Sunday, August 30, 2009

சில நேரங்களில் ...

சில வார்த்தைகள், பப்புவிடமிருந்து!!

” வேகிடுச்சா? “ - பப்பு அகராதியில் ”வெந்துடுச்சா”!

“சன்னும் & நிலாவும் நமக்கு வழிகாட்டுதா” - பீச்சுக்கு சென்ற மாலை வேலையில்!!

”see this பெரிய எறும்பு” - ”காட்சிகள் மாறும், கோலங்கள் மாறும்” கதையா திடீரென்று ஆங்கிலத்தில் மட்டுமே பேசுவாங்க மேடம்!

”என்னாதான் ஆச்சி விஷயம் உனக்கு? “ - அவள் சொல்வதற்கு நான் கீழ்படியாவிடில்!!

”அம்மாங்கள்ளாம் குழந்தைங்கள விட்டுட்டு போவாங்களா” - அவள் வீட்டிலிருக்க நான் அலுவலகம் செல்ல நேர்ந்தபொழுதினில்!

” கொஞ்சமா வேலை செய்ய சொன்னாங்களா ஆபிஸ்காரங்க...உன்னை” - ஒரு நாள் சீக்கிரமாக வீடு வந்ததும்!!

”நானே என்னை காப்பாத்திக்கிட்டேன்” - நல்லது பப்பு, வாழ்வின் அடிப்படை பாடத்தை வெற்றிக்கரமாக கற்றுக்கொண்டாய்!! ;-)

Friday, August 28, 2009

Long, Long Ago....

”நண்பனொருவன் வந்தபிறகு விண்ணைத்தொடலாம் உந்தன் சிறகு” - இப்படி எனக்குக் கிடைத்த ப்ரெண்ட்தான் லதா!

பொண்ணுங்களை தனியா வேற ஊருக்கு அனுப்பனும்னாலே கொஞ்சம் யோசிப்பாங்க! துணைக்கு யாராவது ஒரு ஆள் கண்டிப்பா வருவாங்க! அதுவும் எங்க ஆயாவுக்கு சொல்லவே வேணாம். கற்பனை பண்ணி பயந்துக்கறதுலே அவங்களை அடிச்சுக்கவே முடியாது! 'தொலைஞ்சு போய்டுவேன்' இல்லன்னா 'யாராவது கடத்திட்டு போய் கண்லே கரப்பான் பூச்சியை கட்டி பிச்சை எடுக்க விடுவாங்க' ரேஞ்சுலே மெட்ராஸூக்கு என்னை அனுப்பறதுலே பயந்துக்கிட்டிருந்தாங்க. அதுவும் இல்லாம, இது மெட்ராஸுக்கு போனா உருப்படாது(மெட்ராஸ் உருப்படாதுன்றது வேற விஷயம்!!), அப்புறம் மெட்ராஸிலே எல்லொருமே கெட்டவங்க'னு ஒரு நினைப்பு!! ப்ராஜக்ட்-க்கு கண்டிப்பா மெட்ராஸ்தான் போகணும்...'நீ வேலூர்லேயே ப்ராஜக்ட் பண்ணு'ன்னு சொல்லிட்டா என்ன பண்றதுன்னு ”லதாவும் என்கூடதான் வரா , நாங்க ரெண்டு பேரும் ஒண்ணாதான் ப்ராஜக்ட் பண்ணப் போறோம்”னு (இதே பிட்டு லதா வீட்டுலேயும் ஓடுச்சு!!) பில்டப் கொடுத்து சமாளிச்சாச்சு!

வழக்கமா ஊர்லேர்ந்து வர்றவங்க பண்றதை நாங்களும் தவறாம பண்ணோம்...ஒன்வேல எதிர்பக்கம் பார்த்துக்கிட்டு கிராஸ் பண்றது, ஒன்னுமே வாங்காம ஸ்பென்ஸர்ஸை சுத்தறது, அப்புறம், பெரிய பில்டிங்கைப் பார்த்தா அதுலே ஏதாவது சாஃப்ட்வேர் கம்பெனியோட பேர் தெரியுதான்னு பாக்கறது, பஸ்லே ஏறினா பர்ஸை கெட்டியா பிடிச்சுக்கறது, ஏரோப்ளேன் போனா அண்ணார்ந்து பார்க்கறதுன்னு!! இன்னும் ஒன்னு இருக்கு...ப்ராஜக்ட் பண்ண ஸ்டூடண்ஸ் சென்னை வந்தா, அதும் பெண்கள் வந்தா பண்றது, “மெட்டீரியல் கலெஷன்' என்னனு தெரியலையா...நீங்க ரொம்ப நல்லவஙகன்னு நம்பிட்டேன்! அது வந்து, தி நகர், அப்புறம் மைலாப்பூர், எக்மோர்லே பாந்தியன் சாலை(காட்டன் ஸ்ட்ரீட்)- புரிஞ்சுருக்குமே - யெஸ் - சல்வார் 'மெட்டீரியல்' வாங்கி டிரெஸ் தைச்சுக்கிறது!! காட்டன் ஸ்ட்ரீட்லே மீட்டர் 30 ரூ...மிக்ஸ் அன்ட் மாட்ச்! ப்ராஜக்ட்-காகக் கொடுக்கற காசுதான்!! மெட்டீரியல் கலெக்ஷ்ன் பண்ணனும்னு காசு கேட்டா - 'கம்ப்யூட்டர்லே என்ன மெட்டீரியல் கலெஷன்'னு திருப்பிக்கேட்டா இப்படிதான் ஆகும்!!(ஹிஹி...பெரிம்மா..மன்னிச்சுடுங்க!!) வேலை கிடைச்சதும், திநகர், காட்டன் ஸ்ட்ரீட் லாம் விட்டுட்டு க்லோபஸ், ஹாப்பர்ஸ் ஸ்டாப்ன்னு ஸ்விட்ச் ஆகிட்டோம்..இப்போ பேக் டூ த பெவிலியன் - காட்டன் ஸ்ட்ரீட்தான்! ஏனா? புரியலையா..அதான் கல்யாணம் ஆகிடுச்சே..அவ்வ்வ்வ்!

ஓக்கே, பழைய கதைக்கு வாங்க, ப்ராஜக்ட் பண்ணப்போ அடையார்லே ஹாஸ்டல்வாசம்! சென்ட்ரல் கவர்மெண்ட்னா, காலை 9.30 டு மாலை 5.30 வெலை செஞ்சா போதும்!! அதும் ஒரு சங்கு ஊதுவாங்க...நீங்க வேலை செஞ்சது போதுங்கற மாதிரி! அதுக்காக நாங்க அஞ்சு மணிக்கே மூட்டையைக் கட்டிட்டு உட்கார்ந்து இருப்போம்!! அதுக்கு அப்புறம் என்ன வேலை..அடையாரை காலாலே அளக்கறதுதான்! அடையாரிலே 'அடையார் பேக்கரி' இருக்கு..அதுதான் எல்லாருக்கும் தெரியுமே! ஆனா அங்கே போகக்கூடாது..அதுக்குப் பக்கத்துலே ஒரு குட்டி சந்து மாதிரி இருக்கும்.அங்கே, ஒரு கடை சாயங்காலத்துலே மட்டும் ஓபன் ஆகும்...ஒன்லி பஜ்ஜி,போண்டா, வடை பகோடா, கட்லெட் etc! 10 ரூபாலே நிறைய நொறுக்ஸ் சுடச்சுடக் கிடைக்கும்! அதை நடத்துறது, 'வேலையில்லா பட்டதாரிகள்'னு போர்டு போட்டிருப்பாங்க! நானும் லதாவும், சரி, வேலையெதுவும் கிடைக்கலன்னா, இதேமாதிரி நாமளும் தோசைக்கடையாவது வைக்கலாம்னு மனசைத்தேத்திக்கிட்டோம்! (Career is important!!) ஏன்னா அப்போ இருந்த நிலைமை அதுமாதிரி!

என்னோட வாஸ்து எப்படின்னா, அஞ்சாவது முடிக்கறேன்னா அந்த வருஷம்தான் ஆறாவது சிலபஸ் மாறும்! நான் எட்டாவது படிக்கறேன்னா அப்போதான் அதைப் பொதுத்தேர்வா மாத்துவாங்க.பத்தாவது படிக்கும்போதுதான் விடைத்தாள் மார்க் போடற பேட்டர்ன் மாத்துவாங்க..பன்னெண்டாவது வரேன்னு தெரிஞ்சதும் ப்ராக்டிகல்ஸ் மாத்துவாங்க!! இதே வாஸ்து நான் வேலைக்கு வரபோறேன்னு தெரிஞ்சதும் வொர்க் அவுட் ஆகலைன்னா எப்படி?
நாங்க, 'MCA முடிச்சதும் பாஸ்போர்ட் வாங்கிட்டு நேரா அமெரிக்கா'ன்னு கனவுல இல்ல இருந்தோம்...இதை எப்படியோ தெரிஞ்சுக்கிட்ட ஒசாமா டென்ஷனாகி ட்வின் டவரை உடைச்சுப் போட்டுட்டார்! என் சீனியர்ஸ் எல்லாம், 'உன் ரெசியும் அனுப்பு'ன்னு சொல்லிக்கிட்டுருந்தவங்க, உங்க ஊர்லே இருக்கற காலேஜ்லேயே லெக்சரராகிடுன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க! H1B கொடுக்கறேன்னு இண்டர்வியூலே சொன்னவங்களுக்கெல்லாம், ஆஃபரே கைக்கு வரலை!! அதனாலே நானும் லதாவும் சரி தோசைக்கடை ஓக்கேன்னு முடிவு பண்ணோம்..கேரியர் தான் முக்கியம்..எந்த கேரியரா இருந்தா என்ன..?!!டிபன்பாக்ஸ் கேரியர் கூட ஓக்கேதான்!!

அதும் இல்லாம, பொண்ணுங்க படிச்சுட்டு கொஞ்ச நாள் வீட்டுலே இருந்தா போதும்..நம்ம பேரண்ட்ஸ்க்கு ஐடியா இருக்கோ இலையோ...மத்தவங்கள்லாம் ஏன் அவ மட்டும் நிம்மதியா இருக்கானு யோசிக்க ஆரம்பிச்சுடுவாங்க! ஊர்லே, தெரிஞ்சவங்க யாராவ்து ஐடிலேர்ந்து வேலை இல்லாம வீட்டுக்கு வந்துட்டாங்கன்னு தெரிஞ்சாபோதும்..சும்மா நாள்லேயே வேலை கிடைக்காது,நம்ம பொண்ணுக்கு எங்கே வேலைக்கிடைக்கும்னு ஒரு முடிவுக்கே வந்துடுவாங்க!! உடனே என்ன இருக்கவே இருக்கு, யுனிவர்சல் சொல்யூசன் - ”டும் டும் டும்”!

“நெருப்புன்னா வாய் வெந்துடவா போகு்து...உடனேவா கல்யாணம் பண்ணிட போறோம்..ஆரம்பிக்கலாம்..பார்த்துக்கிட்டே இருப்போம்..அமைஞ்சா பண்ணலாம்...எப்படியும் ஒரு வருஷம் ஆகும்..அதுக்குள்ளே நீயும் வேலைக்கு டிரை பண்ணு”னு ஜாதகத்தை/பயோடேட்டாவை தூசு தட்ட ஆரம்பிச்சுடுவாங்க!! சமாளிக்கணுமே...
”நாங்க ப்ராஜக்ட் பண்ற இடத்துலேர்ந்தே எனக்கு வேலைக் கொடுக்கறேன்னு சொல்லியிருக்காங்க,செண்ட்ரல் கவர்மெண்ட் வேலை...இதெல்லாம் அப்புறம் பாக்கலாம்”!!

இந்தப் பொய்யை சொன்னப்புறம்தான் எங்களுக்கே இந்த ஐடியா கிளிக் ஆச்சு.. இவங்க கிட்டேயே கேட்டு பாக்கலாம்,”சம்பளம் வேணாம்..எக்ஸ்பிரியன்ஸ்க்காக ஒரு ஆறுமாசம் வேலை செய்றோம்”னு பிட்டை போட்டா என்னனு! வொர்க் அவுட் ஆச்சு! வைவா முடிஞ்சு இரு வாரம் ரெஸ்ட் எடுத்துகிட்டு சென்னைக்கு வந்துட்டோம்!! ஆறுமாசம் வேலை - கண்ட்ராக்ட் பொசிஷன்! அதுக்குள்ளே அவங்களே ”பட்சி சிக்கிடுச்சு” ரேஞ்சுலே ப்ராஜக்ட் அசிஸ்டெண்டா 5000 சம்பளத்துலே வேலை தந்துட்டாங்க!! எப்படியோ, அதுக்குள்ளே கொஞ்சம் கொஞ்சமா பிக்கப் ஆச்சு, எங்க ஐடி! ஃப்ரெஷரா இருந்தப்போ எங்களை கண்டுக்காத இந்த ஐடி கம்பெனிங்கல்லாம் நாம ஒரு வருஷம்/ ரெண்டு வருஷம் எக்ஸ்ப்ரியன்ஸாகிட்டோம்னு தெரிஞ்சதும் நமக்குக் கொடுக்கற வரவேற்பு இருக்கே! அதும் நம்மை கண்டுக்காத கம்பெனிங்க, நம்மளை வா வான்னு கூப்பிடறபோ ‘ப்போ போ'னு நாம சொல்றதுல இருக்க ஒரு (அல்ப) சந்தோஷம்!! சான்ஸே இல்ல!! :-) எப்படியோ ஒன்றரை வருசம் அந்த கேம்பஸிலே ஒட்டிக்கிட்டு ஆளுக்கொரு சாஃப்ட்வேர் கம்பெனியிலே செட்டில் ஆகியாச்சு..அப்புறமா..கொஞ்ச நாள்லே கல்யாணம்..என்ன..And then they lived happily ever after-ஆ!!அவ்வ்வ்வ்..அதெல்லாம் only in fairy tales-ன்னு நான் புரிஞ்சுக்கிட்டேன்! நீங்க இன்னுமா புரிஞ்சுக்கலை...ஐயோ ஐயோ!! :-) (எப்படியோ கேப்லே நான் fairy ஆகிட்டேன்!!)

சரி இதெல்லாம் எதுக்கா..சென்னையை எனக்குத் தெரிஞ்சவரைக்கும் சுத்திக்காட்டி இருக்கேன்லே!! :-)

உபரிக்குறிப்பு : அந்த அடையார் பேக்கரிக்கு மேலே 'Shakes n Creams 'னு ஒரு கடை இருக்கும் - காலேஜ் டைப் 'பர்த்டே பார்ட்டி'க்கு பர்ஸுக்கு ஏற்ற இடம் - குவாலிட்டி நல்லா இருக்கும் - யாரும் வந்து என்ன வேணும்னெல்லாம் கேட்க மாட்டாங்க. நீங்க எவ்ளோ நேரம் வேணா பேசிக்கிட்டு இருக்கலாம்..நீங்களே போய் சொன்னாதான் உண்டு!

Thursday, August 27, 2009

சிங்கைநாதனுக்காக....
செந்தில் அண்ணாவின் அறுவை சிகிச்சை நலமாய் முடியவும், குடும்பத்தினருக்கு மனதைரியமும் வேண்டி பிரார்த்தனைகளும், நலம் பெற வாழ்த்துதல்களும்!


Edited to Add: தங்கள் அனைவரின் பிரார்த்தனைகளும் நல்வாழ்த்துகளுக்கும் நன்றி! சிங்கை நாதனின் அறுவை சிகிச்சை முடிவடைந்து நலமுடன் உள்ளார். தொடர்ந்து பிரார்த்தனை செய்துக்கொள்ளுங்கள்! மேலும் விபரங்களுக்கு :

http://www.maraneri.com/2009/08/blog-post_27.html

Wednesday, August 26, 2009

தன் வினை ..../முற்பகல் செயின் ....

...தன்னைச் சுடும்!!

"பப்பு, ரோட்லே போறவங்க நமக்குத் தெரியாதவங்க கூப்டா பேசக்கூடாது" -ன்னு சொல்லி நான் பட்டபாட்டை சொல்லியிருக்கேன்.

பக்கத்துவீட்டு ஆன்ட்டியை நாங்க அடிக்கடி பால்கனிலே பார்த்து பேசிக்குவோம். அவங்க வீட்டுக்கும் வருவாங்க சிலசமயம், இல்லன்னா, நானும் பப்புவும் போவோம். அங்கிளை ரோட்லே பாத்தா விஷ் பண்றதோட சரி,அதுவும் என்னைக்காவதுதான் பார்ப்போம். சோ நானோ, முகிலோ அங்கிள் கூட பேசி பப்பு பார்த்ததில்லை. இதுவரைக்கும் அங்கிள் எங்க வீட்டுக்கு வந்ததையும் விரல்விட்டு எண்ணிடலாம்னு வச்சிக்கங்களேன். இதெல்லாம் எதுக்குச் சொல்றேன்னா பப்புவை பொறுத்த வரை அங்கிள்கிட்டே நாங்க பேசி பார்த்ததில்லை. ஆண்ட்டிதான் நல்ல பழக்கம், எனக்கும் பப்புவுக்கும்.

சனிக்கிழமை சாயங்காலம் அங்கிள் வீட்டுக்கு வந்திருந்தார். கொஞ்ச நேரத்துலே மழை, இடி. எல்லோரும் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.


”அவங்கவங்க வீட்டுலேதான் அவங்கவங்க இருக்கனும்.. சொல்லு...எல்லோரும் அவங்கவங்க வீட்டுலேதான் இருக்கனும்!!”


பப்பு என்ன சொல்ல வர்றான்னு இந்நேரம் உங்களுக்கு புரிஞ்சிருக்குமே!!! அவ்வ்வ்வ்!
முகிலுக்கு ஒன்னும் புரியலை. அங்கிளுக்கு மழை சத்ததில தெளிவா கேக்கலை.

ஆனா, எனக்கு மட்டும் 'பக்'னு ஆகிடுச்சு. பெரிம்மா வேற பப்புவை டிஸ்ராக்ட் பண்ணி கூப்பிடறாங்க. விடாம இன்னொருவாட்டி அப்படியே ரிப்பீட்டு வேற!! எனக்கு அப்படியே நிலம் இரண்டா பிளந்து என்னை முழுங்கிடாதான்னு!! நானும் உள்ளே கூட்டிட்டுபோய் பாக்குறேன்..ம்ம் முடியல...அங்கிளும் முகிலும் பிசியா பேசிக்கிட்டு இருக்காங்க - ஐடி ஃபீல்ட்டுலே இருக்க பையனை நம்பி அவரோட பொண்ணைக் கொடுக்கலாமான்னு!!

“ரோட்லே போறவங்க கூடல்லாம் பேசக்கூடாது” - பப்பு!

அங்கிளுக்கு பப்பு சொல்றது தெளிவா கேட்டிருக்காதுன்னும், ”மூனு - அஞ்சு வயசுலேதான் பேசிக் கேரக்டர் பில்ட் ஆகும்”ன்னு அவர் சாதாரணமாத்தான் சொன்னார்ன்னும் நம்ப விரும்பறேன்!! :-)
....பிற்பகல் விளையும்!!

நீங்கல்லாம் பயந்த மாதிரி ஒன்னும் ஆகலை..அடியெல்லாம் இல்ல! தங்கள் அக்கறைக்கு நன்றி! :-) ஆனா,ஒரு புத்தகம் குழந்தைங்ககிட்டே எவ்வளவு பெரிய தாக்கத்தை உண்டு பண்ணும், நாம் சொல்ற ஒவ்வொன்னும், அவங்க மனசுக்குள்ளே போகற ஒவ்வொரு விஷயமும், என்ன மாதிரி விளைவுகளை ஏற்படுத்துதுன்னு எனக்குப் புரிய வைச்சது இது!!

பப்புவும் நானும் ஒரு புத்தகம் படிச்சிக்கிட்டிருந்தோம். விதவிதமான ஓடுகள் பத்தி. எப்படி சில விலங்குகளுக்கு வீடு அதனோட மேலேயே அமைஞ்சு இருக்குன்னு. நமக்கு வீடு எவ்வளவு பாதுகாப்பா இருக்கோ அது மாதிரி சில விலங்குகளுக்கு இயற்கையே எபப்டி பாதுகாப்பு கொடுக்குதுன்னு!அந்த புத்தகத்தை படிச்சுட்டு,அந்த வாரயிறுதியிலே கிண்டி பூங்காவுக்கும், பெசண்ட் நகர் பீச்சுக்கும் போயிருந்தோம். புத்தகத்துலே இருந்ததை நேராவும் பார்த்தோம்! கடற்கரையிலே கொஞ்சம் கிளிஞ்சல்கள் (கிளிஞ்சலுக்குள்ளே எப்படி ஒரு அனிமல் இருக்கும்னு இன்னும் அவளுக்கு ஒரே ஆச்சர்யம்!!), நத்தை, ஆமை, நண்டு இப்படி...கிண்டி பார்க்கில் ஆமையை 30 நிமிஷம் பார்த்த ஒரே குடும்பம் நாங்களாதான் இருப்போம்!

ஒருநாள், பப்பு, கிளிஞ்சலை முதுகிலே ஒட்டிக்கிட்டு படுக்கையிலே நகர்ந்து நகர்ந்து வந்தப்போ எனக்கு ஒன்னும் புரியலை. நான் டக்னு கிளிஞ்சலை எடுத்துட்டேன். ரொம்ப கோவம் வந்து, 'நான் ஆமைடி, ஷெல் வச்சிருக்கேன் பாரு'-ன்னு கத்தின பப்புவை சமாதானப்படுத்தி, ஃபோட்டோ எடுத்தேன்! அதுதான் முதல் படம்!!

இன்னொரு நாள், பப்பு இப்படி நாற்காலியை கவிழ்த்து அதுக்குள்ளே போய்ட்டதும் எங்க ஆயா பயந்துப் போய் என்னை கூப்பிட்டாங்க. ”நான் நத்தையோட ஷெல்-ல இருக்கேன்'ன்னு பேலன்ஸ் பண்ணி நகர முயற்சி செய்துக்கிட்டிருந்தா, ஹால்லே! நான் குடுகுடுன்னு ஓடிப்போய் கேமிராவை கொண்டுவந்து 'கிளிக்'ட்டேன்!! அது இரண்டாம் படம்!

இந்த விளக்கம் கொஞ்சம் பெரிசா இருக்கலாம், ஆனா, திரும்ப எப்போவாவது படிச்சுப் பார்க்கும்போது எங்களுக்கு ஒரு நல்ல ரீகாலிங்கா இருக்கும்!! அரவிந்த் சரியா சொல்லியிருக்கார். வாழ்த்துகள் அரவிந்த்! :-)

Tuesday, August 25, 2009

ரெண்டு படம் : ஒரு கேள்விநோ..நோ..நாங்க எதுவும் பப்புவை சித்ரவதை பண்ணலை...ஆனா, பப்பு என்ன டிரை பண்றான்னு கண்டுபிடிச்சு சொல்லுவீங்களா??

க்ளூ : ரெண்டு ஃபோட்டோவுமே conceptually related.

Monday, August 24, 2009

வேண்டுகோள் - சிங்கைநாதனுக்காக!

சிங்கை நாதன் - Collection Updates

சிங்கை நாதனுக்கு முதல் அறுவை சிகிச்சை ( VAD Fixing Surgery)விவரங்கள்

சிங்கை நாதன் அவர்களுக்கு தற்காலிக ஏற்பாடாக Ventricular Assist Device (VAD) எனப்படும் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை ஆகஸ்ட் 26 புதன் அன்று மேற்கொள்ளப்பட உள்ளது. VAD கருவி இதய மாற்று அறுவை சிகிச்சை வரை தற்காலிக தீர்வாக செய்யப்படுகிறது.

அன்று நம் அனைவரையும் கூட்டுப் பிரார்தனை செய்யுமாறு செந்தில் நாதன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த அறுவை சிகிச்சை முடிந்து அடுத்து மாற்று இதயம் கிடைத்ததும் அடுத்த அறுவை சிகிச்சை என இரண்டு பெரிய சிகிச்சைகளை கடக்க வேண்டியுள்ளது. எனவே அனைவரும் அவரது உடல் நலனுக்காக சிறப்பாக பிரார்தனை செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
- ஜோசஃப் பால்ராஜ் பதிவிலிருந்து!


செந்தில் நாதன் அண்ணனுக்கு உதவிகளையும், பிரார்த்தனைகளையும் செய்யும் அனைவருக்கும் நன்றிகள்!

Sunday, August 23, 2009

And, Now...

கையில்லாத ஒரு சிறிய கவுன் ஒன்று, என்னிடம் இருந்தது. பள்ளிவிட்டு வந்ததும் அதை அணிந்து கொண்டு, பலகணியில் நின்று தெருவை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்பேன்.

வெகுசுவாரசியமாக இருந்தது, வாழ்க்கை!

எப்படியோ தொலைந்துபோனது அந்த கவுன் ஒருநாளில்..அதனுடன் எனது குழந்தைத்தனமும்!

Saturday, August 22, 2009

ஐ லவ் யூ சென்னை!!

அது ஒரு மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனம். ஒரு சயிண்டிஸ்ட்-இன்-சார்ஜ் அலுவலகம்.

"இந்த நகரம் உனக்கு பரிச்சயமானதா?"

"ஓ..எங்கள் ஊரிலிருந்து இங்கேதான் நாங்கள் வருவோம்..பண்டிகைக்கு உடைகள் எடுக்க”

மெலிதாக புன்னகைத்துக்கொண்டார்.

“சரி, சிறிது நேரம் வெளியே காத்திருங்கள், கூப்பிடுகிறோம்!”

ச்சே..சின்னப்புள்ளத்தனமா சொல்லிட்டேனோ..ஆனா உண்மையதானே சொன்னேன்!!

CSIO. Central Scietific instrumenst Organidation-இல் தலைமை சயிண்டிஸ்ட் அறையில்தான் மேற்கூறிய உரையாடல் நடைபெற்றது, linked list programming, shortest path algorithm, heap sort, bubble sort, neural netwoking, expert systems கேள்விகளுக்குப்பிறகு!

CSIR MADARS COMPLEX, தரமணி. அடையார் CLRI, CEERI, CECRI, NEERI, CSIO, மெட்டாலர்ஜிக்கல் ஆராய்ச்சிக் கூடங்கள். இன்றைய அசெண்டாஸ் கட்டிடத்திற்கு எதிரில் இருக்கும் கேம்பஸ். ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் இந்த கேம்பஸ்தான் அங்கே பெரிய கட்டிடம். முன் இந்த கேம்பஸ்தான் அடையாளம்..

ரானே மெட்ராஸில் வேலை செய்த எனது பள்ளி நண்பனுக்கு csioவில் வேலை செய்துக்கொண்டிஒருந்த நண்பர் பரிச்சயம். அவர் மூலமாக எங்களது (எனதும் லதாவினதும்) ரெசியுமேவை அனுப்பி நேர்முகக்காணலுக்கு வந்திருந்தோம்.இப்போதைக்கு, 45 நாட்களுக்குக் மட்டும் கிடைத்தால் போதும்...இதைவைத்தே அடுத்த ஆறு மாதங்களுக்கு ஏதேனும் வாய்ப்புக் கிடைக்கிறதாவென பாக்கலாம் என்று பேசிக்கொண்டோம்.

MCA ஃபைனல் இயர். ஐந்தாம் செமஸ்டர். ஒன்றரை மாதங்களுக்கு ப்ராஜக்ட் வொர்க். கண்டிப்பாக ஏதேனும் நிறுவனத்தில் சேர்ந்து ரியல் டைம் ப்ராக்ஜட் செய்திருக்க வேண்டும். இல்லையெனில் பல்கலை. கைட் நிராகரித்துவிடுவார்கள். கிடைத்த அவகாசமோ கொஞ்சம்.எங்கள் செட் மாணவிகள் முக்கால்வாசி பேர் பெங்களூருக்கும் மீதிபேர் ஹைதராபாத்திற்கும் மூட்டைக் கட்டிக்கொண்டிருக்க நானும் என் தோழியும் வந்திறங்கிய இடமோ மெட்ராஸ். எல்லோருமே ஜாவா, ஜாவா ஸ்விங், ஆப்லெட்ஸ், கோர்பா, ஏபிஐ என்று பின்னி பெடலெடுத்துக் கொண்டிருந்தார்கள். மேலும், என் மூளையோ வெறும் 32KBதான் - SSI-இல் ஜாவா படிக்க 12K கொடுக்க வீட்டிலும் மறுத்து விட்டார்கள்!! ஆசை, காதல் எல்லாமே 'சி'! அதிலும் எம்பெடட் சிஸ்டம்ஸில்தான் வேலை செய்ய வேண்டுமென்றுக் கொள்கை வேறு!!

”செந்தாமரை மேடத்தை பர்க்கணும்” - உதவியாளர் அழைத்துச் சென்றார்.
மேல்தளம். R&D செக்‌ஷன்.
வழக்கம்போல கேள்விகள்....எவ்ளோ பர்செண்டெஜ், உங்கள் விருப்பங்கள், இத்யாதிகள்.

செந்தாமரை மேடம். சையிண்டிஸ்ட் சி. எம்படெட் நெட்வொர்க்கிங்க் ப்ராகஜட். கணினி மொழி சி. (ஹே!!!). அடுத்து அவர் சொன்னதுதான் ஹைலைட் - ”உங்களுக்கு 45 நாட்களுக்கு மட்டுமே ப்ராஜக்ட் தர முடியாது...இது ஆறு மாதப்ராஜக்ட். தொடர்ந்தும் நீங்கள் வருவதாக வாக்குக் கொடுத்தால் தொடரலாம்”. பழம் நழுவி ப்ராக்ஜடில் விழுந்தது. இனி அடுத்த மாதத்திலிருந்து எங்கள் முகவரி மெட்ராஸ் என்ற நினைப்பே உற்சாகத்தைக் கொடுத்தது!!

எல்லோரும் காசுக் கொடுத்து ப்ராஜச்ட் செய்துக்கொண்டிருக்க, ப்ராஜக்ட் செய்தால் காசும் கொடுக்கும் இடம் அது!! ஐடியா இதுதான் - புதிய தொழில்நுட்பங்களை மாணவர்கள் விரல்நுனியில் வைத்திருப்பார்கள், அவர்களைக்கொண்டு தேவையான வேலைகளை வாங்கிக்கொள்வார்கள் - சயிண்டிஸ்ட்கள் கான்செப்ட் லெவலில் கில்லியாக இருப்பார்கள் ! இருசாராருக்கும் பயன்- மாணவர்களுக்கு ப்ராஜக்ட் - இவர்களுக்கு வேலை! அண்ணா பல்கலை, பிட்ஸ், REC - மாணவர்களுக்கு கல்லூரி பெயரே கடவுச்சீட்டு. ஆனாலும் எங்களைப்போல சாதா பல்கலை.வாசிகளுக்கும் புகலிடம் அளித்தது...இந்தக் கேம்பஸ்!! இப்படி ஆரம்பித்ததுதான் - இங்கேயே வேலை,வீடு என்று சென்னை எனக்குத் தஞ்சமாகியது!!

புனே, பெங்களூர், ஹைதராபாத் வாய்ப்புகளையெல்லாம் நிராகரிக்குமளவிற்கு சென்னை என்னை ஈர்த்தது!! ப்ராஜச்ட் கொடுத்தது-படுத்துறங்கக் கூரை கொடுத்தது-வேலையும் கொடுத்தது-என் கனவுகளுக்கு உயிரும் கொடுத்தது!!

எனக்கு மட்டுமில்லை, சென்னையில் வசிக்கும் எல்லோருக்குமே இப்படிச் சொல்லிக்கொள்ள ஒரு சிறப்புமிக்க ஃப்ளாஷ்பேக் இருக்கும்தானே! :-)

ஐ லவ் யூ சென்னை!!

Thursday, August 20, 2009

Goodbye Jayshree!

”மனைவி கொலை, கணவன் கைது”

”இளம்பெண் கொலை, கணவன் மேல் சந்தேகம்” - இவையெல்லாம் எனக்கு மற்றுமொரு செய்தியாகவே இருந்தது, இரண்டுத் தெருக்களுக்கு அப்பால் நடக்கும் வரை!

ஜெயஸ்ரீ. சமீபத்தில், மிகச் சமீபத்தில், ”மடிப்பாக்கத்தில் இளம்பெண் கொலை”யென்று கடந்த திங்கட்கிழமை முதன்மைச் செய்தியானார். “தனிக்குடித்தனம் போக வற்புறுத்தினார்” என்பதே காரணமென்று கணவரின் வாக்குமூலம் சொல்கிறது. இந்நிகழ்வு, எனக்குச் சினத்தையும், ஆற்றாமையையும், குழப்பங்களையும் ஒருசேர உண்டாக்குகிறது!!

ஜெயஸ்ரீயின் கொலை திட்டமிட்டது அல்ல. அந்த நிமிடத்தின் கோபம் அல்லது வெறி..ஈகோவின் வெளிப்பாடாக சொல்லப்பட்டாலும், காதலித்து மணந்தவளை கொலை செய்யுமளவிற்குக் கொண்டுச் சென்றது எது? பொறுமையும், சகிப்புத்தன்மையும் இல்லாமல் போய் விட்டதா?

ஒரு பெண் ஏன் தனிக்குடித்தனம் செல்ல விரும்புகிறாளென்பதற்கு ஆயிரம் காரணங்களுண்டு. ஒரு மருமகளாக நீங்கள் இல்லாத வரையில், அதைப் புரி்ந்துக்கொள்ள இயலுமா என்பது சந்தேகமே! ஆனால், பிரச்சினைகளில்லாத குடும்பங்கள் இருக்கிறதா என்ன? அதற்கெல்லாம் இதுதான் தீர்வா? தனிக்குடித்தனம் போக ஒரு பெண் வற்புறுத்தினால் இதுதான் முடிவா? என்னவொரு குடும்ப அமைப்பு இது?

பெற்றோரை/முதியவர்களை பராமரிப்பது என்றால் ஏன் நாம் பையனின் பெற்றோர் என்றே அனுமானித்துக்கொள்கிறோம்?! ஒரு பையன்/ஆண் பெற்றோரோடு கடைசிவரை வாழ அனுமதிக்கிற நமது குடும்ப அமைப்பு, பெண்ணின் பெற்றோர் பெண்ணோடு வாழ்ந்தால் ஏன் நக்கலாய் சிரிக்கிறது? பையனின் பெற்றோரை, மருமகள் கவனித்துக் கொள்ள வேண்டுமென்று எதிர்பார்க்கிற சமூகம், பெண்ணின் பெற்றோரை(பெண்களை மட்டுமே பெற்றவர்களின் நிலைக்) குறித்து சிந்திக்க மறுப்பது ஏன்?

அப்படியே, பெண்கள், தங்கள் பெற்றோரை பராமரிக்க வேண்டுமானால் (அதுவும் பெண்ணின் சம்பளத்திலேயேதான்) திருமணத்திற்கு முன் ஒப்புதல் பெற வேண்டியிருப்பது ஏன்? பையனின் கடமை என்பது தன் பெற்றோரைப் பராமரி்ப்பதாக இருக்க, பெண்ணின் கடமை என்பது புகுந்த வீட்டினரைப் பராமரிப்பதாக மட்டுமே மாறிப்போவதேன்?! பெண்ணின் பெற்றோர், பெண்ணோடு இருந்தாலும் அது குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதற்கும் இதர இத்யாதிக் கடமைகளுக்காகவும்தான்! (இதற்கு அயல்நாடுகளில் செட்டிலாகி இருக்கும் என் தோழிகள்தான் உதாரணம். பிள்ளைப்பேறின்போது அல்லது ஏதேனும் உதவி தேவைப்படும் பட்சத்தில் உடனே விமானமேறுபவர்கள் பெண்ணின் பெற்றோர்களாகத்தான் இருக்கிறார்கள்!! அல்லது, உதவி தேவைப்படும் பட்சத்தில் உடனே அணுகக்கூடியவர்களாக பெண்ணின் பெற்றோர்களே இருக்கிறார்கள்!)

இந்த அமைப்பு பையன்களுக்கு எவ்வித இழப்புகளையும் கொடுப்பது இல்லை...வீட்டைவிட்டு இன்னொரு வீட்டிற்குச் சென்று வாழ வேண்டியதில்லை..அப்படியே இருந்தாலும் அது ”சொல்ல மறந்த கதை”யாகி விடுகிறது!! புது மனிதர்களுடன் ஒரே வீட்டில் வாழ வேண்டிய கட்டாயமில்லை..அவர்களை நேசித்துதான் ஆக வேண்டுமென்ற அவசியமேற்படுவதில்லை...அவர்களுக்குக் கட்டுப்பட வேண்டியதில்லை!சொந்தப் பெற்றோரைப் பார்க்க வேண்டுமெனில் யாரிடமும் அனுமதி பெற வேண்டியதில்லை!!

இப்படி ஒரு அமைப்பை யார் உருவாக்கினார்கள்?
இந்த அமைப்பு இன்னமும் ஏன் மாறாமலிருக்கிறது அல்லது மாற்றாமலிருக்கிறோம்?

இந்த அமைப்பு நன்மைப் பயக்கிறது எனில் ஜெயஸ்ரீகளின் உயிரை ஏன் காவு வாங்குகிறது?

Friday, August 14, 2009

தொடர்ந்து உதவிக்கரம் நீட்டிக்கொண்டிருக்கும்

உங்கள் அனைவருக்கும் நன்றிகள் பல!!

எல்லாமே ஒரு கனவு போலத்தான் இருக்கிறது....
கேவிஆர் மின்மடல் அனுப்பியதும், ஆளுக்கொரு இடுகையிடுவோமென்று சாட்டில் பேசியதும்...என்ன செய்வது என்ற பதைபதைப்போடு இருந்த என் கண்ணில் பட்டார்கள் ஆன்லைனில் இருந்த கானாவும் ஆயில்ஸூம்!!

கானாவின் மூலமாக டொன்லீக்கும் மற்ற சிங்கைப்பதிவர்களுக்கும், ஆயில்யன் மூலமாக நிஜமா நல்லவருக்கும், நிஜமா நல்லவரின் மூலமாக கோவி.கண்ணன் மற்றும் அனைத்து சிங்கைப்பதிவர் குழுமத்திற்கும் தகவல்கள் பரிமாறப்பட்டு இதோ ஜோசஃப் அவர்கள், இடுகையிட்டிருக்கிறார் - புதுத்தகவல்களுடன். இந்த சந்திப்புக்குக் காரணமான அனைவருக்கும் நன்றிகள்!!

சிங்கை நாதன் - Collection Updates பற்றி கேவிஆர் இடுகையை புதுப்பித்திருக்கிறார் மேலதிக தகவல்களுடன்!

உதவிசெய்தவர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்...தங்களனைவரின் அன்பும், அக்கறையும் நெகிழ்ச்சியூட்டுவதாக இருக்கிறது!

தமிழ்மணத்தில் சுட்டி தந்து சிங்கை நாதனுக்கு உதவியிருக்கும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி!

இது தொடர்பாக, கேவிஆர்யின் பின்னூட்டத்தினை இங்கு மறு பிரசுரம் செய்துக்கொள்கிறேன்!

ராஜா | KVR said...

Update: ஒவ்வொருவரும் தனித்தனியாக பணம் அனுப்புவதில் சிக்கல்கள் இருப்பதால் குறிப்பிட்ட நாடுகளில் ஒரு சில நண்பர்கள் மொத்தமாக பணத்தை வசூலித்து அனுப்புகிறோம். அவர்களது பெயர் மற்றும் தொடர்பு எண்ணையும் கீழே கொடுத்துள்ளேன். நண்பர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். ஒரு சில நண்பர்கள் paypal account பற்றி கேட்டிருக்கிறீர்கள். அவர்களுக்கும் விரைவில் அந்த விபரங்களைத் தெரிவிக்கிறேன்.

சிங்கப்பூர்

கோவி.கண்ணண் -‍ +65 98767586
குழலி - +65 81165721

அமெரிக்கா

இளா - +1 609.977.7767

இந்தியா

நர்சிம் - +91 9841888663 (நண்பா, உங்களது தொடர்பு எண்ணை உங்கள் அனுமதி இல்லாமலே கொடுத்திருக்கிறேன். தவறாக நினைக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன்)

அமீரகம்

ஆசிப் மீரான் - +971 506550245

சவுதி அரேபியா

ராஜா - +966 508296293

Wednesday, August 12, 2009

சிங்கை நாதனுக்கு உதவுங்கள்!!

சிங்கை நாதன் aka செந்தில் நாதன். பின்னூட்டங்கள் மற்றும் சிங்கை பதிவர் சந்திப்புகள் மூலமாக நம் அனைவருக்கும் அறிமுகமானவர். பள்ளியில் எனது சீனியர். ஏற்கெனவே பேஸ்மேக்கர் பொருத்தி அதற்குண்டான மருத்துவங்களைக் கைக்கொண்டாலும், தற்போது சிங்கப்பூரில் மிகவும் கவலைக்கிடமாக மருத்துவமனையில் இருக்கிறார். ஐந்து வயதில் ஒரு மகளுண்டு. அவரது மருத்துவ அறுவை சிகிச்சைக்கு 100,000 சிங்கப்பூர் டாலர்கள் வரையில் தேவைப்படுவதாக பதிவர் கேவிஆர் (சிங்கை நாதனின் கல்லூரித்தோழர்) மூலமாக மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றேன்!

தயவுசெய்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்!பதிவர்கள் தங்களால் இயன்ற உதவியை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்!!

வங்கி விபரங்கள் :

ICICI Account Details

Account Number: 612801076559
Name: M.KARUNANITHI
Branch: Tanjore

Singapore Account Details

Account Number: 130-42549-6
Name: Muthaiyan Karunanithi
Bank: DBS - POSB Savingsகேவிஆரின் செல்பேசி எண்: +966 508296293 (ரியாத்)
கருணாநிதி செல்பேசி எண்: +65 93856261 (சிங்கை)

Tuesday, August 11, 2009

பன்றிக்காய்ச்சல், வேளச்சேரி,பள்ளிகள் மற்றும் பெற்றோர்...

அமெரிக்கா, மெக்ஸிகோ என்றுக் கேள்விப்பட்டு கடைசியில் இந்த பன்றிக்காய்ச்சல் வந்துவிட்டது எங்கள் வீட்டுக்கருகில். நான்காவது Hop-இல் தெரிந்த ஒருவருக்கு பாஸிடிவ். நேற்றுக்காலை வரை எந்தக்கேள்வியுமில்லாமல்தான் அவரவர் பணியிடத்திற்குச் சென்றுக்கொண்டிருந்தோம். பப்புவை பள்ளிக்கு அனுப்புவதிலும் எந்தக் கேள்வியுமில்லாமல். அந்தச் சிறுவனின் மரணம், உடனே பரவிய முன்னெச்சரிக்கை பற்றிய மின்மடல்கள், மாஸ்க்குகள் பற்றிய விவரங்கள், சம்பாஷணைகள் என்று நேற்று மதியத்திற்குள் நீக்கமற நிறைந்திருந்தது பன்றிக்காய்ச்சல் கவலைகள்.

மதியத்திற்குள் அலுவலக நண்பரின் குழந்தைகள் படிக்கும் பள்ளி விடுமுறையை அறிவித்திருந்தது. அதைக்கேட்டு முடிப்பதற்குள், வேளச்சேரியில் பத்து பள்ளிகளில் விடுமுறை என்றச் செய்தியும் சேர்ந்திருந்தது. பப்புவின் பள்ளிக்குத் தொடர்புக் கொண்டபோது, அவர்கள், இதைக்குறித்து அரசு அலுவலர்களைத் தொடர்புக்கொண்டு பேசிக்கொண்டிருப்பதாகவும், விடுமுறை அறிவிக்க அரசு ஆணை எதுவும் அந்தப்பகுதிக்கு இல்லாததாகவும், குழந்தைகளை அழைத்துச் செல்ல விரும்பும் பெற்றோர் அழைத்துச் செல்லலாமென்றும் கூறினர்.

பப்புவுக்கு வேறு நேற்றிலிருந்து மூக்கு ஒழுக ஆரம்பித்திருந்தது. அந்த மின்மடல்களைப் படித்து படித்து எனக்கும் அதிலிருந்த அறிகுறிகள் இருப்பதாகவே ஒரு மாயை. சொல்லவா வேண்டும்...கவலைப் படுவதுதான் கை வந்த கலையாயிற்றே!! மூன்று மணிக்கு பப்பு வீட்டிற்கு வந்துவிட்டாள். டைரியில் நோட் : அரசு ஆணை வரும் வரை பள்ளி இயங்கும் என்றும் குழந்தைகளுக்கு சளி இருமல் காய்ச்சல் இருந்தால் அனுப்ப வேண்டாமென்றும் இருந்தது. இந்தவாரம் முழுவதும் பள்ளிக்கு அனுப்ப வேண்டாமென்று இப்போது முடிவு செய்துள்ளோம்.

அனுப்பிவிட்டு பயந்துக்கொண்டிருப்பதை விட இது மேல் என்றுத் தோன்றுகிறது. ஆனால் எவ்வளவு நாளைக்கு?!! I am paranoid. அதீத எச்சரிக்கையுணர்வும், அச்சமும், கவலையுங்கொள்வதுமே திடீரென்று நமது வாழ்க்கையாகிவிட்டதோவென்றுத் தோன்றுகிறது!
முன்பு ஆந்தராக்ஸ் பயம் பரவியபோது இப்படி இல்லவே இல்லை, நான்!! எனது அச்சம், கவலை, நம்பிக்கை எல்லாவற்றுக்கும் ஒரே காரணம் - பப்பு!! (கடவுளுக்கு நன்றி!)

சஞ்சயின் அம்மாவை நினைத்துப்பார்த்தேன். இதயம் வலித்தது. தாங்கிக்கொள்ளக்கூடிய சக்தியை இறைவன் அவருக்குத் தரவேண்டுமாய் வேண்டிக்கொள்கிறேன். அந்தக்குழந்தையின் வலி, அதைக்கண்டு பெற்றோரின் வலி....எல்லாம் ஒரு வைரஸினால்! அந்தச்சிறுவனின் தந்தை சிங்கப்பூரிலிருந்து வந்திருந்தார், அச்சிறுவனுக்கு ஏற்கெனவே ஆஸ்த்மா என்று எத்தனையோக் காரணங்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்...ஆனால், அந்ததாயின் இழப்பை எந்தக் காரணம் ஈடு செய்யும்?! :-(

Sunday, August 09, 2009

க்ரபக்..க்ரபக்..

முன்பு விலங்குகளின் கால்தடங்களை பதிக்க முயற்சி செய்து, தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத பப்புவும் ஆச்சியும் செய்த அடுத்த கட்ட நடவடிக்கை!!
பேக்கிங் மெட்டிரியலாக வந்த ஃபோம். தவளையின் கால்களை வரைந்து வெட்டிக் கொடுத்தேன்.( ஃபோமை வெட்ட வரவில்லை பப்புவிற்கு. )
முன்னங்கால்களும் பின்னங்கால்களையும் வெவ்வேறு அளவுகளில் இரண்டு செட். வண்ணத்தைக் கொண்டு சார்ட் பேப்பரில் பதித்து எடுத்தாள்.பெரியத் தவளையின் பெரியக்கால்கள்.
பின்னர், தவளையைப் போல நடக்க..இல்லையில்லை.... தாவ முயற்சி செய்து அறையைச் சுற்றிச் சுற்றி வந்தாள். பார்க்க சிரிப்பாக இருந்தது!!:-)) பப்பு இரண்டரை வயதாயிருக்கையில் சரளா என்பவர் அவளைக் கவனித்துக்கொண்டார். அவர், பப்புவை சாப்பிட வைக்க இந்த யுக்தியை பயன்படுத்துவாராம், மதிய வேளைகளில்! பப்பு அவரை நினைவுக் கூர்ந்தாள்.

சிலசமயங்களில் பப்பு, ராணி ஆயா, சரளா ஆயா அல்லது ஷோபனா ஆன்ட்டியை நினைவுக்க்கூர்ந்து, ‘எப்போ வருவாங்க' என்று கேட்பாள். 'அவங்க ஊருக்குப் போய்ட்டாங்க' என்றாலும் 'ஊர்லேர்ந்து எப்போ வருவாங்க' என்றோ ‘வரச்சொல்லு' என்றோ துளைத்து எடுக்கும் பப்புவை சமாளிக்க, ‘நீதான் வளர்ந்துட்டே இல்ல...உன்னை மாதிரி வேற ஒரு குட்டிப்பாப்பாவை பாத்துக்க போயிய்ட்டாங்க' என்பேன். சமாதானமாகாமல், 'என்னா பண்ணிட்டேனானாம் நானு?' என்பாள். :-( .'நீ ஒன்னும் பண்ணலை பப்பு, அந்த பாப்பா ரொம்ப குட்டியா இருக்காம், நீ ஸ்கூல் போறே இல்ல..அந்தப்பாப்பா இன்னும் ஸ்கூல் போகலையாம், அதனால, குட்டிப்பாப்பாவை சாப்பிட வைக்க போயிருக்காங்க' என்று சொல்லிவைப்பேன்! பப்பு சாப்பிட படுத்தும்போது, அவர்கள், 'நீ சாப்பிடலைன்னா நான் ஊருக்குப் போய்டுவேன்' என்று சொன்னதன் விளைவுதான் இது!!

தலைப்பு : தவளை அப்படித்தான் கத்துமாம், பப்புவின் அகராதியில்!! :-)

Saturday, August 08, 2009

‘அந்தக்காலத்துலே நாங்க'

எட்டாவது படிக்கும் போது - ஒருநாள் :

ஜரினா : ஆயா, ஆச்சி இருககாளா?
ஆயா : ஹிந்தி ட்யூஷன் போயிருக்கு, வந்துடும். உட்காரும்மா. உன் பேரு?
ஜரினா : ஜரினாங்க ஆயா!
ஆயா : ஓ...வீடு எங்கே?
ஜரினா : இங்கேதாங்க ஆயா, பக்கத்துலே!!

ஒரு 5 நிமிஷம் கழித்து...

ஆயா: என்ன விஷயம்மா?
ஜரினா : நான் நேத்து ஸ்கூலுக்கு போகலை...மேத்ஸ் நோட்டு வாங்கலாம்ன்னு வந்தேங்க ஆயா!
ஆயா : நல்லா படிப்பியாம்மா....ஏன் நேத்து ஸ்கூலுக்கு போகலை? என்ன ரேங்க்குள்ளே வருவே??

அதுதான் ஜரினா கடைசியா எங்க வீட்டுக்கு வந்தது! ஜரினா மூலமா இந்தஅதிர்ச்சி அலை என் மத்த ப்ரெண்ட்ஸ்கிட்டேயும் பரவி இருந்துச்சு!!


பதினொன்றாம் வகுப்பு - ஏதோ ஓர் சனிக்கிழமை மாலை:

நான் : பெரிம்மா, எனக்கு சன்னி வேணும், பெரிம்மா!
பெரிம்மா : சரி, பாக்கலாம்!
நான் : எப்போ வாங்கலாம்? மேரிக்கூட வாங்கபோறாளாம் பெரிம்மா!
பெரிம்மா : ......
(சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம்கொடுக்காத கதைதான்...நாமளே ஒரு பிட்டைப் போட்டு தேத்தி வச்சிருப்போம்...அதைக்கெடுக்கறதுக்குன்னே கரெக்டா எண்ட்ரி கொடுப்பாங்க...)
ஆயா : இப்போ எதுக்கு உனக்கு சன்னி? எப்படியும் அடுத்த வருஷம் ஹாஸ்டலுக்குத்தானே போகப்போறே!!
நான் : அது அப்போ பார்த்துக்கலாம்...எனக்கு சன்னிதான் வேணும்.
ஆயா : அந்தக்காலத்துலே, உங்க பெரிம்மால்லாம் ரெண்டு கிலோமிட்டர் ந்டந்தே போய் படிச்சாங்க...அதுல வேற மத்தியானம் சாப்பாட்டுக்கு வந்துட்டு போவாங்க!
நான் : ஆயா, அது அந்தக்காலம் ஆயா...சைக்கிள் வாங்கிக்கொடுக்காதது உங்க தப்பு!
ஆயா: அதுதான் உனக்கு வாங்ககிக்கொடுத்திருக்கு இல்லே...அதுவே போதும்!!

இதுக்குமேலே வேறே எதுவும் பேசமுடியுமா!அவ்வ்வ்வ்!! அப்புறம், ‘அந்தக்காலத்துலே நாங்க'ன்னு ஆரம்பிச்சுடுவாங்க!! (மீறிப் பேசினா, ‘நீ ஸ்டேட்ஃப்ர்ஸ்ட் எடு, அப்போ நானே வாங்கித்தரேன்'னு ஆரம்பிச்சுடுவாங்க. அதுக்கு, 'வாங்கித்தரமாட்டே'ன்னு நேராவே சொல்றதுன்னு நினைச்சுப்பேன்..ஆனாசொல்ல மாட்டேன்!! ;-))


காலேஜ் ஃப்ர்ஸ்ட் இயர் - செகண்ட் செமஸ்டர்

பெரிம்மா, எனக்கு டவ் சோப்தான் வேணும்!! அதுதான் புதுசா வந்திருக்கு! இந்ததடவை ஹாஸ்டலுக்கு போகும்போது அதுதான் வாங்கித்தரணும்!

(பில் பார்த்து எங்க ஆயாவுக்கு மயக்கம் வராத குறை..ஏன்னா,அப்போ அதனோட விலை : ரூ49.50 காசுகள்!! நான் வாங்கினது மூன்று சோப்புக்கட்டிகள்!!)

ஆயா : இவ்ளோ விலையா? சோப்புக்கா? இதெல்லாம் நீ சம்பாரிக்கும்போது வாங்கிக்கோ! இவ்ளோ செலவு பண்ணி உனக்கு சோப்பு வேணுமா? காசு என்ன மரத்துலே காய்க்குதுன்னு நினைப்பா?!!

டவ் திருப்பிக்கொடுத்துவிட்டு, எப்போதும்போல் எவிட்டா!!(ஆனால், வந்தக்கோவத்தில் ஆயாவை பழிவாங்குவதாக எண்ணி அவர்கள் குளியலுக்குஉபயோகிக்கும் பாசிபருப்பு மாவை
எல்லாம் எடுத்துக்கொண்டு ஹாஸ்டல்சென்றுவிட்டேன். பின்னர் அதன் மகிமையைப் பார்த்து, பப்பு பிறக்கும் வரைபாசிபருப்பு மாவுதான்..அது வேறு கதை..ஹிஹி!!)

காலேஜ் ஃபைனல் இயர் -ப்ராக்ஜட்க்காக வீட்டிலிருந்தபோது

நான் : ஆயா..நாள்பூரா நீங்கதானே பாக்கறீங்க....எப்பப்பார்த்தாலும் நியுஸ்..நியூஸ்...நியூஸ்!!!அதான் பேப்பர் படிக்கறீங்க இல்ல டெய்லி..அப்புறம் என்ன சன் நியூஸ்..அதை விட்டா ஜெயா நியூஸ்...ஏன் இப்படி கொல்றீங்க...நான் டீவி பாக்கணும் இப்போ!!

ஆயா : அப்போதான் ரெண்டு சைட் நியூஸ் தெரிஞ்சுக்க முடியும். இதைப்பாரு.. இல்லேன்னா போய் படி.....எப்போபார்த்தாலும் அந்த கூத்தாடிங்க ஆடறதைப் (ஓ மை..சோனி..ஜீ..சேனல் வீ!!) பாத்துகிட்டு இருப்பே...!!

நான் : இப்போதானே நானே எக்சாம் முடிச்சு வந்திருக்கேன்..என்னைக் கொஞ்ச நேரம் டீவி பாக்க விடறீங்களா?!

ஆயா : ஐஏஎஸ் க்கு படி ஆச்சி...நம்ம குடும்பத்திலேருந்து யாராவது ஐஏஎஸ் ஆகனும்னு எனக்கு ரொம்ப ஆசை..

நான் : ஏன்...நீங்க படிக்கறதுதானே..அந்தக்காலத்துலே காம்படிஷன் கம்மியாதானே இருந்திருக்கும்...அப்போ விட்டுட்டு, இப்போ வந்து என்கிட்டே சொல்றீங்க....

ஆயா: இப்படி விதண்டாவாதம் பண்றதுக்குதான் நீ லாயக்கு...உருப்படியா எதுவும் செஞ்சுடாதே! இந்தா புடி...இதையே பார்த்துக்கிட்டிரு...இதுதான் உனக்கு வந்து சோறு போடப்போகுது!! நீ சம்பாரிச்சா நீ நல்லாருக்கபோறே..எனக்காக் கொடுக்கப் போறே!!

ஆயா, நீங்க அப்போ பண்ணது, பேசினதெல்லாம் அராஜகமா தெரிஞ்சாலும் இப்போதான் அதன் உள்ளர்த்தம், நோக்கமெல்லாம் புரியுது!! நான் நிலாவைத் தொடனும்னு நீங்க ஆசைப்பட்டதாலேதான் என்னாலே அட்லீஸ்ட் நட்சத்திரத்தையாவதுத் தொட முடிஞ்சுருக்கு!!
தாங்ஸ் ஆயா, என்னோட வாழ்க்கையை சுவாரசியமாக்கினதுக்கு!! ஹாப்பி கிராண்ட் பேரண்ட்ஸ் டே!!

இதெல்லாம் எதுக்கு இப்போன்னா, பப்பு ஸ்கூல்லே நேத்து கிராண்ட் பேரண்ட்ஸ்டே கொண்டாடினாங்க! அதான்!! நம்ம ஊர்லே அஃபிஷியலா அடுத்த மாசம் ஏழாம்தேதிதான் கிராண்ட் பேரண்ட்ஸ் டெ!!

Friday, August 07, 2009

உன் குத்தமா என் குத்தமா.....;-)

Get this widget | Track details | eSnips Social DNA'பெரிய கதை சொல்லு, பப்பு' என்றதற்கு - அவள் சொன்ன பெரிய்யயய கதை!!

தெளிவில்லாமல் இருந்தால் தெரியப்படுத்தவும்! :-)

Thursday, August 06, 2009

ஈ ஃபார்....

...ஈகை! (கோல்டா அக்கா கொடுத்த தலைப்புதான்!!)
ஈகை-ன்னா எனக்கு ஈகைத்திருநாள்-தான் நினைவுக்கு வரும்! எங்க ஊர்லே ரம்ஜான் ரொம்ப கோலாகலமா இருக்கும்! எல்லோரும் ரொம்ப சந்தோஷமா - புது ட்ரெஸ் போட்டு- தெருவே செண்ட் வாசனையோட - சிறுவர்களும் சிறுமிகளும் அங்கேயும் இங்கேயுமா பரபரப்பா நடந்துக்கிட்டு - ரோட்லே எதிர்படறவங்களை கட்டிபிடிச்சு வாழ்த்துகள் பரிமாறிக்கறது- தெரிஞ்சவங்க வீட்டுக்கு பிரியாணி கொடுக்கறதுன்னு! (ரம்ஜான் வருதுன்னா ரெண்டு நாளைக்கு எஙக வீட்டுலே சமையல் ரொம்ப சிம்பிளா இருக்கும். ஏன்னா, மேரே பாஸ் பிரியாணி ஹை!) நோன்பு திறக்கறதுக்கு, காலையிலேயே ஒருத்தர் வந்து எழுப்பிட்டு போவார். ஆனா அதுக்கும் முன்னாடியே எங்க மேல் வீட்டுலே, எதிர் வீட்டுலே, கீழ் வீட்டுலே எல்லாரும் எழுந்து சமைக்க ஆரம்பிச்சிருப்பாங்க! (அதுவும் ரம்ஜான் மார்ச் ஏப்ரல்லே வந்துச்சுன்னா, நம்ம வீட்டுலே இருக்கறவங்களும் எழுந்துடுவாங்க..நம்மளை எழுப்பறதுக்கு! அதுவும் எங்க ஆயாவுக்கு இருக்க முன்னெச்சரிக்கை இருக்கே...மணி அஞ்சுதான் ஆகியிருக்கும்..அஞ்சரையாச்சு, எழுந்திரு...எழுந்திரு...படி..படின்னு! நமக்கு அதெல்லாம் புதுசா என்ன!! அவங்க சொல்றதுலேர்ந்து அரைமணிநேரம் கம்மியா கால்குலேட் பண்ணிக்க வேண்டியதுதான்..தூக்கத்துலேயே!)

ஏதோ சொல்ல வந்துட்டு்...எங்கேயோ போறேன்...நான் நாலாவது படிக்கும்போதுதான் சுமி அக்கா எங்க எதிர் வீட்டுக்கு குடி வந்தாங்க. கொஞ்ச நாள்லே‘சுமி வீடு'-ன்னு ஆயிடுச்சு. ஏன்னா, அந்த அக்கா பேரு சுமையா. அப்போ ஒன்பதாவது படிச்சுக்கிட்டு இருந்தாங்க. காலையிலே எட்டேகாலுக்கு ஒரு வேன் வரும்.முஸ்லீம் ஸ்கூல் வேன். அது கரெக்டா வீட்டு முன்னாடி வந்து நிக்கும். பாதிதான் கதவு திறக்கும், குடுகுடுன்னு சுமி அக்கா ஏறி உக்காந்துப்பாங்க. எல்லோருமே கருப்பு புர்க்கா போட்டு இருப்பாங்க. சுமி அக்கா, அவங்க நானி தைச்ச சம்க்கி வொர்க் ட்ரெஸ் போட்டுருப்பாங்க, ஆனா மேலே அந்த கருப்பு புர்க்கா போட்டுப்பாங்க. சுமி அக்காவுக்கு அவங்க கேக்கும்போதெல்லாம் நாந்தான் Campco சாக்லேட் வாங்கித் தருவேன்!

சுமி அக்காவுக்கு நாலு தம்பிங்க. அஸ்ரார், அப்ரார், உசேன் அப்றம் ஜூபேர். அஸ்ரார் என்னோட செட். அப்ரார் என்னை விட ரெண்டு வயசு சின்னவன். ஜுபேர்-க்கு அப்போதான் ஒரு வயசு. உசேனுக்கு போலியோ-னாலே சரியா நடக்க முடியாது. அவங்க அப்பாவை எல்லோரும் குல்ஸார் பாய்-ன்னு சொல்வாங்க. அவர், ஒரு பஜாஜ் ஸ்கூட்டர் வச்சிருந்தார். காலையிலே எட்டேமுக்காலுக்கு, அதை ஒரு சைடா சாய்ச்சு வச்சு ஸ்டார்ட் செய்வார். ரொம்ப அமைதியான டைப். அன்பானவர். சுமி அக்காவோட அம்மா ரொம்ப ஒல்லியா இருப்பாங்க. எப்போதும் உட்கார்ந்தே இருப்பாங்க. அப்றம், அவங்களோட நானிம்மா - அங்கிளோட அம்மா.

சுமி அக்காதான் சமையல் செஞ்சு வைச்சுட்டு, டிபன் பாக்ஸ்லே எடுத்துட்டு போவாங்க. சில சமயம் ரசம் வைக்க, கீரைக்கூட்டு செய்யறதுக்கு ஆயாக்கிட்டே ரெசிப்பி கேப்பாங்க. அவ்ளோ சூப்பரா பிரியாணி செய்வாங்க..சாஃப்டா சப்பாத்தி செய்வாங்க..ஆனா இட்லி தோசை செய்ய ரொம்ப கஷ்டப்படுவாங்க. ‘வரவே மாட்டேங்குது ஆயா' கவலைவேற. (நம்ம வீட்டுலே அப்படியே நேரெதிர். தக்காளி சாதம் ரேஞ்சுலே செஞ்சு வச்சிட்டு, ‘பிரியாணி'ன்னு பில்டப்) உசேனுக்கு தோசைதான் பிடிக்கும். அவன் அதை 'சீலா'ன்னுதான் சொல்வான். அவன் ஸ்கூலுக்குக் கிளம்பற, எங்க ஆயா ரெண்டு தோசை சுட்டுக்கொடுப்பாங்க. எல்லோருக்கும் உசேன் மேல ஒரு தனிப்பாசம் இருந்துச்சு!

எங்க வீட்டுலே எது செஞ்சாலும், 'சுமிக்கு பிடிக்கும்' இல்லேன்னா 'ஜுபேருக்கு கொடுங்க' கொடுக்கறது - அவங்களும் சப்பாத்தி செஞ்சு 'குட்டிக்கு கொடுங்க'ன்னு கொடுக்கறது!! தீபாவளிக்கு எங்கக் கூட சேர்ந்து உசேன் மத்தாப்பு கொளுத்துவான்-அஸ்ரார்க்கு எங்க ஆயா இங்கிலீஸ்(!) சொல்லிக்கொடுக்கறது- நாங்க ஊருக்குப் போனா, ‘எல்லோரையும் கேட்டதாச் சொல்லுங்க டீச்சர்'ன்னு அவங்க சொல்றது- பெங்களூர்லேர்ந்து ஆன்ட்டியோட தம்பி கொண்டுவந்த குடைமிளகாயை எங்களுக்கு தர்றதுன்னு ரொம்ப க்ளோஸ் ஆகிட்டோம். !

நான் அப்போ ஆறாவது. அந்த வருஷ அரைபரீட்சை லீவுலே, சுமி அக்கா வீட்டுலே எல்லோரும் பெங்களூருக்குக் கிளம்பினாங்க. அந்த ஆன்ட்டி எங்க ஆயாக்கிட்டே, நான் போய் பல்லை சரி பண்ணிக்கிட்டு வரேன் ஆயா, ஒரே குடைச்சல் கொடுக்குதுன்னு” சொல்லிக்கிட்டிருந்தாங்க. அப்பறம், லீவு முடியறதுக்கு ரெண்டு மூனு நாள் இருக்கும்போது யாரோ வந்து சொன்னாங்க, அந்த ஆன்ட்டி இறந்துப் போய்ட்டாங்கன்னு. அந்த அங்கிள் ஊரு பேர்ணாம்பட். அங்கேதான் காரியம் வச்சிருந்தாங்க. நாங்க எல்லோரும், சாந்தா அத்தை, கெஜா அம்மா எல்லோரும் போனோம். அந்த அங்கிள் ரொம்ப கலங்கிடாம பொறுமையா பேசினார். அவர்கூட சுமி அக்காவோட மாமா இருந்தார். எங்களை எல்லாம் வேறே ஒரு வீட்டுக்கு கூட்டிட்டு போய் என்ன ஆச்சுன்னு சொன்னார். அப்போக்கூட, ஸ்வீட்ஸ் வாங்கி வைச்சு சாப்பிடுங்க சாப்பிடுங்கன்னு சொல்லிக்கிட்டிருந்தார், அந்த அங்கிள்.

எல்லாருக்கும் ஒரே ஆச்சரியம். என்ன, பாய், இந்தநேரத்துலேயும் இப்படி உபசரிக்கறாரேன்னு! அந்த ஆன்ட்டிக்கு டிபி இருந்துச்சாம். அதுக்கு மருந்து சாப்பிட்டுக்கிட்டிருந்தாங்களாம். ஆனா அதை ஒரு வருஷம் கழிச்சு திரும்ப வந்து பாக்க சொல்லியிருக்கார் டாக்டர். ஆனா டாக்டர்கிட்டே போகாம, இவங்களா மருந்து வாங்கி தொடர்ந்து சாப்பிட்டிருக்காங்க. அதுதான் பிரச்சினையாகிட்டதா எல்லோரும் பேசிக்கிட்டாங்க வர்ற வழியிலே!! அப்பறம் கொஞ்சநாள் கழிச்சு சுமி அக்கா வந்துட்டாங்க. அவங்க நானிக்கும் கொஞ்சம் முடியாம இருந்தது. முஸ்லீம்களுக்கு நாப்பதுநாள் கணக்காம். நாப்பதாம் நாளுக்கு ஊருக்குப் போய்ட்டும் வந்தாங்க.

சுமி அக்கா ஸ்கூல்க்கு நிறைய லீவ் போட்டதாலே அந்த வருஷம், இன்னொரு முறை படிக்க வேண்டியதாப் போச்சு. அவங்கதான் சமையல், அப்புறம் ஜூபேரைப் பார்த்துக்கறதுன்னு எல்லாம். அங்கிளும் ரொம்ப மனசுடைஞ்சு போய்ட்டதா பெரியவங்க எல்லாம் பேசிக்கிட்டாங்க.'நானும் போய்டுவேன், நானும் போய்டுவேன்'ன்னு அங்கிள் சொன்னதா சொல்லிக்கிட்டாங்க. பெரியங்க பேசிக்கிற இடத்துலே நின்னாதான் எங்க ஆயாவுக்கு கோவம் வந்துடுமே..”கண்ட செருப்பை வாங்கி காதுலே மாட்டிக்கோ”ன்னு திட்டுவாங்க. ஆனா முன்னாடி மாதிரி எங்க பிளாக் கலகலப்பாவே இல்லே..எல்லாமே அமைதியா ஒரு சுரத்தேயில்லாம மௌனமா இருக்கற மாதிரி நடந்துக்கிட்டிருந்தது.

ஒரு வாரம் போயிருக்கும்...இப்படியே! ஸ்கூல் விட்டு சாயங்காலம் வந்தா சுமி அக்கா வீடு பூட்டி இருக்கு..ஆயா முகம் இறுகிப் போய் இருக்கு. அங்கிள் ஆபிஸ் போகாம வீட்டுலேயே தான் இருந்திருக்கார். எல்லோரும் ஸ்கூல் போயாச்சு. நானி மட்டும்தான். காலையிலே ஒரு பதினொரு மணிக்கு நெஞ்சு வலிக்குதுன்னு சொல்லி இருக்கார். பத்துமணிக்கு மேலேதான் எங்க ப்ளாக்லே யாரும் இருக்கமாட்டாங்களே..யார்யாரையோ பிடிச்சு சாந்தா அத்தை டாக்ஸி ஏற்பாடு செஞ்சுருக்காங்க. எங்க ஆயாவை, அவர் பக்கத்துலேயே இருக்கச் சொல்லியிருக்கார். ஆனா, டாக்டர்கிட்டே போறதுக்குள்ளேயே உயிர் பிரிஞ்சுடுச்சு. பேர்ணாம்பட்லேருந்து அவங்க சொந்தக்காரங்க வந்து எல்லோரையும் கூட்டிட்டு போய்ட்டாங்க.

சுமி அக்காவும் ஜூபேரும் பெங்களூருலே ஒரு மாமா வீட்டுலேயும், அப்ரார் பேர்ணாம்பட்டுலே ஒரு மாமாக்கிட்டேயும், அஸ்ராரும் உசேனும் பெங்களுருலேயே வேற மாமாவீட்டுலேயும் தங்கிக்கற மாதிரியும்- சுமி அக்காவுக்கு கல்யாணம் ஏற்பாடு செய்யப்போறதாவும் - வீடு காலி பண்ணும்போது அவங்க சொந்தக்காரங்க சொன்னதுதான். இது எல்லாமே ரெண்டு மாசத்துக்குள்ளேயே...ஹாஃப் இயர்லி லீவு - ஆன்ட்டி இறந்த நாப்பது நாளு முடிஞ்சு ஒரு வாரம் - அங்கிள் இறந்து நாப்பது நாளும் முடிஞ்சது. அப்புறம் ஒரு ரெண்டு வாரம் கழிச்சு, நானியும் பேர்ணாம்பட்டேலேயே மௌத் ஆகிட்டதாச் சொன்னாங்க! ஆனா, யாரும் போகல..யாரையும் பாக்கிற மனவலிமை யாருக்கும் இல்லைன்னுதான் நினைக்கிறேன். ஆனா எல்லோரும் பேசி பேசி மாஞ்சு போறாங்க..

ரொம்பநாளைக்கு எங்க எதிர்வீடு பூட்டியிருந்தது...ஒன்றரை வருஷத்துக்கும் மேலே! அதுவும் ரொம்ப உயிரோட்டமா இருந்த எங்க ப்ளாக் ஃப்ரீஜாகி இருந்தது, கொஞ்ச நாள். ஆனுவல் லீவ் அப்போ சுமி அக்கா கல்யாணம் ஆகி எங்க வீட்டுக்கு வந்திருந்தாங்க, ஒரு சாயங்கால நேரம். டீ குடிச்சுட்டு கொஞ்சநேரம் பேசிக்கிட்டு இருந்துட்டு கிளம்பினாங்க. 'சுமி கிடைச்சது என்னோட லக்'-ன்னு அந்த அண்ணா சொன்னாங்கன்னு அப்புறமா எங்க ஆயா, சாந்தா அத்தைக்கிட்டே பேசுக்கிட்டிருந்தது காதுலே விழுந்துச்சு.

நானும் காலேஜ்க்கு ஹாஸ்டல் போய்ட்டேன். லீவுக்கு வந்தப்போ அப்ரார் வந்திருந்தான் வீட்டுக்கு. பாலிடெக்னிக் முடிச்சுட்டு துபாய் போகப்போறதா சொன்னான். உசேன் எங்க ஊருலே ஒருக்கற மதரஸாலே சேரப்போறதாவும், அஸ்ரார் கோடம்பாக்கத்துலே ஒரு டான்ஸரை லவ் மேரேஜ் செஞ்சுக்கிட்டதாவும் சுமி அக்காவுக்கு ரெண்டு குழந்தைகள் இருக்கறதாவும் சொன்னான். உசேன் மட்டும் அப்போப்போ லீவுக்கு எங்க வீட்டுக்கு வருவான், ஒரு நாள்தான் லீவ் போல. ஆனா நாங்கதான்(நானும், குட்டியும்) ஹாஸ்டலுக்குப் போய்ட்டோமே..பெரிம்மாவும், ஆயாவும்தானே..கொஞ்ச நேரம் டீவி பார்த்துட்டு, தூங்கிட்டு, சாப்பிட்டு காசு வாங்கிட்டு போவான்னு சொன்னாங்க.

டில்லி டூருக்குப் போய்ட்டு வந்து அவங்க சொன்ன கதைங்க, அவங்க எனக்குக் கொடுத்த ஒரு மஞ்சள் கலர் கம்மல்,நான் அரேபியன் நைட்ஸ் படிச்சுட்டு, சுமி அக்கா சொல்ற கதைகளோட கற்பனை செஞ்சுக்கிட்டது - எல்லோரும் கண்ணாமுச்சு விளையாடறோம்னு அவங்க வீட்டுக் கட்டிலுக்கு அடிலே ஒளிஞ்சுகிட்டது - அவங்க எல்லோரும் வீட்டைக் காலி செஞ்சுட்டு போனதும் சூழ்ந்த வெறுமை-ன்னு இந்த எதிர்வீட்டு நினைவுகள் அத்தியாயம் இல்லாம என்னோட பால்யக்காலம் முழுமையாகாது! ஜாலியாத்தான் இந்த இடுகையை ஆரம்பிச்சேன்....நினைவுகளிலேருந்து தப்பிக்க முடியலை - எழுதினப்பறம்தான் தெரிஞ்சது. என்னோட பதினோரு வயசுக்கே நான் பயணிச்சு, அப்போ பார்த்ததையெல்லாம், கேட்டதையெல்லாம் கொட்டிட்டேன்னு!!

உபரிக்குறிப்பு : காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் லீவுக்குப் போனப்போ, 'பூஜாக்குக் கொடுங்க'ன்னு எங்க பெரிம்மா பூரி கொடுக்கறதும், 'கோங்குரா அரைச்சேன், டீச்சர்'ன்னு எதிர்வீட்டு ஆன்ட்டி கொடுக்கறதுமா இருந்துச்சு! ‘இதுக்குத்தான் யார்க்கிட்டேயும் க்ளோசா இருக்கக் கூடாதுன்னு, இனிமே' ன்னு, சுமி அக்காவீடு காலியா இருக்கற பார்த்துட்டு பெரிம்மா, ஆயாக்கிட்டே சொன்னது ஏனோ நினைவுக்கு வந்துச்சு!

Tuesday, August 04, 2009

யாரு சொன்னா குழந்தை வளக்கறது ஈசின்னு!!

நேரம்-காலம் : கடந்த வாரத்தில் ஓர் நாள் - காலை 8 மணி
இடம் : தெருமுனை

பப்புவை வேனில் ஏற்றிவிடச்செல்லும்போது, முன்பு அவளைக் கவனித்துக்கொண்ட ஆயாவை பார்க்க நேர்ந்தது.அவரும் பப்புவிடம், வா, பாப்பா, என்ன படிக்கிறே, என்க்கூட வர்றியா என்று பேசிக்கொண்டிருந்தார்கள். அவர் என்னவோ அன்பாகத்தான் பேசிக்கொண்டிருந்தார். ஆனாலும், பப்புவிற்குசொல்லி வைப்போமே என்று நாந்தான் ஆரம்பித்தேன்.

பப்பு, ரோட்லே போறவங்க நமக்குத் தெரியாதவங்க கூப்டா பேசக்கூடாது.

பேசினா?

யாராவது, வா, நான் சாக்லேட் வாங்கி தரேன்..லாலிபாப் வாங்கிதரேன்.. என்கூட வா-ன்னு சொன்னா போகக்கூடாது.

போனா?

அப்புறம் அவங்க வீட்டுக்கு கூப்பிட்டு போய்டுவாங்க...

கூப்பிட்டு போய்?

அப்றம், நீ அம்மாக்கிட்டே வரணுமா இல்லையா? ஷோபனா ஆன்ட்டில்லாம் இப்போ நம்ம வீட்டுலே இல்ல. அவங்க வா என்கூட, நான் உன்னை வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்னு சொன்னால்லாம் போகக்கூடாது, சரியா..

ஏன் ஆச்சி? ஏன் கூப்பிடுவாங்க?

......(மனதுக்குள், இந்த வேனை என்ன இன்னும் காணோம்!!)

கூப்டுப் போய் என்னா பண்ணுவாங்க, ஆச்சி?

.....

சொல்லு ஆச்சி...என்னா பண்ணுவாங்க...

நீ எப்போவும் அம்மாக்கூட அப்பாக்கூடத்தான் போகணும். ( மனதுக்குள், இந்த வேன் இன்னும் வரவழியைக்காணுமே!!)

வடலூர் ஆயாக்கூட, காட்பாடி ஆயாக்கூட, முருகன், தாத்தாக்கூடல்லாம்?

அவங்க கூடல்லாம் போகலாம்! நமக்குத் தெரியாதவங்க...நம்ம வீட்டுக்கு வராதவங்க யாராவது கூப்டால்லாம் நீ பேசக்கூடாது!!

பேசினா?

......

அவங்க என்னை வீட்டுக்குக் கூப்பிட்டு போய்டுவாங்களா?

ம்.....

அவங்க வீட்டுக்குக் கூப்டுபோய் என்னா பண்ணுவங்க?

......(I give up!!!)

சொல்லு ஆச்சி...என்னா பண்ணுவாங்க? குள்ளநரி இருக்குமா அவங்க வீட்டுலே?

.....(டமால்..டமால்..பக்கத்துலே இருக்க சுவத்திலே முட்டிக்கிட்டிருக்கேன்!அவ்வ்வ்!!!)

The irony is killing me...திடீரென ஒருநாள் புதியவர்களிடம் அறிமுகப்படுத்தி பப்புவை பேசச்சொல்வதும், நானே புதியவர்களிடம் பேச வேண்டாமென்றுச் சொல்வதும்..Am I a hypocrite or what?!!

Monday, August 03, 2009

The Very Hungry Caterpillar

நானும் பப்புவும் ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தோம். The Very Hungry Caterpillar. ஒரு ஞாயி்றுக்கிழமையின் காலையில் முட்டையிலிருந்து வெளிவரும் ஒரு கூட்டுப்புழு அடுத்த ஞாயிறுக்குள் கூட்டுக்குள் அடையும்வரை பயணிக்கும் கதை. மிகுந்த பசி கொண்ட கூட்டுப்புழு , முதல் நாள் ஒரு ஆப்பிள், இரண்டாம் நாள் இரண்டு பேரிக்காய்கள், மூன்றாம்நாள் மூன்று பிள்ம்கள் என்று ஒரு வாரம் முழுக்க உணவுண்டு, அது போதாமல் கேக், ஐஸ்கிரீம், சலாமி என்று சாப்பிட்டு சிறிய (கூட்டுப்)புழுவிலிருந்து பெரிய (கூட்டுப்)புழுவாக மாறி பட்டாம்ப்பூச்சியாக வளருவதை சொல்லும் குழந்தைகளுக்கான படக்கதை. சாப்பிட்டு முடித்து, ஒரு கூட்டைத் தானேக் கட்டிக்கொண்டு இரு வாரங்களுக்கு அதனுள்ளே வசித்து, பின்னர் ஒரு சிறு ஓட்டைவழியே தன்னுடலை நுழைத்து வண்ணமிகு ப்ட்டாம்பூச்சியாக வெளிவருகிறது என்று பப்புவிற்குச் சொல்லிக்கொண்டிருந்தேன்.

முன்பொருகாலத்தில் மெயில்ஃபார்வார்டாக சுற்றிக்கொண்டிருந்த ஒரு கதைதான் நினைவுக்கு வந்தது. அதுவும், முதல்முதலாக வேலைக்குச் சேர்ந்தால் கடமையாகச் செய்யும் முதல்வேலையே ஃபார்வர்டு மெயில்களை படிப்பதும் அதைத் தொடர்ந்து ஃபார்வர்டு செய்வதும்தானே!! அதிலொன்று கேட்டர்பில்லரைப் பற்றியது. ஒருவர் மிகுந்த கவனத்தோடு கேட்டர்பில்லரின் வாழ்க்கைசுழற்சியை கவனித்து வந்தார். அது கூட்டுப்புழுவாக மாறியதும் அது வெளிவரும் அந்த நொடிக்காக ஆவலுடன் காத்திருந்தார். கூட்டிலிருந்து வெளிவர அந்தப்புழு உள்ளாகும் சிரமத்தைக் காணச்சகியதவராய், அந்தப் புழுவுக்கு உதவுவதாய் எண்ணி கூட்டைக் கத்தரித்து தாராளமாக வழியுண்டாக்கி அந்தபுழுவை வெளிவ்ரச்செய்வார். ஆனால் அந்தபுழு பட்டாம்பூச்சியாக மாறமுடியாமல், பறக்கவுமுடியாமல் தத்தித்த்தி வாழ்நாள் முழுக்க மிகுந்தச் சிரமப்படும். உண்மையில், அந்தச் சிறியதுவாரத்தின் வழியே அது வெளிவரும்போதுதான் வண்ணத்துப்பூச்சியாக முழுஉருவம் கொள்கிறது, அதன் உடல்வழியே இறக்கைகளுக்கு தேவையான சத்துகள் சென்றுச் சேர்கிறது. அவர் உதவி செய்வதாய் நினைத்து செய்த செயல் அந்த உயிரின் இயல்பு வாழ்க்கையையே பாதித்துவிட்டது என்பதாய் முடியும்! ஏனோ எனக்கு இந்தக்கதை எனக்கு மஞ்சுவையே எப்போதும் நினைவூட்டும்! மஞ்சுவிடம் இந்தக் கதையைச் சொன்னபோது, 'நானும் அந்த கூட்டுப்புழு போன்ற நிலையில்தானே முல்லை இருக்கிறேன்' என்று சொன்ன அந்த சனிக்கிழமை காலைநேரம் இன்னும் மனதிலிருக்கிறது.

மஞ்சுவை நான் சந்தித்தது வொர்க்கிங் உமன்ஸ் ஹாஸ்டலில்!மஞ்சுவிற்கு ஏனோ என்னைப் பிடித்திருந்தது அவளது வாழ்வின் இருண்ட பக்கத்தை பகிர்ந்துக்கொள்ளுமளவிற்கு. மஞ்சுவிற்கு, தரமணிக்கு அருகில்தான் வீடு - குடும்பமும் உறவினர்களும் அந்த ஏரியா முழுவதும். ஏதோவொரு குடும்பப்பிரச்சினைக் காரணமாக வீட்டைவிட்டு வெளியேறிய மஞ்சு வந்தடைந்தது அடையாறில் ஒரு லேடிஸ் ஹாஸ்டல். கொஞ்சநாளில், மஞ்சுவின் அம்மா கண்டுபிடித்து வீட்டுக்கு அழைக்க மஞ்சு செல்ல மறுத்துவிட்டாள். சொல்ல மறந்துவிட்டேனே..மஞ்சு வேலை செய்தது ஒரு லெதர் கம்பெனியில் - பர்ஸ் தைப்பதில் ஸ்பெஷலிஸ்ட். இடைப்பட்டக் காலத்தில், லேத் பட்டறை வைத்திருப்பவனொருவனுடன் அறிமுகமாகி காதலாகிக் கனிந்து கல்யாணமுமாகியிருக்கிறது. ஒரு சில மாதங்களுக்குப்பின் அவன் சரியாக வீட்டுக்கு வராமல்போக பொறிதட்டிய மஞ்சுவிற்குத், தெரியவந்தது அவனுக்கொரு குடும்பம் ஏற்கெனவே இருப்பது. வாங்கிய கட்டில், பீரோ, கேஸ் கனெஷன், சாமான் செட்டுகள் மற்றும் இன்னபிறவற்றை ரெட் ஹில்ஸில் தோழியின் தாயின் வீட்டில் வைத்துவிட்டு, மஞ்சு தஞ்சமடைந்தது இப்போதிருக்கும் லேடிஸ் ஹாஸ்டலை.

”நானும் அந்த கூட்டுப்புழு மாதிரிதானே முல்லை..ஏற்கெனவே அவனுக்குக் கல்யாணமாகியிருந்தும், என்னை கல்யாணம் பண்ணி என் வாழ்க்கையைக் பாழாக்கிட்டான். நானும் அந்த றெக்கை முழுசா வளராத பட்டாம்பூச்சி மாதிரிதானே! நிறைய நாள் அவன் வீட்டுக்கு வரவே மாட்டான். ராத்திரி, பக்கத்துவீட்டுக்காரன் கதவை தட்டுவான். நான் தூக்கம் வராம முழிச்சுக்க்கிட்டே படுத்துக்கிட்டு இருப்பேன்” - மஞ்சு.

மஞ்சுவிடம் ஒரு பைபிள் இருந்தது. எனக்கென்னவோ மஞ்சு அவளுக்குத் தேவையான சக்தியை அந்த பைபிளிலிருந்து உறிஞ்சிக்கொள்வதாய் தோன்றும்! 'உங்கம்மாக்கிட்டே போக வேண்டியதுதானே, மஞ்சு' என்றதற்கு, “அவங்கல்லாம் ஒரு கும்பலா வாழ்றவங்க முல்லை, அங்கே போனா நிம்மதியா இருக்க முடியாது” என்றாள். ஒருவேளை, மஞ்சுவின் கணவன் உண்மையுள்ளவனாக இருந்திருந்தால், மஞ்சுவும் மிக அழகாக குடும்பம், குழந்தையென்று வாழ்ந்திருப்பாள். கவரவத்துடன் அம்மாவீட்டுக்குப் போக வர இருந்திருப்பாள். மஞ்சுவிற்கு இங்கிலீஷில் பேச மிகவும் ஆசை. விவேகானந்தாவில் சேர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளில் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் சென்றுக்கொண்டிருந்தாள்.

ஹாஸ்டலை புதுப்பித்தல் காரணமாக நாங்கள் வெளியேற வேண்டிய சூழல் வந்தபோது நான் தோழியின் தோழிகளோடு ஒண்டிக்கொண்டேன்.மஞ்சு 600ரூ வீடு (அறை) பார்த்து, பொருட்களை எடுத்துவந்து வைத்துக்கொண்டாள். இரண்டு மூன்று பெண்களை வைத்து பர்ஸ் தைக்கும் தொழிலைச் செய்தாள். அது சரிவராமல் போகவே மறுபடியும் கம்பெனியில் சேர்ந்துக்கொண்டாள். அதற்குள் நான், பெங்களூர்-கல்யாணம்-திரும்பவும் சென்னை என்று வாழ்க்கைச்சுழற்சியை முடித்திருந்தேன். பப்புவுக்கு மூன்றுமாதங்கள் இருக்கும் போது வீட்டுக்கு வந்திருந்தாள். அதுதான் கடைசியாக நான் அவளைச் சந்தித்தது. சென்ற டிசம்பரில் மஞ்சுவிற்கு திருமணமாகியிருக்கிறது. அவளது தோழியின் அண்ணன்தான் மணமகன். அவருக்கு நீண்டநாட்கள் ஜாதகத்தடையால் திருமணமாகாமல் இருந்திருக்கிறது. அந்தத்தோழிக்கு மஞ்சுவின் நிலை தெரிந்து அவரெடுத்த முயற்சியே இந்தத்திருமணம். கூட்டுக்குடும்பம். மஞ்சுவுக்கென்று ஒரு குடும்பம். மஞ்சு ஒரு கேட்டர்பில்லர்தான், வாழ்வின் மீது பசிக்கொண்ட கேட்டர்பில்லர் - வாழ்ந்துவிடத்துடிக்கும் - வானத்தைத் தொட்டுவிட எத்தனிக்கும் பட்டாம்பூச்சியை உள்ளடக்கிய கேட்டர்பில்லர்!!

எனக்கென்னவோ, அவள் இறக்கைகள் முழுமையடையாத பட்டாம்பூச்சியாகத் தோன்றவில்லை. மஞ்சு எடுத்த முடிவுகள் சரியா தவறா என்று அவளது வாழ்க்கையை வாழாமல் விவாதிக்கமுடியாது. ஆனால், பாதுகாப்பானது என்று நான் கருதும், படிப்பு, நல்ல சம்பளத்துடன் வேலை என்ற ஆயுதங்களை..... தற்காப்புகளைக் கொண்டிருந்தும், நான் எடுக்கத் தயங்கும் முடிவுகளை மஞ்சு அநாயசமாக எடுத்திருந்தாள். ஒருவேளை, நல்லக் கல்விச் சூழலும், வேலைவாய்ப்பும் அமைந்திருந்தால்?! மஞ்சுவின் உறுதி, தைரியம் - வாழ்தலுக்கான விடாமுயற்சி - எல்லாவற்றுக்குமேல் வாழ்க்கையின் மீதிருந்த நம்பிக்கை - இவையே மஞ்சுவின் முழுமையடைந்த இறக்கைகள்!!