Wednesday, December 27, 2006

கனவே கலையாதே....

கனவு சொல்றதுங்கறது ஒரு கலை. அதை பொறுமையா கேக்கறதுங்கறதும் ஒரு கலை, ஏனோ அது நிறைய பேருக்கு கைவர மாட்டேங்குது! தான் கண்ட கனவை சொல்றதுல இருக்கற ஆர்வம், கேக்கறதுல இல்ல!

கனவுன்னா அப்துல் கலாம் சொல்றாரே அந்த கனவு இல்லீங்க..நாம தூங்கும்போது வருமே அது!

என் தோழி ஒருத்தி பாவம்..அவளுக்கு நிறைய கனவு வரும். ஆனா, அதை கேக்கறதுக்குதான் யாருமே இருக்கறதில்ல! காலேஜ் நாள்ல இருந்தே அவளுக்கு இது ஒரு பழக்கம். கனவை கண்ட உடனே அதாவது காலையிலேயே சொல்லிடனும் சுடச்சுட. அதுவும் பரீட்சை சமயத்தில எல்லை மீறி போய்டும். திடு திப்புனு எழுந்து உக்காந்துப்பா! என்னன்னு பார்த்தா, கனவாம். வேற வழி இல்லாம் நாங்களும் அந்த நேரத்தில அதை கேட்டுட்டு...எங்க தூங்கறது!!அவளோட மனக்குறைய போக்கத்தான் இந்த பதிவு!

என்ன கனவுன்னா பரீட்சைக்கு இவ கிளம்பி வரா. அதுவும் நேரம் வேற ஆகிடுது. இவளும் வேக வேகமா வந்து சேர்ந்துடுடறா! பார்த்தா, பெல் அடிச்சு, கேள்வித்தாள் கொடுத்துடறாங்க! அது மட்டும் இல்லாம, ஒரு மணி நேரம் லேட். அப்படியே வியர்த்து விறுவிறுத்து போய் நிக்கறா. அந்த நேரத்தில இவ முழிச்சுக்கறா!இதுதான் கனவு! இந்த கனவு ரொம்ப கடினமான பேப்பர் அன்னைக்குத்தான் வரும். என்ன கேக்க வரீங்க..இது எப்படி எங்களுக்கு தெரியும்ன்னா..ஏன்னா, இதே கனவு எல்லா செமஸ்ட்ருக்கும் எல்லா கடினமான் பேப்பருக்கும் வரும்! (ம்ம்..எல்லா பேப்பருமே கடினமான பேப்பர்தான்..அது தனி விஷயம்!!)

வேற வழி..நாங்க எல்லாரும் அதே கனவை எல்லா செமஸ்டருக்கும் கேக்க வேண்டி வரும்!இதுக்கூட பரவாயில்ல..இன்னொரு விஷயம் என்னன்னா, நிஜ வாழ்க்கையில் அவளுக்கு ஒரு பழக்கம்.அதாவது, அவ எதிர்பாராதது ஏதாவது நடந்துச்சுன்னா, அது கனவா இருக்க கூடாதான்னு நினைச்சிப்பாளாம்.அதே மாதிரி, கனவுலயும் நினைச்சுப்பாளாம்.இது எப்படி இருக்கு?

அந்தளவுக்கு கனவோட ஒன்றி போய்டறது...அதாவது பரவாயில்ல..அவ விளையாடற மாதிரி கனவு கண்டா, ஃபுட்பால் யாருன்னு நினைக்கறீங்க பக்கத்துல படுத்திருக்கறவங்கதான்! ஒருதடவை, டமால்ன்னு ஒரு சத்தம் , பார்த்தா கட்டில்ல இருந்து கீழே விழுந்து கிடக்கறா என்னன்னு கேட்டா, மலையில இருந்து ஓடி வந்து பள்ளத்துல விழற மாதிரி கனவாம்.

தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்ன்னு சொல்லுவாங்க இல்லையா!இதே பழக்கம் இப்பவும் தொடருது.இப்பவும்ன்னா கல்யாணத்துக்கு அப்புறமும்! இப்ப அம்மணிக்கு என்ன கவலைன்னா அவளோட கணவர் இவ சொல்லுற கனவையெல்லாம் ரசித்துக் கேக்கறதில்லையாம். .

ஏங்க, நான் பச்சைகலர் புடவை கட்டிக்கிட்டு போறேண்..காடு மாதிரி இருக்குது அந்த இடம். ஆனா அங்க ஒரு ஏரோப்பிளேன் மாதிரி ஒன்னு வருது.நான் அதுகிட்ட போய் என்னன்னு பார்க்கறேன். திடீருன்னு ஒரு சத்தம்.. இப்படின்னு அவ சொல்லறத கேக்க பொறுமை இல்லயாம்.

"ஏங்க, நேத்து எனக்கு வந்த கனவுல" ன்னு ஆரம்பிச்ச உடனே "இதோ..குளிச்சிட்டு வரேம்மா"ன்னு கிளம்பிடறாராம்.

அதனால, என்ன பக்க விளைவுன்னா, எனக்கு போன் பண்ணிடறாங்க மேடம். வேறேன்ன..நான்தான் கேக்க வேண்டியிருக்கு!

ம்ம்..நானுந்தான் எத்தனை நாள் பொறுமையா இருக்கறது!!
அதனால, ஒரு ஐடியாவை சொன்னேன்.அது இப்போ சரியா ஒர்க்-அவுட் ஆகிடுச்சாம்.. இப்போல்லாம், அவ வீட்டுக்காரர் ஒரு கனவு விடறதில்லையாம்!!

சாம்பிளுக்கு சில..

"நான் வேகமா சைக்கிள் ஓட்டிக்கிட்டு போறேன். அழுத்தி தான் மிதிக்கறேன். ஆனா, போன மாதிரியே தெரியல..அப்போ பார்த்தா நீங்க வந்துடறீங்க! என்னை பார்த்துட்டு சைக்கிள் சாவியோட பூட்டை திறக்கறீங்க..என்ன ஆச்சரியம்..சைக்கிள் ஓடுது! நான் போய்கிட்டே இருக்கும் போது பார்த்தா, ஒரு போலீஸ்காரர் வரார். என்கிட்ட வந்து, "லைசன்ஸ் இருக்கா"ன்னு கேக்கறார். நான் இல்லன்னு சொல்றேன். அப்போ நீங்க வந்துடறீங்க...அப்புறம்..

"ம்ம்..சொல்லு. நான் வந்து என்ன பண்றேன்?"

"இருங்க..மறந்துட்டேன்..ம்ம்."

"நல்லா யோசிம்மா! என்ன பண்றேன்?"

அடுத்த நாள்,

"நான் பிளேன்ல போய்கிட்டிருக்கேன். கீழே பார்த்துகிட்டே வரேன். மெட்றாஸ் மாதிரி இருக்கு. அட, நம்ம வீடு தெரியுதான்னு எட்டி பார்க்கறேன். நீங்க நிக்கறீங்க."

"ம்ம்..என்ன பண்றேன்..? நான் உன்னோட பிளேன்ல வரலியா?"

"ம்ம்..எனக்கு றெக்கை முளைக்கற மாதிரி இருக்கு. என் கைய பார்த்துக்கறேன்.."

"சொல்லு? வேற என்ன பண்றேன்?"

"கைய ஆட்டறீங்க..! ஏதோ சொல்ற மாதிரி இருக்கு!
அப்புறம், காலையும் பார்த்துக்கறேன்"

"என்ன சொன்னேன் நான்?"

மற்றொரு நாள்,

"மாடியில மொளகா காய வச்சிக்கிட்டிருக்கேன். அப்போ ஒரு காக்கா வந்து மொளகா கேக்குது! நான் ஆச்சரியமா பார்க்கறேன். கையில இருந்த மொளகாய கொடுக்க நினைக்கிறேன். உங்க குரல் கேட்குது!! "

"நானும் வரேனா?.."


கட்..கட்..கட்!!

இப்ப உங்களுக்கு நல்லா புரிஞ்சிருக்குமே..நான் என்ன ஐடியா கொடுத்திருப்பேன்னு!

எதிர்ல இருக்கறவங்களயும் கனவுவில சேர்த்துகிட்டா
அவங்களும் சுவாரசியமா கேப்பாங்க! சொல்லறது என்னமோ கனவுதானே!!

Saturday, December 23, 2006

கொல்" லுனு ஒரு காதல் - பாகம் 3

கொல்" லுனு ஒரு காதல் - பாகம் 1
கொல்" லுனு ஒரு காதல் - பாகம் 2


அது என்னன்னா...அந்த் ஜக்கம்மாவோட ஒரு நாள் கௌத்தமை எப்படியாவது மீட் செய்ய வைக்கிறது! உடனே, ஆர்குட்-ல போய் ஜக்கம்மாவை தேடறா.
பார்த்தா ஜக்கம்மா டுமீல்குப்பம்-ல வடை சுட்டு விக்கறா.
ஓவர் டூ குந்தவை.

குந்தவை : ஜக்கம்மா, நான் கௌத்தமோட மனைவி.
ஜக்கு : அது ஓன் தலையெழுத்து. வந்துட்ட..சொல்றதுக்கு!
குந்தவை : அப்படி சொல்லாதீங்க!
ஜக்கு : சரி, எருமை!
குந்தவை :வந்து
ஜக்கு: அப்போ கய்தே!!

சரி விடுங்க! நான் எதுக்கு உனங்களை பார்க்க வந்தேன்னா, கௌத்தமுக்கு ஒரு ஆசை!உங்க கூட ஒரே ஒரு நாள் அதே காண்டீன் - ல வடையும், டீயும் சாப்பிடனும்னு! ஏமாத்திடாதீங்க..ப்ளீஸ்!

சரி..வரேன். ஆனா ஒரு கண்டிஷன்!என்னன்னா, பில்லுக்கு நான் காசு குடுக்க மாட்டேன்.

கௌத்தம் வீடு!அழைப்பு மணி அடிக்கிறது. கதவை திறந்த கௌத்தம், அதிர்ச்சியில் !

ஐயயோ! இவ வந்துட்டாளா! பழைய பாக்கி 500யை கேப்பாளோ..கடங்காரி!!
அப்போ குந்தவை "கௌத்தம், நாந்தான் இவங்களை வர சொன்னேன். உன் டைரிய படிச்சு பார்த்தேன்.நீங்க உங்க இஷ்டபடி, வடை சாப்பிடுங்க! ஆனா, எனக்கு மீதி வைங்க!" ன்னு சொல்லிட்டு, ஸ்லோமோஷன்ல ஓடி போய்டறா!

ஜக்கு "என்னா கௌத்தம், இவ்ளோ டீசண்டா மாறீட்ட!சரி. வா நம்ம காலேஜுக்கு போய் அதே காண்டீந்ல வடை, சுடுதண்ணி ச்சீ..டீ சாபிடலாம்.நீ பாதி..நான் பாதி..இன்னா!!" னு சொல்றா!

ரெண்டு பேரும்,ஊசி போன வடைய பிச்சி பிச்சி, நூல் எடுத்து காத்தாடி விடுறாங்க!கொக்கு பற..பற..கொழி பற..பற!! ட்ண்ட்ண்டடாய்ங்!!

அப்படியே குந்தவைக்கு ஷாக்கடிச்ச மாதிரி இருந்தது!...இதுமாதிரில்லாம் நடந்துச்சின்னா!ஃபாஸ்ட் ஃபார்வார்டுல ஓடி வர்றா!

அங்க கௌத்தம், பொறுப்பா எல்லா பாட்டில்லயும் தண்ணி ஊத்தி ஃப்ரிட்ஜ்-ல வைக்கிறான்.

ஜக்கம்மா எங்க?
அவ போய்ட்டா! உனக்கு ஒரு ஆர்குட்-ல ஒரு ஸ்க்ராப் எழுதி வச்சிருக்கா!

ஓடி போய் அத படிக்கிறா குந்தவை!

அதுல,

நான் போறேன்! அவனுக்கு நான் சுடற வடைய விட நீ சுடற வடைதான் பிடிக்குது!அதனால, ஒரு வடைதான் நானும் அவனும் சாப்பிட்டோம்.
இனிமே உன் வடைல சாரி வாழ்க்கைல குறுக்கிட மாட்டேன்!
ஜக்கு!

இத படிச்சுட்டு, குந்தவை பெருமூச்சு விடறா!"அப்பாடி, நான் ஃப்ரிஜ்-ல வச்சிருந்த வடைமாவு அப்படியேதான் இருக்கு!எங்க, அதை எடுத்து காலி பண்ணிடுவீங்களோன்னு நினைச்சு பயந்துட்டேன்!"ன்னு மனசுகுள்ள நினைச்சுக்கிட்டு, கௌத்தமை பார்த்து சிரிக்கறா!!
================================================

Thursday, December 21, 2006

புஸ்வாணி ஹேர் ஆயில்

இப்போ எல்லாரும் "கொல்"லுனு ஒரு காதல் பார்த்துகிட்டிருக்கீங்க! இப்ப இடைவேளை! சின்ன விளம்பரம்..(இதுக்கும் அஸ்வினி ஹேர் ஆயிலுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல!!)


நான் கடந்த ஆறு வாரங்களா புஸ்வாணி ஹேர் ஆயில் தான் யூஸ் பண்றேன். அதுனால இப்ப எனக்கு முடி கொட்டற பிரச்சினை இல்ல. ஏன்னா, எல்லா முடியும் முதல் வாரத்திலயே கொட்டிடுச்சு. இப்ப சுத்தமா தலையில் முடி இல்ல! அதனால் முடி கொட்டற பிரச்சினையும் இல்ல! நான் விக் தான் வச்சிக்கிட்டு இருக்கேன். புஸ்வாணி ஹேர் ஆயிலுக்கு தேங்க்ஸ்!

'விக்'கிராணி
மொட்டைத் தெரு,
திருச்சி- 00

கொல்" லுனு ஒரு காதல் - பாகம் 2

கொல்" லுனு ஒரு காதல் - பாகம் 1

கௌத்தம் ப்ளேன் ஏறினவுடனே வீட்டுல ...
அம்மா..அம்மா..- என்னோட ஜக்கம்மா ஓடி வந்தா!
ஜக்கம்மா யாருன்னு சொல்லல இல்ல! அது எங்களோட பொண்ணு!3வது வருஷமா மூணாவது வகுப்புல ஃபெயில் ஆகிட்டு இருக்கா!

என்னடின்னு கேட்டா, அவங்க ஸ்கூல்ல ஒரு ப்ராஜக்ட் செய்ய சொல்லி இருக்காங்களாம்!

கௌத்தமுக்கு ஒரு பழக்கம், சின்ன வயசுலேர்ந்து! யார் நல்லா படிக்கறாங்களோ அவங்க நோட், ரெக்கார்ட்-ல்லாம்
திருடி வச்சிக்கறது. அது மாதிரி நிறைய டப்பா எங்க வீட்டுல இருக்கு!

"சரி..போய் நம்ம செக்யூரிட்டிய கூப்பிட்டுட்டு வா. உங்க அப்பா யாரோட அசைன்மெண்டையாவது திருடி வச்சிருப்பார். நான் தேடி தரேன்-ன்னு சொன்னேன்.
எப்படியாவது ஜக்கம்மா பாஸ் பண்ணனுமே!!

கடைசில ஒரு அட்டை பெட்டியத் தேடி கண்டுபிடிச்சோம்.அதுல பார்த்தா ஒரு ஹீல்ஸ் பிஞ்சி போன செருப்பு (ஹீல்ஸ் பிஞ்சி போற அள்வுக்கு யார்கிட்டயோ நல்லா அடி வாங்கியிருக்கான்!), கொஞ்சம் காஞ்சி போன மல்லிப் பூ, ஒரு ரிப்பன் இதுல்லாம் கிடந்தது. அதோட ஒரு டைரியும்!

அந்த டைரிய படிச்சு பார்த்தா தான் தெரியுது...கௌத்தம் ஒரு குட்டிச் சுவர்ன்னு! மாட்டினேடா..மவனே..நீ செத்த!

முதல் வருஷம்

ஃபெமினாவை பார்த்தேன். காலேஜ்ல அவ போற இடத்துகெல்லாம் நானும் போனேன். கடைசில் அவ எனக்கு கிடைக்கல. அவ தலயில வச்சிருந்த பூ தான் கிடைச்சுது!!

ஃபெமினா

நீ இல்லாம நான்
காத்து போன பலூனா!!

(கஷ்ட காலம்..இவனோட கவிதையெல்லாம் வேற நாம படிக்க வேண்டியிருக்கு!!)

இரண்டாம் வருஷம்

ஒரு ஃப்ரெஷ் ரோஜாவா எங்க காலேஜ்ல வந்து சேர்ந்தா சோனியா! இப்ப என் கண்ணு எல்லாம் அவ மேலதான்!
அவ முன்னாடி நான் ஹீரோவா தெரிய ஆசைப் பட்டேன்.
(அடப்பாவி, இப்படில்லாம் நினைக்க உனக்கு ரொம்ப தன்னம்பிக்கை வேணும்டான்னு நான் நினைச்சுகிட்டேன்!)
ப்ரோப்போஸ் பண்ணேன். அவ செருப்ப எடுத்து அடில ஹீல்ஸ் பிஞ்சிடுச்சு!


சோனியா..
நீ என் இதயத்தில்
வந்து
போனியா!!
- ன்னு ஒரு கவிதை வேற!

மூன்றாம் வருஷம்

இப்போ எனக்கு ஒரு டஜன் அரியர்ஸ் வேற சேர்ந்து போச்சு!

ஜக்கம்மா

(ஓ..உங்க பாட்டி பேருனு சொன்னியே குழந்தைக்கு பேர் வைக்கும்போது ..உன் லவ்வர் பேரா அது!! இருடா இரு!!)

இவதான் என் கனவுகன்னி! என் தேவதை. இவளைதான் நான் இப்போ லவ் பண்றேன். அவளும் என்னை! ரெண்டு பேரும் க்ளாஸுக்கே போகாம எப்பவும் கேண்டீன்ல தான் இருப்போம். நாங்க காசு கொடுக்காம சாப்பிட்டதால கடன் தொல்லை அதிகமாய்டுச்சு! அதுக்கு பயந்து நான் காலேஜ்க்கு வராம இருந்தேன். அதுக்குள்ள 'ஜக்கு' வேற காலேஜ்க்கு போய்ட்டா!

ஜக்கு...

ஜாங்கு ஜக்கு
ஜஜக்கு ஜக்கு...
ஜாங்கு ஜக்கு ...ஜா....ஆ..ஆ!!

(அடப்பாவி தலைவர் பாட்ட சுட்டு உன் கவிதைன்னு வேற சொல்றியா!!)

இதைப் படிச்சுட்டு குந்தவைக்கு ஒரே ஃபீலிங்ஸ் ஆகிடுது. தனியா போய் சுவத்தில முட்டிகிட்டு அழறா! என் கௌத்தம்க்குள்ள இப்படி ஒரு சோகமா...ன்னு நினைக்கற அவ ஒரு முடிவு செய்றா..! அது என்னன்னா...??

Wednesday, December 20, 2006

"கொல்" லுனு ஒரு காதல் - பாகம் 1

என் பேரு குந்தவை. எனக்கு ரெண்டு ஃப்ரெண்ட்ஸ்!
அவங்க பேரு நிற்பவை மற்றும் நடப்பவை. எங்க ஸ்கூல்ல படிக்கறத தவிர மீதியெல்லாம் சொல்லி கொடுப்பாங்க! வாழ்க்கைல எங்க மூணு பேரோட லட்சியமே கல்யாணம் பண்ணி செட்டில் ஆகறதுதான். அதுவும் திருட்டு கல்யாணம்! ஸ்கூலுக்கு போறதுகூட சைட் அடிக்கறதுக்குத்தான்! ஆனாலும் யாரும் மாட்டற மாதிரி தெரியல. ஆனா நாங்க யாரும் மனம் தளராம எல்லாரயும் மடக்க பார்த்தோம். அதுல நிற்பவையும் நடப்பவையும் பாஸ் ஆகிட்டாங்க! அவங்க ரெண்டு பேரும்
அவங்களுக்கு ஏத்த மாதிரி ஒரு ஃபிகர கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க! நான் கொஞ்சமும் மனம் தளராம +12 வை 4வது தடவையா எழுதினேன். பாஸ் மட்டும் கடைசி வரை பண்ணல! அது கதைக்கும் தேவையில்ல!!

அந்த நேரத்தில தான், இந்த கௌத்தம் மாட்டுனான். சரி, நமக்கு இந்த தகர டப்பா மூஞ்சி போதும்னு கழுத்த நீட்டுனேன்!

5 வருடங்களுக்குப் பின்

கௌத்தம் ஒரு சைக்கிள் கம்பெனியில வேல பார்க்குறான்.
அப்போ ஒரு மீட்டிங்! திடீர்னு கௌத்தம் எழுந்து பேசறான்.

"சார், நான் என்ன சொல்றேன்னா இந்த மாடல் நம்ம ஊருக்கு ஒத்து வராது. ஹேண்டில் இல்லாத சைக்கிள் இங்க ஓட்ட லாயக்கில்லை! அதனால.. "

"நிறுத்து..நீ எதுவும் சொல்ல வேண்டாம்! நான் என் மாடல்ல ஜன்னல் வச்ச சைக்கிள் தான் ப்ரஸ்ண்ட் பண்ணுவேன். யு கெட் லாஸ்ட்! " - அப்படின்னு் அவங்க மேனேஜர் சொல்றார்.

கௌத்தம் வெளில வந்துடறான். அவன் மூளைய ரொம்ப கசக்கி ஒரு மாடல் கண்டுபிடிக்கறான். அதாவது, சைக்கிள்ல ஸ்டெப்னி மாட்டிக்கறது! அதுனால அவனுக்கு அமெரிக்கா போக ஒரு சான்ஸ் கிடைக்குது!

அவனும் அப்பாடா குந்தவைகிட்ட இருந்து தப்பிச்சோம்ன்னு ஓடி போய்டறான்.

தொடரும் ஆப்பு

கேஷா,கார்டா மேடம் ? - பொருட்களை எடுத்து பையில் வைத்தவாறே கேட்டார் கடைப்பணியாளர்.

அவள் பைக்குள் பர்ஸை தேடும்போது ஒரு டி.வி ரிமோட்டை பார்த்ததும்,

"மேடம்..நீங்கள் எப்போதும் டி.வி ரிமோட்டை கையோடு கொண்டு செல்வீர்களா?" என்றார்.

"இல்லை, என் கணவர் என்னொடு ஷாப்பிங் வர மறுத்தனால், என்ன செய்வது என்று யோசித்தேன். இதைக்கொண்டு வந்து விட்டேன்!!" - அவள்!

Tuesday, December 19, 2006

ஆப்பு - தொடர்கிறது!!

நேற்றைய மௌன போராட்டத்துக்குப் பின் அதே தம்பதியினர் நீண்ட பயணம் மேற்கொள்ளும் சூழ்நிலை.ஒரு வார்த்தை கூட பேசாமல் காரில் இருவரும்!

வழியில், கோவேறு கழுதைகள், ஆட்டு மந்தைகள் மற்றும் பன்றிக் கூட்டத்தை கடக்க நேர்ந்தது!

"உன் உறவினர்களோ? " - கிண்டல் தொனிக்கும் குரலில் கணவன்.

"ஆமாம், என் புகுந்த வீட்டுக்காரர்கள்" - அடுத்த நானோ செகண்டில் பதில் வந்தது!!

தூம் - 3 - முடியலப்பா..முடியல!!


எல்லாரும் சிவாஜி க்ளைமேக்ஸ்- புது ஸ்டைல் பார்த்து அசந்து போய் இருப்பிங்க!! நம்ம தூம்-3 பாருங்க!!

நெஞ்சே நெஞ்சே

சென்னை போகும் லால்பாக் ரயில் கிளம்ப இன்னும் அரை மணிநேரம் இருந்தது. ப்ரியங்கா ஒரு ஓப்பன் டிக்கட்டை கையில் வைத்து கொண்டு, குழப்பத்தோடு வந்துக் கொண்டிருக்கிறாள். மறு கையில் இருந்த ஹோல்டால் கனத்தது. மனம் அதனினும் மேலாக.

சரி, எஸ்-3 எண் கொண்ட பெட்டியில் ஏறிக்கொண்டாள். பெண் என்றால் பேயும் இரங்கும், டிடிஆர் இரங்காமலா போய் விடுவார்? அதுவும் தனியாக வரும் பெண் என்றால்
ஒரு டிக்கட் அட்ஜஸ்ட் செய்து கொடுத்துவிடுவார் என்று மனதில் நினைத்தவாறு ஒரு ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தாள். தள்ளுவண்டியில் வந்த லேஸ் சிப்ஸ் மற்றும் வாழைப்பழத்தை வாங்கியவள், கையோடு கொண்டு வந்திருந்த வுமன்ஸ் எராவை பிரித்து படிக்க முற்பட்டாள்.
ஆனால், அவள் மனமோ இரவு நடந்ததை நினைத்துக் கொண்டிருந்தது.

செந்தில் - ப்ரியங்கா திருமணம் நடைபெற்று மூன்று மாதங்களே ஆகி இருந்தது. செந்தில் ஒரு நல்ல கம்பெனியில் மென்பொருள் பொறியாளராக இருந்தான். கண்ணுக்கு இனியவன். தேனிலவு முடிந்து, வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருந்தது இருவருக்கும். அதுவும், செந்தில் வேலை செய்யும் பன்னாட்டு கம்பெனி வேலை பளு அதிகம். இரவு வீடு திரும்ப தாமதமாக ஆகும்.ஆனால், கடந்த மூன்று மாதங்களாகவே அது ஒரு நாள் போல தொடர்ந்து கொண்டிருந்தது.

ப்ரி-யும்,(செந்தில் அப்படித்தான் அவளை அழைப்பது வழக்கம்) கேட்காமலில்லை. பதில் என்னவோ,

"இன்னைக்கு ஸ்டேடஸ் மீட்டிங்டா" இல்லை "ரிலீஸ் இருக்கு" என்ற ரீதியில் இருக்கும். சில நேரங்களில், "கான்ப் கால் இருக்கு, வெய்ட் பண்ணாதே..சாப்பிட்டுடுமா" என்பான் தொலைபேசியில். காலை எட்டு மணிக்கு சென்றால், இரவு பதினொன்று இல்லை அதற்கு மேல்தான். சனிக்கிழமைகளிலும் செல்ல வேண்டி இருக்கும்.

என்ன வேலையோ என்று ப்ரிக்கு சில சமயங்களில் தோன்றும். அதுவும், மொழி தெரியாத, நண்பர்க்ளும் இல்லாத இந்த ஊரில் தனியாக மாட்டிக்கொண்டோமே என்று கழிவிரக்கம் அவள் மனதில். இவை எல்லாம் சேர்ந்து அவளை வாட்டியதில், பிரச்சினை நேற்று வெடித்து விட்டது.

கரம் பிடித்து கொஞ்சியவன், சினத்தைக் காட்டிவிட்டான்.
வார்த்தைகள் முற்றியது. கண்ணீர் மிஞ்சியது. இதோ இப்போது அவள் ரயிலில். அவள் பயணப்படுவது கூட அறியாமல் கணினி முன் அவன். இன்னும் இருபத்தியைந்து நிமிடங்கள் இருந்தன. "நான் போறேன். இப்போ ரயிலில் இருக்கேன். என் தொல்லை இல்லாமே, உங்க வேலையை கட்டிக்கிட்டு சந்தோஷமா இருங்க! " என்று குறுசெய்தி அனுப்பி விட்டு ஜன்னல் புறம் வேடிக்கை பார்க்க துவங்கினாள்.

அட..அங்கே வருவது யார் சுனந்தா போல் இருக்கிறதே!
அப்பா, ஒரு துணை கிடைத்து என மகிழ்ந்தவள், அவளை நோக்கி கையசைத்தாள். தோழிகள் இருவரும் அருகில் அமர்ந்து கொண்டனர்.

"ஹாய், எப்படி இருக்கே சுனி? யூ.எஸ்-ல இருந்து எப்ப வந்தே? எவ்ளோ நாள் ஆச்சு பார்த்து? "

"ஆமாப்பா!நான் வந்து ஒரு வருஷம் ஆகப்போகுது. நீ எப்படி இருக்கே? "

"நான் நல்லா இருக்கேன். அப்போ கல்யாணத்துக்கு வந்திருக்கலாமில்ல? எங்க உன் ஹப்பி?" - வினவினாள் ப்ரி.
"இல்ல ப்ரியா..நான் தனியா வந்துட்டேன். விவாகரத்துக்கு அப்ளை பண்ணியிருக்கேன்!"

"ஹேய்! என்ன சொல்ற? "

"ஆமாப்பா! அவன் கூட வாழ்ந்த ஒரு வருஷம்... ஊப்ஸ்!
அது ஒரு நைட் மேர்!! "

"ஓ..சாரி சுனி! அம்மா, அப்பால்லாம் எப்படி இருக்காங்க? "

"ம்ம்..ஓக்கே! "

அதற்குள், ரயில் புறப்படுவதற்க்கான அறிவிப்புகள்.
இன்னும் சில மணித்துளிகள்! திடீரென தன்னைத் தேடி செந்தில் இப்போது வந்தால் எப்படி இருக்கும் என அவள் மனம் நினைத்தது. ம்ம்..அவன் வரமாட்டான், வேலைதான் முக்கியம் அவனுக்கு என்றெண்ணியவள், சுனியை நோக்கி
பேச்சை தொடரலானாள்.

"இப்ப என்ன சுனி பண்ணிட்டிருக்கே?"

"நான் மெயின்ஃபிரெம்ஸ் கோர்ஸ் முடிச்சிட்டு, இப்ப வேலை தேடிக்கிட்டிருகேன். இப்பக்கூட இண்டர்வியூக்குதான் இங்க வந்தேன். அனேகமா இது கிடைச்சிடும்."

"ஓ! கங்கிராட்ஸ்யா! "

"தேங்க்ஸ் ப்ரியா! "

ரயில் ஓட தொடங்கியது. அவர்கள் பேச்சும்!

யாஹூக்கு ஃபுல்பார்ம் தெரியுமாடி ப்ரி உனக்கு?

தெரியலயே சுனி! இண்டர்வ்யூ-ல கேட்டாங்களா?

இல்ல சுனி, இது தெரியலன்னு என்னை ஒரு நாள் ராத்திரி முழுக்க வெளியில் நிக்க வைச்சாண்டி. குளிர்ல விறைச்சு போய்ட்டேண்டி!

"யாரு உன் ஹஸ்பெண்டா?!" - அதிர்ந்தாள் ப்ரி.

ஆமா! அதுமாதிரி நிறைய!! வீட்டுக்கு தெரிஞ்சா மனசு கஷ்டப்படுவாங்கன்னு ஆரம்பத்துல நான் யார்கிட்டயும் எதுவுமே சொல்லல!

ம்ம்..!

ஆனா, அவன் என்கிட்ட சின்சியரா இல்லன்னு என்க்கு ஒருநாள் தெரிய வந்தது! அப்பதான் எனக்கு வெறுத்துப் போச்சு!

அடப்பாவி!!

மனம் செந்திலை எடை போட்டது. அவளை ஒரு வார்த்தை கூட கடிந்து பேசியது இல்லை. வீட்டில் இருந்தால் வேலைகளில் உதவாமலில்லை. தான் தான் புரிந்துக் கொள்ளாமல் இருந்துவிட்டோமோ!

அவள் எண்ணத்தை கலைத்தது செல்லில் வந்திருந்த் குறுசெய்தி! அட..செந்தில்தான்!

"டியர், நான் எஸ்-9லில்..இதே ரயிலில் உன்னோட !! ! ம்ம்...என்ன பார்க்குறே என்னை விட்டு போக முடியுமா :-)?
ம்ம் எந்த பெட்டியில் இருக்கே..வந்திட்டேன்!!

அவன் அன்பை நினைத்து அவள் மனம் பூரித்தது!!

"சுனி, இதோ வந்திடறேன்"

அவசரமாக எழுந்து செல்லும் ப்ரியாவை ஒன்றும் அறியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் சுனி!

Monday, December 18, 2006

ஆப்பு!!

கனவனுக்கும் மனைவிக்கும் சண்டை. மௌன போராட்டம்...திடீரென்று கணவனுக்கு நியாபகம் வருகிறது அடுத்த நாள் காலை 5 மணிக்கு எழுந்து விமானம் பிடித்தாக வேண்டும்.

மனைவியை காலையில் எழுப்ப சொல்ல வேண்டிய கட்டாயம். தானே பேசினால் தோல்வியை ஒப்புக் கொண்டதாக ஆகிவிடும்.

என்ன செய்லாம் என யோசித்தவன், "காலை 5 மணிக்கு எழுப்பவும்" என்று எழுதி அவள் கண்படும் இடத்தில் வைத்தான்.

அடுத்த நாள் காலையில் விழித்தவன் மணியை பார்த்ததால் 9 மணி. கோபத்துடன், மனைவியை நோக்கி போனவனை ஈர்த்தது படுக்கையில் இருந்த காகிதம்!

அதில் எழுதியிருந்ததாவது " 5 மணி. விழித்து கொள்ளவும்"!!

Friday, December 15, 2006

இது கதை நேரம் - II

ஒரு ஊர்ல ஒரு பாட்டி இருந்தாங்க. அவங்க ஒரு மரத்துக் கீழே வடை சுட்டுகிட்டு இருந்தாங்களாம்.அந்த மரத்துல ஒரு காக்கா இருந்துச்சாம். அது பாட்டி ஏமாந்த நேரமா ஒரு வடைய எடுத்துகிட்டு பறந்து போய் ஒரு மரத்து மேலே உட்கார்ந்துகிச்சாம்.
அந்த வழியா வந்த நரி காக்கா கையிலே இருந்த வடைய பார்த்துட்டு, வடைய சாப்பிடறதுக்கு திட்டம் போட்டுச்சாம்.மெதுவா, காக்கா இருந்த கிளைக்கு கீழே போய். காக்கா பாப்பா காக்கா பாப்பா...நீ ஒரு பாட்டு பாடுன்னு சொல்லிச்சு. உடனே காக்காவும், வடையை கால்ல வச்சிக்கிட்டு கா..கா ன்னு கத்திச்சு..! காக்கா கத்தினா வடை கீழே விழுந்திடும்..நாம வடையை எடுத்துக்கலாமுன்னு நினைச்ச நரி ஏமாந்து காட்டுக்குள்ள ஓடி போச்சு.காக்காவும் வடைய ரசிச்சு சாப்பிட்டுச்சு!
கொஞ்ச நேரம் பறந்து விளையாடிச்சு காக்கா! வடை சாப்பிட்டுச்சு இல்லையா?அப்போ ஒரு வீட்டு பின்னாடி ஒரு ஜாடி இருந்தத பார்த்துச்சு. அதுக்கிட்ட போனாதான் தெரியுது...தண்ணி ரொம்ப கீழே இருக்குதுன்னு. அந்த புத்திசாலி காக்கா என்ன பண்ணுச்சு தெரியுமா.?


பக்கத்துல இருந்த குட்டி குட்டி கூழாங்கல்லை எல்லாம் எடுத் ஜாடியில போட்டுச்சு. கல்லு கிழே போனது தண்ணி மேல வந்துச்சு. அந்த தண்ணிய குடிச்ச காக்கா சந்தோஷமா பறந்து போச்சு!


அந்த ஏமாந்த நரி என்ன பண்ணுச்சு தெரியுமா...காட்டுக்குள்ள போகும்போது ஒரு திராட்சை தோட்டத்தை பார்த்துச்சு.சரி..வடைதான் கிடைக்கல..நாம திராட்சையாவது சாப்பிடலாமுன்னு அதுக்குள்ள போய் எட்டி எட்டி பார்த்துச்சு. ஆனா, திராட்சை பழம் எட்டல. உடனே நரி சீ..சீ..இந்த பழம் புளிக்கும்ன்னு சொல்லிட்டு ஓடி போய்டுச்சு!!


(எங்கோ படித்தது....மனதில் ஒட்டிக் கொண்டது!!!!)


Monday, December 11, 2006

அன்பிற்குமுண்டோ அடைக்கும் தாழ்....


கற்கள் நிறைந்த கரடுமுரடான சாலையில் ஒரு பஸ் கிராமத்தை நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. அதில் கண்பார்வை மங்கிய ஒரு கிழவர் கையில் புத்தம் புதிய மலர்க்கொத்துடன் அமர்ந்திருந்தார். ஜன்னலோரம் அமர்ந்திருந்த ஒரு பெண் கிழவனின் கையிலிருந்த மலர்களை திரும்பித் திரும்பி பார்த்துக்கொண்டிருந்தாள்.அவளால், மலர்கொத்திலிருந்து கண்களை அகற்ற முடியவில்லை! கிழவர் இறங்க வேண்டிய இடம் நெருங்கியது. மலர்க்கொத்தை அப்பெண்ணின் கைகளில் திணித்தவாறு கிழவர் சொன்னார், " உன் பார்வையிலிருந்து நீ மலர்களை எவ்வளவு நேசிக்கிறாய் என்பதை என்னால் அறிய முடிகிறது. நான் இதை உனக்கு கொடுத்தால் என் மனைவி ஆட்சேபிக்கமாட்டாள். உனக்கு கொடுப்பதையே அவளும் விரும்புவாள் !" அப்பெண்ணும் மலர்களை வருடியபடி ஜன்னல் வழியே நோக்கியபோது, அக்கிழவர் பஸ்சை விட்டிறங்கி சிறு கிராதிக் கதவினை கடந்து கல்லறையை நோக்கிச் சென்றுக்கொண்டிருந்தார்!!!

நினைவுகள் : யமுனை ஆற்றிலே...

1980களில் மிஷா என்று ஒரு சிறுவர் புத்தகம் ரஷ்யாவிலிருந்து வந்து கொண்டிருந்தது. அந்த புத்தகத்தை படிப்பதை விட அந்த புத்தக வாசனை எனக்கு மிகவும் பிடிதமானதாக இருந்தது! பனி என்பது என்பது கற்பனைக்கப்பாற்பட்டதாயிருந்த அந்த சிறுவயதில். மிஷாவின் மூலமாக பனிபொழிவினை தரிசிக்கமுடிந்தது. நிறைய

படக்கதைகளும், புதிர்களுமாக வண்ணமயமாய் அப்புத்தகம் காட்டியளிக்கும். அதன் மூலமாகத்தான் பென் ப்ரெண்ட்ஸ் என்னும் நட்பு முறை இருப்பதை அறிந்துக் கொண்டேன். அதில் பென் ப்ரெண்ட்ஸ் ஆக விருப்பப்படும் சிறுவ/சிறுமியரின் முகவரிகள், பன்னாட்டு ஸ்டாம்புகள் இருக்கும். அதோடு, இப்பொதைய சுட்டி விகடனில் வருவதைப் போல கைவண்ணப் பொருட்கள் செய்முறை விளக்கப்படம் கொடுக்கபட்டிருக்கும். வெட்டி, ஒட்டி செய்யும் விளையாட்டு பொருட்கள்..!! சனி, ஞாயிறுகளில் மிஷாவின் பிடியில் ஆட்பட்டிருப்பேன். winny the pooh, the scholl kid, Galileo created a perfect circle without a compass போன்றவை மிகவும் விரும்பி படிக்கப்படுபவை. கோகுலத்தின் 16 பக்க வண்ணப் படக்கதைகள், மற்றும் பூந்தளிரின் குரங்கு குசலா/ சுப்பையா படித்து கொண்டிருந்த எனக்கு இதை அறிமுகபடுத்தியது பெரிம்மாவின் கூட வேலை செய்யும் ஆசிரியையின் மகள். அதிலிருந்து படித்த ஒரு கதை இன்னும் என் நினைவில் இருக்கிறது...
அல்யோனா மிக அழகான பெண். நீண்ட கூந்தலையுடைவள். அதை பின்னி கொண்டு,
ஆற்ற்ஙகரையில் கட்டைகள் மீது அமர்ந்து தண்ணீரில் தெரியும் தன் பிம்பத்தை பார்த்துக் கொண்டிருப்பது அவளுக்கு மிகவும்
பிடித்த விஷயம். இதுதான் அவளது தினசரி வேலை. தன்னை விட யாரும் அழகில்லை என்பது அவளது எண்ணம்.

அவளது பக்கத்து வீட்டு சிறுமிகளோடு பேசி பழக மாட்டாள். அவளது பக்கத்து வீட்டு சிறுமி வர்வாரா.
அவளைக் கண்டால் அல்யோனாவுக்கு சுத்தமாக பிடிக்காது.

அம்மாவுக்கு உதவி செய்வது அவளுக்கு பிடிக்காத காரியம். வேலை செய்தால் தனது அழகு பாதிக்கப்படும் என்று வேலை எதுவும் செய்ய மாட்டாள். ஒரு நாள் அவளது அம்மாவுக்கு வேலை செய்ய முடியாமல் போய்விடும்.

அல்யோனாவோ அம்மாவுக்கு உதவி செய்யாமல் தனது அழகை பார்க்க ஆற்றங்கரைக்குப் போய்விடுவாள்.
பின்பு மதிய சாப்பாட்டுக்கு வீடு வருவாள். உணவு தயாராக இருக்கும்.

அல்யோனா எதைப்பற்றியும் கவலைப்படாமல், உணவு உட்கொள்வாள்.

பிறகு, திரும்ப ஆற்றங்கரையில் அமர்ந்து தனது அழகை ரசித்து கொண்டிருப்பாள்.

அப்போது ஒரு பாட்டி தண்ணீர் எடுக்க வருவார். வந்து,
உன் அம்மாவுக்கு உதவி செய்யவில்லையா..அவள் வேலை செய்ய முடியாத நிலையில் இருக்கிறார்களே என்பார். அவளோ நான் வேலை செய்தால் என் கைகள் அழுக்காகிவிடும். சுருக்கம் வந்து விடும் என்பாள். அப்போது பாட்டி, வர்வாரா பற்றி நீ என்ன நினைகிறாய் .

அவளோடு எனக்கு பேச பிடிக்காது. அவள் என் போல் அழகில்லை.

இன்று நீ உண்ட உணவு வர்வாரா சமைத்தது..அவள் உன்போல அழகில்லை என்றாலும், பிறர்க்கு உதவும் மன அழகு படைத்தவள். உன் அம்மாவுக்கு உதவி
செய்தவள் அவளே. அழகு என்பது தோலில் இல்லை..மனதில் இருக்கிறது என்று சொன்னாள்.

இதை கேட்ட அல்யோனா மனம் திருந்தி வீட்டுக்கு போய் அம்மாவுக்கு உதவிகள் செய்தாள்.

Friday, December 08, 2006

இது கதை நேரம்

ஒரு ஊர்ல ரெண்டு பாட்டிங்க இருந்தாங்க. அவங்க பேரு இந்தா பாட்டி, இல்லா பாட்டி.ஏன் அந்த பேரு வந்துச்சுன்னா இந்தா பாட்டி எல்லாருக்கும் இந்தா இந்தான்னு கேட்டதெல்லாம் எடுத்து குடுத்துக்கிட்டே இருப்பாங்களாம்.ஆனா, இல்லா பாட்டி யார் என்ன கேட்டாலும் இல்ல..இல்லன்னே சொல்லுவாங்களாம்.! அதனாலதான் அவங்களுக்கு அந்த பேர் வந்துச்சாம்.

ஒரு தடவை, என்னா ஆச்சு தெரியுமா.?


ஒரு குருவி அடிப்பட்டு கீழ விழுந்து கிடந்துச்சாம். இல்லா பாட்டி பார்த்துட்டு ஒண்ணும் பண்ணாம போய்ட்டாங்களாம். இந்தாபாட்டி அதை பார்த்துட்டு வீட்டுக்கு தூக்கிகிட்டு வந்தாங்க. அதுக்கு வேண்டிய மருத்துவம் செஞ்சு, குடிக்க தண்ணி, சாப்பாடு-ல்லாம் தந்தாங்க!குருவியும், ஜாலியா பாட்டி கூட இருந்துச்சு! குருவிக்கு உடம்பு சரியானவுடனே, பாட்டிக்கு "பை" சொல்லிட்டு பறந்து போய்டுச்சு.


அடுத்த நாள் காலைல பாட்டி கோலம் போட வாசலில் வந்து பார்த்தப்போ ஒரு பூசணி விதை இருந்தது. பாட்டி அதை நட்டு வச்சாங்க. கொஞ்ச நாள்ல பூசணிக்கொடி வளர்ந்து பூத்து காய் காய்ச்சது. அது சாதாரணமான சைஸ்ல இல்லாம, ரொம்ப பெரிசா இருந்தது. பாட்டி அதை அறுத்து பார்த்தப்போ, அவங்களுக்கு ஒரே ஆச்சரியம்! அது உள்ள நிறைய பரிசு பொருட்கள், நகைங்க, பணம்-லாம் இருந்தது. பாட்டி ரொம்ப சந்தோஷமா இருந்தாங்க. அதுவும் இல்லாம,அந்த பூசணிக்காயை கேட்டவங்களுக்கெல்லாம் கொடுத்தாங்க!

இல்லா பாட்டி இதை பார்த்து ரொம்ப பொறாமை பட்டாங்க! அடுத்த நாள் அவங்க ஒரு குருவிய பிடிச்சி அதுக்கு சாப்பாடு, தண்ணில்லாம் கொடுத்தாங்க! குருவியும் அவங்க வீட்டு முன்னாடி ஒரு பூசணி விதைய போட்டுச்சி! பாட்டி ரொம்ப சந்தோஷமாய்டாங்க! அந்த விதைய நட்டு தண்ணி ஊத்தினாங்க! அடுத்த நாள் காலைலயே அது வளர்ந்துடுச்சான்னு பார்த்தாங்க! தினமும் அது வளருதா வளருதான்னு பார்த்துக்கிட்டே இருந்தாங்க! கடைசியா அது வளர்ந்து பூ பூத்து காயும் வந்துது. பாட்டி அது பெரிசாகட்டும்ன்னு காத்திருந்தாங்க. அதை பார்த்துட்டு நிறைய பேர் வந்து கேட்டாங்க. ஆனா, பாட்டி யாருக்கும் கொடுக்கல்ல.அவங்க மட்டும்,அதைபறிச்சு வீட்டுக்கு உள்ள எடுத்துகிட்டு போனாங்க. கதவு, ஜன்னல்லாம் சாத்திட்டு, அதை அறிஞ்சு பார்த்தாங்க. அது உள்ளேர்ந்து வண்டு, பல்லி,பூரான் எல்லாம் வந்து அவங்களை கடிச்சுது!!

(இது ஒரு செவி வழி கதை!! சிறு வயதில் என் பெரிம்மா எனக்கு சொன்னது. என்னை எப்போது கதை சொல்ல சொன்னாலும் இதைதான் சொல்வேனாம்!!நான் என் மகளுக்கும் சொல்ல விரும்பும் கதை!! )


Wednesday, November 29, 2006

மழலை

அம்பா!..
என்னையும் முகிலையும் கண்டால்...

போ!..
வாசற்படியில் நாயை கண்டால்...

பைய்ய்ய்!..
எவர் வந்து சென்றாலும்...

உர்ர்ர்!..
புலியை பற்றி கேட்டால்...

கா!
காகம் கரைவது கேட்டால்...

அ ஆ!.
இன்னும் பல!..
தொலைபேசியில் பாட்டியிடம் பேசும்போது...

என் ஒரு வயது மகளின்,
மழலை மழையில்
நனைந்தவாறே நினைத்தேன்!..
நான் ஏன் வளர்ந்தேன்!....

Tuesday, November 28, 2006

அன்று

ட்ரிங்..ட்ரிங்..

ம்ம்...சொல்லுங்க..

செல்லக்குட்டி...என்ன பண்ற..?

ம்ம்..தூங்கறேன்...நீங்க?

இல்ல..திடீர்ன்னு என் கண்ணம்மா நியாபகம் வந்துச்சா..அதான் போன் பண்ணேன்!!

ம்ம்..!

அப்புறம்..டா? என்ன பேச மாட்டேங்குற?

ம்ஹும்..தூக்கம் தூக்கமா வருது...மணி என்ன?

ம்ம்..ஒண்ணரை!!

ம்ம்..தூங்குங்க..இப்போதானே பன்னெண்டு மணி வரைக்கும் பேசிட்டு வச்சீங்க!!

ஆமா..ஆனா உன்கிட்டே பேசிக்கிட்டே இருக்கனும் போல இருக்குடா!!

.....

ஏய்....!!

....

தூங்கிட்டியா..?

....

ஹலோ..

.....

கட்......ட்!!

இன்று

என்னங்க...சாப்பிட வாங்க..சாப்பாடு வச்சாச்சு!!

.......

தட்ட பார்த்து சாப்பிடுங்க...பேபி கார்ன் பிரை எப்படி இருக்கு? புதுசா ரெசிப்பி பார்த்து பண்ணேன்ப்பா!


ம்ம்..நல்லா இருக்கு!!

கார்பெண்டர்கிட்ட ஸ்டுல் கொண்டு வர சொல்லுங்க..ரெண்டு மாசமாச்சு சொல்லி..இன்னும் கொண்டு வரல..!

ம்ம்..

ஓ..பெட் போட்டுட்டீங்களா?அப்றம் முருகன் செக் கொண்டு வரவே இல்லீங்க....போன் பண்ணுங்க!!

........

அப்பா..சமயலறை வேல முடிஞ்சுது! படுத்துட்டீங்களா...இதெல்லாம் நாளைக்குதானா..

எப்படித்தான் இவ்ளோ துணி சேருதோ...இப்பதான் துவச்ச மாதிரி இருக்கு..ம்ம்!

ஹா..என்னங்க...போற வழில ஆட்டோக்காரன் பள்ளத்துல வண்டிய விட்டுட்டான். ஒரே காமெடிப்பா!!அப்றம்
இன்னிக்கு எங்க ஆபிஸ்ல...

ஒம்போதரை ஆகுதும்மா..தூங்குடா....காலைல பேசிக்கலாம்!!

..........


அன்று

ஹாய்..அம்மா..எப்படி இருக்க?

நல்லாஇருக்கேன்...நீ எப்படி இருக்க? முந்தாநேத்துதான வந்தே...என்ன அதுக்குள்ள?

ம்ம்..சும்மா..பார்க்கணும் போல இருந்தது..அப்றம்...என்ன..மணி ப்ளாந்துக்கு தண்ணி ஊத்தனியா? என் ரூம் எப்படி இருக்கு?
ஏம்மா..?ஷோ கேஸ்ல இவ்ளோ தூசி..டீ.வி கவர் எங்க?
என் காபி கப்ல காபி குடும்மா..அந்த தடியன க்ளீன் பண்ண சொல்றதுதானே!!

ம்ம்...எங்கடீ நேரம்..?

ம்மா..ரெண்டு நாள் வீட்ல இருக்கணும் போல இருக்கும்மா!
உன் நெனைப்புதான் அடிக்கடி!!

ட்ரிங்..ட்ரிங்...

ஐய்யோ..அவர்தான்மா..சரி நான் கிளம்பறேன்..


இன்று

என்னம்மா...வர சொல்லி போன் பண்ணியிருந்த?

ஆமாம்மா..உன்னை பார்க்கணும்போல இருந்த்தும்மா..ரெண்டு மாசமாச்சு...நீ இங்க வந்து!!

ம்ம்....எங்கம்மா நேரமே இல்ல..!

போன வாரம் கோமதி அத்தைய பார்த்தேன்..உன்னை ரொம்ப விசாரிச்சாங்க!
அவங்க பொண்ணு உன்கிட்ட பேசணும்னு சொன்னாளாம்.

சரி..போன் பண்ண சொல்லும்மா!

உன் ப்ரெண்டு கவிதாவை பார்த்தேன்..நேத்து..! உன் அட்ரெஸ் கேட்டு வாங்கிக்கிட்டா!!

ம்ம்..பார்க்கலாம்மா! அங்க அவர் வந்து காத்துக்கிட்டுருப்பார்...காபி போட்டு குடிச்சாரோ என்னவோ?
உனக்காக ஒரு வெள்ளை சாமந்தி செடி வாங்கி வச்சிருக்கேன்...எடுத்துக்கிட்டு போ!

ம்ம்..சரி..கெளம்பறேன்..ம்மா! துணி அயர்ன் பண்ண குடுத்தேன்..போய் வாங்கணும்!

கொஞ்ச நேரம் இருந்துட்டு போயேன்...
இல்லம்மா..அங்க அவர் காத்துகிட்டு இருப்பார்..நான் இல்லனா அவருக்கு ஒரு மாதிரியிருக்கும்...! இன்னொரு நாள் வரேன்ம்மா!!!


அன்று

என்ன மாலினி..கிளம்பலயா...8 மணியாக போகுது!

ம்ம்..வேல முடிஞ்சது!! ஆனா, கொஞ்சம் நேரம் படிச்சிட்டு போகலாம்னு பார்க்கரேன்..! ஒரு புது feature கேட்டிருந்தேன்...மேனேஜர்கிட்ட! அது தொடர்பா படிக்கலாம்னு..!

சரி..சரி..! உன் திறமைக்கு நீ சீக்கிரமே லீட் ஆகிடுவே!!

ம்..அதுக்குதானே இப்படி effort போடறது..:-)

இன்று

என்ன மாலினி...உன்கிட்ட ஒன்னு கேக்கணும்னு நெனச்சேன்..

ம்ம் சொல்லுப்பா!

ஏன் நீ லீட் பொசிஷன் வேணாம்னு சொல்லிட்ட?கல்யாணத்துக்கு அப்றம் உன் திங்கிங்கே மாறிடுச்சு?

ம்ம்..ஆமா..பேசாம் டீம் மெம்பராவே இருந்துடலாம்னு! வீட்டையும் மேனெஜ் பண்ணிக்கிட்டு..இங்கயும் மேனெஜ் பண்ண முடியுமான்னு தெரியலஇங்க வொர்க் ப்ரஷர் அதிகமா இருக்கும்..ஒம்பது மணிக்கு வந்தமா..6 மணிக்கு வீட்டுக்கு போனோமானு இருக்க முடியாது!!
.

Thursday, November 23, 2006

தயிர் செய்வது எப்படி...

தயிர் செய்வது எப்படி...
பால் வாங்கி (தேவைக்கு ஏற்றபடி) காய்ச்சி கொள்ளவும். அதை பாத்திரத்தில் ஊற்றி கொள்ளவும்.உறை மோர் ஒரு டம்ளரில் அல்லது சிறு கிண்ணத்தில் பக்கத்து வீட்டில் சென்று வாங்கவும். (சில வீடுகளில் சாயங்காலம் 6 மணிக்கு மேல்/செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தரமாட்டார்கள். )உறை மோரை பாலோடு சேர்த்து ஊற்றவும். 6 அல்லது 8 மணி நேரம் சென்றபின் பால் தயிராகிருக்க காண்பீர்கள்!!
தயிரின் குணாதிசயங்கள் :
1. சாதத்தோடு பிசைந்து உணணலாம்.
2. வடையை ஊற வைக்கலாம்.
3. சர்க்கரை கலந்து தயிரை அப்படியே உணணலாம். (ப்ரீட்சை எழுத போகும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது..!!)


பி.கு : சும்மா ஜோதியில ஐக்கியமாகலமேன்னுதான்....நானும் ஒரு பதிவு போட்டு ரொம்ப நாளாச்சே.!!

Tuesday, August 01, 2006

புத்தகக்கூட்டிலே.....

புத்தகங்கள் எனது நேசிப்புக்குரியவை..!
எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலாய், நான் புத்தகங்களோடு தான் வாழ்ந்திருக்கிறேன்....ஓய்வு நேரம் மட்டும் தான் என்றில்லை..railway queue-வில் நிற்பதானாலும் சரி..பிரயாணமானலும் சரி ..most of the times i hav spent my time with books....!

சதா எல்லா நேரங்களிலும் படித்துகொண்டிருப்பதால் சுயமாய் சிந்திக்கும்
சக்தியை இழந்து போவாய் என என் தோழி சொல்ல கேட்டதுண்டு..!
புத்தகங்கள் நம்மை ஒருபோதும் காயப்படுத்தா..அவை பாரபட்சம் காட்டா..
மாறாக புதிய அனுபவங்களை, தாக்கஙகளையே ஏற்படுத்தும் வல்லமை கொண்டது..!

'புத்தகப் புழு' எனும் அளவுக்கு புத்தகங்களின் பிடியில் கிடந்த நாட்கள் உண்டு.
என் பால்ய காலதில்! அவை என்னை ஒரு மாய உலகுக்கு என்னை கொண்டு செல்லும். வாசிப்பின் போதையில், அது தந்த ஈர்ப்பில், புத்தகங்களின் மடியில் துயில் துயில் கொண்டிருந்த நாட்கள் அவை..!

நான் வைத்திருக்கும் புத்தகங்களை விட படித்த புத்தகங்களின் எண்ணிக்கையே அதிகம்... (லென்டிங் லிப்ரர்ய்-இன் உபயம்).! சிறு வயதில், புதிதாக செல்லும் இடங்களிலிருந்து நினைவு பொருளாக ஒரு கல் எடுத்து வருவது எனது வழக்கம்..! (என் பெரிம்மா எனக்கு ஏற்படுத்தியது, வாசிக்கும் வழக்கத்தை அறிமுகபடுத்தியதும் அவர்கள்தான்..!)

அதே போல் எங்கு சென்றாலும் ஒரு புத்தகத்தை வாங்குவதை வழக்கமாக கொண்டுஇருக்கிறேன்..தற்போது! என்னதான் என் கணவர் மடிகணினியில் pdf இல் சேர்த்து வைத்து படிக்க சொன்னாலும்...புத்தகத்தின் பக்கத்தை புரட்டி, வாசித்ததை அசை போட்டு..that pleasure of reading...வாய்த்ததில்லை கணினியில் ஒருபோதும்!!

நான் படித்து, ரசித்து பாதுகாத்து வைதிருக்கும் புத்தஙகளின் list இதோ..!

1. அந்தோன் சேகவ்-இன் (anton chekav) சிறுகதைகள்
2. anna karenina - டால்ஸ்டாய் (Tolstoy)
3. rebecca -Daphne du Maurier
4. rasputin - author unkown
5. Malgudi days - r.k narayan
6. swami and his friends
7. waiting for mahatma
8. the financial expert
9. the guide
6. மௌனமே காதலாக - பாலகுமாரன்
7. பச்சை வயல் மனது
8. கரையோர முதலைகள்
9. tough time never lao but tough ppl do - robert schuller
10. you can win - shiiv kera
11. எண்ணங்கள் - எம்.ஸ் உதயமூர்த்தி
12. train to pakistan
13 kushmwantsingh jokes
14. master of the game - sydney sheldon
15. the love story - erich seigal
16. பஞ்சதந்திர கதைகள்
17. முல்லாவின் கதைகள்
18. திருக்குறள்
19. வீட்டின் மூலையில் ஒரு சமையலறை -அம்பை
20. சிவகாமியின் சபதம் - கல்கி
21. பொன்னியின் செல்வன்
22. சிவப்பு கல் மூக்குத்தி - கண்ணதாசன்
23 i dare - kiran bedi
24. அது ஒரு நிலா காலம் - ஸ்டெல்லா புருஸ்
25. மடிசார் மாமி - தேவிபாலா
26. பூக்குட்டி - சுஜாதா
27.அக்கினி சிறகுகள் - கலாம்
28. சத்தியசோதனை - காந்தி - never read fully.
29. பாரதியார் கவிதைகள்
30. பாரதிதாசன் கவிதைகள்
31. கடல் புறா - சாண்டில்யன்
32. நண்டு - சிவசங்கரி
33. The Bible

Friday, July 28, 2006

கண்டுபிடியுங்கள்: பார்க்கலாம்

I'm a 5 letter word. My 12 is opposite to come. My 124 is the excellent tourist spot in India. U can drink the 345. I can swim. Who am I ??

Monday, July 24, 2006

நினைவுகள் : திருநெல்வேலி அல்வாடா....

எப்போதும் தமிழ் வகுப்புகள் கடைசி பீரியடாகத்தான் இருக்கும். எப்போது பெல் அடிப்பார்கள் எனஎல்லாரும் காத்து கொண்டு இருக்கும் மகத்தான தருணம். அப்பொது மிஸ் ஹொம்வொர்க் செய்தாயா..கேள்வி பதில் எழுதினாயா என்று கேட்கும் போது ரொம்ப restless-ஆக இருக்கும். ஆனால் என்ன செய்வது...class-ஐ விட்டு ஓட முடியாதே..So...நேரத்தை கடத்திக் கொண்டு இருப்போம். புக்கில் உள்ள கேள்விக்கு நோட்டில் பதில் எழுத வேண்டும். அனேகமாக எல்லாரும் இதே நடைமுறையை தான் கடந்து வந்திருப்போம்.

ஹோம்வொர்க் நோட்டை எல்லாம் கலெக்ட் செய்து மிஸ் அருகில் உள்ள மேஜை-இல் வைக்க வேண்டும். அப்படி ஒருதடவை correction-க்கு வைக்குமுன்பு என் நோட்டில் எழுத்து பிழை இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் ஒன்றும் செய்ய முடியாது..மேலும் correct செய்யவும் தோன்றவில்லை. ஆனால் correction முடிந்து பார்த்த போது மிஸ் அதில் சுழிக்காதது பெரிதும் மகிழ்ச்சியை தந்தது. அப்படி என்ன ஸ்பெல்லிங் மிஸ்டேக் என்கிறீர்களா....ஒன்றும்..இல்லை.."விடை தருக" என எழுதுவதற்க்கு பதில், " வடை தருக" என எழுதி இருந்தேன்..!

இதே போல் ஒரு நாள்....பெல் அடிக்க கடைசி 10 - 15 நிமிடங்களே இருந்தன. அப்போது மிஸ் வந்து H.W நோட்டை தரும்படி கேட்டார்கள். எனக்குத்தான் பயங்கர மறதி ஆயிற்றே! அப்போதுதான் ஞாபகம் வந்தது....முந்தின நாள் H.W பற்றி..!! இனி என்ன செய்ய முடியும்....சரி...கடைசி பென்ச் வருவதற்குள் பெல் அடித்து விடும் என நம்பிக்கையோடு அமர்ந்திருந்தேன். மிஸ் கேட்டதும்..செய்துவிட்டேன் என பொய் சொல்லி விட்டேன்....! (நான் முதன்முதலில் சொன்ன பொய்.அதாவது நினைவு தெரிந்து!!)

மிஸ் நோட்டை கலெக்ட் செய்து கொண்டு போய் விட்டார்கள். ஒவ்வொரு நோட்டை மிஸ் எடுத்து திருத்தும் போதும்....ஐயோ...பெல் அடித்துவிட வேண்டும்...அடித்து விட வேண்டும் என மனம் பதைத்து கொண்டிருந்தேன்!! ஆனால் நடந்த கொடுமை என்னவெனில் மிஸ் நான் H.W செய்யாததை நோட் செய்து அதை எழுத வைத்து விட்டார், பெல் அடித்தபின்பும் என்னை விடாமல்...!!! H.W பண்ணாமலும் சிலர் இருந்தார்கள்..அவர்களோடு அமர்ந்து செய்து முடித்தேன். அதன் பின் நடந்தது அதை விட கொடுமை....!

அந்த மிஸ் என் பெரிம்மாவின் ஸ்டுடென்ட். மேலும் பெரிம்மா மாலையில் அவர்கள் பள்ளி முடிந்து போகும் போது என்னை அழைத்து கொண்டு போவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். நான் நோட்டை வைத்துவிட்டு கிளம்பும்போது பெரிம்மாவும் மிஸ்-உம் பேசி கொண்டிருந்ததை பார்த்து விட்டேன். ஒருவாறு பின்விளைவுகளை ஊகித்த நான் பெரிம்மாவுக்கு முன் வீடு வந்து சேர்ந்தேன். அவசர அவ்சரமாக பால் மற்றும் பேரிச்சம்பழத்தை உண்டு முடித்து விட்டு, விளையாட சென்ற நான் பெரிம்மாவின் டியுஷன் முடிந்ததும் நீண்ட நேரம் வீடு திரும்பாமல் தெருவிலேயே விளையாடிக்கொண்டிருந்தேன்.

பின்பு பாட்டி வந்து அழைத்ததும் சென்..றேன்...எனக்கோ..பயம்..மேஜை முன்பு பெரிம்மா..!!
ம்ம்..நமக்கு நைஸ் பண்ன கற்று தரவா வேண்டும்..அவர்களை பார்த்து ஒரு புன்சிரிப்பு..அட...பெரிம்மாவும் கூட..!
"என்ன செஞ்ச இன்னைக்கு..?" பெரிம்மா.

ஆனால் நான் எதிர்பார்த்தவாறு ஒன்றும் நடக்கவில்லை....!

ஒருவேளை நடந்திருந்தால், நான் அதிகம் பொய் சொல்லியிருப்பேனோ என்னவோ..???

Monday, July 10, 2006

நினைவுகள் : வாராய்..நீ...வாராய்

3-வது STD வந்ததும், ஒவ்வொரு வெள்ளிகிழமையும் prayer முடிந்து GK டெஸ்ட் இருக்கும். இதன் கேள்விகளை முதல் நாளிலேயே கொடுத்து விடுவார்கள் பதிலையும் சேர்த்து! அதை படித்து (மனப்பாடம் செய்து) அடுத்த நாள் எழுத வேண்டும். இதில் ஒன்றும் பெரிதாக விஷயம் இல்லை..தான்!

ஆனால், அதன் பின்பு, ஒவ்வொருவரும் Assembly முன்னால் வந்து நின்று,ஒரு ப்ரொவெர்ப்-ஐ சொல்ல வேண்டும். எனக்கோ பயங்கர மறதி.....எதையாவது வீட்டிலிருந்து படித்து கொண்டு வருவேன்..ஆனால் அங்கு வந்து நின்றதும் மறந்து போய்விடும்....! ஆனால் அஷோக் மட்டும் புதிதாக, ஆனால் நீளமாக ப்ரொவெர்ப்-ஐ சொல்வான்!!

நான் எப்பொதும் ஒரே ப்ரொவெர்ப்..""Old is Gold..".."..!Mithra மேடம்-க்கு ஒருமுறை ரொம்ப கோபம் வந்து விட்டது...Assembly நான் Old is Gold-ஐ சொல்லிவிட்டு திரும்பி வர எத்தனித்த போது பிடித்து கொண்டு விட்டார்கள்..உன் பெரிம்மா இங்கிலிஷ் டீச்சர் தானே.....வேறு ஒரு ப்ரொவெர்ப் சொல்லிவிட்டு இடத்திற்கு போ என்று"..(அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்..??) அவமானமாக போய் விட்டது...!

அதன்பின் நீண்ட நேரம் யோசித்து, all that glittters is not gold என்று சொல்லி விட்டு ஒடி வந்து விட்டேன்..அதை கேட்டதும் அவர்கள் முகத்தில் ஒரு புன்சிரிப்பு...ஒருவேளை இந்த பெண் gold -ஐ விடாது என நினைத்தார்கள் போலும்..!ஆனால், இன்றுவரை நான் gold மீது ஆசைபட்டது இல்லை என்றாலும்..!

ஆனால், இது கூட பரவாயில்லை எனும்படி, sportsday என்ற பெயரில் ஒரு பெரிய அவமானம் காத்து கொண்டு இருந்தது எனக்கு அப்பொது தெரியாது..! பள்ளிக்கு எதிரில் ஒரு ffire office இருக்கும் என்று சொன்னேன் அல்லவா? fire office முன்பு ஒரு பெரிய கிரௌண்ட் இருக்கும்..அங்கு தான் எங்கள் sportsday ...நடந்தேறியது..!

ஸ்போர்ட்ஸ் என்றால்..ஏதோ டென்னிஸ்...ஸ்குவாஷ்..சைக்கிள் ரேஸ் என்று நினைத்து விடாதீர்கள்...emon n spoon...sack race, running race...bun eating!( bun eating என்பது..சணலில் பன் -களை கட்டி தொங்க விடுவார்கள்..இரு பக்கமும் அதை உயர்த்தி பிடித்து கொள்வார்கள்..போட்டியாளர்கள் அதை எக்கி எக்கி உண்ண வேண்டும்..யார் முதலில் உண்டு முடிக்கிறார்களோ அவர்கள் தான் first..மேலும், விக்கிக் கொண்டால் குடிக்க தண்ணீர் எல்லாம் பக்கத்தில் வைத்திருப்பார்கள்....! !) இதை பார்க்க எல்லா பேரன்ட்ஸ் மற்றும் பேரன்ட்ஸ்-இன் நணபர்கள்...அக்கம்பக்கத்து வீட்டார்..என எங்களை cheerup பண்ண ஒரு பெரிய ரசிகர் கூட்டம்..!

நானோ என் திறமை மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்து ரன்னிங் ரேஸில் கலந்து கொண்டேன்.. விசில் சத்தம் கேட்டதும், எல்லாரும் ஓடினார்கள்..கூடவே நானும்..ஆனால்..நானோ கடைசியாக முதலில்...!

high school level-இல் 100-Meter இல் முதலாவாதாக வந்தாலும், (தோல்வி என்பது வெற்றி-இன் முதல் படி என்று நான் நிரூபித்து காட்டியதை ஒத்துகொள்ளாமல்)..இன்றும் அவ்வபோது அதை பற்றிய Comedy ஓடும்...எல்லாரையும் நான் துரத்திக்கொண்டு ஓடியதாக!!

Thursday, July 06, 2006

நினைவுகள் : தூங்காய்...கண்..தூங்காய்...!!

பள்ளி ஆரம்பித்து கொஞ்ச நாட்கள், அரைநாட்களாக இருந்த பள்ளி பிறகு முழு நாளாகமாறியது..! வீடு அருகில் இருந்த காரணத்தால் மதியம் வீட்டிற்க்கு போய் சாப்பிட்டுவிட்டு வரும்படி ஆயிற்று.

லன்ச்-க்கு பின்னர் சிறிது நேரம் பெஞ்சில் படுத்து தூங்க வேன்டும்..அதன் பின் 3 மணிக்கு தான் கிளாஸ் ஆரம்பம் ஆகும்..!ஆனால் 'துருதுரு' என்று இருக்கும் எங்களுக்கு ஏது தூக்கம்? பென்ச்-இல் படுத்தபடி நாங்கள் கதைத்து கொண்டு இருப்போம்!

எங்களை கண்காணிக்க ஒரு ஆயா கையில் குச்சியோடு ரவுண்ட்ஸ்..! ஆயா வரும் போது மட்டும் நாங்கள் ஸ்மார்ட்-ஆக கண்களை இறுக்கமாக ( ;-) )மூடி கொள்வோம்...தூங்குவதாக பாவனை செய்கிறோமாம். ஆனால் ஆயா அதற்கு மசியாமல், ஒரு அடி கொடுத்து விட்டு போவாள்.!!

கதை படிப்பதில் எனக்கு கொஞ்சம் ஆர்வம் அதிகம். பப்பா மஞ்சரி, கோகுலம், அம்புலிமாமா மற்றும் இந்து-இல் வரும் heathcliff போன்றவற்றை படிப்பேன்.அப்போது TV எல்லாம் அவ்வளவு பிரபலமாகாத காலம்.புத்தகங்கள் தான்பொழுதுபோக்கு..!பெரியவர்கள் படிக்கும் புத்தகஙலான ஆனந்தவிகடன், கல்கி போன்றவற்றை படிக்க அனுமதி இல்லை. ஆனந்த விகடன் படிக்க மிகவும் ஆசையாக இருக்கும்.ஆனால் தொட்டால் கூட கண்டு பிடித்து விடுவார்கள்...!

என் வீடு இருந்த தெரு முனையில் பப்ளிக் லைப்ரரி இருந்தது.என் பெரிம்மா teacher-ஆனபடியால் நிறைய அண்ணன்கள் tuition-க்கு வருவார்கள்..சாயங்காலவேளையில்...! வீடு முழுக்க கூட்டமாக இருக்கும்.அப்போது ஒரு அண்ணாவிடம் பெரிம்மா என்னை லைப்ரரிக்கு அழைத்து போக சொன்னார்கள்..

லைப்ரரிக்கு சென்றது ஒரு புதிய அனுபவமாக இருந்தது...உள்ளே நுழையும் முன் கையெழுத்திட வேண்டும். அதை ரொம்ப பெருமையாக உணர்ந்தேன்..!உள்ளே சென்றால் எங்கு பார்த்தாலும் புத்தகங்கள். .எங்கும் ஒரே நிசப்தம்..அந்த சூழல் வேறு புதிதாக இருந்தது.. சிறுவர் பகுதியிலிருந்து நான் ஒரு புத்தகத்தை எடுத்து கொண்டு பென்ச்-இல் அமர்ந்தேன்.

அதை வாசிக்க தொடங்கினேன்...அதன்பின் எல்லாரும் என்னையே பார்ப்பதாக உணர்ந்தேன்......ஆம் எல்லாரும் என்னைதான் உற்று பார்த்து கொண்டிருந்தார்கள்.!!!எனக்கு அப்போது மனதிற்குள் படிக்கும் வழக்கம் ஏற்படாததினால்..வீட்டில் படிப்பது போலவே சத்தம் போட்டு படித்து கொண்டிருந்தேன்.!! இப்போது தெரிந்ததா ஏன் எல்லாரும் என்னையேபார்த்துகொண்டிருந்தார்களென்று?

என்னை கூட்டி கொண்டு வந்திருந்த அண்ணாவோ லைப்ரரியனை பார்த்து புன்னகைத்து கொண்டிருந்தார்...பின் நாங்கள் வெளியே வந்து விட்டோம்..! வீட்டில் நீண்ட நாட்களுக்கு இதுவே பேச்சாக இருந்தது

Wednesday, July 05, 2006

நினைவுகள்...: மயிலிறகே...மயிலிறகே..

வரவேற்புக்கு நன்றி..நண்பர்களே..!

நாங்கள் குடியிருந்தது கிருஷ்ணாபுரம் என்ற ஏரியாவில். அந்த வீட்டில் 5 குடித்தனக்காரர்கள் மற்றும் ஒரு முற்றம். அதில் முதல் பகுதி வீடு எங்களுடயது. நான், என் பெரிம்மா (பெரியம்மா என்பதை விட பெரிம்மா எனபது எனக்கு இன்னும் நெருக்கத்தை தருவதாக உணர்கிறேன்.) மற்றும் பாட்டி!!

எனக்கு பள்ளி செல்லும் பருவம் வந்ததும்,வீட்டிற்கு அருகில் இருந்த பள்ளியில் சேர்க்க முடிவு செய்தார்கள். அதன்படி தேர்வானது சுதா convent. அதன் எதிரில் fire office இருக்கும். (அதன் significance பின்பு!) பெரிம்மா ஆம்புரில் இருந்த இந்து மேல் நிலை பள்ளியில் english teacher. அவர்கள் பள்ளிக்கு போகும் வழியில் cஒன்வென்ட் இருந்தது கூடுதல் சிறப்பு அம்சமாக அமைந்தது. அதே வீட்டில் பக்கத்து போர்ஷனில் இருந்த இன்னொரு குடும்பத்தில் என் வயதை ஒத்த சிறுமி இருந்தாள். அவள் பெயர் "ஜில்லு". அது என்ன காரணம் என்று இதுவரை யாருக்கும் தெரியாது! அவளையும் அங்கு சேர்ப்பதாக அவர்கள் வீட்டிலும் முடிவு செய்யபட்டது.

நான் 3- 1/2 வயது வரை வீட்டில் இருந்து விளையாடி பொழுதைக் கழித்து வந்ததால் பள்ளிக்கு போவது ஒன்றும் பெரிதாக தோன்றவில்லை. அதோடு, பெரிம்மாவும் பாட்டியிடம், போய் விசாரித்துவிட்டு வாருங்கள் என்று கூறி இருந்தபடியால் ஒரு தைரியம்...உடனே சேர்த்து விட மாட்டார்கள் என்று! பின், பெரிம்மா அந்த பள்ளி நிர்வாகியான மேடம் (பெயர் Mithra) -ஐ பார்த்து பேசி விட்டு வந்துவிட்டார்கள்.

அதன்படி, ஒரு நல்ல நாள் பார்த்து பாட்டி, வீட்டுக்கார அத்தை,ஜில்லுவின் அம்மா மற்றும் பலியாடுகளாக நானும் ஜில்லு-வும்! Mithra மேடம் ரூமுக்கு அழைக்கபட்டோம். அந்த ரூமை மற்றும் மேடத்தை மிரட்சியுடன் நான் பார்த்து கொண்டிருந்தது இன்னும் நினைவு இருக்கிறது. அங்கு நிறைய விளையாட்டு பொருட்கள், globe, பறவை பொம்மைகள், மரத்தாலான பொம்மைகள், செவ்வக, வட்ட சதுர வடிவ பொருட்கள், எண்கள், உருவ பொம்மைகள் எல்லாம் கண்ணாடி கூண்டுக்குள் அடைபட்டு இருந்தன. நமக்கு வேடிக்கை பார்க்க சொல்லியா தர வேண்டும்? அதன் அருகில் வாயை பிளந்தவாறு நின்று பார்த்து கொண்டிருந்தேன். இதையெல்லாம் நமக்கு விளையாட கொடுப்பார்களா என என் கண்களில் மிளிர்ந்த ஏக்கத்தை உணர்ந்தவராக,அந்த மேடம் "school-இல் சேர்ந்தவுடன் இதை எல்லாம் உஙகளுக்கு விளையாட தருவோம்" என்றார்..!

அந்தோ பாவம்...அதை அப்படியே நம்பிய எனக்கு அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. அந்த பொம்மைகள் எல்லாம், சிறுவர் சிறுமிகளை பள்ளிக்கு ஈர்க்க பயன்படுத்தபடுபவை..ஒருநாளும் அவை வெளியில் வாரா...என!!

பள்ளியில் சேர்ந்தாகிவிட்டது...நான் வீட்டிலேயே abcd..மற்றும் அ..ஆ அதாவது LKG க்கு தேவையானவற்றை கற்றிருந்ததால் என்னை UKG -லும் ஜில்லுவை LKG-லும் சேர்ப்பதாக மித்ரா மேடம் அறிவித்தார்கள். UKG-இல் பிரச்சினை ஒன்றும் பெரிதாக இல்லை..

1-st ஸ்டன்டார்ட் வந்த பின் முழு நாள் பள்ளி தொடங்கியது. என் கிளாஸில் நான் தான் உயரம்..( அன்று ஆரம்பித்தது..ஸ்கூல் இறுதி வரை அதுவே தொடர்ந்தது) ஒரு சின்ன டெஸ்க்.....அதாவது நாங்கள் தரையில், நான்கு பேர் அமர்ந்து அந்த டெஸ்க்கை ஷேர் பண்ணி கொள்ள வேண்டும்..பார்க்க அழகாக இருக்கும்..வீட்டுக்கு கொண்டு போய் விடலாம் போல..! நான், பிரேமலதா, ஹேமலதா மற்றும் அஷோக்.

எனக்கும் பிரேமலதா-வுக்கும் எப்பொதும் ஆகவே ஆகாது..!ஆனால் ஹேமலதா எங்களை சேர்த்து வைப்பாள்.! அவளுக்கு சுருள் முடி....நிறைய நாட்கள் அவளை பார்த்து பொறாமை பட்டு இருக்கிறேன்..! எனக்கோ ஸ்ட்ரெய்ட் ஹேர். அதுவும் பாப் பண்ன பட்டு இருக்கும்.(பேன் வந்து விடுமாம்..பாட்டிந் ஆர்டர்)! அது போகட்டும்!! எதற்கு சண்டை என்கிறீர்களா... எனக்கும் பிரேமாவுக்கும்..யார் அஷோக் பக்கதில் உட்கார்வது என்று..தான்! ஹேமலதா..அஷோக்கை நடுவில் அமர செய்து, எங்கள் இருவரை மாற்றி அமர செய்வாள்..! அவள் எதாவது ஒரு ஓரத்தில் அமர்ந்துகொண்டு!!

[பின்னாளில் அதே அஷோக்கை +1-இல் பார்த்த போது வெட்கம் பிடுங்கி தின்றது. ஹேமா, ஐந்தாவது முடிந்து அவளது அப்பாவின் ட்ரன்ச்fஎர் காரணமாக சேலம் சென்றுவிட்டாள். ப்ரேமா அதே ஸ்கூலில் வேறு செக்க்ஷன்..! ]

இப்படி எங்கள் நால்வர் கூட்டனி form ஆயிற்று..! பிரேமா தான் புதுது புதிதாக எதாவது சொல்வாள்..அப்படி தான் ஒரு நாள் சொன்னாள்..பென்சில் சீவி அந்த தோலை மண் தோண்டி புதைத்து, தொடர்ந்து 7/15 நாட்கள் பால் ஊற்றினால் ரப்பர் கிடைக்கும் என்று. இதை நான் நம்பி ரப்பர் செய்ய முனைந்தேன்....

இப்போது எல்லா ஊரிலும் பாக்கெட் பால் போல அப்பொது கிடையாது.. ஒரு பால்காரர் வந்து சைக்கிளில் கேன் வைத்து ஹார்ன் அடிப்பார். எல்லா குடித்தனகாரர்களும் போய் வாங்க வேண்டும்....எங்கள் வீட்டிற்கு நான் அந்த பொறுப்பை ஏற்று இருந்தேன்..இது எனக்கு ரப்பர் செய்ய வசதியாக போயிற்று..! பால் வாங்கிய பின் எல்லாரும் போனதும், வாசலில் புதைத்து வைத்திருந்த பென்சில் தோலுக்கு பால் ஊற்றுவேன்..!

இது 4 நாட்கள் இனிதே தொடர்ந்தது....5-ஆம் நாள் சற்று உணர்ச்சிவச பட்டு அதிகமாகவே பால் ஊற்றிவிட்டேன் போலும்! தினமும் பால் குறைவதை எங்கள் பாட்டி கவனித்து வந்தாரகள் போல! இன்று அதிகமாய் காணாமல் போனதும் சந்தேகம்..! கேட்டவுடன் என் ரப்பர் விஷயத்தை உளறி விட்டேன்! அதன்பின் என்ன நடந்திருக்கும் என்பதை நான் சொல்லவா வேன்டும்..உங்கள் அனுமானத்திற்கே விட்டு விடுகிறேன். .. சரி..பாதி ரப்பர்-ஆவது கிடைக்கட்டும் என்று மண்ணை தோண்டி பார்த்ததில்....அங்கு பென்சில் தோல்ல் கூட இல்லை ரப்பருக்கு எங்கு போவது!! அதன் பின் பிரேம மயில் (இறகு) குட்டி போடும் என்று சொன்னதை நான் நம்பவே இல்லையே!!

Tuesday, July 04, 2006

நினைவுகள்....

ஆம்பூர் என்றொரு சிற்றூர். பலருக்கு பிரியாணி மற்றூம் தோல் பதனீட்டு தொழிற்சாலைகளும் தான் நினைவுக்குவரும்...! எனக்கோ அது சொந்த ஊர்...சொந்த ஊர் என்பது எது என்பதில் எனக்கு மாற்றூக்கருத்து உண்டு.இது, என்னை போல, ஊர் மாறி பெற்றோர் வேலை மற்றூம் குடும்ப சூழல் நிமித்தம் வேற்று ஊரில் வளர நேரும் எல்லாருக்கும் இது ஒரு பிரச்சினை.

ஆம்புரில் அச்சு madras பாஷை பேசுவார்கள். நாங்கள் நல்ல அழகு தமிழில் (தென்னார்க்காடு தமிழில்)பேசுவோம் ..2 வார்த்தை பேசிய உடன் நீங்க எந்த ஊரு என்ற கேள்வியை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் (இது college வரை தொடர்ந்தது...(சேமை கிழங்கு, கருணை கிழங்கு , இருக்கு ..கீது)so,என்னை பொறுத்தவரை... ஒரு ஊரில் நாம் பிறப்பதினால் மட்டும் அது சொந்த ஊராகி விடாது..! எங்கு அதிக நண்பர்கள், பரிச்சயம், வாழ்வின் முக்கிய நிகழ்வுகள், வளர்ச்சிகள் நடைபெறுகிறதோ அதுவே சொந்த ஓர்..என்பது என் கருத்து! அப்படி பார்த்தால் நான் பிறந்த ஊராகிய தாய் வழி ஊரான வடலூர்-ஐ விட ஆம்புர் தான் என் சொந்த ஊராக இருக்க முடியும்..!

அப்படி என் பள்ளி படிப்பு, பால்யக்காலம், சுவாரசியம்மான நிகழ்ச்சிகள், நண்பர்கள்கூட்டம் இவை எல்லாம் எனக்கு ஆம்புர் -ல்யே வாய்த்தது.ஆம்புர்-ஐ என் சொந்த ஊர் என்பதில் என்க்கு பெருமை கூட! என் ஊரை தவிர முழுமையான ஊர் இருக்கவே முடியாதுயென நான் நீண்ட நாட்களாக நம்பி கொண்டிருந்தேன்..! கல்லூரிக்கு சென்று மற்ற பெரு நகரங்களை சேர்ந்தவர்களுடன் பழகும் வரை..! மேலும், vacation எங்காவது சென்று திரும்பி வரும் போது, Ambur Gate அல்லது Jolarpet Junctionவந்துவிட்டால் ஒரு பரபரப்பு என்னை தொற்றி கொள்ளும்..வீடு வர போகிறது என நானும் என் தம்பியும் பேசி கொள்வோம்!

மழை பெய்தால் கூட அது எங்கள் ஊருக்கு மட்டும் தான் பெய்யும்..என ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தேன்..! ஆம்புரை தாண்டி மழை பெய்யும் என கனவிலும் நினைக்க முடியாத நாட்கள் என் வாழ்விலுண்டு..!அது நான் சுதா convent-இல் 3வது நான்காவது படித்து கொண்டு இருந்தபோது..!
சரி! என் நினைவுகள் தொடரில், சுதா convent நாட்கள், Higher Sec பள்ளி நாட்கள், Hindi Tuition, பரிட்சை லீவுகள், Summer class, ரயில் பயணங்கள் என நான் ரசித்த எல்லாவற்றையும் எழுத போகிறேன். அவை அடுத்த Blog-ல்!!!