Tuesday, June 30, 2009

Z is for Zoo!

வண்டலுர் ஜூ. எனக்கு ஐஞ்சு வயசா இருக்கும்போது எங்க ஆயா என்னையும் இளஞ்செழியனையும் கூப்பிட்டு போனாங்க. ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுத்தாங்க. நாங்களும் சாப்பிட்டிக்கிட்டிருந்தோம். கடைசிலே ஆயாக்கும் ஐஸ்கிரீம்-காரருக்கும் சண்டை. என்னன்னா, அவர் 'ரெண்டு அர்ரூபா' ரெண்டு அர்ரூபா' ன்னு சொன்னாராம். கடைசிலே ஐஞ்சு ரூபா கேட்டுருக்கார்.எங்க ஆயா 'ரெண்டு ஐஸ்க்ரீம் அரை ரூபா'ன்னு நினைச்சு வாங்கிக் கொடுத்திருக்காங்க!இப்போவரைக்கும் எங்க ஆயா அதை மறக்கலை..போன சனிக்கிழமை பப்புவை கூப்பிட்டு போறோம்-ன்னு சொன்னதும் அவங்க இதை திரும்ப எங்களுக்கு (10001வது தடவையா) ரி-ப்ளே பண்ணாங்க!எனக்கு இதெல்லம் ஞாபகம் இல்லை..ஆனா ஒரு யானை மேலே ஏறனும்னு அடம் பிடிச்சது மட்டும் ஞாபகம் இருக்கு!

எட்டாவது படிக்கும்போது எங்க ஸ்கூல் டூர். வண்டலூர் ஜூ, வேடந்தாங்கல் அப்புறம் மகாபலிபுரம். ரொம்ப ஜாலியா இருந்துச்சு. யாரு அனிமல்ஸை பார்த்தது...ஃப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து ஃபோட்டோ எடுக்கறதும், க்ரூப்பா பாட்டு பாடறதும், ஸ்னாக்ஸ் வாங்கி சாப்பிடறதும், ஜன்னல்கிட்டே நீ எனக்கு இடம் தரலைன்னு சண்டை போடறதுமா இருந்துச்சு! உள்ளேயே ட்ரெயின் ஓடுது..அதுல போகலாம்-ன்னு டூர் ஆர்கனைசர் வேற பில்டப்! ஒரு tram-ஐ காட்டி ட்ரெயின்-ன்னு சொல்லி ஏமாத்தினாங்களே..அவ்வ்வ்...அந்த ட்ராம் இன்னும் இருக்கு!


'ட்ரெயின் புகழ்' ட்ராம்!

மிருகங்களை பயமுறுத்த மூனு வழி இருக்கு.

1.நடந்தே போய் பார்க்கலாம்
2.வாடகை சைக்கிள் கிடைக்குது.
3.அப்புறம் ‘ஜூ உள்ளேயே ஓடற ட்ரெயின்'. (ஒரு மணிநேரம் ரவுண்ட்)

சைக்கிள்லே என்னையும் பப்புவையும் வைச்சு முகில் ஓட்டினாலும் சைக்கிள் தாங்குமானு டவுட் இருந்ததாலே ட்ராம்-க்கு டிக்கெட் வாங்கினோம். எவ்வளவு சீக்கிரமா போறீங்களா அவ்வளவு சீக்கிரம் டிக்கெட் கிடைக்கும். (10 ரூபாய் - சிறாருக்கு, 20- ரூபாய் - பெரியவர்களுக்கு)நாங்க போனப்போ ரெண்டு ஸ்கூல்-லேர்ந்து வந்திருந்தாங்க.11.30 மணிக்கு போனோம், ஆனா மதியம் 2.15-க்குதான் டிக்கெட் கிடைச்சது. அன்னைக்கு வெதர் ரொம்ப நல்லா இருந்துச்சு! அதனால, கொஞ்ச நேரம் நடந்து சுத்திப் பார்த்துக்கிட்டு இருந்தோம். நல்லா சுத்தமா வச்சிருந்தாங்க. பப்பு அதைத்தான் காடுன்னு நினைச்சுக்கிட்டா. ”காஆஆடு, ஐஸ்க்ரீம் தீவு..நாம அப்புறம் எங்கே போறோம் டோரா'ன்னு கேட்டுக்கிட்டிருந்தா. பப்புவிற்கு ஏப்-தான் ரொம்ப பிடிக்கும். 'ஏப் வந்து எனக்கு எக் கொடுக்கபோகுதா'ன்னு கேட்டா.அவ்வ்வ்! (ஒரு மூவிலே, தன் வீட்டுக்கு வந்த ஒரு பொண்ணுக்கு ஏப் காலையில் பால், முட்டை எல்லாம் தட்டில் வைத்து எடுத்து வரும்!!)

மயில், பலவித கிளிகள், குரங்குகள், மேலும் குரங்குகள், மேலும் மேலும் குரங்குகள்-ன்னு பார்த்துட்டு, ஒரு கல்மண்டபதுலே உட்கார்ந்து கொண்டு வந்த சாப்பாடு, நொறுக்ஸ் எல்லாம் காலி பண்ணிட்டு சரியா ரெண்டு மணிக்கு ட்ராம் வர்ற இடத்துக்கு போய்ட்டோம். அந்த ட்ராமிலே போறதும் ஜாலியாதான் இருந்துச்சு. நாம நடக்கற வேகம்தான்...;-). அங்கங்கே நிறுத்தி 10 நிமிஷம் டைம் கொடுக்கறாங்க. அதுக்குள்ளே பார்த்துட்டு வந்துடனும். பப்பு, பார்க்கிற மிருகங்களையெல்லாம் 'ஏன் அது என்கூட பேச மாட்டேங்குது' னு கேட்டுக்கிட்டிருந்தா. அவ்வ்வ்..the animated CDs n TV programs!! புலி பாட்டுக்கு அந்தப் பக்கம் போய்க்கிட்டிருக்கு. 'புலி புலி' ன்னு கூப்பிட்டா அது திரும்பி பார்க்குமா என்ன?! (நமக்குத் தெரியும் அது புலின்னு, ஆனா புலிக்குத் தெரிய வேணாமா..ஹ்ம்ம்..இதெல்லாம் சொன்னா பப்புவையாவது ஒழுங்கா விட்டு வைன்னு சொல்றது!!)

புலி, வெள்ளை புலி, ஹிப்போ, மான்கள், யானை, ஜீப்ரா, ஜிராஃப் எல்லாம் முடிச்சுட்டு 3.15-க்கு ஏறின இடத்துக்கே வந்துட்டோம். லேசா தூறல். வெளிலே வந்தப்புறம் செம மழை. பப்புவிற்கு வரவே மனசில்லை. நான் உள்ளேயே இருக்கேன்னு சொல்லிட்டு திரும்பி உள்ளேயே ஓடறா! ஒன்னும் பெரிய வித்தியாசம் இல்லை, நாம வீட்டுக்கே போகலாம்-ன்னு சொல்ல நினைச்சேன்..ஹிஹி்..செல்ஃப் டேமேஜாகிடும்ன்னு விட்டுட்டேன்! ;-))

நுழைவு கட்டணம் : பெரியவர்களுக்கு - 20 ரூ சிறார் - 10 ரூ
காமெரா கட்டணம் : 25 ரூ
நுழைவாயில் தாண்டி, உள்ளே ஒரு TTDC உணவகம் இருக்கு. மினரல் வாட்டர் வேணா வாங்கிக்கலாம். ட்ராம்/வாடகை சைக்கிளுக்கு கட்டணம் தனி. பொதுவான ஜூ ரவுண்ட்-உம், லயன் சஃபாரி-யும் இருக்கு. ஜூ ரவுண்ட் ஒரு மணி நேரம் - எல்லா மிருகங்களும்! லயன் சஃபாரி - 30 நிமிடங்கள் - சிங்கங்கள் மட்டும் - ஆனால் வெகு அருகில் பார்க்கலாம்! ஜு உள்ளே சென்றால் ஆவின் ஐஸ்க்ரீம் கடை இருக்கு. அது ஒன்னுதான் கொஞ்சம் ஆறுதல். மற்றபடி வேறு உணவகங்கள் எதுவும் இல்லை. குடிநீர், நொறுக்குத்தீனி, சாப்பாடு, தொப்பி கொண்டு செல்வது நல்லது!

Monday, June 29, 2009

பாப்கார்ன் வித் குட்டீஸ் : சென்னை பதிவர் சந்திப்பு!

”பாப்பாக்கு காது எங்கே குத்துனீங்க?”

“காதுலதான்!!”

போன்ற உலகத்தரம் வாய்ந்த காமெடி கடிகளும்,

”பேசு குட்டிம்மா, என் மானத்தை வாங்காதே”

”பேசாம இருக்கறதைவிட பேசினா தாங்க நமக்கு டேமேஜ்”

போன்ற கவனத்தைக் கவரும் அனுபவச்சிதறல்களையும்....நேற்று கிண்டி சிறார் பூங்கா கண்டது - நீண்டநாட்களாக பேச்சில் மட்டுமே இருந்த “பதிவர் சந்திப்பு வித் கிட்ஸ்” நேற்று சாத்தியப்பட்டது!!அமித்து அம்மா
அமித்துவுடனும், வித்யா ஜூனியருடனும், தீபா நேஹாவுடனும், அமுதா நந்தினி மற்றும் யாழினியுடனும், நான் பப்புவுடனும்!
(பதிவுலகத்தின் பிரபல குட்டீஸ்! )

அமித்து அம்மாவும் அமித்தும் மேட்சிங்-கான உடையில் வந்திறங்கினர். நாங்கள் வாயிலில் காத்திருக்க, மேடம் குறுக்கு வழியில் புகுந்து அசத்தினார். அமித்து ஒரு சமத்து குழந்தை. அமித்து அம்மாதான் ”கோங்கு” கேட்ட அமித்துவை ஒரு குரங்கு டஸ்ட்பின் காட்டி ஏமாற்ற முயற்சி செய்துக்கொண்டிருந்தார்.

வித்யா மட்டுமே சொன்ன நேரத்தை கடைப்பிடித்தார்..கடமை கண்ணியம்..காட்பாடி! ஜுனியர் செம ஆட்டம்! விட்டால் பார்க்கை ஒரு ரவுண்ட் வந்திருப்பார். வித்யாவின் கெஞ்சல்+மிரட்டலுக்கு செவிசாய்த்து அடக்கிவாசித்தார். ஃபோட்டோ எடுக்கலாமென்று சொன்னதும் மிக அழகாக வந்து புன்னகை புரிந்தார்.! பப்புவிடமிருந்து பையை வாங்கிவிட முயற்சி செய்துக் கொண்டிருந்தார் :-)


நேஹா யார்பேசினாலும் “மம்மா” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
“பௌபௌ” என்று “ம்மா” என்றும் மிருகங்களைப் பார்ததுச் சொல்லிக்கொண்டிருந்தார். தீபாவின் மிரட்டலில் தூக்கத்தைத் தியாகம் செய்து வந்திருந்தார்.

நந்தினி, யாழினியுடன் வந்திருந்தார் அமுதா. நந்தினி எல்லா குட்டீஸுக்கும் ப்ரெண்ட் ஆகிவிட்டாள். எல்லா குட்டீஸையும் பார்த்த அமுதா, ஒரு முடிவுக்கு வந்துவிட்டார் போல...”சரி, இந்த தட்டிலாவது சாப்பிட்டு உடம்பு தேறுதான்னு பார்ப்போம்னு” எல்லா குழந்தைகளுக்கும் ஒரு தட்டை பரிசளித்தார்! நன்றி அமுதா, அடுத்த தடவை ரிசல்ட் பாருங்க...;-)) (இங்கே தெனாலிராமன் பூனை வளர்த்த கதை உங்கள் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல!)

பப்பு பார்க்கை சுற்றிவர துடித்துக் கொண்டிருந்தாள். வரும்போதே கவிதா ஆண்ட்டி வந்துட்டாங்களா என்று கேட்டாள்! வழக்கமாக செல்லும் பாதையில் போகாமல் நேராக மரத்தடிக்கு வந்தது அவளுக்கு பிடிக்கவில்லைபோல....”அங்கெல்லாம் போய் பார்க்கலாம்” என்று சொல்லிக்கொண்டிருந்தாள். கவிதா ஆன்ட்டியையும் g3 ஆன்ட்டியையும் எங்கே காணோம் என்றுத் தேடிக்கொண்டிருந்தாள், நெடுநேரம்! :-( முகிலின் வேலையை நான் செய்ய வேண்டியதாயிற்று..சறுக்குமரத்திற்கு அழைத்து செல்வது, சீசாவில் உட்காரவைத்து ஆட்டுவது...அவ்வ்வ்!! கையை பிடித்து நடக்கச் சொன்னதற்கு, “எனக்கு யாரையுமே பிடிக்காது” என்று சொல்லிவிட்டு தனியாக நடக்க ஆரம்பித்தாள்! (இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக இருந்தும், நாங்கள் பேசிக்கொள்ளத்தான் நேரம் கிடைக்கவில்லை. நம்புவீங்கதானே!)

On the whole, we had fun!புது ஆன்ட்டிகள், தங்கள் பெயர்களையும் தங்களைப்பற்றி எல்லாம் தெரிந்தவர்கள் போல நடந்துக்கொண்டது குட்டீஸ்-க்கு வியப்பளித்திருக்கக்கூடும்!

Saturday, June 27, 2009

பப்பு டைம்ஸ்!

”வர்ஷினி, வீட்டுக்குத்தான் போகணும், அம்மாகிட்டே போணும்னு அழுதுச்சு. நான் வேன்லே கூப்டு போய் அவங்க வீட்டுலே விட்டேன். வர்ஷினி அம்மாகிட்ட, “ஒங்களைதான் வர்ஷினிக்கு வேணுமாம”னு சொல்லிட்டு ஸ்கூலுக்கு வந்திட்டேன். அப்றமா,அவங்கம்மா வர்ஷினியை ஸ்கூல்ல கொண்டு வந்து உட்டாங்க..அப்புறம் வர்ஷினி ஸ்கூல்லேயே இருந்துச்சு. நாங்க வீட்டுக்கு வரும்போது, ”நான் ஸ்கூல்லேயேதான் இருப்பேன், வீட்டுக்கு போக மாட்டேன்”னு அழுதுச்சு!”

இது (கதை) நேற்று நடந்ததாக பப்புவால் எனக்குச் சொல்லப்பட்டது.


செய்தி 1 :
கடந்த வாரத்தில் இறுதி இரண்டு நாட்களாக 11.00 - 11.30 மணி வாக்கில் பப்புவும் வர்ஷினியும் ஒன்றாக சேர்ந்துக் கொண்டு அழுவதாக, “அம்மாகிட்டே போகணும்” என்று அழுவதாக ஆன்ட்டி செய்தியனுப்பினார்.

செய்தி 2 :
இந்த திங்களன்று பப்புவின் பள்ளியிலிருந்து அழைப்பு வந்தது - 11.30 வாக்கில். ..அழைத்துக் கொண்டு செல்லும்படி.அவள் மிகவும் அழுதுக் கொண்டிருப்பதாகவும், காய்ச்சல் அடிப்பது போலிருப்பதாகவும்!!

(சளிதான் கொஞ்சம் அதிகமாக இருந்ததே தவிர, இவர்கள் அழுததில் கொஞ்சம் பயந்திருக்கிறார்கள் போலிருக்கிறது. காய்ச்சல் எதுவுமில்லை. மேலும், பப்பு இப்போது அடுத்த லெவலுக்கு சென்றிருப்பதால் ஆண்ட்டி மாறியிருக்கிறார்கள். மோதி ஆன்ட்டியை மிஸ் செய்கிறாள் போல!)நான் நெய்ல்போலிஷ் போட்டு அழகாயிருக்கேன், நீ? - பப்பு

நான் போடலியே....(அதற்குமேல் என்ன சொல்வது..அழகாயில்லன்னு நெகடிவா சொல்லவேணாமே..வேற எப்படி..) - யோசித்தபடி நான்.

“நான் நெய்ல்போலிஷ் போட்டு அழகாயிருக்கேன், நீ நெய்ல்போலிஷ் போடாம அழகா இருக்கே!” - பப்பு!

ஓ..அவ்வளவு எளிதானதா இது!சிலசமயங்களில் ரொம்ப யோசித்துதான் நான் காம்ப்ளிகேட் செய்துக்கொள்கிறேன் போல..!!”இது பச்சை தண்ணியா?” - கைகழுவ தண்ணீர் கொடுத்தபோது ஆயா என்னிடம்!

”இல்ல, இது க்ரீன் தண்ணி!” - பப்பு!

Friday, June 26, 2009

பை பை மைக்கேல்...Rest in peace!வி லவ் யூ! எனது பதின்மங்களை இசையால் நிரப்பியதற்கு நன்றி! உமது இசை இனி வானுலக தேவதைகளையும் ஆட்டுவிக்கட்டும்! பை பை மைக்கேல்! வி மிஸ் யூ..!!

Wednesday, June 24, 2009

இரு சம்பவங்கள் மற்றும் நான்!

"ஷேப்பர்ஸ்(வடிவங்களை உருவாக்கும் ஒரு விளையாட்டு பொருள்) எங்கே பப்பு?" - நான்.

"கரப்பான் பூச்சி தூக்கிக்கிட்டு போய்டுச்சு" - பப்பு

கரப்பான் பூச்சியா?!! - நான்!

"ஆமா ஆச்சி, அது தூக்கிக்கிட்டு போய் அதோட வீட்டுலே வைச்சுகிச்சு" - பப்பு.

(ஓ, அப்போ அது எங்கேன்னு பப்புக்கு தெரிஞ்சுருக்கு போல, அதைதான் கரப்பான் பூச்சி வீடுன்னு சொல்ல வர்றாங்களோ மேடம்?!)

அதோட வீட்டுலேயா..கரப்பான் பூச்சியோட வீடு உனக்கு தெரியுமா?!- நான்.

”தெரியுமே ஆச்சி, அது இழுத்துக்கிட்டு போய் எனக்கு வேணும்னு வச்சிக்கிச்சு” - பப்பு

(அப்போ அதை எங்கேயோ போட்டுட்டு அது இருக்கிற இடத்தைத் தான் கரப்பான் பூச்சி வீடுன்னு சொல்ல வர்றாளோ?!..இருக்கும்..இருக்கும்...எப்படியோ கிடைச்சா சரி!)

”எனக்கு காட்டு, நான் எடுத்துத் தரேன்” - நான்

அவள் என்னைக் கூட்டிக்கொண்டுச் சென்ற இடம், எங்கள் சமையலறையின் பின்வழியில் இருக்கும் சாமான் கழுவும் நீர் செல்லும் பாதை!


நான் 'ஞே' வாகிக் கொண்டிருந்தேன்!

ஏனோ ஒரு ஃப்ளாஷ்பேக் நினைவுக்கு வந்துத் தொலைத்தது.

ஃப்ளாஷ்பேக்:

வொர்க்கிங் வுமன்ஸ் ஹாஸ்டலில் தங்கி இருந்தோம் அப்போது. ஹாஸ்டல் அணுகுண்டைக் கூட சாப்பிட்டு விடலாம், ஆனால் கன்பவுடரை கண்டிப்பாக வாயில் வைக்க முடியாது! (அனுகுண்டுன்னா என்னனு எல்லோருமே கண்டுபிடிச்சுடுவீங்க, கன்பவுடரை கண்டுபிடிங்க :-)) அதனால் எங்களை காப்பாற்றுவது பழங்கள்தான். ஹாஸ்டலுக்கு எதிரில் இருக்கும் பழக்காரரிடம்தான் பிசினஸ். முந்தையதினம் வாங்கிய சாத்துக்குடி பழங்கள் சரியில்லையென்று திருப்பி எடுத்துச் சென்றேன். இது நல்லாயில்லையென்று சொல்லி அவரிடம் கொடுத்து விட்டேன். அவரும் வாங்கி வைத்துக் கொண்டார். பிறகு வந்தவர்களிடம் பிசினசை கவனிக்க தொடங்னினார். கொஞ்ச நேரம் (5 நிமிடங்கள்?!) நின்றுக் கொண்டிருந்தேன். அவர் என்னை கவனித்த மாதிரியேத் தெரியவில்லை. பின்னர் திரும்பி வந்துவிட்டேன். அறையில் வந்து இதைச் சொன்னதும் ஷீபா அக்கா கேட்டார்கள், ”நீ ஏன் நின்னுக்கிட்டிருந்தே?, யாராவது இங்கே அப்படி மாத்திக் கொடுப்பாங்களா?” - என்று சிரித்துக்கொண்டே சொன்னார்!

நான் அங்கே 'ஞே'-வாகிக் கொண்டிருந்தேன்,ஆம்பூரிலேல்லாம் மாத்திக் கொடுப்பாங்கதானே என்று நினைத்தபடி!!பப்புவும் பழக்காரரும் மாறி மாறி தெரிந்தார்கள் என் கண்முன்!! (ஒரு பொண்ணு இன்னொசன்டா இருந்தா எப்படியெல்லாம் ஏமாத்தறாங்கப்பா!!) நாந்தான் இப்படியா இல்ல மக்கள்ஸ்தான் இப்படியான்னே தெரியலை! ;-)

Tuesday, June 23, 2009

இ ஃபார்...

...இடுப்பு!! இ ஃபார் இந்தநாள் இனியநாள் என்று எழுத நினைத்திருந்தேன். Golda அக்கா எனக்கு இ ஃபார் இடுப்பு எனற தலைப்பை பரிந்துரைத்திருந்தார்கள். நன்றி அக்கா! இடுப்பு பத்தி நான் எதுவுமே சொல்ல வேண்டியதில்லை. அதான் சினிமாவே அதன் உபயோகங்களையெல்லாம் கோனார் நோட்ஸ் போட்டு சொல்லிக் கொடுத்து விடுகிறதே!! சினிமாவில் இடுப்பை வெளிப்படுத்த எந்த அளவிற்கு ஹீரோயின்கள் ஊக்கப்படுத்தப்படுகிறார்களோ, அதற்கு நேர்மாறான வீட்டில் பெண்கள் இடுப்புத் தெரியுமாறு உடை உடுத்துவது தடை செய்யப்பட்ட விஷயம்! (பின்ன என்னங்க, ஐந்து வயசுலே ஜோதிகா ட்ரெஸ்-ன்னு பாவாடைக்கும் பிளவுஸ்-க்கும் இடையிலே கேப் விட்டு போட்டு அழகு பார்ப்பார்கள், அதையே
வளர்ந்தப்புறம் அவங்க போட்டா திட்டுறது..எப்படி ஜீன்ஸ் இடுப்புத் தெரியறமாதிரி போட்டுக்கிட்டு போறாங்கன்னு!!)

அதை விடுங்க, நான் சொல்ல வந்ததைவிட்டு எங்கேயோ போகிறேன்! எங்க பள்ளிக்கூடம், இருபாலருக்குமானது. அதுவுமில்லாமல் எங்கள் ஊர் ஒரு சிற்றூர்.. எட்டாவது ஒன்பதாவதுதான் படித்துக்கொண்டிருப்போம். நமது வகுப்பிலிருக்கும் ஒரு சில பெண்களிடம் மட்டும் தனியாக ஆசிரியர் பேசுவார். அடுத்தடுத்த வாரங்களில் அந்தக் குறிப்பிட்ட பெண்
தாவணியில் வருவார். உடனே எங்களுக்குத் தெரிந்து விடும்...சரி, நம்மிடம் பேசினாலே டேஞ்சர் என்று! பலருக்கும் தாவணி பிடிக்கும், ஆனால் அணிகின்ற பெண்களுக்கு நிச்சயமாகப் பிடிக்காது! அவ்வளவு ஏன், நிறைய ஆண்கள், பெண்கள் தாவணி போட்டுக்கிட்டிருந்தா பிடிக்கும் என்றுச் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால், தாவணி அணிந்தவர்களுக்கேத் தெரியும் அதிலுள்ள சங்கடங்கள்! அதுவும் 13/14 வயது சிறுமிகளை தாவணியில் கட்டிப்போட்டால்...!! பொதுவாக பதினொன்றாம் வகுப்பிலிருந்து எங்கள் பள்ளியில் தாவணி அணிய வேண்டுமென்பது சட்டமாக இருந்தது!நானும் என் தோழிகளும் மிகுந்த மன அவஸ்தைக்குள்ளகினோம். சொல்லில் புரிய வைக்க முடியுமாவெனத் தெரியவில்லை. ஜாலியாக சல்வாரும் மிடியும் அணிந்துக் கொண்டு வந்த இடத்திற்கு, அடுத்த ஒரு மாதத்திலிருந்து தாவணியில் வரவேண்டுமென்பது ஒரு மாதிரி இனங்காண முடியாத தயக்க உணர்வாக இருந்தது! பள்ளி நிர்வாகம் இதை உணர்ந்ததாவென்பது சந்தேகமே!

அன்று காலை பள்ளிக்குக் கிளம்ப வேண்டும். கட்டவும் தெரியாது, தெரியாதென்பதைவிட பிடிக்காதென்பதே பொருத்தமாக இருக்கும். இயலாமையும் ஆற்றாமையும் சேர்ந்து வர அழுகை எட்டிபார்த்தது. பெரிம்மாதான் எனக்குக் கட்டி விட்டார்கள். அதுவும் தாவணி கட்டும்போது, பாவாடையில் ஒரு V ஷேப் வரவேண்டும். ஆனால் பெரிம்மா கட்டிவிட்டதோ அந்தக்காலத்து ஸ்டைல்!! அதுவேறு பிடிக்கவில்லை. இடுப்புத் தெரிவதுபோன்ற ஃபீலிங்! பிடிக்கவேயில்லை. நானாகவே ஏதோ V வருவதுபோல சுற்றிக் கொண்டு, பதினோரு ஊக்குகளை அங்கங்கே இழுத்துபிடித்து போட்டுக்கொண்டு ஒருவழியாக வகுப்பிற்குப் போய் சேர்ந்தேன்! அங்கே ஷபீனா, ரேணுகா, அனு, கவிதா, ஹேமா என்று எல்லோரும் அதே மாதிரி வந்திருந்தார்கள். எல்லோர் கண்களும் (அழுது) சிவந்திருந்தன அல்லது வீங்கியிருந்தன. அவர்கள் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ள முடிந்தது! பின்னர் ஒருமாதத்தில் பழகிவிட்டது..எங்களுக்குள் தனிப்பட்ட கிண்டல்கள் தவிர!

ஆனால் தாவணிபோட்டுக்கொண்டு சைக்கிள் ஓட்டுவது மிகப் பெரிய அபாயம். அதுவும் காலையில் ஒரு ட்யூஷன், மாலையில் ஒரு ட்யூஷன் என்று செல்லவேண்டிய செட் நாங்கள்! நாங்கள் பனிரெண்டாம் வகுப்பு வரும்போது அந்தச் சட்டத்தை எடுத்துவிட்டார்கள், பள்ளிநிர்வாகத்தினர். பாவாடை, சைக்கிளில் மாட்டி எங்கள் பள்ளியைச் சார்ந்த ஒரு பெண் ரோடில் விழுந்து பின்னால் வந்த வண்டி அவள் மீதேறி விபத்துக்குள்ளானதேக் காரணம்! தாவணி அணிந்தப் பெண்கள் சிரிப்பது சினிமாவிலும் நாடகங்களிலும்தான்! பள்ளிச் செல்லும் பெண்களுக்கு அது மற்றுமொரு அசௌகரியமே!!

ஆனந்த விகடனின்(லேட்டஸ்ட் இஷ்யூ) கடைசி பக்கங்களில் வழக்கறிஞர் அருள்மொழி மிக அருமையாக சொல்லியிருந்தார் - இன்று பெண்கள் உடுக்கும் எல்லா உடைகளுமே ஆண்களால் வடிவமைக்கப்பட்டவையே! பெண்களை நுகர்வு பண்டமாக பார்க்கும் போக்கிலிருந்து ஆண் குழந்தைகளை இன்றைய பெற்றோர்கள் மீட்க வேண்டுமென்று!! அவரவர் உடை அவரவர் உரிமை!

Sunday, June 21, 2009

Mono printing - Part IIசாப்பாடு மடிக்கும் அலுமினிய ஃபாயிலை ஒரு அட்டையில் மடித்துக்கொண்டோம். மேலும் தட்டில் இன்சுலேஷன் டேப்பினால் கட்டமாக ஒட்டிக் கொடுத்தேன். அலுமினியம் ஃபாயில் சரியாக வரவில்லை - வண்ணங்கள் தீட்ட பப்புவிற்கு பிடிக்கவில்லை. தட்டு அவளுக்கு மிகவும் ஈசி.வழக்கமாக வண்ணம் தீட்டுவதும் போல இருந்தது அவளுக்கு! மேலும் பேப்பரால் அழுத்தி எடுப்பதும் எளிதாகவும் இருந்த்து, உதவி தேவைப்படவில்லை!

அடுத்தாக, பிரஷால் வட்டமாக வரைந்திருந்தாள். ஒரு ear bud கொடுத்தேன் அதில் வரைவதற்கு! மாங்காய் போல, பிறகு ஏதோதோ உருவங்களை bud-ஆல் வரைந்து பேப்பரை அழுத்தி பிரிண்ட் எடுத்தாள்!

எந்த வண்ணம் கலந்தால் எந்த வண்ணம் கிடைக்கும் என்று அறிய வைக்க ஓரளவிற்கு இம்முறையை பயன்படுத்தலாம். இப்போதைக்கு பப்புவிற்கு கருப்பு எப்படி வருமென்று தெரியும்(எல்லா வண்ணங்களையும் ஒன்றாகக் குழைத்தால்!) ;-) !
பப்பு கார்னர் :

”நீட்டு பொடி வாங்கித் தர சொல்லுச்சு, வர்ஷினி” - பப்பு.

”என்னது?”

“நீட்டு பொடி உங்கம்மாவை வாங்கித் தர சொல்லு, உங்கம்மாக்கிட்டே சொல்லி வாங்கி போட்டுக்கோன்னு வர்ஷினி சொல்லுச்சு! - பப்பு

நீட்டு பொடியா? எப்படி இருக்கும்?

அவள் காட்டிய ஆக்‌ஷன்படி - நெத்திச்சூடி!

இவ்வளவு சீக்கிரம் இது ஆரம்பிக்கும் என்று நான் நினைத்திருக்கவில்லை!


Note to perimma :

பெரிம்மா, என் ப்ரெண்ட்ஸ் சொன்னாங்கன்னு ஒரு தடவை ஃபேஷன் ஒட்டியாணம் கேட்டேன் இல்ல, நான் அப்போ செவன்த்தானே?!!ஹ்ம்ம்..அப்புறம், இந்ததடவை வரும்போது வாங்கிட்டு வந்துடுங்க நெத்திச்சூடி, ஓக்கே!

Saturday, June 20, 2009

Mono printing - Part I
அம்மாக்கள் வலைப்பூவில்
குட்டீஸ்-களுக்கு பயனுள்ள பெயிண்டிங் செய்முறைகளை கொடுத்திருக்கிறார் தீஷு. அதில் மோனோ ப்ரிண்டிங்-கை முயற்சி செய்தோம் இருவாரங்களுக்கு முன்பு. பப்புவின் விளையாட்டு சாமான்களில் ஒரு குட்டி மரசாமான் - மணக்கட்டையின் மினியேச்சர். அதன்மேல் வண்ணங்களை தீட்டி, சார்ட் பேப்பரை வைத்து ப்ரிண்ட் எடுத்தோம். ஓரிரு தடவைகள் அப்பாவின் கைகள் அவளுக்கு உதவி செய்தன.
பிறகு புரிந்துக் கொண்டு தானாக செய்தாள். ஆனால் நிறைய வண்ணங்களை குழைக்க அந்தச் சிறிய கட்டை ஏற்றதாக இல்லை. அதனால், வேறு சில ஏற்பாடுகளை செய்தோம். அவை part II-ல்!

Friday, June 19, 2009

முதல் நாளின்று...


(முதல் நாள் எடுத்தது!)

பப்புவை வாழ்த்திய உங்களனைவருக்கும் நன்றிகள்! உங்கள் வாழ்த்துகளோடு, பப்பு பள்ளி செல்ல ஆரம்பித்து நேற்றோடு ஒரு வாரமாகிவிட்டது. இன்னுமும் அந்த விருந்தாளி வராமலிருப்பாரா? இரண்டு நாட்களுக்கு முன்னர் நலமுடன் வந்து சேர்ந்துவிட்டார் - பப்புவின் மூக்குக்கு! கடந்தவாரத்தின் அந்த நாளை எண்ணிப் பார்க்கிறேன்.....

45 நாட்களுக்கு மேலாக விடுமுறைநாட்கள். காலை 8.30 க்கு எழுந்து பழகிவிட்டாள். அதுவும் இப்போதெல்லாம் மதியம் 2.15 வரை பள்ளிக்கூடம். ஆமாம், பப்பு இப்போது சீனியர் பேட்ச்! காலையில் ஏதாவது சாப்பிட வைக்க வேண்டும். எனக்குத்தான் டென்ஷன் தலைக்கேறிக் கொண்டிருந்தது முதல் நாளிலிருந்து. அதுவும் இந்த டென்ஷன்களில் வேனை தவற விட்டுவிடக் கூடாது! முதல் ஒரு வாரத்திற்கு மட்டும் நேரத்தைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாதென்று பள்ளிக்கூடத்துல் சொல்லி இருந்தார்கள்! கொஞ்ச நாட்களாக பள்ளிக்குச் செல்லவேண்டுமென்று சொல்லும்போதெல்லாம், பப்பு, தான் பள்ளியை முடித்து விட்டதாக சொல்லிக் கொண்டிருந்தாள்.ஒழுங்காக அழாமல் பப்புவை கிளப்ப வேண்டுமே!!


காலையில் பப்பு எழும்போது 7 மணி. குளிக்க வேண்டுமென்று சொன்னபோது ஓடிப் போய் அறையில் புகுந்துக் கொண்டாள். அதற்கு முதல்நாள் நாங்கள் sponge painting செய்துவிட்டு எல்லாவற்றையும் அப்படியே வைத்திருந்தோம்! போய் பார்த்தபோது, அவள் வண்ணங்கள் குழைக்க ஆரம்பித்திருந்தாள். எனக்கோ அது ஒரு சவால் நிறைந்த காலையாக தோன்றிற்று. முகில் ஒரு கையில் டூத்பிரஷ்-உம் நான் கையில் துண்டுமாக பப்புவை (மடக்கிப் போட) “வா பப்பு, வா பப்பு, டைமாச்சு, வேன் வந்துடும்” என்றுக் கெஞ்சிக் கொண்டிருந்தோம்.

“என்னை விட்டுடுங்க!!” - என்று சத்தமாக சொன்னாள் பப்பு!

அதற்குள் படங்கள் வேறு வரைய ஆரம்பித்திருந்தாள்! 'வெண்மதி, வர்ஷினி, ஆகாஷ் அப்புறம் மோதி ஆன்ட்டி எல்லாம் பப்புக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காங்களாம், வா போய் பார்க்கலாம் ” என்றதும் மனமில்லாமல் செய்துக் கொண்டிருந்த வேலையைவிட்டு விட்டு குளியலறைக்குள் சென்றாள். புதுச் சீருடைகள், அவளது உணவு டப்பாக்களில் ஒரு முறுக்கு, கொஞ்சம் சிப்ஸ், இரண்டு இட்லிகளை வைத்து தண்ணீர் பாட்டிலோடு பையை எடுத்துவைத்தாயிற்று. புதுச்சீருடை மிகவும் பெரிய அளவாக இருந்ததால், கடந்த வருடத்தினுடையதைப் போட்டுக் கொண்டாயிற்று. ஒரு தம்ளர் பாலும் அரை தோசையும்! மணி 8.

8.15க்கு வேன். காலுறைகளும், ஷூவும் அவளாகவே போட்டுக் கொண்டு பையைத் தானே தூக்கிக் கொள்வதாக சொல்லி மாட்டிக்கொண்டாள். சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிவிட்டேனாவென்று யோசித்துக் கொண்டேன் பள்ளியில் என்ன செய்யவேண்டும், எந்த டப்பாவை முதலில் திறக்கவேண்டும், தண்ணீர் அவளது பாட்டிலிலிருந்து மட்டுமே குடிக்க வேண்டும்..!! அவள் அதையெல்லாம் கவனித்தாளாவென்றால் நான் கவனிக்கவில்லை!! அந்த இடத்திற்கு வந்ததும், என்னைத் தூக்கிக் கொள்ளச் சொன்னாள். சரியாக ஐந்து நிமிடங்கள் கழித்து வந்தது வேன். ஆயாம்மாவை பார்த்ததும் சிரித்துக்கொண்டே ஏறிக்கொண்டாள். ஆயாம்மா கையாட்டச் சொன்னதும் கையாட்டினாள்....வேன் புறப்பட்டுவிட்டது! பப்பு சென்றுவிட்டாள்!

ஆமாம், நான் ஏன் இன்னும் நின்றுக் கொண்டிருக்கிறேன்..திரும்பி நடக்க ஆரம்பித்தேன். அவளை வேனில் வைத்து போட்டோ எடுக்க விரும்பினேன். ஜன்னலினூடாக, படிக்கட்டில் ஏறியபின் திரும்பி பார்க்கும்படி...என்று! ஆனால் எதுவும் எடுக்கவில்லை!

வீடு மிகவும் அமைதியாக இருந்தது. காலியாக இருந்தது போலிருந்தது! விடுமுறை தினமாக இருந்தால் இந்நேரம் பால் குடிக்க மாட்டேனென்று ஒவ்வொரு இடமாக ஓடிக் கொண்டிருப்பாள். கடைசி முயற்சியாக சுட்டி டீவி போடப்படும். ஆயாவின் பையை எடுத்து அலசி ஆராய்ந்து புளிப்பு மிட்டாய் தேடிக் கொண்டிருப்பாள்! 'இது புது பேப்பரா, பழசா' என்று கேட்பாள் கத்திர்கோலுடன் அன்றைய செய்தித்தாளை காட்டியபடி! எந்த சத்தமும் இல்லாமல் இருந்தது அப்போது!!

அறைக்குள் நுழைந்தேன். அவள் வரைந்த, வண்ணம் தீட்டிய படங்கள் பாயின் மேல் கிடந்தன! ஒரு பக்கம் முழுவதும் இப்படி வண்ணம் தீட்டியதில்லை பப்பு என்றைக்கும்! ஒரு தாள் முழுவதும் கறுப்பு வண்ணம்! அடுத்ததில் ஒரு ஸ்மைலி! அது ஸ்மைலியாக இல்லாமல், வாய் இறுக்கமாக மூடி இருந்தது! என்ன சொல்ல வருகிறாய் பப்பு?
உங்களுக்கு ஏதேனும் புரிகிறதா?! ”என்னை விட்டுடுங்க” என்ற குரல் திரும்ப ஒலித்தது என் காதுகளுக்குள்!!

Wednesday, June 17, 2009

குட்டீஸ் கதைகள்!

கதை - I

ஆகாஷ் வந்து சைக்கிளை எடுத்துக்கிட்டு ”அம்மா, பை, நான் பீச்சுக்கு போறேன்”னு சொல்லிட்டு சைக்கிள் ஓட்டிகிட்டு போனான். அப்போ நாய்குட்டியும், நானும் வர்றேன்-ன்னு சொன்னதும் நாய்க்குட்டியை பின்னால உட்கார வைச்சிக்கிட்டு ஆகாஷ் பீச்சுக்கு போனான்! கூடையிலே ஒரு பால், பிஸ்கட், தண்ணி எல்லாம் ஆகாஷோட அம்மா சைக்கிள்லே வச்சிருந்தாங்க! பீச்சுக்கு போனா, அங்கே நிறைய அலை வந்ததாம். ஆகாஷூக்கு அதைப் பார்த்ததும் ரொம்ப ஜாலியாகிடுச்சாம்! ஆகாஷும் நாய்க்குட்டியும் பால் விளையாடினாங்களாம்! அப்புறம் அலைக்கிட்டேயும் தூக்கிப் போட்டாங்களாம். அலையும் திரும்ப அவங்களுக்கு பாலை கொண்டு வந்து கொண்டு வந்து கொடுத்ததாம். ஒரு தடவை அலை பாலை கொண்டு வந்துக் கொடுக்கலையாம். ஆகாஷ், பால் எங்கே, நாம விளையாடணுமேன்னு கேட்டப்போ, அலை சொல்லிச்சாம், பால் உள்ளே போய்டுச்சுன்னு! அப்போ நாய்க்குட்டி சொல்லிச்சாம், ஆகாஷ் எனக்கு நீந்தத் தெரியும், நான் போய் பார்த்து எடுத்துக்கிட்டு வர்றேன்-ன்னு சொல்லிட்டு போச்சாம்! அங்கே போனா ஒரு பால் வந்து ஒரு மீன்கிட்டே இருந்துச்சாம். அது நாய்க்குட்டிக்கிட்டே சொல்லிச்சாம், நாந்தான் ஆகாஷ்க்கிட்டே பாலை கொண்டு வந்து கொடுப்பேன், நாந்தான் கொடுப்பேன்-ன்னு சொல்லிச்சாம்! நாய்க்குட்டி மீனுக்கிட்டே சொல்லிச்சாம்,நீ தண்ணிலே இருந்து வெளிலே வந்தா நடக்க முடியாது, நானே போய் கொடுக்கிறேன்,மிக்க நன்றின்னு சொல்லிட்டு வாங்கிட்டு வந்து ஆகாஷ்கிட்டே கொடுத்துச்சாம்! அப்புறம் ஆகாஷூம் நாய்க்குட்டியும் மீனும் அலையும் ஜாலியா பால் விளையாடிட்டு அவங்களுக்கு பை சொல்லிட்டு வீட்டுக்கு வந்துட்டாங்களாம்!!
கதை - II

ஒருநாள் ஆகாஷ் பட்டம் விடலாம்னு பட்டம் செஞ்சு எடுத்துக்கிட்டு ஒரு க்ரவுண்டுக்கு போனான். அங்கே எல்லோரும் கலர் கலரா பட்டம் விட்டுக்கிட்டு இருந்தாங்க! ஆகாஷோட பட்டம் வேகமா பறந்து மேலே போச்சா, போய் ஒரு மரத்துலே மாட்டிக்கிச்சு. அப்போ நாய்க்குட்டி, மரத்து மேலே போய் எடுக்கலாம்னு பார்த்தா அதாலே மேலே ஏறவே முடியல. அப்போ ஆகாஷும் நாய்க்குட்டியும்,(birdie) பேர்டீக்கிட்டே போய் எங்களுக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவியா, எங்க பட்டம் மரத்துலே மாட்டிக்கிச்சு, அதை உன்னாலே எடுத்துக் கொடுக்க முடியும்னு சொன்னதும் பேர்டீயும் பறந்து போய் மேலே இருந்த பட்டத்தை எடுத்துக் கொடுத்துச்சு. ஆகாஷும் நாய்க்குட்டியும், ரொம்ப தாங்ஸ், பேர்டி, ன்னு சொல்லிட்டு ஜாலியா பட்டம் விட்டாங்க!! பேர்டீயும் பை பை ஆகாஷ், நாய்க்குட்டின்னு சொல்லிட்டு பறந்து போய்டுச்சு!
போன வருஷம் பப்புவை காலையில் சாப்பிட வைக்க நான் சொன்ன கதைகள்தான் ஆகாஷ் கதைகள்,வெண்மதி கதைகள், வர்ஷினி கதைகள் எல்லாம்! இப்போதைக்கு இதுதான் நினைவில் இருக்கு! இந்தக் கதைகள் எல்லாம் ஆகாஷுக்கும்,வெண்மதிக்கும் வர்ஷினிக்கும் சமர்ப்பணம்! (பின்ன என்னையும் கொஞ்சமா யோசிச்சு கதை சொல்ல வைச்சாங்க இல்ல!)

கொஞ்ச நாளைக்கு அப்புறம், நான் கதை சொல்ல ஆரம்பிக்கறதுக்குள்ளேயே, பப்பு, கடகடன்னு சாப்பிட்டுட்டு இல்லன்னா பாலை வாங்கி ஒரே மொடக்-ல குடிச்சுட்டு போன மர்மம் தான் எனக்கு புரியலை! :-)

Tuesday, June 16, 2009

ஹேமாக்களும் ஞானசௌந்தரிகளும்!

முதலாம் வகுப்பு. மிஸ்ஸுக்கு என்னிடம் தனிபிரியம். ஹேமா. என்னுடைய தோழி. அழகழகான குண்டு குண்டு கையெழுத்து. புத்தகத்தின் அட்டையில் ஒட்டப்பட்டிடுக்கும் லேபிள்கள் எல்லாம் கிழிக்கப் பட்டிருக்காது.அழகாக அடுக்கப் பட்ட பை. அவள் வந்தபின் மிஸ்ஸிடம் அவளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு அல்லது பிரியம் இடம் மாறியது!

ஆறாம் வகுப்பு. முதல் நாள். வகுப்பு லீடராக என்னைத் தேர்ந்தெடுத்தார் டீச்சர். முதல் மாதாந்திர தேர்வு முடிந்து விடைத்தாட்கள் கொடுக்கப்பட்டன. ஞானசௌந்தரி. எல்லாவற்றிலும் முதல் மதிப்பெண்!ஏதோ ஒரு பாடத்தில் 98 எடுத்தப்பின்னும் 100 எடுக்கவில்லையே என அழுதாள் ஞானசௌந்தரி. அன்றுமுதல் வகுப்பில், ஞானசௌந்தரிக்கு புரிந்தபின் தான் போர்டில் எழுதியிருந்தது அழிக்கப் பட்டது. ஞானசௌந்தரி எழுந்து வாசித்தபின் தான் வரலாற்று ஆசிரியர் அதை விளக்க ஆரம்பித்தார்!

ஹேமாவும், ஞானசௌந்தரிகளும் என்னை வாழ்க்கை முழுதும் துரத்திக் கொண்டே இருந்தார்கள். பெயர்கள் தான் மாறியதே தவிர +1இலும் கல்லூரியிலுங்கூட ஹேமாக்களும், ஞானசௌந்தரிகளும் என்னை பின் தொடர்ந்துக் கொண்டே இருந்தார்கள்! நண்பர்களாக இருந்தாலும் நெருங்கி பழக முடியாதவர்களாக இருந்தார்கள்! உங்கள் வாழ்விலும் ஹேமாவும் ஞானசௌந்தரிகளும் இருந்திருக்கிறார்களா?!( நீங்கதான் ஹேமா இல்லன்னா ஞானசௌந்தரின்னா இந்தப் பதிவு உங்களுக்கில்லை! :-))

முதல் ரேங்க் அல்லது டாப்பர் என்று பெயரெடுத்த இந்த ஹேமாக்களும் ஞானசௌந்தரிகளும் தேர்வுக்கு வரவில்லையெனில் "ஆகா, இந்த வாட்டி நாமதான் ஃப்ர்ஸ்ட்" என்று நினைத்துக் கொள்பவரா நீங்கள்?! நினைத்துக்கொண்டது மட்டுமில்லாமல் வீட்டில் சொல்லி வாங்கிக் கட்டிக் கொள்பவரா!! அப்படியாயின் இந்த இடுகை உங்களையும் என்னையும் பற்றிதான்! நாமதான் நல்ல மார்க் வாங்குவோம்னு எல்லோரும் நினைச்சுக்கிட்டு இருக்கும்போது அப்படியே சொதப்புவோமே! பள்ளி/கல்லூரிகளில் நம்மை யாரும் என்னோட ஃபேவரிட்-ன்னு சொல்ல மாட்டாங்க டீச்சர் உட்பட, ஆனா எல்லோருக்கும் நம்மைத் தெரியுமே - அவ்வளவு பிரபலம்! கேக்கற கேள்விக்கு தெரியும்னு கையைத் தூக்கிட்டு இருந்தாலும் டாப்பரை எழுப்பி சொல்ல வைக்கும்போது உள்ளே மனசு அடிச்சுக்குமே! இல்ல தெரிஞ்சாலும் எப்படி சொல்றதுன்னு நினைச்சுக்கிட்டு இருக்கும்போது சரியா இந்த "டாப்பர்" எழுந்து சொல்லுவாங்களே!! நம்மை பத்தி யாருமே நினைத்துக் கூட பார்க்காதபோது ஏதாவது ஒரு பாடத்திலே முதல் மதிப்பெண் வாங்குவோமே! கண்டிப்பா 90-95-ல்லாம் வாங்க மாட்டோம், ஆனா ஒற்றைப்படையில் வாங்கமாட்டோமே!

சரி..இங்கேதான் இப்படி, 'இனிமே அடுத்த வகுப்பு போகும்போதாவது இப்படி இருக்கக் கூடாது'ன்னு முடிவு கட்டி, அடுத்த வருஷம் முதல் மாதாந்திர தேர்வோட அந்த அவதாரத்தையும் நம்மால் காப்பாற்ற முடியாதே! ஒரே பள்ளி படிச்சாலும் க்ளோஸ் ப்ரெண்ட்ஸ் மட்டும் சீஸனுக்கு சீஸன் மாறுவாங்களே, ஆனால் எதிரிகள் என்று யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாதே!! (எல்லாருக்கும் எப்போவும் நல்ல புள்ளையாவே இருக்க முடியாதுல்ல!)

சரி, இதுலதான் இப்படியென்றால், கல்யாணமென்று வந்தால் நாம்தானே ஹீரோயின். அங்கேயும் ஹேமாக்களும் ஞானசௌந்தரிகளும் என்னைத் துரத்தினார்கள்! “அய்யோ பாவம், யாரு அந்த அப்பாவி” யென்றும், ”உன் கிட்டே மாட்டிக்கிட்டு என்ன பாடுபடபோறாங்களோ” யென்றும் என்னைத் துளைத்தெடுத்தெடுத்திருப்பார்கள்! மேலுன் தொடர்ந்தது ஹேமாக்களின் ஞானசௌந்தரிகளின் பிரச்சினை. தொலைபேசினால் போதும், ”நான் எல்லா கிச்சன் வேலையும் ஃபாஸ்ட்டா முடிச்சுடுவேனே, பிரச்சினையே இல்ல” என்றும் “மார்னிங் டைம்லே எனக்கு டென்ஷனே இல்லைப்பா” என்று இங்கேயும் நம்மை துவைப்பார்கள்! அது மட்டுமா, தன் வேலையைத் தானே செய்துக் கொண்டு, படுத்தாத, சமத்துக் குழந்தைகள் கூட ஹேமாக்களுக்கும் ஞானசௌந்தரிகளுக்குமே வாய்க்கிறது!

இப்போது கூட நீங்கள், "முகிலும் பப்புவும் பாவம்தான் போல, பொண்ணா இது"-ன்னு நினைத்துக் கொண்டு படித்தீர்கள்தானே! (நீங்க என்னைச் சந்திக்காமலே என்னைப் பத்தி ஒரு டேமேஜை உருவாக்கியிருக்கேன் பார்த்தீங்களா!!) இந்த உலகம் ஹேமாக்களுக்காகவும், ஞானசௌந்தரிகளுக்காகவும் மட்டும் இல்ல..சந்தனமுல்லைகளுக்காகவும்தான் என்று எனக்குச் சொல்ல முடியவில்லையென்றால் கூட, ”நீ இதுலே ஹேமாவா இருந்திருக்கணும்”, ”அதுல ஞானசௌந்தரியாக இருந்திருக்கணும்”னு சொல்லாம இருந்தீர்களென்றாலே போதும்! ஏனெனில் சந்தனமுல்லைகள் சந்தனமுல்லைகளாக இருப்பதனால்தான், ஹேமாக்கள் ஹேமாக்களாகவும் ஞானசௌந்தரிகள் ஞான்சௌந்தரிகளாகவும் இருக்க முடிகிறது, இல்லையா! ;-)

Saturday, June 13, 2009

டிராகுலாவும் சிஸ்டரும்!

எதற்கென்றே தெரியாமல் சிரித்துக் கொண்டிருப்பது...வயிறு வலிக்க வலிக்க- வயிற்றைப் பிடித்துக் கொண்டு, பார்ப்பவர்கள், “நல்லாத்தானே இருந்தாங்க, என்னாச்சு இவங்களுக்கு” என்று கேட்குமளவிற்கு!விஷயம் பெரிதாக ஒன்றும் இருக்காது,! உண்மையில் ஒன்றுமே இருக்காது! ஆனால் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குத் தொற்றிக் கொள்ளும்! கட்டுப்படுத்த இயலாமல் பொங்கிக் கொண்டிருக்கும் சிரிப்பலைகள் - ஏதோ அதுதான் அந்த சமயத்தில், ஏன் உலகத்திலேயே மிகவும் funny-ஆக இருப்பதுபோல!! கல்லூரிகளில் அடிக்கடி நடக்கும் இது!

ஒரு புதிய கணினிக்கூடம் (Lab) ஒன்றை எங்கள் பல்கலை. நிறுவி இருந்தது. ஒன்றிரண்டு வேலைக்களே மீதி இருந்த நிலையில் எங்கள் உபயோகத்துக்கு திறந்து விடப்பட்டு இருந்தது. நாங்களும் இத்துப் போன DOS, FOX PRO-விலிருந்து ஆரக்கிள், புது ஆபரேடிங் சிஸ்டம், வழக்கம்போல சாலிடேர் என்று படம் காட்டிக்கொண்டிருந்தோம்! இரண்டுநாட்கள் கழித்து LAN-ல் ஏதோ பிரச்சினை. மெயிண்டெனன்ஸ் இஞ்சினியரும் வந்து எல்லா கணினிகளையும் அலசி ஆராய்ந்துக் கொண்டிருந்தார். நாங்களும் அவர் செய்வதை நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தோம். (கத்துக்குற ஆர்வம்ப்பா!) அவருக்கு ஒன்றும் பிடிபடவில்லை போல. ஒரு கணினியில் எதையோ வெகு நேரமாகத் தேடிக் கொண்டிருந்தார். ஸ்டார்ட்-லேர்ந்து ப்ரோக்ராம்ஸ், அதைவிட்டா எக்ஸ்ப்ளோரர் என்று!

கல்பனா, தமிழ்செல்வி, சுபத்திரா மற்றும் நான்! எங்களுக்கு சொல்லவே வேண்டாம், சும்மாவே சிரித்துக் கொண்டிருப்போம் - ஆள் யாராவது மாட்டினால் சொல்லனுமா என்ன!
அதுவும், நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்ற டென்ஷனோடு கூட பரபரப்பாக இருந்தவரைப் பார்த்ததும் லேசாக சிரித்துக் கொண்டோம்! பக்கத்திலேயே லேப்-இன்சார்ஜ்!
சற்று நேரத்தில் “ஹப்பாடா, கிடைச்சுடுச்சி” என்றார் மகிழ்ச்சியோடு. என்ன பிரச்சினையென்றதற்கு, “யாரோ Network neighborhood"ஐ "connection to the pakkathu computer"னு மாத்தி வைச்சுருக்காங்க, தேடறதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிடுச்சு” என்றதும் வந்த சிரிப்பை அடக்க மாட்டாமல் வெளியே ஓடினோம் நாங்கள்! நெடுநேரமாகியது எங்களுக்கு சிரிப்பை அடக்க! யாரோ ஒரு ஜூனியர் குட்டிப்பிசாசின் வேலை அது! எவ்வளவு அழகாக மொழி பெயர்த்து பெயரை மாற்றியிருக்கிறாள்!! கிச்சுகிச்சு மூட்டுவதைப் போல, connection to the pakkathu computer என்ற பதம் நீண்ட நாட்களுக்கு எங்களிடையே வழக்கத்தில் இருந்தது!

எங்கள் விடுதியில் ஆறு பேர் ஒரு அறைக்கு. ஸ்டீல் கட்டில்கள் போடப்பட்ட நீளமான அறை.இரவு 10 மணிக்குமேல் எந்த சத்தமும் வரக்கூடாது.(அப்படி வந்தா சிஸ்டர் வந்து சத்தம் போடுவாங்க!):-) வெள்ளிக்கிழமை இரவுகளில் தூங்க வெகுநேரம் பிடிக்கும். ஊர்க்கதை, திருடன் கதை, நாட்டுநடப்பு, பேய்க்கதை எல்லாம் பேசிட்டு தூங்க வேண்டாமா!! அன்று ஆறு கட்டில்களையும் அருகருகே போட்டுக்கொண்டு படுத்ததும் கதை சொல்லும் பணி ஆரம்பித்தது. டிராகுலா கதை. குஷி வந்த ஸோபி, போர்வையை மேலே சுற்றியபடி முக்காடிட்டுக் கொண்டு டிராகுலாவாக மாறி கட்டில்கள் தாண்டித்தாண்டி வந்து பயமுறுத்திக் கொண்டிருந்தாள். நாங்களும் ஆ, ஊ என்று அலறிக் கொண்டு அட்டகாசம்!

திடீரென எங்கள் அறை கதவு திறக்கப்படும் சத்தம். ஸோபியைத் தவிர நாங்களெல்லோரும்
போர்வையை முகத்தில் மூடி கப்சிப்! சிஸ்டர் கதவைத் திறந்துக் கொண்டு நின்றிருந்தார்!
போர்வையோடு ஸோபி மிகப் பரிதாபமாக சிரிப்பை அடக்கமுடியாமல் நின்றுக் கொண்டிருந்தாள்! நாங்கள் ஓட்டையின் வழியே பார்த்துக் கொண்டிருந்தோம். ”you are all grown-ups” அது இதுவென்று வழக்கம் போல திட்டிவிட்டு சென்றுவிட்டார் சிஸ்டர். போர்வைக்குள்ளேயே சிரிப்பை அடக்கமாட்டாமல் இருந்த எல்லோடும் சேர்ந்துக் கொண்டாள் ஸோபியும்! கல்லூரியில் நெடுநாட்களுக்கு, ஏன் அதற்குப்பின்னான எங்கள் கடிதத் தொடர்பிலும்கூட இடம் இருந்தது டிராகுலாவும் சிஸ்டரும்! ”ஸோபி, நீ எப்படி நின்னுக்கிட்டிருந்தே” என்று சொல்வதே போதுமானதாக இருந்தது நீண்ட நாட்களுக்கு, வயிறு வலிக்க எங்களை சிரிக்கவைக்க!

என்ன ரொம்ப மொக்கையா இருக்கேன்னு கேக்கக் கூடாது! இப்படி மொக்கை நினைவுகளும், நிகழ்வுகளும் சேர்ந்ததுதான் வாழ்க்கை! :-)

பேப்பருக்கு வந்தது....

கம்மோட போச்சு!!
”இந்தாங்கம்மா, நான் ஒங்களுக்காக செஞ்சு வச்சிருக்கேம்மா” - என்று இதை கையில் கொடுத்தாள் பப்பு!

ஏதோ வேலையாக ஞாயிறு காலை வெளியே சென்று திரும்பியபின் பப்பு கையில் இருந்தது இது. அன்றைய செய்தித்தாளோடு வந்த flyer. யாரும் அருகிலில்லாமல், அவளாக செய்தது, எனக்காகச் செய்தது என்று இதன் மதிப்பு கொஞ்சம் அதிகம்தான்! தானாக செய்து பிறருக்குக் கொடுக்கலாமென்று பப்பு அறிந்திருக்கிறாளென்பது எனக்குக் கொஞ்சம் புதுசு. (thanks to the books, we read!)இந்தமுறை எந்த விபத்தும் ஏற்படவில்லை - அவளது தலைமுடிக்கு!! ;-)

Wednesday, June 10, 2009

My little Buddha...!

கட்டிலில் இருந்து குதித்து விளையாடுவது பப்புவிற்கு பிடித்த விளையாட்டு. ”நான் பறக்கிறேன் பாரு” என்று கைகளை நீட்டியபடி பீட்டர் பானாக தன்னை உருவகித்துக் கொண்டு குதிப்பதை பார்க்கும்போது நமக்குத்தான் 'அவ்வ்வ்'!!

நன்றாக அடித்துவிட்டேன் .(பெரிம்மா, இதை படிச்சுக்கிட்டிருந்தீங்கன்னா என்னை திட்டாதீங்க!!) அவள் இதை எதிர்பார்க்கவில்லை. கோபத்தோடு என்னைப் பார்த்தாள். முகத்தில் கோபமும் அழுகையும் கொப்பளிக்க, தழுதழுத்தக் குரலில்

குட்டிபசங்க பாவம்

நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். இரண்டு விநாடிகள். தொடர்ந்துச் சொன்னாள்,

”குட்டிப் பசங்கள அடிச்சா, திருப்பி அடிச்சுடுவாங்க!!”

oh, What a Zen-ness...!

Note:

இன்று பள்ளிக்கூடத்தின் முதல்நாள். அவளுக்கொன்றும் வெண்மதிக்கொன்றுமாக இரண்டு மிட்டாய்களை எடுத்துக் கொண்டு கிளம்பியிருக்கிறாள். Now the house seemed empty and quiet.(More on that Later!!)இந்தப் பதிவை இன்றொருமுறை வாசித்துக்கொண்டேன்!! Wishing here on her First day to school...to the new beginnings...All the very Best,Pappu!!

Tuesday, June 09, 2009

பாசாங்குகள் - சங்கடங்கள்!

பாசாங்கு குறித்து விஜய் டீவியில் வந்த சில கிளிப்பிங்ஸ் பார்க்க நேரிட்டது இணையத்தில். பாசாங்கு/நாடகத்தன்மைகள் இல்லாமல் வாழ முடிவதில்லையென்பது உண்மைதான். ஆனால் எவ்வளவு விகிதம் என்பதில்தான் இருக்கிறது சுவாரசியம்! அதைவிட சுவாரசியம், இந்த பாசாங்குகளை வைத்துத்தான் பெரும்பாலான நேரங்களில் நாம் கணிக்கப்படுகிறோம்/ஜ்ட்ஜ் செய்யப்படுகிறோம்! பதின்மத்தில் ஆரம்பத்தில் - ஒரு ரணகளமே நடக்கும் வீட்டில்! யாராவது தூரத்து உறவினர்கள் வீட்டிற்கு வந்திருப்பார்கள். ட்யூஷன் முடித்தோ அல்லது விளையாடிவிட்டோ வீட்டுக்குள் வருவோம். வந்திருப்பவர்களைப் பார்த்து புன்னகை புரிந்து, நல்லாருக்கீங்களா என்று கேட்டுவிட்டு காலில் வெந்நீர் ஊற்றிக் கொண்டதை போல நழுவுவதற்கு துடித்துக் கொண்டிருப்போம்.இல்லன்னா, அடுத்தக் கேள்வி, ”நல்லா படிக்கிறியாம்மா? (என்ன ரேங்க்?!)”ன்னு வருமே! இதற்கு யாரால்தான் இல்லைன்னோ/உண்மையான ரேங்கையோ சொல்லிவிட முடியும்?!

ஒரு சிலர், ”வாங்க”ன்னுக்கூட கூப்பிடலைன்னு பிறரிடம் போய் பழிசொல்லிவிடுவார்களாம், மரியாதைத் தெரியாத பொண்ணு என்று! (”வாங்க”ன்னு சொல்லிட்டா மட்டும் நல்ல பேர் கிடைச்சுடுமா என்ன?!)இதில் எத்தனை பாசாங்குகள்! பிறரிடம் சொல்லிவிடக்கூடாதென்பது ஒரு பக்கம்! இன்னொன்று, நான் வீட்டிற்குள் வருவதற்கு முன் அவர்கள் வந்திருப்பார்கள். ஆனால், அப்போதுதான் வீட்டிற்குள் நுழையும் நான், அவர்களை, “வாங்க” என்று சொல்லவேண்டும்! அந்த லாஜிக் ரொம்ப நாள்வரை எனக்குப் புரிந்தது இல்லை.ஏற்கெனவே வந்துவிட்டவர்களை எப்படி ”வாங்க”ன்னு சொல்ல முடியும்!! லாஜிக்படி, அவங்கதானே என்னை வாவென்று அழைக்க வேண்டும்! ஒருவேளை நான் இருக்கும்போது அவர்கள் வந்து, நான் கதவை திறந்தால் வாங்கன்னு சொல்லலாம்! வீட்டில், 'வாங்கன்னு சொல்லிட்டுபோயேன், இதுல என்ன குறைஞ்சுபோய்டறே' என்று சொன்னால், “இப்ப நான் வாங்கன்னு சொல்லலைன்னா அவங்க வராம போய்டுவாங்களா” னெல்லாம்னு எங்க ஆயாவின் மொழியில் ‘விதண்டாவாதம்' பண்ணியிருக்கேன்! (I was so raw that time - அப்புறம் நல்ல பொண்ணாயிட்டேன் - கல்யாணத்துக்கு அப்புறம் நல்லாவே தேறிட்டேன்!)

பாசாங்குகள் மிக அதிகமாக பரிமாறிக்கொள்ளப்படும்/ தெரிந்தே ஏற்றுக்கொள்ளப்படும் இடம்/அமைப்பு திருமணங்கள்! அது எதிலிருந்து ஆரம்பிக்கும் என்றால் பெண் பார்த்தல். இதில் 90% பாசாங்குகளே - நாடகமே! பையன்கள் பக்கத்திலிருந்த சங்கடங்களை நானறியேன்! (யாருக்காவது பையனைப் பார்க்கிற அனுபவம் வாய்ச்சிருக்கானு தெரியலை!)ஆனால் பெண்ணாக அனுபவப்பட்டிருக்கிறேன்!என் தோழிகளில் ஒரு சிலரால் இதை இயல்பா ஏற்றுக்கொள்ள முடிந்தது..ஒரு சிலரால் முடியவில்லை,ஆரம்பத்தில்! ஃபோட்டோ பிடிக்கறதுலே இருந்து ஆரம்பிக்கும் பாருங்க! சினிமாலேதான் பையனோட அம்மாக்கள் மாடர்னா ஃப்ரீ ஹேர் ஸ்டைலோட இருக்கற பொண்ணுங்க புகைப்படத்தை காட்டுவாங்க! நிஜத்துல அதுக்கெல்லாம் சான்ஸே இல்ல!!

எவ்ளோ குட்டி முடியாக இருந்தாலும் பின்னலிட்டு பூ வைச்சிருக்கணும்!(முடியை விரித்து விடக் கூடாது! - free hair means you are REBELLIOUS!!) கண்டிப்பாக புடவை! அடுத்து நகைகள். கல் நகைகள்தான் போட்டுக்கணும்னு சில அம்மாக்கள் அடம் பிடிப்பாங்க! இதுக்குமேலே மேக்கப் - அது டாப் அப் மாதிரி!(இது என்னோட அனுபவம். இப்போ பரவாயில்லை,என் தோழிகள் வீட்டுலே பட்டுலேர்ந்து டிசைனர் புடவைகளுக்கு மாறியிருக்காங்க!)இந்தமாதிரி ஒப்பனையோட வீட்டுலே இருக்கறவங்களை சீரியலில்தான் பார்க்கலாம்! நமக்கு பிடிக்குதோ இல்லையோ,ஆனா எவ்வளவு பாசாங்கு!! நோக்கம்னு பார்த்தா, நாம presentable-ஆ இருக்கணும்! அதுக்கு சாதாரணமா எப்படி இருப்போமோ இல்லன்ன நாம் வெளிலே போகும்போது எப்படி நம்மை அழகுபடுத்திப்போமோ அதோட விடலாம் இல்லையா! ஹம்..கேக்க மாட்டாங்களே!

புகைப்படத்துக்கே இப்படின்னா, பொண்ணு பார்க்கிற நாடகம் எபப்டி இருக்கும்னு நினைச்சு பாருங்க!(எவ்வளவு எம்ப்ராஸிங்-ஆ இருக்கும்!உங்கள் ஒவ்வொரு அசைவுகளும் உங்களுக்கேத் தெரியாமல் கண்காணிக்கப் படும் - உங்கள் கேரக்டரும்தான்! ) அதை ஏன் ஒரு பொது இடத்தில், ஒரு ரெஸ்டாரண்டில் அல்லது பார்க்கில் இரு குடும்பங்கள் சாதாரணமாக சந்தித்துக் கொள்வது போல் வைத்துக் கொள்ளக் கூடாது?! என் 'முதல் பெண் பார்த்தல்' அனுபவம் - ஆபிஸ் வரவேற்பறையில் நடந்தது!வியர்ட்? என்னால புடவை கட்டிக்கிட்டு, காப்பி-ல்லாம் எடுத்துட்டு வந்து கொடுத்து நடிக்க முடியாதுன்னு சொன்னதால, பையனின் அம்மா-அப்பா மட்டும் என்னை வந்து ஆபிஸிலே சந்திச்சாங்க! ஒரு கால்மணிநேரம் பேசிட்டு போனாங்க! இது எதுவும் என்னை வித்தியாசமா, இல்ல கான்ஷியசா நினைக்க வைக்கலை! ஏதோ நம்ம வீட்டுக்குத் தெரிஞ்சவங்க என்னை வந்து பார்த்துட்டு போன மாதிரி இருந்தது! அவ்வளவுதான்! எந்த அபத்தக்கேள்விகளும் இல்லை! (அவங்களுக்கு எப்படி இருந்ததுன்னுதான் தெரியலை!பொண்ணை 'இயல்பா சாதாரணமா பார்க்க” பையன் வீட்டினரும் மாறணுமில்லையா!!)

அடுத்ததடவை, எங்க மாமா வீட்டிலே...சொல்ல வேணுமா! எல்லா சொந்தங்களும்! ஆனாலும் நான் அடம்பிடிச்சு சல்வார் கமீஸ் & ஃப்ரீ ஹேர்! அப்படியும் பூ வைக்க ரொம்ப முயற்சி பண்ணி வெற்றியும் அடைஞ்சுட்டாங்க எங்கம்மா! காபில்லாம் எங்க அத்தைதான் கொடுத்தாங்க! ஆனால், இந்தமுறை ரிஜக்ட் பண்ணது நானு! why should boys have all the fun?! இப்படி ரெண்டு தடவை நான் பொண்ணு பார்க்கற நாடகத்தில் நடிச்சிருக்கேன்! அதுக்கப்புறம் முகில்தான்னு முடிவு செஞ்சபிறகு், ‘ஒரிஜினல் பொண்ணு அறிமுகக் காட்சி'ல நடிச்சிருக்கேன்!! இந்தமுறை பக்காவா புடவை கட்டி, நகைபோட்டு காபி கொடுத்துட்டு அறைக்குள்ளே போய் உட்கார்ந்து...ன்னு! ஆனா, வித்தியாசமா தோணலை - பழகிடுச்சா இல்ல 'அவ்ளோதான் இனிமே இப்படி யார்முன்னாலயும் போய் நிக்கவேண்டியதில்லை' எனும் நிம்மதியினாலான்னு தெரிய்லை!!

கடைசியா என்ன சொல்ல வர்றேன்னா, பொண்ணு பார்க்கிறேன்னு பொண்ணை எம்ப்ராஸ் பண்ணாம, ஒரு ரெஸ்டாரண்டிலேயோ பொது இடங்களிலோ சந்திச்சா தேவையில்லாத நெருடலை தவிர்க்கலாம்!! செலவை ரெண்டு குடும்பமும் பகிர்ந்துக்கலாம்-பொண்ணு வீட்டுலே சமையல் வேலையும் மிச்சம்!!

Monday, June 08, 2009

...ஃப்ரம் பப்பு'ஸ் ரூம்!ரொம்ப நாளைக்கப்புறமா பப்பு Doh வேணும்னு கேட்டதாலே, மாவு எடுத்துக் கொடுத்தேன்! போனதடவைய விட இப்போ நல்லாவே கைகளை பிசிபிசுப்பாக்கிக்க ஆர்வம் காட்டினா. மாவு பிசையறதுல உதவினேன். இந்த முறை நாங்க எடுத்துக்கிட்டது, ஷேப்ஸ். மாவிலே அந்த ஷேப்ஸை வைச்சு உருவங்கள் கொண்டு வரணும்! ஷேப்ஸ் எல்லாம் செஞ்சு முடிச்சுட்டு, கொஞ்சூண்டு மாவு இருந்தது. இப்போ பப்புவிற்கு ஒரு சில ஆங்கில எழுத்துகள் தெரியும். A செய்யறியான்னு கேட்டதும் உருவானதுதான் இந்த As!! அவங்க பள்ளிக்கூடத்திலே, "நீங்க வீட்டிலே எதுவும்(ஆங்கிலஎழுத்துகளை) சொல்லித்தராதீங்க, நாங்களே பார்த்துக்கிறோம்"ன்னு சொல்லிட்டாங்க என்கிட்டே! (என்னை பத்தி அவங்களுக்கு எப்படி தெரிஞ்சதுன்னுதான் தெரியலை! பெரிம்மா... நீங்க பப்புவோட ஸ்கூல் ஆண்ட்டியை சந்திச்சீங்களா?!!)


அப்புறம் செஞ்சதையெல்லாம் காய வச்சு வர்ணம் தீட்டினா பப்பு. அதுல A இப்படி உருமாறுச்சு!A எழுத்து வர்ற மாதிரி ஒரு கதை படிச்சோம். A - ANT.

இது ஒரு காட்டுல வாழற எறும்பு மற்றும் யானையின் கதை! பெரிய வண்ணங்கள் நிறைந்த படங்களோட இருக்கு. ஒரு குறும்புக்கார யானை எபப்டி எல்லாருக்கும் தொல்லை கொடுத்துச்சு, எறும்பு அதுக்கு என்ன செஞ்சதுன்னு, யானை எப்படி எல்லோர்கூடவும் நட்பா மாறுச்சுன்னும் அழகா சொல்லியிருக்காங்க!இந்தக் கதை முழுசும் A எங்கே வருதுன்னு கண்டுபிடிச்சா! ஆனா சின்ன a தெரியாதே, சோ ஒரு சில இடங்களில் மட்டும் அவளாலே கண்டுபிடிக்க முடிஞ்சது!

Sunday, June 07, 2009

பப்பு டைம்ஸ்

”பப்பு, வா ஸ்கூலுக்கு போய்ட்டு வரலாம்” - பப்பு பள்ளியிலிருந்து சீருடை வாங்க வரச் சொல்லியிருந்ததால் அழைத்தேன்!

“எனக்கு வயிறு வலிக்குது!” - வேகமாக வந்தது பதில்!

பள்ளிக்கூடத்திற்கு அவளை கிளப்பப்போவதை எண்ணி திகில் கொள்கிறேன் நான்!!
பப்புவை பால் குடிக்க வைக்க முகில் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தார்.

“என்னை ஏன் கஷ்டபடுத்தறீங்க, கஷ்டப்படுத்தாதீங்க!” - பப்பு!

உங்கள் சுட்டியை சாப்பிட வைக்க படாதபாடு படுபவரா நீங்கள்? சாப்பிடவில்லையே என்ற
கவலை மனதை வாட்டுகிறதா? ஒரு வேளை சாப்பாடு சாப்பிட்டதும் அப்பாடா, இன்னும் ரெண்டு மணிநேரத்துக்கு கவலையில்லை என்று நிம்மதி கொள்பவரா?இந்தக் கேள்விக்கெல்லாம் “ஆமாப்பா, ஆமா”ன்னு சொல்றீங்களா?

அப்போ நீங்க செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்! ரெண்டு கிண்ணங்களில் உணவை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் குழந்தை பக்கத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்!
”சாப்பிடும்மா” என்றெல்லாம் சொல்லிக் கொண்டிராமல், நீங்கள் உண்ணத்துவங்குங்கள்! உங்களையும் கிண்ணத்தையும் மாறிமாறி பார்க்கும் குழந்தை கிண்ணத்திலிருந்து தானாக எடுத்து உண்ணும் மாயத்தை காணுங்கள்! வீட்டிலிருப்பவர்கள், “குழந்தைக்கு கொடுக்காம உன்னால எப்படி சாப்பிடமுடியுதோ, நீயெல்லாம் அம்மாவா” போன்று சிலபல டயலாக்குகளை எடுத்து விடலாம்! கண்டுக் கொள்ளாதீர்கள்! இது பரிசோதனைக்குட்படுத்தப் பட்ட முறை! சொல்ல மறந்துட்டேனே- இது பருப்புசாதம்/ரசசாதம் வகைகளுக்கு அல்ல - பழங்களை உண்ண வைக்க உகந்தது!(ஹிஹி...இப்படித்தான் பப்பு மாம்பழ/ஆப்பிள் துண்டுகளை உண்ணத்துவங்கினாள்!)

Thursday, June 04, 2009

32 கேள்விகள் - தொடர்பதிவு!

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

வீட்டில் வைச்சதால்! வீட்டில் எல்லோருக்கும் தமிழ்பெயர்தான்.
கண்டிப்பா பிடிக்கும், இந்தப் பெயரின் தனித்தன்மைக்காக! நான் இதுவரை படித்த/வேலை செய்த இடங்களில் எனது பெயர் கொண்ட இன்னொருவரை பார்க்க வில்லை! இதில் எனக்குப் பெருமை கலந்த மகிழ்ச்சியும் கூட! :-)

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

பிரபாகரன் இறந்துவிட்டார் என்று சேனல்களில் காட்டியதைக் கண்டு துக்கம் தொண்டையை அடைக்க கண்கலங்கினேன்.

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

பிடிக்கும்! ஆனா சமயங்களில் எனக்கே புரியாது. அதனால பிடிக்காம போய்டுமா என்ன?!

4. பிடித்த மதிய உணவு என்ன?

மதிய உணவு என்றில்லை..எப்போதுமே பிரியாணிதான்! ஒன்லி ஆம்பூர் பிரியாணி ஃப்ரம் ஆம்பூர்!!!

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா? இது உண்மையான கேள்வி அல்ல! தொடரை ஆரம்பித்த நிலாவும் அம்மாவும் பதிவில் இருக்கிற உண்மையான கேள்வி: நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?


ஹ்ம்...யோசிக்க வேண்டிய விஷயம்!

6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

பாத்ரூமில்தான் குளிக்கப் பிடிக்கும்!

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

கண்கள்.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்ச விஷயம் : எனது தன்னம்பிக்கை, தைரியம்!

பிடிக்காத விஷயம் : அநாவசிய செண்டிமெண்ட் மதிப்புகள், மிகவும் எளிதில் உணர்ச்சிவசப்படுதல் - தேவையில்லாத காரணங்களுக்கு! (அது தேவையில்லாததுன்னு
விளைவுகளை பார்த்துத்தானேத் தெரியும்!!)

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

பிடித்த விஷயம் : எந்த சண்டையையும் ஒரு நாளைக்கு மேலே வளர விடாதது!

பிடிக்காத விஷயம் : எப்போதும் நான் சந்தோஷமா இருக்கணும்னு நினைக்கறது!

10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

பெரிம்மாதான்.

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

ஆகாயநீல டீ-ஷர்ட், பிஜ் கலர் காஷுவல்

12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

"ரெக்ரஷன் ஓடுச்சா? 4 பிளாட்பார்மிலே லெவன்-சீரிஸ்ல ப்ராப்ளம் இல்ல!" - பக்கத்து க்யூபிலிருந்து!

13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

என்னால் "எனக்கு பிடித்த வர்ணம் இது"வென்று ஒரு தீர்மானத்திற்கு வர இயலாது!

14. பிடித்த மணம்?

பப்பு தலையிலிருந்து வரும் ஒரு (வேர்வை கலந்த/பார்பிக்யூ) மணம்!

15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

g3 - g3 பத்தித் தனியா சொல்லனுமா என்ன?! இவங்களோட நட்பு பாராட்டும்தன்மையைப் (friendliness) பார்த்து அசந்து போயிருக்கேன்! உங்களுக்கு நெருக்கமான ஒரு தோழியை
இவங்களுக்குள்ளே பார்க்கலாம்!

கவிதா - எதைச் சொல்றது, எதை விடறது!! :-))

ராப் - ராப்-இன் அதிரடி ஸ்டைல்! எதையும் கலக்கலான நடையில் எழுதுவாங்க!புயல் மாதிரி வந்தாங்க, இப்போ அப்போப்போ எட்டிப் பார்க்கறாங்க! இந்த கேள்விக்கெல்லாம் ராப் எப்படி அவங்க பாணியில் பதில் சொல்றாங்கன்னு பார்க்கத்தான்!

ஆயில்யன் - சின்னபாண்டி!!

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

விக்னேஷ்வரி - கிராமத்து இல்லைகளும், நகரத்து தொல்லைகளும்

17. பிடித்த விளையாட்டு?

இறகுபந்து, சதுரங்கம்!

18. கண்ணாடி அணிபவரா?

ஆமாம்.

19. எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

women exploitation இல்லாத எந்த படமானாலும்!

20. கடைசியாகப் பார்த்த படம்?

சுப்ரமணியபுரம்

21. பிடித்த பருவ காலம் எது?

மார்ச்-ஏப்ரலில் நம்ம ஊரில் என்ன பருவமோ அது!

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

Power of Positive mom

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

படங்கள் எதுவும் வைத்துக் கொள்வதில்லை!

24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்த சத்தம் : பள்ளி/கல்லூரி மேடைகளில் பரிசுக்காக என் பெயரை அழைக்கும் அறிவிப்பு சத்தம்!

பிடிக்காத சத்தம் : எவர்சில்வர் சாமான்களை தரையில் இழுக்கும் சத்தம் பிடிக்காது! ஆம்புலன்ஸ் சத்தம் - இது எனனி தாண்டிசெல்லும்போது ஒரு அமானுஷ்யமான பயம் அல்லது சொல்லமுடியாத பயங்கலந்த உணர்வு! (ஆம்புலன்ஸுக்கு அவசியம் இல்லாத உலகு!!)

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

மவுன்ட் அபு!

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

ஓ..எவ்ளோ நேரம் வேணாலும் தூங்குவேன்! :-)

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

எதுஎதற்காகவோ எதுஎதையோ காம்ப்ரமைஸ் செய்துக் கொண்டுதான் வாழவேண்டும் என்கிற
உண்மையை! அல்லது, கல்யாணம் பண்ணிக்கிட்டா பொறுப்பு வந்துடனும்னு நினைக்கறதை!


28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

சுயநலம்!

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

ஹவாய், ஆஸ்திரேலியா (இப்போ வேணாம்ப்பா!!)!

30. எப்படி இருக்கணும்னு ஆசை?

சில சமயங்களில் நான் தைரியசாலின்னு நினைப்பேன். சிலசமயங்களில் நிறைய கற்பனை செஞ்சு பயந்தாங்கொள்ளியா இருப்பேன். பலசமயங்களில் இவை இரண்டுக்கும் நடுவில் குழப்பத்துடன் இருப்பேன்!! இப்படி இல்லாம, வீட்டுலே சொல்ற மாதிரி "பொறுப்போட" இருக்கலாமோன்னு !!

31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

நானே கார் ஓட்டிச்செல்ல!

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

Stop bugging me stop bothering me
Stop bugging me stop forcing me
Stop fighting me stop yelling me
Stop telling me stop seeing me
It's my life!

இது டாக்டர்.ஆல்பனோட பாட்டு வரிகள்! ஏனோ இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்!
வாழ்வு பற்றி ஒரு வரி-ல சொல்லத் தெரிஞ்சா, இந்நேரம் ஹைக்கூ-ல்லாம் எழுதியிருக்கமாட்டேனா!! :-)

post-edited: g3 ஏற்கெனவே இடுகையிட்டதால், நசரேயனை அழைக்க விரும்புகிறேன்! அவரது நகைச்சுவை பதிவுகள் பிடிக்கும்!

Tuesday, June 02, 2009

கொலாஜ்!பப்புவின் முதல் கொலாஜ்! பழைய செய்தித்தாட்கள் மற்றும் ஆவி-யையும் எடுத்துக் கொண்டோம். அவளுக்கு பிடித்ததைக் கத்தரிக்குமாறு சொன்னேன். அவளைக்கவர்ந்தது சிடிகள்தான். ஆனால், கத்தரிப்பதற்கு முழுமையான உருண்டை வடிவம் வரவில்லை!பூமியை கத்தரிக்க உதவினேன். அவளாகவே அவளுக்குத் தெரிந்த ஆங்கில எழுத்துகளையும், கைவிரல்கள் படத்தையும் கத்தரித்து ஒட்டினாள். இன்னும் நுணுக்கமாகக் கத்தரிக்க வரவில்லை! இது இரு வாரங்களுக்கு முன் செய்தது!இப்போதெல்லாம் பப்பு கத்தரிக்கோலை தனியாகக் கையாளுவதைத் தவிர்க்கிறோம். அவளுக்குக் கத்தரிக்க ஆர்வமாக இருக்கிறது, எங்களுக்கு பயமாக இருக்கிறது! :-)

Monday, June 01, 2009

என் ஆயா கலர் டீவியைக் கண்டுபிடிக்காதது ஏன்?

சமைப்பது என்பது எனக்கு அலர்ஜி.பேஷனுக்கு சொல்கிறேன் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்! உண்மையில், சமைப்பதில் ஏனோ ஆர்வமிருந்ததே இல்லை, சாப்பிடுவதற்கு இருக்கும் அளவிற்கு! ஒருமுறை பெரிம்மாவிற்கு காய்ச்சல் வந்து, காபி போட்டு கொடும்மா என்றபோது, "காபி எப்படி போடணும்" என்றும், துவரம்பருப்பு கழுவி வை என்றபோது, "அது எப்படி இருக்கும்" என்றும் கேட்டு அசத்தியிருக்கிறேன். இவை தவிர சமைப்பதற்காகவென்று சமையலறைப்பக்கம் எட்டிப் பார்த்தது, மிக சொற்பமான சமயங்களில் தான்!

சொல்லப்போனால்,பையன்களை சமையலறைப்பக்கம் நமது அம்மாக்கள் விடுகிறார்களா என்ன, அதேபோல் தான் பெண்களுக்கும்! ஏதோ, ஒரு சில முன்னெச்சரிக்கை ஹிட்லர் அம்மாக்கள் லீவு நாட்களில் பெண்களுக்கு சமைக்க பழக்கி விடுவார்கள்! ஆர்வமிருக்கிற பெண்களும் சமைப்பதில் மூழ்கி முத்தெடுக்கத் துவங்குவார்கள்.(யாரும் சண்டைக்கு வராதீங்க, என் தோழியர் வட்டாரத்தில் நிகழந்ததை வைத்துத்தான் சொல்ல்யிருக்கிறேன்!) மத்தபடி, சராசரியாக பள்ளியிறுதி வரை பெண்கள் சமையலறைப் பக்கம் செல்வது மிகக் குறைவுதான்.கல்லூரி விடுதியிலிருந்து வீட்டுக்கு வந்தால், "பாவம், அதுவே ஹாஸ்டல் சாப்பாடு சாப்பிட்டு வந்திருக்கு, எதுக்கு" என்றும், நம்மை சமைக்கச் சொன்னால், " நானே ஹாஸ்டல்லேர்ந்து தப்பிச்சு வந்திருக்கேன், நல்ல சாப்பாடா சாப்பிடலாம்னு,என்னை ஏன் சமைக்கச் சொல்றீங்க (!)" என்று டயலாக் விட்டும் தப்பித்துக் கொள்ளலாம்!

இதில் நிறைய அட்வைஸ் ஆன்ட்டிகள் மற்றும் கிண்டல் கிருமிகளை கடந்து வர நேரிடும். "ஆம்பிளை பிள்ளையோ, பொம்பிளை பிள்ளையோ, இந்தக் காலத்துலே சமைக்கக் கத்துக்கணும், நான் கல்யாணம் பண்ணிகிட்டு வந்தப்போ உன்னை மாதிரிதான் இருந்தேன், சுத்தமா சமைக்கத் தெரியாது, எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா,அதனாலதான் சொல்றேன், நீயும் நேரம் இருக்கும்போதே கத்துக்கோ" என்று அட்வைஸூக்கு, "நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன், ஆன்ட்டி!" என்று ஷாக் கொடுக்கலாம். "என்ன ஆச்சி, உனக்கு ஒரு கேட்டரிங் மாப்பிள்ளை பார்த்துடலாமா" என்று கிண்டலடிப்பவர்களை, "அவங்க சமைக்கறது பார்க்கறதுக்குத்தான் நல்லாருக்கும் அண்ணா, சாப்பிட நல்லாருக்காது" என்றும் சமாளித்து (!) விலகிவிடலாம். இப்படி இருந்த என் வாழ்வில் நான் சமைக்கக் கூடிய தருணமும் வந்தது!

திருமணம் முடிந்து, சுற்றங்கள் எல்லாம் ஒரு வாரம் தங்கியிருந்து வீட்டை ஒழுங்குபடுத்திச் சென்ற அடுத்த நாள், காலை உணவைத் தேடியபோதுதான் உறைத்தது, சமைப்பது என்பது என்னை சார்ந்த ஒரு விஷயமென்று. ஏனெனில், இன்று காலையில் இட்லி வேண்டுமெனில், நீங்கள் நேற்றே அதைக்குறித்து திட்டமிட்டிருக்க வேண்டும். (இரண்டு நிமிடத்தில் நாம் சாப்பிடும் இட்லிக்கு, எவ்வளவு திட்டமிடல்கள்!அளந்து எடுப்பதில் இருந்து, முதல்நாளிலேயே மறக்காமல் ஊறவைத்து, உப்பு சரியாகப் போட்டு...பொங்கி வந்ததும் பாத்திரத்தில் எடுத்து ஃபிரிட்சில் வைத்து என்று!) ஆனால், இதைத்தான் காலங்காலமாக நமது ஆயாவிலிருந்து அம்மா வரை செய்து வந்திருக்கிறார்கள்!!

காலையில் இட்லி, மாவு பழையதாகிவிட்டால் தோசை, மதியம் கூட்டு, சாம்பார், ரசம்,அடுத்தநாள் ஆப்பம், இரவு சப்பாத்தி என்று!! அடுத்தடுத்த வேளைக்கு/நாட்களுக்கு நாம் என்ன சாப்பிடுவோமென்று திட்டமிட்டுக் கொண்டும், அதற்கான யோசனைகளிலும் செயல்களிலும் ஆக்கிரமிக்கப் பட்டுகொண்டும், சமையலறை மேடைக்குமுன் நின்றுக் கொண்டு ”என்ன சமைக்கலாம்” என்று யோசித்துக் கொண்டும்!! ஆனால் எனக்கு இதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை, அதாவது நாந்தான் சமைக்க வேண்டுமென்பதை! பைபிளில், கடவுள், “ஒளி உண்டாகட்டும்” என்றதும் ஒளி உண்டானதுபோல, “இட்லி உருவாகட்டும்” என்றோ, ”மசாலா தோசை வரட்டும்” என்றோ நாம் சொன்னதும், கிடைக்கும் சக்தியை கடவுள் ஏன் கொடுக்க வில்லையென்று கவலைப்பட்டிருக்கிறேன், சமையலறையில் நின்றுக் கொண்டு!

ஒருமுறை, என்தம்பியின் உடல்நலக் குறைவுக் காரணமாக வாரயிறுதிக்கு வீட்டிற்குச் சென்றிருந்தேன். அப்போது எனக்குத் திருமணமாகி இரண்டு/மூன்று வாரங்கள் என்று நினைவு! முகிலுக்கு தொலைபேசினேன் "அரிசி உளுந்து ஊற வைச்சி அரைச்சு வைச்சிடு" என்று! திரும்ப எனக்கு அழைப்பு, எவ்வளவு ஊற வைக்கவேண்டுமென்று! நானும் ஆயாவிடம் கேட்டு, 1:3 என்றேன். சொல்ல மறந்தது, எது 1 பங்கு, எது 3 பங்கென்று!! ஹ்ம்ம்..அப்படியேதான் நடந்தது, ஒரு பங்கு அரிசியும், 3 பங்கு உளுந்தும்! பாதி அரைத்துக் கொண்டிருக்கும்போது முகிலுக்கு சந்தேகம் வந்து, அவர் வீட்டிற்கு தொலைபேசி, அதற்கு நிவர்த்தி செய்ய இன்னும் சில பங்கு அரிசி சேர்த்து அரைத்து - அந்த மாவு குண்டாவை பார்த்து மயங்கி விழுந்தேன்! அந்த மாவை பத்து நாட்களுக்கு வைத்திருந்து காலியாக்கினோம்.

வீதிக்கொரு ஹோட்டல்/வீடு - அங்கிருப்பவர்கள் தேவையான சாப்பாட்டு வகைகளை வாங்கிச் செல்லும்படி ஒரு அமைப்பு இருந்தால்!!! (ஃபுட்கிங் சரத்பாபு இதை கருத்தில் கொண்டால் ஓட்டுகள் அதிகமாக கிடைக்கலாம், எங்களைப் போன்ற ஆட்களிடமிருந்து)

ஆனால், இன்றிருக்கும் வசதிகளெதுவும், நமது ஆயா காலத்தில் இல்லை. மூளையையும், கைகளையும் ஆக்ரமித்துக் கொள்ள பல வேலைகள் இருந்தன சமையலறையிலும், அதன் சுற்றுப்புறங்களிலும்! அவர்களுக்கு அடுத்தத் தலைமுறையோ வேலை-வீடு!!என் பெரிம்மாவை எத்தனை தடவை கேட்டிருக்கிறேன், "கொஞ்சநேரம் சும்மா இருக்க மாட்டீங்களா, வேற எதுவும் யோசனை இல்லாம, அடுத்த நாள் என்ன சமைக்கலாம்னு இல்லன்னா கிளினீங் வேலை செஞ்சுக்கிட்டிருங்க"ன்னு. இட்லி-வடை-சட்னி-சாம்பார், பொங்கல்-சட்னி-வடை என்று சாப்பிடும்போது இந்தக் கேள்விகள் எல்லாம் காணாமல் போய்விடும்!

சமீபத்தில் கேட்கநேர்ந்தது, நாம் உபயோகப்படுத்தும் எல்லா பொருட்களும் ஆண்களால் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது, சமூகத்தில் ஆணின் பங்களிப்பு அதிகம் என்பது போல்! யாருக்குத் தெரியும், இப்படி சமையலிலிருந்து விடுபட்டால், இன்னும் அதிகமாக பெண்கள் கண்டுபிடிக்கக் கூடும்..பெண்களின் பங்களிப்பு பற்றி பேசும் ஒருநாள் வரக்கூடும்!