Friday, October 31, 2008

கொடுத்துத் தீரவில்லை முத்தம்..


அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்ட துணிகளில் அடியிருந்ததை இழுத்த போது, தென்பட்டது இது!
அவசரத்திற்கு, அல்லது உடனே பத்திரப்படுத்தப்படும்படியான பொருட்களை துணிகளில் அடியில் வைப்பது வழக்கம். இதுவும் அப்படி நான் பத்திரப்படுத்தியதுதான்!! இருவாரங்களுக்கு முன், கடுமையான தலைவலியென்று அலுவலகத்திலிருந்து வந்ததும் படுத்திருந்தேன். பாட்டியிடம் எப்போதும் க்ரோசின் ஸ்டாக் உண்டு. பப்பு பாட்டியிடம் சென்று, ஒரு அட்டையை வாங்கி வந்து, ஒரு மாத்திரையை பிரித்து எனக்கு எடுத்துக் கொடுத்தாள். வீட்டில் யார் மாத்திரை சாப்பிட்டாலும், அவர்கள் வாயில் மாத்திரையை கொடுப்பது பப்புவின் வழக்கம். அன்று எனக்கும் அப்படியே ஆயிற்று. மாத்திரை உட்கொண்ட உடனேயே,
"தலவலி சரியாய்டுச்சா?"என்று பப்பு.!!

"இல்ல பப்பு, இப்போதானே சாப்பிட்டிருக்கேன், தூங்கினாதான் சரியாகும்" - தூங்கவிட்டால் போதுமென்ற நிலையில் நான்.

"அப்போ, இதை மட்டும் சாப்பிடேன் " என்று கையில் இன்னொரு மாத்திரையை பிரித்துவிட்டாள்.

வேணாம், பப்பு ஒன்னுதான் சாப்பிடனும்!!

ப்ளீஸ், இது மட்டும் சாப்பிடேன் என்று கெஞ்சும் தொனியில்.

நான் ஒன்றும் பேசவில்லை.!!

"சரி, அப்போ இதுல பாதி மட்டும் சாப்பிடு, மீது ஆயா(வு)க்கு கொடுத்துடலாம் -"பப்பு.

ரெண்டுலாம் சாப்பிடக்கூடாது பப்பு, போய் ஆயாகிட்டே கொடுத்துட்டு வா!!

"இதை மட்டும் சாப்பிட்டுடேன்!! " - என்று சொல்லிக்கொண்டே இருந்தாள்.

சரி, இப்போதானே சாப்பிட்டேன், காலையில் எழுந்ததும் சாப்பிடறேன், கொடு என்று வாங்கி தலையணை அடியில் வாங்கி வைத்தேன். அதன்பிறகுதான் அவளது நச்சரிப்பு ஓய்ந்தது.

ஆனால், காலையில் எழுந்ததும், என் தலையணையின் அடியில் கைவிட்டு எடுத்து, "இப்போ சாப்பிடு" என்றபோதுதான், "எனக்கு சரியாய்டுச்சி" என்று சொல்லி வாங்கி பத்திரபடுத்தினேன்!! சாதாரண க்ரோசின் தானே என்று விட்டுவிட முடியாமல், அதன் மதிப்பு இப்போது மிகப் பெரிதாய் தோன்றியது எனக்கு...

Wednesday, October 29, 2008

நன்றிகள்


நினைவு வைத்திருந்து வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் பப்புவின் சார்பாக நன்றி!
அழகிய ஈ-கார்டு அனுப்பிய ராமலஷ்மி- க்கும், மொபைலில் அழைத்து வாழ்த்திய அமித்து அம்மாவுக்கும், பதிவில் வாழ்த்திய பூந்தளிர் தீஷூவிற்க்கும், அருமையான வாழ்த்துக்கள் அனுப்பிய வெயிலானுக்கும், தமிழ்ப் பிரியனுக்கும்,
மற்றும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றிகள் பல!

விலங்குகளின் டாக்டர் பவுடர்பில்!

இது சிறார்களுக்கான ரஷ்யக் கதை. பப்புவின் தற்போதைய பேவரிட். குழந்தைகளுக்கு சொல்வதற்கு, யாருக்கேனும் பயன்படலாமென்று பகிர்ந்துக்கொள்கிறேன்!!



டாக்டர் பௌடர்பில்,
உடல்நலமில்லையா, வயிற்றுவலியா..
அணுகிடுவீர் டாக்டர் பவுடர்பில்லை!!
எல்லா விலங்கினமும், பறவைகளும் ,
புழுக்களும் வண்டுகளும், ஓநாய்களும்
மாடுகளும்,ஆடுகளும் தேடி வருமே
அவரது கவனிப்புக்காக!!


தமிழ்படுத்தலாமென்று முயன்றது இது..அப்புறம் ஏன் ”படுத்தனும்”என்று கூகுளிட்ட போது கிடைத்தது கதை!!



கதை சொல்வதென்பது ஒரு கலை!! பப்புவுக்காக, ஒரு கதை சொல்லும் செஷனில் சேர்ந்திருக்கிறோம். வாரத்திற்கு ஒருமுறையென..மூன்று வாரங்களாகியிருக்கிறது.
ஜீவா ரகுநாத். ஒரு இண்டர்நேஷனல் ஸ்டோரி டெல்லர். இவரது புத்தகங்களை வாங்கியதன் மூலம் இவரைப் பற்றி அறிந்தேன்.நாம் ஒரு வாக்கியத்தில் சொல்வதை, நடித்துக் காட்டிவிடுகிறார். அவரது கதை சொல்ல ஆரம்பித்த வுடனே, முயல்கள் துள்ளி ஓடுகின்றன், தவளைகள் கத்துகின்றன், சைக்கிள் மணி ஒலிக்கின்றது, இளவரசன் குதிரையில் வருகிறான்..குழந்தைகள் குதூகலத்தில் துள்ளுகின்றனர். நமக்குமே ஆசை வருகிறது, அப்படி கதை சொல்ல!! :-)..




6 வயதினற்கு மேற்பட்டவருக்கு,
hansel & gretel-லில் நடத்துகிறார், இந்த நவம்பர் மாத வாரயிறுதிகளில்!!



ஜீவாவின் ஸ்பெஷாலிடி, அவர் சொல்லும் போது தம்மையும் மறந்து குழந்தைகள் அவரின் ஆக்‌ஷன்களை தம்மையறியாமல் செய்வதுதான்.

Tuesday, October 28, 2008

பிறந்த நாள் கலாட்டா!

பப்புவின் பிறந்தநாளுக்கான எங்களதுத் திட்டங்கள்,

1. ஒரு விளையாட்டு
2. இரு போட்டோ ஆல்பங்கள்
3. மூன்று கொண்டாட்டங்கள்

ஒரு விளையாட்டு:

பப்புவுக்காக நாங்கள் வாங்கிய பரிசினை சுவாரசியமாய் அவளிடம் கொடுக்க் நினைத்தோம்.அதனால், treasure hunt with two clues. இரண்டாவது துருப்புச் சீட்டு, பரிசுப் பொருளைக்கான இடத்தைக் குறிக்கும்.




பொம்மையின் கையில் இருக்கும் முதல் சீட்டினுள் சைக்கிளின் படம் இருக்கும். அவள் சைக்கிளிடம் செல்ல வேண்டும்.சைக்கிள் கூடையில் இருக்கும் சீட்டு, வீட்டினுள் இருக்கும் ஒரு அலமாரியின் படம் கொண்டிருக்கும்.அந்த அலமாரி அவளது விளையாட்டுப் பொருட்கள் வைக்குமிடம். (அந்த இடத்தை தேர்ந்தெடுக்கக் காரணம், she hardly uses that place! :-)))இதுதான் ப்ளான். நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியது! இன்னும் கொஞ்சம் எப்பெக்டிவ்வாகவும் இருந்திருக்கலாம். (so, i am reserving this game with more clues for next year too!)


லேண்ட்மார்க் கவரில் இருக்கும் இருக்கும் பரிசுபொருள், ஒரு ட்ரெயின் செட்! அவளுக்கு ட்ரெயின், மற்றும் கார் மீது எப்போதுமே ஒரு ஈர்ப்பு உண்டு.அந்த செட் அவளுக்கு பிடித்திருந்தது. பிற்காலத்தில் உண்மையை அவள் சொல்லக்கூடும் ;-)!! 28அம் தேதி அவளுக்கு பள்ளி இருந்ததாலும், ட்ரெய்னை செட் செய்து விளையாடுவாள் என்ற காரணத்தினாலும், birthday eve அன்று இந்த ஈவெண்ட் நடந்தது !!

இரண்டு ஆல்பங்கள்

”The terrific twos” - இதுதான் ஒரு ஆல்பத்தின் பெயர். கடந்து சென்ற இரண்டாம் வருடத்தில்/வயதில் அவள் செய்த ”எல்லா முதல்”கள்.. முதல் விசிட் டூ த ஜூ, தனியாய் விளையாடின முதல் சறுக்கல் etc! இந்த ஆல்பத்திற்கு இன்ஸிபிரேஷ்ன் நிலா பாப்பாவின் போட்டோஸ் தான்! நன்றி நிலா பாப்பாவிற்கும், போட்டோ டிப்ஸ் வழங்கிய நிலா அப்பாவிற்கும்! போட்டோக்கள் எடுத்ததென்னவோ, போட்டோக்ராபர்தான். ஆனால், www-வில் தேடி, எக்ஸ்க்ளூசிவ் குழந்தைகள் போட்டோஸ் தேடி, ஐடியா கொடுத்து, நன்றாக வந்திருக்கிறது ஆல்பம்!!
படங்கள் அடுத்த போஸ்டில்!!


இன்னொரு ஆல்பம், எல்லா உறவினர்களோடும் மற்றும் பிறந்தநாள் கொண்டாட்டங்களோடும்! படங்கள் எடுத்தாகிவிட்டது, album is under making now.


மூன்று கொண்டாட்டங்கள்

மூன்று வயது, மூன்றுக் கொண்டாட்டங்கள் என்றும் கொள்ளலாம்! (நான்கு வயது என்றால், நான்கு கொண்டாட்டங்கள் என்று அர்த்தம் அல்ல!! ஆயில்ஸ், உடனே தான் எத்தனை கொண்டாட வேண்டுமென்று கணக்குப் போடவேண்டாம்!)


ரோஷினி ஹோம் @ பள்ளிக்கரணை

ரோஷினி ஹோம், அவ்வப்போது/ இயலும்போது கம்பெனி மூலமாகவும், எங்கள் அலுவலகத்தின் பெண்கள் க்ரூப்பின் மூலமாகவும் உதவி வரும் ஒரு
குழந்தைகள் காப்பகம். நாற்பது சிறார்கள், தங்கி படித்து வருகிறார்கள்! 3 வயதிலிருந்து 18 வயது வரை! ஞாயிறுக்கிழமை செல்வதாக ஏற்பாடு!




ஞாயிறு மதியம் மூன்று மணிக்கு சென்றோம். வீட்டில் இரு டீச்சர்கள் இருக்கும்போது சிறார்களை எண்டெர்டெயின் செய்யும் கவலை விட்டது! பெரிம்மா, சிறார்களுக்கான் விளையாட்டுக்கள் (டீம் பில்டிங் மாதிரியான) நடத்த எல்லாரும் குதித்து விளையாட, கலகலப்பாய் இருந்தது ஹோம்! யாரும் தயக்கம் இல்லாமல் எங்களிடம் ஒட்டி கொண்டனர், விளையாட்டுக்கள், கைத்தட்டல்கள் என்று உற்சாகமாயிருந்தது! பப்புவிற்கு அவ்வளவாய் புரியாவிட்டாலும், எல்லாரும் ஓடும் போது ஓடிக்கொண்டிந்தாள்! பின்னர், அம்மா, சிறார்களுக்கான பாடல்கள் பாடி ஆக்ச்ஷனுடன் கற்றுத் தந்தார்! மிகவும் ஆர்வமாக கற்றுக் கொண்டனர்! அம்மா பாடல்கள் கற்றுக் கொடுக்கும்போது, உணவுப் பண்டங்களை அடுக்குவதில் இருந்த்தால், சரியான படம் இல்லை! :-(


விளையாட்டுகள் முடிந்து, "பாப்பா பேரு குறிஞ்சி மலர், நாளன்னிக்கு பாப்பாவுக்கு பர்த் டே, அதை உங்க கூட சேர்ந்து கொண்டாடலாம்னுதான் வந்திருக்கிறோம்-"என்று சொன்னபோது அனைவரும் ஹேப்பி பர்த் டே பாடினர்! நெகிழ்வாய் இருந்தது..பாடல் முடிந்தபோது ஒரு சிறுவன் "பாப்பாவுக்கு எத்தனை வயது?" என்று கேட்க "மூன்று" என்றதும்
மூன்று முறை கை தட்டினர்! ஏனோ கண்கள் பனித்தன!!

கப்கேக்குகளும், உருளைகிழங்கு சிப்ஸ் மற்றும் மாம்பழம், ஆரஞ்சு பழ ஸ்க்வாஷ்-ம் மெனு!அதன்பின், அவர்கள் ஒரு சிறு நாடகம் மற்றும் பிரமிடு, யோகா செய்துக் காட்டினர்! வாழ்த்திவிட்டு வீடு திரும்பினோம்! நிறைவாய் இருந்தது மனது, அதே சமயத்தில் பாரமாயும்!


பள்ளி :

28ஆம் தேதி பட்டுப் பாவாடையுடன் காலை பள்ளி! பப்பு பள்ளியில் நோ ஸ்வீட்ஸ், நோ சாக்லேட்ஸ்! ஏதாவது ஹெல்த்தியான உணவுப் பொருட்கள் மட்டும்!! ம்ம்..சீட்லெஸ் பேரீச்சம் பழம்! இதுவும் வித்தியாசமாகத்தான் இருந்தது! :-).


வீடு:



உறவினர்கள் சூழ, வெகு ஆவலாய் எதிர்ப்பார்க்கப் பட்ட டோரா கேக் வெட்டப்பட்டது!
வெட்டும் வரை அதை பாதுக்காப்பது பெருங்காரியமாய் இருந்தது. ஐ டோரா கண்ணு, டோரா வாய் என்று கையை விட்டு எடுக்கப் போய்...kids are always kids..:-)!
காம்பவுண்டில் இருக்கும் குழந்தைகள் அனைவரோடும் பட்டாசு வெடித்து, இப்படியாக முடிந்தது, மூன்றாம் பிறந்தநாள்!!


பப்பு,


உன் வருகைக்குப் பின் மிகவும் சுவாரசியமாய் இருக்கிறது எங்கள் வாழ்க்கை, முன்பை விடவும்! உன் சுட்டித்தனமான பேச்சுக்களாலும், செய்கைகளாலும், எங்களை வியப்பிலாழ்த்திக் கொண்டிருக்கிறாய் நீ! சில சமயங்களில் உன் “ஏன்” களாலும்!!

பப்பு, நீ மிகவும் அன்பானவள்..உன் வயதுக்கேயுரிய குறும்புகள் நிறைந்தவள்..ஆர்வம் படைத்தவள், இவை எல்லாவற்றினால் மட்டுமே நான் உன்னை நேசிக்கவில்லை, உண்மை என்னவெனில், இவற்றில் எதுவும் இல்லாமற் போனாலும் உன்னை நேசிப்பேன்!!

சில சமயங்களில் உன் வயதை மீறிய பொறுமையையும், வளர்ச்சியையும் உன்னிடம் நான் எதிர்பார்த்திருக்கிறேன்! மன்னித்து விடு!

வாழ்த்துக்கள், பப்பு, இன்னும் நிறைய குறும்புகளோடும், பள்ளியில் நிறைய நண்பர்களோடும் இந்த வருடம் உனக்கு எல்லா செல்வங்களையும் ஆரோக்கியத்தையும் கொண்டு வரட்டும்!

இனி வரும் வருடத்தில், ஒருவருக்கொருவர் இன்னும் கவனமாய் உற்றுக் கேட்டுக்கொள்வோம்..நீ என்ன சொல்ல வருகிறாய் என நானும், நான் சொல்ல வருவதை நீயும்..நிறைய விளையாடுவோம்...நிறையக் கற்றுக் கொள்வோம்!!


அம்மா!

Friday, October 24, 2008

அது ஒரு மழைக்காலம்

பல ஆண்டுகளுக்கு முன் ஆம்பூரில் ஒரு சிறுமி இருந்தாள். அவளுக்கு மழைக்காலங்கள் மிகவும் இஷ்டம்! மழை பெய்யும்போது ஜன்னல் கம்பிகளினூடாக மழையை ரசிப்பதும், மழைத் தூறலில் நனைவதும், மரங்களின் கிளைகளை அசைத்திழுத்து விட்டு வரும் சாரலில் நனைவதும் அவளின் மிக உன்னத மழைத் தருணங்கள்!
(படம் உதவி : கூகிள்)


காலையில் ஆரம்பிக்கும் மழை, இன்னைக்கு லீவுதான் என்றுத் தோன்றவைக்கும் மழை மிகச் சரியாய் ஒன்பது மணிக்கு நின்று போகும். மிகச் சோம்பலாய் அவள் சிறிய சிறிய மழைத் தேங்கல்களில் குதித்தும் ஓடியும் பள்ளிக்குச் செல்வாள் அவள்!திடீரென முளைத்த காளான்களும், மழைக்கு பூத்த லில்லி மலர்கள், மெதுவாய் நரும் நத்தைகளும் அவள் பள்ளிக்கு செல்லும் நேரத்தை தின்னும்!!

விடாது மழை பெய்தாலும் அடாது பள்ளிக்கு சென்றிருக்கிறாள்..அன்று பள்ளிக்கு விடுமுறை என்றறிய!! ஏனெனில் அவளது பெரிம்மாவும் அந்த பள்ளியில் ஆசிரியை! யார் போனாலும்
போகாவிட்டாலும் அவள் கிளம்பித்தானாக வேண்டும்! மொபைல் போன்களோ, மெயிலோ..இல்லாத இரண்டு போன்களுடன் இயங்கிய பள்ளி!! வீட்டுக்கு திரும்புவதில் அத்தனை மகிழ்ச்சி..படிக்கத்தான் அத்தனை கதைப்புத்தகங்களுண்டே அவளிடம்!! அதோடு சூடான பஜ்ஜிகளும், வெங்காய பக்கோடாக்களும் மாலைநேரங்களில் லெமன் டீயும்/இஞ்சி டீயும் மழையை வேடிக்கைப் பார்க்க பலகணியில் ஒரு சிறு இருக்கையும்!!

rainy days and mondays from Carpenters
நன்றி : esnips.com

Get this widget Track details eSnips Social DNA


பப்புவுக்கு இரண்டாவது நாளாக பள்ளி விடுமுறை, மழையின் நிமித்தம்!
நான் ஆபீஸ் செல்வதில் அவளுக்குத் துளியும் விருப்பமில்லை!!

Thursday, October 23, 2008

0..1..2..முத்தான மூன்றை நெருங்குகையில்!!



வரும் 28ஆம் தேதியிலிருந்து பப்பு மூன்றாம் வயதில் அடி எடுத்து வைக்கிறாள். நாட்கள் ஓடும் வேகத்தில், நினைவுகளை, நிகழ்வுகளை எண்ணிப் பார்க்க முடிவதில்லை.நேரம் இருக்கும்போதே, கடந்தகாலத்தை அசை போட எண்ணி பதிவைத் தொடங்குகிறேன் நான்!அடுத்த வாரம் இந்த நேரம் பப்பு,, நீ மூன்று வயதை எட்டியிருப்பாய்..

இந்த படத்தில் இருக்கும் பப்புவின் ஒவ்வொரு படமும் அவளது அந்தந்த அகவை நிறைவன்று எடுக்கப்பட்டது! கூட்டுப்புழுவிலிருந்து வண்ணத்துபூச்சியாக மாறுவதுப் போல், மொட்டிலிருந்து பூ மலர்வதுப் போல் என் பப்பு ஒவ்வொரு கட்டத்திலும்....

முதல் படம், பப்பு பிறந்த ஒரு சில கணங்களில் எடுக்கப் பட்டது. ஆனால் நான் பப்புவை பார்த்தது இரண்டாவது நாளில் தான்.மூன்று நாட்கள் வரை, தினமும் கொஞ்ச நேரம் எங்களிடம் காட்டிவிட்டு, இன்குபேட்டரில் வைத்து விடுவார்கள். என்னைத் தவிர எல்லாரும் அடிக்கடி போய் பார்த்து விட்டு வருவார்கள். இப்படி அமைதியாக தூங்கியது இந்த போட்டோவில் மட்டும்தான். ஒருவயது வரை தூங்கவும் இல்லை, தூங்கவிடவுமில்லை. :-). அந்தந்த கணங்களுக்கேயுரிய மகிழ்ச்சிகளை எங்களுக்குக் கொடுக்க தவறியதேயில்லை பப்பு!

இரண்டாவதாக இருக்கும் போட்டோ பப்புவின் ஒருவயது நிறைந்த போது எடுத்தது!
Just after the mottai! அந்த பிறந்தநாள் விழாவை பெரிதாக கொண்டாட வேண்டுமா என்று
நானும் பப்புவின் அப்பாவும் மிகவும் யோசித்தோம். அவளை சுற்றி நடப்பதை அவளால் புரிந்துக் கொள்ளமுடியாது, நிறைய புதிய முகங்கள்..எல்லாரும் அவளைக் தூக்க விரும்புவார்கள்..etc..etc!! மிகவும் தெரிந்த சுற்றத்தாருடன் மட்டும் அவளுக்கே அவளுக்கேயான ஸ்பெஷல் நேரமாக என்று!! ஆனால், பிறந்தநாளுக்கு முதல் நாளன்று ஜுரம் வந்து, பிறந்த நாளன்று காலையில் மருத்துவமனை செல்லும்படி ஆயிற்று.

மூன்றாவது படம், இரண்டாம் பிறந்தநாளன்று!! பப்பு, உனக்குத் தெரியுமா..உன் ஓவ்வொரு பிறந்த நாளன்றும் வானம் பூ மழை பொழிந்து உனை வாழ்த்தும்..வானவில் தோரணத்தோடு!
அன்றும் அப்படித்தான்! ஆனால் இந்த முறை ஜூரம் இல்லை...ஆனால் ஜலதோஷம் மட்டும்!!
உற்றத்தோடும், சுற்றத்தோடும் கழிந்தது உனது நாள்!

இதோ, இப்போது மூன்றாம் பிறந்தநாள்..அன்போடும், மனதில் ஏகப்பட்ட கனவுகளோடும் உனக்காக இன்னோரு ஸ்பெஷல் நாளை திட்டமிட்டிருக்கிறோம், நானும் உன் அப்பாவும்! இப்போது உனக்குத் தெரியும், பிறந்தநாள் எனது என்ன மற்றும் அதன் கொண்டாட்டங்கள்....பிறந்தநாள் நீ பிறந்ததானாலல்ல..ஆனால் எல்லாரும் உனக்கு 'ஹேப்பி பேத் டே தூ யூ" என்றும், "மெழுகோத்தி"யை ஊதவும்..மற்றும் கேக் கட் செய்வதுமென்று!!

இதோ, இப்போதும் உன் பிறந்தநாளையொட்டி உன் தோழி உரத்த தாளங்களோடு
வந்து விட்ட்டாள்..நகரெங்கும் தோரணம் கட்டியிருக்கிறது மழை! எங்களின் ஏற்பாடுகளை நீ
எஞ்சாய் செய்வாய் மற்றும் இந்த நாளின் நினைவுகள் என்றும் உன் மனதில் தங்கும் என்ற நம்பிக்கையுடன்...

மூன்று வயதான உன் அம்மா...
(அம்மாவாகி எனக்கும் மூன்று வயதுதானே!!)

Wednesday, October 22, 2008

கிளிக்கு ரெக்கை முளைச்சிடுச்சி?

பப்புவுக்கு ஓட்ஸ் மிகவும் பிடிக்கும்..சும்மா சாப்பிட! ஆனால் ஆயா அதை அனுமதிப்பதில்லை.
(அதுவும் அவளுக்குத் தெரியும்.) ஆயாவுக்கு கஞ்சி வைப்பதற்காக ஓட்ஸ் டப்பாவை திறந்தேன். என் பின்னாலேயே வந்த பப்பு, அதை எடுப்பதைப் பார்த்து,

ஓட்ஸ் வேணும், பௌல்ல போட்டுக் கொடு!

போட்டுக் கொடுத்தேன்!

ஹாலில், அவள் சாப்பிடுவதைப் பார்த்த ஆயா,

என்ன சாப்பிடறே? ஓட்ஸா?

ம்ம்..அம்மா என்னை கொஞ்சமா ஓட்ஸ் சாப்பிடுன்னு பௌல்ல போட்டுக் கொடுத்தாங்க!

மானுப்புலேஷன்?!

Monday, October 20, 2008

என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குறே?!



பேவரிட்ஸில் என்ன இருக்கு, இன்பாக்ஸில் என்ன இருக்குன்னெல்லாம் டேக் வந்துதுன்னா, ஆயில்ஸ் அவ்வளவுதான்!! :-))

நான் அழைக்க விரும்பும் பதிவர்கள்

கானாபிரபா
புதுகை அப்துல்லா
பூந்தளிர் தீஷூ
மாதினி

Friday, October 17, 2008

matrix ஞாபகம் இருக்கா? படம் இல்லீங்க...

பாடம்!!கண்டு பிடிங்க!


a h g

h b f

g f c




டெடிகேடட் டூ சின்ன பாண்டி, பெரிய பாண்டி!!

பி.கு: இது ரொம்ப பேமஸ்...எங்க ஸ்கூல்ல!!

Tuesday, October 14, 2008

சினிமா சினிமா.....என்னோட ரெண்டு பைசா!!

சினிமா பற்றி எங்கிட்டே கேட்டிருக்கிற ஆயில்ஸை நினைச்சா எனக்கு அழறதா, சிரிக்கறதான்னுக் கூட தெரியல..ஏன்னா எனக்கும் சினிமாவுக்குமான சம்பந்தம் அப்படி!
சினிமா/சினிமாப் பாடல்கள் பொதுவாக எங்கள் வீட்டில் தடா! அதுவும் தியேட்டருக்கு போவது பற்றி கேட்கவே வேண்டாம். ”அந்த மூனு மணிநேரத்தில நீ எவ்வளவோ செய்யலாம்(ம்ம்..என்னத்தை செஞ்சி,அதை விடுங்க,,வேற கதை!!),மரத்தை சுற்றி அவனுங்க
டூயட் பாடுறத பார்க்கணூமா” என்று எங்கள் வீட்டினரால் அது ஒரு நல்ல காரியமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இந்தக் கட்டுப்பாட்டினாலேயே,நான் ஹிந்திக்கு மாறினேன்..ஏன்னா, தமிழ் படம் பார்த்ததான திட்டுறாங்க, ஹிந்தின்னா விட்டுவாங்க..ஆனா இதைவிட மோசமா இருக்கும் அதில, ஆனா வீட்டுல இருக்கறவங்களுக்குப் மெயினா பாட்டிக்குப் புரியாதே!!இதுதான், நான் இந்திப் பாடல்களை/ஆல்பங்களை ரசிக்க முதல் காரணம். பள்ளி முடிக்கறவரைக்கும் அவங்கதான் என் எதிரி. ஆனா, இப்போதான், அதுவும் நான் ஒரு குழந்தையோட எதிர்காலத்துக்கு பொறுப்பாளின்னு ஆனதுக்கு அப்புறம்தான், அவங்க நிலைமை புரியுது!!

எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்

அதாவது எனக்கு ரொம்ப சின்ன வயதில..அநேகமா இரண்டு வயது இருக்கும்போது சகலகலா வல்லவன், தியேட்டரில் பார்த்ததாக என் பாட்டி சொல்கிறார்கள். ஏன்னா, அப்போ அந்த சினிமாவால எனக்கு எந்த பாதிப்பும் வரக் கூடிய பாதகம் இல்லைன்னு நினைச்சிருக்கலாம். அப்போ நாங்க ஆம்பூரில் ஐந்து குடித்தனக்காரர்கள் இருந்த வீட்டில் இருந்தோம்.அப்போ வேலைக்கு போகிறவர்களை அனுப்பிவிட்டு வீட்டிலிருக்கும் பெண்கள் எல்லாருமாக மாட்டினிக் காட்சிக்குக் கிளம்பிப் போயிருக்கிறார்கள்.

ஆனால் நினைவு தெரிந்து பார்த்த சினிமா என்றால், மை டியர் குட்டிச்சாத்தான் பார்த்தது, அதுவும் ஐஸ்கிரீம் மற்றும் பலூன் பிடிக்க கை நீட்டியது மங்கலாக நினவில் இருக்கிறது. அதிலும் முன்சீட்-டில் இருப்பவர்கள் பிடித்துவிட போகிறார்கள் என்று எண்ணியது அதைவிட நன்றாக நினைவிருக்கிறது.

அந்த வயதில் என்ன பீல் பண்ணினேன் என்றால், சொன்னால் சிரிப்பு வரும்..நேராகவே யாராவது வந்து பேசுவார்கள், அப்புறம் போய் வேறே ட்ரெஸ் செய்துக் கொண்டு வருவார்கள் என்றுதான் நீண்டநாள் நினைத்திருந்தேன். அதுவும், ஃப்ளாசஷ்பாக் வந்ததென்றால், அவர்கள் சின்ன வயதாயிருக்கையிலே எடுத்துவிடுவார்கள் போல என்றும் மனதிற்கும் எண்ணியிருக்கிறேன். ஆனால்,இதுவரை இந்த நினைவை என் கல்லூரி நண்பர்கள் தவிர வேறு யாரிடமும் பகிர்ந்தததில்லை. (இந்த மாதிரி மொக்கைத்தனமாக யோசிப்பதில் நான் கில்லாடியாக்கும்!!)

மை டியர்...க்கு அப்புறம் ஒரு ஆங்கில சினிமா..டாம் சாயர், ஹல்வா வாலா ஆகையா பாடல் வரும் இந்தி படம் இவை பார்த்து அடுத்ததாக நான் தியேட்டரில் பார்த்த படம்
அஞ்சலி!!அஞ்சலிக்கு அப்புறமா நான் தியேட்டரில் போய் பார்த்தது ஜூராசிக் பார்க்!! எவ்ளோ பெரிய கேப்!!இப்போது புரிந்திருக்குமே, எங்கள் வீட்டைப் பற்றி!!அதே தான்..சினிமா பார்த்து பசங்க கெட்டுப் போயிடுவாங்க என்ற மைண்ட் செட் உள்ள ஒரு நடுத்தரக் வர்க்க குடும்பம்!!

ஆனால் இதற்கு எல்லாம் சேர்த்து கல்லூரி காலத்தில் ஈடு கட்டிவிட்டேன்!! வாரத்துக் ரெண்டு சினிமா பார்த்து பார்த்து சினிமாவே பிடிக்காம போனது வேறு கதை!

கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

அஞ்சாதே! உறவினர்கள் யாராவது வந்தால் பப்புவை விட்டுவிட்டு முகிலுடன் சத்யம் தியேட்டரில் நைட் ஷோ!

ப்லாக் ரெவ்யூ பார்த்துவிட்டு அல்லது ஒரு சில இயக்குநர்களின் படம் என்றால் பார்க்கப் போவது என்றாகி விட்டது!பெரும்பாலும் லக்கியின் ரெவ்யூவிற்கு எங்கள் வீட்டில் மரியாதை உண்டு..ஆனால் இப்போதெல்லாம் லக்கி மொக்கைப் படங்களுக்கும் நல்ல கமெண்ட் கொடுத்துவிடுகிறார்! அஞ்சாதே பற்றி நல்லா எழுதுவாரென்று நினைத்தேன்,ஆனால் கிழிகிழியென்று கிழித்துவிட்டார்! :-).

கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

ம்ம்..டவுன்லோடு செய்து பார்த்த ஆண்பாவம். சிரிசிரியென்று சிரித்தேன். எந்த மாதிரியும் பொல்யூஷனும் (வன்முறை, வுமென் எக்ஸ்ப்ளாய்ட்டேஷனோ என்று பொருள் கொள்க!) இல்லாத படம். ஒரு சண்டைக் காட்சி வரும், அதுவும் சிரிப்பாகவே இருக்கும்!

மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?

பருத்திவீரன்! பார்த்து ரெண்டு மூன்று நாட்களுக்கு சரியாக தூக்கம் இல்லாமல், அமீருக்கு லெட்டர் எழுதப் போறேனென்று, முகிலிடம் புலம்ப வைத்தது.
மடிப்பாக்கம் வேலன்/வெற்றிவேலனோ என நினைக்கிறேன்! அப்புறம் ஒன்பது ரூபாய் நோட்டு, சொல்ல மறந்த கதை! தங்கரின் படங்கள் எதையும் மிஸ் பண்ணக் கூடாதென எண்ணியிருக்கிறேன்.

அப்புறம் நகைச்சுவைக்காக, தில்லுமுல்லு, சென்னை-28 என்னுடைய ஆல் டைம் ஃபேவரிட்.

உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-அரசியல் சம்பவம்?

ரஜினி மன்னிப்பு கேட்டது!!

தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

இப்போ ஆனந்த விகடனில் என்ன இருக்குன்னு நினைக்கறீங்க..சினிமா, சினிமா நடிக/நடிகையர் பற்றி செய்திகள்தானே! சினிமாவையே வேறு வடிவத்தில் பார்ப்பது
போல் இருக்கிறது சில நேரம்! எங்கள் வீட்டில் இருக்கும் பழைய ஆ.வி.யை கம்பேர் செய்யும்போத்யு இன்றைய ஆ.வியில் சினிமா தூக்கலாக இருப்பது உண்மை!!

தமிழ் சினிமா இசை?

இதுவும் நான் சினிமா பார்த்த கதைதான். அதாவது ஒன்று நினைவு தெரியாத வயதாயிருக்கையில் வாங்கிய கேசட்டுகள்/ஒலித்த பாடல்கள். அதுவும் உனக்கு நான், எனக்கு நீ என்று பாடல்கள் வந்தால் அது கட்.ஏதோ ஒளியும் ஒலியும் புண்ணியம் கட்டிக்கொண்டது!ஆனால், ஒருசில பாடல்கள் என் சித்தப்பா போட்டுக் கேட்பார் இது ஒரு பொன்மாலை பொழுது...மாதிரியான ஹிட்ஸ். ஆனால், வீட்டில் எனக்குத் தெரிந்து ஒலித்தவை போனி எம், அபா, எரப்ஷன், பீட்டில்ஸ் இன்னபிற. ஆனால், நான் வளர ஆரம்பித்த பின், எங்கள் வீட்டு பெரியவர்கள் சினிமா/பாட்டு பார்த்த/கேட்டது மில்லை விட்டதுமில்லை... :(..அதனால்தான் இப்போது ரேடியோஸ்பதியின் ஒரு பதிவினை விடுவதில்லை...ஆனால் வேலைக்கு வந்தபின்/திருமணத்திற்கு பின் கேட்பவை முழுவதும் இந்த ம்யூசிக் சானல்கள்தான்!

தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

இந்தியில் ப்ளாக், தாரே..! ஆங்கிலத்தில சவுண்ட் ஆஃப் ம்யூசிக், கான் வித் த விண்ட். சவுண்ட் ஆஃப் ம்யூசிக் எப்பவுமே பார்க்கப் பிடிக்கும்.
அப்புறம் ஷாருக்கின் படங்கள் in 90s!

தமிழ் சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

அப்படியெல்லாம் எதுவும் இல்லாம இருக்கறதே, தமிழ் சினிமா மேம்பட உதவும்!


தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இதுக்கு குசும்பனோட பதில்தான் ரொம்பப் பொருத்தம். ரொம்ப சிரிச்சேன், அதைப் படிச்சிட்டு!

அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாசாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

:-)). நான் 13 வருடங்களாக(என் பால்ய காலத்தை) வாழ்ந்த வாழ்வை எல்லாருமே வாழ்வீர்கள்! தமிழில் நிறைய இசை ஆல்பங்கள் வரலாமென எதிர்பார்க்கிறேன். ஆல்பத்தின் பாடல்களிலியே ஒரு சினிமாவை அடக்கிவிடலாம்!

அழைத்த ஆயில்ஸுக்கு நன்றி! நான் அழைக்கும் ஐந்து பேர்!!

அமிர்தவர்ஷினி அம்மா
தாமிரா
பிரேம்குமார்
சிநேகிதி
அமுதா

பள்ளிகள் : வேளச்சேரி & தாம்பரம்

வேளச்சேரி, தாம்பரம்,நங்கநல்லூர் பகுதிகளில் உள்ள ரெகுலர் பள்ளிகளின் எக்செல் ஷீட். பப்புவை பள்ளியில் சேர்க்கும் பொருட்டு தொகுத்தது. பிறருக்கும் உபயோகப்படலாமென பகிர்கிறேன்.!!


(படத்தின் மேல் க்ளிக்கினால் தெளிவாகத் தெரியும்.)

Monday, October 13, 2008

ஒரு குர(ற)ள் கொடுத்துக்கறோம்....

எழுத நிறைய இருந்தாலும் நேரம் இடங்கொடுக்காத்தால்.... இப்போதைக்கு சவுண்டு மட்டும்!!



Get this widget | Track details | eSnips Social DNA

Thursday, October 09, 2008

முரண்

போதும், வா..பைப்பை மூடிட்டு வா - ஆயா.

.....

பப்பு, ரொம்ப நேரம் தண்ணில விளையாடாதே..சீக்கிரம் வா..அம்மா திட்டுவாங்க!! - ஆயா


பி.கு. : ஆம்பூரில், பழைய வீட்டில் பாத்ரூமில் தொட்டியில் தண்ணீர் நிரம்பியிருக்கும். அந்த தண்ணீரில் கை விட்டு, முகத்தை கவிழ்த்துக் கொண்டு விளையாடுவது மிகவும் எனக்கு மிகவும் இஷ்டம். அப்படி நீண்ண்ண்ண்ண்ண்டட நேரம் விளையாடி ஒருநாள் என் பாட்டியிடம் நன்றாக அடிவாங்கியது இன்றுவரை நினைவிருக்கிறது.

தண்ணீரில் விளையாட நான் யாருக்கு பயந்தேனோ அதே பாட்டி, இப்போது எனக்குப் பயப்படுகிறார்கள்!!

மாண்டிசோரி புத்தகங்கள்

பரிந்துரைத்த பூந்தளிர் - தீஷூ அம்மாவுக்கு நன்றி.

தேவைப்படுவோருக்கு பயன் தரவும் ,புத்தகங்களின் பெயர்களை சேமிக்கவும் இந்தப் பதிவு..

1. Teaching Montessori in the home : the pre-school years by Elizabeth Hainstock.
2. How to raise an amazing child the Montessori Way by Tim Seldin
3. Teach me to do it myself: Montessori activities for you and your child by Maja Pitamic
4. Montessori play and learn: a parent's guide to purposeful play from two to six by Lesley Britton
5. Montessori today : a comprehensive approach to education from birth to adulthood by Paula Polk Lillard
6. Montessori and your child : A primer for Parents by Terry Malloy

Wednesday, October 08, 2008

ரவுண்ட் அப்

கடந்தவாரம் ஆம்பூருக்கு சென்றிருந்தோம். என் தம்பி விஐடி-யில் படித்து கொண்டிருந்ததால், தற்காலிகமாக வீட்டை காட்பாடியில் மாற்றியிருந்தோம்.இப்போது அவனது படிப்பு முடிந்துவிட்டதால், திரும்ப ஆம்பூருக்கு குடிவந்துவிட்டோம். பப்பு ஆம்பூருக்கு செல்வது இதுவே முதன்முறை. காட்பாடி ஆயா என்பது பப்பு என் பெரிம்மாவுக்கு வைத்திருக்கும் பெயர்.அவளது மொழியில் ஆம்பூர் இப்போது ”புது காட்பாடி”யாகிவிட்டிருக்கிறது. :-).

வீட்டினுள் நுழைந்தவுடன், மீன் தொட்டியை பார்த்த பப்பு உடனடியாக சொன்னாள்,

“இந்த மீன் தான் எங்க வீட்டுல இல்ல!!!

மை காட்!!

தூங்கும் சமயத்தில், “வீட்டுக்கு போலாம்,அம்மா!!”.

”இதானே பப்பு, வீடு. எங்க இருக்கோம், நாம? வீட்டுலதானே இருக்கோம்!!” - நான்.

இல்ல, நம்ம வீட்டுக்கு, பப்பி, ஆதில்லாம் இருப்பானே!!”

ம்ம்...how clear the message is!
எனது வீடு ( என்று நான் நினைத்துக் கொண்டிருப்பது) வேறு, பப்புவின் வீடு வேறு!!

நான் கவனித்ததில் இன்னொன்று, எந்த புதிய, அல்லது அவளைக் கவரக் கூடிய பொருளைப் பார்த்தாலும், “ஆயா, இது எனக்கா?” அல்லது “இது என்னுதா?” என்று கேட்பது.
ஆமாம், இது உன்னோடதுதான் என்று பதில் வரும்வரை அந்த கேள்வி ஓயாது!! :-)

சொத்துப் பிரிச்சிட்டோம்ல



பப்பு டாக்டராகவோ அல்லது ஏதாவது பெரிய ஆளாக வேண்டுமென்பதைவிட, ஒன்றே ஒன்று அவளுக்கு வர வேண்டுமென்று விரும்புவேன. அது, புத்தகங்கள் மேல் பிரியம். என்னிடம் நிறையக் கதைப்புத்தகங்கள் உண்டு. என் சிறுவயதிலிருந்து இன்றுவரை. அவையெல்லாமே பத்திரமாக பாதுகாக்கப் பட்டுவந்திருக்கின்றன. (கோகுலம்,பூந்தளிர்,
பாப்பா மஞ்சரி, அம்புலிமாமா, சம்பக் இவையெல்லாம் தெரிந்தவர்களுக்கு கொடுக்கப் பட்டுவிட்டன!!) யாருக்கும் கொடுக்கக் கூடாது என்று வீட்டில் சண்டைப்போட்டு, சிறுவயதுக் கதைப்புத்தகங்களை அட்டைபெட்டிகளில் பத்திரமாக பரணில் வைத்திருந்தேன். எடுத்து வைக்கும் போது எனது அடுத்த தலைமுறைக்கு வேண்டும் என்ற தொலைநோக்கு எல்லாம் கிடையாது. அவை என்னுடையவை. ஒருபோதும் அவற்றை இழக்க எனக்கு மனமில்லை. என்னைப் பொறுத்தவரை அவை எனது பழைய நண்பர்கள் மாதிரி .ஆனால், இன்று அவை பப்புவின்
உடமையாகிவிட்டன. அவற்றை அவளுக்கு கொடுத்தபோது, மகிழ்ச்சியே எனக்கு மேலோங்கியிருந்தது.



அதில் பெரும்பகுதி, ரஷ்ய, உலக நாடோடிக் கதைகள். ராதுகா பதிப்பகம் அல்லது நியு செஞ்சுரி பதிப்பகம்! இப்போதும் அவற்றை வெளியிடுகிறார்களா எனத் தெரியவில்லை!! மேலும், ஒரு தலையணை சைஸ் தேவதைக் கதைகள் புத்தகம் என்னிடம் ஊண்டு.அதைப் படிக்க பப்பு இன்னும் வளர வேண்டும். (அதுவரை, அது எனக்கு!! :-)))) ஏழுநிறப் பூ என்றொரு புத்தகம்.
என் ஆல் டைம் பேவரிட். அதில் வரும் பெண்ணான ஷேன்யாவின் பெயரையே பப்புவுக்கு
சூட்ட விரும்பினேன்!!

என்னுடைய ஃபேவரிட்டான, அந்தோன் சேகவின், பள்ளத்து முடுக்கில், அம்பையின் வீட்டின் மூலையில் ஒரு சமையலறை, அலெக்ஸ் ஹேலியின் ஏழு தலைமுறைகள் (The roots), குஷ்வந்த்சிங், ஆர்.கே.நாராயண் புத்தகங்களையும் எடுத்து வந்தேன். எல்லா விடுமுறைக் காலங்களில், அவை தவறாமல் படிக்கப் பட்டுவிடும். ஒருசில புத்தகங்களை திரும்ப திரும்ப படிப்பதில் ஒரு சுகம்!! ஏழு தலைமுறைகள், மனதை கனக்க வைக்கும் புத்தகம். கிண்ட்டாவும், கிஜ்ஜியும், கோழி ஜ்யார்ஜூம்...சிறுவயதிலிருந்து ஆப்பிரிக்கா மீது ஈர்ப்பு வர இப் புத்தகமும் ஒரு காரணமாக இருக்கலாம்!!

படிப்பதின் அலாதி சுகத்தை பப்புவுக்கு அறிமுகப் படுத்துவதே எனது நோக்கமாயிருந்தது. விளையாட்டுச் சாமாங்கள் வாங்கும்போதெல்லாம், கண்டிப்பாக புத்தகம் வாங்கும் வழக்கத்தை வைத்திருக்கிறேன். பல கிழிந்துவிட்டன. ஆனால், இப்போது அவளுக்கு புத்தகத்தை மதிக்கத் தெரிந்திருக்கிறது. கொண்டாடத் தெரிந்திருக்கிறது. வரும் கால எப்படியோ..ஆனால் இப்போது "வா அம்மா, படிக்கலாம்!" என்று அந்தப் பழையப் புத்தகங்களை வாரியணைத்தப்படி என்னை இழுததப்போது என் கண்களில் பனி படர்ந்ததை தவிர்க்கமுடியவில்லை!!

Sunday, October 05, 2008

முதல் டெர்ம்...

முடிந்தது வெற்றிகரமாக!!

(முதல் டெர்மின் கடைசி நாளன்று எடுத்தது )


தேர்வுகள் அல்லது முன்னேற்ற அட்டை (progress card!!) எதுவும் இல்லை..
ஆனால், பப்புவிடம் நான் பார்க்கும் சில மாற்றங்கள்..

1. பள்ளிக்கு செல்வதற்கு அழுவதில்லை. தயக்கம் காட்டுவது இல்லை. உடம்பு சரியில்லாத நாட்களில், அவளது வகுப்பறை வீட்டிற்கு வந்துவிடுகிறது. அவள், மோதி ஆண்ட்டி-யாகி விடுகிறாள்..எதிரில் பிள்ளைகள் அமர்ந்திருப்பதுப் போல் கற்பனையுடன்!! ”யெஸ் ஆண்ட்டி சொல்லு” என்பது முதல் பாடல்கள் கற்பித்து, “ஆகாஷ், ஏன் வெண்மதியை கிள்றே?” வரை!! மண்டே சின்ட்ரோம் சிலசமயங்களில் உண்டு, தட்ஸ் ஒக்கே!!


2.விளையாடி முடித்ததும் அவளது பாயை நான் மடிக்கும்போது உதவுகிறாள். பாயை சுருட்டி தூக்கமுடியாமல் தூக்கி கீழே விழுந்தாலும் (பாய்தான்!!)
எடுத்து ஓரமாக வைக்கிறாள்.

3. கை துடைக்கும் துண்டுகள் (நாப்கின்ஸ்), சிறிய துண்டுகளை மடித்து வைத்து விடுகிறாள். (இந்த கடமை உணர்ச்சிக்கு எல்லையில்லாமல் போய்கொண்டிருக்கிறது!உபயோகித்த துண்டுகளும் மடிக்கப் பட்டுவிடுகின்றன!!)

4.பட்டன்கள், சாக்ஸ்கள் அவளாகவே போட்டுக் கொள்கிறாள்.(ஆனால், உடை போட்டுக்கொள்ள மறுத்து ஆர்ப்பாட்டம் செய்யும் ஒருசிலதருணங்கள் விதிவிலக்கு!!) ட்ரேயில் 10 காகித தம்ளர்கள் வைத்து காபி குடிங்க என்று நீட்டுகிறாள்.

5.புத்தகங்கள் படித்தவுடன் அதற்குரிய இடத்தில் வைக்கப்ப்டுகின்றன ஒரு சில சமயங்களில்!!

7. எல்லாவற்றிற்கும் மேலாக, அவளாகவே கரண்டியினால் சாப்பிடுகிறாள்.இது, பள்ளி செல்லவாரம்பித்த ஒன்றிரண்டு வாரங்களிலிருந்து இந்தப் பழக்கத்தில் முன்னேற்றம்!!

மாண்டிசோரி அம்மையாருக்கும் அவளதுப் பள்ளிக்கும் நன்றிகள் பல!!

எனது சந்தேகங்களை தீர்த்து, சில விளக்கங்களையும் கொடுத்த புதுகைத் தென்றலுக்கும் நன்றிகள்!! அவரது மாண்டிசோரி பற்றிய பதிவுகள் எனக்கு உதவியாயிருந்தது!!