Sunday, May 31, 2009

மூடியை திருடிய குள்ளநரி!!ஊருக்கு உபதேசம்! இதைப் பார்த்து முடிவுக்கெல்லாம் வந்துடாதீங்க,ட்ரெஸ்-ல்லாம் பொம்மைங்களுக்கு மட்டுந்தான்!!பப்பு, gum-மோட மூடி எங்கே?

எனக்குத் தெரியாது..

நீதானே வச்சிருந்தே இப்போ? எங்கே இருக்கு பாரு...

நான் நாளையிலேருந்து தொலைக்க மாட்டேன் ஆச்சி!

இப்போ எடுத்துக் கொடு, இங்கேதான் இருக்கும் நல்லா பாரு..

இல்ல, ஆச்சி, அதுவே எங்கேயோ போய்டுச்சி,

கீழே இருக்கா, பாரு..

ஆமா ஆச்சி, குள்ளநரி எடுத்துட்டு போய் ஒளிச்சு வச்சிடுச்சு அங்கே!

!!!
பப்புவிற்கு பேப்பரைக் கத்தரிக்க உதவினேன்.

“ஆச்சி, பிரமாதமா கட் பண்றியே, வெரிகூட்”

வீட்டில் பேப்பரை கத்தரிப்பதற்கு ஆயாவிடமும், பெரிம்மாவிடமும் வாங்கிய திட்டுகள் நினைவிற்கு வந்தது!

Friday, May 29, 2009

ஜமதக்னி

ஜமதக்னி - தாஸ் கேபிடலை தமிழில் மொழி பெயர்த்தவர். ஹிக்கின்பாதம்ஸ்-ல் டிஸ்பிளே பகுதியில் பார்த்தேன் என்று பெருமையாகச் சொல்வார் பெரிம்மா, சென்னை சென்றுத் திரும்பும் தினங்களில்! என் ஆயாவின் சகோதரி லீலாவதியின் கணவர் - ஜம்தக்னி! இவரைப் பற்றிய சுவாரசியக் குறிப்பொன்று - ஆயாவின் தந்தை, விடுதலைப்போராட்டதில் கைதாகி ஜெயிலில் இருந்தபோது அதே ஜெயிலில் இருந்தவர் ஜம்தக்னி. ஜம்தக்னி பெரிய படிப்பாளி/ பட்டதாரி என்பதால் வேறு கிளாஸும், ஆயாவின் தந்தை C கிளாசிலும் இருந்திருக்கிறார்கள். உணவும் வேறு வேறு போல. C கிளாசில் இருப்பவர்களுக்கு சோளக்கஞ்சி/சோளக்களி. தாத்தாவிற்கு அது ஒவ்வாததினால், ஜமதக்னி தனது அரிசி உணவை தாத்தாவிற்குக் கொடுத்துவிட்டு, தாத்தாவின் உணவை எடுத்துக் கொள்வாராம். அப்போது லீலாவதி அம்மையார், 9 வயதிலிருந்தே விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதை அறிந்து அவரை தனக்கு மணமுடித்துக் கொடுக்குமாறு தாத்தாவிடம் உறுதி வாங்கிக் கொண்டிருக்கிறார். விடுதலையான பின்பு அவ்வாறே திருமணமும் செய்துக் கொண்டிருக்கிறார்!!

அவரது நாட்டுடமையாக்கப் பட்ட எழுத்துகளைப் பற்றிய பதிவினை RV-யின் தளத்தில் பார்த்தேன். பதிந்து வைக்கத் தோன்றியது!

பொதுவாக, இந்தத் தியாகிகளுக்கு இருந்த வேட்கையும், விழிப்பும் அவர்களது அடுத்தத் தலைமுறைக்கு இருந்ததா என்றால் சந்தேகமே! எங்கே தோல்வியுறுகிறார்கள் இவர்கள்?தமது அறிவைக் கடத்துவதிலும், தொலைநோக்கு சிந்தனை இல்லாமையும், கல்வியறிவுக் குறித்த சிந்தனையற்றிருப்பதும்?!(சுயநலமாக இருக்கத் தவறியதன் விளைவு என்றும் கொள்ளலாம்!) பெரும்பாலான தியாகிகளின் குடும்பங்களில் இந்தநிலையைக் காணலாம். தூத்துகுடியில் சாலையோரத்தில் வசித்துவந்த கப்பலோட்டிய தமிழனின் வாரிசுகள் - அனைவருக்கும் தெரிந்த உதாரணம். வாழ்வாதாரங்களுக்காகவும், தகவமைத்துக் கொள்வதுமே பெரும் சவாலாக இருக்கிறது பல தியாகிகளின் வாரிசுகளுக்கு! சில தியாகிகளின் வாரிசுகள் நல்ல நிலையில் இருக்கலாம், ஆனால் சுதந்திர போராட்டத்திற்காக இருந்த அனைத்தையும் வாரிக் கொடுத்த பல வீரர்களின் வாரிசுகளின் நிலை இதுதான்!

பி.கு : இப்படியாக கணினிக் கற்றுக் கொண்ட பெரிம்மா, இப்போது பின்னூட்டம் போடுமளவிற்கு
வந்திருக்கிறார்கள்! ;-)

Monday, May 25, 2009

பப்பு நினைக்கிறாள்....

1. நாங்கள் கடந்துச் செல்லும் எந்த பிரிட்ஜ்-உம் லண்டன் பிரிட்ஜ் என்று!
அவள் கேட்கும்போதெல்லாம் எனக்கு ஒரு சைக்கலாஜிக்கல் ட்ராமா - எதைக் கொண்டு கட்டி இருப்பார்களோ- எப்போது இடிந்து விழுமோ!

2. தான் பள்ளிக்கூடப் படிப்பை முடித்து விட்டதாகவும், இனி பள்ளிக்கூடத்திற்கு செல்ல வேண்டியிருக்காதென்றும் !

பள்ளிக்கூடம் போகலாம் என்ற பேச்செடுத்தாலே, எனக்கு ஸ்கூல் முடிஞ்சுடுச்சு என்கிறாள். சமயங்களில், அலுவலகத்திற்குத்தான் செல்லப் போவதாகவும் கூறுகிறாள். அப்படி ஒரு அலுவலகம் இருக்கிறதா?


3. எதிர்படும் வேகத்தடைகளை மலைகளென்றும்!
இது
டோரா விளைவு!!

Friday, May 22, 2009

ஆ ஃபார்...

ஆச்சி...வீட்டில் எனது செல்லப் பெயர்! ஐந்தாம் வகுப்பு வரை பள்ளியில் இந்தப் பெயரில் என்னை யாரும் அழைத்திருக்க வில்லை.ஆனால் மேனிலைப் பள்ளியில் ஆச்சி என்றுதான் பலரும் அறிவர். பெரும்பாலான ஆசிரியர்கள எனது சின்னவயதிலிருந்து அறிந்ததால் இருக்கலாம். ஆனால் வகுப்பறையில் முல்லைதான்! ஆச்சி என்ற இந்தப் பெயர் சிறியவயதில் ஒரு தொல்லையாகவே இருந்தது. அப்போதெல்லாம் திட்டுவதற்கு பெரிதாக ஒன்றும் தெரியாதே..பெயரை வைத்துத் தானே திட்டுவோம்!! விஜி பஜ்ஜி, புகழேந்தி..புழு, ராஜா கூஜா, பிரேமா கிரேமா..இப்படி அர்த்தமிருக்கிறதோ இல்லையோ, டீ ஆர் பாணியில் !!அதில் ”ஆச்சி..பூச்சி”யாக்கப்பட்டுவிடும் வெகு எளிதில்!!

கல்லூரியில் எல்லோருக்கும் தெரிந்து இருக்காது, ஆனால் நமக்கென்று இருக்கும் ஒரு க்ளோஸ்ட் க்ரூப் மட்டும் அறிந்திருக்கும்..ஆனால் ஒரு சில நேரங்களில்தான் இந்தப் பெயர் உபயோகத்துக்கு வரும்.புதிதாகக் கேள்விப்படுபவர்களுக்கு பெயர் விளக்கம் சொல்லனும். தானாகத் தெரியாது, ப்ரெண்ட்சை வீட்டுக் அழைத்துவரும்போது தெரிந்துவிடும்!!
கல்லூரித் தோழிகள் வீட்டுக்கு வந்தால் அப்படியே மாறி விடுவார்கள், நமதுக் குடும்பத்தில் ஒருவரைப் போலவே! ஆச்சியென்றே அழைப்பது, நாம் யாரை என்ன உறவு வைத்துக் கூப்பிடுகிறோமோ அவ்வாறே அவர்களும் அழைப்பது!! கொஞ்சம் ஓவராத் தான் இருக்கும்! எல்லாம ரொம்ப பவ்யமாக இருப்பதுபோல சீனுக்காகத் தான்! அதில், லதா கொஞ்சம் அதிகமாகப் போய், பெரிம்மா காலில் வேறு விழுந்து ஆசீர்வாதம் வாங்கினாள்! (அசத்துவதாக நினைத்து செய்தாள் என்று நினைக்கிறேன்!அதுவுமில்லாம கால்ல விழுந்தா கண்டிப்பா காசுக் கொடுப்பாங்க வேற!) ஆனால் பெரிம்மா, ”கால்ல விழுந்தாத்தான் எங்க ஆசீர்வாதம்னு இல்லம்மா, எப்போவும் உங்களுக்கு எங்க ஆசீர்வாதம் இருக்கும்னு ”சொல்லிட்டாங்க! (ஹிஹி..நோ காசு!)அதுவும் இல்லாம க்ளோஸ் ப்ரெண்ட்சை நம்ம வீட்டுக்கு கூப்பிட்டு வர்றது பெரிய சந்தோஷம். ஒரு தடவை கூப்பிட்டுப் போனா போதும், எல்லா லெட்டர்லேயும் இவங்களை அவங்க நலம் விசாரிப்பாங்க,அவங்க இவங்களை நலம் விசாரிப்பாங்க, நமக்கு நாம யாரோட குடும்பம்னு ஒரு குழப்பமே வந்துடும்! நமக்கு வர்ற போன்கால்ல இவங்க வந்து ரெண்டு வார்த்தை வேற பேசிட்டு போவாங்க!! நமக்கும் அவங்க வீட்டுலேர்ந்து இதே கவனிப்புதான்! இப்படி ப்ரெண்ட்ஸ் வீட்டுக்கு போறேன்னுதான் திண்டுக்கல், உடுமலைப்பேடை,ராமேஸ்வரம், கோயமுத்தூர்ன்னு சுத்தினதெல்லாம்! இப்போவும் அதேமாதிரி விட்டேத்தியா சுத்தறதுக்கு ஆசைதான்! ஹ்ம்ம்....ப்ரெண்ட்ஸ் வீடெல்லாம் இருந்தாலும் வீட்டுலே யாரும் இல்ல!!


அ ஃபார் ....

Wednesday, May 20, 2009

”இலங்கையில் சண்டை”

நம் அனைவருக்குமே பிரபாகரனைப் பிடிக்கும். அல்லது சிறுவயதில் பிடித்திருக்கும். இங்கே முக்கியமாக அனைவர் என்று குறிப்பிடுவது, 25 வயதிலிருந்து 30 வயதிற்குள்ளாக இருக்கும் இளைய சமூகத்தினரைப் பற்றி! திக அல்லது திமுக பற்று கொண்ட குடும்பங்களில் பிறந்திருந்தால் ஈழத்தில் நடக்கும் போராட்டம் பற்றியும், பிரபாகரன் யாரென்றும் ஓரளவுக்குத் தெரிந்திருக்கும். அதாவது, புருஸ்லீ அல்லது ஜாக்கிசான் ஒரு படத்தில் சண்டைப் போட்டால் எப்படி ரசித்து பார்ப்போமோ அப்படி நம் அனைவருக்குமே பிரபாகரன் தேவையாயிருக்கிறார்.பெருமைப்படுவதற்கும், ”தமிழண்டா” என்று மார்தட்டிக்கொள்வதற்கும்!
அவர் போரிடுவது/போராட்டத்தை வழிநடத்துவது நமக்கு பார்க்கப் பிடித்திருக்கிறது. உணவு இடைவேளைகளில் உலக அரசியல் பேசும்போது ஊறுகாய் போல ஈழத்தை தொட்டுக் கொள்ள, போராட்டத்திற்கு ஆதரவாகவோ அல்லது எதிர்த்தோ ஓரிரு நிமிடங்கள் பேச!! நான் பார்த்த, சந்தித்த மனிதர்களைக் கொண்டுத்தான் இதைச் சொல்கிறேன். கடந்த இரு தினங்களாக எல்லோரும் ஒரு வித பரபரப்புக்குள்ளாவதைக் காண்கிறேன். சேனல்கள் மாற்றிப் பார்ப்பதும், விவாதிப்பதுமாக - எதோ ஒரு தமிழ் சினிமாவின் கிளைமாக்ஸ் காட்சியைப்
பார்ப்பது போல!

ஆனால் சென்ற வாரம் வரை, இப்படி ஒரு போராட்டமோ,அங்கு இன்னலுக்குள்ளாகும் மக்களைக் அறிந்துக் கொள்ள வேண்டிய தேவையோ/பிரக்ஞையோ இல்லாமல் இருந்தவர்கள் இவர்கள். ”இலங்கையில் சண்டை” என்பதுதான் அவர்களுக்குத் தெரிந்த மாக்ஸிமம் நியூஸ்! ஆனால், அங்கிருந்து வந்து இங்கு தங்கியிருக்கும் ஈழ மக்கள் குறித்தோ, அவர்தம் வாழ்வு குறித்தோ ஒரு எண்ணமுமிராது (எண்ணினால் மட்டும் என்ன செய்ய முடியும் என்றுக் கேட்காதீர்கள்!). ஆனால், நமது முந்தைய தலைமுறைக்கு இதுக் குறித்து இருந்த விழிப்பும், பற்றும், நமது இனம் என்ற சிந்தனையும் இன்றைய இந்த குறிப்பிட்ட தலைமுறையில் இல்லை என்பதே என்னை இப்படி ஒரு இடுகையை எழுதத் தூண்டியது. இங்கும் ஆண்/பெண் வேறுபாடு இருக்கிறது. ஆண்கள், ஓரளவிற்கு அரசியல் ஆர்வம் கொண்டவர்களாயிருந்தால் கொஞ்சமேனும் போராட்டம் குறித்தும் இனஅழிப்புக் குறித்தும் விழிப்புக் கொண்டிருக்கிறார்கள். (இது எனது பார்வை மட்டுமே. பல நண்பர்கள் இரண்டு நாட்களாகக் கூடிகூடி பேசுவதும், இணையத்தை செக் பண்ணுவதுமாக இருக்கும்போது, பெண்தோழிகள் மருந்துக்குக்கூட வாய் திறக்கவில்லை (கஷ்மீர் பிரச்சினையோ அல்லது யூதர்கள் குறித்தோ பேச்சு வந்தால் பிய்த்து உதறிவிடுவார்கள்). அதுவும் சொற்பமே. மேலும், போட்டி நிலவும் பள்ளிச்சூழல், கல்லூரி வேலை என்று எப்போதும் தங்களை நிலைநிறுத்திக் கொண்டாகவேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்களை குறை சொல்லவும் முடியாது போல்!ஆனால், ஈராக்கிலோ,பாலஸ்தீனத்திலோ பிரச்சினை வந்தால், ஆராய்ந்து அலச முடியும் அளவிற்கு ஈழம் குறித்த பார்வை பெரும்பாலோர்க்கு இருப்பதில்லை. இதில் நானும் அடக்கம்!

தினமும் போராட்டத்தில் இத்தனை பேர் பலி என்று செய்தியில் ஓரிரு வரிகள் கேட்பதோடு முடிந்துவிடுவதும் ஒரு முக்கியக் காரணம். ஆயிரக்கணக்கில் அல்லலுறும் அப்பாவி பொதுமக்கள் குறித்தோ அல்லது, முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் பெண்டிர்/ குழந்தைகள் நிலை குறித்தோ எதுவும் சொல்லாத மீடியாக்களும் காரணம். ஈழத்தமிழர்களின் எழுத்துகள் வெகுசன பத்திரிக்கைகளில் வருகிறதாவென்று எனக்குத் தெரியாது. யுகாமாயினியில் தற்போது வருகிறது, ஆனால் எத்தனைப் பேருக்கு அதைப் படிக்கும் வாய்ப்புக் கிடைக்கும். சந்தரவதனா அவர்களின் "கரண்டி" படைப்பை என் தோழிகளுக்குப் படிக்கக் கொடுத்திருக்கிறேன்! மீடியாக்கள் ஒருவித பரபரப்பை உண்டாக்கியிருக்கும் இந்த நேரத்தில், அங்கு நடக்கும் இனப்படுகொலையைக் குறித்தும் பேச வேண்டும். நிம்மதியாக, சம உரிமைகளோடு அவரவர் மண்ணில் வாழ அனைவருக்கும் உரிமை இருக்கிறது என்பதையாவது இந்தத் தலைமுறையினருக்கு தெரிவிக்கவேண்டும். நாம் எவ்வாறு நமது குழந்தைகள் விளையாடவும், சாக்லேட் ருசிக்கவும் உரிமை இருப்பதாக எண்ணுகிறோமோ அதே உரிமையும் வாழ்வின் சுகங்களும் தமிழர்களாய் பிறந்த/போராட்ட மண்ணில் பிறக்கும் குழந்தைகளுக்கும் இருக்கிறது என்பதையும் நினைவுபடுத்த வேண்டும்!!

Monday, May 18, 2009

தொண்டைக்குள் ஏதோ உருள...சொல்லத் தெரியவில்லை..இதயம் வலிக்கிறது!!!
நீங்கள் தோற்பதை நாங்கள் விரும்பவில்லை..உங்கள் வெற்றிக்கு உதவக்கூடிய வழிகளும் எங்களிடம் இல்லை! உங்களுக்காகத் துடிக்கும் நெஞ்சங்கள் தவிர !! கேள்வி்படும் கெட்டசெய்திகள் அனைத்தும் பொய்யாயிருக்கக் கூடாதெவென ஏங்குகிறது மனம்! எப்படியேனும் மீண்டு வந்துவிடுங்கள்...நம்பிக்கையூட்டுவதையும் பதைபதைப்பதையும் தவிர வேறெதும் செய்ய இயலா கையறு நிலையில்...!!

Post-Edited :
தகவல்கள் உறுதிப்படுத்தப் படாதவையென்று பல பதிவுகளில் சொல்லப்பட்டிருக்கிறது. காலையில், NDTV, CNN, Times now சேனல்களில் வந்த செய்திகளைக் கண்ட மனவுளைச்சலில் இவ்விடுகையை பதிவு செய்திருந்தேன்! மன்னித்தருள்க!

Friday, May 15, 2009

tit-bits..

பப்பு, எனக்கும் ஐஸ்க்ரீம் வாங்கிட்டு வாடா -ஆயா!

இல்ல, எனக்கு மட்டும்தான்!

ஒரு ஸ்கூப் மட்டும் வாங்கிட்டு வா, பப்பு- ஆயா!

டாக்டர் உங்களை ஐஸ்க்ரீம் சாப்பிட சொல்லியிருக்காரா?!

!!! - ஆயா!


ஆயா, நீங்க ஊரிலே இருந்து எனக்கு என்ன வாங்கிக்கிட்டு வந்திருக்கீங்க?! உங்க பையிலே இருந்து எனக்கு எப்போ தரப் போறீங்க?!


ஸ்வீட் டப்பா. ஜாங்கிரிகள்.

எனக்கு! எனக்குத்தான்!- பப்பு!

போதும், எனக்கு வேணாம்! - பாதி சாப்பிட்டபின்!

வேஸ்ட் பண்ணக் கூடாது, நீதான் சாப்பிடனும், இல்லனா, அப்புறமா சாப்பிடறயா?!

இல்ல, டாக்டர் என்னை இதை சாப்பிடக்கூடாதுன்னு சொல்லியிருக்கார்!!
-!!!-ஆச்சி, நீ பேரீச்சம்பழம் மாதிரி இருக்கே..நீ நல்லா சாப்பிட்டாதான் இது மாதிரி ஆக முடியும் (முகிலின் தொப்பையைக் சுட்டியபடி!!)

Thursday, May 14, 2009

பிறந்த நாள் வாழ்த்துகள் அமிர்தவர்ஷினி அம்மா!!
அடிக்கடி அமித்து அப்டேட்ஸ்
ரசித்து சிரிக்க அனுபவம் பேசுது படைப்புகள்
வாழ்வின் உன்னதத்தை உணர வைக்கும் கவிதைக் கணங்கள்
அவ்வப்போது மனசைப் பிழியும் பதிவுகள்
விமர்சனம் செய்ய இன்னும் பல புத்தகங்கள்- என்று
மற்றுமோர் சுவாரசியமான ஆண்டை
”மழை”யாய் பொழியும் அமித்து அம்மாவிற்கு
வாழ்த்துகிறோம்!!இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அமிர்தவர்ஷினி அம்மா!!

Wednesday, May 13, 2009

we are going on a lion hunt

we are going on a lion hunt என்ற சிறார் பாடலை பப்புவிற்காகத் தேடினேன். ஆனால் நான் தேடிய வெர்ஷ்ன் கிடைக்கவில்லை. ஆனால், கீழ்காணும் வீடியோ யூட்யூப்-இல் கிடைத்தது - அதே வெர்ஷன் இல்லையென்றாலும், கிட்டதட்ட அது போலத்தான்! பப்புவிற்கு மிகவும் பிடித்தமாக இருக்கிறது!எனக்கு ஃபெமிலியரான வரிகள் கீழே. (இவ்வரிகளுடன் எங்காவது ஒலிகோப்புக் கிடைத்தால் பகிர்ந்துக் கொள்ளுங்கள், ப்ளீஸ்!)

We're going on a lion hunt
We're not scared
Got my canteen by my side
And binoculars too

Coming up to short grass now
Can't go under it
Can't go around it
We'll have to go through it,

swish, swish, swish, swish
(push grass with small movements of hands)
We're going on a lion hunt
We're not scared
Got my canteen

Coming up to long grass now
Can't go under it
Can't go around it
We'll have to go through it,

swoosh, swoosh, swoosh, swoosh
(push grass aside with big hand movements)
We're going on a lion hunt
We're not scared
Got my canteen

Coming up to mud now
Can't go under it
Can't go around it
We'll have to go through it,

squelch, squelch, squelch, squelch
(raises hands slowly off the ground as if stuck in mud)

Coming up to a bridge now
Can't go under it
Can't go around it
We'll have to go through it,

boom, boom, boom, boom
(stamp floor rhythmically for sound of bridge crossing)

Coming up to cave now
It's very dark
(shiver)
I've found something
It's soft and furry
It's warm and moves
(shiver)
AHHH! it's a lion, run!!!

boom, boom, boom, boom
(stamp floor rhythmically for sound of bridge crossing)

squelch, squelch, squelch, squelch
(raises hands slowly off the ground as if stuck in mud)

swoosh, swoosh, swoosh, swoosh
(push grass aside with big hand movements)

swish, swish, swish, swish
(push grass with small movements of hands)

Phew! (wipe forehead) You coming on a lion hunt?
NO WAY!

Tuesday, May 12, 2009

வளைந்த கோடுகள்!

பப்பு ஏதாவது ஆர்ட் வொர்க் செய்து இரு மாதங்களுக்கு மேலாகிறது. பள்ளி விடுமுறை, டோரா, பாடல்கள் என்று நாட்கள் செல்கின்றன. டோராவின் நண்பர்களை (புஜ்ஜி, இசா, டீகோ, பென்னி இவர்களை எனக்கு வேறு அறிமுகப்படுத்தினாள் பப்பு!என்ன கொடுமை சரவணன் இது!!) தெரிந்து வைத்திருக்கிறாள் என்பதே எனக்கு ஆச்சரியம். அதைவிட ஆச்சரியம், டோராவின் ஆயாவையும் தெரிந்துவைத்திருந்தது! ஓக்கே! உல்லன் நூலைக்கொண்டு, சாயத்தில் தோய்த்து பேப்பரில் வரைய வேண்டும். இதுதான் ஆக்டிவிட்டி! சிகப்பு மற்றும் பச்சையில் பின்னர் இரண்டும் சேர்ந்தாற்போல என்று கோடுகளும், வளைந்த கோடுகளும்(!) வரைந்தாள், பப்பு.கையில், கழுத்தில் போட்டிருப்பதைக் கண்டு அரண்டுவிட வேண்டாம். அவளது விருப்பங்களே அவையெல்லாம். ஒரு பெரிய பொட்டுக் கூட தானாக வைத்துக் கொண்டது, ஒரு பத்து கலர் டப்பாவில் கிடைக்குமே, சாந்துப் பொட்டு! (நல்லவேளை, சீக்கிரம் உடைந்தது அந்த டப்பா!)இறுதி வடிவம்! கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக காலியாகக் காட்சியளிக்கிறது இந்தப் போர்டு!

Monday, May 11, 2009

குட் டச்/பேட் டச் - கருத்துரையாடல்!

1.private part-public part எது private part/public part என்று தெரியப்படுத்தவேண்டும். எதையெல்லாம் பொது இடத்தில் நாம் தொட முடியுமோ அது public part, எவையெல்லாம் தொடமுடியாதவையோ அது private part. சில சமயங்களில், அம்மாவோ அல்லது சீனியர் அம்மாவான ஆயாவோ அவர்கள் மட்டுமே தொட அனுமதி உண்டு. ஒரு சில சமயங்களில் மருத்துவர் மட்டுமே!

2. கண்,காது, மூக்கு என்று உடலின் பாகங்களை கற்றுக்கொண்டு சொல்ல முற்படும்போதே, vagina,penis என்றும் சொல்லிக்கொடுக்க வேண்டும். யாராவது அவர்களை தொட முற்படுவாராயின், ”அம்மாக்கிட்டே வந்துச் சொல்லு” என்று கேட்டுக் கொள்ள வேண்டும். இதற்கு சிறார்களுக்கும் பெற்றோர்களுக்கும் இடையே நல்ல bonding, நாம் பெற்றோரிடம் இதைக் குறித்துப் பேசலாம் என்ற நம் நம்பிக்கையை விதைக்க வேண்டும்.

3. எதையெல்லாம் நீங்கள் பக்கத்து வீட்டுக்காரர் முன்னால் செய்ய மாட்டீர்களோ அதையெல்லாம் குழந்தைமுன் செய்யாதீர்கள்.

4. குழந்தைகளுக்கு விலங்குகள் கதைகள் மூலம் விஷயத்தை விளக்க முயலுங்கள். “ஒரு கெட்ட டினோசர் இருந்துச்சா, அது வந்து நல்ல டினோசரோட private part ஐ தொட்டுடுச்சாம்” - டாக்டர்.ஷாலினி சொன்னதிலிருந்து...


5. குழந்தைகளுக்கு உண்மையை சொல்லி பழகுங்கள். உம்மாச்சிக்கிட்டேயிருந்து வந்தே, பிடிச்சு வச்சதுலெர்ந்து குழந்தை வந்தது - நோ நோ! நாய் mating பற்றிக் கேட்டால் கூட
லேசாக சொல்லிவிட்டு டைவர்ட் செய்யலாம், எந்த வயதுக் குழந்தை என்பதைப் பொறுத்து.அதே போல், “சுச்சூ போ, மம்மு சாப்பிடு” என்பதெல்லாம். குழந்தைகள் அதைச் சொல்லவதில்லை, உண்மையில் அது நமது vocabulary.


6. அடிக்கடி நாம் இதைப்பற்றிப் பேசி ஒரு curiosity உண்டாக்கிவிட கூடும். எனவே, அவ்வப்போது, கதைகள் மூலமாக, டீவி-யில் வருவதைக்காட்டி கோடிட்டுக் காட்டினாலே போதும். குழந்தைகள் புரிந்துக் கொள்வர்.

7. ஆண் குழந்தைகள் உடல்ரீதியாக வயதுக்கு வருதலையும் நாம் கொண்டாட வேண்டும்.
அவர்களுக்குத்தான் சொல்லிக் கொடுக்க யாரும் இல்லை...அப்பா உட்பட! அதேபோல் ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பின்னர் அப்பாக்கள் பெண் குழந்தைகளை குளிப்பாட்டுதலை தவிர்க்கலாம்.

8. நமது கவனத்தை தேவையான அளவுக்கு குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். (தேவையான அளவு என்பது எதுவரை?!) வேறு எங்காவது அதுபோன்ற கவனம் அவர்களுக்குக் கிடைக்கும்போது, சில சமயங்களில் தவறுகள் நடக்க வாய்ப்புள்ளது. அதே சமயம் ஒரு அளவுக்கு மேல் வளர்ந்தப் பின், கட்டியணைத்தோ அல்லது உடல்தொடுகைகள் மூலம் அன்பைக் காட்டுவதும் தவறு. Give them the enough attention they need.

9. abuse-க்கு ஆளாவது பெண் குழந்தைகள் மட்டுமே என்பதும் தவறான எண்ணம். ஆண் குழந்தைகளும் அதற்கு இலக்காகிறார்கள். அதேபோல், abuse செய்பவர்களும் ஆண்கள் மட்டுமே என்பதும் தவறானதுதானாம்.பெண்களும் இருக்கிறார்கள், ஆனால் அவர்களது எண்ணிக்கைக் குறைவு.

10. unconditional love - நீ தவறு செய்தால் பேசமாட்டேன் என்பதுபோல் இல்லாமல், நீ எப்படி இருந்தாலும் உன் மேல் அன்பாக இருப்பேன் என்று குழந்தைகளுக்கு உணர்த்துவது அவசியம். மேலும், தவறு செய்யும்போதும் ஓரிரு முறைகள் மன்னித்து விடுவதும் நல்லது!

என் சின்னஞ்சிறு மூளைக்குள் ஏறியது இவ்வளவுதான். ஆனால் டாக்டர்.ஷாலினி பேசியதும், டாக்டர்.ருத்ரனின் கலந்துரையாடல்களும் இதைவிட பன்மடங்கு அதிகம். நிகழ்ச்சி மிகச் சிறப்பாக பயனுள்ள முறையில் அமைந்தது. அமித்து அம்மா, வித்யா, தீபா, ரம்யா (பதிவர் சார்பில் பொன்னாடை அணிவித்தார்), கிருத்திகா, உமாஷக்தி மற்றும் பல பெண் பதிவர்கள் வந்திருந்தனர். டோண்டு, லக்கி, அதிஷா, நர்சிம் இவர்களை அடையாளம் காண முடிந்தது(I think I could spot ஆதி/தாமிரா), நேரமின்மைக் காரணமாக நன்றித் தெரிவிக்கக் கூட இயலவில்லை. மன்னிக்கவும், ஏற்பாடு செய்த அனைவருக்கும், இடம் கொடுத்துதவிய கிழக்குப் பதிப்பத்தாருக்கும் நன்றிகள்! வழங்கப்பட்ட snack/coffee காகவும் நன்றிகள்! டாக்டர்.ஷாலினியை, இந்த கருத்தரங்கிற்கு அழைக்க முதல்முயற்சியெடுத்த SK/குமாருக்கு நன்றிகள்! இந்த உரையாடல் விரைவில் ஒலிக்கோப்பாக பதியப்படலாம்.

Sunday, May 10, 2009

அன்னையர் தின வாழ்த்துகள்பதிவுலகில் இருக்கு அனைத்து அன்னையருக்கும்
தாய்மையை கொண்டாடும் அனைவருக்கும்
இனிய அன்னையர் தின வாழ்த்துகள்!!


அம்மாக்களின் பகிர்வுகளில் எனது அன்னையர் தின இடுகை!!

(image courtesy - Google)

Friday, May 08, 2009

அம்மாக்களின் பகிர்வுகள் - வலைப்பூ அறிமுகம்!!

அம்மாக்களின் பகிர்வுகளை அறிமுகப்படுத்தத்தான் இந்தப் பதிவு..(ஆரம்பிக்கப்பட்டு ஆறு மாதங்களுக்கு மேலானாலும்..ஹிஹி)

புது டெம்ப்ளேட் வடிவமைப்புடன் அம்மாக்களின் பகிர்வுகள்!

வடிவமைப்பில் பெரிதும் உதவிய ஐடியாமணி கைப்புள்ள மோகன்ராஜ்-க்கும், மிகுந்த ஆர்வமுடன் ஒவ்வொன்றையும் நேர்த்தியாக செய்துமுடித்த திருமுருகனுக்கும் (கைப்ஸ்-ன் நண்பர்) நன்றிகள் பல!

அம்மாக்களின் பகிர்வுகள் - குழந்தைவளர்ப்பையும், அம்மாக்களின் உலகையும் பேசும் குழு வலைப்பூ - எங்களது நம்பிக்கைகளையும், அணுகுமுறைகளையும் பேசும் வலைப்பூ!

உங்கள் எண்ணங்களயும் கருத்துகளையும் அங்கே பகிர்ந்துக் கொள்ள வரவேற்கிறோம்! :-)

Thursday, May 07, 2009

மே மாதம்...

கோடைவிடுமுறை. ஒரு மாத லீவுக்கு உறவினர் வீடு என்று ஊர் சுற்றுவது. அதுவும் ஒரு பத்து குட்டீஸ் ஒன்றாக சேர்ந்துவிட்டால், உற்சாகக் கூச்சலுக்கும் கொண்டாட்டத்துக்கும் கேட்கவே வேண்டாம். லீவு விட்டால் நாங்கள் ஆம்பூரிலிருந்து வடலூர் செல்வோம், மாமா வீட்டுக்கு. வீட்டின் பின்னால் மாமரங்கள், நெல்லிமரங்கள், பனைமரங்கள், பலாமரங்கள் என்று நமது மரம் ஏறும் திறமைக்கு சவால் விட நிறைய மரங்கள்.

மாங்காயை மரத்திலேயே சாப்பிட்டு கொட்டை மட்டுமே மரத்தில் தொங்கவிட்டு வைக்க ஒரு போட்டி. சில்லி காம்படிஷன்ஸ். சீக்கிரம் யார் சாப்பிடுவது, கடைக்குப் போய்விட்டு யார வேகமாக வீட்டுக்கு வருவது etc. காலையிலேயே நுங்கு மட்டுமே உணவாக உண்ட நாட்கள். பைண்டு செய்து வைக்கப்பட்ட ஆனந்த விகடன் சிறுகதைத் தொகுப்புகள், தொடர்கதைத் தொகுப்புகள், கல்கியிலியிருந்து தொகுக்கப்பட்ட பொன்னியின் செல்வன் என்று எக்கச்சக்க கதைப் புத்தகங்கள். விளையாட பல்லாங்குழி, அதிலேயே எத்தனை வெர்ஷன்கள், ராஜா-ராணி-மந்திரி-திருடன் - போலிஸ்,கேரம் போன்ற வெயிலில் தலைக்காட்ட வேண்டியிருக்காத விளையாட்டுகள். காலை உணவிற்கு பின் பலாப்பழத்தை வெட்டி நாள் முழுவதும் பலாப்பழ வாசனையும், பிசுபிசிப்பும் சேர்ந்து உடையிலேயே துடைத்து என்று ஒரு மாதிரியாக வலம் வந்த நாட்கள். எல்லோரும் சேர்ந்து வள்ளலார் சத்தியஞான சபைக்கு செலும் மாலை நேரங்கள். (அட,ஞானத்துக்காக இல்லைங்க..அங்கே நிறைய மாமரங்கள் இருக்கும்!)பின் வடலூரிலிருந்து ஆம்பூருக்கு வருவோம், எல்லாக் குட்டீஸூம்! மாடியில் விளையாட்டு, மைதானத்தில் விளையாட்டு, கொஞ்சமே கொஞ்ச நேரம் டீவி, கதைப்புத்தகம் என்று பொழுது போகும். (எச்சி காம்படிஷன் - மாடியிலிருந்து எச்சிலை துப்ப வேண்டும், யார் எச்சில் சீக்கிரம் கீழே சென்றடைகிறதோ அவர்தான் வெற்றியாளர்.) முடியவே முடியாது என்ற எண்ணத்தில் ஒவ்வொரு தினத்தையும் கழித்த கோடை விடுமுறை நாட்கள்!

**sigh** எனது சிறுவயது கோடைவிடுமுறைகளை நினைத்துக் கொண்டேன், அம்மாக்களின் பகிர்வுகளில் சிறார் ஆக்டிவிட்டீஸை பதிவிட்டபோது!!

Tuesday, May 05, 2009

பாப்பாவும் பூனையும்!(image courtesy : google)

ஒரு குட்டிப் பாப்பா ஒருநாள் பூனைக்குப் பேசக் கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தாள்.

”பூனை, அம்மா சொல்லு”

பூனை சொன்னது “மியாவ் மியாவ்”

குட்டிப்பாப்பா சொன்னாள், “பூனை, அப்பா சொல்லு”

“மியாவ் மியாவ்”

குட்டிப் பாப்பா சொன்னாள், “பூனை, நிலா சொல்லு”

“மியாவ் மியாவ்”

குட்டிப்பாப்பா சொன்னாள், “பூனை, டாட்டா சொல்லு”

“மியாவ் மியாவ்”

பார்த்துக்கொண்டிருந்த குட்டிப்பாப்பாவின் புத்திசாலி அம்மா, “பூனைக்கு எது சொல்லத் தெரியுமோ அதையே சொல்லிக்கொடேன், அப்போ பூனை சொல்லுதா பார்ப்போம்” என்றார்.

குட்டிப்பாப்பாவும் “பூனை, மியாவ் மியாவ் சொல்லு”

இப்போது பூனை சொன்னது, “மியாவ் மியாவ்”

குட்டிப்பாப்பா, பூனையைப் பார்த்துச் சொன்னாள்,”வெரிகுட் பூனைக்குட்டி, ஒருவழியா நீ பேசக் கத்துக்கிட்டே!”


*குட்டிப்பாப்பா பெயர் பப்பு
**அந்த புத்திசாலி அம்மா, பப்புவோட அம்மான்னு சொல்லணுமா என்ன?!!;-)

Monday, May 04, 2009

ஒரு சிறுமியின் முதுகில் ஏழு செங்கற்கள்!!

பதினொரு வயதுச் சிறுமி ஆங்கில எழுத்துகளை சரிவர சொல்ல இயலாமல் அவளது வகுப்பாசிரியையால் தண்டிக்கப் பட்டிருக்கிறாள். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வெயிலில் நிற்க வைக்கப்பட்டிருக்கிறாள். போதாதென்று, கோழியைப் போல குனிய வைத்து இரு தோள்களிலும் செங்கற்கள் அடுக்கி வைக்கப்பட்டு தண்டிக்கப்பட்டிருக்கிறாள். வாந்தியெடுத்து மயக்கமடைந்த அச்சிறுமி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டிருக்கிறாள். கடந்த 17-ஆம் தேதியன்று ஷன்னா காடுன் உயிரிழந்தாள். தில்லியின் முனிசிபல் பள்ளியில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்திருக்கிறது இது.

இப்படி நடப்பது ஒன்றும் புதிதல்லவே நமக்கு...எத்தனை சிறார்களை ஆசிரியர்களின் தண்டனைகளால் மரணத்திற்கு கொடுத்திருக்கிறோம்! எத்தனை தடவை செய்திகளில் பார்த்திருக்கிறோம்! "என்ன வேணா பண்ணிக்குங்க டீச்சர், எவ்வளவோ வேணா அடிங்க, படிச்சா போதும்” என்று ஆசிரியரிடம் ஒப்படைக்கும் கடந்த தலைமுறை பெற்றோரைக் கொண்ட சமூகம்தானே இது! கடந்த மாதம், ஈரோட்டில் ஒரு சிறுமி ஆசிரியையால் தண்டிக்கப்பட்டு தண்ணீர் தொட்டிக்குள் குப்புறக் கிடந்ததை நாம் பார்த்ததுதானே!! கற்பித்தலில் தவறா? அல்லது கற்றலை இனிமையாக்க முடியாத பாடத்திட்டத்தில் தவறா? மனப்பாடம் செய்ய முடியாதது தவறா?

கடந்த வாரம் இந்துவில், ஒரு குழந்தை மருத்துவர் ஷன்னாவிற்கு எழுதியக் கடிதத்தை மொழிபெயர்த்துக் கொடுத்திருக்கிறார், முனைவர் ரத்தினபுகழேந்தி! தயவு செய்து படியுங்கள். ஏதாவது சொல்வதற்கு இருக்குமாயின் அவரது பதிவில் சொல்லிச் செல்லுங்கள்!

**தலைப்பு - முனைவர் ரத்தினபுகழேந்தியின் பதிவிலிருந்து கடன்வாங்கியிருக்கிறேன்.

Sunday, May 03, 2009

பப்பு கையில் பட்டாம்பூச்சி!!

சீனா ஐயா பப்புவிற்கு பட்டாம்பூச்சி விருது கொடுத்திருக்கிறார். நன்றிகள் தெரிவிக்கிறாள் பப்பு!

பப்பு பறக்கவிடும் பட்டாம்பூச்சிகள் செல்லுமிடங்கள் :

மோகிதா - Rithu's dad தன் செல்ல மகளைப் பற்றி பகிர்ந்துக் கொள்வதற்காக!

பத்மா & வைஷு - தன் உயிரெழுத்துகளை ரசித்து ரசித்து எழுதும் ஃபேஷன் டிசைனரின் சசியின் குறும்பு குட்டீஸ்-க்காக

ஹரிணி - குடுகுடுப்பையாரின் சுட்டிப்பெண். இப்போதுதான் வலையுலகில் அடியெடுத்து வைத்திருந்தாலும் அழகாக தமிழ் எழுதுகிறார், தனது கலைக்கூடத்தில்!

வாழ்த்துகள் குட்டீஸ் !!

விதிமுறைகள் :

1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும் (Put the logo on your blog)

2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும் (Add a link to the person who awarded you)

3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் (Nominate at least 3 other blogs)

4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும் (Add links to those blogs on yours)

5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும் (Leave a message for your nominees on their blogs)

Friday, May 01, 2009

குட் டச் - பேட் டச் /Stranger Safety!

நமது குழந்தைகளுக்கு, யார் அவர்களைத் தொடலாம் மற்றும் எப்போது தொடலாம் என்று புரிய வைக்க வேண்டியது அவசியம். குட் டச், பேட் டச் மற்றும் எது ரைட் டச் என்றும் அவர்கள் அறிய வேண்டியது அவசியம்.

ஒருசில வேளைகளில் மருத்துவர் தொட வேண்டி வரலாம். அல்லது நாம் அவர்களை சுத்தம் செய்ய வேண்டியிருப்பின் தொட வேண்டி வரலாம். ஆனால், பள்ளியிலோ அல்லது மற்ற வெளியிடங்களிலோ யாரும் அவர்களை தொட வேண்டிய அவசியமில்லை என்பதை உணர்த்த வேண்டும். அப்படி யாரும் தொட முயற்சிப்பார்களேயாயின், உடனடியாக அகன்று அவர்கள் பெற்றோர்களிடம்/முதலில் எதிர்படும் பெரியவர்களிடமோ சொல்ல வேண்டும்.

ஆனால் இதையெல்லாம் சொல்லி அநாவசியமாக குழந்தைகளை கலவரப் படுத்தி விடுவோமோவென்றும் தோன்றுவதுண்டு. பப்புவிடம் இதுவரை குட் டச் பேட் டச் பற்றி பேசியதில்லை. ஆனால் Stranger Safety குறித்து பேசியிருக்கிறேன். யார் அவளை பள்ளியிலிருந்து அழைத்து வரலாம், யாருடன் அவள் வெளியே/கடைகளுக்குச் செல்லலாம் என்று சொல்லியிருக்கிறேன். ஆனால், ஒருதடவை சொன்னால் பத்தாது. திரும்ப திரும்ப வாரத்திற்கு இருமுறையாவது! சொல்லும் முறையும் முக்கியம், சாதாரண பேச்சுகளின் போதோ அல்லது டீவி நிகழ்ச்சிகளின் போதோ, கதைகளினூடாகவோ, தன்னம்பிக்கையை குறைத்துவிடாதவாறு!

நம்மில் எத்தனைப் பேர் இதெல்லாம் பேசுகிறோம்? குழந்தைகளுக்கு எந்த வயதிலிருந்து இதை சொல்லலாம்? எப்படி ஆரம்பிப்பது? இந்த கருத்தரங்கில் விடை கிடைக்குமென்று நம்புகிறேன்!

டாக்டர் ருத்ரன், டாக்டர் ஷாலினி-யுடன் குட் டச் - பேட் டச் பற்றி கலந்துரையாடல்


இடம் : கிழக்கு பதிப்பகத்தின் மொட்டைமாடி
கிழக்குப்பதிப்பகம் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோட்டில் அமைந்துள்ளது. (எல்டாம்ஸ் ரோடு மியூசிக் வோர்ல்டு அருகில் )


மேலும் விபரங்களுக்கு லக்கியின் பதிவை பார்க்கவும்! இந்த குட் டச்-பேட் டச் பற்றிய கருத்தை முன்வைத்த பதிவர் தீபாவிற்கு நன்றி!

குழந்தை வளர்ப்புக்கென்று தனியாக இன்ஸ்டிட்யூஷன்கள் இல்லை. நாமாக கற்றுக் கொண்டுதான் தேர்ச்சியடைய வேண்டியிருக்கிறது! :-)

youtube-ல் கிடைத்த அனிமேஷன் படங்கள் : உபயோகமாக இருக்குமென்று நினைக்கிறேன்.


(thanks : youtube)

Edited to Add:

SK கேட்டுக்கொண்டதற்கிணங்க நர்சிமின் பதிவுக்கான சுட்டியை இங்கே பதிவில் இணைக்கிறேன்.
இ-மெயில் ஐடி மூலம் பதிவினை உறுதிப்படுத்தும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார்.

”இன்னுமொரு முக்கிய மேட்டர் : இதில் பங்குபெறவிரும்புவோர்... கீழே உள்ள மெயில் ஐடிக்கு ஒரு மடல் எழுதி வருகை தருவதை உறுதிப் படுத்தினால், ஏற்பாடுகள் செய்ய (இருக்கை,டீ,ஸ்நாக்ஸ்!) ஏதுவாக இருக்கும்.

weshoulddosomething@googlemail.com “ - நர்சிம்மின் பதிவிலிருந்து...