும் பிள்ளைகளின் எண்ணிக்கையைக் கூட்டுமா என்பது தெரியவில்லை.ஆரம்ப வகுப்புகளில் முப்பது முதல் நாப்பது வரை இருக்கும் மாணவர்களின் வருகை ஐந்தாம் வகுப்பிற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கும். எட்டாம் வகுப்பில் மொத்தம் பத்தோ பதினைந்தோ பேர்தான் தேறுவார்கள். இதற்கு முதல்காரணம் வறுமை. மற்றும் அறியாமை. 'பொம்பளை புள்ளை படிச்சு என்ன பண்ணப்போகுது,எங்கூட வேலைக்கு வந்தா கஞ்சியாவது குடிக்கலாம் என்ற எண்ணமும். நிறைய, பஞ்சாயத்து யூனியன் பள்ளிகளில் ஆசிரியர் பணிகளுக்கான் இடங்கள் காலியாகவே இருக்கின்றன. அவைகளை நிரப்பாமல்,வறுமையைப் போக்க வழிவகைகள் செய்யாமல் வெறும் சட்டத்தின் மூலம் காப்பிகளின்/காத்தான்களின் வாழ்வை மாற்றுவது எவ்வளவு சாத்தியம் என்று தெரியவில்லை.