Wednesday, March 31, 2010

If people from Poland are called Poles,

... why aren't people from moscow called mosquitoes?!

"நீ, அமுதா ஆன்ட்டியை என்னன்னு கூப்பிடுவே?
"

"அமுதா-ன்னு "

"ஏன்?"

"அவங்க என் ஃப்ரெண்டு!"

"அப்போ வர்ஷினி உனக்கு ஆன்ட்டியா?" - பப்பு

Tuesday, March 30, 2010

பதிவர் வீட்டு...

...கட்டுத்தறியும் பதிவெழுதும்-ன்னு சங்க(த்துத்!) நூலிலேயே சொல்லியிருக்கும்போது பதிவரின் கணவர் எழுதாம இருப்பாரா?

இந்த மாதத்தில் வந்த முக்கியமான நாளுக்காக முகிலுக்கு என்ன பரிசுக் கொடுக்கலாம்னு யோசிச்சேன். முகிலுக்கு வாழ்க்கை கொடுத்திருக்கிறேனே.. அதை விட பெரிய பரிசு என்ன இருக்க முடியும்-ன்னு தோணினாலும், ‘நாம நினைக்கறதைவிட மத்தவங்க விருப்பப்படறதை நிறைவேத்தறதுதான் நாம கொடுக்கற பரிசு'ன்னு நான் பார்த்த தமிழ்சினிமா கத்துக்கொடுத்ததாலேயும் - இன்னைக்கு, Guest post by Mugil! :-)


இன்றைய(ஹிஹி..முகில் இதை எழுதினது ரெண்டு நாள் முன்னாடி) தினமணியில் படித்த செய்தி: செல்போன் வைத்துள்ள விவசாயிகளுக்கு வானிலை மாற்றம் குறித்த விவரம் எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படும் என்று, சென்னை மண்டல வானிலை மைய துணை இயக்குநர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

விவசாயி என்ன சொல்லவரார் தெரியுமா? விவசாயத்திற்கான மின்சாரம் கிடைக்கல! SMS மூலம் வானிலை தகவலா? முதல்ல மொபைல சார்ஜ் பண்ண மின்சாரம் குடுங்கடா!!

எது எப்படியிருந்தாலும் நம் தமிழக அரசுக்கு பட்ஜெட்டில் செலவுகணக்கு காட்ட இதுபோல இன்னும் சில யோசனைகள் கீழே!

1) மாடு மேய்ப்பவர்களுக்கு இமெயில் மூலம் தொலைந்த மாடை கண்டுபிடிக்க உதவி

2) டாஸ்மாக் குடிமகன்களுக்கு வழிகாட்ட கூகிள் மேப் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

3) மீனவர்கள் சர்வதேச எல்லையை தாண்டாதிருக்க நடுக்கடலில் சாக்பீஸால் கோடுகிழித்தல்

4) சாமியார்களை கவனிக்க சன்டிவி / நக்கீரன் கேமராவுடன் ஒப்பந்தம்

5) எதிர்க்கட்சி MLA-க்கள் தம் தொகுதி பற்றி சட்டசபையில் பேச நிதியுதவி

6) இலங்கை தமிழருக்காக பிரதமர், சோனியாஜி & பிரதிபாஜிக்கு கடிதசெலவு

7) ரேஷன் பொருட்கள் வெளிமாநிலங்களுக்கு செல்லாமலிருக்க அரிசிவாரியாக பூட்டு

8) அமைச்சர் பெருமக்கள் கல்வி சேவைசெய்ய இலவச பொறியியற்கல்விக்கூடம்

9) புவிவெப்பமாவதை தடுக்க வீட்டிற்கோர் AC திட்டம்

10) தடங்கலற்ற மின்வசதி பெற போன் கம்பெனி டவர்மூலம் மின்விநியோகம்

11) கள்ளவோட்டு பிளாக்கர்களுக்கு தனி நீதிமன்றம்

ஆகா..ஓகோ-ன்னு பாராட்டி உடனே தனிப்லாக் ஆரம்பிக்கற தைரியத்தை முகிலுக்குக் கொடுத்துடாதீங்க நண்பர்களே! :-)

Monday, March 29, 2010

இலைகளின் மறுபக்கம்


மனிப்லாண்ட்,வேப்பஇலை, சீதாப்பழ மரத்தின் இலை, சில க்ரோட்டன்ஸ் இலைகளின் மறுபக்கம் - இலைகளின் நரம்புகளை தெளிவாகக் காணலாம்.(இந்த ரெண்டு தாள்தான் பாக்கற மாதிர் இருக்கு!)

என்ன, கை-கால்களில், போட்டிருக்கும் உடையில், சமயங்களில் சுவற்றிலும் விரல் ரேகைகள் படிந்து இருப்பது போன்ற பக்க விளைவுகளை பொறுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்! :-)

Saturday, March 27, 2010

இனிஷியலைப் பற்றி இனிஷியலாக...

சமீபத்தில் எனது நண்பரைச் சந்தித்தேன். அந்தத் நண்பரின் தந்தை ஒரு ஆராய்ச்சியாளர்- வீட்டில்தான். ஒவ்வொரு முறை போகும்போதும் வீட்டில் புதிதாக ஏதேனும் எலெக்ட்ரிக் உபகரணம் இருக்கும்..அவரே வடிவமைத்தது.
வீட்டில் ஸ்விட்ச்கள் இல்லாத சுவரே இல்லாத அளவுக்கு. அவரது உருவாக்கங்களை பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.அப்போது நண்பர் சட்டென்று, "எங்கப்பா படைச்சதுலேயே சிறந்தது எதுன்னு நான் சொல்லட்டுமா" என்ற ஆரம்பித்தபோது ஆர்வமானோம். என்னது..என்னது என்று சொன்னது சிரிப்புடன் சொன்னார், "மிகச் சிறந்த படைப்பு நாந்தான்!" அவர் விளையாட்டுக்காக சொல்லியிருந்தாலும் - பதிவுலகில் காணக்கிடைக்கும் சில வாசகங்கள் நினைவுக்கு வந்தது. “இனிஷியல் இல்லாதவனா நீ” அல்லது “இனிஷியல் தெரியாதவன்” என்ற வாசகங்களை நேரடியாகக் கேட்டதைவிட பதிவுலகில் பார்த்ததே அதிகம்.

” தந்தையுடைய படைப்பு மட்டுமா நாமெ”ன்ற கேள்வியும் அதைத் தொடர்ந்து எழுந்தது. அம்மாவின் பங்குஇருந்தாலும், எல்லோரும் தந்தையின் படைப்பு என்றுதானே சொல்லிக்கொள்கிறோம். எத்தனை பேர் அம்மாவின் பெயரையும் இனிஷியலாக போட்டுக்கொள்கிறோம்? இன்னாரது பிள்ளை என்று சொல்லும்போது தந்தையின் பெயரையே முதலில் குறிக்கிறோம். தந்தையின் பெயர் தெரியாதவர் எனபது இழுக்கானதொன்று சொல்பவர்கள் தாயின் பெயரையும் இனிஷியலாக சேர்க்க வேண்டுமென்று சொல்லாதது ஏன்? நாலரைப் பால் அர்ஜூனுக்கு ஐக்யூ அதிகம் வேண்டுமென்றால் மட்டும் அர்ஜூன் அம்மா வேண்டும். சஃப் எக்செலின் விலை குறைந்தாலும், ரின் மீது பைசா வசூலானாலும் கவலைப்பட தேவையானவர்கள் அம்மாக்களே. ஆனால், ப்ராக்ரஸ் ரிப்போர்ட்டில் கையெழுத்து மட்டும் அப்பாதான் போட வேண்டும்...இப்படியும் சில பள்ளிக்கூடங்கள் இருக்கத்தானே செய்கின்றன!

எனது சிறுவயது கதை புத்தகங்களில், நோட்டுகளில் T.சந்தனமுல்லை என்றுதான் பெரிம்மா எழுதியிருப்பார். நானும் அப்படி எழுதியிருக்கிறேன். ஆனால், ஏதோவொரு தருணத்தில் எல்லா பள்ளி ரெக்கார்டுகளிலும் அது R.சந்தனமுல்லையாகி போனது. ஆனாலும், ரொம்ப நாளைக்கு T.R.சந்தனமுல்லை என்று பொறித்துத் தள்ளியிருந்தேன். எனக்கு செய்த தவறிலிருந்து கற்றுக் கொண்ட பாடமோ என்னவோ, என் தம்பிக்கு
ஆரம்பத்திலிருந்தே எல்லா ரெக்கார்டுகளிலும், அம்மா-அப்பா இருவரின் பெயர்களுமே இனிஷியலாக இருக்கிறது.

சொல்லப்போனால், எங்கள் இருவரையும் உருவாக்கியது, பெரிம்மாவும், ஆயாவும், அம்மாவும்தான். உருவாக்குதல் எனபது பிறப்பை தருவது மட்டுமில்லைதானே? அவர்களின் கூட்டுப் படைப்பாக இருந்துக் கொண்டு என்னால் நான் அப்பாவின் படைப்பு மட்டுமே என்று சொல்ல முடியுமா அல்லது சொன்னால் அது நியாயமாகுமா என்று எண்ணிப் பார்க்கிறேன்.

அப்படியே இருந்தாலும், அவர்களுக்கு உரிய நேரத்தில் தகுந்த இடத்தில் அதற்கான மரியாதையை நான் தந்திருக்கிறேனா என்று எண்ணும்போது என் மனம் குற்றவுணர்ச்சி கொள்கிறது. குறுகி போகிறது. எங்கள் திருமணம் இந்து முறைப்படி நடந்தது. திருமண சடங்குகளில் ஒன்று, பாத பூஜை செய்ய வேண்டும். இந்த சடங்குகள் எதையும் அறிந்தவளில்லை. ஒரு தாம்பாளத்தில் பெற்றவர்கள் அல்லது பெற்றவர்கள் இடத்தை பெற்றவர்கள் நிற்க, அவர்களது காலை கழுவி பொட்டு வைக்க வேண்டும். என் தந்தை காலமாகி இருந்தார். தாம்பாளத்தில் ஏறி நின்றவர்கள் பெரிய மாமாவும் அத்தையும். ஒருவேளை இந்த சடங்கு, பெற்றவர்களுக்கு மரியாதை கொடுப்பதெனில் அதில் நிற்க வேண்டியவர்கள் யார்? பெரிம்மாவும் அம்மாவும் தானே. பாத பூஜை அந்த மரியாதையை, நன்றியை, feeling of gratitude-ஐத் தான் குறிக்கிறதெனில், உண்மையில், பெரிம்மாவுக்கும் -அம்மாவுக்கும் அல்லவா நான் கொடுக்க வேண்டும்! தயக்கத்துடன் நிமிர்ந்து பார்க்கிறேன். சுற்றிலும் உறவு முகங்கள் - இருபக்கங்களிலிருந்தும். கடைசியிலிருந்து எட்டி பார்த்தது அம்மாவின் முகம். பெரிம்மா மேடையிலேயே இல்லை. விருப்பமில்லாமலேயே கடமையை முடித்தேன். (பெரிம்மாவிற்கும் அம்மாவிற்கும் இதனைப் பற்றிய வருத்தமிருக்குமா எனத் தெரியவில்லை.) பெரிம்மாவும் அம்மாவும் இதைப் பற்றி துளிக்கூட எண்ணியிருக்க மாட்டார்களென்றாலும் ஆணை மட்டுமே முன்னிறுத்தும் எல்லா இடங்களிலும் இந்நிகழ்வு நினைவுக்கு வந்துவிடுகிறது!
அம்மா இல்லாமல் அப்பா மட்டும் இருந்து நடத்தும் திருமணங்களில் நிகழும் பாதபூஜை எப்படி இருக்கும்?

நமது குழந்தைகளுக்காவது அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சம-மரியாதையை கொடுக்க இனிஷியலிலிருந்து ஆரம்பிப்போம்!

Thursday, March 25, 2010

பேருந்தில் நீ எனக்கு.....

எல்லாம் எங்க ஆயா பண்ணின சதி. எனக்கு அப்போவேத் தெரியும், எப்படியும் என்னோட பயாகிராஃபி வெளிவரும்போது, இந்த பக்கங்கள் ஒரு இருண்ட காலமாத்தான் இருக்கும்னு. இதையெல்லாம் தவிர்க்கணும்னு, அப்போவே சொன்னேன். 'பிஜி-க்காவது மெட்ராஸ் போறேன், என்னை விடுங்க'ன்னு. ”மெட்ராஸ் போனேனா நீ குட்டிச்சுவரா போய்டுவே”-ன்னு (இல்லன்னா மட்டும் ரொம்ப ஒழுங்கு!) பதில் சொன்னாங்க ஆயா. சரி, MAT ஸ்கோர்ல்லாம் நல்லாதானே வச்சிருக்கேன், நார்த்-க்காவது போக விடுங்கன்னு கதறினேன். கேட்டாங்களா? 'ஒண்ணும் வேணாம், நான் நிம்மதியா இருக்கணும்னா, ஆச்சி அந்த ஒன் அண்ட் ஒன்லி விமன்ஸ் யுனிவர்சிடிக்குத்தான் போகணும்” -ன்னு பெரிம்மாக்கிட்டே கைகேயி அவதாரம்தானே எடுத்தாங்க. அங்கே பேருந்து-ன்ற பெயரிலே ஸ்வராஜ் மஸ்தா ஒன்னு இருந்துச்சு. ஆனா, அதுலே காதல் இல்லே. காதலே இல்லேன்னப்பறம் காதல் ஜோடி மட்டும் எப்படி இருக்கும்? ச்சே...அங்கே ஜோடியே இல்லே...காதல் மட்டும் எப்படி இருக்கும்? சரி...ஏதோ ஒண்ணு..

ஒருவேளை, நான் மெட்ராஸ்லே மட்டும் படிச்சிருந்தேன்னா, இந்நேரம் இந்த தொடர்பதிவுலே சொல்றதுக்குத்தான் எத்தனை கதைகள் என்கிட்டேயே இருந்திருக்கும்! ப்ச்! நீங்க கொடுத்து வச்சது அவ்வளவுதான். அப்படியே, நான் ஆம்பூரிலேருந்து கொடைக்கானல் போகணும்னா, ஜோலார்பேட்டையிலே எட்டுமணி ட்ரெயின் ஏறி விடிகாலைல திண்டுக்கல்-லே இறங்கி, அங்கே வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கிற ஃப்ரெண்ட்ஸ் கூட ஜாயிண்ட் அடிச்சு, மதுரைலேருந்து வந்து வத்தலகுண்டுலே வெயிட் பண்ணிக்கிட்டிருக்கிற இன்னொரு க்ரூப் கூட ஜோதியிலே ஐக்கியமாகி ”போறாளே பொன்னுத்தாயி”-ன்னு காட் ரோடிலே மலையேறினா கீழே இறங்க ரெண்டு மாசமாவது ஆகும். இதுலே, தினமும் பேருந்து பயணம் எங்கே?!

அந்த பேருந்துலே, காதல் எபிசோட் முடிஞ்சு கல்யாண எபிசோடை ஆரம்பிக்க வர்ற ஜோடிங்களை வேணா பாக்கலாம்...எல்லாம் ஹனிமூன் கப்பிள்ஸ். ”சின்ன பசங்க நம்மக்கூட வர்றாங்களே, கொஞ்சமாவது டீசண்டா நடந்துப்போம்”னே கிடையாது. ஒரே கொஞ்சல்ஸ்தான். எங்களுக்கு, அக்கம்பக்கத்துலே மாட்டினா அவ்வளவுதான். ஆனா, அதெல்லாம் புரிஞ்சுக்கற நிலைமைலே இருப்பாங்கன்றீங்க? பாதிபேருக்கு புரியவும் புரியாது...ஏன்னா எல்லாம் ஒரே குஜ்ஜூஸ். முழங்கை வரைக்கும் வளையல் போட்டு பாதி தலைவகிடு வரைக்கும் குங்குமம் அப்பின கேஸ். சரி..விஷயத்துக்கு வாங்க.


தினமும் பேருந்துலே நான் பார்த்த காதல்-ன்னா அது சென்னைக்கு வந்தப்புறம்தான். சைக்கிள் வீலை ரிவர்ஸுலே சுத்துங்க, ப்லீஸ்! ப்ராஜக்ட்-க்காக ரெண்டு அப்பாவி பொண்ணுங்க சென்னை மண்ணை மிதிக்கறாங்களா...யெஸ்! 'எஜமான் காலடி மண்ணெடுத்து'- ன்னு பேக்ரவுண்ட்லே பாட்டு கேக்குதா...அதேதான்...
கட் கட்...கட்...

ஸ்கூட்டி வாங்கற வரைக்கும் பஸ்லேதான் நானும் லதாவும் ஆஃபிஸ் போவோம். எட்டேமுக்காலுக்கு கரெக்ட்டா பஸ் டாண்ணு ஸ்டாப்லே வந்து நிக்கும். அதே சமயம், சரியா ஸ்டாப்-க்கு மேலே ஒரு ஸ்ரீலங்கன் ஏர்வேஸ் க்ராஸ் பண்ணும். (டைமிங்பா!)அப்போல்லாம், ஆடி மாச பஸ்தான்(லேடீஸ் அந்த பக்கம், ஜெண்ட்ஸ் இந்த பக்கம்). ஜன்னல் சீட்டுலே உட்கார்ந்திருக்கிற அந்த அக்காவோட கண்ணு பஸ் ஸ்டாப்பை ஸ்கேன் பண்றதை பார்க்கிற எந்த சாதாரண மனுசனுக்கும் 'அவங்க யாரையோ தேடறாங்க'ன்னு புரியும். எங்களை மாதிரி மரமண்டூஸ்-க்கு , 'ஒரு சீட் பக்கத்துலே காலியா இருக்கு'ன்னு சொல்ற மாதிரி தோணுச்சு. அந்த சீட்லே லதா உட்கார்ந்துக்கிட்டா. நான், நின்னுக்கிட்டு ஜன்னல் வழியா வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தேன்.

அப்புறம், பஸ் நகரும்போது ஃபுட்போர்டுலே ஏறுறவங்க வந்து அவங்க சொத்துகளை ஜன்னல்கிட்டே இருக்கறவங்க கிட்டே கொடுத்துட்டு ஏறுவாங்க தானே.. அதுமாதிரி இந்த அக்கா மடிலேயும் யாரோ கொடுத்த ஒரு லஞ்ச் பாக்ஸ்,இன்னும் சில நோட்டுகள். அதைப்பார்த்து அந்த அக்கா லேசா சிரிச்ச மாதிரி இருந்தது. நமக்குத்தான் பாம்புக்காது...ச்சே.. பூனைக்கண்ணு... இந்தவிஷயத்தையெல்லாம் நல்ல நோட் பண்ணுவோமே.
அப்புறம்தான் தெரிஞ்சது, அந்த அக்கா தினமும் டெர்மின்ஸ்லேருந்தே ஏறிடுவாங்க. அந்த அண்ணா ஏதோ காலேஜ் ஸ்டூடண்ட் போல. (நோட் புக்!!) அந்த அக்கா எங்கியோ வேலை செய்றாங்க போல. சிலநாட்கள், ஒரு ஆண்ட்டி கூட ஆஃபிஸ் விஷயமா பேசிக்கிட்டிருக்கிறதையும் பார்த்திருக்கோம். ஒரே ஆஃபிஸா இருப்பாங்க போல.

டிக்கட் வாங்கணும்னா, பக்கத்துலே இருக்கறவஙகிட்டெ காசை கொடுத்தாப் போதும்.அப்படியே ஒவ்வொருத்தரா பாஸ் பண்ணி கடைசிலே உட்கார்ந்திருக்கற கண்டக்டர்வரை ரீலே ஆகி டிக்கட் நம்ம கைக்கு வந்து சேரும்.
நாங்க, பெரும்பாலும் அந்த அக்காக்கிட்டே தான் கொடுப்போம். அவங்க, கண்டக்டர் பக்கத்துலே நின்னுக்கிட்டு இருக்கற அண்ணாகிட்டே பாஸ் ஆகிற வரைக்கும் பார்த்துக்கிட்டே இருப்பாங்க. அப்போ, நானும் லதாவும் ஒருத்தரை ஒருத்தர் இடிச்சுக்குவோம், கிண்டலோட. நாமதான், சினிமாலேக்கூட செண்டி சீன் வந்தா சீனைப் பார்க்காம பக்கத்துலே உட்கார்ந்து இருக்கிறவங்க ரியாக்‌ஷனைப் பார்ப்போமே...கண்ணுலே தண்ணி வருதா... கிண்டல் பண்ணி சிரிக்கலாம்னு. அதே மாதிரி அந்த அண்ணாவும் அக்காவை ஓரக்கண்ணாலே பார்த்துக்கிட்டு இருப்பார்.

அக்கா கையிலே எதாவது புக் வைச்சிருப்பாங்க வேற. சிட்னி ஷெல்டன். ஆனா, முழுசா படிக்கற மாதிரியும் தெரியாது..படிக்காத மாதிரியும் தெரியாது. கொஞ்ச நேரத்துக்கு அப்புறம், அந்த அண்ணா,எப்படியாவது நகர்ந்து அக்கா பக்கத்துலே வந்துடுவாங்க. அப்புறம் ஒரே சைட் தான். ஒரு நாடகம் பாக்கிற மாதிரியே இருக்கும். நானும் லதாவும் நமுட்டு சிரிப்பு சிரிச்சுக்குவோம். அவங்களுக்கு இதெல்லாம் தெரிஞ்சுதான்னு தெரியலை....தெரிஞ்சிருந்தா சபிச்சிருப்பாங்க!


இப்படியே ஒரு ரெண்டு மாசம் போயிருக்கும். ஒருநாள், வேலன்டைன்ஸ் டேன்னு நினைக்கறேன். அந்த அக்கா பிங்க் கலர் ட்ரெஸ்லே வந்திருந்தாங்க. பார்க்கிறதுக்கு ஃப்ரெஷ்ஷா இருந்தாங்க. அந்த அண்ணா, ஒரு க்ரீட்டிங் கார்டோட ரோஜாவை கையிலே வச்சிக்கிட்டு ஏறினார். அன்னைக்கு அக்காவுக்கு சீட் கிடைக்காததனாலே நின்னுக்கிட்டுதான் வந்தாங்க. அண்ணா, ரோஜாப்பூவைக் கொடுத்ததும் அக்காவும் வெட்கப்பட்டுக்கிட்டே வாங்கிக்கிட்டாங்க. எல்லாரும் பார்த்தும் பாக்காத மாதிரி இருந்தாங்க. ஒரு ரெண்டு ஸ்டாப்பிங் தள்ளி டிக்கெட் கொடுக்க பஸ்ஸை நிறுத்தினாங்க. அப்போ கொஞ்சம் பேரு இறங்கி ஜன்னல்கிட்டே நிப்பாங்க இல்லே.அது மாதிரி அந்த அண்ணாவும் இறங்கி போனார்.

அப்போதான் அது நடந்தது. இன்னொரு அண்ணா,அவர், பார்க்க கருப்பா, கொஞ்சம் ரஜினி மாதிரி ஸ்டைல்லாம் பண்ணிக்கிட்டு அக்கா பக்கத்துலே வந்தார். அக்கா முதல்லே ஒண்ணும் கண்டுக்கலை. திடீர்ன்னு,அவர் அந்த அக்காகிட்டே லெட்டர் மாதிரி ஒண்ணை கொடுத்தார். அந்த அக்கா வாங்கிக்கலை. அந்த அண்ணா “ஏண்டி, வெள்ளையா இருந்தா மட்டும்தான் லவ் பண்ணுவீங்களா” - ன்னெல்லாம் கேட்டுட்டு அந்த அக்கா கையிலே இருந்த ரோஸ், கார்டை கிழிச்சு போட்டுட்டு இறங்கிபோய்ட்டார். எல்லாரும் அப்படியே அதிர்ச்சியிலே உறைஞ்சு போய்ட்டாங்க. அந்த அக்காவுக்கு ரொம்ப அவமானமாகிடுச்சுன்னு நினைச்சோம்.
கொஞ்ச நேரத்துலே கண்டக்டர் விசில் கொடுத்ததும், எல்லாரும் ஏறிட்ட்டாங்க. அண்ணாவும், அக்கா பக்கத்துலே வந்தப்போ கீழே கிடக்கிற கார்டையும் ரோசையும் பார்த்துட்டாங்க. அக்காவுக்கு, இந்த அதிர்ச்சியிலே வார்த்தையே வரலை. விட்டா அழுதுடுவாங்க போல. அந்த அக்கா, கீழேருந்து எடுக்கறதுக்- குள்ளே எல்லாரும் உள்ளே வர ஆரம்பிச்சதுனாலே ரோசை பாக்காம மிதிச்சுக்கிட்டே போய்ட்டாங்க...பாவம், அந்த அண்ணா-வுக்கு அதை நிஜமா பிச்சு போட்டது யாருன்னு தெரியாது. எல்லாம் சினிமாலே வர்ற மாதிரியே...வர்ற மாதிரியே என்ன...சினிமா மாதிரியே இருந்தது.

நானும் லதாவும் எங்க ஸ்டாபிங்லே இறங்கினப்புறமும் ஆஃபிஸுக்கு போக மனசு இல்லாம , அந்த அக்காவையும், அண்ணாவையும், இன்னொரு கருப்பு அண்ணாவையும் சுமந்துக்கிட்டு போற அந்த பஸ்ஸையே பார்த்துக்கிட்டு நின்னோம். புழுதியை எழுப்பிட்டு போன அந்த பஸ்ஸோட நம்பர் மட்டும் கண்ணுக்குத் தெளிவா ....23C!

என்னது...அப்புறம் நடந்ததெல்லாம் உங்களுக்கும் தெரியுமா? நீங்களும் ''சுடச் சுட பார்த்து ரசித்தி'ருக்கீங்களா?! (என்ன பண்றது..எங்க ஆயாவோட சதியாலே நான் பார்த்த ஒரே 'பேருந்து காதல்' கதை...இதுதான்!)

சரி சரி...'எனக்கு ஆரம்ப சீன்லேயே தெரிஞ்சுடுச்சு'.. இல்லேன்னா ‘முன்னாடியே கெஸ் பண்ணிட்டேன்'-னெல்லாம் விட்டுட்டு உண்மையை சொல்லிட்டு போங்க...:-)

தொடர்பதிவிற்கு அழைத்த தீபா-விற்கு நன்றி!

சிலபல சுவாரசியமான 'உண்மைச்' சம்பவங்களை சொல்ல நான் அழைப்பது,

சின்ன அம்மிணி,
ஆயில்யன்
பின்னோக்கி
கமெண்ட் மட்டும் போடும் padmaja (நீங்க பின்னூட்டத்திலே கூட சொல்லலாம்,மேடம் ) :-)

Monday, March 22, 2010

பப்பு டைம்ஸ்

காலை தத்துவம் 1011 : (அதாவது, விழித்ததும் பப்பு உதிர்க்கும் தத்துவங்கள் சில)

ஆச்சி, நான், “எனக்கு ஜூரம்,”ன்னு வர்ஷினிக்கிட்டே சொன்னப்போ, வர்ஷினி வெண்மதிக்கிட்டே, “குறிஞ்சிக்கு ஜுரமாம்”ன்னு வெண்மதிக்கிட்டே சொன்னா.


என்னது...(பின்ன, காலையிலே கண்ணைத் திறந்த உடனே இப்படி பேச ஆரம்பிச்சா, புரிஞ்சுக்க நேரம் வேணாமா?)

நான், 'எனக்கு ஃபீவர்'ன்னு வர்ஷினிகிட்டே சொன்னப்போ, வர்ஷினி வெண்மதிக்கிட்டே “குறிஞ்சிக்கு ஃபீவர்”ன்னு சொன்னா.... ஃபீவர்-ன்னாலும் ஜூரம்-ன்னாலும் ஒண்ணுதான்.

(எனக்கு என்னவோ ஜூரம்-ன்னா ஃபீவர்ன்னு தெரியாத மாதிரி...அவ்வ்வ்)


காலை தத்துவம் 101 :

”ஆச்சி, நான் வர்ஷினி ஃப்ரெண்டே இருக்க மாட்டேன். விக்கி ஃப்ரெண்டேதான் இருப்பேன்! (ரொம்ப முக்கியம்...அதுவும் காலையிலே ஆறரைக்கு!)

காலை தத்துவம் 101.6 :

”வெண்மதி வர்ஷினி ஃப்ரெண்ட், வர்ஷினி என் ஃப்ரெண்ட், குறிஞ்சி விலாசினி ஃப்ரெண்ட், விலாசினி சுதர்சன் காதுலே “அர்ஷித் கைலாஷ் என்னை கிள்ளிட்டான்”ன்னு சொன்னதும் நாங்க பார்த்தப்போ இல்லே..கிள்ளவே இல்ல!”

(ஸ்ப்பாஆஆ...என்ன ஒரு ஆராய்ச்சி!)


"ஜான்சன்'ஸ் பேபி சோப்-ன்னு போட்டிருக்கா, big பேபி சோப்-ன்னு போட்டிருக்கா?"

"ஜான்சன்'ஸ் பேபி சோப். "

"நான் என்ன ஜான்சன்'ஸ் பேபி-யா...?”

“....”

”நான் ஜான்சன்'ஸ் பேபியா?, குறிஞ்சி மலர், பப்பு - ன்னு தானே எனக்கு ரெண்டு பேரு இருக்கு...பிக் பேபி சோப் போடு எனக்கு! "

...Which means, அவளுக்கு என்னோட சோப் வேணும்! ;-) மேடம் இப்போ கண்ணடிக்கறாங்க...பார்க்கதான் கொஞ்சம் டெரரா இருக்கு...

24 மணி நேரமும் கண்ணாடி முன்னாடி நின்னு தலைமுடியை சீவோ சீவுன்னு சீவி மூணு குடுமி போட ஆரம்பிச்சிருக்காங்க...சிலசமயங்களில், ட்ரெஸ் போட்டிருக்கோமான்னு இல்லையான்னு கூட கவலைப்படாம சீவறதைப் பார்த்தாத்தான் ...

ஓ...ப்ரியமான என் கடவுளே, கத்திரிக்கோல் கையில் கிடைத்தால் யாருக்கும் தெரியாமல் தானாகவே முடிவெட்டிக்கொள்ளும் அந்த சின்னஞ்சிறு என் மகளெங்கே?!!

Saturday, March 20, 2010

கோள்மூட்டி கோமளாவும், சுப்பாண்டியும், கபீஷூம்...

"ஆயா, அவங்கதான் கோள்மூட்டி கோமளாவா”ன்னு கேட்டப்போது நான் இரண்டாம் வகுப்பு. ஐந்து குடித்தனங்கள் இருக்கக்கூடிய வீட்டில் முதல் போர்ஷனில் இருந்தோம். கோமளா அக்கா அப்போதுதான் புதிதாக கல்யாணமாகி, எங்களுக்கு அடுத்த போர்ஷனில் குடி வந்திருந்தார்கள். தினமும் பால்காரர் ஹார்ன் சத்தம் கேட்டதும் பால் சொம்பு எடுத்துச்செல்வது என் டிபார்ட்மெண்ட். பென்சில் சீவலை மண்ணில் புதைத்து அதன்மேல் பாலை ஊற்றி ரப்பர் செய்யும் கலையில் நான் தேர்ச்சி பெற்றிருந்ததை, ஆயா அறிந்த நாள் முதல், அந்த பதவி பறி போயிற்று. அப்படி ஆயாவோடு பால் வாங்கிக் கொண்டு திரும்பும்போது எதிரில் வந்த கோமளா அக்காவிடம், ஆயா பேசிக் கொண்டிருந்தபோது நான் கேட்ட இந்தக்கேள்வியால் ஆயாதான் தடுமாற வேண்டியிருந்தது. ‘சின்ன பொண்ணுதானே' என்று சாக்கும் இருந்தது.

'கோள்மூட்டி' கோமளா - பூந்தளிரிலோ அல்லது கோகுலத்திலோ அப்போதுதான் நான் படித்திருந்த கதை. கோமளா என்ற பெண் எப்படி கோள்சொல்லி சண்டைகள் மூட்டி விடுவாள் என்பதை உணர்த்தும் ஒரு நீதிக்கதை. அதற்காக கோமளா என்று பெயர் வைத்தவர்களெல்லாம் கோள் சொல்வார்கள் என்று நினைத்தது என் ஏழு வயது அறியாமைதான். ஆனால், ஆங்கிலத்தில் கதைகள் படித்திருந்தால் இப்படி ஒரு அடைமொழியோடு கோமளா அக்காவையும், ஆயாவையும் தர்மசங்கடப்படுத்தியிருக்க முடியுமா? :-)

சரி, இப்போது எதற்கு இது என்கிறீர்களா? தூலிக்காவின் ”தாய்மொழியில் படிப்பதும் எழுதுவதும் பற்றி” என்ற தொடர் இடுகைக்காகத்தான்.
தாய்மொழியில் படிப்பது, எழுதுவது எல்லோருக்கும் எப்படி விருப்பமோ அப்படித்தான் எனக்கும்! டிங்கிள், சம்பக்,மிஷா, பூந்தளிர், கோகுலம், பாலமித்ரா,அம்புலிமாமா, ரத்னபாலா என்று இருந்தாலும் முதலில் தமிழ் புத்தகங்களை வாசித்தபின்பே சம்பக்கிற்கு மிஷாவிற்கும் தாவுவது என் வழக்கமாக இருந்தது. பின்னர் டிங்கிள் , சம்பக் வாங்குவதும் நின்றுவிட்டது. அதேபோல, பக்கத்துவீட்டு சுஜாதா அக்கா, விஜி அக்கா தமிழ் துணைப்பாட நூலில் வரும் கதைகளை வாசிப்பதும். நிலாவில் வடை சுடும் ஆயாக்கதையையும், சித்திரக்குள்ளன் கதையையும் எத்தனைதடவை கேட்டாலும் அலுக்கவே அலுக்காத சிறுவயது கதைகளையும் கொஞ்சமாவது ஆங்கிலத்தில் கற்பனை செது பார்க்க முடியுமா? அல்லது தூய தமிழ்மொழியில்தான் கற்பனை செய்து பார்க்க முடியுமா? கண்டிப்பாக என்னால் முடியாது - நிலவொளியில், ஆயா மேல் கால் போட்டுக்கொண்டு, ஆயாவின் குரலில்,ஆயாவின் பேச்சுவழக்கைத் தவிர வேறு எப்படியும் அக்கதைகளை என்னால் கற்பனை செய்து பார்க்கவியலாது.


புவனகிரியில், ஆயாவின் அக்கா ஒருவர் இருந்தார். வடலூருக்கு செல்லும்போதெல்லாம் அங்கு ஒரு விசிட் அடிப்பது வழக்கம். அங்கே சென்றால், குழந்தைகளுக்கு (நாங்கதான்) கதை சொல்லும் பணியை அவர் எடுத்துக் கொள்வார். ஆனால், என்னால் அவர் சொல்லும் கதைகளை முழுவதுமாக ஃபாலோ செய்ய முடிந்ததில்லை. பூச்செண்டு, மாடம் என்றெல்லாம் அவர் சொன்னபோது என்னவென்றே விளங்கவில்லை. மேலும் நிறைய வார்த்தைகள் அந்தக்கால தமிழ் வார்த்தைகள் - இப்போது என்னால் நினைவுக்குக் கொண்டு வர இயலவில்லை. ஆனால், எனது ஆயாவின் மொழி போல இணக்கமாக இருக்கவில்லை. மேலும் அவர் சொல்லும் கதைகள் விரைவில் முடியாது. நிறைய எபிசோடுகள் கொண்டவை அவை.அதனால் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருப்போம்.(அவர் ஒன்று சொல்ல நாங்களாக ஒன்று கற்பனை செய்துக்கொள்ள வேண்டியதுதான்!) விளக்கின் சுடரிலிலிருந்தும், உருண்டோடும் மிளகிலிருந்தும் சுட்டிப்பெண்கள் எழுந்து வருவார்கள். பூச்செண்டை கொடுத்த இளவரசன் குதிரை மேல் பறந்து வருவான். ஆனாலும், அவர் சொல்லும் ஒரு சில வார்த்தைகள் அப்போதே வழக்கொழிந்திருந்தன. மேலும், வடஆற்காடு - தென்னாற்காடு வட்டார வழக்கு வேறு படுத்தி எடுக்கும்.

ஆம்பூரில், 'க(ட)லக்கா' என்பது வடலூரில் மல்லாட்டை என்றாகும். உண்மையில், அது கடலைக்காய் மற்றும் என்பதும் மணிலாக்கொட்டை அல்லது வேர்க்கடலையே! நாங்கள் குறிப்பிடும் கருணைக்கிழங்கும், தென்பகுதியில் குறிப்பிடும் கருணைக்கிழங்கும் வேறுவேறு. பெரும்பாலும் சாப்பிடும் நேரத்தில்தான் இந்த ஆராய்ச்சியெல்லாம் நடக்கும். புரையேறுவது என்றால் என்ன என்பதை ஒரு தெலுங்கு நண்பருக்கு, ஆங்கிலத்தில் சொல்லி விளங்க வைக்க நாங்கள் பட்ட பிரயத்தனங்கள் (ஆமா, அதுக்கு இங்க்லீஷில் என்ன?)- கடைசியில் தெலுங்கில் 'புரை போயிந்தி' மாதிரியான ஒரு வார்த்தையே. அதேபோல, வடகம் என்பது குழம்புக்கு போட்டுத்தாளிக்க அம்மா செய்து வைத்திருக்கும் உருண்டைகள் - ஆனால்,மதுரை தேவி அக்காவிற்கு வடகம் என்பது நாங்கள் வத்தல் என்று குறிப்பிடும் வஸ்து. எனக்கு, வத்தல் என்பது மே மாசமானால் அத்தைகளும் அம்மாவும் காலையில் காய்ச்சி முறுக்கு அச்சில் பிழிந்து காய வைப்பார்களே.. அது!ஆனால், திண்டுக்கல் கல்பனாவிற்கு வத்தல் என்பது மிளகாய் வத்தல். இப்படி பேச்சுத்தமிழிலேயே எத்தனை விதங்கள்!

ஓக்கே..கமிங் பேக் டூ த பாயிண்ட்...
சிறுவயதில் எனக்கு ஆங்கில கதைப்புத்தகங்களும் தமிழ் கதைப்புத்தகங்களும் சமமாகவே கிடைத்தன. பெரும்பாலும் ரஷ்ய கதைப்புத்தகங்களும், ரஷ்ய மொழிப்பெயர்ப்பு புத்தகங்களும். இவற்றில், பொக்கிஷமாக கருதி இன்று வரை பாதுகாத்து வருவது - தலைகாணி சைஸுக்கு இருக்கும் இரு புத்தகங்கள் - உலக நாடோடிக்கதைகள் தொகுப்பு மற்றும் உலகின் அத்தனைத் தேவதைக்கதைகளின் தொகுப்பு. உலகநாடோடிக்கதைகள் தமிழிலும் தேவதைக்கதைகள் தொகுப்பு ஆங்கிலத்த்திலும் இருக்கும். அந்த ஆங்கிலப்புத்தகம், நாடோடிக்கதைகள் புத்தகத்தைப்போல தாட்கள் கிழியாமல், மூலைகள் மடங்காமல் பத்திரமாக இருக்கிறது.கதைகளை என் தாய்மொழியில் வாசிக்கவே விருப்பமாக இருக்கிறது. அறிவியல் பற்றிய நூல்கள் தமிழை விட ஆங்கிலத்தில் வாசிப்பதே எளிதாக புரிந்தது. 'துளிர்' என்ற தமிழ்நாடு அறிவியல் இயக்க நூல் ஒன்று வீட்டுக்கு வரும். அதில் எளிதாகவே கொடுத்திருந்தாலும், புரிந்துக்கொள்வது கொஞ்சம் கடினமாகவே இருனத்து. எல்லாமே, தமிழ்ப்படுத்திய வார்த்தைகள்தான்- அடைப்புக்குறிக்குள் ஆங்கிலத்தில் கொடுத்திருந்தால்தான் பொருள் விளங்கியது.அங்குதான் தாய்மொழிக்கும், பயிற்றுமொழிக்குமான இடைவெளி வருவதாக நினைக்கிறேன்.

பப்புவுக்கு தமிழ் புத்தகங்களையே தேடித்தேடி வாங்குகிறேன். ஆனால், தமிழில் toddlers-க்கான புத்ததங்கள் வெகு குறைவு. ஆங்கிலத்தில் எக்கசக்காமான
வெரைட்டி - எளிய வாக்கியங்களில் அழகான வண்ணமயமான படங்களுடன். நான்கு வயதுக்கு மேல்தான் தமிழில் ஓரளவு கிடைக்கின்றன. கடைகளில் பார்த்தவரையில், ஆறு வயதினருக்கு மேல் தமிழில் நல்ல கலெக்ஷன் உண்டென்று தோன்றுகிறது. அதனால், பெரும்பாலும் ஆங்கிலப்புத்தகங்களையே பப்புவுக்கு அறிமுகப்படுத்த வேண்டியிருக்கிறது. எந்த மொழிப்புத்தகமாக இருந்தாலும் பப்புவுக்கு அதை அவளுடைய மொழியிலேதானே சொல்கிறேன்.அதனால், குந்தைகளுக்கான புத்தகங்கள் 'குழந்தை ஃப்ரெண்ட்லி' மொழியாக இருந்தாலே போதும்.

பப்புவின் பழக்கம் எப்படியெனில், எந்த ஒரு புத்தகமும் முதலில் குறைந்தது இரண்டு அல்லது மூன்று வாரங்கள் - அலுக்கும் வரை - தொடர்ந்து அதையே திரும்ப திரும்ப சொல்லச் சொல்வாள். பிறகு, அதை கண்டுக்கொள்ளவே மாட்டாள். அப்புறம் எப்பொழுதாவது கண்ணில் பட்டால் எடுத்து தானாகவே கதைச் சொல்லிக்கொள்வாள். இப்படி ஒரு புத்தகம் அடுத்த ரவுண்ட வர ஆறுமாதங்களாவது ஆகும். மேலும், பப்புவுக்கு கதைச் சொல்வதாக நினைத்து சொல்வதில்லை. இருவரும் சேர்ந்து கதைப் வாசிப்பதுபோலதான் - புத்தகங்களை வாசிக்கிறோம். (குழந்தைமனசு!) சில புத்தகங்களை, எளிய வாக்கியங்களாக இருந்தால் படித்து காட்டுவேன்.அடுத்த சிலமுறைகளில் அவளும் கூட சேர்ந்து சொல்லுவாள் - மனப்பாடமாக. பெரும்பாலும் நீதிக்கதைகளை நான் வாங்குவதே இல்லை. (அப்படிப்பார்த்தால் - நான் படித்த நீதிக்கதைகளுக்கு எத்தனை நீதியுடனும் வாழ வேண்டும்...நீதிகள் கதைகள் மூலம் அறியப்படுவதில்லை என்பதே நான் அறிந்த நீதி!)என்னை பொறுத்தவரை - கதைகள் என்பவை சுவாரசியமாகவும்,ஜாலியாகவும், pleasure of reading-ஐயும் அறிமுகப்படுத்துவதாக இருக்கவேண்டும்.


சிறுவயதிலும் சரி - இப்போது சரி - உலகின் பல பகுதிகளில் இருக்கும் சிறுவர் கதைகளை படித்துவிட வேண்டும் என்ற தீராத ஆர்வம் எனக்குண்டு. உலகின் எந்தப் பகுதியிலிருந்து நண்பர்கள் மூலம் நான் பெறுவது - அந்தந்த ஊர்களில் கிடைக்கும் சிறுவர் புத்தகங்கள் அல்லது நாடோடிக்கதைப் புத்தகங்களே. பெரும்பாலும், அவையெல்லாமே அமசானிலும் கிடைக்கின்றன. ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர் புத்தகங்களில் - எளிய வாக்கியங்களாலான கதைகள் அல்லது பேச்சு வழக்கிலான கதைகள் , தானாக படிக்கும் வயதினருக்கு formal language-இல் இருப்பதையே பரிந்துரைப்பேன். மேலும், மொழியைவிட அந்த புத்தகத்தின் illustrations-ஐ தான் - எப்படி பட விளக்கமாக் இருக்கிறதென்பதையே முக்கியமாக கவனிப்பேன். மேலும் நாடோடிக்கதைகளை அதன் வட்டார வழக்கிலேயே படிப்பதே சுவாரசியம்!

இத்துடன் எனது மொக்கையை முடித்துக்கொள்கிறேன். தூலிகா-வின் அழைப்பிற்கு நன்றி. இதை தொடர விரும்புபவர்கள் தொடரலாம். உங்கள் எண்ணங்களையும் அறிய ஆவலாக இருக்கிறேன்.

Thursday, March 18, 2010

ஓ!வியம்

இது மேரி கோல்ட் -ன்னு சொன்னா நம்ப மாட்டீங்களா என்ன? இது மலையாம். அதை சுத்தி இருக்கற பச்சை டாட்ஸ், மாடுங்க - செத்து கிடக்காம். ரெண்டாவது தடவையும் கேட்டு உறுதிபடுத்திக்கிட்டேன், மாடுங்க செத்துதான் கிடைக்காம்! :-( என்னன்னு கண்டுபிடிக்க முடியுதா? குடை. ( வெயில் காலம் வந்துடுச்சு இல்லே...) கஸாட்டா ஐஸ்க்ரீம்-ன்னுதான் நானும் நினைச்சேன்...இல்லையாம், ரெயின்போவாம்! Choo choo train, Tucking down the track; Gotta travel on it, Never coming back;
Ooh ooh got a one way ticket to the moon!
ம்ஹூம்...பப்புவுக்கே தெரியலை...என்னன்னு தெரிஞ்சா எங்களுக்கும் சொல்லுங்க! :-) வெண்மதி பர்த்டேவுக்கு வரைஞ்சது - பீச் & பீச் அனிமல்ஸ்! 3D தர்பூசணி !டிஸ்கி : மக்களே, இந்த படங்களையெல்லாம் பார்த்துட்டு, உணர்ச்சி-
வசப்படறவங்க, கொஞ்சம் பார்த்து உணர்ச்சிவசப்படுங்க...எங்களாலே சென்னையை விட்டுட்டு கத்தார்க்கெல்லாம் போக முடியுமா?! கருணை காட்டுங்க ப்லீஸ்! ;-))

Wednesday, March 17, 2010

StyleBhai

முந்தாநேத்துக்கு முதல் நாள், அதுக்கு முதல்நாளை ,அதுக்கும் முதல்நாளையெல்லாம் எப்படி சொல்வீங்க?

முந்தாநேத்த்த்து...

முந்தாநேத்த்த்த்த்த்த்து....

முந்தாநேத்த்த்த்த்த்த்த்த்த்த்து.....உங்களாலே எவ்ளோ ஸ்லோவா மென்னு சாப்பிட முடியும்?

வாயிலே வைச்ச பூரியை மென்ன்ன்ன்ன்ன்ன்னுக்கிட்டே தூங்கிடற அளவுக்கு......!?!

*StyleBhai (Not so) Popular IndyPop Band in mid 90s.

Monday, March 15, 2010

யஹி ஹே ரைட் சாய்ஸ் பேபி!

எங்கள் அலுவலகத்திற்கு பின்னாலிருந்து பார்த்தால் சைதாப்பேட்டை பாலம் தெரியும். பாலத்தின் கீழ் அழுக்கேறிய நீர் ஓடும் ஆறு - அது கூவம் என்று பொதுவாக அறியப்பட்டாலும் அதுதான் அடையாறு. அந்த தண்ணீரிலேயும் கால்களை அலைந்தும் குதித்தும் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருப்பார்கள். "அட, இவங்களுக்கெல்லாம் ஒண்ணும் வராதா? இந்த அழுக்கு தண்ணிலேயே குளிக்கறாங்களே?" என்று நினைத்தபடி பார்வையை கொஞ்சம் இடதுபுறம் திருப்பினால், கற்களை போட்டுக்கொண்டு துணிகளை துவைப்பதைக் காணலாம். வலது பக்கம் பார்த்தால் குப்பை கூளங்களை கொட்டியதால் உண்டான மேடுகளும், அருகிலேயே பன்றிக்குட்டிகளும், ஓரமாக நிற்கும் எருமைகளையும் பார்க்கலாம். இதற்கு நடுவில் குடிசை வீடுகளும், ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த வீடுகளும், கொடியில் காய வைத்த துணிகள் காற்றிலாடுவதும் மக்கள் அங்கே வசிக்கிறார்களென்று சாட்சி சொல்லும்.முதன் முதலில், அந்த ஆற்றின் கரையில் கம்பீரமாக நிற்கும் அந்த கட்டிடத்தின் ஆளுயர ஜன்னல் அருகினில் நின்றபடி து வாகனங்கள் விரைந்து செல்லும் பாலத்தையும், அதன் தூண்களையும் நெளிந்து செல்லும் அழுக்கு நீரையும் பார்த்துக்கொண்டு நின்றபோது, நண்பர் சொன்னார் “இங்கேருந்து பார்த்த கடல் தெரியும்”. சற்றே நிமிர்ந்து விண்ணை முட்டும் கட்டிடங்களையும், டெலிபோன் டவர்களையும் தாண்டி நீல நிறத்தில் கடலும், சில கப்பல்களும் கண்களுக்குத் தென்பட்டன. உயரமான அந்த கட்டிடத்தில் கண்களை கொள்ளைக் கொள்ளும் கண்ணாடி ஜன்னலின் அருகில் நின்றுக் கொண்டு எங்களுக்குக் நேர்கீழே அடையாறின் அழுக்குநீரில் விளையாடும் அந்த பசங்களை, அதின் நின்றுக்கொண்டு துணி துவைப்பவர்களை, குளிப்பவர்களை, இயற்கை உபாதைக்கு ஒதுங்குபவர்களை கண்டுக் கொள்ளாதவர்கள் போல தொலைதூரத்தில் தெரிந்த கடலை ரசித்துக்கொண்டு நின்றோம். சமயங்களில் மேலே கடந்து செல்லும் விமானங்களையும் பெருமிதத்தோடு பார்த்தபடி .

இந்தக் கட்டிடத்திற்கு அருகில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் அந்த மாநாகராட்சி பள்ளிக் கட்டிடம் வந்தது. அதே அடையாறு அல்லது கூவம் ஆற்றங்கரையில். முன்புறம் விளையாட்டு மைதானமும் இரு மரங்களையும் கொண்ட கட்டிடங்கள். சென்ற வாரத்தில் ஒரு நாள் மைதானத்திற்கு முன்புறம் இருக்கும் சாலையில் மெட்ரோ பாலம் வரப்போவதாகவும், அதற்கான தூண்களில் ஒன்று இந்த பள்ளிக்கூட மைதானத்தில் கட்டப்படப் போவதாகவும் இடம் குறித்துவிட்டு சென்றார்கள். அடுத்த நாளே அந்த காம்பவுண்டும், சாலையின் முடிவில் இருந்த மரமும் வெட்டி சாய்க்கப்பட்டது. பாலம் முழுவதுமாக கட்டப்படும்போது பள்ளிக்கூடம் இருக்குமா என்பதே சந்தேகம்தான். இப்படி எளிய மக்களை துரத்திவிட்டு யாருக்காக அந்த இடத்தில் பாலம்?


சைதாப்பேட்டை பேருந்து நிலையத்தை தாண்டி சென்றால் தாடண்டர்நகர் என்று ஒரு இடத்தை பார்த்திருக்கலாம்.விடியற்காலையில் அந்த இடத்தைக் கடக்க நேரிட்டால், நடைபாதையிலே பாயையோ அல்லது சாக்கையோ விரித்துத் தூங்கிக்கொண்டிருக்கும் மனிதர்கள்,அடிபம்பில் தண்ணீர் அடிக்க காத்திருக்கும் பெண்கள், அருகிலேயே ஒரு கோயில், ஆஸ்பெஸ்டாஸ் போட்ட வீடுகள், அல்லது சாக்குகளை மேலாக கட்டி அமைக்கப்பட்ட ஒற்றை அறை வீடுகள், மழை வந்தால் சகதியாகி விடும் தெருக்கள் - மெட்ரோ ரயிலும் மேம்பாலமுமாக என்னதான் உள்கட்டுமானத்தை நாம் உயர்த்தினாலும் - இந்த தெருக்களிலோ மக்களிலோ எந்த மாற்றமும் வந்துவிடப் போவதில்லை. வேண்டுமானால், அவர்களை ஏதாவது ஒரு ஏரியின் கரையில் இடம் பெயர வைக்கலாம். இந்த மாற்றத்திற்கு பொருளாதார வளர்ச்சி என்ற பெயர் வைத்துக்கொள்ளலாம்.

”அழகும், அசிங்கமும், கம்பீரமும்,ஆபாசமும்,ஆன்மீகமும் பின்னிப் பிணைந்து கிராம்பு மற்றும் ஆர்கிட் மலர்களின் புத்துணர்வூட்டும் நறுமணம் திறந்து கிடக்கும் சக்கடைகளிலிருந்து கிளம்பும் துர்நாற்றத்தை வெல்லப் போராடி கொண்டிருக்கும் நகரம்தான் ஜகார்த்தா” - ”ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்ற புத்தகத்தில் மேற்கண்ட வரிகளை வாசித்தபோது ஜகார்த்தாவுக்குப் பதிலாக சென்னை என்றிருந்தால் கூட பொருந்தி வருவது போல தோன்றியது. ஒரு நாட்டின் உள்கட்டுமானத்தை, மின்உற்பத்தி மையங்கள், நெடுஞ்சாலைகள், கடல்நீர் சுத்திகரிப்பு மையங்கள், தொலைதொடர்பு வசதிகள் போன்றவற்றை அமைக்கத் தேவையான முதலீடுகளை உலகவங்கி போன்ற பன்னாட்டு நிதிநிறுவனங்கள் மூலம் கடனாகப் பெற - பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில்அரசியல் தலைவர்களை,நாட்டின் அதிபர்களை சம்மதிக்க வைப்பதே பொருளாதார அடியாட்களின் வேலை. உண்மையில், தனிப்பட்ட முறையில் இந்த அரசியல் வாதிகளை பணக்காரர்காளாக்குவதும்,அதே நேரம் அந்நாட்டை மீளமுடியாத பெரும் கடன்சுமையால் அடிமையாக்குவதும்தான் இந்த திட்டத்தின் நோக்கம்.

மெய்ன் என்ற அமெரிக்க நிறுவனத்தின் வேலையாளாக இருந்த ஜான் பெர்க்கின்ஸன் எழுதிய இப்புத்தகம் - அமெரிக்கா தனது புதிய காலனியாக்கத்தை - வளர துடிக்கும் நாடுகளில் தனது ஆக்டோபஸ் கைகளால் இறுக்குகிறது என்பதைப் பற்றி தெளிவாக பேசுகிறது. இந்தப் புத்தகத்தை படித்தபோது என் மனக்கண் முன், ஹோட்டல் மாரியட்-ல் கிறிஸ்மஸ் கேக் செய்ய பாதாம் பருப்புகளையும் பழங்களையும் கொட்டி கலக்கியபடி போஸ் தரும் பன்னாட்டு தூதரக அதிகாரிகளும், சமூக சேவை செய்ய வரும் பல அயல்நாட்டு முகங்களும், புதிய ஒப்பந்தங்களை வேலைகளை அவுட்சோர்ஸ் செய்ய கையில் அக்வாஃபினாவுடனும் லேப்டாப் பையுடனும் வளையவரும் முகங்களுமே - வந்து போனது. அந்த பிரதிநிதிகள்/தூதரக அதிகாரிகள் மட்டுமே தங்க கட்டப்பட்ட வீடுகள், ரெசார்ட்கள், அவர்கள் பிள்ளைகள் மட்டுமே படிப்பதற்கான பள்ளிகள், அவர்கள் வலம்வர வழங்கப்படும் சொகுசு கார்கள் - எல்லாம் வந்து நின்றது கண்முன்னால் டிவி ஹைலைட் போல.சில இடங்களில் ப.சிதம்பரத்தின் முகம் கூட வந்து நிற்கிறது.


முதலில் எந்த நாட்டையும் கடனாளியாக்குவது, அதன்பின் அதன் இயற்கை வளங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வருவது - காடுகள், எண்ணெய் வளங்கள் - அதன்மூலம் வரும் வருவாய் மூலம் கடனை வட்டியுடன் அடைப்பது என்று அதிபர்களை நம்பவைப்பது - உண்மையில் இதுதான் திட்டமென்று கூறப்பட்டாலும் ஏகாதிபத்தியத்தை விரிவுபடுத்துவதும் அடிமைப்படுத்துவதுமே முழுமையான நோக்கம். அதற்குள் கடனை திருப்பிக்கொடுப்பது என்பதே சாத்தியமில்லாத ஒன்றாக ஆகியிருக்கும். அதற்கு பதிலாக அந்நாட்டின் கனிம வளங்களையும் நீராதாரங்களையும் எண்ணெய் வளங்களையும் உபயோகித்துக்கொள்ள ஒப்பந்தங்கள் அடுத்த கட்டமாக கையெழுத்தாகும். ஆனால், கடன் என்பது இருந்துக் கொண்டே இருக்கும். அமெரிக்கா தனது கரத்தை வலிமையாக்கி நாட்டை உறிஞ்சியபின் அந்நாட்டைத் தூக்கியெறிந்துவிட்டு அடுத்தநாட்டுக்கு - இப்படித்தான் ஜகார்த்தா, ஈக்வடார், கொலம்பியா, பனாமா...இப்படி அந்த தலைவர்களை மெல்ல மெல்ல பொருளாதார
வளர்ச்சி சி என்ற பெயரில் சூழ்ச்சி வலையில் விழ வைப்பதுதான் இந்த பொருளாதார அடியாள்களின் - மெய்ன் போன்ற நிறுவனங்களின் நோக்கம். அதன் அதிபர்கள் இந்த பொருளாதார அடியாட்களுக்கு மசிய வில்லையெனில் அடுத்த கட்டமாக “குள்ள நரிகள்” வருவார்கள். அவர்கள், இவர்களைவிட பயங்கரமானவர்கள். எதற்கும் துணிந்தவர்கள். நாட்டின் அரசியல்வாதிகள்/ அதிபர்கள் மசியவில்லையெனில் எதிர்பாராத விமான விபத்துகளால் மரணமடைவார்கள்.


இந்த பெர்க்கின்ஸ் அதை திறம்பட செய்பவர்.அதற்காக அவருக்கு பல வெகுமதிகள், பரிசுகள் என்ற பெயரில் லஞ்சங்கள். தன் வாழ்க்கை நிலை உயர வேண்டுமென்று அவரதுசெய்துக்கொள்ளும் சமரசங்கள் - இரவு பகலாக புத்தகங்களை கரைததுக்குடித்து தயாரித்து வழங்கும் econometrics திட்டங்கள் - கடைசியில் புலி வாலை பிடித்தது போல அவரால் வெளி வராமலே போவது என்று எல்லாமே இந்த புத்தகம் கூறுகிறது. ஈக்வடார் முதல் சவூதி அரேபியா வரை, பொருளாதார முன்னேற்றத்தில் அமெரிக்காவுக்கு அடிமையாகி போன நாடுகளின் நிலைகள், அரச குடும்பங்களுக்கும் அமெரிக்க அதிபர் புஷ் குடும்பத்தினருக்கும் இருக்கும் உறவுகள், இந்த குடும்பங்கள் வளர்த்தெடுத்த தீவிரவாத கும்பல்கள், அவர்களுக்கு அமெரிக்க அரசாங்கத்தில் இருந்த செல்வாக்கு போன்ற எண்ணற்ற விஷயங்களை - தீவிரவாதத்திற்கெதிரான போர் என்று சொல்லிக்கொண்டு போரிடும் அமெரிக்காவின் இன்னொரு முகத்தை தரிசிக்க முடிகிறது.


இந்தோனேஷிய மாணவி, பாண்டுங் அரசியல்வாதி, க்ளாடின், பொம்மலாட்டம் மூலமாக அரசியல் உணர்வூட்டும் பொம்மல்லாட்டக்காரர், ஜகார்த்தா,கொலம்பியா நாடுகளின் மேல் தட்டு வாழ்க்கைமுறை. நாற்றமெடுக்கும் ஆறுகள், குடிசைப் பகுதிகள், எண்ணெயை கசிய விடும் பேரல்கள் - இவையெல்லாம் வாசிக்கும்போது இந்தோனேஷியாவோ, கொலம்பியாவோ பனாமாவோ கண்கள் முன் நிற்காமல், இந்தியாவும், கூடங்குளமும், போபாலுமே, மஹாராஷ்ட்ராவுமே நினைவை ஆக்கிரமிக்கின்றன. எப்படி நம் வாழ்க்கையில் சப்-வேயும், மெ டொனால்ட்ஸ் பர்கரும், கேஃப்சி சிக்கன் பக்கெட்டும், மீட்டிங்குகளில் நம்முன் வைக்கப்படும் அக்வாஃபினா பாட்டில்களும், பிரியாணி வாங்கினால் கோக் இலவசம் என்று காம்போ ஆஃபர் வழங்கும் உணவகங்களும் இரண்டற கலந்தது நுகர்கலாச்சாரத்திற்கு அடிமையாக்கி இருக்கின்றன! நமது தாமிரபரணி ஆற்றுத் தண்ணீரை ஆழ்துளை மூலமாக உறிஞ்சி எடுத்து விவசாயிகளை,குடிமக்களை தண்ணீருக்கு அலையவிடும் நமது அரசாங்கம்! அந்த ஆலைக்கழிவுகளை ஆற்றுத்தண்ணீரில் கொட்டி வளங்களை பாழாக்கும் ஆலைகள் - தட்டிக்கேட்ட முடியாமல் - அவ்வாலைகள் மினரல் வாட்டர் பாட்டில்களில் அடைத்து தரும் மினரல் வாட்டரை குடிப்பதுதான் நாகரிகமென்று கருதி வாழும் நாம் - இதை எதிர்த்து கேட்பவர்களை “தீவிரவாதிகள்” என்று முத்திரைக் குத்துவது! ஒரு வேளை, தண்ணீர் அல்லது எண்ணெய் வளம் வற்றினால் அந்நிறுவனங்களுக்கு இருக்கவே இருக்கிறது - இதர முன்னேற துடிக்கும் நாடுகள்!

உண்மையில், இந்தியா ஒளிர்கிறது என்றும் “யஹி ஹே ரைட் சாய்ஸ் பேபி” என்று ரெமோ ஃபெர்னாண்டஸூடன் கூவியபோது இதுதான் நம் சாய்ஸ் என்று நினைத்தது எல்லாம் உங்களுக்கும் ரிவைண்ட் ஆகலாம். கலர்பிளஸ், காட்டன்ஸ், பெனிட்டன்-களின் கண்களை மயக்கும் சேல்கள், கண்ணாடிக் கதவுகள் பளபளக்கும் மால்களில் ஷாப்பிங் செய்த குற்றவுணர்வு - அதை தடுக்க உடனேயே ஏதாவதொரு ஹோமுக்கு இன்ஸ்டன்ட் தானம் செய்து மன திருப்தியடைந்துவிடும் நம் வாழ்க்கைமுறை!

எப்போதாவது உலக வங்கிக்கு இந்தியா கொடுக்க வேண்டிய கடன் இவ்வளவு - ஒவ்வொரு இந்தியனுக்கும் கடன்பட்டுள்ளான் என்று பேப்பரில் எண்களைப் பார்க்கும்போது நீங்கள் என்ன நினைப்பீர்கள்? சிறுவயதில் - (பள்ளிக்கூடம் படிக்கும்போது என்று கொள்க)இந்தக் காசை பிரதமருக்கு ஒவ்வொருத்தரும் அனுப்பி உலகவங்கிக் கடனை தீர்த்துவிட்டால் இந்தியாவின் கடன் தீர்ந்துவிடுமென்றுதன் சின்னப்புள்ளத்தனமாக நினைத்துக்கொள்வதுண்டு. இப்போதுகூட, தண்ணீர் தினம் என்ற சொன்னதும் தண்ணீரை சிக்கனமாக உபயோகிப்பது பற்றி பேசி செயல்படும் சாதாரண குடிமக்களுக்கு இருக்கும் பிரக்ஞையும் கடமை உணர்ச்சியும் கூட கோடி கோடியாக லாபம் சேர்க்கும் முதலாளிகளுக்கோ அல்லது அரசியல்வாதிகளுக்கோ இருந்தால்...?

சில இடங்களில் பெர்க்கின்ஸ் இடத்தில் நமது ப.சிதம்பரமும், மன்மோகனும் கூட பொருந்தி வருகிறார்கள்.

பெர்க்கின்ஸ் தனது ஆசைகளைத் தீர்த்துக்கொண்டபின்பு மனசாட்சி விழித்திருக்கிறது. நமக்கும், நமது அரசியல்வாதிகளின் மனசாட்சிகளும் விழிப்பது எப்போது?

பெர்கின்ஸ் எழுதிய இன்னொரு நூல், பாரதி புத்தகாலயம் வெளியிட்டிருக்கும் 'அமெரிக்க பேரரசின் ரகசிய வரலாறு'. விலை ரூ. 180/- 'ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்' படித்தவர்கள் அனைவருமே இந்நூலையும் வாசிக்க வேண்டும். ஏகாதிபத்தியத்தின் முழு சூழ்ச்சியையும் உணர்ந்துக் கொள்ள இந்த இரு நூல்களும் உதவும்.

"ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் " - ஜான் பெர்க்கின்ஸ். விடியல் வெளியீடு.
இந்த இடத்தில் தமிழில், அழகாக மொழிபெயர்த்த இரா.முருகவேளை குறிப்பிட்டே ஆக வேண்டும். மொழிபெயர்ப்பு நூல் என்ற உணர்வே இன்றி தங்குதடையில்லாமல் முழுவீச்சில் வாசிக்க வைப்பதற்கு இவரது மொழிபெயர்ப்பும் ஒரு காரணம். நன்றி முருகவேள்.

உலக தண்ணீர் தினத்துக்கான தொடர்பதிவுக்கு அழைத்த "சிறுமுயற்சி" முத்துலெட்சுமிக்கு நன்றி. நான் அழைக்க விரும்பும் பதிவர்கள்


"சிதறல்கள்" தீபா

"சின்னு ரேஸ்ரி" மாதேவி

"அந்தமான் தமிழோசை "க.நா.சாந்தி லட்சுமணன்

Friday, March 12, 2010

பப்பு டைம்ஸ்

நேற்றிரவு :

"பப்பு, வெண்மதி பர்த்டேவுக்கு என்ன வாங்கி கொடுக்கலாம்?"

"ம்ம்..நிஜமான போட் வாங்கிக் கொடுக்கலாம்! "

.....

"அவளுக்கு போட் ரொம்ப பிடிக்கும்.நாம பீச் வாங்கிக் கொடுக்கலாம், ஆச்சி!"

....

"சொல்லு, பீச் வாங்கிக்கொடுக்கலாமா?"


கொர்ர்ர்ர்ர்ர்.....காலை 6.30.

நான் : இன்னைக்கும் மெய்ட் வரலை. பாத்திரம் எல்லாம் ஸிங்லே இருக்கு!

முகில் : பப்புவுக்கு என்ன லஞ்ச்? சப்பாத்தியா - குட்டி தோசையா?

பப்பு : இன்னைக்கு கராத்தேவா யோகாவா?

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க, " that that man, that that worry"-ன்னு!!

இன்று காலை சாப்பிடும் நேரத்தில்,

"வெண்மதிக்கு கார்ட் கொடுக்கலாம், நீயே வரைஞ்சது...வரையலாமா?"

"வெண்மதிக்கு போன் பண்ணிக்கொடு, பேசிட்டு அவளுக்கு என்ன வரையணும்னு கேட்டுட்டு வரையறேன்."- பப்பு

"வெண்மதி தூங்கிக்கிட்டு இருப்பா..நீயே ஏதாவது அவளுக்குப் பிடிச்சது வரை. "

"ஏய், வெண்மதி சின்னது...அவ-கிட்டே கேட்டுட்டுத்தான் வரைஞ்சு கொடுக்கணும்! "

சின்னவங்கன்னா கேக்காம செஞ்சுதானே பழக்கம்!!

போனை செய்தால், வெண்மதி நிஜமாகவே தூங்கிக்கொண்டிருந்தாள்.

பப்புவே சமாதானமாகி, வெண்மதிக்கு பீச் பிடிக்குமென்று பெரிய சுறா, குட்டி மீன்கள், ஜெல்லி ஃபிஷ், ஆமை எல்லாம் வரைந்தாள். ஆனால், அவசரத்தில் வீட்டிலேயே விட்டுவிட்டு போய்விட்டாள்.

வெண்மதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் :

Thursday, March 11, 2010

கண்டுபிடிக்க முடியுதா?The Wonders மற்றும் BSB இன் இந்த பாடல்கள் நினைவூட்டும் தமிழ் பாடல்கள் எவை?

courtesy : you tube

Wednesday, March 10, 2010

கேர்ல்ஸ் டே!

பப்பு, இன்னைக்கு விமன்ஸ் டே!
உங்க ஆன்ட்டிக்கு விஷ் பண்ணு...

அப்படின்னா?

கேர்ல்ஸ் டே! விமன்-னா...கேர்ல்ஸ். ம்மு..மேன் சொல்றேல்ல..அது மாதிரி விமன்.

பாய்ஸ் டே?

வரும். ஆண்ட்டிக்கு ஏதாவது வரைஞ்சு எடுத்துட்டு போறியா?


அப்புறம், சாப்பிட்டுக்கிட்டே வரைஞ்சது/வரைஞ்சுக்கிட்டே சாப்பிட்டது கீழே.
இடம் சுட்டி பொருள் விளக்கம்:

பப்புவாம் அது..மவுண்டெய்ன் மேலே இருக்காங்களாம்..ஆண்ட்டிக்கு டான்ஸ் ஆடிகிட்டே பூ கொடுக்கறாங்களாம்..தலைக்கு மேலே ஆவி தாத்தாக்கு வீங்கியிருக்கற மாதிரி இருக்கறது அவளோட சிண்டு + ஹேர் பேண்ட். கண்ணுக்கு கீழே இருக்கும் கோடுகள் - ‘அம்மா இல்லே'ன்னா அழறாங்களாம்.(அம்மாவை வரையறது கஷ்டம்னு என்ன ஒரு சமாளிஃபிகேஷன்!)

மவுண்டெய்ன் வரையறதுதான் மேடம்-க்கு பிடிச்ச வேலை, அதுலே கோணல் மாணலா ரோடு போட்டு இதுதான் ஹேர் பின் பெண்ட்ன்னு சொல்லுவாங்க.


மகளிர் தினத்துக்கான என்னுடைய பதிவை வினவு தளத்தில் காணலாம். பெண்பதிவர்கள், வாசகர்களுக்கு, மகளிர் தினத்துக்கான வினவின் அழைப்பு இங்கே . நண்பர்கள் உற்சாகத்துடன் தங்கள் அனுபவங்களை, கருத்துகளை பகிர்ந்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Monday, March 08, 2010

சுவிஸின் "ஆனந்தி" இதழில் .....4 Tamil Media-வின் வெளியீடான சுவிஸ் தமிழ் மாத இதழ் "ஆனந்தி"-யில் வலைப்பூங்கா பகுதியில் வந்த சித்திரக்கூடம் பற்றிய அறிமுகம்! இது ஒரு எதிர்பாராத சர்ப்ரைஸ் - ஆனந்திக்கும், 4தமிழ்மீடியாவுக்கும் நன்றிகள்!! சித்திரக்கூடத்தைத் தொடர்ந்து வாசித்து பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்தும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்!

சுவிசிலிருந்து இதனை எனக்கு அனுப்பித்தந்த "சாரல்" சயந்தனுக்கு நன்றிகள்!


பின்குறிப்பு: படித்துப் பார்க்காமல், வெறுமே 'வாழ்த்துகள்' என்று பின்னூட்டமிடுபவர்கள், "ஆனந்தி"யில் சித்திரக்கூடத்தைப் பற்றி எழுதியிருப்பதை 100 முறை வாசித்து, மனப்பாடமாக ஒப்பிக்க வேண்டிய தண்டனைக்கு ஆளாவீர்கள்!

'ஃபோட்டோ' காப்பியில் எழுதியிருப்பதை மேற்கோளிட்டு பின்னூட்டமிடுபவர்களுக்கு பரிசுகள் அனுப்பி வைக்கப்படும்!
:-)

Saturday, March 06, 2010

ஸ்டெல்லா புரூஸ் கவிதைகள்

ஒன்பதாவது படிச்சுக்கிட்டு இருந்தேன்னு நினைக்கறேன். அப்போ திடீர்ன்னு ஸ்கூல்லே அரைநாள் லீவு விட்டுட்டாங்கன்னு வீட்டுக்கு வந்தேன். கதவு உள்பக்கமா பூட்டியிருந்தது. எனக்கு அப்போல்லாம் ஒரு பழக்கம் - ரொம்ப ஜாலியா இருந்தேன்னா அப்படி செய்வேன் - கதவை திறக்கிற வரைக்கும் 'டொங் டொங்' -ன்னு தட்டிக்கிட்டே இருப்பேன்.பொதுவா, ஒரு சின்ன சத்தம் கேட்டாக் கூட எட்டிப் பார்க்கிற ஆயா அன்னைக்கு ரொம்ப நேரமா நிக்க வைச்சுட்டாங்க, நானும் க்ரில் நாதாங்கியை தட்டிக்கிட்டு 'ஆயா ஆயா' -ன்னு கூப்பிட்டுக்கிட்டு இருக்கேன். 'வர்றேன்னு வர்றேன்'னு சொல்றாங்களே தவிர ஆயா லேட் பண்றாங்க. கதவை திறந்துட்டு என்னோட ரூமுக்குள்ளே நுழைஞ்சுக்கிட்டு கதவை லேசா ஒருக்களிச்சு சாத்திட்டாங்க. பையையும் செருப்பையும் வீசிட்டு முகம்- கை- கால் கழுவிட்டு ரூமுக்குள்ளே போறேன்.. ஆயா ஒரு நோட்டையும் இங்க் பேனாவையும் அவங்க பெட்டிக்குள்ளே வைக்கறது தெரியுது.

ஏதோ நோட்டை வைக்கறாங்கன்னு பெரிசா கண்டுக்கலை. ரஃப் நோட்டுக்காக ஆயா ஒரு குயர் வெள்ளைத்தாள் வாங்கி அதை வெட்டி எங்களுக்கு நோட் செஞ்சு கொடுப்பாங்க . அந்த ரஃப் நோட்டு மாதிரி இருந்தது. ஆயாவுக்கு, நாங்க ஸ்கூல்லேருந்து வந்தவுடனே கை கால் கழுவிட்டு ட்ரெஸ் சேஞ்ச் பண்ணனும். பையை சோபா மேலே வைக்கக் கூடாது. ஆனா நானும் சரி என் தம்பியும் சரி..திட்டு வாங்காம இதை ஒரு நாளும் செய்ய மாட்டோம். அன்னைக்கும் ஆயா திட்ட ஆரம்பிச்சாங்க..நான் உடனே ரூமுக்குப் போய் கதவை சாத்திக்கிட்டேன். அவங்களை எப்படி பழி வாங்கறதுன்னு நினைச்சப்போதான் 'டக்'னு ஐடியா. அந்த நோட் என்னவா இருக்கும்? அதை நாம ரஃப் நோட்டுக்கு எடுத்துக்கலாம்னு - ஆயாவோட பெட்டியை திறந்து அந்த நோட்டை எடுத்துட்டேன். அதுலே ஆயா முக்காவாசி வரைக்கும் எழுதி வைச்சிருந்தாங்க. அழகா இருந்துச்சு கையெழுத்து.

முதல் பக்கத்துலேருந்து படிக்க ஆரம்பிச்சேன். ஒரு பெண்ணோட கல்யாணத்துலேருந்து ஆரம்பிச்ச நினைவு. நிரைய கேரக்டர்ஸ். பூரணி தாரணி மாதிரி 'ணி'லே முடியற மாதிரி நிறைய பேருங்க( ஆயாவோட நிஜபேரு கல்யாணி). எந்த பேரு யாருன்னு கண்டுபிடிக்க முடியலை. கதையை ஃபாலோ பண்ணவும் முடியலை. ஏன்னா, அது வந்து, ஸ்டாலின் நடிச்ச ஒரு விடுதலை போராட்ட காலத்து சீரியல் பாஷையிலே இருந்தது. ஆயா என்னோட இந்த நாச வேலையை கண்டுபிடிச்சுட்டாங்க போல. 'என்ன பண்றே கதவ சாத்திக்கிட்டு'ன்னு குரல் கொடுத்தாங்க. 'வர்றேன்'னு பதில் குரல் கொடுத்துட்டு எவ்ளோ பேஜஸ் இருக்குன்னு பார்த்தா அது பாட்டுக்கு போய்கிட்டே இருக்கு. 'கதைவை திற' ன்னு ஆயா சொன்னதும், அவங்களை வெறுப்பதேத்த, 'நான் உங்க நோட்டை எடுத்து படிக்கறேன்'னு சொன்னதும் ஆயாவுக்கு ரொம்ப கோவம் வந்துடுச்சு.

ஆயாவுக்கு நான் எப்பவுமே ரொம்ப செல்லம். ஆனா, அன்னைக்கு ஆயா என்மேலே ரொம்ப கோவமாகிட்டாங்க. 'ஏன் என் உயிரெடுக்கறே-ன்ற மாதிரி ஏதோ சொன்னாங்க. நானும் கோவம் வந்து அந்த நோட்டை வைச்சுட்டேன். பெரியவங்க பேச்சை கேக்கறதுல்லே, பசங்கன்னா அப்படி இருக்கணும், இபப்டி இருக்கணும்னு திட்டு aka அட்வைஸ்! அப்புறம் அன்னைக்கு சாயங்காலம் விளையாடிட்டு வந்து பார்த்தப்போ அந்த பெட்டிலே ஒரு சின்ன நம்பர் லாக் தொங்குது.

அப்புறம் அதை நானும் மறந்து போயிட்டேன். ஆனா, ஆயா கதை எழுதறாங்கன்னு மட்டும் தெரிஞ்சது. ஒருவேளை சுயசரிதையா இருக்கும்னு நானா நினைச்சுக்கிட்டேன். அப்புறம் அந்த பெட்டியும் எங்கேயோ மேலே பரணுக்கு போய்டுச்சு. இப்போ கொஞ்ச நாள் முன்னே ஆயாவுக்கு
ஒரு நரம்பு ஊசி போட்டாங்க. அப்போ நாந்தான் அவங்க கையை பிடிச்சுக்கிட்டு இருந்தேன். ஊசி போட்டு முடிச்சப்பறம் குத்தின இடத்துலே பஞ்சை வைச்சு அழுத்திக்கிட்டு இருந்தப்போதான் ஆயா கையை கவனிச்சேன். அதிலேதான் எத்தனை சுருக்கங்கள்! அந்த ஒவ்வொரு சுருக்கத்துக்கும் பின்னாடி ஒரு கதை இருக்கும்தானே. இந்த கையாலேதான் ஆயா அந்த கதையை எழுதியிருப்பாங்க-ன்னு தோணுச்சு. வீட்டுக்கு வந்தப்பறம் மெதுவா ஆயாக்கிட்டே கேட்டா, 'ஆமா கதைதான் எழுதுனேன்'-னாங்க. 'அங்கேதான் மேலே எங்கேயாவது கிடக்கும்'னு சொல்லிட்டு 'படிச்சிருக்கியா'ன்னு கேட்டாங்க. 'எங்கே படிக்க விட்டீங்க'ன்னு சொன்னேன்.

அந்த நாவலை முடிச்சாங்களான்னு இல்லையான்னு ஆயாவுக்கு இப்போ நினைவில்லை. என்ன கதைன்னு கூட ஞாபகம் இல்லை. ஆனா ஆயா கதை எழுதறாங்கன்னு தெரிஞ்சப்போ எழுந்த ஒரு வித ஆச்சரியம் - பொறுமையா எல்லா பக்கங்களிலும் இருந்த சீரான அந்த கையெழுத்து! ஆயா நிறைய கதை படிப்பாங்கன்னு மட்டும்தான் தெரிஞ்சிருந்த எனக்கு - அதுவும், பழங்காலத்து கதை பேசிக்கிட்டு இருப்பாங்கன்னும், காலையிலே காஃபி போட்டு எங்களுக்குக் கொடுத்துட்டு 'செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண்சாமி'-ன்னு ஆரம்பிக்கும்போது, 'சில்வர் ஜூப்லி' கண்ட அந்த உலகப்புகழ் அருவா மனையை எடுத்துக்கிட்டு, காய்,வெங்காயம், தண்ணி குண்டான், அருவாமனைக்கு கீழே வைக்க பேப்பர் சகிதம் சமையலைறைக்கு பக்கத்தில் உட்கார்ந்து - காய்களை நாலாக எட்டாக அரிந்துக் கொண்டிருக்கும் ஆயா - அந்த அருவாமனையிலேருந்து வர்ற 'டக் டக்' சத்தத்தோட கேக்கற ஆயாவோட குரல் - பெரும்பாலும் ஆயாவும் பெரிம்மாவும் பேசிக்கறது அப்போதான் - நாட்டு நடப்பிலேருந்து நேத்து காய்கறிகாரன் பேரம் படியாத போனது வரைக்கும் - ஆயாவுக்குள்ளே இவ்ளோ இருக்கான்னு தெரிஞ்சதும் வந்த ஆச்சரியம்,பிரமிப்பு....!

இப்போ இந்த கொசுவத்தி எதுக்காக-ன்னா - சமீபத்துலே (!) அதே மாதிரி இன்னொரு ஆச்சர்யம் எழுந்தது - ஸ்டெல்லா புரூஸ் கவிதைகள் எழுதியிருக்காருன்னு தெரிஞ்சதும்.

ஸ்டெல்லா புரூஸ்-ன்ற பேரிலே கவிதைகள் எழுதலை. காளி - தாஸ் என்ற பேரிலே கவிதைகள், சிறுத்திரிக்கைகள் சூழல்லே எழுதியிருக்கார். அதே பேரிலே கவிதை தொகுப்பும் வெளியிட்டிருக்கார்.

இந்தத் தொகுப்புக்கு ஞானக்கூத்தன் ஒரு அழகான முன்னுரை எழுதியிருக்காரு. தொகுப்புல இருக்கிற முதல் கவிதைய பத்தி ஞானக்கூத்தன் விவரிச்சிருக்கிறதை வாசிக்கிறப்ப, ஒரு கவிதைய எப்படி அணுகி புரிஞ்சுக்கணும்னு நாம தெரிஞ்சுக்கலாம். தலைப்பு இல்லாம இருக்கிற அந்தக் கவிதை இதுதான்:

பொழுது விடிந்து

தினமும் நான்

வருவேனென்று

கடற்கரை மண்ணெல்லாம்

குஞ்சு நண்டுகள்

கோலம் வரைந்திருந்தன.

இந்தக் கவிதைக்கு ஞானக்கூத்தன் சொல்லியிருக்கிற விளக்கத்தை முன்னுரைலேந்து அப்படியே தரேன்...

''இக்கவிதையைக் காளி - தாஸ் சொன்னபோது அசத்தலாக இருந்தது. இக் கவிதை சில அமைவுகளைக் கொண்டிருப்பதாய்த் தெரிந்தது.

தினமும் வருகிறவன்

கோலமிடும் நண்டுக் குஞ்சுகள்

தினமும் கோலம்.

இப்படிக் கருத்துகள் அடுக்கப் பெறுகின்றன. இதில் 'வரைந்திருந்தன' என்று இறந்த காலத்தில் சொல்லியிருப்பதால் நண்டுக் குஞ்சுகள் கோலத்தை வளராதுவிட்டுப் போய்விடுவதால் நவிற்சிக்காரனுக்கு கவிதை சொல்பவன், தரப்படும் வரவேற்பில் அதன் பங்கு வரையறை உடையதாய் இருக்கிறது. ஆனால், இந்த வரையறை அதன் பெருமையைக் குறைக்கவில்லை. ஏனெனில் கோலமிடுதல் என்ற பணி மகத்துவம் உடையது.

'கோலம்'

இந்தச் சொல்லே மங்களமானது. கோலம் பெரிதானால் விழா பெரிதென்று பொருள். பெரிய விழா. பெரிய கோலம். ஒருவர் இருவர் சேர்ந்து போடமுடியாது. பலபேர் போட வேண்டும். அதனால்தான் நண்டுகள் என்று பன்மையில் கூறப்பட்டிருக்கிறது. போடுகிற இடம் பெரிது.

கடற்கரை மண்ணெல்லாம்...

இரண்டாவது அமைவு.

கோலம்

வீடு வெளி இரண்டு பிரதேசங்களிலும் கோலம் வரையப்படுவது மரபு. கோலம் இடப்பொருளாகத் தெரிகிறது. பார்வைக்கு இடப் பொருளானாலும் உண்மையில் அது காலப் பொருளானது. காலம் நன்றாக இருந்தால்தான் கோலம் வரையப்படுகிறது. இறப்பு நிகழ்ந்த வீட்டில் கோலம் வரையப்படுவதில்லை. இக் கவிதை 'பொழுது விடிந்து' என்று தொடங்குகிறது. பொழுது விடிந்து நீண்ட நேரமாகியும் ஒரு வீட்டில் கோலம் வாசலில் இடப்படவில்லை என்றால் அந்த வீட்டில் ஏதோ அமங்கலம் என்று பொருள். இக் கவிதை மங்கலமான விஷயத்தையும் சொல்கிறது.

வீட்டிலிருந்து வெளியே போகிறவர், வீட்டுக்கு வருகிறவர் ஆகிய இருவருக்குமே கோலம் பொதுவானதால் அது 'அகம், புறம்' என்ற தத்துவத்துக்கு அப்பால் செயல்படுகிறது. வீட்டில் இருப்பவர் வீட்டைவிட்டு வெளியே செல்வதென்றால் முதலில் வாசலில் பெயருக்காவது ஒரு சிறிய கோலமாவது போட்டு விட்டுத்தான் பிறகு அவர்களால் வெளியே செல்ல அனுமதிப்பது மரபு. ஏனென்றால் கோலமில்லாமல் வாசலைப் பிரேதம்தான் கடக்கிறது.

இக்கவிதையில் பொழுது விடிவு + விழாக்கோலம் என்ற அமைவு புலனாகிறது.

விழாத் தலைவர் 'யார்?' 'வருவேன்' என்று சொல்வது யார்? கடற்கரை, நண்டு என்ற சொற்களைக்கொண்டு பார்த்தால் 'வருவேன்' என்று சொல்வது 'சூரியன்'தான். ஆனால், கவிதை 'வருவேன்' என்ற சொல்லாட்சியில் ஒரு திருகலைக்கொடுக்கிறது. சூரியனுக்குத் தினகரன் என்று பெயர். அவன் தினத்தைச் செய்கிறவன். அதனால் தினகரன். 'வருவேன்' என்றவன் சூரியன் என்று பொருள் கொண்டால் கடலைப் புறப்பகுதியாகக்கொண்ட வீட்டுக்காரனான சூரியன் கோலமிட்ட கடற்கரையை வாசலாகக் கண்டு மகிழ்ந்து சொல்கிறான் என்று பொருள்படுகிறது. இதிலிருந்து ஒரு வாசகம் உருவாகிறது. அது கடக ராசியில் சூரியன் வருகிறான் என்பது. கடகராசி என்பது நண்டுக் கூட்டம். எனவே கடக ராசியில் சூரியனுக்கு வரவேற்புக் கூறி மகிழ்கிறது இக் கவிதை. வருவேன் என்ற செயல் கடற்கரைக்குப் போகிறவனையும் சாதாரண நிலையில் குறிக்கிறது. கடற்கரையில் நண்டுகள் விட்டுச்சென்ற தடங்களைக் கண்ட நெஞ்சில் இப்படி எழுந்து அமைகிறது கவிதை.''


கோலம் போடறத பத்தி எனக்கு சில மாற்று கருத்து இருந்தாலும், இந்தக் கவிதைக்கான விளக்கமா ஞானக்கூத்தன் எழுதியிருக்கறதை படிக்கிறப்ப 'அட'னு தோணுது.


அவரோட 'நானும் நானும்' புத்தகத்திலிருந்து சில கவிதைகளை பகிர்கிறேன்.

அது வேறு உலகம்

ஓணான் முதுகாய்த் தெரியும்

புளிய மரக்கிளைகளுக்கும்

இடமுண்டு

என் பால்ய உலகில்

சுட்டுப் பொசுக்கி தின்பதுண்டு

சிட்டுக் குருவிகளை

துவாரம் விழுந்த

கால்சட்டைப் பையில்

கைவிடச் சொல்லியிருக்கிறேன்

பக்கத்து வீட்டுப் பெண்ணை

கடிதமெழுதி சித்தியை

காதலித்த கணம்

கலைந்த உலகம்

இன்னும் சுழல்கிறது நினைப்பில்

கிழிந்த காற்றாடியாய்...

---------

''நானும் நானும்''


தெருக்காட்சியில்

ஓசையற்றுத் தெரிகிறேன்

தூரத்து அருவியாய்

அநேகமாக

நடமாடும் தாவரம் போல்

யாவருக்கும் தோன்றுகிறேன்

ற்தோவொரு பூவின்

விஸ்வ - ரூபமாகத் தெரிந்தாலும்

தெரிவேன் போலிருக்கிறது

ஆனால்; காலமும்

காலமின்மையும் சந்திக்கும்

நிமிர்கோடாய் நிற்பதுதான் என்முகம்

அதிலிருந்து ஓர்

நிசப்தம்

ஒலிப்பரப்பாகிறது எப்போதும்

-----------

இலக்கிய கோத்ரங்கள்

விலை உயர் சிற்றுண்டி நிலையம்

பழச்சாறு அருந்தும் தோழி தோழன்

நாய்கள் வளர்க்கும் சீமாட்டி

மாருதி ஓட்டும் கனவான்

எவருக்கும் சான்றிதழ் கிடையா

மேலும் தீண்டத் தகாதோர்

பட்டியலில் பலருண்டு

கரிசல் காட்டில் முகாமிட்டு

இலக்கிய தாசில்தார்

கையேடு வைத்திருக்கிறார்

தருவார்

இலக்கிய மாந்தர் முத்திரை

பத்தாம் தேதி நாஞ்சில் நாடு

இருபதாம் தேதி கொங்கு நாடு

ஆங்காங்கு சிபாரிசுத் தரகர் குலம்

பெருநகர தமிழில் அணுகாதீர் அய்யா

நாட்டுப் புற தமிழே உச்சம்...

------------

மண்


மண்ணில் உட்கார்ந்ததும்

சொந்தம்

இயல்பாக ஒட்டிக் கொள்கிறது

அதன் மெளனம்

நிறம்

அமைதி

கொஞ்சமும் தலையிடவில்லை

எத்தனை தூரம் நடந்தாலும்

உடன் இருக்கிறது

கவனித்துக் கொண்டே இருக்கிறது

ஒருநாள்

மண்ணோடு மண்ணாகிவிட

ஆதங்கம் வந்தது

சாய்ந்தேன்

மண்ணே இல்லாமல்

ஆகாயம் தெரிந்தது

---------

நான் ஏதோ மலையில்

கல்லுடைப்பதாக எண்ணி

அனைவரும்

அலட்சியமாக பார்த்தனர்

அவர்களுக்குத் தெரியவில்லை

நான்

மலையை உடைத்துக் கொண்டிருக்கிறேன்.

----------

ஒழிந்த நேரங்கள்

நான்

ஒழிந்த நேரத்தில் பிறந்தேன்

நான்

ஒழிந்த நேரத்தில் வளர்ந்தேன்

நான்

ஒழிந்த நேரத்தில் படித்தேன்

நான்

ஒழிந்த நேரத்தில் எழுதினேன்

நான்

ஒழிந்த நேரத்தில் விளையாடினேன்

நான்

ஒழிந்த நேரத்தில் காதலித்தேன்

நான்

ஒழிந்த நேரத்தில் சம்பாதித்தேன்

நான்

ஒழிந்த நேரத்தில் கல்யாணம் செய்தேன்

நான்

ஒழிந்த நேரத்தில் புணர்ந்தேன்

நான்

ஒழிந்த நேரத்தில் பிள்ளை பெற்றேன்

நான்

ஒழிந்த நேரத்தில் குடித்தேன்

நான்

ஒழிந்த நேரத்தில் தூங்கினேன்

நான்

ஒழிந்த நேரத்தில் சாமி கும்பிட்டேன்

நண்பர்களே வாருங்கள்

ஒழிந்த நேரம் பார்த்து

ஒழிந்த நேரம் ஒன்றில்

நான் செத்துப் போகும் முன்...

----------

"பாடைக் காட்சி"

நான்கு பேர் சுமக்க

கடற்கரையிலிருந்து பாடை கிளம்பியது

பேசியபடி நண்பர்கள் சிலர்

பாடையை தொடர்ந்தார்கள்

யாருடைய முகத்திலும் வருத்தமில்லை

ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டு போனார்கள்

பாடையைத் தூக்கிக் சென்றவர்கள்

மிகவும் நிதானமாக நடந்தார்கள்

பாடை குலுங்காமலும்

அதிகம் அசையாமலும்

கவனித்துக் கொண்டார்கள்

நண்பர்கள் சிகரெட் பற்ற வைத்தார்கள்

சினிமா பற்றியும் அரசியல் பற்றியும்

விவாதித்தார்கள்.

பஸ்ஸிலும் தெருவிலும் பலர்

பாடைக் காட்சியை கண்டார்கள்

சாலத்தில் கழுத்தில் மாலை இல்லை

பின் போனவர்கள் யாரிடமும்

மரண காரியம் செய்யும் தோற்றமில்லை

பீடிக்கு தீ கேட்பதுபோல

ரிக்ஷாகாரன் ஒருவர்

நெருங்கி வந்து கேட்டான்

செத்து போனது யார் ஸார்?

ஒருவனும் அவனுக்கு பதில் சொல்லவில்லை

வெகுநேரம் சென்றபின் பாடை

திண்ணையிட்ட ஒரு வீட்டெதிரில்

இறக்கப்பட்டது.

எல்லோரும் மௌனமாக நின்றார்கள்

பாடையில் இருந்தவர் எழுந்து

வீட்டிற்குள் போனார்

தூக்கி வந்தவர்களுக்குப் பணம் தந்துவிட்டு

நண்பர்கள் உள்ளே சென்றார்கள்

வீட்டுப் பெண்கள் கலவரமடைந்து கேட்டார்கள்

என்ன கர்மம் இது

ஏனிப்படி பாடையில் வரணும்?

ரொம்பத்தான் களைப்பாக இருந்த்து

பஸ் டாக்ஸி ரிக்‌ஷா

எதிலும் ஏறப் பிடிக்கவில்லை

பாடையில் படுத்து நன்றாக

தூங்கிக் கொண்டு வந்தேன் என்றார்

மரணம் நிகழ்ந்த துக்கம்

முகங்களில் படர

பெண்கள் நிசப்தமானார்கள்

களைப்புடன் நண்பர்களும்

நாற்காலிகளில் சாய்ந்து

கண்மூட

வெற்றுப்பாடை

வீதியில் போனது.


ஒவ்வொருத்தருக்குள்ளேயும்தான் சொல்றதுக்கும் எழுதறதுக்கும் எவ்ளோ விஷயம் இருக்கு இல்லே? என் பக்கத்துலே இருந்த ஆயாவுக்குள்லே இருக்கற விஷயங்களை/கதைகளை/வாழ்க்கையையே என்னாலே இன்னும் முழுசா தெரிஞ்சுக்க முடியலை...ஸ்டெல்லா புரூஸூக்குள்ளேயும் எவ்ளோ இருந்திருக்கும்?!

மரச்சட்டம் போட்ட கண்ணாடிக்கு பின்னால் இருக்கற தாத்தா,மாமா ஃபோட்டாவெல்லாம் பார்த்து அவங்கள்ளாம் இப்போ எங்கேன்னு சின்ன வயசுலே கேட்டப்போ ராத்திரி வானத்தை காட்டி 'அவங்க நட்சத்திரமாயிட்டாங்க, அதோ அங்கே தெரியறாங்க'-ன்னு
சொல்லுவாங்க சின்ன மாமா. நாங்களும், ஆளுக்கொரு நட்சத்திரத்தை பார்த்துக்கிட்டு இருப்போம். "அதோ உன்னை பார்த்து கண் சிமிட்டறாங்க, பாரு"ன்னு சொன்னதும் எந்த நட்சத்திரம் மினுக்குதோ அதை தாத்தாவாவும், சின்ன நட்சத்திரங்களை மத்த ஃபோட்டாலே இருக்கறவங்களாவும் கற்பனை பண்ணிக்குவோம்.

பப்புவுக்காக என் தம்பி இருட்டுலே மினுக்கற நட்சத்திர ஸ்டிக்கர்களை ஒட்டி வைச்சிருந்தான்.

நேத்து இந்த கவிதையெல்லாம் படிச்சுட்டு, லைட் ஆஃப் பண்ணிட்டு, யோசிச்சிட்டு இருந்தப்போ மேலே இருந்த ஒரு பெரிய நட்சத்திரம் மினுக்கறா மாதிரி இருந்தது....

ஆத்மாநாமை நான் படிச்சதில்ல. ஆனா, அவரும் தற்கொலை செஞ்சு இறந்ததா கேள்விப்பட்டிருக்கேன். ஆத்மாநாம் மூலமா கவிதைல அறிமுகமான ஸ்டெல்லா புரூஸும் தற்கொலை செஞ்சுகிட்டாரு.

இந்த முரணை எப்படி புரிஞ்சுக்கறது?

Thursday, March 04, 2010

ஆர் எஸ் டி யூ வி.....எக்ஸ் ஒய்...

என் பெயர் ரஞ்சிதா.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் சுருட்டு சாமியாருடன் தற்கொலை செய்துகொண்டேன்.
திருச்சியில சில ஆண்டுகளுக்கு முன் கற்பழிக்கப்பட்டேன்.
நூற்றாண்டுகளுக்கு முன்பு என் உடல் அசையும்போது நான் மாதா ஹரி.
துவாரகாவின் உடலென்று மிதந்து வந்தேன்.
மணிப்பூரின் மனோரமாவாக
கண்ணகியாக
அகலிகையாக
டயனாவாக
ஜீவிதாவாக
இன்னும் என்னவெல்லாமோவாக
என் உடல் எப்போதுமே இருந்துக்கொண்டேதான் இருக்கிறது...
......................................
...................................
......................................
உங்களில் எவனொருவன் என்னைப் பார்த்தமட்டில்
கண்களாலேயே கற்பழிக்காமல்
என் அளவுகளை யோசிக்காமல் இருக்கிறானோ
அந்த யோக்கியவான் எடுக்கட்டும்
எனக்கான முதல் கல்லை!

Tuesday, March 02, 2010

சோழர்கால கல்வெட்டை பார்க்கணுமா?எனக்கு நிறைய ஹோம்வொர்க் இருக்கு, அப்புறம் பேசறேன், பை!”


(ஆண்ட்டி எனக்கு ஹோம்வொர்க் தரலைன்னா என்ன, நானே ஹோம்ஒர்க் பண்றேன். )

Monday, March 01, 2010

ஸ்டெல்லா புரூஸ் - நினைவஞ்சலி!

ஆறாவது படிக்கும் போது குழந்தைகள் புத்தகங்களான ‘கோகுலத்திற்கும்' 'அம்புலிமாமா'விற்கும் மட்டுமே எனக்கு அனுமதி உண்டு. எனது ஹார்மோன்கள் வேலை செய்ய ஆரம்பித்திருந்த நேரமோ அல்லது கோகுலம் இதழ் ஆங்கிலத்தில் மாற்றப்பட்டிருந்ததில் சுவாரசியம் இழந்துவிட்டிருந்தேனோ தெரியவில்லை...16 வண்ணப்படக்கதைகள் கூட லயிக்கவே இல்லை. வேறு ஏதேனும் புத்தகங்களை படிக்கத் தேடிக்கொண்டிருந்தேன். ஆவியும் கல்கியும் மட்டும் படிக்கலாம். மற்ற புத்தகங்கள் எல்லாம் 'பெரியவங்க புக்'. பழைய அட்டை பெட்டிகளில் இருந்த 'முத்தாரம்' , 'கல்கண்டு'களிலிருந்து - 'உங்களுக்கு தெரியுமா', ‘ஜூப்ளியின் நம்பினால் நம்புங்கள்' முதலியனவற்றை படித்து போரடித்திருந்த நேரத்தில் கையில் கிடைத்தது 'மௌனமே காதலாக'. அதை எத்தனை முறை வாசித்திருப்பேன் என்று எனக்கேத் தெரியாது. அதேபோல ‘ பச்சை வயல் மனது'ம். 'பச்சை வயல் மனது' கல்பனா கடைசியில் பஸ் ஸ்டாண்டுக்கு நடந்து செல்வது இன்னும் என் கற்பனையில் இருக்கிறது. இவை எல்லாம் பெரியவர்கள் தூங்கும் நேரத்தில் அல்லது விருந்தினர்கள் வந்திருக்கும் நேரத்தில் வாசித்து கண்டுகொண்டது.

ராமமூர்த்தி மாமாவினால் வீடு வந்து சேர்ந்தது “கரையோர முதலைகள்”. 'ஃபோட்டோ எடுக்கறதுக்கு முன்னால் ஆரஞ்சு வண்ண ஜாங்கிரிகள். சுத்தி வைக்கப்பட்டிருந்த ஜாங்கிரிகள். ஸ்வப்னாவுக்கு ஜாங்கிரி பிடிக்கும்'- என்ற ரீதியில் வாசித்துக் கொண்டிருக்கும்போது பெரிம்மா அறைக்குள் நுழைந்துவிட, பயத்தில், அந்த புத்தகத்தை, புத்தக அலமாரியின் சந்துக்குள் தூக்கிப் போட்டுவிட்டேன். பெரிம்மா இதையெல்லாம் கவனிக்காமல் 'இன்சைட் அண்ட் அவுட்சைட் ' புத்தகத்தை எடுத்துக்கொண்டு போய்விட்டார். ப்லாஸ்டர் ஆஃப் பாரிஸில் செய்த இடுப்பு வரையிலான நிர்வாணமான பெண் சிலையின் அட்டைப்படம் கொண்ட அந்த புத்தகத்தை திரும்ப எடுக்க முயல்கிறேன். எடுக்க வரவில்லை. ஒட்டடை அடிக்கிறேனென்று பாவ்லா காட்டி புத்தகத்தை கண்டெடுத்து வாசித்து முடித்தேன். ஒரு நினைவுக்காக பார்த்ததில் தெரிந்தது - நாவலின் பெயரும், கிழே எழுதியிருந்த 'பாலகுமாரன்' என்ற பெயரும்.

எல்லா பரிட்சை விடுமுறைக்கும் மாமா வீட்டுக்கு வடலூர் பயணம். வீட்டில் ஒரு பெரிய அலமாரி - மர அலமாரி. அதை அலமாரி என்று சொன்னால் இன்றைய அலமாரிகள் கோபித்துக் கொள்ளக் கூடும். ஆறு கால்கள், இடையில் சட்டங்கள் வைத்து செய்யப்பட்ட பெரிய மரதாங்கி. அதில்தான், பெரிம்மாவின் ஆங்கில் இலக்கிய புத்தகங்கள், ஷேக்ஸ்பியர் முதல் ரென் அன் மார்ட்டின் வரை, அம்மாவின் வரலாற்று புத்தகங்கள், பெரிய மாமாவின் அரசியல் புத்தகங்கள், இளங்கோ மாமாவின் லெனின் புத்தகங்கள்...அப்புறம் காங்கிரஸ் வரலாறு, காந்தியன் தாட்ஸ்,சத்திய சோதனை, சுபாஸ் சந்திரபோஸ் - என்று சகலருக்கும் அடைக்கலம். அந்த புத்தகங்களை என்னவென்று எடுத்து அட்டைப்படம் பார்த்ததோடு சரி...'அஞ்சலையம்மாள், மெட்ராஸ் லெஜிஸ்லேஷன்' என்று படம் இருந்தால் ஒரு புரட்டு புரட்டி ‘ஹை ஆயா' என்பதோடு முடிந்துவிடும்.

அந்த மரதாங்கியைத் தாண்டி, அறைக்குள் சென்று வேவு பார்த்ததில் கார்ட்போர்டு பாக்ஸில் ஒரு உலகம் தூங்கிக்கொண்டிருப்பது தெரியவந்தது. எல்லாம் 70களில், 80 களில் வந்த ஆவியிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட சிறுகதைகள், நாவல்கள், மற்றும் துணுக்குத் தொகுப்புகள். அதைத்தாண்டி கல்கியில் வெளிவந்த பொன்னியின் செல்வனை கொண்டு தொகுக்கப்பட்ட ஐந்து பாகங்கள். கல்கியினுடையது மட்டுமே அழகாக பைண்டு செய்யப்பட்டு பாகம் 1,2 என்றெல்லாம் எழுதப்பட்டு இருந்தது. மற்றவை , சாக்கு ஊசியைக் கொண்டு டொயின் நூலில் தைக்கப்பட்டவை. புதையலைக் கண்ட பூதம் போல எதை முதலில் எடுப்பதென்று தெரியாமல் பழுப்பு நிற அட்டையில் எழுதியிருந்த நடுத்தர அளவிலான ஒரு நாவலை எடுத்தேன். ‘அது ஒரு நிலாக்காலம்.'..

அதன்பின், ஒவ்வொரு விடுமுறையிலும் அந்த நாவலை வாசிப்பது பழக்கமாயிற்று. வெயில் தகிக்கும் பின்மத்தியான வேளையில் கொட்டாயின் மேலிருந்து சம்பந்தட்டியை கீழிறக்கி நீருற்றி, அதன் நிழலில் கயிற்றுக் கட்டில் போட்டு ஆயா படுத்து விடுவார்கள். எல்லா பசங்களோடும், தரையில் பலப்பத்தால் கட்டம் கட்டி புளியங்கொட்டையில் பல்லாங்குழியில் ராஜா, ராணி, மந்திரி விளையாடி தோற்றுப்போய் சண்டையிட்டு நான் சரணடைவது ‘அது ஒரு நிலாக்காலம். 'சுகந்தா' ஆம்பூருக்கு சென்றபின்னும் நினைவுகளில் வந்தார். வுமன்ஸ் எராவில் 'குவாலியர்' என்ற ஊரிலிருந்து ஏதேனும் வாசகர் கடிதம் எழுதியிருந்தால் சுகந்தாவின் நினைவு வந்தது. பக்கத்துவீட்டு கெஜாம்மா மதுரைக்குச் சென்றால், தேனிக்கு பக்கத்திலிருக்கும் ராம்ஜியின் வீடும், அவரது அண்ணாக்களின் மில்களும் எனக்குள் எட்டிப்பார்த்தன. வைகையை பற்றி பாடத்தில் படித்தால் ராம்ஜியின் குடும்பம் வைகை டேமுக்கு பிக்னிக் சென்றது ஞாபகம் வரும். அவ்வளவு ஏன்? இப்போதுக்கூட, கிண்டி கத்திப்பாராவை தாண்டினால் வரும் படைவீரர்கள் துயிலும் கல்லறைகளில் பூத்திருக்கும் ரோஜாமலர்களை காணும்போதெல்லாம் 'அது ஒரு நிலாக்கால'த்து ஆங்கிலோ இந்தியப்பெண் 'ரோஸ்மேரி' அங்கே உறங்கிக் கொண்டிருப்பதாகவேத் தோன்றும். (செண்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் செல்லும் வழியில் மேம்பாலத்தைக் கடக்கும்போது தெரியும் கல்லறை தரும் உணர்வுகள் வேறு!) 'அது ஒரு நிலாக்கால'த்தின் கதாநாயகன் ராம்ஜியை பெல்பாட்டம் போட்ட ரஜினியாக, கல்யாண ஆல்பத்தில் இருக்கும் பெரியப்பாவாக, பழைய கறுப்பு வெள்ளை ஃபோட்டோவில் ஸ்டைலாக நிற்கும் இளங்கோ மாமாவாக(இளங்கோ மாமாவும் பெரிப்பாவும் மட்டுமே சென்னையை எட்டிப் பார்த்தவர்கள்.ராம்ஜியும் சென்னை.) - சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் உயரமாக ,ஒடிசலாக, அலையலையாக ஸ்டெப் கட்டிங் வைத்திருந்தவராக உருவகப்படுத்தி இருந்தேன்.


பின்னர், ஆவியில் வந்த ஸ்டெல்லா புரூஸின் சிறுகதைகளைத் தவிர வேறு எதுவும் படிக்க வாய்க்காதிருந்தது. இன்றைக்கும், திருவல்லிக்கேணியைப் பற்றி கேள்விப்பட்டால், நாதமுனி என்ற பெயரும் அங்கே மேன்ஷனில் தங்கி இருந்த முதியவரும், விசேஷமான நாட்களில் வீட்டு நினைவில் ஏங்கும் அவரது தனிமையும், இறுதியில் அவரை அங்கிருந்து அழைத்துச் சென்ற அவரது மகனும் அங்கிருப்பதாகவே தோன்றும். 'அது ஒரு நிலாக்கால'த்துக்குப் பின் மனதில் அழுந்தி பதிந்த நாவல்கள் 'பனங்காட்டு அண்ணாச்சி'யும், 'மாயநதிகளும்தான்.

பனங்காட்டு அண்ணாச்சியின், அந்த காலத்து சோப்பு பிசினஸும், அவரது அம்மா கணவனை இழந்தபின் உறவினர்களிடமிருந்து சொத்துகளைப் பாதுக்காக செய்த தந்திரமும்...மாயநதிகளின் உலகநாதனைத்தான் மறந்துவிட முடியுமா! துவையல் அரைக்கச் சொல்லும் பாங்கும், அவரது இளம் மனைவியும், சிநேகமாக இருந்த பக்கத்துவீட்டு இளைஞனும், அதே தெருவில் வசித்து வந்த ஒரு தனித்த பெண்ணுக்கும், உலகநாதனுக்கும் இருக்கும் நுண்ணிய உணர்வுகளும் எனது கற்பனையில் உருவம் கொண்டனர். அந்த பெண்ணுக்கு கணவனில்லை. உலகநாதனுக்கோ மனைவில்லை. இவர் வரும் நேரங்களில் அந்த பெண் திண்ணையில் அமர்ந்து பேசிகொண்டிருந்தாலும் எழுந்து நிற்பாள். அவருக்கும் அந்தப் பெண்ணுக்கும் எந்த பேச்சுவார்த்தையுமிருக்காது. சொல்லப்போனால், அந்த பெண் உலகநாதனின் மகள் வயதிருப்பவள். ஆனால், அவர் எழுந்து நிற்பது உலகநாதனுக்கு கொடுக்கும் பரஸ்பர மரியாதை போல. இவரும் தலை நிமிர்ந்து நடந்து செல்பவர் அவள் எழுந்து நிற்பதை அறிந்ததும் தனது தலையை தாழ்த்திக்கொண்டு செல்வார். அதை ஆமோதிப்பது போல. அந்த பெண்ணிற்கு பதில் மரியாதை செய்வது போல. ஒருநாள், உலகநாதன் அந்த பெண்ணின் வயதுடைய வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு வந்ததும் , இந்த பெண்ணின் மரியாதை காணாமல் போகும். இளம்பெண்ணை மணம் செய்துக்கொண்டு மனைவி மேல் சந்தேகம் பீடித்து மனஉளைச்சலுக்கு ஆளான உலகநாதனுக்கு இந்த மரியாதையும் (!) கிடைக்கத்தாதது இன்னும் எரிச்சலை, கோபத்தைக் கூட்டும். வாசிக்க சுவாரசியமான நடை கொண்ட நாவல்.

கதைகள் படிப்பதில் இருந்த ஆர்வம் இந்த நாவலை எழுதியவர் யாரென்று தெரிந்துக்கொள்வதில் இருக்கவில்லை. (யார் எழுதியது என்றெல்லாம் பார்த்து வாசிக்கும் அளவுக்கெல்லாம் அறிவு இருக்கவில்லை..அப்போதும் சரி..இப்போதும் சரி! சுவாரசியமான கதையை படிப்பதே முக்கியமாக பட்டிருக்கிறது.)அப்படியே தெரிந்திருந்தாலும் அதை தெரிந்துக் கொண்டு என்ன செய்யப் போகிறேனென்ற மெத்தனம்தான். பத்திரிக்கையிலிருந்து எடுக்கப்பட்ட அத்தியாயமானதால், ஒவ்வொரு அத்தியாயத்திலும் எண் போடப்பட்டு, அதன்கீழ் ஸ்டெல்லா புரூஸ் என்று எழுதியிருந்தது, சிரத்தை இல்லாமல் மனதிலும் பதிந்தும் போயிருந்தது. இந்தியா டுடேயின் இலக்கிய மலர்களில், எழுதுபவர் படம் போட்டு கீழே அவர் தற்போது என்ன செய்துக்கொண்டிருக்கிறார், எங்கிருக்கிறார் என்று சிறிய எழுத்தில் போட்டிருப்பார்கள். அதில், இந்த மாதிரி ஸ்டைலிஷ் பெயர்கள் இருந்தால் 'தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார். எழுதுவது அவரது இலக்கிய ஆர்வம்' என்ற ரீதியில் ஒரு குறிப்பு எழுதியிருப்பார்கள். அதைப்போல, ஸ்டெல்லா புரூஸ் என்ற பெயரை ஆவியில் பார்க்கும் நேரங்களில் 'அமெரிக்காவில் வாழும் பெண் போல' என்று நினைத்துக்கொள்வேன். மேலும் அவர் கதைகளும் அப்படித்தான் இருக்கும். அதாவது சொஃபஸ்டிகேட்டட் லைஃப் கொண்ட மனிதர்கள்.. அவர்கள் வாழ்வில் நடக்கும் உறவுமுறை சிக்கல்கள்.. காதல்கள்...பிரிவுகள்...உளவியல் ரீதியான குழப்பங்கள். எனக்கு அப்போது (இப்போதும்தான்) சோக ரசத்தை பிழிந்து வறுமையை வதக்கித் தரும் தரும் எழுத்துகள் ஒவ்வாதிருந்தன. ‘ நாமே அப்படி இருக்கும்போது நாம் படிக்கறதும் அப்படித்தானா இருக்கணும்' என்ற நினைப்பும் காரணமாக இருக்கலாம்.

இரு ஆண்டுகளுக்கு முன், ஆவியில் வெளிவந்த பேட்டியைப் பார்த்தே தெரிந்துக்கொண்டேன்...ஸ்டெல்லா புரூஸ் என்பவர் இங்கிருந்து எழுதுபவர் என்று. அவரும் சுஜாதாவைப் போல பெண் பெயரில் எழுதுபவர் என்று . அது ஒரு நிலாக்காலம் ராம்ஜி - அவரது, ராம்மோகனின் சொந்த வாழ்வின் ஒரு பகுதி என்பதை தெரிந்துக் கொண்டதும் அப்போதுதான். ஆச்சர்யமாக இருந்தது...அதே சமயம அதிர்ச்சியாகவும்..

அவரது மனைவியின் புகைப்படம் போட்டு, மருத்துவ செலவுகளுக்காக மிகுந்த கஷ்டத்திலிருப்பதாகவும், உதவ நினைப்பவர்கள் உதவலாமென்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அடுத்த சில மாதங்களில் அதிர்ச்சியோ அதிர்ச்சி...அவர் தற்கொலை செய்துக்கொண்டது. சட்டென்று, 'உலகநாதனி'ன் நினைவும், குவாலியரிலிருந்து துயரம் தோய்ந்த கடிதங்கள் எழுதும் 'சுகந்தா'வின் நினைவும்தான் வந்தது. அவரது படைப்புகளில், உலகநாதனும் மற்ற கதை மனிதர்களும் தற்கொலை செய்துக்கொள்வர்...இவரும் தனிமையின் பாரம் தாங்காமல் தற்கொலை செய்துக்கொண்டது, மேலும், எழுத்தாளர் சுஜாதாவும் மறைந்த சில தினங்களுக்குள்ளேயே இவரும் மறைந்தது ‘என்னடா இது, எழுத்தாளர்கள் ஒவ்வொருவராக இறக்கிறார்களே' என்று தோன்ற வைத்தது எல்லாம் ஞாபகத்தின் அறையில் அடுத்தடுத்த செல்களில் சேமிக்கப் பட்டிருக்கிறது. மனித மனத்தின் சிக்கல்களை, குழப்பங்களை, எண்ண ஒட்டங்களை எழுதியவ்ர், உறவுகளுக்குள் வரும் சிக்கல்களை கதைமாந்தர்களோடு அலைய விட்டவர் எடுத்த முடிவு.....:-(
(வார்த்தைகளும், அட்வைஸுகளும் எப்போதும் எளிதுதான்.)

எதாவது முக்கியமான நிகழ்வுகளின்போது நான் உடனே தேடுவது தமிழ்மணம். யாராவது ஏதாவது அந்நிகழ்வு குறித்து எழுதியிருக்கிறார்களா என்று பார்ப்பது சில வருடங்களாகவே வழக்கமாகி விட்டது. அவரது மரண செய்தியை தாங்கிக் கொண்டு தமிழ்மணத்தில் பார்க்கிறேன்... ஸ்டெல்லா புரூஸ் பற்றி எந்த பதிவும் கண்ணில் படவில்லை. யாராவது ஸ்டெல்லா புரூஸ் பற்றி பதிவெழுத மாட்டார்களா என்று இருந்தது. யாருடனாவது 'அது ஒரு நிலாக்காலம்' அல்லது 'மாயநதிகள்' வாசித்தவர்கள் அல்லது தேன்மொழி, அவளது இன்ஸ்பெக்டர் கணவனது கதையைப் பற்றி பேசி பேசி ஆற்றிக்கொள்ள வேண்டும் போல இருந்தது. ஒரு வாரத்தில் அந்த அதிர்ச்சியும் சாதாரணமாகி விட்டது.


என்றைக்கேனும், நான் கதை எழுதினால் அது ஸ்டெல்லா புரூஸினுடையது போல இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன். அவருக்கு, ஒரு வாசகராக, என் பதின்ம வயதில் விதவிதமான மனிதர்களை, சூழ்நிலைகளை, காதலை, சந்தேகத்தை, குழப்பங்களை, மனத்தின் நுட்ப உணர்வுகளை அறிமுகப்படுத்திய ஸ்டெல்லா புரூஸுக்கு எனது நினைவஞ்சலிகள்!