Tuesday, March 31, 2009

மாட்டு ஜூஸ்..

பொறுமைக்கு சோதனை + மூளைக்கு வேலை = பப்புவை பால் குடிக்க வைக்கறது! ஆனால், அவள் என்னதான் பிரச்சினை செய்தாலும், அழுதாலும், இப்போது அவளுக்குத் தெரியும் கண்டிப்பா குடிச்சுதான் ஆகணும், தப்பிக்க முடியாதுன்னு!! ஆனா ஒன்னு, அதுக்கு நான் புதுசு புதுசா கண்டுபிடிக்கணும் அவளை amuse செய்ய! ஒருதடவை வொர்க் அவுட் ஆனது அடுத்த முறை சுத்தமாக வேலைக்காகாது!

1. சிடி-கள் - பல சமயங்களில் உதவும், ஆனா “பப்பு குடி, பப்பு குடி” ன்னு ரீப்பிட்டிக்கிட்டே இருக்கணும்! (எங்க ஆயாவை எப்படில்லாம் லொள்ளு கொட்டியிருக்கேன், அதுக்கெல்லாம் சேர்த்துதான் இப்படின்னு நினைக்கிறேன்!)


2. காலை நேரமாயிருந்தால், வேன் கிட்டே போய் குடிக்கலாம் என்றால், வீட்டிலேயே குடிக்கறேன் என்று குடிப்பாள், ஆனால் நான் அதே ரிப்பீட்டு போட்டுக்கிட்டு இருக்கணும்!


3. ஸ்ட்ரா - கொஞ்ச நாள் பலன் தந்தது.

4. ஏதாவது ஆக்டிவிட்டீஸ்-ற்கு பொருட்களை எடுத்து வைத்துவிட்டு, பாலைக் குடிச்சு முடிச்சப்பிறகுதான் என்று ஒரு செக்!

5. பல சமயங்களில் "கதை சொல்வது" உதவியிருக்கிறது. ஆனா ரொம்ப பொறுமை தேவை!

6. ரிவர்ஸ் டெக்னிக் - பப்புவுக்கு அம்மா ரோல் கொடுத்தால், நான் அவள் மடியில் தலை வைத்துக் கொள்ள வேண்டும்! அதனால், பால் தம்ளரை அவளது கையில் கொடுத்து விட்டு, அவள் மடியில் தலை வைத்து திரும்ப அதே ரிப்பீட்டு.."அம்மா, குடிங்க அம்மா"!!


7. எண்கள் - 1 - 10 சொல்வதற்குள் (முன்னாடி இந்த டெக்னிக் வேலை செய்தது..இப்போது எப்போவாவது!!)

8. பேப்பர் கப்ஸ்

9. சாஸர் அல்லது குட்டிக் கிண்ணத்தில்...

...இன்னும் பல!! இப்படியெல்லாம் செய்து தம்ளரை காலி செய்ய வைத்ததும் நமக்கு வருமே ஒரு ஆயாசம்+சோர்வு..கூடவே கொஞ்சம் ஜாலி...இன்னும் கொஞ்ச நேரத்துக்கு ஃப்ரீ-யா இருக்கலாம்-னு! huh! :-)..ஆனால், இவை எதையுமே செய்யாமல் அவளாகவே எடுத்துக் குடிக்கும் ஓர் நாளை கனவு கண்டுக் கொண்டிருக்கிறேன், ஆனால், உள்மனசுக்குத்த் தெரியும்..அந்த நாள் வர இரு பத்தாண்டுகள் வேண்டுமென..ஏனெனில் DNA அப்படி!! DNA-வை மீறி அற்புதங்கள் நடக்குமா??

*மாட்டு ஜூஸ் : எஸ்விசேகர், ஒரு டிராமாவில், முதியோர் கல்வி மாதிரி சொல்லிக்கொடுப்பார். ஆரஞ்ச் ஜூசைக்காட்டி இது என்ன, "ஆரஞ்ச் ஜூஸ்", ஆப்பிள் ஜூசைக்காட்டி, இது என்ன, "ஆப்பிள் ஜூஸ்", பாலைக் காட்டியதும் மக்கள்ஸ் சொல்வாங்க, "இது மாட்டு ஜூஸ்" !!

Monday, March 30, 2009

என்னைக் கவர்ந்தவர்கள்!!

சின்னஞ்சிறு வயதில் கார்ட்டுன் மாந்தர்களை பிடித்திருந்தது. ஏழு அல்லது எட்டு வயதில் வஉசியைப் பிடித்திருந்தது, தம்பிக்கு அந்தப் பெயர்தான், அதுவும் தலைப்பெழுத்தையும் சேர்த்தே வைக்க வேண்டுமென அடம்பிடிக்குமளவிற்கு! பள்ளி பருவத்தில், ஒரு சம்மர் கேம்பில், இதே கேள்வியை எதிர்கொண்டபோது, எனது பிடித்தவர்கள் பட்டியல், அன்ட்ரூ அகாஸி, Gaby (Gabriella sabatini), பிரபாகரன், வீரப்பன் மற்றும் நாடியா கோமோன்ஸ்க்கி(ஜிம்னாஸ்டிக் வீராங்கனை) என்றிருந்தது! கல்லூரி பருவத்தில், கிரண் பேடியும், ஷாருக்கும், வீன்ஸ் வில்லியம்ஸூம், கலாமும் என்று பட்டியல் வளர்ந்தது!

one fine day, I learnt, எங்கோ இருப்பவர்களை விட, நமக்கு மிக மிக அருகில், நம் வாழ்வின் அங்கத்தினர்களின் தாக்கமே அதிகமென்றும், அவர்களின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் உண்டென்றும்,அவர்களும் தூண்டுகோல்களேயென்றும்!!
இப்போதெல்லாம், இவரைப் பிடிக்கும் அல்லது பிடிக்கவில்லையென்று சொல்லிவிடமுடிவதில்லை! ஒருவேளை நான் வளர்வது நின்று விட்டதாவெனத் தெரியவில்லை..ஆனால், ஒவ்வொரு மனிதரிடமும் ஏதோவொன்று எனை ஈர்த்தபடிதான் இருக்கிறது! பிடிக்காத பகுதி வந்தால் தள்ளிவிட்டு படிப்பதும், பிடித்திருந்தால் திரும்பத் திரும்ப படிப்பதுபோல, தள்ளி இருப்பதும், அருகாமைப்படுவதுமாய்.. சுவாரசியமாகத்தான் இருக்கிறது, புத்தகம் படிப்பதைப் போல் மனிதர்களை படிப்பதும்!

என்னைக் கவர்ந்தவர்கள் எனும் தொடர்பதிவுக்கு சகோதரர் ஜமால் அழைத்திருந்தார். மிகத் தாமதமாக பதிவிட்டிருக்கிறேன்....தவறாக எண்ணமாட்டீர்கள் என் நினைக்கிறேன்!! எல்லோரும் மனசை பிழியறமாதிரி எழுதியிருக்கறதால எதுக்கும் நானும் என் பங்குக்கு அதையே செய்யனும்னுதான் சின்னதா எழுதிட்டேன்! :-) அப்புறம் இந்த டேக்கை விருப்பமிருப்பவர்கள் தொடரலாம்..

Saturday, March 28, 2009

கசகச பறபற - சிறார் புத்தகம்!!புத்தகம் : கசகச பறபற
வயது : 2-6
வழி : தமிழ்
எழுதியவர் : ஜீவா ரகுநாத்


பப்பு-விற்கு, கதைசொல்லும் ஜீவா ஆண்ட்டியைப் பிடிக்கும். எனக்கும்தான்! ஒருநாள் பப்பு சொன்னாள், “நாந்தான் ஜீவா ஆண்ட்டி”! பப்பு, ஒருவேளை ஜீவா ஆண்ட்டியின் கதைசொல்லும் பாதையை தேர்ந்தெடுக்ககூடும்! ஒரு சிறு கற்பனை, கதையாக நெய்யப்பட்டு ஒரு குழந்தையின் மனதை, அதன் உலகத்தை எப்படி ஆள்கின்றது! இந்தப் புத்தகம், “கசகச பறபற” என்ற புத்தகமும் ஜீவா ஆண்ட்டியினுடையது தான், தூலிகா பதிப்பகத்தாரிடமிருந்து!

குழந்தைகளும் பெரியவர்களும் ஒன்றாக படித்து மகிழ என்று அறிமுகமாகும் இந்தப் புத்தகத்தைப் பற்றி மேலும் அறியலாம் அம்மாக்களின் வலைப்பூவில்!

Friday, March 27, 2009

250-உம் நன்றிகளும்!!


(pappu : @ nine months old!)

என்னுடைய கடந்த இடுகை 250வது இடுகை. பதிவுகளின் எண்ணிக்கையைக் குறித்து அவ்வளவாக சிலாகித்துக் கொள்வதில்லையென்றாலும் நன்றி சொல்லவதற்காகவேனும் இதைக் பதிவு செய்வது அவசியமாகத் தோன்றுகிறது எனக்கு! நான் ஒன்று பெரிய எழுத்தாளரோ கவிஞரோ இல்லை! ஆனால் பள்ளி/கல்லூரி போட்டிகளுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும், நிகழ்வுகளைக் குறித்துக் கொள்வதற்காகவும், சில சமயங்களில் பள்ளிக் கல்லூரித் தோழியருக்கு நெடுங் கடிதங்கள் என்றுதான் எழுதியிருந்திருக்கிறேன்! எதையாவது எழுதுவது என்பது என்னை எனக்கு உணர்த்தியிருக்கிறது..எழுத்து எனக்கு தஞ்சமளித்திருக்கிறது..அடுத்தவரிடம் சொல்ல முடியாதபொழுதுகளில்..அல்லது பிறர்
புரிந்துக்கொள்ள முடியாத பொழுதுகளில்! வாசிப்பு எழுத்தும் என்னை ஓருபோதும் காயப்படுத்தாதவை!

வேலை மாற்றங்கள், திருமணம், குழந்தை என்றிருக்கும்போதுதான் வலைப்பதிவு அறிமுகமானது! பப்பு ஒருவயதை நெருங்குகையில் 28 இடுகைகளைத் தொட்ட என் வலைப்பதிவு, அவளது இரண்டாம் அகவையில் 18 இடுகைகளாக குறைந்து அவள் பள்ளி செல்லவாரம்பித்தபின் 145 ஆக எகிறியிருக்கிறது! இதில் மறைந்திருக்கும் இன்னொரு் பொருள்..பப்புவிற்கும் எனக்கும் இடையேயிருக்கும் பிணைப்புக்கயிறு நாள்பட நெகிழ்ந்து, பப்பு அவளது விளையாட்டுலகத்துடன் நெருக்கமாகியிருக்கிறாள்.. நான் பதிவுகளுடன்!!

வலைப்பதிவுகளின் மூலம் பல நல்ல நண்பர்களை பெற்றிருக்கிறேன்..ஒரு சிலரை நேரில் சந்தித்துமிருக்கிறேன்! இந்தப் பதிவின்மூலம் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது இதுதான்....உங்கள் பின்னூட்டங்கள் ஊக்கமளித்திருக்கின்றன....மேலும் பதிவுகளிட கிரியை செய்திருக்கின்றன....பலசமயங்களில் மறுமொழிக்கு மறுமொழி இடாவிட்டாலும் தொடர்ந்து மறுமொழியிடும் உங்கள் கனிவுக்கும் பெருந்தன்மைக்கும் வந்தனங்கள்!

என் பதிவுகளை தொடர்ந்து வாசிக்கும், பின்னூட்டமிடும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!
வலைப்பதிவுகளுக்கு தளமாக இருக்கும் தமிழ்மணத்திற்கு நன்றி!!

Thursday, March 26, 2009

வரலாற்று நினைவுகளும் தலைமுறைப் பெருமைகளும்!

எனது ஆயா(கொள்ளுப்பாட்டி)வின் வீர வரலாற்றைச் சொல்லும் பதிவைக் கண்டேன், முனைவர் ரத்தின புகழேந்தியின் வலைப்பூவில். ஆயாவின் விடுதலைப் போராட்ட வாழ்வின் அனைத்து விபரங்களோடும், சுவாரசியமான குறிப்புகளோடும்! பெண்கள் வெளியே வருவதும், தனியாக நடமாடுவதும் கூட கட்டுப்படுத்தப் பட்ட அன்றைய நாளில், ஆயா வண்டி கட்டிக் கொண்டு சுற்றியுள்ள கிராமங்களில் மக்களைச் சந்தித்து சுதந்திர விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். பாரதிக்கு தடை விதிக்கப் பட்டிருந்த காலகட்டத்தில், கடலூரிலிருந்த ஆயா வீட்டிற்கு வந்து அங்கிருந்து பாண்டிச்சேரிக்குச் சென்றிருக்கிறார்.

சுதந்திர தினத்தன்று வெளியிடப்படும் நாளேட்டு மலர்களில் ஒரு சில வரிகள் அல்லது பத்திகள் தியாகப் பெண்மணிகளின் செய்தியைத் தொட்டுச் செல்லும்! எப்போதாவது, வரலாற்று/பெண்ணிய ஆராய்ச்சி மாணவர்கள் கட்டுரைகளில் இவர்களின் விபரங்கள் தொகுக்கப்படுவதுண்டு! ஏனோ தென்னாட்டின் பல வீர பெண்களின் விடுதலைத் தியாகங்கள் மறைக்கப்பட்டும், திரிக்கப்பட்டும் இருக்கும்போது, அவ்வப்போது வரும் இப்பதிவுகள் மனதிற்கு மகிழ்ச்சியளிக்கின்றன..ஞாநியின் நெருப்பு மலர்கள் புத்தகம் முழுக்க முழுக்க, விடுதலைப் போராட்டத்தில் இந்தியப் பெண்களின் பங்களிப்பைப் பேசிச் செல்கிறது!

முனைவர் இரத்தினபுகழேந்தியின் பதிவு - அஞ்சலை அம்மாளைப் பற்றி

முனைவர் ரத்தினபுகழேந்தி அவர்களுக்கு நன்றி! இவர் கதை, கவிதை, கட்டுரை என பல தளங்களில் பங்களிக்கிறார்!

ஆயாவைப் பற்றி இணையத்தில் கிடைத்த பதிவுகள் பற்றிய தொகுப்பு - நட்சத்திர வாரத்தில் பதிவிட்டது!

Tuesday, March 24, 2009

இனியா இன் ஸ்கூல்!!

இனியா அந்தப் பள்ளியில் புதிதாகச் சேர்ந்திருந்தாள். அவளது வகுப்பிலிருந்த பலரும் அவளைப் போலத்தான், ஐந்தாம் வகுப்பை வேறு ஒரு பள்ளியில் படித்தபின், ஆறாம் வகுப்பிற்கு அந்தப் மேனிலைப் பள்ளியில் சேர்ந்திருந்தனர். அவளுடனே படித்த பலரும் அதே பிரிவில் இருந்தனர். பழைய பள்ளியில் எதிரிகளாயிருந்தவர்களும் இந்தப் பள்ளியில் சேர்ந்தவுடன் நண்பர்களாகிவிட்டிருந்தனர். இது அவர்களது சிறு பள்ளியை போல அல்ல,
பெரிய கட்டிடங்களும், அசெம்ப்ளி ஹாலும், மிகப் பெரிய விளையாட்டு மைதானம் கொண்டதுமாயிருந்தது இந்த மேனிலைப் பள்ளி. குறைந்தது ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளை கொண்டிருப்பது போலத் தோன்றியது. இனியாவின் வகுப்பில் மட்டும் நாற்பத்தைந்து பேர் இருந்தனர். ஆனால், அவளுக்கு தன் வரிசையில், முன் வரிசையில் அமர்ந்திருப்பவர்களின் பெயர்கள் மட்டுமே தெரிந்திருந்தது! இனியா, நித்யா, வாணி மூவரும்
நண்பர்கள். மூவரும் படித்த கதைப்புத்தகங்களைப் பற்றியும், சுட்டியின் கார்ட்டூன்களைப் பற்றியும் பேசி சிலாகித்துக் கொண்டிருப்பர்.

அவளது வகுப்பாசிரியை சுதா. அவர்தான் ஆங்கிலம் மற்றும் அறிவியல் பாடங்களை எடுக்கிறார். அந்த வருடத்திற்கான புத்தகங்கள் அவர்களதுப் பள்ளியில் கொடுப்பார்கள்,
ஆனால் முதல் டெர்ம் முடியும்போதுதான் கிடைக்கும். அதனால், எல்லோருமே கடையிலே வாங்கிவிட்டிருந்தனர். மேலும், அவர்களது ஊரிலே இருந்த புத்தகக் கடைகளில் தமிழ் பாடத்திற்கான புத்தகம் தீர்ந்துவிட்டிருந்தது. பலருக்கு அப்புத்தகம் கிடைக்கவில்லை. வகுப்பிலே ஒரு சிலர் வைத்திருந்த புத்தகத்தை அருகிலிருப்பவர்களுடன் பகிர்ந்துக் கொள்ளுமாறு சுதா மிஸ் சொல்லியிருந்தார்கள். ஒரு சிலர் பகிர்ந்துக் கொள்வதில் மகிழ்ச்சியும் பெருமிதமும் கொண்டிருந்தார்கள். ராதா இனியாவின் வரிசையிலே அமர்ந்திருந்தாள். இனியாவும் நித்யாவும் அவளுடன் இணைந்துக் கொண்டனர். வாணி கலைமாமணியுடன் சேர்ந்துக் கொண்டாள்.முதல் வரிசையிலிருந்த சௌந்தரி நன்றாக படிக்கும் பெண் போல காட்டிக் கொண்டாள். அவள்தான் வகுப்பில் முதலாவதாக வருவாள் என்று அவளுடன் பழைய பள்ளியில் படித்த சிலர் சாட்சி வேறு கூறினர். இனியாவும் வாணியும் ஒரே பள்ளியிலிருந்து வந்திருந்தனர். அந்தப் பள்ளியில் இனியாதான் நன்றாக படிக்கும் பெண் என்று பெயர் வாங்கியிருந்தாள். மாத பரிட்சைக்கான அட்டவணையும் வந்துவிட்டது. அட்டவணையை சுதா மிஸ் போர்ட்டில் எழுதும் போதுதான் தமிழ்புத்தகங்களை கொண்டு வந்திருப்பதாக பள்ளியின் உதவியாளர் கணேஷ், சுதா மிஸ்ஸிடம் கூறினார். சுதா மிஸ் புத்தகங்கள் இல்லாதவர்களை எழுந்து நிற்கும் படிக் கூறி ஒவ்வொன்றாக வினியோகிக்கத் தொடங்கினார்.கலைமாமணியும் எழுந்து நின்றாள்.

“மிஸ், கலைமாமணிகிட்டே புக் இருக்கு மிஸ்” என்ற யாருடைய குரலோ சுதாமிஸ்-ற்கு கேட்டுவிட்டது!

“கலைமாமணி, உன்கிட்டே புக் இருக்கா?” என்றதற்கு, ”ஆமா மிஸ்” என்றாள் மெல்லிய குரலில்!

“அப்போ ஏன் நின்னுக்கிட்டிருக்கே, உட்கார்” என்று மிஸ் சொன்னதற்கு,

“இந்தப் புத்த்கத்தை அடுத்த வருஷத்திற்கு வச்சிப்பேன் மிஸ்” என்றாள் கலைமாமணி. வகுப்பறையே சிரித்து ஓய்ந்தது!!


“நீ பாஸாகி அடுத்த வகுப்பிற்கு போய்டுவே இல்லையா, அப்போ வேற புத்தகம்தான் படிக்கணும், சரியா” என்றபடியே சுதா மிஸ்-உம் சிரித்தார்கள்!!


மாதப் பரிட்சையும் முடிந்து விட்டது. எளிதாக இருந்ததாகத் தான் இனியா நினைத்துக் கொண்டிருந்தாள். தான் நன்றாக எழுதியிருப்பதாக இனியா நம்பிக்கைக் கொண்டிருந்தாள்.அந்த வாரயிறுதி முடிந்து, திங்கள் காலை வகுப்புத் தொடங்கியது. சுதா மிஸ் வந்தார்கள்..ஹூம்...ஆனால் விடைத்தாள்களை கொண்டுவரவில்லை. சௌந்தரி ஒருவித படபடப்போடு இருந்தாள்....யாருடனும் பேசாமல்! எப்போதும் நமது மூவர் குழு வாரயிறுதியில் விளையாடியதைப் பற்றியும், கிரிக்கெட் மேட்ச் பற்றியும் பேசிக் கொண்டிருந்தனர்! மீண்டும் சுதா மிஸ் வகுப்பு மாலை மூன்று மணிக்கு! கையில் விடைத்தாள் கட்டு! அனைவரது விடைத்தாட்கள் அவரவர் கைக்கு வந்துச் சேர்ந்தது.
சௌந்தரி விசும்பத் தொடங்கினாள். வகுப்பறை முழுக்க அவளையே திரும்பிப் பார்த்தது! இனியாவிற்கு சௌந்தரி ஏன் அழுகிறாள் என்று புரியவேயில்லை. சௌந்தரிதானே முதல் மதிப்பெண். எதற்கு அழ வேண்டும் என்று எண்ணிக்கொண்டாள். மணியடித்தது. சுதாமிஸ் வகுப்பறையை விட்டகன்றார்கள், அடுத்த பரிட்சையில் எல்லோரும் இதைவிட அதிகமாக எடுக்க வேண்டுமென்று வாழ்த்தியபடி!

சௌந்தரி இப்போது தேம்பியழத் தொடங்கியிருந்தாள். இனியாவிற்கு புதிதாக இருந்தது, ” நீதானே தொண்ணூறியொன்று எடுத்திருக்கே, அப்புறம் ஏன் அழறே?”, என்றாள் சௌந்தரியிடம்.

சௌந்தரி சொன்னாள், “ நான் எப்போவுமே நூற்றுக்கு நூறுதான் எடுப்பேன், இப்போ குறைஞ்சுப்போச்சே!” !!

“அடுத்தப் பரிட்சையிலே பார்த்துக்கலாம், அழாதே, இப்போ அழுதா ஒன்னும் யூஸ் இல்ல” என்றாள் எண்பத்தைந்து மதிப்பெண்கள் எடுத்த இனியா!

மதிப்பெண்கள் மட்டுமே நம்மை நிரூபிப்பதில்லை. ஒவ்வொரு முறையும், நாம் முன்பு செய்ததைவிட சிறப்பாக அடுத்தமுறைச் செய்வதே வெற்றி என்பது இனியாவிற்கு நன்றாகவே புரிந்திருந்தது! அந்தத் தன்னம்பிக்கையும் மனப்பாங்குமே எண்பதைந்து மார்க்குகள் எடுத்த இனியாவை கொண்டு முதல் மதிப்பெண் எடுத்த சௌந்தரியைத் தேற்றச் செய்தது!!
பி.கு 3 : குழந்தைகளுக்கான எனது முதல் கதையை அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்! அதுதான் கடைசி என்று நினைத்து ஒரு சிலர் மகிழ்ந்துக் கொண்டிருப்பதாகத் தெரியவந்தது...அதான்!

பி.கு 2 : கதை எனதுக் கற்பனையே. அணுகுமுறையில் மாற்றம் கொண்டுவரலாமென்று விரும்புவோர் தயைச் செய்து சுட்டிக் காட்டவும்.

பி.கு 1 : கலைமாமணி கேரக்டர் ஆயில்ஸை மனதில் கொண்டு எழுதப்படவில்லை.

Monday, March 23, 2009

ஓ..பேபி..பேபி!!

ஒரு சின்ன பட்டியல் - தமிழ்நாட்டில் பொதுவாக சிறார்களுக்கு வைக்கப்படும் செல்லப் பெயர்கள்! செல்லப் பெயர்கள் சிறு வயதில் வைக்கப்பட்டு எவ்வளவு வளர்ந்தாலும் அதே பெயர்தான் நிலைத்துவிடுகிறது....சில சமயங்களில் அந்த பெயரோடு உறவுமுறையும் சேர்ந்துக் கொள்கிறது. உதா: என் தம்பி "குட்டி" பப்புவிற்கு "குட்டி மாமா"வானது போல!!

பேபி - இது நமது அம்மா காலத்துச் செல்லப் பெயர். எனது பல நண்பர்களுக்கு ”பேபி அத்தை”கள் இருந்தனர்.

பாப்பா - இது பேபியின் தமிழாக்கம். பெ. பாப்பா, சி. பாப்பா என்றும் மறுரூபம் எடுக்கும் வீட்டில் ஒரு பாப்பாவிற்கு மேல் இருந்தால்!!

பாப்பி/பாப்பு - இது பாப்பா எனும் செல்லப் பெயரின் சுருக்கமே என் நினைக்கிறேன். மேலும் பாப்பாவை விட இது கொஞம் ஃபேஷனாக இருக்கிறது!

குட்டி - இது இருபாலருக்குமானது. எனது தம்பியின் பெயரும் இதே..ஆனால் அவனது செல்லப்பெயர் குட்டிமணி, அதை சுருக்கியதால் குட்டி. ஆனால், சிறுவயதில் அக்கம்பக்கத்து வீடுகளில் குட்டி என்ற பெயரில் பல குட்டி பெண்களும், பையன்களும் இருந்தனர்.

புஜ்ஜி - கொஞ்சம் நாய்க்குட்டி பெயர் போல தோன்றும். ஆனால், இந்த பெயரில் எனது பள்ளி நண்பர்களுக்கு கஸின்ஸ் இருந்தனர்.

அம்மு - இதுவும் பரவலாக இருக்கும் செல்லப் பெயர். ஒரு காலத்தில் ஃபேஷனபிளாக இருந்திருக்க வேண்டும்!

தம்பி/தம்பா - இது உறவுமுறையை குறித்தாலும், அன்போடு அழைக்கப்படுவதால் செல்லப் பெயராக இருக்கிறது. செல்லம் அதிகமாக ஆகிவிட்டால் “தம்பா” என்று உருமாறும். தம்பிகளை ”தம்பா ” என்றழைக்கும் நண்பர்களை பார்த்திருக்கிறேன்.

பப்லு - இதுவும் சிறுவர்களுக்கானது. கொஞ்சம் குண்டாக இருப்பர்வளுக்கு பொருத்தமாயிருப்பதாகத் தோன்றும். (அந்தப் பெயரில் முதன்முதலாக பார்த்த சிறுவனின்
அபப்டியிருந்திருக்கலாமியிருக்கும்!!)

சின்னி - இது சிறுமிகளுக்கானது. கொஞ்சம் சுட்டித்தனம் இந்தப் பெயரில் ஒட்டிகொண்டிருப்பதுப் போல தோன்றும்! அழகாகவும் இருக்கிறது, நவீனமாகவும். இந்தப் பெயரில் ஒரு அக்காவைத் தெரியும் (குடும்ப நண்பர்)

பொம்மி - இதுவும் சிறுமிகளுக்கானது. பொம்மை போன்ற என்பது அர்த்தமாக இருக்கலாம்.


Guddi - இதுவும் பொம்மையையே குறிக்கும்..இந்தி வடிவம்! இந்தப் பெயரில் எங்களுக்கு விளையாட்டுத்தோழி இருந்தாள்.

சோட்டு - இது பையன்களுக்கானது என நினைக்கிறேன். நமது ”குட்டி”தான் இதன் அர்த்தம்!

ஆச்சி - இது பண்ருட்டி, சிதம்பரம் வட்டாரங்களில் சிறுமிகளுக்கான செல்லப் பெயர்!

ரிங்க்கு/டிங்க்கு - அர்த்தமிருக்கிறதாவெனத் தெரியவில்லை. ஆனால், பேஷனபிளாகத் தோற்றமளிக்கும்! சம்பக்/சந்தாமாமா போன்ற சிறார் இதழ்களில் கதாநாயக/நாயகிகளின் பெயராக பார்த்திருக்கிறேன்.


இவை தவிர கழுதை, எருமை என மிக மிக செல்லமாய் அழைக்கப் படும் பெயர்கள் கணக்கில் கொள்ளப் படவில்லை!! :-)

Thursday, March 19, 2009

பப்பு டைம்ஸ்!

Rant

ஆயா, நான் போய் சிடி பார்க்கப் போறேன், நீங்களும் வாங்க!

என்னால வர முடியாதுடா, நீ போய் பாரு.

நான் உங்களை தூக்கிட்டுப் போறேன்... ...laughes at her own joke!!தலைக்கனம்!?!

பப்பு ஒரு நீளமான துண்டை எடுத்து தலைமுடியாக்கினாள். வழக்கமாய் போடும் ஸ்ரன்ச்சி போரடித்ததோ என்னவோ, கிளிப் போடச் செய்தாள். அப்போதுதலையை மேலே தூக்கியபடி இருமுறை கேட்வாக்கியபின், என்னுடைய proud peacock-ற்கு கண்ணாடி பார்க்கும் ஆசை வந்துவிட்டது. அதே ஸ்டையிலில், தலையை மேலே தூக்கி, அடுத்த அறையில் சென்று பார்த்தாள். நானும் ஆயாவும் மட்டும்தான் இருந்தோம் அப்போது. அங்கிருந்து கேட்டாள்,

“என்னை யாரு வந்து தூக்கிக்கிட்டு போ(க)ப் போறது?”


”என்னை வந்துத் தூக்கிட்டுப் போ” என்னு சொல்றதுக்கு பதிலா!! :-) offer period முடியும் போது சொல்வார்களே..அதேபோல்!
Role play !?!

எங்க அம்மா, பெரிம்மாவையெல்லாம் அவளுடைய அம்மா என்றும் எனக்கு யாரையும் கொடுக்க மாட்டாளென்றும் கடைசியில் ”உனக்கு யாரு அம்மா?” என்று ஒரு கேள்வி கேட்பாள். நான் யாரை சொன்னாலும், “பெரிய ஆயா”, ”விழுப்புரம் ஆயா” என்று சொன்னாலும் அவர்களெல்லாம் அவளுடைய ப்ரெண்ட்ஸ். திரும்ப ”உனக்கு யாரு அம்மா?” என்ற கேள்வி! ஒருநாள், நீதான் எங்க அம்மா” என்றதும் ரொம்ப குஷி. அதிலிருந்து அவ்வப்போது அவள் என்னுடைய அம்மாவாகி விடுவாள்... சில சமயங்களில் அவளாகவே..அவளை பால் குடிக்கவைக்க வேண்டியிருக்கும் சமயங்களில் என்னால்!

Wednesday, March 18, 2009

பப்பு பாடும் பாட்டு!

damara.mp3


அவளது பள்ளியில் கற்றுத் தந்த பாடல்! mp3 வடிவில் தந்த கானாஸுக்கு நன்றிகள்!!

MISHA என்றொரு ரஷ்ய மாத இதழ்மிஷா - இந்த ஒரு வார்த்தை எனக்குள் கொண்டுவரும் உணர்வுகள்..நினைவுகள்..!!
அப்போது..(ஐந்தாம் வகுப்பு - எட்டாம் வகுப்பு)ஒவ்வொரு மாதத்தின் முதல் வாரமும் நான் எதிர்பார்த்து காத்திருப்பது இரண்டு விஷயங்களுக்காக! ஒன்று பேப்பர்கார அண்ணா கொண்டு வரும் கோகுலம் புத்தகம், இரண்டு தபால்காரர் கொண்டுவரும் மிஷா புத்தகம்! மிஷாவின் ஒவ்வொரு இதழும் ரத்தினம்...ஆனால், அது அப்போதுத் தெரியவில்லை! அதற்குள் அவ்வளவு செய்திகள், கதைகள், விஞ்ஞான செய்திகள், சிறுவர்களுக்கான ஆக்டிவிட்டீஸ், விதவிதமான புதிர்கள்..மிஷாவுக்கு இணை மிஷாதான்! இந்த மிஷா, ஒரு குட்டி கரடிபொம்மை. அது, அப்போது நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் சின்னம்..அதுவும் ரஷ்யாவில் நடைபெற்றது என்று நினைவு!

மிஷாவை நினைத்தவுடன் எழுவது அந்த புத்தகத்தின் வழுக்கும் பக்கங்களும், மென்மையான ஒரு புத்தம் புதிய புத்தகத்தின் வாசனையுமே! என் நினைவடுக்களில் இன்னமும் அந்த வாசனையை உணர்கிறேன். எனக்கு ரஷ்யக் கதைகள் பொதுவாக பிடிக்கும்..ரஷ்ய இலக்கியங்களும் நமது இலக்கியங்களுக்கும் நிறைய ஒற்றுமை இருப்பதாக எங்கோ படித்தேன்!
“செவ்வணக்கங்கள்”, போனி எம்-ன் “ரஸ்புடீன்”, அன்னா கரீனினா, கடைசி ஜார் மன்னன் சரணடைந்த அடர் சைபிரீயக் காடுகள், அந்தோன் சேகவ்-வின் கதைகள் முக்கியமாக பள்ளத்து முடுக்கில், பாலிசிக் பெத்புரூமஸ்(கதையில் வரும் சிறுவன்) சேர்த்து வைத்த ரூபிள்கள், செஸ்சில் பிரபலமாயிருந்த விளாடிமிர் (?) என்று என்று எனக்குள் எத்தனையோ ரஷ்யச் சின்னங்கள்தான்..எல்லாமே புத்தகங்கள் வாயிலாகத்தான்! புத்தகங்களும் வாசிப்பனுபமும் எவ்வளவு மகத்தான திறன் படைத்தவை!!

அல்டர்கோஸையும், ஹெர்குலிஸையும், யெலிராவையும், பூமி பற்றிய விஞ்ஞான தகவல்களையும் நான் அந்த வயதில் அறிந்துக் கொண்டது மிஷாவின்
வாயிலாகத்தான்! அதில் ஒரு பகுதி, சிறுவர்கள் வரைந்து அனுப்பும் ஓவியங்கள் பிரசுரிக்கப் படும். அதில் எப்போதாவது இந்தியாவிலிருந்து அதுவும் காஷ்மீர் அல்லது மும்பை அலல்து டெல்லியிலிருந்து யாரோ அனுப்பியிருப்பார்கள். அதைப் பார்த்ததும் ஏற்படுமே ஒரு மகிழ்ச்சி..:-) அவ்வளவு ஏன், பாகிஸ்தானிலிருந்து என்று இருந்தபோதும் கூட மகிழ்ச்சியடைந்திருக்கிறேன்..நம்ம பக்கத்து ஊரு டைப் சந்தோஷம்தான்! (oh, silly me!!)

இந்த இதழ்கள் எல்லாமே படித்தபின், பத்திரமாக சேகரிக்கப் பட்டவை. நான் ஒரு கலெக்டர்..எந்த நகருக்குமில்லை..:-)..அதாவது, எனது வழிகளில் கடந்துவரும் எதையுமே சேமிப்பவள். இதைத்தான் என்றில்லை..ஏதாவது ஒரு சிறு நினைவு அந்தப் பொருளோடு தொடர்பிருந்தால் போதும், எனது பீரோவின் ரகசிய அலமாரியில் அதற்கோர் இடமுண்டு! பல பதப்படுத்தப்பட்ட இலைகள், ஹிண்டுவிலிருந்து வெட்டப் பட்ட காகிதத்துண்டுகள், பத்தாம் வகுப்பு ப்ராக்ரஸ் கார்டு + ஹால் டிக்கட், வாழ்த்தட்டைகள், இப்படிப் பல..! அதேபோல், கோகுலம், ஹிந்துவின் யங் வேர்ல்ட் இதெல்லாம் ஒரு அட்டைப் பெட்டியில். பெரியவர்களுக்கான ரீடர்ஸ் டைஜஸ்ட், விஸ்டம் (இது எங்களுக்காக வாங்கியது..;-)..ஆனால் நாங்கள் அப்படி நினைப்பதில்லை) விமன்ஸ் எரா இதெல்லாம் தனித்தனி அட்டைப் பெட்டிகளில்! அப்படித்தான் நான்கு வருடங்களுக்கு மேலாக வாங்கிய மிஷாவில் மூன்று வருடங்கள் + ஒரு வருடத்தில் சில இதழ்கள் மட்டும் !! பெரியவர்களுக்கான புத்தகங்கள் இப்போது இல்லை!! :-(


மிஷா புத்தகங்கள் பப்புக்கு இந்த வயதில் ஏற்றவை அல்ல! அவளாகவே படிக்க ஆரம்பித்த பின்னர் தான் இதன் அருமைத் தெரியும் என எண்ணுகிறேன்..ஆனால், அந்த குணாதிசயம் எனது சரித்திரத்தில் இல்லை..அதாவது எங்கள் வீட்டுப் பெரியவர்கள் ட்ரெஷர் செய்ததை நான் மதித்தது இல்லை..அது அவர்கள் செண்டிமென்ட். அவர்களுக்கு முக்கியம்...எனக்கல்ல என்பது போல! ;-). எனக்கு மிஷா-வைப் போல் பப்புவிற்கு டோரா போல இருக்கிறது,இப்போது!! (Both are Mascots too!)


USSR பிரிந்தபின் மிஷா வருவது நின்று போயிற்று. எவ்வளவோ சொன்னாலும், மிஷாவைப் பற்றியும் அதனுடன் எனது பிணைப்புகளையும் இன்னும் முழுதாக சொல்லவில்லை என்ற உணர்வுதான் ஏற்படும்.அதனால், முடிவாக, USSR -ரையும் மிஷாவையும் அவர்கள் என்னிடமிருந்துப் பிரித்திருக்கலாம், அதன் பின் பல காரணிகளிலிருக்கலாம்..ஆனால், எனக்குள்ளிருந்து மிஷாவையோ, USSR-யோ ஒருபோதும் பிரித்துவிட முடியாது, எந்தவொரு காரணியாலும்!!

Misha, I love you!


பிகு
இது கடந்த வருடத்தில் எழுதியது...தீபாவின் மிஷா பதிவைப் பார்த்ததும் நினைவுக்கு வந்தது. அப்போது ஏற்கெனவே என் சிறு வயது புத்தகங்களைக் குறித்து எழுதியிருந்ததால், இதை வெளியிடாமல் வைத்திருந்தேன்! நன்றி தீபா, நினைவூட்டியமைக்கு!

Monday, March 16, 2009

Euphoria - Dhoom pichak தூம்

euphoria. எனக்கு மிகவும் பிடித்த பத்துப் இந்தி பாப் பாடல்களை தெரிந்தெடுக்கச் சொன்னால், அதில் euphoria band-ன் பாடல்களுக்கு முக்கிய இடம் உண்டு. ராக்-கை இந்தி பாப் உலகிற்கு அறிமுகப் படுத்தியது இவர்கள் என்றேக் கூறலாம், அதுவும் எல்லோரும் விரும்பும் வகையில். எலக்ட்ரிக் கிட்டார், மற்றும் இந்திய இசை வாத்தியங்களான டோலக், தபலா வை சரியான பதத்தில் கலந்து மனம் மயக்கும் இசை ஆல்பங்கள்! ஐந்து ஆல்பங்களில் மூன்று என்னை கவர்ந்தவை. சில ஆல்பங்களில் ஒரு பாடலோ அல்லது இரண்டோதான் தேறும்..ஆனால், euphoria-வின் ஆல்பங்களில் ஒரு பாட்டுக் கூட சோடை போகாது!

Palash Sen. ரசிக பெருமக்களால் Polly என்று செல்லமாக அழைக்கப் படுபவர். இவர்தான் லீட் பாடகர். மருத்துவம் இவரது தொழில். இப்போதும் ப்ராக்டீஸ் செய்கிறாரா தெரியவில்லை. எனக்குப் பிடித்த பாடல்கள் Dhoom Pichak Dhoom,Maeri,Mehfuz, Phir Dhoom, Mantra மற்றும் Aana Tu Meri Gully in that order! இந்த எல்லாப் பாடல்களுமே ஏதோவொரு விதத்தில் எனக்குள் மாறாத இடத்தை பெற்றவை! பல்வேறு நினைவுகள்...சில பாடல்கள் இடங்களோடு தொடர்புடைய நினைவுகள்..பல மனிதர்களோடு தொடர்புள்ள நினைவுகள்..அல்லது நிகழ்வுகளோடு தொடர்புடைய நினைவுகள்..ஓ..பதின்ம கால நினைவுகள்!!


Dhoom Pichak Dhoom

இந்தப் பாடலை எப்போதும் கேட்பதைவிட என்றாவதுக் கேட்டால் கூட போதும், புத்துணர்ச்சி பெறுவதற்கு! இதில் இருக்கும் ஒருவித வாண்டர்னெஸ்...எனது விட்டேற்றியான கல்லூரிப் பயணங்கள் முடிவில்லாமல் தொடர்ந்தால் என்ன என்று பலமுறை நான் கற்பனை செய்திருக்கிறேன்...This song has a special place in my heart! வீடியோவும் பார்க்க நன்றாயிருக்கும்!Maaeri

பாடல் வரிகளுக்காகவே பிடித்தது, காதல் தோல்விகள் எதுவும் எனக்கு இல்லாவிட்டாலும்!!
Polly பாடும் விதத்துக்காகவும், ரயில் எனக்குப் பிடித்த நாஸ்டால்ஜிக் வாகனமாக இருந்ததாலும்,கடந்துப் போன காதலை நினைத்து பாடலில் உருகுவதாலும்...எல்லாவற்றுக்கு மேலாக அவரது காதலி திரும்பி வந்துவிட வேண்டுமென்று நினைப்பதாலும்...

Duniya Parayi chod ke aaja..
Jhoote saare riste tod ke aaja..
Sau rabdi tujhe ek baari aaja..
Ab ke mile toh honge na judaa......Na judaa

(பாடல்கள் : thanks to youtube!)
இவர்களுக்கு இணையத்தளம் http://www.dhoom.com .

Sunday, March 15, 2009

ரோஜாக் கூட்டத்தோடு ஒரு மணிநேரம்!!

அலுவலகத்தில் அதுவும் கேபினுக்கு பக்கத்தில் அல்லது ஒரு ஜன்னல் வழியே நமது பெற்றோர் எட்டி நம்மை, நாம் வேலை செய்துக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? சிலர் விருப்பபடலாம், ஒரு சிலர் விருப்பபடாமலும் ஏன் அபப்டி ஒரு எண்ணத்தையே வெறுக்கலாம். அது நாம் எந்தப் பக்கத்திலிருக்கிறோமென்பதையும் பொறுத்திருக்கிறது...;-). By this time, you would have got the idea. ஆமாம், என்னை அப்படி என் பெற்றோர் பார்க்க(கண்காணிக்க!?!) விரும்பியிருந்தால் அவ்வளவுதான்..உண்டு இல்லையென்றுச் செய்திருப்பேன்.(அதுக்கெல்லாம் சேர்த்து வைச்சுதான் பழிவாங்கிட்டாங்களே..ஒரே ஸ்கூல்!!)ஆனால், பப்புவை,அவளது பள்ளி நேரத்தில் பார்க்க மிகுந்த ஆவலோடு கிளம்பினேன்!

அன்று பப்பு பள்ளியில் observation day. 9.30 AM to 10.30 AM. உள்ளே சென்றதும் என் கண்கள் பப்புவைத் தேடின. “குறிஞ்சி மலரோட மம்மி ” என்று ஒரு குட்டிப்பெண் பக்கத்து குட்டிப் பெண்ணிடம் சொன்னதைக் கேட்டேன்.huh..என்ன ஒரு அறிமுகம்!! ஆனால், அந்த சுட்டிகளை யாரென்று எனக்குத்தான் தெரியவில்லை. வாட் அ ஷேம்!! காலையின் வாகனத்தில் ஏற்றும் போது பார்த்திருப்பார்களாயிருக்கும். எனக்கும் பெயர் தெரிந்திருக்கலாம்!! but it was a good feeling, you know!

எல்லோரும் சீருடையில், அவரவர்களின் பாயில் அமர்ந்திருந்தார்கள். ஹா..இதோ பப்பு, என்னைப் பார்த்து ஒரு ஆச்சரியம், ஒரு வெட்கப் புன்னகை! அவளது இடத்திலிருந்து மூன்றாவது இடத்தில் நான். ஏதோ செய்துக் கொண்டிருந்தாள், கலர் பாக்ஸ் என்று நினைக்கிறேன். அதைச் செய்து முடித்துவிட்டு, பெட்டியில் போட்டு அதன் இடத்தில் வைக்கச் சென்றாள். என்னிடம் வந்து “நீ ஆபிஸ் போகல?” என்றாள். போகணூம் பப்பு, உன்னைப் பார்க்க வந்தேன்! என்றேன்.

வேறு ஏதோ எடுத்து வந்து செய்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு எதிரில் வெண்மதி. இரட்டைக் குடுமி போட்ட ஒரு குட்டிப் பெண். பப்பு வீட்டில் எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பது இவளைப் பற்றிதான். என்னால், அவளை மட்டுமே அடையாளம் காண முடிந்தது. பப்பு திரும்ப அடுத்தப் பொருளை எடுக்கச் சென்றபோது, “நீ ஆபிஸ் போ மாட்டே?' என்றாள்! அவ்வ்வ்வ்வ்! ”போவேன் பப்பு” என்றேன்!she has got my genes! (hostel-ல் என்னை யாரும் பார்க்க வந்தால் சுத்தமாக பிடிக்காது. நீங்க என்ன எடுத்துக்கிட்டு வரணும்னு நினைக்கறீங்களோ, அதை எனக்கு கூரியர் பண்ணிடுங்க, பார்க்கணும்னா நாந்தான் வருவேன். யாரும் என்னைப் பார்க்க வரக்கூடாது..அப்படின்னு கண்டிஷன்லாம் போட்டேன். என்ன சொல்லி என்ன, அதையெல்லாம் கேட்கல..ஆனா, வர்ற frequency மட்டும் குறைஞ்சது!)

எடுத்து வந்ததை செய்தபின் , பாயை சுருட்டி ஒரு டப்பாவில் வைக்கவேண்டும். அந்த டப்பா எனக்குப் பின்னால் இருந்தது. பாயை வைத்துவிட்டு, என்னருகில் வந்து, ”ஏன் என்னையே பார்த்துக்கிட்டு இருக்கே? என் ஃப்ரெண்ட்சை பாரு” என்றாள். (அடுத்த பல்ப்!) பிறகு அவர்களையும் பார்க்கத் தொடங்கினேன். மெதுவாக ஆயாம்மாவிடம் பேச்சுக் கொடுத்ததில் தண்ணொளியையும், தனுஷையும் அறிந்துக் கொண்டேன்.

பப்பு பொருட்கள் எடுக்க/வைக்க செல்லும்போது குதித்துக் கொண்டும், பாடிக் கொண்டும் செல்வதைக் கவனித்தேன். (எப்போதும் அப்படியா, அல்லது நானிருப்பதாலாவென்றுத் தெரியவில்லை.) ஒன்று மட்டும் என்னை ஆறுதல் படுத்தியது, பப்பு அவளது இடத்தில்
தன்னை பொருத்திக் கொண்டிருக்கிறாள். எதைச் செய்யவும் பயப்படவோ கலங்கவோ இல்லை. மேலும் ஷீ இச் மெத்தாடிக்கல். ( இ-திருஷ்டி பொட்டு!)

பள்ளியிலேயே சொல்லிவிட்டாலும் பப்புவின் ஆண்ட்டிக்கும் மாண்ட்டிசோரி அம்மையாருக்கும் நன்றி!

பப்புவின் ரெண்டு பைசா - பிட்டுக்குப் ஃபோட்டோ!

இந்தக் கறுப்பு-வெள்ளை ஓக்கேவா?!வரிக்குதிரை படத்தை தந்த இணையத்துக்கு நன்றி. நடுவில் கோடுகள் போட்டது பப்பு.

Wednesday, March 11, 2009

Introspection

mine first

"உங்க பொண்ணு, இன்னைக்கு, பிஸ்கட் கொண்டு வந்த பசங்ககிட்டே போய் பிஸ்கெட் கேக்கறாங்க” என்று உங்களிடம் சொல்லப்பட்டால் எப்படி உணர்வீர்கள்? உங்கள் மனதிற்குள் என்ன எண்ணங்கள் ஓடும்?

தொண்டைக்குள் ஒரு உருண்டை அடைத்திருப்பது போல..வயிற்றுக்குள் ஏதோ நெகிழ்வது போல!!

எல்லாவற்றுக்குமேல் you are helpless and its beyond your control!

அதற்காக, அவளுக்கு நாங்கள் பிஸ்கெட்டுகள் கொடுப்பதில்லை என்பது கிடையாது. அவளுக்காக அவளது விருப்பமான பிஸ்கெட்டுகள், எல்லா சுவைகளிலும் ஃப்ரிட்ஜ்-ல் இருக்கின்றன. மாலை தூங்கி எழுந்ததும் சாப்பிடுவது அவைகளைதான். ஆனால், ஒரு நொறுக்குத்தீனிப் போலத்தான் இதுவரை பழக்கியிருக்கிறோம்..ஒரு நேரத்து உணவைபோல அல்ல!

ஆனால், காலையில் உணவாக அதை எப்படிக் கொடுத்து விடுவது என்று, குட்டி குட்டி பூரிகள், சேமியா உப்புமா, பழங்கள், மற்றும் சப்பாத்தி.

அவளது சில பள்ளி நண்பர்கள் காலை உணவாக உலர் பழங்களையும், க்ரீம் பிஸ்கெட்டுகளையும் கொண்டு வருகிறார்கள். பப்பு மூலமாகவும், அந்த நண்பர்களின் தாய் மூலமாகவும் நான் அதை அறிவேன். ஏற்கெனவே நான் ஆண்ட்டியிடம் பேசியுள்ளதால், பப்பு கொண்டு செல்லும் உணவை உண்டு முடிக்கிறாளாவென கவனித்துக் கொள்வார். ஆனால், இதைப் போன்றதொரு சூழ்நிலையில், அவரும்தான் என்ன செய்வார்?!

க்ரீம் பிஸ்கெட்டுகள் பப்புவுக்கு பிடிக்காது, சிறிது நாட்கள் முன்பு வரை! உப்பு பிஸ்கெட்டுகளும், மாரி வகை பிஸ்கெட்டுகளும் விருப்பம். ஆனால், இப்போது க்ரீம் பிஸ்கெட்டுகள் மேல் விருப்பம்..இல்லை..அதிலிருக்கும் க்ரீம் மீது மட்டுமே! அதன்பின் அந்த பிஸ்கெட்டுகள் காகத்துக்கு! இவையெல்லாம் நொறுக்கு தீனியாக ஓக்கே..ஆனால் இதை ஒரு உணவாக கொடுத்து விட விருப்பம் இல்லை..


ஆனால் ஆயா சொன்னது,”குழந்தைங்க அப்படிதான், ஒன்னைப் பார்த்து இன்னொன்னு ஆசைப்படும்..”. yes, I know it is instantaneous! இப்போது உணவு டப்பாவில், காலை உணவோடு தினமும் இரண்டு பிஸ்கெட்டுகளும்.

(இதை எழுதி வைத்திருக்கும்போதுதான், லஞ்ச் க்ரூப்பில் இதைப் பற்றிப் பேச்சு வந்தது. பலருக்கும், பப்புவை விட பெரிய குட்டீஸ் இருக்கும் வீடுகளிலும் இதே போன்ற பிரச்சினைகள் இருப்பதை அறிந்தேன்! So, I am not alone ;-). )

Now Pappu's

எனக்கு முடி எவ்ளோ நீட்டா ஆகிடுச்சு, பாருங்க அம்மா!

(யெஸ், ஆச்சி என்றுக் கூப்பிடுவது மெதுவாக ஃபேடிங் அவே..”அம்மா” என்றழைக்கும் வழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக வருகிறது, நாங்கள் எதுவும் சொல்லாமலேயே!)

ம்ம்..நாளைக்குப் போய் வெட்டலாம் !

இல்ல, நான் காலையிலே கீரை சட்னி சாப்பிட்டேன் இல்ல, அதான் வளர்ந்துடுச்சு...

கீரை சட்னியா..ஓ..தொவையல், அது..(முடி வளரும் என்றுச் சொன்னப் பிறகுதான் சாப்பிட்டாள்)

ஆமா, நான் தொகையல் சாப்பிட்டேன். முடி நீளமா வளர்ந்துடுச்சு!

அட ஆமா!!!

Monday, March 09, 2009

pappu-doh - part II

part - I

இறுதிவடிவம்!
உருண்டைகளாக்கி, லேசாக தட்டி, ஓட்டையிட்டு, வண்ணங்கள் காய்ந்தபின் சணலிட்டு கட்டினோம். ஒன்றிரண்டை நான் செய்தபின், மீதியை அவளாக செய்ய விருப்பம் காட்டினாள். மூக்கு வைக்க முயற்சித்தோம்..ஆனால் வொர்கவுட் ஆகவில்லை...காய்ந்தபின் சரிவரவில்லை!பப்புவை என்கேஜ்-டா வைக்கவும், அவளுக்கு செய்வதை ரசித்து சந்தோஷமாகச் செய்ய வழக்கப்படுத்தவுமே...அதனால் பர்பெக்ஷனை எதிர்பார்ப்பதில்லை!

Saturday, March 07, 2009

Happy women's day!

சுதா அக்கா. பத்தாம் வகுப்பு. நன்றாகப் படிப்பார்கள். பார்ப்பவரை வசீகரிக்கும் அழகிய புன்னகை. மாநிறம். பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் எடுக்கலாம் என்று ஆசிரியர்களின் கருத்துக் கணிப்பின் அவர் பெயர் முதலில். (கண்டிப்பாக இவர் டீச்சர் பெண் இல்லை, எனது பழைய இடுகையோடு எதையும் அனுமானிக்க வேண்டாம்..;-)). ஒரு நாள், தலைவிரி கோலமாக, முகத்த்தில் எந்த திருத்தங்களோ(பொட்டு, பவுடர், மை மற்றும் பூ) இல்லாமல் பள்ளிக்கு வந்தார். நாங்கள் அப்போது ஏழாம் வகுப்பு.சுதா அக்கா தான் நன்றாக படிப்பவர்கள் எல்லோருக்கும் ரோல் மாடல் மாதிரி. அன்று எங்கள் வகுப்பு என்றில்லை..எல்லா வகுப்புகளிலும் பிரேயர் மற்றும் மதிய உணவு இடைவேளைகள் “ஏன் சுதா அக்கா இபப்டி வந்திருக்காங்க?” என்றே கேள்விகளாலும், அனுமானங்களினாலும் நிரம்பியிருந்தது.

“யாரோ அவங்களை ஃபாலோ பண்றாங்களாம்...” என்ற விடை எங்களனைவருக்கும் அன்று சாயங்காலத்திற்குள் கிடைத்தது.

பள்ளிக்கு வரும்போதும் போகும்போதும் பின் தொடர்ந்திருக்கிறார் யாரோ ஒருவர். ஆனால் எங்கள் பள்ளி மாணவர் கிடையாது. சுதா அக்காவை வழக்கம் போல பார்க்க இரண்டு வாரங்கள் ஆனது. அந்த வருட இறுதியில் அவர் மூன்று பாடங்களில் முதலிடம் பெற்றார், மொத்தமாக முதலிடம் பெறாவிட்டாலும்!

சுதாக்கா அப்படி செய்தது(அலங்கோலமாக வந்தது) சரியா தவறா என்பதே எனக்கும் ஞானசௌந்தரிக்கும் பட்டிமன்றமாக இருந்தது, நெடுநாட்கள் வரை!சவிதா அக்கா. ஒன்பதாம் வகுப்பு. சுதா அக்கா மாதிரியேதான் என்றாலும், இவர் டீச்சரின் பெண். அன்று காலையில் நான் சைக்கிள் நிறுத்தும்போது, சைக்கிள் ஸ்டாண்ட் முகப்பற்கு கொஞ்சம் தள்ளி ஒரு வித பதற்றத்தோடு நின்றுக் கொண்டிருந்தார்கள். புன்னகைத்துக் கொண்டோம்.

“டீச்சர் வந்துட்டாங்களா?” என்றார் என்னிடம். அதாவது என் பெரிம்மாவை.

”இன்னும் இல்லக்கா , வந்துக்கிட்டிருக்காங்க, என்றேன்.

ஆனாலும் ஏன் இங்கே நின்றுக் கொண்டு, முகம் வேறு சரியில்லை. ஆனால் அப்போதெல்லாம் விவரம் பத்தாது எனக்கு.

“ஏன்க்கா” என்றேன்.

“இல்ல, ஒருத்தன் அங்கே சைக்கிள் மேலே உட்கார்ந்திருக்கான் இல்ல, இன்னைக்கு காலைலேர்ந்து பின்னாடியே வந்துக்கிட்டிருக்கான் எங்கேபோனாலும். பயமாருக்கு”.

பள்ளி பிரேயருக்கான ஆயத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

”டெய்லி ஃபாலோ பண்ணுவான். நான் கண்டுக்கலை. இன்னைக்கு எங்க அம்மா ஊருக்கு போயிருக்காங்க, +2 போல இருக்கு அவன், அதான் “, என்றார்.

அதன்பின் நான் எதுவும் ஃபாலோஅப் செய்யவில்லை.


மேலே சொன்னவையெல்லாம், கொஞ்சம் பழைய மேட்டர். இது மிக சமீபத்தில் நடந்தது.ஒருவர் பாலோ செய்கிறார், நம்மை கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பது பதின்மம் தொடங்கும் வயதில் எவ்வளவு அச்சுறுத்தலையும் மன உளைச்சலையும் தருகிறது,
அதுவும் நாம் பார்க்கும் படி இருக்கிறோம் என்ற காரணத்திற்காக.இதில் அவர்களின் பங்கு ஒன்றுமேயில்லை, கொஞ்சம் கவரக் கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள், அவ்வளவுதான். அந்த பையனும் பதின்மத்தில் இருக்கலாம்.இன்ஃபாச்சுவேஷன் என்று யாரேனும் சொல்லலாம்.

சரி!ஆனால், செய்யாத ஒரு காரியத்திற்காக பயப்படவும், குற்றவுணர்வு கொள்ளவும் இந்த அக்காக்களுக்குச் சொல்லிக் கொடுத்தது யார்? சுதா அக்காவை, தான் என்றும் அழகில்லை என்று காண்பித்துக் கொள்ள,அந்த வயதில் தான் விரும்பும் அனைத்தையும் இழக்கச் செய்து, “நான் அழகா இருக்கறதுனாலே தான், நான் அப்படியில்லை” என்றுக் காட்டிக் கொள்ள செய்த உணர்வுக்குப் பெயர் என்ன?

சிநேகம்

என் உயிர்ப்பறவை
உந்தன் நிழல் தேடிப் போகும்
ஆசைகள் உறவுக்கூட்டினிலிட்ட
முட்டைகளாய்
நிச்சலனமாய் நிம்மதியாய் உறங்கும்!
எங்கோ தூரத்தில் கேட்ட
மணியோசையாய்...
தொலைவில் பெய்தமழையால்
மூக்கை நெருடும் மண்வாசனையாய்
மனம் பழைய நினைவுகளில் ரீங்கரிக்கும்...
உன்னைச் சந்திக்கும் காலம்
வருவதற்குள்
என் உயிர்ப்பறவை
முந்திக் கொண்ட காலனின்
அம்பினுள்!

(உபயம் : பள்ளிக்காலத்து நோட்டுபுக்)

Thursday, March 05, 2009

பிடித்தமானவர்கள் - பப்புவின் லிஸ்ட்!

நிலாவும் அம்மாவும் நெடுநாட்களுக்கு முன் பப்புவை ஒரு தொடர்பதிவு-க்கு அழைத்திருந்தார்கள்! பப்புவுக்கு பிடித்த நபர்கள் பற்றி!

பப்புவிற்கு எல்லாரையுமே பிடிக்கும்..அவளிடம் பேசுகிற, அவளைப் பார்த்துக் புன்னகைத்துக் கொண்டே எங்கள் தெருவைக் கடக்கும் நபர்கள், பலூன் விற்கும் ஆயா, தண்ணீர் கொண்டு வரும் அண்ணா என எல்லோரையுமே! மெத்தப் பிடித்தது, ஆயாக்களையும் தாத்தாவையும்! ஆனால் பப்புவுக்கு பிடித்த இன்னொரு பெரிய பட்டியலுண்டு!

சண்முகம் ஆயா - இவர் பப்புவை 4 மாதத்திலிருந்து 14 மாதங்கள் வரை பார்த்துக் கொண்டார்...இல்லை...வளர்த்தார் என்றே சொல்லலாம். கும்பகோணத்திலிருந்து வந்து எங்கள் வீட்டோடு தங்கியிருந்தார். "டாடா சொல்லு" என்று பப்புவிற்கு கையை பிடித்து ஆட்டுவார், நாங்கள் அலுவலகம் செல்லும்போது! அவரது பெண்ணிற்கு வேலைக் கிடைக்கவே சென்றுவிட்டார், பெண்ணின் திருமணம் முடிந்தபின் வருவதாகக் கூறி! போகும்முன் பப்புவின் ஃபோட்டோவை வாங்கிக்கொண்டார் ஞாபகமாக...:-)

குண்டு ஆயா - பக்கத்துத் தெருவிலிருந்து வந்தார். ஒரு மாதம் மட்டுமே இவரால் தாக்குப் பிடிக்க முடிந்தது..பப்பு ஓடியாட ஆரம்பித்திருந்ததால், அவளின் பின் செல்ல மிகவும் கஷ்டப்பட்டார். முடியாததினால், விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டார்.

செல்வி - I - பாண்டிச்சேரியிலிருந்து வந்தவர். வீட்டோடு தங்கியிருந்தார். அவரதுக் குடும்பசூழல் காரணமாக ஒரு மாதத்திலேயே விடைபெற்றுக் கொண்டார். ஆனால் பப்புவோடு ஓடியாடி விளையாடுவார்.

திருப்பத்தூர் ஆயா - இரண்டு மாதங்கள் வரை பப்புவை கவனித்துக் கொண்டார். பப்புவோடு சொப்பு வைத்து விளையாடுவார். பப்புவை வாக்கிங் அழைத்து செல்வார். தூக்கி வைத்துக் கொள்ள அலுத்துக் கொண்டதேயில்லை, முழங்கால் வலியிருந்தபோதும்!

செல்வி - II - ஏஜன்சி மூலமாக வந்தவர். ஒரு மாதம் மட்டுமே தாக்குப் பிடிக்க முடிந்தது, பப்பு இவரிடம் விளையாட மறுத்ததால்! பப்பு ஒருவரை மறுதலிப்பது இதுவே முதன்முறை!

ராணி - இவர் வரும் சமயம் பப்புவுக்கு தெரிந்திருந்தது, வருபவர்கள் அவளைக் கவனித்துக் கொள்ளத்தான் வருகிறார்களென்று. அதனால் அவளாகவே முதலில் போய் அவர்களிடம் பழக் முற்பட்டாள். இவரும் ஏஜென்சி மூலம் வந்தவர். பெரம்பூர். பதினொரு மாதங்கள் வரை வீட்டோடுத் தங்கி இருந்தார். பப்புவிற்கு சப்பாத்தி மேல் விருப்பம் ஏற்பட செய்தவர். பப்புவின் விளையாட்டு சாமான்களை வைத்து விதவிதமாக விளையாட்டுக் காட்டுவார். பத்திரமாகப் கவனித்துக் கொண்டார், பொறுமையோடும்! பப்பு இப்போதும் பப்பு இவரை சிலசமயங்களில் கேட்பாள்.இவர் விட்டுச் சென்றுவிட்ட பின்பும் பப்பு இவரை மறப்பதுக் கடினமாக இருந்தது!

தனம் - இவரும் ஏஜென்சி மூலம் வந்தவர். அரக்கோணம். வீட்டோடு தங்கியிருந்தார். பப்புவை சமாளிக்க கஷ்டப்பட்டார். இரண்டு மாதங்களில் விடைப் பெற்றுக் கொண்டார்.

சரளா - ஏஜென்சி மூலம் திருச்சியிலிருந்து வந்தவர். இவர் பப்புவோடு ஓடியாடி விளையாட அலுக்கவே மாட்டார். எப்படியாவது சாப்பிட வைத்துவிடுவார். பப்புவை யானையேற்றிக் கொண்டு வலம் வருவார். அவரதுக் குடும்பச் சூழல் காரணமாக மூன்று மாதங்களிலேயே விடைப் பெற்றுக் கொண்டார். பப்பு இன்றும் கூட இவரைக் கேட்பாள். பப்புவின் நினைவுகள் சில சமயம் இவரை சுற்றி ரீங்காரமிடுவதுண்டு.

இவர்களிருக்கும் வரையிலும், சென்றபின்னும் சிலரை இன்னும் நினைவில் கொண்டும்... பப்புவிற்கு, பிடித்தமானவர்களாகவே இருந்திருக்கிறார்கள் இவர்கள் ஏதாவதொரு வகையில். பப்புவைக் கவர்ந்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள், அவரவர் வழிகளில்!
கவலையின்றி நான் வேலையில் கவனம் செலுத்த உதவியிருக்கிறார்கள். சம்பளத்துக்காகத்தானென்றாலும், பாதுகாப்பாக பப்பு இருக்கிறாள் என்று என்னை உணர வைத்திருக்கிறார்கள். சிலசமயங்களில் பப்பு என்னை விடுத்து, அவர்களிடம் உணவருந்தப் பிரியப்பட்டிருக்கிறாள். அவர்களிடமிருந்து என்னிடம் வர மறுத்திருக்கிறாள்! அவர்கள் பிரிந்துச் சென்றபோது வருந்தியிருக்கிறாள்! பப்புவின் சின்னஞ்சிறு உலகம் இவர்களால் ஆனதுதான்!

அதற்காக, பிரச்சினைகள் இல்லாமலில்லை..there were so many problems..hiccups. (hmm..that deserves a seperate post). ஆனால், இப்படியொரு supporting system இருந்ததால்தான், நான் மற்ற ஆப்ஷன்களை(creche etc) பற்றி நினைக்க முடியாமலிருந்தது. we, as a family, salute these ladies who dare to come out of their family and served us.

இந்த தொடர்பதிவுக்கு நான் அழைப்பது, சசியையும் (பத்மாவிற்கு பிடித்தவர்களைப் பற்றியும்), வித்யாவையும்(ஜூனியருக்கு பிடித்தவர்கள் பற்றியும்)!

Wednesday, March 04, 2009

தவளைக் கனவுகள்!


(படம் - நன்றி கூகுள்!)
அழகழகான வண்ண வண்ன
உடைகளுண்டு
விளையாட தோட்டங்கள் - உண்டு
சூரியன் மறையும் அந்திசாயும்
நேரமுண்டு
தூக்கிப் போட்டுப் பிடிக்க
பந்துமுண்டு,
பந்து சென்று விழுந்த
கிணறுமுண்டு
கிணற்றடியில் தவளைகள்
தாவித்தாவி குதிக்கின்றன.
எல்லாமே இருந்தென்ன பயன்?
எப்போது பேசும் இந்த தவளை?


என்னடா ஆச்சு முல்லைக்கு யோசிக்க வேண்டாம்...நம்ம முத்துலெட்சுமி லேட்டஸ்ட் கவிதையை படிச்சேன்..அதான் இந்த எஃபெக்ட்! இதை எதிர் கவுஜன்னு சொல்லுவீங்களோ..காப்பிக் கவுஜன்னு சொல்லுவீங்களோ..இல்லை ப்ளேக்கரிஸக் கவுஜன்னு சொல்லுவீங்களோ எனக்குத் தெரியாது...ஆனா கவுஜ-தான்னு ஒப்புக்கணும்..ஓக்கே!! :-)

நன்றி டூ முத்து அனுமதி தந்ததற்கு!

pappu-doh!

எளிய அதேசமயம் fun-க்கு கொஞ்சமும் குறையாத, சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காத playdoh வெர்ஷன் இங்கே! ஏனோ ப்ளேடோ-வின் வாசனை சற்றும் எனக்குப் பிடிப்பதில்லை..நான்-டாக்ஸிக் என்றபோதிலும்...விளையாடி முடித்தபின்னும் கைகளில் அந்த வாசனை இருப்பதுப்போலவே ஒரு தோற்றம்..அதனால் சிறிது நாட்களாக பப்புவிற்கு ஃப்ளே-டோ கொடுப்பதில்லை..அதுதான் வேண்டுமெனக் கேட்டவளுக்கு மாவையும் தண்ணீரையும் கொடுத்து கலந்துக் கொள்ளச் செய்ததும்....அவளின் முக பாவனையைப் பாருங்கள்..lol! இயற்கை ப்ளே-டோவை வைத்து we made a wonderful caterpillar! அடுத்த பதிவுகளில்...

Monday, March 02, 2009

டீச்சர் பசங்களாகிப் போனதன் சோகங்கள்!!

டீச்சர் பசங்களா இருக்கறது கஷ்டம்..ஆனா அதைவிட கஷ்டம் அந்த டீச்சர் வேலை செய்ற பள்ளிக்கூடத்தில் படிக்கறதுதான்! மேலோட்டமா பார்த்தா நிறைய அட்வாண்ட்டேஜஸ் இருக்கற மாதிரி தெரியும்..ஆனா நல்லா கவனிச்சா,எவ்வளவு சோகம் இருக்குன்னு டீச்சர் பசங்களுக்குத்தான் தெரியும்......சிங்கை நாதனும், கேவிஆர்-க்கும் இதேதானான்னு சொல்லனும்!! :-))

1. நாம பள்ளிக்கூடத்திலே சேர்ந்து வகுப்புக்குப் போனதும், நமக்கேத் தெரியாம ரெண்டு குரூப் உருவாகிடும்.ஒன்னு டீச்சர் பசங்கன்னு நம்மகிட்டே பேசமாட்டாங்க, இன்னொரு க்ரூப், டீச்சர் ப்சங்கன்னு நம்மகிட்டே பேசுவாங்க! ஆனா இப்படிரெண்டு க்ருப்-கள் இருக்கறது நமக்கே தெரிஞ்சிருக்காது..நாம அதுக்கு எந்த விதத்திலேயும் காரணமில்லேன்னாலும்! ஆனா,காலப்போக்கில், ரெண்டு க்ரூப்-ல் இருக்கறவங்களும் இடமாறலாம், ஆனா அந்த க்ரூப்-கள் இருந்துக்கிட்டேதானிருக்கும்! நாம அந்த க்ரூப்-க்கு லீடரா மாறுவது அவரவர் திறமை/ஆர்வத்தைப் பொறுத்தது!

2. நம் செல்லப் பெயர்கள் almost எல்லா டீச்சர்களுக்கும் தெரிஞ்சிருக்கும்....அதுவும் சிலசமயம் நாm செய்த குறும்புத்தனங்கள், அசட்டுதனங்கள்-னுஎல்லா வரலாறும் பலருக்கு தெரிஞ்சிருக்க நிறைய வாய்ப்பு இருக்கு! சில டீச்சர்களால், நம்மைச் செல்லப் பெயரால கூப்பிடறதை மாத்திக்கமுடியாது..ஆனா இந்தப் பிரச்சினை மேல் வகுப்புகளுக்குச் செல்லச் செல்ல குறையலாம்!

3. நமக்கேத் தெரியாம நாம கவனிக்கப்பட்டுக்கொண்டேயிருப்போம்! (Ouch! How I hated that!!) கொஞ்ச நேரந்தானே..நிர்மலா கூப்பிட்டாளே, அவங்க வீட்டுக்குப் போய்ட்டு வரலாமேன்னு நினைச்சுடக் கூடாது....நாம திரும்ப கிளாஸுக்கு போறதுக்குள்ள,செய்தி பள்ளிக்குப் போய்டும்..அதேமாதிரி, நாம விடைத்தாள் வாங்கிட்டு வீட்டுக்குப் போறதுக்கு முன்னாடி நம்ம மார்க் விஷயங்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்திருக்கும்!!

4. நமக்கு நிறைய பேரைத் தெரியலேன்னாலும் நிறையப் பேருக்கு நம்மைத் தெரிஞ்சிருக்கும்! அதுதான் டேஞ்சரான மேட்டர்..அதே சமயம் ஜாலியாவும் இருக்கும்..நான் ராத்திரி ட்ரெயின்லே வந்தாலும் ஆட்டோ அண்ணாக்கள் நம்மைப் பார்த்ததும், பையை வாங்கிக்கிட்டு"டீச்சர் வீடுதானேம்மா"-ன்னு சொல்லிக்கிட்டே ஆட்டோவை ஸ்டார்ட் செய்வாங்க!

5. போட்டிகளிலே கலந்துக்கிட்டு பரிசு வாங்கிட்டோம்-னா டீச்சர் பசங்கன்னு கொடுத்துட்டாங்கன்னு சிலபேர் கிண்டல் செய்வாங்க....வேறயாரு..நம்ம கூட இருக்கறவங்க..இல்லன்னா போட்டியிலே கலந்துக்கிட்டவங்க! ஆனா அதையெல்லாம் தாண்டி நம் பெர்பாமன்ஸ் இருக்கணும்! அது ஒரு டென்ஷன்!! அதே சமயம், பப்ளிக் எக்சாம்-ன்னா எல்லாருக்கும் நம்ம மேல ஒரு எதிர்பார்ப்பு இருக்கு..அதுவும் ஒரு டென்ஷன்....

சமயத்துல காமெடியாவும் இருக்கும்..ஒன்பதாவது படிச்சுக்கிட்டிருக்கும்போது, வீட்டுக்கு வர்றவங்க, ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க கேள்வி கேட்பாங்க...

"என்னம்மா, எந்தக் கிளாஸ் படிக்கிறே?!"

நைன்த் அங்கிள்!

ஓ..நைன்த்தா..அடுத்த வருஷம் டென்த்தா?!

ஹிஹி..ஆமா அங்கிள்! (மனசுக்குள் பின்ன திரும்ப எய்த்தா படிப்பாங்க...grrrrrrr!!)

சரி,இவங்க தொல்லைத் எனக்கு மட்டும்தான் இப்படின்னு பார்த்தா, என் ப்ரெண்ட்ஸ் நிறைய பேருக்கு இந்த அனுபவம்!!நைந்த்-க்கு அப்புறம் டெந்த்தானே படிப்பாங்க!! அவ்வ்வ்வ்வ்வ்வ்!அது வந்து, பப்ளிக் எக்ஸாமாம்..அதனால அவங்க அப்படி ஒரு விழிப்புணர்வைத் நமக்குத் தர்றாங்களாம்..:-)ஆனா, +1 படிக்கும்போது இந்தக் கேள்விக்கெல்லாம் அசரவேயில்லையே நாங்கள்!!

இன்னும் நிறைய இருக்கு..சோகங்கள்....வேறு ஒரு நாளில் தொடர்கிறேன்! :-)