Thursday, April 30, 2009

பரீட்சை நேரக் கவிதை!

வாழ்வின்விடியலுக்காய்
நான் காத்திருக்கிறேன்!
விடியும் நேரம் நான்
விழிக்காமல் போகலாம்!
எனினும்,
கடந்துசென்ற நேற்றும்
நிகழ்கின்ற இந்த நொடியும்
என் கைகளில் கிடைத்தால்
கண்ணாடிபெட்டியில்
பூட்டிவைத்துக் கொள்வேன் நான்!
வரப்போகும் நாளையை
முறையாய் பயன்படுத்த
எனக்கது பாடஞ்சொல்லும்!!

(உபயம் : பள்ளிக்காலத்து டைரி!)

நோ டென்ஷன்..ப்ளீஸ்!! முழு ஆண்டு பரீட்சை ஆரம்பிக்குதுன்னு கால அட்டவணை கொடுப்பாங்கல்ல, அதுக்கு அப்புறம்தானனே நாம புத்தகத்தையே புரட்டுவோம்..இவ்வளவு இருக்கே, இதை எப்படிடா படிச்சு முடிக்கறதுன்னு ஒரு மலைப்பு வருமே..அந்த நேரத்துல எழுதினது இது! அதுக்காக அடுத்த வருஷம் புத்தி வந்துருக்கும்னா நினைக்கறீங்க...ஹிஹி!

Tuesday, April 28, 2009

பப்பு டைம்ஸ்!

பப்பு,

42 மாதங்கள். உனது மாதாந்திர பிறந்த நாள் இன்று. மூன்றரை வயது, இன்றோடு.

நிறைய பேசுகிறாய். பெரியவர்கள் போல் கிண்டல் செய்து சிரிக்க எத்தனிக்கிறாய். you make silly faces too. ஜிக்-சாக் புதிர்கள் செய்வதில் மகிழ்ச்சியடைகிறாய். அதைவிட மகிழ்ச்சி, டோராவைப் பார்க்கும்போது! 24-பகுதிகள் கொண்ட புதிரை முழுமையாய் செய்யும்போது உனக்கு மிகச்சரியாய் மூன்றேகால் வயது!

புத்தகங்கள் படிக்க விருப்பப் படுகிறாய். ஆனால் என் உதவி தேவைப்படுகிறது! இருந்தாலும் நீயாகவே கதைகள் சொல்கிறாய், ப்டங்கள் பார்த்து. ஏப் மற்றும் குரங்குகளை இனம் காணத் தெரிகிறது உனக்கு! where is the party தான் உன் விருப்பப் பாடல், தற்போது!

தூங்கிக் கொண்டிருந்த சித்தப்பாவின் மேலும், முருகன் மேலும் தண்ணீர் ஊற்ற சின்ன ஆயா உன்னை அழைத்தார்கள். கையில் தண்ணீர் எல்லாம் கொண்டு வந்து மொட்டை மேலே தெளிக்கலாம் வா என்றழைத்த போது தண்ணீரை கையில் வாங்கிக்கொண்டு மறுத்தபடியே பினனால் நகர்ந்துக் கொண்டிருந்தாய். ஏனென்று கேட்டபோது, “தண்ணீ ஊத்தினா பயந்துடுவாங்க” என்றாய்! பப்பு, இவ்வளவு யோசிக்கும் நீ, அன்று முடிவெட்டிக் கொண்டது எங்ஙனம்? :-)

பள்ளியின் ரெவ்யூ சொல்கிறது கதைகளும், பாடல்களும் உனக்கு விருப்பமானவைகள். உனக்கென்று வெண்மதி, வர்ஷினி என்று குட்டி க்ரூப் இருக்கிறது. நீங்கள் சேர்ந்து சஞ்சய்க்கு “வாலு” என்று பெயர் சூட்டியிருக்கிறீர்கள்! அடிக்கடி உங்களுக்குள் சிரித்துக் கொள்வதும் உண்டாம்!

உனது எல்லைக்குள் எவர் வந்தாலும் கத்தல்களும், வன்முறையும் கிடைக்கப் பெறுகிறோம்!
சிடி பிளேயரை இயக்க நன்றாக கற்றுக் கொண்டிருக்கிறாய். வீட்டின் ஸ்விட்ச்-களை இயக்க நீ அறிந்துக் கொண்டபோதைவிட அதிகமாக பயங்கொள்கிறேன் இப்போது! ரோடில் கையை பிடித்து நடக்க உனக்கு விருப்பமில்லை.

பத்திரமாக பார்த்துக் கொள்வாயா பப்பு, உன் அம்மாவை...இதையெல்லாம் படிக்கும் போது வேறு யாருக்கு உதவி தேவைப்படுமென்று நினைக்கிறாய்?!

Thursday, April 23, 2009

என்ன அரசியலோ...

படங்கள்

நேற்றிய செய்தி & இன்றைய செய்தி!

உதவி கேட்டு நீண்ட கரங்கள்!

என்ன அரசியலோ...

ஈழத்தை அரசியலாக்கும் அரசியல்வாதிகளே...shame on you! You have blood on your hands.

Wednesday, April 22, 2009

எங்கே போகலாம் டோரா?!

மேடேஸ்வரனின் டோரா பதிவு - என்னையும் இழுத்து விட்டது.

ஒரு விடுமுறை நாளின் பிற்பகுதி. எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்க, பப்பு மட்டும் தூங்க மறுத்து விளையாடிக் கொண்டிருந்தாள். திடீரென எழுந்து வந்து என் கையை பிடித்துக் கொண்டு நாம டோரா விளையாடலாம் வா என்றாள்.

என் கையை பிடித்துக் கொண்டு, “நாம எங்க போகலாம் டோரா?!” என்றாள்.

ஆகா, மாட்டிக் கொண்டேன் போலிருக்கிறதே!

காடு...

வீட்டின் ஹாலை சுவர் ஓரமாக சுத்திக் கொண்டு சென்றோம்.

அப்புறம் எங்கே போகலாம் டோரா?!

எனக்குத் தெரியலைப் பப்பு, நீயே சொல்லு.

நான் புஜ்ஜி. நீதான் டோரா. புஜ்ஜி சொல்லு!!

தெரியலை புஜ்ஜி!

கையை பிடித்து ஹாலின் மற்றொரு மூலை. இதோ ஆப்பிள் மரம் - பப்பு!

எனக்கு என்ன செய்வதென் புரியவில்லை. பப்பு கையை நீட்டி பறித்து பறித்து சாப்பிடும் ஆக்ஷன் செய்துக் கொண்டிருந்தாள். நீயும் சாப்பிடு. பறிச்சுக்கோ.

நானும்!

நிஜ ஆப்பிளை ஒரு நாளும் இவ்வளவு ஆர்வமாய் சாப்பிட்டதில்லை அவள்!! அவ்வ்வ்வ்!

மறுபடியும், “எங்கே போகலாம்..” ஆப்பிள் சாப்பிட்டதில் எனக்கு வந்த தெம்பில், பாலம்.
மறுபடியும் ஹாலின் எதிர் மூலை..ஒஹ்ஹொ!

மறுபடியும், “எங்கே போகலாம்...” - மலை! வீட்டுக்குள் வாக்கிங் கேள்விப்பட்டிருக்கிறேன். அன்று அனுபவித்தேன்!
ஒரு மரச் சேரை எடுக்க கொஞ்சம் சிரமப்பட்டேன். பப்பு என்னிடம், “நான் உதவி செய்யட்டுமா?” என்றாள். இதற்கு முன்பும் அப்படிக் கேட்டிருக்கிறாள், பல சமயங்களில். நானும் வாய்ப்பை நழுவ விட்டதில்லை! அன்று அவள் கேட்டதும், வேண்டாமென்று சொல்லிவிட்டு எடுத்துக் கொண்டேன். பார்த்திக்கொண்டிருந்த பப்பு,

“நீயே உனக்கு உதவி செஞ்சுக்கிட்டியா, ஆச்சி!”!!

தன் கையே தனக்குதவி - பழமொழிதான் நினைவுக்கு வந்தது. சொல்லவில்லை!

Monday, April 20, 2009

அ ஃபார் ....


ஃபார் அவ்வ்வ்வ்வ்!


அவ்வ்வ்வ் என்பது பின்னூட்டங்களிலும், பதிவுகளிலும் என்னால் தவிர்க்க முடியாததாகிவிட்டது!
:-) ஆனால், அது என்னைப் பொறுத்த வரை அழுவது மாதிரி மட்டுமல்ல! அதிர்ச்சி அல்லது
ஜெர்க்கான ப்லீங்சை பிரதிபலிக்கவும்தான்! இன்று நான் சந்தித்த சில அவ்வ்வ்வ் தருணங்கள்!


தருணம் 1 :

காலையில் எழுந்தவுடனே பப்பு கதை சொல்லு என்றாள், பக்கத்திலிருந்த புத்தகத்தை எடுத்து!

உனக்கேத் தெரியுமே, நீ சொல்லு பப்பு!

நாளைக்கு நீ சொன்னது, எனக்கு ஞாபகம் இல்ல! இன்னொரு வாட்டி சொல்லு!

அவ்வ்வ்வ்!

தருணம் 2 :

தற்போது வீட்டு வேலைக்கு உதவியாயிருந்த ஷோபனா அக்காவும் நின்றுவிட திரும்பவும் ஆள் தேடும் வேட்டை. இன்று காலை ஒரு ஆயா வந்திருந்தார்கள்.மேல்வேலைகளுக்கு மட்டும்.
பாத்திரம் கழுவிக்கொண்டு இருந்தார்கள்.

சமையல் செய்வீங்களா?

ம்ம்..செய்வேன்மா, அங்க இருந்தேன்ல, ரெண்டு நாய்ங்களுக்கு நாந்தான் சாப்பாடு செய்வேன்!
சாப்பாடு வைப்பேன்!!

அவ்வ்வ்வ்வ்வ்!

முன்பு வேலை செய்த இடத்தில் இரு நாய்க்குட்டிகளை கவனித்துக் கொண்டார்களாம்,அந்த நாய்க்குட்டிகளுக்கு் சாப்பாடு செய்ததைத் தான் அப்படி சொல்லியிருக்கிறார்கள்! I dropped the idea!அ ஃபார் ...

இது புதிதாக தோன்றிய ஐடியா,பப்புவிடமிருந்துதான்! அவள் எதற்கோ அப்படி சொல்லப் போக என்னையும் தொத்திக்கொண்டது. அ, ஆ, இ, ஈ என்று தொடங்கும் எழுத்துகளில் தோன்றுவதைப் பதிவிடலாமென்று. தினமும் போடுவேனென்று சொல்ல முடியாது, ஆனால் இந்த சீரிஸை தொடர்வேன்!

Saturday, April 18, 2009

பப்பு - 360 டிகிரி!


(படம் : மூன்றாம் டெர்மின், கடைசி நாளன்று!)

முதல் டெர்ம்..., இரண்டாம் டெர்ம்... தற்போது பள்ளியின் மூன்றாம் டெர்ம் கடந்த ஒன்பதாம் தேதியோடு நிறைவுக்கு வந்தது!எவ்வளவு மாற்றங்கள், விரும்பத்தகுந்ததும், விரும்பத்தகாததுமாக!!


1. ”உன் பேச்சு க்கா” என்றும், “நீ என் ஃப்ரெண்ட் இல்ல” என்றும், ”சேலஞ்ச்' என்றும் சொல்கிறாள். “க்கா” சொல்லிவிட்டால், பேசக் கூடாது என்பது இப்போதெல்லாம் மாறிவிட்டது போல. பழம் விடுதலும், கட்டைவிரலை உயர்த்தி ”சேலஞ்ச்” செய்து அடுத்தவர் கட்டைவிரலை தொடுவதாக பரிணாமம் பெற்றுள்ளது.

2. நிறைய ஆங்கில வார்த்தைகள் புழக்கத்தில் வந்திருக்கிறது. தண்ணீர் பாட்டிலை பப்பு பையில் வைக்கும்போது, தெரியாமல் கொட்டி விட்டேன். ”ஆச்சி, வாட் இஸ் திஸ்?”!!
நோ டச்சிங், ஒன் பை ஒன்...etc!

3. இந்த டெர்மில் சில நாட்கள், “நான் ஸ்கூலுக்கு போகல” என்று விடிந்தது. அநேக நாட்கள், பள்ளியிலிருந்து திரும்பி வரும்போது, வேனிலிருந்து இறங்க மறுத்து, பள்ளிக்கே செல்லப் போவதாகவும் ஆயா சொல்லக் கேட்டேன்! :-)

4. “ஜனகன ” தாகம் போய் ”ரகுபதி ராகவ”தான் அவள் வாயில் இப்போது! இன்னும் ரெக்கார்ட் செய்யவில்லை! அவள் புதிதாக ஏதும் முணுமுணுக்கும் போது, ஓடிப்போய் அவளது பாடல் புத்தகத்தை திருப்பும் என் பழக்கமும் இன்னும் மாறவில்லை!

5.இந்த டெர்மில், சாப்பிட என்ன எடுத்துச் செல்வதென்று முடிவு செய்வது அவளது உரிமையாக உருவெடுத்திருக்கிறது. கத்திரிக்கோலைக் கையாள்வதுதான் மிகப் பிடித்தமானதாக இருக்கிறது. வளையல்கள், ரப்பர் பேண்டுகளை கைகளில் மாட்டிக் கொளவது, கழுத்தில் மணிகள் சில சமயங்களில் தொப்பியுடன் பள்ளிச் செல்ல விரும்புகிறாள்..:-) என் பள்ளி/கல்லூரி நண்பர்கள் இதைப் படித்தால் புரிந்துக் கொள்வார்கள், எங்கிருந்து இந்த பழக்கம் வந்திருக்குமென்று!

மொத்தமாக, 3 டெர்ம்கள். 360 மாற்றங்கள்.

வீட்டை விட்டு எங்கும் அதிகமாக சென்றறியாத ஒரு 2 1/2 வயதுச் சிறுமி தனக்கென்று பள்ளியில் ஒரு நட்பு வட்டாரத்தை உருவாக்கிக் கொள்கிறாள். கடிகாரத்தை அறியாதவள், “இப்போ டைம் என்னா” என்றுக் கேட்கிறால், அதற்கு மேல் அதிகமாய் அறியாவிட்டாலும்! பெயர்கள் சொல்லி அட்டெண்டென்ஸ் எடுக்கிறாள்! பேசும் மொழியின் பெயர் தமிழென்றும் அறியாதவள், “இங்கிலீஷ்-ல என்ன” என்றுக் கேட்கிறாள். காலையில் பள்ளி வாகனத்தில் ஏறியதும், என்னைத் திரும்பிப் பார்ப்பவள், கடைசியாக என்னை அப்படித் திரும்பிப் பார்த்தது எப்போதென்று யோசிக்கிறேன்!!

பள்ளிச் செல்லத் துவங்கிய நாட்களை நினைத்துக் கொள்கிறேன்!

நன்றிகள் அவளது பள்ளிக்கும், மோத்தி ஆண்ட்டிக்கும், சித்ரபாலா ஆண்ட்டிக்கும்!
லஷ்மி ஆயாவிற்கும் அம்சா ஆயாவிற்கும் நன்றிகளும் வணக்கங்களும்!

Thursday, April 16, 2009

படம் சுட்டி பொருள் விளக்கம்!!அவளாக வரைந்து, ஒரு அவுட்லைன் வரைந்துக் கொண்டு அதனுள் வண்ணங்கள் தீட்டியது. இந்த படத்திலுள்ள உருவங்கள் எதைக் குறிக்கிறது என்று நானறியேன், ஆனால், வட்டங்கள், முக்கோணங்கள், நீள் வட்டங்கள் என்றும், சில சமயங்களில் பழங்களாகவும் (ஆரஞ்சு, ஆப்பிள்) என்றும் ஓவியங்கள் உருவாகின்றன! ஏற்கெனவே வரைந்திருக்கும் படத்தில் வண்ணம் தீட்டுவதில் அவ்வளவு ஆர்வமில்லை. ஒருவேளை, அவளது boundary-களை அவள்தான் தீர்மானிக்கவேண்டுமென்று எண்ணுகிறாள் போலும்!
தனிஷ்க்-ஜிஆர்டி-ஓகேஜே-ஆலுக்காஸ் சுந்தரீஸ்......ஜாக்கிரதை!

நகையைக் கழுத்தில் போட்டதும், போட்டோ எடுக்கறேன் என்று சொன்னதும், பப்பு கொடுத்த போஸ்!
நோ.நோ..அஸ்வினி ஹேர் ஆயிலுக்கும்..


..இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை!

இது முடி வெட்டிக்கொள்வதற்கு முன். கால் நீளம் வர வேண்டும் என்று அடம்பிடித்தவள் பேச்சுவார்த்தைக்குப்பின் கடைசியில் சம்மதித்தது இந்த நீளத்திற்கு! அவள் கவனம் முழுதும் சடையை(பூ) முன்னால் போட்டுக்கொள்ளத்தான்!
நாமிருவர் நமக்கொருவர் ?!


அவள் தூங்குமுன், பொம்மைகளையும் சாரி நண்பர்களை இப்படித் தூங்க வைத்துவிடுகிறாள். இந்த தூங்கும் பொம்மைகள் ஒருவேளை, depicts a family - The concept?! அப்பாக் கரடி, அம்மாக் கரடி, மற்றும் குட்டிக் கரடி! கு.க திட்டத்திற்கு விளம்பரமாக இதை அனுப்பலாமெனிருக்கிறேன்! ;-)


குறிப்பு :- காப்புரிமை பெற்றது. ஆர்ட் தேவைப்படுவோர் தனிமடலிடவும்!

ஆயில்ஸ் :- நன்றி!

Monday, April 13, 2009

அண்ணன் என்னடா தம்பி என்னடா?!

நான் ஒரு வீட்டுப் பறவை. அவன் வீட்டில் இருந்ததாக சரித்திரம் கிடையாது.எனது அலமாரியின் ராக்கு-களை நான் சுத்தமாக வைத்துக் கொள்வேன்(அப்போது!!). அவனுடையது அப்படியே தலைகீழ். நான் புத்தகப்புழு.அவன் புத்தகங்களை புரட்டக் கூட மாட்டான். கைகளில் மண் படிய விரும்பாதவள் நான். தெருவில் இருக்கும் நாய்குட்டிகளை எடுத்துவந்து கொட்டாங்குச்சியில் பால் ஊற்றச் சொல்வான் அவன். அவன் ஐஸ் ஸ்கேட்டிங் விளையாட விரும்பினான். பிரிட்ஜ்-ல் இருந்த ஐஸ்கட்டிகளையும், கிண்ணங்களில் நீரூற்றி ஐஸ் செய்தும் பலகணியில் போட்டு விளையாட வைத்தது் நான். திட்டு வாங்கியதும்தான்! சதுரங்கத்தில் அவனிடம் தோற்கும்போது அவனுக்கு வயது ஆறு! அதன்பின் சதுரங்கம் ஆடுவதையே நிறுத்தியவள் நான்! பின் அவன் சதுரங்கத்தில் முழுமூச்சுடன். நான் பப்ளிக் எக்சாம், ட்யூசன், எண்ட்ரன்ஸ்! அவன் செஸ் அசோசியேஷன்,IM,arbitrator,VIT என்றும், நான் கல்லூரி,வேலை என்றும் பாதைகள் பிரிந்தன.

அவன் என் தம்பி.

பலமுறை, தம்பிக்குப் பதில் எனக்கு ஒரு அண்ணன் இருந்திருக்க்கூடாதா என ஏங்கியிருக்கிறேன். என்னுடைய நண்பர்கள் பலருக்கு அண்ணாக்கள் அல்லது தங்கைகள். தம்பிகள் இருந்த ஒருசிலரும் ”தம்பியா, ஒரே சண்டை” என்றுதான் அனுபவப்பட்டிருந்தனர். அண்ணன்கள் வாய்க்கப் பெற்ற பலரும் ”அண்ணா வரைஞ்சது, அண்ணா சைக்கிள்-ல வந்தேன்” என்று வெறுப்பேற்றியிருந்ததும் காரணமாக இருக்கலாம்!

ஒரு கோடை விடுமுறை.பரணில் இருக்கும் சோடா மேக்கர் உபயோகத்துக்கு வந்திருந்தது.
அதை இயக்கும் அதிகாரம் வீட்டில் எனக்கு மட்டுமே . விருந்தினர்கள் வந்தால், மிகப் பெருமையாக இயக்கி பெப்சி அல்லது லெமன் ஃப்ளேவர் போட்டு தரப்படும். மற்றபடி, அதன் முழு உபயோகம் எனக்கும் அவனுக்கு மட்டுமே! சோடா மேக்கரோடு மூன்று அல்லது நான்கு கண்ணாடி பாட்டில்கள். கண்ணாடி பாட்டில்களானதால் அதனை கவனத்துடன் கையாளும் அதிகாரம் எனக்குக் கொடுக்கப் பட்டிருக்கலாம், மேலும் “பெரிய பெண்” எனும் அங்கீகாரம்.

ஊரிலிருந்து கஸின்ஸ். விடுமுறைக்கு வந்திருந்தார்கள். காலை, மாலை, மதியம் எல்லாம் சோடா மயம். அதிலும், யார் நிறைய கேஸோடு குடிப்பது என்றும் போட்டி! அதுவும் கேஸ் அதிகமாக பாட்டில் தண்ணீரில் நிரப்பி உடனே பெப்சி ஃப்ளேவரை ஊற்றினால் நுரை பொங்கும். விளம்பரத்தில் வருவதுபோல ஷேக் செய்து, அப்படியே குடித்து என்று ஒரே கும்மாளம்.

இன்னும் கேஸ், இன்னும் கேஸ், என்று எல்லாரும் கேட்டுக்கொண்டதில், கொஞ்சம் அதிகமாக அழுத்திவிட்டேன்.

”பட்” என்று உள்ளே ஒரு சத்தம்.

திறந்துப் பார்த்ததில், பாட்டில் துண்டுகளாக.

சத்தமில்லாமல், சுத்தம் செய்துவிட்டு மாடியில் அடுத்த விளையாட்டு. நடந்த எதுவும்..என்ன போட்டி, யார் உடைத்தது என்று எதுவும் குட்டிக்குத் தெரியாது. அவன் அப்போது வீட்டில் இல்லை...

ஊகித்திருப்பீர்களே...அதேதான்...பாட்டில் உடைந்தது ஆயாவிற்கும் பெரிம்மாவிற்கும் தெரிந்து விட்டது, நான் அசந்த ஏதோவொரு கணத்தில் !

“எனக்குத் தெரியாது, அவன் தான் உடைச்சிருப்பான்”!- மிக சுலபமாக வார்த்தைகள் என்னிடமிருந்து!

இதற்கு முன்பாக இப்படியெல்லாம் நிகழ்ந்துதான் இருக்கிறது. அவன் உடைத்ததெல்லாம் நானென்றும், நான் உடைத்ததையெல்ல்லாம் அவனென்றும் என்று மாறி மாறி கோள் சொல்லிக் கொண்டது!ஆனால் அப்போது அவன் செய்ததுதான் மிக ஆச்சர்யமானது.

ஒன்றும் சொல்லாமல், ஆமாமென்று ஒப்புக்கொண்டுவிட்டு திட்டு வாங்கிக்கொண்டான். (வீட்டில் ஒரு பழக்கம், எங்களை மற்றவர்கள் முன்னால் திட்ட மாட்டார்கள். அப்படி நடப்பதென்றால் அது தனியாக, எங்கள் இருவரை மட்டும் வைத்துத்தான் நடக்கும்!திட்டுவது என்பது அட்வைஸ் என்று பொருள் கொள்க.)சண்டை போட்டுக்கொள்வோமென்று நினைத்த எனக்கு, அவனது இந்த gesture அதிர்ச்சி. அதன்பின், நாங்கள் அதைப் பற்றி பேசிக்கொள்ளவில்லை.

அந்த நிமிடம் அவன் எனக்கு அண்ணனைப் போல நடந்துக் கொண்டான், மிகப் பெருந்தன்மையாக!

என் தம்பியின் மேல் பாசமாயிருக்கக் கற்றுக்கொண்ட தருணங்களில் இதுவும் ஒன்று! As years passed by, தம்பி இருப்பதும் மிகவும் fun/ஜாலி என்றுணர்ந்தேன்.


Note to my brother:

குட்டி, அந்த பாட்டிலை நாந்தான்டா உடைச்சேன். :-) உன்னை ஏன் மாட்டிவிட்டேன்னு இப்போ எனக்குத் ஞாபகமில்லை(sibling rivalry)!! இப்போவும் நாம திட்டு (அட்வைஸ் அட்வைஸ் அட்வைஸ்!!) வாங்கறோம், ஆனா அதெல்லாம் நாம் ஒன்னா சேர்ந்து செஞ்ச காரியங்களுக்காக இல்லை!

Sunday, April 12, 2009

Jungle Book


(Thanks - Image : google)

அண்மையில் ஜங்கிள் புக் படத்தை பப்புவிற்கு அறிமுகப் படுத்தினோம். நானும் இந்தப் படத்தைப் பார்த்து வளர்ந்ததாலேயே என்னவோ மிகவும் ஸ்பெஷலாக டைம்பாஸாக இருந்தது! யாரால் மறக்க முடியும்..பகீரா என்ற பான்த்தர், பலூ என்ற கரடி, ஷேர்கான் என்ற புலி மற்றும் ஹாத்தி என்ற யானை!கிப்ளிங்-கின் கதைகளை படித்ததில்லை, ஆனால் கார்டூன் கேரக்டர்களாக பார்த்திருக்கிறேன். தாயாக இருப்பதில் ஒரு அட்வாண்டேஜ் அல்லது சந்தோஷமான விஷயம் எதுவெனில், உங்கள் மகளின்/மகனின் கண்களால் பார்க்க முடிவதும், சின்னப் பிள்ளைத்தனமான காரியங்களை எந்தவித கான்ஷியசும் இல்லாமல் செய்வதற்கான உரிமைகளும்தான்! ;-)

பப்பு முழுவதுமாக பார்க்கவில்லையெனினும், பார்த்ததையே திரும்பத் திரும்ப பார்க்க விரும்பினாள். அடுத்து என்ன வரும் என்று சொல்லுமளவிற்கு! பலூவின் கேரக்டரும், குட்டி யானையும் மிகப் பிடித்தம். மோக்லி பற்றி சொல்லவே வேண்டியதில்லை. படம் பார்க்கும்போது, அவள் பார்ப்பதை நான் பார்த்துக்கொண்டிருப்பதை பப்பு விரும்பவில்லை! :-)


இப்படத்திலிருக்கும் அருமையான பாடலின் நான் ரசிக்கும் வரிகள்..

Look for the bare necessities
The simple bare necessities
Forget about your worries and your strife
I mean the bare necessities
Old Mother Nature's recipes
That brings the bare necessities of life .


And don't spend your time lookin' around
For something you want that can't be found

When you find out you can live without it
And go along not thinkin' about it
I'll tell you something true

The bare necessities of life will come to you


வாழ்க்கைக்குத் தேவையான மிக முக்கியமான ஏதோவொன்று இந்த வரிகளில் இல்லை??!
(Thanks: youtube)

Thursday, April 09, 2009

கடிகாரத்தை நிறுத்துதல்- நன்றிகள்- நாஸ்டால்ஜிக்!

20-கள்...பற்பல கனவுகள்..திட்டங்கள்..கவலைகள்! வயதாகிறதேவென்ற கவலை இருந்ததேயில்லை..i.e. we are getting older! வாழ்வைக்குறித்து பயம் ஏதும் இல்லை!

மேற்கொண்டு படிக்க வேண்டும். நினைத்த பல்கலையில் கிடைக்கவேண்டும். உடனே வேலைக் கிடைத்து, நினைத்ததெல்லாம் வாங்க வேண்டும்! சம்பாரிக்க வேண்டும்..ஒரு நல்ல துணை கிடைக்க வேண்டும், நமது விருப்பங்களுக்கேற்றவாறு. அழகான
பலகணிகளுடன் அமைந்த வீடு வாங்க வேண்டும். நிலைநிறுத்திக்கொண்டாக வேண்டும்.
ஒரு நாள் திருமணம். default ஆக குழந்தை.

இப்படி கனவுகளை துரத்தும் வாழ்வில், you realise you are not as young as you thought you were. 30-களும் 40-களும் எனக்கு என்ன வைத்திருக்கிறதெனத் தெரியவில்லை..ஆனால், 20களின் கடைசி எனக்கு உணர்த்துவது, you can beat age with your attitude..;-)! 20-கள் எனக்குக் கொடுத்தது, முடிவெடுக்கும் உரிமைகள், செலவு செய்யும் பொறுப்புகள்..எல்லாவற்றுக்கும் மேல் சுதந்திரம் என்பதும் பொறுப்புகளே..!!
யாரும் அருகில் இருந்து இதைச் செய்தால் இப்படி இருக்கும் என்று சொல்வதற்கு இருக்க மாட்டார்கள்..ஆனால் இப்படி செய்திருந்தால் இப்படியா இருந்திருக்குமே என்று சொல்வதற்கு கண்டிப்பாக இருப்பார்கள்! :-))

so many random thoughts crossing my mind....and again I am in utter confusion as I was in 19!!மாதம் பிறக்கும் முன்பே நாட்களை எண்ணுவது- காலண்டரில் வட்டமிட்டு, வாங்கிய புத்தாடையை ஒரு நாளைக்கொரு தரமாவது அட்டை டப்பாவிலிந்து பிரித்துப் தொட்டு கண்களில் கற்பனைக்கனவுகள்- பள்ளியில் சாக்லேட்களை பரிமாற்றம்- வகுப்பில் ஒரு ராயல் ட்ரீட்மென்ட்- எப்போதும் திட்டும் ஆசிரியர் கூட அன்று அன்பாக- எதிரிகள் கூட திடீரென நண்பர்களாகி பாசமழை பத்மாக்கள் - இவையெல்லாம் அய்யோ இன்றோடு போய்விடுமே எனும் ஒரு திடுக் எண்ணம் !

எனக்குள் ஒளிந்திருந்த அந்த ஆம்பூர் சிறுமியை வாழ்த்துகளாலும், பதிவுகளாலும் மீட்டெடுத்த உங்கள் அனைவருக்கும் நன்றிகள்! சுவரொட்டியில் வாழ்த்து சொன்ன G3, கேக் கொடுத்த ஆயில்ஸ், கவிதை எழுதிய கவிதா, ஜூஸ் கொடுத்த தூய்ஸ் - நெகிழ்ந்தேன்..மகிழ்ந்தேன்! :-))கொஞ்சம் நாஸ்டால்ஜிக் - Rising from the east - Bally sagoo-வின் ஆல்பம். featuring suchitra pillai. நல்ல பாடல். வீடியோ மிகப் பிடிக்கும். வித்தியாசமாக இருக்கும்!

Tuesday, April 07, 2009

பப்பு சீன்ஸ்

அழுவதா சிரிப்பதா!! - சீன் 2

சில சமயங்களில் பப்பு மாலை 5.30 மணிக்கு தூங்கி விடுகிறாள். காலை மூன்று மணி அல்லது இரண்டரைக்கு எழுந்துக் கொள்கிறாள். பிரச்சினை அதுவல்ல!

சென்ற வாரத்தில் ஒருநாள், அப்படிதான் ஆயிற்று. பையை வைத்துவிட்டு, சோபாவில் உட்கார எத்தனித்த போது சோபா முழுதும் ஏதோ foam-ஐ வெட்டிப் போட்டது மாதிரி இருந்தது. மஞ்சள், இளஞ்சிவப்பு, வெள்ளை நிறங்களில்! அருகில், பொம்மைகள். புரிந்துவிட்டது.

ஆயா, கட் பண்ணுச்சா, பொம்மையெல்லாம்? என்றதற்கு ஆயா

ஆமாம்மா, என் முடியைக் கூட கட் பண்ணியிருக்கு கொஞ்சம்!

அவ்வ்வ்! சேதாரம் அதிகமில்லை, நுனியில்தான்!

சட்டென்று கீழே பார்த்தேன். கறுப்பு முடி. சுருள் சுருளாக. ஆயாவிற்கு கறுப்பு முடியில்லையே. தூங்கிக்கொண்டிருந்த பப்புவின் தலையைப் பார்த்தேன்!

ஓ..நோ! எது நடந்திருக்கக் கூடாதென நினைத்தேனோ அது நடந்தேவிட்டிருக்கிறது!

ஆமாம், அவளாகவே தலையில் நெற்றிக்கு மேலாக வெட்டியிருக்கிறாள்!

ouch! கடந்த வாரத்தில்தான் சம்மர் கட் செய்திருந்தோம், ஒட்ட வெட்டி. இப்போது அதிலும் முன்னால் இருக்கும் முடி இல்லையெனில், எப்படி இருக்கும்!

இப்படித்தான் இருந்தது, அன்று!!மறுநாள் காலை.

”பப்பு, போய் கண்ணாடி பாரு”

”அழகா இருக்கேன் ஆச்சி, நானே முடி வெட்டிக்கிட்டு!”

oh baby! உன் மேல் உனக்கிருக்கும் நம்பிக்கை மகிழ்ச்சியைத் தருகிறது எனக்கு..ஆனால்..ஆனால்..:(

ஏன் பப்பு, வெட்டினே! - மிக மெதுவாய் கேட்டேன்!

முடி வளர்ந்துடுச்சு இல்ல, அதனாலதான் வெட்டினேன்!

யார்தான் நினைத்திருக்கக் கூடும், இப்படி ஒரு காரணம் இருக்குமென்று?!!அவளை வேனில் ஏற்றிவிட்டு திரும்பும்போது, பள்ளியில் மற்ற/பெரிய வகுப்பு சிறார்களை எப்படி எதிர்கொள்ளுவாள்? ஆசிரியை என்ன நினைத்துக் கொள்ளுவார்கள்? எப்படி அணுகுவார்கள்? இதுவரை தன் தோற்றத்தைக்குறித்து சற்றும் கவலைப்படாதவள், வெட்கம் கொள்வாளா?! so many thoughts!

அன்று மாலை திரும்பக் கேட்டேன்!

ஸ்கூல்ல என்ன சொன்னாங்க பப்பு, ஆண்ட்டி பார்த்தாங்களா?!

நல்லாயில்லேன்னு சொன்னாங்க...நான் அழகா இருக்கேன்னு சொல்லிட்டேன்!

(பொய்யோ உண்மையோ நானறியேன்,ஆனால், அவளது செய்கையைக் குறித்து வெட்கப் படவில்லை, I wish, her self-esteem grows like this!)அவள் முடியை வெட்டிக்கொண்ட அன்று இரவு ரொம்ப அப்செட்டாக இருந்தது. முடி போனதினால் மட்டுமல்ல. சமையலறையில் இருந்த கத்திரிக்கோலை நாற்காலி போட்டு எடுத்திருக்கிறாள்...what ifs..etc..etc! ஆன்லைனில், Golda அக்கா இருந்தார்கள். காலேஜில் என்னோட சீனியர். அவர்களிடம் புலம்பினேன். Golda அக்கா சொன்னார்கள் இதெல்லாம் சகஜமென்று. மேலும், அவர்கள் கொடுத்த டிப்ஸ், timeout. கத்திரிக்கோலை அவளுக்கு இன்னும் கொஞ்சநாள்கள் கொடுக்காதே என்றும்.

என்னை ஆறுதல் படுத்தி, சகஜ நிலைக்கு கொண்டுவந்த,அடுத்த நாள் காலை பப்புவை மென்மையாக அணுக ஊக்கமூட்டிய Golda அக்காவிற்கு நன்றி!

Monday, April 06, 2009

லேடிபேர்ட்..லேடிபேர்ட்!!
லேடிபேர்ட்-டை செய்யத் தேவைப்பட்டது, சிவப்பு, கறுப்பு வர்ணங்களும், நீளவாக்கில் வெட்டப் பட்ட உருளைக்கிழங்கின் பாதியும், கேரட்ய்டின் மேல் பாதியும்! உருளைக்கிழங்கினால் சிவப்பு வர்ணத்தை வைத்துவிட்டு, காய்ந்த பின் கேரட்டினால் கறுப்பு வர்ணம் வைத்து எடுக்கவேண்டும். முதல் லேடிபேர்ட் காய்வதற்கு முன்னரே கறுப்புத் திட்டுகளை வைத்ததால், கலைந்துவிட்டது. அதம்ன்பின் நன்றாக காய்ந்திருக்கிறதாவென பார்த்தபின்னரே கறுப்பு வட்டங்கள் வைத்தாள்!குழந்தைகளுக்கான ரைம்ஸ் சிடியில் லேடிபேர்ட் பற்றிய பாடலைக் கேட்க நேர்ந்தது..ஏன் இப்படி ஒரு பாடல்...!!

Ladybird, ladybird fly away home,
Your house is on fire and your children are gone,
All except one,
And her name is Ann,
And she hid under the baking pan

Saturday, April 04, 2009

பப்பு சீன்ஸ்

அழுவதா சிரிப்பதா - சீன் 1

அலுவலகத்தில் இருக்கும்போது, வீட்டிற்கு இரண்டு முறை தொலைபேசி விடுவதுண்டு. எடுப்பது பெரும்பாலும் பப்புவாகத்தான் இருக்கும்! அன்றும் அப்படிதான்...பப்புதான் எடுத்தாள்.

”என்ன பண்றே, பப்பு?” - வழக்கமான கேள்விதான்! ”சாப்பிட்டியா” என்று ஆரம்பிக்கும் அல்லது ”என்ன பண்றே, இப்போ” என்றுதான் தொடங்கும்! ஆனால் பதில்தான் வித்தியாசமா இருக்கும்!

”நான் வீடு தொடச்சிக்கிட்டு இருக்கேன்!”

”என்னது?” - நான்!

பதிலில்லை!

....போனை வைத்துவிட்டு சென்றுவிட்டாள் போல.

”வீடு ஃபுல்லா தண்ணியா ஆக்கி வைச்சிருக்கு, கேட்டா தொடக்கிறேன்னு சொல்லுதும்மா” - ஆயா!

சரி, நீங்க எங்கேயும் நடக்காதீங்க, நாங்க வந்தப்புறம் பார்த்துக்கலாம்!

சிலசமயங்களில் மாப் செய்ய விரும்புவாள்...கொடுப்போம்..ஆசை தீர்ந்ததும் கொடுத்துவிட்டு நகர்ந்துவிடுவாள். இந்த மாதிரி நாம் செய்வதை அபப்டியே செய்ய விரும்புவது குழந்தைகள் இயல்பு என்றாலும், தண்ணீரில் விளையாடுவது அதுவும்
பெரியவர்கள் யாரும் அருகிலில்லாதபோது விளையாடுவது கண்டிக்கத்தக்கதே!

ஹால் முழுவதும் ஈரம்,தண்ணீர் வேறு ஆங்காங்கே!

“அதை எதுவும் திட்டிடாதே!” - ஆயாதான்!

துடைத்துவிட்டு ஃபேனை போட்டுக் காயவிட்டப்பிறகு,பொறுமையாகக் கேட்டேன்!

”காலையிலேதான பப்பு xxx ஆண்ட்டி தொடச்சாங்க? ஏன் நீ இப்போ தொடச்சே?! ” ரொம்பப் பொறுமையாய், எல்லாக் கடுப்பையும் விழுங்கியபடி!

“ஆதி இங்கே உச்சா போய்ட்டான், அதான் தொடச்சேன்!”

ஆதி அவளுடைய பொம்மைகளில் ஒன்று!

அவள் சமயங்களில் ஈரம் செய்துவிடும்போது நாங்கள் செய்வதுதான்! பள்ளியிலும் ஒருவேளை பார்த்திருப்பாளாயிருக்கும்!

யார்தான் நினைத்திருக்கக் கூடும், இப்படி ஒரு காரணம் இருக்குமென்று?!!

Friday, April 03, 2009

புத்தகங்கள் - தலைமுறை இடைவெளிகளில்!!

செல்வேந்திரனின் புத்தகப் பதிவுக்காக! பெரிம்மா கடந்த வாரயிறுதியில் வந்திருந்தார்கள். பப்புவோடு சேர்த்து வீட்டில் நான்கு தலைமுறைகள்.

"பெரிம்மா, ஒரு வீட்டிலே கண்டிப்பா இருக்க வேண்டிய 10 புக்ஸ் சொல்லுங்க” - நான்

”பாரதியார் கவிதைகள், டேல் கார்னிக்..” - பெரிம்மா

நடுவில் ஒரு குரல், “ சத்திய சோதனை” - பாட்டிதான்!

“ஆயா, படிக்கற புத்தகமா சொல்லுங்க, நம்ம வீட்டிலே கூடத்தான் இருக்கு,ஒரு சாப்டருக்கு மேலே படிக்க முடிஞ்சதேயில்ல,முதல்ல நீங்க படிச்சிருக்கீங்களா?!”

“புக்குன்னெல்லாம் சொல்ல முடியாது, ஆத்தர் சொல்றேன், அந்த ஆத்தரோட ஒரு புத்தகம் படிச்சாக்கூட போதும், சார்லஸ் டக்ளஸ், எஸ் ராமகிருஷ்ணன்” - பெரிம்மா.

“பெண்ணின் பெருமை” - வேற யாரு, எங்க ஆயாதான்!

இது சரிவராதுடா சாமியென்று, ஆளுக்கொரு பேப்பர் கொடுத்தேன். ஒரு குடும்பம். நான்கு தலைமுறைகள். Reading habbit! தலைமுறை இடைவெளி எப்படி இருக்குன்னு பாருங்க!!

ஆயாவின் லிஸ்ட் :

1. சத்தியசோதனை
2. பகவத்கீதை
3. இராமாயணம்
4. ஓஷோ
5. பெண்ணின் பெருமை - திரு.வி.க
6. பாரதியாரின் கவிதைகள்
7. நெல்சன் மண்டேலா பற்றிய நூல்
8. கார்ல் மார்க்ஸ் எழுதிய நூல் - பெயர் நினைவில் இல்லை
9. திருக்குறள்.
10. தேம்பாவணி - வீரமாமுனிவர்

11-ஆவதா வீரப்பனின் புத்தகம் (நக்கீரன் வெளியீடு) சேர்த்துக்க சொன்னாங்க!
இந்த புத்தகங்களையெல்லாம் எங்க ஆயா படிச்சிருக்காங்களாம், உறுதிபடுத்திக்கிட்டேன்! (அவ்வ்வ்வ்)இப்போ புரியுது, வீட்டுக்கு வர்ற என் ப்ரெண்ட்ஸ்-க்கு எல்லாம் எங்க ஆயாவைத்தான் பிடிக்கும்! (Mary, are you listening??)


பெரிம்மாவின் லிஸ்ட்:
(ஆசிரியர் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தால், அவர் எழுதிய ஏதாவது ஒரு புத்தகம் என்று பொருள் கொள்க!)

1. பாரதியார் கவிதைகள்
2. பாரதிதாசன் கவிதைகள்
3. பெரியார்
4. Dale carnegie
5. எம்.எஸ்.உதயமூர்த்தி
6. Who moved my cheese
7. Charles douglas
8. Shakespeare's dramas
9. எஸ்.ராமகிருஷ்ணன்
10. Roots - Alex Haley
11. Anna karinina - Leo Tolystoy
12. Mother - Maxim Gorky
13. Anton chekov's short stories
14. O Henry's short stories
15. Mythili sivaraman's articles
16. Darwin -Origin of Species

என்னோட லிஸ்ட் :

ஏற்கெனவே பதிவுலகில் ஒரு முறை பட்டியல் எடுத்தபோது எழுதிய பதிவு..புத்தகக்கூட்டிலே

1. அக்னிச் சிறகுகள் - கலாம்
2. I dare - Kiran bedi
3. The Roots/ஏழு தலைமுறைகள் - அலெக்ஸ் ஹேய்லி
4. Any book by R.K Narayan (The Guide/Financial Expert)
5. anna karenina - டால்ஸ்டாய் (Tolstoy)
6. tough times never last but tough people do - robert schuller
7. பாரதியார் கவிதைகள்
8. Works of Anton chekov
9. பெண் ஏன் அடிமையானாள்?
10. The Bible

உலகில் இருக்கும் இன்னும் உன்னதமான பல புத்தகங்களை i am yet to read. ஆனால், இதுவரை படித்ததை வைத்தே எனது இந்த பட்டியல்!

பப்புவின் லிஸ்ட் :
( இப்போதெல்லாம் இந்த புத்தகங்களை வைத்து தானாக கதைகள் சொல்லிக்கொள்கிறாள்! அதை வைத்து எனது அனுமானம், இப்படித்தான் இருக்கவேண்டுமென!!)

1. டாக்டர் பவுடர்பில்
2. கசகச பறபற
3. கோல்டிலாக்ஸ் & 3 பியர்ஸ்
4. ரேவா & மோடோ
5. Rabbits happy day
6. தூக்கம் வரவில்லை சிறுமி மாஷாவுக்கு
7. ஏதாவது ஒரு போட்டோ ஆலபம் (அம்மா & அப்பா கல்யாண ஆல்பம்/பப்புவின் முதல் பிறந்த நாள் ஆல்பம்)
8. Gada Gada Gudu Gudu the marble rolls
9. At the zoo
10.Peter Pan

இந்த பதிவுக்கு காரணமான செல்வேந்திரனுக்கு நன்றிகள்!

Wednesday, April 01, 2009

அழியாத கோலங்கள் - தொடர் பதிவு

அழைத்த தீபாவிற்கும் , தொடங்கி வைத்த மாதவராஜ் அவர்களுக்கும் நன்றிகள்!

ஹாய் மீனு,

உன் கடிதம் கிடைத்தது.எத்தனை வருடங்களுக்குப் பிறகு....!!! எப்படி இருக்கிறாய்? உன் மகள் மற்றும் கணவர்? இங்கே நாங்களனைவரும் நலமே!

நீ எழுதியக் கடிதம் எனக்குள் பல நினைவலைகளைத் தூண்டிவிட்டது! பழைய கடிதங்களையும், ஆட்டோகிராப் நோட்டுகளையும் தோண்டி எடுத்துப் படித்துக் கொண்டிருந்தேன்! இப்போதுதான் நாம் சந்தித்ததுபோல் இருக்கிறது, ஆனால் எவ்வளவு நடந்துவிட்டிருக்கிறது! oh..our sweet bygone days!

பலசமயங்களில் நான் உன்னை நினைத்துக்கொண்டிருக்கிறேன், ஆனால் எந்தச் சூழ்நிலைகளில் என்று இப்போது ஞாபகமில்லை! உன்னிடம் பகிர்ந்துக் கொள்ள நிறைய இருப்பதுபோலவும் தோன்றுகிறது, அதேசமயம், பேசுவதற்கு ஒன்றுமில்லாததுபோலவும் இருக்கிறது..ம்ம்..உண்மைதான், குழந்தைகளையும், குடும்பத்தைத் தாண்டி பேச
ஒன்றுமில்லாதது போல்தான் இருக்கிறது..நான் பார்த்த கடைசி ஷாருக் படம் கூட நினைவில் இல்லை! ஹேய்..கடைசி எக்சாம் முடித்து, நம் கிளாஸ்மேட்ஸ் அனைவருடனும்கூட நாம் தியேட்டரில் பார்த்தோமே..என்ன படம் அது?!

முன்பு, எனது கஸின்சிஸ்டர்ஸை பார்த்து வியந்திருக்கிறேன், இவர்களுக்கு குழந்தைகளைத் தாண்டிப் பேச ஒன்றுமிராதாவென்று, எனக்கு ஒரு குழந்தைப் பிறக்கும் வரை! எங்கோ படித்தது தான் நினைவுக்கு வருகிறது, மின்சார ரயிலிலிருந்து இறங்கியதுமே, ஆண்கள்
டீ குடிக்கவோ பேசவோ நண்பர்களுடன் கூட்டாகப் போய் விடுகிறார்கள், ஆனால், பெண்கள் கீரை வாங்கவும், காய்கறி பேரம் பேசி வாங்கவும் தயாராகி விடுகிறார்களென்று! எவ்வளவு உண்மை! ஒருவேளை நாம் மகள்களாக வளர்க்கப் படாமல், மருமகளாக்கப்படுவதற்காகவே
வளர்க்கப் படுகிறோமோ!!வீடு, குழந்தைகளென்று ஒரு விடுபடவே முடியாத நத்தைக்கூடு நம் கண்களுக்குத் தெரியாமலே நம் முதுகில் ஏற்றிவிடப்படிட்டிருக்கின்றதோ, மீனா! விடுபட்டாலும் எங்கே போக!!

நீ வேலை செய்கிறாயா, மீனா?! நான் மூன்று கம்பெனிகள் மாறிவிட்டேன்....ஆபிஸூம், அதைவிட்டால் வீடும்தான் மாறிமாறி...மீனா, ஆன்சைட் போவதுதான் என் கனவு என்று சொல்லிக்கொண்டிருப்பேனே..ஆனால், இன்னும் ஒருமுறைக்கூட போகவில்லை! வாய்ப்புக் கிடைக்காமலில்லை, ஆனால், கல்யாணத்திற்கு முன் அம்மா போக விடவில்லை, கல்யாணத்திற்குப் பின் சந்தர்ப்பம் போக விடவில்லை! எங்கே, வீட்டையும், குட்டீஸையும் விட்டுவிட்டு போவது..சிலசமயங்களில் தோன்றுகிறது, ஒருவேளை நாம் தான் ரொம்ப நினைத்துக் கொண்டிருக்கிறோமோ, நாம் இல்லாவிட்டால் ஒன்றுமே நடக்காதென்று!ஒருவேளை நாம் care-givers-ஆக இல்லாமலிருந்தால், equations மாறுமோ! மீனா, நாம் லைப்ரரில்யிலிருந்து எடுத்துப் படித்தோமே...அம்பையின் புத்தகம்..வீட்டின் மூலையில் சமையலறை..ஞாபகமிருக்கிறதா..நிறைய விவாதித்தோமே! நான் இதுவரைக்கும் ஆயிரம் தோசைகள் செய்திருப்பேனா..நீ எவ்வளவு செய்திருப்பாய்?:-)


இன்னும் ஒன்று சொல்லவேண்டும் மீனா, யூ வில் பி எக்சைட்டட்..எங்கள் அலுவலகத்தில் நாங்கள் பெண்கள் மட்டும் ஒரு குழுமம் உருவாக்கியிருக்கிறோம்..எங்காவது ஓரிடத்ட்க்ஹில் நாம் நாமாக இருக்கவேண்டுமில்லையா! எங்கள் கம்பெனி ஜிஎம் முதல் எல்லோரும் அதில்! நினைவிருக்கிறதா, நாம் காலேஜில் விளையாடுவோமே கிறிஸ்மா, கிறிஸ்சைல்ட்...அதிலிருந்து ஆரம்பித்து, காலேஜில் ஒரே கலர் தீம் வைத்து உடைஉடுத்திக்கொண்டு வருவோமே..அப்புறம் புடவை டே இதெல்லாமே..இங்கேயும்..விளையாட்டுப் போட்டிகள், எல்லோரும் ஒரே கலர் குர்தா..மாதத்தில் அல்லது இருமாதங்களுக்கு ஒருமுறை வெளியே சென்று ப்ரீக் அவுட்..என்றாவது ஒரு நாள் பாட் லக்! எல்லாம் சிண்ட்ரெல்லாவின் காலணியில்தான்!

இப்படி நாமாக ஏதாவது சுவாரசியமாக செய்துக்கொண்டால்தான் உண்டு! சம்திங் டூ கீப் அஸ் கோயிங்! மதிய உணவிற்கு லேடிஸ் மட்டுமாக அமர்ந்து சாப்பிடுவோம்..அப்படிதான் நேர்ந்துவிடுகிறது..அவ்வளவு கிண்டலும் கலாட்டாவுமாக, சிரிப்புமாக..அப்போதுதான் தெரியும், ஒவ்வொருவருக்குள்ளேயும் ஒரு குறும்புப்பெண் ஒளிந்துக்கொண்டிருப்பதை! பசங்க கிண்டல் செய்வாங்க, “என்ன மேடம், அவ்வளவு சிரிப்பு, நீங்களா ஒருத்தருக்கொருத்தர் பார்த்து, ஹேய், நீ இன்னிக்கி ரொம்ப அழகாயிருக்கே” அப்படின்னு சொல்லிட்டு சிரிச்சுக்குவீங்களா” அப்படின்னு! எவ்வளவு கிண்டல் பாரேன்! அப்புறம் பாட் லக் வைத்திருந்தோம்..அதுவும் நாங்கள் பெண்கள் மட்டும்! உடனே,பசங்க, “மேடம், இது சூசைட் அட்டெம்ட் இல்லையா, நீங்களே சமைச்சு நீங்களே சாப்பிடறது?!” “நீங்க இபப்டில்லாம் கிண்டல் செஞ்சா உங்களுக்கு கொடுத்துடுவோம்னு நினைக்காதீங்கன்னு” சொல்லிட்டு நாங்க ஜாலியா பாட் லக் எஞ்சாய் செய்தோம்! ஒன்றாக ஒருமுறை சினிமாவுக்குக்கூட போயிருக்கிறோம், அலுவலக் பெண் தோழிகளாக! இதுதான் எங்களைப் பொறுத்தவரை மிகப்பெரிய மகிழ்ச்சி, அன்றாட வாழ்வின் இறுக்கங்களிலிருந்து விடுபட!

ஓக்கே மீனா, ரொம்ப போரடிக்க விரும்பவில்லை! நாந்தான், கடிதம் எழுதினா பக்கம் பக்கமா பரிட்சை பேப்பரை விட அதிகமா எழுதுவேனே...விடுமுறைக்கு நாங்கள் சென்னை வருவோம், தொலைபேசியில் அழைக்கிறேன்!

N. B: இன்னும் இந்த “Guess me!" அப்புறம் “open with smile" இதெல்லாம் போடுவதை விடமாட்டியான்னு திட்டாதே!geeee!

With sunshine and rainbows
கVதா!! :-) (இப்படி சைன் செய்து நீண்ட நாட்களாகிவிட்டன, மீன்ஸ்!)வெகு இயல்பாக, அதே சமயம் நம்மையும் நமது அனுபவங்களோடு அசை போடவைக்கும்படியும், 'மனசைப் பிழியற' மாதிரியும் பதிவெழுதும் நமது அமித்து அம்மாவை இதைத் தொடர அழைக்கிறேன்!