Wednesday, September 30, 2009

ரவுண்ட் அப்!(படம்: முதல் டெர்மின் இறுதிநாள்!)


பப்புவின் பள்ளியின் முதல் டெர்ம் கடந்த பதினொன்றாம் தேதி முடிவுற்றது. விஜயதசமி வரை விடுமுறை. பள்ளி முடிந்ததைக் கொண்டாட கடற்கரைக்குச் சென்று காற்றோடு சளி மற்றும் ஜூரத்தையும் வாங்கியாயிற்று. டாக்டர் விசிட்-மருந்துகள் - ஆம்பூர் பயணம் - மருந்துகள் - இப்போது பள்ளியும் தொடங்கிவிட்டது.

ஆரம்பத்தில், வீட்டிலிருந்து செல்லும்போது ஜாலியாக சென்றாலும் பள்ளியில் வர்ஷினி அழுவதைப்பார்த்து கம்பெனிக்காக பப்புவும் அழுதாலும் ஓரிரு வாரத்தில் சரியாகிவிட்டது! எதைச் செய்தாலும் வர்ஷினியோடுதான் செய்ய வேண்டியிருக்கிறதாம் பப்புவுக்கு. வர்ஷினி செய்யும் ஆக்டிவிட்டியைத்தான் செய்கிறாள். இருவரும் அருகருகில் அமர்ந்துக்கொள்ளத்தான் விருப்பப்படுகிறார்களாம். 'சிறுபிள்ளைகள் தானே, இருக்கட்டுமென்று' விட்டு விடுவதாகச் சொன்னார் பப்புவின் வகுப்பாசிரியர். மேலும் 'பிரிப்பது சரியல்ல, இருவருமே அப்படித்தான் இருக்கிறார்கள், அதனால் பரவாயில்லை' என்றும் கூறினார்.

சிலநாட்களில் யார் யார் எங்கே அமர வேண்டுமென்று பாயைப் போட்டு வைத்தாலும் கூட, ஆன்ட்டி, வேறு ஏதாவது வேலையாக இருந்தால் எப்படியாவது ஒன்றாகி விடுகிறார்களாம். மேலும் பேசிக்கொண்டோ அல்லது ஆக்ட்விட்டி செய்யாமலோ இருப்பதில்லை, அதனால் அப்படி, மாறி அமர்ந்தாலும் நாங்களும் ஒன்றும் சொல்வதில்லை என்றார். என் சுதா கான்வெண்ட் தோழி சுதாவின் நினைவுதான் வந்தது. சுதா, கிருபா மற்றும் நான் - முதல் வகுப்பில் நெருங்கிய நண்பர்கள். கிருபா சுதாவை, “ உன் பேரு சுதா, உன் வயித்திலேருந்து தான் நாங்கள்ளாம் வந்தோம், அதனாலேதான் நாங்க சுதா கான்வென்ட்லே படிக்கிறோம்” என்றுச் சொல்லி அவளை அழ வைத்துக்கொண்டிருப்பாள். என்னையும் சுதாவையும் ஒன்றாக புகைப்படம் எடுக்க வேண்டுமென்று ஆயா சொல்லிக்கொண்டிருப்பார். சுதா வேறு பள்ளியில் சேரும் வரை ஆயா சொல்லிக்கொண்டு மட்டுமே இருந்தார், அது வேறு விஷயம்!

கடந்த சில நாட்களாக ஆங்கிலத்திலேயேத்தான் வகுப்பறையில் உரையாடுகிறார்களாம். அதாவது ஆன்ட்டியிடம் கண்டிப்பாக ஆங்கிலத்தில்தான் உரையாடியாக வேண்டிய கட்டாயமாம். இதுநாள் வரை குழந்தைகள் தமிழில் அல்லது இந்தியில் பதில் சொன்னாலும் புரிந்துக்கொண்டவர்கள், இப்போது, ஆங்கிலத்தில் உரையாடினால் மட்டுமே திரும்பப் பேசுகிறார்களாம். இதுதான் பப்புவின் ”close your வாய்”, ”no eating" , "this take" , "this my bottle" , " no close your eyes" etc விற்குக் காரணமா?!!

பப்புவிற்கு, அவளது புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு ரைம்ஸ் பாடுவது அலாதி பிரியம். வாசிக்கத் தெரியாதென்றாலும் படத்தைப்பார்த்து என்ன ரைம்ஸ் என்று தெரிந்துக்கொண்டு ஆயாவிற்கும் எனக்கும் வகுப்பெடுப்பாள். இந்த டெர்மில் முதலில் கற்றுக்கொண்ட ரைம்ஸ், “காட்டுக்குள்ளே கச்சேரி”, ”thumpkin he can sing”. இந்த டெர்மில் பாதி நாட்கள் “ இன்னைக்கு அக்டோபர் 28th ஆ” என்ற கேட்டபடிதான் விடிந்தது. வாரத்தின் நாட்கள் தெரியுமெனினும், வருடத்தின் மாதங்களை விரைவில் அறிந்துக் கொண்டால் பரவாயில்லை!! :-)

இப்போதுதான் vowels சொல்லிக்கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். i மற்றும் e போன்ற ஒரு எழுத்தை வரைந்து விட்டு அதை அளவெடுத்துக்கொண்டிருப்பதிலிருந்து அறிய முடிந்தது. பப்புவாகவே எப்போது கதைப் புத்தகங்கள் படிக்க ஆரம்பிப்பாளென்ற, எப்போதும் கேட்கின்ற அந்தக் கேள்வியை கேட்டு வைத்தேன். இப்போதைக்கு கதை சொல்வதிலிருந்து நான் தப்ப முடியாது போல!! (யாருப்பா அது, பப்பு பாவம்ன்னு சொல்றது?!!) மாலையில் பப்புவிடம், “இன்னைக்கு ஆன்ட்டி என்ன சொன்னாங்க” என்றோ, “ஸ்கூல்ல என்ன பண்ணீங்க” என்றோ கேட்பது வழக்கம். வரும் பதிலை வைத்து அன்று பள்ளியில் என்ன நடந்தது என்பதை அனுமானிக்கவே முடியாது. நானும் எப்படியெப்படியோ கேள்விகளை மாற்றி மாற்றி கேட்டுப்பார்த்தாலும் என்ன நடந்தது என்பதை ஒருநாளும் சொன்னதில்லை. “நாங்க வேன்லே போகும்போது புயல் மேகம் தொரத்திக்கிட்டே வந்துச்சி ஆச்சி” என்றோ அல்லது “புயல் மேகம் வேகமா வந்து எங்க மேலே மழை பெய்யலாம்னு பார்த்துச்சு ஆச்சி” என்றோ “அபிஷேக் ஜோஷ்வா வர்ஷினியை தூக்கிப் போட்டுட்டான்” என்றோதான் விடைகிடைக்கும்!! ”என் பொண்ணு ஸ்கூல்லேர்ந்து வந்ததும் அன்னைக்கு நடந்ததெல்லாம் அப்படியே ஒப்பிப்பா” என்று யாரேனும் சொல்லக் கேட்டால் என் கீழ்தாடை கீழே விழுவதில் ஆச்சர்யமென்ன?!!

Monday, September 28, 2009

இது எப்படி இருக்கு?

எதைப்பற்றியோ பேசிக்கொண்டிருந்தபோது
"நெஜம்னா என்ன ஆச்சி?" என்றாய்.
என் குழந்தாய்!
எனை நோக்கி நீ வீசிய
கேள்விக்கணைக்கு பதிலுரைத்து
புரியவைக்க வேண்டிய பெரும்கடமை
எனக்கிருப்பதை உணர்ந்தவளாய்
தலைக்குப்பின் ஒளிவட்டம் சுழல
தாமரைப்பூவிலமர்ந்து
விளக்க ஆரம்பிக்கிறேன்...
அதற்குள் "சிங்கம் வரலை...பயப்படாதே ஆச்சி,
நான் 'சும்மா' சொன்னேன்" என்கிறாய்!!

Sunday, September 27, 2009

எங்கே செல்லும்....

எட்டாம் வகுப்பின் ஆரம்ப நாட்கள். அன்னபூரணி டீச்சர் பேரேடு எடுத்து ஒவ்வொருவராய் அழைக்கிறார். மாணவியர் ஒவ்வொருவராக டீச்சர் அருகில் செல்கிறார்கள். அவர்கள் சொல்வதை ஒரு தாளில், பேருக்குப் பக்கத்தில் குறித்துக் கொள்கிறார். அது வேறு ஒன்றுமில்லை, சாதி ரீதியான படிப்பு உதவித்தொகைக்கான கணக்கெடுப்பு. அந்த நேரம் வரும் வரை நான் என்ன சாதியென்று எனக்குத் தெரியாதிருந்தது!என் முறையும் வந்தது, பெரிம்மா அதே பள்ளியில் வேலை செய்வதால், 'மத்தியானம் சொல்றேன் டீச்சர்' என்று சொல்லிவிட்டு வந்தமர்ந்தேன்.

“சாதிகள் இல்லையடி பாப்பா” என்று என் சிறுவயதில், பாரதியாரையும், தினமும் பத்து திருக்குறளும் படிக்க வைத்த பெரிம்மாவிடம், உணவு இடைவேளையில் கேட்டு தெரிந்துக்கொண்டு அன்னபூரணி டீச்சரிடம் சொல்லிவிட்டேன்.வீட்டில் நாங்கள் சாதியைக் குறித்து எதுவும் பேசியதில்லை. அதற்கு அவசியமும் இருந்ததில்லை. அதனால் நான் என்ன சாதி என்ற அறிந்துக்கொள்ள வேண்டிய அவசியமுமேற்படவில்லை, அதுநாள்வரை. ஆனாலும் என் மனதை அரித்துக்கொண்டே இருந்தது இது...அமுதா வில்லாளனுக்கும், நித்யா சீனிவாசனுக்கும், அனுப்பிரியா சீனுவாசனுக்கும் தெரிந்திருந்தது சந்தனமுல்லை ராஜரத்தினத்துக்கு எப்படித் தெரியாமல் போயிற்று? சாதியை பற்றி தெரிந்துக்கொள்ளாமல் இருப்பது ஒரு பெருமைப்படும் விஷயமாக இல்லையா? ஆம்பூரில் ஒரு ஏரியா இருக்கிறது. அந்த பகுதியில் குறிப்பிட்ட மக்களைத் தவிர யாரும் வசிக்க மட்டார்கள். அங்கிருந்து வெளியே வேறு எங்காவது குடி போவார்களே தவிர, அந்தப் பகுதிக்கு வேறு யாரும் குடிவரமாட்டார்கள். இன்னமும் அப்படி இருக்கிறதா என்றுத் தெரியவில்லை!

கல்லூரியில் ஒருமுறை அனைத்திந்திய கல்லூரிகளுக்கான கலாச்சார விழாவிற்காக மவுண்ட் அபுவிற்குச் சென்றிருந்தோம். தங்குமிடத்திலிருந்து விழா நடைபெறும் இடத்திற்குச் செல்லவிருந்த பேருந்தில் ஏறினோம். மூவர் அமரக் கூடிய சீட்டில் நானும் எனது பேராசியரும் அமர்ந்தோம். இடம் தேடி வந்த இரு வடநாட்டு இளைஞர்கள், எங்களை நோக்கி 'என்ன குலம்' என்றார்கள். ஒரு நிமிடம் என்ன கேட்கிறார் இவரென்றே விளங்கவில்லை. அந்த இளைஞரே, ‘நான் ஷத்திரியன், நீ என்ன குலம்” என்றார். அதற்குள் எங்கள் குழுவிலிருந்து இன்னொரு பெண்ணும் வந்துவிட இடமில்லாமற்போகவே அவ்விடத்தை விட்டு அகன்றார் அவ்விளைஞர்!

நான் வேலை செய்த நிறுவனங்கள் ஒன்றில், பார்த்த முகங்களில், பட்ட அனுபவங்களுக்குப் பின்னரே அப்படி முடிவு செய்தேன். அப்போது சின்னமலையில் தோழிகளோடு அறையெடுத்துத் தங்கியிருந்தோம். செல்லம்மாள் மகளிர் கல்லூரி என்ற ஒரு கல்லூரி சின்னமலை-கிண்டியில் இருக்கிறது. அந்த போர்டை பார்த்தால்தான் அங்கு ஒரு கல்லூரி இருப்பதேத் தெரியும். நேராக அந்தக் கல்லூரியின் அட்மின் அறைக்குச் சென்றேன்.

பி.யெஸ்சி கம்ப்யூட்டர் இருக்குங்களா?

பார்ட்-டைம் தான் மேடம் இருக்கு.

அதுலே, ஃபீஸ் கட்டமுடியாம இருக்கிற யாரையாவது சொல்றீங்களா? எம்.பி.சி இல்லேன்னா எஸ்.சி-லே பார்த்துச் சொல்லுங்க!!


ஆதியில், எங்கள் வீடு காங்கிரசுடன் இருந்தது. அதன்பின் தி.க- தி.மு.கவுடன் இருந்தது. இனி *.*.*.*.க?

குறிப்பு : தோழியோடு பேசிக்கொண்டிருந்த போது, பெயருக்குப்பின் அல்லது மெயில் ஐடிக்களில் பின்னால் சாதிப்பெயரைச் சேர்த்துப்போட்டுக்கொள்ளும் வழக்கம் வந்திருக்கிறதே, இதைப்போல் செய்வதற்கு, முன்னர் எவ்வளவு தயங்குவார்கள், ஆனால் இப்போது இளைய தலைமுறையினரே இப்படி செய்ய ஆரம்பித்திருக்கிறார்களே என்ற வருத்தத்தை பகிர்ந்துக்கொண்டார். அதைத் தொடர்ந்தே இந்தப் பதிவு!

Friday, September 25, 2009

எ..க்..ஸ்..க்..யூ..ஸ் மீ

பள்ளிக்கூட வயதில், பேசும்போது 'டா' இல்லன்னா 'டீ' போட்டு பேசினா ஆயா சூடே வச்சிடுவாங்க.'என்ன கெட்ட பழக்கம்', 'எங்கேருந்து கத்துக்கிட்டு வந்தே', அது இதுனு ஏகப்பட்ட திட்டு விழும்! எனக்கு மட்டுமில்லே..பொதுவா எல்லாருடைய வீட்டிலேயும் நடக்கும் ஒரு விஷயம்தான் இது! யாரையாவது திட்டனும்னா எங்களுக்கு கிடைக்கற முதல் வார்த்தையே 'போடா' ன்னு சொல்றதுதான். அது ஒரு இழுக்கு மாதிரி! அதேமாதிரி 'டீ'ன்னு யாராவது நம்மை சொல்லிட்டா அவ்வளவுதான்!! கிடைக்கற திட்டுக்கு அடுத்த தடவை அப்படிச் சொல்றதுக்கு யோசிப்போம். என் தம்பி, 'டீ'ன்னு சொல்லிட்டான்னா போச்சு..ரொம்பநாளைக்கு இதைச் சொல்லியே அவனை ஃப்ளாக் மெயில் பண்ணுவேன், 'என்னை டீன்னு சொன்னே இல்லே அன்னைக்கு...ஆயாக்கிட்டே சொல்லட்டா'ன்னு! நான் என்னிக்காவது 'டான்னு சொல்லிட்டா, அவன் சொன்ன 'டீ' கேன்சலாகி என்னை
ப்ளாக்மெயில் செய்ய ஆரம்பிச்சிருப்பான்.

அப்புறம் ஸ்கூல்லயும் ஒரு வழக்கம் இருந்தது. பொண்ணுங்களுக்குள் 'வாடா போடா' ன்னு பேசிக்கு்வோம். அது ரொம்ப ஸ்டைலிஷாவும் இருந்துச்சு..செல்லமா, ஒரு நெருக்கமான நட்புணர்வையும் கொடுத்துச்சு. ஸ்கூல் சீனியர் அக்காங்கள்ளாம் வாப்பா போப்பா ன்னு பேசிப்பாங்க. இந்த 'டா' வும் 'ப்பா'வும் இப்போ வரைக்கும் தொடருது! அதேமாதிரி பையனுங்களுக்குள்ள பேசிக்கும்போது 'வாம்மா, போம்மா' ன்னு பேசிப்பாங்க.பொண்ணுங்களுக்குள்ளே வாடா போடான்னு பேசினாவெல்லாம் வீட்டிலே ஒன்னும் சொல்லமாட்டாங்க. ஆனா வாடி போடின்னு பேசினா போதும்..என்ன பழக்கம் இதுன்னு திட்டு விழும்..இந்த வயசிலேயும்!

பப்புவுக்கு பிடிச்ச பாட்டு வந்தா "உனக்கு பிடிக்குமா"ன்னு கேப்பா. பிடிக்கும்னு சொன்னா, 'யே, சேலஞ்ச்" என்றூ மகிழ்ச்சியாக ஆர்ப்பரிப்பாள்.எந்தப் பாட்டையும் பிடிக்காதுன்னு இது வரைக்கும் சொன்னது இல்லே..ஆனா பிடிச்ச பாட்டு இதுன்னு தெரிஞ்சுக்கலாம் அவ கேக்கறதை வச்சு!
அவளோட சந்தோச்த்துக்காகவே பிடிக்கும்னு எல்லோரும் சொல்வோம்..

'எக்ஸ்க்யூஸ் மீ' பாட்டு ஓடிக்கிட்டிருந்தது...

பப்பு என்கிட்டே 'பிடிக்குமா'ன்னு கேட்டா...நானும் பிடிக்கும்னு சொன்னேன்.

'பிடிக்குமா..அப்போ சேலஞ்ச்'ன்னு சொன்னா.

பக்கத்துலே இருந்த ஆயாக்கிட்டே 'உங்களுக்கு பிடிக்குமா'ன்னு கேட்டா..

இதெல்லாம் என்ன பாட்டுன்னு கொஞ்சநாள் முன்னாடி என்கிட்டே சொன்ன ஆயா, பப்புகிட்டே சொல்றாங்க..."உம்..பிடிக்கும்டா"ன்னு! பப்பு சின்ன பொண்ணு, இப்போ சொன்னா புரிஞ்சுக்கற பக்குவம் இருக்காதுன்னு ஆயா விட்டுபிடிக்கறாங்கன்னாலும்...

கண்லே விளக்கெண்ணெயை விட்டு நாங்க ஒழுங்கா பேசறோமா, கெட்ட வார்த்தை எதும் கத்துக்காம..நல்ல பழக்க வழங்கங்கள் கத்துக்கிறோமான்னு கண்காணிச்ச அந்த தலைமுறையினரின் அவ்வளவு உழைப்பையும் ஒண்ணுமில்லாம ஆக்கிட்டு, "வாடா போடா"ன்ன்னு பேசறது தப்பில்லேங்கற மாதிரியான அர்த்தத்தைக் கொடுக்குதே
இந்தப்பாட்டுன்னுதான் எனக்கு அப்போ தோணுச்சு!

Thursday, September 24, 2009

7அப்-இல் மலர்ந்த மலர்கள்!


(Idea from Google)


ஏதாவது ஆர்ட் வொர்க் செய்யலாமென்று பப்புவுக்கு ஆர்வம் வந்தது, - எனக்குப் பொறுமை இல்லாதவொரு நேரத்தில்! காலி 7அப் பாட்டிலைக்கொண்டு மலர்கள் தீட்டலாமென்றதும் சம்மதித்தாள். எப்படி செய்யப்போகிறோமென்றதை ஒரு முறை செய்துக்காட்ட, தொடர்ந்தாள் அவள். பாட்டிலின் அடிப்பாகத்தை வண்ணத்தில் தோய்த்து தாளில் அழுத்த ஐந்து மடல்கள் பூத்தன - மூடியை திருப்பி வண்ணத்தில் தோய்த்து மடல்களின் உள்ளே அழுத்த மலரின் உள்பாகம்! ஜாலியாக செய்தாள்..ஒரு சில மலர்களுக்கு சரியாக நடுவில் வரவில்லை...ஹிஹி..பாட்டில் மலர்களின் இறுதி வடிவம்!

Wednesday, September 23, 2009

சென்னை டூ ஆம்பூர் டூ சென்னைபடம் : விடுமுறைக்கால நட்புகள்...

ரம்ஜானையொட்டிய விடுமுறைக்காக ஆம்பூர் சென்றிருந்தோம்.பப்புவுக்கு பல நண்பர்களைப் பெற்றுத் தந்தது இந்த விடுமுறை. கிளம்பும்போது, 'நீ போ ஆச்சி, நான் இங்கேயே இருக்கேன்” என்று சொல்லிவிட்டாள். பெரிம்மாதான் சமாளித்து அவளை வண்டியில் ஏற்றினார், “ஊஞ்சல் கடையிலே ஊஞ்சல் வாங்கிட்டு வந்துடு” என்று. ஒரு ஐந்து நிமிடத்தில் தூங்கியவள், வீடு வந்ததும் எழுந்தாள். சென்னையிலிருப்பதை உணர்ந்து, 'ஊஞ்சல் கடையிலே ஏன் எழுப்பலை, என்னை ஆம்பூருக்கு கூட்டிட்டுப் போ' என்று அழத்துவங்கினாள்!! பப்பு, நான் நீண்ட நாட்களாகத் தேடுவதும் அந்த ஊஞ்சல் கடையைத்தான்!! ;-)

Friday, September 18, 2009

ரெட்- ப்ளூ, க்ரீன்-யெல்லோ-வான கதை!”ரெட் லெதர் ப்ளூ லெதர்
லெட் லெதர் ப்ளூ லெதர்
லெட் லெதர் ப்லூ தெதர்
லெத் தெதர் புலூ லெதர்
.
.
.
கிரீன் லெதர் யெல்லோ லெதர்
கிரீன் லெதர் யெல்லோ லெதர்”
('ரெட் லெதர் ப்ளு லெதர்' மருவியது 'கிரீன் லெதர் யெல்லோ லெதர்'ஆக!) :))

- பப்பு, வாக்கியங்கள் பேச ஆரம்பித்தபின், திக்காமல் பேசுகிறாளாவென்ற க்யூரியாசிட்டி இருந்தது. ”டானி-டாடி” சொல்லச் சொல்லி பரிசோதனை செய்வது - அவளோ ”டாடி-டாடி” என்பாள். (சுட்டி டீவியின் 'டானி-டாடி' மிகவும் விருப்பமான நிகழ்ச்சி). சிறிதுநாட்கள் கழித்து திரும்பச் சொல்ல வைப்பது!! ஒரு ஆறுமாதங்கள் இப்படியே போனது!
இனியதொரு நன்னாளில், மிகச்சரியாகச் சொன்னதும் அடுத்த மைல்கல்லை எட்டிய மகிழ்ச்சியும், நிம்மதியும் பிறந்தது! 'யாரு தைச்ச சட்டை' -க்குப் பிறகு, தொடர்கிறது இந்த ரூபத்தில் - அடுத்தது she sells seashells...;-))

அனைவருக்கும் சனி-ஞாயிறு வாழ்த்துகள்!

Thursday, September 17, 2009

இன்று ஒரு தகவல்!

(Publishing this @ 7.40AM in fond memories of Thenkachi swaminathan!)


வீட்டில் ஒரு ஃபிலிப்ஸ் ட்ரான்சிஸ்டர் இருந்தது.சமையலறை அலமாரியின் மூலைதான் நிரந்தர இடம் அதற்கு. காலையில் எழுந்ததும் அதை உயிர்ப்பித்து விடுவார் பெரிம்மா. மிக மெல்லிதாகத்தான் சத்தத்தில்.அது ஒரு ஆல் இண்டியா ரேடியோவாக மட்டுமில்லை, ஒரு கடிகாரமாகவும் எங்களுக்கு இருந்தது. பக்திமாலை, 'செய்திகள் வாசிப்பது சரோஜ்...', விவசாயக் குறிப்புகள், பிரில் இங்க், சூர்யா பல்பு இன்னபிற. 'இன்று ஒரு தகவல்' வந்துவிட்டால் புத்தகத்தை மூடிவிட்டு ஹாலுக்கு வந்துவிடலாம்.

அரிவாள்மனையில் காய்கள் அரிந்துக்கொண்டிருக்கும் ஆயா வெட்டுவதை நிறுத்தியிருப்பார். பெரிம்மா, குக்கர் விசில் வந்துவிடாமலிருக்க ‘சிம்'மில் வைப்பார். எல்லோரும் புன்னகையோடு கேட்போம். ஐந்து நிமிடம். கடைசியில், சிரிப்புக்கதை முடிந்தவுடன் ‘எல்லாம் நல்லபடியா முடிஞ்சது' பாவனையோடு நகர்வோம். சினிமா பாடல்கள் ('ராஜா வாடா சிங்கக்குட்டி' என்ற பாடல்தான் அடிக்கடி !!) ஒலிக்கத்துவங்கும்போது குளித்து ரெடியாக வேண்டும். 8.10 க்கு ஆங்கில செய்திகள் வரும்போது சாப்பிட உட்கார வேண்டும். இப்படி ஒரு பயாலஜிக்கல் கடிகாரத்தை எங்கள் வீட்டில் அனைவருக்கும் பொருத்தி இருந்தது ஆல் இந்திய ரேடியோவும், பெஞ்ச்மார்க்காக ‘இன்று ஒரு தகவலும்' நிகழ்ச்சியும்.

சில தமிழாசிரியர்கள் 'தென்கச்சி இன்று என்ன சொன்னார்' என்பதை சொல்ல வைக்குமளவிற்கு பள்ளிக்கூடத்திலும் ‘ இன்று ஒரு தகவல்' நிறைந்திருந்தது. சில சமயங்களில் மதிய உணவு இடைவேளையின்போது ஆசிரியர்கள் 'இன்று ஒரு தகவலை'யும் பரிமாறிக்கொள்வார்கள். சிறு நகைச்சுவைக் கதைகள், கொஞ்சம் புள்ளிவிவரங்கள், பொன்மொழிகள் எல்லாம் சரிவிகிததில் கலந்தால் பேச்சுப்போட்டியில் பரிசு கட்டாயம் உண்டு என்ற சூத்திரத்தை அப்போது மிகவும் நம்பிக்கொண்டிருந்தேன். அதற்கு, 'இன்று ஒரு தகவலி'ல் வரும் கதைகள் மிகப்பெரும் உதவியாக இருந்தது. எட்டாவது படிக்கும்போது 'இன்று ஒரு தகவல்' தொகுப்புகள் மொத்தமாகக் கிடைத்தது. பிறகென்ன...தமிழ்சினிமா இயக்குனர்களுக்குக் அயல்நாட்டு டிவிடிகள் மொத்தமாகக் கிடைத்தது போல மகிழ்ச்சிதான்! ஆண்டுவிழாவில் பரிசுகள் கிடைத்ததும், ‘தென்கச்சி கோ சுவாமிநாதனுக்கு' கடிதம் எழுதினால் என்ன என்று விபரீத எண்ணம் தோன்றியது.

அநேகமாக, அவர் பேசும்போது, ‘இப்படித்தான் ஒரு நேயர் கடிதம் எழுதியிருந்தார்' என்றுச் சொல்வதைக் கருத்தில் கொண்டு, 'என் கடிதத்தையும் ஒருநாள் சொல்லக்கூடுமெ'ன்ற (நப்)ஆசையும் காரணமாக இருக்கலாம். புத்தகத்தில், ஆசிரியரின் முகவரிக்கு பதிப்பகத்தை அணுகவும் என்று எழுதியிருந்தது. பதிப்பகத்திற்கு ஒரு கடிதம். அடுத்து தென்கச்சிக்குக் கடிதம். ஒரு வாரத்திற்குப் பின் எதுவும் வரவில்லை. 'தகவலிலும்' சொல்லவில்லை. எனக்கும் மறந்துவிட்டது.

ஓரிரு மாதங்களுக்குப் பின், ஆயா பிரிக்கப்பட்ட ஒரு என்வெலப்பைக் கொடுத்தார். ஒரு பக்கத்தாளில் எழுதப்பட்டிருந்தது....என்ன எழுதியிருந்ததென்று சரியாக நினைவில்லை...ஆனால், 'நன்றாக படிக்கவும் என்றும், சந்தனமுல்லை என்ற பெயர் மிக அழகாகவும் வித்தியாசமான பெயராக இருக்கிறதெனவும், பெயருக்கேற்றாற்போல வாசனையோடு திகழ வேண்டுமெனவும்' பொருள்பட எழுதியிருந்தார். கூட ஒரு புகைப்படம். பார்த்ததும் குரலுக்கும் உருவத்திற்கு சம்பந்தம் இல்லையே என்றுதான் தோன்றியது - பூர்ணம் விசுவநாதன் போலல்லவா கற்பனை செய்திருந்தேன்!

பெரிம்மாதான், படைப்புகளை ரசிப்பதோடு, வாசிப்பதோடு நிறுத்தக் கற்றுக்கொள்ள வேண்டுமெனவும், இதுபோல கடிதங்கள், தொடர்புகள் நமக்கு அவசியமற்றது எனவும் சொன்னார். பள்ளியில் நிறைய பசங்கள் ரஜினிக்கும், கமலுக்கும் கடிதங்கள் எழுதி ஃபோட்டோக்கள் வாங்குவதை பெரிம்மா அறிந்துமிருந்தார். அதுதான் ஒரு பிரபலத்திற்கு நான் எழுதிய முதலும் கடைசியுமானக் கடிதம்! இந்தமுறை ஊருக்குபோனால் தேடிப்பார்க்க வேண்டும் - நோட்டுகளின் மத்தியில் அல்லது நண்பர்களின் கடிதங்களுக்கிடையில் கிடைக்கக் கூடும்!

எங்கள் நாட்களை சுவாரசியமானதாக, எங்கள் காலைகளை லேசானதாக மாற்றினதற்கு என்றும் நன்றி! போய்வாருங்கள், தங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்!!

ஆம்பூரில் மழையின் காரணமாக ஆற்றின் ஓரத்தில் வசித்துவந்த குடும்பங்களில் உயிரிழப்புகள் (ஏறத்தாழ 20 பேர்) ஏற்பட்டிருக்கிறது - அதுவும் தூங்கிக்கொண்டிருக்கும்போது நடு இரவில் திடீரென வந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவது நினைத்துப் பார்க்க முடியாததாக இருக்கிறது! அவர்களுக்கு என் அஞ்சலிகள்! அவர்தம் குடும்பத்தினருக்கு ஆறுதலும், மனவலிமையும் இறைவன் தரட்டும்!!

Wednesday, September 16, 2009

உ ஃபார்....

...உல்லாசப் பயணங்கள்! (கோல்டா அக்கா, நீங்க பரிந்துரைத்ததுதான்!)

உல்லாச பயணம் அதாங்க டூர்! பள்ளிக்கூட காலங்களில் இரண்டே இரண்டு தடவைகள் மட்டுமே உல்லாச பயணத்திற்குச் சென்றிருக்கிறேன். ஒன்று எட்டாவது படிக்கும்போதும், இன்னொன்று பதின்னொன்றாம் வகுப்பிலும். ஐந்தாம் வகுப்பில் ஒரு உல்லாசப் பயணமொன்று சென்றார்கள் - மெட்ராஸுக்கு. அதன்பிறகு, பார்த்தால் வகுப்பில் இரண்டு குழுக்களிலிருந்தது - ஒன்று டூர் போன நண்பர்கள், இன்னொன்னு டூர் போகாதவர்கள் என்று. (டூருக்கு முன்பு வேறு மாதிரி குழுக்களிலிருந்தது!)ஒருநாளிலேயே, நண்பர்களை மாற்றும், நெருக்கத்தைக் கொடுக்கும் திறமை டூருக்கு இருந்தது!

பயணத்திற்கு ஒரு மாதம் முன்பாக அறிவிப்புகள் வகுப்புவாரியாக நடக்கும். நாட்கள் நெருங்க நெருங்க மனதில் ஒருவித பரபரப்புத் தொற்றிக்கொள்ளும். அதுவும், 'இப்படம் இன்றே கடைசி' போன்றதொரு தோற்றத்தை அறிவிப்புகள் மூலம் அவ்வப்போது கொடுத்துக்கொண்டிருப்பார்கள். நாமோ வீட்டில் கெஞ்சிக் கதறிக்கொண்டிருப்போம்,எல்லாவிதமான அஸ்திரங்களையும், 'இனிமே நல்லா படிப்பேன், ஃப்ர்ஸ்ட் மார்க் எடுக்கறேன்' போன்ற வாக்குறுதிகளை அள்ளித் தெளித்துக்கொண்டு. கடைசி வரை இழுத்தடித்துவிட்டு, 'இதுக்கு மேல தாங்காது' என்ற இரக்கம் மேலிட காசு கொடுப்பார்கள். இதற்கு மேல் ஏமாற்றினால் பெண் எங்கே வீட்டை விட்டு ஓடிவிடுமோ என்ற பயம் கூட காரணமாக இருக்கலாம். ;-))

பெயர்கொடுத்தபின், அடுத்த டென்ஷன்கள் ஆரம்பிக்கும். அடுத்தகட்ட திட்டமிடல்கள். என்ன மாதிரி பை எடுத்துச் செல்வது - நம்மிடம் இருக்கும் எல்லா ஃபேஷன் வஸ்துகளையும் அடுத்தவரிடம் காட்டிக்கொள்ள் கிடைத்த அரியதொரு வாய்ப்பு இல்லையா..அதை ஒழுங்காக பயன்படுத்தி peer pressure ஏற்றிவிடுவது நமது கையிலல்லவா இருக்கிறது! மேட்சிங் வளையல்கள், ரப்பர் பேண்ட்கள், ஹேர் க்ளிப்கள்,புது தண்ணீர்பாட்டில், அப்புறம் டாப் அப்பாக கூலிங் கிளாஸ், முடிந்தால் வாக் மேன், ஸ்வெட்டர் கண்டிப்பாக, அல்லது ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட், அமெரிக்காவிலிருந்த வந்த வாட்ச். இவை தவிர, வீட்டிலிருந்து தையிலையிலோ அல்லது புரச இலையிலோ கட்டித்தரப்படும், மிளகாய் பொடி தடவிய இட்லி போன்ற பொருட்களை கவனமாக, மறதியாக வைத்துவிடுவது போல வைத்துவிட்டு பிஸ்கெட், சாக்லேட், சூயிங் கம், முறுக்கு, சிப்ஸ் கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். காமிரா-வுக்கு அடிப்போட்டு பார்த்தல் உசிதம்! இத்தனைக்கும் போகுமிடம் மெட்ராஸ் - மகாபலிபுரம், வேடந்தாங்கல் தான்!

அடுத்தது, எந்தெந்த டீச்சர்கள் நம்முடன் வருகிறார்கெளென்று பற்பல வதந்திகள் கிளம்பும். 'ஐயோ..சயின்ஸ் டீச்சர் மட்டும் வரக்கூடாதுப்பா', 'ஹிஸ்டரி டீச்சரா..ஆ...அதுக்கு போகமலே இருக்கலாம்பா' என்று கதைகள் பேசி மாய்ந்துப் போவோம். கண்டிப்பாக பி.இ.டி டீச்சர் வருவார். நாட்களை எண்ணியெண்ணி, யார் பக்கத்தில் யாரமருவதென்று முடிவுக்கட்டி, 'காலையில் ஜன்னல் சீட் உனக்கென்றால் மதியம் எனக்கு', அல்லது 'போகும் போது ஜன்னல் உனக்கு, வரும்போது எனக்கு' என்று பஞ்சாயத்து பேசி கிளம்புவதற்கு முதன்நாளும் வந்துவிடும். அந்த இரவுதான் மிகக் கஷ்டம். பரபரப்பில், மகிழ்ச்சியில், தூக்கமே வராது. வீட்டிலிருந்து கடைசிநேர அட்வைஸ்கள் - 'ட்ரெஸை அழுக்காக்கிட்டு வராதே', 'வேடிக்கை பார்த்துக்கிட்டு நிக்காதே', 'டீச்சர் கூடவே போகணும்', 'பத்திரமா இருக்கணும்', 'கண்டதை வாங்கி சாப்பிடாதே', 'வாந்தி மாத்திரை பையிலே சைடிலே வச்சிருக்கேன் etc - போதாதென்று பக்கத்துவீட்டு ஆன்ட்டிகளின் அட்வைஸ்கள் வேறு - நம்புங்கள், எல்லாம் ஒருநாள் டூருக்குத்தான்.

அதென்னவோ, நான் போன உல்லாச பயணங்களும் (ஒன்றைத் தவிர) அதிகாலை மிகச்சரியாக நாலு மணிக்குத்தான் வரச்சொல்லுவார்கள். பேருந்து மிகச்சரியாக நாலரை மணிக்கு கிளம்பிவிடும், யார் வந்தாலும் வராவிட்டாலும் என்பார்கள். மப்ளர் கட்டிய அப்பாக்கள், ஸ்வெட்டர் போட்ட அம்மாக்கள், ஷால் போர்த்திய ஆயாக்கள், மற்றும் தலையை கோதியபடி நுழையும் அண்ணாக்களுடன் ஒவ்வொருவராக வந்து சேர அட்டெண்டன்ஸ் எடுத்தபின் ஆறு மணிக்கு டாணென்று பஸ் கிளம்பும். தூக்கக் கலக்கத்தில் முகங்கள் - புன்னகைகள் - 'தூக்கம் வருதா, மடிலே படுத்துக்கோ' போன்ற பாச அலைகள்!!
முதலில் சாமிப்பாட்டு எல்லாம் போட்டபின்னர் மெதுவாக சினிமா பாடல்கள் ஆரம்பிக்கும். 'லாலாக்கு டோல் டப்பிம்மா', 'ஓ பார்ட்டி நல்ல பார்ட்டி'தான் என்று பாடல் ஒலிக்கத் தொடங்கும். வீடு, ஹோம்வொர்க், வகுப்புகள் என்று எல்லாமும் ஊர் எல்லையின் மைல்கல்லோடு விடைபெற்றிடும். 'ரொம்ப ஸ்ட்ரிக்ட்' என்று நினைத்த ஆசிரியர்கள் கூட சிநேகமான மறுபக்கத்தைக் காட்டுவார்கள். பாடல்களை முணுமுணுப்பதோடுஇ கைத்தடடி தாளம் போட ஆரம்பிப்பார்கள். ஒருவித உல்லாச மனநிலை எல்லோரையும் ஆக்ரமிக்கத் துவங்கும்! நமக்கேத் தெரியாமல் கைகள் தாளமிடத் துவங்கும். அதிகாலைக் காற்று சிலீரென்று முகத்தில் படர இந்தப் பயணம் முடிவிலாமல் நீண்டாலென்ன என்பது போலத் ஆசை அரும்பும்!

வெயிலடிக்கத் தொடங்கும் நேரத்தில் நடைபெறும் இடமாறுதல்கள். உற்சாகமாக ஆரம்பிக்கும் கை தட்டல்கள் மெதுவாக ஓயும்போது யாராவது யாரையாவது எழுப்பி முன்னே தள்ளி டான்ஸ் ஆட வைத்துக் கொண்டடிருப்பார்கள். மீண்டும் களை கட்டத்துவங்கும் ஆடலும் பாடலும் அதனோடுச் சேர்ந்துக் கொண்ட சிரிப்பொலியும். காலை உணவு முடித்தபின் ஜன்னலோர இடமாறுதல்கள், கடி ஜோக்குகள், டம் ஷரத், அந்தாக்‌ஷரி போன்ற எவர்க்ரீன் விளையாட்டுகள் தொடங்கும். இப்போது பேருந்தின் முன்பக்கம் கூட்டமாகியிருக்கும். சிலரது மடிகள் சிலருக்கு இருக்கையாகியிருக்கும். தோழியரின் கைகள் தோளை அரவணைத்திருக்கும். மெதுவாக எல்லோரது பையிலிருக்கும் நொறுக்குத் தீனிகள் பையை விட்டு வெளிவரும்.

ஒப்பந்தப்படி ஜன்னல் சீட் கொடுக்காத சண்டைகள் லேசாக புகையும். தாளமிட்டு கைவலி வந்திருக்கும் நேரத்தில் பார்க்க வேண்டிய இடமும் வந்திருக்கும். டீச்சரை முன்னால் செல்ல விட்டு பின்னால் குரூப்பாக நடந்து மக்களை வேடிக்கைப் பார்த்து என்று பாதிபயணம் முடிந்திருக்கும். மீதிப்பயணமும் முடிந்து சாயங்கால வேளையில் தேநீர் அருந்த நிறுத்தியிருப்பார்கள். முகங்கள் களைப்புடனும், லேசான சோகத்துடனும் இருக்கும். தாலாட்டும் பாடல்களுடன் திரும்ப ஊருக்குள் நுழைகையில், இவ்வளவு சீக்கிரம் முடிஞ்சு போச்சே என்றிருக்கும்...அடிக்கடி இப்படி டூர் வைத்தாலென்ன என்றும் தோன்றும்! தூக்கம் சொக்க திரும்ப அட்டெண்டென்ஸ் எடுத்தபின் அப்பா-அம்மாக்கள் அல்லது நண்பர்கள் வீட்டுக்கு போய்விட்டு நாளை காலை வீட்டிற்கு செல்பவர்கள் என்று கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் குறையும். 'டூர் எப்படி இருந்துச்சு' என்ற கேள்விக்கு ‘ம்' என்று ஒற்றை வார்த்தையில் தலையசைப்போடு புன்னகையை பதிலாக்கிவிட்டு மௌனமாக இரவின் இருட்டில் காலடிச் சத்தங்கள் தேயும். மனமோ, நாலுக்கால் பாய்ச்சலில் அடுத்த டூரைப் பற்றி நினைக்கத் துவங்கும்!

Tuesday, September 15, 2009

Mixed Bag!

'கா' உண்டு; நொடிப்பொழுதேனும் பேசாமலிருப்பதில்லை - சிறியவர் உலகம்!
'கா' இல்லை; மணிக்கணக்கானாலும் பேசிக்கொள்வதில்லை - பெரியவர் உலகம்!

கொஞ்சம் நாஸ்டால்ஜிக், அய்யனாரின் இசைப்பதிவை பார்த்தபின்!! இந்தப்படத்தின் வேறு சில பாடல்களும் பிடிக்குமென்றாலும், this song holds a special place in my memory!!

Monday, September 14, 2009

பக்-பக் மாடப்புறா

”அனுப்பலாமா வேண்டாமா..?” - நான்.

”போய்ட்டு வரட்டுமேப்பா!” - முகில்.

”வேணாம், வீட்டுலேயே இருக்கட்டும். அடுத்த தடவை பார்த்துக்கலாம்!” - நான்.

ம்ஹூம்...திருப்திகரமாக இல்லாததால், செகண்ட் ஒபினியன்!

”ஆயா, நாளைக்கு என்ன பண்றது? அனுப்பலாமா?”

”..இருக்கட்டும். என்ன இப்போ!?! ”(வேற மாதிரி சொன்னாலும் நான் கேக்கவா போறேன். எனது தொனியை வைத்தே பதில் சொல்லும் ஆயா வாழ்க!)

”என்னப்பா, நாளைக்கு அனுப்பலாமா? போய் என்ன பண்ணபோகுது? நாமளே ஒருநாள் கூட்டிட்டு போகலாம்! என்ன சொல்றே?!”

”அது போய்ட்டு வரட்டும்..ஒண்ணும் ஆகாது!!” - முகில்.

ஒரு முறைப்புடன், "அதை அனுப்பிட்டு நிம்மதியா இருக்க முடியுமா? அந்த டென்ஷனுக்கு, அது வீட்டுலேயே இருக்கட்டும்!"

”நம்மக் கூட போறதைவிட அது ப்ரெண்ட்ஸ் கூட போறதுதான் அதுக்கு ஜாலி. போய்ட்டு வரட்டுமே. கூட்டிட்டு போறவங்களுக்குதான் ரெஸ்பான்ஸிபிலிட்டி அதிகம்!!” - முகில்

பப்பு பள்ளிக்கூடத்தில் ஃபீல்ட் ட்ரிப் கூட்டிச் செல்கிறார்கள் - அதற்குத் தான் இந்த மத்திய மந்திரிகள் மாநாடு! ஆண்ட்டி சொல்லியிருப்பார்கள் போல, பப்புவிடம்! "நாளைக்கு நாங்க சயின்ஸ் பார்க் போறோம்" - என்று அவள் பங்குக்கு கிலி சேர்த்துக் கொண்டிருந்தாள்!

ஃபீல்ட் ட்ரிப் : 3.5 டூ 4.5 வயதினருக்கு.
இடம் : சயின்ஸ் பார்க் (அதாங்க பிளானட்டோரியம்)!
தொப்பி, யூனிஃபார்ம், ஸ்னாக்ஸ், தண்ணீர் முதலியனவற்றைக் கொண்டு வரச் சொல்லி பள்ளியிலிருந்து சுற்றறிக்கை பார்த்தபின்னர்!

”இல்ல, அது வீட்டுலேயே இருக்கட்டும். அவ்ளோதான்!!” - என்றுச் சொல்லிவிட்டு உறங்கச் சென்றாயிற்று, குழப்பங்களோடு!!

செய்தித்தாள்களில் எப்போதோ படித்த விபரீத சம்பவங்களெல்லாம் நினைவுக்கு வந்துக்கொண்டிருந்தன. தனியா போய் என்ன பண்ணும், நம்மளாலேயே கவனிச்சுக்க முடியலை...இது அங்கே இங்கே ஓடினா எப்படி மேனேஜ் பண்ணுவாங்க...அவங்க இதையே கவனிச்சுட்டிருப்பாங்களா இல்ல மத்த குழந்தைகளை கவனிப்பாங்களா!! so many thoughts!

வழக்கம்போல ஆறு மணிக்கு விழிப்பு வந்தது. 'அதான் அனுப்பப்போறதில்லையே' என்று நினைத்துக் கொண்டு தூக்கத்தைத் தொடர்ந்தேன்! 'ஸ்ஸ்...ஸ்ஸ்' என்று சத்தம். பப்புதான்! என்ன கொடுமை குள்ளநரி இது!! அவ்வ்வ்! சரி, அவளாகவே நேரம் வளர்த்தாமல் ரெடியாகிவிட்டால் அனுப்பலாமென்று அடுத்த செக் பாயிண்ட்!

சமத்தாக பாலைக் குடித்து, தோசையை சாப்பிட்டு ரெடியாகி விட்டாள்! அப்புறமென்ன...மனதை கல்லாக்கி..இரும்பாக்கி அனுப்பியாயிற்று!! ‘கவலைப்படாதீங்கம்மா, நாங்க பத்திரமா பார்த்துப்போம்' - ஆயாம்மாவின் உத்தரவாதம் வேறு!

ஆபீஸில் ஒரு 12 மணிக்கு மேல் திரும்ப நினைவு இல்லையில்லை..கவலை!!
மதியம் மூன்று மணிக்கு வீட்டிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தபின்பே நிம்மதியாயிற்று!

ஒரு சின்ன ட்ரிப்தான்! ஆனால், முதல் ட்ரிப்!

அடுத்த வருஷம், அடுத்த வருஷமென்று நான் சொல்லிக்கொண்டிருந்தாலும் எல்லா வருஷங்களும் அப்படியேத்தான் சொல்லிக்கொண்டிருப்பேனென்று தெரிந்துதானிருந்தது!! 'அங்கே போகக் கூடாது, இங்கே போகக் கூடாது' என்று எந்தத் தடையும் போடக்கூடாது, தைரியமாக வளர்க்க வேண்டும் என்றுதான் பேசிக்கொள்வோம். ஆனால், இப்படி ஒரு சூழ்நிலை வந்தப்பின்தான் தெரிந்தது - இது எவ்வளவு கடினம் - To let go - என்பது!! ஒருவேளை இந்த ட்ரிப்-க்குச் செல்லாமல் இருப்பது பப்புவிற்கு பெரிய இழப்பாக இல்லாமல் போகலாம்- வெளியே தனியாக நாங்களில்லாமல் எப்படி மேனேஜ் செய்கிறாளென்பது அவளுக்கு ஒரு பரிட்சையாக இருக்கலாம் - இதையெல்லாவற்றைவிட, எனக்கு வைக்கப்பட்ட ஒரு பெரிய பரிட்சையாகத்தான் தோன்றிற்று! முதல் அடியை எடுத்துவைக்காமல் தோற்றுப்போக விரும்பவில்லை!

என்னைப் பொறுத்த வரை இது ஒரு பயணம் - நானே, என்னைக் கடந்துச் செல்ல வேண்டியிருந்த பயணம் - ஒரு தடவை அனுபவப்பட்டதால், இனி இந்த மனத்தடைகள் இருக்காதென்று நம்புகிறேன்!!

”உன்னை அனுப்பிட்டு நாங்க இங்கே “பக் பக்”ன்னு இருக்கணும், அடுத்த வருஷம் பார்க்கலாம்” - ஸ்கூல் டூருக்கு போகணும்னு கேட்டா எங்க ஆயா சொல்றதுதான் இது!!
(பள்ளிக்கூட வாழ்க்கையிலே ரெண்டே ரெண்டு தடவைதான் டூர்-க்கு போயிருக்கேன்!! அது ஒரு சொந்தக் கதை - சோகக் கதை! அதை இன்னொரு நாள் பார்க்கலாம்!)

அந்த “பக்-பக்” ஃபிலீங் இருக்கே....அதோட உண்மையான அர்த்தம் இப்போதான் புரிஞ்சது!!
வேறு யாருக்கும் "பக்-பக்” அனுபவங்கள், பகிர்வுகள், எண்ணங்கள், ஃபிலீங்ஸ் இருந்தால் பகிர்ந்துக்கொள்ளுங்களேன்! :-)

Saturday, September 12, 2009

அப்பூறம்....

Get this widget | Track details | eSnips Social DNAபுத்தகத்தை வைத்துத் தானாக கதைச் சொல்லிக்கொண்டிருந்த பப்புவிற்குத் தெரியாமல் ரெக்கார்ட் செய்தது. The very hungry caterpillar கதை.
மெதுவாகச் சொல்ல சொன்னதும், பாதியில் அவளுக்கு ரெக்கார்ட் செய்வது தெரிந்ததுமே அந்தக் குரல் மாற்றத்திற்குக் காரணம்!

Thursday, September 10, 2009

ப்ரியா B.E.,

ஆச்சி, ப்ரியா வந்துருக்கும்மா, நம்ம ஸ்கூல்லதான் ட்ரெயினிங், ரெண்டுநாளா!! - அலுவலக்த்தில் இருக்கும்போது பெரிம்மாவின் தொலைபேசி அழைப்பு!

“எந்த ப்ரியா, பெரிம்மா?”

“இதோ நீயே பேசு, உன்கிட்டே பேசணும்னு சொல்லுச்சு” - பெரிம்மா தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.

”எந்தப் ப்ரியா, பெரிம்மா, சொல்லிட்டுக் கொடுங்க?” - பெரிம்மா காதில் வாங்கிக்கொண்ட மாதிரியேத் தெரியவில்லை!

”ஆச்சி, எப்படி இருக்கே, நல்லா இருக்கியா?” - மறுமுனையில் ப்ரியா!

”நல்லா இருக்கேன், நீ எப்படி இருக்கே” - எந்த ப்ரியாவென்றேத் தெரியாமல் பேச ஆரம்பித்தேன்!

என்னிடம் இதுதான் பிரச்சினை. ஒன்று மறதி. இன்னொன்று ஒரே பெயரில் பல நண்பர்கள் இருப்பது! ப்ரியா என்று சொல்வீர்களானால் பல ப்ரியாக்கள் பரிச்சயம். ஹவுசிங் போர்ட் ப்ரியா, பி செக்ஷன் ப்ரியா, தோழியின் தங்கை ப்ரியா, கல்லூரியில் இரண்டு ப்ரியாக்கள்.கவிதா என்று சொல்வீர்களானால் ஐந்துக் கவிதாக்களைத் தெரியும். எஸ்.கவிதா,டி.கவிதா, சீனியர் கவிதா - இவர்கள் பள்ளிக்கூட கவிதாக்கள். கல்லூரியில் ஒரு கவிதா. இப்போது, வலையுலகில் ஒரு கவிதா. அனு எனில் இரண்டு அனுக்கள். ஹேமா என்றால் மூன்று ஹேமா. (ஒரேயொரு ஞானசௌந்தரிதான்!). கெஜலஷ்மிகள்,முத்துலஷ்மிகள்,சுஜாக்கள், வினிதாக்கள், மஞ்சுக்கள், கல்பனாக்கள்,ஜெயஸ்ரீக்கள். இவர்கள் எல்லாரையுமே பெரிம்மாவுக்கும் தெரியும். இவர்கள் எல்லோருக்குமே பெரிம்மாவையும் தெரியும்!! இந்தப் பிரியா இதில் எந்த ப்ரியா? கொடுமை என்னவெனில் மிகவும் நெருக்கமான அல்லது சரியான ப்ரியா மட்டும் உரிய நேரத்தில் நினைவில் எட்டமாட்டார்கள்!

இங்கே, ப்ரியா போனில் பேசிக்கொண்டே இருந்தாள். இல்லையில்லை...கேட்டுக்கொண்டே இருந்தாள்.

குரலிலும் அடையாளம் பிடிபடவில்லை! ('உன் குரல், சுப்பு-ருக்குலே வர ருக்கு குரல் மாதிரி இருக்கு' என்று எனக்குச் சொல்லிக் கொண்டிருந்தவர்கள், இப்போதெல்லாம் 'உன் குரல் சுப்பு குரல் மாதிரி இருக்கு' என்றுச் சொல்லும்போது, ப்ரியாவின் குரலில் மட்டும் காலம் எந்த அடையாளத்தை விட்டிருக்கும்?!)


“உன் பொண்ணு ஃபோட்டோ பார்த்தேன், பெரிம்மா ஃபோன்லே காட்டினாங்க, என்ன படிக்கிறா?”

.....

“எனக்கு ரெண்டு பையன். பெரிய பையன் செகண்ட் ஸ்டாண்டர்டு படிக்கறான், மணவாளம்-லதான் வேலை செய்றேன்”

ஓ...தெரிந்துவிட்டது! இந்த ப்ரியா! என்ன சொல்வது அவளைப் பற்றி!! படிப்பு என்றால் ப்ரியா. ப்ரியா என்றால் படிப்பு! எனது நெருக்கமான தோழி!! 'ஒல்லி ப்ரியா பல்லி ப்ரியா','கண்ணாடிப் ப்ரியா' என்றும் அவளுக்குப் பெயர் இருந்தது! பத்தாவதிலிருந்து ஒன்றாகப் படித்தோம்.அதற்கு முன்பாக வேறு செக்‌ஷனிலிருந்தாபோதே அறிமுகம். இருவரும் இருவரின் வீட்டிற்கும் சென்றிருக்கிறோம். இருவருக்கும் இருவரது வீட்டினரையும் தெரியும். ப்ரியாவின் அப்பாவும் ஆசிரியர். இருவரும் அவரவர் தம்பிகளைப் பற்றிப் பேசிப் பேசி புண்பட்ட மனதை ஆற்றியிருகிறோம். இயற்பியலில் கூடுதல் ஆர்வம் அவளுக்கு!

'ப்ரியா கண்டிப்பாக பிஈ'தான் - 'ரேணுகா கல்யாணம்' - 'சபீனா, ஆர்ட்ஸ் காலேஜ்' - என்று எல்லோரும் பக்கா எதிர்காலத் திட்டத்துடன்தான் இருந்தோம்! +2 மதிப்பெண்களும் வந்தது. எதிர்பார்த்தது போலவே ப்ரியாவிற்கு நல்ல மதிப்பெண்கள். கண்டிப்பாக, மெரிட்டிலேயே பிஈ கிடைக்கும். ஒருநாள் காலையில் ப்ரியாவின் அப்பா வீட்டிற்கு வந்தார். Bsc இயற்பியல் படிக்க வைக்கப் போவதாகச் சொன்னார். அதிகம் படித்தால் அவர்கள் சாதியில் மாப்பிள்ளைக் கிடைப்பது கடினம் என்றார். சேலம் சாரதாவில் பிஎஸ்சி படித்தாள் ப்ரியா. நானும் வேறு கல்லூரிக்கு, ஹாஸ்டலுக்குச் சென்றுவிட்டேன். முதல் செமஸ்டர் வரை எல்லோரும் எல்லோருக்கும் கடிதம் எழுதிக்கொண்டோம், கல்லூரி பிடிக்கவில்லையென்றும், பள்ளிதான் நினைவில் நீங்காதிருக்கிறதென்றும் ஒருவரையொருவர் பார்க்கமுடியாமல் இருப்பது மிகவும் கடினமாக இருக்கிறதென்றும், திரும்ப பள்ளிக்கே சென்றுவிடலாமாயென்றும்! அதன்பின், தொடர்புகள் நூலிழையில் இருந்தன!

நான் MCA நுழைவுத்தேர்வுக்கு படித்துக்கொண்டிருக்கையில், கையில் திருமண அழைப்பிதழோடு வீட்டிற்கு வந்தாள் ப்ரியா! பக்கத்து ஊர்காரர். பிஎட் படித்திருக்கிறார். வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை. நல்ல நிலபுலன்கள். ஏழு வயது வித்தியாசம். நான் முதல் வருட விடுமுறைக்கு வந்தபோது ப்ரியாவிற்கு குழந்தை பிறந்திருந்தது. சில நாட்களில், குழந்தை இறந்துவிட்டதாக சபினா சொன்னாள். செய்தித் தெரிந்ததும் ப்ரியாவுடன் பேசினேன்.

“பிறந்து கண்ணுக் கூட முழிக்கலைப்பா, கையிலே வைச்சிருந்தேன். அது செத்துப் போகப் போகுதுன்னு தெரிஞ்சுதான் கையிலே வச்சிருந்தேன் போல” என்றாள். ஒரு நொடியில் ப்ரியா முற்றிலும் வேறாகத் தெரிந்தாள்!! எங்களுடன் கிண்டலடித்துக்கொண்டு, விளையாட்டுத்தனமாகத் திரிந்தவளாகத்தான் ப்ரியாவை அறிந்திருந்தேன். ப்ரியா, இப்படியெல்லாம் பேசுவாளென்று நானறிந்திருக்கவில்லை. திடீரென ப்ரியா வேறு தளத்திற்கு சென்றுவிட்டாற் போலிருந்தது! (அப்போதெல்லாம் தாய்மை உணர்வுகள் புரிந்திருக்கவில்லை!)

நாங்கள் சிறுவயதில் ஒரு விளையாட்டு விளையாடுவோம். மூன்றாவது, நான்காவது படிக்கும்போது! அம்மா-அப்பா விளையாட்டு. அவரவர் பொம்மைகளைக் கொண்டு வரவேண்டும். யாராவது சற்றே பெரியச் சிறுமிதான் எங்களை அதட்டிக்கொண்டிருப்பாள் - அவள் பேச்சை நாங்களும் கேட்போம்! 'ஹாஸ்பிடல் செல்வது - ஆபரேஷன் நடக்கும் - குழந்தை வரும்' - அப்புறம் குழந்தைப் பொம்மையை குளிப்பாட்டி சடை போட்டு என்று விளையாட்டு! ப்ரியாவிடம் பேசிக்கொண்டிருந்த போது ஏனோ அந்த விளையாட்டை அடிக்கடி நினைத்துக் கொண்டேன்!

ப்ரியாவிற்கு எத்தனையோ கனவுகள் இருந்திருக்கும்!! இருந்ததாவென்றுத் தெரியவில்லை..ஆனால் அவள் அம்மா-அப்பா சொன்னதைக் கேட்கும் பெண்ணாக இருந்தாள். அவளுக்கென்று தனிப்பட்ட விருப்பங்கள் இருந்திருக்கும்! பிஈ படிக்க - ஆபிஸிற்குச் செல்ல - 'இந்த டீச்சர் வேலை போர்ப்பா, நான் டீச்சராக மாட்டேன்' என்பதாக!! ஒருவேளை ப்ரியாவிற்கு அவளது வாழ்க்கையின் தீர்மானங்களை எடுக்கும் உரிமைகள் இருந்திருந்தால்?!!

ப்ரியா அந்த முடிவுகளை விரும்பி ஏற்றுக் கொண்டாளாவென்றுத் தெரியவில்லை.

ஆனால், அதற்குப் பின் பிஎட் படித்தாள். ஊரிலேயே ஒரு மேனேஜ்மென்ட் பள்ளியில் ஏழாவது/எட்டாவது வகுப்பிற்கு ஆசிரியராக இருக்கிறாள். இதுவும் அவளது விருப்பமாக இருந்ததாவென்றுத் தெரியாது, ஏனெனில் படிக்கும்போது நாங்கள் பேசிக்கொள்வோம், “நான் டீச்சர் வேலைக்கு மட்டும் போக மாட்டேன்ப்பா!”.

ப்ரியாவை நேரில் சந்திக்க வாய்த்தால் கண்டிப்பாகக் கேட்கவேண்டும்.

“ஏன் ப்ரியா?, ஏன் நீ பிஎஸ்சி படிக்கமாட்டேன்னு சொல்லலை? ஏன் பிஈதான் படிப்பேன்னு அடம் பிடிக்கலை? ஏன் டீச்சர் ஆக மாட்டேன்னு சொல்லலை? ஏன் ப்ரியா?!!”


குறிப்பு: இது ஆசிரியர் தினத்துக்காக எழுதியது. ஏதோவொரு இனம் புரியாத உணர்வு அன்று வெளியிட தடுத்தது!

Wednesday, September 09, 2009

09/09/09

@ சூப்பர் மார்க்கெட்

ஆச்சி, எனக்கு ஐஸ்கிரிம் வாங்கித்தா ஆச்சி! - பப்பு


ஐஸ்கிரிம் சாப்பிட்டா சளி பிடிக்கும்..அப்புறம் ஜொரம் வரும்! ஐஸ்கிரீம் வேணாம் - நான்


2 நிமிடங்கள் அமைதி.

ஆச்சி, நீ ஐஸ்கிரீம் சாப்பிடு...நல்லாருக்கும்...நீ சாப்பிடு - பப்பு

ஹிஹி....சரி...;-) - நாந்தான்!

யே!! நாம ரெண்டு பேரும் ஐஸ்கிரிம் சாப்பிடலாம்...யே!! நாம சாப்பிடலாமா!?! - பப்பு

ஆஆ!!!


இந்த 09/09/09 ரொம்ப ஸ்பெஷலாம்!

Monday, September 07, 2009

Fish 'o ' Fish!கடையில் வண்ணமீன்கள் பார்த்ததும், வீட்டில் நாமும் மீன்களைக் கொண்டுச்செல்லலாம் என்றாள் பப்பு! நாயை பார்த்தால், 'நாயை வீட்டில் வச்சுக்கலாம்', 'பூனையை உள்ளே வரச் சொல்லு', 'சிங்கத்தை வீட்டில் வச்சுக்கலாமெ'ன்று ”எதையாவது_வளர்க்கலாம்_மேனியா” வந்துவிட்டிருக்கிறது!!நாமே வீட்டில் மீன்களைச் செய்யலாமென்றுச் அப்போதைக்கு அவளதுக் கவனத்தைத் திசை திருப்பியாயிற்று. (சொன்னதைக்கேட்டுநடக்கும்செல்லபிராணியொன்றுவளர்க்க21வயதாகவேண்டும்,பப்பு )

எப்படிச் செய்யப் போகிறோமென்றுச் சொன்னேன். நீல நிறமும், கருப்பு வர்ணமும் கொண்டு கடலை தீட்டினாள், ! மீன்களை வரைந்துத் தந்தேன். வெட்டினாள். கண்களை வரைந்தாள். பஞ்சிங் மெஷின் கொண்டு பொட்டுகளை வெட்டி செதில்களாக்குவோமென்றதும், ஏற்கெனவே வெட்டிய பொட்டுகளை ஒட்டினாள். மீன்களைக் கடலில் நீந்தத் தொடங்கின!

பப்புவிற்கு மிகவும் பிடித்த பகுதி - பஞ்சிங் மெஷினால் ஓட்டைப் போட்டு பொட்டுகள் செய்வது! கையில் பஞ்சிங் மெஷினைக் கொடுத்துவிட்டால் நாம் ஒரு அரைமணிநேரம் ஃபிரீ!! :-)


இன்னொரு படத்திலிருக்கும் பச்சை ஏரி மீன்கள், பப்புவும் அப்பாவும் செய்தது.
அடுத்த வருடத்தில், நிஜ மீன்களை வளர்க்கும் பக்குவம் வருமென்று நம்புகிறோம்! நீண்ட நாட்களுக்கு முன் செய்தது இது, டிராஃப்டிலிருப்பதை வெளியிடுகிறேன்!

Sunday, September 06, 2009

ஆறு தன் வரலாறு கூறுதல் - தொடர் விளையாட்டு!

தொடரெழுத அழைத்த சிநேகிதிக்கு நன்றி! சிநேகிதியின் பதிவெழுத வந்த கதையையும் வாசித்து விடுங்கள் - மிக சுவாரசியம்!

ஏற்கெனவே ஒருசில இடுகைகளில், எப்படி பதிவுலகிற்கு வந்தேனென்று சுருக்கமாக சொல்லியிருக்கிறேன்!

”பசும் புல்வெளியில் துள்ளித் திரிய மானுக்கென்ன தயக்கமா,
நந்தவனத்தில் தேன் குடிக்க வண்டுகென்ன தயக்கமா...
உங்கள் முன் உரையாட அடியேனுக்கென்ன தயக்கமா?” - இப்படிதாங்க ஏதொவொரு பேச்சுப் போட்டில பேசி ஜெயிச்சிட்டேன், ஆறாவதோ ஏழாவதோ படிக்கும்போது!!
அப்புறமா, ”பாரதியாம் பாரதி ” - இந்த ரேஞ்சுல கவிதை வேற எழுதி இருக்கேன்.
இதுல, டீச்சருங்க கொடுத்த உற்சாகத்தில தமிழ் நம்ம நாக்குல துள்ளி விளையாடுதுன்னு மமதை வேற!! இதையெல்லாம் ஒரு பெரிய தகுதியா நினைச்சு இந்த ”சித்திரக்கூடத்தை “ தொடங்கினதுல, இப்போ நட்சத்திரமாவும் ஆகிட்டேன்.

அதனால, நீஙக இப்போ திட்டனும்னா, இல்ல ஆட்டோ அனுப்பனும்னா, அனுப்ப வேண்டிய முகவரி : இதோ!! ஏன்னா, சுட்ஜி தான், நீங்க ஏன் தமிழுக்கு தொண்டாற்றக்கூடாதுன்னு, சும்மா இருந்த சங்கை...! 2004-ல “ஹனி டியூ' ன்ற பேரில ஒரு வலைப்பூ தொடங்கிட்டு, அதை சுத்தமா மறந்திட்டேன்,ஒரே ஒரு பதிவு ஆங்கிலத்தில போட்டுட்டு. அவ்வளவு சுறுசுறுப்பு!”


சின்சியராக ஆணி பிடுங்குக் கொண்டிருந்த காலம் அது! நேரம் கிடைக்கும்போது கடமையாக RFC படிப்பதிலும், ஆன்லைன் ஃபோரங்களிலும் (வேலை தொடர்பான),Sysindia-விலும் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தேன். நிலா ரசிகன்(சரியான்னு தெரியலை) ரசிகவின் கவிதைகள்தான் ஃபார்வர்டு மெயிலாக கிடைக்கப் பெற்றேன். அதுதான் இணையத்தில், நான் முதன்முதலில் கண்ட தமிழெழுத்துகள்!அதைத்தாண்டி தமிழில் இணையத்தில் என்ன இருக்கிறதென்று ஆராய்ந்ததில்லை!

வேலை மாறியபோது, வெட்டியாக இரு மாதங்கள் செலவழிக்க நேர்ந்தது. சுதர்சனின் வலைப்பூ அப்போதுதான்(2005) அறிமுகம். அவரது வலைப்பூ வழியாக நூல் பிடித்து இளவஞ்சி, துளசி, கேவிஆர் வலைப்பூக்களை தொடர ஆரம்பித்தேன். அப்படியே, தமிழ்மணமும், தேன்கூடும் தினமும் எட்டிப்பார்க்கும் இடமாயிற்று! தினமும் சுதர்சனை 'இன்றைக்கு ஏதாவது எழுதுவதுதானே ‘ என்று கேட்டு தொணப்ப, பதிலுக்கு அவர் ‘நீங்கள் ஏன் தமிழுக்குத் தொண்டாற்றக் கூடாது' என்று கேட்டுக்கொண்டதும் (ஓக்கே..ஓக்கே..கூல்!) உருமாறியது ஹனிடியு - சித்திரக்கூடமாக!!

ஆயா, எனக்கு சின்னவயதில் ஒரு கதை சொல்வார். சித்திரக்குள்ளன் கதை. ஏழு குழந்தைகளுடன் ஒரு அம்மா- அப்பா. கடைசி பையன் குள்ளனாக இருப்பான். பஞ்சத்தில் அவனது அம்மா-அப்பா குழந்தைகளை காட்டில் விட்டு விட சித்திரக்குள்ளன் அவனது புத்திசாதுர்யத்தால் ஒவ்வொருமுறையும் வீட்டிற்கு அழைத்து வந்துவிடுவான். ஒருமுறை ராட்சதனிடம் மாட்டிக்கொண்டச் சித்திரக்குள்ளன் எல்லோரையும் தப்புவித்து, ராட்சதனின் வீட்டில் எப்படிச் சந்தோஷமாக வாழ்ந்தார்கள் என்பது கதை! எனது ஃபேவரிட் கதை! எத்தனை முறை நான் கேட்டிருப்பேன், எத்தனை முறை ஆயாவும் சொல்லியிருப்பார்களென்றுத் தெரியாது! எனது எட்டு வயது வரை இந்தக் கதையை தினமும் கேட்டுத்தான் தூங்கியிருக்கிறேன். எனக்குள் ஆழப்பதிந்தச் சித்திரக்குள்ளனுக்காக வைத்த பெயரேச் 'சித்திரக்கூடம்'!! இந்தபெயர் சித்திரக்குள்ளனையோ கதையை மட்டுமில்லாமல், நானும் ஆயாவும் செலவழித்த பொழுதுகளை, இரவின் இருட்டில் ஆயாவின் மேல் கால் போட்டுக்கொண்டு, ராட்சதன் வரும்போதெல்லாம்(கதையிலேதாங்க!) ஆயாவை இறுக்கமாக கட்டிப்பிடித்துக்கொண்டு, கடந்த நாட்களின் நினைவுகளுக்காக வைத்த பெயர் - ”சித்திரக்கூடம்”!

முதலில், சுரதாவில் தங்கிலிஷில் எழுதி, யுனிகோடிற்கு மாற்றிக் கொண்டிருந்தேன். கொஞ்சநாட்களிலேயே இலகலப்பை-க்கு மாறிவிட்டேன். ஆரம்பத்தில், எனது சிறுவயது நினைவுகளை எழுதத்தான் தொடங்கினேன். ஒரு சில கதைகள், ஃபார்வர்டு மெயிலை தமிழாக்கப்படுத்தி இடுவது என்று ஒரே மொக்கைகள்தான். பின்னூட்டங்களெல்லாம் இட்டது கிடையாது. பின்னூட்டங்களுக்கு பதில் சொல்வதும் இல்லை! கிடைக்கிற நேரத்தில் நாலு பதிவுகளைப் படித்துவிட்டு செல்லலாம் என்ற எண்ணமாகவும் இருக்கலாம்!( இப்பொழுது, பப்பு தனியாக விளையாட ஆரம்பித்துவிட்டதால் தொடர்ந்து பதிவுலகிற்கு வர முடிகிறது!)

பப்புவின் பேச்சுகளும், அவளிடம் நான் கண்டு வியக்கும் குறும்புகளுமே சித்திரக்கூடத்தை தூசு தட்ட வைத்தது! பதிவு என்பது கதை, கவிதை எழுத மட்டும்தான் என்பது போன்ற தோற்றத்தை (பயத்தை!) கொண்டிருந்த போது, ஆயில்யனின் “இட்லிபொடி' இடுகையை வாசிக்க நேர்ந்தது! அட, ஒரு இட்லி பொடிக்காக ஒரு இடுகையா - இப்படிக் கூட எழுதலாம் போல என்று என்னை எண்ண வைத்து - இப்போது நானும் மொக்கைகளை தொடர்ந்துக் கொண்டிருக்கிறேன்! :-) வாழ்த்துகள் ஆயில்ஸ்!!

என்னிடம் ஒரு பழக்கம் - எதுவுமே கொஞ்ச நாளைக்குத்தான் எனக்கு சுவாரசியமாக இருக்கும், அப்புறம் அதனை திரும்பியே பார்க்க மாட்டேன். பாட்டு கேட்க பிடிக்கும் என்றால், அதற்காக நேரம் செலவழித்து தேடித் தேடி கலெக்ட் செய்து வைப்பேன் - அதன்பின அப்படியே விட்டுவிடுவேன். ஒரு எழுத்தாளர் புத்தகம் படித்து பிடித்து விட்டால்,அவரது எல்லா நாவலையும் வாசித்து விடுவது - ஸ்டெல்லா புரூஸ், பாலகுமாரன், சுஜாதா, கல்கி, அம்பை, சிட்னி இப்படி - அப்புறம் அவர்கள் பக்கமே செல்வது இல்லை! அதே போல், உடைகளாக வாங்கித் தள்ளிக் கொண்டிருப்பேன் - அதன்பின் ஒரு வருடத்திற்கு வாங்க மாட்டேன், போரடித்துவிடும்!திரும்ப், என்றைக்காவது அதே ஆர்வம் துளிர்விடும்! இது ஏதும் மேனியாவாவென்றுத் தெரியவில்லை - But, I am like this only - weird, huh! எந்த பொழுதுப்போக்கையும் இவ்வளவு நாட்களாக தொடர்ந்ததில்லை - என்னைத், தொடர்ந்து பதிவெழுத வைப்பதே பதிவுலகின் வெற்றி! ;-)

வாசிப்பதே மிகவும் அரிதாகிப் போன எனக்கு, தமிழ்மணம் நல்ல இடுகைகளை அடையாளம் காண்பித்திருக்கிறது! பதிவுலகில், நல்ல நண்பர்களைப் பெற்றிருக்கிறேன்! அவர்களில் ஒரு சிலரை சந்தித்துமிருக்கிறேன்! என்னை தினம் தினம் இங்கு வர வைப்பதற்கு இவையே காரணம்! தொடர்ந்து வாசித்து, பின்னூட்டமிட்டு உற்சாகப் படுத்தும் தங்களன்பிற்கு நன்றி! :-)

ஆறு தன் வரலாறு கூறுதல்”- கண்டிப்பாகத் தமிழ் பரிட்சைக்கு வருமென்று, ஆறாவது/ஏழாவது படிக்கும்போது சீனியர்களால் பயமுறுத்தப்பட்டது. ஆனால், எந்தப் பரிட்சையிலும் வந்ததில்லை! :))


நான் அழைக்க விரும்பும் நால்வர்,

1. செல்வநாயகி
2. சென்ஷி
3. தீபா
4. சின்ன அம்மிணி

உடனே, இடுகையைத் தொடர வேண்டிய கட்டாயமில்லை. நேரம் கிடைக்கும்போது, தாங்கள் பதிவெழுத வந்தக் கதையையும் சொல்லுங்கள்....:-)


விதிமுறை:

1. ஒவ்வொருவரும் தாம் வலைபதிய வந்த கதையை, இன்று வரையான தமது அனுபவங்களைச் சொல்ல வேண்டும்.

2. கதை சொல்லி முடிந்ததும் விளையாட்டுக்கு 4 அல்லது அதிலும் கூட :) பேரை அழைக்க வேண்டும். அழைப்பதோடு அழைப்பவர்களுக்கு அழைப்பினைத் தெரியப்படுத்தவும் வேண்டும்.

3. கதை சொல்லுபவர்கள், தாம் தமிழை எழுதப் பயன்படுத்திய கருவிகள் தொழிநுட்பங்கள், சந்தித்த சிக்கல்களைச் சொல்லவேண்டும்.

(மேலும் விதிமுறைகள் ஆலோசனைகளின் பேரில் சேர்க்கப்படலாம்.)

Saturday, September 05, 2009

சுதா கான்வெண்ட்-லிருந்து ஒரு சிறுமி!

பொதுவா, நம்ம ஊர்லே ஒன்பதாவது முடிச்சுட்டீங்கன்னா, 'நீங்க உங்களுக்குச் சொந்தம் இல்ல'ன்னு தீர்மானமே பண்ணிக்கலாம்! ஏன்னா அடுத்தது பப்ளிக் எக்சாம் ஆச்சே! காலையிலே ட்யூஷன், சாயங்காலம் ட்யூஷன், சனி, ஞாயிறு ஸ்பெஷல் கிளாஸ்! முழுபரிட்சை லீவும் கிடையாது...அடுத்த வருஷத்துக்கானதை ஆரம்பிச்சுடுவாங்களே! வீட்டிலே, ஸ்கூல்ல கொடுக்கற டென்ஷனில் பாதியாவது கொடுப்பாங்களே!!

நாம கொஞ்சூண்டு எதிர்ப்புக் குரல் கொடுத்தாப் போதும், “உன் நல்லதுக்குத்தான் சொல்றோம், இப்போ தெரியாது இதோட அருமை...இந்த வருஷம் கஷ்டப்படப் போறே..அடுத்த வருஷம் காலேஜ்லே போய், என்ன படிக்கவா போறே...எப்படியும் கிடையாது...அதை நினைச்சுக்கிட்டாவது இப்போ ஒழுங்கா படி”!! ன்னு ஒரு குரல் வரும்..அப்புறம் என்ன கப்சிப் தான்!!

நாமளும் இதை நம்பி, ‘சரி, காலேஜ்னா ரொம்ப ஜாலியாயிருக்கும் போல, படிக்க வேண்டாம், அங்கெல்லாமா, இப்படி மன்த்லி் டெஸ்ட், டெர்ம் டெஸ்ட்-னெல்லாம் வைப்பாங்க? அதெல்லாம் இருக்காது - அப்படி, இப்படின்னு ஏகப்பட்ட கனவுகளோட காலேஜில் அடியெடுத்து வைச்சா...தான் தெரியும்..அங்கே மன்த்லி டெஸ்ட் கிடையாது...விக்லி டெஸ்ட் - அப்புறம் யூனிட் டெஸ்ட் - அதைத்தாண்டி சர்ப்ரைஸ் டெஸ்ட் -ல்லாம் இருக்கும்னு!! ஸ்கூலைவிட அதிகமாக டெஸ்ட் எழுதின இடம் கல்லூரியாகத்தான் இருந்தது! கனவுகளில் கூட நிரம்பி வழிந்தன சிண்டாக்ஸும் செமான்டிக்ஸூம்!!தூக்கத்தில் கேட்டாலும் சொல்லக் கூடிய அளவுக்கு மனனமாகியிருந்தன - அல்காரிதங்கள்!

இதுக்கெல்லாம் காரணம் Ms.A - நாங்க மட்டுமில்லை, பிஜி மாணவர்களும் நடுநடுங்கும் ஒரு மேம்! டெரர் மேம்! இவங்களை மாதிரி நடிச்சு காட்டறதுதான் ஹாஸ்டல்லே பொழுதுபோக்கா இருந்துச்சு! எப்படியெல்லாம் கேள்வி கேட்கலாம்னு ரிசர்ச் பண்ணிட்டு வருவாங்களோன்னு நாங்க நினைக்கற அளவுக்கு மடக்கி மடக்கி கேட்பாங்க!! , TNPCEE எக்சாம்லே, ஒரு எறும்பைப் பிடிச்சு, அது எங்கே போய் நிக்குதோ, அதுதான் ஆப்ஷன்னு பென்சிலால தீட்டின எங்களை இப்படியெல்லாம் அடிச்சா தாங்குவோமா?!!

படிக்காத பசங்களுக்கெல்லாம் நான்தான் கேங் லீடர்ன்னு என்னைப் பத்தி ஒரு நினைப்பு வேற இவங்க மனசுலே இருந்துச்சு!! (ஏன்னா, இன்னைக்கு டெஸ்ட் எழுதலை, இன்னொரு நாள் வைச்சிக்கலாம்ன்னு சொல்றதுக்கு நாட்டாமையா நானும், தமிழ்செல்வியும்தான் போவோம்!) அதனாலே, எனக்கு மட்டும் எப்போவும் ஒரு ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட் இருக்கும்...படத்துலேல்லாம் தாதாங்க சொல்வாங்க இல்லையா..'கட்டம் கட்டிட்டேன்'/ஸ்கெட்ச் போட்டுட்டேன்னு..கிட்டதட்ட அது மாதிரிதான்!!

ஒரு செமஸ்டர்லே எங்களுக்கு ஆரக்கிள் 8i & VB (இப்போவும் இந்த VB இருக்கா?!! என்ன ஒரு க்ரேஸ் இருந்துச்சு...இந்த VB-க்கு!!). நாங்க எல்லாம் VBயோட அழகிலே மயங்கி ஆரக்கிளை விட்டுட்டோம். ரெக்கார்ட் நோட் ரெடியாகலை. அப்போதான், சுபத்திராவுக்கு ஐடியா வந்துச்சு..நாம லேப்லே 'நைட் ஸ்டே' செஞ்சு ஓவர் நைட்லே எல்லா பிரிண்ட் அவுட் எடுத்தா என்ன?!! உடனே நாங்க ஐவர் அணி ரெடி ஆனோம்...'ஹாஸ்டல் மாணவர்கள் கொஞ்சம் அதிக நேரம் லேப்லே ஸ்டே பண்ணலாம்'னு ஒரு எழுதப்படாத சட்டம் இருந்துச்சு!

எட்டு மணிக்குள்ள ப்ரோக்ராமெல்லாம் அடிச்சு முடிச்சாச்சு - லதாவும், மசூதாவும் போய் பரோட்டா வாங்கிட்டு வந்தாங்க - சாப்பிட்டுட்டு, கடகடன்னு சுடச்சுட பிரிண்ட் அவுட்! எங்க டே ஸ்காலர் ப்ரெண்ட்ஸ்க்கும் சேர்த்து எடுத்தோம். அலைன்மெண்ட் - ஃபார்மேட்- பிரச்சினைகளைத் தாண்டி எல்லோருடையதும் தனித்துவமா இருக்கிற மாதிரி பார்த்துக்கிட்டோம்!! யாருக்கிட்டேயும் பர்மிஷன் கேக்கலையே-ன்னு நாங்க யாருமே யோசிக்கலை! எல்லோருக்கும், நாளைக்கு ரிப்போர்ட்டை ஃபைல் பண்ணிடலாங்கற எண்ணமும், 'நம்ம கடமையை மேம் மெச்சுவாங்க'ன்ற எண்ணமும்தான் மேலோங்கி இருந்தது!!

விடியற்காலையிலே, விடுதிக்குப் போய் சாப்பிட்டுட்டு, களைப்புத் தீர உறங்கிட்டு மதியமா டிபார்ட்மெண்ட்டுக்குப் போனோம்! லேபை தாண்டித்தான் கிளாஸ் ரூம்! நடுநாயகமா உட்கார்ந்திருந்தாங்க Ms.A. பக்கத்துலே லேப் கோ-ஆர்டினேட்டர்! வணக்கம் வைச்சிட்டு கிளாஸ் ரூம்க்கு போய்ட்டோம்! ஜூனியர்ங்கள்ளாம் மும்முரமா ரெக்கார்ட் வேலை செஞ்சுக்கிட்டிருந்தாங்க! கொஞ்ச நேரத்திலே எங்களை கூப்பிட்டனுப்பிச்சாங்க!

அவங்க கேட்டதுலே, இதுதான் இப்போ வரைக்கும் ஞாபகத்துலே இருக்கு, “ஏம்மா, உங்களுக்கெல்லாம் மட்டும் வால் முளைச்சிருக்கா?!!”. லேப் முழுக்க ஜூனியர்ஸ்! அவங்க எங்களை அப்படி கேட்ட வருத்தத்தைவிட இந்த ஜூனியர்ங்க முன்னாடிபோய் இப்படி சொல்லிட்டாங்களேன்னுதான் ரொம்ப வருத்தமா இருந்துச்சு!!

இதுதான் Ms.A. ஒரு ஒற்றைச் சொல் - ஈகோலே அடிக்கற மாதிரி - முகத்திலடிச்ச மாதிரி!

ஆனா, அதுக்குப் பின்னாடி என்ன இருந்துச்சுன்னா, நாங்க கணினிலே கரைகாணனும்கிற எண்ணம் இருந்துச்சு - எங்களுக்கு ஒரு நல்ல எதிர்காலம் அமையணும்கிற எண்ணம் இருந்துச்சு - நாளுக்குநாள் மாறிக்கிட்டே இருக்கிற தொழில்நுட்பங்களின் மத்தியில் நாங்களும் competentஆ இருக்கணுமேங்கிற அக்கறை இருந்துச்சு!

Thank you,Ms.A! என்னாலே முடியுங்கறதை எனக்குக் காட்டினதுக்கு! உங்களாலேதான் நான் AIலேயும், C++ லேயும் முதன்மையா வர முடிஞ்சுது!! நீங்க, அதீத கண்டிப்பா என்கிட்டே இல்லைன்னா, உங்கிட்டே நல்ல பேரெடுக்கணுங்கிற தீவிரத்தோட நான் படிச்சு இருக்க மாட்டேன்! ஃபுல் மார்க் வாங்கணும்கிற வெறியோட, நானே அசைன்மெண்ட் எழுதியிருக்க மாட்டேன்!

மேலும், சுதா கான்வெண்ட் மித்ரா மிஸ், வனஜா டீச்சர், மற்றும் வாழ்க்கையெனும் பாடத்தைப் பற்றி அறிவு புகட்டிக் கொண்டிருக்கும் எல்லோருக்கும்,

இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்!

Friday, September 04, 2009

Main Aisa Kyun Hoon??

”டைமாச்சு, என்னை பஸ் ஸ்டாப்லே கொண்டு வந்து விடேன், ஆச்சி”

”ம்ஹூம், என் ஸ்கூட்டியை பஞ்சராக்க வழி பண்றீங்களா, அதெல்லாம் முடியாது, ஆட்டோலே போங்க!”

அலுவலகம் செல்லும் அவசர தினமொன்றில் கைக்காட்டிய யாரோ ஒரு ஆன்ட்டியை யோசிக்காமல் ஏற்றிக் கொள்கிறேன்...

”மகராஜியா இரு” இறங்கும்போது அவர் உதிர்க்கும் வார்த்தைகள் கொடுக்கும் இதத்தைவிட,
எங்காவது, பஸ் கிடைக்காமல் வீடு திரும்ப தவிக்க நேரிடும் பெரிம்மாவுக்கோ, அம்மாவுக்கோ யாரேனும், என்றேனும் உதவக்கூடும் என்ற எண்ணம் தரும் நிம்மதிக்காக!

Thursday, September 03, 2009

50:50

சமையல் செய்யும் அம்மா ‘அவசரமா ஊருக்குப் போகவேண்டியிருக்கு, வர எவ்ளோ நாளாகும்னு தெரியல, போய்ட்டு ஃபோன் பண்றேன்'னென்றுச் சொல்லிவிட்டு திண்டிவனத்திற்குச் சென்றார். ஒரு வாரமாகியும், எந்தத் தகவலுமில்லை. பத்துநாட்கள் கழித்து வந்தவரிடம் ‘ஃபோன் பண்ணிச் சொல்றேன்னு சொன்னீங்களே” என்றதற்கு,

”ஊரிலே கரெண்ட்டே இல்லம்மா, ஃபோனே எடுக்கலை”பப்பு தனியாக விளையாடிக்கொண்டிருந்தாள். சடசடவென சரிந்து விழுவது போல சத்தம் கேட்டது. அலமாரியில் ஏதோ கை வைத்திருக்கிறாள், எல்லாம் விழுந்திருக்கிறது என்று புரிந்தது. நானும் போய் பார்க்கவில்லை. ஒன்றும் கேட்கவுமில்லை.


என்னிடம் வந்த பப்பு,

“ஆச்சி, புக்லாம் அதுவே விழுந்துடுச்சு...வந்து பாரு” என்றாள். நான் அசையாமலிருந்தது அவளதுக் கூற்றை நான் நம்பவில்லை என்றெண்ண வைத்தது போலும். என்னை ஒருமாதிரியாக பார்த்து சொன்னாள்,


”ஆச்சி, குள்ளநரி வந்து எல்லாத்தையும் தள்ளி விட்டுடுச்சு, புக்லாம் கீழே கிடக்கு” !!

Tuesday, September 01, 2009

v3.0 - 3.10பப்பு,

ஞாபகமிருக்கிறதா, சென்ற வாரத்தில் ஓர் நாள்,

”என்னைத் திட்டுறீங்க இல்ல,உங்க அம்மாக்கிட்டே சொல்றேன்” - பப்பு

“நானும் உங்க அம்மாக்கிட்டே சொல்றேன்” - முகில்

“இது எங்க அம்மாவோட வீடு” - பப்பு

இந்த உரையாடல்(விவாதம்) இதோடு முற்றுப்பெறுகிறது.

'ஏன் வீட்டைக் குப்பையாக்குகிறாய்' என்று முகில் கேட்டதற்குதான் இத்தனையும்! இதுநாள் வரை, நாங்கள் இது உன்வீடு, என்வீடு என்று பேசியதில்லை. ஆம்பூர் வீடு, வடலூர் வீடு அல்லது விழுப்புரம் வீடு என்றுதான் பேசியிருக்கிறோம். அல்லது நம்ம வீடு என்றுதான் குறிப்பிட்டிருக்கிறோம்! With that,பப்பு, நீயாகவே உரையாடலை எங்கே முடிக்கவேண்டும்ன்று அறிந்திருக்கிறாய். ;-).

நிறைய பேசுகிறாய். தொலைபேசியில் நீண்ட நேரம் பேசுகிறாய், நீ சொல்வது எல்லாமே ஆச்சரியமாகவும் மகி்ழ்ச்சியூட்டுவதாகவும் இருக்கிறது!

நீயாகவே வரிகளமைத்துப் ஏதாவதொரு மெட்டில் பாடுகிறாய்.

இட்லி
சூடான இட்லி
அட்லி
அட்லியே!!

அர்த்தம்தான் புரியவில்லை!

திரும்ப திரும்ப கடைக்கு
இல்லன்னா கடைக்கு
பத்து வாங்க போலாம்
இந்தச் செடி நல்லாருக்காது!!

நாங்கள் எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும், என்ன செய்ய வேண்டுமென்றுச் சொல்லிக்கொண்டே இருக்கிறாய்! சில நேரங்களில், நீ தனியாக இருக்கவிரும்புகிறாய். யாராவது கூட இருந்தால், கண்காணிக்கத்தான் என்று எண்ணிக்கொள்கிறாய்!

இந்த காலகட்டத்தில்தான், நீ, மிக முக்கியமானதொரு மைல்கல்லை கற்றுக்கொண்டாய்...பழி (complaint)சொல்வதற்கும், 'நானில்லை, அதுவே உழுந்துடுச்சு, அதுவே கிழிஞ்சுக்கிச்சு' யென்று தப்பித்துக்கொள்வதற்கும்!

அலுவலகத்திலிருந்து நான் வந்ததும், ஆயாவை பற்றி கம்ப்ளெய்ன் செய்வது உனது வழக்கம். 'எனக்கு பேரிச்சம் பழம் கொடுக்கல' அல்லது 'வாழைப்பழம் கொடுக்கலை'யென்று. (இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டுவிட்டு, முடி வளர்ந்துவிட்டதாவென்று தலையை சாய்த்துப் பார்க்கிறாய்.) நான் கேட்கிறேனென்று சொன்னதும், “ஆயாவை அடி, அடி” என்றாய். ”பப்பு, யாரையும் அடிக்கக்கூடாது” என்றதற்கு, 'என்னை காலையிலே அடிச்சே, ஏன் என்னை மட்டும் அடிச்சே' என்றாய்! குற்றம் சாட்டும் நோக்கத்தை விட, ஏன் என்று மட்டும் அறிந்துக்கொள்ளும் ஆர்வமே உன் முகத்தில் இருந்தது! ஹ்ம்ம்..இப்படிதான் நாம் வாழ்கிறோம் பப்பு, செய்யக்கூடாது செய்யக்கூடாது என்று சொல்லிக்கொடுக்கப்பட்டு, கடைசியில் அதைத்தான் செய்யும்படி நேர்ந்துவிடுகிறது!

உன் கேள்விகள் மகிழ்ச்சியைத்தான் தருகின்றன, 'மரம் ஏன் காத்துலே விழாம நிக்குது' என்றும், கம்மல் கழட்டிய நாளொன்றில் 'நீ boyயாயிட்டியா' என்றும் கேட்கிறாய். பால் குடித்தபின் உதட்டின்மேலிருந்த நுரையைக் காட்டி 'நான் boyயியிட்டேன்' என்கிறாய். Well, pappu, இன்னும் பல வித்தியாசங்களை வாழ்க்கை வைத்திருக்கிறது, இது மட்டுமில்லை என்பதை நீ உணரும் காலமும் வரும்!

நட்பை உலகமாகக் கொண்டிருக்கிறாய், நண்பர்களுக்காகத்தான் நீ பள்ளிக்கு போகிறாய். இப்பொதெல்லாம், குள்ளநரி தேவைப்படுவதில்லை உன்னை எழுப்ப, 'வர்ஷினி, வெண்மதி எல்லோரும் உனக்காக வேன்லே வந்துக்கிட்டுருக்காங்க' என்பதே போதுமானதாக இருக்கிறது உன்னைக் கிளப்ப! 'நான் வர்ஷினி ஃப்ரெண்ட், உன் ஃப்ரெண்ட் இல்ல' என்கிறாய்! யாருடனாவது ஃப்ரெண்டாக இருக்க வேண்டுமானால், கண்டிப்பாக யாருடனாவது கா விடத்தான் வேண்டுமென நினைத்துக்கொண்டிருக்கிறாய்!! ‘வர்ஷினி வீட்டுக்கு என்னை விடறியா' என்கிறாய். Don't you think its too early pappu?!!

'கா கா' என்று என்னிடம் கா விடுகிறாய். பதிலுக்கு நானும் 'கா' விட்டால் கவலை கொள்கிறாய். நான் 'கா' விடக் கூடாதென்று கத்துகிறாய். நீ கா விட்டாலும், நான் சேலஞ்ச்தான் விடனும் என்று சொல்கிறாய். Ah,பப்பு, இதுதான் முதல் படி, to take your mom for granted!! இது எங்கே முடியுமென்று நானறிந்திருக்கிறேன்...தெரிந்தும் நீ கா விடும்போதெல்லாம் உனக்கு சேலஞ்ச் கொடுத்துக்கொண்டிருக்கிறேன்!!

பப்பு, இரவு நேரங்களில் என்னைவிட்டு தனியே தூங்கி பழக்கமில்லை உனக்கு. ஆயா ஊரிலிருந்து வந்ததும், ஆயாவோடு படுத்துக்கொள்ளப்போவதாகச் சொன்னாய். வழக்கம்போல, சொல்லிவிட்டு தூங்கும் நேரத்தில் வந்துவிடுவாயென்றெண்ணிக் கொண்டிருந்தேன். நீ அருகிலில்லாததை தூக்கத்தில் உணர்ந்து, நடுஇரவினில் ஆயாவினருகில் உறங்கிக்கொண்டிருந்த உன்னைத் தூக்கிக் கொண்டு வந்தேன்!பப்பு, நீ வளர்ந்துவிட்டாய், தனியாக உறங்க...பார், நான் இன்னும் வளரவில்லை!! To let go - இன்னமும் கற்றுக்கொள்கிறேன்!

கோபத்தில் உன்னை அடிக்க முற்படும்போது, “நாந்தான் அம்மா” என்று சொல்லிக்கொண்டு திரும்பி அடிக்க்க வந்தாய். பப்பு, அம்மாவாக இருந்தால் மட்டுமே அடிக்க வேண்ண்டுமென்று நீ நினைப்பது எனக்கு பிடித்திருக்கிறது! :-) (இது நானும் பப்புவும் விளையாடும் விளையாட்டு, நான் பப்புவாகி விடுவேன். பப்பு அம்மாவாகி விடுவாள். ஆபீஸ் செல்வாள், நான் வீட்டிலிருப்பதற்கு அழ வேண்டும்..etc!!)

'சேம் சேம்' அல்லது 'சேம் கலர்' அல்லது 'சேம் ஸ்விட்' என்று சொல்லக் கற்றுக்கொண்டாய்! வெளியில் போனாலோ, வீட்டிலிருந்தாலோ நீயும் நானும் ஒரே வண்ணத்தில் உடுத்த விரும்புகிறாய்! அப்படி இல்லையென்றாலும், உனது உடையிலிருக்கும் வண்ணத்தை, எனது உடையில் ஏதோ ஒரு மூலையிலாவது கண்டு நீயாகவே சமாதானமாகிறாய்!

என்றேனும் நான் மாற்றும் கம்மல் உன் கண்களுக்கு மட்டுமே சட்டென தெரிகிறது. 'அழகா இருக்கே' என்றும் 'இந்த ட்ரெஸ் நல்லா இல்லே' என்றும் சொல்கிறாய், ‘குண்டுக் குட்டி' என்றுக் கொஞ்சுகிறாய்! Phase D ஐ அழகாக கடந்து வந்தோம்...ஆனாலும் நீ சமயங்களில் கோபமாகிவிட்டால் டி சொல்வதும் நீடிக்கிறது! இந்த வருடத்தின் ஆரம்பத்திலிருந்த டோரா க்ரேஸ் இப்போது இல்லை. அல்லது நான் அப்படி நினைத்துக்கொண்டிருக்கிறேனோ!!

உனது, மூன்று வயது மூன்று மாதங்களில் ஜிக்சா புதிர்களை அடுக்கக் கற்றுக்கொண்டாய். ஏனோ உனக்கு மெழுகுவண்ணங்களை தீட்டுவதில் அவ்வளவு ஆர்வமில்லை அப்போது. சரியாக உனது மூன்று வயது ஆறு மாதங்களில் அதில் ஆர்வம் காட்டத்தொடங்கினாய். அதிலும் சிவப்பு மாடுகள், கறுப்பு மாம்பழம் என்று கற்பனை செய்துபார்க்க இயலாதவைகளை தீட்டியதை எப்படி நான் மறக்க முடியும்!! பல்டி அடிக்கக் கற்றுக்கொண்டாய். பதற்றமும், மகிழ்ச்சியும் சேர்ந்த நிலையை நான் அறிந்துக்கொண்டேன்!

சிறிது கணினியும் இயக்கக் கற்றுக்கொண்டிருக்கிறாய். கீபோர்டில் சில எழுத்துகள், வலது அம்பு சரியாக இயங்க மறுக்கின்றன!! 'சொன்னபேச்சை கேட்பது' என்பதை நீ என்றேனும் கற்றுக்கொள்வாயா என்பதே எனக்குச் சந்தேகமாக இருக்கிறது! என் பெரிம்மாவுக்கும், ஆயாவுக்கும், ரத்த அழுத்தம் கூடியதன் காரணம் இப்போது புரிகிறதெனக்கு!

'அப்பாக்கு கா கா விட்டுடு...otherwise நோ சேலஞ்ச்'!- என்று பிலாக்மெயில் செய்கிறாய்! எதைச் சொன்னாலும் அதற்கு எதிர்ப்பதமாகத் தான் செய்கிறாய். சரிதானென்று நாங்களும் எதிர்ப்பதமாகச் சொன்னால், அன்றுதான் கடமையாகச் சொல்பேச்சை உடனே கேட்கிறாய்!

சொல்வதற்கு இன்னும் நிறைய இருப்பதுபோல தோன்றுகிறது, பப்பு! ஃப்ரெண்ட்லியான, உற்சாகமான, பயமறியாத சின்னஞ்சிறுமியாக நீ வளர்வதைப் பார்க்க நிறைவாக இருக்கிறது!
உனது மூன்று வயதைத் தாண்டி பத்து மாதங்களைக் கடந்து வந்திருக்கிறோம் and We have grown together!

இருந்தாலும், காலத்தை இப்படியே உறையச் செய்துவிட விரும்புகிறேன்.அதே சமயம் நீ வளரவும் விரும்புகிறேனே!! oh my!


வாழ்த்துகளுடன்,
ஆச்சி!