Wednesday, December 30, 2009

ப்ராக்ரஸ் ரிப்போர்ட் - 2009

வந்துவிட்டது புத்தாண்டு!

2010 - 365 நாட்களுடன் எழுதப்படாத பக்கங்களுடன் டைரியாக எனக்கு எதிரில் இருக்கிறது, பதிவுப்பக்கங்களாகவும்தான்! அடுத்த டிசம்பரில் மகிழ்ச்சியுடன் எடுத்து வாசிக்கத் தக்கதாக இருக்கும் என்ற நம்புகிறேன். தங்களுக்கும் இதனை வாழ்த்தாக்குகிறேன்!

2009 - ஸ்விஷ்ஷ்ஷ்ஷ்ஷ்...வேகமாக கடந்தது 2008-ஐ போலவே!
கொஞ்சம் மகி்ழ்ச்சி, கொஞ்சம் வெற்றி,கொஞ்சம் தோல்வி,கொஞ்சம் திருப்தி, கொஞ்சம் அதிருப்தி - என்று எல்லாமே கடந்த வருடத்தைப்போலவே, ஒன்றைத் தவிர - வாழ்ந்தநாளில் ஒரு ஆண்டு கூடியிருக்கிறது!

2009, பப்பு குழந்தையிலிருந்து (குழந்தைச்)சிறுமியாக வளர்ந்ததைக் கண்டது. ஒரு முழு கல்வியாண்டைக் கடந்து வரச் செய்தது. முழுநேர பாதுகாப்பாளரிலிருந்து பகுதிநேர பாதுகாப்பாளருக்கான அவசியத்தைத் தந்தது. பப்புவும், நானும் பதிவர் சந்திப்புகளை கண்டோம். பதிவுகளைத் தாண்டியும் நட்பு பாராட்டப் பெற்றோம். எங்களைத் தொடர்ந்தும் வாசித்தும் பின்னூட்டமிட்டும் ஊக்கப்படுத்தும் தங்கள் அனைவருக்கும் அன்பார்ந்த நன்றிகள்! எல்லாவற்றுக்கும் மேலாக சிங்கைநாதனை மீட்டுக்கொடுத்த தங்கள் அன்பை நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.

2009 - இவையெல்லாம் இருந்தாலும் ஏதோவொன்று என்னில் குறைகிறது! மனம் பின்னோக்கியே செல்கிறது. மனதில் வடுவாக பதிந்த வருடமாக போனது. ஆறாத ரணமாக, கலைந்த கனவாக, காற்றில் அழிந்த மேகமாக! எத்தனை எத்தனை பேரின் தியாகங்களையும், கனவுகளையும், ரத்தத்தையும் துடைத்தெறிந்துவிட்டு
ஒன்றுமில்லாதது போல தோற்றம் கொடுக்கிறது! உண்ணாவிரத மேடையில் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை உருக்கிக் உயிர்நீத்த அந்த இளைஞனின் முகம், என் ஒன்பது வயதில் வீடியோ கேசட்டில் பார்த்த அந்த முகம் இன்னமும் மனதில் தேங்கி கிடக்கிறது! அவரிலிருந்து முத்துக்குமரன் வரை...இன்னும் எண்ணற்ற பேரின் தியாகங்கள் அவர்களின் உன்னத நோக்கங்கள், நம்பிக்கைகள் எல்லாம் போய் முள்வேலியில் முடங்கிக்கிடக்கிறது!

விரைவில் அந்த சொந்தங்களுக்கும் வரட்டும் இனிய புத்தாண்டு!

Thursday, December 24, 2009

Joy to the world...

நாங்கள் ஹவுசிங் போர்டு வந்து ஒன்றரை ஆண்டுகளில் அந்த வேப்பமரம் மஞ்சள் பூசிக்கொண்டது. கொஞ்ச நாளில் கூரை வேய்ந்து உண்டியல் வைக்கப்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக செங்கல் சுவர் எழுப்பப்பட்டு பளிங்குக்கற்கள் போடப்பட்டது. அதன் முக்கிய தூண்களில் சுகர்மில் தாத்தாவும் ஒருவர்.

ஆயா மற்றும் காந்தா அத்தையின், ”நல்ல பிள்ளைக்கு லட்சணம்” மற்றும் “காலையில் எழுந்தால் நல்லது” மந்திரங்கள் காரணத்தால் ஒரு மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளில் காலை நேர பூஜைக்கு செல்ல பணிக்கப்பட்டேன். அதாவது சுகர்மில் தாத்தாவோடு சேர்ந்து திருப்பாவை பாடவும் வேண்டும்.
அவர் பாட... நான் படிக்க... இரண்டு நாட்கள் சென்றது.

” அவ்ளோ பால் ஏன் அபிஷேகத்திலே வேஸ்ட் பண்றாங்க? யாராவது ஏழை பசங்களுக்கு கொடுக்கலாம் இல்ல” - அன்றிரவு சாப்பிடும் நேரத்தில் பெரிம்மாவிடம் கேட்டேன்.

உண்மை பத்திரிக்கையும், கடவுள்கள் தோன்றியது பற்றிய தி.க புத்தகங்கள் வீட்டில் நிறைய உண்டு. மேலும், வீட்டில் ஒரு சாமி படம் கூட இருந்ததில்லை. அதனால், பெரிதாக சாமி மீதெல்லாம் அபிமானங்கள் இருந்ததில்லை. பெரிம்மாவுக்கும்தான். எங்கள் வாழ்க்கைமுறை எந்த மதத்தையும் சார்ந்து சுழன்றது இல்லை.

'அவர்கள் நம்பிக்கையை சார்ந்தது அதெ'ன்கிற ரீதியில் பெரிம்மா பதிலளித்தார். அதற்குப்பின் அந்தக்கோயிலுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லாமல் போயிற்று.

கிறிஸ்மஸ் என்பது எனக்கு ஹேனா டீச்சர் வீட்டிலிருந்து வரும் அச்சு முறுக்கு, சுழியம் மற்றும் ப்ளம் கேக் போன்ற நினைவுகளோடு பிணைந்தது. இன்றைக்கு எத்தனை வீடுகளில் ஸ்டார்களைப் பார்த்தோம் என்ற எண்ணிக்கை விளையாட்டோடும், பக்கத்து வீடுகளில் இருக்கும் கிறிஸ்மஸ் மரத்தை, அதில் தொங்குகின்ற நூதனமாக பொருட்களைப் பற்றிய பேச்சோடு மட்டுமே பரிச்சயம்.

பெரியப்பாவின் உடல்நிலை மோசமாக இருந்தபோது அவரது நண்பரொருவர் வீட்டு முகவரிக்கு ”இயேசு அழைக்கிறார்” புத்தகத்திற்கு ஒரு வருட சந்தா கட்டியிருந்தார். வீட்டில் அதை சீண்டுவாரில்லை என்னைத் தவிர! இயேசுவின் அற்புதங்களை நான் வாசிப்பதைப் பார்த்து எல்லோரது கிண்டல் வேறு. ‘ஒரு கன்னத்தில் அறைந்தால்', ‘இயேசு உங்களை நேசிக்கிறார்', ‘உங்களுக்காக மரித்தேன்' போன்ற பரிச்சயமான, இதயத்திற்கு இதமான வார்த்தைகள் அந்த சந்தாவோடு முடிந்தது.

இளங்கலையிலேயே தமிழ்செல்வியை அறிந்திருந்தாலும் மிகவும் பழக்கமானது முதுகலையில்தான். எனது ரூம்மேட். எது அவளை மாற்றியதென்று தெரியவில்லை, ஒரு செமஸ்டர் லீவிற்குப் பிறகு வந்து சொன்னாள், “நான் கன்வெர்ட் ஆகிட்டேன்”. எனக்கு அது புதிதாக இருந்தது. நான் இன்ன மதம் என்று வரித்துக்கொள்ளாத போதும் ”எதுக்கு தமிழ்செல்வி இப்போ மாறனும்” என்று தான் தோன்றியது. எனக்குப் பிடிக்கவில்லை. அப்போதுதான் எனக்குள் நான் இந்து என்ற உணர்வு என்னையறியாமல் இருந்தது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. தமிழ்செல்வி காலையில் எழுந்து பைபிள் வாசிக்கத் தொடங்கினாள். நாங்கள் காஃபி குடித்து அரட்டை அடிக்கும் சாயங்கால வேளைகளில் முக்காடிட்டு பிரார்த்தித்தாள். மொட்டைமாடியில் இன்னும் சிலருடன் சேர்ந்து பாட்டு பாடினாள்.

அவள், கடவுளுடன் நெருக்கமாக நெருக்கமாக மற்றவர்களுக்கும் அவளுக்குமிடையே இடைவெளி விழுந்தது. பின்னால் நமுட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டனர். நானும் கல்பனாவும், சாப்பிடுவதற்கு, வேனுக்குச் செல்வதற்கு, கம்பைன் ஸ்டடிக்கு தமிழ்செல்வியை சேர்த்துக்கொள்ள ஆரம்பித்தோம். அப்படித்தான் தமிழ்செல்வி எனக்கு உற்ற தோழியானாள். அப்படியே தமிழ்செல்வியுடனான எனது கேள்விகளும் தொடர்ந்தது. ஆனால், தமிழ்செல்வி விவாதம் செய்ய விரும்பவில்லை. “ஜீசஸ் தான் உண்மையான கடவுள், அவர் பிறந்ததை வைச்சுதான் ஏடி, பிசி யே இருக்கு” என்றும் “ஒரு கடவுள்தான் இருக்க முடியும், அது ஜீசஸ்தான், பைபிள்லே ஜீசஸ் வரைக்கும் பிறந்தவங்க ஹிஸ்டரி எல்லாம் இருக்கு, அதுதான் உண்மை” என்றும் இன்னும் சில உண்மைகளை சொன்னாள். எல்லாவற்றுக்குமேலாக, ஜீசஸ் அவளுக்கு மன ஆறுதலை தருவதாகவும், பாவமன்னிப்பு கிடைத்ததாகவும், அது அவளுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாகவும் குறிப்பிட்டாள். ஆனாலும் எனக்குள் கேள்விகள்..கேள்விகள்.. பாவம் என்றால் என்ன..எது செய்தாலும் பாவமா..அதுக்கு நீ ஏன் மாறணும்...

மேலும், தமிழ்செல்விக்கு என்ன மன ஆறுதல் வேண்டியிருக்குமென்று என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. அவளது ஊர் ராமேஸ்வரம். ஊரிலே அவரது அப்பா நல்ல செல்வந்தர். அவளுக்கு அடுத்து இரண்டு தங்கைகள். இருவருமே கொடைக்கானலில் கான்வெண்டில் தங்கி படித்துக்கொண்டிருந்தனர். ஊருக்கு அழைத்துச் செல்ல அவளது அப்பா காரில் வருவார். எல்லாவற்றிற்கும், அவளது வீட்டில் ஆள் இருந்தது. அவளுக்கு மகிழ்ச்சிக்கு என்ன குறை என்று புதிராக இருந்தது.

அந்த சமயத்தில்தான் செமஸ்டர் பரிட்சைகள் வந்தது. 'ரெண்டு வேல்யூவேஷன், ஃபர்ஸ்ட் நம்ம யுனிவர்சிடி, அப்புறம் மெட்ராஸ் யுனிவர்சிடி ' என்று வதந்திகள் கிளம்பியிருந்தன. பேராசியர் பிரச்சினைகளால பாடங்கள் அறைகுறையாகவே நடத்தப்பட்டிருந்தன. சீனியர்கள் உதவியுடன் தத்தித்தத்தி படித்துக்கொண்டிருந்தோம். ஸ்டடி ஹாலிடேஸின்போது எப்படி அந்த வேளை வந்ததென்று தெரியவில்லை. தமிழ்செல்வியிடம் எல்லோரும் அவர்களுக்காக ப்ரேயர் செய்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர். அவளும், நாம் எல்லோருமே சேர்ந்து ப்ரேயர் பண்ணலாமென்று சொல்லி, அன்று எங்கள் ஹாஸ்டலில் பதினைந்து பேர் ப்ரேயர் செய்தனர். அதில் நானும் கல்பனாவும் இருந்தோம். பரீட்சைமுடிவில் நல்ல மதிப்பெண்களே வந்திருந்தன.

அதன்பிறகும், அவளைநோக்கி நமுட்டு சிரிப்பும், கிண்டல்களும் தொடரத்தான் செய்தன. அடுத்த விடுமுறைக்கு தமிழ்செல்வி கல்பனாவையும், என்னையும் அவளது வீட்டிற்கு அழைத்திருந்தாள். சுற்றிப் பார்க்க டிரைவருடன் ஒரு கார், இரவில் டெக்கில் போட்டுப் பார்க்க சினிமா கேசட்டுகள் (ஹூம்...தமிழ்செல்விதான் சினிமா பார்க்க மாட்டாளே!!) என்று அவளது குடும்பத்தினர் ஒரு நிமிடம் விடாமல் கவனித்துக்கொண்டனர். இறால் பண்ணை, சினிமா தியேட்டர், இறால் ஏற்றுமதி என்று அவளது அப்பாவிற்கு பல பிசினஸ்கள் இருந்தன. எது வேண்டுமென்றாலும் சொன்னால் போதும். டிரைவர் வாங்கி வந்து தருவார். நாங்கள் எதுவும் செய்ய வேண்டியிருக்கவில்லை. அவளது அப்பா எங்களை வெளியிலே நடக்கவே விடவில்லை.

ஒருவேளை, தமிழ்செல்விக்கு அந்த இறுக்கங்களிலிருந்து விடுபட ஒரு இதம் தேவையாயிருந்திருக்குமாயிருக்கும். தன்னம்பிக்கையளிக்கக் கூடிய ஒருவர், எளிய வாழ்க்கையை வாழ அவள் பின்பற்றக்கூடிய ஒருவர், 'உன் வாழ்வை எதிர்கொள்ள நான் இருக்கிறேன்” என்று பாதுகாப்பளிக்கக்கூடிய ஒருவர் தமிழ்செல்விக்கு தேவைப்பட்டிருக்கிறார்.

அவர், தமிழ்செல்விக்கு ஜீசஸாக இருந்திருக்கிறார்!

எல்லாவற்றுக்கும் மேல், இது தமிழ்செல்வியின் நம்பிக்கை சார்ந்த விஷயமுங்கூட!

ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ்!

Edited to Add : இங்கு நான் சொல்ல வந்திருப்பது மதம் மாற்றத்தைவிட மனம் மாற்றத்தையே. அந்த மனமாற்றம் அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறதெனில் அவர்களை அப்படியே ஏற்றுக்கொள்வோம்.

Wednesday, December 23, 2009

சாமி

குறிப்பு : காப்பி போ(பே)ஸ்ட்தான்!
ப்லாக் காணாம போனப்போ இங்கே எழுதினது. இங்கேயும் ஒரு தடவை போஸ்டறேன்.


#######

”சுரேஷை எதுக்கு எல்லோரும் “சாமி, சாமி”ன்னு கூப்பிடறாங்க” என்று ஒரு நிமிடம் குழம்பிபோனேன்.

சட்டமிட்ட படத்துக்குள் இருக்கும் தாத்தா, மாமாதானே சாமி, சுரேஷ் ஏன் சாமி? என்று எனது எட்டு வயது மனம் புரியாமல் யோசித்துக்கொண்டிருந்தது.

”சாமிக்கு இலை போடுங்க” என்றும் ”கை கழுவுங்க சாமி” என்றும் சுரேஷுக்கு பயங்கர மரியாதை. அட, எங்களோடு ஓடி பிடித்து விளையாடியும், மாமரம் ஏறியும், நாகப்பழத்தும் சண்டைபோட்டுக்கொண்டிருந்த சுரேஷுக்கு சாமிக்கு இணையான வரவேற்பு கொடுத்தது
எனக்கு புதிதாக இருந்தது. யாரும் சுரேஷ் என்றே சொலல்வில்லை. அதுவும் மிகுந்த ஆச்சரியமாக இருந்தது! சுரேஷூக்கு அப்போது ஒரு பதிமூன்று அல்லது பதினைந்து வயதிருக்க வேண்டும்.

நாட்கள் செல்ல செல்ல கொஞ்சம் புரிய ஆரம்பித்தது.

அக்டோபர் கடைசியிலிருந்து அங்குமிங்குமாக தென்படுவார்கள். டிசம்பரில் எல்லா இடங்களிலும் அவர்களை பார்க்கலாம் - பக்கத்து வீட்டிலிருந்து ஆட்டோக்காரர் வரை.

”மாலை போட்டிருக்காங்க, சுத்தமா இருக்கணும்”

“மாலை போட்டிருக்கும்போது அவங்க சாமி மாதிரி நல்லவங்களா இருப்பாங்க, கோவப்பட மாட்டாங்க”

”மாலை போட்டிருக்கும்போது செருப்பு போடமாட்டாங்க, நான்வெஜ் சாப்பிடமாட்டாங்க”

”பொண்ணுங்கல்லாம் அங்கே போகக் கூடாது, பாட்டிங்க போகலாம், வய்சுக்கு வராத குட்டிபொண்ணுங்க போகலாம்”

”ஏன்”

”ஏன்னா, அய்யப்பனுக்கு ஆகாது!!”

இன்னும் கொஞ்ச நாட்களுக்குப் பிறகு வேறு விளக்கம் கிடைத்தது. அந்த காலத்தில் காடு, மலையெல்லாம் கடந்து கால்நடையாக போக வேண்டும். பெண்களின் ரத்தவாசத்தினால் ஈர்க்கப்பட்ட காட்டுமிருகங்களால் ஆபத்து வருமென்றுதான் இந்த தடை என்றும் சொல்லப்பட்டது! அது உண்மைதானா என்று (இரு வருடங்களுக்கு முன்) ஜெயமாலா அய்யப்பனைத் தொட்டு கும்பிட்டதாக கூறியபோது ஏற்பட்ட பரபரப்பை பார்த்து சந்தேகம் வந்தது!

அதிலும், அவர் பத்தொன்பது வருடங்களுக்கு முன்னர் சாமியை தொட்டதாக கூறியதும் சாமிகள் கொதிப்படைந்தனர். அந்த இடைப்பட்ட காலத்தில், சாமியும் அப்போது தீட்டாகிவிட்டாரா, ஒரு பெண் தீண்டிய, தீட்டான சாமியையா நாம் இவ்வளவு காலம் கும்பிட்டோமென்று பயங்கொண்டனர். சுத்த வாழ்க்கை வாழ்ந்து தேடிய புண்ணியத்திற்கு பங்கம் வந்துவிட்டதாக ஆத்திரப்பட்ட சாமிகள்தான் இந்த முடிவுக்கு வந்திருக்க வேண்டும்..தெருவில் எச்சில் துப்பவும், புகைக்கவும்!!

முக்காடு போடும் வழக்கத்தை எதிர்ப்போம் - ஏனெனில் நாங்கள் நாகரீகமானவர்கள் - பாரம்பரியம், கலாச்சாரமென்று சொல்லிவிட்டால் கேள்வியே கேட்கமாட்டோம் - ஏனெனில் நாங்கள் இந்தியர்கள்!

நான் வாங்காத பல்பும் பல்பல்ல....

குறிப்பு : காப்பி போ(பே)ஸ்ட்தான்!
ப்லாக் காணாம போனப்போ இங்கே எழுதினது. இங்கேயும் ஒரு தடவை போஸ்டறேன்.

######


காலை நேரம்.

”என்னை தூக்கு. ”

”பப்பு, ப்லீஸ், நீ டம்ளர் எடுத்துக்கோ, எனக்கு ரெண்டு கைதானே இருக்கு, உன்னை தூக்கிக்கிட்டா டம்ளர் எப்படி எடுக்கறது?”

”என்னை தூக்குனாதான்...”

”சரி, அப்போ நீ டம்ளர் எடுத்துக்கோ..”

”உன் பேச்சு கா, போ...நீ என்னை தூக்கமாட்டேன்னுட்டே..உன்கூட பேச மாட்டேன்..போ”

பப்பு, கிண்ணம்,டம்ளர் - தூக்கிக்கொண்டு அறைக்குள் நுழைந்தேன். கதை படித்துக்கொண்டே சாப்பிட்டால், உணவு சீக்கிரம் உள்ளே செல்லும்!

அந்த கதையில்,

”உள்ளேயிருந்து “ம்ம்..” என்று சத்தம் வந்தது!அம்மா கால்வலியில் அழுகிறாளா என்று பார்த்தேன் ”

ஒரு சிறுவன் பள்ளியிலிருந்து வீட்டுக்கு வருவான். வெங்காயம் உரித்துக்கொண்டிருக்கும் அம்மாவின் கண்களில் நீர் வழியும். சாதாரண ஒரு பக்க கதை.

கூட, நானாக கொஞ்சம் பிட்டு போட ஆரம்பித்தேன். ”அம்மாவுக்கு கால் வலிச்சா கால் அமுக்கி விடணும், அம்மாவுக்கு ஹெல்ப் பண்ணனும்”

பட்!!

”ஆ, பப்பு, ஏன் அம்மாவை அடிச்சே..அம்மாவை அடிக்கலாமா?”

”போ...நீ ஏன் என்னை ஹெல்ப் பண்ண சொல்லல...கா..கா..நான் உன் ப்ரெண்ட் இல்லே..போ..ஏன் என்னை ஹெல்ப் பண்ண சொல்லவே மாட்டறே?”

அவ்வ்வ்வ்!

Weekends Vs Weekdays

குறிப்பு : காப்பி போ(பே)ஸ்ட்தான்!
ப்லாக் காணாம போனப்போ இங்கே எழுதினது. இங்கேயும் ஒரு தடவை போஸ்டறேன்.

மற்றவர்களுக்கு நாம் தேவைப்படுகிறோம், இன்றியமையாதவர்களாக இருக்கிறோம் என்ற உணர்வு, வாழ்க்கையில் அங்கீகாரத்தை, பெருமிதத்தைத் தருகிறதுதான். அந்த அங்கீகாரமும், திருப்தியும் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை தருகிறதுதான்! ஆனால், இரவு மூன்று மணிக்கு, படுக்கைக்கு அடியில் தவளையை தேடிக்கொண்டிருந்தபோது, எனக்கு இது எதுவுமே தோன்றவில்லை!

“ஆச்சி, தவளை என்னை இழுத்துட்டு போகுது” என்று பப்பு கத்தியபோது இரவு மணி மூன்று. 'சனிக்கிழமைதானே, கொஞ்சம் தாமதமாக எழலாமே' என்ற எண்ணத்துடன் தூங்க சென்றேன். வாரநாட்களில் மணி ஏழானாலும் துயில் கலையாத பப்பு, வாரயிறுதிகளில் டாணென்று ஆறு மணிக்கு எழுந்துவிடுவாள். மற்றநாட்களில் படுக்கையிலிருந்து எழுந்தாலும் சோபாவில் சுருண்டுக்கொள்பவள், சனிக்கிழமை காலைகளில் சுறுசுறுப்பாக இருப்பாள்! நான் கொஞ்ச நேரம் தூங்கிட்டு வரேனென்றாலும், பத்து நிமிடத்துக்கொருமுறை வந்து தூங்கி முடிச்சிட்டியா என்று கேட்டுக்கொண்டிருப்பாள். இன்றைக்கும் நான் சொல்லாமலே, என் திட்டத்தை புரிந்துக்கொண்டாள் என்றுதான் தோன்றியது! “தவளை இங்கே வராது பப்பு” என்றாலும் சமாதானமாகவில்லை. போர்வையை நன்றாக போர்த்தி, திரும்ப தூங்க வைக்க முயன்றேன்..ம்ஹூம்! படுக்கையில் தவளையார் இருக்கிறார் என்ற அவளது அசைக்க முடியாத நம்பிக்கையால் விளக்கை போட்டு படுக்கையில், கட்டிலுக்கு அடியில், கதவுக்கு வெளியே எல்லாம் தேடி முடித்த போதும் கலையவில்லை எனது தூக்கம். பப்புவோ அப்படியே எனக்கு நேரெதிராக இருந்தாள்.

தவளை, அவளது பாயிண்டரை பிடித்து இழுத்துக்கொண்டு ஓட்டைக்குள் கூட்டிச் சென்றதாம்! ஏன் கூட்டி சென்றது, ஏன் பொந்துக்குள் இழுத்தது...கேள்விகள்...கேள்விகள்! என்ன செய்ய, எனக்கும் கூட அதே கேள்விகள்தான். ஆனால், நான் இருந்ததோ பதில் சொல்லும் கட்டத்தில்! இப்போதெல்லாம், தூங்குவதற்கு முன் மானசீகமாக தவளையாருக்கு வேண்டுதல் வைத்துவிடுகிறேன் மறக்காமல்! யாருக்குத் தெரியும், தவளையாருக்கும் அங்கீகாரமும் பெருமித உணர்வும் தேவைப்படுமாயிருக்கும்!

Tuesday, December 22, 2009

கப்பரீசா...

பார்சல் வேகவேகமாக கைமாறிக் கொண்டிருந்தது. பாடல் எப்போது நிற்குமோ தெரியாது.எல்லோர் முகத்திலும் சிரிப்பு.

அது ஒரு பிறந்தநாள் பார்ட்டி. எனது அலுவலக நண்பரின் மகள் பெனிட்டாவின் இரண்டாவது பிறந்தநாள் பார்ட்டி. அங்குதான் குழந்தைகளுக்கான 'பாஸிங் த பார்சல்' விளையாட்டு நடந்துக்கொண்டு இருந்தது. பாட்டு நிறுத்தப்படும் போது யார் கையில் பார்சல் இருக்கிறதோ அவர் அவுட். அவருக்குத் தெரிந்த ஏதாவதொன்றைச் செய்ய வேண்டும். ரைம்ஸ்/ பாட்டு பாடுவதோ, டேன்ஸ் ஆடுவது முதலியன.

இந்தமுறை பாடல் நின்றபோது பார்சல் பப்புவிடம். பப்பு பாட மறுத்துவிட்டாள். நிகழ்ச்சியை நடத்தினவரிடம் பேரை மட்டும் மைக்கில் சொல்லிவிட்டு அவரையே பார்த்துக்கொண்டு நின்றாள். ”நீங்க என்ன பண்ணப் போறீங்க” என்றும் ”ரைம்ஸ் சொல்றீங்களா, எங்கே ஆண்ட்டிக்கு ஒரு ரைம்ஸ் பாடிக்காட்டுங்க” என்றும் கேட்டுக்கொண்டிருந்தார். பப்பு வாயை திறந்தபாடில்லை. எல்லோரும் எங்களையே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ”அவ ரொம்ப ரிசர்வ்டு, அவ ரொம்ப ஷை” என்று முத்திரை குத்தப்படுவதை நான் விரும்பவில்லை. ஏனெனில் அது உண்மையுமில்லை. என் பங்குக்கு,

”ஓல்ட் மெக்டோனால்ட்?”
.......
“சரி, வேர் ஈஸ் தம்கின் பாடு” என்று நானும் கொஞ்சம் தூண்டுகிறேன்.
அவளது ஆல் டைம் ஃபேவரைட் ரைம்ஸ், இவை.
பப்பு தலையை அசைக்கிறாள், மறுத்தபடி.

வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தோம். “பாட்டு பாட சொன்னா பாடணும், ஏன் பாட மாட்டேங்கறே, ஐ ஆம் நாட் ஹேப்பி” என்று அவளிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். ”வீட்டுலே பாடறே இல்லே, அதே மாதிரி இங்கேயும் பாடணும்”

இரவு ஆயா டீவி பார்க்க ஆரம்பித்திருந்தார். சாப்பிட்டு முடித்தபின் நானும் கொஞ்சம் ஆசுவாசுமாக அவருடன் அமர்ந்து பார்த்துக்கொண்டிருப்பேன். பெரும்பாலும் பத்து நிமிடங்களுக்கு மேல் நீடிக்காது. சில அபத்தங்களை சகித்துக்கொள்ள முடிவதில்லை.
அப்படி, அமர்ந்துக் கொண்டிருக்கும்போது பப்பு என் கையை இழுத்தாள், ”என்கூட வா, என்கூட வா” என்று! ”இரு பப்பு, பார்த்துட்டு வரேன்” என்றாலும் விடவில்லை.

அறைக்குள் சென்றோம். படுக்கையில் அமர்ந்து புத்தகத்தை விரித்து வைத்துக்கொண்டாள். அவளது பள்ளி ரைம்ஸ் புத்தகம். கிழிந்து நைந்து கிடந்தது. கடைசி பக்கத்தை விரித்து வைத்திருந்தாள்.பாடத்துவங்கினாள்.

சிட்டி சிலக்கம்மா
அம்மா கொட்டிந்தா
குட்ல பெட்டாவா
குடுக்கு மிங்லாவா!

(என்ன அர்த்தம்னு தெரிஞ்சவங்க சொல்லுங்க ப்ளீஸ்)

பப்புவுக்கு புத்தகத்தைப் பார்த்து படிக்கத் தெரியாது. ஆனால், பாடலுக்கு பக்கத்தில் ஒரு படம் இருக்கும். அதை பார்த்தால் என்ன பாட்டென்று அவளுக்குத் தெரியும். பூனை படம் இருந்தால் 'பூனையாரே பூனையாரே' என்றும், ஆடு மாடுகள் படம் இருந்தால் 'ஓல்ட் மெக்டொனால்ட்' என்றும்.தினமும் வழக்கமாக நடப்பதுதான் இது, இந்த பாட்டுக் கச்சேரி! இது வரை நான் தலையிடாத விஷயமென்றால், அது அவளது ரைம்ஸ் விஷயம் மட்டுமே! எனக்கும் பாட்டுக்கும் ரொம்ப தூரம்...எதற்கு பிரச்சினை!!

தோபி ஆயா தோபி ஆயா
கப்பரிசாத் (later, i understood it is 'kapade saath')
கப்பரிசாத்
ஏக் ரோ தீ (and, this is 'ek thoo theen') என்று அடுத்த பக்கத்திற்கு திருப்பினாள்.

ஒவ்வொரு ரைம்ஸாக எல்லா பக்கத்திலும், அவளுக்கு தெரிந்திருந்த அனைத்து ரைம்ஸையும் பாடிக்கொண்டிருந்தாள்.

கொஞ்சம் யோசித்து பார்த்ததில் சிலவிஷயங்கள் புலப்பட்டது.I just understood, pappu is not my dignity. she is an individual. like me. she has her own likes and dislikes. அவற்றை மதிக்கக் கற்றுக்கொண்டேன். Thanks to the wonderful opportunity!

இங்கு பப்பு முழு உற்சாகத்துடனும் சத்தத்துடனும் கைகளை தட்டியபடியும் ரைம்ஸுக்கான ஆக்‌ஷன்களை செய்தபடியும் பாடிக்கொண்டிருந்தாள். வேறு யாரும் இல்லை அருகில். நானும், பப்புவும் மற்றும் எங்களுக்கு மேலே நிலாவும் நட்சத்திரங்களும்.

அக்கம்பக்கத்துவீடுகளில் ஏர்டெல் சூப்பர் சிங்கர் பாடலும், அதைத் தொடர்ந்து கைத்தட்டல் சத்தமும் ஒலித்துக்கொண்டிருந்தது!

Monday, December 21, 2009

காமன்மேன்

கடந்தவாரம் தம்பி வந்திருந்தான், பரிட்சைகள் முடித்துவிட்டு.

குட்டி எப்போதுமே எல்லா பரீட்சைகளையுமே நன்றாக எழுதியிருப்பதாகத்தான் சொல்லுவான். அஃப்கோர்ஸ், அவன் புத்திசாலிதான். ஆனாலும், எப்போது கேட்டாலும், எந்த பரிட்சையாக இருந்தாலும், நன்றாக சூப்பராகவே எழுதியிருப்பதாகவே சொல்லுவான். இவ்வளவு மார்க் வருமென்று மிகச்சரியாக சொல்லுவான். அதுபோலவே வாங்குவான். எல்லாவற்றுக்கும் மேலாக செஸ் சாம்பியன்!


ஆனால், நான் அப்படியே நேரெதிர். மாதாந்திர டெஸ்டாக இருந்தாலும், எவ்வளவுதான் நன்றாக எழுதியிருந்தாலும் 'நல்லாவே எழுதலைப்பா' என்றே சொல்லுவேன்.டெஸ்டுக்கே இப்படியென்றால் தேர்வுகளுக்கோ கேட்கவே வேண்டாம். அன்று முழுவதும் அழுது வடியும் முகத்தோடு, யாரிடமும் பேசாமல் மூட் அவுட்டாகவே கழியும்! இப்போதே இதையெல்லாம் செய்து விட்டால் விடைத்தாள் கிடைக்கும்போது ரீப்ளே செய்ய வேண்டாமே! அதுவுமில்லாமல், ஆயாவுக்கும் பெரிம்மாவுக்கும் மதிப்பெண் தெரிய வரும்போது பெரிதாக ஒன்றும் சஸ்பென்ஸ் இராது!

ஆனால், மறைமுகமாக எடுத்துக்காட்டுகளுடன் பேச்சு கிடைக்கும். படிப்பை மூச்சாக கொண்டிருக்கிற தமிழ் சமூகத்தில் அதுவும் டீச்சரின் பிள்ளையாக நீங்கள் பிறந்துவிட்டால் ஏதாவது ஒருவிதத்தில் எடுத்துக்காட்டாக திகழ வேண்டும். ஒன்று அதிபுத்திசாலியாக அல்லது மக்குபிளாஸ்திரியாக! யாருக்காவது எ.கா-ஆக காண்பிக்க நீங்கள் பயன்படுத்தப்பட்டுக் கொண்டேயிருப்பீர்கள்! அதுவும் குடும்பத்தின் முதல் பேரன் பேத்திகளாக இருந்துவிட்டாலோ உங்கள் பாடு திண்டாட்டம் திண்டாட்டம்!

எல்லா குடும்பத்திற்கும் சொல்லிக்காட்டவென்று ஒரு ரோல் மாடல் கிடைத்துவிடுவார்கள். ஆர் ஈ சியிலோ அல்லது எம் எம் சியிலோ படித்தவர்கள். அல்லது 'அந்த காலத்துலேயே கோல்ட் மெடலிஸ்ட்' அடைமொழி கொண்ட ஏதாவதொரு சித்தப்பாவோ, பெரியப்பாவோ,அத்தையோ அல்லது மாமாவோ! அதுவும் அவர்களைப் பற்றிய கதைகள், பராக்கிரமங்கள், சிறுவயது மேதமைத்தனங்கள் எல்லாம், அடுத்தடுத்த தலைமுறைக்குக் கவனமாக கடத்தப்படும். அந்தக்காலத்துக்கு, இந்த கோல்ட் மெடலிஸ்ட்கள் ஓக்கேதான் என்றாலும் இன்றைய போட்டிகள் நிறைந்த சூழலுக்கு இந்த ரோல் மாடல்கள் அவுட்டேட்டட் என்பதை வசதியாக மறந்துவிடுவார்கள். 'பியூசிலே கணக்குலே செண்டம்' எனபது முதல் 'உங்க மாமாவுக்கு கால்குலேட்டரே வேண்டாம்' என்பது வரை!

ஏதோவொரு தைப்பூசத்தில் நடந்த விடுகதை போட்டியில் யாருக்கும் தெரியாத புதிருக்கு விடை சொன்ன மாமாவின் கதை மறக்காமல் எல்லா குட்டீஸுக்கும் சொல்லப்படும். “பூனைக்கு ஆறு கால்” என்று புதிர் சொல்பவர் சொல்ல எல்லோரும் ”தவறு, நான்கு” என்று சொல்ல, மாமா மட்டும் ”சரிதான், பூ நக்கிக்கு ஆறுகாலென்று” என்று சொல்லி பாராட்டை பெற்றாராம். (இப்போது என் கடமையை நானும் சரிவர செய்துவிட்டேன், பப்புவுக்கு கடத்திவிட்டேனல்லவா!!)


அடுத்தது, 'நல்லா படிக்கறவங்க கூடத்தான் சேரணும்'னு என்ற அட்வைஸ்/மித்! அப்படி சொல்லும்போதெல்லாம் ஒரு கேள்வி தொண்டை வரை வந்துட்டு போகும். ‘இதே மாதிரி அவங்க வீட்டுலேயும் சொல்லுவாங்க தானே, அப்போ அவங்க எப்படி எங்க கூட சேருவாங்க'ன்னு! ஆனா, கேக்கற இடத்துலேயா நான் இருந்தேன்...கேட்டுக்கற இடத்துலேதானே இருந்தேன்! அதைவிட, செண்டம் எடுக்கும் கசின்ஸோ அல்லது செண்டம் எடுக்கும் குடும்ப நண்பர்கள் பிள்ளைகளோ இருந்தால் உங்கள் பாடு திண்டாட்டம்தான்! எனக்கும் அந்த திண்டாட்டம் இருந்தது - ஒரு குடும்ப நண்பரின் ஹேமா மூலமாக!


அவரது, நோட்டுப்பாட புத்தகங்கள் அவ்வளவு அழகாக இருக்கும், குண்டு குண்டு கையெழுத்துடன். மூலைகள் மடங்கியிருக்காது. எல்லாவற்றுக்கும் மேல் கையெழுத்து ஆரம்பம் முதல் கடைசி வரை, நோட்டுப்புத்தகத்தின் கடைசி வரை ஒரே மாதிரி அழகாக இருக்கும். என்னுடையது முதல் பாடம் மற்றும் இரண்டாம் பாடங்கள் மட்டும் கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம் போல..அடுத்து வருபவை வர வர மாமா...;-) சோ, இவரது நோட்டுபுத்த்கத்திற்கு எங்களிடையே பயங்கர டிமாண்ட் இருக்கும் என்பதை சொல்லவே வேண்டாம். எதற்கு டிமாண்ட் இருக்குமோ அதன் மதிப்பும் அதிகம்தானே...இந்த ஞானசௌந்தரியும் அதற்கு விதிவிலக்கில்லை..கொடுக்க ஏகப்பட்ட பிகு பண்ணுவார் - கொடுத்துவிட்டாலோ ஏதோ ஒரு படத்தில் ரஜினிக்கு வேட்டிக்கொடுத்த செந்தில் மாதிரிதான்! எல்லாவற்றுக்கும் மேல் அவர் பார்க்க ஒல்லியாக வேறு இருப்பார். ‘படிச்சி படிச்சே இவ இப்படி ஆகிட்டா' என்று அதுவும் அவரது தலையில் ஒரு இறகாக மாறி நிற்கும்!


இப்படி எல்லோரும் மெரிட்டில் சீட் வாங்கிவிட நான் மட்டும் பிசிஏ சேர நேர்ந்தது.
சேர்ந்தபின், எனக்கு மணி மாமா நினைவுதான் வந்தது. கணக்கில் செண்டம் எடுத்தும், ஐ ஏ எஸ் -க்கும் படித்துக்கொண்டிருந்த மாமாக்களுக்கு இடையில் ஐடிஐயில் படித்து சேஷசாயியில் வேலை செய்த மாமா. மாமாவின் ரசனைகள் குறித்தும் திறமைகள் குறித்தும் பல்வேறு துணுக்குகள் விடுமுறைக் காலங்களில் குடும்பங்கள் ஒன்று கூடும்போது பரிமாறிக்கொள்ளப்படும். இதெல்லாம் நினைவுக்கு வந்தபோது என் முதுகுதண்டு ஒரு முறை சிலீரிட்டு அடங்கியது! அடுத்து நானா?! என்ற கேள்விதான் அது! மணிமாமாவாவது உடலளவில் பலசாலி, காலையில் முட்டையைக் உடைத்துக் குடித்துவிட்டு ஞானசபை வரைக்கும் ஓடுவாராம். கிணற்றின் ஆழத்திலிருக்கும் உள்கிணற்றிற்கு நீர்மட்டம் இறங்கிவிட்டால் ராட்டினம் போட்டு நீர் இறைத்துத்தருவாராம். ஆனால். நான்? ஹீம்ம்...

குட்டி இங்கே யாருடனோ தொலைபேசிக்கொண்டிருந்தான். போனிலேயே சந்தேகங்களை விளக்கிக்கொண்டு!'நான் அடுத்தவாரம் ஊருக்கு போறேன், குட்டி, வர்றியா' என்றேன் அவனைப் பார்த்து. 'இல்லக்கா, அந்த வாரம் ஃபுல்லா எனக்கு செஸ் காம்படிஷன் இருக்கு' என்று கம்ப்யூட்டருடன் ப்ராக்டிஸ் செய்ய ஆரம்பித்துவிட்டான்.

வாழ்வின் சாமான்யங்களிலேயே திருப்தியடைந்துவிடுகிற நான், ஊருக்குத் தேவையானவைகளை பையில் எடுத்துவைக்க ஆரம்பித்தேன்.


குறிப்பு: எனக்கு மட்டும் இந்த தலைப்புலே எழுதனும்னு ஆசையிருக்காதா என்ன?! ஹிஹி..

Sunday, December 20, 2009

சனிக்கிழமை இரவு

'சனிப்பிணம் தனியா போவாது'
என்றபடி மாடியேறினார்
எனக்கும் மேல்வீட்டில்
குடியிருக்கும் மாமி!
இறந்துபோன கேரளா தாத்தாவுக்கு
இதெல்லாம்
அப்லிக்கபில் ஆகாதென்று
அப்போதைக்குத் தோன்றினாலும்
கொஞ்சம் திகிலாகவே
கழிந்தது
அன்றைய இரவு!

எண்ணித் துணிக கணக்கு

குறிப்பு : காப்பி போ(பே)ஸ்ட்தான்!
ப்லாக் காணாம போனப்போ இங்கே எழுதினது. இங்கேயும் ஒரு தடவை போஸ்டறேன்.
1. ஒரு பக்கத்தை நான்கு பகுதிகளாக பிரித்துக்கொண்டோம்.

2. ஒவ்வொரு பகுதியிலும் முறையே மூன்று பந்துகள், ஆறு படகுகள், நான்கு பூக்கள், இரண்டு மீன்கள் வரைந்தேன்.

3. ”எத்தனை இருக்கு“ என்றதும் எண்ணினாள். முதல் முறை இருவரும் சேர்ந்தே எண்ணினோம்.

4. அடுத்து 'எதில் ஆறு (எண்) இருக்கு' என்றதும் மறுபடி எண்ணிவிட்டு சொன்னாள். இதை எல்லாக்கட்டங்களுக்கும் செய்தோம்.

5. அடுத்த பக்கம் அவளுடையது. 'என்ன வரைய போறே' என்றதும், ‘பால்' என்றாள். எத்தனை என்பதையும் அவளது தீர்மானமே. கீழ்கட்டங்களில் இருப்பவை ‘5 ப்ளேன்'கள் ‘மூன்று படகு'கள்(காளான்கள் போன்று இருக்கிறதே..அவைதான்!).

Saturday, December 19, 2009

நின்னுக்கிட்டே ஃபேனை தொடுவது பற்றி...

குறிப்பு : காப்பி போ(பே)ஸ்ட்தான்!
ப்லாக் காணாம போனப்போ இங்கே எழுதினது. இங்கேயும் ஒரு தடவை போஸ்டறேன்.

பப்புவை பார்ப்பவர்கள், அடுத்து என்னைப்பார்த்து முதலில் கேட்கும் கேள்வி "என்ன, இவ்ளோ ஒல்லியா இருக்காளே!". அதுவும் என்னை பார்த்துவிட்டு, பப்புவை பார்த்தால் அப்படித் தோன்றுவது நியாயம்தான் என்றாலும் , நான் அவளுக்கு சாப்பாடு போடுகிறானெவென்றே ஒரு சிலருக்கு சந்தேகம் வருவது கொஞ்சம் ஓவர்தான்.

அப்படி சொல்பவர்கள் கையில் உடனே ஒரு கிண்ணத்தில் சாதத்தை போட்டு பப்புவுக்கு ஊட்ட சொல்லி பார்க்க மிகவும் ஆவலாக இருக்கும்! ஆனால் என்ன செய்வது...அவர்களின் அறிவுரைகளுக்கு தலையை ஆட்டிக்கொண்டிருப்பதைத் தவிர!!

பெரிம்மாவுக்கும், அம்மாவுக்கும் ஊரிலிருந்து வந்தால் பப்புவோடேதான் பொழுது போகும்...ஒரு கிண்ணத்தில் சாப்பிட ஏதாவது வைத்துக்கொண்டு. அதைப்பார்த்து எனக்கு சந்தேகம் வந்துவிடும்..ஒருவேளை பப்பு வளர்ந்து தானாக சாப்பிட கற்றுக்கொண்டால் என்ன பண்ணுவார்கள்? பாட்டு பாடி, நரியாக, பூனையாக மாறி, கடைசியில் அவர்கள் டயர்டு ஆகி அமர்ந்திருப்பதைப் பார்த்தால் அந்த கிண்ணத்திலிருப்பதை அவர்களுக்குத்தான் ஊட்டவேண்டும் போல இருக்கும்! இதைச் சொன்னால் எனக்குதான் அர்ச்சனை நடக்கும்...

”அது எப்படி, உன்னால் சாப்பிட முடிகிறது, பப்பு சாப்பிடாம” என்று!! அதை பார்க்கவாவது எனக்கு தெம்பு வேண்டாமா, அதற்குதான் சாப்பிடுகிறேன் என்று ஒரு பிட்டை போடுவேன். உடனே அடுத்த அம்பு வரும். ‘வெறும் புக்ஸ் வாசித்துக்காட்டினால் மட்டும் போதும்னு நினைச்சுக்கிட்டிருக்கியா, அஞ்சு வயசுக்குள்ளே நீ என்ன சாப்பாடு கொடுக்கிறாயோ அதுதான் முழு ப்ரெய்ன் டெவலப்மெண்ட்' என்று! 'வயிற்றுக்குள் என்ன செல்கிறது என்பதைவிட பப்புவின் மூளைக்குள் எனன் செல்கிறது என்பதுதான் பெரிம்மா முக்கியம்' என்று நானும் அடுத்த பிட்டை போடுவேன்! ( அப்படி அவங்க நினைச்சிருந்தா...ஹிஹி!)

வளர்ப்பது, கவனித்துக்கொள்வது என்றால் சாப்பிடக் கொடுத்துக்கொண்டே இருப்பதுதான் என்று நினைத்துக்கொள்பவர்கள்தானே நாம்! விருந்தோம்பலில் பெயர்பெற்றவர்களல்லவா! அவ்வளவு ஏன், கடைசியாகச் சென்ற திருமண வரவேற்பில்கூட, போனதும் சாப்பிடத்தானே சொன்னார்கள். மணமக்களை பார்க்காமல், முதலில் சாப்பாட்டை முடித்துக்கொண்டு, பின்னரே அவர்களை வாழ்த்தினோம்! ”பந்திக்கு முந்து” என்றே பழமொழி கொண்ட சமூகத்தில் இதெல்லாம் ஆச்சர்யமா என்ன!! :-)

எது எப்படியாயினும், ஓடி ஓடி ஊட்டும் ரகமல்ல, நான் . (அதானே, அப்படி இருந்தா இந்த போஸ்ட் போடாம பப்புவை சாப்பிட அல்லவா வைத்துக்கொண்டிருக்க வேண்டும் என்று ஆயில்ஸ் நினைப்பது புரிகிறது! ) அவள், போதுமென்று சொல்லிவிட்டால் விட்டுவிடுவேன். என் கையிலிருக்கும் கிண்ணம் காலியாக வேண்டுமென்ற நினைப்பே கிடையாது. எடை அவளது வயதுக்கு தகுந்தவாறு இருக்கும் வரை பெரிதாக அலட்டிக்கொண்டதில்லை. ஆனால், நாம் கண்டிப்பாக இப்படி வளர்க்கப்பட்டிருக்க மாட்டோம்! (மேலும், பப்புவை போல தீர்மானிக்கும் உரிமையெல்லாம் எனக்கும், என் தம்பிக்கும் இருக்கவில்லை.) கொடுத்ததையெல்லாம் சாப்பிட்டாக வேண்டிய கடமை எங்களுக்கு - சாப்பிட கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டிய கடமை பெரியவர்களுக்கு!

”பால் குடி, எலும்பெல்லாம் அப்போத்தான் ஸ்ட்ரென்த்தா இருக்கும்! ”

”கீரை சாப்பிடு, கண்ணுக்கு நல்லது”

“பருப்பு சாதம் சாப்பிடு, அப்போதான் ஹைட்டா ஆகலாம், நின்னுக்கிட்டே மேலே ஃபேனை தொடலாம்! (ஹ்ம்ம்..எதுக்கு தொடணும்? ஒரு வேளை தொடைக்கறதுக்கு இப்படி ஒரு வழி இருக்கோ?!!)

“அஞ்சு மணிக்கு எழுந்தா ப்ரெட் அண்ட் ஜாம் தருவேன்..”
(ஆனா, அதுக்கு அப்புறம் பத்து திருக்குறளை படிச்சு மனப்பாடம் செஞ்சது தனிக்கதை! )

அதை சாப்பிடு, இதுக்கு நல்லது. இதை சாப்பிடு அதுக்கு நல்லது என்று வளர்ந்து, பப்பு உருவானதும் இதெல்லாம் “பப்புவுக்கு நல்லது” என்று மாறியது. பப்பு வந்தப்பிறகோ, இதை குடி, பால் கிடைக்கும், அதை சாப்பிடு, சீக்கிரம் உடம்பு தேறும் என்று உருமாறியது. கொஞ்ச நாட்களில், ‘ பப்புவுக்கு இப்போ ராகி குடு, உடம்புக்கு நல்லது', 'அப்போ சூப் கொடு, உடம்புக்கு நல்லது' என்றும் கவனம் திசை திரும்பியது!

இன்று காலை முட்டையை சாப்பிட மறுத்த பப்புவிடம். “எக் சாப்பிட்டாதான் 'சிங்கம் போல ஸ்ட்ரென்த் எனக்கு' வரும்” என்று சொன்ன போதுதான் உறைத்தது நானும் என் பெரிம்மா,அம்மா போல மாறிக்கொண்டிருப்பது!!

கடுகின் குழப்பம்!

குறிப்பு : காப்பி போ(பே)ஸ்ட்தான்!
ப்லாக் காணாம போனப்போ இங்கே எழுதினது. இங்கேயும் ஒரு தடவை போஸ்டறேன்.என் பெயர் கடுகு.

பெரும்பாலும் சீ.கடுகு என்றும் சில நேரங்களில் மிஸ்.கடுகு சீரகம் என்றும் அறியப்பெற்றிருந்தேன்.
(கல்யாணம் முடிந்த சில மாதங்களில்)காப்பீட்டிற்காக ஃபார்ம் நிரப்ப வேண்டியிருந்தது.
பெயரை, முழு பெயரையும், கல்யாணமான விபரத்தையும் பூர்த்தி செய்து அனுப்பியிருந்தேன்.
ஒருவாரம் கழித்து கடிதம் வந்தது. அது இப்படி ஆரம்பித்திருந்தது.

மிஸஸ். கடுகு சீரகம் அவர்களுக்கு,

அதிர்ந்து போன நான், விளக்கிக் கூறினேன்.

Ms.கடுகு சீரகம் பேசுகிறேன். மிஸஸ்.கடுகு சீரகம் என்று தவறாக குறிப்பிட்டிருக்கிறீர்கள்.
Ms என்று மாற்றி விடுங்கள்.

அப்படியானால், மணமானவர் என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பது?

உண்மைதான். ஆனால் எனது சான்றிதழ்களின்படி நான் கடுகு சீ மட்டுமே.

பி. எஃப், பான் கார்டு, காப்பீடுகள் எல்லாவற்றிலும் என் பெயர் கடுகு சீரகமாக இருந்தாலும், கல்யாணமான தகுதியின் நிமித்தம், மிஸஸ். கடுகு சீரகமாக்கப்பட்ட அவதியிலும், நீங்க்ள் உளுத்தம்பருப்புடன் வாழவில்லையா என்ற கேள்விகளாலும், Ms. கடுகு சீ -
மிஸஸ்.கடுகு உளுத்தம்பருப்பு என்று மாறியது!

இருந்தாலும், இன்று வரை சான்றிதழ்களில் கடுகு சீ மட்டுமே.

ஆனாலும், கடுகின் குழப்பம் அளப்பரியது!

Ms.சீ.கடுகு உளுத்தம்பருப்பா அல்லது Ms.கடுகு உளுத்தம்பருப்பா அல்லது மிஸஸ்.சீ.கடுகு உளுத்தம்பருப்பா என்பதுதான் அது!? !

டிசைனர் வீடுகள்

apple and address

தொடர்ச்சியாக, arrow எப்படி இருக்குமென்று வரைந்தோம். டிராபிக் சிக்னலில் பார்த்தது மற்றும் சில புத்தகங்களில் பார்த்தது பப்புவிற்கு நினைவிருந்தது. அதேபோல வரையலாமென்று முயற்சி செய்தாள். ஒரு முறை வரைந்து காண்பித்ததை பார்த்து வரைந்தாள்.முதல்முறை சரியாக வரவில்லை, அடுத்த முயற்சிகளில் பரவாயில்லையாக இருந்தது. ஒரு முக்கோண வடிவ பஸிலைக் கொண்டு மேல்வடிவத்தை டிரேஸ் செய்தாள்.(படம் கீழே)அடுத்து வீடுகளுக்கு அட்ரஸ் எழுதும் படலம் ஆரம்பித்தது.
ஒரு நீண்ட பேப்பரை கட்டம் கட்டமாக மடித்துக்கொண்டு இரு ஓரங்களிலும் டையக்னலாக வெட்டிவிட வேண்டும். முதலில் இருக்கும் வீட்டிற்கு ஜன்னலும் கதவும் வரைந்தேன். பப்பு அதைப் பார்த்து தொடர்ந்து வரைந்தாள். நிறைய ஜன்னல்கள் வரைவது பிடித்து இருந்தது, பப்புவுக்கு. நிறைய ஜன்னல்கள் கொண்டு டிசைனர் வீடுகள் உருவாயின.பின்னர், அதை ஜன்னல் எண்ணும் ஆக்டிவிட்டியாக மாறியது. அவள் எத்தனை என்று எண்ணி சொல்ல அதை கூரையில் மேல் எழுதினேன். வீட்டுக்கு பக்கத்தில் அட்ரசும் எழுதியிருக்கிறாள்.

Friday, December 18, 2009

கி யா மற்றும் கேசினி

+2விற்கு பிறகு காலை ஐந்து மணி எப்படி இருக்குமென்று கடந்த சனிக்கிழமை பார்க்க நேர்ந்தது! பப்புவின் பள்ளியில் கராத்தே செய்முறை மற்றும் பெல்ட் வழங்கும் நிகழ்ச்சிக்காக காலை ஏழு மணிக்கே வரச் சொல்லியிருந்ததே காரணம். அகில இந்திய வீரக்கலை கழகம் என்ற அமைப்பிலிருந்து அதன் தலைவர் வந்திருந்தார். ஒரு பேச்சுக்காக அவரை பேசச்சொன்னதுக்கு போட்டு தாளித்துவிட்டார். தன் கை, கால்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருப்பவரை எந்த நோயும் அண்டாதென்றும், நமது நாட்டில் உடல்நலத்தைப் பற்றிய அறிவு மிகமிகக் குறைவென்றும்.

மேலும் அவர் சொன்னதிலிருந்து, வாக்கிங் ஒரு உடற்பயிற்சியே அல்ல, எதுவுமே செய்யாமலிருப்பதற்கு வாக்கிங் ஒக்கே. விழிப்புணர்ச்சி பலருக்கு இருந்தாலும் நிறைய பேர் உடற்பயிற்சியை முறையாக செய்வதில்லை.

கையை போட்டு சுழற்றுவது, பின்பு தலையை ஒரேயடியாக ஆட்டுவது என்று இது தசைகளை சோர்வடைய செய்யுமாம். உடற்பயிற்சி என்பது செய்து முடித்தபின் புத்துணர்ச்சியடைய வைக்க வேண்டும். சக்தியை சேமிக்க செய்வதாக இருக்க வேண்டும். ஜிம்-களுக்குச் செல்வது சரிதான், ஆனால் தொடர்ந்து செய்ய வேண்டும். கொஞ்சநாட்கள் விட்டால் காற்றுபோன பலூன் போல ஆகிவிடும். அதற்கு மார்சியல் ஆர்ட்ஸ் மிகச்சிறந்தவை. நமது சிலம்பம், யோகா இவற்றை அடிப்படையாகக்கொண்டு சீனாவும், ஜப்பானும் அமைத்தவையே கரத்தே, டேக் வான் டோ முதலியன. எல்லோருக்கும் தெரிந்த ஜிம் மனிதர்கள் ‘அர்னால்டு','ஸ்டாலன்'. ஆனால் இவர்கள் இன்று எப்படி இருக்கிறார்கள? எல்லோருக்கும் தெரிந்த தற்காப்புக்கலை வீரர்கள் ஜாக்கி சான், இன்னொருவர் (பெயர் மறந்துவிட்டது) எப்படி இருக்கிறார்கள். இன்றும் அதே வேகம்,உற்சாகம்! மேலும், சைனாவின் ஆர்மியில் ஆள் எடுப்பது வீரர்களை அல்லது சண்டையில் ஆர்வமுள்ளவர்களைத்தான் பயிற்சி கொடுத்து சேர்க்கிறார்களாம். ஆனால், நம் நாட்டில் ஆட்களை தேர்ந்தெடுத்து பயிற்சிக் கொடுக்கிறார்களாம், அதாவது அந்த நபருக்கு சண்டையில் ஆர்வமிருக்கிறதா, முனைப்பிருக்கிறதா என்ற தெளிவில்லாமலேயே! அதற்குள் தூறல் நின்றுவிடவே கராத்தே நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின.

எல்லோரும் வரிசையில் நின்றார்கள். மாஸ்டர் கி ஐ என்றதும் எல்லோரும் பஞ்ச் கொடுத்து க்யா என்று கத்தினார்கள். (வீட்டில் பப்பு அடிக்கடி கத்திக்கொண்டிருப்பாள் - க்யா க்யா வென்று!) அடியை விட சத்தமே மிகுதியாக இருக்கும்! இங்கும் அப்படியே இருந்தது! மேலும் குட்டீஸ் எல்லோரும் அம்மா அப்பாவை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே வேறு இருந்தனர். முடிந்ததும், அமர சொல்லிவிட்டு ஒவ்வொருவருக்கும் பச்சை பெல்ட் கொடுத்தார் மாஸ்டர். அதை முன்னால் வைத்து குனிந்து வணங்கி எழுந்தனர். பின்னர், அவர்களுக்கு அதை அணிவித்துவிட்டு, ஏற்கெனவே அணிந்திருந்த வெள்ளை பெல்ட்டை அவரவர் கையில் கொடுத்தார். அனைவரும் திரும்ப அமர்ந்ததும் மாஸ்டர் வந்து வெள்ளை பெல்ட்டை வாங்கிக்கொண்டார். (என்ன செய்வாங்க?)

உடனே, எல்லோரும் ஹேய், நான் க்ரீன் டான் என்று ப்ரவுன் டான்களிடம் சொல்லத் தொடங்கினர். 'க்ரீன் க்கு அப்புறம்தான் ப்ரவுன் என்று ப்ரவுன் டான் அக்காக்களும் அண்ணாக்களும் கூற க்ரீன் டான்கள் ஞே வாகினர். அம்மா அப்பாக்கள் அவரவர் டான்களை போட்டோ எடுப்பதில் பிசியாகி விட கூட்டம் மெதுவாக கலைந்தது!


ஞாயிற்றுக்கிழமை சென்னை பிர்லா கோளரங்கம் சென்றிருந்தோம். ஆங்கிலம் மற்றும் தமிழில் காட்சிகள் உண்டு. நாங்கள் சென்றது தமிழில். cassini/huygens விண்கலம் சனிக்கிரகத்திற்கு சென்றது பற்றிய வெர்ச்சுவல் டூர் பார்த்தோம். 30 மணி நேரக் காட்சி. பப்புவிற்கு ஓரளவிற்கு சுவாரசியமாக இருந்தது - ஸ்பேஸ் ஷட்டில், நிலவு/கோள்கள் சுற்றுவது முதலியன. பூமி சுற்றுவதால் இரவு பகல் வருகிறது என்று மட்டுமே அவளுக்குத் தெரியும். ஒருமுறை உனக்கு விங்ஸ் இருந்தா என்ன பண்ணுவே என்று கேட்டதற்கு 'சூரியன் கிட்டே போவேன்' என்றும் சூரியனை பாக்கெட்டில் போட்டுக்கொண்டு வருவேன் என்றும் சொல்லியிருக்கிறாள். இங்கும் சூரியனை எதிர்பார்த்துதான் வந்தாள். ஆனால் சூரியன் பற்றி எதுவும் இல்லை.

அதன்பின்னர் 3D படக்காட்சி இருந்தது. பப்புவுக்கு மிகவும் இஷ்டமாக இருந்தது. மேலும், பார்க்க நிறைய அரங்குகள் இருந்தன. பப்புவின் வயதுக்கு அதிகம். அங்கிருந்த சறுக்குமரம், ஊஞ்சல் போன்ற விளையாட்டுச் சாதனங்களில் மிகுந்த நேரத்தைக் கழித்துவிட்டு வீடு திரும்பினோம். கிண்டி பார்க் போல கூட்டமாக இல்லாமல் வேண்டியமட்டும் விளையாட இங்கே வாய்ப்பு கிடைத்தது.

கேசினியின் சுருக்கமான காட்சியாக்கம் இங்கே (thanks to google)

இடம் : பிர்லா கோளரங்கம், அண்ணா பல்கலை அருகில், கோட்டூர்புரம்

ஷோவுக்கான கட்டணம் : ரூ 25 (4 வயதுக்கு மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு)
ரூ 45 (பெரியவர்களுக்கு)

Thursday, December 17, 2009

பப்பு டைம்ஸ்

(ஆயாவுக்கும் பப்புவுக்குமிடையே நடந்த உரையாடல்)

பப்பு, பேப்பரை மெதிக்காதே, காலை எடு!

ஏன்?

பேப்பரை மெதிக்கக்கூடாது!

ஏன்?

....


சாமி அடிக்குமா?

ஆமா!

மேலே இருந்து வந்து அடிக்குமா?

ஆமா!

நான் சாத்தி வைச்சிடுவேன்.

திறந்து வந்து அடிக்கும்.

நான் நல்லா பூட்டி வச்சிடுவேன்.

ஒடைச்சுட்டு வந்துடும்.

நான் கெட்டியா பூட்டி வைச்சிடுவேன். அப்போவும் வருமா?

வராது!


மேலே ஓட்டை வழியா வருமா?

ஆமா.

அதையும் சாத்தி வைச்சிடுவேன்.

சரி, வராது!

வந்தா நான் கராத்தே பண்ணுவேன். என்னா பண்ணும்?

அதுவும் கராத்தே பண்ணும்.

நான் நல்லா கராத்தே பண்ணி ஓட வைச்சிடுவேன்!
(அலுவலகத்திலிருந்து நான் தொலைபேசியபோது)

ஆச்சி, ஒரு கவ்வும், பஃபல்லோவும் வீட்டுக்கு வந்திருக்குது!

சரி, உட்கார வை!

கேட்-க்கு வெளிலே நின்னுக்கிட்டுருக்கு, நான் கராத்தே பண்ணிட்டேன், அதனாலே போய்டும்!
ஆச்சி, நீயும் அப்பாவும் போய்ட்டீங்கல்ல, நானும் ஆயாவும் இருந்தப்போ ஒரு ஏப்-உம் ரைனோவும் உள்ளே வரப்பாத்துச்சு!

ஓ...அப்புறம்?

நான் நல்லா கராத்தே பண்ணி துரத்திட்டேன்!

வாவ், சூப்பர், பப்பு!!
இப்படித்தான், இவர்களனைவரும் கடந்த சனிக்கிழமையன்று கராத்தே செய்தார்கள். ”நான் க்ரீன் டான்”, ”நான் ப்ரவுன் டான்” என்று பெருமையுடன் சொல்லிக்கொண்டார்கள்! (க்ரீன் டான்கள் 4-6 வயது, ப்ரவுன் டான்கள் - 7 வயதுக்கு மேல்)

Wednesday, December 16, 2009

alphabeTalk

ஆல்ஃபெட் பிங்கோ விளையாடிக்கொண்டிருந்தோம்!

லு -லயன்

லு - லீஃப்

லு- லக்னோ

(ஓ..லக்னோல்லாம் தெரிஞ்சுருக்கே...ஆன்ட்டி இதெல்லாம் சொல்லிக்கொடுத்திருக்காங்க போல!! )

ஆச்சி..லக்னோன்னா....

(ஏதோ சொல்ல வருகிறாள், அதை அறியாமல் தலைக்குப் பின்னால் சுழலும் ஒளிவட்டத்துடன்)

அது ஒரு இடம்..ஒரு ஊர்!

இல்லே...ஆச்சி, ஒரு இடத்துலேருந்து நெருப்பு வருமே...மலை மேலேருந்து!!

ஓ..அது வல்கனோ!!

ஆமா, ஆமா...வல்கனோ!!

Monday, December 14, 2009

apple and address(Thanks - Google)

பிறந்தநாளுக்கு வாங்கியிருந்த பேப்பர் பிளேட்கள் சில மீதமிருந்தன.அதிலொன்றை எடுத்துக்கொண்டோம். அதில் a-வை நினைத்துத்தான் வரைய ஆரம்பித்தேன். ஆனால் ஆரஞ்சு போல வந்துவிட்டது. பப்பு நல்லபெண்ணாக அதை ஆப்பிள் என்று ஒப்புக்கொண்டு விட்டாள். ஆப்பிளுக்கும், இலைக்கும் வண்ணங்கள் தீட்டினாள். அவளுக்கு வெட்ட கடினமாக இருந்ததால், வெட்டிக்கொடுத்ததும் ஒட்டினாள். பிறகு நாங்கள் ஆப்பிளைப் பற்றி பேசினோம்.

ஆப்பிள் எந்த பக்கம் சிவப்பாக இருக்கும்(ஹிஹி..எல்லாப் பக்கமும்தான்!), An apple a day..., ஆப்பிளின் பாகங்கள் ( ஆப்பிள் விதை, காம்பு) முதலியன!

வேறு சில a வார்த்தைகளை,

address
arrow
anchor
axe
ant

பற்றியும் பேசினோம்.
ஞாயிறு பேப்பரோடு வந்த flyers-இல் வெட்டிய வடிவங்கள் இவை.ஏற்கெனவே ஷேப்ஸ் பஸில்சை வைத்து, இது போல வீடு செய்து பப்புவுக்கு பழக்கமாதலால் சுலபமாக ஒட்டிவிட்டாள். ஜன்னல்களையும் ஒட்டினாள். கதவு திறந்திருக்க வேண்டுமென்றதால் பாதி மடக்கிக் கொடுத்தேன். ஒட்டியபின் address பற்றி பேசினோம்.

ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு address இருக்கிறது என்றதும் “ஆம்பூர் ஆயாவுக்குமா, வடலூர் ஆயாவுக்குமா” என்றாள். பின்னர், அவளது வீட்டு அட்ரசை கேட்டேன். முதலில் “சென்னை” என்று சொன்னாள். முதலில் வீட்டின் எண்ணும், வீட்டின் பெயரும் வரும் என்றேன். சொல்லிவிட்டு, ”சென்னை “ என்றாள். வீடு எங்கே இருக்கிறது என்றதற்கு, தரையைக்காட்டி “இங்கே” என்றாள். :-)) முன்பே வீட்டு அட்ரஸ் தெரியுமென்றாலும் கோர்வையாக சொல்ல வராது. முதலடி எடுத்துக்கொடுக்க வேண்டும். இப்போதும் அதேதான். ஆனால், ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு அட்ரஸ் இருக்கிறது, போஸ்ட் வரும் என்று புரிந்துக்கொண்டிருக்கிறாள். மேலிருக்கும் படத்தில் வீட்டுக்கு அருகில் கிறுக்கியிருப்பது சாரி எழுதியிருப்பது வீட்டின் அட்ரஸ்!

Thursday, December 10, 2009

டோடோவை ஏன் எல்லோரும் டோடோன்னு கூப்பிடறாங்க?

டோடோ வினோதமான ஒலியைக் கேட்டாலோ அல்லது புதிதாக எதையாவது பார்த்தாலோ டொட் டொட் என்று சப்தமெழுப்பும். ஆச்சர்யமடைந்தாலும் டொட் டொட் என்று சப்தம் கொடுக்கும்.


காற்று பலமாக வீசி, வீட்டின் ஜன்னலின் தடுப்புகள் அசைந்தாலோ், கோழிக்குஞ்சுகள் கிச்கிச் என்று அங்கிமிங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருந்தாலோ, பூனைகள் குழந்தை போல அழும் சத்தம் கேட்டாலோ டோடோ ஆச்சர்யமடைந்து விடும். ”டொட்டொட்..இதோ வந்துட்டேன், உன்னை நான் புடிக்கப்போறேன், உன்கூட விளையாட வர்றேன்” என்று சொல்லிக்கொண்டு தாவி ஓடும். பிடிக்க முயற்சி செய்து மண்ணில் விழுந்து புரளும்.அதிலிருந்துதான், எல்லோரும் டோடோ என்று அழைக்கத் தொடங்கினர்.டோடோ, ஒருநாள் காலையில் 'கிரிச் கிரிச் கிரிச்' என்ற கலவையான சத்தத்தை கேட்டது. ஆச்சர்யமடைந்தது டோடோ! தோட்டத்தில் குருவிகள் கூட்டமாக மண்ணில் புழுக்களை தேடுவதையும், டோடோவின் உணவுத்தட்டை கொத்தியபடி திரிந்துக்கொண்டிருப்பதையும் பார்த்தது. டோடோ மெதுவாக சப்தமெழுப்பாமல் நடந்தது.

டோடோ குருவிகளை பயமுறுத்த விரும்பவில்லை. குருவிகள் பயத்தினால் பறந்துவிடுவதை டோடோ விரும்பவில்லை. அருகில் சென்றதும் குருவிகளின் மேல் திடீரென்று பாய்ந்தது. கைகளில், குருவியை பிடித்தமாதிரி இருந்தது, ஆனால் கைகளில் எதுவும் கிடைக்கவில்லை. எல்லாக்குருவிகளும் பறந்துவிட்டிருந்தன.


டோடோவுக்கு ஏன் குருவிகளை பிடிக்கத் தெரியவில்லை, ஏனெனில் டோடோ ஒருவயதே நிரம்பிய நாய்க்குட்டி!குறிப்பு : பப்புவுக்கு இப்போதெல்லாம் கதைகளில் சஸ்பென்ஸ் வேண்டும், அட்வென்ச்சர் வேண்டும், வன்முறை வேண்டும். அதற்கேற்ப உருவான கதை. நாய்க்குட்டிக்கு பதில் புலி, சிறுத்தை என்றும் குருவிகள் மான்களாகவும் மாறும்.

Wednesday, December 09, 2009

சித்திரக்கூடம் இப்போ வொர்க்கிங்!

பதிவை எப்படி மீட்கறதுன்னு யோசனையா இருந்தப்போ பதிவர் முத்துலட்சுமிதான் ஐடியா கொடுத்தாங்க...ஏற்கெனவே "தேன்கிண்ணம்" பதிவு காணாம திரும்ப மீட்ட அனுபவஸ்தர் ராம்கிட்டே கேளுங்கன்னு! ராம் சொன்னார், ப்லாக்கர் சப்போர்ட்-க்கு மெயிலிடுங்க, மறக்காம தொடர்ந்து கேட்டுக்கிட்டே இருங்கன்னு! அப்படியே செய்தேன்! இன்னைக்கு காலையில் முகில்தான் நினைவு படுத்தினார் (ப்லாக் இருந்தா தனக்கு தொந்தரவு வராதுன்ற நினைப்போ?!!), 'எதுக்கும் அந்த ரிஸ்டோரை இன்னொரு தடவை செக் பண்ணு'ன்னு! அதுலே வெர்ட் வெரிஃபிகேஷன் வந்திருந்தது. அதை சரியா சொன்னதும் 30 நிமிடத்தில் மடல் வந்தது, ப்லாக்கரிடமிருந்து! பதிவும் திரும்ப கிடைத்திருந்தது!

பதிவை காணாமல் தேடியவர்களுக்கும், தொடர்பு கொண்டு விசாரித்தவர்களுக்கும், உதவிய முத்து, ராம், ஆயில்ஸ், தமிழ்பிரியன், ப்லாக்கர் சப்போர்ட் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!

கடமையை சரிவர செய்த முகிலுக்கு நன்றி!

Tuesday, December 01, 2009

ஏக் தோ தீன்...

சில நாணயங்களை எடுத்துக்கொண்டோம். பப்புவுக்கு ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய் மட்டும் நன்றாகத் தெரிகிறது. அவளுக்கு எல்லா ரூபாய் தாள்களும் ஐந்து ரூபாய் அல்லது பத்து ரூபாய். நாணயங்களில் ஒன்று மற்றும் இரண்டு ரூபாயை அடையாளம் காண தெரிந்திருக்கிறது. தலை, பூ-வை பார்த்தபின், நாணயங்களை நோட்டில் வைத்து ட்ரேஸ் எடுத்தோம். பப்பு, க்ரேயானை நன்றாக அழுத்தி வண்ணமடித்துவிட்டதால் அடையாளம் காண முடியவில்லை.


இங்கிலீஷ் கார்னர்:

முடி வெட்டிக்கொள்ள சென்றிருந்தோம்...

” பாய் கட் பண்ணிடுங்க” என்றேன்.

நோ பாய்கட்..கேர்ல் கட்தான்...இல்ல..ஹேர் கட்..எனக்கு ஹேர்கட்தான் வேணும்!! - பப்புதான்!

aaya will பூட்டு! - ஆயா கதவை பூட்டியிருப்பார்கள் என்பதற்கு!

i will close the door and தாப்பா(தாழ்ப்பாள்)!