Friday, January 29, 2010

வம்சியின் புத்தக வெளியீடு : இடமாற்றம்

பைத்தியக்காரன் மற்றும் மாதவராஜ் அவர்களின் பதிவுகளில் தெரியப்படுத்தி இருந்த வம்சியின் புத்தக வெளியீடு கீழ்கண்ட இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்நிகழ்ச்சி நடக்கவிருந்த புக்பாயிண்ட்டில் தீப்பிடித்து பல லட்சம் புத்தகங்கள் அழிந்துவிட்டதாக மாதவராஜ் அவர்களின் இடுகை கூறுகிறது.

இடமாற்றம் குறித்து தேவையானவருக்கு செய்தி சென்றடையும் பொருட்டு :

சனிக்கிழமை (30.1.2010) மாலை புத்தக வெளியீடு நடக்கும் இடம்:

தீபிகா செண்டர்
22, டெய்லர்ஸ் சாலை
கீழ்ப்பாக்கம் கார்டன்
(ஈகா தியேட்டர் பக்கத்துச் சந்து)
சென்னை

ஞாயிறு (31.1.2010) காலை புத்தக வெளியீடு நடக்கும் இடம்:

இக்‌ஷா மையம்
பாந்தியன் சாலை
(மியூசியம் அருகில்)
எக்மோர்

இதனை வாசிக்கும் நண்பர்கள், தங்களுக்குத் தெரிந்த இலக்கிய ஆர்வலர்களுக்கும் இந்த இடமாற்ற விபரத்தைத் தெரியப்படுத்தி உதவுங்கள்.

பாப்பின்ஸ்

அவளது கன்னத்தையும் எனது கன்னத்தையும் வருடிவிட்டு "ஸ்மூத்தா இருக்கீங்கம்மா' என்பாள்.
பின், என்னையும், 'ரஃபா ஸ்மூத்தா பாரு' என்று பார்க்கச் சொல்லுவாள். நானும் வருடி விட்டு
'ஸ்மூத்தா இருக்கே' என்பேன்.

'நான் உங்களுக்கு மட்டும் தான் ஸ்மூத்தா இருப்பேன்மா, வர்ஷினிக்கு ஸ்மூத்தாவே இருக்க மாட்டேன்'

நீ எப்படி இருந்தாலும் எனக்கு பிடிக்கும் பப்பு! :-)
பப்பு சொன்ன உடனே அவளுக்கு அதை செய்துவிட்டாலோ அல்லது கொடுத்துவிட்டாலோ
என் கால்களை கட்டிக்கொண்டு சொல்வாள்.

'அம்மா, நீங்க குட்'மா' (குண்டு'மா என்று மாற்றி படிப்பவர்களுக்கு கருடபுராணத்தின் படி எண்ணெய் சட்டிதான்!)

எனக்குள் இருந்த கசடுகள் அந்த நிமிடத்தில் உதிர்ந்து போயின!

அகஆழின் பதிவிலிருக்கும் முரண் பற்றிய கவிதையும் அந்த தருணத்திற்கு நெருக்கமானவையே!
'வெரிகுட் பப்பு, பெட்டை ஈரமா ஆக்கவே இல்ல, நீ ராத்திரி எழுப்பினே இல்ல பாத்ரூம் போறதுக்கு' - என்பேன் காலையில்.

வர்ஷினி?

இதுதான் மில்லியன் டாலர் கொஸ்டின்.

'குட்' என்று சொல்லிவிட்டால் பப்புவுக்குள் துளிர் விட்டிருக்கும் பொறாமை கை வழியே நீளும். கண்கள் வழியே நீரைக் கொட்டும். வர்ஷினி 'பேட்' என்று சொல்லிவிட்டால் அவ்வளவுதான் - தொலைந்தீர்கள். பப்புவுக்குள் இருக்கும் வர்ஷினியின் தோழி வெகுண்டெழுவாள்.

'வர்ஷினியும் உன்னை மாதிரியேதானாம்' என்பது எனது பதிலாக இருந்தது.

'குட்'டா பேடா சொல்லு 'என்று ஆரம்பித்ததிலிருந்து எனது நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது!

Thursday, January 28, 2010

ஏ ஃபார் ...

...ஏக்கம்!

சுதா கான்வெண்டில் ஆண்டுவிழா நடக்கும். (ஸ்கூல்னு இருந்தா ஆண்டு விழாவெல்லாம் நடக்கத்தானே செய்யும்..ஹூம்..மேலே!) அது எப்பொழுதும் ஜனவரி-பெப்ரவரி சமயங்களில்தான் நடக்கும். யூகேஜி படிக்கும் போது வெல்கம் டேன்ஸ் ஆடுவதுதான் ஃபேஷன். அட்டையில் எழுதின எழுத்துகளை கழுத்தில் மாட்டிக்கிட்டு, உள்ளேருந்து ஒவ்வொருத்தரா ஆடிகிட்டே வந்து
கடைசிலே W E L C O M E-ன்னு வரிசையா நிப்பாங்க. அப்புறம் எல்லோரும் ஒண்ணா சேர்ந்து ஒரு டான்ஸ். யூகேஜி படிக்கும்போதுதான் முதன்முதலா இந்த டான்சை பார்த்தேன். அதுக்கு முன்னாடி பெரிம்மா ஸ்கூல் ஆண்டுவிழாலே
பரதநாட்டியம் ட்ரெஸ் போட்ட அக்காதான் கை கட்டை விரலை தோள்பட்டையிலேருந்து சுத்தி வளைச்சு தரையிலே தொட்டு வணக்கம் வைச்சுட்டு ஆடுவாங்க. அப்புறம், 'அழகு மலராட', 'இந்தியா என்பது என்வீடு'
'வான் போலே வண்ணம்' பாட்டுக்கெல்லாம் அக்காங்க ஆடறதை பார்த்துட்டு வீட்டுக்கு வந்து 'ரா ரா ரஸ்புடினு'க்கும், 'லீவ் அ லைட்'டுக்கும் பரதநாட்டியமெல்லாம் ஆடியிருக்கேன். எங்கே விட்டேன்...வெல்கம் டேன்ஸ்..ஆமா, வெல்கம் டேன்ஸுக்கு பொதுவாக முதல் வகுப்பு
இரண்டாம் வகுப்பு பசங்களைத்தான் சேர்ப்பாங்க. ஏன்னா அப்போதானே குட்டீஸா இருப்பாங்க. சில சமயத்துலே யூகேஜிலேருந்து ஒரே ஒருத்தரை மட்டும் சேர்த்துப்பாங்க.

ஒண்ணாவதுலே, எங்க கிளாஸுலேருந்து கணிசமா கொஞ்சம் பேரை டான்ஸுக்கு சேர்த்துக்கிட்டாங்க. மிஸ் என்னை பார்த்து, டான்ஸ் மாதிரியான நளினமான விஷயங்கள் எல்லாம் எப்படி இந்த பொண்ணுக்கு வரபோகுதுனு தப்பா எடை போட்டுட்டாங்க போல. அப்படி தேர்ந்தெடுக்கப்படறதுக்கு சில தகுதிகள் தேவைப்படும். அதாவது, அவங்க சொல்ற கலர்லே பட்டு பாவாடையோ, பாவாடை சட்டையோ இருந்தா உங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அப்புறம் முடி வளர்த்து இருக்கணும் இல்லைனா
டான்ஸுக்கேத்த மாதிரி அலங்காரம் பண்ணி விடறவங்க உங்க வீட்டுலே இருக்கணும். அதுலேயும் பரதநாட்டியம் கத்துக்கிற பசங்களுக்கு முன்னுரிமையிலும் முதலுரிமை.

ஆயாவுக்கு, என்னை தினமும் சாயங்காலம் தேடிப்பிடிக்கறதே பெரிய விஷயம்.விளையாடிட்டு, தொலைஞ்சு போகாம ஒழுங்கா வீட்டை கண்டுபிடிச்சு
வந்துட்டேன்னாலே அவங்களுக்கு உலக மகா சந்தோஷம்தான். ஆறுமணிக்கு வாசல்லே இல்லைன்னா, பெரிம்மாக்கிட்டே ட்யூஷனுக்கு வந்த அண்ணாங்க ரெண்டு பேரு, தெருவோட ரெண்டு முனையிலேயும் தேடிக்கிட்டு இருப்பாங்க. (ஒளிஞ்சு விளையாடும்போது அவங்க கூப்பிட்டா எப்படி வரமுடியும்?) இதுலே பரதநாட்டியம் கத்துக்கிறது எல்லாம் ஸ்கோப்லேயே இல்லே. ப்ரென்ச் கத்துக்குறது இல்லேன்னா இந்தி கத்துக்கிறதுன்னா ஒருவேளை என்னை அனுப்பியிருப்பாங்க.

அப்புறம், டான்ஸுக்கு செலக்ட் ஆகிட்டா அவ்வளவுதான். ராஜ மரியாதை. அவங்களுக்கு மட்டும் தனி ரூல்ஸ். மத்தியானம் சாப்பிட்டபுறம்தான் ப்ராக்டீஸ் இருக்கும். அதனாலே மத்தியான சாப்பாடு எடுத்துட்டு வந்துடணும்.
மாடிலே ஒரு ரூம் இருக்கும். சாதாரண நாட்களில் அங்கே அனுமதி இல்லை.(அந்த மாடி ரூம்க்குள்ளே போகணும்னா ஸ்பெஷல் பர்மிஷன் வேணும்) அது ஒரு பொக்கிஷ அறை மாதிரி. அங்கேதான் ப்ராக்டிஸ்.
அப்புறம் ஸ்கூலுக்கு லீவ் போடக்கூடாது. கண்டிப்பா ஊருக்கெல்லாம் போகக் கூடாது (அதாவது ஆண்டு விழாக்கு முன்னாடி) அப்புறம், முக்கியமா ட்ரெஸ் மற்றும் அலங்காரம்.இந்த ரூல்ஸை வச்சுக்கிட்டு இவங்களும் நம்மக்கிட்டே ஒரு அலட்டல் கொடுப்பாங்க.

ஸ்கூலுக்கு பக்கத்துலேயே எல்லோர் வீடும் இருந்ததாலே மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு போய்ட்டுதான் வருவோம். எனக்கு மத்தியானம் ஸ்கூல்லே சாப்பிடணும்னு ரொம்ப ஆசையா இருக்கும். ஆனா ஆயா விட மாட்டாங்க. இந்த ப்ராக்டீஸ் இருக்கறப்போ மட்டும் செலக்ட் ஆனவங்க எல்லாம் சாப்பாடு எடுத்துட்டு வரணும், சீக்கிரம் சாப்பிட்டுட்டு மாடி ரூமுக்கு போய்ட்டணும்.
அப்போ மட்டும் கொஞ்ச பேரு சாப்பாடு எடுத்துட்டு வருவாங்க..அந்த பேக்கை பத்திரமா அவங்க பக்கத்துலே வச்சுப்பாங்க. மிஸ் பார்த்துட்டு ஹோம்வொர்க் வைக்கற செல்ஃப் கீழே வைக்கச் சொல்லுவாங்க. இரண்டாம் வருஷத்துலேயாவது நம்மை கண்டிப்பா செலக்ட் பண்ணுவாங்கன்னு நம்பிக்கிட்டு இருந்தேன்.இரண்டாம் வருஷத்துலே நாந்தானே சீனியர். உயரமா வேற இருந்தேனா..செலக்ட் ஆகிட்டேன். ஆனா வெல்கம் டான்ஸ் இல்லே..ஃபேஷன் மாறிடுச்சு. கலர் பேப்பர் சுத்தின ஒரு வளையத்தை பிடிச்சுக்கிட்டு டான்ஸ் ஆடிக்கிட்டே ஒலிம்பிக் வளையம் மாதிரி ஏதோ ஒரு ஷேப் ஃபார்ம் பண்ணனும்.அந்த வளையம் பார்க்க மல்லிப்பூ சுத்தின மாதிரியே இருக்கும். எனக்கு ஃப்ளூ கலர் வளையம். ஏன்னா என்கிட்டே ஃப்ளு கலர் ஃபிரில் வச்ச ப்ராக் இருந்தது.

ப்ராக்டீஸின் முதல் நாள். 'சாப்பாடு ரெடி ஆனதும் நான் கொண்டு வரேன்னு' ஆயா சொல்லிட்டாங்க. ஸ்கூல்லே சாப்பிடபோறேன்னு ரொம்ப ஆசையா இருந்தேன். ஏன்னா ரவுண்டா ப்ரெண்ட்ஸ் கூட உட்கார்ந்துக்கலாம். டிபன் பாக்ஸ்லேருந்து சாப்பிடலாம். அப்புறம் டேன்ஸூம் ஆடப்போறோம்னு ஜாலியாவும் இருந்துச்சு.ஒரு குதூகலமான மனநிலைக்கு தள்ளப்பட்டிருந்தேன்ன். இந்த சந்தோஷத்துலே மிஸ் எது சொன்னாலும் காதுலே விழவே இல்லை. பெல் அடிச்சது. கொஞ்ச பேருக்கு வீட்டுலேருந்து தாத்தா பாட்டிங்க அம்மா அத்தைங்க எல்லோரும் சாப்பாடு கொடுத்துட்டு போய்ட்டாங்க. வரவேண்டிய எல்லோருக்கும் சாப்பாடு வந்துடுச்சு.எல்லோரும் சாப்பிட உட்கார்ந்துட்டாங்க. எங்க ஆயாவை மட்டும் காணோம். எனக்கு பதைபதைப்பா இருக்கு..கிளாஸ் ரூமுக்கும் வாசலுக்கும் எட்டி எட்டி பார்க்கிறேன். அப்புறம் மிஸ் போய் சாப்பிட்டுட்டு வந்துடுன்னு சொல்லிட்டாங்க. ரெண்டு தெரு தள்ளிதானே...நானும் வேகமா போனா, ஆயா எங்க ஸ்கூல் தெருமுனையிலே வந்துக்கிட்டு இருக்காங்க... நான் வர்றதை பார்த்துட்டு என்னை வீட்டுக்கு கூப்டுக்கிட்டு போய்ட்டாங்க. வீட்டுலே போய் அந்த டிபன்பாக்ஸ்லே
சுடசுட இருந்த கடலைக்குழம்பு சாதம்,ரசம் சாதம் சாப்பிட்டேன்.ஆயா தட்டுலே போட்டு சாப்பிட சொன்னதை கேக்கவேயில்ல.

அப்புறம், ரெகுலரா போய் ப்ராக்டீஸ் பண்ணிக்கிட்டு இருந்தேன். தினமும் கனவிலெல்லாம் கூட டான்ஸ் ஆடறமாதிரியே வரும். அந்த நேரத்துலேதான் திடீர்னு ஒரு செய்தி. ஆண்டுவிழா பரிட்சைகள் முடிஞ்சப்புறம்தான்னு. எனக்கு ஒரே பயம். ஏன்னா பரிட்சை முடிஞ்சதும் அடுத்த நாளே நாங்க வடலூர் கிளம்பிடுவோம். ஒருநாள் கூட ஆயா இருக்கமாட்டாங்க. பால்காரருக்கு, கீரைக்கார ஆயாவுக்குன்னு எல்லோருக்கும் சொல்லிடுவாங்க. பத்துநாள் ஊருக்குப் போறோம்னு. ஆண்டுவிழா பரிட்சைக்கு அடுத்த நாள்னு சொன்னதுக்கு ஆயாவும் ஒண்ணும் சொல்லல. பரிட்சைல்லாம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி, கடைசியா ஒரு நாள் ரிகர்சல் இருந்தது, எல்லோரும் அவங்கவங்களுக்குச் சொன்ன கலர் ட்ரெஸ் போட்டுக்கிட்டு வந்து ஆடணும். நான் மேட்சிங்கா, ஆயா வாங்கிக்கொடுத்திருந்த ப்ளூ கலர் வளையலும் போட்டுக்கிட்டு போய் ஆடினேன்.
அப்புறம் அந்த வளையங்களை எல்லாம் அழகா அடுக்கி மாடி ரூம்லே வச்சிட்டோம். பரிட்சை முடிஞ்சு நாளைக்கு ஆண்டு விழா. அனைக்கு ராத்திரி ஆயா துணியை எடுத்து மடிச்சு பைக்குள்லே வைக்கிறாங்க. 'ஊருக்கு கண்டிப்பா போயே ஆகணும், டான்ஸ் எல்லாம் அடுத்த வருஷம் பார்த்துக்கலாம்'னு சொல்லிட்டாங்க. வயத்துக்குள்ளேருந்து ஏதோ உருண்டு வந்து தொண்டையை அடைக்குது. எதையோ இழந்த மாதிரி ரொம்ப ஏமாற்றமா இருக்கு. ஆனா அழலை. மிஸ் கிட்டே என்ன சொல்றது,நான் இல்லாம எப்படி பார்ம் பண்ணுவாங்கன்னெல்லாம் நினைச்சுக்கிட்டேன். ஆயாக்கிட்டே சொன்னா,'சீ கழுதை..நீ இல்லாம அங்கே டான்ஸே நடக்காதா'ன்னு சொல்லிட்டாங்க.
'நான் வரலைன்னு நாளைக்கு போய் மிஸ்கிட்டே சொல்லிட்டு வரேன்'னு ஆயாகிட்டே சொன்னேன். 'அதெல்லாம் வேணாம்,அப்புறம் பஸ் கிடைக்காது,
விடிகாலையிலேயே கிளம்பணும்'னு சொல்லிட்டாங்க.

ராத்திரில்லாம் நான் மட்டும் பஸ்லேர்ந்து தப்பிச்சு போய் டான்ஸ் ஆடற மாதிரி ஒரே கனவா வந்தது. அடுத்த நாள், மனசெல்லாம் அவங்க மட்டும் மேடையிலே ஆடறதையும், ஃபார்ம் பண்றதையும் கற்பனை பண்ணிக்கிட்டு பஸ்ஸுலே போய்க்கிட்டிருந்தேன் டான்ஸ் ஆட முடியாத ஏக்கத்தோடே!

Wednesday, January 27, 2010

Letter of the week - e

பப்புவுக்கு, முட்டை வடிவம் பெரிய அளவில் வரைந்தால் கீழிருப்பது போலத்தான் வருகிறது. (இரண்டு முட்டைகள் நான் வரைந்தேன்.) 'Little Egg' என்ற புத்தகத்தை வாசித்தோம். அடைகாக்கும் அம்மாவிடமிருந்து முட்டை உருண்டு ஓடி பின்னர் அம்மாவிடம் வந்து சேரும் கதை.


அவளாகவே கொண்டு வந்த இன்னொரு புத்தகம் கேட்டர்பில்லர். நீண்ட நாட்களுக்குப் பிறகு வாசித்தோம். குட்டி கேட்டர் பில்லரை பார்த்ததும், 'அம்மா கேட்டர்பில்லர் எங்கே' என்றாள். 'பட்டர்பிளைதான் அதோட அம்மா, பட்டர்பிளைதான் இலையிலே முட்டை போட்டுச்சு, அப்புறம் பறந்து போய்டுச்சு' என்றதும் 'இல்லே அம்மா-அப்பா கேட்டர்பில்லர் இருக்கணும்' என்றாள். 'கேட்டர்பில்லர் பெரிசாகி எப்படி மாறிடும்' என்றால் 'பட்டர்பிளையா மாறிடும்' என்றாள். பட்டர்பிளையா மாறி முட்டை போடும் என்றேன். ஆனாலும் குட்டி கேட்டர்பில்லர் அம்மா-அப்பா இல்லாமல் தனியாக இருப்பதை பப்பு விரும்பவில்லை.யானையின் காது, கை, கால் மற்றும் வாலை இணையத்திலிருந்து பிரிண்ட் எடுத்துக்கொடுத்தேன். வண்ணங்கள் அவளது தேர்வு. செவ்வகத்தை வரைந்து காதுகளை மேலே ஒட்டச் சொன்னேன். கால்களை ஒட்டிவிட்டு கண்கள் மற்றும் தும்பிக்கையை வரைந்தாள். வாலை எங்கே ஒட்டுவது என்று தெரியாமல் கேப் கிடைத்த இடத்தில் ஒட்டினாள்.
அடுத்தது என்ஜின். பப்புவுக்கு அவளது பொம்மைகளை சேரில் உட்காரவைத்து டூர்ர்ர்ர்ர் என்று ஓட்டிக்கொண்டு போய் பள்ளியில் விளையாடும் விளையாட்டு பிடிக்கும். என்ஜின் இப்படித்தான் இருக்குமாம்.


தமிழிலும் ஆங்கிலத்திலும் இருந்த இரு மொழி கதை புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தோம். தமிழில் இருந்ததை வாசித்தேன். ஆங்கிலத்தை டெஸ்ட் செய்யலாமென்று,

தோட்டத்துக்கு இங்கிலிஷிலே என்ன ?

கார்டன்

பூ?

ஃப்ளவர்

'அழகான'

சூப்பர்!!

!!

Monday, January 25, 2010

1000ல் 1வன்

”செகண்ட் ஹாஃப் பார்க்காதீங்க...உங்களாலே பார்க்கவே முடியாது”

”செகண்ட் ஹாஃப் பார்த்தாலும் சண்டை வந்தா கண்னை மூடிக்கோங்க..பார்க்காதீங்க”

”கண்டதெல்லாம் சாப்பிடுவாங்க..உங்களாலே பார்க்க முடியாது...”
(காவிரி டெல்டாவில் எலியை சுட்டு சாப்பிட்ட சோழ வம்சத்து விவசாயிகளின் நிலையை விடவா...கோரமாக இருந்துவிடப்போகிறது!)

-அலுவலக நண்பர்களின் அறிவுரைகளை எல்லாம் மீறி பார்த்து விட்டேன்.

'நம்ம தமிழ் சினிமாக்காரங்களுக்கு மரத்தை பார்த்தா சுத்திக்கிட்டு டூயட் ஆடத்தான் தெரியும்' என்று பெரிம்மா சொன்னது செல்வராகவன் காதில்
விழுந்துவிட்டது போல. மரத்தை சுற்றி டூயட் இல்லை. ஆங்கில படத்துக்கு நிகரான தமிழ் படம்!

வன்முறை அதிகம்தான். ஆனால், கார்கள் சீறிப்பாய்வதையும்,
கையில் துப்பாக்கியுடன், ரோட்டில் செல்லும் எவரையும் சுடத்தயங்காத அலையும் ஹீரோவையும் இஞ்ச் இஞ்சாக கதாநாயகியை உடலையும், படுக்கையறைக்காட்சிகளையும் மாய்ந்து மாய்ந்து காண்பிக்கும்
படங்கள் செய்யாத வன்முறையையா இந்தப்படம் செய்துவிடப்போகிறது?

அபோகலிப்டோ, ட்ராய், கிளாடியேட்டர், இண்டியானா ஜோன்ஸ், மம்மி ரிடன்ஸ் இன்னபிறவற்றை முகில் புண்ணியத்தில் சில-பல தடவைகள் பார்த்ததில் எந்த அதிர்ச்சியும் எனக்கு இல்லை. அல்லது மரத்துபோய் விட்டது.

குறைகள் உண்டுதான்...ஆனால், உடையார் நாவலை வாசித்து ஏற்றுக்கொள்ளும்போது இந்தக் படத்தையும் ஏற்றுக்கொள்வதில் என்ன தவறு? (என்னைப் பொறுத்தவரை உடையார் நாவல் ராஜாக்கள் காலத்து ‘அப்பம் வடை தயிர்சாதம்')

பார்த்திபனின் நடிப்பு அசத்தல். ராஜாக்கள் ஒருவேளை இப்படித்தான் இருந்திருப்பார்களோ என்றும் தோன்றவைத்தது. நமது ராஜாக்கள் ஓடிப்போனாலும், சில வருடங்களுக்குப் பிறகு பெரிய படையுடன் வந்து ஆட்சியை கைப்பற்றிக்கொள்வதாகவே வரலாற்று நாவல்களில்
வாசித்திருந்ததால் முடிசூடிக்கொள்ள அழைக்கும் தூதுக்காக ராஜா ஏன் காத்திருக்கிறார் என்றுத் தோன்றியது.

'சோழ வள நாடு சோறுடைத்து, சோழர்களுக்குப் பதில் பாண்டியர்களை அவ்வாறு காட்டியிருக்கலாம்' என்பது (பாண்டியர்களின் மேல் என்ன கோபமோ!) முகிலின் இரண்டு பைசா.

சோழ ராஜாவின் கோட்டையும், குகை சித்திரங்களும் நிழலின் மூலம் வழியறிதலும் , பார்த்திபன் மற்றும் கார்த்தியின் ஆட்டமும் ரசிக்க வைத்த காட்சிகள்.

குகைச் சித்திரங்கள் வடலூரின் சத்திய சன்மார்க்க சபையை நினைவூட்டியது. அங்கே ஒரு அறையில் அதில் வள்ளலாரின் பிறப்பு, கடவுள் அருள் அவர் மேலே இருந்தது, அவரது அண்ணன் செல்ல வேண்டிய கதாகலாட்சேபத்திற்கு
உடல்நலக்குறைவால் அவர் செல்ல இயலாதபோது ராமலிங்கம் சென்று உரையாற்றியது, ஆறுமுக நாவலர் தொடுத்த வழக்கிற்கு நீதிமன்றதிலும் மருதூரிலும் ஒரே நேரத்தில் காட்சி தருதல், சபையின் ரகசிய வழியில்
சிதம்பரத்திற்கு நடந்தே செல்லுதல் போன்ற காட்சிகளை சுவரிலே வரைந்தும் வைத்திருப்பதை இதே போல ஆச்சர்யத்துடன் பார்த்ததும் நினைவுக்கு வந்தது.

எங்கேயோ போய்விட்டேன்....

‘1000ல் 1வன்' கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். செல்வராகவனுக்கு பாராட்டுகளுடன் நன்றிகள்!

Sunday, January 24, 2010

உப்பு, புளி, காரம்

உப்பு, புளி, காரம் என்ற மூன்று நண்பர்களைப் பற்றிய கதை.
'வெறும் குழம்பு சாப்பிட்டார்கள், சூப்பரா இருந்தது' என்பதெல்லாம் கதையில் இல்லை.

Saturday, January 23, 2010

இரண்டு புத்தகங்களும் குடியரசு தினமும்

பள்ளியில் சேர்ப்பதற்கு முன் பப்புவை பார்த்துக்கொள்ள ஒரு முழுநேர உதவியாளரை அமர்த்தியிருந்தோம். அவரிடம், ஈரமாக இருந்த பப்புவின் உள்ளாடையை அலசுமாறுக் கொடுத்தேன். “முதலியார் ஜாதியில் பொறந்துட்டு இதெல்லாம் செய்ய வேண்டிருக்குது” என்றார் வாங்கிக்கொண்டே. இன்னின்ன வேலைகள் அவர் செய்ய வேண்டியிருக்கும் என்று சொல்லித்தான் அவரைச் சேர்த்தோம்.

ஆம்பூரில் கடைத்தெருவிற்கு சென்றிருந்தோம். குறுகலான சந்து. யாரோ வண்டியை குறுக்காக திருப்ப முயல வாகன நெரிசல் ஏற்பட்டுவிட்டது. பின்னர் வண்டிகள் மெதுவாக நகர ஆரம்பித்தன, வ்ழியை அடைத்துக்கொண்டிருந்த வண்டிக்குப் பின்னால் பைக்கில் நின்றிருந்தவர் கத்தினார், ‘ எவன்யா அவன்....சரியான கொல்ட்டியாக இருப்பானா?!”

வாகன நெரிசலுக்கும் கொல்ட்டிக்கும் (ஆம்பூரில் தெலுங்கு பேசுபவர்கள் இருந்தாலும் அதில் ஒரு பிரிவினரை அவ்வாறு அழைப்பார்கள்)
என்ன சம்பந்தம்? என்ன அர்த்தம் அதற்கு? கொல்ட்டி அல்லாதவர்கள் ஒருபோதும் வாகன நெரிசல் ஏற்படுத்த மாட்டார்களா?

அன்றாட வாழ்க்கையிலேயே சாதி நம்மிடையே இந்தளவுக்கு பரவிக்கிடக்கும்போது, அதிகாரம் படைத்த அரசாங்க/தனியார் மயமாக்கப்பட்ட நிர்வாகங்களில் எந்தளவுக்கு புரையோடி போயிருக்கிறது என்பதை தெளிவாகக் காட்டுகிறது, தலித் முரசு வெளியிட்டிருக்கும் அய்.இளங்கோவன் அவர்களின் “வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே, எங்களிடம் வராதீர்கள்” என்ற புத்தகம் . இது தலித் முரசுவில் தொடராகவும் வந்திருக்கிறது.

'தகவல் அறியும் சட்டம்' என்பது எத்தனை பயனுள்ளது என்பது இந்த ஒரு புத்தகத்தை வாசித்தாலே தெரியும். தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்லூரிகளில், சிறுபான்மையினரின் கல்லூரிகளில் உள்ள பணியிடங்கள், அதில் தலித் மக்களின் இடஒதுக்கீடு, பழங்குடி மக்களுக்கான இடஒதுக்கீடு, அதில் எத்தனை நிரப்பப்பட்டுள்ளன என்ற தகவல்கள், புள்ளிவிவரங்களுடன்! ஆச்சரியமும் திகைப்பும் மேலிடும் ஒரு விஷயம் - அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளில் ஒரே ஒரு பழங்குடி விரிவுரையாளர் கூட இல்லை என்பது!! ஆசிரியர் அல்லாத பணியிடங்களிலோ ஒரே ஒரு பழங்குடியினர் மட்டுமே. அதுவும் பெருக்குவதற்கு!

பெரும்பாலான ஆதிதிராவிட மக்கள் சுய மரியாதைக்காகவும், சமூகத்தில் சம உரிமைக்காகவுமே இஸ்லாத்துக்கும் கிறிஸ்தவத்திற்கும் மதமாறுகின்றனர். ஆனால், அங்குமே அவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை என்பதே இந்த தகவல்களும், இந்த புத்தகமும் நமக்குக்கூறும் உண்மை. வேறு எங்கோ படித்த நினைவு, “ஆதிதிராவிடர்கள் மதமாறிய பிறகு பிற்படுத்தபட்டவர்களாக கருதப்படுவர்” என்று!


தலித் மற்றும் பழங்குடியினரின் முன்னேற்றத்திற்காக அரசு திட்டங்களை வைத்திருந்தாலும் அதை பயன்படுத்தும் கல்லூரிகள் இல்லையென்றே கூறிவிடலாம். அவர்களின் உரிமையை பெற்றுத்தருவதற்காகவோ பாதுகாக்கவோகூட ஒருவரும் இல்லை. எ.காக,
கல்லூரிகள் தலித் மாணவர்களின் எதிர்கால வழிகாட்டியாக ஒருவரை நியமிக்க வேண்டும். ஆங்கில வழியில் கல்வி கற்கும் திறனை வளர்த்துக்கொள்ள அரசு வழங்கும் மானியம் - இவை எதுவுமே ஒன்றிரண்டு கல்லூரிகளைத் தவிர எதிலும் கடைபிடிக்கப்படுவதில்லை. இன்னும் பெரும்பாலான நல்ல திட்டங்கள் இருந்தாலும் அவை எதுவுமே அவர்களைச் சென்றடையாமல் பார்த்துக்கொள்கின்றன இந்நிர்வாகங்கள்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி அனைவரும் சமம் என்று கூறும் நமது அரசும், அரசின் மக்களும் தலித்துகளிடமும் சரி ,பழங்குடியினரிடமும் சரி சம உரிமையை நிலைநாட்டுவது இல்லை என்பதே இந்த தகவல்களின் படி நமக்கு விளங்கும் உண்மை. 60 ஆண்டுகளான குடியரசு நாட்டில் ஆதிதிராவிடர்கள்/பழங்குடியினரின் பிரதிநிதித்துவம் எந்தளவில் இருக்கிறது? இந்நிலை தொடர்வதுதான் நமது பெருமையா? கட்சிகள் வெற்று அரசியலையும் வாய் சவடாலையும் தவிர்த்து என்ன செய்திருக்கின்றன ?

இதைத் தொடர்ந்து எனக்குள் பல கேள்விகளை, உணர்வுகளை ஏற்படுத்திய மற்றொரு புத்தகம் விடியல் பதிப்பகத்தின் “சோளகர் தொட்டி” - ச.பாலமுருகன் அவர்கள் எழுதியது. பழங்குடி மக்களின் பண்பாடு, தொன்மங்கள், வாழ்க்கையைப் பேசும் தமிழின் முதல் நாவல் என்று பதிவர் நாதாரி அவர்கள் அறிமுகப்படுத்தினார். நன்றிகள் அவருக்கு! வீரப்பனைப் பற்றிய பல புத்தகங்களை வாசித்திருக்கிறேன். அவையெல்லாம் வீரப்பனை பிரதானப்படுத்தி எழுதப்பட்டவை - ஒரு குழலின் ஒரு முனையிலிருந்து பார்ப்பது போல.

சோளகர் தொட்டி அதே குழலின் அடுத்த முனையிலிருந்து பார்ப்பது போல - வீரப்பனை சாராத மற்ற தொட்டி மனிதர்களைப் பற்றியது (தொட்டி என்பதற்கு ஊர் என்ற பொருள்). வீரப்பனை தேடி வரும் போலீசாரால், மக்களுக்கு நேரும் அவலங்களையும்(உண்மையில் அது மனித உரிமை மீறல்களே!) இந்நூல் பதிவு செய்துள்ளது. ('சந்தனக்காடு' தொலைக்காட்சி தொடரும் அப்பாவி பொது மக்கள் அவதிக்குள்ளாக்கப் பட்டதை பதிவு செய்திருந்தது. )
தொட்டியின் மூத்தவர் தலைவர், கொத்தல்லி. பெயர்தான் தலைவரே தவிர நமது ஊரின் தலைவருக்கான எந்த அடையாளங்களும் இல்லாதவர். கோல்காரன் சென்நெஞ்சா, ஜோகம்மாள், சிக்குமாதா, கெம்பம்மா, போலிசிடம் சிக்கி சீரழியும் மல்லி, மாதி, சிவண்ணா - என்று காட்டை உயிர்நாடியாகக் கொண்டு வாழும் அப்பாவி மக்களைக் கொண்ட நாவல். வீரப்பனைத் தேடி வரும் அமைதிப்படையும் அவர்களின் அக்கிரமங்களையும் அம்மக்கள் அனுபவித்த அடக்குமுறைகளைப் பற்றிச் சொல்லும் நூல். இது உண்மையில் நூலல்ல...அம்மக்களின் வாழ்க்கை!

அதிகாரமில்லாத சாதாரண மக்களாக இருந்தால் அவர்கள் மேல் சர்வ அதிகாரங்களையும் செலுத்த போலீசுக்கு உரிமை கொடுத்தது யார்?
கல்வியும் அதிகாரமும் இல்லாத காரணங்களுக்காக அவர்களின் உரிமைகளை ஏய்க்கும் தனிப்படை! போலீஸ் என்பவர் மக்களுக்கு பாதுகாவலரா அல்லது அவரை அணுகவே நாம் பயப்பட வேண்டுமா? விசாரிப்பதாகக் கூறி அழைத்துச் சென்று நரகவேதனை கொடுக்க காவலர்களுக்கு அனுமதி கொடுத்தது யார்? பழங்குடியினர் என்றும் ஆதிவாசி என்றும் நாம் அழைக்கும் மக்கள் உண்மையில் எத்தனை பண்பாடு மிக்கவர்களாக இருக்கிறார்கள்! அவர்களை மனிதர்களாகவே பார்க்க மறுக்கும் நாம் எத்தகையவர்கள்?

அவ்வளவு ஏன்? நம்மில், எத்தனைபேர் நமது வீட்டில் வேலைசெய்பவர்களை சமமாக நடத்துகிறோம்? செய்யும் வேலையில் உயர்வு தாழ்வு பார்த்தல் பாவமென்று சொல்லிக்கொண்டாலும் நமது வரவேற்பறையின் நாற்காலியில் வீட்டுவேலையாளர்களை உட்கார வைக்கிறோமா? அவர்களாகவே நாற்காலியில் உட்கார்ந்துவிட்டால் நம்மில் எத்தனைபேரால் மனமுவந்து ஏற்றுக்கொள்ள முடிகிறது?

Thursday, January 21, 2010

பப்பு டைம்ஸ்

"ஒரு சிங்கம் வலையிலே மாட்டிக்கிட்டிருந்துச்சு. நாங்கதான் காப்பாத்துனோம்.”

”ஒரு ஹிப்போவை வேடன் வலையிலே மாட்டியிருந்தான். நானும் வர்ஷினியும் காப்பாத்தினோம்.”

”வரும்போது வேன் பள்ளத்துலே மாட்டிக்கிச்சு...நாங்க ப்ரேக் போட்டு (?) ஓட்டிக்கிட்டு வந்தோம்.”

“அப்புறம் , வேற என்ன பார்த்தே?”

”கொரங்கு, லவ் பேர்ட்ஸ், பேரட்ஸ்....”

ஸ்கூல் ட்ரிப்-காக வேடந்தாங்கல் சென்று வந்த பின்புதான் இத்தனை கதையும்.
பத்து -பத்தரை மணிக்கு தூங்க செல்வோம் - வழக்கமாக. படுத்தபின்னும் பேசிக்கொண்டிருந்தால் “ரைனோ வர்ற டைம், எல்லோரும் தூங்குங்க” என்று சொல்லிவிடுவோம். அன்று நானும் முகிலும் ஏதோ சீரியஸாக பேசிக்கொண்டிருந்தோம்....ஊருக்குப் போவதைப்பற்றிதான். கொஞ்ச நேரம் பொறுத்துப்பார்த்த பப்பு,

“கொஞ்ச நேரம் பேசாம இருக்க மாட்டீங்க...ரைனோ வர்ற டைமாச்சு”ஆச்சி, எனக்கு குறிஞ்சி பேரு புடிக்கல...பைரவி -னு வச்சிக்கலாமா...பைரவி பேரு குறிஞ்சி வச்சிடலாம். என்னை பைரவின்னு கூப்பிடு - பப்பு

பைரவி...பைரவி... - நான்

என்னங்கம்மா... - பப்பு

அவ்வ்வ்வ்!
அயிகிரி நந்தினி என்ற பாடலை புதிதாகக் கற்றுக்கொண்டிருக்கிறாள். பிரேயர் சாங்க். இப்போதெல்லாம் எப்போதும் அந்த பாட்டுதான்.

ஏன் பூஜாக்கா இல்ல? என்றாள் திடீரென்று.

பூஜாக்கா ஆம்பூரிலேதான் இருப்பாங்க.

இல்லே நந்தினி அக்கா, ரம்யாக்கா ல்லாம் வர்றாங்க இல்ல இந்த பாட்டுலே..என்று பாடி காண்பித்தாள்.

அயிகிரி நந்தினி....
நந்தனுதே..

ரம்யாக்கா அத்தினி.......

பூஜாக்கா பேரு ஏன் இல்ல?

Tuesday, January 19, 2010

சாலையோரம்.....

இது நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகியிருக்கும். மடிப்பாக்கத்திலிருந்து கிண்டி செல்வதற்கு பிருந்தாவன் நகர் வழியாக வந்துக்கொண்டிருந்தேன். குறுக்குவழிதான். கொஸ்டின் பேங்க்-கை படித்து முன்னேறிய தலைமுறையாச்சே! மேலும் சிக்னல்கள் எதுவும் இருக்காது..வாகன நெரிசலும் குறைவுதான். ரோடிலேயே ஒரு கோயில் வரும். அங்கு மட்டும் கொஞ்சம் நெரிசலாக இருக்கும். உருட்டிக்கொண்டு செல்ல வேண்டியிருக்கும்.

அன்றும் அப்படி உருட்டிக்கொண்டு சென்ற போது எனக்கு முன்பு பைக்கில் சென்று கொண்டிருந்தவர் சடாரென்று நிறுத்திவிட்டார். நானும் உடனடியாக பிரேக் போட்டதில் அவரது வண்டியின் இலக்கத்தகடின் மீது லேசாக இடித்துவிட்டேன். திரும்பிப் பார்த்தவரிடம் 'சாரி' சொல்லிவிட அவரும் தலையசைத்தார். அதற்குள் வாகனங்கள் நகரத்துவங்கியது. அந்த சாலைஆஷ்ரம் பள்ளி இருக்கும் மெயின் ரோடில் வந்து இணையும். அந்த பள்ளியருகே பைக்கில் வந்தவர் என்னை வழி மறித்தார்.

ஏதோ சொல்ல வருகிறாரென்று நானும் நிறுத்தினேன். பைக்கை நிறுத்திவிட்டு என்னிடம் வந்தவர் அவரது இண்டிகேட்டர் லைட்டை நான் உடைத்து விட்டதாக சொன்னார். பார்த்தால் அது ஒரு பக்கம் தலை சாய்த்துக்கொண்டிருந்தது. நான் இடித்தது அவரது இலக்கத்தகடைதானென்றும் இண்டிகேட்டரை நான் உடைக்கவில்லை என்றதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. காசு கொடுத்துவிடுமாறு கூறினார். நான் மறுத்து ஸ்கூட்டியின் உயரத்தையும் அவரது இண்டிகேட்டரின் உயரத்தையும் காட்டினேன். மேலும் நான் உண்மையில் உடைக்கவில்லை..அவர் சடாரென்று ப்ரேக் போட்டால் நானும் என்ன செய்ய முடியும்...எனக்கும் பின் வந்தவர்கள் என் வண்டியின் மேலும் தானே மோதினார்கள் என்று சொல்ல அவர் காசு கொடுக்குமாறு வலியுறுத்திக்கொண்டிருந்தார்.

அந்த சாலை ஒரு பக்கத்தில் பழக்கடைகள் இருந்தன. அதைத் தவிர வேறுக் கூட்டமில்லை. சரி, போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று கம்ப்ளெயின் கொடுப்போம் என்று சொன்னதும் அவர் எனது வண்டியின் சாவியை படக்கென்று எடுத்துக்கொண்டார். இது முற்றிலும் நான் எதிர்பாராத ஒன்று.
இப்படி ஒன்றுக்கு நான் தயாராகவே இல்லை. உண்மையைச் சொன்னால் அப்போதுதான் எனக்கு இக்கட்டில் மாட்டிக்கொண்டாற்போல இருந்தது. முகிலுக்கு போன் செய்யலாமென்றால் கைப்பை எல்லாம் வண்டிக்குள் இருந்தது.

கோபத்துடன் நான் குரலுயர்த்தி எனது சாவியைக் கொடுக்குமாறு சொன்னேன். அவன் நூற்றைம்பது ரூபாயாவது கொடுக்குமாறு சொன்னான். 'குடுத்துட்டு போயிடுங்க மேடம், உங்களுக்கு எதுக்கு பிரச்சினை' என்று அவனே அட்வைஸ். அதற்குள் ஒரு நாலைந்து பேர் வந்துவிட்டார்கள். அப்போதுதான் இது ஏதோ பிரச்சினை என்று அவர்களுக்குத் தோன்றியிருக்கிறது. விசாரித்தவர்களிடம் என் வண்டி சாவியை கொடுத்துட்டு எதுன்னாலும் பேசச் சொல்லுங்க என்றேன். கோபமாக வந்தது. அவன் சாவியை எடுத்தது எரிச்சலையும் ஆத்திரத்தையும் ஊட்டியது.

அதற்குள் வேறு எங்கிருந்தோ ட்ராபிக் போலீஸும் வந்து விட கும்பலும் சேர ஆரம்பித்தது. போலிஸிடம் அவனே எல்லாவற்றையும் சொன்னான். அதன்பின் போலிஸ் அவனது இண்டிகேட்டரையும் பார்வையிட்டார். அவரிடம் என் பங்குக்கு நானும் சொன்னேன். வண்டியின் இண்டிகேட்டரை உடைக்காததையும், இலக்கத்தகடை இடிக்க நேர்ந்ததையும், அதுவும் அவன் சடன் பிரேக் போட்டததால்தான் என்றும். பின்னர் போலீஸ் சாவியை வாங்கி என்னிடம் கொடுத்துவிட்டு அவனது இண்டிகேட்டர் இப்போது உடைந்ததில்லை, ஏற்கெனவே உடைந்ததை அவன் டேப் போட்டு கட்டியிருந்தது இப்போது ஒரு பக்கமாக சாய்ந்து கொண்டிருக்கிறதென்றும் கூறினார்.

மேலும் கம்ப்ளெயின் செய்ய வேண்டுமானால் கிண்டிக்குச் செல்லுமாறு கூறினார். அவர்கள் மேற்கொண்டு விசாரிப்பார்களென்றும் சொன்னார். அதன் பின்னர் அவன் போன மாயம் தெரியவில்லை. எனக்கு இதை கம்ப்ளெயின் செய்ய வேண்டும் போல இருந்தது , ஆனால் வண்டி எண்ணை மட்டும் வைத்து என்ன செய்வது அல்லது வேறு எப்படி கையாள்வது என்றுத் தெரியவில்லை. அலுவலகம் வந்து சேர்ந்துவிட்டேன். நண்பர்களிடம் சொன்ன பிறகு கொஞ்சம் படபடப்பு அடங்கியது. நான் நிறுத்தியதுதான் தவறென்று கூறினார்கள். கையை ஆட்டி என்னெதிரில் மறித்துக்கொண்டு ஓரமாக வந்தால் எப்படி நிறுத்தாமல் இருப்பதென்று புரியவில்லை. ஆனாலும் நெடுநாளைக்கு அந்த வண்டியின் நம்பர் நினைவிலிருந்தது - அந்நிகழ்வின் பாதிப்பும்.

அந்த சாலையில் போகும்போதெல்லாம் எனக்கு முன்செல்லும் வண்டி அதுவாக இருக்குமோ என்று பார்த்துக்கொண்டிருந்தேன் கொஞ்ச நாள். பார்த்தால், நிறுத்தி நாலு திட்டு திட்டலாம் என்றுதான். யாருக்குத் தெரியும், ஒருவேளை அந்த நபர் இதை வாசித்துக்கொண்டு கூட இருக்கலாம். தினமும், செலவுக்கு இப்படி வழிமறித்து 'நூதன பிச்சை' கூட எடுப்பதை இன்னமும் தொடர்ந்துக்கொண்டிருக்கலாம். அல்லது, குற்றவுணர்ச்சியே இல்லாமல் தனது டெக்னிக்கை மாற்றியுமிருக்கலாம்.

ஆனால் எனக்கு அன்றைக்கு தேவையாக இருந்தது - இதுபோல் நிகழும்போது எப்படி கையாள்வது, யாரைத் தொடர்பு கொள்வது, வண்டியின் சாவியை தொடும் தைரியம்அவனுக்கு எப்படி வந்தது - இனி அவன் அப்படி நடந்துக்கொள்ளாமல்/ஏமாற்றாமல் இருப்பான் என்று என்ன நிச்சயம் என்பதுதான்.

அடுத்த சில தினங்களில் எனக்கு ஒரு ஃபார்வர்டு மெயில் வந்திருந்தது.ஏற்கெனவே சில வருடங்களுக்கு முன் சுற்றிக்கொண்டிருந்தது தான். அது இன்னமும் உயிர்ப்புடன் இருக்கிறதா என்று ஆச்சரியமாக இருந்தது. மெயிலாக இருந்தது இப்போது தளமாகவும் மாறி இருக்கிறது! ஆண்களில் bad drivers இருப்பதுபோலத்தான் பெண்களிலும். ஓட்டுகிற எல்லா பெண்களையும் குற்றம் சொல்லும்போது நாம் தவறு செய்யும் ஆண் வாகன ஓட்டிகளை மன்னித்து விடுகிறோம். ஆண்கள் தவறு செய்தால் ஒப்புக்கொள்கிற நாம் பெண்கள் தவறவே கூடாதென்று எதிர்பார்க்கின்றோம். லைசன்ஸ் வாங்காத பையனையும் கார் ஓட்ட அனுமதிக்கிற நாம் (லைசன்ஸ் வைத்திருக்கும்) பெண்கள் U டர்ன் எடுக்கும்போது மட்டும் ஹார்ன் அடித்து தவிக்க விடுகிறோம்! ஏன்?

ரொம்ப நாளைக்கு முன்னால் சின்ன அம்மிணி ஒரு தொடர் இடுகைக்கு அழைத்திருந்தார். சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு - பெட்டர் லேட் தேன் நெவர் -ன்னு இப்போ எழுதறேன்..சின்ன அம்மிணி மன்னிக்கணும். :-) சாலை பாதுகாப்பும் சாலையில் பாதுகாப்பு பத்தியும் எப்போ வேணா எழுதலாம். நான் அழைக்க விரும்பும் நால்வர்,

மயில் (எ) விஜிராம்
தீபா
முத்துலட்சுமி
ஹூசைனம்மா

முன் அனுமதி இல்லாமலே அழைத்திருக்கிறேன், உரிமையோடும் - தங்களின் பகிர்தலை வாசிக்கும் ஆவலோடும்!

Monday, January 18, 2010

சைன் Q/காஸ் Q = ?

"உங்களுக்கு இந்த உலகத்திலேயே பிடிச்ச அஞ்சு பேர் பேரை எழுதுங்க"

எழுதியபின் ஒவ்வொருவரையும் வாசிக்கச் சொன்னார் பாரி அங்கிள்.

எல்லோரும் காந்தி நேரு விவேகானந்தர் ரஜினி கமல் கவுண்டமணி செந்தில் அன்னை தெரசா எல்கேஜி டீச்சர் சச்சின் என்று எழுதியிருந்தார்கள். ஒவ்வொருவரும் எழுந்து வாசிக்கும்போது எனக்கு 'வட போச்சே' என்பது போல இருந்தது. :-) என் முறை வந்தபோது லிஸ்ட்டில் இருந்த பெயர்களை எழுந்து நானும் வாசித்தேன். வீரப்பனும், மோனிகா செலஸும் வனஜா டீச்சர் மற்றும் பெரிம்மா.

பெரிம்மாவை ஏன் பிடிக்கும்? என்று அங்கிள் கேட்டபோது ஏனென்று சரியாகக் காரணங்கள் சொல்லத் தெரியவில்லை.

எனது தம்பியும் எழுந்து வாசித்தான். அவன் முடித்தபோது எனக்கு மிகுந்த சந்தோஷமாக, பிரமிப்பாக, பெருமையாக இருந்தது. ஏனெனில், அவனுக்கு என்னை பிடிக்குமென்று நான் நினைத்திருக்கவில்லை. அப்படியே பிடித்தாலும் இப்படி முதல் ஐந்திற்குள் நான் இருப்பேனென்று கண்டிப்பாக நம்பியிருக்கவில்லை. எப்போதும் சண்டைதான். போட்டிதான். அவன் சைக்கிள் கற்றுக்கொள்ள ஆரம்பித்தபோது எனது சைக்கிளை பூட்டி சாவியை ஒளித்து வைத்திருந்தேன். வாடகை சைக்கிளில்தான் அவனுக்குக் கற்றுக்கொடுத்தேன். இப்படி எத்தனையோ!!

(பாரி அங்கிள் அவனிடமும் ஏன் பிடிக்குமென்று சொல்ல சொல்வாரென்று பார்த்தேன், ஆனால் கேட்கவில்லை!..ஹிஹி..)

தம்பியை நான் நேசிக்கக் கற்றுக்கொண்ட தருணங்களில் இதுவும் ஒன்று.

அந்த கோடை முகாமில் ஏற்பட்ட அதே பிரமிப்பு, மகிழ்ச்சி எல்லாமும் நேற்றும் ஏற்பட்டது - தீபா அழைத்துச் சொன்னபோது.

முதல் கட்ட வாக்கெடுப்பின்போதும் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பின்போதும் வாக்களித்த எனதன்பு பதிவர்கள், வாசகர்கள் அத்தனை பேருக்கும் மிகுந்த நன்றிகள்.இந்த பதக்கத்தை பதிவுலகத்திற்கும் வாசகர்களுக்கும் காணிக்கையாக்குகிறேன்.

தமிழ்மணத்திற்கும், என்னை எனக்குக் காட்டும் பப்புவுக்கும் நன்றிகள்! தொலைபேசியிலும், மடலிலும் பின்னூட்டங்களிலும் வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் நன்றிகள்!

Wednesday, January 13, 2010

பிரித்தலும் கோர்த்தலும்

தழைய தழைய தொங்க வேண்டுமாம் தாலி
சொல்கிறாள் அம்மா.
வயிறு வரை நீண்டிருந்தது
கழுத்துக்குப் பின்னிருந்த முடிச்சுகள் உறுத்தியபடி.
மூணு மாசம்தான் அப்புறம் பிரிச்சுக் கோர்த்துக்கலாம்
இம்முறையும் அம்மாதான்.
வாசலில் யாரிடமோ கையாட்டியபடி
பேசி சிரித்துக்கொண்டிருக்கும்
அவனை பார்க்கிறேன்
மணிக்கட்டில் பளபளத்தது புதுச்சங்கிலி.
இனிமே புடவைதானே, அண்ணி
திசைதிருப்பியது மூத்த நாத்தனாரின் குரல்.
கட்டுக்கழுத்தி வளையல் போடாம இருக்கக்கூடாது
மாமியாரின் கவலை கையொடித்தது.
தாலி கட்டியவனை அலுவலகம் அனுப்பி
எனை விடுப்பெடுக்க வைத்த
நல்லதொருநாளில்
பிரித்துக் கோர்க்கப்பட்டது மஞ்சள்கயிறு
தங்கச்சங்கிலியுடன்.
வைபவத்திற்கு வந்தவர்களை
வழியனுப்பித் திரும்புகையில்
அவனது
கண்களின் திசை அறிந்து மௌனமாய்
கேட்டுக்கொள்கிறேன்
அவனது பார்வையை பிரித்துக் கோர்ப்பது
யார்??

குறிப்பு :
உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு’ நடத்தும் கவிதைப் போட்டிக்காக.

பப்பு டைம்ஸ்

ஆ!! ஏன் பப்பு என்னை அடிக்கறே?!

ஏன் சிரிக்கறே..நான்தான் கீழே விழுந்துட்டேன் இல்ல...

சாரி..சாரி..இனிமே சிரிக்கலை...

(முன்பெல்லாம் அவள் தெரியாமல் கீழே விழுந்தாலோ அல்லது எங்காவது இடித்துக்கொண்டாலோ் பார்க்க நேர்ந்தால் லேசாக சிரித்து வைப்பேன் கண்டுக்கொள்ளாததுபோல....அவளும் அழாமல் அந்த அதிர்ச்சியை சிரிப்பாக மாற்றி விடுவாள். இனிமேல் அது உதவாது போல.)

”நாம் ரெண்டு பேரும் சேர்ந்து வர்ஷினியை அழுக்குன்னு சொல்லலாமா ”

”ஏன் பப்பு, வர்ஷினி க்ளீன் தானே”

”ஏய் இல்ல, அழுக்கு அழுக்கு சொல்லு...”

அழுக்கு!
அழுக்கு!!
அழுக்கு!!!


(இப்படித்தான் பேர் வைக்க ஆரம்பிப்பாங்க போல இருக்கு, இந்தம்மாக்கு என்ன பேருன்னு தெரியலையே!!! சிவாஜி ஸ்டைலில் படிக்கவும்.)”ஆச்சி, என் கனவுலே ஆல்ஃபபெட்ஸ் வருதா பாரு?”

”ஆச்சி, இங்கே பாரு இப்போ ஆரஞ்சுக்கலர் தெரிஞ்சுதா”

”ரெய்ன்போ இப்போ தெரிஞ்சுதா”

அவள் கண்களை மூடிக்கொள்வாள். கண்களுக்குள் அவளுக்குத் தெரிவதெல்லாம் அவளது கண்களை நான் பார்த்தால் தெரியும் என நம்புகிறாள்.”ஆச்சி, மூச்சு விடலன்னா என்னாகும்? நான் இப்போ மூச்சு விடாம் இருக்கேன் ”.

அவளது சோதனையில் எனக்குத்தான் இதயம் நின்று நின்று துடிக்கிறது.
”இரு, வர்ஷினிக்கிட்டே சொல்றேன்...” - பப்பு

சொல்லிக்கோ

ஒன்னை நல்லா கீறுவா...வர்ஷினி நல்லா கீறுவா..

அய்யே...

ஆமா, வர்ஷினி நல்லா கீறுவா, நான் கிள்ளுவேன். வெண்மதி நல்லா அடிப்பா!

சார்லீஸ் ஏஞ்சல்ஸ் பார்ட் -2 வா?! அவ்வ்வ்வ்
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்! :-)

Tuesday, January 12, 2010

சமச்சீர் கல்விக்கு ஒரு சவால்!!

ஒன்பதாம் வகுப்பு மாணவரின் விடைத்தாள் இது. என்ன எழுதியிருக்கிறாரென்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்!!

Monday, January 11, 2010

இழுபடும் கேள்விகள்!

நடக்கப்பழகுகையில் எங்கிருந்தாவது ஏதாவதொன்றை இழுத்துக்கொண்டு வருவாய்
துப்பட்டாவை அல்லது ஆளுயரப்பொம்மையை அல்லது சமையலறையிலிருந்து சல்லிக்கரண்டியை!
இப்போதும் ஏதாவதொன்றை இழுத்துக்கொண்டு வருகிறாய்..
அது எப்போதுமே ஒரு கேள்வியாக இருக்கிறது!
பாய்ஸ் ஏன் முடி வச்சிக்க மாட்டறாங்க?
யோசித்து சொல்வதற்குமுன்
பாய்ஸ் ஏன் கம்மல் போடமாட்டாங்க?
சொல்வதற்கு நிறைய இருந்தாலும்
எதை முதலில் சொல்வது...
ஹேய், ஆச்சி, அந்த அங்கிள் பாரு, கேர்ல் மாதிரி முடி வச்சிருக்கார்!!
நேற்றுக்காலையில் உன்னிடம் இழுப்பட்ட கேள்வி இப்படியாக இருந்தது,
"ஆச்சி, உனக்கு பாய் பிடிக்குமா கேர்ல் பிடிக்குமா?"

Sunday, January 10, 2010

நாங்களும் ரவுடிதான்!

இவை கடந்த ஆண்டு புத்தக சந்தையில் வாங்கியவை - Eureka - AID India -விலிருந்து.
எல்லாமே ஒரு பக்க கதைகள். தனித்தனி அட்டையில் இருக்கும். எளிதான கதைகள். ஐந்து வரி கதைகளிலிருந்து ஆரம்பித்து சற்றே பெரிய குழந்தைகளுக்கான கதைகள் வரை இருக்கும். பெரிம்மா அவற்றை கவரில் போட்டு தனித்தனி தாளாக வைத்தார். தமிழ் படிக்கத் தெரியாவிட்டாலும், கதையை பார்த்து அதைப்போலவே சொல்ல சாரி..படிக்க முயற்சி செய்தபோது எடுத்தது.

அருண் என் நண்பன் என்று ஆரம்பிக்கும் மீன்நண்பனை பற்றிய கதை. கடைசியில் ‘அவன் யார்?, நான் வளர்க்கும் மீன் தான்' என்று முடியும். சமயங்களில், அது 'நான் வளர்க்கிற ஆச்சிதான்' என்றும் ‘நான் வளர்க்கிற அப்பாதான்' என்றும் ஒலிக்கிறது!! அவ்வ்வ்!

இதுவும் அதே போன்ற கதைதான் - தாமு வாங்கிய சட்டை பற்றி.

இந்த ஆண்டும் AID -India வில் புத்தகங்கள்வாங்கினோம். ஆனால் இதே போல ஒரு பக்க கதைகள் ஒரே புத்தகமாக இருந்தது.

ஆங்கில புத்தகங்கள் ஒன்றிரண்டுதான் வாங்கினோம். தமிழில், நல்ல கதைகள் - சுவாரசியமான கதைகள் இல்லையென்ற குறை இந்தமுறை தீர்ந்தது. CBT, AID - India, பூவுலகின் நண்பர்கள், NCBH, பாரதி புத்தகாலயம் இன்னும் பல ஸ்டால்களில் குழந்தைகள் விரும்பக்கூடிய எளிய தமிழ் புத்தகங்கள் கிடைத்தன.

Saturday, January 09, 2010

ஓ போடு!
இது ஆக்டோபஸ்-னு சொன்னா நீங்க நம்பிதான் ஆகணும். வழக்கம்போல அவுட்லைன் வரைஞ்சது நாந்தான். கட் பண்ணது, ஒட்டினது எல்லாம் பப்பு. கடந்த Letter of the week இடுகையிலே ஆக்டோபஸ் பற்றின விவரங்களைச் கொடுத்ததுக்கு நன்றி.இது, ஆனியன் பிரிண்ட்ஸ். சிவப்பு, மஞ்சள், வெள்ளை எல்லாவற்றையும் கலந்து இந்த நிறத்தை கொண்டு வந்தாள். வெங்காய பிரிண்ட் தவிர தெரியும் திட்டுகள் பப்புவின் தம்(thump) பிரிண்ட்ஸ்.இதுவும் 'O'- க்காக செய்ததுதான். காகித தம்ளர்களின் அடிப்பாகத்தை வண்ணத்தில் தோய்த்து செய்தது. வண்ணங்கள் காயுமுன்னரே பின் செய்ததால் 'ஓ' கொஞ்சம் நீண்டுவிட்டது.


லாஜிக்

பப்பு, வரைந்ததை என்னிடம் காண்பிக்க வந்தபோது பெரிம்மா,

”அம்மாவை டிஸ்டர்ப் பண்ணாதே பப்பு, தூங்கட்டும், நீ ஆயாக்கிட்டே காட்டு.”

”நான் உங்கம்மாகிட்டே காட்ட மாட்டேன். எங்கம்மாக்கிட்டேதான் காட்டுவேன்!”

!!!

(இப்படி உங்கம்மா,எங்கம்மா என்று வீட்டில் யாரும் பேசிக்கொண்டதில்லை.)

Thursday, January 07, 2010

அய்யனாரின் 'உரையாடலினி'

ஒரு சிலர் நண்பர்களாவதற்கு எந்த முகாந்திரமும் வேண்டியிருக்காது. சாதாரணமாக பேச்சு ஆரம்பிக்கும், ஆனால் கொஞ்ச நாட்களுக்குள் நமது முழு வாழ்க்கையையும் ஆக்கிரமித்திருப்பார்கள். கோகிலாவுடனான நட்பும் அப்படித்தான். ஹாஸ்டலில் காஃபி எடுக்க வரும்போதோ அல்லது நோட்ஸ் கொடுக்கல் வாங்கலிலோதான் ஆரம்பித்திருக்க வேண்டும்.
ஒரு சின்ன ஹாய்....போதும்!

சிஸ்டருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு இரவு முழுக்க பேசி சிரித்துக் கொண்டும், வாரயிறுதிகளில் பெரியார் பஸ் ஸ்டாண்ட், நேதாஜி ரோடை வலம் வந்தும் முனியாண்டி விலாசில் பரோட்டாவுக்காக சென்று அங்கிருந்தவர்களை பார்த்து அலறியடித்து ஓடி வந்ததும்.... ஆட்டோகிராஃபில் date என்ற இடத்தில் ”dated till sun rises in west" என்றோ "பூமி சுழலுவதை நிறுத்தும்வரை " என்று எழுதப்பட்டுக்கொண்டிருந்தது மாறி "dated till mullai's and kohila's friendship ends" என்றாகியது. அந்த கோகிலாவை ஏழு வருடங்களுக்குப்பிறகு பார்த்தேன். முதல் வகுப்பு படிக்கும் மகனுடன் வந்திருந்தாள். கிண்டி பார்க்கில் எதிர்பாராதவிதமாக சந்தித்தோம். ஐந்து நிமிடங்கள் கூட நீடிக்கவில்லை எங்கள் சந்திப்பு. அய்யனாரின் ஜோ-வை வாசிக்கும்போது கோகிலாவை நினைக்காமல் இருக்க முடியவில்லை!

அய்யனாரின் 'உரையாடலினி' தொகுப்பை தற்போது வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

இந்தத் தொகுப்பில் ஒவ்வொரு கதையும் வாசித்தபின், நீண்ட நேரம் அந்த கதைகளுக்குள் நான் அலைந்துக்கொண்டிருந்தேன். சட்டென்று அடுத்த கதைக்கு தாவிவிட முடியவில்லை. கதையின் மாந்தர்களும், என் நினைவின் மாந்தர்களும் எனக்குள் அசைவாடிக்கொண்டிருக்கிறார்கள், நெடுநேரமாக! ஜோவும் சந்தோசும் சங்கமித்திரையும் தமிழ்செல்வியும் குமாரும் வேறு பெயர்களில் எனக்கு அறிமுகமாகியிருந்தார்கள். அவர்களின் நினைவுகளோடே கதையின் தாக்கமும் இரண்டு நாட்களாக தொண்டைக்குள் உருண்டுக் கொண்டிருக்கிறது!

எனக்கு உற்சாகமான இளைஞர்களை பிடிக்கும். என் சிறுவயதில் வீடு நிறைய இந்த இளைஞர்கள் இருந்தார்கள். சித்தப்பாக்கள், மாமாக்கள் அவர்களின் நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள் என்று.
'இங்கே வராதே, உள்ளே போ' என்று விரட்டிக்கொண்டும், சமயங்களில் வாஞ்சையுடன் கடைக்கு அழைத்துச் சென்று கைநிறைய சாக்லேட் வாங்கிக்கொடுத்துக்கொண்டும். திடீரென்று அவர்கள் அனைவரும் தொலைந்து போனார்கள் . பாலிடெக்னிக் என்றும் வெளியூரில்/ வெளிநாட்டில் வேலை என்றும் ஒவ்வொருவராக காணாமல் போனார்கள். காணாமல் போன அந்த அத்தனை இளைஞர்களும் இந்த தொகுப்பில் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் ஒன்றாக என்ன பேசிக்கொள்வார்களென்று அன்று எனக்கு மண்டை குடைந்ததற்கு விடை இந்தப் புத்தகத்தில் இருக்கிறது. :-) அநேக கதைகளில் குடி இருக்கிறது...வாசிக்கும்போதே எனக்கும் கொஞ்சம் போதையேறினாற்போல இருந்தது! சில இடங்களில் குடியைப்போலத்தான் பெண்களையும் ட்ரீட் செய்கிறார்களா என்றும் தோன்றியது!

Life is a box of chocolates என்பதை உரையாடலினிக்கும் சொல்லலாம்.


இந்த புத்தகத்தின் சாக்லேட்கள் சில, சாப்பிட்டபின்னும் நாக்கிலும், மனதிலும் நிழலாடும் சுவை கொண்டவை, சில டார்க் பிட்டர் சாக்லேட்கள் , உள்ளே காரமெல் கொண்டவை, ஒன்றுமில்லா ஹாலோ சாக்லேட், லிக்கர் கொண்டவை சில, பபிள்கம் போன்றவை சில என்று...மொத்தத்தில் ஒவ்வொரு கதையும் வாசிப்பவர்களுக்கு ஒவ்வொரு அனுபவம்! தவறவிடக்கூடாத அனுபவம்.


‘ரொம்ப ஃபேமஸ்' என்று எல்லோரும் சொல்லும் ஒன்று எனக்கு பிடிக்காமல் போய்விடும். வீம்பு அல்லது பந்தா என்று எனது
நண்பர்கள் /உறவினர்கள்சொல்வதுண்டு. ஏனோ எனக்கு சாதாரண மனிதர்கள் எழுதும் சாதாரண எழுத்துகளே எனக்குப் போதுமானவையாக இருக்கின்றன. இன்றைக்கு பிரபலமானவர்கள் என்றுச் சொல்லப்படும் பலரின் நூல்களை நான் வாசித்தது இல்லை..ஒன்றிரண்டைத் தவிர. அதில் எனக்குத்தான் நஷ்டமென்றாலும் பெரிய கவலையொன்றும் இல்லை. ஏனோ, நான் அப்படித்தான்! அதைவிடுங்கள்....

அய்யனாரின் அடுத்த புத்தகத்துக்கும் அந்த நிலை வந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது! :-)
வாழ்த்துகள் அய்யனார்!

Wednesday, January 06, 2010

'பப்பு'கேர்

விளையாட்டின் பாதியில்
என்னைத் தேடி ஓடி வருகிறாய்.
முழங்கையை என்னெதிரே நீட்டுகிறாய்.
”காயம் வந்துடுச்சு, முத்தா கொடு”
குனிந்து முத்தமிட்டதும்
வலி போய்விட்டதாக நம்பிக்கைக் கொள்கிறாய்.
என்னை எப்போதாவது இடித்துவிட்டாலும்
உடனே முத்தமிட்டபடி சமாதானமாகிறாய்.
”வலி போய்டுச்சில்ல”
அப்பொழுதுதான் முளைத்த கொம்புடன்
ஓரக்கண்ணால் பார்க்கிறேன்
நியோஸ்பிரினையும் அயோடெக்ஸையும்!

Tuesday, January 05, 2010

Owl and Octopus


(thanks : google)
owl - எப்படி வரைய முடியுமென்று பப்புவுக்கு ஆச்சர்யமாக இருந்தது. கணினியில் சேமித்து வைத்திருந்த படத்தை காட்டியதும் அவளுக்கு ஐடியா கிடைத்தது. முக்கோணத்தையும், கண்களையும் அவளது ஷேப்ஸ் பஸிலால் ட்ரேஸ் செய்து வெட்டினாள். வட்டத்தை வெட்டும்போதுதான் ஒரு இடத்தில் பிசகி விட்டது. ஸ்கெட்சால் o-வை வரைந்தது அடியேன். முக்கோண முகத்தையும் கண்களையும் ஒட்டினாள். கால்கள் வரைந்து கொடுத்ததும் வெட்டி ஒட்டினாள். இன்னும் கொஞ்சம் தோசை மீதி இருந்தது. அது முடியும் வரை என்ன செய்வது என்ற யோசனையில் இருந்தபோது பப்புவே சிறிய/பெரிய வட்டங்களை வரைந்து வண்ணமடித்தாள்.

பின்னர், ஆக்டோபஸ் பற்றி படித்தோம். அதன் கால்களை எண்ணினாள். இப்போது நேரடியாக ஆக்டோபஸை பார்க்க வேண்டும், பப்புவிற்கு. சென்னையில் எங்கு பார்க்கலாம்? தெரிந்தால் சொல்லுங்களேன்!

Monday, January 04, 2010

all izz well!சாப்பாடு, தூக்கம், ஊர் சுற்றுவது எல்லாம் முடிவுக்கு வந்துவிட்டது. மிஸ்ஸிங் ஆம்பூர் பிரியாணி! தங்களனைவரையும் திரும்ப சந்திப்பதில் மகிழ்ச்சி. கடந்த scheduled post-இல் வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்.