Friday, July 31, 2009

”உன்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட் யாரு?”

”ஹேமா (இது இந்த ஹேமா!), சுஜா, குணா, நித்யா, ஷபீனா, ரேணு, சரளா, ஞானம்,தினேஷ்,ஷ்யாம்,ப்ரகாஷ் அப்பறம் ட்யூஷனிலே மேரி,கவிதா,அபிக்கூர் ரெஹ்மான்.....”

”இரு..இரு...பெஸ்ட் ப்ரெண்ட்னா உங்க கிளாசையே சொல்றே ? பெஸ்ட் ப்ரெண்ட்னு ஒரே ஒருத்தர்தான் இருக்க முடியும். யாராவது ஒருத்தங்ககிட்டே க்ளோஸா இருப்பே இல்ல....அவங்க பேரு சொல்லு!!”

ரொம்ப யோசிக்கிறேன்!

இப்போவரைக்கும் பெஸ்ட் ப்ரெண்ட்ஸ்/க்ளோஸ் ப்ரெண்ட்ஸ் குறித்து ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. எனக்கு, எல்லோரும் ஃப்ரெண்ட்ஸ்தான். பெஸ்ட் ஃப்ரெண்ட்ன்னு பார்த்தா எல்லோருமே எனக்கு பெஸ்ட் ப்ரெண்ட்தான் - பெஸ்ட்டா இல்லையான்னு அவங்கதான் சொல்லனும்!! எல்லோருக்கும் கொடுப்பதற்கும், எல்லோரும் கொடுப்பதற்கும் - எல்லோருக்குள்ளும் பெஸ்ட்கள் இருக்கிறதுதானே!!ஒரு புன்னகையோ ஒரு நலம் விசாரிப்போ ஒரு தலையசைப்போ இல்லாமல் எவரையேனும் கடந்துவிட முடியுமா!

ஓக்கே...புரிஞ்சுடுச்சா...அமுதா கொடுத்த இந்த நட்பு விருதை, என்னாலே சிலருக்கு மட்டும் கொடுத்துட்டு சிலருக்குக் கொடுக்காம இருக்கமுடியாது..ஏன்னா,நீங்க எல்லோருமே என்னோட ப்ரெண்ட்ஸ்!! பெஸ்ட் ப்ரெண்ட்ஸ்!!தமிழ்மணத்தில் உங்கள் இடுகைகளை வாசிக்கிறேன் - உங்கள் பின்னூட்டங்களை ரசிக்கிறேன்!! இந்த 'சித்திரக்கூடம்' என்னோட இ-வீடு அல்லது இ-ஃப்ளாட் - உங்கள் பதிவுகள் அண்டைவீடு - இப்படித்தான் உங்களோடு என்னை associate செய்துக்கொள்கிறேன். எனது உலகையும் உங்களோடு பகிர்ந்துக்கொள்கிறேன்! இதில் virtual friends என்ன...real friends என்ன?! அதனாலே நீங்க எல்லோருமே என்னோட ப்ரெண்ட்ஸ்தான்! இந்த விருதை எல்லோருக்குமே - எனது அண்டைவீட்டார் அனைவருக்குமே - நட்போடு வழங்குகிறேன்!! :-)

இதையேத்தான் கொஞ்சம் வேறமாதிரி சொல்லியிருக்கேன் போல!! அவ்வ்வ்வ்வ்!I am like that..என்ன பண்றது..எனக்கு மனிதர்களைப் பிடிக்கிறது!!

Tuesday, July 28, 2009

ஸ்கூல்..ஸ்கூல்...விச் ஸ்கூல் டூ யூ சூஸ்!

மூன்று வயதுக்குப் முன்பே பப்புவை பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப எனக்கு விருப்பமில்லை. இருவரும் பணிக்குச் செல்லும் சூழல். மூன்று மாதத்திலிருந்து பப்புவை பார்த்துக்கொள்ள இவர்களின் உதவியிருந்ததால் மூன்று வயதுக்குப் பிறகுப் பார்த்துக்கொள்ளலாமென்று ரொம்பவும் மெனக்கிடவில்லை. வீட்டுக்குக் கொஞ்சமாவது அருகிலுள்ள - வேளச்சேரி, தாம்பரம் ஏரியாக்களில்தான் சேர்த்தாகவேண்டுமென எண்ணி, இணையத்தில்/தெரிந்தவர்களிடம் கேட்டு/நேரடியாக போனில் விசாரித்துத் தயாரித்த பள்ளிகளின் லிஸ்ட் இதோ! இதையெல்லாம் நான் விசாரிக்கும்போது பப்புவிற்கு இரண்டேகால் வயதுதான். Partially potty trained. ஏனோ ப்ளே ஸ்கூலுக்கு அனுப்ப எனக்கு விருப்பமில்லை.

ஆனால் இரண்டரை வயதில் வீட்டில் பப்புவை சமாளிக்க முடியவில்லை. மேலும், முன்னறிவிப்பின்றி விடுப்பு அல்லது விட்டுச் செல்லும் ஆயாக்கள் போன்ற சூழ்நிலைகளால் இரண்டு மணிநேரமாவது ஒரு மாறுதலுக்காக வெளியில் அனுப்பலாமென்று முடிவு செய்தோம்.அப்போதுதான் வீட்டுக்கு அருகிலேயே இருந்த பிரபலமான இண்டர்நேஷனல் பள்ளியின் கிளை யை விசாரிக்க நேர்ந்தது. ஃப்ளாப்!

தொடர்ந்து வாசிக்க இங்கே செல்லவும்!

Monday, July 27, 2009

ஸ்பான்ஜ் பெயிண்டிங்பேக்கிங் ஃபோம் மற்றும் சாமான் தேய்க்கும் ஸ்பான்ஜ் - விதவிதமான வடிவங்களில் வெட்டி எடுத்துக்கொண்டோம். பப்புவே குழைத்த வண்ணம் - சிவப்பும் வெள்ளையும் கலந்து இளஞ்சிவப்பாக்கினாள். முழு சார்ட் பேப்பரில், வடிவங்களை வண்ணத்தில் தோய்த்து சார்ட் பேப்பரில் வைத்து எடுக்க வேண்டும். ஒன்றிரண்டை செய்துக்காட்டியபிறகு, முழுவதுமாக செய்து முடித்தாள்.முடிவில்,இதைப் பார்க்க ஒரு 'gift wrapper' போல தோன்றியது! (அப்போ, இதையே கிஃப்ட் பண்ணா எதை வச்சு wrap பண்ணுவீங்கன்னு கேக்கக் கூடாது!!)

Saturday, July 25, 2009

ஃபேமிலி டே @ பப்புஸ் ஸ்கூல்!
பப்புவின் பள்ளியில் நேற்று “ஃபேமிலி டே”.

நுழைந்த உடனே, வரவேற்ற ஆன்ட்டி எனக்கும், முகிலுக்கும் ரெட் கலர் சாட்டின் ரிப்பனை கையில் கட்டி விட்டார். வெண்மதியின் அம்மா, ஆயா, வெண்மதி இருந்ததைப் பார்த்து, ஹாய் சொல்லிவிட்டு அடுத்த வரிசையில் அமர்ந்துக்கொண்டோம். ஒரு குட்டிபெண், பப்புவை பார்த்துச் சிரித்தாள். பப்புவும் சிரிக்கலாமா வேண்டாமா என்பது போல ஒரு சிரிப்பு. ஆனால் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டே இருந்தார்கள். அதுதான் வர்ஷினியாம். பின், வர்ஷினி அவளது அம்மா பக்கத்தில் சென்று அமர்ந்துக்கொண்டாள்.

”நீ போய் வர்ஷினி பக்கத்துலே உக்காந்துக்கோ” - பப்பு, பக்கத்து இலைக்கு பாயாசம்!

பப்புவும் வர்ஷினியும் அருகருகில் அமர்ந்துக்கொள்ள நானும் முகிலும் அவர்களுக்கு முன் வரிசையில். விழா ஆரம்பித்தது. ”எப்போதும் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு, பிரச்சினைகள், பரிந்துரைகள் என்று மட்டுமே பேசுகிறோம், இந்தமுறை அதையெல்லாம் விடுத்து, கொஞ்சம் மகிழ்ச்சியாகக் கழிப்போம். பிரச்சினைகள், ப்ளஸ்கள், மைனஸ்கள் பேசுவதானால் உங்களுக்குள் பேசிக்கொள்ளுங்கள். ஆனால், இன்று அதைக் கேட்க நாங்கள் விரும்பவில்லை” - பெரிய ஆன்ட்டி.

(உண்மைதான், அந்த சந்திப்புகளில் பொதுவாக யாராவது கேள்விகள் கேட்பார்கள். சந்தேகம் கேட்பார்கள். அதைத்தாண்டி பேசிக்கொண்டதில்லை. சந்திப்பு முடிந்தவுடன், ஆர்வமுள்ள சிலர் ஆன்ட்டியிடம் கேள்விகளெழுப்பிக் கொண்டிருப்பார்கள். ஒருசில சமயங்களில் நானும் ஒப்புக்குச் சப்பாணியாக நின்று என்னத்தான் கேக்கறாங்கன்னு பார்த்திருக்கிறேன். மற்றபடி, வெண்மதி அம்மா, வர்ஷினி அம்மா,நந்தக்கிஷோர் அம்மாவோடு முடிந்துவிடும்!)


”சரி, நேரமாகுது, முடிஞ்சவுடனேக் கூப்பிடு, வர்றேன்” - முகில் எஸ்கேப்!

”ரெட் ரிப்பன் கட்டியவர்கள் எல்லோரும் வாங்க, உங்க மெமரியை டெஸ்ட் பண்ணனும்”

ஒரு ட்ரேயில் 25 பொருட்கள் வைத்து ஒரு நிமிஷம் பார்க்க அனுமதிப்பார்கள். இரண்டு நிமிடங்களில் எழுதித்தரணும். அவ்வ்வ்வ்! நான் பப்புவை மெமரிக்காக இன்னும் திட்டவே ஆரம்பிக்கலையே, ஏன் எனக்கு இப்படி சோதனை!! எப்படியோ பதினைந்து பொருட்களை எழுதித்தந்தாயிற்று. வெண்மதி அம்மா எனக்குப் பக்கத்தில். அது வேறு டென்ஷன். அவங்க அதிகமா எழுதினமாதிரி வேற இருந்துச்சு!! :-)

“சரி, போய் உக்காருங்க, உங்க ரிசல்ட் எல்லாம் கடைசிலதான் சொல்வோம்!” - ஆன்ட்டி!

”ப்ளூ ரிப்பன் வாங்க”

யானைக்கு வால், லெமன் அன்ட் ஸ்பூன், பாட்டிலில் நீரை நிரப்புதல், பந்தை கடத்துதல் இன்னபிற. மெயின்பார்ட் வந்து அம்மா, அப்பாக்கு டெஸ்ட் - குழந்தையைப் பற்றி - ஜாலியாகத்தான் - கேள்வி கேட்பாங்க, ரெண்டு பேரும் தனித்தனியாக விடைகள் எழுதிக்கொடுக்கணும், எந்தளவுக்கு விடைகள் ஒத்து போகுதுன்னு! நல்லவேளை, முகில் இல்லை!! இல்லன்னா, ரெண்டுபட்டிருக்கும்!!

பவன் கார்த்தி, தேவிகா, யோகருத்ரன்,ப்ரனேஷ், சாகர், நந்தகிஷோர், தனுஷ் என்று வீட்டில் பப்பு சொல்லும் அனைவரையும் அவரவர் அம்மாக்களோடு சந்தித்தாயிற்று. அவரவர் குழந்தைகளின் பெயர்களே முகவரியாயின! தொலைபேசி எண்கள் பரிமாறிக்கொண்டோம்.

”எங்கவீட்டுலே எப்பவும் குறிஞ்சி, வெண்மதி புராணந்தான்”

"எங்கவீட்டுலேயும் அதேதான், வர்ஷினையையும், வெண்மதியையும் எங்கவீட்டுலே எல்லாருக்கும் தெரியும்!!”

“வீட்டுக்குக் கூட்டிட்டு வாங்க,குறிஞ்சியை!”

குட்டீஸ் எல்லாம் அவரவர் ப்ரெண்ட்ஸோடு! வர்ஷினியும், பப்புவும் கைக்கோர்த்துக்கொண்டு வலம் வந்தனர். சிற்றுண்டி. முடிந்ததும், பரிசு அறிவித்தல். மெமரியில் மீ த ஃப்ர்ஸ்ட்! அவ்வ்வ்வ்வ்! பப்பு சென்று வாங்கினாள். நன்றியுரை.

”ஏதாவது பரிந்துரைகள்?' - ஆண்ட்டி!

“வீக்எண்ட்-லே வச்சிருக்கலாம்” - கூட்டத்திலிருந்து!

“எங்களை நம்பியும் ஒரு குடும்பம் இருக்கிறதே!! - ஆன்ட்டி!

அதுவும் சரிதான்!

இது ஒரு சின்ன ஸ்கூல்தான். சாதாரண கட்டிடம். மொத்தமே 150 மாணவர்கள்தான்.எல்லா ஆன்ட்டிகளுக்கும் எல்லா பிள்ளைகளையும் தெரியும், எல்லா பிள்ளைகளின் பெற்றோரையும் தெரியும். பப்புவுக்கு ஒரு பெரிய பள்ளியிலே, நிறைய மாணாக்கர்களுடன் படிக்கும்/விளையாடும் அனுபவத்தைத் தராமல், இப்படி வைச்சுருக்கோமே என்று எனக்குள் அவ்வப்போது ஒரு எண்ணம் எழுவதுண்டு. ஆனால், அது ஒன்றும் பெரிய குறையில்லை என்பதுபோல சில சமயங்களில் தோன்றும். நேற்றும் அந்த சிலசமயங்களில் ஒன்றானது!!இப்போதான் நானும் சுதா கான்வெண்டிலே வாராய்..நீ..வாராய்-ன்னு ஸ்போர்ட்ஸ் டேக்கு ஓடின மாதிரி இருக்கு. எங்க பெரிம்மாவும் கலா டீச்சரும் ஒண்ணா உக்கார்ந்து சிரிச்சு பேசிக்கிட்டிருந்தது, ”எல்லோரையும் துரத்திக்கிட்டு ஓடினியான்னு” கேட்டது, பிரேமா பன்னை எட்டி எட்டி சாப்பிட்டது, சாக்குக்குள்ளே காலை விட்டுக்கிட்டு அசோக் ஓடமுடியாம ஓடி விழுந்தது, ஓடிப்போய் மிஸ்ஸைத் தொடணும், அந்த விசில் சத்தம், ஆரஞ்ச், மஞ்சள், வெள்ளை நிறக்கொடிகள்-ன்னு எல்லாம் இப்போ நடந்தமாதிரி இருக்கு!! அப்படியே இருந்திருக்கலாமோ, பச்சை வெள்ளை பினஃபார்ம் போட்டுக்கொண்டு பெரிம்மாவோடு கூட நடந்தபடி!!

Thursday, July 23, 2009

...Evil Mamma!!

பெட் மேலே குதிக்காதே பப்பு, அப்புறம் கொம்பு முளைக்கும்!

ஒரு பேர்டீ(birdie) வந்து சொல்லுச்சு...பப்பு பாலை குடிச்சு முடிச்சாதான் சுட்டி டீவிலே டோரா வருமாம்!

வாயை திறக்காம, இப்படி அமைதியா இருந்தாத்தான் மருதாணி கையிலே ஒட்டும்!

நைட் பன்னெண்டு மணியாச்சுல்லே...நாய்ங்களுக்கு றெக்கை முளைச்சு பறந்து பறந்து மாடிக்கு வரும்....காலையிலே போய்டும், அப்போ மாடிக்குப் போகலாம்!

Wednesday, July 22, 2009

பப்புவின் குரலில் ஒரு கதை!

Get this widget | Track details | eSnips Social DNA


"(ஒரு காட்டுலே) ஒரு சிங்கம் இருந்துதாம். அந்த சிங்கம் ...ஆங்..ஒரு ஒரு அனிமல்ஸா வர சொல்லி சாப்பிட்டிட்டுருந்துதாம். அப்பறம், ஆங்...அப்புறம் வந்து ஒரு நாள் முயல் வந்துதாம். அப்பறம், ஒன்னை மாதிரி ஒரு கிணத்துல சிங்கம் இருக்கு, வா காமிக்கறேன் அப்படி சொல்லுச்சு எங்கே வா பாரு அப்டி சொல்லிட்டவுடனே அப்பபறம் கிணத்துலே போய் காமிச்சுது. அப்பறம் சிங்கம், குதிச்சு, நான் ஒன்னை கொல்றேன்...அப்படி சொல்லுச்சு. கிணத்துக்குள்ள்ள்ள்ள்ள்ள்ள்ளே...போச்சா...சிங்கம் செத்துபோச்சு!"

பப்பு அவளது அத்தையிடமிருந்து கற்றுக்கொண்டது - இந்தக் கதை!

Monday, July 20, 2009

கலர்...கலர்..விச் கலர் டூ யூ வாண்ட்?!

எனக்கு அப்போ அஞ்சு வயசாயிக்கும், ஒரு உறவினரை எனக்கு அறிமுகப்படுத்தினார்கள்.அவர் பேரு அண்ணாதுரை. அப்போ அவருக்கு 24-25 இருக்கலாம். 'இவரை நீ சித்தப்பான்னு கூப்பிடணும்” அப்படின்னு சொன்னாங்க, ஆயா. நான் வாயை வைச்சுக்கிட்டு சும்மா இல்லாம, ”அப்போ சித்தி எங்கே” ன்னு கேட்டுட்டேன். எல்லாரும் சிரிச்சாங்க. அந்த சித்தப்பாவுக்கும் செம குஷி. ”சின்னபொண்ணுக்கு கூட தெரியுது, உங்களுக்கு புரியமாட்டேங்குதே”ன்னு சொன்னார். அவருக்கு ஒரு ப்ரெண்ட். ஞானசேகரன். ரெண்டு பேரும் எப்போவும் ஒண்ணாதான் இருப்பாங்க...ஞானசேகரன் சித்தப்பா இல்லாம அண்ணாதுரை சித்தப்பா வீட்டுக்கு வர மாட்டார். எனக்கு அண்ணாதுரை சித்தப்பான்னா ஞானசேகரன் சித்தப்பாவும் ஞாபகத்துக்கு வர அளவுக்கு! அப்போ அவங்க ரொம்ப தீவிரமா நிரந்தர/அரசு வேலைக்கு முயற்சி செஞ்சுக்கிட்டிருந்தாங்க. உற்சாகமான இளைஞர்கள்! இப்போ அண்ணாதுரை சித்தப்பா வெளிநாட்டுலே இருக்கார். ஞானசேகரன் சித்தப்பா நெய்வேலில இருக்கார்.


சண்முகண்ணா, பாபுண்ணா. இருவரையும் தனித்தனியாக பார்த்ததேயில்லை..மிகையாகக் கூடத் தோன்றலாம். ஆனா நிஜம். சரி, வீட்டுக்கு வரும்போதுதான் ஒண்ணா வருவாங்கன்னு நினைச்சா, யாராவது ஒருவருக்கு போன் செஞ்சாக் கூட மற்றவரும் அருகிலேதான் இருப்பார். கலகலப்பான உற்சாகமான இளைஞர்கள். இவங்க ரெண்டு பேரும் மட்டுமில்லை..இவங்க பேட்ச் அண்ணாங்க, அக்காங்க எல்லோரும் எங்க வீட்டுக்கு எப்போவும் ஸ்பெஷல்தான். ஏன்னா, எங்க பெரிம்மாவிற்கு முதல் பேட்ச் மாணவர்கள்.

“அண்ணா, ஒரு ஆலமரம் இருக்கு, அங்கே ஒரு குருடன், ஒரு நொண்டி, ஒரு ஊமை உட்கார்ந்து இருக்காங்க. அப்போ ஒரு மாம்பழம் விழுது. யார் போய் ஃப்ர்ஸ்ட் எடுப்பாங்க...குருடனா, நொண்டியா, ஊமையா?” என்ற எனது லகலக கடிகளுக்கு இலக்காவது இவர்கள்தான்! பதிலுக்கு சொல்வதற்கு நிறைய சுவாரசியமான கதைகளுக்கு ரெண்டு அண்ணன்களிடமும்!! காப்பி அடிச்சு மாட்டிக்கிட்டது, பொண்ணுங்களை கிண்டலடிச்சு வாங்கிக் கட்டினதும்ன்னு...

சண்முகண்ணாவிற்கு கல்யாணமானப்போ, கொடைக்கானலில் படிச்சுக்கிட்டிருந்தேன். ஹனிமூனுக்கு கொடைக்கானல் வந்திருந்தாங்க...ஹாஸ்டலில் என்னை பார்க்க வந்திருந்தாங்க. கூடவே பாபுண்ணா. ”என்னண்ணா, நீங்களும் வந்துட்டீங்களா!!” -ன்னு கேட்டதுக்கு, “இவன் வந்தப்புறம் எனக்கு ரெண்டு நாளா என்ன செய்றதுன்னே தெரியலை..அதான் கிளம்பி வந்துட்டேன்”ன்னு சொல்றார் பாபுண்ணா. "அவன் கல்யாணம் ஆகி ஹனிமூன் போறான். இவன் எதுக்கு பின்னாடியே போறான்?” - அந்ததடவை ஊருக்குப் போனப்போ பெரிம்மா சொன்னது!! கடைசியா ஆம்பூருக்குப் போனப்போ வீட்டுக்கு ரெண்டு பேரும் ஒண்ணாதான் வந்திருந்தாங்க!

சண்முகண்ணாவிற்கு படிக்க வேண்டுமென்று ஆசை..ஆனால் காலேஜ் முதலாண்டிலேயே அவரது அப்பா மரணமடைந்துவிட, குடும்பப்பொறுப்பு அண்ணாவின் மேல். நான்கு சகோதரிகள் மற்றும் ஒரு தம்பி. சண்முகண்ணா இல்லாத காலேஜுக்கு பாபுண்ணா மட்டும் செல்வாரா என்ன..BRC & சன்ஸ் சவுண்ட் சர்வீஸலிருந்து ஆரம்பித்து இப்போது இருவரும் வியாபாரக் காந்தங்கள்!!

நாடோடிகள் பார்த்தேன். ஏனோ, நான் கடந்து வந்த இந்த ஜாலியான இளைஞர்களை நினைவுபடுத்தியது. காதலுக்கு உதவின அனுபவங்களை கேட்க வேண்டும்....அடுத்த முறை ஊருக்குச் செல்லும்போது!! எனக்குச் சொல்வதற்குத்தான் நிறைய இருக்கிறதே அண்ணன்களிடம்!!

பப்புவோடு சென்றிருந்தோம்.உதயம். 'அஞ்சாதே'விற்குப் பிறகு நாங்கள் பார்த்தத் திரைப்படம். பப்புவிற்கு முதல்முறையாக தியேட்டருக்குச் சென்றது நினைவிருக்க வாய்ப்புகள் இல்லை! "எப்போ வீட்டுக்குப் போலாம்” என்று கேட்டுக்கொண்டிருந்தவள், 30 நிமிடங்களில் உறங்கிவிட்டாள். :-)

பப்பு என்ன ட்ரெஸ் போடறதுன்னு நான் முடிவெடுத்தது போக,பதிலுக்கு என்னோட உடைகளை பப்புத்தான் முடிவெடுக்கிறாள். ஆரஞ்சு வண்ண உடை போட்டிருந்தாள். என்னோட சாய்ஸ்தான். ”சேம் கலர் சேம் கலர்”ன்னு என்னையும் அதே வண்ண ட்ரெஸ் போட வச்சுட்டா!அவ்வ்வ்! ஆரஞ்சு வண்ண உடையில் ஒரு அம்மாவும் குட்டிப்பெண்ணும் கடலலையில் விளையாடிகிட்டுருந்ததை ஞாயிற்றுக்கிழமை பார்த்திருந்தீங்கன்னா...ஹிஹி..அது நாங்கதான்!!

தலைப்பு : இது ஒரு சின்னவயசு விளையாட்டு. கிளாஸ் ரூமில் கூட விளையாடலாம். எந்த கலர் சொல்கிறார்களோ அந்த கலரை தொட வேண்டும். தொட முடியாதவர்கள் அவுட்.

Sunday, July 19, 2009

அந்த வானத்தைப் போல...பவர் கட்டான ஒரு இரவில், மாடியில் உணவுண்டோம், எமர்ஜென்சி விளக்கின் துணையோடு. அதோடு தெளிவான வானம். பப்புவிற்கு மிகவும் பிடித்திருந்தது போல. நிலாவை வரச்சொல்லு, நிலாவை வரச்சொல்லு என்று சொல்லிக்கொண்டிருந்தாள்.(மாதவராஜ் ஐயா இந்த இடுகையை முன்பே வெளியிட்டிருந்தால் அந்த ஐடியாவை ஃபாலோ செய்திருப்பேன்..!! ):-). ஒரு சார்ட் பேப்பரில் கருநீலத்தை முழுவதுமாக வண்ணம் தீட்டினாள். நட்சத்திரங்களையும், வெவ்வேறு அளவுகளில் நிலாக்களையும் வரைந்தேன். அதை வெட்டிக் கொடுக்கச் சொன்னேன். (ஒரு நட்சத்திரத்தின் ஐந்தாம் கை வெட்டுபட்டு போயிற்று!கண்டுக்காதீங்க!) ஒரு சிலவற்றை நுணுக்கமாக வெட்ட உதவி தேவைப்பட்டது. அனைத்தையும் ஒட்டினாள். ஒட்டுவது மிக விருப்பம் பப்புவிற்கு!முடிவில் எங்கள் வானம் - இப்படிதான் இருந்தது!

கொஞ்ச நாட்களாக நாங்கள் ஒரு புத்தகம் வாசிக்கிறோம்...பெரும்பாலும் தூங்கச் செல்லுமுன்!! Good Night Moon. பழமையான புத்தகம்தான்.எளிமையானது.திண்மையான பக்கங்கள் கொண்டது.விக்கியில் வாசிக்க.. Bedtime Stories சொல்லி நாந்தான் தூங்கிப் போயிருக்கிறேன்...பலமுறைகள்...ஆனால் இந்தப்புத்தகத்தை வாசித்து 5-10 நிமிடங்களில் பப்பு உறங்கிவிடுகிறாள்! நல்ல புத்தகம்தான்!!

Friday, July 17, 2009

என்ன கொடும குள்ளநரி இது!!!

யார் உங்கள மொட்ட அடிச்சா, முகிலப்பா?! - அவள் தூங்கிக்கொண்டிருக்கும் சமயம் முடித்திருத்திக்கொண்டு வந்த முகிலைப் பார்த்து!

“குள்ளநரி, பப்பு” - முகில்! (நான் புஜ்ஜி என்பதை நினைவிற் கொள்க!!)

”அதுக்குத்தான் ஓரத்துலே படுக்கக்கூடாது, அப்பா ஓரத்துலே படுத்திருந்தாங்க இல்ல, அதான் குள்ளநரி வந்து கட் பண்ணிடுச்சு”- இது நான்!

அதிலிருந்து பப்புவை காலையில் எழுப்பவும் சில சமயங்களின் கட்டிலின் மறுஓரத்தில் படுக்க அடம் பிடிக்க பப்புவை சமாளிக்கவும் “குள்ளநரி” உதவி செய்தது.

காலை 6.15-க்கு அப்படி சத்தம் கொடுத்துவிட்டு (யாராவது ஒருவர்தான்...ஹிஹி!) "குள்ளநரி வந்துடுச்சு போலிருக்கு” என்று சொன்னதும் எழுந்து உட்கார்ந்து விடுவாள்-குள்ளநரிதான் வந்துவிட்டது என்று நம்பி்!அப்புறம் என்ன...குள்ளநரியை தேடுகிற படலம் பாத்ரூமில் முடியும்!!

எல்லாம் நல்லாத்தான் போய்க்கிட்டிருந்துச்சு, இன்றுக்காலை ஏழு மணிக்கு அவள் என்னை எழுப்பும் வரை -

”ஸ்ஸ்..ஸ்ஸ்...குள்ளநரி வந்திருக்கு பாரு!!"

..என்று குள்ளநரி சத்தத்தைக் கொடுத்து!!

குறிப்பு :

இன்று பப்பு அவளது பள்ளியிலிருந்து முதல் ஃபீல்ட் ட்ரிப் சென்றுவிட்டு வந்திருக்கிறாள். (அதைப்பற்றி பிறிதொரு இடுகையில்!)

Thursday, July 16, 2009

பப்பு டைம்ஸ்

அம்மா, எனக்கு மருந்துக் குடுக்கக் கூடாதும்மா..குடுத்தீங்கன்னா அடிக் குடுத்துடுவேங்கம்மா!!

எவ்ளோ மரியாதை?!!தட்டிலிருந்த தோசைகளை மூவரின் தட்டுகளிலும் பகிர்ந்துக் கொண்டிருந்தேன்.

இது my plate!

இது அப்பாவோட my plate!

இது உன்னோட my plate!!

சிலசமயங்களில், what is mugil appa-வோட my name?!!ஆச்சி, உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்!

எனக்கும் உன்னை ரொம்ப பிடிக்கும் பப்பு!

எனக்கு பிடிக்கும்னு சொல்லும்போதுதான் உனக்கு என்னை பிடிக்குமா!?!

பவ்வ்வ்வ்வ்வ்!ஒரு மரத்துக்கீழே ஒரு புலி இருந்துச்சாம். அப்போ வர்ஷினி புலியை பார்த்துட்டு ஓடிபோய்டுச்சாம். அதுதான் கதை!


ஒருநாள் ஸ்டார் கீழே விழுந்துச்சாம். வர்ஷினி ஸ்டாரை எடுத்து சாப்பிட்டுச்சாம். ஸ்டாரை சாப்பிடலாமா? சாப்பிட்டா என்னா ஆகும்? பூச்சிதான வரும்! சாப்பிட்டுடுச்சு ஆச்சி, வர்ஷினி! அதான் கதை!


ஒரு காட்டுலே ஒரு புலி இருந்துச்சாம். அது எல்லா அனிமல்ஸையும் சாப்பிட்டுட்டே இருந்ததாம். செகண்டா ஒரு முயல் வந்துச்சாம். உன்னை மாதிரியே ஒரு புலி பாத்தேன்ன்னு கூப்டுச்சாம். கிணத்துலே ஒரு புலி இருந்துச்சாம். புலி, உன்னை கொல்றேன்ன்னு உள்ளே குதிச்சுதாம். அப்புறம் புலி செத்துபோச்சாம்!


இன்னொரு கதை சொல்லு பப்பு என்றதற்கு, அதே டெம்ப்ளேட்டில் புலிக்கு பதில் சிங்கமாக மாற்றிச் சொன்னாள்!ஹ்ம்ம்...அதோட நிறுத்தியிருக்கணும்!!ஹ்ம்ம்

கிஷோர் ஒரு நாள் ஒரு வொர்க் பண்ணிட்டு ரோல் பண்ணானாம். ஆன்ட்டி ரோல் பண்ணாதேன்னு சொன்னாங்களாம். கிஷோர் எப்போ வீட்டுக்கு போறதுன்னு அழுதானாம். வர்ஷினியும் கூட சேர்ந்து அழுதுச்சாம். அப்புறம் தூக்கிபோடவான்னு கேட்டேனாம். வர்ஷினியும் கிஷோரையும் தூக்கிப் போடவான்னு கேட்டேன். வர்ஷினின் அழுது முடிச்சுடுச்சு. கிஷோர் அழுதுட்டே இருந்தானாம். ”தூக்கிப் போடவா” ந்னு கிஷோரை தூக்கி போட்டுட்டேன்!

சரி, வன்முறை அதிகமாகுதுன்னு கதை கேட்டது போதும்னு விட்டுட்டேன்!விஜயின் பேட்டி ஏதோவொரு சேனலில் ஓடிக்கொண்டிருந்தது. விஜயின் ஒரு சில பாடல்காட்சிகள் தவிர வேறு எதையும் பார்த்திருக்கவில்லை, பப்பு! பேசிக்கொண்டிருந்த
விஜயைப் பார்த்த பப்புக் கேட்டாள்,

“ அந்த அங்கிள் சாஃப்டா இருப்பாரா?!”

அவளுக்கு ஏன் அப்படி ஒரு சந்தேகம் வந்ததென்றுத் தெரியவில்லை.

Wednesday, July 15, 2009

சுவாரசியமான வலைப்பதிவு விருதுகள்

எதிர்பாராமல் ஒரு கிடைத்த ஒரு பூச்செண்டு போல மிக்க மகிழ்ச்சியாக இருந்தது அமித்து அம்மாவிடமிருந்து கிடைத்த “சுவாரசியமான வலைப்பதிவு விருது”!

நன்றி அமித்து அம்மா !தொடங்கி வைத்த செந்தழல் ரவிக்கு நன்றிகள்!வலைப்பதிவுகளே சுவாரசியம்தானே! எனக்கு எல்லா வலைப்பதிவுகளுமே சுவாரசியம்தான். நாஸ்டால்ஜிக் இடுகைகள் பிடிக்கும் - நகைச்சுவை பிடிக்கும்- பயணக்கட்டுரைகளில்
புகைப்படம் பார்க்கப் பிடிக்கும் - மொக்கைகள் மிகவும் பிடிக்கும் -கதைகள் பிடிக்கும் -கவிதைகளும்தான் - அனுபவங்கள் பிடிக்கும் - நான் நினைப்பதை பிறர் அழகாக எழுத்தில் கொண்டுவருவதை படிக்கப் பிடிக்கும் - மொத்தத்தில் வலைப்பதிவுகளின் எல்லா சுவாரசியங்களுமே பிடிக்கும்! இதில் ஆறு பதிவுகளை மட்டும் தேர்ந்தெடுப்பது மிகவும் கடினம்தான்! எனினும், ஆறு வலைப்பதிவுகளுக்கு வழங்கியிருக்கிறேன். அதைத் தொடர்வது அவரவர் விருப்பம்!

ராப் : இவரது வலைப்பதிவு மட்டுமல்ல-பிறர் பதிவுகளில் இவர் என்ன மறுமொழி இட்டிருக்கிறார் என்று பார்த்து ரசிக்கும் அளவிற்கு இவரது ஸ்டைல் பிடிக்கும். காமெடியும், அதைச் சொல்லும் பாணியும் என்னை மிகவும் கவர்ந்தவை. எத்தனை முறை வேண்டுமானாலும் படித்து சிரிக்கலாம்! அலுவலகத்திலே பலமுறை வாய் விட்டு சிரித்திருக்கிறேன்! ராப்- யூ ஆர் ராக்கிங்!! வாழ்த்துகள் ராப்!!

தீபா : ஒரு சுவாரசியமான வலைப்பதிவுக்குச் சொந்தக்காரர். சமூகம்,சிந்தனைகள் என்ற லேபிளின் கீழ் வரும் இவரது, எல்லா படைப்புகளுமே என்னை கவர்ந்தவை. மிக அழகாக நாம் நினைப்பதையே எழுத்தில் கொண்டு வந்துவிடுவார். மிஷா-வை பற்றி எழுதியதில் இருந்து தொடர்ந்து இவரது பதிவுகளை வாசித்து வருகிறேன்! வாழ்த்துகள் தீபா!

கைப்புள்ள : கைப்புள்ள-இன் வலைப்பதிவில் சுவாரசியங்களுக்கு என்றுமேக் குறைவு இருந்ததில்லை. தடிப்பசங்க-லிருந்து, நாஸ்டால்ஜிக் இடுகைகள், பயணங்கள், அனுபவங்கள் என்று கலக்குவார். கலக்கலான வலைப்பூ.நெடுநாட்களாக ஒரு மௌனமான வாசிப்பாளராக இருந்து இப்போது அதையெல்லாம் மறுமொழிகளில் ஈடு கட்டிக் கொண்டிருக்கிறேன்! :-) வாழ்த்துகள் கைப்ஸ்!

ஈழத்துமுற்றம் : இது ஒரு குழு வலைப்பதிவு.மிக சுவாரசியமான வலைப்பதிவு.கானாவை எணேய் என்றால் என்ன அர்த்தம்,பாற்றரி-னே சொல்லுவீங்களா, ரீச்சர் எபப்டி கூப்பிடுவீங்க என்று நிறைய நாட்கள் தொணதொணத்து இருக்கிறேன்.அதற்கு எல்லாம் இனி இங்கே பதில் கிடைக்கும். இது ஈழத்து வாழ்க்கையை, அவர்கள் வாழ்க்கைமுறையை,
அனுபவங்களை அசைப்போடும் வலைப்பதிவு!எல்லாவற்றுக்கும் மேல் நீண்டநாட்கள் மௌனம் காத்த சிநேகிதியின் மௌனம் கலைத்த வலைப்பதிவு! எல்லாரையும் ஒருங்கிணைத்த கானாவிற்கு வாழ்த்துகளும் நன்றிகளும்!! தொடர்ந்து எழுதுங்கள் நண்பர்களே!!

சோம்பேறி : இவரது நகைச்சுவை பதிவுகளும் அவரது நகைச்சுவை பாணியுமே கலக்கலாக இருக்கும்! அவரது கேப்ஷன் மிகவும் பிடிக்கும்! 32 கேள்விகள் தொடர் பதிவும் , ரெண்டாப்பு படிச்சியாய்யா இடுகையும் ரசித்து படித்தவை! பள்ளி அல்லது கல்லூரி இந்தமாதிரி ஒருத்தர் இருந்தால் போதும்-சூழலை இயல்பாகவும் கலகலப்பாக்குவதற்கும்!! வாழ்த்துகள் சோம்பேறி!

சின்ன அம்மிணி : இவரது சிறுகதைகளும் அனுபவப்பகிர்வுகளும் மிகவும் பிடிக்கும்! ஆஸ்திரேலியா பற்றிய இடுகைகளும் சுவாரசியமானவை. இப்போது சமீபத்தில் மொக்கையிலும் குறைந்தவரில்லை என்று நிரூபித்திருக்கிறார். :-) வாழ்த்துகள் சின்ன அம்மிணி!


குறிப்பு:

நீங்களும் எல்லோருக்கும் இந்த விருதை பகிர்ந்துகொள்ளுங்கள், முக்கியமாக அந்த விருதுப் படத்தை உங்கள் ப்லாகில் இட்டுக்கொள்ளுங்கள்.

Tuesday, July 14, 2009

குட்டீஸ் கதை!

ஒரு ஈகிள் பறந்து வந்து நம்ம வீட்டுக் கதவை தட்டுச்சாம்.

“இங்கே யாராவது சோம்பேறி இருக்காங்களா, பால் டம்ளரை கையிலே வாங்கிக் குடிக்காம யாராவது இருக்காங்களா? அவங்களுக்கு ஒரு பார்சல் வந்துருக்கு”

(பால் டம்ளரை கையிலே வாங்கிக் குடிக்காம - அப்படின்னு வர்ற இடத்துலே என்ன வேணா போட்டுப்பேன்..அந்த நேரத்துக்குத் தகுந்த மாதிரி! அதாவது எந்த வேலை செய்ய வைக்க வேண்டுமோ அதைக் கொண்டு நிரப்பி விடுவது! சாக்ஸ் யாராவது போடாம இருக்காங்களா இல்லன்னா தலை சீவாம இருக்காங்களான்னு! உடனே பப்பு அதை செய்யவாரம்பிப்பாள்.ஹ்ம்ம்..அதெல்லாம் ஒரு காலம்! பால் டம்ளரைக் கையில் வாங்கியபின், குடிக்க வைக்க வேண்டுமே...கதை தொடர்கிறது!)

“இல்லையே, டம்ளரை வாங்கி பப்புவேதான் குடிக்கும்” அப்படின்னு சொன்னதும் டி2-க்கு போச்சாம் ஈகிள்.

ஜானகி ஆன்ட்டியோட அம்மா கதவைத் திறந்தாங்களாம். ஜானகி ஆன்ட்டி இட்லி சாப்பிட மாட்டேன்னு சொல்லிக்கிட்டிருந்தாங்களாம்.

“இங்கே யாராவது சோம்பேறி இருக்காங்களா, இட்லி சாப்பிடமாட்டேன்னு சொல்றாங்களா, அவங்களுக்கு ஒரு பார்சல் வந்திருக்கு” - ஈகிள் சொல்லுச்சாம்.

உடனே ஜானகி ஆன்ட்டி கடகடன்னு இட்லி சாப்பிட ஆரம்பிச்சாங்களாம்!

உடனே ஜானகி ஆன்ட்டியோட அம்மா ”இல்லையே, இங்கே அப்படி யாரும் இல்ல, ஜானகி ஆன்ட்டி இட்லி சாப்பிட்டுட்டாங்களே”ன்னு சொன்னாங்களாம்!

அப்புறம் ஈகிள் ஈ1-க்கு போச்சாம்.

அங்கே ஆதி “நான் யூனிஃபார்ம் போட்டுக்க மாட்டேன்”ன்னு சொல்லிக்கிட்டிருந்தானாம்.

“இங்கே யாராவது சோம்பேறி இருக்காங்களா, யூனிஃபார்ம் போட்டுக்க மாட்டேன்னு சொல்றாங்களா, அவங்களுக்கு ஒரு பார்சல் வந்திருக்கு” - ஈகிள் சொல்லுச்சாம்.

உடனே ஆதி யூனிஃபார்ம் போட்டுக்க ஆரம்பிச்சானாம்!

உடனே ஆதியோட அம்மா, “இல்லையே, ஆதி பாருங்க யூனிஃபார்ம் போட்டுக்கிட்டுருக்கான், நீங்க சொல்ற மாதிரி யாருமே இல்லையே இங்கே” ன்னு சொன்னாங்களாம்.

ஈகிள் இப்போ ஈ2 க்கு போச்சாம். அங்கே மோனேஷ் குளிக்க மாட்டேன்னு சொல்லிக்கிட்டிருந்தானாம். நவீன் தூங்கிக்கிட்டே இருந்தானாம்.

“இங்கே யாராவது சோம்பேறி இருக்காங்களா, குளிக்க மாட்டேன், பெட்-லேர்ந்து எழுந்துக்க மாட்டேன்னு சொல்றாங்களா, அவங்களுக்கு ஒரு பார்சல் வந்திருக்கு” - ஈகிள் சொல்லுச்சாம்.

ஈகிள் சொன்னதைக்கேட்டவுடனே மோனேஷ் பாத்ரூம்க்கு ஓடறானாம். நவீன் தூக்கத்தேலேருந்து எழுந்துட்டானாம்.

அவங்க அம்மா, “இல்லையே ஈகிள், எல்லாரும் ஸ்கூலுக்கு ரெடி ஆகிட்டிருக்காங்க”ன்னு சொன்னாங்களாம்!

ஈகிள் சோகமா ஈ3 க்கு போச்சாம், சிந்து வீட்டுக்கு. பார்த்தா... சிந்து, புத்தகம் தண்ணி பாட்டிலெல்லாம் எடுத்து வைக்காம அம்மாவை எடுத்து வைங்கன்னு சொல்லிக்கிருந்துச்சாம்.

“இங்கே யாராவது சோம்பேறி இருக்காங்களா, பேகை ரெடி பண்ண மாட்டேன்னு சொல்றாங்களா, அவங்களுக்கு ஒரு பார்சல் வந்திருக்கு” - ஈகிள் சொல்லுச்சாம்.

உடனே சிந்து பேகை எடுத்து வைக்குதாம். தண்ணி புடிச்சு பாட்டிலை ரெடி பண்ணுதாம்.

அவங்க அம்மா, “இல்லையே, இங்கே அப்படி யாரும் இல்லையே, சிந்து பாருங்க, ஸ்கூலுக்கு ரெடி ஆகிட்டிருக்காங்க”ன்னு சொன்னாங்களாம்!

உடனே ஈகிள் , “ இங்கே சோம்பேறின்னு யாரும் இல்லையா? அவங்க வீடு எங்கே இருக்குன்னு உங்களுக்குத் தெரியுமா?”ன்னு கேட்டுச்சாம்.

சிந்து அம்மா, இந்தத் தெருல்லாம் அப்படி யாரும் இல்லே, இங்கே சுறுசுறுப்பான குழந்தைங்கதான் இருக்காங்க,”ன்னு சொன்னாங்களாம்.

ஈகிள் பார்சலை எடுத்துக்கிட்டு வேற தெருலே சோம்பேறி யாராவது இருக்காங்களானு பார்த்துக்கிட்டு இருக்காம்!

குறிப்பு: இந்தக் கதை, “பரவாயில்ல ஆச்சி, நான் சோம்பேறியாவே இருக்கேன், பார்சல எனக்குக் கொடுக்கச் சொல்லு “ அப்படின்னு சொல்ற ஸ்டேஜ் வந்துட்டா உதவாது! இரண்டரை வயதிலிருந்து இந்தக் கதையைச் சொல்லிச் சொல்லி இப்போது பப்பு அந்த ஸ்டேஜுக்கு வந்துவிட்டாள்!! அவ்வ்வ்வ்!

Monday, July 13, 2009

பப்பு பள்ளியில் பெற்றோர் பட்டறை!

பப்பு பள்ளியில் கடந்த சனிக்கிழமை பெற்றோர் பட்டறை (workshop) வைத்திருந்தார்கள். காலையில் 10 மணிக்கு தொடங்கிய பட்டறை மதியம் 1 மணிக்கு முடிவுற்றது. மாண்டிசோரி முறைக்கல்வியை பற்றியும், இவர்களின் பள்ளிச் சூழலைப் பற்றியும், அணுகுமுறையைப் பற்றியும் பேசப்பட்டது. 11.30 மணிக்குப் பிறகு ஒரு மணிநேரம் - நாம் குழந்தைகளாக மாறி வகுப்பறையில் இருக்கும் உபகரணங்களை கையாளலாம். மாண்டிசோரி வகுப்பறைச் சூழலில் குழந்தைகளும் ஆண்ட்டியும் எப்படி communicate செய்துக் கொள்கிறார்கள் என்பதே நோக்கம்!

என் நினைவிலிருந்து சில பாயிண்ட்கள் :

1. மாண்டிசோரி சூழல் ஒரு prepared environment. 5 senses-ஐ அடிப்படையாகக் கொண்டது (EPL,Geography & Culture,Senses,Math etc). ஒரு வகுப்பில் 20-25 மாணாக்கர்கள் இருப்பர்.

2. 2.5 லிருந்து 3 வயது வரை குழந்தைகள் மிகவும் துறுதுறுவென்று இருக்கும். ஏனெனில் அந்தநேரம் தான் குழந்தைகளின் அறிந்துக்கொள்ளும் திறனும், மூளையும் செயல்பாடும் உச்சத்தில் இருக்கும். அதனால்தான் அவர்கள் ஒரு இடத்தில் நில்லாமல் அங்குமிங்கும் ஓடிக்கொண்டும் எல்லாவற்றையும் அறிந்துக்கொள்ளும் ஆர்வத்துடன் இருப்பார்கள். அந்தநேரத்தில் அவர்களுக்கானச் சூழலை ஏற்படுத்திக்கொடுப்பது நமது கடமை!

3.வகுப்பறையில் உபகரணங்கள் அடுக்கப்பட்டு இருக்கும். பிள்ளைகள் எதை வேண்டுமானாலும் எடுத்து உபயோக்கிக்கலாம். அவர்கள் எடுப்பது புதிதாக இருக்கும் பட்சத்தில் ஆனட்டி சொல்லித்தருவார்கள். உதவி தேவைப்படுமாயின் பெரியவர்களைக் கேட்க வேண்டுமென்று அறிந்துக்கொள்வார்கள்.

4. உபகரணங்களைக் கையாள்வது precised movements-ஆக. அதில் கட்டைவிரல்,ஆள்காட்டிவிரல், மோதிரவிரலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுச் செய்யப்படுகிறது. இது பின்னாளில் எழுதத் தொடங்கும்போது மிகவும் உதவியாக இருக்கும். சரியான பிடிப்பு, வேகத்தைக் கட்டுப்படுத்துவது போன்றவற்றை அவர்களுக்குத் தெரியாமலேயேக் கற்றுக்கொள்கிறார்கள்.

5. மலை அல்லது சூரியன் என்றதும் நாம் அதன் வடிவங்களின் மூலமே கற்பனைக் கொள்கிறோம். அதையேத்தான் மாண்டிசோரிச் சூழல் கடைப்பிடிக்கிறது. எல்லாமே வடிவங்களின் வழியாகவே - child size - குழந்தைகளின் பார்வையில்!!

6. இங்கு ஒருவருக்கொருவர் ஒப்பீடு கிடையாது. எல்லா குழந்தைகளுமே தனித்தன்மையானவர்கள் என்று நம்புகிறோம். “அந்தக் குழந்தைச் செய்யும்போது உன்னால் ஏன் செய்ய முடியவில்லை” என்று கேள்வி இங்குக் கிடையாது. ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் எல்லாத் திறமைகளுமே ஒளிந்திருக்கிறது. அந்தத் திறமைகளை வெளிவர வெளிக்கொண்டு வர நேரம்தான் முக்கியம்.

7. ஆன்ட்டி என்று ஏன் அழைக்கச் சொல்கிறோமென்றால், ஒரு பழகிய உணர்வு வருவதற்காகவே! அணுகக்கூடாதவர்களல்லவென்றோ அல்லது ஒரு பயத்தையோ உண்டாக்காமல் இருப்பதற்காகவும். இங்கு யாரும் சத்தம் போட்டுக்கூட பேசுவது கிடையாது. புது ஆக்டிவிட்டி கற்றுக்கொடுக்கும்போது, செயல்முறை மட்டும்தான். பேசுவது கிடையாது. (”வொர்க் பண்ணும்போது பேசக் கூடாது” என்று நாங்கள் விளையாடும்போது பப்பு சொல்லியிருக்கிறாள்.)
சில அடிப்படியான மாண்டிசோரி ஆக்டிவிட்டீஸை செய்துக் காட்டினார்கள்.

காயின் பாக்ஸ் :

பாக்ஸிலிருக்கும் எல்லா பிளாஸ்டிக் நாணயங்களையும் ஒவ்வொன்றாக எடுத்து வைத்து விட்டு, அதனுள் ஒவ்வொன்றாக போடுதல் - சத்தம் வராமல் - பின்னாளில் கணிதம் கற்க இந்தமுறை உபயோகப்படும்.

போரிங் :

கீழே தண்ணீர் ஊறாத ஒரு தடுப்பினை போட்டபின், ஒரு கிண்ணத்திலிருந்து இன்னொரு கிண்னத்திற்கு மாற்றுதல் - கடைசிச் சொட்டு அடுத்தப் பாத்தரத்தில் விழும்வரை காத்திருந்து பின் எல்லாவற்றையும் அதன் இடத்தில் வைத்தல். பொறுமை, வேகத்தை கட்டுப்படுத்துதல், மேலும் தவறு செய்தால் திருத்திக்கொள்வதை அறிந்துக் கொள்கிறார்கள்.

துணிக்கிளிப்-கள் - மூன்று விரல்களை ஒருங்கிணைக்கும் பயிற்சி.

இதையெல்லாம் எப்படிச் சொல்லித்தருவார்களென்றும் செய்துக் காட்டினார்கள். அதாவது one-to-one communication. மேலுன் இந்த உபகரணங்கள் எல்லாம் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். குழந்தைகளுக்குத் தேவையான உபகரணத்தை அவர்கள் தேர்ந்தெடுக்கலாம். யாராவது உபயோகித்துக் கொண்டிருந்தால், அது வரும் வரை காத்திருந்து, விரும்பும் உபகரணம் வந்தபின் எடுத்துக்கொள்ள வேண்டும். உபயோகித்தபின் திரும்ப அதன் இடத்தில் கொண்டு வைக்க வேண்டும். freedom & discipline!

EPL : Exercises of Practical Life

இது வாழ்க்கையின் நாம் அன்றாடம் செய்யக் கூடிய வேலைகளுக்குத் தயார்படுத்துவது.
கோப்பைகளை அடுக்கி எடுத்து வருவது, பேனா, கத்தரிக்கோல் கேட்டால் கொடுக்கும் முறைகள் முதலியன. ஆண்ட்டி சொன்னது, “நீங்கள் சாப்பிடும்போது உங்கள் குழ்னதைகளையே பரிமாற்ச் சொல்லுங்கள். சாம்பார் கொட்டிடுவாங்க என்றோ ஊத்திடுவாங்க என்றோ பயப்படாதீர்கள். அவர்கள் கீழேச் சிந்தமாட்டார்கள். ஏனெனில் சிந்தினால் அவர்கள்தான் துடைக்க வேண்டுமென்று அவர்களுக்குத் தெரியும். இங்கேக் கூட தண்ணீர் வைத்துச் செய்யும் எந்த ஆக்டிவிட்டியிலும் கீழே சிந்த மாட்டார்கள். ஏனெனில் அந்த உபகரணத்தோடு துடைக்க ஒரு துணியும் இருக்கும். கற்றுக்கொள்ளும்போது ஓஇரு முறை சிந்தொவிடும். அந்தத் துணி ஈரமாகிவிட்டால் அதை வைத்துவிட்டு, வேறு துணி எடுத்து வைக்கவேண்டும். அதை மாற்றுவதற்குப் பதில் அவர்கள் கீழே சிந்தாமல் பொறுமையாகச் செய்வார்கள்.”

silent hour : தரையில் சம்மணமிட்டு உட்கார்ந்தபடி முதலில் கைகளை கீழே தரையில் ஊன்றிக்கொண்டு, கண்களை மூடுயபடி அமர்ந்திருக்க வேண்டும். அது பழக்கமானபின் கைகளை கட்டிக்கொண்டு கண்கள் மூடியபடி. இது பழகியபின் உலலையும் மனதையும் மெதுவாக ஒருங்கிணைக்கும் பயிற்சி. (பப்பு என்னை சில சமயங்களில், close your eyes என்று சொல்லியிருக்கிறாள். அவளுக்கு முன் கைகளை கட்டி ஒற்றைக்கண்ணால் பார்த்தபடி அமர்ந்திருக்கிறேன். அவளும் ஒற்றைக்கண்ணால் நான் கண்கள திறந்திருப்பதை கண்டுபிடித்துவிடுவாள்!!)


Sensory : சிலிண்டர் ப்ளாக்ஸ், பிங்க் டவர் முதலியன்

இவை எல்லாமே ஒரு செமீ-யிலிருந்து 10 செமீ பரிமாணத்தில் அமைந்தவை - 10 பொருட்கள். உபயோகிக்க வேண்டும் பட்சத்தில் அதன் இருப்பிடத்திலிருந்து ஒவ்வொன்றாக குழந்தைகளின் இடத்திற்கு எடுத்து வர வேண்டும். அதைச் செய்து முடித்தபின் ஒவ்வொன்றாக எடுத்துச் சென்று அதன் இடத்தில் வைக்க வேண்டும்.

டச் போர்ட் : இது சொரசொரப்பான பகுதியும் மெதுவாக பகுதியும் கொண்ட ஒரு போர்டு. அதனை கைகளால் தடவிப் பார்த்து உணர்ந்துக்கொள்வதற்காக - இதில் வெர்ஷன்களும் உண்டு. இரு விரல்கள் கொண்டு உபயோகிப்பது முதல் நான்கு விரல்களைக் கொண்டு உபயோகிப்பது வரை. அதன்பின் geometric tray, binomial cube முதலியன் பற்றி.


மொழி : முதலில் எல்லா எழுத்துகளும் சப்தங்களின் மூலமே கற்றுத் தரப்படும். சப்தங்களைக் கொண்டு வார்த்தைகளை அவர்கள் சொல்வது, எழுத்துகளை சாண்ட் பேப்பரில் தொட்டு உணரச் செய்வது முதலியன. உங்கள் குழந்தை வீட்டுப்பாடத்தில் முடிந்தவரை நேரடியாக உதவுவதைத் தவிருங்கள். (எ.கா-ஆக, e-இல் ஆரம்பிக்கும் 5 வார்த்தைகள் என்றால் உடனே சொல்லி விடாதீர்கள். அவர்களாகவே யோசித்து சொல்லட்டும்.)

எண்கள் : தீஷூ சொல்லியிருந்தது போல மணிகளைக் கொண்டுதான் எண்கள் பயிற்றுவிக்கபபடுகிறது. பத்து பத்தாக கோர்க்கப்பட்டவை, அவற்றைக் கொண்டு கோர்க்கப்பட்ட 100 மணிகள் கொண்டவை, பத்து நூறுகள் சேர்ந்த 1000 மணிகள் கொண்டவையென்று. எண்கள் அதன் அளவுகளை கொண்டு கற்றுக்கொடுக்கப்படுவதால் apacus க்கு அனுப்ப வேண்டாமென்று சொன்னார் ஆண்ட்டி.

பெற்றோர்களின் கேள்விகள் :

பெற்றோர் 1 : ரொம்ப கொஞ்சமா ஹோம்ஒர்க் கொடுக்கறீங்க. அதிகம் டீவி பாக்கறாங்க. நீங்க இன்னும் கொஞ்சம் அதிகமா ஹோம்-ஒர்க் கொடுத்தீங்கன்னா அவங்க அதிலியே நேரம் செலவழிப்பாங்க.

ஆன்ட்டி : பள்ளியில்தான் அவர்கள் நிறைய வொர்க் செய்ய வேண்டுமேத் தவிர ஹோம் ஒர்க் கொடுப்பதில் விருப்பம் இல்லை. நீங்கள் குழந்தையுடன் நேரம் செலவிடுங்கள். கார்ட்டூன்கள் அதிகம் பார்க்க விடாதீர்கள். (குறிப்பு : ஹோம்ஒர்க் 5 வயதுக்கு மேலிருந்துதான் ஆரம்பமாகிறது!)


பெற்றோர் 2 : ரொம்பச் சேட்டை பண்றான்.வீட்டுலே சமாளிக்க முடியலை. ஏதாவது க்ளாஸ்-க்கு அனுப்பலாமா?

உங்க பிள்ளைக்கு 2.5 தானே ஆகுது. அப்படித்தான் இருப்பாங்க. க்ளாஸ் எல்லாம் டூ யர்லி. வெளிலே எங்கேயாவது கூட்டிட்டு போங்க. பெயிண்டிங் க்ளாஸ் அனுப்பலாம்.

(இன்னும் நிறைய கேட்டாங்க, மனதில் நின்றது இந்தக் கேள்விகள்தான்!நான் என்னென்ன ஆக்டிவிட்டீஸ் செய்து பல்பு வாங்கினேன் என்பதை பிறிதொரு இடுகையில் எழுதுகிறேன்!)

Saturday, July 11, 2009

விலங்குகளின் காலடித் தடங்கள்
”கோழிக்கு கால் ஏன் இப்படி இருக்கு” என்றும் ”வாத்தின் கால் ஏன் இப்படி இருக்கு” என்றும் பப்பு கேட்டபின் தோன்றிய ஐடியா இது. அவளிடமிருந்த விலங்கு பொம்மைகளின் காலடித் தடங்களை பேப்பரில் பதிக்கலாமென்று சொல்லி ஒரு “எறும்புத்தின்னி”யின் காலடியை பதித்துக் காட்டினேன். மீதியை அவளாகவேச் செய்தாள். சிறு பொம்மைகளாக இருந்தபடியால் எல்லாமே ஒரே மாதிரி நீள்வட்டமாக வந்தது.ஆனாலும், விடாமல் எல்லா விலங்குகளின் கால் தடங்களையும் செய்து முடித்தாள்.

Thursday, July 09, 2009

வாசகர் எனக்கும் கடிதம் எழுதிட்டாரே!!

இப்போ வாசகர் கடிதம் போடறதுதானே ட்ரெண்ட். வாசகர், கடிதம் போடலைன்னா என்ன, வாசகர்-கிட்டே கேட்டுடவேண்டியதுதான்னு...அமித்து அம்மாகிட்டே கேட்டேன்! பார்த்த பார்வையே சரியில்லை! அப்புறம் ராப்..எல்லோரும் முறைச்ச முறைப்பிலே..
சரி...இருக்கவே இருக்காரு முகில்! நடுவுலே ஆயாவும், பப்புவும் கூட எழுதியிருக்காங்களாம்!! ஓவர் டூ முகில்!


ஆச்சி,

உண்மையில் இதை ஒரு பதிவா எழுதத்தான் திட்டமி்ட்டு இருந்தேன்! "பிரபல பதிவரின்" கணவராயிருப்பதின் சங்கடங்கள்னு! நீயே கேட்டுட்டதாலே ஒரு கடிதமா எழுதிடறேன்! ஆச்சி, தயவுசெய்து பிளாக் எழுதறதை நிறுத்திடு..என்னாலே சாப்பிட முடியலை...காபி குடிக்க
முடியலை..பின்னே நான் சமைச்ச சாப்பாட்டை எவ்வளவு நாள்தான் சாப்பிடறது! நம்ம சமையலறை பக்கம் நீ வந்து எவ்ளோ நாள் ஆச்சுன்னு கொஞ்சம் நினைச்சு பாரு? நீ செஞ்ச ஒரே டிஷ் தயிர்.அதைக்கூட விட்டுவைக்காம நீ பிலாகிலே போட்டுகிட்டே! அவ்வ்வ்!

எங்களாலே இதுக்கும் மேலேயும் கொடுமையை தாங்க முடியாது! நீ எழுதறதை படிச்சியா படிச்சியான்னு கேக்கறே, படிச்சேன்னு சொன்னாலும் நம்பாம பிரிண்ட் அவுட் எடுத்து
உன் முன்னாலே படிக்கச் சொல்றே! அதைக்கூட தாங்கிக்கலாம். ஆனா இன்னொரு கொடுமை இருக்கே!உன் போஸ்ட்-க்கு நீ ஓட்டு போட்டுக்காலாம்! ஆன்னா என்னோட யாஹூ ஐடிலேருந்தும் போடனும்னு அடம் பிடிக்கிறியே..உனக்கே மனசாட்சி இல்லையா? அப்படி ஓட்டு போட்டது இப்போ ஒரு லெட்டர் எழுதறதுலே வந்து நிக்குது! அன்னைக்கு அப்படித்தான் நடுராத்திரியிலே எழுந்து லாப்டாப்போட உட்கார்ந்து இருக்கே! கேட்டா பிரபல பதிவருக்கு கணவரா இருக்கறது ஒன்னும் சாதரணமான விஷயம் இல்லேங்கறே! ஹ்ம்ம்!அப்புறம் நேரிலே பேசும் போது கூட "அவ்வ்வ்வ்" ன்னு சில சமயம் ஊளையிடறியே..கமெண்ட்-லே போடலாம்..அதுக்காக நேரிலயுமா?! அவ்வ்வ்வ்! ஏதாவது சொன்னா பிரபல பதிவரோட கணவரா இருக்க கத்துக்கோன்னு சொல்றே!

இரு, ஆயாவும் ஏதோ சொல்லணுமாம்..." ஆனந்த விகடனே எங்க பிலாக்கர் -சோடதுதான்....இனிமே வாங்க வேண்டாம்னு நிறுத்திட்டு, கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்க, பிலாக்லே போட்டதும் பிரின்ட் அவுட் எடுத்து தர்றேன்னு ரெண்டு வாரம் கழித்து கதைகளை எடுத்துக்கிட்டு வந்துத் தர்றே...ஏதோ ஒரு சில சமயங்களில், ஆவியை நான் திட்டியிருக்கேந்தான்..அதுக்காக,60 வருஷமா படிச்சுக்கிட்டு இருக்கேனே...இப்படி திடீர்ன்னு நிறுத்தினா!இது உனக்கே நல்லாருக்கா?!!"

சரி, ஆயாவைத்தான் இப்படி பண்றேன்னு பார்த்த சின்ன குழந்தை பப்பு..அதுக்கூட நீ விளையாடணும்னு இந்த் ஆக்டிவிடிலலாம் செய்றியா இல்ல ப்லாக்லே போடணும்கிறதுக்காக செய்றியா..எனக்கு ஒன்னும் புரியலை....இதோ பப்புவே சொல்றா..."ஆச்சி, தயவு செஞ்சு ப்லக் எழுதறதை நிறுத்திடு..நீ எழுதறதுக்காக என்னை விளையாட விடாம, அதைச் செய், இதைச் செய்-னு என்னை எவ்ளோ படுத்தறேன்னு எனக்குத்தான் தெரியும். அதுக்குமேலே பப்புவுக்கு கடிதங்கள்-னு எனக்கு லெட்டர்ல்லாம் வேறே எழுதறியாமே..உனக்கு என்ன குச் குச் ஹோதா ஹே ராணி முகர்ஜின்னு நினைப்பா?! இதுலே 12 கேள்விகள்-ன்னு வேறே படுத்தினே!
இதுக்கு மேலேயும் நீ திருந்தப் போறியா இல்லையா?!!"

பப்பு விளையாட போய்டுச்சு. நாந்தான் எழுதறேன் இப்போ! போஸ்டை போட வேண்டியது.. கமெண்ட் வருதா வருதான்னு நொடிக்கொரு தடவை பார்க்கவேண்டியது..வரலைன்னா
நான் எனக்காகத்தானே எழுதறேன்னு சொல்லிக்க வேண்டியது....கமெண்ட்ஸ் வந்துச்சுன்னா உடனே "பிரபல பதிவர்"ன்னு சொல்லிக்கவேண்டியது! யாரை ஏமாத்தறே நீ!!

இந்த லெட்டரைக்கூட நீ பிலாக்கிலே போட்டுப்பேன்னு எனக்குத் தெரியும், கொஞ்சம்கூட சங்கோஜப்படாம! எப்போதான் திருந்தப் போறியோ?!! பிலாக்கரை இனிமே காசு கொடுத்துதான் உபயோகிக்கணும்னு சொல்லிட்டா அப்போத் தெரியும் உன் நிலைமை....:-))

வாசகராக மாற்றப்பட்ட
உன் கணவன்
முகில்!

Tuesday, July 07, 2009

உனக்குப் பிடித்த சாக்லேட் கூட....

பப்பு,

இந்த கடிதத்தை நீ பலதடவைகள், உன் வாழ்வின் வெவ்வேறு காலகட்டங்களில் வாசித்து பார்க்க வேண்டுமென ஆசைப்படுகிறேன் பப்பு. குறிப்பாக உனது டீனேஜில்!

நாம் ஒரு புத்தகம் வாசித்துக்கொண்டு இருந்தோம் பப்பு, அதில் நிறைய சிறுவர்கள் இருந்தார்கள்....வெவ்வேறான கலரிலே, ஃப்ரௌன், டார்க் ஃப்ரௌன், வெளுப்பு என்று. ”ஏன் அவங்க வேறவேற கலரிலே இருக்காங்க” என்றுக் கேட்டாய்! 'ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு கலரிலே இருப்பாங்க, அவங்கவங்க இடத்துக்கு தகுந்தமாதிரி, அப்பா அம்மா மாதிரி' என்றேன். சிறிதுநேரம் கழித்து, என் கைக்கருகில் உனது கையை வைத்துப் பார்த்துக்கொண்டாய். 'ஏன் என் கை கருப்பா இருக்கு' - என்று கேட்டாய்!

”ஏன்னா பப்பு, உன்னோட அம்மாவும் கருப்பு. அப்பாவும் கருப்பு” என்றேன். நீயும் அமைதியாகிவிட்டாய். ஆனால், உன் மனதில் என்ன ஓடிக்கொண்டிருந்தது என்று நானறிந்திருக்க வில்லை. முன்பு நானும் உன்னைப் போல இருந்திருக்கிறேன்! நான் சொல்ல வருவதெல்லாம் ஒன்றுதான் பப்பு, ”கருப்பா இருக்கிறது ஒன்னும் தப்பு இல்ல". அது உனது கம்பீரம். உனது வசீகரம். நமது ஊரின், பரம்பரையின் அடையாளம். Above all, we should love our body! உடலின் சருமம் கருப்பாயிருந்தாலும் உன் மனம் எப்படியிருக்கிறது என்பதுதான் முக்கியம் என்று நான் பயிற்றுவிக்கப்பட்டேன்! நீயும் கற்றுக்கொள்வாய்! ஆனால் பப்பு, அதற்கு முன்னால் கொஞ்சம் அனுபவப்படவேண்டியிருக்கும்!

என்னுடைய சொந்தக்கார பசங்க (மாமா பசங்க, அத்தை பசங்க) எல்லாரையும் விட நான் கரு்ப்பு. விடுமுறையில் நாங்களனைவரும் ஒன்றாக வடலூரிலேதான் இருப்போம், மே மாதம் முழுவதும்! நிறைய விளையாடுவோம், சண்டையும் போட்டுக்கொள்வோம்! அப்போது அவர்கள் என்னுடைய நிறத்தை வைத்து கிண்டல் செய்வார்கள்! பெரியவர்கள் யாராவது கூடவே இருந்தா அப்படியெல்லாம் சொல்ல மாட்டார்கள்...ஆனால் எல்லா நேரங்களிலும் பெரியவர்களால் கூடவே இருக்க முடியாதே! உனக்கும் கூட இதேமாதிரி நிலைமை வரலாம், உன்னைக் காப்பாற்ற நான் கூட இருக்க வேண்டுமென்று நினைப்பதை விட நீயே அதை கையாளவேண்டுமென்று நினைக்கிறேன் பப்பு!

அவர்கள் அப்படி கிண்டல் செய்யும்போது நான் அதை என் காதிலேயே வாங்கிக்கொள்ளவில்லை! நான் அவர்களை முழுவதுமாக இக்னோர் பண்ணிவிட்டேன் பப்பு! ஏனெனில், தோலின் நிறத்தைவிட பப்பு, மூளையின் திறமைதான் வலிமையானதென்று நம்பினேன்! அடுத்ததடவை லீவுக்குப் போகும்போதும் இதே மாதிரி நிகழ்ந்ததது பப்பு! நான் அவர்களை பார்த்து கேட்டது இதுதான், உங்கள் முடியின் நிறம் என்ன? உங்கள் பாதத்தின் நிறம் என்ன? எந்த நிறத்தைத் தலையிலும் எந்த நிறத்தை காலின்கீழும் வைத்துக்கொண்டு நடக்கிறீர்களென்று! (Thanks to my zoology teacher!) அதன்பின் அதைப்பற்றிய கிண்டல்கள் எதையும் காணோம்!

நீயும் இதையேத்தான் கையாளவேண்டுமென்று நான் சொல்ல வரவில்லை!உன் டீனேஜில் அழகு க்ரீம்களை நீ என்னிடம் கேட்கலாம், பப்பு. நான் மறுக்கப்போவதில்லை.ஆனால் தோலின் நிறத்தை எதுவும் நிரந்தரமாக மாற்றிவிட முடியாதென்ற தெளிவும் உனக்கு அவசியம் என்று ஆசைப்படுகிறேன்! ஆனால், தோலின் நிறம் குறித்த சர்ச்சைகள், விளம்பரங்கள் உன்னை பாதிக்காமல் பார்த்துக்கொள் என்றுதான் சொல்ல வருகிறேன்!

ஏனெனில், பப்பு கருப்பு நிறம் உண்மையில் நல்லது. அதனுள் நீ மிகவும் பாதுகாப்பாக உணர்வாய்! வெண்சருமம் கொண்டவர் கடக்க முடியாத இடங்களை, மேற்கொள்ள முடியாத பயணங்களை நீ எளிதாக கடக்கலாம்!அவர்களின் எல்லைகளைவிட உன் எல்லைகள் இன்னும் விரிந்தது. உன்னை கட்டுபடுத்தாதது! எல்லாவற்றுக்கும் மேல், பியிங் டார்க் இஸ் ஃபன்!


இந்தப் பாதையை உனக்கு முன் கடந்துசென்ற
தன் தோலின் நிறத்தை நேசிக்கிற
உன் அம்மா!

Monday, July 06, 2009

'மயில்' விஜிராமின் ஐடியா!

"ஒரு ஆப்பிளுக்குள்ளே எத்தனை விதைகள் இருக்குன்னு நம்மாலே எண்ண முடியும். ஆனா, ஒரு ஆப்பிள் விதைக்குள்ளே எத்தனை ஆப்பிள்கள் இருக்குன்னு நம்மாலே எண்ண முடியுமா?” - எப்போதோ படித்தது இது. ஒவ்வொரு நாளும் நமக்குள்ளே எத்தனையோ ஐடியாக்களும், நம்மை நோக்கி பல வாய்ப்புகளும் வருகின்றன. ஆனா அதையெல்லாம் நாம் முறையாகப் பயன்படுத்திக் கொள்கிறோமா? நமக்குள் ஆர்வம் இருந்தாலும், நமக்கேத் தெரியாமல் உள்ளே இருக்கும் ஒரு மெத்தனத்தினால் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

எனது அத்தை, அதிகம் படித்ததில்லை. அந்தக் காலத்து பியூசி. அவர் ஊருக்குச் செல்கின்றார் என்று வைத்துக் கொள்ளுங்கள். குறைந்த பட்சம் நான்கு நாட்களுக்குத் தேவையான யாவற்றையும் திட்டமிட்டு அவர் இல்லாவிட்டாலும் இங்கே வீட்டில் எல்லா வேலைகளும் நடக்கும் அளவிற்கு பார்த்துக் கொள்வார். தோட்டத்திற்கு நீருற்றுவதிலிருந்து, மாடுகளுக்கு உணவு வைப்பது, கூண்டிலிருக்கும் பறவைகளுக்கு கவனிப்பு எல்லாவற்றுக்கும் மேலாக வீட்டிலிருப்பவர்களுக்கு இன்ஸ்டண்ட் சாப்பாடுகளும்! அவர் மட்டும் கார்ப்பரேட் பக்கம் வந்திருந்தால் எவ்வளவு பெரிய ஆளாக இருந்திருப்பார் என்று வியப்பதுண்டு. அவ்வளவு ஏன்?நமது எல்லோர் குடும்பங்களிலேயும் எடுத்துக் கொள்ளுங்களேன். சரியான திட்டமிடல், உரிய நேரத்திற்கு செய்து முடிக்கும் பாங்கு, எந்த காரியம் நடக்க யாரை அணுகுவது என்று அசத்தினாலும் அவர்களது குடும்பத்தைத் தாண்டி இந்தத் திறமைகள் வெளியே வருவதில்லை.

இதையெல்லாம் எதற்குச் சொல்கிறேனென்றால், 'மயில்' விஜிராம் ஒரு நல்ல ஐடியாவுடன் வந்திருக்கிறார். அம்மாக்கள் வலைப்பூவில் சொல்லியிருப்பதை இங்கே பகிர்ந்துக் கொள்கிறேன்!


”பதிவுலக நண்பர்களே!!

நம் இந்த பதிவுகளின் மூலம் எத்தனையோ கருத்துகளை பரிமாறிக்கொள்கிறோம், விருப்பு, வெறுப்பு, சந்தோசம், மறுப்பு, கோபம் எல்லாமே. வெறும் கருத்து பரிமாற்றமாக இல்லாமல் இதை ஏன் ஒரு முதலீடாக நாம் எடுத்து கொள்ள கூடாது?

என்ன சொல்ல வருகிறேன் என்று புரியவில்லையா? ஒரு சின்ன தொழிலோ பெரிய தொழிலோ துவங்குவதும் வளர்ப்பதும் வாடிக்கையாளர்கள் தான், இங்கே நாமே வாடிக்கையாளராக இருக்கலாம், நாமே முதலாளி என்றும் ஆகலாம்.

இந்த பதிவுலகில் எத்தனை பேர் இருக்கிறோம்? நமக்கு எவ்வளவோ தேவைகள் இருக்கும், துணிகள், பாத்திரங்கள், கல்வி பற்றிய அறிவுரைகள், வழிகாட்டுதல், பங்கு சந்தை பற்றிய விபரம், வீட்டு மனை, திருமணம், இன்னும் பல பல...

நாம் அம்மாக்களின் வலைப்பூவில் இருந்து ஒரு தொழில் அல்லது நிறுவன வலைப்போவை உருவாக்கலாம் என்று நினைக்கிறேன். என் ஐடியா இது, உங்கள் கருத்துகளை அறிந்த பின் மட்டுமே அடுத்த கட்டம் பற்றி விவாத்திக்க வேண்டும்.

ஒரு event management கம்பெனி ஆரம்பித்தால் என்ன? அதற்கு தேவை நெறைய தொடர்புகள், புதிதாக யோசிக்கும் தன்மை, பேச்சு திறன், திட்டமிடல், குறித்த நேரத்தில் செய்து தருதல் போன்றவை. இதற்கு நாம் பெரிதாக பண முதலீட்டு தேவை இருக்காது. கம்ப்யூட்டர் மற்றும் நெறைய ஆட்கள் தொடர்பிருந்தால், அந்தந்த ஊரில் நாம் செய்யலாம்.

ஒரே பெயரில் ஒரு கம்பெனி ஆரம்பிக்கலாம், அதில் யார் எந்த ஊரில் இருக்கோமோ அதை கிளைகளாக கொள்ளலாம், புதிய பொருள் அறிமுகம், சிறிய மற்றும் பெரிய நிறுவன நிகழ்ச்சிகள், கல்லூரி கலை நிகழ்ச்சிகள், பேஷன் ஷோ, குழந்தைகள் பிறந்த நாள் விழா, இன்னும். வேலைக்கு ஆட்கள் என்பது நெறைய மாணவர்கள் பகுதி நேரமாக வேலை பார்க்க கிடைப்பார்கள். முதல் ஒரு வருடம் நாம் லாப நோக்கு இல்லாமல் உலத்தல் கண்டிப்பாக பெரிய அளவில் வளரலாம். event management என்பது மட்டும் இல்லாமல் ஒரு HR, என்றும் கூட விரிவு படுத்த வாய்ப்புள்ளது. கண்டிப்பாக நம் வலையுலக நண்பர்கள் அனைவரும் உற்சாக படுத்துவார்கள், வாய்ப்புகளும் தருவார்கள்.

உங்கள் கருத்துகளை ஆவலுடன் எதிர் நோக்குகிறோம்.
www. ojasvi.co.in - பார்வையிடுங்கள், அல்லது info@ojasvi.co.in , மெயில்பண்ணுங்கள், அல்லது சந்தன முல்லையின் மெயில் முகவரிக்கு உங்கள் கருத்துகளை அனுப்புங்கள்.”

Saturday, July 04, 2009

லேடி இன் ரெட்!!

பப்புவின் பள்ளியில் கடந்த 26ஆம் தேதி - ரெட் டே! எல்லோரும் ரெட் வண்ண் உடையில் வர வேண்டும். யதேச்சையாக வாங்கிய சிவப்பு-மஞ்சள் பாவாடை சட்டை இருந்தது! அதையே போட்டு அனுப்பலாம் என்று நினைத்திருந்தேன். என் அலுவலகத் தோழியிடம் சொன்னபோது, ”எவ்ளோ அழகழகா ட்ரெஸ் இருக்கு, ஆரெம்கேவிலே! வாங்கி போடேன்” என்றாள். நான் கொடுத்த லுக் பார்த்துவிட்டு, ”நீ கண்டிப்பா வாங்க போறதில்லே, எனக்கு நல்லாத் தெரியும்! சே, பையனை வச்சிக்கிட்டு எனக்கு எப்படி இருக்குத் தெரியுமா, பொண்ணை எவ்ளோ அழகா அனுப்பலாம். ரெட் கலர் வளையல், ஹேர்பின், மணியெல்லாம் போட்டு அனுப்பு, எங்க அக்கா ப்ரீத்தாக்கு அப்படிதான் பண்ணுவா” என்று சொல்ல, அவளது உற்சாகம் என்னைத் தொற்றிக் கொண்டது. புதுஉடையெல்லாம் வாங்கவில்லை...ஆனால் ரெட் நெய்ல்பாலிஷ், நெத்திசுட்டி, ஹேர் க்ளிப்ஸ் வாங்கினோம். வளையலும் கழுத்தில் போட்டுக்கொள்ளும் மணி அம்மா வாங்கி வந்தது வீட்டிலேயே இருந்தது!

ரெட் டே அன்று இப்படித்தான் இருந்தாள் பப்பு. கைகளில் நகப்பூச்சு இருப்பதால் நீண்டநேரம் அப்படியே வைத்திருந்தாள். முந்தினநாளிரவே கைகளில் பூசியாயிற்று.நகப்பூச்சு போயவிடுமென்று காலையில் பல்துலக்க மறுத்துவிட்டாள். மறுபடியும் போட்டுக்கொள்ள அனுமதித்தபிறகே குளியலறைக்குள் நுழைந்தாள். தீம் டே அன்று பள்ளி நேரம் முடிந்ததும் நாமும் பள்ளிக்கு சென்று பார்க்கலாம், ஆன்ட்டியை சந்திக்கலாம். பள்ளியில் எல்லாமே ரெட் கலர்தான் - பூக்கள், காய்கறிகள், செய்த கலரிங் வேலை ஸ்ட்ராபெர்ரி, தர்பூசணி வில்லை என்று!

ஆண்ட்டியிடம் பேசினேன். வகுப்பில் மற்றவருக்கு தொல்லை தருவதில்லை. மிகவும் நல்ல பெண் . வர்ஷினியோடு சேர்ந்துதான் எதையுமே செய்ய பிரியப்படுகிறாள். இப்போதும் அழுவது தொடர்கிறது, ஒருசில நாட்களில். செய்ய விருப்பமில்லாவிட்டால் சொல்லி விடுகிறாள் என்றார்கள். குறிப்பிட்ட ஒரு சில நண்பர்களுடன் மட்டுமே பழகுகிறாள்.அவள் இன்று மிக அழகாக வந்திருந்ததாக சொன்னார்! (என்னை உற்சாகபடுத்திய என் தோழி அபிக்கு நன்றிகள்!:-))

பப்புவைக் கேட்டபோதோ,'நான் அழவேயில்லே' என்றும் 'வர்ஷினிதான் அழுதுச்சு, பப்பு அம்மா வேணும்னு சொல்லுச்சு' என்றும் சொல்கிறாள்! ஆனால், காலையில் செல்லும் போது எந்த அறிகுறியும் இருப்பதில்லை. பள்ளியில் அழுதேனேன்றும் சொல்வதுமில்லை. :-(

பப்பு பள்ளியில் பெற்றோர்கள் - ஆசிரியர்களின் முதல் சந்திப்பு இந்த வருடத்தில்! என்னைக் கவர்ந்த ஒரு சில விஷயங்கள்:


* ஆன்ட்டி சொன்னது, குழந்தைகளை அடிக்காதீர்கள், தயது செய்து அடிக்காதீர்கள். நாங்களும் அடிப்பதில்லை. எதுவானாலும் அவர்களுக்கு சொல்லுங்கள். விளக்குங்கள்.They are ready to accept. ஆனாl நாmதான் சொல்வது இல்லை. வெளியில் போனாலும், எங்கே போகிறீர்கள் என்று சொல்லுங்கள். “டாக்டர்கிட்டே போறேன், ஊசி போட்டுடுவார்னு பயமுறுத்தாதீங்க. நாளைக்கு நிஜமாவே, டாக்டர்கிட்டே போலாம்னு சொன்னா அந்த குழந்தை வரமாட்டேன்னு பயந்து அழும்”.

* இங்கே இருக்கும் உபகரணங்களை சில குழந்தைகள் தெரியாமல் எடுத்து பையிலே வைத்துக்கொள்ளலாம். அப்படி ஏதாவது உங்கள் குழந்தைகள் பையில் பார்த்தீர்களென்றால் எதுவுமே சொல்லாதீர்கள். கண்டிக்காதீர்கள். ‘ஆன்ட்டிக்கிட்டே கொடுத்துடு' என்று சொல்லி கொடுத்தனுப்பி விடுங்கள். குழந்தைகள் இதையெல்லாம் பார்த்து ஈர்க்கபபடுவது இயல்பு. அதுக்காக, 'திருடிட்டு வந்துட்டியா' என்றோ அல்லது 'இனிமே திருடக் கூடாது' என்றோ சொல்லாதீங்ர்கள். நாங்களும் அப்படி சொல்வது இல்லை. அந்த வார்த்தையை உங்கள் குழந்தை மேல் உபயோகிக்காதீர்கள்! உபகரணத்தின் நிறத்தையும் அந்த ஆக்டிவிட்டியைப் பார்த்து ஈர்க்கப்படுவது இயல்புதான்!

* கடந்தவாரத்தில் ஏதோ உபகரணத்தின் சிறியதுண்டு காணாமல் போய்விட்டது. கிளாஸ் முழுவதும் எல்லோரும் சேர்ந்து ஒரே தேடலாம். ஆன்ட்டியால் கட்டுப்படுத்த முடியவில்லையாம். எங்கிருந்தோ கண்டுபிடித்ததும் ஒரே குதூகலமாம். கிடைத்துவிட்டது ஆன்ட்டி என்று எல்லாரும் ஒருவரையொருவர் கட்டிபிடித்துக்கொள்கிறார்களாம். அதாவது அவர்கள் உபயோகப்படுத்தும் உபகரணத்தை எந்தளவு நேசிக்கிறார்கள் என்று சொல்லி முடித்தார் ஆண்ட்டி. காணாமல் போன ஷேப்பர்ஸூம், கரப்பான் பூச்சி வீடும் ஏனோ நினைவுக்கு வந்தது!! ;-)சித்திரக்கூடத்திற்கு இன்றோடு மூன்று வயது! இன்று யதேச்சையாக கண்டுபிடித்தேன். உங்களனைவருக்கும் எனது வாழ்த்துகளும் நன்றிகளும்! சித்திரக்கூடத்திற்கும், தமிழ்மணத்திற்கும் எனது நன்றிகள்! :-)

Friday, July 03, 2009

Cat & Catterpillar!

செய்தித்தாளுடன் வந்திருந்த ஃப்லையரில் இருந்த C ஐ பப்பு அடையாளம் காட்டினாள். அதை வெட்ட சொன்னேன். பின்னர், வளையலால் சார்ட் பேப்பரில் வட்டங்கள் போட வேண்டும். அதை வெட்ட வேண்டும். அதை ஒட்டி caterpillar செய்யப் போகிறோம் என்று சொல்லி ஒரு வட்டத்தைச் செய்துக் காட்டியதும், இதில் எப்படி கேட்டர்பில்லர் செய்யப் போகிறோம் என்ற குதூகலத்துடனே, மீதியைத் தானாகவே செய்தாள். ஓரிரு வட்டங்கள் வடிவம் சரியாக வரவில்லை(படத்தைப் பெரிதாக்கினால் தெரியும்!). பின்னர் வெட்டி முடித்து எல்லாவற்றையும் ஒட்டினாள். சில இடங்களில் பொருத்துவதற்கு இடத்தை நான் காட்ட வேண்டியிருந்தது. ஒட்டி முடித்ததும் கண்கள் வரையச் சொன்னேன். அவளாகவே வாலையும், காதுகளையும், மூக்கையும் வரைந்தாள்!இது ஸ்பான்ஞ் கொண்டு செய்தது. பூரிகட்டையில் அலுமினியம் ஃபாயிலை சுற்றி அதில் ஸ்பான்ஞ்ச்-ஐ ரப்பர் பான்டால் கட்டிவைத்தேன். தட்டில் அவளாகவே வண்ணங்களை குழைத்தாள். பூனை பொம்மையை மஞ்சள் சார்டில் வரைந்துத் தந்தேன். அதில் பூரிக்கட்டையால் வண்ணங்களைக் கொண்டு உருட்ட வேண்டும். ஒரு தடவை செய்துக் காட்டியதும் முழு சார்ட்டிலும் பூரிக்கட்டையால் உருட்டி வண்ணப்படுத்தினாள். பின்னர் அதை வெட்டச் சொன்னேன். வால் பகுதியில் என்னை வெட்டச் சொன்னாள். வெட்டியபின் வேறு சார்ட் பேப்பரில் ஒட்டினாள்!

அப்புறம் இந்த ABC புக்கை படித்தோம். எழுத்துகளை சொல்லித்தராம, ஒவ்வொரு பக்கங்களிலும் இருக்கும் வாக்கியங்களை வாசித்தோம். ஒவ்வொரு எழுத்துக்கான ஒரு ஸ்டிக்கர் முதல்பக்கத்தில் இருந்தது. பப்புவின் வடலூர் ஆயா, பப்புவுக்கு கொடுத்தது இது. அவர் கொடுத்தவுடனேயே, ஸ்டிக்கரைப் பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியாத பப்பு, ஆயாவோட உதவியுடன் ஒட்டியிருந்தார். அதனாலே ஸ்டிக்கர் வேலை மிச்சம். வாக்கியங்களை சொல்லச் சொல்ல அவளும் திரும்பச் சொன்னாள்!நல்ல படங்களோட கொஞ்சம் ஃபன்னியாகவும் இருக்கு. இதன் விலை ரூ 85. உதாரணத்துக்கு, ஒரு பக்கம் இங்கே! நல்ல ABC புத்தகம் வித்தியாசமானதா உங்களிடம் இருந்தால் எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்!

Thursday, July 02, 2009

12 கேள்விகள் (குட்டீஸ் வெர்ஷன்)

'மழை' ஷ்ரேயா தான் இப்படி ஒரு ஐடியா கொடுத்தாங்க. பப்புகிட்டே இண்டர்வ்யூ செஞ்சு ஒரு போஸ்ட் போடுங்கன்னு! நன்றி ஷ்ரேயா!! இனி கேள்விகள் :


1. நீ எப்போ சந்தோஷமா இருப்பே?

உன் கூட விளையாடும்போது

2. நீ ஸ்கூல் போய்ட்டேன்னா நான் என்ன பண்ணுவேன்?

ஆஃபீஸ்

3. நான் ஆஃபீஸ் போய்ட்டா நீ என்ன பண்ணுவே?

சோகமா இருப்பேன்.

4. உனக்கு என்ன சாப்பாடுல்லாம் பிடிக்கும்?

சிக்கன், மட்டன் அப்புறம் நூடுல்ஸ்...சேமியா, இட்லில்லாம் பிடிக்காது..ப்ளக் (நாக்கை நீட்டி முகத்தை கோமாளித்தனமாக்குகிறாள்!)

5.ஸ்கூலுக்கு என்ன சாப்பாடு எடுத்துட்டு போகப் பிடிக்கும்?

நீட்டு முறுக்கு

6.அப்பா உன்னை என்ன செஞ்சு சிரிக்க வைப்பாங்க?

பேபேபேபே...மேமேமே அப்ப்டின்னா? ஆடு ஆச்சி ஆடு அப்படிதான் கத்தும். (ஏதாவது கோமாளித்தனமாக செய்திருக்க வேண்டும்!)

7. நாம ஒண்ணாயிருந்தா என்ன பண்ணுவோம்

விளையாடுவோம்

8. நாம் ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருக்கோமா?

இல்ல! என்னோடது பழைய ட்ரெஸ்ஸா? (அவ்வ்வ்வ்..அன்னைக்கு ஒரு புது டீ-ஷர்ட் போட்டு இருந்தேன்)

9. எனக்கு உன்னை பிடிக்கும்னு எபப்டி தெரியும்?
எப்படி எப்படியோ தெரியும்!

10. நான் உன்னை என்ன செஞ்சு சிரிக்க வைப்பேன்?

ஹெஹ்ஹே...ஹிஹ்ஹிஹீ(சிரிக்கிறாள்..ஹ்ம்ம்..கேள்வி போரடிக்குது போல)

11. டீவிலெ என்ன பார்க்க பிடிக்கும்?

டோரா, புஜ்ஜி....பெஞ்சமின்

12. எந்த புக் பிடிக்கும்?

டினோசர்

பி.கு 1: பகுதி பகுதியாத்தான் பப்புக்கிட்டே கேட்டேன். ரெண்டு மூணு கேள்விகளுக்கு மேலே மேடம் விளையாட ஓடிபோய்டறாங்க... மயில் விஜி அவங்க பப்புகிட்டே இதே மாதிரி ஒரு இண்டர்வ்யூ எடுக்கணும்னு கேட்டுக்கறேன்!(கேள்விகள் இதேதான் இருக்கணும்னு கிடையாது!!) :-)மடிப்பாக்கம் செல்லம்மாள் கல்யாண மண்டபத்தில் (சதாசிவம் நகர்) pebbles CD/DVD expo நடக்கிறது ஜூலை 12 வரைக்கும்! pebbles-இன், சிறாருக்கான அனிமல் சிடிகள்(பாடல்கள்), பஞ்சதந்திர கதைகள், பாட்டி கதைகள் பப்புவை சாப்பிட வைக்க கணிசமான அளவு உதவியிருக்கின்றன. விலை 99ரூ - இப்போது டிஸ்கவுண்டில் விலை குறைந்திருக்கலாம்!
நேற்று ஒரு 94.3 எப் எம்-இல் சுச்சி “கல்பனா சாவ்லா பிறந்தநாள், அதை டாட்டர்ஸ் டே கொண்டாடுறோம்'ன்னு பெண் குழந்தைகள் இருக்கும் பாடகர்களை பேட்டி எடுத்தார். இன்னொரு எப். எம்-ல் “டாக்டர்ஸ் டே”ன்னு சொல்லி மலர் ஹாஸ்பிடல்லேர்ந்து ஒரு டாக்டரை கூப்பிட்டு பேட்டி எடுத்தார்கள்! இரண்டுமே உண்மையா?