Friday, November 27, 2009

எ ஃபார்...

..... எடுத்துக்காட்டு!!

இந்த '.கா' என்ற எடுத்துக்காட்டு படுத்தற பாடு இருக்கே!! யூகேஜி- லேர்ந்து இன்னைக்கு வரைக்கும் நம்மை துரத்திக்கிட்டே வர்ற விஷயம்! முதல்லே 'எ.கா' -ன்றது 'எடுத்துக்காட்டு' அப்படின்னு எனக்கு புரியறதுக்கே சில பல வகுப்புகள் தாண்டி வர வேண்டியிருந்தது.

பளளிக்கூட புத்தகத்துலே பாடம் முடிஞ்சதும் அடுத்ததா கேள்விகள்/பயிற்சிக்கேள்விகள் இருக்கும். அது எப்படின்னா எடுத்துக்காட்டு ஒன்னு கொடுத்துட்டு அதே மாதிரி மீதியெல்லாம் செய்ங்க எனும் ரீதியில் இருக்கும். அறிவியல், தமிழ், ஆங்கில பாடங்கள் கூட சமாளிச்சிடலாம். ஆனால், இந்த கணக்கு பாடத்துலே இருக்குமே...அது ஒன்னொன்னும் ஒரு மாதிரி இருக்கும். எ.கா-ஆக இருக்கறது மட்டும் ஈசியா இருக்கும். ஒருவேளை ஈசியா இருக்கறதை மட்டும் எ.கா -ஆ செஞ்சு கொடுத்திட்டாங்களோன்னு தோணும்!

அதுவும், இந்த மணி பார்க்க கத்துக்கற காலகட்டம் மறக்கமுடியாதது... பாடத்துக்கு பின்னாடி நெறைய கடிகாரங்கள் வெவ்வேற நேரம் காட்டிய படி வரைஞ்சு இருக்கும். அதுலேயும் எ.கா-இல் இருக்கறது ரொம்ப ஈசியா 1.30 மணி காட்டும். ஆனா, நாம் எழுத வேண்டியது மட்டும், 7.45, 2.15 12.45 இப்படி இருக்கும். ஹாஃப் பாஸ்ட் 2, ஃக்வார்டர் டூ 8 - னுதான் சொல்லணும். ஆனா எ.கா-ஆக இதையெல்லாம் போட்டிருக்க மாட்டாங்க. நாமே “யாரேனும் மணி கேட்டால் அதை சொல்லக் கூட தெரியாதே” கேஸ்! நேராக சரியான மணி சொல்றதே பெருங்கஷ்டம், இந்த மாதிரி சுத்தி வளைச்சு சொல்லச் சொன்னா!!

எப்படியோ, மணியெல்லாம் (அட, கடிகாரத்திலேதான்!) பார்க்க கத்துக்கிட்டு பெரிய க்ளாஸ் வந்தா, கொஸ்டின் பேப்பரிலே, “கோலங்கைமா திசு, பாரங்கைமா திசு, மைட்டோகாண்ட்ரியா வை எ.கா டுடன் படம் வரைந்து விளக்கு” னு இருக்கும்! நமக்கு ஏதோ ஒரளவுக்கு ஒழுங்கா வரைய தெரிஞ்சது அமீபாதான். இதோட எங்க சயின்ஸ் டீச்சர் புண்ணியத்துலே மைட்டோகாண்ட்ரியா எப்படி இருக்கும்னு இப்போ வரைக்கும் ஞாபகம் இருக்கு! ஆனாலும் பத்தாவது பரீட்சையிலே கண் -னை (ஏன்னா அதுக்கு முன்னாடி வருஷம் கேள்வித்தாள்லே காது கேட்டிருந்தாங்க!) விழுந்து விழுந்து படிச்சுட்டுப் போக, கடைசிலே கொஸ்டின் பேப்பரில் 'காது வரைந்து விளக்கு'ன்னு வந்து இருந்தது. என்ன பண்ண, மனசை கல்லாக்கிட்டு, படிச்சிட்டு போன கண்ணை வேஸ்ட் பண்ணாம, 'இந்த மாதிரி இருக்கிற கண்ணுக்கு சற்றுத்தள்ளி காது இருக்கும்' என்ற மாதிரி ஒரு விடை எழுதி விட்டு வந்தது வரலாறு!

ஆனாலும், கழித்தல் கற்றுக்கொண்ட போது, 10-இலிருந்து 3 போனா மீதி எவ்வளவு கேள்விக்கு புரியாமல் விடும் லுக்-கை பார்த்து, “உன்கிட்டே பத்து மாம்பழம் இருக்கு, மூனு மாம்பழம் அனு-வுக்கு கொடுத்துட்டா மீதி உன்கிட்டே எவ்வளவு இருக்கும்” ன்னு எ.கா-டோடு கேட்க, ”ஏன் அனுவுக்குக் கொடுக்கணும் நானேதான் சாப்பிடுவேன்” என்ற கேள்வி மனதில் பசுமையாக இருக்கிறது! அதேபோல் அல்ஜீப்ராவில் மைனஸூம் மைனஸூம் ப்ளஸ் என்று கற்றுக்கொண்டதும்!

ஒவ்வொரு பேப்பருக்கும் செமினார் - அந்த செமினாருக்கு இண்டர்னல் மதிப்பெண்களும் உண்டு. ‘எந்த டவுட்-னாலும் தனியா கேளு, என் செமினார்லெ நீ கேக்காதே, உன் செமினார்லே நான் கேக்க மாட்டேன்' என்று சொல்லப்படாத டீலிங் வகுப்பில் நடைமுறையில் இருந்தது. இரண்டு செமினார்களை பார்த்த ஆசிரியர், டவுட்களை அவராக கேட்க ஆரம்பித்துவிட திருடனுக்குத் தேள். அதிலிருந்து தப்பிக்க, 'நான் அவனை கேப்பேன், அவன் என்னை கேப்பான்” என்று போட்டு வைத்த திட்டத்தில் “ இதனை ஒரு எ.கா-டோடு விளக்க முடியுமா” என்ற கேள்விக்கே முதலிடம்!

ஏழாம் வகுப்பிலிருந்து படித்து வந்த 'தொகை'களை, கல்லூரியில் விரிவாக நடத்திக்கொண்டிருந்தார் தமிழ் பேராசிரியர். ‘நமக்கெல்லாம் இந்த லேங்குவேஜா முக்கியம், சியும் சிபிபியும் தானே சோறு போட போகுது' என்ற மிதப்பில் கனவு கண்டுக்கொண்டிருந்தபோது, ப்ரியாவிடம் “வினைத்தொகைக்கு' எ.கா சொல்லுமா” என்றார் ஆசிரியர். ப்ரியா எதையுமே உணர்ச்சி பூர்வமாக விளக்குவாள். ஏதோ ஓர் அரவிந்தசாமி படக்கதையை மூன்று நாட்களாகச் சொன்னவள் அவள். சொல்வதோடு நில்லாமல் ஆக்‌ஷனும் உண்டு - ஒரு குழந்தையைப் போல!

சட்டென எழுந்த ப்ரியா,

”'பால்சோறு சாப்பிட்டான்'ங்க மேம்” என்று,
டெஸ்க்-லிருந்து எடுத்து சாப்பிடுவது போல ஆக்‌ஷ்னுடன் சொல்ல ஆசிரியருக்கே சிரிப்பு வந்துவிட்டது! ப்ரியா, அன்றிலிருந்து கொஞ்சநாளைக்கு 'பால்சோறு' ம் ஆனாள்! :-)

உங்கள் எ.கா நினைவுகளையும் பகிர்ந்துக்கொள்ளுங்களேன்!

Thursday, November 26, 2009

தத்துவ முத்துக்களும் கருத்து குத்துக்களும்..

எப்போவும் பாய்ஸ் பக்கத்துலே பாய்ஸ்தான் உட்காரணும்..கேர்ல்ஸ் பக்கத்துலே கேர்லே வரணும்.

சின்னவங்க daappu, பெரியவங்க டூப்பு!

பாய்ஸ் எல்லாம் daappu, கேர்ல்ஸ் எல்லாம் டூப்பு!

கேர்ல்ஸ் தான் daappu, பாய்ஸ் எல்லாம் டூப்பு!

இதெல்லாம் பப்பு அப்போப்போ உதிர்த்த தத்துவங்கள். வேனிலே இப்படித்தான் கத்திக்கிட்டு வருவாங்களாம்!!

மறுபடியும் டெம்ப்ளேட் மாத்திட்டேன். அந்த டெம்ப்ளேட் கொஞ்சநாள்லேயே போரடிச்சுடுச்சு. அதைப் பார்த்து எனக்கே தூக்கம் வந்து தூங்கிட்டேன்னா பார்த்துக்கோங்களேன்! அந்த டெம்ப்ளேட் மாத்திட்டு கருத்து கேட்போமேன்னு நானும் நாலு பேர்கிட்டே கேட்டேன்.

கருத்து 1 : டெம்ப்ளேட்-ல்லாம் ஓக்கே! Where is the girl on right side?

கருத்து 2 : இதுவும் நல்லாத்தான் இருக்கு. அந்த பொண்ணை மட்டும் இதிலே சேர்த்திடுங்க..சூப்பரா இருக்கும்.

கருத்து 3 : இது நல்லாருக்கு..ஆனா, அந்த டெம்ப்ளேட் பிடிச்சிருந்தது! (எ.கொ.ச.இ!!)

கருத்து 4 : ஹப்பாடா..ரொம்ப நாளா அந்த பொண்ணு நின்னுக்கிட்டே இருந்தாங்க, இப்போ உட்கார வைச்சுட்டீங்களா..வெரி குட்!

ம்ஹூம்! அப்புறம் நான் கருத்து கேக்கறதையே நிறுத்திட்டேன்!

எனக்கு பழைய டெம்ப்ளேட் மிகவும் பிடிக்கும். ஸ்கீரின்ஷாட் எடுத்து வைத்திருக்கிறேன். (எந்த பிரச்சினைக்காக மாற்றினேனோ அதே பிரச்சினை இப்போதைய டெம்ப்ளேட்டிலும் இருப்பது போலத்தான் தெரிகிறது!) மேலும், கைவசம் சில டெம்ப்ளேட்-கள் இருக்கின்றன.
இந்த டெம்ப்ளேட் கொஞ்சம் போரடித்தால்...:-)

Monday, November 23, 2009

தங்களின் மேலான உதவி வேண்டி...

நண்பரின் நண்பர் நமக்கும் நண்பர்தானே! தயை கூர்ந்து உதவுங்கள்!!
அந்த நண்பர் விரைவில் உடல்நலம் பெறட்டும்!!


மேலும் விபரங்களுக்கு....

உதவுங்கள்


நண்பர்களே,

கிழக்கு பதிப்பகத்தில் என்னுடன் பணியாற்றிய முத்துராமன் என்கிற என் நண்பர் (வயது 33) இப்போது இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் டயாலிஸிஸ் சிகிச்சை எடுத்துக்கொண்டு வருகிறார். டயாலிஸி்ஸுக்கான மருத்துவச் செலவே மாதம் ரூ. 16,000 ஆகிறது. கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு ஆறு லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது.

பலபேர் உதவினால் மட்டுமே சீக்கிரத்தில் அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடியும் என்கிற நிலைமை. எனவே உங்களால் முடிந்த தொகையை தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். சிறு உதவியாக இருந்தாலும் அது நிச்சயம் நண்பரின் வாழ்க்கைக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

மேலும் இதுதொடர்பாக உதவக்கூடிய டிரஸ்டுகளில் உங்களுக்குப் பரிச்சயம் இருந்தாலும் சொல்லவும்.

முத்துராமன் அக்கவுண்ட் எண் -

Name - Muthuraman
State Bank of India (Mogappair) a/c no - 30963258849
IFS code no - 5090

MICR code : 600002118முத்துராமன் முகவரி :


Muthuraman,
7/551, JJ Nagar West,
Near ERI Scheme Velammal School,
Mugappair West,
Chennai - 600037
Tamil Nadu. India.

சனி-ஞாயிறு

சனிக்கிழமை ஒரு திருமண வரவேற்புக்கு சென்றிருந்தோம். 'இனிமே கல்யாணிக்கெல்லாம்(கல்யாணம் இன் பப்புஸ் வெர்ஷன்) நான் வரமாட்டேன், அங்கே ரொம்ப நாய்ஸ்(Noice) இருக்கு'!! ஆர்கெஸ்ட்ராவுக்கு அருகில் நின்றுக்கொண்டிருந்தோம்! வரும்வழியில், ஏன் ரெண்டு பேருக்கும் கல்யாணி் நடக்குது, ஏன் எனக்கு நடக்கலை என்றெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தாள். நல்லா படிச்சு,வளர்ந்து, காலேஜ்-ல்லாம் போய் அப்புறம் ஆஃபீஸ் போனாத்தான் கல்யாணம் நடக்கும் என்று சொல்லிவைத்தேன். நீ தான் வளர்ந்து ஆஃபீஸ் போறியே, ஒனக்கு ஏன் கல்யாணம் நடக்கலை? என்று கேட்டாள்.

'வாழ்க்கையிலே டிராஜிடி வரலாம், ஆனா டிராஜிடியே வாழ்க்கையா இருந்தா' என்றெல்லாம் தத்துபித்துவங்கள் தோன்றினாலும் சொல்லாமல், “நீ பெரிய பொண்ணாகி ஏரோபிளேன்லே எங்கெல்லாம் போவே” என்று பேச்சை மாற்றினேன். ஒருமுறை அவள் 'பெரியவளாகி சன் கிட்டே போய் ஏரோபிளேன் ஓட்டுவேன்' என்று சொல்லியிருந்தாள்.


இந்தவாரயிறுதியில் பப்புவும் என்னோடு அலுவலகம் வந்தாள். வெளியே வரும் போது, எது அவளை அப்படி கேட்க வைத்தது என்று தெரியவில்லை!

“ஆச்சி, நீ ஆஃபீஸ்லே தூங்குவியா?”

Saturday, November 21, 2009

ஸ்டைலு ஸ்டைலுதான்...

பப்புவிற்கு மழலை போய்விட்டது என்றாலும் சில வார்த்தைகளை உச்சரிக்கும் விதம் மட்டும் இன்னும் மாறவில்லை.

அம்போது - ஒன்பது

ஒளைச்சு வச்சிருக்கேன் - ஒளிச்சு வைச்சிருக்கேன்

நான் அமக்கறேன் - அமுக்கறேன் (ஆயாவிற்கு கால் அமுக்கினால் போட்டிக்கு வருவாள்)

அமதியா இருங்க - அமைதியா இருங்க (அவள் பேசுவதை கவனிக்காமல் யாராவது பேசினால்)

கல்யாணி - கல்யாணம்

வத்தலம் - வத்தல், அப்பளம்!

Thursday, November 19, 2009

பப்பு டைம்ஸ்

”நீராரும் கடலுடுத்த” பாடிக்கொண்டிருந்தாள். தக்கசிறு -க்கு பின்னர் என்னவெல்லாமோ பாடிக்கொண்டிருந்தாள். நானும் கூட பாட(?) ஆரம்பித்தேன். ஆச்சர்யம் தாங்கமால்,

“ஹேய், நாங்க பாடினது உங்க ஆபிஸுக்கு கேட்டுச்சா?” என்று இரண்டு மூன்று தடவை கேட்டுக்கொண்டாள்! நானும் ஆமென்று தலையாட்டினேன்! :-))

ஆச்சி, நான் வயித்துக்குள்ளே என்னெல்லாம் பண்ணேன்?

இது ஒரு அட்வென்ச்சர் ஸ்டோரி போல..பத்து நிமிடத்திற்கு ஓடும்! அதே போல, நான் பேபியா இருக்கும்போது என்னெல்லாம் பண்ணேன்(?) என்றும்!

மேலும், அவள் குட்டிக்குழந்தையாக இருந்து ஃப்ர்ஸ்ட் பர்த்டே, செகண்ட் பர்த்டேவெல்லாம் கொண்டாடியதை கேட்டுக்கொள்வாள்.

இதெல்லாம் தினமும் நடக்கும் கதைதான் இப்போதெல்லாம் என்றாலும் இரண்டு நாட்கள் முன்பு கேட்டாள்.

“நான் ஃப்ர்ஸ்ட் உன் வயித்துக்குள்ளே எப்படி வந்தேன், குட்டியா?”

காலையில் குளிக்கும்போது முகத்தில் சோப்பு போடுவதுதான் போராட்டமாக இருக்கிறது. சோப்பை அவளது கையில் குழைத்து போட வைப்பேன். முதலிரண்டு நாட்கள் வரை நன்றாக போய் கொண்டிருந்தது! அதன்பிறகு சுணக்கம். இப்படி ஏற்படும் நேரங்களில், கண்ணை மூடிக்கொண்டு திறப்பதற்குள் செய்து முடிப்பது அல்லது ஒன்றிலிருந்து பத்து வரை எண்ணுவது என்ற வழிவகைகளை கடைப்பிடிப்போம்.

என் கண்களை மூடிக்கொள்ளவேண்டுமென்றும், திறப்பதற்குள் அவள் முகத்தில் போட்டு முடிக்கவேண்டுமென்றும் முடிவாயிற்று! நானும் கைகளால் முகத்தை மூடிக்கொண்டேன், கை துவாரங்களின் வழியே பார்த்தவாறு! போடுவது போல தெரியவில்லை. வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். பொறுத்து பொறுத்து பார்த்து, 'நீ போடவேயில்லை பப்பு, இப்ப நாந்தான் போடப்போறேன்' என்றேன். டக்கென்று வந்தது பதில்,

”நீ ஓட்டை வழியா பார்க்கிறே..நீ பார்க்கிறியான்னுதான் நான் பாத்துக்கிட்டிருந்தேன் ”

ஆமை குடும்பம் பிக்னிக் போன கதைதான் நினைவுக்கு வந்தது!!

Tuesday, November 17, 2009

பப்பு மணி மாலை...
தெர்மோகோல் மணிமாலை. மாலை மாதிரி வரைந்து தந்ததும் கோந்தை தடவி பப்பு ஒட்டினாள்.


பழக்கூடை - வரைந்து_வண்ணமடித்து_வெட்டி_ஒட்டியது! அதிலிருப்பது, வாழை, ஆப்பிள், ஆரஞ்சு, மாம்பழம் மற்றும் பச்சை ஆப்பிள். ( யாருப்பா அது, வாழை ஏன் சிவப்பா இருக்குன்னு கேக்கறது...!!!) சிலசமயங்களில் படங்களுக்கு விதவித வண்ணம் தீட்டுவாள். சிலசமயங்களில் எல்லாம் ஒரே வண்ணமாக இருக்கும்..முழு படத்திற்கும் பிரவுன், சிவப்பு, மஞ்சள் என்று - சிலசமயங்களில் எ.கா.படத்திலிருப்பது போலவே தீட்டப்பட்டிருக்கும்! என்ன இருக்குமோ...அவள் மனதில்! கூடை என் கை வண்ணம்..ஹிஹி!
கண்டுபிடிக்க முடிகிறதா இது என்னவென்று?!! :-)

Monday, November 16, 2009

ஊ ஃபார் ... (தொடர்ச்சி)

...ஊருக்குப் போறோம்!
பகுதி 1

பண்ருட்டி வந்தவுடன், ஊருக்கே போய்விட்ட சந்தோஷம் கிட்டி விடும் - அதுவும், குடத்தை கையில் ஏந்திக்கொண்டு தண்ணீர் ஊற்றுகிற பாவனையில் பெண்கள் இருபுறமும் நிற்குமாறு கட்டப்பட்ட அந்த வளைவு/ஆர்ச் - 'அப்பாடா, வடலூர் வந்துவிட்டது' என்ற நிம்மதி!! 'நெய்வேலி உள்ளே போகுமா' என்று கேட்டுவிட்டு வடலூர் பஸ் பார்த்து ஏறி அமர்ந்தால் பலாபழ கூடைகளுடனும், முந்திரி கூடைகளுடனும் நம்மை மொய்க்கத் துவங்குவார்கள்! பெரும்பாலும், குட்டிபசங்கள் ஜன்னலோரத்தில் அமர்ந்தால் பலாபழத்தை பேப்பரில் வைத்து மடியில் போட்டு விடுவார்கள்...நான் ஆயாவை பார்ப்பேன் - அவர் 'வேணாம்மா' என்றாலும் விற்கும் நபர்கள் திணிப்பார்கள் - 'கீரைக்காரம்மாவிற்காக கீரை வாங்கும்' ஆயா இந்த பலாப்பழ ஆளுக்காக பலாப்பழம் வாங்குவார். ..அது இரண்டு அல்லது மிஞ்சி போனால் இரண்டரை ரூபாய்! இன்றைக்கு பத்து சுளைகள் பத்துருபாய்.சாப்பிட்டபின் பலாப்பழ கொட்டைகளை கண்டிப்பாக கோன் மாதிரி செய்து வைத்திருக்கு பேப்பரில் போடவேண்டும், அது அத்தையிடம் கொடுத்து அடுத்த நாள் சாம்பாரில் போடப்படும்!!

பண்ருட்டி என்றாலே சட்டென்று நினைவுக்கு வருவது முந்திரி மரங்களும், பிஞ்சு பிஞ்சாய் தொங்கும் பலாமரங்களும்தான். அதுவும் அந்த செம்மண் கலர் இருபுறங்களிலும் பார்க்க மிகவும் பிடிக்கும்!போர்வையால் மேலே போர்த்தி கட்டிலுக்கு கீழே வீடு விளையாட்டு விளையாடும் எனக்கு, கவிந்து பரவிக்கிடக்கும் முந்திரி மரங்களுக்குள்ளே வீடு விளையாட்டு விளையாட மிகவும் ஆசையாக இருக்கும்!ஆனால் ஆயா அங்கு பெரிய பாம்புகள் இருக்குமென்று சொல்வார்! சாலையின் இருபுறமும் இருக்கும் செம்மண் மழைக்குக் கரைந்து வித்தியாசாமான வடிவங்களில்ம் மேடுகளாக பள்ளங்களாக இருக்கும் - அதை ஒரு க்ராண்ட் கான்யனாக உருவகப்படுத்திக்கொள்வேன்! தண்ணீர் அரித்து ஓடியிருக்கும் குட்டி க்ராண்ட் கான்யன்!! அதுவும் பண்ருட்டியில் ஒரு இடத்தில் மகா கெட்ட வாசனையொன்று வரும்...அது வந்தால் முக்கை பொத்திக்கொண்டு வாயால் சுவாசிப்பேன்/அல்லது மூச்சை இழுத்துபிடித்துக்கொள்வேன்! அது ஒரு சாராய பேக்டரி - ஆனால் அது வந்துவிட்டால் வடலூர் நெருங்கிவிட்டது என்று அர்த்தம்! மழைநீர் தேங்கியிருக்கும் செம்மண் குழிகள் - வீடு விளையாட்டில் செங்கல்லை அரைத்து நாங்கள் வைக்கும் சாம்பார் வைப்பதை நினைவூட்டும்!! மண்ணைக்குவித்து அதன் தலையில் நீர் ஊற்றினால் அந்த இடம் ஈரமாகி குழிந்திருக்கும் - அதை கீழாக நோண்டிஎடுத்தால் அதுதான் இட்லி. உடனே விளையாட மனம் ஆயத்தமாகும்! இன்னும் ஒருமணி நேரமே..வடலூர் வந்துவிடும். நிலைகொள்ளாது அதன்பின் - ஆம்பூரில் கற்றுக்கொண்ட விளையாட்டுகளை வடலூரிலும், வடலூரில் கற்றுக்கொண்டதை ஆம்பூரிலும் அல்லவா பரிவர்த்தனம் செய்துக்கொண்டிருந்தேன்! எனக்கு தெரிந்த அரிய பெரிய வித்தைகளை பகிர்ந்துக்கொள்ள வேண்டிய கட்டத்துக்கு தள்ளப்பட்டிருப்பேன்!

உங்களை எங்கே விட்டேன்...சாராய பேக்டரி...இப்போது ரயிலே கேட் அருகில் வந்துவிட்டோமே!! அப்புறம் ஒரு பெரிய புளியமரம் ..அதனருகில், முகப்பில் டீ கடைகொண்ட குடிசை வீடுகள் - அதைத்தாண்டினால் பீங்கான்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கும் - அவை தொப்பியை கவிழ்த்து வைத்த வடிவில் இருக்கும்.மேலே சொரசொரப்பான பகுதி. அதை எங்குதான் உபயோகிப்பார்களென்று இன்றும் எனக்கு தெரியாது. அப்புறம் நீள வடிவில் குழாய்கள் - அவை நெய்வேலியிலிருந்து தண்ணீருக்காக. அதையடுத்து, சேஷசாயி பேப்பர் மில்ஸ். தொடர்ந்து, கடைகள் ஆரம்பிக்கும்.பெயர்கள் எல்லாமே பெரும்பாலும் வள்ளலார் என்றுதான் தொடங்கும்....வள்ளலார் காபி கடை, வள்ளலார் ஓட்டல்..வள்ளலார் சலூன்....பஸ் வந்ததுமே பிஞ்சு வெள்ளரிக்காய் எடுத்துக்கொண்டு மொய்க்க ஆரம்பித்துவிடுவர் மக்கள்...பஸ் கூடவே ஓடி வரும் அவர்கள் லாவகம் மிகுந்த வியத்தலுக்குரியது!! ஆனால் வாங்க மாட்டோம்...அதான் ஊர் வந்துவிட்டதே...மறக்காமல் செருப்பை மட்டிக்கொண்டு...இறங்கி நடந்தால்...

நான்குமுனைச் சாலை.வடலூரில் ஜனநெருக்கடி கொண்ட ஒரே சாலை. ஒரு புறம் பண்ருட்டி செல்ல, அதனெதிர் புறம் சிதம்பரம் செல்ல, அதன் பக்கத்தில் நெய்வேலி செல்ல,அதனெதிர்ல் கடலூர் செல்வதற்கு! இங்கும் கெஸ்ஸிங் விளையாட்டு ஒன்று நடக்கும் என் மனதிற்குள்! ஒவ்வொரு முறையும் இறங்கி்ய பின் 'அந்த ரோடில் சென்றால் தான் வீடு வரும்'என்று நினைத்துக்கொண்டிருப்பேன்..ஆனால் அதில் சென்றால் வேறு யாராவது வீட்டுக்குத்தான் செல்லவேண்டிருந்திருக்கும்!சரி, அடுத்த முறை சரியாக கெஸ் செய்யவெண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கும்போது, ஆயா க்ருஷ்ணா பேக்கரியின் முன் நிற்பார் - ரஸ்க், ஜாம் பிஸ்கட், கேக், க்ரீம் அடைக்கப்பட்ட கோன் (மேலே செர்ரி இருக்குமே), பேக்கரிகளில் மட்டும் கிடைக்கும் பிஸ்கட் (அதனை எனது பெரியகுளத்து தோழி 'சூஸ்பெரி' என்பாள்) எல்லாம் இரண்டு செட்(பெரிய மாமாவீட்டுக்கு/சின்னமாமா வீட்டுக்கு) வாங்கியபின் பூக்காரம்மா ஸ்டாப்...தாமரை இலையில் வைத்து நூல்கட்டி கொடுப்பார். வாங்கியபின் நடக்க வேண்டும்..ஒரு கிமீ.ஆட்டோக்கள் அரிது...புளியமரங்களில் எண்கள் எழுதியிருக்க அதை எண்ணிக்கொண்டு லாம்ப் போஸ்ட் எங்கே வருகிறதென்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டே வந்தால் - ஆயாவை கண்டுக்கொண்ட ஒன்றிரண்டு பெரியவர்கள் , ‘இப்போதான் வர்றீங்களா, மக வயித்து பேத்தியா'என்று சில விசாரிப்புகள். கடந்து வந்தால் வீடு வந்திருக்கும். இருட்டவும் ஆரம்பித்திருக்கும்.

அப்புறம், (பெரிய/சின்ன) மாமா-அத்தை,தம்பி,புழு என்ற புகழேந்தி, கயலு, பஜ்ஜி என்ற விஜி, மகேஷ் எல்லாம் பார்த்தபின் சோர்வாவது ஒன்றாவது! ஒளிந்து பிடித்து,கோ கரண்ட், கல்லா மண்ணா என்று ஆட்டம் தொடங்கும். அப்புறம், யானை மேலே குதிரை மேலே சிங்கம் மேலே டூ கா...துபாய்லேர்ந்து துப்பாக்கி எடுத்துட்டு வந்து சுடுவேனென்றும், பம்பாய்லேர்ந்து பாம்பை உன் மேலே விடுவேன் என்றும் சிங்கப்பூர்லேர்ந்து சிங்கத்தை விட்டு கடிக்க விடுவேன்றும், ரஷ்யாலேர்ந்து ராக்கெட்டை உன் மேலே உடுவேன்றும் பெனாத்திக்கொண்டிருக்க அடுத்த ஞாயிற்றுக்கிழமையும் வந்து சேர....திரும்ப அதே ஜாலி,கலவரம்,கிலி்.. அதே டவாலி, பைகள் சகிதம்....பட்டுக்கோட்டை/பெரியார்/திருவள்ளுவர், பண்ருட்டி டூ திருக்கோவிலூர் டூ திருவண்ணாமலை டூ வேலூர் டூ ஆம்பூர்!!

Sunday, November 15, 2009

ஊ ஃபார் ...

...ஊருக்குப் போறோம்!

"உங்களுக்கு எந்த ஊரு" என்று கேட்டால் உடனே சொல்லிவிட முடிவதில்லை. வடலூரில் இருக்கும் போது ஆம்பூர்காரியாகவும், ஆம்பூரில் இருக்கும் போது வடலூர்க்காரியாகவும் கொடைக்கானலில், இவையிரணடில் அந்த நேரத்தில் எது தூக்கலாக இருக்கிறதோ அந்த ஊர்க்காரியாகவும், பெங்களூரில் சென்னைக்காரியாகவும் இருந்த எனக்கு சட்டென நேரும் குழப்பமே அது! கல்லூரியில் எப்போதும் ஆம்பூர்க்காரியாகவும், வடலூரை(சுற்றியிருக்கும் கிராமங்களான நெய்வேலி, பண்ரூட்டி, விருத்தாசலம் ஊரைச்) சேர்ந்தவர்களை சந்தித்தால் வடலூர்க்காரியாகவும் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறேன். ஆயாவின் பூர்வீகம் கடலூராக இருந்தாலும் அவர்கள் செட்டிலானது வடலூரில்தான்.

”ஊருக்குப் போறோம்” என்ற வார்த்தைகள் சிறுவயதில் எனக்குள் ஏற்படுத்திய கொஞ்சம்ஜாலி, கொஞ்சம் கலவரம், கொஞ்சம் கிலி என்ற கலவையான உணர்வுகள்!!

வளர்ந்தபிறகு ”நான்ல்லாம் அந்த ஊருக்கு வரவே மாட்டேன்ப்பா, ஊரா அது” என்று முரண்டுபிடித்திருக்கிறேன். வடலூர் மேல் இவ்வளவு வெறுப்பு வர பெரிதான காரணங்களொன்றும் தேவையில்லை...ஆம்பூரிலிருந்து வடலூர் செல்ல ஆகும் நேரம் - ஒரு நாள்-பஸ்ஸில்! இப்போதல்ல, ஒரு இருபது வருடஙளுக்கு முன்னால்!- பை பாஸ் ரோடுகளோ,ஹை வேக்களோ வந்திராத காலம்!! அதுவும், ஆயா பென்ஷன் வாங்க இரண்டு மாதங்களுக்கொரு முறை நெய்வேலி ட்ரெஷரி அல்லது வடலூர் செல்ல வேண்டும். ஆயாவோடு நானும்! எனது நான்கு வயதிலிருந்து எட்டாம் வகுப்பு வரை இந்தப்பயணம் தொடர்ந்தது. ஆம்பூரிலிருந்து வேலூர், வேலூரிலிருந்து திருவண்ணாமலை, திருவண்ணாமலையிலிருந்து திருக்கோவிலூர், திருக்கோவிலிருந்து பண்ருட்டி, பண்ருட்டிலிருந்து வடலூர்!!

காலை ஆறு அல்லது ஆறரைக்கு கிளம்பினோமானால் (அன்று) மாலையே ஆறரைக்கு வடலூர் சென்றுவிடலாம்.ஆயாவின் ட்ரேடு மார்க் ஒரு டவாலி பை. கட்டங்கள் போட்ட கதர் துணியில் ஜிப் தைத்த டவாலிப் பை. பார்த்த மாத்திரத்திலேயே நான் வெறுக்கும் வஸ்து அது!! அதில் தண்ணீர் பாட்டில், டிக்கெட்டிற்கான காசு கொண்ட வள்ளி விலாஸ் பர்ஸ், முகம் துடைக்க சிறு வெள்ளைத் துண்டுகள் அப்புறம் எனக்கு பாலித்தீன் கவர்கள், பழைய செய்தித்தாட்கள் - பஸ்ஸில் ஏறி அமர்ந்துவிட்டால் வயிறு பிரட்டுமே அதற்கு. எப்படியும் ஜன்னல் சீட் எனக்குத்தான். அதுவும் அந்த டீசல் வாசம் வந்துவிட்டாலோ...போச்!!ஆனால் எவ்வளவுதான் டயர்டு ஆனாலும் ஊருக்குப் போனதும் விளையாட ஆரம்பித்தபின் டயர்டாவது ஒன்றாவது!! சோர்வு என்பதைவிட நாள் முழுவதும் பஸ்ஸில் செல்வது - அதுவும் விளையாட முடியாமல் ஒன்றும் செய்யமுடியாமல் ஒரு சீட்டிலே முடக்கப்பட்டிருந்த உணர்வே அது என்பது இப்போது புரிகிறது! ஆனாலும் ஊருக்குப் போவது ஜாலியாக இருக்கும். பட்டுக்கோட்டை, தந்தை பெரியார், திருவள்ளுவர் என்று பலவித பஸ் அனுபவங்களுடன் வடஆற்காடு மாவட்டத்திற்கும் தென்னாற்காடு மாவட்டத்திற்குமான பயணம் அது!

ஆம்பூர் டூ வேலூர் தூக்க கலக்கத்தில் போய்விடும். வேலூரில் வேறு பஸ் ஸ்டாண்ட் மாறி செல்ல வேண்டும். அதற்குள் ஆயா எனக்கு கோகுலம், சாத்துக்குடி,பிஸ்கட் எல்லாம் ஸ்பான்ஸர் செய்வார். ஆனால், பஸ்ஸில் படிக்கக்கூடாது - கண் கெட்டுவிடும்! நடுவில் இருக்கும் 16 வண்ணப்படக்தையை மட்டும் படிக்கிறேனென்று படித்து விட்டு அப்புறம் வேடிக்கைதான். பாயிண்ட் டூ பாயின்ட் எல்லாம் வந்திராத காலம்! ஊருக்கு ஊர் நின்று செல்லும் பஸ்ஸாக இருக்கும் - வேலூர் டூ திருவண்ணாமலை ஜாலியாக போகும் - காலை நேரம் வெயில் அவ்வளவாக இருக்காது! திருவண்ணாமலையில் நல்லவேளை ஒரே பஸ் ஸ்டாண்டுதான். எப்படியும் ஆயாவுக்கு கண்டக்டரும் டிரைவரும் ஃப்ரெண்ட் ஆகிவிடுவார்கள். கிளம்புமிடத்திலிருந்து சேரும் இடம் வரை செல்பவர்களை மிகுந்த மரியாதையுடன் நடத்துவார் நடத்துனர்! ஆயாவும் அவர்பங்குக்கு, உறவினர் ஒருவர் பட்டுக்கோட்டையில் டிரைவராக பணியாற்றுவதைச் சொல்லுவார். ஒரு சில டிரைவர்கள் ஆயாவை நினைவிலும் வைத்திருப்பர்!! அவர்கள் சாப்பிட, டீ குடிக்க நிறுத்தும்போது எங்களுக்கும் சொல்வார்கள். ஆயா மறக்காமல் திருவண்ணாமலையில் பஸ் ஸ்டாண்டின் எதிரி்லிருக்கும் ஒரு கடையில் பக்கோடா வாங்குவார்! பெரிய மாமாவுக்கு அந்த பக்கோடாவென்றால் இஷ்டமாம்!நிறுத்தத்திலிருந்து பேருந்தை உடனே கிளப்பி விட மாட்டார் டிரைவர், சில நிமிட இடைவெளிகளில் மூன்று தடவை கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்துவார், ஹார்ன் சத்தத்துடன்.

குண்டும் குழியுமான ரோடில் குதித்து குதித்து செல்லும் பஸ் - சடன் ப்ரேக் போட்டால் முன்நெற்றி சென்று இடித்துக்கொள்ள இருக்கும் நேரத்தில் பின்னால் ஒரு டமார் - நாம்தான்
பின்னால் சென்றிருப்போம். முன்ஜாக்கிரதை காரர்கள் முன்சீட்டின் கம்பியை பிடித்துக்கொண்டு சீட்டின் நுனியில் வந்திருப்பார்கள்! ஜன்னல்களின் மேலே வெள்ளை நிற பெயிண்டில் ”கரம் சிரம் புறம் நீட்டாதீர்”. “யாகாவாராயினும் நாகாக்க”, ”தீயினாற் சுட்ட புண்”டிரைவரின் சீட் பின்னால் இருக்கும். திருவள்ளுவர் பஸ்களில் முதலுதவி பெட்டி வைத்திருப்பார்கள். அதனால் அதற்கு மேலே திருக்குறளின் இரண்டாம் வரி தெரியாதவாறு எழுதி வைத்திருப்பார்கள். இந்த பஸ்களின் சீட்கள் உயர்ந்திருக்கும். குஷன் சீட்கள் - தலை சாய்த்துக்கொள்ள வசதியாக. ஆனால் எனக்கு அது வசதியாகவே இருந்ததில்லை. சீட்களுக்கு நடுவே கட்டைகள் இருக்கும்.பட்டுக்கோட்டை, தந்தை பெரியார் பஸ்களில் சாதாரண சீட்கள்..பெரும்பாலும் பஸ்ஸின் நடுவில் கம்பி இருக்கும் சீட் அருகில் தான் உட்காருவோமென்று நினைக்கிறேன் அல்லது அங்கே உட்காரக்கூடாதோ ஏதோ ஒன்று நினைவில்லை.

ஆனால், சீட்டை தேர்ந்தெடுப்பதில் அந்தக் கம்பி பெரும்பங்கு வகித்தது! அதுவும் முன்சீட்டில் உட்கார்ந்தாலும் உட்காரலாம், பின்சீட் கண்டிப்பாகக் கூடாது, தூக்கி தூக்கிப் போடுமே! ஆனால் அந்த பம்ப்பி ரைட்டிற்கு மனதளவில் ஆசைப்பட்டிருக்கிறேன், அந்த வயதில்! சீட்டிலிருந்து முன்னால் பார்த்தால் தூரத்தில் ரோடு மேடாக தெரியும். பள்ளத்திலிருந்து இறங்குவது எனக்கு சறுக்குவது போன்ற உணர்வை தருமாதலால் காத்துக்கொண்டிருப்பேன், ஆனால் அது உண்மையில் மேடு அல்ல! மேலும்,ரோடின் இருபுறமும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை வயல்வெளிகள், மேலே பறக்கும் வெள்ளை நிற பறவைகள் (கொக்கா அல்லது நாரையா?!) சமயங்களில் ஜன்னலை தாண்டி பஸ்ஸில் எட்டிப்பார்த்து செல்லும் ரோடில் வளர்ந்திருக்கும் நீளமான சூரை முட்செடிகள்! திருவண்ணாமலையில் மதிய உணவு முடிந்தபின்னர், 'எப்போதடா ஆற்றின் நடுவில் கல்லின் மேலிருக்கும் ஒரு கோயில் வருமெ'ன்று காத்துக்கொண்டிருப்பேன்.

ஏனென்றால், எனக்கு அது அடுத்த மைல்கல் - அந்த ஊர் திருக்கோவிலூர்.அந்த கோவிலில் காவி வண்ணமும் சுண்ணாம்பும் கலந்து பட்டையாக அடித்து வைத்திருப்பார்கள். எப்படி அதன் மேல் ஏறுவார்களென்று வியப்பாக இருக்கும்! மேலும் ரோட் நடுவில் கம்பு மற்றும் கேழ்வரகு போன்ற தானியங்களை கொட்டி வைத்திருப்பார்கள். ரோடிற்குள் தள்ளிவிட ஓடிவரும் முக்காடிட்ட பெண்கள், பழுப்பேறிய வேட்டியை உயர்த்தி கட்டிக்கொண்டு தலையில் துண்டை கட்டியிருக்கும் ஆண்கள், பஸ்ஸுக்கு டாடா காட்டும் குட்டிப்பசங்கள் என்று நல்ல காட்சிதான். ஆனால், என்ன, தூசி கண்ணில் விழுந்துவிட்டால்தான் கஷ்டம்! மழை வந்தால் அது தனிக்கதை.அடிக்கும் சாரலை தடுக்க துருபிடித்த ஷட்டரை மூட முடியாது - சட்டென சில கைகள் உதவிக்கு நீளும்.

திருக்கோவிலூர் கொஞ்சம் காய்ந்த ஊர் என்ற நினைப்பு எனக்கு. தண்ணீர் இல்லாத மணல் தெரியும் வறண்ட ஆறு. மரங்கள் இல்லாத குன்றுகள்.புழுதி பறக்கும் சாலைகள் - கண்கள் இடுங்கி ,உழைத்து உழைத்து சுருக்கங்கள் விழுந்த வந்த ஒல்லியான மக்கள் ! மேலும் திருக்கோவிலூர் என்றால் உடனே நினைவுக்கு வருவது வாழைப்பழ சீப்பை எடுத்துக்கொண்டு பஸ் புறப்பட்டபின்னரும் கூடவே ஓடிவரும் மக்கள்!!'நான் படிச்சு பெரிய ஆளாகி அவங்களுக்கெல்லாம் ஹெல்ப் பண்ணுவேன்' என்று எனக்குள் நானே நினைத்துக்கொண்டது நினைவோடே நின்றுவிட்டது!!

அடுத்து - பண்ருட்டி! அதைப்பற்றி அடுத்த இடுகையில் தொடர்கிறேன்.

Friday, November 13, 2009

அதோ பாரு காரு...

”என்ன சார் இருக்கு? ”

”தோசை, சப்பாத்தி, பூரி, ப்ரெட் - உங்களுக்கு என்ன வேணும்?”

”எனக்கு ஐஸ்க்ரீம் வேணும். குட்டி, நீங்க என்ன சாப்பிடறீங்க?”

”நான் நூடுல்ஸ் சாப்பிடறேங்க. ”

இரு தட்டுகளில் முக்கோண வடிவ சப்பாத்தியின் உள்ளே முட்டை பொரியல் அடைக்கப்பட்டு ”சமோசா” என்ற பெயரில் வருகிறது. சாப்பிட்டுக்கொண்டே,

”ஐஸ்கிரீம் சூப்பரா இருக்கு”

”நூடுல்ஸ் செம டேஸ்டா இருக்கு”

”காட்டு, பாக்கிறேன், ஆமா.ஜாலி..”

”ஐஸ்க்ரீம் கூட சூப்பரா இருக்கு, பாரு”

”ஹே ஆமா”

- புரிந்திருக்குமே...இது ஹோட்டல் விளையாட்டு!

பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் என் தம்பியும் நானும் ஆயாவுடன் விளையாடும் விளையாட்டு இது. ஆயா ஹோட்டல்காரர்/சர்வர். சொல்லப்படும் மெனு எப்போதும் மாறாது. கேட்கும் ஐட்டங்களும்தான். என்ன இருக்கிறதோ அதை ஐஸ்க்ரீமாக, நூடுல்ஸாக கற்பனை செய்துக்கொண்டு சாப்பிட வேண்டியதுதான்.

குழந்தைகளாக இருப்பதில்தான் எவ்வளவு வசதி - என்ன மாதிரியான இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும் என்ற குழப்பமில்லை - ஐம்பது வயதுக்குப் பின் என்ன செய்ய போகிறோம் என்ற பயமில்லை - செலுத்த வேண்டிய இஎம்ஐ பற்றிய கவலையில்லை - எப்போது நாம் பெரியவர்களாவோமென்ற ஒரே கனவோடு - உலகில் காணும் எல்லாவற்றிலும் ஆச்சர்யங்கள் தொக்கி நிற்க - குழந்தைகளாக இருப்பதில்தான் எவ்வளவு சந்தோஷம்!!
குழந்தைகளுக்கும், குழந்தைகளாக இருந்தவர்களுக்கும், மனதளவில் இப்போதும் குழந்தைகளாக இருப்பவர்கள் அனைவருக்கும் இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்!! :-))

தலைப்பு *

அதோ பாரு காரு
காருக்குள்ள யாரு
நம்ப மாமா நேரு
நேரு என்னா சொன்னாரு
நல்லா படிக்க சொன்னாரு

தீபா,முத்து,ஆயில்ஸ்,கானாஸ், நான் ஆதவன் மற்றும் ராப்..ஸ்டார்ட் மீசிக்..இது போன்ற, தங்களுக்கு தெரிந்த அனைத்து கருத்தாழ மிக்க பாடல்களை எடுத்து விடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்! :-)))

குறிப்பு : பப்பு பள்ளிக்கூடத்தில் குழந்தைகள் தின விழா முடிந்து வந்தேன்...அந்த எஃபெக்ட்!!

Thursday, November 12, 2009

பசங்க!!!

இப்போ பயமெல்லாம் இல்லை..கேட்டால் 'பாட்டுலே அப்டிதான் வருது' என விளக்கம் வேறு! அவளுக்குத் தெரியாமல் ரெக்கார்ட் செய்தது!

kanda.mp3


பள்ளியில் கற்றுக்கொண்டால் போலிருக்கிறது - ஏதோ ஒரு பூரியைத்தான் சொல்கிறாளென்று நினைத்துக்கொண்டேன் முதலில் கேட்டபோது! பிறகே அந்த வாய்ஸ் மாடுலேஹனில் புரிந்தது அது...இதுவென!!

eppuri.mp3

Tuesday, November 10, 2009

கொஞ்சம் இஷ்டம் : கொஞ்சம் கஷ்டம்


”ஒருநாளைக்கு ஒரு சாக்லேட்தான் சாப்பிடனும்,
நிறைய சாக்லேட் சாப்பிட்டா காலையிலே
எழுந்திருக்கும்போது
பல் கொட்டிடும்” என்றதை நம்பி
நீ
கடையிலேயே விட்டுவந்த
அந்த ஒற்றை சாக்லேட்
என் நினைவில்
உறுத்திக்கொண்டிருக்கிறது
இன்னமும்!


Monday, November 09, 2009

talk in English : Walk in English
வெகுநாட்களுக்கு முன் அவளுக்குத் தெரியாமல் எடுத்தது - ஒரு வருடத்துக்கு முன் இருக்கலாம்! ஆங்கிலத்தில் மேல் அளவு கடந்த ஆசை வந்து அவள் பேசுவதெல்லாம் ஆங்கிலம் என்று அவளாக நினைத்துக்கொண்டிருந்த காலகட்டம்! :)) No, pink tower, long rod, ok -தான் எனக்கு புரிந்தது!!

தற்போது உதிர்க்கும் ஆங்கில முத்துகள் சில

see here..out will not come - வெளிலே வராது பாரு என்பது அர்த்தம். (பெயிண்ட் ட்யூபை அழுத்தச் சொன்னபோது!)

hereonly you go - இங்கேயே இரு என்பதன் ஆங்கில வடிவம் - (மழையின் நிமித்தம் அவளுக்கு விடுமுறை இருந்த நாளில் நான் அலுவலகம் கிளம்பிய போது!)

i no your friend - நான் உன் ப்ரெண்ட் இல்லை என்று கா விட்ட நேரத்தில்!

Sunday, November 08, 2009

ஜீன்

I almost see her daily. லிஃப்டில் செல்ல காத்திருக்கும் நேரத்தில், அதே லிஃப்டில் இறங்கி வருவார். அவர் யாரையும் பொருட்படுத்தாமல்தான் கடந்துச் செல்வார். ஆனால், அவர் கடந்து சென்றதும், லிஃப்டில் பயணிப்பவர்கள், லிஃப்ட் உதவியாளர் முதல் பிற அலுவலக ஊழியர்கள் வரை உள்ளாகும்/காண்பிக்கும் உணர்ச்சிகள் இருக்கிறதே....அவர்களுக்குள் பார்த்து கண்சிமிட்டிக்கொள்வதும், சிரித்துக்கொள்வதும், பேசிக்கொள்வதும்!!!

”அவளுக்கு ரெண்டு பசங்கடா”

“டேய், அந்தப் பொண்ணு ஸ்மோக் பண்ணும்டா, தெரியுமா!!”

இன்னும் அந்த பெண் எந்த ஏரியாவிலிருந்து வருகிறாள், பூர்வீகம் எல்லாம் ஆராயப்படும்! ஏன் அந்தப் பொண்ணு ஜீன்ஸ்லியேதான் வருது - இப்படியாக!! அதுவும் அந்தபெண் ஸ்லீவ்லெஸ்-ல் வந்துவிட்டாலோ கேட்கவே வேண்டாம்!

ஏன் இவங்களாலே ஒரு பொண்ணு ஸ்மோக் பண்ணறதை இயல்பா எடுத்துக்கமுடியலை, ஆண்கள் புகைப்பிடிப்பதைபோல?

அதே புகைபிடிக்கும் இடத்துக்கு ஒரு ஃபாரினர் லேடி போனா இவங்க யாரும் கண்டுக்கிறதேயில்லையே!

ஒரு அயல்நாட்டு பெண் (சல்வாரிலேதான்) தினமும் புகைபிடிக்க வருவார். ஆனால், யாரும் அவரை இந்தளவுக்குப் சட்டை செய்தது போல் தெரியவில்லை!! (ஒருவேளை சல்வார் போட்டுக்கிட்டு புகைத்தால் ஒன்னும் பேசிக்க மாட்டாங்களோ என்னவோ!?!)

புகைப்பதை ஆதரிப்பதாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என நம்புகிறேன் - அதைப் பொதுவில் வைப்போம் என்றே சொல்ல வருகிறேன் - புகைப்பதையோ அல்லது புகைக்க வேண்டாமென்று சொல்வதையோ!!

ஆனால், ஒரு பெண் ஜீன்ஸ் அணிவதோ அல்லது ஸ்லீவ்லெஸ் அணிவதோ ஏன் ஒரு பொருட்டாக வேண்டும்? ஒரு பெண் அணியும் உடை, கலாச்சாரத்திற்கு, பாரம்பரியத்திற்கு, குடும்பத்திற்கு, குடும்பத்தின் மானமாக இன்னும் என்னவெல்லமோவாக பார்க்கப்படுகிறது - ஆனால் அது அணிபவருக்கு, உடுத்துபவரின் வசதியாக இருக்கவேண்டுமென்பதைத் தவிர!!
உண்மையில் ஜீன்ஸ் அணிந்துக்கொள்ள வசதியானது. பராமரிக்க எளிதானது.

ஆண்கள், வசதியாக பாண்ட்களுக்கும், அரைக்கால் சட்டைகளுக்கும் மாறிவிட பெண்கள் எந்த காலநிலையாக இருந்தாலும் புடவையை கட்டிக்கொண்டு அழ நேர்ந்த காலகட்டம் எதுவென்றுதான் தெரியவில்லை. எனது பல தோழிகள் திருமணத்திற்குபின் நிரந்தர புடவைவாசிகளாக மாறிவிட்டார்கள் - குடும்பத்தினரின் விருப்பத்திற்காக. ஒரு காலத்தில், அம்மாவின் புடவையை எடுத்து சல்வார் தைத்துக்கொண்டவர்கள், அதே புடவைக்குள் தன்னை கஷ்டப்படுத்தி திணித்துக்கொண்டவர்கள் இவர்கள்!

இந்தப்புடவையைக் குறித்துதான் எத்தனை கண்ணோட்டங்கள் - முழுதுமாக உடலை மறைக்கிறது என்றும், உணர்ச்சிகளை தூண்டக்கூடியதாக இருக்கிறதென்றும்!! எது எப்படியாயினும், புடவைதான் பெண்ணுக்கு அழகு - புடவை அணிந்தவளே இந்திய பெண் - தமிழ் பெண் - நமது கோலிவுட்,டோலிவுட், பாலிவுட் எல்லாம் சுற்றி வளைத்துச் சொல்வதும் இதையே!!

”பாவாடை அணிந்தவள் - ஃப்ரி உமன்”!

”ஜீன்ஸ் அணிபவள் - எதற்கும் துணிந்தவள்”!!

”ஜீன்ஸ் அணிந்தவர்கள் - ஸ்லீவ்லெஸ் அணிந்தவர்கள் நமது கலாசாரத்திற்கு பங்கம் உண்டாக்கக் கூடியவர்கள்”

பெண்களின் உடை குறித்துதான் எத்தனை கண்ணோட்டங்கள்!!

பெண்கள் நீங்கலாக, மற்ற இந்தியர்கள் அனைவரும் அவரவர் வசதிக்கேற்ப உடையுடுத்தும்போது கேடடையாத இந்த கலாச்சாரம் மிகுந்த வியப்பூட்டுகிறது!!

Friday, November 06, 2009

ஆயாத்துவங்கள்!!

நம்பிக்கைகள்தானே வாழ்க்கையை சுவாரசியமாக்குகின்றன! கீழே இருப்பவை சிறுவயதிலிருந்து நேற்றுவரை என் ஆயாவிடம் பல்வேறு தருணங்களில் நான் கேட்டவை. ஓவர் டூ ஆயா'ஸ்!

பாத்திரங்களை கழுவுவதற்காக சிங்கில் போடும்போது : பாத்திரத்தைக் காய விடக்கூடாது...தண்ணி ஊத்திவைக்கணும்..இல்லேன்னா வயிறு காயும்!

ஆள்காட்டி விரலை நீட்டிக்கொண்டு (ஸ்டைலுக்காக) சாப்பிடும் பழக்கம் இருந்தபோது:
சாப்பிடும் போது அஞ்சு விரலும் குவிச்சு வைச்சுதான் சாப்பிடணும் - இல்லாட்டி அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம போய்டும்!!

ஊருக்குப் போகும்போது தலைக்கு எண்ணெய் வச்சு தலைகுளிக்கக்கூடாது! (ஆனா, தலை குளிச்சாத்தானே பஃப்-னு அழகா இருக்கும் என்ற பிடிவாதத்திற்குப்பின் சீயக்காய் வைத்து தலைகுளிக்க வேண்டாம், ஷாம்பூ உபயோகப்படுத்தலாமென்று தளர்த்தப்பட்டது!)

வீடு இன்னைக்கு துடைக்க வேண்டாம் - ஊருக்குப் போய் இருக்காங்க, வந்தப்புறம் துடைச்சுக்கலாம்.

செவ்வாய்க்கிழமை வெளியாட்களுக்கு காசு கொடுக்க வேண்டாம். (அவங்க சம்பளப் பணம்தான்!)

புது ட்ரெஸ் புதன்கிழமை போடணும். (புதன்கிழமையெல்லாம் புதுட்ரெஸ்தான் போடணும்னு சொன்னா எப்படி இருக்கும்!!)

நகத்தைக் கடிக்காதே - தரித்திரம்.

வேலைக்காரம்மாவுக்கு சாப்பாடு முதலில் வைக்கக் கூடாது. ஒரு நாலு சாதம் எடுத்து வாயிலே போட்டுக்கிட்டு அப்புறம் கொடு.

வடக்குப் பார்த்து உட்கார்ந்து சாப்பிடாதே! கஷ்டம் வந்து சேரும். ('இதுக்கும்மேலயா?!!)

உப்பு கொட்டினியா, துப்பை கொட்டினியா? - (உப்பை கொட்டும்போது கண்டிப்பாக இதை சொல்லிவிட வேண்டும். சோ, துப்பைக் கொட்டியதாக ஆகாது!)

இருட்டினப்புறம் நகம் வெட்டாதே!

ஊரிலேர்ந்து முருங்கைக்காய் எடுத்துட்டு வராதே!

ஊருக்கு நான்-வெஜ் எடுத்துட்டு போனா ஒரு அடுப்புக்கரித்துண்டு போட்டு அனுப்பு.

கிழக்குப்பக்கம் தலை வச்சு படு.

சாதத்தை வேஸ்ட் பண்ணா பிற்காலத்துலே சாப்பாடு கிடைக்காது. (அந்த பிற்காலம் எனக்கு 20 வயசுலேயே ஆரம்பிக்கும்னு தெரியாது!)

சாயங்காலத்துலே தூங்கக் கூடாது..படிப்பு வராது.

சாயங்காலத்துலே சாதம் சாப்பிடக் கூடாது...படிப்பு வராது. (நொறுக்குத்தீனி சாப்பிடலாம்)

அன்ரூல்டு பேப்பரிலே எழுதும்போது எழுத்து கீழ்நோக்கி போகக்கூடாது. படிப்புலே கீழே போய்டுவே!

யாருக்காவது காசு கொடுக்கும்போது வாசல்படிலே நின்னுக்கிட்டு கொடுக்காதே. ஒன்னு அவங்களை உள்ளே கூப்பிட்டு கொடு, இல்லேன்னா நீ வெளிலே போய் கொடு!

குறிப்பு: இதெல்லாம், எங்க ஆயாவுடைய 'நம்பிக்கைகள்' இல்லேன்னா 'வாழ்க்கை அனுபவங்கள்' இல்லேன்னா 'இந்திய பண்பாடு' இல்லேன்னா 'இந்திய கலாச்சாரம்' இப்படி எதுவேனா வச்சுக்கலாம்!இதேபோல, உங்கள் ஆயாவும் உங்களுக்குச் சொல்லியிருந்தால் பகிர்ந்துக்கொள்ளுங்களேன் - பின்னூட்டமாகவோ, பதிவாகவோ!!

அடுத்த இடுகையில் ”ஆயாவின் அட்டகாசங்கள்” !!! ;-)))

Thursday, November 05, 2009

கோணலா இருந்தாலும்....

பப்புவோடதாக்கும்!!இடம் : ஆயாவின் கை
உபயம் : சொல்லனுமா என்ன?டிசைன் யுவர் கேப்
வெற்று பேப்பரில் தொப்பிகளை ஸ்டேப்ளர் பின் கொண்டு செய்து வைத்திருந்தேன். பார்ட்டியில் ஆர்ட் ஆக்டிவிட்டியாக செய்வதற்காக. ஆனால், குட்டீஸ் எல்லோரும் பஸில்கள், மற்ற விளையாட்டுகளில் மூழ்கிவிட்டதால் செய்ய முடியவில்லை. போரடித்த பொழுதொன்றில் பப்பு டிசைன் செய்தது - இது!
சக்கரத்தின் தடங்களும், ஆரஞ்சு வண்ண ஆக்டோபஸூம்!
(பழைய படங்கள்தான். பொறுத்துக்கொள்ளுங்கள், ஆர்ட் ஆக்டிவிக்ட்டிகள் செய்து கனநாட்களாகின்றன. இனி மெதுவாக தொடங்குவோமென்று எண்ணுகிறேன்!)

Wednesday, November 04, 2009

சச் கா சாம்னா

ஆச்சி, ஏன் நம்ப்ளுக்கு ரெண்டு கைதான் இருக்கு...மூணு கை இல்லே?

தெரியலையே பப்பு...

ஏன் ரெண்டு கண்ணு, ரெண்டு காலு இருக்கு? மூணு இல்லே?

தெரியல..பப்பு..ஏன் இல்ல?

ஒனக்கு தெரியும்..நீ அம்மாடி!! சொல்லு!!!

பப்பு...அந்த உண்மை உனக்கும் சீக்கிரத்திலேயே தெரியப்போகுதுன்னு நினைக்கும் போதுதான்...அவ்வ்வ்!!!

பிறந்தநாள் - ரவுண்ட் அப்

கடந்த வருடத்தின் இந்த இடுகையில் கடைசியாக வந்த பின்னூட்டமே இந்தப்பதிவை எழுத இயலாமல் செய்து விட்டது! தங்களின் கேள்விக்கு என்னிடம் விடையில்லாவிட்டாலும் கூட, தங்களின் மனவருத்தத்தை எனது இடுகைகளால் தூண்டியிருக்கிறேனென்பது என்னை சங்கடத்துக்குள்ளாக்குகிறது! மன்னிக்க வேண்டுகிறேன்! தங்களுக்காகவும், தங்களின் மகனுக்காகவும் இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்! கண்டிப்பாக தங்கள் மகன் கேள்விக்கணைகளால் தங்களைத் துளைத்தெடுக்கும் நாள் தொலைவில் இல்லை!!

'சித்திரக்கூடம்' பப்புவின் செய்கைகளையும் நான் ரசிக்கும் கணங்களையும் பதிந்துக்கொள்ளும் ஒரு ஆன்லைன் ஜர்னல் என்ற சமாதானத்துடன் தொடர்கிறேன்!

இந்த வருடத்தின் திட்டம்

1. ஒரு ஃபோட்டோ ஆல்பம் - Troublesome Threes
2. ஒரு பரிசு - மீன் தொட்டி
3. நான்கு செலிபிரேஷன்கள் (நாங்களாக பிளான் செய்யாவிட்டாலும் அமைந்து விட்டது!)

ஃபோட்டோ ஆல்பம் - Troublesome Threes

கடந்தவருடத்தில் க்ரேஸியான மணித்துளிகள் - வழக்கம் போல சில 'முதல்'கள்- இன்னும் ஆல்பம் கைக்கு வரவில்லை.

ஒரு பரிசு - மீன் தொட்டி

இது ‘எதையாவது_வளர்க்கலாம்_மேனியா'வுக்காக. குறிப்பாக மீன்கள் வளர்ப்பதை ஆயாவும் விரும்புவது இல்லை. எனக்கும் தொல்லை. மீன்கள் உயிரிழப்பதை தாங்க இயலாது ஆயாவால். எனக்கோ அதை சுத்தம் செய்ய வேண்டிய வேலை. ஆனால், பப்புவுக்காக பெரிம்மா ஆம்பூர் செல்லும் போதெல்லாம் மீன் தொட்டியை சரி செய்து வைத்திருப்பார். அதிலிருந்து பப்புவுக்கு இஷ்டமானது மீன்களும் மீந்தொட்டியும்!

நான்கு கொண்டாட்டங்கள்

1. முதல் கேக் கட்டிங்
2. பிறந்தநாளன்று பள்ளியில் - பள்ளிக்கு சாக்லேட் அனுமதி இல்லை. பள்ளியில் அனைவருக்கும் டிரை ஃப்ரூட்ஸும், அவளது வகுப்பினருக்கு ஸ்கெட்ச் பேனாக்களும். பப்பு இன் பாவாடை சட்டை.
3. ரோஷினி ஹோம் @ பள்ளிக்கரணை - சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும். அங்கிருந்த அனைவரும் நன்றாக நினைவு வைத்திருந்தனர். சென்ற முறை கற்றுக்கொண்ட பாடல்களையும் அடிக்கடி நினைவுகூர்வதாகக் கூறினர். இந்த முறை பப்பு தயக்கமில்லாமல் பாடல்கள் பாடினாள். ஒரு மணிநேரத்திற்கும் மேலாக குழந்தைகளுடன் விளையாடி, பாடல்கள் பாடி நேரம் செலவழித்தோம். பின்னர், கொண்டு சென்றிருந்த நொறுக்குத்தீனிகளை பகிர்ந்துக்கொண்டோம்.(ஆரஞ்சு வண்ண உடையில் பப்பு - சிறார்களை பெரிம்மா விளையாட்டை நடத்திக்கொண்டிருக்கும்போது)

4.வீட்டில் நண்பர்களுடனும், அண்டை வீட்டாருடனும். வழக்கம்போல pin the tail கேம்.வர்ஷினி, வெண்மதி குடும்பத்துடன் வந்திருந்தனர். குட்டீஸ் எல்லோரும் ஓடியாடினர் வண்ணந்தீட்டினர்.கூச்சலிட்டனர். பப்புவுக்கு இருக்கும் இன்னொரு முகம் வெளிப்பட்டது.
வர்ஷினியோ, வெண்மதியோ வீட்டிற்குக் கிளம்புவதை விரும்பவில்லை. பப்புவும் விரும்பவில்லை. ”வீட்டுக்கு போய் ட்ரெஸ் எடுத்துட்டு வந்துடலா'மென்ற சமாதானத்துடன் கிளம்பிச் சென்றனர். பதிவர்களில் g3 வந்திருந்தார். குட்டீஸோடு குட்டீஸாகவே மாறிவிட்டார். :-)

மின் வாழ்த்தட்டைகள் அனுப்பியும், தொலைபேசியிலும், பதிவுகளிலும் வாழ்த்திய நல்ல உள்ளங்களுக்கு பப்புவின் சார்பாக நன்றி!

Sunday, November 01, 2009

பிடித்தவர்; பிடிக்காதவர் - தொடர் விளையாட்டு

தொடர்பதிவுக்கு அழைத்த மாதவராஜ் அவர்களுக்கு நன்றி!

1.அரசியல் தலைவர்
பிடித்தவர் :கக்கன்
பிடிக்காதவர்: ஜெயலலிதா

2.எழுத்தாளர்
பிடித்தவர் : அம்பை
பிடிக்காதவர் : ரமணிச்சந்திரன்

3.கவிஞர்
குறிப்பிட்ட கவிஞரென்று தேடிப்பிடித்து படிப்பதில்லை..கண்ணில் பட்ட கவிதைகளை வாசிப்பதோடு சரி!

4.இயக்குனர்
பிடித்தவர் : தங்கர் பச்சான்,
பிடிக்காதவர்: பாக்யராஜ்

5.நடிகர்
பிடித்தவர் : லொள்ளு சபா மனோகர்
பிடிக்காதவர் : எம்ஜிஆர்

6.நடிகை
பிடித்தவர் : சுவலஷ்மி
பிடிக்காதவர் : நமீதா

7 . இசையமைப்பாளர்
பிடித்தவர் : ஏ.ஆர்.ரஹ்மான்
பிடிக்காதவர் : அப்படி யாரும் இல்லை..மற்றவர் இசையமைப்பில் ஏதாவது ஒரு பாடலாவது பிடித்துதானே இருக்கிறது!

இந்த தொடரை தொடர அழைப்பது,

க.பாலாசி
சஞ்சய்
தீஷூ
பா.ராஜாராம்